Nov 15, 2009

மூடி இருந்தது-சி.சு.செல்லப்பா

சி.சு. செல்லப்பா

நாளை! நாளை எனக்கு விடுதலை, நான் எதிர்பார்க்காமல் அது என் அருகில் வந்துவிடவில்லை. வாஸ்தவமாக! மாதங்கள் வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிஷங்கள், ஏன் வினாடிகளும் கூட. அவைகள் ஒவ்வொன்றின் கால அளவையும், கணக்குப் போட்டுப் போட்டுப் பார்த்துவிட்ட பிறகு தான் என்னை நெருங்கி வந்தன. எப்படி அந்தக் கடைசி மின்வெட்டு நேரம். சாசுவதமான விடுதலையை தரும் கணப் பொழுது, சாவு என்பது உயிர் வாழ்க்கை முழுதும் கண் எதிரில் தோன்றித் தோன்றி ஒரு நாள் உன்னிடம் வருவேன். தயாராக இரு' என்று காதில் சம்மட்டி போட்டு அடிக்கிறதோ, அப்படி இருந்தது.

44124.960848815.1.o1158419629
எதிர்ச் சுவரில் அடிபட்ட மாதங்கள், நாட்கள் ஒழுங்கான வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. ஒரு நீண்ட வெட்டு உச்சியிலிருந்து அடிவரை ஊடுருவிப் பாய உயிரற்றுக் கறுத்து நிற்கின்றன. அந்தப் புழுக்கைப் பென்சில் ஏதோ ஒரு கையிலிருந்து கெஞ்சி வாங்கினது. அதுதான் அந்த நாட்களைச் சிருஷ்டித்தது. ஏன், அதுவேதான் அவைகளை அழித்ததும், எவ்வளவு மெதுவாக அந்த நாட்கள் வளர்ந்தன. கருப்பைச் சிசுவின் வளர்ச்சி, அது இதைவிட வேகமாக வளர்ந்ததா, குன்றியதா?

அந்த முதல் நாள். அது பிறந்து வளர்ந்தது என்னுள் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. நான் அதை ஒன்று என்று இலக்கத்தில் குறித்தேன். பின்பு இரண்டு, மூன்று நான்கு.... ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக முளைத்தன.

இன்று நூற்று அறுபத்து ஐந்து! நூற்று அறுபத்து ஆறுக்கு முந்தின எண். பாலர் வகுப்புக் குழந்தை இதை சொல்லிவிடும். ஆனால் எனக்கும் அந்த எண்ணுக்கும் உள்ள சம்பந்தத்தை அதற்குச் சொல்லத் தெரியாது. 'நீ கைதி, ஞாபகம் இருக்கட்டும்' என்று எச்சரிக்கும் கடைசி இரவு அன்று. நூற்றி அறுபத்து ஆறு. அதன் இரவு என்னை சுதந்திரமுள்ளவனாக அடையும். அந்த இரவுக்குத்தான் என்ன அதிருஷ்டம்!

பூட்டியாகிவிட்டது. வெறும் இரும்புக் கதவல்ல. அது வாயில்லாமலே பேசும். வருஷம் வருஷமாக அது பேசப் பழகி வந்திருக்கிறது. வார்டர் பாஷையில் அது பேசும். கைதியின் பாஷை அதுக்குப் புரியும். வழக்கம்போல அது தன் தோரணையில் உறுமியது. நான் அப்போதுதான் அதன் கைதியாக நிலையில் காலடி எடுத்து வைத்துப் பிளாக்கிற்குள் நுழைந்துகொண்டிருந்தேன். என் கடைசித் தினத்தைக் கொண்டாடிய நாள், கொண்டாடிய விதம் அது.

'அடே, அறுநூற்று இருபத்து மூன்று. போ. போ!' இவ்வளவு தான் அதன் உறுமல். கைதிக்கு புரியாதா அதன் கறுவின தொனி! அலக்ஷ¢யமாகச் சிரித்தேன். இருந்த நாட்கள் எல்லாம் இருந்துவிட்டுப் போகிறேன். புண்படுத்தும் வார்த்தை பேச அப்போது மனமில்லை. என்னைக் காக்கும் பொறுப்பை நாளை முதல் கொடுக்க மாட்டேன். கடந்தபோன நாட்களுக்காக மன்னிக்க வேண்டும்' என்றேன். உடனே என்ன நடந்தது புராண ராக்ஷசனைப் போல பயங்கரமாக வீரிட்டுக் கதவு சீறிப் பாய்ந்து தன் வாயை மூடிக்கொண்டது. நான் தள்ளிப் போய் விட்டேன். அதன் ஆகாரம் பறிபோகப் போ கிறது. ஆத்திரம் வருவது சகஜந்தானே?

