Jun 19, 2010

நடன மகளுக்கு - சூத்ரதாரி

நடன மகளுக்கு

என் சாய்வு நாற்காலியின்
பின்னிருந்து சவுக்குக் காட்டில்
மிச்சமிருக்கிறது அந்தியின் தவம்

நீண்ட இடைவேளைக்குப் பின் Hindi Chini behen behen
உன் முகம் காட்டிய கடிதம்
ஊஞ்சலை அசைத்துவிட்டிருக்கிறது

நிலவிழைப் பொழிந்த
இசைச்சதுக்கமொன்றில்
நீயாடிய நடனத்தை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்

அன்றிரவு நீ களைத்துறங்கினபோது
சிவந்த உன் பாதங்களை
முத்தமிட்டதை நீ அறிவாயா?

கொலுசொலிக்க மார்புதைத்து
பயின்ற உன் பாதங்கள்
இன்று சிகரங்களில் ஆடுகின்றன

என் பூரணமே, தாங்கவில்லை எனக்கு
கை ஓய்ந்து போவதற்குள்
கொஞ்சம் சொல்ல இருக்கிறது எனக்கு

அலை வந்தழித்த
என் மணல்வீடுகளை செப்பனிடு

காற்றுதிர்த்த கனவுகளைத் தொடுத்து
கருங்கூந்தலில் சூடிக்கொள்

முற்றுப்பெறாத என் கீர்த்தனைகளை
உன் சொற்களைக் கொண்டு பூர்த்திசெய்

ஓசைகள் மறந்த
என் காற்சலங்கைகளை கட்டிக்கொள்

பின் ஆடு அந்த நடனத்தை

ஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத
அந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு

*****

தொண்ணூறுகளில் தெரியவந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர் சூத்ரதாரி.கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என இவருடைய எழுத்துக்களம் மிகவும் விரிவானது. குரல்களின் வேட்டை என்னும் தலைப்பில் இவருடைய கவிதைத்தொகுதி 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முனிமேடு இவருடைய முக்கியமான சிறுகதைத்தொகுதி. மணற்கடிகை இவருடைய நாவல். ஒரு அடிமையின் வரலாறு முக்கியமான மொழிபெயர்ப்பு. நித்ய சைதன்ய யதியின் ஈசாவாஸ்ய உபநிடதம் என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சொல்புதிது இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்துள்ளார்.

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.