Aug 13, 2013

தீர்வு - திலீப் குமார்

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும்.

வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளி607030110cல் இந்தத் தங்கச்சாலைத் தெரு மட்டும்தான் கொஞ்சம் அகலமாகவும், நடக்கச் சௌகரியமாகவும் இருப்பது. இது வடஇந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் அதிகமாக வாழ்கிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும், அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. மற்றபடி அசிங்கம் என்றது, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும் வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் இந்தக் குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள். மேலும், அழுக்கான சூழ்நிலைகளுக்குத் தங்கள் மனத்தையும், மூக்குகளையும் பழக்கப்படுத்திக் கொள்வதில் இணையற்றவர்கள்.

மணி 8-45. கடைகளும் ஆபிஸ்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடக் குழந்தைகள் விரைந்து கொண்டிருந்தனர். ஜனங்கள் ‘பளிச்’சென்று சுத்தமாகக் காட்சி அளித்தனர். காந்திக்குல்லாய் சேட்ஜிக்களும், நாகரீகமாக உடுத்திக்கொண்ட அவர்களது மக்குப் பிள்ளைகளும் நிறையவே குழுமத் தொடங்கிவிட்டனர். பரவலாக, வெளிநாட்டுக் கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து நின்றன.

நிச்சயமாக இந்தக் குஜராத்திகள் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்!

புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்தத் தங்க சாலைத் தெருவில்தான் இருக்கிறது. தெப்பக்குளம் உள்ள பெரிய கோவில் இது. இந்தக் கோவிலின் பிரதானப் பிரகாரம் அளவில் மிகப் பிரமாண்டமானது. சிலைகளுடன், பெரிய பெரிய ஸ்தூபிகளுடனும், அவைகளில் அழகான சிற்பக் கலைகளுடனும் மிகக் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். நகரத்தில் உள்ள மற்ற எல்லாப் புகழ்பெற்ற கோவில்களைப்போல் இதுவும் வழக்கமாகப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யமற்றதாகவும், போகாதவர்களுக்குப் பேரழகாயும் காட்சியளிக்கும். கோவில் வாசலில், இடப்பக்கம் பலகாரம் விற்கிற ஒரு சேட்ஜிக்கும் வடப்பக்கம் தேங்காய் விற்கிற செட்டியாருக்கும், பூ விற்கிற பட்டிணத்துக் கவுண்டச்சிக்கும், வளையல் விற்கிற ஒரு சேட்டுக்கும், விற்றாலும் தீராத கொள்முதலாகிய வியாதிகளைக் கடை விரித்த சில பிச்சைக்காரர்களுக்கும் புகலிடம் கொடுத்திருந்த ஏகாம்பரேஸ்வரர் அமைதியாய் உள்ளே உட்கார்ந்தார். இந்தக் கோவிலைச் சுற்றிப் ‘ப’ வடிவில் நெளிகிற மூன்று சின்னச்சந்துகளின் ஒட்டுமொத்தமான பெயர்: ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம். என் மாமா வீடும், நான் சொல்லப்போகிற கதையின் களமும் இங்குதான்.

நான் இடது பக்கம் திரும்பி அந்தப் ‘ப’வில் நுழைந்தேன். இந்தச் சின்னச் சந்தின் மூலையில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே திணறி, ஒளிந்துகொண்டிருக்கும் என் மாமா வீடு. ஒரு பக்கம் கோவில் சுவர். மறுபக்கம் வீடுகள்.

ஒன்றிரண்டதைத் தவிர எல்லாம் திண்ணைகளற்ற பெரிய வீடுகள். இங்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் ஒரு ஆரம்பப்பள்ளியும் உண்டு. அதனால் தெருவில் இப்போது நிறையச் சிறுவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். இன்றியமையாத ஐஸ்காரனுடன்.

