May 31, 2011

இசைப்பயிற்சி - தி. ஜானகிராமன்

மல்லிகையை எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். எல்லோரும் செய்தார்களோ என்னமோ, அவருக்கு அப்படித் தோன்றிற்று. முதன் முதலாக விசாரித்தவரே பரிகாசம் செய்து, சிரித்துவிட்டுப் போனார். அதனால், பிறகு கேட்ட யாருமே கேலி செய்வதுபோல மல்லிக்குthija-logoப்பட்டது.

   காலையில் அவர் வழக்கம்போல ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஜபம், பூஜைகளை முடித்து, தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். எட்டரை மணியிருக்கும். ஊர்க்கோடி திரும்பியதும் கூட்டுறவு மளிகைக்கடை மீது வைத்திருக்கும்  ‘ரேடியோ’ப் ‘பெனல்’ ஓய்ந்துவிட்டது. வெயில், தெரு முழுவதும் விழுந்து வெள்ளையாகவும், சற்று சூடாகவும் மாறிக்கொண்டிருந்தது. தெருக்குழந்தைகள் அடுத்த ஊர்ப் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டன. நடமாட்டம் இல்லை. திடுதிடுவென்று சுப்புக்குட்டி வீட்டு ஆள், ஒரு வண்டி நிறைய நாற்றுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு போனான். அதோடு சந்தடி தீர்ந்துவிட்டது. ஏழெட்டு வீடு தள்ளி ராசு, வாசலில் ஒரு பெரிய கோரைப் பாயைப் பிரித்துச் சுருளாமல் ஓரங்களில் கல்வைத்து, உள்ளேயிருந்து காணத்திற்காகத் தேங்காய்ப் பருப்புகளை கூடை கூடையாகக் கொண்டு கொட்டித் திலாவிக்கொண்டிருந்தான்.

   அப்பொழுதுதான் பாலன், தெருவோடு போகிறவர், திண்ணையில் உட்கார்ந்திருந்த மல்லியைப் பார்த்துவிட்டு, “என்ன மல்லி?” என்றார்.

   ``என்ன மாமா?”

   ``என்னமோ கேள்விப்பட்டேனே!”

   ``என்ன?”

   “குப்பாண்டிக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்கிறேன்னீராமே” என்று கொளகொளவென்று சிரித்தார் பாலன்.

   ``ஆமாம்.”

   ``ஆமாமா!” என்று ஒரு கிண்டல் வியப்போடு மேலும் சிரித்தார் பாலன்.

   இதற்கு என்ன சிரிப்பு?

   ``எதுக்காக?” என்று அடுத்தபடியாக ஒரு கேள்வி.

   ``அவனுக்குச் சாரீரம் நன்னாருக்கு. ஞானம் இருக்கு. நன்னா வரும்போலிருக்கு” என்றார் மல்லி.

   ``அதுக்காக!... அவனுக்குப் போய்ச் சொல்லிக் கொடுக்கவாவது?”

   ``ஏன், சொல்லிக்கொடுத்தா என்ன மாமா?”

   பாலன் அதைக்கேட்டுத் திகைத்துப் போனாற்போல மல்லியைப் பார்த்தார். ``என்னன்னு கேட்டப்பறம் நான் என்ன சொல்றதுக்கு இருக்கு?” என்று தெருவை, மேற்கையும் கிழக்கையும் பார்த்தார். பார்த்துக்கொண்டே சிரித்தார்.

   ``சரி, எங்கே வச்சுச் சொல்லிக்கொடுப்பீர்?”

   மல்லி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. குப்பாண்டியை எங்கே வைத்துச் சொல்லிக் கொடுப்பது?

   இதைப்பற்றி நாம் ஏன் யோசிக்கவே இல்லை என்று அவருக்குத் திடுக்கிட்டுவிட்டது.

   ``ஏன்யா?’’ என்று பதிலுக்கு அவசரப்படுத்தினார் பாலன்.

   ``அதைப்பற்றி இன்னும் யோசிக்கலே மாமா’’ என்றார் மல்லி.

   ``யோசிக்கலையா!’’ என்று மீண்டும் சிரிப்பு.

   ``நாம் ஏன் இவ்வளவு அசடாகி விட்டோம் என்று மல்லி ஒரு நிமிஷம் குன்றிப் போய்விட்டார். இப்படிச் சிரிக்கும் படியாக எதையோ செய்து, கடைசியில் நியாயமான ஒரு கேள்விக்குப் பதிலும் சொல்லமுடியாமல்!’’

   ``உள்ள கூடத்திலே வச்சிண்டு சொல்லிக் கொடுக்கறதாக உத்தேசமில்லையே’’ என்றார் பாலன்.

   ``என்ன மாமா இது!’’ மல்லி அதிர்ந்துவிட்டார்.

