Dec 30, 2009

மீதமிருக்கும் சொற்கள்!-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்  iகதாவிலாசம்
அசோகமித்திரன்


‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் திருடர்களாக நடித்தவர்களில் எவரையாவது நினைவிருக்கிறதா? ‘கர்ணன்’ படத்தில் யுத்தக் காட்சியில் வரும் தேரோட்டிகளில் எவர் முகமா வது ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் இதற்கான பதிலை யோசித்துக்கொண்டு இருக்கும் போது, நான் கடந்த காலத்தின் சாலையில் சில மைல் பின்னால் போய்விட்டு வந்துவிடுகிறேன்.

3661536473_c4cb3d4b2c_m

தேனாம்பேட்டையின் குறுகலான ஒரு பிள்ளையார் கோயில் சந்தில் இருக்கிறது ஒரு மரக் கடை. அந்தக் கடைக்கு யார் உரிமையாளர் என்று நான் பார்த்ததே கிடையாது. அவர் எங்கோ மார்த்தாண்டத்தில் இருக்கிறார் என்பார்கள். எப்போதாவது மரக் கடையில் ஊதுவத்தியும் பூமாலைகளுமாக சாமி படங்கள் புத்துணர்ச்சி பெறும் நாளில், அவர் ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரியும். கடையைக் கவனித்துக் கொள்வதற்கு கேசவன் என்ற நண்பன் பொறுப்பாக இருந்தான்.

கேசவன் கடையை விட்டு வெளியே போவதேயில்லை. ஆனால், அவனுக்கு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள  வேண்டும் என்ற ஆசை அதிகமாயிருந்தது. இதற்காக சினிமா, இலக்கியம், அரசியல் என்று சகல தரப்பு நண்பர்களையும் இரவு நேரத்தில் கடைக்கு வரச் சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்து, கைச்செலவுக்குக் காசும் கொடுத்துப் பேசிக்கொண்டு இருப்பான். பேச்சு பல நேரங்களில் பின்னிரவைக் கடந்து சென்றுவிடும்.
அந்தக் கடையில் நடராசன் என்ற வயதானவர் வேலைக்கு இருந்தார். வயது அறுபதைக் கடந்திருக்கும். ஒடிசலான தோற்றம். பழுப்படைந்து போன வேஷ்டியை உடுத்தியிருப்பார். டீ வாங்கி வருவதற்கும் சிகரெட், பழம் வாங்கி வருவதற்கும் அரை மணிக்கொரு தரம் நடந்துகொண்டு இருப்பார். இரவு எத்தனை மணியானாலும் தனது பழைய சைக்கிளில் ஏறிச் சென்று எங்கிருந்தாவது சைனா டீ வாங்கிக்கொண்டு வருவார். மற்றபடி அவருக்கென்று மரக் கடையில் ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் உட்கார்ந்தபடி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பார். யாரிடமும் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. எப்போதாவது சில நேரம் மறைவாக அவர் சிகரெட் புகைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு இரவு கேசவனின் கடையில் பேச்சு நீண்டு, மணி மூன்றாகிவிட்டது. டீ வாங்குவதற்குப் போன நடராசன் திரும்பி வந்தால் டீயைக் குடித்துவிட்டு சபை கலைந்துவிடலாம் என்று யாவரும் காத்துக் கொண்டு இருந்தோம். நேரம் கடந்துகொண்டு இருந்ததே தவிர, அவர் வரவே இல்லை. ஏமாற்றத் துடன் கேசவன் மோசமான கொச்சை வார்த்தைகளால் நடராசனைத் திட்டியபடி கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நானும் இன்னொரு நண்பனும் ஆட்டோ கிடைக்காமல் நடந்தே திருவல்லிக்கேணி அறைக்குப் போவது என்று நடக்கத் துவங்கினோம். ராயப்பேட்டையை நெருங்கும்போது மணிக்கூண்டு பக்கமிருந்து சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார் நடராசன். அவரைப் பார்த்ததும் நண்பன் டீ குடிக்கும் ஆசையில் ‘நடராசன்!’ என்று கத்திக் கூப்பிட்டான். அவர் கவனிக்காதது போல சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தார். ‘ஏய் நடராசன்!’ என்று அவன் கத்தினான். அவர் வேகவேகமாக அருகில் வந்து நின்று கோபத்துடன், ÔÔபோடா மசிரு... நடராசன் என்ன உன் வீட்ல சாணி அள்ளிப் போடுற வேலையா செஞ்சுக்கிட்டு இருக்கான். உங்களுக்கு எல்லாம் என்னடா தெரியும். நானாவது உழைச்சுச் சாப்பிடுறேன்... நீங்க எல்லாம் நக்கித் தாண்டா பிழைக்குறீங்க!ÕÕ என்று ஆவேசமாக சைக்கிளில் மாட்டியிருந்த ஃபிளாஸ்கை எடுத்து சாலையில் வீசியெறிந்தார். அதிர்ச்சியில் நண்பனது முகம் வெளிறிப்போனது. அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை... சைக்கிளை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டைக்குப் போய்விட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கேசவ னின் கடைக்குப் போனபோது எப்போதும் போல நடராசன் அதே படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் சலனமேயில்லை. நானும் நடந்த எதை யும் காட்டிக்கொள்ளவே இல்லை.

