Aug 8, 2012

தியாகம் - கு அழகிரிசாமி

கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிடப் பத்து மணி ஆகும். அப்பறம் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துச் சாப்பிட்டச் சிரமத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடையை நோக்கிப் புறப்படுவார். சரியாகப் பதினைந்து நிமிஷ நடை. பத்து இருபத்தைந்துக்குக் கடையில் வந்து உட்காருவார். கையில் கடிகாரம் கட்டாமலே நிமிஷக் கணக்குத் தவறாமல் வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஒரே மாதிரியாக அவர்க் ku-a-scaled-500 கடைக்கு வருவதும் வீடு திரும்புவதும் இந்தக் காலத்து கடை சிப்பந்திகளுக்கு அதிசயமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. அவர் அந்தக் காலத்து மனுஷர். அவர் பழகிய உலகம் அவரை விட்டாலும் அவர் அதை விடத் தயாராக இல்லை.

அன்று காலை 10.25 க்கு கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும் பொது முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ, ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்து கொள்ள வேண்டும், அப்படி வைத்து கொண்டார். அந்த முகபாவத்தின் பிரதான அம்சம் கடுகடுப்பு; பிரதானம் இல்லாத அம்சம் ஒரு மாதிரியான விறைப்பு . இந்த முகபாவத்தை கடையில் உட்கார்ந்து இருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டார். நண்பர்களோ அந்தஸ்து மிக்க வாடிக்கைககாரர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றி விடுவார்.

கடையில் வந்து உட்கார்ந்த செட்டியார், கணக்கு எழுதும் சோமசுந்தரம் பிள்ளையை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தார். பிள்ளையும் அவ்வண்ணமே செய்தார். பிறகு செட்டியார் முகத்தை திருப்பி, பெட்டியைத் திறந்து அங்கே கிடக்கும் சில்லறைக் காசுகளை கையால் துழாவ விட்டு கடைச் சிப்பந்திகளை - அந்த நான்குப் பேரையும் மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தார். இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்! எதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே கணம் தான் சாக்குக் கிடைத்து விட்டது ....

"ஏன்டா.தடிப்பயல்களே ! நீங்க என்ன பரதேசிகளா, சன்யாசிகளாடா!  எருமை மாட்டுப் பயல்கள் ! விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப் போறப் பிச்சைக்காரப் பயல் கூட இப்படி சாம்பலை அள்ளி பூச மாட்டானேடா ? தரித்திரம் புடிச்ச பயல்களா! நீங்க வந்து கடையிலே நொளைஞ்சிகளோ இல்லையோ யாவாரம் ஒண்ணுக்கு பாதியாய்ப் படுத்து போச்சு. இன்னும் மிச்சம் மீதியையும் படுக்க வெச்சிட்டு போகவாட இப்படி நெத்தியில அள்ளி பூசிட்டு வந்திருகீங்க, சாம்பலை!...."

கடையில் புதிதாக சேர்ந்திருந்த ஒரு சிப்பந்தி " நீங்களும் விபூதி பூசி இருக்கீங்களே மொதலாளி ?" என்று கேட்டு விட்டான்.

"அடி செருப்பாலே ! நாயே ! வாய தொறக்கிரியா நீ? (கணக்கு பிள்ளையப் பார்த்து) ஜோட்டால அடிச்சு வெளிய துரத்தும் இவன ! நமக்கு சரிப்படாது. கஞ்சிக்கிலாம செத்த பயல்களை எரக்கபட்டுக் கடையிலே வெச்சது என் முட்டாள்தனம்,சோமசுந்தரம் பிள்ளை ......." என்று செட்டியார் பொரிந்து கொண்டிருக்கும் போது, கணக்குப் பிள்ளை அந்தப் புதுப் பையனைப் பார்த்து, "வேலையைப் போயி பாரேண்டா. மொதலாளி கிட்ட எப்படிப் பேசணும்கிறது கூடத் தெரியல்லையேடா, ஒனக்கு! உம் போ! போய் வேலையைப் பாரு " என்றார்

அந்த பையனுக்கு ஆத்திரம் வந்தது. போதாக்குறைக்கு மற்ற மூன்று பையன்களும் திரும்பிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.