   ``இல்லே. லோகம் போறபோக்கைப் பார்த்தா, நான் கேக்கறது ஒண்ணும் தப்பில்லையென்னு கேக்கறேன்!’’

   ``உள்ள அழைச்சு வச்சா, சொல்லிக் கொடுப்பேன்? என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்?’’ என்று மனத்தாங்களோடு மல்லி சொன்னதை முழுவதும் கேட்காமல் மீண்டும் சிரித்துக்கொண்டே எழுந்தார் பாலன், ``ஆலயப் பிரவேசம் ஆயிடுத்து; தெருப் பிரவேசம் ஆயிடுத்து; கிருகப் பிரவேசமும் நீர் மனசு வச்சா__காந்தி மாதிரி__அதுவும் நடக்க வேண்டியதுதானே. என்னமோ! யார் எதைத் தடுக்க முடியப்போறது இந்த நாளிலே! ஜமாயும்’’ என்று சொல்லி எழுந்து கச்சத்தை உதறிக் கொண்டே தெருவில் இறங்கி, தனக்கு இதைவிட முக்கியமான ஏதோ வேலையிருப்பதுபோல், யாரோ எதிர்பார்த்த ஆசாமி வருகிறானா என்று பார்ப்பதுபோல், வெயிலுக்கு நேராகக் கண்ணுக்கு மேல் கையைக் கவிழ்த்துத் தெருக்கோடியைப் பார்த்துக் கொண்டே நடந்தார் பாலன். ஊரிலேயே வயதில் மூத்த மூன்று பேர்களில் பாலன் முக்கியமானவர். சொத்து சுதந்திரம் என்று அதிகமில்லாவிட்டாலும் வயதாலும் வாயாலும் ஊரில் ஒரு அந்தஸ்து வந்துவிட்டது. அவர் சொல்லி நாலு பேர் கேட்பார்கள்.

   அவர் கேட்ட கேள்விகளை நினைத்துத் தான் அசட்டுத் தனம் செய்துவிட்ட திகைப்பிலிருந்து மீளாமல், நெளிந்து கொண்டேயிருந்தார் மல்லி.

   ஒரு அரை நாழிகைக்கெல்லாம் கடுக்கனும் பெரிய உடம்புமாக பண்ணை சீதாராமன்__வாசலோடு போகிறவன். ``என்ன மாமா, குப்பாண்டிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போறேளாமே!’’ என்று கேட்டு, தெருவிலேயே நின்றான். சீக்கிரம் பதில், நான் போகவேண்டும் என்பது போலிருந்தது, அவன் நிற்பது.

   ``ஆமாம். ஏதோ சாரீரம் நன்னாருக்கு. ஞானமும் இருக்கு போலிருக்கு’’ என்றார் மல்லி. ``பேஷா __ இப்பத்தான் யாருக்கு, எது இருக்கு இல்லைன்னு சொல்ல முடியலியே? யாராயிருந்தா என்ன, வித்யாதானம் பெரிய விஷயம் இல்லையோ!’’ என்று சொல்லிக் கொண்டே நடந்துவிட்டான் சீதாராமன். வெறுமே சொல்லவில்லை. ஒரு சிரிப்போடுதான் சொன்னான். அப்புறம் அதே கேள்வியை, சொல்லிவைத்தாற்போல் எத்தனை எத்தனைபேர் கேட்டார்கள்? வெங்கடராமன், ராமையா, ஆனைக்கால் தண்டபாணி, சாமி சாஸ்திரி, கணக்குப் பிள்ளை__இவர்களெல்லாம் நாற்பது ஐம்பது வயசு வர்க்கம். இருபது இருபத்தைந்து வயதைச் சேர்ந்த வாலி, கோபாலி, மாஞ்சன்__இவர்களும் விட்டு வைக்கவில்லை. வாலிக்குக் கபடு தெரியாது. ஆனால், அவன் கேட்பதிலே ஒரு ஆவல் இருந்தது. ``இந்த மாதிரி தவறான காரியம் செய்யலாமோ?’’ என்பது போலும் இருந்தது__கோபாலி பெரிய சிரிப்பாகச் சிரித்துக்கொண்டு கேட்டது. அதற்கு வெகு காலமாக வலிப்பு. உடம்பு துரும்பு. சாப்பிடுவதையும் அடிக்கடி ஜுரம் ஜுரம் என்று படுத்துக்கொள்வதையும் தவிர வேறு ஒரு வேலையும் செய்யமுடியாது. அது என்ன பரிகாசச் சிரிப்புச் சிரித்துவிட்டுப் போயிற்று!

   பட்டா மணியும் கேட்கவில்லை. பேசாமல் நடந்து போனார். அவருக்கு மட்டும் சேதி தெரியாமல் இராது. ஆனால், இந்த அசட்டுத் தனத்தைப் பற்றிப் பேசலாமோ என்று போவது போலிருந்தது.

