(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)
சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ சொல்லும்போது என் ஞாபகம் பற்றிச் சிறிது நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறது. சிறு பிசகு அதில் இருக்கலாம். பெரிய பிசகு இருக்காது என்று நினைக்கிறேன். சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ். பொ.வின் ‘தீ’ பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயசில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது. எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம்தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. ‘தீ’ என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை.
‘தீ’ வணிக எழுத்தல்ல. சிவராமூவின் விமர்சனத்திலிருந்தே அதை ஊகிக்க முடிந்தது. எஸ். பொ. தீவிரமாக எதையோ சொல்ல முயன்றிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று. பழமையான மதிப்பீடுகளைக் குலைத்துப்போடப் பார்த்திருக்கிறார். அதில் அவர் வெற்றிபெறாமல்கூடப் போயிருக்கலாம். சிவராமூ சொல்கிற கருத்துக்கள் எல்லாமே சரி என்று வைத்துக் கொண்டாலும்கூட எதற்கு இவ்வளவு காரமான tone என்று நினைத்தேன். சிவராமூவைச் சந்தித்து, ‘ஓர் உயிரும் ஈருடலும்’ ஆன பின்பு பல சந்தர்ப்பத்திலும் இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறோம். அதற்குள் ‘தீ’யைப் படித்திருந்ததால் சிவராமூவின் கடிதத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. எஸ். பொ.வை அவருடைய குறைகளுக்காக விமர்சிக்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதைத்தான் சம்பாஷணைப் பாங்கில் நான் சிவராமூவிடம் ஒன்றிரண்டு முறை கேட்டேன். சிவராமூ தன்னை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டே இருந்தார். அவராகச் சில சமயம் தன்னை மறுபரிசீலனை செய்து சில சறுக்கல்களையும் அபூர்வமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்.
திருவல்லிக்கேணியில் தமிழ்ப் புத்தகாலயமும் ஸ்டார் பிரசுரமும் ஒன்றாக இருந்த காலத்தில் தினமும் மாலையில் ஐந்தாறு எழுத்தாளர்கள் அங்கு வந்து கூடுவார்கள். க. நா. சு., செல்லப்பா, கு. அழகிரிசாமி மூவருக்கும் நிரந்தர ஆஜர் உண்டு. சில நாட்களில் அழகிரிசாமியுடன் நா. பார்த்தசாரதியும் சேர்ந்து வருவார். நானும் நம்பியும் சென்னையில் இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறாமல் ஆசையுடன் அங்கு போவோம். கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் வெளிப்படும் அட்டகாசமான பேச்சுக்களாக இருக்கும். சிவராமூ செல்லப்பாவுடன் இருந்த நாட்களில் அவரையும் அங்கு அழைத்துக்கொண்டு போவாராம். அப்போதைய சிவராமூவைப் பற்றி என்னிடம் அதிகம் சொல்லியிருப்பவர் அழகிரிசாமி. பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருப்பார் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வார். அவருடைய கலகலப்பான சுபாவத்தால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடிந்திருக்கவில்லை போலிருந்தது. சிவராமூவுக்கு அப்போது வயசு மிகக்குறைவு. சென்னையும் அவருக்கு அன்னியமானது. அவரைச் சுற்றி எப்போதும் இருந்ததும் சீனியர் எழுத்தாளர்கள். இவையெல்லாம் காரணமாக இருந்திருக்கலாம் என்று நான் சொல்வேன். அழகிரிசாமி அவருடைய பேச்சுச் சாமர்த்தியத்திற்கு ஏற்றாற்போல், ‘ஐயா பேச வேண்டாம், ஒரு புன்னகை பூத்தால் தண்டனை உண்டா?’ என்று கேட்பார்.
ஒரு சில வருடங்களுக்குப் பின் சென்னைக்குச் சென்ற போது செல்லப்பாவுக்கு சிவராமூவைப் பற்றி ஒரு மறுபரிசீலனை உருவாகிக் கொண்டிருந்தது. சில சமயம் மனதைச் சங்கடப்படுத்தும் விதமாக நடந்துகொண்டு விடுகிறான், என்ன செய்வது என்றார். சிவராமூவின் மனதை முழுமையாக மௌனி ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததும் செல்லப்பாவுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். சதா தன்னிடம் மௌனியைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மௌனியைப்பற்றி சிவராமூ எழுதியிருக்கும் கத்தையையும் காண்பித்தார். பெரிய கத்தையாக இருந்தது. அதை அவர் காட்டிய முறையில் அதை வெளியிட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை என்று தோன்றிற்று. சில விஷயங்களேனும் சிவராமூ முக்கியமாகச் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. படித்துப் பாருங்களேன் என்று நான் செல்லப்பாவிடம் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து எழுத்தைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு என்னிடம் காட்டிய கையெழுத்துப் பிரதியிலிருந்து செல்லப்பா அதிகமாகத் தேர்வு செய்யவில்லை என்றுதான் தோன்றிற்று.
