Apr 30, 2011

வெளிப்பாடு - அம்பை

அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்ட ஒரு முலை. காம்பு விறைத்து, பழுத்து. அதைச் சிறு சப்பலுடன் கவ்விய சிறு  உதடுகள். நீலமும் சிவப்புமாய், கூச அடித்த பட்டுப் புடவையின்  கழுத்துப்புற ஈரம். எண்ணெய் தடவி இறுக்கிப் பின்னிய தலையோடு ஒட்டிக்கொண்டிருந்த பின் தலையில் விரல்கள் நுழைத்த மல்லி, கதம்பம். கட்டணக் கழிப்பிடம் அருகேயே சுவரில் பீச்சியவனின் ஒரு கருத்த பிருஷ்டம். உள்நாக்குத் தெரிய, வாயைத் திறந்து கேவலின் உச்சக்கட்ட ஒலி செத்த நிலையில் ஒரு ரெட்டைக்குச்சிப் பின்னல் பெண்.

கண்டக்டரைச் சுற்றி இருந்த கூட்டத்தில் அவன் - சிதம்பரம் - மோதிக்imagesகொண்டிருந்தான் அவளுக்காக. வேஷ்டியைக் கீழேயே விடமாட்டான் போலிருந்தது. அவள் காலையில் பார்த்ததிலிருந்து அது மடித்தே இருந்தது. ஒரு அரைக்கைச் சட்டை. காலில் ஒரு தேய்ந்த செருப்பு. காலையில் ரயில் நிலையத்துக்கும் இப்படித்தான் வந்தான். நொடியில் அவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான். சிறு பெட்டியை அவள் கையிலிருந்து வாங்கினான் முதலில். அவளால் பெட்டி தூக்க முடியாது; டிக்கெட் வாங்குதல் போன்ற விஷயங்களைச் செய்ய முடியாது என்பது பற்றித் தீர்மானமாக இருந்தான். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்கியது, “ஏ யப்பா! இப்படி விறுவிறுன்னு நடக்கறீங்களே!” என்று வியந்தான். நடத்திக்கொண்டே போனான்.

“எங்கே போறோம்?”

“இதோ, இந்த முக்குவரிக்கும்தான். தாமிரவருணிக்கு. ஆத்துல குளிச்சிட்டுப் போயிடலாம்.”

“ஐயோ! எனக்கு அங்கல்லாம் குளிக்க வராது.”

”அய்ய! ஒண்ணுமில்லிங்க. எத்தன பேரு குளிக்கறாங்க பாருங்க.”

மார்பில் பாதித் துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும், ஈரத் தொடைகளும். ஈரமுடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்டபின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் முடியாது.

“முடியாதுங்களா?”

”இல்ல. பழக்கமில்ல.”

“இங்க வந்து தாமிரவருணி குளிக்காம போகலாமா?”

“இல்லல்ல. முடியாது.”

மறுப்பால் சற்றுப் பாதிக்கப்பட்டான். “ஏங்க, ஆத்துல குளிக்கறது என்னங்க கஷ்டம்?” என்று முணுமுணுத்தான். “சரி வாங்க” என்று மீண்டும் நடத்தினான்.

ஒரு மரக்கதவின் முன் நின்று, “அண்ணி, அண்ணி” என்றான். கதவு திறந்தது.

திறந்தவரிடம், “இவங்கதான்... நான் சொன்னேனே? ரிப்போர்ட் எழுதணுமாம். கிருஷ்ணமூர்த்தி உதவி பண்ணச் சொல்லிக் கடுதாசி போட்டிருந்தார். கணபதி இல்ல ஊர்ல. ஓட்டல்லே ரூம் போடலாம்னு பார்த்தேன். வேணாங்கறாங்க. அரை நாள்தானே இங்கன. அதான் கூட்டிட்டு வந்தேன்.”

”ஓட்டல் எதுக்கு நம்ம வீடு இருக்கச் சொல்ல? உள்ளாற வாங்க,” என்றார்.

உள்ளே, சமையலறையிலிருந்து ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

“குளிக்கணுமாம்.” என்று அறிவித்தான் செய்தி மாதிரி.

“என்ன?” என்றாள் அண்ணி.

“குளிக்கணுமாம்.”

