அலைந்து திரிந்த நாட்களில் எழுத்தாளர்களை வைத்தே சென்னை நகரின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்தேன். உதாரணத்திற்கு அசோகமித்திரன் என்பது தி.நகர். திருவல்லிக்கேணி என்பது ஸ்ரீரங்கம்கண்ணன், ராஜமார்த்தாண்டன், மயிலாப்பூர் என்பது சி.மோகன், திலீப்குமார், லஸ்கார்னர் என்றால் நாகார்ஜுனன், லாசரா என்பது அம்பத்தூர், நங்கநல்லூர் என்பது வண்ணநிலவன், மற்றும் மா. அரங்கநாதன், மந்தைவெளி என்றால் சுகுமாரன், சாருநிவேதிதா, நந்தனம் என்றால் சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கே.கே.நகர் என்றால் வெளி ரங்கராஜன், ஆழ்வார்பேட்டை என்றால் கணையாழி அலுவலகம் மற்றும் இ.பா, நுங்கம்பாக்கம் பிரமீள், கொட்டிவாக்கம் ந.முத்துசாமி, இந்த வரிசையில் ராயப்பேட்டைக்கு பிரபஞ்சன்.
இப்படிப் பகுதி வாரியாகப் பிரித்துக்கொண்டதற்கான முக்கிய காரணம் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்தவுடன் மேற்கண்ட எழுத்தாளர்களில் எவரையாவது சந்தித்துப் பேசி எப்படியாவது அவர்கள் செலவில் சாப்பாடு காபி என்று ஒரு நாளை ஓட்டிவிடலாம் என்பதுதான். அநேகமாக எழுத்தாளர்கள் எதிர்பாராத நேரங்களில் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவர்களது மனவிருப்பம் பற்றிய கவலையின்றிக் கேட்டுவாங்கி காபி சாப்பிட்டு இலக்கிய விவாதம் வம்பு செய்த நாட்கள் அவை.
வந்தேறியாக சென்னை மாநகரில் சுற்றிக்கொண்டிருந்தபோது போக்கிடம் கிடையாது. இலக்கியம் பேசுவது, இலக்கியவாதிகளைச் சந்திப்பது என்ற இரண்டு விஷயங்களைத் தவிர வேறு நோக்கங்களும் கிடையாது.
அப்படி வெயிலேற நடந்து திரிந்த நாட்களில் தன் அறையின் கதவை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்து வைத்திருந்தவர் பிரபஞ்சன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை நகரின் வெவ்வேறு மேன்ஷன்களில் பிரபஞ்சன் தங்கியிருந்த நாட்களிலும் சரி அரசுக் குடியிருப்பு கிடைத்து பீட்டர்ஸ் காலனிக்கு மாறிய பிறகும் சரி பிரபஞ்சனின் வீடு எப்போதுமே நண்பர்களுக்கான புகலிடவெளி தான்.
அன்றிலிருந்து இன்று வரை அவர் தனித்திருந்து நான் கண்ட தேயில்லை. எப்போதும் யாராவது சில நண்பர்கள் அவரோடு இருப்பார்கள். உற்சாகமான பேச்சும் சிரிப்பும் நிரம்பி வழியும் இடம் அவரது வசிப்பிடம்
சென்னையின் முக்கிய மேன்ஷன்கள் அத்தனையும் அறிந்தவர் பிரபஞ்சன் ஒருவரே. அதிலும் திருவல்லிக்கேணி, மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, தி.நகர் என்று அவர் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மேன்ஷன்களில் வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களைப் பற்றி அவர் நினைவு கூறும்போது ஆயிரத்தொரு இரவுக் கதைகளை விடவும் அதிகமான கதைகள் பிரபஞ்சனிடம் எழுத இருக்கின்றன என்று தோன்றும்.
பேச்சு, உபசரிப்பு, நண்பர்களின் மீதான இயல்பான அக்கறை என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். அப்படி நான் கண்டவர்களில் மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.
தமிழ் இலக்கியம், சினிமா, பத்திரிகை, தான் சந்தித்த மனிதர்கள் என்று அவர் விவரிக்கும் எதிலும் அடக்க முடியாத சிரிப்பு பீறிடும். குரலை மிக லாவகமாகவும் உயர்த்தாத முகபாவங்களுடனும் அவர் விவரிக்கும் அழகு அற்புதமானது.
