எஸ்.ராமகிருஷ்ணன் -கதாவிலாசம்
ஜி.நாகராஜன்
நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, அவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் தலையசைத்தாள்.
ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கடகடவெனக் குடித்தாள். தண்ணீர் அவளது கழுத்திலிருந்து வழிந்தோடியது. இப்போது முகத்தில் சிரிப்பு துளிர்க்கத் துவங்கியது. விற்பனைப் பெண்களுக்கு என்றே ஒரு சிரிப்பு இருக்கிறது. அல்லது, அவர்கள் அப்படி சிரிக்கப் பழக்கப் படுத்தப்படுகிறார்கள். அந்தச் சிரிப்பு ஒரு காகிதத்தில் வரையப்பட்ட சித்திரம் போல அளவாகவும், சரியாகத் தோன்றி சரியாக நிறுத்தப்படு வதாகவும் இருக்கும். அதைப் பார்க்கும்போது, எவ்வளவு மில்லி மீட்டர் வாயைத் திறந்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்றுகூட பழக்கிவிடுகிறார் களோ என்று சற்று ஆத்திரமாக வும் இருக்கும்.
ஆனால், என் முன் நிற்பவள் முகத்தில் சிரிப்பு, பாலில் ஆடை மிதந்துகொண்டு இருப்பது போல உதட்டோடு ஒட்டி இருந் தது. வீட்டில் யாருமில்லையோ என்பதைக் கண்டுகொண்டவள் போல, ‘ஊருக்குப் போயிருக் காங்களா சார்?’ என்று கேட்டாள். தலையாட்டினேன். அவள் பார்வையில் நாற்காலி யில் கிடந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்க வேண்டும். தலை யைக் கோதியபடியே, ‘அந்த புக்கை பார்க்கலாமா?’ என்று கேட்டாள்.
நான் அந்தப் புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத் தேன். அது ஆதவனின் காகித மலர்கள். அவள் மிக ஆசையுடன் அதைப் புரட்டிப் பார்த்தபடி, ‘எனக்கு தி.ஜானகிராமன் எழுத்து ரொம்பப் பிடிக்கும் சார். படிச்சிருக்கேன்’ என்றபடி, அடுத்து எங்கே போவது என்று யோசித்தாள். ஆச்சர்ய மாக இருந்தது. தி.ஜானகிராமன் படித்த விற்பனைப் பிரதிநிதி ஒருத்தியை முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவ ளிடம் ஏனோ பேச வேண்டும் போல இருந்தது. ‘உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்குமா?’ என்று கேட்டேன்.
இதை எதிர்பாராத அவள், குடத்து தண்ணீர் விளிம்புக்கு உள்ளாகவே ததும்பிக் கொள்வது போன்று உதட்டுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு சிரித்த படியே, ‘இது தொழில் சார்! எனக்கு டீ குடிக்கத்தான் பிடிக்கும்’ என்றாள். ‘ஆமாம், இந்த வெயிலில் டீ குடிப்பது இதமாகத்தான் இருக்கும்’ என்று நான் சொன்னதும், உதட்டில் கரை தட்டி நின்ற சிரிப்பு வெளிப்பட்டு விட்டது. Ôஇப்போ இல்லை சார்! சாயங்காலம் குடிப் பேன். ஆனா, வழியில எங்கா வது டீக்கடையில நின்னு டீ குடிக்கலாம்னா ஒரே தொல்லையா இருக்கு. பொம்பளை ரோட்ல நின்னு டீ குடிக்கக் கூடாதாம். ஓட்டல்ல போயி காபி சாப்பிடச் சொல்றாங்க. இவங்க அசிங்கமா ரோட்ல நின்னு ஒண்ணுக்குப் போறது தப்பில்லையாம். நாங்க டீ குடிச்சா தப்பாம்!Õ என்றாள்.
அந்தக் கோபம் உண்மையாக இருந்தது. உண்மை தானே! கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சார வேலி பெண்களை நுழையவிடா மல் எத்தனையோ இடங் களில் தடுத்துக்கொண்டு தானே இருக்கிறது! விற்ப னைப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்டாள்... Ôஉங்க டாய்லெட்டை நான்கொஞ் சம் யூஸ் பண்ணிக்கலாமா?Õ
‘தாராளமாக!’ என்றேன்.
ஐஸ்கிரீம் பேக்கை ஓர மாக வைத்துவிட்டு, உள்ளே சென்றாள். விளக்கிச் சொல்ல முடியாத ஆயிரம் பிரச்னைகளை சுமந்துகொண்டுதான் விற்பனைப் பிரதிநிதிகள் தெருக்களில் அலை கிறார்கள். நினைக்கை யில் மாநகர் மீது ஆத்திர மாக வந்தது. சுகாதாரமான கழிப்பறைகளைக்கூட உருவாக்கித் தர முடியாத இந்த நகருக்கு எதற்காக இத்தனை பேர் தினமும் வந்து குவிகிறார்கள்?
