Jun 8, 2010

குழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா

வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்
ஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே காலனிய எதிர்ப்பு இலக்கியம்தான் என்ற பார்வை நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. காலனியாட்சியின் Geethaபோது ஆப்பிரிக்க மக்களுக்கு நேர்ந்த அவலங்கள், குறிப்பாக அவர்களது பண்பாட்டு அடையாளங்களும், வரலாறும் சந்தித்த சவால்கள், இவற்றை அம்மக்கள் எதிர் கொண்ட விதம், வெள்ளைஇன ஆதிக்கத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு புரட்சிகள் - இவையே 1960கள் முதல் 1990கள் வரை ஆப்பிரிக்க முன்னணி எழுத்தாளர்களின் கற்பனையையும் கவனத்தையும் ஆட்கொண்டிருந்தன. என்றாலும், ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தனர். கென்யாவைச் சேர்ந்த கூகிவா தியாங்கோ உள்ளூர் முதலாளிகளையும் அவர்களது வெளியூர் கூட்டாளிகளையும் இணைக்கும் உறவுகள் குறித்து தனது நாவல்களில் எழுத வந்தார். 

காலனியாட்சியின் கொடூரங்களை அறிவிக்கும் எழுத்து மட்டும் ஆப்பிரிக்க எழுத்தாகாது, மாறாக, காலனியாட்சிக்குப் பின் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டிலும் வேரூன்றிய ஆட்சியையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பதிவு செய்வது அவசியம் என்ற கருத்தை நைஜீரியா நாட்டு எழுத்தாளர் வோலெ சோயின்கா வலிறுத்தினார். 1984இல் அவர் ஆப்பிரிக்காவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த நால்வரை மையமாக வைத்து ஒரு நாடகம் எழுதினார் (A Play of Giants). காலனியாட்சியை காரணம் காட்டி, தாம் செய்யும் வரையற்ற கொடுமைகளை ஆப்பிரிக்க தேசிய தலைவர்கள் நியாயப்படுத்தி வந்ததை இந்நாடகம் தயவுதாட்சண்ய மின்றி பகடி செய்தது. அந்நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் சின்ன வயசிலேயே அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் குழந்தைகளை கொன்றுவிட வேண்டியதன் தேவையை சுட்டிக் காட்டி விளக்கமும் அளிப்பான். சில குழந்தைகளை இன்றே கொல்வது மேலாகும். இதைச் செய்யாவிடில், எதிர்ப்பு என்ற நஞ்சு அவர்களது வளர்ச்சியை பாதிக்கும் என்பான். இதற்கு மற்றொருவன் ஆதரவு தெரிவித்து, மேலும் கூறுவான் - எல்லா பெரிய மனிதர்களுக்கும் குழந்தைகள் என்றால் ஆசைதான். இட்லரை எடுத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளிடம் எவ்வளவு பிரியமாக இருந்தான்.

இந்த பகடியும் தர்க்கமும்தான் குழந்தைப் போராளி நூலைப் படிக்கையில் நினைவுக்கு வருகின்றன. அதாவது, ஆப்பிரிக்க காலனிய எதிர்ப்பு நாவல்கள் சொல்லும் கோபாவேசமான நியாயங்களை ஊடறுத்து, சுயாட்சியில் அக்கண்டம் கண்டுள்ள அவலங்களை முன்நிறுத்திய சோயின்காவின் எழுத்துதான், இந்தப் புத்தகம் காட்டும் உலகை புரிந்து கொள்ள உதவுக்கூடியதாக உள்ளது.

அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கோரும் நரபலிகளில் குழந்தைகளின் உயிர்களை அது காவு வாங்கும் பயங்கரத்தை குழந்தைப் போராளி சுட்டிக்காட்டுகிறது. குழந்தையாக இருக்கும்போதே போராளிக்குழு ஒன்றில் இணைந்து தன்நாட்டு அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்ற சிறுமியின் தன்வரலாறாக இது விரிகிறது. குழந்தைப் போராளியின் ஆசிரியர் விவரிக்கும் உலகமானது குழந்தைப் பருவம் என்பதை தொலைத்த ஒன்று. ஆப்பிரிக்காவில் இரண்டு மூன்று வயது நிரம்பிய குழந்தைகள்கூடப் பலமான உடலமைப்பைக் கொண்டதால், அவர்கள் வேலை செய்ய தகுதியானவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள் (ப.18) என்று நூலாசிரியர் சைனா கெய்ரற்சி குறிப்பிடுகிறார். இத்தகைய உலகங்கள் இருப்பதை நாமும் அறிவோம்.

வயதையும் பருவத்தையும் பொருட்படுத்தாத அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் பழகிப்போன நமது சாதி சமுதாயத்தில் குழந்தைகள் உரிமை என்பது அனுதினமும் மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. (கூள மாதாரி நாவலில் பெருமாள் முருகன் இத்தகைய உரிமை-மறுப்பின் நுணுக்கங்களை யதார்த்தமாகவும் அவலச்சுவையுடனும் சித்தரித்துள்ளார்). இலங்கையில் நடந்துவரும் போரில் குழந்தைகள் போராளிகளாக இணைக்கப்பட்டு, தம்மை விட உயரமான துப்பாக்கிகளை சுமந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டதையும்- அனுப்பப்படுவதையும் - நாம் அறிவோம். என்றாலுமே, இந்தப் புத்தகம் சொல்லும் செய்திகள் நம்மை திடுக்கிடச் செய்கின்றன. வன்மமும், குரூரமும் வாழ்வாகிவிட்ட ஒரு சூழலை மிக இயல்பானதாக அறியும் குழந்தைகளை இங்கு நாம் காண்கிறோம். என்னையும் இராணுவத்தில் சேர்த்துக்கொள் என்று அப்பாவித்தனமாகவும் ஆசையாகவும் குழந்தைகள் சற்றே பெரிய குழந்தையான சைனா கெய்ரற்சியிடம் முறையிடும் காட்சியை எவ்வாறு புரிந்து கொள்வது? கையில் துப்பாக்கி இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம், யாரையும் அடி பணிய வைக்கலாம் என்பதை குழந்தைகள் மிகச் சீக்கிரம் கற்றுக்கொள்வதையும் இங்கு காண்கிறோம்.

பருவம், பாலினம் என்று இல்லாமல் சகலரையும் பயன்படுத்திக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொள்ளும் குழந்தைகளை இந்தப் புத்தகம் நமக்கு அறிமுகம் செய்கிறது. இவ்வளவுக்கும் நூலாசிரியரின் நடையில் பரபரப்பு இல்லை, பதட்டம் இல்லை, கழிவிரக்கம் இல்லை. தான் சொல்வதைக் கேட்டு பிறர் மனம் வருந்த வேண்டும், சோகமடைய வேண்டும் என்ற ரீதியில் எழுதாமல், இதுதான் உண்மை, இதை தவிர வேறு உண்மைகள் எனக்கு தெரியாது என்றுதான் அவர் எழுதியுள்ளார். அதாவது, தான் வாழ நேர்ந்த சூழலை அசாதாரணமானதாக அவர் உணர்வதில்லை. நூலைப் படிப்பவர்களுக்குதான் அந்த உணர்வு ஏற்படுகிறதே அன்றி அவரது எழுத்தில் அந்த உணர்வு இல்லை. ஒருவர், மோசமான, ஒடுக்குமுறையான சூழலை அவ்வாறானதாக அறிய அரசியல் பார்வையோ அறவுணர்வோ முக்கியமானதாக உள்ளது. அல்லது, அத்தகைய சூழல் தற்காலிகமானது, அதை சகித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் காலம் மாறும், புரட்சி ஏற்படும் என்ற உணர்வு ஒடுக்குமுறையை இனங்காண, பொறுத்துக்கொள்ள உதவும். ஆனால் சைனா வாழும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தற்கால உகாண்டாவில், உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அப்படிப்பட்ட பார்வையோ புரிதலோ சாத்தியமில்லை என்பதை அறிய முடிகிறது.