நான் என் படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆமாம், அது என் படுக்கை தான். யாரும் மறுக்க முடியாது என் கைகளால் நான் வாங்கிக் கொண்டது. வாங்கிக் கொள்ளும் போதுதான் என்ன திருப்தி! வேறு எந்தப் படுக்கையும் இவ்வளவு மனோசாந்தியை இதுவரையில் தந்தது இல்லை. அந்த இரண்டும் அடங்கின அந்தப் படுக்கை - அந்த சாக்கு, அவ்வளவு முரட்டு வார்த்தை கூடாது - நூலுக்குப் பதிலாக சணல் கொண்டு நெய்தது அது - அந்தக் கம்பளி. அதன் கணக்கற்ற துவாரங் களையும் சிக்கு நாற்றத்தையும் பற்றிய வியாக்கியானம் எதற்கு?

அந்த சாக்கு! கம்பளி! - அவர்கள் பெயர் கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் அவை என்னுடையவையே. நான் விரும்பினால் அவை களைக் கிழித்து எறிந்திருக்க முடியும். அந்த சுதந்திரம் எனக்கு உண்டு. ஆனால் கைதி ஒழுங்கினமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரம், பத்து நாட்கள் மார்க்குப் பிடிக்கப்படும். அவ்வளவுதான். ஆனால் நான் அவைகளைப் பத்திரமாகவே சேர்க்கப் போகிறேன். பத்திரமாக என் கைக்கு வந்திருக்கிறதே அந்தத் தட்டு, குவளை - அவைகளையுந்தான். இன்னும் எத்தனை கை மாற வேண்டுமென்று அவைகளின் தலையில் எழுதியிருக்கிறதோ - அவை வாழ்க இயற்கையான ஓய்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும். நான் தொட மாட்டேன்.

இந்த உடைகள் - இவைகளும் என்னுடை யவையே. கொஞ்சம் அஜாக்கிரதை காட்டி இவைகளைக் கிழித்து எறிந்திருக்கலாம். வேறு யாருக்கும் உபயோகப்படாமல். நிச்சயமாக இந்த உடைகள் பெருமை தரக்கூடியவையல்ல. இவை ஒரு கைதியின் உடைகள். சும்மா கொடுத்தாலும் வெளியுலகம் உபயோகிக்கத் தயங்கும். ஏன், மறுத்தும்விடும். ஆனால் இந்த உடை என்னுடையது என்பதிலே எனக்குக் கர்வந்தான். வெளியுலகம் இதைப் பற்றி நினைப்பது இருக்கட்டும். வெளியே இதை எடுத்துப்போக அவர்கள் அனுமதித்தால் - ஆனால் அது நடக்காத காரியம் - நான் இதை அணிந்து கொண்டு அவர்கள் கண் முன் நடப்பேன். எவனாவது வந்து 'நீ கைதி' என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கிறேன்.

இந்த உடைகள் எனக்காக அமைக்கப் படவில்லை. நான் இவைகளுக்காக அமைக்கப் பட்டிருந்தேன்போல் இருக்கிறது. வாஸ்தவ மாக, இவை எனக்குத் தனி உருவம் ஏற்படுத்திவிட்டன. உருவம் என்று சொல்லும் போது உடலையும் உடையையும் பிரித்துப் பேச முடியாது. உடையால் ஏற்பட்டது உருவம். அதுதானே சர்மத்தின் வேலையும்.

இந்த 623 என் நம்பர்தான். இல்லை, என் பெயர் அது. சிறைச்சாலை சாஸ்திரப்படி எனக்குத் தக்க சடங்களுக்கு இடையே இடப்பட்ட நாமகரணம். தொட்டிலுக்கு உங்களை அழைக்கவில்லை என்று கோபம் வேண்டாம். பழி வாங்க வேண்டுமானால் இனியும் 623 என்றே அழையுங்கள். இருவருக் கும் ஒருவேளை அது திருப்தி தரலாம். இந்த நம்பரைத்தான் என் உடை ஒவ்வொன்றும் முந்திரை வைத்துக் கொண்டிருக்கிறது.