“ஆத்துப் பக்கமா வரலியா?”

“வந்தமே.  பளக்கம் இல்லியாம்.”

”இருக்கட்டும். இப்ப குளிக்கலாம்.” என்றாள்.

காப்பி வந்தது.

“வாங்க” என்றாள்.

சமையலறையின் முற்றத்தைக் காட்டி, “பக்கிட்டுல தண்ணி வெச்சிருக்கேன். ஊத்திக்கிடுங்க. கதவு சாத்த வேண்டாம். யாரும் வரமாட்டாங்க” என்றாள்.

அடுப்பில் பருப்பு மஞ்சள் வாசனையுடன் வெந்தது. இன்னொரு அடுப்பில் தோசைக்கல்.

“மஞ்சத்துண்டு பொறையில இருக்கு”. என்று விருக்கென்று உள்ளே வந்து தோசைக்கல் முன்னால் அமர்ந்தாள். அவள் அப்படி சர்வசாதாரணமாய்ப் புகுந்தது பாதிப்பதற்குமுன், தோசைக்கான மாவை ஊற்றினாள்.

ஜிவ்வென்று பசி வயிற்றைக் கவ்வியது. அம்மியில் சிதைந்த முதல் பச்சை மிளகாய் நெடி மூக்கில் ஏறித் தலையில் போதையாய் முட்டியது.

“முதுகு தேய்க்கணுமா?”

”இல்ல, இல்ல, வேண்டாம்.”

“கூச்சப்படுறீகளோ? பொம்பளைகளுக்குள்ள என்ன கூச்சம்?”

முதல் தோசை, பொன் நிற முறுகலாய் வாழை இழைமேல் விழுந்தது. இன்னொரு ‘சொய்’. கரண்டியால் ஒரு தேய் தேய்த்ததும் வட்டமாய் விரிந்தது.

“முடிக்கு எண்ணெய் தேக்க மாட்டீகளோ?”

”தேப்பனே.”

“பின்னே ஏன் இப்படி உதுந்துபோய்க் கிடக்கு? கரகரன்னுட்டு ரெண்டு கை எண்ணெய் தேய்ச்சு சீக்காய்ப் பொடி கொழச்சு தாமிரவருணில குளிச்சா முடி ஏன் வளராதுங்கேன்?”

அவள் தலையைப் பார்த்தாள். கருகருவென்று வெங்கலப் பானை மாதிரி முடிந்த தலைமயிர்.

”என் முடியைப் பாக்கீகளா? எனக்கு வயசு அம்பது. ஒரு முடி நரைக்கல. இன்னும் தூரம் போகலை.”

உனக்கு மறைக்க ஒன்றுமே இல்லையா? உன்னையும் என்னை மாதிரி அடக்கி அடக்கித்தான் - தலைப்பு ஏன் இப்படித் தொங்கறது? இடுப்பில் செருகு. வாசல் பக்கம் என்ன பண்றே? வாயை மூடு. கொரல் வெளில வரக்கூடாது. படிப்பு கிடக்கட்டும்; இந்தக் காயை நறுக்கித் தா. அப்புறம் தயிர் கடையலாம் - வளர்த்திருப்பார்கள். எந்த பலத்துடன் இப்படி வெள்ளையாய்ப் பேசுகிறாய்? சிரிக்கிறாய்?

“பதினாலு வயசிலே கல்யாணம். இவுகளுக்கு வயசு இருபது. அல்லு அசலு இல்ல. சொந்த மாமா பையன். பெறகு என்ன? சோறு வடிக்கிற ராச்சியந்தான். ரெண்டு பொட்டச்சிக. ஒரு மகன். கட்டிக் கொடுத்தாச்சு. அட, பேரன் எடுத்திட்டன்னா பாத்துக்குங்களேன்.”

இதுதான் உன் வாழ்க்கையின் கதையா? நாலு வரியில்?

உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.

”தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு. சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு ஒரு அறை வெச்சார்னா....” சிரித்தாள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

”சாப்பிட வரீகளா? எனக்குப் பசிக்கி.”

“நான் தோசை சுடட்டுமா?”

“அட, தோசை சுடத் தெரியுமா?”

“ஏன், தெரியாதுன்னு நீனைச்சீங்களா? ஒங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன, உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா...”