செட்டியார் அதோடு அவனை விட்டு விட்டார். மற்றொரு பையனைப் பார்த்து அஸ்திரத்தைத் தொடுத்தார் ; " ஏய் கழுதே ! உன்னைத் தானே ! பருப்புலே ஒரே கல்லாக் கிடக்கனு சொன்னேனே பொடைச்சு வெச்சியா கழுதை?"

"பொடைச்சிட்டேன், மொதலாளி. கல்லு ஒண்ணும் இல்லையே?"

"என்னடா ! இல்லையா? அப்போ நன் பொய்யாச் சொல்றேன்? டேய்! இந்த மாதிரி நீ பேசிகிட்டே இருந்த, செருப்படி வாங்கிகிட்டுத் தான் இந்த கடையை விட்டுப் போகப் போறே. ஆமா. நல்ல யாவகத்துல வெச்சுக்கோ வேலைய ஒழுங்கா செய். சோமசுந்தரம் பிள்ளை, பய பேச்சை பார்த்தீரா? பார்த்து கிட்டீரான்னேன்? கடைக்கு வர்றவனெல்லாம் ஒருத்தன் பாக்கி இல்லாம ,"என்ன செட்டியாரே, இப்படிக் கல்லைப் போட்டீருக்கேரே பருப்புல" ன்னு கேக்கறான். இவன் என்னடான்னா "பொடைசிட்டேன் கல்லில்லேங்கரானே, உம் ஏ கழுத, நீ பொடைச்சது நெசன்தனா? கேட்டதுக்கு பதில் சொல்லு ! இல்ல இப்படியே கடையை விட்டுக் எறங்கு... "

சோமசுந்தரம் பிள்ள அந்தப் பையனைப் பார்த்து,"பொடைச்சேன் கல்லைச் சுத்தமாப் பொறுக்கிட்டேன் மொதலாளி ன்னு சொன்னா என்னப்பா ? நிசத்தைச் சொல்றதுக்கு என்ன?" என்றார்

அந்தப் பையன் பதில் சொல்லாமல் நின்றான்.

செட்டியார் கடைப் பையன்களைப் அத்தனை பேரையும் மொத்தமாகப் பார்த்து "போங்கடா எம் மூஞ்சியில முளிக்காதீங்க. ஒங்கள கட்டீக்கிட்டு மாரடிக்கறதுக்கு ஒரு குத்துக் கல்லை கட்டிக்கிட்டு மாரடிக்கலாம். தொலைஞ்சிப் போங்கடா" என்று விரட்டினார்   

கடைப் பையன்கள் நால்வரும் உள்ளே போய்விட்டார்கள்.உள்ளே போனதும் பழைய மூவரும் சிரித்தார்கள்.

மறுநிமிஷமே செட்டியார் அவர்களை அழைத்தார். "ஏன்டா எங்கடா கூண்டோட கைலாசம் போய்டீங்க? உள்ளே சமுக்காளத்தை விரிச்சு படுத்து தூங்குகடா ; நல்லா தூங்குங்க! இங்க வர்றவங்களுக்கு புளியும் கடுகும் நான் நிறுத்துப் போடறேன்."

புதுப் பையன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு "நீங்க தானே மொதலாளி உள்ளே போகச் சொன்னீங்க? நாங்க எது செஞ்சாலும் குத்தமாச் சொல்றீங்களே ..." என்று இரண்டு வாரங்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கக்கியே விட்டான்.

அவன் பேசியதைக் கேட்டு மற்றப் பையன்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிக்க, செட்டியார் தம் முகத்தை இன்னும் கடுகடுப்பாக வைத்து கொண்டு சோமசுந்தரம் பிள்ளைய ஏறிட்டுப் பார்க்க, பிள்ளையும் அந்தப் பையனைப் பார்த்து." ஏன்டா,'பேசாதே பேசாதே 'ன்னு ஒனக்கு எத்தனை தரம் சொல்றது? என்ன பயலடா  நீ? போய் அந்த ஈராங்காயத்தை மூட்டையிலிருந்து எடுத்துக்கிட்டு வா.. இங்கே பொட்டியிலே ஈரங்காயம் இல்ல" என்றார்

" அதெல்லாம் எங்கே தெரியுது? எல்லாம் சொல்லித் தான் நடக்க வேண்டியிருக்கு, ஏன்டா, சோறு திங்கறீங்களே, அதையும் சொன்னாதான் திம்பீங்களா? இல்ல கேக்கறேன். இப்படி அறிவு கேட்ட பயல்களா வந்து நமக்குன்னு சேந்திருக்காங்கலே, அதைச் சொல்லும் ... டேய், உன்னைத் தாண்டா ! அந்த முத்தையா பிள்ளை பாக்கியக் கேட்டியா? அதையும் சொன்னா தான் செய்வியா?" 