இத்தகைய போர் தொடர்ந்து நடைபெறுவதற்கான நியாயங்கள் ஒரு புறமிருந்தாலும், குழந்தைகளை வைத்துக் கொண்டு போரை தொடர்ந்து நடத்தும் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளில் அரசியல் புரிதலை காட்டிலும் அதிகார வெறியும் மெத்தனமுமே வெளிப்படுகின்றன. இக்குழுத் தலைவர்களின் போர் வெறியைத் தணிப்பதற்கு மட்டுமல்லாமல், இவர்களுக்கு பணிவிடை செய்ய, உணவு எடுத்து வர, இவர்களது பாலியல் தேவைகளை நிறைவேற்ற குழந்தைகள் தேவைப்படுகின்றனர். குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களது குடும்பங்களின் வறுமை, உகாண்டாவின் பல்வேறு இனக்குழுவினரிடையே ஏற்படும் சண்டைகளில் குடும்பத்தினர் இறந்து போதல், அல்லது மானபங்கம் செய்யப்படுதல், சைனாவின் குடும்பத்தில் உள்ளது போல, குடும்பச் சூழலில் குழந்தைகளை தாக்கும் வரம்பற்ற வன்முறை முதலியன அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன. இவ்வாறு ஓடிப்போகும் குழந்தைகளுக்கு, ஓடிப்போக நினைக்கும் குழந்தைகளுக்கு போராளிக்குழுக்கள் சரணாலயங்கள் போல் ஆகிவிடுகின்றன. போராளிகள் எழுப்பும் வீராவேசமான கோஷங்கள் குழந்தைகளை ஈர்த்தாலும், அவர்களுக்குப் புகட்டப்படும் அரசியல் அறிவை காட்டிலும் அவர்களது வாழ்வனுபவங்களே அவர்களது தேர்வுகளையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன.

பிறந்தது முதலே தாயை அறியாத துயரம், தந்தையின் புறக்கணிப்பு, சிறுவயதிலிருந்தே அவர் அவளை ஏசியது, அடித்தது, தூக்கிப் போட்டு உதைத்தது, போதுமான அளவுக்கு உணவு கொடுக்காமல் சித்தரவதை செய்தது, அவள் மீது பாசம் காட்ட விழையாத பாட்டியிடம் அவளை விட்டது ஆகிய காரணங்கள் சைனாவை வீட்டை விட்டு விரட்டுகின்றன. அவளுடைய அப்பாவுக்கு பிற மனைவிகளால் பிறந்த குழந்தைகள் சைனாவின்மீது பாசம் காட்டவே செய்கின்றனர். குறிப்பாக வயதில் மூத்த சகோதரிகள் அவளைப் பரிவுடனே அணுகுகின்றனர். ஆனால், அவர்களது வாழ் நிலைமைகள் சீராக இல்லாத சூழ்நிலையில் அவர்களால் சைனாவுக்கு, ஏன் தங்களுக்கென்றும் கூட எதையும் செய்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. தனது தாயை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வெறியில் சைனா அங்குமிங்கும் அலைகிறாள், தாயை கண்டுபிடிக்கவும் செய்கிறாள், ஆனால் அவளை வாட்டும் பயம், விரட்டும் இனந்தெரியாத ஏக்கம் தாயை விட்டும் நீங்கச் செய்கிறது. இந்தச் சூழலில்தான் அவள் உகாண்டா அரசை எதிர்த்து போராடும் போராளிக் குழுவில் சேர்கிறாள்.