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்டு எளுதணும்?”

“பொம்பளைங்க பத்தி.”

”பொம்பளைங்க பத்தி எளுத என்ன இருக்கு?”

”அதாவது அவங்க எப்படி வாழறாங்க என்னெல்லாம் வேலை செய்யறாங்க அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனைக்கிறாங்க...”

”என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

”எப்பப் பாரு புள்ள பெறலியே? நடுவிலே ஏதாவது யோசிச்சிருப்பீங்க, இல்ல?”

”ஆமா, ரோசிச்சோம், போங்க.”

மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

தோசை விள்ளலைச் சட்டினியில் தோய்த்தபின், வாயில் போடாமல் இவளைப் பார்த்தாள்.

“ஒரு பொஸ்தகமுங்க. எங்க வூட்டுல இருந்திச்சு. நான் சின்னப் புள்ளையா இருக்கச்சொல்ல. ஒரே போட்டோவுங்க. சமுத்திர போட்டோ, நொரையா அலை. செல போட்டோவுலே அப்படியே கண்ணாடி மாதிரி கெடக்கு சமுத்திரம். திருச்செந்தூர் கோயில் விளால நான் பாத்திருக்கேன் சமுத்திரம். ஒரு வாட்டி சொரம் வந்து சமுத்திரம் சமுத்திரமுன்னுட்டு பெனாத்தினேன். ‘பயித்தியாரி, பயித்தியாரி’ன்னு இவுக ஒரே கோவம். அதென்னமோ வியாதிங்க. சமுத்திர சாபம். சமுத்திரம் பாக்கணுமே பாக்கணுமேன்னுட்டு பறப்பேன். இவுக ஒரு அறை வெப்பாக பாருங்க, அடங்கிடுவேன். முருக பக்தருங்க இவுக....”

ஒரு நகரத்தில் ஒரு சின்னப் பெண். அவள் வசித்த தெருவின் முனையில் ஒரு சிறு புத்தகக் கடை. கண்ணாடிச் சுவர்கள். இவள் மூக்கும் கண்களும் மட்டும் கண்ணாடிச் சுவர்வரை எட்டும் எம்பினால். ஒரு சுழல் அலமாரியின் பின்னால் அது இருந்தது. நீலக் கடலின் ஒரு ஓய்ந்த முனை. நிலாவின் ஒளிக்கதிர்கள் மெத்தென்று ஊடுருவியது ஒரு தையல்போல். ஒரு படகு, கடல், படகு, நிலா எல்லாம் ஒன்றோடொன்று கலந்திருந்தது நீலமாக. அவளுக்கு நீலம் பிடிக்கும், ரொம்ப. தெரு முனையை அடையும் போதெல்லாம் அவள் கண்களும் மூக்கும் கண்னாடியை அழுத்தும். அவர் பார்த்தார் ஒருநாள், கடைக்காரர்.

“என்ன பாப்பா?”

“சமுத்திரம்.” இவள் காட்டினாள்.

“உள்ளே வா.”

அவர் அதைக் கழற்றி அவளிடம் பார்க்கத் தந்தார். அது ஒரு ஐரோப்பிய ஓவியம். மோனேயா? நினைவில்லை. ஒருநாள் அதை அவளுக்குத் தந்தார். அவள் குழந்தை பருவத்தின் ஒரு மென்மையான பகுதி. ஓவியக் கடல்.

“என்ன டீச்சர், இவகிட்ட பேசறீங்களா? ஒண்ணும் தெரியாது இவளுக்கு. மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா.” சிரித்தார்.

இவள் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். அவள் இவளை அரைக்கணம் பார்த்துவிட்டு இலையுடன் எழுந்து தன் கணவனைத் தாண்டிப் போனாள்.

கிளம்பும்போது, “அடுத்த வாட்டி ரெண்டு நாள் இருக்குற மாதிரி வாங்க டீச்சர். திருச்செந்தூர் போகலாம்,” என்றாள்.

”ஆமா, ஆமா, சாப்பாடெல்லாம் கட்டிட்டுப் போகலாம். நல்லாயிருக்கும் டீச்சர் முருகன் கோவில்,” என்றார் அவர்.

