Nov 21, 2009

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்





dancing-tigers-india-onam-festival-550jk082908பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம், இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது.

வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள், எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள், லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி, விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில்.

எனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வருடம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு, அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று, நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல், நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான்.

''என்னப்பா வேணும்?'' என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரெளசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி, எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள் முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து, புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது.

சிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச் சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

''என்னப்பா வேணும்?'' என்று சர்மா கேட்டார்.

''சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க'' என்று அவன் சொன்னான்.

''சனிக்கிழமை நான் ஊரிலேயே இல்லையே?'' என்று சர்மா சொன்னார்.

''காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க''

'', நீயா? வேலாயுதமில்லை?''

''இல்லீங்க, காதர் டகர் பாயிட் காதர்''

''நீ வந்திருந்தயா?''

ஆமாங்க, வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு''

''யாரு வெள்ளை?''

''வெள்ளைங்க. ஏஜண்ட் வெள்ளை.''

இப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு, வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான்.

''இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா?'' என்று சர்மா சொன்னார்.

''தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு.''

''யாரு சொன்னாரு''

''அதாங்க, வெள்ளை சாரு''

சர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.

''நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது.

அவன் ''சரிங்க'' என்றான். பிறகு குரல் சன்னமடைந்து, ''உடனே ஏதாவது பார்த்துக் கொடுத்தீங்கன்னா கூடத் தேவலாம் சார்'' என்றான்.

''ஷூட்டிங் ஒண்ணும் இன்னும் ஆரம்பிக்கலையேப்பா, கிரவுட் சீனெல்லாம் கடைசியிலேதான் எடுப்பாங்க''

''அதுக்கில்லீங்க. ஏதாவது ரோல் தாங்க''.

''உனக்கு என்ன ரோல்பா தர முடியும்? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர்கிட்டே எல்லா விவரமும் தந்துட்டுப்போ.

நான்தான் காஸ்டிங் அசிஸ்டெண்ட். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர், வயது, உயரம், முகவரி எல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும், விலாசதாரர் வீடு மாறிப் போய்விட்டார் என்ற. அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.

ஆனால் அவன் என் பக்கம் திரும்பவில்லை. இந்த மூவரில் சர்மாதான் மிக முக்கியமானவர் என்று அவன் தீர்மானமாக இருந்தான்.

''நீங்க பாத்துச் சொன்னாதாங்க ஏதாவது நடக்கும்'' என்றான்.

''உனக்கு நீஞ்சத் தெரியுமா?'' என்று சர்மா கேட்டார்.

''நீச்சலா?'' என்று அந்த ஆள் திரும்பக் கேட்டான். பிறகு, ''கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க'' என்றான்.

''கொஞ்சமெல்லாம் தெரிஞ்சாப் போறாது. ஒரு ஆளு மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது.''

''எனக்கு டகர் பாயிட் வரும்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க.''

''அதென்ன டகர் பாட்?''

''டகர் பாயிட்டுங்க. டகர். டகர் இல்லே?''

இப்போது எல்லாரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை.

அவன் சொன்னான். ''புலிங்க, புலி, புலி பாயிட்''

'', டைகர் ஃபைட்டா, டைகர் ஃபைட், நீ புலியோட சண்டை போடுவியா?''

''இல்லீங்க. புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க இல்லீங்களா?''

''புலி வேஷக்காரனா நீ? புலி வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா? புலி வேஷமா? சரி, சரி. வெள்ளை வரட்டும். ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்பறேன்.

''நான் ரொம்ப நல்லா டகர் பயிட் பண்ணுவேங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்''

''நிஜப்புலிக்கு நிஜப்புலியே கொண்டு வந்துவிடலாமே?''

''இல்லீங்க, நான் செய்யறது அசல் புலி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்கிறீங்களா?''

''ஆஹாம், வேண்டாம்பா, வேண்டாம்பா,''

''சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.''

''ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே?''

''நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.''

அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.

''பேஷ்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்த வண்ணம் இருந்தோம்.

அவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

''பேஷ்'' என்று சர்மா மீண்டும் சொன்னார்.

அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.

அவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ''ஐயோ'' என்றேன்.

அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், '''' என்று கத்திவிட்டோம்.

அது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.

அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.

''பத்திரம்பா, பத்திரம்பா'' என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது.

அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.

நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.

சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.

நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.

''நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா'' என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.

''நீ எங்கேயிருக்கே?'' என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ''ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க'' என்றான்.

''ஏன்?'' என்று சர்மா கேட்டார்.

''இல்லீங்க..... என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.

''எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்'' என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ''நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.

''நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அது தான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.

சர்மாவுக்கு ஏதோ தோன்றி, ''நீ இன்னிக்குச் சாப்பிட்டாயா?'' என்று கேட்டார்.

அவன் ''இல்லீங்க'' என்றான். அவன் அன்றில்லை. எவ்வளவோ நாட்களாகச் சாப்பிடவில்லை என்பது கூடக் கேட்கத் தேவையற்றதாயிருந்தது.