ஒரு முறை அவர் சென்னைக்கு வந்தபோது - 1972 ஆக இருக்கலாம் - எனக்கு எழுதிய கடிதங்களில் எல்லாம் நாகர்கோவில் வர விருப்பம் தெரிவிக்கும் வரிகள் இருந்தன. வெளிப்படையாகச் சொல்லாத தினுசில். பத்மநாபன் தன்னை அழைத்திருப்பதாகவும் தனக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் போகிறார் என்றும் எழுதியிருந்தார். பத்மநாபன் டில்லியிலிருந்து நாகர்கோவில் வந்து ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இங்கிலீஷ் பேராசிரியர். ஒரு ஆசிரியராக அவருக்கு மிகவும் நல்ல பெயர் ஏற்பட்டிருந்தது. அவரும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சிவராமூவை, தான் அழைத்திருப்பதாகச் சொன்னார். அவரைத் தங்கவைக்க இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நானும் அவரும் சேர்ந்து சிவராமூவைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பத்மநாபனுக்கு இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் நான் அதிகமாகச் சம்பந்தப் பட்டுக் கொள்ளவில்லை. என் நிலை மோசமாக இருந்தது. வீட்டில் பிரச்சினைகள். வியாபாரத்திலும் பிரச்சினைகள். நம்பியைக்கூட அதிகம் பார்க்காமல் இருந்தேன்.
இந்நிலையில் சிவராமூ என் பொறுப்பில் வந்தால் சரிவர அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று நினைத்தேன். அவர் சில மாதங்களேனும் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற யோசனையுடன் வருகிறார் என்பதும் தெரிந்தது. அவர் தங்கும் விஷயமாக நான் நிறைய பொறுப்புக்கள் எடுத்துக் கொள்ளும்படியாகத் தான் சந்தர்ப்பங்கள் உருவாகும்.
சிவராமூவுக்கு என் நிலையை மறைமுகமாகத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அவரைச் சந்திப்பதிலும், பேசுவதிலும் எனக்கும் நம்பிக்கும் இருக்கும் ஆசையைத் தெரிவித்திருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவருடன் பேச ஆசைப்படும் விஷயங்கள் நிறைய இருந்தன. அவர் மர்மமாக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த மர்மங்களை எல்லாம் விரட்டிவிட்டு அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடைய வாசிப்பு, வேறு பாஷை எழுத்தாளர்களைப் பற்றியும், தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவருடைய அபிப்பிராயங்கள், திருகோணமலைப் பின்னணிகள், ஓவியம் பற்றிய ஈடுபாடுகள், ஆத்மீக ஞானம் பற்றிய அனுபவங்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கவிதை சம்பந்தமாக அவர் தெரிந்து வைத்துக்கெண்டிருக்கும் ரகசியங்கள், இருந்திருந்து சிவானந்த சரஸ்வதியிடம் எப்படி அபிமானம் ஏற்பட்டது . . . இப்படிப் பல விஷயங்கள். சிவராமூவுக்கு எழுதிய கடிதத்தில் என் பிரச்சினைகளைச் சொல்லி, நான் விரும்பும் காரியங்கள் எதையுமே சந்தோஷமாகச் செய்ய முடியாத சோதனை இருப்பதையும் எழுதியிருந்தேன்.
ஒருநாள் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். கையில் பெட்டியுடன், வேறு சில பைகளுடன். அறையைக் காலி செய்துவிட்டு வருவது தெரிந்தது. ‘சென்னையிலிருந்து நேராக வருகிறேன்’ என்றார். களைத்துப்போய் பறட்டையான கோலத்தில் இருந்தார். குளித்துவிட்டு வந்தபோது முகம் புதுசாக இருந்தது. அன்று என் வீட்டில் என் நண்பர்களான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். காசியபன் இருந்தார். அது நல்ல ஞாபகம். கூட இருந்தது யார் என்பது ஞாபகம் இல்லை.
