Mar 4, 2010

என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்களை அதிகம் நான் பெற்றதில்லை. அச்சந்திப்புகளைக் கூடுமான வரையிலும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். வாசிப்பினூடேயே வாசகன் படைப்பாளியுடன் முழுமையான உறவைக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான நேர்ச் சந்திப்பு பல சந்தர்ப்பங்களில் வாசிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய அனுபவத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்றும் கருதுகிறேன்.

காலத்தில் வாழும் ஆற்றல் பெற்றிருந்தால்தான் ஒருவன் படைப்பாளி. ஒரு படைப்பாளி அவன் படைப்புக்களின் மரணத்திற்குச் சாட்சியாக இருந்துவிட்டுக் கடைசியாக அவன் மறைகிறான் என்றால் அவனைப் படைப்பாளி என்று எப்படிச் சொல்ல முடியும் ? படைப்பாளி மறைந்ததும் அவனைப் பின் தொடர்ந்து அவனுடைய படைப்புப்களும் மறைந்துபோய்விட்டால் அப்போதும் அவனைப் படைப்பாளி என்று கூற முடியாது. தான் இல்லாதபோதும் தன் சாராம்சத்தை வாழ வைத்துக்கொண்டிருப்பவன்தான் படைப்பாளி.

லியோ தோல்ஸ்த்தாய் இப்போது இருக்கிறாரா ? மறைந்துவிட்டாரா ? தோல்ஸ்தாய் sura 18 என்ற மனிதன் மறைந்துவிட்டான். ஆனால் அவருடைய சாராம்சம் இப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. 'போரும் காதலும் ', 'அன்னா கரீனினா ', 'புத்துயிர்ப்பு ' இவையெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் வரையிலும் தோல்ஸ்தாயும் வாழ்ந்து கொண்டிருப்பார். இவற்றைக் கற்றறிய தோல்ஸ்த்தாய் என்ற மனிதனின் உதவி இல்லாமல் இருப்பது நமக்குக் குறையாக இருக்கிறதா ? எழுத்தாளனின் நேரடியான உறவு இல்லாமலேயே அவனது படைப்புக்களுடன் வாசகன் முழுமையான உறவு கொள்ள முடியும். படைப்புக்கு வெளுயே எழுத்தாளனின் தேவையைப் படைப்பு உணர்த்தாமல் இருந்தால்தான் அது முழுமையானது. இது போன்ற எண்ணங்கள் - இவை சரியோ தவறோ - ஏற்பட்டது காரணமாக வாசகனுடன் உறவு கொள்ள வேண்டியவை புத்தகங்களே அன்றி எழுத்தாளன் அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியெல்லாம் வரையறை செய்துகொண்ட பின்பும் எழுத்தாளனுக்கு வாசகனைச் சந்திப்பதில் அறிவு ரீதியான நிலை தாண்டி உணர்வுபூர்வமான ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. எழுத்தாளனின் படைப்புக்களைப் பற்றி அவனிடமே வாசகன் பேசுகிறான். பாராட்டுகிறான். தன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். கூரான விமர்சனம் ஒன்றை முன்வைக்கிறான். குறைகளை அடுக்கிக்கொண்டேபோகிறான். சில சமயம் படைப்பையே மொத்தமாக நிராகரித்துவிடுகிறான். ஒரு விவாதத்தை உருவாக்க முடிகிறது. படைப்பைப் பற்றிய சில சூட்சுமங்களை எழுத்தாளனால் வாசகனுக்கு எடுத்துச் சொல்ல முடிகிறது. படைப்பைப் பற்றிச் சில குறைகளை வாசகன் மூலம் எழுத்தாளன் தெரிந்துளகொள்ள முடிகிறது.

சேலத்தில் முதல் முறையாகப் பேசுகிறேன். அது உண்மைதான். ஆனால் சேலம் எனக்கு மிகவும் நெருக்கமான இடம். தொடர்ந்து என் இளம் வயதிலிருந்து இங்கு வந்துகொண்டிருந்திருக்கிறேன். சேலம் தெருக்களும் ஹோட்டல்களும் எனக்குப் பழக்கமானவை. சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரியாரின் பேச்சு ஒன்றை இங்கு கேட்டேன். எங்கள் ஊரில் பல முறை அவருடைய பேச்சை அதற்கு முன்னாலேயே கேட்டிருக்கிறேன். பல ஹோட்டல்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், தங்கும் விடுதிகளின் பெயர்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. மிக மோசமான தெருச்சண்டைகளைச் சேலத்தில் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த காப்பியைச் சேலத்தில் அருந்தியிருக்கிறேன். 25, 30 வருடங்களுக்கு முன்னால் வெளுயான தமிழ்ப் படங்கள், அவை வெளுயாகிற அன்று கொட்டகை வாயிலில் களேபரமும் சந்தடியும் சண்டையும் உற்சாகமும் இருக்கும். அவற்றைப் பல முறை சேலத்தில் பார்க்கக் கிடைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.