நாளை இந்த உடைகளை என்னிடமிருந்து பிரித்து விடுவார்கள். எனக்கு முன் விடுதலை யானவர்களுக்கும் இதுதானே நேர்ந்தது? இந்த 623 என்னிடமிருந்து மறைந்துவிடும். சிறைச் சாமான் அறைக்குச் சரிபார்த்துப் போய்விடும். இவை ஒருவேளை வெளுக்கப் படலாம். நான் நினைக்கிறேன் அந்த வெளுப் பில் அந்த நம்பர் அழிந்துவிடுமா பூரமணமாக? இல்லை மங்கலாக இன்னும் இருக்குமா?

அதன் மங்கின வரைவுகள் இருந்தால் அவன் சிரமப்பட்டுக் கண்டுபிடித்துவிடுவான். சொல்ல மறந்து விட்டேனே. அவன்தான் என் வாரிசு. நான் பத்திரமாக விட்டுப்போன இந்த உடை களை என் சொத்தைத் தன்னுடையதாக அனுபவிக்கப் போகிறவன். அவன் என்ன நினைப் பான்? 623 எவனோ? என் அண்ணாத்தை என்று இவ்வளவுதான் நினைப்பானா? இல்லை. இன்னும் என்னவாவது நினைப்பானா? எப்படி வேண்டுமானாலும் நினைப்பை ஓடவிட்டுக் கொள்ளட்டும். அவனோடு தகராறு கொடுக்க நான் தான் இங்கே இருக்க மாட்டேனே.

அப்போது நான் சுதந்திர மனிதனாக இருப்பேன். எங்கேயாவது சிறை என்று அர்த்தம் தொனிக்க நிற்கும் இந்த நான்கு சுவர்களுக்கு வெளியே இருப்பேன். உட்புறம் இருப்பவர் களைப்பற்றி வெளியே இருப்பவன் அங்கிருந்து நினைக்க என்ன அவசியம் இருக்கிறது? ஒரு காலத்தில் உட்புறம் இருந்தவன்; அவ்வளவு தானே?

வாஸ்தவமாக நான் அதற்குமுன் கைதியாக இருந்ததில்லை. மனித சமூகம் செய்யும் ஒழுங்கீனங்களையெல்லாம் அடக்கிக்கொள்ள இந்த நிலப்பரப்பு விசாலமானதாக இருக்கிறது. யாரும் இந்தச் சுவர்களுக்கு உட்புறம் வராமல் தலைமறைவாகவே இருந்து காலம் தள்ளி விட்டுப் போய்விடலாம். துரதிருஷ்டசாலிகள் சிலரே, இல்லை, தங்கள் குற்றங்களைச் சாதுர்யமாக மறைக்கத் தெரியாதவர்களே உள்ளே வந்து விடுகிறார்கள். நானோ ராஜீயக் கைதி; பகிரங்கமாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டு உள்ளே வந்தவன். இது எனக்குப் புதிதாக இருந்தது. சப்பென்று இதுவரையில் கழிந்த நாட்களிலிருந்து இது ஒரு மாறுதல். நான் இதை அனுபவித்தேன். விரும்பி நாட்களைப் போக்கினதாகத்தான் எனக்கு நினைவு.

நாளை சட்டத்தின் உடும்புப்பிடி தளர்ந்து விடும். நான் தக்கபடி தண்டிக்கப்பட்டு விட்ட தாக அது திருப்திப்பட்டு இருக்கலாம். அல்லது அலக்ஷ¢யமாகக் கருதி வெளியே வீசி இருக்கலாம். எப்படியும் நான் வெளியே போய் விடுவேன் சுதந்திர மனிதனாக. இந்த இரும்புக் கம்பிகளைப் பிடித்து நின்று கொண்டிருப் பதற்குப் பதிலாக எங்கோ ஒரு ரெயில்வே ஸ்டேஷன் கதவின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு டிக்கெட் பரிசோதகரை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பேன். பிறகு என் மாடி ஜன்னல் கம்பிகள் வழியாக சாலையை பார்த்துக்கொண்டு இருப்பேன்.