சாகித்ய அகாதமி பரிசு, பாஷா பரிஷித் பரிசு உள்ளிட்ட பலமுக்கிய பரிசுகளைப் பெற்றிருந்தபோதும் தன்னைப் பற்றிய மிகைபாவனை எதுவுமின்றி எளிமையாகப் பழகக்கூடியவர். அவரது வீடு நிறைய புத்தகங்களுடன் பெரிய நூலகம் போலிருக்கும். முறையாக இசை பயின்றவர். இசையைப் பற்றி அவரது உரையாடல்களைக் கேட்பதே சங்கீதமாக இருக்கும்.
சென்னையின் மேன்ஷன்களில் அழையாத விருந்தாளியாக ஒளிந்து தங்கி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். அதிலும் நண்பன் ராஜகோபால், ஸ்ரீரங்கம் கண்ணன் போன்றவர்களின் அறையில் இரவில் தங்கிக் கொள்வதும் பகலில் கால்போன சாலையில் சுற்றியலைவதுமே அன்றாடச் செயல்பாடு.
வாரம் ஒரு நாள் நிச்சயம் பிரபஞ்சன் அறைக்கு போய்விடுவேன். சில நாட்கள் காலை எட்டு மணிக்குத் துவங்கி இரவு பன்னிரண்டு, இரண்டு மணி வரை அவரோடு இருப்பேன். அன்றாடச் செலவிற்குக்கூட என்னிடம் காசு இல்லாதது போலவே அவரிடமும் காசு இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். பிரபஞ்சன் கையில் பணம் வந்து சேர்ந்தால் அடுத்த சில மணி நேரங்களில் பறந்தோடிவிடும்.
எழுத்தாளர்களுக்கு ஆயிரம் பக்க நாவல் எழுதுவதைவிடவும் பெரிய சவால் பதிப்பாளர்களிடமிருந்து மனம்நோகாமல் பேசி ராயல்டி தொகையை வாங்குவது. எளிதில் பணம் கைக்கு வந்து விடாது. இதில் பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேதம் கிடையாது. அப்படியே பெரிய பதிப்பகம் சின்னப் பதிப்பகம் என்ற பேதமும் கிடையாது. அந்த சவாலில் அதிர்ஷ்டவசமாக வென்று கையில் சிறிய ராயல்டி தொகை வந்தவுடன் பிரபஞ்சனின் கனவுலகம் விழித்துக் கொண்டுவிடும்.
நண்பர்களைத் தேடி அழைத்து உபசரித்து, நல்ல உடை, விரும்பிய புத்தகங்கள், இசைநாடாக்கள் என்று அவர் கடைசிப் பைசாவரை செலவு செய்துவிட்டு எப்போதும் போலவே எளிமையாக சாலையின் ஓரங்களில் மெதுவாக நடந்தபடியே, சென்னை நகரின் பரபரப்பைத் தனக்குள் ஒரு போதும் நிரப்பிக் கொள்ளாமல் தன்னியல்பாக வீடு திரும்புவதைக் கண்டிருக்கிறேன். காலைச் சுற்றும் பிரச்சினைகள் நிரம்பிய மாநகரில் எப்படி இவரால் எதையும் இயல்பாகச் சந்தித்து பதற்றம் அடையாமல் கடந்து செல்ல முடிகிறது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன்.
பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதுவது. புத்தகங்களுக்கான ராயல்டி தவிர அவருக்கென நிரந்தரமான மாத ஊதியம் கிடையாது. குடும்பம் பாண்டிச்சேரியிலும் அவர் சென்னையிலுமாகப் பல வருடங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் வசிக்க வேண்டிய ஒரே காரணம் இலக்கியத்தின் மீதான விருப்பமும் நண்பர்களைச் சந்திக்க முடியும் என்ற ஆசையும் மட்டுமே.