ஒரு முறை நான் என் நண்பர்களுடன் இங்கு வந்து கவிஞர் சி. மணியுடன் இரண்டொரு நாட்கள் இருக்க நேர்ந்தது. 'அஃக் ' பத்திரிகை வந்துகொண்டிருந்த காலத்தில் - வந்துகொண்டிருந்த காலத்திலோ அதற்குப் பின்னாலோ எனக்கு நினைவில்லை -அஃக் பரந்தாமனைச் சந்தித்திருக்கிறேன். நீண்ட இடைவெளுக்குப் பின் இங்கு இப்போது வந்தபோது அந்த நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருக்கின்றன. இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. ஊரே மாறிவிட்டது. புதிய எழுத்தாளர்களும் புதிய வாசகர்களும் தோன்றியிருக்கிறார்கள். புதிய எழுத்து முறைகள் தோன்றியிருக்கின்றன. தமிழ்ச் சூழலிலேயே ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் விரும்பும் வகையிலான மாற்றங்கள். அவை பற்றியெல்லாம் பேச இன்று நமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

'படிப்பு அனுபவமும் படைப்பு அனுபவமும் ' ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாத அனுபவங்கள். படிப்புதான் படைக்க வேண்டும் என்ற ஆசையையே தூண்டுகிறது. நான் படித்த விஷயங்கள் என்னைப் படைக்கத் தூண்டின என்ற வாசகத்தைச் சொல்லாத எழுத்தாளர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். என்னுடைய அனுபவமும் அதுதான். என் பேட்டிகள், என் புத்தகங்களில் இணைக்கப்பட்டிருக்கின்றன. என் படிப்பு, என் படைப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய கட்டுரைகளும் என் புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் நான் கூறியுள்ள விவரங்களை மிகச் சுருக்கமாகக் கூறிவிட்டு அவற்றில் சொல்லாத விஷயங்களை அதிகம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் படிப்பிலிருந்தோ படைப்பிலிருந்தோ புதுமைப்பித்தனைப் பிரிக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிப் படிப்பு என்று எனக்குச் சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஒரு நிர்பந்தத்தை முன்னிட்டு நான் பள்ளிக்கு ஒரு சில வருடங்கள் சென்றிருக்கிறேன். அப்படிச் சென்ற காலங்களில் நான் விருப்பத்துடன் என் பாடங்களை ஒருநாள்கூடக் கற்ற நினைவில்லை. ஆசிரியர் பள்ளியில் பாடம் எடுக்கும்போது அவருடைய பேச்சு என் காதில் பெரும்பாலும் விழுந்ததேயில்லை. வகுப்பைக் கவனிக்காத மாணவன் என்று பெயர் பெற்று மோசமான தண்டனைகள் பெற்றிருக்கிறேன். வகுப்பில் கவனத்தைச் செலுத்துவது என்னால் முடியாத ஒரு காரியமாகத்தான் இருந்தது. மனம் எப்போதும் வகுப்புக்கு வெளுயே, மற்றொரு இடத்தில், மற்றொரு காலத்தில், உலக வாழ்க்கைக்கு அதீதமான ஜீவராசிகளுடன் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். வகுப்பில் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாது.

நான் படித்த பள்ளி மிகப் பெரிய கட்டடம். வகுப்பறைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் நீளமான வராண்டாக்கள் பிடிக்கும். படிக்கட்டுகள் பிடிக்கும். போர்டிகோ பிடிக்கும். ராட்சசத் தூண்கள் பிடிக்கும். முகப்புக் கோபுரங்கள் பிடிக்கும். நந்தவனம் பிடிக்கும். கால் பந்தாட்ட மைதானங்கள் - எண்ணிக்கை நான் படித்த காலத்தில் ஏழெட்டு என்று சொல்லலாம் - இவையெல்லாம் பிடிக்கும். பள்ளியிலிருந்த எல்லா மரங்களுடனும் எனக்கு மானசீகமான உறவு இருந்தது. பள்ளிக் கட்டடத்தையும் அது இருக்கும் இடத்தையும் ஒரு நாள்கூட மறந்து இப்போது வாழ முடியவில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அங்கு போகிறேன். எனக்கு விருப்பமான வேப்ப மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருப்பேன்.

பள்ளியில் வீரபத்திரத் தேவர் என்ற பெயரில் எனக்கு நண்பன் ஒருவன் இருந்தான். அவனுக்கு என் மீது ஆழ்ந்த பிரியம் இருந்தது. என்னை வகுப்பில் கேலி செய்யும் பையன்களை எண்ணி நான் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தேன். 'உன்னை யாராவது கேலி செய்தா என்கிட்ட சொல்லு. அலகைத் திருப்பிடறேன் ' என்று வீரபத்திரத் தேவர் என்னிடம் சொன்னான். அவனுடைய இந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக வைத்துக்கொண்டிருந்தான். அவனுடைய இருப்பு எனக்குப் பெரிய ஆறுதலைத் தந்தது. 1945, 46 காலம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உச்ச கட்டம். 1942ல் நடந்த ஆகஸ்டுப் புரட்சியிலிருந்து தொடர்ந்து மாணவர்கள் பல்வேறுபட்ட காரணங்களை முன்னிட்டு ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். என்னுடைய பள்ளித் தோழர்களும் போய்க்கொண்டிருந்தார்கள். வீரபத்திரத் தேவர் ஜெயிலுக்குப் போகத் துடித்துக் கொண்டிருந்தான். ஒரு தடவை வீரபத்திரத் தேவர் அவன் கைதாவதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்த பின்பும்கூட போலீஸ் அவனை அலட்சியப்படுத்திவிட்டு, அவன் செய்த காரியங்களுக்குப் பாதிக் காரியம்கூடச் செய்யாத சுப்பையா என்ற மாணவனைக் கைதுசெய்து கொண்டுபோய்விட்டது.

