Nov 4, 2011

நினைவோடை: சி. சு. செல்லப்பா – சுந்தர ராமசாமி

நினைவோடை: சி. சு. செல்லப்பா – சுந்தர ராமசாமி (தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

நான் சென்னைக்குப் போன சமயங்களில் ஒரு தடவை கூட செல்லப்பாவைச் சந்திக்காமல் வந்தது கிடையாது. என்ன தான் இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்துவிடுவேன். நிறைய நேரம் அவருடன் இருப்பேன். அவரது வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வி, ‘என்னிக்கு வந்தாய்?’ என்பதுதான்.

‘முந்தா நாள் வந்தேன்’ என்பேன் நான்.

‘க. நா. சுவைப் பார்த்தாச்சில்லையா’ என்பார் உடனே. இவர் மட்டுமல்ல பலருக்கும் இந்த வியாsi-su-chellappa தி உண்டு. என் மனதில் தான் முக்கியமா, க. நா. சு. முக்கியமா என்பது அவருக்கு முக்கியப் பிரச்சினை.

‘நேத்திக்கு முழுக்க க. நா. சு. கூடத்தான் இருந்தேன்’ என்பேன்.

‘இன்னிக்கு என்ன அவர் ஊரில் இல்லையோ’ என்பார் செல்லப்பா.

‘இல்லை. இங்கேதான் இருக்கிறார். நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்தேன்’ என்பேன்.

இந்தக் கேள்விகளை அவர் கேட்காமல் இருந்ததே கிடையாது. இதெல்லாம் எங்கள் குடும்பத்தில் முதியவர்கள் கேட்டுக் கொள்கிற கேள்வி மாதிரி இருந்தது. ஒரு தடவைகூட க. நா. சு. இப்படிக் கேட்டதே கிடையாது. செல்லப்பாவின் கதைகள், செல்லப்பாவின் இலக்கியப் பார்வை, இலக்கிய விமர்சனம் பற்றி என் அண்ணாவின் வீட்டில் வைத்து இருவரும் பேசிக் கொள்ளுவார்கள். எழுத்து பத்திரிகைக்குள்ளேயே வாசகர்களுக்குத் தெரியும் விதமாகவே அவர்கள் இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டிருந்தது. க. நா. சு. உணர்ச்சிவசப்படும்போது ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிடுவார். செல்லப்பாவுக்கு அதைவிட சத்தமாகத் தமிழில் கத்த முடியும். ஒரு தடவை க. நா. சு. சொன்னார், ‘எவ்வளவு சொன்னாலும் உனக்கு நான் சொல்வது புரியாது. புரியாவிட்டாலும் பரவாயில்லை. உன் னோட வழி உனக்கு. என்னோட வழி எனக்கு. உலகம் பூராவும் இப்படித்தான் இருக்கிறது. நீ உன் வழியில் என்னை இழுக்க முயற்சி செய்யாதே. நான் உன்னை என் வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை’ என்று சொல்லிவிட்டார். அவர் அப்படி விவாதத்தை முடித்தது செல்லப்பாவுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அப்படி அந்த வாசலை அடைத்துவிட்டால் மேற்கொண்டு சண்டையே போட்டுக் கொள்ள முடியாதே.

செல்லப்பாவுக்கும் க. நா. சுவுக்கும் இடையேயான உறவு நீடித்த காலப் பழக்கம் கொண்டது. சந்தர்ப்பச் சூழலில் அதில் ஒரு முடிச்சும் திருகலும் விழுந்துவிட்டது. இளம் எழுத்தாளர்களில் யார் யாருக்குக் க. நா. சுவைவிட தன்னிடம் விசுவாசம் இருக்கிறது என்பதைச் செல்லப்பா ஆராய்ந்துகொண்டேயிருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. சென்னையில் என் சுதந்திரம் பாதிக்கப்படுவது உறுத்தலாக இருந்தது. அதிக அளவு இந்த விசாரம் இல்லாமலே க. நா. சு. இருந்தார். சிலருக்கு நட்பைவிட விசுவாசம்தான் அதிகம் தேவைப்படுகிறது. செல்லப்பா மதுரைப் பக்கத்தைச் சேர்ந்தவர். க. நா. சுவோ தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மதுரைப் பக்கத்தில் பழமையை உதறிக்கொண்டு வந்தவர்கள் நிறையபேர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர் பக்கம் அந்த அளவுக்குக் கிடையாது. சங்கீதம், கலைகள் என்று பேசிக் கொண்டு ஜாதி அடையாளங்களைக் கொச்சையாகக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். க. நா. சு. அந்தப் பின்னணியிலிருந்துதான் வந்திருந்தார். ஆனால் பார்ப்பதற்கு செல்லப்பா தஞ்சாவூரிலிருந்து வந்தவர் போலவும் க. நா. சு. பம்பாயிலோ டெல்லியிலோ இருந்தவர்போலவும் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மேல் விமர்சனங்கள் உருவாகி வருவதற்குக் காரணம் க. நா. சுதான் என்று செல்லப்பா நம்பினார். க. நா. சு வுக்குச் செல்லப்பாவின் விமர்சனத்தில் நம்பிக்கையில்லை. சிறுகதை எழுத்தாளராகவும் அவரைப் பின்வரிசைக்குத் தள்ளி யிருந்தார் க. நா. சு. இவையெல்லாம் செல்லப்பாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தன. ஆனால் க. நா. சுவின் சாதகமான மதிப்பீட்டைப் பெற அவர் சமரசமும் எடுத்துக்கொள்ளவில்லை. க. நா. சு. பக்கம் ஒருவன் போனால் அவன் தன் பக்கம் திரும்ப மாட்டான் என்ற பயம் அவருக்கு இருந்தது என்றே நினைக்கிறேன். அவருக்கு விசுவாசமாகவும் சிலர் இருந்தார்கள், க. நா. சு. பக்கம் போக மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு.