நான் மனத்தில் எதையும் வாங்கிக்கொள்ளாமல், வேகமாக நடந்தேன். மாமா வீட்டுவாசல் தெரிந்தது. ஏனோ அவர் முகம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவர் குடும்பத்தினர் முகங்கள் அனைத்தும் மனத்தில் தோன்றி மறைந்தன. வாசலில் சில குஜராத்தி இளம்பெண்கள் குழாயுடன் மல்லாடிக்கொண்டிருந்தார்கள். எனது வரவை அவர்கள் கடுமையான மௌனத்தை அனுஷ்டித்துக் கொண்டாடினார்கள். நான் அவர்கள் அனைவரையுமே பார்த்தேன். எல்லா முகங்களும் சுமாராகவே இருந்தன. இத்தனைக்கும், அந்தக் கட்டிடத்தில் மட்டுமே முப்பது குடும்பங்கள் இருந்தன. இருந்தும் மருந்துக்குக்கூட ஒரு அழகி இல்லை. மேல்மாடியில் வசிக்கிற ஊர்மிளாவைத்… நிற்க. முதலில் இந்தக் கட்டிடத்தின் பூகோள ரீதியான அமைப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குமேல் இருக்கிற வானத்தைச் சதுரமாக வெட்டிக் காட்டும் இது. மாடிகளில் வசிக்கிறவர்கள் கல்கத்தா பீடாக்களைக் குதப்பி உமிழ்வதற்காகவும் மற்றபடி வருணனுக்காகவும், சூர்யனுக்காகவும் கட்டப்பட்டது! இந்த முற்றத்தைச் சுற்றி எதிரும் எதிருமாக, எதிரும் புதிருமாக, புதிரும் புதிருமாக ஆறு வீடுகள். முற்றத்தின் நடுவே நடந்தால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிறு முற்றங்கள். இடதுபக்க முற்றத்தின் கடைசியில் இரண்டு கழிவறைகள்; வலதுபக்க முற்றத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதை அடுத்து, இன்னும் இரண்டு வீடுகள். இன்னும் சற்று நகர்ந்தால், மேலே செல்லும் அழுக்கான மாடிப்படிகள். இதே மாதிரி மேல்மாடியிலும். மொத்தம் முப்பது குஜராத்தி குடும்பங்கள் வாழ்கின்ற அழுக்கான கட்டிடம் இது.

அந்த முற்றத்தையும், அந்த ஆறு வீடுகளையும் பிரித்து, 21 அடி அகலமுள்ள ஒரு நடைவெளி சுற்றி ஓடும். அநேகமாக இந்த நேரத்தில் அந்த ஆறு வீட்டுக் கதவருகேயும் பெண்கள் உட்கார்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு பெண் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருப்பாள். இன்னொருத்தி துணிகளைத் துவைத்துகொண்டிருப்பாள். மற்றவர்கள் அரிசியையோ, கோதுமையையோ சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கமாக, திருமணத்திற்குப் பின் ஊதிப்போகிற உடல்வாகு உடையவர்களாக இருந்தாலும், இந்தப் பெண்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் அறிவற்றவர்களும் அடங்காப்பிடாரிகளும்கூட. எல்லாப் பெண்களையும்போல் இவர்களும் சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடையவர்கள். மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும், உணவு வகைகளிலும், அழகிய உடைகளிலும் தங்கள் உலகை அடக்கிக்கொண்டவர்கள். இதைத் தவிர, பிரக்ஞையே இல்லாமல் இனத்தைப் பெருக்குகிற பழக்கமும் உண்டு. இந்தக் கட்டிடத்தில் உள்ள முப்பது குடும்பத் தலைவிகளுக்குத் தலா ஒவ்வொருத்திக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாரிசுகளாவது இருக்கும். (என் மாமாவுக்குக்கூட 5தான்.) முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்கிற இங்கே இந்த ஜனத்தொகைப் பெருக்கம் இயல்பான ஒன்று. தவிர்க்க முடியாததும்கூட.

இங்கு வாழ்கிற ஆண்கள், மிக சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்துகொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவி வருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள். சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி, வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர, நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே!

