Aug 21, 2011

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எய்துவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. 3592715136_fc85b2e1d3 யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.

அவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும்,ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.

இன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.

அப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான். மாமன் அவனுக்கு ஆசானாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும் பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான். பாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்டதென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.

கிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.

கிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ' பாம்பு வாழ நீதமில்லை' என்று சொல்லி ஒதுங்கிப் போவான். பாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.

பாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.

தெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான். பழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.

காற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான். முதுமையால் பீடிக்கப்பட்ட காலத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரியவில்லை.

இன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திற்கு உள்ளாக்கியது.

தன்னுடைய அடிமைத்தளையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான். மகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.

சில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம்?. வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.

அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.

திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.

சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.

இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவர ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.

******

நன்றி அம்ருதா பதிப்பகம், புத்தகம்- வண்ண நிலவன் முத்துக்கள் பத்து.

http://yahooramji.blogspot.com/2011/07/blog-post_18.html

1 comment:

  1. அருமையாக இருக்கிறது.
    நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.htm

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.