Nov 28, 2009

ஏதாவது செய்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

athmanam

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

* Do Something என்ற குந்தர் க்ராஸ் கவிதையை முன்னோடியாகக் கொண்டு எழுதப்பட்டது. க்ராஸின் கவிதை அடிப்படையில் மிகவும் கிண்டலானது. ஆத்மாநாமின் கவிதை தீவிரத்தையே தொனியாகக் கொண்டது.

3 comments:

  1. ஏதாவது செய்! ஏதாவது செய்! என்று வெறுமனே கிளப்பிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. கிளம்பவும் வேண்டும்!

    தன்னிடமிருந்து ஆரம்பிக்காத எதுவுமே இப்படி மொட்டைக் கவிதையைத் தான் நிற்கும்!

    ReplyDelete
  2. மொட்டைக் கவிதையாய்த்தான் ....என்று இருக்க வேண்டும்.

    எதாவது செய் ஏதாவது செய் என்று அவசரப்படுத்தினதாலோ என்னவோ,தட்டச்சு செய்வதிலும் கூடப் பிழை!

    ReplyDelete
  3. இவ்வளவு அவலங்களுக்கும் பார்வையாளனாய் இருந்து கொண்டு செய் செய். அதை செய். இதை செய். என்றெல்லாம் வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒரு இடத்திலாவது நான் அல்லது என்னைப்போல் என்று தன்னிலை செய்தி இல்லவே இல்லை. விவரிப்பதும் வீரம் 'பேசுவதும்' தூண்டி விடுவதுமாகத்தன் இருக்கிறான். தள்ளி விட்டு நிற்கிறான். தள்ளி நிற்கிறான். இன்று பெரும்பாலானோர் இப்படித்தானே இருக்கிறார்கள். குறிப்பாக தலைவர்கள்.

    ரமேஷ் கல்யாண்

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.