அவள் கன்னத்தை வருட வேண்டும் போலிருந்தது. இறுக்கி முடிந்திருந்த கூந்தலைக் கீழே தளரக் கொட்டிப் பார்க்க வேண்டும். கனத்த தங்கச் சங்கிலிகள் கிடந்த கறுத்த கழுத்தைத் தொட வேண்டும். ஆனால் ஸ்தூலமாகப் பகிர்ந்துகொண்டது தோசையை மட்டும்தான். அதனால், “உங்கள் கைதோசை சாப்பிட வருவேன் இன்னொரு தடவை” என்றாள்.

பஸ் டிக்கெட்டோடு வந்தான் அவன்.

“போயிடுவீங்க இல்ல? அங்க கணபதி வருவார். வேலை முடிஞ்சதும் அவரு வீட்டுக்கு வந்திடலாம். இப்ப அவரு இங்க இல்ல. அதனாலதான்... போயிடுவீங்க இல்ல?”

”டெல்லியிலேர்ந்து இங்க வரலியா? ஏன் போக முடியாது?”

“இல்ல.... ஒத்தையா....”

“அதெல்லாம் போயிடுவேன்.”

பஸ் கிளம்பும்முன் கண்டக்டரிடம், “அவுங்க புதுசு. கொஞ்சம் பாத்து எறக்கிவிடுங்கய்யா,” என்றான்.

மூச்சு முட்டியது. பாதுகாப்பும் ஒரு அடக்குமுறைதான். நீ வீட்டில் இருந்தால் உன்னை நான் காப்பாற்ற முடியும். வெளியே வந்து நான் சுவாசிக்கும் காற்றை நீ உள்ளுக்கு இழுத்தவுடனேயே அபாயம் உன்னைச் சூழ்கிறது. எட்டுத் திக்கும் வாயை அகல விரிக்கிறது உன்னை விழுங்க. என் கரிசனத்தைப் பார். எவ்வளவு அக்கறை பார் எனக்கு. கடல் வேண்டியிருந்தது அவளுக்கு. அலைகளை வீசி வீசிப் போட்டு அலையும் உதாசீனக் கடல்.

கணபதி வந்திருந்தார். வேலையை முடித்து பஸ் ஏறி அவர் வீட்டை அடையும்போது இரவு மணி ஒன்று. நீண்ட, கல்லால் ஆன ரேழியில் நடந்து வெளிமுற்றத்தைத் தாண்டிக் கதவை எட்டினார்கள். கதவைத் தட்டாமல் ‘சந்திரா, சந்திரா’ என்றார் சன்னமாக. சிரித்த முகத்துடன் ஒரு இருபது வயசுப் பெண் வந்தாள். மேல்புறம் இரும்புக்கம்பிகள் போட்ட கதவைத் திறந்தாள். கலைந்த தலை மயிரை ஒதுக்கியபடி “வாங்க” என்றாள்.

“அண்ணி மச்சுலே படுத்திருக்காங்க,” என்றாள் அவரிடம்.

“என் தங்கை” என்றார்.

சிரித்தாள். கூடத்தில் சமையலறையை ஒட்டி ஒரு சிறு பாயை விரித்தாள்.  “உட்காருங்க.”

ஸ்டவ் பற்றவைத்து,  தோசைக்கல்லைப் போட்டாள். உள்ளே விறகடுப்பு கோலத்துடன் உட்கார்ந்திருந்தது.

இரண்டு வாழை இலைக் கீற்றுகளை விரித்தாள்.

தோசை விழுந்தது அதில். மிளகாய்ப் பொடி, நெய், சாப்பிட்டு முடிக்கும்முன் டம்ளரில் சுடச்சுடப் பால்.

காலையில் டீயுடன் எழுப்பினாள்.

“எப்படித் தெரியும் டீதான் சாப்பிடுவேன்னுட்டு?”

“அண்ணா சொன்னாரு, டெல்லிக்காரங்களுக்கு டீதான் பிடிக்கும்ன்னு”

“அப்புறம்?”

“விறுவிறுன்னு நடப்பீங்கன்னுட்டு, ஒத்தையா எல்லா இடத்துக்கும் போவீங்கன்னுட்டு.”

“நீ வரியா என்னோட?”

“நான் எப்பிடி? அனுப்ப மாட்டாக வெளில எல்லாம்.”