பாண்டிச்சேரியில் பிரபஞ்சனைச் சந்தித்தால் முற்றிலும் வேறு மனிதரைச் சந்திப்பது போல இருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நகரம் என்பதால் கையில் ஓடும் ரேகைகள் போல பாண்டிச்சேரியின் அகம்புறம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். குறிப்பாக அதன் நூற்றாண்டுகால வரலாறு, இன்றைய நிலை, அங்குள்ள குடியிருப்புகள், வீதிகள், அதன் பின்னால் உள்ள மறக்கமுடியாத நிகழ்வுகள் என்று சொல்வதற்கு நிரம்பிய விஷயங்கள் அவரிடம் உள்ளன. பாண்டிச்சேரியைப் பற்றி அவரது இலக்கியப் பதிவுகள் மிக முக்கியமானவை.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் சரித்திரச்சான்றுகளாக மட்டும் அறியப்பட்டு வந்ததை, தனது வானம் வசப்படும் நாவலின் வழியே முக்கியமான புனைகதையாக்கி தமிழின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாவல்களில் ஒன்றாக எழுதிக்காட்டியவர் பிரபஞ்சன்.
இன்றைக்குப் பரவலாக ஆனந்தரங்கம்பிள்ளையின் டயரி பொது வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபஞ்சன் என்றே சொல்வேன். இந்த நாட் குறிப்புகள் பற்றித் தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததோடு இதைப் புதுச்சேரி அரசின் உதவியோடு பதிப்பிக்கும் பணியிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சன். புதுச்சேரியின் வரலாற்றைப் பாட நூலாக எழுதியதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.
புனைகதைகள், கட்டுரைகள் என்பதில் மட்டும் சஞ்சாரம் கொள்ளாமல் தன்னைச் சுற்றிய அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், சமகால அரசியல், கடந்த கால சரித்திரத்தின் உண்மையை அறியும் மீள்வாசிப்பு, உலக இலக்கியத்தின் மீதான தொடர்ந்த வாசிப்பு, சமூக மாற்றங்களுக்கான இயக்கங்களோடு சேர்ந்து செயல்படுவது என்று அவரது விருப்பம் பன்முகப்பட்டது.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு மட்டுமில்லை. தனக்குப் பிடித்த கதை அல்லது நாவல் என்று எதைப் பற்றியும், சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பாராட்டுடன் சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அதை எழுத்தில் பதிவு செய்வதோடு ஏதாவது ஒரு நிகழ்வில் பேசியும்விடுவார். அப்படி அவரால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் நிறைய உண்டு. இதில் சிலர் தங்களது முதல் கதையை மட்டுமே எழுதியவர். சிலரை அவர் சந்தித்ததுகூட இல்லை. ஆனால் படைப்பின் வழியாக அவர் கொள்ளும் ஆனந்தத்தை உடனே மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் பவா செல்லதுரையின் முதல்சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை. நவீனச் சிறுகதைகளில் புதிய வரவாக உள்ள பவா செல்லதுரையின் சிறுகதைகளை மதிப்பிட முயன்ற பிரபஞ்சன் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையே நாலைந்து பக்கங்களில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
பவாவின் சிறுகதைகளை எவ்வளவு ரசனையோடு வாசித்திருக்கிறார் என்பதற்கு இந்த வரிகளையே சான்றாகச் சொல்லலாம். பவாவின் கதை உலகம், ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவுவிடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டுப் பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிப்பரப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடிந்த பின் தரும் கலை இதம் வசீகர அனுபவங்கள் நிலைபேறுடைய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பை இப்படி மனம் நிறைந்து பாராட்ட எத்தனை பேரால் முடியும். அவ்வகையில் பிரபஞ்சன் ஒரு முன்னோடி.
பவாவின் கதைகளை மட்டுமில்லை. தமிழ் நவீனச் சிறுகதையுலகின் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றிய அவரது அவதானிப்பு மிக முக்கியமானதாகும். இதில் ஜானகிராமனைப் பற்றிய அவரது பதிவு திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வைத்தது. ஜானகி ராமன் எந்த அளவு பிரபஞ்சனின் அகவுலகிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி.
தமிழ்மொழியில் தனிப்பெரும் வியக்தி தி.ஜானகிராமன், மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச்சேர்த்து அழகைப் பேரழகாக மாற்றிய பெரும்கலைஞர் தி.ஜா. வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, நிற்கும் அழகு, நிகுநிகு உடம்பழகு, பாட்டு அழகு, மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு, என அனைத்து அழகுகளாலும் பெண்களைப் படைத்த ஜம்பொன்குயவர் அவர். பெண்களின் விகாசம் தாங்காமல் ஆண்களைத் தற்கொலை செய்ய வைத்த நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர், அதனாலே அவரை எனக்குப் பிடிக்கும்.