"கேட்டேன், முதலாளி "

"கேட்டியாக்கும்?கெட்டிக்காரன் தான் ! கேட்டு வாங்கனும்னு தோணலியோ?"

"பாக்கியக் குடுதிட்டாரு" என்று பெருமிதத்தோடு சொன்னான் பையன்.

"அட என்னமோ இவன் சாமர்த்தியத்தில வாங்கின மாதிரியில்ல பேசுறான் ! கடன் வாங்கினவர் குடுக்காமலா இருப்பாரு? முத்தையா பிள்ளை யோக்கியன்,இவன போல முடிச்சிமாறிப் பயலா இருப்பார்னு நெனைச்சான் போல இருக்கு,அதனாலே தான் குடுத்திட்டாருனு ரொம்பச் சவடாலாச் சொல்றான். ஏய், நீ எப்டிடா போய்க் கேட்ட? கண்டிப்பாக் கேட்டியா?"

"கண்டிப்பாத்தான் கேட்டேன் மொதலாளி ..."

"கண்டிப்பாகக் கேட்டியா? உன்ன யாருடா அப்படிக் கேக்கச் சொன்னது? எதம்பதமாப் பேசணும்மன்னு உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்? கண்டிப்பாப் பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்?...."        

அப்போது சோமசுந்தரம் பிள்ளை குறுக்கிட்டு, சாவதானமாக, "முருகையா, அந்த பெரிய கணக்கு நோட்ட இப்படி எடு" என்றார். செட்டியார் முருகையாவை விட்டுவிட்டார். மற்றொரு பையனை ஏறிட்டுப் பார்த்து கொண்டிருந்த சமயத்தில் சண்முகம் பிள்ளை கடைக்கு வந்து சேர்ந்தார்.

"அண்ணாச்சி வாங்க!" என்று அவரை வரவேற்றச் செட்டியார், அந்தப் பையனைப் பார்த்து, " ஏய் பரதேசி! நான் உனக்கு என்ன சொன்னேன்? என்னலே சொன்னேன்?..." என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே சண்முகம் பிள்ளை பேச்சுக் கொடுத்தார்."செட்டியாரையா ,நாளைக்கு மதுரைக்குப் போறேன்" என்று தான் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்தார். செட்டியாரும் கவனத்தை அவரிடம் திருப்பினார். அத்துடன் சாமான்கள் வாங்கவும் இரண்டொருவர்கள் வந்தார்கள். பையன்கள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டார்கள்.

கதிரேசன் செட்டியார் எப்போது பார்த்தாலும் கடைச் சிப்பந்திகள் மீது இப்படிச் சீறி விழுவதைப் பல வருஷங்களாகப் பார்த்துக் கொண்டு வந்தவர் சண்முகம் பிள்ளை.ஒரு நாள் கூட செட்டியார் அன்பாக ஒரு பையனைப் பார்த்துப் பேசியதில்லை. மாதத்தில் பத்து நாட்களாவது அவர் செட்டியார் கடைக்கு வந்து சிறிது நேரம் உட்கார்ந்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு போவார். அவர் வந்து விட்டால் கடைப் பையன்களுக்கு ஒரே கொண்டாட்டம், ஏனென்றால், அவரோடு பேசி கொண்டிருக்கும் போது செட்டியார் சஹ்ஸ்ரநாம அர்ச்சனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும்.   செட்டியாரும் கூட அர்ச்சனையை நிறுத்துவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதுவார்! சோமசுந்தரம் பிள்ளை குறுக்கிட்டுக் கடைப் பையன்களுக்கு புத்தி சொல்லத் தொடங்கி விட்டாலும், கொஞ்சம் மூச்சு விட்டு ஒய்வெடுத்து கொள்வார். பையன்களைத் தாம் திட்டும் போது தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்க்காகவே சோமசுந்தரம் பிள்ளையை இந்த முப்பது வருஷ காலமும் தம் கடையில் கணக்குப் பிள்ளையாக வைத்து கொண்டிருக்கிறார் என்று சொன்னாலும் தவறில்லை ......

