முனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து கொண்டு போய் விடவில்லை. அதையெல்லாம் கந்தனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் போனான். முனியம்மா மகன் போனாலும் கந்தனே போய்விட்டாலும் ரயில் தாத்தா இருப்பார். நிஜத்து ரயிலே போய்விட்டாலும் ரயில்தாத்தா சாகாவரம் பெற்று விடுவார்.
எல்லாச் சின்னபிள்ளைகளுக்கும் ரயில்தாத்தா வேண்டும். மேலத்தெரு வேப்பமர ஸ்டேஷனிலிருந்து துவங்குகிற ரயில் பிரயாணத்தை யாராலும் நிறுத்த முடியாது. கந்தனின் கரண்டு மேன் அய்யாவுடைய சிகப்பு ரப்பர் கையை மாட்டிக்கொண்டு வந்தாலே ரயில் நிற்கும்.
ஆனால் சின்னப்பாப்பாவின் குட்டி ரயிலை ரப்பர் கை காட்டியாலும் நிறுத்த முடியாது. அந்தக் குட்டிரயில் எப்போதும் பொன்வண்டுகளைத்தான் ஏற்றிக்கொண்டு வரும். பொன்வண்டு ரயிலைச் செய்வதற்கு காலித் தீப்பெட்டிகள் வேண்டும். காலித் தீப்பெட்டிகளுக்காக கடை கடையாய் அலைந்தான். ரோடுகளை அளந்தான். கந்தனின் பகீரத முயற்சிகளால் காலித் தீப்பெட்டிகள் சேர்ந்துவிட்டது. இனி ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பொன்வண்டு பிடிக்க வேண்டுமே. பொன்வண்டுகள் எப்போதும் காட்டிலும் காட்டுக்குப் போகிற தான் தோன்றிப் பாதைகளிலும் கிடைக்கும். அவற்றைப் பிடிப்பதே கஷ்டமானது.
இன்னும் பட்டு மெத்தைக்கு டெயிலர் அண்ணாச்சி வீட்டு குப்பைக்குழிக்குப் போக வேண்டும். அங்கு பட்டுத்துணி பதுங்கிக்கொண்டிருக்கும். குப்பையிலிருப்பதெல்லாம் குண்டு மணிதான். குப்பையைத் தோண்டத் தோண்ட பட்டு கிடைத்துவிடும். ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பட்டு விரித்து, ஒரு ஜோடிப் பொன்வண்டுகளை பொண்ணு மாப்பிள்ளையாக உட்கார வைத்து தீப்பெட்டியை மூடினான். நூல் சம்பாதிக்க வேண்டுமே. அதற்கு டெயிலர் அண்ணாச்சியைத்தான் பிடிக்கணும். ஊதாக் கலர் - பச்சைக் கலர் - மஞ்சக் கலர் - வாடா மல்லிக் கலர் நூலை எல்லாம் மிஷினுக்குள்ளிருந்து எடுத்துத் தருவார். கலர்க் கலர் நூலையெல்லாம் ஒன்றாக்கி தீப்பெட்டிக்கு தீப்பெட்டி இடைவெளி விட்டு ரயில் பெட்டிகளை இணைத்தான்.
கந்தனுக்குத்தான் இப்படியெல்லாம் பொன் வண்டு ரயில் செய்ய வரும். சின்னப் பாப்பாவுக்கு வரவே வராது. அவள் பார்த்துக் கொண்டே சும்மா இருந்தாள். அண்ணனின் ஒவ்வொரு காரியத்தையும் உற்றுப் பார்த்தபடியே தலையைத் தலையை அசைத்து ஆமோதித்தாள். குட்டி ரயிலை நுனிவிரலால் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது சின்னப்பாப்பாவின் குட்டி ரயில். ‘குப்...க்குப்....’ பென்ற ஊதலோடு கிளம்பி விட்டது. சிமெண்டுத் தரையில் சின்னப்பாப்பாவைச் சுற்றிச் சுற்றி வருகிறது. பொன்வண்டு ரயில் போவதைப் பார்த்து ‘க்கூ... க்கூ’ வென்று ஊதுகிறாள், சின்னப்பாப்பா.