இது போலவே தனக்குப் பிடிக்காத விஷயத்தை அவர் நேரடியாகப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மனவுறுதி கொண்டவர். அவரோடு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தன்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து அதன் நுட்பங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை அவதானித்து அழகாகப் பேசக்கூடியவர்.
அன்று மேடைக்கு வரும்வரை அமைதியாக இருந்தார். புத்தக வெளியீடு நடந்தது. அவரைப் பேசவரும்படியாக அழைத்தார்கள். மேடைக்கு வந்த பிரபஞ்சன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதோடு அதை எழுதியவர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமான சுயபெருமை செய்துகொண்டிருக்கிறார். புத்தகம் மிகவும் குப்பையானது, அபத்தமும் அர்த்தமற்ற உளறல்களும் நிரம்பியது என்பதால் அதைப் பாராட்டிப் பேச, தன்னால் இயலவில்லை. விரும்பி அழைத்த காரணத்திற்காக வந்திருந்தேன். தொடர்ந்து இதைப் பாராட்டிப் பலர் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை, கிளம்புகிறேன் என்று மேடையில் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு சபையை விட்டு வெளியே கிளம்பி நடந்தார். சபை அதிர்ந்து போனது.
சாலையில் அவரோடு நடந்த படியே அந்த எழுத்தாளர் உங்கள் மீது கோபம் கொள்வாரே என்று கேட்டேன். அதற்கு பிரபஞ்சன் முதலில் எழுத விரும்புகின்றவன் தன்னைப் பற்றிய சுயபெருமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கையில் பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது. இப்போது அதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என்றபடியே எதுவும் நடக்காதவர் போல இயல்பாக எங்காவது காபி சாப்பிடலாமா என்று கேட்டார் பிரபஞ்சன்.
தன் வாசிப்பின் வழியே தான் அடையும் உண்மைகளை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அதுபோலவே வாசிக்கக் கிடைக்காத புத்தகங்களுக்காக வெளிப்படையாக ஆதங்கப்படுகின்றவரும்கூட. சில வேளைகளில் அவரைத் தேடிவருகின்றவர்கள் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆசையுடன் வாங்கிப் புரட்டிப் பார்த்து இதைப் படிக்காமல் விட்டுவிட்டேனே எங்கே கிடைக்கிறது என்று உடனே பதிப்பக முகவரியைக் குறித்துக்கொள்வதைக் காணும்போது வீடு நிறைய புத்தகங்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தும் எதற்காக இவ்வளவு ஆதங்கப்படுகிறார் என்று தோன்றும்.
தன் உடல் உபாதைகள் பற்றியோ, குடும்பச் சூழல் குறித்தோ அதிகம் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியவரில்லை. மிக அரிதாக அதைப்பற்றிப் பேசக்கூடியவர். அதுவும் எவ்விதமான எதிர் பார்ப்புகளும் அற்றதாக இருக்கும்
பிரபஞ்சன் நினைத்திருந்தால் அவரது நண்பர்கள் ஆர்வலர்களின் வழியே அதிகாரத்தின் உச்ச நிலைக்கு அடைந்திருக்கக்கூடும். பெரிய பதவிகள் பட்டங்கள் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அதை முற்றிலும் நிராகரித்தவர். கிடைக்கவில்லையே என்ற குறைகூட இல்லாதவர்.
பிரபஞ்சனின் சிறுகதைகள் தனித்துவமானவை. அன்றாட வாழ்வில் நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிக்கு உள்ளேயும் மனிதர்களின் மீதமிருக்கின்ற அன்பையும் வெளிப்படுத்தக்கூடியவை. கதா பாத்திரங்களின் மனோநிலையைப் பின்தொடர்ந்து சென்று எழுதக்கூடியது அவரது எழுத்து வகை.