நான் க. நா. சுவுடன் பழகி வந்தது செல்லப்பாவுக்குச் சோர்வைத் தருவதாக ஆகியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் தருமு சிவராமு எழுத்து வில் எழுத ஆரம்பிக்கிறார். மிக முக்கியமான எழுத்தாளராக உருவாகக்கூடியவன் எழுத்து வில் தான் ஆரம்பத்தில் எழுதினான் என்பது அவருக்கு மிகுந்த மனநிறைவையும் பெருமையையும் தருவதாக இருந்தது. திரிகோணமலையில் இருந்த சிவராமு அவருடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டார்.

எப்போது சென்னைக்கு வந்தாலும் தருமு சிவராமு செல்லப்பா வீட்டில்தான் தங்குவார். செல்லப்பா எல்லோரையும் எப்படியாவது தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்துவிடுவார். அவர் வீட்டில் சாப்பிடாத எழுத்தாளரே அவருடைய நண்பர்களில் இருக்கமாட்டார்கள். சென்னைக்கு யாராவது வந்தால் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரண்டு மூன்று கறிகள் விதவிதமாகச் செய்து, திருப்தியாகச் சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார். அந்த எழுத்தாளர் பம்பாயிலிருந்து வந்திருந்தாலும் சரி, மதுரையிலிருந்து வந்திருந்தாலும் சரி, அவர்களை நன்கு கவனித்துக் கொள்வார். ஏ. கே. ராமானுஜம் செல்லப்பா வீட்டில் உணவருந்தியிருக்கிறார். ரொம்ப வற்புறுத்திக் கூட்டிக்கொண்டு போனார். இந்த ஆட்களில் ஒருவரைக்கூட க. நா. சு. தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதே கிடையாது. அப்படி ஒரு பழக்கமே அவரிடம் கிடையாது. ஏனென்றால் யாராவது வந்தால் காப்பி போட்டுக் கொடுக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் அவருக்கு இல்லை.

ஒருநாள் செல்லப்பா என்னிடம், ‘சிவராமுவை எழுத்து பத்திரிகையின் வாரிசாக ஆக்கப் போகிறேன்’ என்றார்.

‘என்ன சார் இது, பத்திரிகைக்கு வாரிசு உண்டா? ஒரு ராஜ்ஜியம் இருந்தா மன்னர் இருப்பார். அவருக்கு வாரிசு வரும். ஒரு பத்திரிகைக்கு எப்படி வாரிசு வரும்’ என்றேன்.

‘அப்படியில்லை. அவன் மகா கெட்டிக்காரன். பெரிய மேதை. அவனைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ்நாடு அவனைப் புறக்கணிக்கக்கூடும். தமிழ்ச் சமூகம் கூர்மையான உணர்வுகள் கொண்ட சமூகம் அல்ல. எங்களையே ஏற்றுக்கொள்ளவில்லையே. அப்புறம் அவனை எங்கே ஏற்றுக்கொள்ளப்போகிறது. அவன் தொடர்ந்து எக்கச்சக்கமாக எழுதக்கூடியவன். எனக்கு பத்து பக்கத்துக்குக் கடுதாசி போடுவான். அதுக்கு நான் பதில் போடுவதற்கு முன்னாலயே பத்து பக்கத்துக்கு இன்னொரு கடுதாசி வந்து சேர்ந்துவிடும். அவன் சுதந்திரமாக எழுதுவதற்கு ஒரு பத்திரிகை வேண்டும்’ என்றார்.

‘சரி, வாரிசாகப் போடுவதென்றால் எப்படிப் போடுவீர்கள்’ என்றேன்.

‘என் உயிலில் எழுதுவேன். என் காலத்துக்குப் பின்னால் எழுத்து பத்திரிகை சிவராமுவுக்குத்தான் சொந்தமானது. அதனுடைய ஆசிரியர் அவன்தான். அதனுடைய லாபமும் நஷ்டமும் அவனை மட்டுமே சார்ந்தது. என் குடும்பத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று உயிலில் எழுதி வைப்பேன்’ என்றார்.

நான் கேட்டேன், ‘சார், இதெல்லாம் கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம் இல்லையா? சிவராமுவின் சுபாவம் இதெல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமா?’ என்றேன்.

அந்தக் காலத்திலேயே பலருக்கும் சிவராமுவிடம் அப்படிப் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி வேறு கருத்து இருந்தது. அவரை நிறைய எழுதச் சொல்லலாம். அதைப் புத்தகமாகக் கொண்டு வரலாம். அந்தப் புத்தகங்கள் பரவலாகக் கிடைக்க ஏற்பாடு செய்யலாம். ஆனால் எழுத்து என்ற பத்திரிகையை அதனுடன் சம்பந்தப்பட்ட சி. மணி, ந. முத்துசாமி, வைத்தீஸ் வரன், வெங்கட் சாமிநாதன் இருக்கக்கூடிய ஒரு பெரிய குழுவில், அந்தப் பத்திரிகையின் தன்மையை அறிந்து அதைக் கனவாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய பலரும் அவர் பக்கத்திலேயே இருக்கும்போது, அவர் சிவராமுவைத் தேர்ந் தெடுப்பது என்பது கொஞ்சம்கூடப் புத்திசாலித்தனமில்லை. ஆனால் இவர் உயிலில் எழுதினாரா அதைப் பதிவு செய்தாரா அதெல்லாம் தெரியாது.

