வண்ணநிலவன், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர்: உலகநாதபிள்ளை; தாய்: ராமலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர்: உ.ராமச்சந்திரன். சொந்த ஊர்: திருநெல்வேலி. பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். 07 ஏப்ரல் 1977 அன்று வண்ணநிலவனுக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர்: சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் வேலை சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
1970ஆம் வண்ணநிலவன் எழுதத் தொடங்கினார். முதல் கதை: மண்ணின் மலர்கள்; முதல் நாவல்: நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975). அதன்பிறகு கடல்புரத்தில் (1977), கம்பாநதி (1979), ரெயினீஸ் அய்யர் தெரு (1981), காலம் (2006) ஆகிய நாவல்களும்; எஸ்தர் (1976), தர்மம் (1983), உள்ளும் புறமும் (1990), தாமிரபரணிக் கதைகள் (1992), தேடித் தேடி கதைகள் (1996), யுகதர்மம் (1996), வண்ணநிலவன் கதைகள் (2001) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் மெய்ப்பொருள் (1981), காலம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியாகின. ‘கம்பாநதி’ நாவலின் இரண்டாம் பதிப்பு 1985ஆ ம் ஆண்டு வெளியான போது, இந்த இரண்டாம் பதிப்பில் வண்ணநிலவன் சில மாற்றங்கள் செய்துள்ளார். இவற்றில் ‘கடல்புரத்தில்’ நாவல் இலக்கிய சிந்தனை பரிசையும் ‘கம்பா நதி’ நாவல் தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அபூர்வத் தகவல்களும் நேரடியான நடையும் நுண்ணிய மனச் சலனங்களின் பிரதிபலிப்பும் வண்ணநிலவன் படைப்புகளின் சிறப்பம்சம்.
2002 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்த வண்ணநிலவன் அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஜூன் 16 - 30, 2002 தேதி ஜங்ஷன் இதழில் பிரசுரமானது.
”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரும் தாதங்குளம் என்ற சின்னக் கிராமந்தான் எங்கள் பூர்வீகம். தாத்தா, அப்பாவுடன் ஐந்து வயது வரை அங்கு இருந்தேன். தாத்தா பெயர் முத்தையா பிள்ளை; அப்பா உலகநாத பிள்ளை. தாத்தாவுடையது மிகவும் சிரமப்பட்டக் குடும்பம். அவர், தம் பதினான்காவது வயதிலேயே பிழைப்புத்தேடி இலங்கைக்கு போனவர். அங்கு ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார். அந்த ஹோட்டல்தான் எங்கள் குடும்பத்தை மேலே கொண்டு வந்தது. தாத்தா முப்பது வருடம் அங்கே இருந்தார். எனவே, என் அப்பா இங்கே தனியாக வளர்ந்தார். தந்தையின் கவனிப்பு இல்லாத ஒரு பையன் எப்படி வளர்வானோ அப்படி வளர்ந்தவர் அவர். ஆச்சியை மிகச் சுலபமாக ஏமாற்றி சினிமா, டிராமா என்று அலைந்திருக்கிறார். அப்புறம் அப்பாவுக்கு திருநெல்வேலி கூட்டுறவுத் துறையில் வேலை கிடைத்தது. நாங்கள் நெல்லைக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே என் அம்மா வழி தாத்தாவும் ஆச்சியும் இருந்தார்கள். நான் பாளையங்கோட்டையில் படிக்கத் தொடங்கினேன்.
”முதல்நாள் பள்ளிக்கூடம் சென்றது எனக்கு இபபோதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று சரஸ்வதி பூஜை. மாமா, அத்தை என்று உறவுக்காரர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். புதுச்சட்டை எடுத்திருந்தார்கள். வாத்தியார் வீட்டுக்கு வந்திருந்தார். என்னை அவர் மடியில் அமர வைத்து, முன்னால் தாம்பாளத்தில் இருந்த பச்சையரிசியில் அனா, ஆனா எழுதினார். ரொம்பப் பெரிய ஒரு குடும்ப நிகழ்ச்சியாக அது நடந்தது.!
”வயல், வீடு என்று செழிப்பாக இருந்தக் குடும்பம் எங்களுடையது. ஆனால், தாத்தா இலங்கையிலிருந்து இங்கு வந்தப் பிறகு எதுவுமே செய்யமுடியாமல் ஆகிவிட்டார். சொத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சொத்தை இழக்கத் தொடங்கினோம். திடிரென்று ஒருநாள் பார்த்தால் மந்திரக்கோளை வைத்து துடைத்து எடுத்துவிட்ட மாதிரி எல்லாவற்றையும் இழந்து வெட்டவெளியில் நின்று கொண்டிருந்தோம்! நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்த போது தேர்வுக்குக் பீஸ் கட்டப் பணம் இல்லை. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கடிதம் எழுதி பணம் அனுப்பச் சொல்லித்தான் பரிட்சை எழுதினேன். ஆனாலும், தொடர்ந்து படிக்க முடியாத நிலை.