மெல்லிய கேலியும் விமர்சனமும், குரலை உயர்த்தாமல் செல்லும் கதை சொல்லும் முறையும் அவருக்கு உண்டு. வாழ்க்கை கருணையற்றது என்பது அவரது கதைகளின் சில நிகழ்வுகளின் வழியே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிக் கருணையற்ற வாழ்வின் ஊடாகவும் சிலர் தங்களது சுய அடையாளங்களை இழப்பதில்லை. அவரது ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், மனுஷி பிரும்மம், குமாரசாமியின் பகல்பொழுது, மரி என்கிற ஆட்டுகுட்டி போன்றவை எனக்கு விருப்பமான கதைகள்.
பிரபஞ்சனுக்கு உருவாகும் பிரச்சினைகள் ஆச்சரியமானவை. ஒருநாள் நானும் நண்பன் ராஜகோபாலும் அவரைச் சந்திப்பதற்காக பீட்டர்ஸ்காலனி வீட்டிற்குச் சென்றிருந்தோம். படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று மாடி ஏறி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கே இறங்கிச் செல்வதாக இருந்தார் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு மணி நேரப் பேச்சிற்குப் பிறகு காபி சாப்பிடப் போகலாமா என்றார். சரி என்று கிளம்பிய போது அங்குமிங்குமாகத் தேடிவிட்டுச் சொன்னார்,
"ஒரு மணி நேரம் முன்னாடி என்னை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைப்பதற்காக நாலு பேர் வந்திருந்தார்கள். அதில் யாரோ ஒரு ஆள் என்னுடைய புதுச் செருப்பைப் போட்டுவிட்டு சென்றுவிட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் ஆசைப்பட்டு புதிதாகச் செருப்பு வாங்கியிருந்தேன். செருப்பைப் போட்டுக் கொண்டுபோன ஆள் பழைய செருப்பு எதையாவது விட்டுச் செல்வான் இல்லையா அதையும் தேடிப் பார்த்துவிட்டேன். திருடிக் கொண்டுபோன ஆள் செருப்பே போட்டுவரவில்லை போல. அவனுக்கு என்னுடைய சைஸ் செருப்பு எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சரி திருடுவது என்று முடிவு செய்தபிறகு சைஸ் பார்த்தா திருட முடியும். ஒரு எழுத்தாளன் வீட்டில் திருடுவதற்குச் செருப்பைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜமில்லையா? வெறுங்காலோடு நடக்கப் பழகிக்கொள்ள வேண்டியது. அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது இல்லையா" என்று சொல்லிச் சிரித்தார்.
நடந்து சென்று சரவணபவனில் காபி சாப்பிட்டோம். அவரை உணவகத்தில் உள்ளவர்கள் அறிந்திருந்தார்கள். அவரது நாவின் சுவைக்கு ஏற்ப காபியைத் தயாரிக்கும் நுட்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வரும்வழியில் சில வருடங்களுக்கு முன்பாகத் தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை விவரித்துச் சொல்லத் துவங்கினார்.
"இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு வருகின்றவன் இப்படியிருக்கிறான் என்றால் அழைத்து போனவன் ஒருவன் கதையிருக்கிறது. அதையும் கேளுங்கள். சாகித்ய அகாதமி விருது கிடைத்தவுடன் கடலூர் அருகில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவதாக அழைத்தது. நானும் கலந்துகொண்டேன்.
விழா நடப்பதாகச் சொன்ன இடத்திற்குப் போனபோதுதான் தெரிந்தது அது ஒரு இரண்டு தெருக்கள் சந்திக்குமிடம் என்று. நான் போனபோதுதான் மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் மூன்று மணிநேரமாகும் என்றதால் விழா நிர்வாகிகளைத் தேடினேன்.
எனக்காக அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக போனில் சொல்லியிருந்தார்கள். அதனால் அங்கே சென்று காத்திருக்கலாம் என்று தேடியபோது அமைப்பாளர்களில் ஒருவரையும் காணவில்லை. ஒரு வழியாகக் கண்டுபிடித்தபோது அறை கிடைக்கவில்லை என்பதால் டீக்கடை ஒன்றில் காத்திருக்கும் படியாகச் சொன்னார்கள்.