இப்போது கந்தனின் கனவு ரயிலும் கிளம்பி விடும். ஊருக்குத் தெற்கு தூரத்தில் ஓடும் நிஜத்து ரயிலின் ஊதல் கேட்கும். இந்த ஊதலே அவனை எங்கெங்கோ அழைத்துப்போய் தொலைதூர அதிசயங்களைக் காட்டி அவனை ஆச்சரியப்படுத்தும். சினேகிதக் குருவிகளோடு பறந்து செல்வதாய் தானும் சிறகுகளை அசைத்துக் கொள்வான். காற்றோடு பறந்து போகும் வழிகளில் எங்கும் ஊருக்கு ஊர் ரயில் தாத்தாக்கள் இருப்பதைக் கண்டான். அவனுக்காகவே காத்திருக்கிற ரயில் தாத்தாவின் குறும்புத் தாடியைக் கண்டதும் ‘க்களுக்’கென்று சிரிப்பு உண்டாகி விட்டது. வாய் விட்டுச் சிரித்தான். அவனுக்குப் பின்னாலிருந்து யாரோ செல்லமாய் சிணுங்கியது கேட்கவும் திரும்பினான். அங்கும் சின்னப்பாப்பா நின்றிருந்தாள். அவனை விடாமல் தொடர்ந்து வரும் சின்னப்பாப்பாவின் சின்ன பூங்கையைப் பிடித்துக் கொண்டான். அவளை இழுத்துக் கொண்டு ரயில் தாத்தாவை நோக்கி ஓடினான். ஓட ஓட ரயில் தாத்தாவும் எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்தார். கம்பூணித் தாத்தாவை எட்டிப் பிடிக்கவே முடியாது. அவர் மறைந்தே போய் விட்டார்.
கந்தனின் ரயில் கனவை ஊடுருவிப் பார்ப்பதுபோல் சின்னப்பாப்பா அவனைப் பார்த்தாள், ஈரம் சொட்டும் மூக்கைச் சுழித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தாள்.
சிமெண்டுத் தரையில் ஓடும் பொன்வண்டு ரயிலுக்குள் பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சிச் சிரிப்பதை எல்லாம் சின்னப்பாப்பா கேட்டிருப்பாள். எங்கெங்கோ ஒளிந்திருக்கும் ஊருக்கெல்லாம் பொன்வண்டு போகிறதே. சின்னப்பாப்பா “தாட்டா, த்தாட்டா...” என்றாள். ஊருக்குப் போகிற பொன்வண்டிடம் “நானுக்கு ரயிலு.. நானுக்கு ரயிலு..” என்று தன்னைத் தானே காட்டிக் கொண்டாள்.
சின்னப் பாப்பாவின் ‘நானுக்கு ரயில்’ கிடைக்கா விட்டாலும் அவளது பள்ளிக்கூட நாட்களில் நானுக்கு ரயிலுக்கான தண்டவாளத்தை வரைந்தாள்.
பள்ளிக்கூடம் போகும் போதும் ரயில்தாத்தா கந்தனின் வாலைப்பிடித்துக் கொண்டுதான் போனாள். அவர்களின் பள்ளிக்கூடத் தெருவே பழையது. ‘கரேர்....’ ரென்ற கருப்பு ஒட்டிக்கொள்ளும் கோட்டைச்சுவரும் காரை பிளந்த வீடுகளுமே இருந்தது. சுவருக்கு கீழே நீளமாய் ஓடும் சாக்கடைத் திண்டின் மேல் கால் வைத்து நடந்தாலே இந்த கெசவால் குரங்குகளுக்கு நடக்கவரும். நீளமாய் நடந்துகொண்டே சிலேட்டுக் குச்சியால் கோட்டைச் சுவரில் கோடு கீச்சினாள். கோடுகள் தெருவோடு தெருவாய் சேர்ந்துகொண்டு நீளும். முக்கு திரும்பி வளையும் நெளியும். அடுத்து வீட்டு சுவருக்கு தாவும். இந்தக் கோடுதான் சின்னப்பாப்பாவின் குட்டிரயிலுக்குத் தண்டவாளமாம். இதைக் கண்டதுமே ரயில் தாத்தாவுக்கு கொண்டாட்டம் வந்துவிட்டது. அவனும் கோடு போட்டான். துருப்பிடித்த