அப்புறம் சைக்கிள் கடையில், ஜவுளி கடையில் வேலை பார்த்தேன். பாளையங்கோட்டை பெல்பின்ஸ் கம்பெனியில் குண்டூசி அடுக்கினேன். பெயிண்ட் அடிச்சேன். மதுரையில் ஹோட்டலில் நின்றேன். என்னென்ன வேலை கிடைக்கிறதோ அவை எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த வயதில் எனக்கு அந்த வேலைகள் பொறுக்கவில்லை. குறிப்பாக இரவு நேர ட்யூட்டிகளின் போது மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும், செய்துதானே ஆகவேண்டும்? என்றால்தான் வீட்டில் சாப்பிட முடியும். திருநெல்வேலியை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஒரு கிறிஸ்தவ வக்கீல் நண்பர் வீட்டில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்துக்கு குமாஸ்தாவாக இருந்தேன். சம்பளம் மிகவும் குறைவு. ஒரு மனிதன் எத்தனை நாளைக்கு என்ன செய்துவிட முடியும்!’’
சென்னைக்கு எப்போது வந்தீர்கள்?
“திருநெல்வேலியில், குமார் என்று ஒரு நண்பர். அவர் வீட்டில்தான் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். விரைவில் அவருக்குக் கல்யாணம் ஆனபோது இனியும் அங்கு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அப்போது நம்பிராஜன் (விக்கிரமாதித்தன்) சென்னையில் இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘புறப்பட்டு வந்துவிடுங்கள், பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொன்னார். இங்கு கவிஞர் கந்தர்வனின் உதவியால் கண்ணதாசன் இதழில் சேர்ந்தேன். அப்புறம் ‘கணையாழி’. பிறகு, ‘கவிதாலயா’ அனந்து மூலமாக துக்ளக்கில் சேர்ந்தேன். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் நிறைய பைத்தியக்காரங்கள் செய்திருக்கிறேன். என்னவோ தோன்றும் செய்துவிடுவேன். சென்னைக்கு புறப்பட்டு வந்தது அப்படித்தான்.’’
திருமணம் எப்போது நடந்தது?
”1977இ-ல் திருமணம் நடந்தது. மாமா பெண்தான். எங்களுக்கு மூன்று குழந்தைகள். பையன் பி.இ.முடித்துவிட்டு இப்போது ஜெர்மனியில இருக்கிறான். இரண்டு பெண்களில் ஒருத்தி எம்.காம். முடித்துவிட்டு இங்கேயே வேலையாய் இருக்கிறாள். அடுத்தவள் பி.காம். முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க இருக்கிறாள். குழந்தைகள் தொடர்பாக எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. மிகவும் நல்லக் குழந்தைகள்.’’
உங்கள் குடும்ப உறுப்பினர்களில் உங்கள் மீதும் உங்கள் எழுத்துக்கள் மீதும் பாதிப்பைச் செலுத்தியவர் என்று யாரைச் சொல்லுவீர்கள்?
”ஆச்சியைத்தான் சொல்ல முடியும். அப்பாவைப் பெத்த ஆச்சி. அவள் என்னிடம் மிகவும் ப்ரியமாக இருந்தா. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாள் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் என் மீத அவளுக்கு தனிக் கவனம் இருந்தது. இப்போதும் எனக்கு எங்க ஆச்சியை விடவும் பிரமாதமாக வேறு யாராலும் சமைத்து விட முடியாது என்கிற அபிப்ராயம்தான் இருக்கிறது. அவளுடைய கைக்கு அப்படி ஒரு ருசி. அப்படியொரு விசேஷம். சொதி, மோர்க் குழம்பு எல்லாம் அவளுடைய கைப்பக்குவத்தில், அவற்றிற்குரிய ருசியிலிருந்து ஒருபடி மேலேயே இருக்கும் இந்த ருசியைக் கொண்டு வருவதற்காக அவள் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வதும இல்லை. 1961 வரைக்கும் எங்க ஆச்சி உயிரோடு இருந்தாள். அவள் இறந்து இரண்டு வருடம் சென்று தாத்தா இறந்துபோனார்.’’
வௌயூர்களில் குடியேறிவிட்ட திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபருணி ஆறு என்பது சிறுவயது நினைவோடு தங்கியிருக்கும் ஒரு பசுமையான அனுபவம். உங்களுக்கு எப்படி?
”நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்த தாமிரபரணியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாத்தாவையும் ஆச்சியையும் அடுத்து எனக்கு நதியைப் பிடிக்கும். அவர்களோடு சேர்ந்துதான் என் நினைவில் ஆறு இருக்கிறது. காலையில் நான்கு மணிக்கே எழுந்து தாத்தா குளிக்கப் போய்விடுவார். அந்த அதிகாலை இருட்டில், மழை பெய்துகொண்டிருந்தாலும கூடப் போய்விடுவார். திருநெல்வேலி வந்தபிறகு அம்மாவைப் பெற்ற தாத்தா அழைத்துக்கொண்டு போவார். அந்த அதிகாலையிலேயே மிகப்பெரிய ஒரு கூட்டம் குறுக்குத்துறையில் இருக்கும். அப்போது அங்கே பார்ப்பவர்களை அப்புறம் பகலில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது. திரும்ப மறுநாள் காலையுல் குளிக்கப் போகும் போதுதான் பார்க்க முடியும். இப்படி காலையில் ஆற்றில் குளிக்கிற ‘செட்’ ஒன்று உண்டு. அவர்களுக்கு ஆற்றோடு சேர்ந்து பரஸ்பரம் ஒரு ஸ்நேகம் இருந்தது. குறுக்குத்துறையில் அப்போது வெள்ளை மணல்வெளியாக இருந்த ஆற்றங்கரை இப்போது மணலைத் துடைத்து வாறி எடுத்துவிட்டதால் முட்செடிகள் வளர்ந்து காடாக ஆகிவிட்டது. சுற்றுப்புறச்சூழல் தொடர்பான எதாவது ஒரு அமைப்புக்கு இது பற்றி எழுதவேண்டும்.’’
