Mar 2, 2010

மாநகர கோடை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

திலீப்குமார்


கோடை கருணையற்றது. அது மனிதர்களைத் தங்களது இயல்பிலிருந்து மூர்க்கம் கொள்ளச் செய்துவிடுகிறது. வெருகுப் பூனை காட்டில் அலைவது போல மூர்க்கமாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது கோடையின் சூரியன்.

உறங்கி எழும்போதே நாவு உலர்ந்து இருக்கிறது. தண்ணீருக்dilipkumarகுள்ளேயே மூழ்கிக்கிடக்க மாட்டோமா என்று மனதும் உடலும் ஏங்குகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு மாடுகளும் மரங்களும் கூட நீர் வேட்கையில் உடல் வெளிறிவிடுகின்றன. வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் யாவையும் ஊடுருவி பழுப் பேறிய வீட்டின் தரைகளை, சுவர்களைத் துடைத்துச் சுத்தம் செய்கிறது முரட்டு வெயில். யாவையும் அணைத்துக் கொள்கின்றன வெளிச்சத்தின் அகன்ற கைகள். உலகம் வெயிலின் தித்திப்பில் கரைகிறது.

இன்னொரு புறம் பெண்களுக்குக் கோடையைக் கடப்பது என்பது பயமும் பெருமூச்சும் கோபமும் எரிச்சலும் கொண்ட நீள் பயணம். தண்ணீர் லாரிகளின் பின்னே குடங்களுடன் ஓடி நீர் பிடிக்க வேண்டும். உறக்கத்தில் கூட கண் இமைக்குள் வெயில் பிரகாசிக்கும் குழந்தைகளின் அழுகுரலும் சுவர்களில் இருந்து வடியும் வெக்கையுமாக கோடை வாழ்க்கையை ஓர் உலர்ந்த திராட்சைப் பழத்தைப் போல சாறு வற்றிப்போனதாக ஆக்கியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு, திருவான்மியூர் பகுதியில் ஒரு நண்பனின் அறையில் இருந்தேன். அந்த வீட்டுக்காரர் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவரது ஐம்பது வயது மனைவிதான் வீட்டை நிர்வகித்து வந்தார். கீழே வீட்டுக்காரரும் இரண்டு குடித்தனங்களும் இருந்தார்கள். மாடி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அங்கேயும் இரண்டு குடும்பங்கள் இருந்தன. அதற்கும் மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டது எங்களது அறை. அதில் ஆறு பேர் குடியிருந் தோம். வீட்டுக்காரப் பெண்மணி மிகவும் கண்டிப்பானவர். காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை மோட்டார் போடுவார். எங்களைப் போன்ற தனிக் கட்டை களுக்கு ஆளுக்கு ஒரு வாளி தண்ணீர். குடும்பத்தினருக்கு தினமும் இரண்டு குடம், இரண்டு வாளி தண்ணீர். இதற்கு மேல் ஒரு குவளை தண்ணீர் கூடக் கிடைக்காது. நண்பர்கள் எவராவது அறைக்கு வந்துவிட்டால், குளிப்பதற்காக அருகில் உள்ள தரமணியில் மாணவர்கள் விடுதிக்குக் கூட்டிச் செல்ல வேண்டிய நிலை. ஆனாலும், அந்தத் தெருவில் இந்த வீட்டில் மட்டும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மற்ற தெருவாசிகள் குடங்களுடன் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடிக்கொண்டு இருந்த காலம் அது.

அக்னி நட்சத்திரம் துவங் கிய நாள்... ஆஸ்பெஸ்டாஸ் அறையில் மதியம் பாயை விரித்துப் படுத்தபடி மோபிடிக் நாவலை வாசித் துக்கொண்டு இருந்தேன். உப்பு உருகிக் கசிவது போல சுவரிலிருந்து வெக்கை பிசுபிசுத்து வழிந்தது. எங்கள் அறையில் மின்சார விசிறி கிடையாது. மின்சாரக் கட்டணமாக நாங்கள் நூறு ரூபாய் மட்டும் தருவதால் எங்களுக்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் யாரோ ஆள் ஏறி நடப்பது போல வெயில் ஆங்காரத்துடன் நடந்து செல்வது தெரிந்தது.