காசியபனுக்கு சிவராமூவை அறிமுகப்படுத்தி வைத்தேன். இவரா சிவராமூ என்று சத்தமாகக் கேட்டார். தன் ஜன்மத்தில் அவரைப் பார்க்க வாய்க்கும் என்று நினைத்திருக்கவில்லை போல் இருந்தது. நாகர்கோவிலில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போதெல்லாம் ஏறத்தாழ இதே மாதிரி தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனக்கு இது ஒருவிதமான சந்தோஷத்தையும் பெருமையையும் தந்தது. ஒவ்வொரு தடவை இப்படி நடக்கும்போது நான் சிவராமூவின் முகத்தைக் கவனிப்பேன். எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார். அவரது சுபாவத்தில் இருந்த விசித்திரங்களையும் தந்திரங்களையும் கண்டு பிடிப்பதில் எனக்கும் நம்பிக்கும் ஒரு போட்டி இருந்தது. ஒவ்வொரு சமயம் நம்பியைச் சந்திக்கும்போதும் நாலைந்து புதிய கண்டுபிடிப்புகளைச் சொன்னேன். ஒரு தடவை நம்பி, ‘நான் உங்ககிட்ட தோத்துப் போயாச்சு, ஆளை விட்டுடுங்கோ’ என்றான். சிவராமூ விடம் மிக நெருக்கமாகிக் கொஞ்சலும் கேலியும் இருந்த காலத்தில் நானும் நம்பியும் மாற்றி மாற்றி ஸ்வரம் வாசிக்கும் நாதஸ்வரக்காரர்கள் மாதிரி சிவராமூ வின் தந்திரங்களை அவரிடமே அவிழ்த்து விடுவோம். அவருக்குச் சந்தோஷம் தாங்காது. நாங்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் பெரிதாகச் சிரிப்பார். ஒரு தடவை, ‘ஓய், சூது வாது இல்லாம உலகத்தில பொழைக்க முடியாது சாமி’ என்றார்.
ஒவ்வொரு தடவை ஆரல்வாய்மொழியிலிருந்து சிவராமூ நாகர்கோவில் வரும்போதும் அவருடைய தங்கல்பற்றி விசாரிப்பேன். ‘போகுது ஓய், எல்லாம் டேர்ற்றி பிஸினஸ்’ என்பார். என்ன சொல்கிறார் என்பது புரியவேயில்லை. ஒரு நாள் இரண்டு நாள் என்னுடன் இருந்துவிட்டு மீண்டும் ஆரல்வாய் மொழிக்குப் போவார். நாகர்கோவிலில் இருக்கும்போது நான் அவருடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பே கிடையாது. அவர் அவருடைய உலகத்துக்குள்ளேயே ஆழ்ந்து கிடப்பார். படுத்துக்கொண்டே தியானம். கொஞ்சம் கொஞ்சம் படிப்பார். அவர் வெரோஷியஸ் ரீடரே அல்ல. தியானத்தில் எந்த வகை என்று கேட்டிருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி என்பார். அல்லது ஜிட்டு என்பார். ஜே. கே. என்று சொல்வது அவருக்குப் பிடிக்காது. ‘மதராஸிலே ஜெயகாந்தன ஜே. கே. னு சொல்றாங்க ஓய்’ என்பார். நானும் அவரும் தியானத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருப்போம். ஓஷோ பற்றி ஒரே பேச்சாக இருந்த காலம். ‘உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று கேட்டிருக்கிறேன். ‘நமக்கு ஒத்து வராது ஓய்’ என்று சொல்லியிருக்கிறார்.
உணவைப் பற்றியோ, ஆடை பற்றியோ அவருக்குக் கவனமே கிடையாது. உயிர் வாழ உண்ண வேண்டியிருக்கிறது. அம்மணமாக இருந்தால் பார்ப்பவன் உதைப்பான். அதற்கு மேலாக எதுவுமில்லை. என் வீட்டு மொட்டை மாடியின் நடுவிலிருந்த ஒரு கூரையின் நிழல் பன்னிரண்டு மணி வரையிலும் பக்கவாட்டில் இருக்கும். அந்த நிழலுக்குமேல் ஒரு பலாமரத்தின் கிளைகளும் வீச்சாக இருக்கும். அந்த இடத்தில் வெறும் தரையில் படுத்துக்கொண்டிருப்பார். திடீரென்று எழுந்திருந்து வெளியேபோய் சுற்றிவிட்டு வருவார். எங்கு போவார் என்பது தெரியாது. திரும்பி வரும்போது முகத்தைப் பார்த்தால் நாலைந்து மைல்கள் சுற்றியிருப்பதுபோல் தோன்றும். ஒரு காசு வீணாக்கமாட்டார். செலவழிக்கவே யோசிப்பார். பணமும் கையில் மட்டாகத்தான் எப்போதும் இருக்கும்.