”போகவே மாட்டியா?”

“எப்பனாச்சும். கோயில், திருவிழா, அண்ணா அண்ணி அழைச்சிட்டுப் போனா சினிமா.”

“பின்ன வீட்டுல என்ன பண்ணுவ?”

”வேலை இருக்குமே. அம்மா ஒத்தையா எப்படி எல்லாம் செய்வாக? அண்ணியும் நானும் செய்வோம். மாட்டுக்குத் தீனி, தோசை மாவாட்டறது, சட்டினி, தொவையல் அரைக்கறது எல்லாம். துணி தோய்ப்பேன். சின்னண்ணா ஷர்ட்டு, பான்ட்டு தோச்சு, கஞ்சி போட்டு, பெட்டி போட்டு வைக்கணும். இல்லாட்டி ரொம்ப கோவிப்பான். மத்தியானம் நேரம் கெடச்சா பத்திரிகை படிப்பேன். தொடர்கதை....”

“டீ நல்லா இருக்கு”

“அந்த ‘சுரபி’ பத்திரிகைல வர கதேல அந்தாளு கூப்பிடுறான்னு இவ போயிருக்கா. தொடரும் போட்டுட்டாக. அவன் கெடுத்திடுவான்னு பயமா இருக்குது. இவ போகக் கூடாதில்ல?”

”உனக்கு வெளியே போகத் தோணாது?”

“போகலாமே. கல்யாணம் கட்டிட்டா மாப்பிள்ளையோட போகலாம். கடை, கண்ணி, சினிமா, வேத்தூரு எல்லாம். மாப்பிள்ளை பார்த்தாக. ஒண்ணும் கூடிவரல்ல.”

“எந்த மாதிரி புருஷன் வேணும் உனக்கு?”

”ஏன், மாப்பிள்ளை பாத்துத் தருவீகளோ?” குறும்பு கண்ணில்.

“நான் பார்க்கட்டுமா டெல்லி மாப்பிள்ளை? செக்கச் செவேல்ன்னுட்டு பஞ்சாபி மாப்பிள்ளை?”

“கேலி பேசுறீங்க”

”இல்லல்ல. நீ சொல்லேன்.”

“எப்படிப்பட்டவருன்னா? நல்லவரா இருக்கோணும்.”

“நல்லவர்ன்னா? சிகரெட்டு பிடிக்கக் கூடாதா? குடிக்கக் கூடாதா எப்படி?”

“கோவக்காரரா இருக்கக் கூடாது. கை நீட்டக் கூடாது.”

“ஏழையா பணக்காரரா?”

“நல்ல கொணமா இருக்கோணும். படிச்சவர்னா சம்பளம் நல்லாதானே இருக்கும்? நல்லா வெச்சுக்கிடணும்.”

ஒரு பேப்பரை எடுத்தாள். “கல்யாணம் கட்டிட்டு என்னெல்லாம் வேணும் சொல்லு. நான் பட்டியல் போடறேன்.”

“கேலியா?”

”சே, நிஜமாவே. சொல்லு”

ஊஞ்சல் சங்கிலியில் தலையைச் சாய்த்து, முழங்காலைப் பலகையில்  ஊன்றி நின்றாள். கூந்தல் அலையாய் நெற்றியில் விழுந்தது. பாய்மர இமைகள் மேலெழுந்தன படகுக் கண்கள் மிதக்க. பட்டியல் அவளிடம் இருந்தது.

தெருவுல நடக்கணும் தெனம்.

ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்.

கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும்.

சினிமா போகணும்.

நெறைய ஊர் பாக்கணும்.

பின்கட்டு உலகில் பதியப் பதிய நடந்தாள். எருமை மாட்டை அடக்கினாள். தீனி போட்டாள். தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள். எட்டிப்பார்க்கும் போதெல்லாம் அடுப்படியில். தோசை சுடவா அக்கா? இட்டிலி ஊற்றித் தரட்டுமா? இரவில் புடவை விலகாமல் இரு கால்களையும் அடக்கி, மடக்கிப் படுத்தாள். யார் ஒரு தும்மல் போட்டாலும் எழுந்து மிளகு சீரகம் பொடித்த சுடுதண்ணி போட, விசை தட்டியவுடன் இயங்குபவள் போல் டாணென்று எழுந்தாள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக்கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. பல யுகங்களின் சோற்று மணம்.