ஒரு குவளை தண்ணீர் கிடைத்தால் போதும், மேலே தெளித்துக்கொள்ளலாம் என்று தேடினால் வாளியில் துளி தண்ணீர் இல்லை, மாறாக வெயிலில் சூடேறி உருகிவிடும் நிலையில் இருந்தது பிளாஸ்டிக் வாளி.

யாருக்கும் தெரியாமல் ஒரு வாளி தண்ணீரைத் திருடி வந்துவிடலாம் என்று யோசனையாக இருந்தது. அநேகமாக கீழ் வீட்டில் யாவரும் உறங்குகிற நேரம் இது. மெதுவாகப் படிகளில் வாளியோடு இறங்கி வரும்போது என்னைப் போலவே கையில் வாளியுடன் மாடி வீட்டில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே இறங்கி நீர்த் தொட்டியின் மூடியைச் சப்தமின்றி எடுத்துவைத்துவிட்டு தண்ணீர் அள்ளிக்கொண்டு மாடிக்கு வருவதைக் கண்டேன்.

நான் மாடிப்படியில் நின்றதை அவர் கவனிக்கவில்லை. அருகில் வந்ததும், அவர் என்னைப் பார்த்ததும் திகைத்துப் போனவராகப் பேச்சற்று குனிந்து நின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு என் கால்களின் அடியில் இருந்த வாளியை பார்த்ததும் லேசாகப் புன்னகைத்தபடி ÔÔரொம்ப வெயிலா இருக்கு!ÕÕ என்றார். நான் பதில்பேசவே இல்லை. அவரை விலக்கி படிகளில் இறங்க முயன்றேன். அதற்கு உடன் பாடில்லாதவர் போல, ‘Ôதொட்டி யில தண்ணி கொஞ்சமாதான் இருக்கு, கீழே போகாதீங்க!Õ’ என்றபடி என் வாளியைப் பிடுங்கி அவரிடமிருந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றித் தந்துவிட்டு தன் வீட்டுக்குள் போய்விட்டார்.

நானும் அந்தத் தண்ணீருடன் அறைக்குள் சென்று பாய் முழுவதும் தண்ணீரைக் கொட்டி விட்டு அதிலேயே படுத்துக்கொண்டேன். அன்று மாலை, ‘தொட்டியிலிருந்து யாரோ தண்ணீரைத் திருடிவிட்டார்கள்’ என்று வீட்டுக்காரப் பெண் பெரிதாகக் கத்திக்கொண்டு இருந்தார். நானும் நண்பர்களும் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பின்னிரவில் அதே பெண் இது போலவே இரண்டு வாளிகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ரகசியமாக வருவ தைப் பார்த்தேன். நான் அதைக் கண்டுகொள்ள வில்லை.

ஆனால், எதிர்பாராமல் மின்சாரம் தடைபட்ட ஒரு இரவில் அந்தப் பெண் நீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் அள்ளும்போது, தடுமாறி மூடியைக் கீழே போட்டு விட்டார். சப்தம் கேட்டதும் கையில் டார்ச் லைட்டுடன் வீட்டுக்காரப் பெண் வெளியே வந்தார். கர்ப்பிணியால் மாடிக்கும் ஏறிப் போக முடியவில்லை. sraaகையில் ஒரு வாளித் தண்ணீரோடு நிற்கும் பெண்ணைக் கண்டதும் வீட்டுக்காரப் பெண்ணுக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை.

‘Ôஏண்டி... நீதான் இத்தனை நாளா தண்ணி திருடுறயா... அதான் தினம் ரெண்டு குடம் நாங்களா தர்றோமில்லையா..? உனக்கு எதுக்குடி இந்த நேரத்தில தண்ணீர். இப்படி நடு ராத்திரி பூனை மாதிரி வந்து தண்ணியை எதுக்குடி திருடுறே? சொல்லு...Õ’
அவள் பேசவே இல்லை. இருளுக்குள் நின்று கொண்டே இருந்தாள். வீட்டுக்காரப் பெண் போட்ட கூச்சலில் யாவரும் திரண்டிருந் தார்கள். இதற்குள் மின்சாரமும் வந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் கையைக் கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றிருந்தார். வீட்டுக் காரப் பெண் மிக ஆபாச மாகத் திட்டினார். அவரைச் சமாதானப் படுத்தும் விதமாக, கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார்.