இப்படியெல்லாம் நினைப்பில் ஆழ்ந்திருந்த பேது திடீரென ஞாபகம் வந்தது; சிறையின் கடைசி சூரியாஸ்தமனத்தைப் பார்க்கத் தவறி விட்டேன். வெளியே இருட்டுக் கும்மிவிட்டது. எத்தனை தடவைகள் அந்த இருட்டை மீறி ஊடுருவிப் பார்கக் கண்கள் முயன்றிருக்கின்றன! இருட்டு, தனி ஆத்மாவின் ஒரே நண்பன் ! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லா மல் முன்னேற முடியாது' என்பீர்கள். 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்து போகாமல் இருந்தால் போதும். அது எனக்குத் திருப்தி தரும்.

இன்று கடைசி நாள். அந்தக் கும்மிருட்டின் நடுவே புள்ளிகுத்திப் போகும் வெளிச்சம் அதோ தெரிகிறது. வார்டர் தன் கைவிளக்குடன் கடமையைச் செலுத்திக் கொண்டு போகிறான். இரண்டு மணி நேரம் இப்படி வளைய வந்து கொண்டிருக்க வேண்டும்' அவனை விடுவிக்க பதில் ஆள் வரும் வரையில். பின்பு மறுபடியும் தன் முறைக்கு தயாராக வேண்டும். அவன் வெளியே போகமுடியாது. நான் நாளை போய்விடுவேன். அவனோ முறையாக நடை போட்டு, குளிருக்காக மப்ளர் ஒன்றை முகத்தை மறைக்க, விளக்குடன் நாளையும் இப்படியே தான் இருப்பான். மறுநாள் அடுத்த நாள்... இப்படியே. அவன் விடுதலையை எதிர்பார்க்க வேண்டியவன் அல்ல.

என் நண்பர்கள் குறட்டை இதோ என் காதுகளில் விழுந்து கொண்டிருக்கிறது. என்ன நிம்மதி கனவில்கூட இந்த நினைவு உபத்திரவப் படுத்தாது. அவர்களுடைய நாட்கள், காலம் அதிகம் நீண்டது. என்னடையதைப் போல் குறுகினதல்ல. அல்பாயுசு அல்ல. ஆனாலும் நிச்சயம் ஒருநாள் அவர்களுக்கும் வரும் தங்கள் நாட்களும் குறுகிவிட்டதை அவர்கள் காண் பார்கள் அந்த நினைவு அவர்களைத் தொல்லைப் படுத்தும், இப்போதைய என் நிலையைப் போல்.

எப்படியும் இருள் வளர்ந்து கொண்டு வந்தது. சேகண்டியின் முதல் அடி நிசப்தத்தை உடைத்து எறிந்தது. நான் பொறுமையோடு எண்ண ஆரம்பித்தேன். பன்னிரண்டு அடித்து அது ஓய்ந்தது. நடுநிசியாகிவிட்டது. இன்னும் படுக்கையில் உட்காந்து கொண்டிருக் கிறேன்.நாளை இரவு பன்னிரண்டுக்கு இந்த ராக்ஷஸக்குரல், சேகண்டி சப்தம் என் காதைக் கிழித்து எறியாது. தூக்கத்தைக் கலைத்துப் படுக்கச் சொல்லாது. எங்கேயோ வேறு ஏதாவது சுவரில் மாட்டியிருக்கும் கடியாரம் ஒன்று, தூக்கத்தைக் கலைத்துவிடுமோ என்று உள்ளூறப் பயத்துடன் மிருதுவாக அடிக்கும். நான் அதை எங்கே கேட்கப்போகிறேன்? நான்தான் சுதந்திர மனிதனாக நிம்மதியோடு குறட்டை விட்டுக் கொண்டிருப்பேனே.


இவைகளெல்லாம் - இந்தப் படுக்கை, தட்டு, குவளை, நம்பர், இரும்புக்கிராதிகள், சுற்றுப்புறம், இந்த வாழ்க்கை நினைவுகள் எல்லாம் கடந்துபோனவையாகிவிடும். நான் சுதந்திர மனிதனாக ஆனதும் எத்தனையோ கடந்த நாட்கள், நினைவுகள் அவற்றோடு இவையும் போய் ஒட்டிக்கொள்ளும். அப்போ தைய நாட்களும் நினைவுகளும் முந்தி வந்து நிற்கும். ஆகவே இப்போதாவது இந்த நாட் களை நான் அழுத்தமாக நினைப்பூட்டிக் கொள்கிறேன்.