பொதுவாக, இந்த குஜராத்திகள் தமிழர்களைப்பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயங்கள் உடையவர்கள்.

உள்ளே நுழைந்ததும் என்ன ஆச்சரியம்! முற்றம் வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்தது. நடைவெளியும் சுத்தமாக இருந்தது. ஓரங்களில் பிளாஸ்டிக் கம்பிகளில் நேற்று உலரப்போட்ட துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ரொம்பவும் அமைதியாய் இருந்தது. நான் முற்றத்தைத் தாண்டி மாடிப்பக்கம் பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஒரே கும்பல். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தனர். என் மாமா அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிக சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கியதும் ஒரு கணம் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மாமாவும் என்னைப் பார்த்து முதலில் ஒரு கணம் வியப்படைந்து பின் லேசாக முறுவலித்தார்.

“நீ மேலே போயிரு, நான் இதோ வந்துவிட்டேன்” என்று குஜராத்தியில் கூறினார்.

ஆவலை அடக்கியபடி மேலே போக மாடிப்படிகளை அடைந்தேன். எதிரில்ன் இறங்கி வந்த கோபால் பாயிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.” என்று குஜராத்தியில் சொல்லி வருத்தப்பட்டார், வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பின் நகர்ந்துபோய் கும்பலுடன் ஐக்கியமானார் அவர்.

நான் மேல்மாடியை அடைத்து வீட்டுக்குள் நுழைவதற்கும், சந்திரா, என் மாமாவின் மூத்த மகள், பெருக்கி முடித்து நிமிர்ந்து என்னைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் மகிழ்ச்சியுடன் சிரித்து என்னை உபசரித்தாள். மாமி

சமையல்கட்டிலிருந்து வந்து, “வா, வீட்டாரின் ஷேம நலத்தை விசாரித்தாள். நான் பதில் கூறிவிட்டு, ரெயிலின் தாமதமான வரவைப் பொதுவாக முறையிட்டுக்கொண்டேன். எனக்காக அவள் ‘டீ’ போட உள்ளே சென்றாள். என் மாமா வீடு ரொம்பவும் கச்சிதமான, ஆனால் சிறிய வீடு. ஒரு பெரிய ஹால். அதன் கோடியில் இடப்பக்கம் ஒரு அறையும், வலப்பக்கம் ஒரு அறையும் இருக்கும். இடப்பக்க அறை சமையலறை. வலப்பக்க அறை, குளியலறை, சயன அறை, ஸ்டோர் ரூம், எல்லாம் அதுதான். ஆண் குழந்தைகள் விளையாடச் சென்றிருக்க வேண்டும். மாமாவுக்கு இரண்டு பெண்கள் (பூர்ணா சமையல்கட்டில் இருந்தாள்) மூன்று பையன்கள். கனு, வ்ரஜேஷ், தீபக். பாட்டி கோயிலுக்குப் போய்விட்டிருந்தாள். காலை ஐந்து மணிக்குப் போய் 10 1/2 அல்லது 11 மணிக்குத்தான் வருவாள். பாட்டி ரொம்பவும் மடி, ஆசாரம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவள். ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது எனது உயரத்தை உத்தேசித்து இவள் செய்கிற முதல் காரியம், மடிகோலால் மேலே உலர்த்தி இருக்கும் துணிகளை, ஓரங்களுக்கு நகர்த்துவதுதான். அப்படியும் தப்பித்தவறி, அவளது ஆடைகளை நான் தொட்டுவிட்டால் அவைகளை மீண்டும் துவைக்கச் சென்று விடுவாள். இந்தக் கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவலாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

நான் கழிவறைப்பக்கம் பார்த்தேன். என்ன அதிசயம், காலியாகக் காத்திருந்தது. பொதுவாக, இந்த மேல்மாடியில் வாழ்கிற அறுபது ஜீவன்களின் உபயோகத்திற்காகக் கட்டப்பட்ட இரண்டே இரண்டு கழிவறைகள் இந்த ஒன்பதேகால் மணி உச்சகட்டத்தில் இப்படிக் காலியாய் இருப்பது ரொம்பவும் அரிது.