ஆரல்வாய்மொழியில் அவர் அறை இருந்தாலும் பெரும்பாலும் அவர் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருப்பது திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பேசிக்கொள்ளவும் பரஸ்பரம் கேலிசெய்து கொள்ளவும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. தோசை சாப்பிடுவதில் எனக்கு இருந்த பலவீனத்தை அவர் பலமாகப் பிடித்துக்கொண்டு கேலி செய்வார். எதாவது பிரச்சினைகளுக்கு நான் தரக்கூடிய விளக்கம் அவருக்குப் பிடிக்காமல் போகிறபோது, ‘உமக்குத் தோசை திங்கத்தான் தெரியும்’ என்பார். நம்பி, கூட இருந்தான் என்றால், ‘மாலாடு பிடிக்கும் என்று அவர் அம்மா சொல்லியிருக்கா’ என்று அவரை மேலும் தூண்டி விடுவான். இதுபோல் என்னை இறக்க அவரிடம் பல பிடிகள் இருந்தன. அதை உரிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவும் அவருக்குத் தெரியும்.
திடீரென்று ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். அலங்கோலமாக இருந்தார். என்ன என்று கேட்டேன். ‘பெரிய சிக்கல் ஓய்’ என்றார். அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம் என்றேன். சொன்னார். தெளிவாகவே சொல்லவில்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தைப்பற்றிக் கேட்டாலும் சொற்ப வார்த்தைகளில் மென்று துப்புவார். நான் மீண்டும் மீண்டும் கேட்டு ஒரு மாதிரி விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.
டி. பி.யைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவியின் மகளுடன் அவருக்கு ஏதோ தகராறு ஏற்பட்டுவிட்டது. ‘அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருக்கிறாள். நான் வந்துவிட்டேன்’ என்றார். அதற்குமேல் அவரிடமிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை.
எனக்கும் நம்பிக்கும் முப்பது வருடங்களில் ஏற்பட்ட நெருக்கமானது சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் கொள்ளும் கோபங்கள் எல்லாம் எனக்குள் பெரிய வலியை ஆரம்பத்தில் தோற்றுவித்திருக்கவில்லை. அவர் என்னை நிறைய உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘அஃக்’ பரந்தாமன் பல தடவை சிவராமூவைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு முறை பிரம்மராஜன்கூட வந்திருந்தார். அப்போது எனக்கு பிரம்மராஜன் என்று தெரியாது. ஏதோ ஒரு கல்லூரி மாணவர் என்றுதான் பதிவாகியிருந்தது. அவரும்கூட சிவராமூவைப் பார்க்கத் தான் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். அப்படிப் பலரும் அவரைப் பார்க்க வருவதுண்டு. அஃக் பரந்தாமன் சிவராமூவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் போட்டிருந்தார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு என்று நினைக்கிறேன். அதற்கு சாமிநாதன் தான் முன்னுரை எழுதியிருந்தார்.
எனக்கும் நம்பிக்கும் இடையில் இருந்த அதே அளவுக்கான நெருக்கம் எனக்கு சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே ஏற்பட்டிருந்தது என்று சொன்னேன் இல்லையா? அது பற்றி நம்பிக்கு உள்ளூர வருத்தம் இருந்தது. சில சமயங்களில், சிவராமூவுடன் நெருங்கிப் பழகாதீர்கள் என்று சொல்லுவான். ஏன் என்று கேட்பேன். அவரிடம் ஒருவித துர்புத்தி இருக்கிறது என்று சொல்லுவான். தனக்குச் சொந்தமாக இருந்த ராமசாமியை சிவராமூ வந்து எடுத்துக் கொண்டுவிட்டான் என்ற எண்ணம் நம்பி மனதில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அந்த ஆற்றாமை காரணமாகத்தான் அவன் என்னை எச்சரிப்பதாக நான் எடுத்துக்கொண்டேன். பொதுவாகவே நான் அவனுடன் எந்த விஷயம் குறித்தும் எதிர்வாதம் செய்ய மாட்டேன். அவனிடம் லேசாகச் சொல்லிப் பார்ப்பேன். அதன் பின் விட்டு விடுவேன். ஏனென்றால் உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தைப்பற்றிப் பேச்சு நகரும்போது அவனால் அதை ஒரு பிரச்சினையாகத்தான் சொல்ல முடியுமே தவிர விவாதமாகக் கொண்டு போக முடியாது.