7 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவும் போர்முனையில் சண்டையிடவும், முன்னேறித்தாக்கவும், பதுங்கி இருக்கவும் கற்றுக் கொள்கிறாள். போராளிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அவளுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் காவலாளியாக வேலை கிடைக்கிறது (அவளுக்கு அச்சமயம் 13, 14 வயது கூட இருந்திருக்காது). மீண்டும் தாயை தேடிச் சென்று அவருக்காக நிலம் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறாள். தனக்கும் அவருக்குமாக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறாள், வேலை போகிறது, வேறொரு வேலையில் சேர்கிறாள். அவள் வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் பாலியல் தொல்லைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிறாள். என்றாலும் அவள் போராளிக்குழுவில் இருந்தவள் என்பதால் அவளது சூரத்தனங்களைப் பற்றி வதந்திகளும் கட்டுகதைகளும் வலம் வருகின்றன. அவளை கண்டு பிறர் அச்சமடைய அவை காரணமாகின்றன. இந்த அச்சத்தைப் பயன்படுத்தி, மது அருந்தும் சாலைகளில், கடை தெருவில் அவளுக்கு வேண்டியவற்றை அவளால் பெற்றக் கொள்ள முடிகிறது. முடிவாக,போராளி ஒருவருக்கு எதிராக ஆட்சியாளர்கள் வழக்குத் தொடுக்க, சைனாவும் சந்தேகத்துக்கு ஆளாகிறாள். அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவள் உகாண்டாவை விட்டு நீங்கி அமெரிக்கா செல்ல முயற்சிக்கிறாள். இதற்கிடையில் அவள் காதலுற்று, கருவுற்று ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கிறாள். குழந்தையை அவளது சகோதரியிடம் விட்டு விடுகிறாள்.

அமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வியில் முடிய, தென் ஆப்பிரிக்காவில்தான் சைனாவால் தஞ்சங் கொள்ள முடிகிறது. அங்குமே, உகாண்டா அரசின் உளவாளிகள் அவளைத் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து மீண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான அகதிகள் ஆணையத்திடம் போய்ச் சேர்கிறாள். மிக மோசமான உளவியல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவளைத் தேற்றவும் குணப்படுத்தவும் அந்நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அவளது கதையை சொல்லச் சொல்லி அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்கிறது. மனச்சுமைகளை அவள் இறக்கி வைத்தாலாவது அவள் குணமடைவாள் என்ற இதைச் செய்கிறது. இவ்வாறு உருவானதுதான் குழந்தைப் போராளி. குழந்தைப் போராளி சொல்லும் வாழ்க்கைக் கதையில் வீர தீரச் செயல்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதிலும், வாய்ப் பேச்சு அரசியல் வீரத்துக்கும் கருத்தியல் முழக்கங்களுக்கும் இதில் இடமில்லை. இதற்கு இரண்டு காரணங்களைச் சுட்டலாம். முதல் காரணம் - குழந்தையாகப் போரிடும்போது போரிற்கான அரசியல் பின்னணியும் கருத்தியல் நியாயமும் முக்கியமானதாக இருப்பதில்லை. சைனாவைப் பொறுத்தவரை, நாம் ஏற்கனவே சொன்னதுபோல், தனது தந்தையிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே போராளிக்குழுவில் - அதுவும் எதேச்சையாக - சேர்கிறாள். போராளி என்ற அடையாளத்தை கவசம் போல் அணிகிறாள். என்றாவது ஒருநாள் தந்தைக்கு புத்தி புகட்ட, அவர்மீது பழி தீர்க்க தனது போராளி அனுபவங்களும் அடையாளமும் உதவும் என்று நினைக்கிறாள்.

