எஸ்.ராமகிருஷ்ணன் -- கதாவிலாசம்
கி.ராஜநாராயணன்
இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நகையை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். மனைவியின் கழுத்தில் போட்டுப் பார்த்திருந்த நகையை, ஒரு காகிதத்தில் சுருட்டி சட்டைப் பையில் வைத்தபடி வங்கியின் முன்னால் காத்திருந்தபோது, அது வரை நகைக்கு இருந்த வசீகர மும் அழகும் காணாமல்போய் அது வெறும் ஜடப் பொருளாக இருந்தது.
நகையை வாங்கும்போது மிக அழகான வெல்வெட் பெட்டியில் வைத்துத் தந்தது நினைவில் இருக்கிறது. அது ஒரு ஊதா நிற வெல்வெட். தங்கச் சங்கிலி அதில் ஒய்யாரமாகப் படுத்திருந்தது. அடமானம் வைக்கப் போகும்போது எதற்காக இத்தனை ஒப்பனை என்று நினைத்தோ என்னவோ, அதை ஒரு செய்தித்தாளின்கிழிந்த காகிதத்தில் சுருட்டி மடித்துக் கையில் தந்திருந்தாள். விருப்பமான பெண்ணுக்கு நகையை வாங்கித் தருவது வாழ்வின் சந்தோஷமான ஒரு தருணம் என்றால், அதை கழற்றி வாங்குவது வெகு வேதனை யான தருணம்!
வேம்பு பூத்திருந்த காலமது. கூட்டுறவு வங்கியின் படிகள் முழுவதும் வேப்பம்பூக்கள் சொரிந்து கிடந்தன. நான் காலடியில் கிடக்கும் பூவை கையில் எடுத்துப் பார்க்கக்கூட முடியாத கூச்சத்துடன் காத்திருந்தேன். பையில் நகையுடன்காத்துக்கிடப்பது ஏனோகோவலனை நினைவுபடுத்தியது.
கண்ணகியிடமிருந்து சிலம்பு வேண்டும் என்று கேட்பதற்கு முன்னால், மதுரை நகரின் வெளியில் உள்ள ஆய்ச்சியர் குடியிருப்பில், நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணகி சமைத்த உணவை ருசித்துச் சாப்பிடுகிறான். மனைவியின் அருமை அப்போதுதான் புரிகிறது. கடந்த காலத்தில் கோவலன் தவறு செய்துவிட்டதாக கண்ணகி நினைவு கூர்கிறாள். கோவலனும் நெகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறான். பிறகு, தயக்கத்துடன் தாழ்ந்த குரலில் அவளது காற் சிலம்பை கழற்றி வாங்கிக் கொண்டு செல்கிறான். காப்பியக் கதாநாயகர் களே எச்சில் விழுங்க முடியாத துக்கத்துடன் மனைவியிடம் இருந்து நகையைக் கழற்றி வாங்கும் நிலையில் இருக்கும்போது, சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தன. Ôநகையைப் பரிசோதனை செய்துபார்க்கும் பத்தர் வரும் வரை காத்துக் கொண்டு இருங்கள்Õ என்று சொன்னார்கள். என்னைப் போலவே அறுபது வயதான நபர் ஒருவர், பச்சை சேலை கட்டிய, எண்ணெய்ப் பசையில்லாத தலைகொண்ட நாற்பது வயது கிராமத்துப் பெண்மணி ஒருவர், பனியன் தெரிய சட்டை போட்டிருந்த வியாபாரி ஒருவர் என யாவரும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம்.
எதிரில் இருந்த போர்டில் நகையை மீட்க முடியாமல்போய், ஏலத்துக்கு விடப்போகும் நபர்களின் பட்டியலும் முகவரியும், கட்ட வேண்டிய தொகையும் இருந்தன. நான் அந்தப் பெயர்களை ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வந்தேன். சொற்பத் தொகை முந்நூறு ரூபாய்க்குகூட அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது. அதுகூட மீட்க முடியாமல் ஏலத்துக்கு போகப் போகிறது. நகையை வைத்த நபரின் பெயர் சந்தானலட்சுமி என்றிருந்தது. முகம் காணாத சந்தானலட்சுமியைப் பற்றியும், அவளது வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றியும் மனம் தானாக கற்பனையைக் கிளைவிடத் துவங்கியிருந்தது.