பெட்டியை மூடும்போது சொன்னாள்:

“நீங்க போயிட்டீங்கன்னா உங்களை ரொம்பத் தேடும் எனக்கு.”

“கல்யாணப் பத்திரிகை வெப்பே இல்ல எனக்கு?”

”பின்ன? வெக்காம?”

கணபதி பெட்டியை எடுத்துக்கொண்டார். முன்கட்டுச் சுவர்வரை வந்தாள்.  “அதுவரை வாயேன்” என்று தெருவை ஒட்டிய கதவைக் காட்டியதும் “ம்ஹூம்” என்றாள். சிரித்தாள். கத்திரிப்பூ நிறச் சேலை அணிந்திருந்தாள். தெருக்கதவை எட்டியபோது, “அக்காவுக்கு நம்ம ஊரு அல்வா வாங்கித்தர மறக்காதீக” என்று அவள் குரல் வந்தது. திரும்பிப் பார்த்தபோது அவள் கட்டியிருந்த கத்திரிப்பூ நிறச் சேலையின் தலைப்பு முனை மட்டும் தெரிந்தது.

கத்திரிப்பூ நிறத் துணியை மனதில் படரவிட்டாள். அது மடங்கி விரிந்து அலையாய்ச் சுழன்றது. கத்திரிப்பூ நிறக்கடல். அது சிறிது சிறிதாய் விஷ நீலமாகியது. பொங்கிப் பொங்கி வந்தது. கன்னத்தில் சொடுக்கும் அடியின் ஓசை வந்தது. முருக பக்தரின் அடி.

பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் ஒரு பொட்டலத்தை நீட்டினான்.

“என்ன இது?”

“அந்த அண்ணிகிட்ட நீங்க கிளம்பறீங்கன்னுட்டு சொன்னேன். தோசை கட்டித் தந்தாங்க. வழியில சாப்பிட.”

சந்திராவின் வேண்டுகோள்படி கணபதி அல்வாவுடன் வந்தார். வாழை இலையில் நெய்யுடன் வழுக்கிய அல்வா.

********

10 comments:

  1. இதோ ஒரு தங்கப் புதையல்: அழியாச் சுடர்கள். நீங்கள் தேடி அலையும் பொக்கிஷங்கள் அனைத்தும் அனேகமாக இங்கேயே கிடைக்க வாய்ப்பு உண்டு! அருமையான சேவை!

    அழியாச் சுடராம், வெகுவாகப் பாராட்டப் பட வேண்டியவராம், நம்மை அவருக்குக் கடன் பட்டவராக்கி மகிழ்வாராம், வாழ்வாங்கு வாழ்வாராம், இவ்வையகத்தில்!

    ReplyDelete
  2. என்ன என்று சொல்லத் தெரிய வில்லை, இந்தக் கதையில் என்னால் ஒன்றவே முடிய வில்லை.
    குழப்பும் மொழி நடையா, அல்லது விவரித்தல் முழுமையாக இல்லாது இருத்தலா, வட்டார மொழி குளறுபடிகளா.

    நான் சின்னப் புள்ளையா இருக்கச்சொல்ல. (தாமிரபரணி வீ கே புரத்தில் இருந்து அம்பத்தூர் வந்து விட்டது போல)

    ReplyDelete
  3. அற்புதமான கதை இது...

    இதுல குழப்ப என்ன இருக்குண்ணு புரியலை எனக்கு! வட்டார மொழி குழறுபடி மட்டுமே ஒரு குறையா சொல்ல முடியுமா என்ன? அப்படியே இருந்தாலும், இருக்கச்சொல்ல எனக்குத் தெரிஞ்சு தர்மபுரி, சேலத்துல கூட பேசுறாங்க... இது போல வட்டார மொழி சிதைவுறுவது இப்போது ரொம்ப பரவலா இருக்கத்தான் செய்யுது. விவரித்தல் முழுமையா இல்லண்ணு என்னால ஒத்துக்க முடியாது... இது ஒருவிதமான நரேட்டிங் ஸ்டைல்... இதுல சொல்லவேண்டியது எல்லாம் தெளிவாக இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது... ராகவன்

    ReplyDelete
  4. கதை எனக்கு ஒட்டவே இல்லை. நமக்கெல்லாம் ஆளை அடித்துப் போடும் ஆர்ப்பாட்டமான கதைகள்தான் சரி வரும் என நினைக்கிறேன். இதுமாதிரி மென்மையா பெண்ணியப் பிரச்சினையை விவரிக்கிற கதையெல்லாம் ஒத்துக்காது போல்ருக்கு. வட்டார வழக்கு - நாசம்!