ஆணியால் கோடு இழுத்துக்கொண்டே அழியாத தண்டவாளத்தை எழுதினான். அவனது கனவு ரயிலின் தண்டவாளமே பெரியது. அதற்காகவும் இனி வருபவர்களுக்காகவும் தண்டவாளம் இருக்கும். யாரும் இதை அழிக்கவே கூடாது. தினந்தினம் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் சுவரிலிருக்கும் தண்டவாளங்களாய் வளைந்து நெளிந்து கொண்டே போனார்கள்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கென்று பெரியரயில் இருக்கிறது. இந்த ரயிலே சாகவே சாகாதது. ஞாயிறு ரயிலுக்கு குட்டி ரயில்களெல்லாம் ஒன்று சேரும். வைக்கோலைத் திரித்துத் திரித்து கயறாக்கி, கயறுக்குள் ஒன்று சேரும் ரயில். ஒருவர் பின்னால் ஒருவராய் இணைந்து சட்டையையோ அரைஞான் கயித்தையோ பிடித்துக்கொள்ளணும். சடையைப் பிடித்துக்கொண்டும் ரயில் புறப்பட்டு வரும். எப்பொழுதோ புறப்பட்டு, எங்கெங்கோ இருக்கும் ஸ்டேஷனை நோக்கி ரயில்தாத்தா புறப்படுகிறார். பின்னால் இவர்களுக்கெல்லாம் ரயிலே கிடைக்காது. ரயிலே மறந்துவிடும். ரயிலுக்காக காத்திருப்பது கூட பெரும் ஏக்கமாகி பெருமூச்சு விடுவார்கள். இன்னொரு கூட்டம் ரயிலைத் தேடும். அவர்களுக்கு மத்தியில் ரயில்தாத்தா தோன்றிவிடுவார் தாடியுடன். புதுரயிலைச் செய்து கொண்டு பிரயாணம் துவங்கிவிடும்.
ரயில் போவதற்கு கந்தன் சட்டையை அசைத்து ‘செண்டா’ காட்டி விட்டான். அதற்குள் சின்னப்பாப்பா பிரயாணிகளுக்கெல்லாம் திக்கட்டு கொடுத்து முடித்திருந்தாள். கரண்டுமேன் அய்யாவின் ரப்பர் கையை தூக்கிக்கொண்டு ஓடியவன் கரையில் நின்று கைகாட்டியாகி, கையைத் தூக்கவும் ‘ஹ்கூ...’ வென்ற ஊதலோடு வானமெல்லாம் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் புறப்பட்டது. புழுதியைக் கிளப்பிக்கொண்டு ரயில் தாத்தா வருகிறார். வேம்படி ஸ்டேஷனிலிருந்து தெருவைத் தாண்டி காளியங்கோயிலுக்குப் பின்புறமாக போய் வளைந்து திரும்பி கம்மாயை நோக்கி ரயில் போகிறது. திக்கெட்டு வாங்கிக்கொள்ளாத முனியம்மா மகனும் வரிசையில் வந்து கொண்டிருந்தான். அவனுக்குத்தான் கள்ள ரயில் விளையாட்டெல்லாம் தெரியும். ரயில்கார வாத்தியாராகையால் அவனுக்கு ரயிலை மீறிச் செல்ல சலுகையுண்டு. முனியம்மா மகனுக்கு அடிக்கடி ரயில் பதவிகள் மாறும். எஞ்சின் டிரைவராகவும் எஞ்சினாகவும் கடைசி பெட்டியில் வரும் குழாய்ச் சட்டைக்காரனாகவும் மாறி மாறி வருவான்.
கந்தன் திடீரென்று ‘நாந்தான் டீட்டியாரு...’ என்று காதில் குச்சியை சொருகிக்கொண்டு வந்தான். வரிசையை விட்டு விலகி நின்றபடி திக்கட்டு பரிசோதித்துவிட்டு மீண்டும் ரயிலோடு சேர்ந்து கொண்டான். கம்மாய்க் கரைமேல் ஏறப்போகிறது. கரைமேல் ஏறமுடியாமல் ஏறத்திணறிக் கொண்டிருந்தது. வைக்கோல் கயறு அந்து விடாமல் ட்ரைவர் காப்பாற்றி விட்டான்.