அன்றிரவு நான் அறைக்குத் திரும்பும் போது நடராசனும் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு என் கூடவே வந்தார். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவேயில்லை.
அறையை நெருங்கும்போது அவர் தணிவான குரலில், ‘‘தெரியாமப் பேசிட் டேன் தம்பி. மன்னிச்சிருங்க. அன்னிக்கு டீ வாங்கப் போன இடத்திலே சந்தேகப்பட்டு, என்னை போலீஸ் பிடிச்சு நாலஞ்சு அடி அடிச்சு, ‘நீ யார்டா... என்ன வேலை செய்றே?’னு கேட்டாங்க. என்ன சொல்றதுனு தெரியலை. பேசாம நின்னுட்டே இருந்தேன். ரெண்டு மணி நேரம் ஜாம் பஜார் ஸ்டேஷன்ல உட்கார வெச்சுட் டாங்க. அவமானமாப் போச்சு. அந்தக் கோபத்துலதான் உங்களைத் தப்பா பேசிட்டேன்’’ என்றார்.

அப்போதுதான் உறைத்தது. நடராசன் எந்த ஊர், எதற்காக இந்த வேலை செய்கிறார் என்று இத்தனை நாள் எதையும் கேட்டதே இல்லையே. இருவரும் மேன்ஷன் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டோம். ‘‘உங்களுக்கு எந்த ஊரு? எப்போ மெட்ராஸ§க்கு வந்தீங்க?’’ என்று நடராசனைக் கேட்டேன். அவர் தலை கவிழ்ந்தபடியே சொன்னார்... ‘‘சார்! நீங்க ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ பார்த்து இருக்கீங்களா? ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் வரும் திருடங்க யாரையாச்சும் ஞாபகமிருக்கா?’’

எதற்குக் கேட்கிறார் என்று புரியா மல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் குரல் கரகரத்தது... ‘‘நாப்பத்து மூணு படத்துல நடிச்சிருக்கேன் சார். எல்லாம் துணை வேஷம். குதிரையில வர்ற சேவகன், ஜெயில்ல கிடக்கிற கைதி. குதிரை வண்டிக்காரன். இப்படி இருபது வருசம் கோடம்பாக்கத்தைச் சுத்திட்டே இருந்துட்டேன். ஒரு படத்துலகூட ஒரு வார்த்தை பேசுனது கிடையாது.

ஊமைப்படம் காலம் முடிஞ்சு எப்பவோ பேசும் படமா மாறிருச்சு. ஆனா, என்னை மாதிரி ஊமையா, படத்துல ஒரு வசனம்கூடப் பேசாம நடிச்சுக்கிட்டு இருக்கிறவங்க நூத்துக் கணக்கிலே இருக்கிறோம். ‘வள்ளி திருமணம்’ நாடகத்திலே வேலன், வேடன், விருத்தன்னு மூணு வேஷம் கட்டிப் பாடினவன் சார். ‘ராஜபார்ட் நடராசன்’னு சொன்னா அவ்வளவு பேரு.