உகாண்டா அரசை எதிர்க்கும் போராளிக் குழுவின் இலட்சியங்களைப் பற்றி அவளுக்கு மேலதிகமான அக்கறை இல்லை. அதிகாரத்தை கைப்பற்றப் போகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவளையும் அவளைப் போன்ற சிறுமிகளையும் போர் புரிய வைக்கிறது. இங்கு வேறொரு முக்கியமான விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். குழந்தையாக இருந்து பெரியவர்களின் உலகைப் பார்க்கையில் குழந்தையின் கண்களுக்கு எட்டுபவைதான் அதற்கு காட்சிகளாகின்றன. ஏனையவை காட்சிவெளிக்கு அப்பாற்பட்டவையாகவே எஞ்சிவிடுகின்றன. வயதுக்கு மீறிய விஷயங்களை அனுபவிக்க நேரிட்டாலும், குழந்தையாகவே அவ்வனுபவங்களை சைனாவும் பிறரும் உள்வாங்கிக் கொள்கின்றனர். சைனா எதிர் கொள்ளும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அவளுக்கு அருவருப்பை ஊட்டுகின்றன, அவளை திகிலடையச் செய்கின்றன. ஆனால் பெரியவர்களால் பந்தாடப்படும் வாழ்க்கையில் தன்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்கு இது நடப்பது இயல்பே என்றுதான் அவள் நினைக்கிறாள். தன்னை மீறி நடக்கும் செயல்களை புரிந்து கொள்ளவும், எதிர்கொள்ளவும் முடியாத, இயலாத சூழ்நிலையில் ஒரு குழந்தை என்ன செய்யுமோ அதைத்தான் அவளும் செய்கிறாள் - தூங்கும்போது படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள்.

குழந்தைகளுக்கு பிடிபடாத அரசியல் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அந்த அரசியலின் நுணுக்கங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரண்டாவது காரணம் - குழந்தைப் போராளி என்பவள் பெரியவர்களின் அரசியல் ஆசைளை நிறைவேற்றும், அவற்றுக்காக காவு கொடுக்கப்படும் உடலாக மட்டுமே பாவிக்கப்படுகிறாள். பலிஆடுகளாக வலம்வரும் போராளிகளுக்குத் தெரிந்த அரசியல் ஒன்றே ஒன்றுதான் - அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும். சைனாவும் அவளைப் போன்ற குழந்தைகளும் அதிகாரம் என்பதற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாய் உள்ளனர். அவர்களுக்கிடையே தோழமையும் பாசமும் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய நபர்களாய் இருப்பவர்கள், அவர்களை அதட்டி, மிரட்டி அடிபணியவைத்து, போராளிகளாக்கும் அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகளின் வாக்கும் செயலுமே அவர்களை வழிநடத்துவதால், அவ்வதிகாரி களை மீறிய அல்லது அவர்களுடைய ஆளுமைகளுக்கு உட்படாத எதுவும் குழந்தைகளுக்கு முக்கியமானதாக படுவதில்லை. மேலும் குழந்தைகளுக்கும் அவர்களது உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் அதிபதிகளாக உள்ள அதிகாரிகளுக் கும் ஒருவித நெருக்கமும் ஏற்பட்டுவிடுகிறது. குழந்தை களின் விசுவாசம் அதிகாரிகளை இறுமாப்படையச் செய்கின்றன. அதிகாரிகளின் கவனிப்பு குழந்தைகளுக்கு தேவையானதாக இருக்கிறது.

சைனாவை நாளும் பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கி, அவளைத் திணறடிக்கும் கசிலிங்கி என்னும் அதிகாரியுடனான அவளது உறவு இத்த கையதுதான். கசிலிங்கி அவளை தனது காவலாளியாக தேர்ந்தெடுக்கிறான். தனது இச்சைகளுக்கு அவள் இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவள், தனது நிலை மையை இவ்வாறு விளக்குகிறாள். அவரது கொடுமை யான பக்கங்களை நினைத்துப் பார்ப்பதற்குகூட நான் அஞ்சினேன். எனது முகத்திலிருந்தே எனது உள்ளத்திலிருப் பவற்றை அவரால் வாசித்துவிட முடியும். (ப. 178) அவனுடைய அதிகாரத்துக்கும் வெறிக்கும் கட்டுப்பட்டவ ளாய் வாழ அவள் நிர்பந்திக்கப்பட்ட சூழ்நிலையில் அவனை வெறுக்கிறாள். ஆனால், அவனை போராளிகளின் அரசு சந்தேகத்தின் பெயரில் சிறைபடுத்திய போது அவனுக்காக அவள் வருந்துகிறாள் - என்னிடமிருந்து எல்லாவற் றையும் எடுத்துக் கொண்ட கசிலிங்கி எனக்கு எதையுமே கொடுத்ததில்லை. ஆனாலும்கூட அவரது நிலைமையைக் கண்டதும் எனது கண்கள் கலங்கின (ப. 209). இவ்வாறு தன்னை துன்புறுத்துவோருடன் குழந்தைகள் கொண்டிருக்கும் நெருக்கமானது ஒருபுறம், அவர்களு டைய தன்னிலையை உறுதி செய்கிறது. மறுபுறமோ, அவர்களை நிலைகுலையச் செய்கிறது. இறுதியில் சைனா போன்றோருக்கு சுய-வெறுப்பு மட்டுமே எஞ்சுகிறது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது, அவளுக்கு அருவருப்பு ஏற்படுகிறது. தன்னிலிருந்து தான் அந்நியப் பட்டிருப்பதை அவள் உணர்கிறாள்.