இப்போது ரயில் கம்மாய் கரைப் புள்ளையாரை அடைந்து தைப்பாறி மூச்சு வாங்கியது. அந்த இடத்தில் முனியம்மா மகன் ரப்பர் கையை மாட்டிக்கொண்டு குறுக்கே நின்றான். அசையாமல் கைகாட்டி மாதிரியே நின்றுவிட்டான். கந்தன் குதித்துக் குதித்து கோயில் மணியடிக்கவும் ரயிலில் வந்த மாரிமுத்துப் பண்டாரம் ஓடிப்போய் செடி செத்தைகளை அள்ளிக் கொண்டு வந்தான். புள்ளையாருக்கு பூசை வைக்கவேண்டுமே. புள்ளையார் ஸ்டேஷனில் வண்டி வெகுநேரம் வரை நிற்கும். பூசை முடிந்துதான் கிளம்ப வேண்டும். புள்ளையாரைக் கும்பிட்டக் கையோடு ‘சாமி காப்பாத்து... ஆத்தா காப்பாத்து... அய்யா காப்பாத்து... பாப்பா காப்பாத்து...’ என்ற முணுமுணுப்புகளோடு புள்ளையாரைச் சுற்றி வரும் ரயில். மூன்றாவது சுற்றில் பூசை முடிந்துவிடும். பூசையின் போது வேண்டிக் கொள்ளணுமே. அன்றொரு நாள் காளியங் கோயிலுக்குப் பின்னால் நடந்த அப்பாம்மா விளையாட்டில் முனியம்மா மகனுக்கும் மொதலாளி மகள் வெங்கட்டம்மாளுக்கும் பிறந்த கல்லுப்பிள்ளைக்கு பேர் வைக்கும்படி புள்ளையாரைக் கேட்டார்கள். இப்போது பேர் விட்டு முடியவும் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். வெறும் சிரட்டையை உடைக்கவும் சில்லுசில்லாய் சிதறும். அப்போது ரயிலும் சிதறிப் போகும். அவரவருக்கு கிடைத்த சிரட்டைத் துண்டை நாக்கால் நக்கிக் கொண்டு ருசிப்பார்கள்.
கடைசி மணியடித்து ரயில் ஒன்று சேரும். கந்தன் செண்டா காட்டவும் ரயில் புறப்படும். அடுத்த ஸ்டேஷன் உண்டு. வீரம்மா சின்னாத்தா ஊருக்கும் ஸ்டேஷன் இருக்கும். முள்ளுச்செடி ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது.
தெருவிலிருந்து பார்த்தால் தெரியும். கம்மாய்க்கரை மரங்களுக்கு ஊடே மறைந்து மறைந்து போகும் ரயில். நிழல் மூடிக் கருத்திருக்கும். நிற்கிற ஸ்டேஷனில் ஆள் இறங்கும். நிற்காத ஸ்டேஷனில் மரங்கள் அசைந்து பின் வாங்கும். அடுத்த ஸ்டேஷன் நோக்கி நகர்ந்து நகர்ந்து கடைசி ஸ்டேஷனை நெருங்கிவிடும். கம்மாய்க்கரை இறக்கத்தில் இறங்கும்போது ரயில் தள்ளாடித் தள்ளாடி நகரும். கம்மாய்க்குள் ஏமகாய் விரிந்து கிடக்கும் நீர்ப்பரப்பில் மிதந்து வரும் அலைகளைப் பூராவூம் பார்த்ததுமே சின்னவர்களின் டவுசர் அவிழ்ந்து கொள்ளும். ஒருகையில் டவுசரைப் பிடித்தபடி நீர் விளிம்பு வரைக்கும் வந்து, எல்லாம் களைந்து நிற்கிற அம்மணத்தோடு கடைசி ஸ்டேஷனில் நிற்கும் ரயில் திடீரென்று ‘ஹைய்ய்ய்...’ யென்ற பெருங்கூச்சலில் சிதறிச் சின்னா பின்னமாகி விடும். அப்போது ரயில் இருக்காது. ரயில்தாத்தா இருக்கமாட்டார். காணாமல் போன ரயில் கம்மாய் தண்ணிக்குள் அம்மணக் கும்மாளமடித்து மறையும்.
ஏனோ, இப்போதெல்லாம் கம்மாய் பாதைக்கு ரயில் வராமல் ஸ்டேஷனெல்லாம் மூடிவிட்டது. கம்மாய்க்குள் அலையடித்து மின்னிய நீர்ப்பரப்பே காணாமல் எங்கோ தொலைந்து போனது.
சிவகாசிக்குத் தொலைந்துபோன முனியம்மா மகனை திரும்பவும் சந்திக்கும்போது எல்லாப் பிள்ளைகளுக்கும் சின்னப் பொன்வண்டுக்கும் சந்தோஷம் வரும். சிரிப்பு வரும். எல்லாப் பொன்வண்டுகளும் சிவகாசிக்குப் போகும். இனிவரும் ரயில் விளையாட்டையெல்லாம் அங்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஊரிலிருந்து புறப்பட்டுப் போகும் சிவகாசி ரயிலுக்கு சின்னப் பாப்பா வரைந்த தண்டவாளம் இல்லை. முள்ளுக்காட்டுத் தடத்து வழியில் பொன்வண்டு ரயில் போகிறது. சின்னச்சின்ன தீப்பெட்டிக்குள் சின்னப்பாப்பாவும் சிவகாசிக்குப் போகிறாள்.
