Sep 28, 2008

தெரியவில்லை-ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி

2

மலையைப் பார்க்கிறேன்

சிலைக்காகும்

கோயிலுக்காகும்

பங்களாவின்

சுற்றுச் சுவர்க்காகும்

தாரோடும் வீதிக்கு

ஜெல்லிக் கல்லாகும்.

மலைச்சிகரம்

மனிதச் சாதனைக்காகும்.

எதெதோ தெரிந்தாலும்

மலையாகப் பார்க்கத் தெரியவில்லை.

மலரைப் பார்க்கிறேன்.

புலரும் காதலுக்குத்

தூண்டில் முள்ளாகும்

அத்தர்க்காகும்

படத்துக்காகும்

எதெதோ தெரிந்தாலும்

மலராகப் பார்க்கத் தெரியவில்லை.

என்னைப் பார்க்கிறேன்

கண் காணாச் சமூகத்தை

நிலை நிறுத்தும் கல்தூண்.

பரிணாமத்தின் பனிச்சிகரம்

சந்ததியின் சங்கிலியில்

காலம் காட்டும் கடைக்கரணை

எதெதோ தெரிந்தாலும்

நானாகப் பார்க்கத் தெரியவில்லை.

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.