   ஆண்கள் போதாதென்று மூன்று பாட்டிகள் வேறு கேட்டுவிட்டுப் போனார்கள். அந்த வேம்புப் பாட்டிக்கு அரைச் சித்தம். சர்வ அனாதை. சோற்றுக்கே வழி இல்லை. அதுகூட சிரித்துக்கொண்டு கேட்டுவிட்டுப் போயிற்று.

   இனிமேல் பொறுக்க முடியாதென்று நினைத்து எழுந்து உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார் மல்லி. அவர் மனைவி ஆற்றங்கரைக்குக் குளிக்கப் போயிருந்தாள். ஊஞ்சல் `கீசுகீசு’ என்று கத்திற்று.

   இப்பொழுது என்ன செய்கிறது?

   ஊர் முழுவதும் இந்தச் செய்தி எப்படிப் பரவிற்று? பரவினாலும், வந்து ஒவ்வொருவராக விசாரிக்கும்படியாகவோ, கேலி செய்யும்படியாகவோ இதில் என்னதான் இருக்கிறது?

   காரணம் தெரியாமல் ஓர் இரக்கமும் அச்சமும் நமக்கு வருவானேன்?

   முந்தாநாள் காலை, பிள்ளையார் கோவிலை ஒட்டின சத்திரத்துக் கொல்லையில் பூப்பறித்துக் கொண்டிருந்தார் மல்லி. பவழமல்லி மரத்தை உலுக்கிவிட்டு, கீழே விழுந்த பூக்களைப் பொறுக்கிக் குடலையில் போடும்போது ஒரு ராகத்தை__ தன்யாசிதானே__ தன்யாசிதான்__முணு முணுத்துக் கொண்டேயிருந்தது தொண்டை. என்னமோ பவழமல்லியின் செங்காம்பைப் பார்க்கும்போது அந்த ராகம் பாடவேண்டும் போலிருக்கும். என்ன சம்பந்தமோ! அப்பொழுது அவர் இழுப்பதையெல்லாம் வாங்கி வேறு ஒரு குரல் எங்கோ பாடுவது கேட்டது. அவர் ஒரு பிடி பிடித்தால், அதையே இன்னும் கொஞ்சம் கூட்டிச் சேர்த்து அழகாகப் பிடித்தது அது. சற்று நிறுத்திக் கவனித்தார் அவர். என்ன குரல்! இந்த மாதிரி ஒரே ஒரு குரலைத்தான் கேட்டிருக்கிறார் அவர். சென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக சினிமாப் பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல்__அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரதைகள், அன்றுதான் ஒன்று புலப்பட்டது__பிறவி வேறு, பயிற்சி வேறு என்று. சபைகளிலும் சங்கீத உலகிலும் முதல் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் முக்காலே மூன்றுவீசம் பயிற்சி பயின்றவர்கள், பாடப்பிறந்தவர்கள் இல்லை என்று அப்பொழுது என்னமோ தோன்றிற்று. அப்புறம் எத்தனை சர்ச்சைகளைக் கேட்டும், கச்சேரிகள் கேட்டும், அதிர்ச்சி மாதிரி தாக்கிய அந்த எண்ணம் போகவில்லை. பிடிவாதம் ஆகிவிட்டது. அதே லாகிரி சாரீரமாக, பிறவியாக இருக்கிறது இந்தக் குரல்.

   நாலைந்து வருடமாயிற்று, ஊருக்கு வந்து குடியேறி நமக்குத் தெரியாமல் இது யார் என்று குடலையை எடுத்துக் கொண்டே குரல் வந்த திசையில் நடந்தார். சத்திரத்திலிருந்து வெளியேறி வாய்க்கால் மதகைக் கடந்து, சாலையை அடைந்ததும், குரல் நெருங்கிற்று. மூங்கில் கொல்லையிலிருந்து கேட்டது. அருகே போனதும் வேலி முள்ளிடுக்கில் கேட்டது. அங்கு ஒரு முகம்__முண்டாசு.

   ``யார்றாது பாடறது?’’ என்றார்.

   சட்டென்று ஓர் உருவம் நின்றது. குப்பாண்டி!

   ``மைக்கேலு மகனாடா?’’

   ``ஆமாங்க!’’

   ``நீயா பாடிண்டிருக்கே!’’

   ``சும்மாதான் சாமி’’ என்று முகத்தை நாணத்தில் அப்பால் திருப்பிக்கொண்டு நின்றான் அவன்.