சர்மா அவர் ஜேபியில கையை விட்டார். நாங்களும் உடனே எங்கள் பைகளில் துளாவினோம். சில்லறை எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும். சர்மா, ''இந்தா இதைக் கொண்டுபோய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு'' என்றார்.

அவன் ''வேண்டாங்க'' என்றான்.

''என்ன வேண்டாம்? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே'' என்று சர்மா சொன்னார்.

''ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா'' என்று அழுதுகொண்டே அவன் சொன்னான்.

சர்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. ''கொடுத்த பணத்தை நீ எப்படீய்யா வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுவே? பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும்? ஒரு சல்லீன்னாலும் லஷ்மீய்யா, உனக்கு எங்கேய்யா லஷ்மீ வருவா? போ, வாங்கிக் கொண்டு முதல்லே சாப்பிடு'' என்று கத்தினார்.

அவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக் கொண்டான். சர்மா இதமாகச் சொன்னார். ''ரோல்லெல்லாம் என் கையிலே இல்லேப்பா. உனக்கு முடிஞ்சது நான் செய்யறேன். போ, முதல்லே வயத்துக்கு ஏதாவது போடு,'' பிறகு என்னைப் பார்த்து ''கொஞ்சம் இவனைக் காண்டீனுக்கு அழைச்சுண்டு போய் சாப்பிட வை'' என்றார். நான் உடனே எழுந்தேன்.

அவன் ''வேண்டாங்க, நான் போய்ய் சாப்பிடறேங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க'' என்றான். பிறகு மீண்டும் எங்களுக்குக் கும்பிடு போட்டுவிட்டு வெளியே போனான்.

நாங்கள் சிறிது நேரம் பேசாமல் இருந்தோம். சர்மா அவரையறியாமல் சிறிது உரக்கப் பேசிக் கொண்டார்.

''இவனுக்கு என்ன பண்ணறது? இங்கே இப்போ எடுக்கறது ராஜா ராணிக் கதைன்னா?''

ஆனால் இவர் வெறுமனே இருந்துவிடவில்லை. இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்றுவிட்டார். புலியாட்டமாகக் காண்பிக்கும்போது கதாநாயகனுக்குப் பதில் காதர் ''டூப்'' செய்யலாம். அவனுக்கு ஒரு நூறு ரூபாயாவது வாங்கித் தரலாம்.

நான் காதருக்குக் கடிதம் போட்டேன். நான்கு நாட்களில் வழக்கம் போல அக்கடிதம் திரும்பி வந்தது. விலாசதாரர் இல்லையென்று.

சர்மா வெள்ளையை அழைத்துக் கொண்டு காதரைத் தேடினார். நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக்கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை.

அவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாக காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.

நாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

நன்றி : காலமும் ஐந்து குழந்தைகளும் (1973)

11 comments:

  1. புலிக்கலைஞன் எனது பார்வையில்

    http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D

    - சிமுலேஷன்

    ReplyDelete
  2. காலச்சுழற்சியில் மதிப்பிழந்துபோன உண்மைக் கலைஞனின் வயிற்றைச்சுடும் (நெஞ்சைச்சுடும்) யதார்த்தம்.

    ReplyDelete
  3. வலி உணரச் செய்யும் கதை.இப்படி தொலைந்து போகிறவர்கள் எங்கு போய் கரை சேர்வார்கள் என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.காதரின் பாய்ச்சல் மனதிலிருந்து இறங்க நாளாகும்.

    ReplyDelete
  4. அழகான கதை. சமீபத்தில் ஜெயமோகனை அந்தப் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான் என்று அனுமானித்தபோது புதிய திறப்பு ஏற்பட்டது. மறுபடியும் வாசித்தேன்.

    அவன்தான் சற்று முன்பு புலியாக இருந்தவன்.

    ReplyDelete
  5. புலிக்கலைஞன் சிறுகதை வாசிப்பனுபவம் -

    http://agapuram.blogspot.com/2015/11/blog-post_15.html

    ReplyDelete
  6. நான் காஸ்டிங் அசிஸ்டெண்ட் ஆகி கதையில் பயணிக்கப்பட்டேன். சிறுகதையின் சின்னம் அசோகமித்திரன் ஐயா அவர்கள்...!க.மகேஷ், புதுவை

    ReplyDelete
  7. நான் காஸ்டிங் அசிஸ்டெண்டாக முழுவதும் பயணித்த கதை... தனது எழுத்துக்களில் காட்சிகளைக் காட்டிலும் பாதிப்புகளைக் கூட்டும் நமது அசோகமித்திரன் ஐயா அவர்கள் சிறுகதையின் சின்னம்...!

    ReplyDelete
  8. நான் காஸ்டிங் அசிஸ்டெண்ட் ஆகி கதையில் பயணிக்கப்பட்டேன். சிறுகதையின் சின்னம் அசோகமித்திரன் ஐயா அவர்கள்...!க.மகேஷ், புதுவை

    ReplyDelete
  9. அருமையான கதை "சற்றுமுன் புலியாக இருந்தான் "

    ReplyDelete
  10. அருமையான சிறுகதை. படம் பார்ப்பது போலிருந்தது. அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான், என்ற அசோகமித்திரனின் வரிகள் சூப்பர். Wow, what an irony!

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.