இரவு பத்து மணிக்குக் கூட்டம் ஆரம்பம் ஆனது. சிறுவர்கள் நடன நிகழ்ச்சி, உள்ளூர்ப் பிரமுகர்களின் வாழ்த்து முழக்கங்கள், ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று நீண்டு கொண்டிருந்ததேயன்றி பாராட்டுவிழா துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. இதில் வந்தவர்கள் இரவு உணவு தரவில்லை என்பதால் பசிவேறு காதை அடைக்கத் துவங்கியிருந்தது.
முடிவில் நள்ளிரவில் பாராட்டு விழா அரங்கேறத் துவங்கியது. ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் ஒன்றை பிரேம் செய்து தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு நன்றியுரை சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்படலாம் என்று நினைத்து வழிச்செலவிற்கான தொகைக்காக அழைப்பாளர்களைத் தேடினால் ஒருவரையும் காணவில்லை. கூட்டம் முடிந்த மறுநிமிசம் மாயமாக மறைந்து போய்விட்டார்கள்.
ஆள் உயரப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எப்படி நடப்பது என்று தெரியவில்லை. பேருந்தில் இதை வைத்துக்கொண்டு எப்படி ஊருக்குப் பயணம் செய்வது என்று வேறு குழப்பமாக இருந்தது.
இங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுப் போய்விடலாம் என்றாலும் எங்கே வைப்பது யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றும் தோன்றியது. வேறுவழியில்லாமல் அந்தப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்.
இத்தனை ஆண்டுகாலம் தமிழில் எழுதி விருது வாங்கியதற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இது தானோ என்று நினைத்தபடியே யாரும் அறியாமல் ஒரு விளக்குக்கம்பத்தின் அருகே வைத்துவிட்டு அவசர அவசரமாகப் பேருந்து பிடித்து பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.
ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் செய்ய ஆசையிருந்தவர்களுக்கு அழைத்து வந்த எழுத்தாளருக்கு உணவு வாங்கித் தரவோ, வழியனுப்பி வைக்கவோ விருப்பமில்லை. பாராட்டுப் பத்திரத்தில் உள்ள வாழ்த்துப்பாடலை எழுதிய நபர், பிரேம் போட உதவிய நபர் என்று நாற்பது பெயர்கள் அதில் இருந்தது. அவர்கள் நோக்கம் தங்களைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வது. அதற்கு நான் பலியானதுதான் வேடிக்கை" என்று உரக்கச் சிரித்தார்.
தனது அவமதிப்புகளைக்கூடப் பரிகாசமாக மாற்றிவிட முடியும் மனது அவருக்கு இருந்தது.
பிரபஞ்சன் முறையாகத் தமிழ் படித்தவர், சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள் வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்லுவார். ருஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசத் துவங்கினால் வியப்பும் பெருமையாக அவர்கள் படைப்புகளை விவரித்துக் கொண்டிருப்பார். அவரது அப்பா கள்ளுக்கடை வைத்திருந்த நாட்களைப் பற்றியும் சீட்டு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பகலிரவாக சூதாடிய மனிதர்களைத் தன் பிராயத்தில் கண்டதைப் பற்றியும் அவர் விவரிக்கும் போது இதை எல்லாம் இன்னும் எழுத்தில் முழுமையாக பிரபஞ்சன் கொண்டுவரவில்லையே என்று ஆதங்கமாக இருக்கும்.
நல்ல எழுத்தாளர் என்பது போலவே பிரபஞ்சன் ஆகச்சிறந்த பேச்சாளர். கூட்டத்தைத் தன் பேச்சில் மயக்கும் வித்தை அவரிடம் கைகூடியிருந்தது. பல்கலைக்கழக ஆய்வு அரங்கமாக இருந்தாலும், பொது நிகழ்வாக இருந்தாலும் அவர் பேச்சு எப்போதுமே சுவாரஸ்யமானது. பலமுறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியிருக்கிறார்.
பிரபஞ்சன் நேர்த்தியான ஆடைகள் அணிவதிலும் தன் தோற்றப் பொலிவிலும் அக்கறை காட்டக் கூடியவர். எழுத்தாளர்களில் அவர் ஒரு அழகன் என்று நண்பர்கள் சொல்வார்கள். அதை மெய்யாக்கும் விதமாக அவரது தோற்றத்தில் எப்போதுமே தனிவசீகரம் இருக்கும்.