சிவராமூ யாராவது ஒருவரது வீட்டில் தங்கினார் என்றால் அந்த வீட்டிலிருப்பவர்களிடையே, கணவன் மனைவியிடையேகூட ஒரு பிரச்சினை நிச்சயம் உருவாகி விடும். பெரும்பான்மையான குடும்பங்களில் அப்படி நடந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அப்படியான பிரச்சினை வரவில்லை. ஆனால் அவர் கமலாவிடம் பேசும் போது என் மீது சந்தேகம் வரும்படியாக ஏதாவது பேசுவார். கிண்டல் மாதிரியும் இருக்கும். ஆனால் ஒருவித விஷ ஊசியை மறைத்துக் கொண்டிருப்பாகவும் தோன்றும். எங்கள் வீட்டில் அவரது முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கும். நம்பியின் வீட்டில் ஒரு பத்துப் பதினைந்து நாட்கள்தான் தங்கியிருந்தார். அதற்குள் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் ஒருவித மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்ச நாளில் அவர் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். ‘நம்பியை இனி ஜென்மத்துக்கும் பார்க்க போவதில்லை’ என்று சொன்னார். அதை நம்பியிடம் சொன்னதும், அவர் என்ன அப்படிச் சொல்வது, அதற்கு முன்பே நான் அப்படித் தீர்மானித்து ஆகிவிட்டது என்று சொன்னான். இருவரிடமும் அதன் பின் பல தடவை என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறேன். இருவருமே எதுவுமே சொல்லவில்லை.
அவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் நான் என் அப்பாவுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைக்கவேயில்லை. சிவராமூவும் அதுபற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு என்ன தோன்றியது என்றால் என் அப்பாவின் மனதில் இரண்டு விதமான பட்டியல்கள் இருந்தன. பார்த்தசாரதி போன்றோரெல்லாம் ஒரு பட்டியலில் வருவார்கள். நாகராஜன் போன்றவர்கள் எல்லாம் இன்னொரு பட்டியலில் வருவார்கள். சிவராமூவையும் என் அப்பா இரண்டாவது பட்டியலில்தான் வைத்திருப்பார். எனவே, சிவராமூவை என் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் ஏதாவது சண்டை வரும் என்று நினைத்து நான் அதைச் செய்திருக்கவில்லை. என் அப்பாவும் அதுபற்றி எதுவும் கேட்டிருக்கவில்லை.
கடிதம் எழுதினாரென்றால் மிகக் கடுமையாக விமர்சித்துதான் எழுதுவார். வெங்கட் சாமிநாதன் விமர்சித்து எழுதினாலும் மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் சொல்லும் விமர்சனங்களில் ஒரு தர்க்கபூர்வமான நியாயம் இருக்கும். சிவராமூ எழுதுவது அப்படி இருக்காது. அதோடு சாமிநாதன் எழுதியதற்கு நாம் விளக்கம் சொன்னால் அவர் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவார். உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் சிவராமூ விடம் அது சாத்தியமில்லை. வேறு எழுத்தாளர்களுடன் எப்படி உறவு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இவ்விதமாகத் தான் இருந்து வந்தார். அதோடு சிவராமூவைப் பற்றிப் பேசும்போது வெ.சா. பற்றியும், வெ.சா. பற்றிப் பேசும் போது சிவராமூ பற்றியும் பேச வேண்டி வந்துவிடுகிறது. இரண்டு பேரும் தமிழ்ச் சூழலில் சேர்ந்தே இயங்கி வந்தார்கள் என்பதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் என்னளவில் இரண்டு பேரும் முற்றிலும் வேறான இரு நபர்கள்தான்.