பத்தர் ஒரு பைக்கில் வந்து இறங்கினார். பாரியான உடம்பு. நெற்றியில் பெரிதாக குங்குமம் வைத்திருந்தார். இவரை நகைக்கடை பஜாரில் பார்த்திருக்கிறேன். அங்கிருந்த யாவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்தியபடி உள்ளே நுழைந்தார். என் முன்னே நின்றிருந்த வயதானவர், தனது கையில் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து சிறியதும் பெரியதுமான நகைகளை அங்கிருந்த மேஜையில் கொட்டினார். நாலைந்து மோதிரங்கள், இரண்டு ஜோடி கம்மல்கள், மூன்று வளையல்கள், ஒரு கம்பி செயின். ஒரு ரெட்டை வடம் செயின்... பத்தர் ஒவ்வொரு நகையாக எடுத்துப் பார்த்து உரசிக்கொண்டு இருந்தார்.
தனது மகனுக்கு மலேஷியாவில் வேலை கிடைத்துள்ளதாகவும், அங்கே போவதற்குப் பணம் புரட்ட வேண்டும் என்று வீட்டில் தனது மனைவி, மருமகள் இருவரது நகைகளையும் அடமானத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் வயதானவர் சொன்னார். அதில் சில நகைகளை அடமானம் வைக்க முடியாது என்று விலக்கிவைத்த பத்தர், மற்றவற்றை எடை போட்டுக்கொண்டு இருந்தபோது தராசுக்கு இரண்டு தட்டுகள் மட்டுமில்லாமல் மூன்றாவது தட்டாக எதிரே இருப்பவரின் மனதும் ஆடிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
நகையை அடமானம் வைப்பது என்ற பேச்சு இவர்கள் வீட்டில் எப்போது துவங்கியிருக்கும்..? ஒரு முணுமுணுப்புகூட இல்லாமல் இந்த நகைகளை கழற்றிக் கொடுத்திருப் பார்களா? ஏன்... மூன்று வளையல்கள் இருக்கின்றன. மருமகள் ஒரு வளையலாவது இருக்கட்டும் என்று கழற்றித் தர மறுத்துவிட்டாளா? மலேஷியா போகிறவன் தனது வேலைக்குப் பின்னால் இத்தனை பேரின் இழப்புகள் இருப்பதை உணர்ந்திருப் பானா? இந்த நகைகள் மீட்கப்பட்டுவிடுமா? எனக்குத் தொடர்பில்லாத, ஆனால், என்னால் தவிர்க்க இயலாதபடி மனம் கேள்வி களைப் பின்னிக்கொண்டே இருந்தது.
பத்தர் எல்லாவற்றையும் எடை போட்டு சீட்டைக் கொடுத்தபோது, அது ஐம்பதாயிரத்துக்கும் குறைவாகவே வந்தது. வயதானவர் தயங்கித் தயங்கி தனது சட்டைப் பையிலிருந்து குழந்தைகள் கழுத்தில் போடும் ஒரு முருகன் டாலரை எடுத்து நீட்டி, அது தனது நாலு வயதுப் பேத்தி லாவண்யா வின் கழுத்தில் கிடந்தது என்றும், அவள் தூங்கிக்கொண்டு இருந்தபோது இரவிலே கழற்றி எடுத்துவிட்டதாகவும், அதை அடமானம் வைக்காமலே சமாளித்துவிடலாம் என்று நினைத்ததாகவும் சொன்னார்.
பத்தர் அந்த நகையையும் எடை போட்டுப் பார்த்தபடி சரியாக ஐம்பதாயிரம் ரூபாய் கணக்கு வருகிறது என்றார்.
வயதானவர் மௌனமாக எடைத் தட்டைப் பார்த்தார். அது காலியாக ஆடிக்கொண்டே இருந்தது. சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளேயிருந்த மற்றொரு வங்கி ஊழியரின் கையெழுத்தைப் பெறுவதற்கு நடந்துபோனார். அடுத்து நின்றிருந்த நான் கூச்சத்துடன் எனது சட்டைப் பையிலிருந்த நகையை வெளியே எடுத்து அவரிடம் நீட்டினேன். என்னைக் கவனிக்காமல் பத்தர் சிறிய சுருக்குப் பை ஒன்றில் வெற்றிலைகளைத் திணிப்பது போல் அடமானத்துக்குப் பெற்றிருந்த நகைகளைத் திணித்தார்.