செல்லப்பாவிடம் ஒரு முறை நான், தொடர்ந்து தொடர்பு கொண்டு வரும்போது ஏதேனும் ஒரு கட்டத்தில் சிவராமுவை வாரிசாகப் போடாமல் இருந்தது நல்லதுக்குத்தான் என்று உங்களுக்குத் தோன்றலாம் என்றேன். அது எனக்கு இப்போதே வந்துவிட்டதே என்றார் உடனே. இனிமேல் அப்படி யோசிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். நான் என்ன முட்டாளா என்றார். அப்புறம் அவர் அது மாதிரி யோசிக்கவேயில்லை. ஆனால் சிவராமுவுக்கு அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்; அந்தப் பத்திரிகையில் எழுதித்தான் நாலுபேருக்குத் தெரியும்படி ஆனோம் என்ற எண்ணமெல்லாம் இருந்தது. ஆனால் செல்லப்பாவுக்கு சிவராமு மேலான விருப்பம் குறைந் ததும் அவரிடமிருந்து விலகிக்கொள்வதற்கான ஒரு கட்டாயம் ஏற்பட்டது. சிவராமு அவரை முறித்துக்கொண்டு போனார் என்பதை விட அவர் மேல் செல்லப்பாவுக்கு இருந்த நம்பிக்கை யையும் ஆர்வத்தையும் செல்லப்பா முற்றாக இழந்ததனால்தான் பிரிய நேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பின்னால் பல வருடங்கள் கழித்து பத்துப் பதினைந்து நாட்கள் sisuஎன் வீட்டில் வந்து அவர் தங்கியிருக்கிறார். புத்தக வியாபாரம் நடக்கும் சமயத்தில். அப்போது என் மனைவியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். என் குழந்தைகள் எல்லாரும் நன்கு வளர்ந்துவிட்டிருந்தார்கள். அவர்களுடன் நிறைய பொழுதைப் போக்குவார். தைலா என்று நினைக்கிறேன் - அவர் புஸ்தகம் விற்கப் போனபோது ஒரு தடவை அவளும் கூடவே புறப்பட்டுப் போய்விட்டாள். சாயங்காலம்தான் திரும்பிவந்தாள். ரொம்ப மரியாதையோடு நானும் கமலாவும் அவரைக் கவனித்து எல்லாம் செய்தோம். அப்போது சண்டை சச்சரவு எதுவும் கிடையாது என்பது மட்டுமல்ல, ஒரு அர்த்தத்தில் மிகுந்த நெருக்கமும் ஏற்பட்டிருந்தது.

என்னுடன் தங்கியிருந்தபோது அவருக்கு எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கம் ஏற்பட்டது. நான் எனக்குத் தெரிந்த கல்லூரிப் பேராசிரியர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருடைய புத்தக விற்பனைக்கு என்னால் இயன்ற காரியங்களைச் செய்தேன். தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்கள் மத்தியில் அவரைப் பேச வைக்க வேண்டும் என்று பல கல்லூரிப் பேராசிரியர்களிடம் கேட்டுக்கொண்டேன். எனக்கு நிறையப் பேராசிரியர்கள் நண்பர்களாக இருந்தது எனக்கே சந்தோஷத்தைத் தந்த சமயம் அது. வையாபுரிப்பிள்ளை, ஜேசுதாசன் என்று அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பேராசிரியர்களுடன் ஒரு தொடர்பு இருந்துவந்திருக்கிறது. பேராசிரியர்களிடம் தொடர்புகொண்டு பேசியிருப்பதையெல்லாம் செல்லப்பாவிடம் நான் வேண்டுமென்றே சொல்லவில்லை. என்ன காரியம் நிறைவேறும், எது நிறைவேறாது என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்குப் பல யோசனைகள் இருக்கும். செல்லப்பா பற்றி மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

பொதுவாக எல்லாக் கல்லூரிகளிலும் அவரைக் கௌரவமாகத்தான் நடத்தினார்கள். ஆனால் எந்தெந்தக் கல்லூரிக்கு நான் சொல்லிப் போனாரோ, அந்தக் கல்லூரிகளில் அவருக்கு விசேஷ கவனம் கிடைத்தது. அவர் எதிர்பார்த்தபடி புத்தகங்களை அவர்கள் வாங்கவில்லை என்ற குறை இருந்ததே தவிர, மற்றபடி அவருக்கு மனநிறைவாகத்தான் இருந்தது. அவர் பேசாத கல்லூரியே கிடையாது என்று சொல்லுமளவுக்குப் பேசினார். தமிழ்த் துறையில் எம். ஏ. படிக்கும் மாணவர்களுக்குப் புதுக்கவிதை பற்றி, சிறுகதை பற்றி, தமிழ் இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்ள இப்போது உயிருடன் இருக்கக்கூடியவர்களில் மிகப்பெரிய அதாரிட்டி செல்லப்பாதான் என்று என்னிடம் பல பேராசிரியர்கள் சொன்னார்கள். அவர் மூலம் நேரடியாகவே இந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று எல்லாப் பேராசிரியர்களும் அவரைப்பற்றி உயர்வாகச் சொன்னார்கள்.

செல்லப்பா இங்கிருந்தபோது நாங்கள் எவ்வளவு நெருக்க மானோம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அவர் என்னிடம், ‘ராமசாமி, நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதுபற்றி இப்போதே ஒன்றும் முடிவு எடுக்க வேண்டாம். யோசித்துப் பாரு. நான் உன்னை வற்புறுத்துவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தலாமா? நீ இங்கிருக்கிறாய், நான் சென்னையில் இருக்கிறேனே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எனக்கு எழுதுவதற்கு ஒரு பத்திரிகை இல்லை. உனக்கும் எழுதறதுக்கு ஒரு பத்திரிகை இல்லை. உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீ எழுதிக்கொள்ளலாம். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் எழுதிக்கொள்கிறேன். க. நா. சு. வேண்டுமானால் கூட எழுதட்டும்’ என்றார். க. நா. சு. வேண்டுமானால்கூட எழுதிக்கொள்ளலாம் என்று சொன்னால் உலகத்தில் யார் வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று சொன்னதாக எண்ணம் அவருக்கு. ‘இன்னொன்று, இந்தப் பத்திரிகைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டால் உனக்கு ரொம்பப் பணம் செலவழிந்தது என்றெல்லாம் வரவே வராது. உன்னிடம் பணம் இருப்பதால் நீ கொஞ்சம் அதிகமாகப் போட வேண்டியிருக்கும். சந்தா சேர்ப்பதில், வெளியில் அந்தப் பத்திரிகைக்கு நல்ல பெயர் சேர்ப்பதில் எல்லாம் நான் பெரிய பங்கு வகிக்க முடியும்’ என்றார். ‘சார், நமக்குள்ளே ஒத்துப் போகணுமே; அது பெரிய பிரச்சினை இல்லையா’ என்றேன். அதுக்கு அவர் நாம போட்டுக் கொண்ட சண்டையெல்லாம் சண்டையே இல்லை. வீட்டில் அண்ணா தம்பி போட்டுக்கொள்ளும் சண்டை மாதிரிதான். அது ஒண்ணும் சீரியசான சண்டை இல்லை. பெண்டாட்டிகூட எவ்வளவு சண்டை போட்டிருக்கிறேன். அதுக்காக அவள் என் பெண்டாட்டி இல்லை என்றாகி விடுமா? சொத்தை வேறு யாருக்காவது எழுதிவைத்துவிட்டுப் போய்விடுவேனா என்ன? என் அம்மாவிடம் எவ்வளவு சண்டை போட்டிருக்கிறேன். அது மாதிரிதான் நாம் போட்டுக்கொண்ட சண்டையும்’ என்று சொன்னார். ‘சரி யோசித்துப் பார்க்கிறேன்’ என்றேன். பின் புறப்பட்டுப் போய்விட்டார். அவர் மனதுக்குள் நான் இந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கமாட்டேன் என்பது தெரிந்திருந்தது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அந்த அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது எங்களிடையே. அது ஒரு முக்கியமான விஷயம்தான்.