சினிமாவுல போனா கிட்டப்பா, மகாலிங்கம் மாதிரி வந்திரலாம்னு சொன்னாங்க. என் நேரம்... படத்துல ஒரு வார்த்தை பேசுறதுக்கே சான்ஸ் கிடைக்காமப் போயிருச்சு. நடிக்க வந்த இடத்துல எப்படியோ பழக்கமாகி, டான்ஸ் ட்ரூப்ல உள்ள சரோஜானு ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன். குடும்பமும் சரிப்படலே. வாலிபத்துலே பாட்டு பாட்டுனு பெத்தவங்களைக் கூட கவனிக்காம அலைஞ்சேன். இன்னிக் குப் பாருங்க... கிழிஞ்ச காகிதத்துக்கு இருக்கிற மதிப்பு கூட எனக்குக் கிடையாது!’’

இருவரும் மௌனமாக உட்கார்ந் தோம். நட்சத்திரம் ஒன்று வானில் எரிந்து மறைந்தது.
‘‘வள்ளி திருமணப் பாட்டு இப்பவும் ஞாபகமிருக்கா?’’ என்று கேட்டேன். கவிழ்ந்த தலை நிமிர்ந்து கொண்டது. ‘மேயாத மான்... புள்ளி மேவாத மான்’ என்ற பாடலை அவர் தனது நடுங்கும் குரலில் பாடத் துவங்கினார். பாட்டு பாதியில் உடைந்து சிதறியது. அவர் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். பிறகு, வேஷ்டியால் முகத்தைத் துடைத்த படி எழுந்து தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்.

நடராசனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முதல் முறையாக ‘நடராச அண்ணே!’ என்று கூப்பிட்டேன். அவர் சைக்கிளை உருட்டியபடியே, ‘‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க தம்பி!’’ என்று சொல்லியபடி இருளில் போய் மறைந்தார்.

காலம், ஆசைகளைக் கரையானைப் போல் தின்று தீர்த்துவிடுகிறது. ஜெயிக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்து கிடக்கின்றன. விருப்பம் தோற்றுப் போகும் போது கிடைப்பதைப் பற்றிக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார்கள். ஆனால், அடிமனதில் ஒரு பூரானைப் போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன. என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப் படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம் இருக்கிறது.
தமிழ் நாவல்களிலே சினிமா உலகின் நிஜத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரேயரு நாவல் மட்டுமே உள்ளது. அது அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.

தமிழ் சினிமாவின் உண்மையான வரலாறு அந்த நாவலில்தான் உள்ளது. சினிமாவில் சந்தர்ப்பங்கள் நெருங்கிய மனிதர்களைக் கூட எப்படி எல்லாம் ஏமாற்றச் செய்கின்றன என்பதையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் எத்தனை பேரின் உழைப்பும் வாழ்க்கையும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த நாவல் முழுமையாக வெளிப்படுத்துகிறது.

சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது. நானே இருபது முறைக்கும் மேலாகப் படித்திருக்கிறேன். நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் நண்பர்கள் பலருக்கும் படிக்கத் தந்திருக்கிறேன். படித்து முடித்த பலரும் பெருமூச்சுடன், வார்த்தைகள் அற்ற நிலையில் தலை கவிழ்ந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன்.

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர். தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங் களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.

இவரது சிறுகதைகள் மொத்தமாகத் தொகுக்கப் பட்டு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தற்போது இவர் எழுதிய கட்டுரைகள் இரண்டாயிரம் பக்க அளவில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், போன்றவை இவரது முக்கிய நாவல்கள்.
அந்தக் கதை ஒரு அனுபவம். கண்ணாடிக் கோப்பை கை தவறி விழும்போது மனது கொள்ளும் பதைபதைப்பு போல உணர்ச்சி நிலை. கதையின் பிரதான பாத்திரம் காதர். அவ னது பாஷையில் சொல்வதானால் ‘டகர்பாயிட்’ காதர். அதாவது (டைகர் ஃபைட்) புலிச்சண்டை போடும் காதர்.