சிறுவயதில் உங்களை இலக்கியத்தை நோக்கி நகர்த்திய விஷயங்கள் பற்றிப் பேசலாமே!
“அப்பா தீவிர கல்கி ரசிகர். வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களோடு சேர்ந்து தட்டியில் மிகப்பெரிய கல்கி படமும் மாட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கல்கியை நான், தூரத்து சொந்தக்கார தாத்தாக்களில ஒருவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். 1959இ-ல் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தீவிர ‘கல்கி’ வாசகனாக இருந்தேன். ஒருவகையில் தொடர்ந்து புத்தகங்களைத் தேடி படிப்பதற்க்கான தூண்டுதல் கல்கியிடம் இருந்துதான் கிடைத்தது. அப்புறம் வண்ணதாசன், நம்பிராஜன், கலாப்ரியா எனறு உருவான சமவயது நண்பர்கள் வட்டம். முத்துக்கிருஷ்ணன் என்று ஒரு நண்பர்; அற்புதமான மனிதர்; சி.பி.எம்.காரர். அவர் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார். இந்த படிக்கிற ஆர்வம் தான் பிறகு எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் நான் திக்குவாய். அதனால் என்னை கேள்வியே கேட்கமாட்டார்கள். பையன்கள் என்னை தூரத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள். கடைசி பெஞ்ச் பையன்; குறைந்த மதிப்பெண் பெறும் மாணவனும் நான் தான். படிக்கவே மாட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது, “நீ பாஸ் பணணுறது பெரிய ஆச்சர்யம்’’ என்று வாத்தியார் சொன்னார். இதனால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பின்னாளில நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மனோதத்துவ நிபுணர்களைக் கேட்டால் இன்னும் சரியாகச் சொல்லக்கூடும்.’’
வண்ணதாசன், விக்கிரமாதித்தன், கலாப்ரியா, நீங்கள் என்று ஒரு நண்பர்கள் வட்டமாக எப்போது, எப்படி உருவானீர்கள்?
”முத்துக்கிருஷ்ணன் தந்த புத்தகங்களில் ‘தாமரை’, ‘தீபம்’ எல்லாம் இருந்தது. தாமரையிலும் தீபத்திலும கல்யாணி (வண்ணதாசன்) கதைகள் வரும். நம் ஊரைப் பற்றி வருகிறதே என்று விரும்பிப் படித்தேன். சீனிவாசன் என்ற வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த போது டி.கே.சி.யின் பேரன் தீபம் நடராஜன் எங்கள் கட்சிக்காரராக இருந்தார். அவர் வருடா வருடம் டி.கே.சி.யின் பிறந்த நாளைக் கொண்டாடுவார். அப்படிப்பட்ட ஒரு பிறந்த நாளில் வல்லிக்கண்ணனைச் சந்தித்தேன். கடிதம் எழுதினேன். வாருங்கள் பார்க்கலாம் என்று பதில் எழுதினார். வாரத்திற்கு இரண்டு முறையாவது வல்லிக்கண்ணனைப் போய் பார்ப்பேன். பின்னாடி அவர்கள் வீட்டுப் பட்டாசலில உட்கார்ந்து தோசை சாப்பிடுகிற அளவுக்கு நெருக்கம் வளர்ந்தது. காலையில் கொக்கிரகுளம் ஆற்றில் குளித்துவிட்ட நேரே அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். சாயங்காலம் திரும்ப ஒருமுறை போவேன். இது தினமும் நடந்தது. அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. கலாப்ரியா, கல்யாணி வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்தார். வல்லிக்கண்ணன் மூலமாக, அவரைத் சுற்றி உருவானதுதான் இந்த நண்பர்கள் வட்டம். வல்லிக்கண்ணன்தான் எனக்கு வண்ணநிலவன் என்று பெயர் வைத்தார்.’’
எழுத எங்கேயிருந்து விஷயங்களை எடுக்கிறீர்கள்?
”செய்தித்தாள்களில் படித்தவை, வெளியே பார்த்தவை போன்றவற்றிலிருந்துதான் நான் நிறைய எழுதியிருக்கிறேன். குடும்பத்தில் இருந்து எப்போதும் எதையும் எழுத்துக்கு களனாக தேர்வு செய்ததில்லை. ஒரு பொறி தான்; படித்த, கேள்விப்பட்ட, பார்த்த, பாதித்த எதாவது ஒன்று எழுதத் தூண்டும். முன்பெல்லாம் உட்கார்ந்து ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் எழுதிவிடுவேன். இரவு அல்லது அதிகாலையில் எழுதுவேன். ஆரம்பத்தில் எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருந்தது. வீட்டில் யாராவது இருந்தாலும் இல்லாவிட்டாலும நான் பாட்டுக்கு உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். திரும்பி எழுதுவது கிடையாது. சில கதைகளை மட்டும் காப்பி எடுத்திருக்கிறேன்.’’