செட்டியாரின் குணாதிசியங்கள் எல்லாம் கடைப் பையன்களுக்கு மனப்பாடம். இரண்டு வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்த புதுப் பையன் வெங்கடாச்சலதுக்கு இன்னும் முதற்பாடம் கூட சரி வர புரியவில்லை. அதனால் தான் அவனுக்குச் செட்டியார் திட்டும் போது உள்ளுற மனம் குமுறியது."பிச்சைக்காரன்"."கஞ்சிக்கு இல்லாதவன்","நாயே,பேயே" என்று எத்தனையோ இழி சொற்களைச் சேற்றில் தோய்த்து எடுத்துச் செட்டியார் வீசியிருக்கிறார். அவன் சொல்லாமலே கடையை விட்டு ஓடி விடலாம் என்று நினைத்தாலும், தன் தகப்பனாரின் கண்டிப்புக்குப் பயந்து இன்னும் அங்கேயே இருந்து கொண்டிருந்தான். 

அவனுடைய ரோஷத்தைக் கண்டும் செட்டியார் தங்களைத் திட்டுவதைக் கண்டும் மற்றப் பையன்கள் சிரித்ததற்குக் காரணம் அவர்களுக்கு மானமோ ரோஷமோ இல்லாதது தான் என்று யாராவது நினைத்தால் அதை விட பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்க முடியாது. அவர்கள் அங்கே இருந்து பழகியவர்கள். செட்டியாரின் வார்தைகளக்கு பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு; ஒன்று, வேறு எந்தக் கடையிலும் கடைச் சிப்பந்திகளக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட இங்கே அதிக சம்பளம். தீபாவளிக்குப் புது வேஷ்டி சட்டைகளுடன் ஆளுக்கு பத்து ருபாய் ரொக்கமும் கொடுப்பார் செட்டியார். கடை வேலைய தவிர தம்மை மறந்தும் கூட வீட்டு வேலைய செய்யச் சொல்ல மாட்டார். அவருடைய வீட்டுக்குக் கடை பையன்கள் போனால் ”ஐயா ராசா” என்று அன்போடு பேசுவார்.ஏகதேசமகச் சாப்பிட சொல்வதும் உண்டு. எல்லாவற்றையையும் விட முக்கியமாக, யார் என்ன புகார் சொன்னாலும், எந்த பையனையும் வேலையிலிரிந்து நீக்குவதே கெடையாது. பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொள்ளும் போது, கல்யாணச் செலவுக்கு ஒரு கணிசமான தொகையும் குடுப்பது வழக்கம். அவர் கடையில் வேலை பார்த்த பையன் பெரியவனாகித் தனிக் கடை தொடங்க நினைத்தால், அதற்கும் உதவி செய்வார். அப்படி அவர் கைத் தூக்கி விட்டு இன்று மூன்று பேர் அதே ஊரில் மளிகைக் கடைகளை லாபகரமாக நடத்தி கொண்டு வருகிறார்கள் - இந்த ரகசியங்கள் எல்லாம் கடைப் பையன்களுக்குத் தெரியும். அதனால் தான் அவருடைய வசை புராணத்தை ஏதோ வழக்கொழிந்த ஒரு அந்நிய பாஷையில் இயற்றப்பட்டக் காவியமாகக் கருதி ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்.

2

காலையில் பையன்கள் விபூதி பூசி வந்ததைக் கண்டுச் சீறி விழுந்ததைப் பார்த்தப் புதுப் பையன், மறு நாள் வெறும் நெற்றியோடு வந்து விட்டான். அவ்வளவு தான்: " நீ என்னடா சைவனா? இல்லை, வேதக்கரானா?(கிறிஸ்துவனா?) என்னலே முழிக்கிற? உன் மூஞ்சியப் பார்த்தா எவண்டா கடைக்கு வருவான்?... நெத்தியை சுடுகாடு மாதிரி வெச்சுகிட்டு ...."

"போய் விபூதியை எடுத்துப் பூசு" என்று கணக்கு பிள்ளை அவனுக்குப் புத்தி சொன்னார். செட்டியார் திட்டுவதை உடனே நிறுத்தி விட்டார்.

