Dec 8, 2011

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்

பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்

ஜெயமோகன்

விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' pooman என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்புவாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்தகட்ட எழுத்துக்கள்,----யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம் ---பிறக்க முடிந்தது.

தமிழ் இயல்புவாதமும் பூமணியும்

தமிழின் முதல் இயல்புவாதப் படைப்பு எது ? இதற்கு பதில் பலவகைப்படலாம் என்றாலும் முக்கியமான ,இலக்கண சுத்தமான ,முன்னோடியான, இயல்புவாதப் படைப்பு ஆர் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் தான் என்பது வெளிப்படை. இயல்புவாதத்தின் இலக்கணம் என்ன ? துல்லியமான தகவல்கள் ,விமரிசனப்பாங்கற்ற சித்தரிப்பு நடை , முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட ] கதையாடல் என்று சிலவற்றைகூறலாம்.மேற்கே இயல்புவாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது.அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.

எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை .அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பட்டமானவையேயாகும்.கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும் ,அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள் [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே ,உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே] ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை ,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது .அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைத்ததும் ,விமரிசன பூர்வமாக நிறுவியதும் க நா சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.

நாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' , 'உறவுகள் ' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு ' அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க நா சு வைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன்வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே.பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை.ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும் ' இதற்கு முன்னோடியாக இருந்தது.[கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும் ,செயற்கையாக உண்டு பண்ணப்பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல் .] செ.கணேச லிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதி ,சிவத்தம்பியும் இவ்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர் .இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக்விஜயம் அமைந்தது.இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த ] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.

சோஷலிச யதார்த்தவாதம் என்பது [ ரகுநாதனைப்போலவே எனக்கும் ] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி . ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க நா சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இீருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்தவாதம் ஒரு வகை திரிபுநிலையாக , கலையில் அரசியலின் அத்துமீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

நாகம்மாள் ,தலைமுறைகள் ,பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [ வடிவவாத ] விமரிசகர்களால் போற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத்தன்மை உருவாவதற்கோ , எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப்பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள் .முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி ,எல்லார்வி ,சாண்டிலயன்,பி வி ஆர் ரக ' அதி சுவாரசியக் ' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன்வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.

க நா சு வுக்கும் ,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது.குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும்போது. ' பிறகு ' விற்கு பிறகு நம் இயல்புவாத மரபில் பல முகியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்புவாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி .கந்தர்வன் போன்றுசில விதிவிலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன்[ சிதைவுகள் , பாய்மரக்கப்பல் ] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர்,சுடுமணல் ,சாயத்திரை ] சி ஆர் ரவீந்திரன்[ ஈரம் கசிந்த நிலம் ] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள் ] ஆகியவர்களையும் ; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ ஏறு வெயில் ,நிழல் முற்றம், கூளமாதாரி ] இமையம் [ கோவேறு கழுதைகள் ,ஆறுமுகம்] சோ .தருமன் [தூர்வை ]ஸ்ரீதர கணேசன்[ உப்புவயல் , வாங்கல் ,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம் .இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனரென்பது விமரிசன ரெரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது..அவ்வகையில் பார்த்தால் ஆர் . சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டுவிட்டார்கள் என்பதைக் காணாலாம்.இன்று வெ சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.

பூமணியின் கலைப்பார்வை

இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாகவேண்டிய படைப்பாளி .நீல பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன்வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது .பூமணி தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப்பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர் ] ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன்வைக்கவில்லை .கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை . இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான் .கன்னட மொழியிலும் மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகுதான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல்க் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார் ,தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர் ] மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும் , அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாகமிருக்காது என்று உணர்ந்தவர்.தலமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வா தியிடம் ,அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும்கூட , தந்துவிட முன்வராதவர்.

அவரது படைப்புகள் எந்த புறக்குரலையும் பிரதிபலிக்கும் வேலையை செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும்படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை .அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன்வரவுமில்லை.முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன்வைத்தார் .அதற்கு மேல் விழும் எந்த டையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ' 'அழ கிய லுக்குப் பதிலாக அரசியலை ' ' முன்வைக்கும் குரல்கள் எழுந்த காலகட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ' அரசியல் ' இலக்கியவெற்றி பெறவில்லை ,பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீபகால வரலாறு

பூமணியின் படைப்புகள்

பூமணியின் படைப்புகளை முன்வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை.இக்கட்டுரை அனேகமாக வெளிநாட்டு வாசகர்களை முன்கண்டு எழுதப்படுவது.பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்புவாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல்கட்டமென்றால் அவரது தனித்தன்மைகள் மூலம் அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து அவர் விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம்கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்தகட்டமாகும்.எந்த முதன்மைப்படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போகமாட்டான் .காரணம் அழகியல் இயக்கங்கள் காலகட்டம் சார்ந்தவை ,படைப்பு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.