   ``ஆமாங்க. சும்மாத்தாங்க. ஒண்ணும் நினைச்சிக்காதீங்க. இனிமே இல்லீங்க’’ என்று அந்த முட்களுக்கிடையே முள்ளில் மேல் நிற்பதுபோலவே நின்றான் அவன்__இனிமேல் பாடமாட்டேன்; பெரிய மனது பண்ணி இங்கிருந்து போய் விடுங்கள் என்று கெஞ்சுவதுபோல்.

   ``யார்ட்டடா கத்துக்கிண்டே இதெல்லாம்?’’

   ``அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.’’

   ``டேய், திவ்யமாய்ருக்குடா! நீயாவா பாடறே இப்படி? ஒருத்தருமா சொல்லிக் கொடுக்கலே!’’

   ``அட போங்க, கெடக்கு’’ என்று மறுபடியும் நாணி வளைந்தான் அவன்.

   ``எங்கடா கேட்டே இதெல்லாம்?’’

   ``நாயனங்க...’’

   ``அப்புறம்?’’

   ``அடபோங்க, எனக்கு வேலையிருக்கு. அந்திக்குள்ளாற தலைமட்டுக்கும் கட்டியாகணும் வேலியை.’’

   ``எலெ, சும்மா சொல்றா. கோவில் உற்சவத்திலெ கேட்டியா நாயனம்?’’

   ``ஆமாங்க’’__பதில் சொல்ல ஒரு அலுப்பு.

   ``அப்பறம் எங்கெல்லாம் கேப்பே?’’

   ``அட, நீங்க போங்க, கிடக்கு.’’

   ``எலெ, இப்ப சொல்றியா இல்லியா?’’

   ``சினிமா, கூத்து, போதுங்களா__நீங்க போங்க.’’

   ``யாருட்டவும் சொல்லிக்கலெ?’’

   ``இல்லீங்கறேன்.’’

   ``வகையா சொல்லிக்கிட்டா எப்படியிருக்கும் தெரியுமா? எலே, நீ எப்படிப் பாடறே தெரியுமா? சொல்லிக்க வேண்டாம்?’’

   ``ஐயய்யோ!’’

   ``நான் சொல்லித் தரப் போறேண்டா உனக்கு.’’

   ``எனக்கு வேலை கெடக்குங்க.’’

   ``நான் வேலை மெனக்கட்டுத்தாண்டா இந்த மண்டுப் பய ஊர்லெ உட்கார்ந்திருக்கேன். உனக்குச் சொல்லித்தான் கொடுக்கப்போறேன். பாட்டு, தாளம் எல்லாம் சொல்லிக் கொடுக்கறேன். அப்பறம் உங்க சாமியார்ட்ட போய்ப் பாடிக்காமி. ஞாயித்துக்கிழமை கோவில்லெ உள்ளெ கூப்பிட்டு உன்னைப் பாடச் சொல்றாரா இல்லியா பாரு! அடுத்த வருஷம்....’’ ``என்ன சாமி இது?’’

   ``அப்பேர்ப்பட்ட ஞானம் இருக்குடா உனக்கு! நல்லாத் தெரிஞ்சுகிட்டு பாடினா, கர்த்தருக்கு எத்தனை சந்தோஷமாயிருக்கும்? மரவேலிக்கு இந்தண்டை நிக்க வாண்டாம். கோவிலுக்கு உள்ள சாமியார் கிட்டவே போயி பாடலாம். அவரே கூப்பிட்டு கிட்ட நிக்கவச்சு, பாடச் சொல்லுவார். இத பாரு, இன்னிக்கி செவ்வாக் கிழமையா? வெள்ளிக் கிழமை காலமெ வீட்டுக்கு வந்து என்னைப் பாரு. நீ காசு, கீசு தரவேண்டாம். ஒரு தேங்கா பழம் மாத்திரம் கொண்டுவா. சாமியை வேண்டிக்கிட்டு வாத்தியாருக்கு ஒரு கும்பிடு போட்டு ஆரம்பிக்கணும். அதுக்குத்தான். நீ எங்க பசு மாட்டுக்குக்கூட புல்லறுத்துப் போடவேண்டாம். வெறுமே சொல்லித்தரேண்டா! என்ன? வரேன்னு சொல்றா. சாமி, ஞானம் கொடுத்திருக்கில்ல? அதைச் சரியா ஒரு ஒழுங்கு பண்ணி உபயோகப்படுத்தலே, ரொம்பக் கெடுதல். சாமி என்னாத்துக்குக் கொடுத்திருக்கு? இப்படி வேலி முள்ளிலே உக்காந்து வகை தெரியாமே இழுக்கறதுக்கா?’’

   நாலு பக்கத்திலிருந்தும் அவனைத் தாக்கினார் மல்லி. குழையடித்தார், மிரட்டினார், கெஞ்சினார்.