பழைய விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டுப் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும் ஆவேசம் அவரிடம் இருந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் அவர் ரொம்பச் சுறுசுறுப்பானவர். ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாது அவரால். க. நா. சுவெல்லாம் ரொம்ப வசதி இருந்தால் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். இப்போதும் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக் கொண்டேதான் இருந்தார். உட்கார்ந்து உட்கார்ந்து படித்து வந்ததால் அவரது முதுகு வளைந்துவிட்டிருந்தது. தலையை நிமிர்த்தவே மாட்டார். ரோட்டில் நடக்கும்போதுகூட அப்படித் தான் நடப்பார். உத்தமமான ஆண்கள் பெண்களின் பாதங்களை மட்டும்தான் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்களே, அது போல் இவரும் பெண்களின் பாதங்களையும் ஆண்களின் பாதங்களையும் மட்டுமே பார்த்ததுபோல்தான் இருப்பார். ஏன் சார் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால், ‘உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டே இருக்கிறேன் இல்லையா அதனால்தான்’ என்பார். நாற்காலியில் உட்கார்ந்து குனிந்தபடியே படித்ததால் அப்படி ஆகியிருக்கிறது என்றால் நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அவருக்கு வசதியாகச் சாய்ந்து கொண்டு படிப்பதற்கு ஏற்ற நாற்காலி இருக்கவில்லை.

செல்லப்பா ஏவிவிட்ட ஒரு பூதம் மாதிரிதான். எங்கிருந்து இவ்வளவு சக்தி வருகிறது, யார்  இயக்குகிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாது. அவர் சாப்பாடெல்லாம் ரொம்பச் சாதாரணமானதுதான். சத்தான உணவு என்கிறார்களே, அவர் சத்தான உணவு சாப்பிட்டு நான் பார்த்ததே கிடையாது. அவரது பொருளாதாரம் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதற்குள் இருந்தே எப்படி இவ்வளவு பலத்தை அவர் திரட்டிக் கொண்டார் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம். சென்னைக்கு யார் வந்தாலும் சரி அவருக்கு அந்த நபருடன் பழக்கம் இருந்திருக்குமென்றால் அந்த நபரை அவரே போய்ப் பார்த்து விடுவார். நான் ஒரு தடவை தி. நகரில் என் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். என் அக்காவுக்கு டைபாய்டு ஜுரம் வந்து ரொம்ப மோசமான நிலையில் இருந்தாள். யாரோ செல்லப்பாவிடம், ‘ராமசாமி வந்திருக்கிறார். அக்கா வீட்டில் தங்கியிருக்கிறார்’ என்ற விஷயத்தைச் சொல்லிவிட்டிருக்கிறார்கள். நேராக வீட்டிற்கு வந்துவிட்டார். எனக்கு ரொம்பக் கூச்சமாக ஆகிவிட்டது. வந்ததும் அக்காவுக்கு உடம்புக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டார். போய்ப் பார்க்கலாமா என்றார். தாராளமாகப் போய்ப் பாருங்கள் என்றேன். அவளிடம் போய் உடம்புக்கு என்ன என்று கேட்டார். வீட்டில் கேன்வாஸ் போட்ட ஈஸி சேர் இருந்தது. அதில் படுத்துக்கொண்டார். சத்தமாகப் பேச ஆரம்பித்தார். இதெல்லாம் க. நா. சுவுக்குத் தெரியவே தெரியாது. க. நா. சு. ஒரு வீட்டுக்கு வந்தால் அந்த வீட்டில் நடக்கும் ஒரு விஷயமும் அவருக்குத் தெரியாது. என் அப்பா பற்றி என்னிடம் எதுவுமே அவர் கேட்டது கிடையாது.

அவர் பல பெரிய பத்திரிகைகளில் பணிபுரிந்துவந்திருக்கிறார். தினமணி கதிரில் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். அப்போது துமிலன் எடிட்டராக இருந்தார். அப்போது செல்லப் பாவுக்கு க. நா. சுவுடன் நெருக்கமான நட்பு இருந்ததால் கிட்டத்தட்ட க. நா. சுவின் பல கதைகள் கதிரில் வெளியாயின. வாராவாரம் வெளியானது. அந்தக் கதைகளில் ஒன்றுகூட தமிழ்ச் சிறுகதையாக வாசகர்களுக்குத் தோன்றவே செய்யாது.