வீரபத்திரத் தேவர் அவமானம் தாங்காமல் பள்ளிக்கே வரவில்லை. நான் அவனைத் தேடிக்கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போனேன். அவன் ஒரு நார்க்கட்டிலில் சம்மணம் கூட்டி உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். பாட புத்தகம் அல்லாத ஒரு புத்தகத்தை என் சக மாணவன் படிப்பதை அப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். என் மனதில் மிகப் பெரிய கிளர்ச்சி தோன்றிற்று. இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒரு மனிதனால் படிக்க முடியுமா ? தேவர் புத்தகத்தைக் காட்டினான். 'எரிமலை அல்லது இந்திய சுதந்திரப் போர் ' என்பதே புத்தகத்தின் தலைப்பு. சாவர்க்கர் எழுதியது. இரத்தம் கொதிக்கிறது என்றான் தேவர். வாழ்க்கையில் ஒரு புத்தகம் கிளர்ச்சியை ஏற்படுத்திய முதல் தருணம் அதுதான். இந்தப் புத்தகத்தைப் பற்றி 'ஒரு புளியமரத்தின் கதை 'யில் குறிப்பிட்டிருக்கிறேன். 'எரிமலை 'யை நான் படிக்கவில்லை. அந்தப் புத்தகத்தின் மீது எனக்கு பயம் இருந்ததுதான் காரணம். அதற்கு முன் நான் எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை. கதை அல்லாத ஒன்றை, அதிகப் பக்கங்கள் கொண்ட ஒரு நூலை என்னால் படிக்க இயலுமென்றே அப்போது நான் நம்பவில்லை. தேவர் 'எரிமலை 'யைப் பல நாட்கள் என்னிடம் தந்துவைத்திருந்தான்.

அந்தப் புத்தகத்தை நான் வெகு நேரம் அளைந்திருக்கிறேன். புத்தகங்களைக் கையில் வைத்துப் பக்கங்களை விசிறியிருக்கிறேன். முன் பக்கம், பின் பக்கம் உள்ள துண்டு துணுக்குகளைப் படித்திருக்கிறேன். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. மனிதர்கள் போல் தான் புத்தகங்களும். மனிதர்களிடம் நமக்கு விளக்கத் தெரியாத, முன்கூட்டி நாம் சேர்த்துவைத்துக்கொள்ளும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட பயம் இருந்ததென்றால் நாம் நெருங்கிப் பழக முடியாது. உறவு கொள்ள சகஜம் வேண்டும். நிம்மதி வேண்டும். நெருக்கம் வேண்டும். நம்பிக்கை வேண்டும். இவையெல்லாமே புத்தகம் சார்ந்தும் தேவையான உறவுநிலைகள்தான். வாசகனுக்கும் புத்தகத்துக்குமான உறவு -பயமற்ற அன்னியோன்னியம் - மிக முக்கியமானது.

இந்த உறவை உருவாக்கத்தான் சிறந்த விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். எந்தத் தொழிலில்தான் கோணலும் வக்கிரமும் இல்லை ? அது போல் விமர்சனத்திலும் மதிப்பீட்டிலும் கோணல்களும் வக்கிரங்களும் இருக்கின்றன. இவர்கள் எழுத்தைப் படித்துவிட்டு விமர்சகர்களைப் பற்றியும் மதிப்புரையாளர்களைப் பற்றியும் தவறான கற்பனைக்கு ஆளாகிறோம். விமர்சனம் என்பது ஆரோக்கியம் சார்ந்தது. சமூக நலம் சார்ந்தது. நோய்க்குணம் கொண்டதல்ல.

என் வீட்டில் படிப்பவர்கள் அதிகம் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. புத்தக அலமாரியைச் சுற்றித் தவழ்ந்து விளையாடியவன் அல்ல நான். தந்தைக்குப் புத்தக வாசிப்பில் நம்பிக்கை இருந்தது என்று சொல்வதற்கில்லை. தாயை ஆழமான வாசகி என்று சொல்ல முடியாவிட்டாலும் வாசிப்பில் ஆசை கொண்டவர் என்று சொல்லலாம்.

நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டுப் படுத்துக்கொண்டிருந்தபோது உறவினர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். பொழுது போகாத அலுப்புக்கு நான் மிகவும் ஆட்படுவதாக என் தாய் அவரிடம் சொல்லி வருந்தினார். அவர் ஒரு நூல் நிலையத்தின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். மறுமுறை என்னைப் பார்க்க வரும்போது ஒரு சில புத்தகங்களைக் கொண்டுவந்தார். அதில் ஒன்று புதுமைப்பித்தனின் 'காஞ்சனை ' தொகுப்பு. அந்தச் சிறுகதைகளை எழுதியிருப்பவர் புதுமைப்பித்தன் என்பதே அப்போது எனக்குத் தெரியாது. புத்தகத்தைப் படிப்பதற்கு முன் ஆசிரியர் பெயரை கவனிக்க வேண்டும் என்பதும் அப்போது எனக்குத் தெரியாது. பள்ளியில் தமிழ் படிக்கவில்லை என்பதால் மிகவும் சிரமப்பட்டு அந்தக் கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். அதில் 'மகாமசானம் ' என்ற கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. எழுத்தின் மீதும் படிப்பின் மீதும் கனவு சார்ந்த அக்கறை முதலில் எப்போது தோன்றிற்று என்று எவரேனும் என்னிடம் கேட்டால் மகாமசானம் படித்தபோது என்றுதான் சொல்லுவேன். அப்போது ஏற்பட்ட கிளர்ச்சியை மனத்தளவில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் நான் உணர்ந்தேன். மகாமசானத்தை உருவாக்கியவன் என்ன காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறானோ அந்தக் காரியத்தைத்தான் நானும் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் உருவாயிற்று. தொடர்ந்து புத்தகங்களை நேசிக்கும் ஒரு வெறி மலர்ந்தது. இன்றளவும் அந்த வெறி இருந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதை ஒருவிதமான காதல் என்றுதான் சொல்ல வேண்டும். கட்டுக்கடங்காத காதல். கண்மூடித்தனமான காதல். தறிகெட்டு அலைபாயும் காதல். புத்தகத்தைப் படிப்பதைவிட முக்கியமானதாக இருக்கிறது புத்தகங்களைப் பார்ப்பது. படிப்பதைவிட முக்கியமானதாக இருக்கிறது புத்தகங்களை ஸ்பரிசிப்பது. அவற்றின் அழகில் மனதைப் பறிகொடுப்பது. புத்தம்புதிய புத்தகங்கள் இறைந்து கிடக்கும் ஒரு மேஜை பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது. பூக்களின் அழகுக்குச் சற்றும் குறைந்த அழகு கொண்டவை அல்ல புத்தகங்கள் என்றுதான் தோன்றுகிறது.