குறிப்பாக உங்கள் கதைகளில் முக்கியமானது என்று கருதப்படும் ‘எஸ்தர்’ கதை எழுதிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
”பாண்டிச்சேரியில் ‘புதுவைக்குரல்’ என்றப் பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம். பிரபஞ்சன் மூலமாக இந்த வேலை கிடைத்தது. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருநெல்வேலி போயிருந்தேன் தண்ணீர் கஷ்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. திரும்பி வரும் வழியில் தஞ்சாவூர் பக்கம் வண்டி, மாடுகள் என்று கூட்டம் கூட்டமாக ஊர்களை காலி செய்து போய்க்கொண்டிருந்தார்கள். ராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். இது என்னை மிகவும் பாதித்தது. பாண்டிச்சேர் வந்தவுடன் ஒரே இருப்பில் ‘மிருகம்’, ‘எஸ்தர்’ இரண்டுக் கதைகளையும் எழுதிவிட்டேன்.’’
கடல்புரத்தில் எழுதிய அனுபவம்?
”குலசோகரப்பட்டினத்தில் நாகூர்மீரான் என்று ஒரு சாயபு நண்பர் இருந்தார். உடன்குடியில் சைக்கிள் கடை வைத்திருந்தார். திருநெல்வேலியில் வேலையில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது, “நீ வேண்டுமானால் என்னோடு கூட வந்து இரேன்’’ என்று சொன்னார். வேறு என்ன செய்வது என்று தெரியாததால் போனேன். மூன்று வேளையும அவர் எனக்குச் சாப்பாடு போட்டார். சாயங்காலம் இரண்டு பேரும் சினிமா பார்க்கப் போவோம். பகல் முழுவதும் அவருடன் சைக்கிள் கடையில்தான் உட்கார்ந்திருப்பேன். அங்கே மீனவர்கள் வருவார்கள். அப்போது அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1969-இல் லாஞ்ச் என்னும் மீன் பிடிக்கும் இயந்திரம் படகு வந்த நேரம் அது. பெரிய கலவரங்களுக்கு அது காரணமாகிவிட்டது. திருச்செந்தூரில் லாஞ்ச் வைத்திருந்த மீனவர்களுக்கும் கட்டுமரக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரங்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது என் மனதுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது. ஏதோ ஒரு மூலையில் வந்து மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தோன்றியது. எனவே திரும்ப வந்துவிட்டேன். அப்புறம் மலையாளத்தில் வந்த ‘செம்மீன்’ படத்தையும் சத்யன் நடித்த ‘கரைகாணாக் கடல்’ படத்தையும் பார்த்தபோது, குலசேகரப்பட்டின நாட்கள் மனதுள் மேலெழுந்து வந்தன. ஒரு குடும்பம் தன் சொந்த மண்ணில் வாழ முடியாமல் வேர்களைப் பிடிங்கிக்கொண்டு வேறொரு ஊருக்கு செல்வதுதான் ‘கரைகாணா கடலின்’ கதை. இது தான் கடல்புரத்தில் நாவலின் நதீமுலம்.’’
பரிசோதனை ரீதியில் எழுதப்பட்ட உங்களது ரெய்னீஷ் ஐயர் தெரு பற்றி?
”எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகள் படிக்கும் போது பாளையங்கோட்டையில் எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் நிறைய இருந்தார்கள். அந்தக் கிறிஸ்தவ வாழ்க்கை மனதில் படிந்து போயிருந்தது. ‘ரெய்னீஷ் ஐயர் தெரு’ என்று திருநெல்வேலியில் ஒரு தெரு இருந்தது. புதிதாக எதாவது செய்யவேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருந்தபோது ரெய்னீஷ் ஐயர் தெருவையும் கிறிஸ்த வாழ்க்கைப் பின்புலத்தையும் வைத்து முயற்சித்தேன். அது அப்பட்டமான கிறிஸ்தவ வாழ்வு பற்றிய ஒரு நாவலல்ல. ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் எழுதியிருக்கிறேன். ரெய்னீஸ் ஐயர் தெருவுக்கு அப்புறமும் புதுமைப்பித்தனைப் போல் என் கதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறேன். இந்த என் பரிசோதனை முயற்சிகள் ஒருவேளை வாசகர்களை எட்டாமல் போயிருக்கலாம்.’’
நீங்கள் கிறித்தவராக மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டதுக்கும் ரெய்னீஷ் ஐயர் தெருவுக்கும் தொடர்பு உண்டா? உங்கள் எழுத்திலும் பைபிளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது?