நான் தூங்கிவிட்டதாகத் தெரிந்தது. கண் விழித்த போது அதைக் கேட்க முடிந்தது - அந்த ஒற்றைக்குரலை! ஆழத்திலிருந்து கிளம்பி உச்சியில் போய் நிற்கும் அந்த அழைப்பு . பிரார்த்தனைக்கு! சுருட்டி மடக்கி எழுந்தேன். என் கடைசிப் பிரார்த்தனை அது ஒரு காலி இடம் இருந்தது. அதிலே போய் நின்றேன். அவர்களில் ஒருவனாக கடைசித் தடவையாக நின்றேன்.

அது முடிந்தது. கீழ்வானம் வெளுப்பதைக் கம்பிகளில் கைவைத்துப் பார்த்துக்கொண்டு நின்றேன். அவை குளிர்ந்து இருந்தன. ஒரு வேளை என் விரல்களின் உஷ்ணத்தை அனுபவித்து இருக்கக்கூடும். ஒருநாள் தானே? வெளுத்த கீழ்வானக் கருப்பையிலிருந்து சூரியன் ஒளியோடு பிறப்பதை நான் பார்க்க முடிந்த. ஏற்கனவே அதன் கிரணங்கள் என்னைச் சுதந்திர மனிதனென்று உணர்வதாக நான் உணர்ந்து விட்டேன். ஆனாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டுமே?

பிறகு வழக்கம்போல் வார்டரின் கைக் கொத்துச் சாவி பூட்டைத் திறந்துவிட்டது. தினசரி வேலைகள் ஆரம்பமாகி நிறைவேறிக் கொண்டிருந்தன. ஆனால் எல்லாம் என்னிடம் பேசினது 'கடைசி, கடைசி! என்பதுதான்.

இந்த உலகத்திலிருந்து கடைசி மனிதனாக வெளியேறுவதிலே எனக்கு ஆசைதான்; அது முடியாதே !

அப்புறம் வார்டர் வந்தான். பிளாக் வாசலில் நின்று பலக்க கத்தினான். '623' என்று இரண்டு மூன்று தரம் எனக்கு அழைப்பு வந்துவிட்டது. 'நான்தான்' என்று போய் நின்றேன்.' உன்னுடையதெல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வா' என்றான். ஆமாம், என்னுடைய தெல்லாந்தான் இன்னும். அப்படியே வாரிச் சுருட்டிக்கொண்டு அவன் பின் சென்றேன். அவை கணக்கிடப்பட்டன. ஒரு கைதி அவைகளைக் கட்டி மூலையில் எறிந்தான். இனி அவை என்னுடையவை அல்ல. அந்த சேதனப் பொருள்கள் பெருமைப்படலாம். பிறகு என்னு டையவற்றைக் கொடுத்தார்கள். நூற்று அறுபத்தாறு நாட்களுக்கு முன்பு அவை என்னுடையவனாக இருந்தன. இப்போது மறுபடியும் எனக்குச் சொந்தமாகிவிட்டன. நான் அணிந்து கொண்டேன். என் பக்கம் நின்ற சில குரல்கள் எனக்கு உருவம் வந்துவிட்டதாகக் கூறின. ஆமாம்; சுதந்திர மனிதனின் உருவமாக இருக்கும் அது.

அதன்பின் சம்பிரதாயச் சடங்குத் தொல் லைகள்; நான் கைதியாக இருந்ததை ஊர்ஜிதம் செய்யும் கடைசிச் சடங்குகள் - இல்லை, சுதந்திரமடைவதற்கான பூர்வாங்கச் சடங்குகள் என்று வைத்துக் கொண்டாலும் சரி. சம்பிரதாயச் சடங்குகள்! எங்கிருந்தாலும் மனிதன் இவை களிலிருந்து தப்பித்துப் போகமுடியாது.

எல்லாம் முடிந்துவிட்டது. நான் அந்தக் கதவை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தேன். அந்தக் கதவு ஒருநாள் என்னை விழுங்கிவிட்டது. இப்போது வெளியே கக்கிவிடப் போகிறது. பாவம், ஜீரணிக்கமுடியாத குடல்! நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விட்டேன். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது நடந்து கொண்ட விதம், 'உங்களைவிட்டுப் பிரிவதற்கு வருந்துகிறேன்' இதுதான் நான் சொன்னது. முட்டாள்! நான் சொல்லி இருக்கக்கூடாது. அளவுக்கு மீறின அசட்டு உணர்ச்சி ! வார்டர் என்னோடு வந்துகொண்டிருந்தான். கதவைத் திறந்து அனுப்பிவிட்டுத் திரும்பிப் போவான்; என் பிளாக்குக்கு அல்ல; அவன் பிளாக்குக்கு.