அது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இருக்கும் வேறு யாரைப் பற்றியும் எந்த விதமான விமர்சனத்தை வைப்பதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. அவர் சொல்பவற்றில் வெறும் கோணல் மட்டுமல்ல ஒருவித குரூரமும் இருக்கும். தினமணியில் வேலை கிடைத்ததும் கொல்லிப் பாவையை ராஜமார்த்தாண்டன், ராஜகோபாலிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டிருந்தார். ராஜகோபால் என்னைச் சந்தித்து எட்டு இதழ்கள் தன்னால் கொண்டு வர முடியும் என்றும் நான் கொஞ்சம் ஆதரவு தந்தால் உற்சாகமாக அதைச் செய்ய முடியும் என்றும் சொன்னார். நானும் என்னால் முடிந்த ஆதரவைத் தந்து வந்தேன். இது சிவராமூவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. சிவராமூ ஏதாவது படைப்பை அனுப்பினாலும் ராஜகோபால் அதை வெளியிடத்தான் போகிறார். இத்தனைக்கும் பலருக்கும் என் மீது இருப்பதைவிட அதிக ஈடுபாடு சிவராமூ பேரில் இருந்திருக்கிறது. ராஜகோபால், ராஜமார்த்தாண்டனுக்கும் சிவராமூ பேரில் ஒருவித ஈர்ப்பும் மதிப்பும் இருந்திருக்கிறது. அது மிகவும் இயல்பான மிகவும் சாதாரணமான விஷயம்தான். நுட்பமான வாசகர் ஒருவர் அவர் பேரில் ஈடுபாடு கொள்வது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ராஜகோபாலுக்கு என்னைப் பற்றிக் கெட்டவார்த்தைகள் போட்டு -அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே முடியாது -கடிதம் எழுதியிருக்கிறார். அதுபோல் பலருக்கும் எழுதியிருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.
அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ராஜமார்த்தாண்டன் எங்கள் கடைக்கு வந்தார். அவர் சொன்னார், சிவராமூவும் வந்திருக்கிறார் என்று. எங்கே என்று கேட்டேன். வெளியில் நின்றுகொண்டிருக்கிறார் என்றார். இது அவருடைய குணம். நம்மைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் செய்வார். பலவிதங்களில் அதைச் செய்வார்.
‘ஏன் வெளியில் நிற்கிறார்’ என்று கேட்டேன். ‘உள்ளே வரத் தயக்கமாக இருக்கிறது அவருக்கு’ என்று சொன்னார் ராஜமார்த்தாண்டன். ‘இது ஒரு வியாபார நிலையம்தானே. இங்கு யார் வேண்டுமானாலும், வரலாம். போகலாம்’ என்று சொன்னேன். போய் அழைத்து வந்தார். சௌக்கியமாக இருக்கிறீர்களா என்று கேட்டேன். இருக்கிறேன் என்று சொன்னார். கடையில் உள்ளே ஒரு அறை இருந்தது. அங்கு போனேன். அவர்கள் இருவரும் வந்தார்கள். சிவராமூ எதுவுமே பேசவில்லை. நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன் பின் இருவரும் போய்விட்டார்கள். அப்போது அவர் ராஜமார்த்தாண்டனுடன் தங்கியிருந்தார்.
இரண்டு மூன்று நாட்கள் கழித்து சிவராமூ மட்டும் கடைக்கு வந்தார். என்னிடம் இருந்து வாங்கியிருந்த நாற்பது பக்கம் நோட்டையோ எதையோ திருப்பித்தரும் சாக்கில் வந்தார். நீங்கள் எல்லாம் கணக்கு வழக்குகளில் துல்லியமாக இருக்கக் கூடியவர்கள். இந்தப் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்று சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தாலும் தொடுத்துவிடுவீர்கள் என்பது போன்ற ஒரு தோரணையில் அதை வந்து கொடுத்தார். அவருக்கே அவையெல்லாம் மிகையான கற்பனைகள் என்பது தெரிந்துதான் இருந்தது. அதன் பின் அப்படியே மெல்ல ஒரு பழக்கம் உருவானது. அதன் பின் ராஜமார்த்தாண்டன் திருமணத்தின்போது ஒரு மாத காலம் எங்கள் வீட்டில் இருந்தார். அடிக்கடி ராஜமார்த்தாண்டனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார். அப்போது சாமிநாதனைப் பற்றிக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். நீங்கள் அதையெல்லாம் அவருக்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்துங்களேன் என்று சொல்லுவேன். நீங்களும் சாமிநாதனும் ஒரு கட்சி என்பது எனக்குத் தெரியும் என்று என்னைத் தாக்குவார். ‘சாமிநாதன் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறான். என் வசம் நான் நூற்றுக்கணக்கான யானைகளை வைத்திருக்கிறேன். ஒரு நாள் அவற்றை அனுப்பி வைப்பேன். அப்போது அவனுக்குத் தெரிய வரும் யாருடன் மோதுகிறோம் என்பது’ என்று சொல்லுவார்.
ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம்தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று ஒரு பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அப்படி எழுதினார். அதோடு நிற்காமல் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கடிதம் எழுதினார். ராமசாமி எனக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது. நான் ரொம்பவும் கஷ்டப்படக்கூடியவன் என்பது உங்களுக்குத் தெரியுமே. ராமசாமியிடம் வசதி இருக்கிறது. இந்நிலையில் எனக்குச் சேர வேண்டிய முப்பத்தைந்தாயிரத்தை நீங்கள்தான் கேட்டு வாங்கித்தர வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் கிடைத்தவர்களில் ஒருவர்கூட, அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார். அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று -எனக்குத் தெரிந்து ஒருவர்கூட - எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பலர் எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார்.
அப்போது மதுரையில் இருந்து வைகை பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. குமாரசாமிதான் அதன் எடிட்டராக இருந்தார். மோகனும் அவருக்கு உதவியாக இருந்தார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தைப் பற்றி மூன்று பேருடைய விமர்சனத்தை அந்த இதழில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்று சிவராமூவினுடையது. இன்னொன்று ஜானகிராமனுடையது. இன்னொன்று என்னுடையது. பொதுவாக வேறு யாராவது இருந்தால் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்திருக்கமாட்டார்கள். நான் கடுமையாகவே விமர்சித்து எழுதியிருந்தேன். வசனங்களைக் குறைத்து காட்சிபூர்வமாகச் செய்வதற்கு நிறைய ஸ்கோப் அந்தக் கதையில் இருந்தது. இருந்தும் அதை ஒரு மேடை நாடகம் போல் வசனங்களால் நிரப்பிவைத்திருந்தார். இத்தனைக்கும்சாமிநாதனுக்கு நிறைய சினிமாக்கள் பார்த்த அனுபவம் இருந்தது. நிறைய சூட்சுமங்கள் தெரிந்துமிருந்தன. இருந்தும் அந்தத் திரைக்கதையை அவர் அப்படி ஏன் எழுதினார் என்பது புரியவேயில்லை. சிவராமூ பல தடவை சொல்லியிருக்கிறார் - அந்தத் திரைக்கதை நன்றாக இல்லை, க்ரியேட்டிவாக இல்லை என்று பல குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் அவரது விமர்சனங்கள் எல்லாமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. இன்று ஒன்று சொல்லுவார். நாளை வேறொன்று சொல்லுவார். என்னிடம் பேசியபோது அதை விமர்சித்த சிவராமூ முன்னுரை எழுதிய அந்த வசனம் புத்தக உருவத்தில் வந்தபோது பாராட்டி எழுதியிருந்தார். அது தெளிவான அரசியல் காரணங்கள் கொண்ட அணுகுமுறைதான். அந்த முன்னுரையைச் சாமிநாதன் பொருட்படுத்தி எடுத்துக்கொண்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது சிவராமூவின் உண்மையான அபிப்ராயம் அல்ல என்பது எனக்குத் தெரியும்.
அவர் என் வீட்டிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு முழுவதுமாகப் பிரிந்து போனது என்பது ‘ஜே.ஜே : சிலகுறிப்புகள்’ எழுதுவதற்கு முன்பேதான் என்பது நன்கு நினைவிருக்கிறது. அதன் பின் அவரை நான் பார்க்கவேயில்லை. சென்னையிலோ வேறு எங்குமோ தற்செயலாகக்கூட அவரை நான் பார்க்க முடிந்திருக்கவில்லை. முதலில் என்னை விட்டுப் பிரிந்த பிறகு சென்னையில் போய் சில காலம் இருந்தார். சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் என்று அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இவர் என்று இல்லை, இவரைவிட எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் தமிழ்த் திரையுலகத்தினருக்கு அவர்கள் தேவையே இல்லை என்பது இவருக்கும் நன்கு தெரியும். ஒரு சாதாரண ரசிகன்கூடச் சொல்லிவிடுவான், உங்களை அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று. ஆனால் அவர் விடாமல் முயற்சி செய்து வந்தார்.