கருக்கிருட்டில் தூங்கும் பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான ரயில் சத்தம் கேட்கும். அப்போது தெருவில் ஒரு கருப்பு ரயில் வந்து நிற்கும். வீடு வீடாய் கருப்பு ரயில் நின்று நின்று நகரும். சின்னப் பொன்வண்டுகளை கூவி அழைக்கும். இப்பவெல்லாம் கருப்பு ரயிலுக்கு புது ட்ரைவர்தான். அவன் கருப்பு மனுசன். ‘க்ரேர்..’ரென்று ரயிலின் நிறத்தில் இருந்தான். அவன் ரயில் தாத்தா மாதிரியே தாடி வைத்திருந்தான். துருப்பிடித்த தாடி குறும்பாய்ச் சிரித்தபடி பொன்வண்டுகளுக்கு தலையசைத்து வணக்கம் கூறினான். பொன்வண்டுகளை ஏமாற்றுவதே சுலபமானது. அவன் அழைக்கவும் பொன் வண்டுகள் தூங்கியபடியே எழுந்துவிடும். கருப்பு ரயிலில் ஏறிக்கொண்டு பிரயாணம் துவங்கி விடும். ரயிலுக்கு வெளியில் கிடப்பதெல்லாம் ரயிலோடு ஓடி வராது. ஆனால் அவர்களின் ஆதி நிலா மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்து முள்ளுப் பாதையில் அழுது கொண்டே ஓடிவரும். ரயிலில் போகும் பொன்வண்டுகளைப் பிடிக்க முடியாமல் பாதி வழியில் முள்ளுக்காட்டில் சிக்கிச் சிதறி விடும்.
அங்கு போனால் நடுக்காட்டு இருட்டுச் சுரங்கத்தில் தீப்பெட்டிகள் குவிந்திருக்கும். தீப்பெட்டிக்குள் பொன் வண்டு இருக்கும். அந்த கருப்பு மனுசன் பொன் வண்டின் உடம்பிலிருந்து தீக்குச்சிகளை உருவி எடுப்பான். எடுக்க எடுக்க பொன்வண்டின் உடம்பெல்லாம் தீக்குச்சியாய் வரும். தீரவே தீராமல் தீக்குச்சி வந்து கொண்டிருக்கும். பிறகு பொன்வண்டுகளைத் தீப்பெட்டிக்குள் அடைத்து விடுவான். திரும்பவும் தீப்பெட்டியைத் திறப்பான். மூடுவான். தேவையான போதெல்லாம் தீப்பெட்டியைத் திறந்து பொன் வண்டிலிருந்து தீக்குச்சி எடுப்பான்.
பொன்வண்டுக்கே தெரியாமல் அதன் உடம்பிலிருக்கும் வண்ணமெல்லாம் உதிர்ந்து மறைந்து விடுகிறது. பறப்பதற்கு ரெக்கை வைத்திருக்குமே அதில் பொட்டுப் பொட்டாய் மின்னும் பாசிக்கலர் இருக்குமே. அதெல்லாம் மறைந்து ரெக்கை ரெண்டும் கருகிச் சுருண்டு பொன்வண்டே கருத்து வருகிறது.
******
தட்டச்சு: சென்ஷி , பிரதி உதவி : கார்த்திகைப் பாண்டியன்
சமீபத்தில் பார்த்த 'வாகை சூடவா' படம் கூட இது போன்ற குழந்தை தொழிலாளர்களின் வாழ்க்கையை பிரதிபலித்தது. கோணங்கியின் அற்புதமான படைப்பு. ரயில் வண்டி தீப்பெட்டி கம்பெனி வண்டியாகவும், விளையாடும் சிறுவர்கள் தீப்பெட்டிக்குள் இருக்கும் பொன்வண்டு போலவும் இறுதியில் காட்சிப்படுத்தியிருக்கிறார். மிகவும் அற்புதமான கதை. இளம் பிராயத்து நாட்களை நினைவுபடுத்திய கதை. இன்னும் குழந்தை தொழிலாளர்களாய் உள்ள சிறுவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாயிருக்கிறது?
ReplyDelete