விற்பனை பிரதிநிதியின் முகத்தில் ஈரம் வழிந்தது. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்!’ என்றவள், Ôரெண்டு வருஷமா இந்த வேலை பாக்குறேன். வீடு வீடா நடந்து கால் தேய்ஞ்சு போச்சு சார்! அது கூடப் பரவாயில்லை... தனியா வர்ற பொண்ணு தானேனு பல்லை இளிக்கிறாங்க பாருங்க, அதைத்தான் சகிக்க முடியலை. அப்படியே பல்லைத் தட்டி உடைக்கலாமானு வருது. ஒரு நாள் வேலை செஞ்சா ஐம்பது ரூபா கிடைக்கும். அதுக்குத் தெரு நாய் போல அலையுறோம். இருபது வயசு ஆனாலும் சரி, அறுபது வயசு ஆனாலும் சரி... ஆம்பிளைப் புத்தி ஒண்ணுதான் சார். பொம்பளைன்னா வாயிலே தானா எச்சில் ஒழுகுது பாருங்க. சகிக்க முடியலைÕ என்றபடி தனது சுமைகளைத் தூக்கிக் கொண்டாள். ஏதோ நினைத்துக் கொண்டவள் போல, ‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க. மனசிலே தோணுச்சு... பேசிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெயிலில் இறங்கிப் போய்விட்டாள்.
அவள் போன நெடுநேரத்துக்கு அந்த உக்கிரம் அறையில் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. காமம்தான் இப்படி அலைக்கழிக்கிறதா... இல்லை, காம உணர்ச்சிகளின் போர்வையில் நமது மன வக்கிரங்கள் வெளிப் படுகின்றனவா?
மேற்கு மலைத் தொடரில் உள்ள ஆதிவாசிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கு ஆண்களும் பெண்களும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். பெண்களைக் கேலி செய்வதோ, அசிங்கமாக நடந்துகொள்வதோ கிடையாது. ஆண்களைவிடவும் பெண்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள். கர்ப்பிணிப் பெண் தலையில் ஒரு சுமையும், இடுப்பில் ஒரு சுமையுமாக சர்வ சாதாரணமாகப் பாறையில் ஏறி, நடந்து வந்துகொண்டு இருப்பாள். உண்மையில் காலத்தில் பின்தங்கிப் போனது நாமா, அவர்களா?
சரித்திரம் முழுவதும் பெண்களின் உடல்மீது படிந்த ரத்தக் கறையைத்தான் காண முடிகிறது. இந்தியப் பிரிவினை யின்போது கொல்லப்பட்ட வர்களை விடவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்தான் அதிகம். இதைவிடவும் மிகக் கொடுமையானது, அப்படி வன்கொடுமையால் பாலியல் உறவு கொள்ளப்பட்ட பெண்கள் கர்ப்பமாகி, அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசே முகாம்களை நடத்தியது. ஒரே நாளில் இருபதாயிரம் பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்கள். சூறையாடப்பட்ட நகரங்களைவிட சிதைக்கப்பட்ட பெண் உடல்கள் அதிகம். வன்முறையின் இலக்கு எப்போதுமே பெண் உடல்தான்!
எத்தனையோ இரவுகளில் காரில் பயணம் செய்யும்போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் புளிய மரங்களின் அடியில் நின்றபடி லாரி களின் முகப்பு வெளிச்சத்துக்கு கண் கூசி நிற்கும் பெண்களைக் கண்டிருக்கிறேன். வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை. அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது.
தான் வாழ வேண்டும் என்பதற்காக எவரையும் ஏமாற்றி, திருடி வாழத் தயங்காதவன் ஆண். தன் உடலில் ஒரு சிறிய வேனல் கொப்பளம் வந்தால்கூடக் கூச்சல் போடுகின்றவன். உடல் அவனுக்கு கேளிக்கையின் சாதனம். புல்தரையைக் கண்ட பசு மேய்வது போல, அவனுக்குப் பெண்கள் வெறும் இச்சையை தீர்க்கும் பொருள் மட்டும்தான்!
வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பெண்களை நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவே இல்லை. பெண்கள் மீதான ஒடுக்குமுறை யும் வன்முறையும் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு பெண்கள் மீது செலுத்தி வரும் வன்முறை குறித்து இன்று இலக்கியத்தில் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தக் கேள்விகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுப்பியவர் ஜி.நாகராஜன். இவர் தமிழின் விதிவிலக்கான எழுத்தாளர். மரபான கதை உலகை விட்டு விலகிய கலகக்குரல் இவருடையது. இவரது கதையுலகம் முழுவதும் பெண்களால் நிரம்பியது. இந்தப் பெண்களில் பெரும்பான்மையோர் பாலியல் தொழிலாளர்கள். ஒடுக்கப்பட்ட இந்தப் பெண்களின் வாழ்வை, அக நெருக்கடிகளை, மூச்சுத் திணறலை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்தவர் ஜி.நாகராஜன். இவரது ஆண்மை என்ற கதை மிகச் சிறப்பானது.