அன்று செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடைசி நாள் விழா, பெரிய மேளக் கச்சேரி. வாண வேடிக்கை எல்லாம் ஏற்பாடாகியிருந்தன. வெளியூர் கூட்டம் தெருவெல்லாம் நிரம்பி வழிந்தது. அன்று ஒருமணி நேரம் முன்னதாகவே - அதாவது எட்டு மணிக்கே- கடையை அடைத்து விட்டுத் தாமும் கோவிலுக்கு போகாலாம், மற்றவர்களையும் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று முடிவுக் கட்டியிருந்தார் செட்டியார்.ஏழரை மணிக்கெல்லாம் சண்முகம் பிள்ளை வந்தார்.செட்டியார் தம் ஒய்வு ஒழிச்சலற்ற வசை புராணத்தை நிறுத்தி,"அண்ணாச்சி வாங்க" என்று புன்னகையோடு அவரை வரவேற்று விட்டு, "மதுரைக்கு நேத்து தானே போனீங்க" என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

"அங்கே சோலி? போன காரியம் முடிஞ்சதும் திரும்ப வேண்டியது தானே? இன்னிக்குக் காலையிலே முதல் வண்டிக்கே வந்துட்டேனே ! குளிச்சு சாப்பிட்டேன். கொஞ்சம் அசந்து தூங்கினேன். தூங்கிபிட்டு வர்ரேன்..."

செட்டியார் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஏழே முக்கால். இது தான் சமயம் என்று ஆரம்பித்து விட்டார்.

"ஏன்டா! தீவட்டித் தடியங்களா?"

"என்ன மொதலாளி" என்று இரண்டு பையன்கள் ஏக காலத்தில் கேட்டார்கள்.

"என்ன முதலாளியா? நானும் ஒரு மணி நேரமாப் பார்த்துக்கிட்டு இருக்கேன்,இந்தப் பயக வாயத் தொறந்து கேட்கட்டும்னு. நீங்க எங்க கேப்பீங்க ? உங்களுக்கு சாமி ஏது, சாத்தா ஏதுடா? அப்படி தெய்வ பக்தி இருந்த, உங்க மூஞ்சில கொஞ்சமாச்சும் களை இருக்குமே ! அறிவுகெட்ட பயகளா, இன்னைக்கு திருநாள் ஆச்சே, ஊர் பூராவும் கோயிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுதே, நாமளும் போகணும்னு ஏன்டா உங்களுக்குத் தோணல்ல?"

அப்போது சண்முகம் பிள்ளை, "மொதலாளி சொல்லாமே எப்படிக் கடைய போட்டுட்டுச் சாமி பார்க்கப் போவாங்க? நீங்க சொல்றது நியாயம் இல்லையே செட்டியாரையா?" என்றார்.

"ஆமாம் அண்ணாச்சி, சாமி கும்பிடறது கூட முதலாளியைக் கேட்டுத்தான் கும்பிடணும்! நீங்களும் அவங்க கட்சில சேர்ந்து பேசுங்க!" என்றார் செட்டியார்.

சோமசுந்தரம் பிள்ளை, பையன்களைப் பார்த்துக் கடையை அடைப்பதற்கு எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். அவர்களும் ஜருராக அந்த வேலையில் இறங்கினார்கள்.

செட்டியார் மிகவும் கவலையோடு,"இந்தப் பயல்களோட கத்திக் கத்தி என் தொண்டை தண்ணி தான் வத்துது,அண்ணாச்சி சேச்சேச்சே!" என்று சலித்து கொண்டார்.சண்முகம் பிள்ளை சிரித்தார்.

சிறிது நேரத்தில் கடையை எடுத்து வைத்துப் பூட்டி முடிந்ததும் பையன்கள் கோவிலுக்குப் போக உத்தரவுக்குக் காத்திருந்தார்கள்.

"என்னடா கோவிலுக்கு தானே?" என்றுக் கேட்டார் செட்டியார்.

"ஆமா, மொதலாளி"

"கோவிலுக்கு வெறுங்கையை வீசிட்டு தான் போக போறீங்களா?"

பதில் இல்லை.

"என்னடா, நான் கேக்கறேன், பேசாம நிக்கிறீங்களே? வாயில என்ன கொளுகட்டாய இருக்கு?"