    ReplyDelete
  5. சொல்ல வருவதைப் புரிய நிறைய சாமர்த்தியம் ஒன்றும் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. இதில் கதைக் குழப்பம் என்று சொல்லக் காரணம் தெரியவில்லை. மென்மையான் உணர்வுகளை விவரிக்கும் போது கண்ணீர் வராவிட்டால் ஒன்றும் ”குழப்பமில்லை” (மலையாளக் ”குழப்பம்” = பிரச்னை)
    சற்றே மனம் வெதும்பினாலும் போதும்.
    லட்சுமணன் சேலம்

    ReplyDelete
  6. மிக அழகான எழுத்து. சொல்ல வந்ததை நல்லாவே சொல்லி இருக்காங்க... இது என்ன கட்டுரையா, தனித்தனி தலைப்பு போட்டு, பத்தி பத்தியாக விவரிக்க? குழப்பம் எங்கிருக்கிறது?

    ReplyDelete
  7. அம்பையின் கதைகள் ஒரு சூழ்நிலையை வெளிகட்டுவதர்காக படைக்கப்பட்டது.
    இன்றும் கிராமத்து அல்லது வெளிகாடுதல் கட்டுபடுத்தப்பட்ட சூழ்நிளைகளிகளும் பெண் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஒரு
    எடுத்துகாட்டு.
    கதைகள் படித்து உள்வாங்கி உணர்வதற்காக எழுதபடுகிறது
    உள்வாங்கும் பக்குவம் படிக்க படிக்க மேம்படுகிறது.
    கணணி கற்கும் பெண்ணுக்கும், தோசை மற்றும் குடும்பம் மற்றுமே சிந்திக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் காட்டபடுகிறது.
    எந்த மனித உயிரும் சூழ்நிலைகேற்ப நடவடிக்கைகளை மேம்படுத்த படைக்கபட்டிருகிறது.
    நல்ல படைப்பு படிக்க படிக்க எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெளிவு வருகிறது

    கண்ணன், நைரோபி, கென்யா

    ReplyDelete
  8. “எப்படிப்பட்டவருன்னா? நல்லவரா இருக்கோணும்.”

    “நல்லவர்ன்னா? சிகரெட்டு பிடிக்கக் கூடாதா? குடிக்கக் கூடாதா எப்படி?”

    “கோவக்காரரா இருக்கக் கூடாது. கை நீட்டக் கூடாது.”

    “ஏழையா பணக்காரரா?”

    பெண்களின் நிலையை அழகாக விவரிக்கும் கதை. எனக்கென்னவோ மொழிநடை குழப்பியது போல் தெரிய வில்லை, நன்றாகத்தான் இருந்தது; தனித்தன்மை இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாம்.

    ReplyDelete
  9. காலங்காலமாய்ப் பெண்கள் குடுமபக் கைதிகளாக இருப்பதை கதை சொல்கிறது.வீடுபெண்கள் அனைவருக்கும் அதே வேலை. நல்ல கணவன் என்பதற்கான அவர்கள் சொல்லும் காரணங்கள் ஆணாதிக்கப் போக்கைக் காட்டுகிறது. ஆண்களுக்கு அடிமைகளாக இருப்பதே பெண்ணின் கடன் என்பது போன்ற விவரணைகளைக் கதையினூடே சொல்கிறார் அம்பை.வெளியே போனாலும் ஆண்களின் துணையின்றி செல்ல முடியாத பெண்களின் குடும்பச்சிறை கதையில் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
    http://kopunniavan.blogspot.com
    கோ.புண்ணியவான், மலேசியா.

    ReplyDelete
  10. நான் படித்த முதல் அம்பையின் கதை, மிக நல்ல கதை சொல்லல்.

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.