பாலியல் தொழில் புரியும் ஒரு பெண்ணைப் பற்றியது இக்கதை. அவள் தன் அப்பா மற்றும் தம்பியோடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றுகொண்டு ஆள் பிடிக்கிறாள். அவளிடம் காசு கொடுத்து இன்பம் பெறுவதற்காக வந்து சேர்கிறான் ஓர் இளைஞன். படுக்கை அறையில் அந்தப் பெண்ணிடம், எதற்காக அவள் அப்பாவும் தம்பியும் இது போன்ற வேலைக்கு துணை செய்வதற்கு நிற்கிறார்கள் என்று மனச் சங்கடத்துடன் கேட்கிறான்.
தன் அப்பா பிசினஸ் செய்து அதில் தோற்றுப் போய்விட்டதாகவும். அப்பாவின் நிலையை நினைத்து நினைத்து அம்மாவுக்குப் புத்தி பேதலித்துப் போனதாகவும், அன்றிலிருந்து அம்மாவைக் குணப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்றும், ‘வீட்டை மாமாதான் பராமரிக்கிறார். அவருக்கு நான் இப்படியரு தொழில் செய்வது தெரிந்தால் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்’ என்றும் சொல்கிறாள்.
குடும்பச் சுமையின் காரணமாக பெத்த பெண்ணைத் தகப்பனே கூட்டிக்கொடுப்பதை இளைஞனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான். ஏன் அவளோடு உறவுகொள்ளவில்லை என்று அவள் கேட்டதற்கு, தான் ஒரு பேடி, ஆண்மையற்றவன் என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறி விடுகிறான் என்பதோடு கதை முடிகிறது.
கதையை வாசித்து முடிக்கும்போது ஒரு கத்தி ஆழமாக உடலில் இறங்குவது போல வலியும் துக்கமும் ஏற்படுகின்றன. அதிநவீன கணிப்பொறியும், அணு ஆயுதங்களுமாக உலகம் தனது வெற்றியின் களிப்பை ஒருபக்கம் கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு பக்கம் துடைத்துப் போட்ட காகிதங்களைப் போல பெண்களைச் சர்வ அலட்சியமாக நடத்தும் சூழலும் இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள ஆறுகளுக்கெல் லாம் பெண் பெயரிட்டது ஆற்றைப் போலவே பெண்களும் எவரும் கவனிக்கப்படாமலும், ஆக்ரமிப்புக்கும் அத்துமீறலுக்கும் உள்ளதாவதால்தானோ என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது..! நாடே கொண்டாடும் சத்தியவான் அரிச்சந்திரன்கூட தன் மனைவியை ஏலம் போட்டு விற்றவன் தானே? ஜி.நாகராஜன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சிறுகதையுலகில் இவருக்கென்று தனியான இடம் உண்டு. பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது.
கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கிய நாகராஜன், போதையின் பிடியில் சிக்குண்டு நாற்பது வயதுக்குள்ளாகவே சுய அழிவைத் தேர்வு செய்துகொண்டவரானார். இவரது கதைகள் வாழ்வின் போலித்தனத்தை, இழிவை விமர்சனம் செய்கின்றன. நிழல் உலகமாக இருந்து வரும்பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு இவரது படைப்புகள் எங்கும் உக்கிரமாக வெளிப்படுகின்றன.
குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே போன்றவை இவரது முக்கிய படைப்புகள்!
மிகவும் நல்ல படைப்பு. மேற்கு மலைத் தொடரில் உள்ள ஆதிவாசிகள் பற்றி கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
ReplyDeleteஐயா, ஜி.நாகராஜன் அவர்களின் புத்தகங்கள் (சிறுகதைத் தொகுப்பு மற்றும் புதினம்) எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற விவரம் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். நான் பல நாட்களாகத் தேடிவருகிறேன்.
ReplyDeleteஜி.நாகராஜன் அவர்களின் புத்தகங்கள் விவரங்கள் இங்கே.
ReplyDeletehttps://www.nhm.in/shop/100-00-0000-065-8.html
https://www.nhm.in/shop/100-00-0000-065-7.html
உங்களை மாதிரி பதிப்பகம் பற்றிய விவரங்கள் தெரியாதவர்கள் DIAL FOR BOOKS சேவையையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.