   ``நீங்க என்னதான் செய்யணுங்கிறீங்களாம்?’’ என்றான் கடைசியில்.

   ``வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு வரவேண்டியது. அப்பறம் தினமும் காலையிலே வந்து கத்துக்கவேண்டியது. ரண்டு வருஷத்திலே பாரு.’’

   ``சரிங்க’’

   ``அப்புறம் இந்த முள்ளு குத்திண்டே நிக்கவாண்டாம். பெரிய வித்வானா, கடுக்கண் சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு பாகவதர் மாதிரி, அம்மா பேட்டையார் மாதிரி, கச்சேரி பண்ணப் போறடா. சத்தியமாச் சொல்றேன்.....’’

   ``சரிங்க, சாமி.’’

   விழுந்தாண்டா பயல்!

   ``வெள்ளிக்கிழமை விடிய காலமே காத்திண்டிருப்பேன். நீ வரலே__’’

   ``அப்புறம் பாரேன். வாரேங்கறேன்.’’

   அந்த நிமிஷம் அந்தக் கிராமத்தையே கொளுத்திவிட வேண்டும் போலிருந்தது மல்லிக்கு. அத்தனை ஞான சூன்யங்கள்! அத்தனையும் ஞான Êசூன்யங்கள்! மாடு, சாணி, விரை, நெல்லு, எருவடி, யுரியா, சல்பேட்டு, கவணை, மடை, வேறு ஒன்றுமே கிடையாதா?

   மல்லிக்குப் பொங்கிக் கொண்டு வந்தது. எப்படிப்பட்ட சாரீரம்! எப்படிப்பட்ட ஞானம்! ஏய், நான் சொல்லிக் கொடுத்து, அத்தனையும் உன் மண்டையிலே எழுதி, நீ அதை அப்படியே ஜிலுஜிலுன்னு ஜிலுஜிலுண்ணு__

   தொண்டையைக்கூட அடைத்தது அவருக்கு.

   நாலைந்து வருடங்களாக, ஊருக்கு வந்து குடியேறிய நாள் முதலாக இறக்கம், ஒரு சோர்வு! பாடச் சொல்லி எவன் கேட்கிறான் இங்கே? அதற்கு முன்னால் மட்டும் என்ன வாழ்ந்தது? சென்னைக்குப் போனபோது, பெரிய வித்வானாய், கொடி கட்டிப் பறக்கவேண்டும் என்று தான் போனது. போன வேளையோ என்னவோ, கையைக் காலைப் பிடித்து முழுசாகப் பத்து கச்சேரி தேறவில்லை. ட்யூஷன் வாத்தியாராகவே காலம் தள்ளும்படியாகிவிட்டது.

   பெரிய மனிதர்கள் காலைப் பிடிப்பதற்குப் பதிலாக, சின்ன மனிதர்கள் காலைப் பிடிப்பது பலித்தது. அவர்களுக்கு நம் கஷ்டங்கள் புரியும். கடைசியில் அதுவும் அவ்வளவாகப் பயனில்லை. புருஷன் பெண்டாட்டிக்குக் கூடக் காணாமல் தான் சென்னையில் சம்பாதிக்க முடிந்தது என்றால் ஒரு மனிதனுடைய அதிர்ஷ்ட்டம் எவ்வளவு பெரியது! வாடகை தராமல், காசு கொடுத்து அரிசி, பால், மோர், கறிகாய் வாங்காமல் காலந்தள்ள கிராமம் இருக்கும்போது, பட்டணம் என்ன, பம்பாய் என்ன? சோற்றுக்குத் தானே பாடினோம் என்று ஆகிவிட்டபோது, பாடாமலேயே சோறு கொடுக்கிற பட்டிக்காட்டை விடவா சொர்க்கம்?

   மல்லி ஒருநாள் நாலு சாக்கில் பாத்திரங்களையும் பழைய மெத்தைகளையும் சென்னையில் சம்பாதித்து வாங்கின ஒரு மர பீரோவையும் இரண்டு நாற்காலிகளையும் கடிகாரத்தையும் சுருதிப் பெட்டியையும் சங்கீத, சன்மார்க்க புத்தகங்களையும் கட்டிக்கொண்டு வாழா வெட்டி மாதிரி பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். இரண்டு மூன்று வருடம் தினமும் தனியாக உட்கார்ந்து பாடினார். வர வர அதுவும் தேய்ந்துவிட்டது. ராதா கல்யாணம், ஏகாதசி பஜனையென்று பக்கத்து ஊர்களுக்குப் போய்ப் பாடுவதே போதும் என்றாகிவிட்டது. மூட மூட ரோகமாகி அந்த இடங்களில்கூட தொண்டையைப் புரட்டித் தள்ளுகிற கதி வந்துவிட்டது. இருபது லட்சம் ஜனங்கள் வாழ்கின்ற சென்னையில் ஸுஸ்வரம், சுத்தம் என்று அவரைச் சொன்னவர்கள் மூன்றே நண்பர்கள். கணக்குப்படி பார்த்தால் இருநூறு பேர் முழுசாகத் தேறாத கிராமத்தில் எத்தனை பேர் அப்படிக் கிடைப்பார்கள்? சைபர், சைபர், சைபர்....