ஆசாரம் மிகுந்த என் மாமா வீட்டு நியதிப்படி இந்தக் கழிவறையை உபயோகிக்கச் சில கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கழிவறைப் பிரயாணம், வெகு நேர்த்தியான ஒரு அனுபவம்.

முதலில், தண்ணீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் செம்பில் உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து எடுத்து தண்ணீர் வராத ஒரு குழாயடியின் சின்னச் சுற்றுச் சுவர் மேல் வைத்துவிட வேண்டும். மாடியின் ஓரச் சுவரின் மூலையில் ஒரு நாலு கிலோ டால்டா டின் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை இடது கையால் எடுத்துக் கொண்டு சென்று கழிவறைக்குப் போகிற ஒரு சின்ன நடைவெளியின் முகட்டில் வைத்துவிட்டு, வலது கையால் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மீண்டும், உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு அந்த டின்னை நிறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த டின்னை இடது கையால் சுமந்து அந்த நடைவெளியெங்கும் அந்த மேல்மாடிக் குழந்தைகள் கழித்து உண்டாக்கிய சிறுநீர்த் தீவுகளை லாவகமாகத் தாண்டி, முதலில் தென்படுகிற – கழிவால் நிறைந்து வழிகிற, ஒரு மாதத்திற்கு அருவருப்பு ஊட்டவல்ல – கழிவறையைத் தவிர்த்து, அடுத்ததில் வழுக்காமல் உட்கார்ந்து, (என்னை மாதிரி) ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ, டி.எஸ். எலியட்டையோ நினைத்து லயித்துவிட வேண்டும். அதாவது, அடுத்த வீட்டுப் பெண், தவிப்பும் வேதனையும் தொனிக்கிற குஜராத்தியில், “அந்தர் கோன் ச்சே? ஜல்தி நிக்ளோ!” (உள்ளே யார் இருக்கிறீர்கள்? சீக்கிரம் வெளியேறுங்கள்!) என்ரு கெஞ்சி எழுப்பிவிடுகிறவரை.

தலையைக் குனிந்து வெளியே வந்து நடைவெளியைக் கடந்து, காத்திருக்கிற பெண்ணைத் தவிர்த்து, நேரே சென்று டால்டா டின்னை இருந்த இடத்தில் இருந்த மாதிரி வைத்து, அதன் அருகில் இருக்கும் தேய்ந்துபோன 501ஐயோ, ரெக்ஸோனாவையோ, லைஃப்பாயையோ எடுத்து குழாயடி சுற்றுச் சுவரில் நிறைத்து வைத்த பிளாஸ்டிக் செம்பை இரண்டு மணிக்கட்டுகளினாலும் இறுக்கி, லேசாகக் கவிழ்த்து, கைகளைக் கழுவிக்கொண்டுவிட வேண்டும். பிறகு செம்பைச்  சாதாரணமாக எடுத்துச் சென்று கால்களைக் கழுவிக்கொள்ளலாம். நான் இந்தச் சடங்குகளை மிக அலட்சியமாகச் செய்து முடித்துவிட்டு வந்தேன். மாமி எனக்காக ‘டீ’ தயாராக வைத்திருந்தாள். அவள் வெளிறிப்போன நீலப் புடவை உடுத்தியிருந்தாள். மாமியின் சிவந்த மேனிக்குப் பிரகாசமான நிறங்கள் எடுப்பாக இருக்கும். ஆனால் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரி ஏதோ ஒரு வெளிறிப்போன நிறத்தில் உடுத்திக்கொண்டிருப்பாள். நான் மனதுக்குள் மாமாவின் புடவை ரசனையைச் சபித்துக்கொண்டேன்.