அதற்கும் பதில் இல்லை.

"பாருங்க, அண்ணாச்சி, வாய தொரக்கராங்களானு பாருங்க. கோயிலுக்கு போறதுன்னா தேங்கா, பளம் சூடமெல்லாம் கொண்டு போக வேண்டாமா?"

"கொண்டு தான் போகணும்" என்றார் சண்முகம்பிள்ளை.

"அது இந்த பயகளுக்கு தெரியுதா பாருங்க .. கடவுளே! கடவுளே!" என்று தலையில் அடித்து கொண்டு, " டேய்! இந்தாங்கடா ஆளுக்கு ஒத்த ரூவா. போய் தேங்கா, பளம் வாங்கிட்டு போங்க, எங்க தலையில ஏன் களிமண்ண வெச்ச சாமி ? மூளைய வெக்கலேனாலும் வெள்ளை மெளுகயாவது வெச்சிருக்க கூடாதா ? ன்னு சாமியக் கேளுங்கடா" என்று சொல்லி விட்டு நான்கு பேருக்கும் நான்கு ரூபாய்களைக் கொடுத்தார். பையன்கள் போய் விட்டார்கள்.

செட்டியார் சாவிக் கொத்தோடு வீட்டை நோக்கி நடந்தார்.

சாப்பிட்டு அம்பாளின் நகர்வலதைப் பார்ப்பதாக உத்தேசம். அம்பாள் கடை தெருவுக்கு வர மணி பதினோன்றாகிவிடும் என்பது அவரக்கு தெரியும். சண்முகம் பிள்ளையும் அவரும் பேசி கொண்டே போனார்கள்.அப்போது சண்முகம் பிள்ளை தாம் வெகு நாட்களாகக் கேட்க நினைத்ததை அன்று அப்பட்டமாக கேட்கத் துணிந்தார்:

"என்ன அண்ணாச்சி , உங்கள எப்போ நான் கோவிச்சிருக்கேன்? என்ன இப்படிக் கேக்கறீங்க? நமக்குள்ளே என்ன வேத்துமை?"

"இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க, ஊரிலேயும் உங்களைப்பத்தி பெருமையா பேசிக்கிறாங்க.கடைப் பையன்களுக்கு உங்கள போல சம்பளம் குடுக்கறவங்க இல்லையன்னும் எனக்கு தெரியும், எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா,ஏன் இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கடைப் பையன்களை திட்டிகிட்டே இருக்கீங்க? எப்போ வந்து பார்த்தாலும், எவனையாவது நிப்பாட்டி வெச்சுகிட்டு பொரியரீங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்ல?"

"அண்ணாச்சி , அன்பாதரவா இல்லையன நான் திட்டுவனா ? அதைக் கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க. பயகளை நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லில கடைய விட்டு வெளியே ஏத்திபுட்டு மறு சோலி பார்க்க மாட்டனா? சொல்லுங்க, இந்த முப்பது வருசத்துல ஒருத்தனை நான் வேலைய விட்டுப் போகச் சொல்லியிருக்கேனா? பயக விருத்திக்கு வரணும்னு தானே தொண்டத் தண்ணி வத்த வெச்சுகிட்டு இருக்கேன்? கத்தி கத்தி என் உசிரும் போகுது "

"ஏன் கத்தணும் ? நல்லபடியா ஒரு சொல் சொன்னாப் பத்தாதா?"

"அப்டியா சொல்றீங்க, அண்ணாச்சி? சரி தான் ! நல்லபடியாக சொன்னாப் பயகளுக்கு திமிர் இல்ல ஏறி போகும்? ஒடம்பு வளையுமா? அந்த காலத்திலே நான் கடைப் பையனா இருந்தப்போ எங்க மொதலாளி பேசினதை நீங்க கேட்டிருக்கணும்…. ஹும், அதிலே பத்திலே ஒரு பங்கு கூட நான் பேசியிருக்க மாட்டேன்; பேசவும் தெரியாது."

"அப்ப்பேர்ப்பட்டமுதலாளியா அவரு!"