வாங்கும் புத்தகங்களில் பாதிதான் படிக்க முடிகிறது. இது தெரிந்தும் புத்தகங்களை வாங்கிக்கொண்டேயிருக்கிறேன். என்னுடைய இயற்கை அபூர்வமான ஒன்று என்பது அல்ல. பல வாசகர்களும் இந்தக் கண்மூடித்தனமான வெறிக்கு ஆட்பட்டுத்தான் இருக்கிறார்கள். புத்தகங்களின் மீது வாசகன் கொள்ளும் நேசம் தர்க்க ரீதியானது மட்டுமல்ல.

17, 18 வயதில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டேன். அதற்கு முன் கையில் கிடைத்த வரையிலும் புதுமைப்பித்தனின் படைப்புக்களைப் பலமுறை படித்திருந்தேன். புதுமைப்பித்தனின் எழுத்து மீது நான் கொண்ட ஒரு ஆவேச உறவை மனநிலை சற்றுப் பிசகிய ஒரு வெளுப்பாடாகவே என் தாய் கருதினாள். ஒரு வாசகன் எழுத்தாளனாக மாறும்போது அவனுடைய மனநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. எழுத்து ஒரு சமூகச் செயல்பாடு; லெளகீகச் செயல்பாடு அல்ல. லெளகீகச் செயல்பாட்டுக்கு எப்போதும் அடிப்படையாக இருப்பது நான் என்ற உணர்வு. படைப்புக்கு அடிப்படையாக இருப்பது நாம் என்ற உணர்வு. பிரபஞ்சத்திலிருந்து, சமூகத்திலிருந்து வேறுபடுத்தித் தன்னில் ஆழ்ந்து கிடப்பதுதான் லெளகீகம். ஊருடன் இணைந்து, உலகத்துடன் இணைந்து பிணைந்து கிடப்பது படைப்பு என்று சொல்லலாம். புதுமைப்பித்தன் மீது ஆவேச வெறி கொண்டிருந்த காலத்தில் - அந்த வெறி இப்போது இல்லை என்பது மட்டுமல்ல;ள அதைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இப்போது இருக்கிறது - வேறு பல எழுத்தாளர்களையும் படித்தேன். முக்கியமாக மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லாரையும் படித்தேன். 1950இலிருந்து பதினைந்து இருபது வருடங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு புத்தகம் என்று படித்திருக்கிறேன். புத்தகங்கள் சார்ந்து சில விருப்பு வெறுப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஆரம்ப நாட்களில் பிரக்ஞை பூர்வமான தேர்வு என்பது இல்லை. புத்தகங்களின் தோற்றம் அன்றிலிருந்து இன்று வரையிலும் முக்கியமானதாக இருந்துவருகிறது. மோசமான தோற்றங் கொண்ட பல நல்ல புத்தகங்களை அவற்றின் தோற்றம் காரணமாகப் படிக்காமல் விட்டிருக்கிறேன்.

இன்றும் மோசமான புத்தகங்களைப் படிக்க மனது சங்கடப்படுகிறது. மற்றொரு விருப்பு வெறுப்பு, காகிதம் சம்பந்தப்பட்டது. நான் பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக இருந்த காலத்தில் சோவியத் யூனியனில் இருந்து வந்த பல புத்தகங்களையும் படிக்கச் சங்கடப்பட்டிருக்கிறேன். கட்டமைப்பை உருவாக்குவது, அதாவது பைண்டிங்கை உருவாக்குவதில் அவர்கள் நிபுணர்கள். சோவியத் கம்யூனிசத்துக்கு முற்பட்ட காலத்திலும் சரி பிற்பட்ட காலத்திலும் சரி அவர்களுக்கு இணையான பைண்டிங்கை வேறு யாரும் உருவாக்கவில்லை. எனக்கும் அந்த பைண்டிங் மீது மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் காகிதத்தின் மணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு புத்தகமும் அதன் பக்கங்களுக்குள்ளே ஒரு ரசாயனத் தொழிற்சாலையை நடத்துவது போல் ஒரு ரசாயன வாடை இருந்துகொண்டேயிருக்கும். ருஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்கூட நான் கூடுமானவரை சோவியத் பதிப்புகளில் படிக்காமல் வேறு நாட்டுப் பதிப்புகளில்தான் படித்தேன்.