   ஒரே ஒரு ஆள் சிஷ்யனாக வந்தான் மூன்றாம் வருஷம். ஸம்ஸ்கிருதம் படித்த பையன். நல்ல குரல். ஆனால் ஆறு மாசம் சொல்லிக்கொள்ள அவனுக்குப் பொறுமையில்லை. சம்பாதிக்க சென்னை போய்விட்டான். சென்னையில் அவர் ஆதியில் செய்ததையே அவனும் செய்து கொண்டிருக்கிறானாம். பேட்டை பேட்டையாக சபைகளின் காரியதரிசிகளிடம் பல்லை இளித்துப் புராணம், உபநியாசம் ஏற்பாடு செய்யச் சொல்லி, கதை சொல்லி, நடு நடுவே வருகிறவர்களுக்குப் புகழ் சொல்லி, தட்டெடுத்து.....

   குப்பாண்டி இருக்கிறான் என்று இத்தனை நாளாகத் தெரியாமல் போய்விட்டதே!

   ஆனால் பாலன் சிரிக்கிறதும், மற்றவர்கள் சிரிக்கிறதும்... பாட்டிகள் `நாப்பு’ காட்டுகிறதும்.... என்ன இது?

   கீசுகீசென்று ஊஞ்சல் கத்துகிறது. அதையே கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் போலிருக்கிறது. மனைவி வந்தாள். சமைத்துச் சாதம் போட்டாள். சாதம் போடும்போது, `குப்பாண்டிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போறதாமே?’’ என்றாள்.

   ``ஆமா.’’

   ``படித்துறையிலே வாலாம்பா பாட்டி கேட்டா.’’

   ``எப்படிக் கேட்டா?’’

   ``என்னடீம்மா, ஒரே பட்டணக் கோலமாயிருக்கே. உள்ளியே வச்சிண்டு சொல்லிக் கொடுக்கப் போறாராமே உங்க ஆத்துக்காரர்’ன்னு கேட்டா. எனக்கு ஒண்ணும் தெரியாது பாட்டி, அவாளைத்தான் கேக்கணும்னேன்.’’

   ``யார் அப்படிச் சொன்னான்னு கேக்கப்படாதோ?’’

   ``சொல்லிக் கொடுக்கப்போற சமாசாரமே அங்கேதானே தெரியும் எனக்கு’’ என்று தங்களுக்கிடையே இருந்த உறவின் நெருக்கத்தை லேசாகக் குத்திக் காட்டினாள் மனைவி. இரண்டு பேருக்கும் அவ்வளவுதான் சல்லாபம். அதுவும் அவருடைய இறக்கங்களில் ஒன்று. ஒரு பிள்ளை பெற முடியவில்லையே என்ற இவர் மேல் அவளுக்குக் கோபம். அவள் மீது இவருக்குக் குறை.

   சாப்பிட்டுக் கையலம்பியதும் திண்ணைக்கும் போகவில்லை. உள்ளுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். பிள்ளையார் கோவிலுக்குப் போகிற வழக்கம். அதற்கும் பயமாக இருந்தது. ஊஞ்சலோடு கிடந்தார். இருட்டிய பிறகுதான் பிள்ளையார் கோவிலுக்கு நடந்தார். அதுவும் கொல்லை வழியாக. பிள்ளையாரின் முன்பு குட்டிக்கொண்ட பிறகு சேரிக்குப் போய் குப்பாண்டியைக் கூப்பிட்டு நாளைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன? வயல் வரப்புகளைக் கடந்து போகவேண்டும். களத்தின் வழியாகப் போனார். பாதி தூரம் நல்ல பாதை. போனால், களத்திலே யாராவது நிற்பார்களே... மறுபடியும் அதே கேள்வி. வரப்புப் பாதையிலேயே முழுவதும் போனால்...? சீ... என்ன இது? நம்மை யார் தடுக்க? நானா கோழை?

   திரும்பிவிட்டார் மல்லி.

   சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். சற்று இறுக்கமாயிருந்தது. ஆனால், வழக்கம்போல் வெளியே போகவில்லை. பயம் வயிற்றில் நெளிகிறது. கீசுகீசென்று ஊஞ்சலிலேயே படுத்தார். காற்று வருகிறது.