வில்லியம் பாக்னரின் கதை ஒன்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார் செல்லப்பா. இரண்டு வாரமாக வந்திருந்தது. அது மாதிரி செல்லப்பா பல விஷயங்கள் செய்திருக்கிறார். க. நா. சு. ஆரம்பித்த இரண்டு பத்திரிகைகளிலும் செல்லப்பா முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். க. நா. சுவுக்கு ப்ருஃப் பார்க்கவே தெரியாது. ப்ருஃப் பார்த்தால் ஒரிஜினலில் இருப்பதை விட பிழைகள் கூடுதலாகிவிடும். அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் செல்லப்பா அழகாகப் பிழை திருத்துவார். எழுத்து நடத்தியபின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு விஷயங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தார். முதலில் 25 இதழோ 30 இதழோதான் நடத்துவேன். அதன்பின் இதழை நிறுத்திவிடுவேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தது.பெரிய அளவில் சந்தா இல்லா விட்டாலும் சமூகத்தில் அத்தகைய முயற்சிகளின் பேரில் ஆர்வம் உள்ள ஆட்கள் நிறைய பேர் உருவாகியிருந்தார்கள். தொடர்ந்து நடத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் அந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அவர் கையில் ஒரு நயா பைசாகூடக் கிடையாது. அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். ஏதோ கொஞ்சம் நகைகள்தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்று. அவர் வெளியே கொண்டுபோன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ‘சார் இப்படிச் செய்யணுமா. நகைகளை அடகு வைத்து பத்திரிகை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, ‘அடகுதானே வைச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டுவிடலாமே’ என்பார். ‘அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப் போயிடுமே’ என்றேன். அதுக்கு அவர், ‘இந்த எழுத்து இருக்கிறதில்லையா அது தொடர்ந்து நடந்தாக வேண்டும். நீ அதுக்கு வேணா ஒரு வழி சொல்லேன். நீ இப்போ ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். அந்த நகைகளை மீட்டு அவளிடம் தந்துவிடுகிறேன்’ என்றார். ஆனால் ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்; அடுத்தவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் அவருக்கு இருந்தது.

பின்னால் பல பரிசுகளை அவர் வாங்க மறுத்தார். எதையெல்லாம் மறுத்தார் என்பது சரியாக ஞாபகமில்லை. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலிருந்து பரிசுத்தொகை தந்தபோது அதை மறுத்துவிட்டார். அமெரிக்கத் தமிழர்கள் ‘விளக்கு’ பரிசு தந்த போதுகூட அதை அவர் மறுத்துவிடுவாரோ என்று அவர்கள் பயந்தார்கள். அதுபோலவே அவரும் பரிசுப் பணமாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். என் புத்தகங்களை வேண்டுமானால் வெளியிடுங்கள் என்றார். அதனால் புத்தகத்தை அச்சேற்ற உதவினார்கள். ஒரு ஆள் நமக்குப் பணத்தைக் கொடுக்க முன் வருகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்வதை அகௌரவமாக அவர் நினைத்தார்.

பத்திரிகை நடத்த ஆரம்பித்தபோது - ரொம்பப் பிரமாதமாக நடத்தினார் - முதலில் அவருக்கு விமர்சனத்தில் அவ்வளவு பழக்கம் கிடையாது. பெரிய பெரிய நூல் நிலையங்களுக்குப் போய், பணம் கொடுத்து சந்தாதாரராக ஆகிக்கொள்ளும் வசதிகள் எல்லாம் அவருக்கு இருக்கவில்லை. பிரிட்டிஷ் லைப்ரரி, அமெரிக்கன் லைப்ரரிகளில் அதிகச் செலவு இல்லாமல் புத்தகங்களை எடுத்துக்கொள்ள முடியும். அந்த நூல் நிலையத்தைக் கவர்ச்சிகரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு நூல் நிலையத்துக்கும் மாறி மாறிப் போய் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்களை ஒன்று விடாமல் படித்துவந்தார். நான் எப்போது போய்ப் பார்த்தாலும் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்கள்தான் அவர் கையில் இருக்கும். அந்தச் சமயத்தில் நாவலோ சிறுகதைகளோ அவர் படித்து நான் பார்த்ததில்லை. விமர்சனம் சம்பந்தமாக அவர் அப்படிப் படித்து வந்தவற்றின் பாதிப்பை எழுத்துவில் வெளிவந்த கட்டுரைகளில் பார்க்க முடிந்தது.

புதுக்கவிதை எழுதுபவர்களுக்கு மரபிலக்கணம் தெரியாது, அதனால்தான் அவர்கள் புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்று பலர் சொன்னார்கள். ரகுநாதன், அழகிரிசாமி, கைலாசபதி, நா. பார்த்தசாரதி எனப் பலரும் சொல்லியிருக்கிறார்கள்sisuchellappa. சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. நான் அழகிரிசாமி எல்லாரும் அதில் கலந்துகொண்டோம். அன்று நான் புதுக்கவிதையை ஆதரித்துப் பேசினேன். அழகிரிசாமியும் நா. பாவும் புதுக்கவிதையை உரித்தெடுத்துவிட்டார்கள். அழகிரிசாமிக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு உண்டு. நா. பாவுக்குப் பழைய இலக்கியத்தில் நல்ல படிப்பு. சபையைப் பூராவும் வளைத்துக் கட்டிவிட்டார்கள். நான் முதன்முதலாகச் சென்னையில் பேசுகிறேன் என்பதினாலும் பல எழுத்தாளர்களை அதற்கு முன்பே சந்தித்திருந்தேன் என்பதினாலும் பல முக்கியமான எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். செல்லப்பா சொன்னார், நமக்கு யாப்பு படிப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது. க. நா. சுவுக்கு யாப்பு படிக்கறது என்பது என்ன பெரிய பிரச்சினையா? என்னென்னவோ நாவல்கள், கதைகள் எல்லாம் படித்துவிட முடிகிறதே அவரால். அவராகவே வேண்டாம் என்று யாப்பைப் படிக்காமல் இருக்கிறார். இலக்கணம், யாப்பு என்பது ஏதோ கடினமான விஷயம் மாதிரியும் இவர்கள் மூளைக்குள் நுழைய முடியாது என்பதுபோலவும் சொல்லிக் கொண்டு வருகிறார்களே. அற்புதமான கதை, நாவல் எழுத முடிந்தவனுக்கு யாப்பு படிப்பதில் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது என்று அவர் கோபித்துக்கொள்வார்.