ÔÔஏதோ தெரியாம செஞ்சுட்டா பிள்ளைத்தாச்சி! உங்க தண்ணிக்கு உரிய காசை கொடுத்திடுறேன்.ÕÕ

ÔÔபிள்ளைத்தாச்சினா திருடச் சொல்லுதா? உன் பிச்சைக் காசு யாருக்கு வேணும்? நான் தர்றேன் ஆயிரம் ரூபா! இந்தக் கிணத்துல உன்னால தண்ணி நிரப்ப முடியுமா?’Õ இதற்குள் வீட்டுக்காரப் பெண்ணின் மருமகள் மாடியேறி, கர்ப்பிணிப் பெண் வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாளியைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தார். ‘Ôஏற்கெனவே ஒரு குடம் கொண்டு போயி ஊத்திட்டு வந்திருக்கா... பாருங்க!’Õ என்றார். சிவப்பு வாளி நிறைய சோப்பு நுரை. வீட்டுக்காரப் பெண்மணி ஆத்திரத்தில் தன் காலால் அந்த வாளியை உதைத்தார். அதில் கர்ப்பிணிப் பெண்ணின் உள்ளாடைகள் நனைந்து கிடந்தன. இதைக் கண்டதும் வீட்டுக்காரப் பெண் ஆத்திரம் தாள முடியாமல் கத்தினார்.
ÔÔகுடிக்கவே தண்ணியில்லாம லோல் படுறோம். இதுல நல்ல தண்ணியில பாவாடை துவைக்குறியா? திமிர் எவ்வளவு இருக்கு பாரு!ÕÕ

அந்தப் பெண் உதடுகள் துடிக்க நின்றிருந்தார். என்ன செய்வது என்று தெரியாத அவரது கணவர் அழுத்தமான குரலில் சொன்னார்... ÔÔரெண்டு நாள் டயம் குடுங்க, வேற வீடு பார்த்துப் போய்க் கிடுறோம்.இவ ஊரு ஸ்ரீவைகுண்டம். வீட்டுக்குப் பக்கத்திலேயே ஆறு ஓடும். அந்தப் பழக் கத்திலே செஞ்சுட்டா... மன்னிச்சிருங்க.ÕÕ
வீட்டுக்காரப் பெண்மணி இன்னொரு வாளியில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும் திரும்பவும் தூக்கி நீர்த் தொட்டியில் ஊற்றினாள். யாவரும் கலைந்து போனார்கள். சோப்பு நுரைத்த உள்ளாடைகளை அந்தப் பெண் வெறித்துப் பார்த்தார். பிறகு, ஆத்திரத்தோடு அத்தனை துணிகளையும் அள்ளித் தெருவில் எறிந்துவிட்டு, மெதுவாகப் படியேறி தன் வீட்டுக் குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள்.
எத்தனையோ முறை அந்த வீட்டுக்காரப் பெண்மணியும் மாடி வீட்டுப் பெண்ணும் அந்நியோன்யமாக ஒன்றாக அமர்ந்து உதிரி முல்லைப் பூக்களை வாங்கி பூ கட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டிருக்கிறேன். கோடை, அவர் களின் இணக்கத்தைத் துண்டித்துவிட்டது. தண்ணீர் & உலகின் கருணையும் தீராப் போராட்டமு மாக இரு தலைகொண்டதாக உருமாறியிருக்கிறது.

மாநகர வாழ்வின் இடர்கள் முற்றிலும் விநோதமானவை. அவற்றை எந்த எழுத்தாளனும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. குறிப்பாக மத்திய வர்க்கத்துக் கோடை நாட்கள்... பிணக்குகள் ஊற்றெடுக்கும் சுனை. இதை எழுத்தில் கோபிகிருஷ்ணனும் திலீப்குமாரும் மிக அழகாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.
குறிப்பாக திலீப்குமாரின் கதைகள், சாதாரண மனிதர் களின் ஆசைகளும் ஏமாற்றங் களும் சார்ந்தது. இவரது கதைகள் சென்னையில் வாழும் குஜராத்தி குடும்பங் களின் உலகை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. அதிலும் முதியவர்கள், பெண்களின் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் இயலாமையுமே இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன. திலீப் குமாரின் கதைகள் மெல்லிய நகைச்சுவைத்தன்மை வாய்ந் தவை. அவை சம்பவங்களின் அபத்தத்தை வெளிப்படுத்து பவை.