”1960 முதல் 73 வரை பாளையங்கோட்டையில பல கிறித்தவக் குடும்பஙக்களுக்கு மத்தியில் வாழ்ந்தேன். அப்போது பார்த்த சர்ச், பைபிள் என்று கிறிஸ்தவர்களின் பழக்கவழக்கங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வேகத்தில் கிறித்தவராக மாற முடிவு செய்தேன். சாமுவேல் ஜெயச்சந்திரன் என்று பெயர்மாற்றி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அதற்கு அடுத்தக்கட்டமான திடப்படுத்துதலை செய்யப்போகவில்லை. அதற்குள் அதிலிருந்து மனம் விலகிவிட்டது. அங்கே இருந்த வரைக்கும் அவர்களோடு இருந்தேன். எனவே, இதைச் செய்தேன். அப்புறம் வந்துவிட்டேன். எனவே, தொடரவில்லை. ஆனால், அப்போதும் அவ்வளவு தீவிரமாக அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெபம் செய்வது கிடையாது. ஆனால், சர்ச்சுக்கு போவேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. அப்போதே வீட்டில் சொன்னார்கள்; ‘பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டாயேடா’ என்று சத்தம் போட்டார்கள். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் இதுபோல் நிறைய பைத்தியக்காரத்தனங்கள் செய்திருக்கிறேன். என்னமோ தோன்றும் செய்து விடுவேன். மெட்ராஸுக்கு புறப்பட்டு வந்ததும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் தான்.’’
முன்பு ஒரு சமயம் மெட்ராஸில் இருப்பது லாட்ஜில் இருப்பது போலிருக்கிறது. எப்போது திருநெல்வேலி போவோம் என்றிருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதும் அதே கருத்தில்தான் இருக்கிறீர்களா?
”இப்போது திருநெல்வேலிக்கும் போகமுடியாது! அதுதான் விஷயம். திருநெல்வேலி இன்னொரு சென்னையாக மாறிவிட்டது. எந்தக் காரணமும் இல்லாமல் எவ்வளவோ விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல்தான இங்கே மெட்ராஸில் இருந்து கொண்டிருக்கிறேன். இந்த வாழ்க்கைக்கு லாயக்கில்லாத ஆள் நான். எனக்கு முடியவில்லை. இப்போதும் தேவையில்லாமல்தான் இங்கு இருந்து கொண்டிருக்கிறேன். எங்கே போவது என்றும் தெரியவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்கும் இடமாக ரிஷிகேஷ் போல் போய்விடலாம் என்றிருக்கிறேன். ஆனால், குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, அது அவ்வளவு சுலபமாக முடியாது. குழந்தைகள் கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார்கள் என்றால் புறப்பட்டு விடலாம். ஆனால், எங்காவது போகலாம் என்றால் அதற்கான பணமும் என்னிடம் கிடையாது. அதற்கும் குழந்தைகளை சார்ந்துதானே இருக்க வேண்டியதிருக்கிறது!’’
சென்னை தொடர்பாக பாஸிட்டிவான எண்ணங்களே உங்கள் மனதில் இல்லையா?
”அப்படிச் சொல்லிவிட முடியாது. என் வாழ்வின் பெரும்பகுதி இங்குதான் கழிந்திருக்கிறது. இங்கு வந்தபிறகு தான் என்னுள் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய விஷயங்களை இந்த நகரம் தான் எனக்குக் கற்றுத் தந்தது. நான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளன் இல்லை. ஆனால், சென்னை என்னைப் பத்திரிகையாளனாகவும் அடைகாத்துக் கொண்டது. ஆனாலும், இங்கே இருக்க முடியவில்லை.’’
பத்திரிகையாளர் வண்ணநிலவன் பற்றிச் சொல்லுங்கள்.
”கண்ணதாசன், கணையாழி, புதுவைக் குரல், துக்ளக், சுபமங்களா, அன்னைநாடு போன்ற பத்திரிகைகளில் இருந்தேன். பதிமூன்று வருடங்கள் துக்ளக்கில் இருந்தேன். என்னைச் சரியாகப் புரிந்துகொண்டு இவனை நல்ல வழியில் திருப்பி விடவேண்டும் என்று சோ மிகவும் முயற்சித்தார். இவன் தப்பாகப் போய்விடுவான் என்று அவருக்குப் பட்டிருக்கவேண்டும். துக்ளக்கிலதான் ஒரு பத்திரிகையாளன் பணி என்ன என்பதை தெரிந்துகொண்டேன். எனது கவனம் இலக்கியத்தை தாண்டி அரசியல், சட்டம், சமூகம், சினிமா, நாட்டு நிர்வாகம் போன்ற பல துறைகளுக்கு விரிந்தது. ஆனாலும், என்னால் அங்கு இருக்கமுடியாமல் ஆகிவிட்டது. எழுதவேண்டும் என்று அவசியமில்லை; உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்துகொண்டு இருங்கள் என்று கூட சோ சொல்லிப் பார்த்தார். எனக்கு ஒரு விதமான மனச்சோர்வு வந்துவிட்டது. இலங்கையுடனும் விடுதலைப்புலிகளுடனும் தேவையில்லாமல என்னையும் சேர்த்து யோசித்துதில், மனம் பயம்கொள்ளத் தொடங்கிவிட்டது. போலீஸ் வந்து விடும், ஆட்கள் கொலை செய்ய வருகிறார்கள் என்றெல்லாம் தோன்றியது. இன்றைக்கு வரைக்கும் அப்படி பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், எனக்குப் பிரச்சினை என்று தோன்றிவிட்டதால் துக்ளக்கிலிருந்து வந்துவிட்டேன். உங்களுடன் உட்பட யாருடனாவது பழகிக்கொண்டிருக்கும் போதே இவர் பிரச்சினைக்குறிய ஆள் என்று தோன்றினால் உடனே விலகிவிடுவேன். கல்யாணியுடன் மட்டும் ஒரு பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.’’
