அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30 ல் இருந்து 12 .30 வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய "வெள்ளை" என்ற கதை அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும். போலவே "வாழ்க்கையில் காதல்" என்ற கதையில் அவர் படைப்புத் தொழில் குறித்து சிருஷ்டி பரமாக எழுதியது. அவன் பிரக்ஞையில் அடிக்கடி தோன்றி மறைந்து தோன்றி மறைந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதெல்லாம் இருந்தும் நடுவில் நடுவில் வாழ்க்கைக் கசப்பை மறக்கப் பிராந்திக் கசப்பும் வேண்டித்தான் இருந்தது. எல்லாமே அப்படித்தான். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளி அவர் உருவம் விசுவரூபமாக அவன் மனதில் என்றுமே உருக்கொண்டு உருக்கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.
இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் திரும்பி வரும்பொழுது அவர் வீட்டைப் பார்த்துகொண்டு வருவான். வீடு காலியாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளில் சுவர்கள் பச்சை வண்ணம். நடுஅறையில் ஒரு சாய்வு நாற்காலி. வருபவர்களுக்கு ஒரு ஸெட்டி. எதிரில் ஒரு டி.வி. மனைவியை இழந்த பிறகு அவரும் தனிமையை உணர்ந்திருக்கவேண்டும். அவன் மனம் இதே தடத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று அவர் வீட்டில் சாய்வு நாற்காலி, ஸெட்டி, டி.வி. கார் இல்லை. ஏன், அவரே இல்லை. இல்லை? அவ்வீடு என்றுமே திகம்பரமாகத் தில்லை வெளியாக இருந்தது.
அவரைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் அவனை வழக்கம் போல் கைதட்டிக் கூப்பிட்டார். போனான். கேட்டார். "உனக்கு எவ்வளல்வு பென்ஷன்?" சொன்னான். மறுபடியும் கேட்டார். "என்ன சொல்கிறாய்? இவ்வளவுதானா? D .A . உண்டென்பது தெரியாதா? ". அவன் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னார். "உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு சண்டைக் கோழியாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கத்திற்கு இதைப்பற்றி எழுதினால் கிடைக்கும். எழுது. சும்மா இருந்து விடாதே". அவன் தலையை அசைத்து விட்டு திரும்பி விட்டான். அடுத்த நாள் தன் கைத்தடியை தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன்வந்து நின்றார். கேட்டார். "எழுதினாயா?". அவன் பேசவில்லை. மறுபடியும் சொன்னார். "நீ இவ்வாறு இருந்தால் போதாது. என்னுடன் வா" என்றார். அவன் போனான். கடிதத்தை எழுதச் சொன்னார். எழுதினான். அவரே ஒரு போஸ்ட் கவரைக் கொடுத்துத் தபால் பெட்டியில் போடச் சொன்னார். போட்டான். இரண்டு வாரம் கழித்து மறுபடியும் கைத்தடியைத் தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன் நின்றார். அவன் அவரை உள்ளே வரச் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னான். உட்கார்ந்தார். கேட்டார். "பதில் வந்ததா?". "சாதகமாகவே வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இலகாவிற்குப் பழைய பாக்கியுடன் D .A . கொடுக்க உத்தரவு சென்றுவிட்டது". மறுபடியும் கேட்டார். "அங்கு சென்று விசாரித்தாயா?". அவன் பேசவில்லை. அவர் பேசினார். "நீ இப்படி இருந்தால் போதாது. குறிப்பிட்ட இலகாவிற்குச் சென்று விசாரி" என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை அவன் செய்த பிறகுதான் அவனுக்கு அந்த அனுகூலம் கிடைத்தது. அவர் சொன்ன வேறு ஒரு விஷயமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. "இதோ பார். உனக்கு ஒன்றும் தெரியாது. இந்த உலகம் ஒரு மாதிரியானது. எந்த விஷயத்திலும் கடைசி வரை ஊர்ஜிதமாக இருந்து நாம்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த உலகம் ஒரு மாதிரியானது".
அவரை அவன் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு உயர்ந்த உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுத் தனியாகத்தான் வீட்டில் இருந்தார். அவருக்குச் சொந்த மக்கள் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் சமயோசிதமாகச் சிந்திக்க நீ என்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பார்.