"என்னங்கறீங்க? என்ன பத்தி மட்டுமா? என் தாயி, தகப்பன்,பாட்டன் - அத்தனை பேரையும் சேர்த்து கேவலமா பேசுவாரு.புளுத்த நாய் குறுக்கேப் போகாது. ஒரு நாள் என் மூஞ்சில அஞ்சு பலப் படிய தூக்கி வீசிட்டாரு. தலையக் குனிஞ்சேனோ, தப்பிச்சேனோ ! அப்படியெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைன்னு வெச்சு, யாவரம் பண்ணி, இவ்வவளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாம நிர்வாகம் பண்ணிட்டு வரேன்..."

சண்முகம்பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனாலும் அப்பறம் சிரித்து கொள்ளலாம் என்று அதை அடக்கிக் கொண்டு " செட்டியாரையா உங்க மேல தப்பில்ல ; உங்க முதலாளிய சொல்லணும். உங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காரு"

செட்டியாருக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. அதனால் " என்ன அண்ணாச்சி? என்ன சொல்றீங்க?" என்று கேட்டார்

"உங்கள பாக்க எனக்கு உண்மையிலே பாவமா இருக்கு. இப்படி கத்தினா முதல்ல உங்க ஒடம்புக்கு ஆகுமா ?".

செட்டியாரும் தம் நிலையை எண்ணி தாமே வருந்தினார்; " என்ன செய்யறது? நாம வாங்கின வரம் அப்படி... அந்த சோமசுந்தரம் பிள்ளை நடுவிலே எதாச்சும் செய்வாரு. அது தான் சாக்குன்னு கொஞ்சம் வாய மூடுவேன். அவரு இல்லேனா கத்திக் கத்தி மூச்சே போயிருக்கும்.பயக நல்லா தலை எடுக்கணுமேன்னு தான் பாக்கறேன். அவங்க தாய் தகப்பன்மாரு என்ன நம்பி ஒப்படைசிருக்காங்களே .... என்னமோ அண்ணாச்சி, ராத்திரி ராத்திரி வீட்டிலே வந்து படுத்துகிட்டே நானா நெனைச்சு வருத்தபட்டுகிடுவேன். ஒவ்வொரு சமயம் தொண்டை கட்டிகிடும். பாலிலே பனம்கல்கண்டும் மொளகும் போட்டுக் குடிப்பேன். மொதலாளி ஆயிட்டோம், செய்யறதைச் செய்யத்தானே வேணும்? அந்த சம்புகவல்லி புண்ணியத்தில இது வரையிலும் உடம்புக்கு வந்து படுத்ததில்ல"

"சரி சரி எவ்ளோ காலம் தான் உடம்புத் தாங்கும்? இனிமே ஒவ்வொண்ணையும் அப்டி இப்டி கொரைச்சிகிட்டு வர வேண்டியது தான். நமக்கு பகவான் தொண்டைய என்ன வெங்கலத்திலயா படைச்சிருக்கான்?"

ஷண்முகம் பிள்ளை சிரித்து கொண்டே சொன்ன புத்திமதி, நியாயமானதாகவே செட்டியாருக்குப் பட்டது. ஆனாலும் அதை ஒப்புக் கொள்வது சுயநலம் என்றுக் கருதினார்

"அண்ணாச்சி ! நீங்க என்ன தான் சொல்லுங்க ; பயக நல்லபடியா தலையெடுக்கணும். இவ்ளோ காலமும் இப்படி இருந்திட்டு இனி என்ன எக்கேடு கேட்டா என்னன்னு என்னால இருக்க முடியாது. இனிமே என்ன ? வயசு அறுபதாச்சு. உசுரை வெச்சு இருந்து என்னத்த சாதிச்சிரபோறோம் ?" என்று தியாக உணர்ச்சியோடு பேசினார். பேச்சில் ஒரு உறுதி நிறைந்திருந்தது.

சண்முகம் பிள்ளை அதைப் பார்த்து, " அப்டின்னா, நித்தியபடி அர்ச்சனை நடக்கும்ன்னு தான் சொல்லுங்க" என்று சொல்லி விட்டு உரக்கச் சிரித்தார்.

செட்டியார் அவருடைய சிரிப்பைப் பார்த்து மிகவும் மனம் நொந்து கொண்டு, " என்னமோ அண்ணாச்சி, உங்களுக்குச் சிரிப்பா இருக்கு.பாருங்க, இப்போ உங்ககிட்ட சரியாகக் கூடப் பேச முடியல்ல, தொண்டை வலிக்குது, நான் பொறந்த வேளை!" என்று அழமாட்டாதகுறையாகச் சொல்லியபடி நடந்தார்.