   ஆனால், பயம்? பயம் தீரவில்லை. மனசாட்சி என்கிறார்களே__இதுதானோ? மனச்சாட்சி என்ன என்று ஆராய்ந்து பார்த்தார். அந்தக் கவலை மனச்சாட்சி இல்லை என்று புரிந்து விட்டது. ஆனால், பயம்?....ஏன் இன்னும் குடைந்து கொண்டேயிருக்கிறது? பஞ்சாயத்துக் கூடி அவர் மீது கட்டுப்பாடு செய்கிறார்கள். பாலன், சுப்புக்குட்டி, சீதாராமன், கர்ணம், பட்டாமணியம் எல்லோரும் ஊரைக் கட்டுப்படுத்தினார்கள். ``கோடாலி!’’ என்று பாலன் மாமா, கையை வீசிக்கொண்டு விழியை உருட்டிக்கொண்டு அடிக்க வருகிறார்.

   “என்னது!... என்னது!.... என்னன்னேன்!’’

   தள்ளுகிறாற் போலிருந்தது. யாரும் தள்ளவில்லை. மனைவி அவரை உலுக்கினாள்.

   “என்ன, இரைஞ்சு பேத்தித்தே! _ ஊளையிடறாப்பல சொப்பனம் கண்டுதா என்ன?’’

   அந்த ஒரு கனவோடு போயிற்று. ஒரு மணிக்குப் பிறகு தூக்கம் வந்தது.

   “எழுந்துக்கலாமா?’’ என்று மனைவி எழுப்பினாள். “குப்பாண்டி கூப்பிடறான் கொல்லையிலே’’ என்றாள்.

   மல்லி எழுந்தார். கொல்லைப்பக்கம் வேகமாக நடந்தார். குப்பாண்டி தேங்காய் பழத்துடன் வந்து மாட்டுக்கொட்டகைக்குப் பக்கத்தில் நின்றான்.

   “கும்பிடறேன், சாமி’’

   “வந்துட்டியா, இரு வந்துடறேன்’’ என்று பல் தேய்த்துவிட்டு, சுருதிப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.

   “தேங்காய் பழத்தை வச்சுட்டு சுவாமியை வேண்டிக்கோ’’

   அவனே விழுந்து கும்பிட்டான். அவர் கிணற்றங்கரையில் தளம் போட்டிருக்கிற இடத்தில் ஈரமில்லாத இடமாக உட்கார்ந்து சுருதிப் பெட்டியை அவிழ்த்துவிட்டார்.

   “அதோ அப்படி உட்காரு... அங்கேதான், கறிவேப்பிலைக் கன்னுகிட்ட உட்காரேன்’’ என்றார்.

   குப்பாண்டி சப்பணம் கொட்டி உட்கார்ந்து கொண்டான். இவருக்கும் அவனுக்கும் நாற்பதடி தூரம் இருக்கும். நடுவில் ஏழெட்டு துளசிச்செடி. ஒரு அந்தி மந்தாரைச் செடி.

   “சொல்லு... நான் முன்னாலே ஸா பா ஸா சொல்றேன். முன்னாடி ஒரு தடவை கேட்டுக்கோ. அப்புறம் ஒண்ணொண்ணாச் சொல்லுவேன். நீ பாடணும்..... ஸா பா ஸா.... இப்ப சொல்லு, சொல்லு. ஸா........’’

   “ஸா’’

   அப்பா! என்ன குரல்! என்ன குரல்!

   ஸரிகம பதநிஸா, ஸநிதப மகரிஸா

   ஸரிகம ஸரிகம ஸரிகம பதநிஸா

   ஸநிதப ஸநிதப ஸநிதப மகரிஸா.

   முதல் காலம், இரண்டாவது காலம், மூன்றாவது காலம்... என்ன புத்தி இந்தப் பயலுக்கு! என்ன வேகம்? என்ன இனிமை! அட, கந்தர்வப் பிசாசு!

   கொல்லைப் படலைச் சாத்தாமல் வந்துவிட்டான் குப்பாண்டி. பக்கத்து வீடுகளின் வேலிகளின் ஓரமாக அக்ரகாரத்துப் பிரமுகர்கள். நடு வயதுகள், சில்லுண்டிகள்! பாலன், சுப்புக்குட்டி, கர்ணம், சீதாராமன்!

   பாலன் சிரிக்கிறார். கர்ணம் சிரிக்கிறார் அதைப் பார்த்துக் குழந்தைகள் பாதி, ஏன் என்று தெரியாமல் விழிக்கின்றன. பாதி தெரியாமலேயே சிரிக்கிறதுகள்.

   நாற்பதடி தூரத்தைப் பார்த்துக் குடியானத் தெரு ஆட்கள் சிரித்தார்கள்.

   மல்லியின் வயிற்றுக்குள் ஒரு பெரிய வைக்கோல் போரே எரிந்தது. சரளி வரிசை முடிந்தது.