சுபமங்களாவில் வேலை பார்த்த அனுபவங்கள்?
”வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே. அதனால் போனேன். அதற்கு முன்னால் மாலன் இந்தியா டுடேயில் இருந்தபோது என்னைக் கூப்பிட்டார். நான் சிரமப்படுகிறேன் என்று தெரிந்து எனக்கு எதாவது செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவ்வளவு பெரிய பத்திரிகைக்கு நாம் தகுதியானவன்தானா என்று எனக்கு பயம் வந்துவிட்டது. அதுபோன்ற ஒரு பத்திரிகையில் நாம் என்ன செய்ய முடியும்? எனவே, பிரபுசாவ்லாவைச் சந்திப்பதற்கு மாலன் ஏற்பாடு செய்திருந்த அன்று நான் போகவில்லை. என்னைத் தெரியும் என்பதால் மாலனும் அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பரவாயில்லை ராமச்சந்திரன்’’ என்று சொன்னார்.
”ஆனால், இப்படிப் பயந்துகொண்டு எத்தனை நாளைக்கு இருந்துவிடமுடியும். குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, கோமல் சுவாமிநாதனிடம் போய் வேலை கேட்டேன். சுபமங்களா ஒரு மாதப் பத்திரிகை; இரண்டு ஆட்களுக்கு மேல் அங்கு வேலையே கிடையாது. ஆனால், நான் சிரமப்படுகிறேன் என்பதால் அவர் சேர்த்துக்கொண்டார். எல்லா இடங்களிலும் போல் அங்கும் ஒரு பிடிப்பு இல்லாமல்தான் இருந்தேன். அங்கு வாத்தியார் ராமன் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். மற்றவர்கள் எல்லோரும்கூட நான் எழுத்தாளர் என்று என்மேல் மிகவும் மரியாதையாக இருந்தார்கள். சிறுகதைகள், கவிதைகள் படித்து தேர்வு செய்ய வேண்டும். ஆபிஸ் போவேன். மதியம் 3.30க்கு கிளம்பிவிடுவேன். வேலைகள் இருக்காது என்பதால் கோமலே, “கிளம்பிவிடுங்கள் ராமச்சந்திரன்’’ என்று சொல்லிவிடுவார்.’’
இடையில் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வசனம் எழுதினீர்கள். ஏன் சினிமாவில் தொடரவில்லை?
”ருத்ரய்யா எனக்கு நண்பர். மிகவும் சிரமப்பட்ட காலங்களில் அவர் அறையில் தங்கியிருந்தேன். அவர் ‘அவள் அப்படித்தான்’ படத்தை எடுத்தபோது கூடவே இருந்ததால், “நீயும் சிலக் காட்சிகளை எழுதித் தாயேன்’’ என்று கேட்டார். அதனால் செய்தேன். பிளாஷ் பேக், ஸ்ரீப்ரியா வரும் காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதினேன். மற்றபடி சினிமாவுக்குப் போகும் திட்டம் எப்போதுமே எனக்கு இல்லை. பத்திரிகைக்கே லாயக்கில்லாத ஆள் நான் என்னும்போது எப்படி சினிமாவில் இருக்க முடியும்? சினிமா டிஸ்கஷன் போல் போரான விஷயம் வேறு எதுவுமே கிடையாது!’’
இப்போதெல்லாம், கடைசி பத்து வருடங்களாக நீங்கள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது, ஏன்?
”முழுநேர எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதற்குப் பொருத்தமானவன் இல்லை நான். சாதாரண ஆளா இருந்திருக்க வேண்டியவன். தற்செயலாக இதில் வந்து மாட்டிக்கொண்டு விட்டேன். 1000 ரூபாய் சம்பளத்திற்கு சிறு வயதில் திருநெல்வேலியில் ஒரு வேலை கிடைத்திருந்தால் இந்தப் பக்கமே திரும்பிப் படுத்திருக்க மாட்டேன். எதனாலோ வேறு வழியில்லாமல் தொடங்கிவிட்டேன். அப்புறம் தொடங்கிவிட்டதாலேயே இவ்வளவு தூரம் நகர்ந்து வந்துவிட்டேன். எழுத்து எனக்கு எப்போதும் தாகம் இல்லை. ஏதோ தோணிச்சி எழுதினேன். ஆரம்பத்தில், எழுதத் தொடங்கிய காலத்தில், ஒரு சந்தோஷம் இருந்தது. ஒரு உத்வேகம் இருந்தது. ஆனால், தொடங்கிய ஐந்தாவது, ஆறாவது வருடத்திலேயே அது வடிந்துவிட்டது.