இவரது சிறுகதைகளில் ‘தீர்வு’ என்ற சிறுகதை மிகச் சிறப்பானது. சென்னையின் மின்ட் பகுதியில் வாழும் குஜராத்திகளின் குடியிருப்பில் ஒரு கிணற்றில் எலி செத்துக் கிடக்கிறது. Ôஅந்த எலியை எப்படி வெளியே எடுப்பது? யார் அதைச் செய்வது?Õ என்ற நிகழ்வை விவரிக்கிறது கதை. ஓர் அபத்த நாடகத்தைப் போல கேலியும் மறைமுகமான வலியும் கொண்ட இந்தக் கதை இன்னொரு தளத்தில் ஒடுக்கமானதொரு குடியிருப்பில் ஒரே டாய்லெட்டை முப்பது பேர் உபயோகப்படுத்திக் கொண்டு வாழும் எலி வளை போன்ற அவர்களின் வாழ்க்கை நிலையைப் பரிகசிக்கிறது.

கதை சொல்லியின் மாமா முடிவாக, செத்த எலியை வெளியே எடுத்துவிடுகிறார். ஆனால், எலி மிதந்த அந்தக் கிணற்றுத் தண்ணீரை உபயோகப்படுத்துவதா வேண் டாமா என்று இன்னொரு சர்ச்சை எழுகிறது. இதற்குத் தன்னிடம் ஒரு தீர்வு இருப்பதாகச் சொல்லியபடி, தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த கங்கா தீர்த்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிணற்றில் தெளித்து இப்போது கிணற்றுத் தண்ணீர் சுத்தமாகிவிட்டதாகச் சொல்கிறாள் பாட்டி. யாவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.

சுத்தமோ, அசுத்தமோ... தண்ணீர் மிக அவசியமாக இருக்கிறது. எளிய சம்பவம் போலத் தோன்றும் இந்தக் கதை ஆழமாக, மாநகரக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிடுவதை வெளிப்படுத்துகிறது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வாழும் மக்களும் கூட இங்கு நெருக்கடியானதொரு சூழலில்தான் வாழ்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. திலீப்குமாரின் கதைகள் வாழ்க்கை நெருக்கடிகள் சார்ந்து புகார் சொல்வதில்லை. மாறாக அது மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிற உறவுநிலை மாற்றங்களை ஆராய்கிறது.
கோடை ஒரு முற்றுப் பெறாத ஒரு நீள் கதை. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்!’ என்று ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்.

கோடைக்கு எவ்வளவு கண்கள் என்று யாரால் சொல்ல முடியும்!
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் திலீப்குமார். இவர் தொகுத்து, பெங்குவின் பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘தற்கால தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு தமிழ்க் கதைகளுக்கு இந்திய அளவில் ஒரு விரிந்த தளத்தை உருவாக்கித் தந்தது. இவரது பூர்விகம் குஜராத். சிறு வயதிலே சென்னைக்கு வந்துவிட்டவர். ‘க்ரியா’ பதிப்பகத் தில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ‘மூங்கில் குருத்து’, ‘கடவு’ என்று இரண்டு சிறுகதைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவர். அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் வெளிநாட்டில் தமிழ்கற்றுக் கொள்பவர் களுக்கும் வழிகாட்டுதல் மற்றும் தமிழ்ப் புத்தக விநியோகம் தொடர்பான பணிகளைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். திலீப்குமாரின் கதைகளை வாசித்து முடிக்கும்போது பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போவது போல சூழ்நிலை மனிதர்களை கவ்விக்கொண்டு போகிறது என்ற உண்மை புரிகிறது.

***********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

ஜேவி on March 3, 2010 at 9:31 PM said...

கோடை வெப்பம் கடந்த ஒரு வாரமாக அதிகரிக்க துவங்கிவிட்டது. இப்போதே லாரி தண்ணீர் வாங்குவது மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது போன்ற குறிப்புகள் எங்கள் குடிருப்பு நிர்வாகிகளால் எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கோடை மக்களுக்கிடையே கோட்டைப் போட்டுச் சென்றுவிடுகிறது.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்