அதன் பின் அவர் லயத்தில் என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதினாரோ எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் படித்திருக்கிறேன். அவர் என்ன நினைத்தாரென்றால் தனது வசைகளின் மூலம் என்னை அழித்து விட முடியும் என்று நினைத்தார். அவர் தாக்கி எழுதினால் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விடும் என்று நினைத்தார். பல நண்பர்கள்கூடச் சொன்னார்கள். அந்தக் கட்டுரை வந்ததும் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விட்டது என்று. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்படி இந்த ஒரு நாவலை மட்டும் குறிப்பிட்டு ஏன் தாக்கிவந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. அந்த நாவல் ஏன் அவரை அவ்வளவு சங்கடப்படுத்தவேண்டும். தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை விட்டு விட்டுத் தாண்டி ஏன் அவரால் போக முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் அந்த நாவலுக்கு இருக்கும் இடத்தைப் பற்றி, அவரது நண்பர்கள் அதைப்பற்றிச் சொல்வதுபற்றி அவர் ஏன் கவலைப்படவேண்டும். அந்த நாவலுக்கு ஏதோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைத்தது போல் என் மீதான வெறுப்பை அதன் மூலம் அவர் வெளிப்படுத்திவந்தார்.
நான் ஒரு பேட்டியில், தமிழில் மேஜர் பொயட்டே இல்லை, மைனர் பொயட்ஸ்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அது அவரைக் குறித்துச் சொன்னதாகத்தான் அவர் நினைத்துக்கொண்டார். நான் அப்படிச் சொல்லியிருக்கவில்லை. என்றாலும் அவர் ஒரு மைனர் பொயட்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இவரை மேஜர் பொயட் என்று சொன்னால் கம்பனை என்னவென்று சொல்லுவீர்கள். பாரதியை என்னவென்று சொல்லுவீர்கள். அவர்களைச் சுட்டுவதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டுமே. சிவராமூ கவிதைகள் அதிகமாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை. ஒருவேளை அவர் தன் முழுக் கவனத்தையும் கவிதைகளுக்கு மட்டுமே செலவழித்திருந்தாரென்றால் அப்படி ஆகியிருக்கக்கூடும். இன்னொரு வகையில் சொல்வதானால் அவரது சுபாவத்தினால் அதிகமும் நஷ்டமடைந்தது அவர்தான். பாரதியோடு எல்லாம் அவரை ஒப்பிடவே முடியாது. முதலாவதாகப் பாரதி அளவுக்கு இவருக்கு, சமுதாய அக்கறை கிடையாது. எந்தத் தேசத்திலிருந்து வந்தார், அந்தத் தேசத்தின் இன்றைய நிலை என்ன? அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு பற்றித்தான் அதிகமும் பேச முற்படுகிறார். ஆனால் அப்படியான ஒருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இருந்த முரண்பாடு இருக்கிறதே அதுதான் மிகவும் உறுத்தலாக இருந்தது. ஓயாமல் பிறரைக் கொத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பாம்பு, மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான இணைப்பைப் பற்றித்தான் நான் எப்போதும் சிந்தித்து வருகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும், அதுபோல்தான் சிவராமூவின் செயல்களும்.
அவரைப் போன்ற ஆட்கள் பிற நாடுகளில் பல உயரிய கலைப் படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். நமது மரபில் இப்படியான ஒரு நபரை முதன் முதலாகப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கும்கூட ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றுக்கு அப்போதே செவி சாய்த்திருந்தேன் என்றால் விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கக்கூடும். ஆனால் அப்போது ஏனோ அப்படி நடக்கவில்லை. ஆனால் அவர் மூலமாகக் கிடைத்த அனுபவமானது என் நண்பர்களை நான் வடிகட்டித் தேர்ந்தெடுக்கவோ, எச்சரிக்கையாகப் பழகவோ என்னை மாற்றியிருக்கவில்லை. நண்பர்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதேயில்லை. ஓரிரு மாற்றங்கள் என்னில் ஏற்பட்டிருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சிவராமூவை, அவருடனான அனுபவத்தை தனியான ஒன்றாகத்தான் நான் பார்த்தேன்.
என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல் ஒரு தொழிலாக அதைச் செய்பவர்கள் வேறு யாருமே கிடையாது.
*******
நன்றி: http://sundararamaswamy.com
A very good post:)
ReplyDelete