எனக்குப் பின்னால் நின்றிருந்த கிராமத்துப் பெண்மணி, நான் அடமானம் வைக்கும் நகையின் மாடலை ஆசையோடு பார்த்தாள். பத்தர் தந்த சீட்டை எடுத்துக்கொண்டு நான் உள்ளே நுழைந்த போது, அந்த வயதான நபர் அதே மஞ்சள் பையில் பத்து ரூபாய், இருபது ரூபாய் கட்டுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்.
வாசலில் ஒரு பைக்கில் அவரது பையனும், பேத்தியும் காத்திருந்தார்கள். பையன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. சிறுமி மட்டும் அந்தப் பெரியவரைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்தபடி Ôபோ... தாத்தா! நான் யார் கூடயும் பேச மாட்டேன். அம்மா, என் டாலர் செயினை கழட்டிவெச்சிட்டுத் தர மாட்டேங்குறா... கேட்டா திட்டுறாÕ என்று மழலைக் குரலில் சொன்னாள். தாத்தா அவளைத் தூக்கிக்கொண்டு “உனக்கு நான் ஜிலேபி வாங்கித் தர்றேண்டா கண்ணு!” என்றார்.
அந்தச் சிறுமி உதிர்ந்து கிடந்த வேப்பம்பூக்களை ஆசைஆசையாகக் கை நிறைய அள்ளினாள். பார்த்துக்கொண்டு இருந்தபோதே ஒரு வேப்பம் பூவை காதில் வைத்து, ‘கம்மல் எப்படியிருக்கு தாத்தா?’ என்று கேட்டாள். தாத்தாவோ, அவளது அப்பாவோ பதில் சொல்லவில்லை. என்னை நிமிர்ந்து பார்த்துவிடுவாளோ என்று தயக்கத்துடன் நானும் தலை குனிந்துகொண்டேன். அந்தச் சிறுமி தானாகவே, ‘நல்லாயிருக்கு!’ என்று சொல்லியபடி பைக்கில் ஏறிக்கொண்டாள். அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.
வீடு திரும்பிய என்னைப் பார்த்து, ‘பத்து நிமிஷத்து வேலை. இதுக்குப் போய் எதுக்கு இத்தனை பதற்றம்?’ என்று கேலி செய்தாள் மனைவி. அந்தக் கோடை முழுவதும் வேப்பம்பூக்களைப் பார்ப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகப் படுத்துவதாக இருந்தது.
ராட்சச ராட்டினத்தில் பெட்டிகள் சரேலென்று கீழே இறங்கும்போது அடிவயிற்றில் ஏற்படும் பதைப்பு போல, வாழ்க்கையின் சுழற்சி நம்மை நிலைகுலைக்கின்றது. ஆனாலும், மேலே போவதும் கீழே இறங்குவதும் தானே ராட்டினம்! நாள்பட யாவும் பழகிப் போய்விடுகின்றன. நகரத்துக்கு வந்த பிறகு நண்பர்கள் சர்வ சாதாரணமாக கையில் உள்ள மோதிரத்தை அடமானம் வைப்பதையும், பைக்கை அடமானம் வைத்துப் பணம் புரட்டுவதையும், நாலைந்து கிரெடிட் கார்டுகளும் கண்ட பிறகு, சாலையோரத்தில் தன் உடம்பில் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் நபரைப் போலத்தான் வாழ்வு நம் யாவரையும் வைத்திருப்பது புரிந்தது.
இந்த நிகழ்வுக்குப் பிறகிலிருந்து, தினசரி பேப்பர்களில் வரும் ஏல விளம்பரங்களைக் காணும்போதெல்லாம்அந்த நபர்கள் அனைவரும் எனக்குமிக நெருக்க மானவர்கள் போல் உணர்வேன். நீங்களும், நானும், முகம் தெரியாத யாவரும் அடமானம் வைக்கும் தராசுத் தட்டின் முள்ளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த வர்கள்தானே என்று பெயரில்லாத பந்தம் ஒன்று உருவாகிவிடுகிறது.
கதவு என்று ஒரு கதை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் சரிவைச் சொல்லும் அற்புதமான கதை. எழுதியவர் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. மண்ணின் வாசனையும் ருசியும் கொண்ட எழுத்து இவருடையது. நவீன தமிழ் இலக்கியத்துக்கு கரிசல் பூமியை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவரது கதையுலகம் அதுவரை தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிராத அசல் கிராமத்து முகங்களைப் பதிவு செய்தது. நம் காலத்தின் மூத்த கதை சொல்லியான கி.ராஜநாராயணன் மக்கள் மொழியிலே இலக்கியம் படைப்பவர்.