”சில வருடங்களுக்கு முன்பு ஒரு கதையில் ஒரு ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஜாதிச் சங்கக்காரர்கள் வீடுதேடி வந்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கு மட்டுமல்ல எந்த எழுத்தாளருக்குமே இருக்க சாத்தியமில்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் திருப்தியடைந்து போய்விட்டார்கள். என்னைப் போன்ற யதார்த்தக் கதைகள் எழுதும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பிரச்சினை. ஜாதிப் பெயரைக்கூட குறிப்பிடாமல் எப்படி ஒரு கதையை எழுத முடியும். எழுத தயக்கமாக இருப்பதுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், சமீபத்தில் சிஃபி இணைய தளத்துக்காக ‘காலம்' என்றொரு நாவல் எழுதினேன். ஒரு குமாஸ்தாவின் பார்வையில் கோர்ட் அனுபவங்களைச் சொல்கிற கதை அது. அது கூட அங்கு பணியாற்றும் என் நண்பர் வெங்கடேஷின் வற்புறுத்தலால் வந்தது தான்.’’
ஒரு வேளை வாசகர்களும் விருதுகளும் அங்கீகாரமும் பெருமளவில் கிடைத்திருந்தால் இப்படி எழுத்தில் இருந்து ஒதுங்கிப் போகிற மனநிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காதோ?
”விருதுகளைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எப்போதும் அதன் மீது மரியாதை ஏற்பட்டதே இல்லை. விருதுகள் இங்கே பெரிய ஒரு கூத்தாகத்தான் இருக்கிறது. வருடம்தோறும் யாருக்காவது கொடுத்தாகவேண்டும என்று ஒரு சடங்குபோல் செய்துகொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் இனாம் மாதிரி மிகவும் சீப்பாகப் போய்விட்டது. கிடைத்திருக்க வேண்டிய நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை; வாங்கியிருக்வேக் கூடாத நிறையபேர் வாங்கிவிட்டார்கள். என்றால் இது பைத்தியக்காரத்தனம் இல்லாமல் வேறு என்ன? மிக உயர்ந்த படைப்பாளிக்கு மட்டும்தான் பரிசு கொடுப்போம் என்று இருந்தால் அந்தப் பரிசுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
1000 ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய்கள் வரை இங்கே பல விருதுகள் உள்ளன. இதில் பல விருதுகள் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டாம் என்று நிராகரித்துவிட்டேன். வாங்கிய சிலவும், நண்பர்களால் என் மேல் திணிக்கப்பட்டவைகள். ஆரம்பத்தில் பணத்தேவை இருந்தபோது அதற்காகச் சில விருதுகளை வாங்கியிருக்கிறேன். இப்போது பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். பிறகு எதற்கு எனக்கு விருது? ‘அப்பா தயவுசெய்து ஆளைவிடுங்கள்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
”அங்கீகாரத்தைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலேயே அது எனக்குக் கிடைத்திருக்க வேண்டியதைவிட அதிகமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதியிருந்த போதே சுந்தர ராமசாமி அளவுக்கு, அசோகமித்திரன் அளவுக்கு என் பெயரும் பேசப்பட்டுவிட்டது. அங்கீகாரமும் விருதுகளும் பாரம்தான்; தேவையில்லாமல் அதைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டும். பிறகு வாசகர்கள்; தமிழில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு மொழியில் எழுதியிருந்தாலும் இதைவிட அதிகமாக கிடைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிரெஞ்சு போன்ற மொழியிலும் தீவிர இலக்கியத்துக்கு வாசகர்கள் குறைவுதான். அப்புறம் இப்படி குறைவாக இருப்பதுதான் நல்லதும்கூட என்று தோன்றுகிறது. இதை தெரிந்துகொண்டுதானே எழுதத் தொடங்கியது? எனவே, இதில் ஏமாற்றமடைய என்ன இருக்கிறது? அப்புறம் இது எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கு நான் என்ன பெரியதாக எழுதிக் கிழித்துவிட்டேன்?’’
தமிழில் முக்கியமான பத்து எழுத்தாளர்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அனேகமாக அனைவரின் பட்டியலிலும் நீங்கள் இருக்கிறீர்கள். பலருடைய லிஸ்ட்டிலும் வரக்கூடியதாக உங்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. அப்புறமும் உங்கள் எழுத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?
”மற்றவர்கள் சொல்லுகிறார்கள்; உண்மைதான். ஆனால், இன்றைக்கு வரைக்கும் எனக்கு எழுத்து பெரிய விஷயமாகவேப் படவில்லை. முப்பது வருடத்தை வீணாக்கிவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ஒரு தொழில் செய்திருக்கலாம். இளையபாரதி என் கதைகளை தொகுத்துப் போட்டிருக்கிறார். அதையொட்டி எல்லாவற்றையும் திரும்பப் படித்தேன். படிக்கும் போது கூச்சமாக இருக்கிறது. பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. எஸ்தரையும் கம்பாநதியையும் கடல்புரத்திலையும் ரெயீனீஷ் ஐயர் தெருவையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் வீடு தேடி வந்து பேசுகிறார்கள், உங்களைப் போல். ஆனால், இவை எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமானவையாகத்தான் படுகிறது. உங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீங்கள் பாராட்டும் போது பொறுத்துக் கொள்கிறேன். ஒருவேளை தமிழுக்கு இது போதுமோ என்னவோ? டால்ஸ்டாயுடன் ஒப்பிடும் போது இங்கு அனேகமாக எதுவுமே நடக்கவில்லை என்றுப் படுகிறது. இங்கு எல்லாமே சோகக் கதைகள்தான். விதம்விதமாக வீழ்ச்சிதான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இது இல்லை எழுத்து. மிகச் சிறந்த படைப்பை உருவாக்க இயலாது என்ற நிலையில் எழுதாமலிருப்பதுதான், எழுத்துத் துறையை விட்டு விலகிவிடுவதுதான் சிறந்தது.’’