அதிகாரத்தையும் வன்மத்தையும் கடந்த வாழ்க்கையை பற்றி குழந்தைகளால் யோசிக்க முடியாததையும் பார்க்கி றோம். சைனாவுக்கு இரு நல்ல நண்பர்கள் வாய்க்கின்றனர். ஒருவன், அவள் தந்தையை பழிதீர்க்க நினைப்பது தவறு என்கிறான், இவ்வாறு செய்தால் அவளும் அவளுடைய தந்தையை போன்று குரூரமானவள் என்பது உறுதியாகி விடும், தான் அப்படியில்லை என்று சைனா நினைப்பாளா கில், பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். ஆனால் இதுபோன்றோருடன் சைனாவால் தொடர்ந்து நட்பைப் பாராட்ட முடியாமல் போய்விடுகிறது. அவளது காதலன் டிராகோவைப் பற்றி பரிவுடன் எழுதுகிறாள், ஆனால் அவனுக்காக அவள் விசேஷமாக எதையும் செய்வதில்லை. காதல் நோய்வாய்ப்பட்டு கிடப்பதுமில்லை. போர்ச் சூழலில் வடிவமைக்கப்பட்ட அவளது ஆளுமை, அமைதியான, அன்பை மையமாகக் கொண்ட வாழ்க்கையை பற்றிய சிந்தனையை மறுக்கிறது. போர்க்கால அனுபவங்களிலிருந்து மீண்டு சாதாரண, அன்றாட வாழ்க்கைக்கு பழக்கப்படுவது என்பது அனைத்து போராளிகளுக்கும் உள்ள பிரச்சனைதான். ஆனால் போரைத்தவிர வேறு எந்த மெய்மையையும் முக்கியமானதாக அறியாத குழந்தைகளுக்கு அது பெரும் பிரச்சனையாக இருப்பதை இலங்கையில் முன்னாள் குழந்தைப் போராளிகளுடன் பணி புரிந்துள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர். இவை எல்லாவற்றையும் மீறி போராளிகள் குழந்தைகளாக இருப்பதையும் நாம் அறிகிறோம். சைனா அணிந்து கொள்ளும் சீருடைகள் அவளைவிட

பெரியவர்களுக்கானது. அவளை விடவும் பெரிய துப்பாக்கிகளை அவள் சுமக்கிறாள். அவளும் அவளுடைய கூட்டாளிகளும் கதை பேசுகின்றனர், விளையாடுகின்றனர். பாட்டி வீட்டில் இருக்கும் போது பாட்டிக்குத் தெரியாமல் அவள் வாழைப்பழம் தின்னும் காட்சியில் பசியால் பரிதவிக்கும் சராசரி குழந்தையையே காண்கிறோம். எல்லா குழந்தைகளையும் போல அன்புக்காக அவள் ஏங்குகிறாள். தன்னிடம் யாராவது பரிவோடு நடந்து கொள்ள மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடனேயே இருக்கிறாள். ஆனால் அவளுக்கு எஞ்சுவதெல்லாம் அவளை பயன்படுத்திக் கொள்ளும் பெரியவர்களின் குரூரமான அரவணைப்புதான். அது அவளை சின்னாபின்னமாக்குகிறது, அதேசமயம் அவளை ஒரு மனுக்ஷியாக அடையாளப்படுத்தும் செயலாகவும் உள்ளது. வன்மத்தினூடாக மட்டுமே அர்த்தமுள்ள உறவுகள் நிலைநிறுத்தப்படும் வக்கிரமான உலகம் இது. 7, 8 வயது குழந்தைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட போராளிப்படையா?