நல்ல காபி, சிறந்த இசை, விருப்பமான புத்தகங்கள், நிறைய நண்பர்கள் இதுதான் பிரபஞ்சனின் உலகம். இன்றைக்கு அவரது அறைக்குச் சென்றாலும் யாரோ சில இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்தித்துப் பேசி விவாதித்து, தங்களைப் பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தன்னைத் தேடி வருகின்றவர்களிடம் அவர் காட்டும் நிஜமான அக்கறையும் தன் விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் இயல்பான தன்மையும், புதிதாக எழுத வருகின்றவர்களை அழைத்துப் பாராட்டி, தொடர்ந்து எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் பாங்குமேயாகும்.
அவ்வகையில் பிரபஞ்சனின் இல்லம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பகிர்வு வெளியாகும். அந்த அறை தந்த கதகதப்பும் உபசரிப்பும் எனக்குமட்டுமல்ல நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரது நினைவிலும் எப்போதும் தன் பசுமையோடிருக்கிறது. அவ்வகையில் பிரபஞ்சனின் இருப்பு எழுத்தாளனின் உயரிய தோழமை என்றே சொல்வேன்.
***
நன்றி: வாசகபர்வம் – உயிர்மை வெளியீடு
பிரபஞ்சன் அவர்களைப் பற்றிய தகவல் ஆச்சரியம் அளிக்கின்றன்.
ReplyDeletethanks for sharing போன்ற வரிகளை பின்னூட்டமாக தயவுசெய்து போடாதீர்கள் - இங்காவது. கதை/கட்டுரையைப்பற்றி ஏதாவது சொல்லமுடியுமா என்று பாருங்கள். ஒரு விவாதம் உருவாகும் நிலையை அழிக்காதீர்கள். thanks for sharing என ஒரு இருபது பேர் போட அவற்றை வாசகன் வாசித்துக்கொண்டே செல்ல வேண்டுமா என்ன? அந்த அபத்தம் ஏன் உங்களுக்கெல்லாம் உறைக்கவில்லை?
ReplyDeleteif u wish u can specify how many maximum number of posts should be shown while clicking a label.
ReplyDeletefor that u should change your cloud type label into list type at first.(don't be afraid). the list type is in vertical link type. u should convert verical list type of labels into horizontal link type labels. Horizontal link type is similar to cloud type to look at it. Then u should insert a small code in ur template 4 showing maximum number of posts as u desired while clicking a label.
use the following link. copy the essay in it in your email. Because I will delete it soon.
http://specifymaximumpostsinhorizontallabels.blogspot.com/
for demo see
http://mdumreader.blogspot.com/
(in my test blog. d labels seem to be in cloud type. but in real it is a horizontal list type of labels. click d label gandhiji in my test blog. it has 3 posts. but while clicking on it only 1 post will be shown...because i have specified maximum post to be 1)
ஒரு சில எழுத்துக்களைப் படித்தால் இவரது இன்னபிற புத்தகங்களையும் படிக்கவேண்டும்
ReplyDeleteஎன்ற ஆவல் தோன்றும்..ஏனோ எஸ்.ராவின் எழுத்து மட்டும் இவ்வாறு,இவர் "மொழியும்" புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் நமையும் அறியாமல் தோன்றிவிடுகிறது..பிரபஞ்சனின் வரிகளை ரசிப்பவளாயினும் :-)
I watched his Book reviews in Makkal TV.
ReplyDeleteWonderful narration and deep reading of books to be reviewed...Good writer.
S.Ravi
Kuwait
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை அவர் மேடையில் பேசிய பேச்சின் ஊடாகத்தான் அறிந்தேன், அவர் பங்கேற்ற மேடை ‘அருந்ததியர்ருக்கான உள் ஒதுக்கீடு’ கோரிக்கை மீதான புத்தகம் வெளியீடு மற்றொரு மேடை ‘உத்தபுரத்தில் சுவர் அகற்ற’ நடந்த போராட்டம். அவ்ருடைய பேச்சை கேட்ட பிறகு தான் இலக்கியம் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டேன். சமூகமாற்றத்தை விரும்புற/ அதற்க்காகவே எழுதுகிற எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி அரிய தகவல்களை எஸ்.ரா மூலம் மேலும் தெரிந்துகொண்டோம்.
ReplyDeleteஹரிகரன்.தோகா