   “ஸா பா ஸா’’

   “ஸா பா ஸா’’

   “இன்னிக்கி போரும். நாளைக்கிக் காலமே வந்துடு இதே மாதிரி’’

   குப்பாண்டி எழுந்து நடந்தான். அவனோடு குடியானத்தெரு, சேரி ஆட்களின் கூட்டம் கலைந்தது.

   பாலன் வேலிக்கப்பாலிருந்து சொன்னார்: “மல்லி! ரொம்ப அழகாகப் பண்ணிப்பிட்டீர்’’ என்றார்.

   “மீசையிலெ படாம கூழும் குடிச்சாச்சு’’ என்றார் கர்ணம்.

   அதைக் கேட்டு சீதாராமன் கொளகொளவென்று மார்ச்சதையும் வயிறும் குலுங்கச் சிரித்தான். அவன் பெரிய மனிதன். எனவே மற்றவர்களும் அதை வாங்கிச் சிரித்தார்கள். உடனே இந்தப் பக்கத்து வீட்டுக் கொல்லையிலிருந்த குஞ்சு, குதிர்களும் நகைத்தன.

   அவர் சற்று நின்று பார்த்தார்.

   “என்னடா, சிரிக்கிறேள்?’’

   “என்னடா சிரிக்கிறேள்?’’ என்று அதையே திருப்பிச் சொன்னான் சீதாராமன். மறுபடியும் பெரிய சிரிப்பு.

   “ஒங்க...’’ என்று, மீதி வெசவை வெய்யாமல், “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லியா பாருங்கடா. ஒழிச மக்களா!’’ என சுருதிப் பெட்டியை வீசி கூட்டத்தின் பக்கம் எறிந்தார் மல்லி, அது வேலியில் விழுந்து துருத்தியில் முள் வைத்துக்கொண்டு கீழே விழுந்தது. அசடு மாதிரி நடந்தார் மல்லி. சட்டென்று அதை எடுத்து, கதவைத் தடார் என்று சாத்தித் தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்து முள்ளை எடுத்தார்.

   “நீங்கள்ளாம் நன்னாருப்பேளா?’’ என்று தாழிட்ட கொல்லை கதவுக்கு இப்பால் நின்று, வானத்தைப் பார்த்து அவர் மனைவி சபித்துக் கொண்டிருந்தாள்.

   “கெடக்கான், நீவா...நாய்தான் குலைக்கிறது. நீவேற ஏன் குலைக்கணும்? கொஞ்சம் கோந்து வேணும். உள்ள வா’’ என்று மல்லி கத்தினார்.

   இப்பொழுது பயத்தோடு ஒரு தனிமையும், அலட்சியமும் சேர்ந்து கொண்டன. காய்ச்சல் வந்தமாதிரி கை நடுங்கிற்று. ஊஞ்சல் மீது படுத்துச் சங்கிலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

ஆனந்த விகடன் தீபாவளி மலர் 1967.

7 comments:

  1. 1967ல் கிராமம், நகரம் பற்றிய சித்தரிப்பு இன்றும் அதன் தன்மை மாறாமல்தான் உள்ளது என்று நினைக்கையில் ச்ற்று வருத்தம்தான். "பெரியமனிதர் காலில் விழுவதைவிட" என்னும் வரிகள் உண்மையிலேயே இன்றும் அச்சுபிசகாதது. இருபதுலட்சத்தில் மூன்று என்பது இன்று கிட்டத்தட்ட 7 கோடி இதில் யாருக்கும் அடுத்தவரின் திறமையோ, தேவையோ அனாவசியம் தான் தன் வேலை என சுருங்கிக்கொண்டனர்.நல்ல படைப்பு
    ம்ல்லி என்ற பாத்திரம் ஒரு குறியீடுதான் இது மாற்றுச்சிந்தனையுள்ள திறமையுள்ள எவருக்கும் இன்றும் பொருந்தும்.

    ReplyDelete
  2. அருமையான சிறுகதை. அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏன் மல்லிகை என்று பெயர் வைத்தார் தி.ஜா?

    ReplyDelete
  3. அருமையான சிறுகதை

    ReplyDelete
  4. Dear Subbaraman :மல்லி என்பது,மல்லிகார்ஜுனனின் சுருக்கமாக இருக்கலாம்.
    இந்த நடைக்கு நிகராக நான் இது வரை வேறு யாரையும் பார்த்ததில்லை.
    பதிவேற்றத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. Thanjayum kaveriyum gam gama vena manakkum kadhagal The.Janakiramnudaya kathaika.Suganubavam.

    ReplyDelete
  6. music flows through his writings as always

    ReplyDelete
  7. நல்ல சிறுகதை மனதுக்கு பிடித்தது.

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.