முரட்டுத்தனமான மொழியில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தையும் படிக்கச் சிரமமாக இருக்கிறது. முரட்டுத்தனமான மொழி என்று சொல்லும்போது கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம். மொழிக்கும் படைப்பாளிக்குமான உறவில் ஒரு முரட்டுத்தனம் இருக்கக்கூடாது. உறவு இணக்கமற்று இருந்தால், இங்கிதமற்று இருந்தால் ஒத்திசைவு என்பது அறவே இல்லாதிருந்தால் அந்தப் புத்தகங்களைப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. சில தாம்பத்திய உறவுகள் மிகக் கோணலாக அமைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கல்யாணம் ஆனதிலிருந்து ஓயாமல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை. எடுத்ததற்கெல்லாம் சச்சரவு என்று சில தாம்பத்தியங்கள் அமைந்துவிடுகின்றன. அதைப் போன்றதொரு உறவு எழுத்தாளனுக்கும் மொழிக்கும் இருந்ததென்றால் அதைத்தான் நான் முரட்டுத்தனம் என்கிறேன். எப்படி கணவனும் மனைவியும் சண்டைபோட்டுக்கொள்கிற இடத்தில் நிம்மதியாக நிற்க முடியாமல் போகிறதோ, அது போல் இந்தப் புத்தகங்களுடன் நமக்குத் தோழமை கொள்ள முடியாமல்போகிறது. தமிழில் ஒரு அம்மையார் எழுதிக்கொண்டிருக்கிறார். நிறையவே எழுதியிருக்கிறார். முற்போக்கான முக்கியமான படைப்பாளி என்று பெயர் பெற்றவர். அவருடைய படைப்பில் ஒன்றைக்கூட என்னால் படிக்க முடியவில்லை. முரட்டுத்தனம் என்று நாம் எதைக் கற்பனை செய்துகொள்கிறோமோ அந்த அம்சமே அவர் எழுத்தில் கிடையாது. இருந்தாலும் அவருக்கும் மொழிக்குமான உறவு மிகுந்த சங்கடத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. ஒரு புத்தகத்தையேனும் முழுமையாகப் படித்துவிட்டு அந்தப் புத்தகத்தின் மீதான விமர்சனத்தை ஆதாரபூர்வமாகச் சொல்வோம் என்றால் அந்தக் காரியம் நடக்கவேயில்லை.

இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் பலருடைய நூல்களையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாகச் சிறுகதைகள், நாவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், சமயம் சார்ந்த புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள், சமயத்துக்கெதிரான புத்தகங்கள், ஆன்மிகத்தைப் பற்றி விளக்கும் புத்தகங்கள் என்று பல. குறைந்தது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் மீதாவது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்கள் முன் அந்த ஆசிரியர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வரிசைப்படுத்திக்கொண்டுபோவது என் உணர்ச்சிகளை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம்.

நான் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதிகளையும் நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ அறிவாளி என்றோ சிந்தனையாளர் என்றோ ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அழைப்பது அவர் சுதந்திரம். sura 4 ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம். அத்துடன் நான் சீரான படிப்பாளியும் அல்ல. ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தைச் சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு பொருள் சார்ந்த தேர்ச்சியைப் புத்தகங்களின் மூலம் உருவாக்கிக்கொள்ளும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கும், ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கும், ஒரு ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியருக்கும், என் விருப்புகள் சார்ந்து, என் மனோநிலை சார்ந்து, தாவிக்கொண்டேயிருப்பேன். எனக்குச் சில அக்கறைகள் இருக்கின்றன. இடங்கள் சார்ந்த அக்கறை. காலங்கள் சார்ந்த அக்கறை. கடவுள் சார்ந்த அக்கறை. கடவுள் மறுப்பு சார்ந்த அக்கறை. தத்துவம் சார்ந்த அக்கறை. மனிதர்கள் சார்ந்த அக்கறை. மனித உறவுகள் சார்ந்த அக்கறை. இவையெல்லாம் இருக்கின்றன. இந்த அக்கறைகள் மனதில் சில ஆவல்களை உருவாக்குகின்றன. இந்த ஆவல்களைத் தீர்க்க நான் புத்தகங்களைப் படிக்கிறேன்.

1952இலோ 53இலோ நான் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளுயிட்டேன். அந்த மலரில் சேர்ப்பதற்காக நான் ஒரு கதை எழுதினேன். அதுதான் என் முதல் படைப்பு. அது 'நிஜமும் நிழலும் ' என்ற தலைப்பில் பின்னால் 'சாந்தி ' யில் வெளுவந்தது. புதுமைப்பித்தனின் மொழி நடையும் பார்வையும் ஊடுருவியிருந்த, அவருடைய பாதிப்பை வெகுவாகக் கொண்ட கதை. அப்போது தமிழில் வெளுவந்த முற்போக்கு எழுத்துக்களையும் - படைப்பு, இலக்கியங்கள் என்று சொல்வதைவிட சிந்தனைகள் என்று சொல்ல வேண்டும் - தொடர்ந்து படித்துவந்தேன். மலையாளத்திலும் முற்போக்கு இலக்கியங்கள் - அவை அதிகமும் படைப்புகள் - தொடர்ந்து படித்துவந்தேன். அப்போது நான் தகழி, வைக்கம் முகம்மது பஷீர், லலிதாம்பிகா அந்தர்ஜனம், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, எஸ். கே. பொற்றகாட் போன்ற பலரையும் படித்தேன். மலையாளத்தில் விமர்னங்களையும் நிறையவே படித்தேன் என்று ஞாபகம். எம்.பி. பாலின் புத்தகங்களும் சி.ஜே. தாமஸ், எம். கோவிந்தன் ஆகியோரின் எழுத்துக்களும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. படைப்பிலக்கியம் சார்ந்து புதுமைப்பித்தன் என்னை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறாரோ அந்த அளவுக்கு எம். கோவிந்தன் என் சிந்தனைகளைப் பாதித்திருக்கிறார்.