அப்போது அவர் மனதில் ஒரு எண்ணம் உருவானது. அதாவது தமிழ் இலக்கணத்தில் எப்படியும் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று. அப்படியே ஆகவும் செய்தார். அதன் பின் கட்டுரைகளில் சவால் விட ஆரம்பித்தார். நா. பா. போன்றோரெல்லாம் சிறுவயதிலிருந்தே இலக்கணம் படித்துவந்திருந்தார்கள். செல்லப்பாவோ திடீரென்று புகுந்து படிக்க வேண்டியிருந்தது. ஆனால் படித்துவிட்டார். இலக்கணத்தைப் பேசி அவர்களால் பயமுறுத்த முடிவதைப் போல இவராலும் பேசிப் பயமுறுத்த முடியும் அளவுக்குப் படித்து முடித்துவிட்டார். அப்படி ஒரு குணம் அவரிடம் இருந்தது.

அதுபோல் அவரிடமிருந்த இன்னொரு முக்கியமான விஷயம் அவரைப் போல் ஒரு சிக்கனமான ஆளை நீங்கள் பார்க்கவே முடியாது. காந்தி ரொம்பச் சிக்கனம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்குச் சிக்கனமானவர் செல்லப்பா. ஒரு நயா பைசா கூடச் செலவழிக்காமல்தான் காரியங்களை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இரண்டு பைசா செலவழிக்க வேண்டி வந்தால் ஒன்றரை பைசாவுக்குள் அதைச் செய்து முடிக்க முடியுமா என்று பேரம் பேசுவார். அவருக்கேற்ற மாதிரி அவர் மேல் ரொம்ப மரியாதை கொண்ட ஒரு அச்சக உரிமையாளர் அவருக்கு நண்பராக இருந்தார். புத்தகத்தை அடித்துக் கொடுத்து விடுவார். இவரால் எப்போது காசு தர முடிகிறதோ அப்போது தந்தால் போதும் என்று ஏற்பாடு. ஆனால் ஒரு நயா பைசா கூட ஏமாற்றமாட்டார் என்பது உரிமையாளருக்குத் தெரியும். வீட்டையோ வயலையோ விற்றாவது பாக்கியை அடைத்து விட்டுத்தான் செத்துப்போவார் என்ற நம்பிக்கை செல்லப்பா மேல் அவருக்கு இருந்தது. அதோடு அது போன்றதொரு சிறிய பத்திரிகையை அச்சடித்துத் தருவது என்பது அவருக்குப் பெரிய விஷயமே இல்லை.

அதன்பின் இதழைத் தைக்க வேண்டுமா, ‘பின்’ போட வேண்டுமா என்றொரு பெரிய பிரச்சினை எழுந்தது. பல ஆராய்ச்சிகள் செய்து தைப்பதுதான் ‘பின்’ போடுவதை விட 3 பைசாவோ என்னமோ லாபமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து தைப்பது என்று முடிவெடுத்தார். அவரே தைப்பார். நான் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் பீடி சுற்றும் போது வேகவேகமாகச் சுற்றுவார்களே அது போல் கிடுகிடுவென வேகமாகத் தைப்பார். அதோடு அவர் மனைவிக்கும் தைக்கக் கற்றுக்கொடுத்திருந்தார். இருவரும் உட்கார்ந்து கிடுகிடுவெனத் தைப்பார்கள். கைப்பட முகவரி எழுதுவார்கள். பிறருக்குக் காசு கொடுப்பது என்பது காகிதத்துக்கும் ஸ்டாம்புக்கும் அச்சகத்துக்கும் மட்டும்தான். இதைத்தவிர ஒரு நயா பைசா செலவழிக்காமல் இருக்கப் பார்ப்பார்.

அப்புறம் இன்னொரு நாள் ஒரு விஷயம் நடந்தது. ப்ரௌன் பேப்பர் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவில் வருகிறது. பல ஆராய்ச்சிகள் செய்துதான் அந்தப் பேப்பரைக் கண்டுபிடித்திருந்தார். விலை குறைவாக இருக்கிறது. முழு முகவரியையும் எழுத முடிகிறது. குறிப்பிட்ட நபருக்குச் சரியாகப் போய்ச்சேர்ந்துவிடும். பேப்பர் இங்க் ஊறாமல் இருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களை மூளைக்குள் போட்டு அலசி ஆராய்ந்துதான் அந்த ப்ரௌன் தாளையே தேர்ந்தெடுத்திருந்தார். பத்திரிகை சின்னதுதானே. அதற்குத் தகுந்தாற்போல் இந்த ப்ரௌன் பேப்பரை வெட்டி மடித்து ஒரு கவர் அவரே தயாரித்தார். வெளிநாட்டுக்கெல்லாம் கவரில்தானே அனுப்ப வேண்டியிருந்தது. குறிப்பிட்ட ப்ரௌன் பேப்பரில் மூன்று கவர்கள் தயாரிக்க முடிந்திருந்தது. ஏதோ ஒரு நிமிடத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்போதோ எப்போதோ அவருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அதாவது மூன்று கவர் தயாரிக்கும் பேப்பரில் அளவை மாற்றி இப்படித் திருப்பி அப்படித் திருப்பி வைத்தால் நான்கு கவர்கள் தயாரித்துவிட முடியும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. ஏற்கெனவே மடித்து ஒட்டும் பகுதி என்பது ஒரு சென்டி மீட்டர் அளவுக்குத்தான் இருந்தது. அதை மடித்து ஒட்ட அவரால் மட்டுமே முடியும். இந்நிலையில் தொடர்ந்து பல தடவைகள் முயன்று பார்த்து நாலு கவர்களாக ஆக்கிவிட்டார். அவருக்கு ரொம்பச் சந்தோஷம். மிகப் பெரிய வெற்றி அது.