திடீரென்று அவன், 'போய்விட்டுத் திரும்பி வருவீர்களா?' என்று கேட்டான். நான் அதிர்ந்து போனேன். அவன் என்னை அறிந்து கொண்டு விட்டானா? பின் ஏன் இந்தக் கேள்வி? அவன் முழுதும் தெரிந்து கேட்கவில்லை. கொஞ்சம் தெரியும். நான் அப்போது வந்ததுபோல் மறுபடியும் வரலாம். இது சகஜமாகத் தோன்றி இருக்கக்கூடும். கேள்வி சின்னதுதான். ஆனால் பதில் சொல்லத் தயங்கினேன்.

பின்பு, 'எனக்கே தெரியாது. யார்தான் சொல்ல முடியும்?' என்றேன்.

அவன் திருப்தி அடைந்துவிட்டான். என்முன் நின்ற கதவு வழிவிட்டது. இது இரண்டாவது கதவு. சிறை என்ற அழுத்தமான தொனியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கம்மச் செய்யும் ஓசையோடு அது விரிந்து கொடுத்தது. நான் அதைத் தாண்டி வந்துவிட்டேன். சிறை என்ற தொனியை அழுத்தமாக்கும் ஓசையோடு அது குவிந்துகொண்டது. அந்த வார்டர், என் துணை ஆள், எங்கே?

அடுத்த கதவு, அதையும் நோக்கி நான் போய்க்கொண்டிருந்தேன். அதுதான் மூன்றா வது. கடைசி. அந்தக் கதவை 'இந்த ஆளை வெளியே விடு' என்று ஒரே முரட்டுக்குரல் அதிகாரம் செய்தது. ஒருஆளாக நான் உயர்ந்து விட்டேன். சிறை எல்லைக்குள்தான் இருந்தேன். ஆனாலும் ஆளாகிவிட்டேன். கைதியல்ல, எனக்கு மதிப்புக்கொடுத்த அந்தக் குரலுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அதைக் கவனித்தேன். அதே

குரல்தான்! எனக்குப் பின் அடைத்துக் கொண்ட கதவுக்கு உட்புறம், 'இந்தக் கைதியை கொண்டு போ, அங்கே!'' என்று வாய் ஓயாமல் கூவிய அதே குரல்தான், என்ன இருந்தாலும் மனிதன் அவ்வளவு கீழே போய்விடுகிறதில்லை.

கடைசிக் கதவும் திறக்கப்போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப்போட்டதும். எங்ன இருதயம் நிரம்பி இருந்தது நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் இல்லை, இல்லை, இரண்டும் சேர்ந்து. ஒரு கிரீச் சப்தம். அது ஒரு அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனியென்று எனக்குப்பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்துகொண்டது. எதையும் நன் சொல்லி விடக்கூடும்; அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்லமுடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை.

நான் வெளியே ஓர் எட்டு வைத்துவிட்டேன். என்னவோ திரும்பிப் பார்க்கத் தோன்றியது. பார்த்தேன். 'சுதந்திர மனுஷா, பிரஷ்டா! இனி இந்தப் பக்கம் திரும்பாதே' என்று ஓர் உறுமலோடு (நான் நினைத்தேன்) கதவு இறுகிக்கொண்டது.

அப்புறந்தான் நான் எதிரே பார்த்தேன். சுதந்திர மனிதனாக. எனக்குமுன் ஒரு சாலை நீண்டு போகிறது. பின்னால் கட்டிடங்கள், மனிதன் ஆக்கியவை. இன்னும் பின்னால் மரங்கள் கறுத்து அடர்ந்த கூட்டம். அதற்கும் தள்ளி, முழுதும் வளைந்து நின்ற மலைத் தொடர்ச்சி, பின்னும் தொலைவில் வானவெளி கீழிறங்கி எதிலோ கலந்து முயங்க ஒன்று படுகிறது. இவ்வளவுதானா?

இல்லை. அதற்கும் பின்னால்? கண்கள் வெறியோடு ஊடுருவிப் பார்த்தன.

அந்தக் கண்களில் என்ன விழுந்து கொண்டிருந்தது. தெளிவாக?

ஆமாம். இன்னும் ஒரு கதவு மூடி இருந்தது.

1 comment:

  1. நான் வாசித்த மிகச் சிறந்த கதைகளில் இதுவுமொன்று.

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.