குழந்தைகளை இவ்வாறுகூட நடத்துவார்களா என்பன போன்ற கேள்விகளை நாம் கேட்கக் கூடும். ஆனால் இன்று உலகின் பலபகுதிகளில் எந்தவிதத்திலும் தம்மை தற்காத்துக் கொள்ள முடியாத வயதில், குழந்தைகள் துப்பாக்கி பிடிக்கப் பழகுவது என்பது வழமையாகிவிட்டது. ஒருவிதத்தில் பார்த்தால் உகாண்டா போன்ற நாடுகளில் காணப்படும் இத்தகைய போக்கின் மறுபக்கத்தை சமாதானம் நிலவும் சமுதாயங்களில் காணலாம். நமது தொலைக்காட்சிப் பெட்டிகளில் அன்றாடம் தோன்றும் சிறுவர், சிறுமியர், வயதுக்கு மீறிய பேச்சுடனும், சைகைகளுடனும் நம்மை நுகர்வுப் பண்பாட்டுக்குள் அழைக்கும் ஆபாசத்தை நாம் வாய்பேசாது, மௌன ரசனையுடன் தரிசித்து வருகிறோம். குழந்தைகளை பாலினப் பயன்பாட்டுப் பொருட்களாகப் பாவிக்கும் பண்பாட்டை மிக இயல்பானதாக நமது சந்தைசார் நாகரிகம் அடையாளப்படுத்துகிறது. நுகர்வுப் பண்பாட்டின் மிதப்பில், குழந்தைகளை கண்காட்சிப் பொருட்களாக்கி அழகு பார்க்கும் வக்கிர புத்தியின் மற்றொரு வெளிப்பாடுதான், அவர்களை பெரியவர்களின் அரசியல் கனவுகளுக்கும் அரசியலுக்கும் இணங்க வைப்பது என்பது. இவ்வகையில், நம்மைப் பொறுத்தவரை, குழந்தைப் போராளி ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்ணின் தன்வரலாறாக மட்டுமல்லாமல், நாம் வாழும் காலஇணைவிற்கான சாட்சியமாகவும் அது உள்ளது.

பல ஆண்டுகளாக போரால் அலைக்கழிக்கப்படும் ஈழத் தமிழர்களின் முயற்சியில் இந்நூல் வெளிவந்துள்ளது பொருத்தமே. ஈழ (இந்திய)ச் சூழல்களில் நேரடியாகச் சொல்லமுடியாத செய்திகளை இத்தகைய நூல்கள் வாயிலாகப் பதிவு செய்ய முடிகிறது. தமிழுக்குள் இது வரையிலும் வராத செய்திகளை கவனமாகவும் அமைதியாகவும் தேவா மொழிபெயர்த்துள்ளார். போர், போராட்டம் என்றாலே வீரம், வீரமரணம், தியாகம் என்று எண்ணும் தமிழ்ச் சமுதாயத்தில் போர் என்பதன் உள்ளார்ந்த நாசகரமான அபத்தத்தை குழந்தைப் போராளி ஆரவாரமின்றி சுட்டுகிறது. ஈழத்திலும் பிற இடங்களிலும் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களுக்கு அரசியல் நியாயங்கள் ஆயிரம் இருந்தாலும் குழந்தைகளின் கண்களினூடாக நோக்குகையில், அந்நியாயங்கள் சுக்குநூறாகி விடக்கூடும் என்பதை இந்தப் புத்தகம் காட்டும் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
*****
குழந்தைப் போராளி - சைனா கெய்ரற்சி தமிழில்: தேவா , பதிப்பாசிரியர்: ஷோபா சக்தி வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா லாயிட்ஸ் சாலை, சென்னை-5 தொடர்புக்கு: 9444272500
******
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்