இதெல்லாம் ஒரு பத்திரிகை ஆசிரியர் சாதாரணமாகச் செய்யவே முடியாத ஒரு காரியம். இப்படிச் செய்தால்தான் காரியம் சிறப்பாக நடக்கும். அதிகப்பணம் வந்தாலோ, சிக்கனமின்றிச் செய்தாலோ பத்திரிகை நடத்தவே முடியாது என்று அவர் திடமாக நம்பினார். எனக்கு அந்த விஷயத்தில் அப்போது அவ்வளவு மரியாதை இருக்கவில்லை. ஆனால் வயதாக ஆக அதன் முக்கியத்துவம் தெரியவருகிறது. இப்போது அவருடைய எதிர்மறையான விஷயங்கள் மறைந்து போய் அவருடைய சாதகமான அம்சங்கள் என் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கின்றன.

சிறு பத்திரிகை நடத்தும் பலருக்கு அரசாங்கத்திலிருந்து என்னென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பது தெரியாது. ரொம்பப் பணத்தைச் சிறுபத்திரிகைக்காரர்கள் வீணாக்கியிருக்கிறார்கள். பெருந்தொகையாக இருக்காது. ஏனெனில் முதலீடே ஆயிரம் இரண்டாயிரம் என்றுதானே இருக்கும். அதனால் பெருந்தொகை நஷ்டம் இருக்காது. ஆனால் கண்டபடி ஸ்டாம்ப் ஒட்டுவார்கள். இரண்டு பைசா செலவு பண்ண வேண்டிய இடத்தில் இரண்டு ரூபாய் செலவு பண்ணுவார்கள். இப்போது கையெழுத்துப் பிரதிகளை கவரில் போட்டு கொரியரில் அனுப்பி வைக்கிறார்கள். அதற்கான அவசியமே கிடையாது. ஒரு நாள் முன்னதாக வந்து சேர்கிறது என்பது என்னவோ உண்மைதான். செல்லப்பா புக் போஸ்டில்தான் அனுப்புவார். எனக்கு அனுப்பின எல்லாக் கடிதங்களும் போஸ்ட் கார்டில் அனுப்பினவை தான். இன்லெண்ட், கவரை உபயோகப்படுத்தினதே கிடையாது. யாருக்கு எழுதினாலும் போஸ்ட் கார்டில்தான் எழுதுவார். இது மாதிரி எல்லா விஷயத்திலும் சிக்கனப்படுத்திக் காரியங்களைச் செய்து வந்தார். இப்போது நம்மிடம் அந்தப் பழக்கமே இல்லை. போய்விட்டது. அதன் பிறகு எழுத்து பத்திரிகை காலாண்டிதழானது. பின் நின்றும் போனது.

செல்லப்பா சுத்தமாகப் பிழை திருத்துவார். ஒரு சிறிய பிழை இருந்தால்கூட வருத்தப்படுவார். ஒரு பைசாகூட வீணாக்கக் கூடாது என்று கணக்குப் பார்ப்பவர் ஒரு தடவை ஒரு மோசமான பிழை sundararamasamyவந்துவிட்டது என்பதற்காக ஒரு பக்கத்தையே அழிக்கச் சொல்லிவிட்டார். அச்சடிப்பவர்கள், ‘வேண்டாம். அதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. எவ்வளவோ பிழைகளுடன் அச்சடிக்கப்படுகின்றன. உங்களுக்குத் திருப்பி அடிப்பதால் ரூ 13.50 நஷ்டம் ஏற்படும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. நீ அழித்துத் திருப்பி அச்சடி என்று சொ ல்லிவிட்டார். அது மாதிரியான பிழைகளை எல்லாம் கௌரவப் பிரச்சினையாகப் பார்ப்பார் அவர். அவரது கடைசி நாவல் - எத்தனை பக்கங்கள்? ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்குமே - அது மாதிரி அவரிடம் பல நாவல்கள் இருந்தன என்று சொன்னார்கள். அவரது வயதுக்குக் கொஞ்ச நேரம் குனிந்து உட்கார்ந்து எழுதுவதே கஷ்டமான காரியம். ஒரு எழுத்தாளனுக்கு வேண்டிய எந்த வசதியும் அவருக்குக் கிடையாது. ஒரு மின்விசிறியை வைத்துக்கொள்வது, ஒரு நல்ல விளக்கைப் போட்டுக்கொண்டு எழுதுவது, நல்ல உணவைச் சாப்பிடுவது, மதியம் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வது என ஒரு வசதியும் அவருக்குக் கிடையாது. ஒரே பைத்தியம். எழுத வேண்டுமென்ற வெறி. அவ்வளவுதான். இதெல்லாம் மிகப் பெரிய குணங்கள். எழுதியவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பது இரண்டாம் பட்சமான காரியம்தான்.

அதுபோல் அவர் செய்திருக்கும் மொழிபெயர்ப்புகள். அதைப் படித்துப் பார்த்தால் அவை ரொம்பவும் கரடுமுரடாக இருக்கும். அவருக்கு மொழிபெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் திட்டமான ஒரு யோசனை இருக்கிறது. மூல மொழியின் நெளிவு சுளிவுகள், அந்தச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியான சொற்களைக் கண்டுபிடித்துப் போடுவார். பிற மொழியின் நுட்பங்களை அப்படியே தமிழுக்குக் கொண்டுவர முனைவார். மொழிபெயர்ப்பு வழவழவென்று இருக்க வேண்டும் என்பதற்காக மூல மொழியின் அர்த்தங்களை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இதுமாதிரியான தீர்மானங்களைக் கொண்டு பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். சில சமயங்களில் அந்த மொழிபெயர்ப்புகளை வாசித்துக் காட்டுவார். ‘சார், கரடுமுரடா இருக்கே’ என்று நான் சொன்னால் எனக்கு மொழிபெயர்ப்பதற்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. கடைசி வரையிலும் அதன்படிதான் நான் மொழிபெயர்ப்பேன். அப்படிச் செய்வதன் மூலம்தான் ஒரு மொழியை வளர்க்க முடியும். தழுவி எழுதியோ சரளமாகப் படிக்கும்படி மொழிபெயர்ப்பதினாலோ ஒரு மொழியை வளர்க்க முடியாது. தமிழைப் பல தளங்களுக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது என்பார். அது எனக்கு விவேகமான பார்வை என்றுதான் தோன்றியது. ஒரு பாராவை மொழிபெயர்த்துவிட்டு ஆங்கில மூலத்தில் பாரா எவ்வளவு அங்குலம் இருக்கிறது, மொழிபெயர்ப்பு எவ்வளவு அங்குலம் கூடுதலாகயிருக்கிறது என்று ஸ்கேலால் அளந்து பார்ப்பார். அதிலிருந்து அவர் கண்டுபிடித்தது என்னவென்றால் ஆங்கில பாரா ஆறு அங்குலம் இருந்தது என்றால் தமிழ் பாரா ஒன்பது அங்குலம் ஆகிவிடும் என்பதுதான். இதே கணக்குதான் என்று நான் சொல்லவில்லை. இதைப் போன்ற ஒரு கணக்கு.

