Mar 30, 2011

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.bava_chelladurai

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே - நீ பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ... நித்யபிதா ஒருவருக்கே நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட சர்வ வல்லவர் - இங்கே பங்கமுற்ற பசுந்தொட்டியில் படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.

*****

<http://bavachelladurai.blogspot.com/2009/05/blog-post.html>

4 comments:

  1. அப்பா... எப்படியான ஒரு மன ஓட்டம். கரு சுமப்பவரின் நம்பிக்கையையும், நம்பிக்கையின்மையையும், பயத்தையும் மிகத்தெளிவாய் வடித்திருக்கிறார்.மேரிவில்லியம்ஸிற்கு சுகப்பிரசவம் ஆகவேண்டுமென பிரார்த்தித்தது மனம். இதுவே பவா செல்லதுரையின் வெற்றி.

    ReplyDelete
  2. அருமையான கதை! கர்ப்பிணி மேரியின் பயத்தையும், மனவோட்டத்தையும் அற்புதமாய் விவரித்திருக்கிறார் கதாசிரியர் பவா செல்லத்துரை!

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.