ரகுநாதனுடனும் 'சாந்தி ' யுடனும்தான் முதலில் எனக்குப் படைப்பு சார்ந்த உறவு ஏற்பட்டது. 'தண்ணீரி 'லிருந்து தொடங்கி நான் எழுதிய பல கதைகள் அவர் வெளுயிட்டவைதான். அந்தக் கதைகளெல்லாம் வாழ்க்கை என்னைப் பாதித்த விதத்திற்கு நான் தந்த எதிர்வினை என்று சொல்லலாம். புற உலகத்தில் மனித வாழ்க்கை எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. இடதுசாரிச் சிந்தனைகள், முக்கியமாக மார்க்சியம் சார்ந்த பார்வை என்னை வெகுவாக ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் பார்வை, மலையாளத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் என்று கருதப்பட்ட எழுத்தாளர்களின் படைப்பிலக்கியம் சார்ந்த பார்வை, ஜீவாவுடன் நான் கொண்ட தோழமை, பின்னர் நெல்லையில் எனக்கு வாய்த்த நண்பர்கள் என். டி. வானமாமலை, அண்ணாச்சி சண்முகம்பிள்ளை, நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், அண்மையில் மறைந்துபோன கம்யூனிஸ்ட் தலைவர் ப. மாணிக்கம், பாலதண்டாயுதம், முருகானந்தம், தி. க. சி. ஆகியோருடன் ஏற்பட்ட தோழமை, அவர்களுடன் நிகழ்ந்த விவாதங்கள் எல்லாமே என் பார்வையை உருவாக்கியதில் பங்கு பெற்றிருக்கின்றன. இந்தக் காலத்தில்தான் நான் 'இன்றைய இந்தியா ' என்ற நூலைப் படித்தேன். இரண்டு பாகங்கள். ரஜினி பாமிதத், பிரிட்டிஷ் பொதுவுடைமைவாதி, எழுதியது. தமிழில் எஸ். ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஒட்டச் சுரண்டிய பின் நாம் அடைந்துவிட்ட கேவலமான நிலைமையைப் பொருளாதார அளவுகோல் சார்ந்து விவரிக்கும் புத்தகம். இந்த நூல் என்னை வெகுவாகப் பாதித்தது.

மலையாள இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றுக்கு அடுத்தாற் போல் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது ரஷ்ய இலக்கியம். புஷ்கின், துர்கனேவ், தோல்ஸ்தாய், அந்தான் செகாவ், அலெக்ஸாண்டர் குபின், மார்க்சிம் கார்க்கி, ஷோலக்கோவ் எல்லோருமே என் மனதைக் கவர்ந்தவர்கள். மாக்சிம் கார்க்கியின் கதைகள் தமிழிலும் நிறைய மொழிபெயர்க்கப்பட்டு வெளுவந்திருக்கின்றன. அவருடைய 'அமெரிக்காவிலே ' என்ற புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. கு. அழகிரிசாமி அந்தக் கட்டுரைகளை அவருடைய 23ஆவது வயதில் மொழிபெயர்த்திருக்கிறார். மிகவும் அடர்த்தியான மொழியில், வர்ணனைகள் நிரம்பக் கொண்ட மொழியில் கார்க்கி அந்த நூலை எழுதியிருக்கிறார். கிராமியப் பின்னணி கொண்ட அழகிரிசாமி, உயர் கல்வி கற்பதற்கான வசதிகள்கூடப் பெற்றிராத அழகிரிசாமி, அதை மிகுந்த உழைப்பைச் செலுத்தி மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூல் என்னை வெகுவாகப் பாதித்தது.

என்னை பாதித்த மற்றொரு புத்தகம் ஜான் ஸ்டான்பெக் எழுதிய 'க்ரேப்ஸ் ஆஃப் ராத் ' (Grapes of Wrath) என்ற அமெரிக்க நாவல். தமிழில் 'கோபத்தின் கனிகள் ' என்று ஏகதேசமாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம். 'கோபத்தின் கனிகள் ' நாவலால் கவரப்பட்ட நான் அவரின் வேறு பல நூல்களையும் படித்தேன். இவருடைய ஒரு சில நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. 'கடல் முத்து, ' 'சிவப்புக் குதிரைக் குட்டி ' ஆகிய நாவல்கள்.

படைப்புமொழி என்பது எனக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு சவாலாகத்தான் இருந்தது. என் ஆரம்ப காலச் சிறுகதைகளில் நான் பயன்படுத்திய மொழி எனக்கு அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. வசப்பட வேண்டிய மொழி பற்றி மனதில் ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவைப் பிறரிடம் சொல்லி விளக்கவும் முடியவில்லை. எனக்கு நானே சொல்லி விளக்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் கைவசம் இல்லாத ஒரு மொழி வந்துசேர வேண்டும் என்ற ஏக்கம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. என் இளமைக்காலத்தில் எனக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் கிருஷ்ணன் நம்பி. அவருக்கு ஆரம்பத்தில் என் மொழி மீது அதிருப்தி இருந்தது. 'ஒரு புளியமரத்தின் கதை 'யில் முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு மொழி திருப்தியாக இருக்கிறது என்று நம்பி என்னிடம் சொன்னார். அப்படி அவர் சொன்னபோதுதான் மொழி மீது முன்புவரை இருந்த ஒரு குறை தெரிந்தது. அதன்பின் அந்தக் குறை எனக்கு ஏற்படவேயில்லை.

ஏன் மனிதனால் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை ? இதைப் பற்றி நான் ஒருவனிடம் விசாரிக்கும்போது அவன் தன்னிடம் இல்லாதவற்றைப் பற்றிச் சொல்கிறான். உணவு இல்லை என்கிறான். உறைவிடம் இல்லை என்கிறான். பணி இல்லை, ஆரோக்கியம் இல்லை என்கிறான். இந்தக் குறைகள் எதுவும் இல்லாத ஒரு மனிதன் மற்றொரு விதத்தில் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறான். முதல் மனிதன் போல் இவனால் திட்டவட்டமான காரணங்களைச் சொல்ல முடிவதில்லை. எல்லாம் இருந்தும் தனக்கு ஏன் சந்தோஷம் இல்லை என்பது அவனுக்கே ஒரு கேள்வியாக இருக்கிறது.