' பிறகு ' பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.அதேபோல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ' நைவேத்யம் ' என்பதிலும் . அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது . படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி ,சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ' நம்பவைத்தலுக்கும் ' படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது .கரிசல் காட்டுக் கிராமத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப்படிமங்களாகும்போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான் . தனக்கு பழகிப்போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும் , கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப்பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும் ,புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது .அத்துடன் அச்சாதி மற்றும் நிலப்பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.

ஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம் . பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி ,நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள் . தாங்கள் எழுதுவது அந்த சமூக , நிலப் பகுதியின் ' அப்பட்டமான ' வாழ்க்கையை என்று நம்பி சொல்லவும் செய்தார்கள்.அந்த நம்பிக்கை இயல்புவாத எழுத்தில் எப்போதும் காணப்படுவது .பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.அவர் மன அளவில் இயல்புவாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல .தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும்போதேகூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார் .

'பிறகு ' நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம் .தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப்பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம் ,தருமனின் மாடத்தி ஈறாக] ' பிறகு ' நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி [ இவ்விரு நாவல்களை புரிந்துகொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ' அருந்ததியர் வாழும் வரலாறு ' என்ற ஆய்வு நூல் ] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப்படியாக கருதப்படும் ஒரு குலத்தில் , சகல அழுக்குகளுக்கும் இருட்டுகளுக்கும் இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப்பகடையில் குடிகொள்ளும் ஆழமான மானுட நேயமும் ,வாழ்க்கை குறித்த புரிதலும் , சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒரு சராசரித்தமிழ் மனம் அழகிரியை 'சான்றோர் ' என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டுகொள்ளலாம் ,அது வேறுவிஷயம் ] ஆனால் அழகிரிப்பகடை அச்சமூகமனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ' அச்சு இலட்சியவாத ' கதாபாத்திரமல்ல .இங்குதான் பூமணியின் அப்பட்டமான இயல்புவாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிபகடை ' எது மேலான வாழ்க்கையின் இலக்கணம் ' என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பிவிடுகிறார் .

' பிறகு ' ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட காலகட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள் ] இந்நாவலில் கூறப்படுகின்றன.அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார் .பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக்கூடிய நாவலான சினுவா ஆச்சிபி யின் ' சிதைவுகள் ' [Things fall apart ] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே .காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித்தெரிகிறது .குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது.மாறாக 'பிறகு ' காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது.மிகவும் சகஜமாக ,மிகவும் நுட்பமாக ,அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட!இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக , சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.

'பிறகு 'வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ' பிறகு ' தவிர்த்துவிடும் இடம் எது ? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும் ,சாராம்சப் படுத்தும் குரலும் தவிர்க்கப் பட்டுள்ளன .அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ' பிறகு ' இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை --இயல்புவாதமேயானாலும் !ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணிீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம் .மனித வாழ்க்கையும் ,வரலாறும் , மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணிீயி ன் இீயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும் , சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.

'வெக்கை ' தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது . புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு.எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல் . அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும்.சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை.இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது . இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான்.இது அடையாளம் இல்லாத 'ஒரு மனிதனின் ' கதை அல்ல .மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடயாளம் காரணமாக இது மெதுவாக வீரகதைகளின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.

பூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம்.ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம்.ரீதியும் ராஜேந்திர சோழனின் ' எட்டுகதைகள் ' என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும் ,விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.

பூமணியின் எல்லைகள்

தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன் ,அ த்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவி யின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம் .தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன.[விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது.காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது] .

தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள் ' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை.பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை--நைவேத்யம் கூட.அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான்.கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வரண்ட ' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது.ஆழ்நிலைகளை இது ஐயப்படுகிறது .புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது.உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க அருந்ததியர் வழும் வரலாறு] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார்.அவை வெறும் நிகழ்ச்சிகளாக ,தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக ,அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.

பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும் , குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர் .அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது .இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த , மீமெய்வாத [fantacy &surrealism ] படைப்பாளிகள் முயன்றனர்.ஒரு உதாரணம் கூறலாம் .பூமணியின் 'வெக்கை ' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ' கருப்பன் போன பாதை ' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும் ,அரிவளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி , தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது ,அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார் .இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.

பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை ,கோபத்தை,ஏமாற்றத்தை ,ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது,அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர் ' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை ,ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ' முற்போக்கு ' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ' அழுவாச்சி ' யால் நிரம்பியது அல்ல .அது ஒரு களியாட்டவெளியும் கூட.நோயும் வறுமையும் அதை தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை.இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை].அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.

பூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது ,அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார்.புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.

***

நன்றி: திண்ணை

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.