நான் செல்லப்பாபோல் மொழிபெயர்க்கவில்லை. அதுபோல் மொழிபெயர்க்க முடியாமல் போய்விடுகிறது. வாசகர்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற கவலை வந்துசேர்ந்துவிடுகிறது. எனவே அதைச் செம்மைப்படுத்த முயற்சி செய்கிறேன். அதே சமயம் ரொம்பவும் செம்மைப்படுத்தவும் மாட்டேன். இதே நம்பிக்கை க. நா. சுவுக்கும் உண்டு. ராமலிங்கம் பிள்ளை என்று ஒருவர் தகழியின் ‘ரெண்டிடங்கழி’யை மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் ‘செம்மீனை’ நான் மொழிபெயர்த்திருந்தேன். ராமலிங்கம்பிள்ளையின் மொழிபெயர்ப்பைப் பார்த்தால் அது மலையாள மொழியா, தமிழ் மொழியா என்ற சந்தேகம் உருவாகிவிடும். ஆனால் அவர் ரொம்பப் பெரிய படிப்பாளி. அவர் உருவாக்கின அகராதிகள், ஆங்கிலம் -ஆங்கிலம் - மலையாளம், கேரளாவில் லட்சக்கணக்காக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. க. நா. சு. ‘இலக்கிய வட்டம்’ இதழில் இந்த இரு மொழிபெயர்ப்புகளையும் மதிப்புரை செய்திருந்தார். அதில் ராமலிங்கம் பிள்ளையின் மொழிபெயர்ப்பு முக்கியமானது, என்னுடைய மொழிபெயர்ப்பு இரண்டாம்பட்சமானது என்று சொல்லியிருந்தார். அவருக்கும் செல்லப்பாவுக்கும் இருக்கும் பொதுவான கருத்து இது என்று நான் தெரிந்து கொண்டேன். க. நா. சுவுக்கும் செல்லப்பாவுக்கும் மூலத்தைச் சார்ந்து அதற்கு நெருக்கமாக உருவாக்கப்படும் மொழிபெயர்ப்பு தான் தமிழை வளர்க்கப் பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் செல்லப்பாதான் அதை நடைமுறையில் கடைப்பிடித்தார். க. நா. சு. தான் மொழிபெயர்த்த எல்லாப் புத்தகங்களிலும் குறிப்பிட்ட கோட்பாட்டை, அதாவது மூலத்தை நெருங்க முயற்சி செய்வதன் மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு சிக்கலாக இருந்தாலும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவேயில்லை. மதிப்புரையில்தான் அந்தக் கோட்பாட்டைக் குறிப்பிட்டிருந்தாரே தவிர, நடைமுறையில் அவர் அதைப் பின்பற்றவில்லை. அவர் மொழிபெயர்த்த நாவல்களை, சிறுகதைகளைச் சரளமாகப் படிக்கும்படிதான் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பதில் செல்லப்பாவுக்கு அவரது நம்பிக்கைக்கும் செயல்பாடுகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இல்லை. க. நா. சுவுக்கு அவை இரண்டுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருக்கிறது.

*****

நன்றி: http://sundararamaswamy.com/

6 comments:

  1. நல்ல கட்டுரை .. நன்றி

    ReplyDelete
  2. எவ்விதமான விளம்பரம் புகழுக்கும் ஆசைப்படாமல்
    தமிழுக்காக தங்கள் உடல், பொருள், ஆவியை
    அளித்த மனிதர்கள்.
    காலமெலாம் தமிழ் வாசகர்கள் மறக்க மாட்டார்கள் இவர்கள் சேவையை

    ReplyDelete
  3. மதன்மணி பேசுகிறேன்
    நலமா பதிவரே
    மிகவும் நன்றாகவுள்ளது

    ReplyDelete
  4. கட்டுரை மிக நீளம். ஆனால் சுவை குன்றவில்லை. சி.சு.செல்லப்பா wrapper மடித்துக் கண்ட சிக்கன வித்தையை, சுந்தரராமசாமி சொல்லி நேரடியாகவே கேட்டிருக்கிறேன். இன்னொன்றும் சொல்லுவார்: இன்றைக்குக் பள்ளி கல்லூரி syllabus-இல் நவீன இலக்கியம் இடம்பெற்று இருப்பதற்கு சி.சு.செல்லப்பாவின் விடாமுயற்சிதான் காரணம் என்று.

    சி.சு.செல்லப்பாவைச் சந்திக்கும் வாய்ப்பு, சுந்தரராமசாமியின் வீட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில்தான் எனக்குக் கிட்டியது.அந்த வயதிலும் அவருக்கு இருந்த ஆர்வம், தாகம் என்னை நெகிழ்விப்பதாக இருந்தது. கூடவே, அவர்மீது சு.ரா.வுக்கு இருந்த வாஞ்சையும்.

    ReplyDelete
  5. ஆனாலும், க.நா.சு. மீதான தனது "பாச"த்தை பல இடங்களில் தேவைக்கதிகமாகவே காட்டியிருக்கிறார் சு.ரா..!

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.