மனிதனைச் சார்ந்த இந்த இரண்டு நிலைகளும் எனக்கு முக்கியமானவைதான். இந்த இரண்டு நிலைகளைப் பற்றியும் நான் மாறிமாறி எழுதியிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். இல்லாமை காரணமாக உருவாகும் மனிதத் துக்கத்தைப் பற்றிச் சொன்னால் மட்டும்தான் முற்போக்கு என்று நான் நினைக்கவில்லை. மனிதத் துக்கத்தைச் சார்ந்த விசாரணை எல்லாமே முற்போக்கானது. மனிதத் துக்கத்தை விசாரிப்பவன், எந்த நிலையிலும் மனிதத் துக்கத்திற்கு ஒரு விடை காண வேண்டும் என்று தேடிச் செல்பவன் எப்போதும் ஒரு முற்போக்காளன்தான். சாதி சார்ந்தும் சாதி தாண்டியும், மதம் சார்ந்தும் மதம் தாண்டியும், வர்க்கம் சார்ந்தும் வர்க்கம் தாண்டியும், தேசம் சார்ந்தும் தேசம் தாண்டியும் மனிதனுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாமே ஆராயப்பட வேண்டிய பிரச்சனைகள்தான்.

என் எழுத்துக்களை முழுமையாகப் படித்துப் பார்ப்பவர்களுக்கு என் படைப்புக் கருத்துக்கள் ஓரளவேனும் புரியும் என்றுதான் நினைக்கிறேன். இவையெல்லாம் படைப்பு விஷயம் சார்ந்த கருத்துக்கள். விஷயத்தை நேர்த்தியாக முன்வைத்தால்தான் படைப்பிற்குரிய ஆற்றலை அது பெறுகிறது.

இப்படிப் பார்க்கும்போது விஷயம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மொழி முக்கியம். மொழி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வடிவம் முக்கியம். வடிவம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உத்தி முக்கியமானது. இவையெல்லாம் படைப்பில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி முயங்கிக் கிடக்கின்றன. இவ்வாறு ஒன்றுபட்டு, ஒன்றில் மற்றொன்று முயங்கி, ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி ஒன்றாக வார்த்தெடுத்தது போல் காட்சி தரும் படைப்புக்களில் எளிதில் விவரிக்க முடியாத சக்தி உள்ளார்ந்து கிடக்கிறது. சூட்சுமமான மனங்கள், மென்மையான மனங்கள், மொழியின் தொனியிலிருந்து எண்ணற்ற விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் மனங்கள், படைப்பை வெறும் படைப்பாக மட்டும் கருதாமல் வாழ்க்கையின் கரைக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் தோணியாகப் பார்க்கின்றன. கரைசேர்ந்ததும் படைப்பெனும் தோணியிலிருந்து கீழே இறங்கி வாழ்க்கைக்குள் வெகு தூரம் போகின்றன.

படைப்புக்குப் படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வாழ்க்கை அனுபவங்களும் முக்கியம்தான். வாழ்க்கை அனுபவங்களை ஒரு இழை என்று சொன்னால் படிப்பை மற்றொரு இழை என்று சொல்லலாம். ஆனால் ஆதாரமான இழை அனுபவம் சார்ந்த இழைதான். அனுபவங்கள்தான் உங்கள் சூழல் சார்ந்து கேள்விகளை உருவாக்குகின்றன. புதிர்களை உருவாக்குகின்றன. விளக்க இயலாத துக்கத்தை வாழ்க்கை உருவாக்குகிறது. வியப்பை உருவாக்குகிறது. இதற்கான விடைகளைத் தேடும் மனம்தான் புத்தகங்களைத் தேடிக்கொண்டு போகிறது. உடனடியாகப் புத்தகங்களில் விடை கிடைத்துவிடுகிறது என்பதுமில்லை. நம் மனதில் ஒரு வினா எழும்போது தெரிந்தவர்களிடம் அதற்கு விடை தேடுகிறோம். அவர் ஒரு அபிப்ராயம் சொல்கிறார். அதில் நம்பிக்கை கொள்கிறோம். ஆறுதல் ஏற்படுகிறது. அதில் அவநம்பிக்கை கொள்கிறோம். கேள்வி தொடர்கிறது. அபிப்ராயங்களின் தொகுப்புக்கள்தான் புத்தகங்கள். இறுதி விடையாகக் கருதத்தக்கவை அதில் ஒன்றும் இல்லை. நாம் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அதன் ஆசிரியர் பேசத் தொடங்குகிறார். அவருடைய பேச்சுக்குச் செவிசாய்க்கிறோம். தோல்ஸ்தாய் அவருடைய நாவல் மூலம் மிக விரிவாகப் பேசுகிறார். அரைப் பக்கம் ஒரு பக்கம் என்று கவிதைகள் இருக்கின்றன. அவ்வளவு சிறிய வடிவங்களில் கவிஞர்கள் பேசுகிறார்கள். 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசுவதை இன்று கேட்க முடிகிறது.