கிணற்றடியில் இப்போது கூட்டம் குறைந்து காணப்பட்டது. பெண்கள் போய்விட்டிருந்தனர். ஆண்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் ஒரு சில குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் அனைவரும் பாக்கெட் வைத்த, லாங்கிளாத் பனியன்களும், வெள்ளை பைஜாமாக்களையும் அணிந்திருந்தனர். மாமா மட்டும் ஒரு நைந்துபோன, கையில்லாத ஸ்வெட்டரும், வேட்டியும், அதைப் பிடித்து நிறுத்த ஒரு மட்டமான தோல் பெல்ட்டையும் அணிந்திருந்தார்.

மாமா எல்.ஐ.சி.யில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்கிறவர். இந்தக் கட்டிடத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மோகத்தில் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர். குறிப்பாக, இங்கே இவருடைய ஜம்பம் நூற்றுக்கு நூறு பலிக்கிறது.

இப்போது அவர் கிணற்றில் லயித்திருந்தார். கிணற்றுக்கு மேலே ஒரு தகரக் கூரை போடப்பட்டிருந்தது. அதனால் கிணற்றுக்கு வெளிச்சம் வராமல் மிக இருட்டாக இருந்தது. ஒரு இளைஞன் டார்ச் விளக்கால் கிணற்றுக்குள் ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். கிணற்றில் கருப்பாக ஏதோ மிதந்துகொண்டிருந்தது. அதை எலி எண்று ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

இறந்துபோன எலியை எடுக்கத் தங்களுடைய வாளிகளைத் தர யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் ஒரு பழக்கூடையைக் கயிற்றில் கட்டி கீழே இறக்கியிருந்தார்கள். கூடையின் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டிருந்ததால், கூடை ஒரு பக்கமாக சாய்ந்துவிடப்பத்திருந்தது. நீரின் அழுத்தத்தால் அது மேலும் கதகதப்பாகிப்போனது. என்றாலும், எலியை எடுக்கும்போது தண்ணீர் கூடையில் இருந்தது, எலி மட்டும் சிக்கிவிடும். என்று இவர்கள் கூறினார்கள், இதில் இருக்கும்

சௌகரியத்திற்குப் பின்னால் ஒரு சாமார்த்தியமும் ஒளிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக இது மாமாவின் யோசனையாகத்தான் இருக்கவேண்டும். சுயநலத்திற்காக மனிதன் கையாளும் சாம்ர்த்தியம் சில சமயம் இந்த மாதிரி சுவாரஸ்யமாகவும் இருப்பது உண்டு.

எலி இப்போது கிணற்றின் ஓரத்தில் மிதந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரமாக இது அங்கேயே இருப்பதாகக் கூறினார்கள். இந்த விஷயத்தை மற்றவர்கள் என்னிடம் கூறும்போது மாமாவுக்குத் தனது திறமையை மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற கற்பனை வந்து, கூடவே கோபமும் வந்தது. என்றாலும், அவர் மிகப் பொறுமையாகச் செயல்பட்டார். அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

காந்திலாலும் சந்திரகாந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். இடையிடையே இவர்கள் ஷு(த்) தயூ(ந்) பாபு பாய்? ஷு(த்) தயூ(ந்) என்று குஜராத்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் கேட்கிற ஒவ்வொரு முறையும் மாமா தனது கண்களையும் புருவங்களையும் சுருக்கி, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபட்டார்.

போராட்டம் நீண்டது.

கடைசியில் அவர் பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக ஆனால் வெகு நேர்த்தியான சில சேஷ்டைகளைச் செய்தார். உலக்கையால் இடிக்கிற மாதிரியும், மாவை ஆட்டுகிற மாதிரியும், பட்டம் விடுகிற மாதிரியும், கடைசியாக ஒரு மாலுமியைப்போலவும் பல வித்தைகள் செய்தார்.

வித்தை பலித்தது.