இன்னும் அவன் வழக்கம்போல் வீடு திரும்புகையில் அந்த காலி வீட்டைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான். இது இப்பொழுதெல்லாம் ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகி விட்டது. மறுபடியும், மறுபடியும் அவர் நினைவு அவனைச் சூழ்ந்தது. உடல் இடம் கொடுத்த வரையில் அவர் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருந்த கோவிலுக்கு அங்கு சேர்கிற வரை "ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண ஹரே "என்று ஓங்கிய குரலில் சப்தித்துக் கொண்டே போவார். அதே மாதிரி அவர் வீடு திரும்புகையில், வீடு எட்டும்வரை இதைச் செய்வார். ஒரு முறை அவன் அவரிடம் கேட்கவும் செய்தான். "ஏன் இவ்வாறு தெருவெல்லாம் கேட்க கிருஷ்ண கோஷம் செய்துகொண்டு போகிறீர்கள் ?"சொன்னார், "உனக்கு ஒன்றும் தெரியாது. பல முறைகளில் இந்தப் பழக்கத்தால் அனுபவபூர்வமாக எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீ சாது என்றாலும் நீயும் இந்த தலைமுறையைச் சார்ந்தவனாதலால் இதெல்லாம் உனக்குப் புரியாது" என்றார். அவனும் அவரை முழுவதும் புரிந்துகொண்டான் என்று சொல்லமுடியாது. ஒரு முறை அவன் வீட்டில் யாருமில்லை. அன்று வீட்டு வேலைக்காரி வரவில்லை. (அவருக்கு அவன் தனியானவன் என்றதால் ஒருவித அனுதாபம் இருந்தது) அவன் வீட்டின் முன் தளத்தில் இருந்தான். சாப்பிடும் இடத்திலிருந்து ஒரு ஓசை கேட்டது. சென்று பார்த்தான் தரையில் ஒரு நீண்ட சாரைப் பாம்பு அவனைக் கண்டதும் ஓடிவிட்டது. இருநாட்கள் அந்தப் பக்கம் அவன் போகாமலே இருந்தான். மூன்றாவது நாள் அவரிடம் சென்றான். சொன்னான். சொன்னார், "ஒரு ஐந்து ரூபாய் கொடு, நான் வழக்கம்போல் கோவிலில் ஒரு நாக பூஜை செய்கிறேன்" என்றார். அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார். "நான் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கேட்கிறாயா?" என்றார். அவன் தலையை அசைத்தான். "எங்கள் பூர்வீகத்தில் ஒரு கிழவர் இருந்தார். ஒரு வகையில் சித்திகள் பெற்றவர். பாம்புக் கடியால் மரித்தவரை உயிர் பிழைப்பிக்க வல்லவர். இது அவர் குருவிடமிருந்து படித்தது. ஆனால் அந்தக் குரு அவர் அதைப் பிரயோகித்தால் அவர் மரணம் அடைவார் என்றும் சொல்லியிருந்தார். பிறகு அவர் நெருங்கிய உறவில் ஒரு இளைஞன் பாம்புக்கடியால் இறந்து விட்டான். அவன் பெற்றோர்கள் அவன் சடலத்தை அவர் முன்கிடத்தி அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்குமாறு கெஞ்சினார்கள். அவர் சிறிது நேரம் பேசாமலிருந்து விட்டு ஒரு பிடி அரிசியைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தரையில் வாரி இறைத்தார். உடன் ஒரு பட்டாளம் எறும்புகள் அங்கிருந்து சென்று திரும்பி வர கடித்த பாம்பும் வந்தது . எறும்புகள் சுற்றி வளைத்த அப்பாம்பு தன் தலையை தரையில் அடித்துக் கொண்டு செத்தது. அந்த இளைஞனும் தூக்கத்தில்லிருந்து எழுந்தவன் மாதிரி உயிர் பெற்றான்." இதைச் சொல்லிவிட்டு அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டுப் பின், "ஒரு வாரம் கழித்து அந்தக் கிழவரும் இறந்தார்". அவன் பேசாமல் இருந்தான்.
அவர் மறுபடியும் சொன்னார். "இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை வராது. ஆனால் எனக்கு அப்படியில்லை." இதைப் போலவே அவரிடமிருந்து உலக வாழ்வைப்பற்றி, அதீத அனுபவங்களைப் பற்றி அவன் பலவற்றைத் தெரிந்துகொண்டான்.ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றவே அங்கு சென்றான். ஒரு சிலர் இருந்தார்கள் மௌனபூர்வமாக.
கேட்டான் "அவர் இருக்கிறாரா?"
"நேற்று மாலை உங்கள் சிநேகிதர் அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று காலமாகி விட்டார்."
அவன் திரும்பி விட்டான். இப்பொழுதும் அவன் அத் தெரு வழியில் போகும் பொழுதெல்லாம் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டுதான் சென்றான். ஆனால் அதைக் காலி வீடு என்று அவனால் நம்பமுடியவில்லை.
விருட்சம் கதைகள் 1992 . விருட்சம் வெளியீடு.
தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.