-----------------------

முத்துக்கள் பத்து - கு அழகிரிசாமி அம்ருதா பதிப்பகம் 2007 தொகுப்பு - திலகவதி

தட்டச்சு உதவி: மணிகண்டன்

15 comments:

  1. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தியாகம்- இப்படிப்பட்ட அருமையான கதைகளை தங்கள் தளத்தின் மூலம் படிக்கமுடிவது மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. கதையா இது... காவியம். உணர்ச்சிகளைச் சொற்களில் வடிப்பது என்பது நல்ல எழுத்தாளனுக்கு மட்டுமே கை வந்த கலை. மக்களோடு மக்களாய் வாழ்ந்திருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும். நல்ல கதையை வாசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ஊரு பக்கம் நாயக்கரு கடையிலே இப்படி பாத்திருக்கேன் .. விருதுநகர் நாடாரு கடையிலே கூட இப்படி இருந்ததில்லே. வேதக்காருகளும் கடை வைச்சிருக்காக., அங்கேயும் இப்படி இருந்ததில்லே.. ! சில நிகழ்வுகளிலே ஒட்டு மொத்த சிறு கடை வியாபாரிகளின் வாழ்க்கை முறைமையினை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி..! நல்லதொரு நினைவிலிட்ட வாசிப்பனுபவம்.

    ReplyDelete
  5. Thanks for wonderful story and reminds me my hometown .
    //அன்று செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடைசி நாள் விழா, பெரிய மேளக் கச்சேரி. வாண வேடிக்கை எல்லாம் ஏற்பாடாகியிருந்தன//

    ReplyDelete
  6. க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ழிய‌ சிரித்து சிரித்து வ‌யிறு வ‌லி க‌ண்ட‌து.

    ReplyDelete
  7. "அண்ணாச்சி ! நீங்க என்ன தான் சொல்லுங்க ; பயக நல்லபடியா தலையெடுக்கணும். இவ்ளோ காலமும் இப்படி இருந்திட்டு இனி என்ன எக்கேடு கேட்டா என்னன்னு என்னால இருக்க முடியாது. இனிமே என்ன ? வயசு அறுபதாச்சு. உசுரை வெச்சு இருந்து என்னத்த சாதிச்சிரபோறோம் ?" என்று தியாக உணர்ச்சியோடு பேசினார். பேச்சில் ஒரு உறுதி நிறைந்திருந்தது.//

    முதலாளியின் தியாகம் கடைப்பையன்களின் வளமான எதிர்காலம் அல்லவா!

    அருமையான கதையை படிக்க அளித்தமைக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அழஅழச் சொல்வர் தமர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவர்
    பிறர் என்பது சரியாகத்தானிருக்கிறது.

    அருமையான கதை. படிக்க்கஃ கொடுத்தமைக்கு மிக்க
    நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. mall culture bonded generation we are.i missed up lot.thanks make me to felt my nativity.

    ReplyDelete
  10. இந்தக் கதையை நான் படித்தேன் என்பதை விட பார்த்தேன் என்றே சொல்லலாம், இக்கதையைப் படிக்கையில் என்னுள் ஒரு குறும்படமே ஓடியது, அதில் வி.கே ராமசாமி அவர்கள் செட்டியாராக இருந்தார். நிரம்ப மகிழ்ச்சி கதையை பதிவேற்றம் செய்தமைக்கு, முத்துக்கள் பத்து - கு அழகிரிசாமி ஐயாவின் சிறுகதை தொகுப்பையும் வாங்கி விடுகிறேன்

    ReplyDelete
  11. என்ன ஒரு எழுத்து நடை !.

    ReplyDelete
  12. இது (A/L) 2017ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் உள்ளமையால் என் வமர்சன கட்டுரைக்கு உதவியது. இந்த அருமையான சிறகதையை இணையத்தாத்தில் பதிவே செய்து எனக்கு உதவியமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மனதில் நிற்கும் எளிமையான பாத்திரங்கள் , அவர்களின் செயல்களை எப்படி அவர்களின் நல்ல குணத்தை மீறி பழமை இயக்குகிறது..... பட்டறிவின் பிழையை திருத்துவது ???......

    அருமை

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.