எலி கிணற்றின் மையத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அதை வெளியே எடுப்பது சுலபம் என்று எல்லோருக்கும் பட்டது. எல்லோருக்கும் மனதுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. மாமா ஒரு கப்பற்படை அதிகாரியைப் போல் விளக்கு பிடிப்பவனுக்கு ஆணைகள் பிறப்பித்தார். அலட்சியமாக அருகில் நின்றவர்களை விலகச் சொன்னார். பிறகு, கயிற்றைக் கீழே இறக்கினார், மிக நிதானமாக. பின் மெல்ல, மிக நயமாகக் கயிற்றைச் சரியாக எலிக்கு அருகே கொண்டு வந்தார். மறுகணம்! ஒரு அசாத்திய வேகத்துடன் கயிற்றை மேலே இழுத்தார்.

எல்லோரும் ஆர்வமாய்க் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து ஏமார்ந்தார்கள். கூடை காலியாகவே மேலே வந்திருந்தது. எலியோ மீண்டும் கிணற்றின் ஓரத்திற்கே போய்த் தேங்கிவிட்டது. மாமா அசடு வழிந்தார். எலியின் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

மாமா மீண்டும் மீண்டும் அசடு வழிந்தார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான்.

மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார். தொடர்ந்து, அவர் தன்னைச் சுற்றியிருந்த ஏழெட்டு குஜராத்தி இளைஞர்களுக்குத்தான் அந்த எலியை வெளியே எடுத்த விதத்தைப் பற்றி, ஒரு அரசியல்வாதியின் சொல்லாடம்பரத்துடனும், ஒரு கட்டிட இயல் நிபுணரின் அபிநயங்களுடனும், பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கினார்.

மாமாவின் விரிவுரை முடிந்த பின், காந்திலாலும் ஜெயந்திலாலும் மற்ற சிலரும், இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கலக்கத்துடன் கேட்டார்கள். இதுவரை இதைப்பற்றிச் சிந்திக்காத மாமாவோ சற்று அதிர்ந்துபோனார். அவரது மனத்தின் பின்னணியில் வேகமாகப் பாய்ந்த பயங்கள் அவர் முகத்தில் நன்கு தெரிந்தன. என்றாலும், உடனே சமாளித்துக்கொண்டார். தனது தயக்கம் இந்த சிஷ்யர்களிடையே தனக்கிருக்கும் குரு ஸ்தானத்திற்கு ஊறு விளைவித்துவிடும் என்று கருதிய அவர் உடனே “இல்லை, இல்லை, அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும்.” என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார். எல்லோரும் தலைகளை ஆட்டி அதை ஆமோதித்தாலும் அவர்கள் முகத்தில் கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன.

தஞ்சாவூர் குஜராத்தியான சந்திரகாந்த், மாமாவிடம், “ஹெல்த் பீஸ் மா தமே ஜஷோ? அம்நே கா(ந்)ய் ஆமா சமஜ் ஞ படே பாபு பாய் (ஹெல்த் ஆபீஸுக்கு நீங்கள் செல்வீர்களா? எங்களுக்கு இதில் ஒன்றும் புரியாது பாபு பாய்) என்று கெஞ்சல் குரலில் கேட்டார். மாமா அதில் தனக்குச் சிரமம் ஏதும் இல்லை என்றாலும் தனக்கு அந்த வட்டத்து ஹெல்த் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும், மேலும் தனக்கு ஆபீஸ் செல்ல ஏற்கனவே தாமதமாகிவிட்டிருந்ததாகவும் கூறி நழுவிவிட்டார். தனது வீட்டிலும் குடிக்கத் தண்ணீர் அரைக் குடம்தான் இருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் இந்தக் காரியத்தை செய்யத் தனக்கு அவகாசம் இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார். மாமா என்று மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லோரும் இதே மாதிரி ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி ஹெல்த் ஆபீஸுக்குப் போவதையும், அங்கு இருக்கப்போகிற அதிகாரியை எதிர்கொள்வதையும் தவித்தார்கள்.

தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.