புலி வேஷம் போடுவதில் அவன் சாமர்த்தியசாலி. ஒரு நாள் சினிமா கம்பெனி ஒன்றுக்கு நடிப்பதற்கு வேஷம் கேட்டுச் செல்கிறான் காதர். வேஷம் இல்லை என்று துரத்தப் படுகிறான்.

அவனோ தனது திறமையைப் பார்த்துவிட்டு வேஷம் தருமாறு சொல்லியபடி கையோடு கொண்டு வந்திருந்த புலித் தலை முகமூடியை மாட்டிக்கொண்டு சட்டென நான்கு கால் பாய்ச்சலில் நாற்காலி மீது பாய்ந்து தாவி புலி போல குலை நடுங்கும் முறையில் கர்ஜனை செய்கிறான். நிஜப் புலியே நேரில் வந்தது போலிருக்கிறது. அவன் உடலில் புலியின் கோடுகள் தோன்றி மறைவது போலிருக்கிறது.

மேஜை, நாற்காலி என தாவித் தாவி, கடைசியில் மின்சார விசிறி உயரத்துக்கு எகிறி தரையில் விழுகிறான். ஆவேசம் அடங்கி யது போல அவன் உடல் தளர் கிறது. புலி வேஷம் கலைந்து, ‘எனக்கு ஏதாவது ரோல் நடிக்க வாய்ப்பு தருவீர்களா?’ என்று மன்றாடும் மனிதனின் உருவமாக மாறுகிறது.

சினிமா கம்பெனிக்காரர்களுக்கு அவனை என்ன செய்வதெனத் தெரியவில்லை. படப்பிடிப்பின்போது வேஷம் தருவதாகச் சொல்லி, சாப்பிட்டுப் போகும்படி இரண்டு ரூபாய் சில்லறையைத் தேடி எடுத்துத் தரு கிறார்கள். அவன் காசை வாங்க மறுத்துவிடு கிறான். சில மாதங்களுக்குப் பிறகு, வேஷம் தருவதற்காக அவனைத் தேடி கடிதம் போடும் போது, அவன் அந்த விலாசத்தில் இல்லை என்று கடிதம் திரும்பி விடுகிறது என முடிகிறது கதை.

எங்கே போனான் அந்தப் புலிக் கலைஞன்? அவனது குடும்பம் என்ன ஆனது? சினிமாவில் நிஜ யானையே கோமாளிபோல டவுசர் அணிந்து பைக் ஓட்டுவதற்கும், பந்து போடுவதற்கும் பழக்கப்படுத்தப் பட்டுவிட்ட சூழலில் புலிக்கலைஞன் என்னதான் செய்வான்? புலியாக வாழ்வதற்குப் புலிகளா லேயே முடியவில்லை என்ற நிஜம் அவனுக்கு இந்நேரம் புரிந்திருக்குமா? வாழ்க்கையின் பற்சக்கரங்கள் கருணையற்று அவனை மென்று துப்பிவிட்டன. ஆனாலும், அவன் காலத்தின் மனசாட்சியைப் போல அழிவற்று இருந்துகொண்டே இருக்கிறான்.

புலிக்கலைஞனைப் படிக்கும் போதெல்லாம் இது கற்பனையாக இருந்துவிடக் கூடாதா என்று மனது ஏங்குகிறது. ஆனால், நிஜம் புலியின் கண்களைப் போல கதையெங்கும் மினுங்கிக்கொண்டு இருக்கும்போது, எப்படி என்னை நானே ஏமாற்றிக் கொள்வது?
ஜெயித்தவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் இருக்கின்றன. தோற்றுப் போனவர்களின் கதையோ பெரும்பாலும் ஒன்று போலத்தான் இருக்கிறது. தோல்வி என்று அதை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. புறக்கணிப்பின் பெயர் தோல்வியா என்ன?

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.