ஒரு படைப்பாளியாகச் செயல்பட வாழ்க்கை அனுபவங்களும் புத்தகப் படிப்பும் எனக்கு எந்த அளவுக்குத் துணை செய்திருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஊர் சுற்றும் பழக்கமும் துணை செய்திருக்கிறது. ஊர் சுற்றும் பழக்கத்திலிருந்து 'ஒரு புளியமரத்தின் கதை 'யைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. என் ஊர் விரிந்து கிடக்கும் கோலம் எனக்கு ஒரு வியப்பைத் தந்துகொண்டிருக்கிறது. அதை வாரிச் சுருட்டிக் கட்டிக் கொள்ள ஊருக்குள் நான் ஒரு மையப்புள்ளியை உருவாக்கிக்கொண்டேன். அவ்வாறு ஒரு மையப் புள்ளியை உருவாக்கிக்கொண்டு ஊரின் பகுதிகளை அந்தப் புள்ளியுடன் சேர்த்து இணைத்துக்கொண்டேன். அந்தப் புள்ளிதான் புளியமரம். இடங்களுக்குச் சாட்சியாக உருவான அந்த மரம் காலத்திற்கும் சாட்சியாக விரிவு கொண்டது. படைப்பு தந்த புதிய பரிமாணம் இது. காலத்திற்கும் இடத்திற்குமான உறவைக் கூறுவது புளிய மரத்தின் கதை. காலத்திற்கும் கருத்திற்குமான உறவைக் கூறுவது 'ஜே.ஜே : சில குறிப்புகள். ' காலத்துக்கும் உறவு நிலைகளுக்குமான உறவைக் கூறுவது 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள் '. இவ்வாறு என் படைப்புகளை ஏகதேசமாக வகுத்துக் கொள்ளலாம்.

'ஜே.ஜே : சிலகுறிப்புக 'ளைப் பற்றிப் பல்வேறு பார்வைகளில் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. நவீனத்துவ நாவல், இருப்பியல் தத்துவத்தின் பாதிப்பைக் கொண்டது என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இது போன்ற விவரிப்புகளை ஏற்று நான் எந்த எதிர்வினைகளையும் தந்ததில்லை. ஆனால் திரும்பத் திரும்ப ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டுவந்திருக்கிறேன். அது தமிழ்க் கலாச்சார வாழ்வின் மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனம். உங்கள் குறைகளை உங்கள் முகத்துக்கு எதிரே சொன்னால் நீங்கள் சுருங்கிப்போவீர்கள். ஆனால் உங்கள் குறைகளை மற்றொருவருக்கு இருக்கும் குறைகளாக நான் பாவித்துச் சொன்னால் அவற்றைச் செவிமடுக்கவும் அதைப் பற்றிச் சிறிது சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும் என்பதுதான் அதிலிருக்கும் உத்தி. இந்த நம்பிக்கை சார்ந்துதான் அந்த நாவலின் உத்தி உருவாகியிருக்கிறது.

சேலம் இலக்கிய வட்டம், 17.8.99

***************

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

சிவாஜி சங்கர் on March 4, 2010 at 9:42 AM said...

சுந்தர ராமசாமி ஐயா பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று நினைக்கையில் பெருமிதம் அடைகிறேன்... வரலாறுகள் நிகழ்த்தப்படுகின்றன...

ஜேவி on March 4, 2010 at 1:33 PM said...

//ஆசிரியர் பள்ளியில் பாடம் எடுக்கும்போது அவருடைய பேச்சு என் காதில் பெரும்பாலும் விழுந்ததேயில்லை//

//17, 18 வயதில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டேன்//

என் பள்ளிப் பருவத்தை கண் முன் கண்டேன்.
தொடக்கக் கல்வியை சரியாக பயிலாமல், பின்பு தானாக படித்து இவ்வளவு தூரம் முன்னேர முடியும்
என்று தெரிவித்ததால், என் போன்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் பதிவு.
நன்றி ஐயா.

virutcham on March 4, 2010 at 1:44 PM said...

இதனை காலம் கடந்து இப்போது அவருடைய புளிய மரத்தின் கதையை தேடித் பிடித்து வாங்கிப் படித்துக் கொண்டு இருக்கும் என் மனதில் எழுந்த சில எண்ணங்களின் பிரதிபலப்பாக அல்லது கேள்விகளின் விடையாக இருந்தது அவரது இந்த எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஆன உறவு முறை குறித்த கருத்து.

நன்றி

senthilsoundar on April 9, 2010 at 3:30 PM said...

படைப்பனுபவம் படிப்பனுபவம் இல்லாமல் அமைவது அரிது .வாழ்வின் சிக்கல்கள் குறித்த இடைவிடாத யோசனை ,மனஉளைச்சல் ,நெருக்கடி இவற்றின் வழயாக தெளிவு பெறப்படுன்போது இந்த இரண்டு அனுபவங்களும் ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முடியாததாகிறது

Unknown on October 13, 2010 at 1:36 PM said...

//எழுத்து ஒரு சமூகச் செயல்பாடு; லெளகீகச் செயல்பாடு அல்ல. லெளகீகச் செயல்பாட்டுக்கு எப்போதும் அடிப்படையாக இருப்பது நான் என்ற உணர்வு. படைப்புக்கு அடிப்படையாக இருப்பது நாம் என்ற உணர்வு. பிரபஞ்சத்திலிருந்து, சமூகத்திலிருந்து வேறுபடுத்தித் தன்னில் ஆழ்ந்து கிடப்பதுதான் லெளகீகம். ஊருடன் இணைந்து,உலகத்துடன் இணைந்து பிணைந்து கிடப்பது படைப்பு என்று சொல்லலாம்.//
தனி மனிதனின் லெளகீக நடவடிக்கைகளையும் படைப்பாளியின் படைப்பனுபவத்தையும் வேறுபடுத்திக்காட்டும் அருமையான இடம்

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்