”கதவு” கதை வெளியாகி நாற்பது வருடங்களுக்கும் மேலாக கடந்துவிட்டது. ஆனாலும், இன்று வாசிக்கும்போதும் அதன் ஈரம் அப்படியே இருக்கிறது. அக்கதை எட்டு வயது லட்சுமியும் அவளது தம்பி சீனிவாசன் என்ற சிறுவனும் வாசற் கதவில் ஏறிக்கொண்டு கதவாட்டம் ஆடுவதில் துவங்குகிறது.
பகல் நேரங்களில் அம்மா கைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி வீட்டில் விட்டு விட்டுப் போன பிறகு, அவர்கள் கதவில் ஏறிக் கொண்டு, அதை ஒரு பஸ் போலக் கற்பனை செய்து கொண்டு முன்னும் பின்னுமாக ஆடி விளை யாடுவது ஒரு வாடிக்கை. ஒரு நாள் லட்சுமி எங்கிருந்தோ கொண்டுவந்து ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை கதவில் ஒட்டி அழகு பார்க்கிறாள்.
ஒரு நாள் தீர்வை கட்டத் தவறியதால் கிராமத்து தலையாரி நாலு ஆட்களோடு வந்து, வீட்டு கதவைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். அதை லட்சுமியால் தாங்க முடியவில்லை. அவள் கரைந்துகொண்டு இருக்கிறாள். கதவில்லாத வீட்டைக் கண்டதும் லட்சுமியின் அம்மாவுக்கு அடிவயிற்றில் இருந்து வேதனை எழும்புகிறது. அவள் குழந்தைகள் பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் அலறி அழுகிறாள்.
கூலி வேலைக்காக மணிமுத்தாறு போயிருந்த லட்சுமியின் அப்பா, பல நாட்களாக வீடு திரும்பவேயில்லை. கார்த்திகை மாசத்துக் குளிரில் கதவில்லாத வீட்டில் வாடைக்காற்று ஊசி குத்துவது போல அவர்கள் உடம்பைத் துளைக்கிறது. குளிர் தாங்க முடியாமல் கைக்குழந்தை இறந்துபோகிறது.
ஒரு நாள் சீனிவாசன் தங்கள் வீட்டுக் கதவு, சாவடியின் பக்கத்தில் நிராதரவாகக் கிடப்பதைக்கண்டு அக்காவிடம் ஓடி வந்து சொல்கிறான். அவர்கள் ஓடி அதை ஆசையோடு தொட்டுத் தடவுகிறார்கள். அதில் பற்றியிருந்த கரையானை லட்சுமி தனது பாவாடையால் துடைக்கிறாள். இந்தச் சந்தோஷத்தில் சீனிவாசனைக் கட்டிக்கொண்டு முத்தமிடுகிறாள். இருவரின் கைகளும்பலமாக கதவைப் பிடித்துக்கொண்டு இருந்தன என்பதோடு கதை முடிகிறது.
திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்தபோது, சிவன் வேலை செய்யவில்லை என்று அவரது முதுகில் அடி கொடுக்கிறார்கள். அந்த அடி ஊரில் இருந்த யாவரின் முதுகிலும் விழுந்தது என்று வருகிறது.
புராணம் சொல்வது நிஜமோ, பொய்யோ தெரியாது. ஆனால், வாழ்வில் நமது அவமானமும் வேதனைகளும் நமது குழந்தைகளின் முதுகிலும் அடியாக விழுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சிவனும் முதுகில்அடிபட்டவர் என்பதால்தானோ என்னவோ, அவர் மீதும் நெருக்கமான அன்பு வருகிறது. என்ன செய்வது... மண்புழுவுக்கு இரண்டு தலைகள் இருந்தும் அது மண்ணில்தான் ஊர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்வின் இயல்பே இதுதான் போலும்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும்ருசிமிக்கதும் இவரது எழுத்து. 1958-ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை களையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ரா. என்று நண்பர்களால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக வேலை செய்த பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கோபல்ல கிராமம், கிடை, வேஷ்டி, கதவு, கோபல்லபுரத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, பிஞ்சுகள், அந்தமான் நாயக்கர் போன்றவை இவரது முக்கிய படைப்புகள். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, எண்பது வயதான கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.
வலைத்தளத்தில் கரிசல் காட்டு பிதாமகன் நன்றி
ReplyDelete