இதர்கிடையில், மேலே இருந்து கீழே வந்த கோவிந்த்ஜி சேட் என்கிற பணக்கார, T.V.வைத்திருக்கிற கிழவர், மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து  பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனை கூறி, அதை மற்றவர்கள் மூலம் செயல்படுத்தவும் செய்தார். மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது பெரிய முதிர்ந்த சரீரத்தைச் சுமந்துகொண்டு, கைத்தடியுடன் பாட்டி வாசல் பக்கமாக வருவது தெரிந்தது. வெள்ளையில், சிறிய கருப்புப் பூக்கள் நெருக்கமாக அச்சிட்ட சேலையை உடுத்தியிருந்தாள். கழுத்தில் துளசி மாலையுடனும், முகத்தில் தெளிவோடும் வந்துகொண்டிருந்தாள். இந்த களோபரத்தில் யாரும் பாட்டியைக் கவனிக்கவில்லை. அருகில் வந்த பின், அவளாகவே விஷயத்தை விசாரித்தாள். விஷயமும் பிரச்சனையும் அவள் முன் வைக்கப்பட்டன. பாட்டி சிறிது யோசித்தாள். பிறகு ச்சாலோஹு(ந்) தம்னே ஏக் ரஸ்த்தோ பதாவூ(ந்) (வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்) என்று கூறினாள். எல்லோரும் அவளைப் பிந்தொடர்ந்து, மேலே வந்தனர்.

ஹாலில் கனுவும் வ்ரஜேஷும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த பாட்டி சாதகமான கோணத்தில் இருந்த கனுவின் புட்டத்தில் லேசாக, ஆனால் வலிக்கிற மாதிரி கைத்தடியால் அடித்து ஏசிவிட்டு சமையலறைக் கதவருகே  இருந்த ஒரு தேக்குப் பீரோவின் முன் உட்கார்ந்துகொண்டாள். பிறகு அதை மெதுவாகவே திறக்க ஆரம்பித்தாள். பீரோவினுள் சின்னச் சின்ன விக்ரஹ்ங்கள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின்
மேல் உட்கார்ந்திருந்தன. ஒரு மூளையில் காவித் துணியில் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருந்தது. பாட்டி அதை நிதானமாக எடுத்து அவிழ்த்தாள். அதனுள் மிகச் சிறிய மண்குடம் இருந்தது. அதன் வாய் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. பாட்டி ‘பூர்னாவுக்கு குரல் கொடுத்து ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது. எல்லோரும் அவளையே பொறுமையின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டியோ சிறிதும் அவசரமில்லாமல் அந்த பீரோவை நன்றாக மூடிவிட்டுத் திரும்பினாள்.

கதவருகேயும், கதவுக்கு வெளியேயும் குழுமி நின்றவர்களில் முன்னால் இருந்த பிரான்ஜிவன்லாலை சமிக்ஞையால் அழைத்தாள் பாட்டி. சிறிது நேரமாகத் தலையைக் குனிந்திருந்ததால் பாட்டியின் மூக்கு கண்ணாடி மூக்கின் மையத்திற்கு நழுவிவிட்டிருந்தது. அவள் கிண்ணத்தைச் சிறிது முன்னால் நகர்த்தி, தலையை லேசாக உயர்த்தி, விழிகளை இன்னும் சற்று உயர்த்தி மூக்குக் கண்ணாடிக்கப்பால் பார்வையைச் செலுத்திப் பேசினாள், “ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.

பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யானி’ல்* லயிக்கத் துவங்கினாள்.

***
*ஜன் கல்யான் – தெய்வீகமான விஷயங்கள் தாங்கி வருகிற குஜராத்தி மாத சஞ்சிகை.
***
நன்றி: திலீப் குமார் (மூங்கில் குருத்து/ க்ரியா), தாஜ் – ஆபிதீன் பக்கங்கள்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Nagarajan Srinivas on February 8, 2023 at 12:19 PM said...

Dileep Kumar is a hidden gem in the history of modern Tamil literature. To my knowledge he has written only half a dozen short stories, but all of them are world class.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்