இப்படி எதிலும் சீக்கிரமே அலுப்பு அடைந்துவிடும் நபராக நீங்கள் இருப்பதுக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?
”சின்ன வயதிலிருந்தே என்னிடம் உள்ள விஷயம் இது. ஏன் என்றே புரியவில்லை. அப்போதே எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பேன். யாருடனும் பேசமாட்டேன். அப்பா, அம்மாவிடம் கூட பேசமாட்டேன். பேச முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம். டாக்டர்களைத்தான் கேட்கவேண்டும். எங்கேயும் போவதில்லை. அந்த காலகட்டத்தில் அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அதையொட்டி வீட்டில் பிரச்சினைகள் தொடங்கும். இதில் பாதிக்கப்பட்டு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். எட்டு வயதில் பூச்சி மருந்து சாப்பிட்டேன். ஒருமுறை நண்பன் காப்பாற்றிவிட்டான். மறுமுறை வெறும் பேதியோடு முடிந்துவிட்டது.’’
சுபமங்களா பேட்டியிலேயே அரசியல் நாவல் ஒன்று எழுதும் திட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்கள். இதுவரைக்கும் எழுதவில்லை. இனி மேலாவது எழுதுவீர்களா?
”மூன்று நாவல் மனதில் இருக்கிறது. இனிமேல் சிறுகதை எழுத முடியாது. எழுதத் திட்டமிட்டாலே மனதில் பெரிது பெரிதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், இப்போது எழுத்துக்கே எதிரான மனநிலையோடு இருக்கிறேன். என்றால் எப்படி எழுதமுடியும்! மனிதனுக்கு எதாவது ஒன்றில் பிடிப்பு வேண்டும். எனக்கு அது இல்லாமல் போய்விட்டது. காய்கறி வாங்க வேண்டுமானால் கூட மெக்கானிக்கலாகப் போய்விட்டு வருவேன். வீட்டில் எல்லோருடனும் பேசுகிறேன்; கேட்டால் பதில் சொல்கிறேன்; அவ்வளவுதான். மற்றபடி யாருடனும் பற்று இல்லாமல்தான் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.’’
எழுதவில்லையென்றால், மேற்கொண்டு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?
“உயிர் இருக்கும் வரைக்கும் எதாவது செய்தாகவேண்டும் என்பது நியதி. எழுதுவதிலும் ஆர்வம் இல்லை. பெட்டிக்கடை போல் எதாவது வைத்துக்கொண்டு உட்காரலாம். ஆனால், நிச்சயம் வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். நம்மால் அது முடியவும் செய்யாது. பொருட்களுக்குக் காசை எண்ணி வாங்கத் தெரியாது. எங்காவது போய்விட்டாலும் நிம்மதி கிடைத்துவிடுமா? தெரியவில்லை. வேறு வழியும் இல்லை. பகல் முழுவதும் சும்மாவே இப்படி இங்கே உட்காந்திருக்கிறேன்.’’
போர் அடிக்கவில்லை?
”இல்லை. இப்போதும் படிப்பதில் இருக்கும் ஆர்வம் மட்டும் வற்றிவிடவில்லை. தினசரி பேப்பர் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. சராசரியாக தினசரி நான்கு மணிநேரம ஹிந்து படிக்கிறேன். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. யூமா.வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் பிடித்திருந்தது. டிவி பார்ப்பேன். பழைய படங்கள், பாடல்கள் போட்டால் விரும்பி பார்ப்பேன். பொதிகை டிவியில் ‘சிட்டிசன் கேன்’ போட்டார்கள். கிளாஸிக்குகள் என்றால் கிளாஸிக்குகள்தான். இப்போது பார்க்கும் போதும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. பொதுவாக புத்தகங்களில் தெரிந்துக்கொள்ள ஒன்றுமே இல்லை. கூட்டங்களிலும் ஒன்றும் இல்லை. ஞானி, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி... எல்லோரும் என்ன பேசுவார்கள் என்று தெரியும். அப்புறம் அதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது? பிலிம் சொஸைட்டி படங்களும் முன்பு போல் இல்லை. கடைசியாக பிரெஞ்சு படங்களைப் பார்த்தேன். ஆங்கேயும் வழக்கமான படங்கள்தான். பத்திரிகைகளிலும் இதுதான் நிலை.
”எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றிருக்கிறது. இந்தப் பேட்டியைக்கூட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. இப்போதும் இதோடு இதனை விட்டுவிட்டீர்கள என்றால் சந்தோஷப்படுவேன். எல்லாவற்றையும் விட்டுவிட நினைப்பவனுக்கு பேட்டி எதற்கு? ஆனால், 30 வருடத்துக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவிட்ட பயணத்தின் ஒரு பகுதிதான் இதுவும் என்பதால் உங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். தொடர் ஓட்டத்தில், தொடங்கிய பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும். எனவேதான், இந்தப் பேட்டிக்கே ஒப்புக்கொண்டேன்.’’
சந்திப்பு: தளவாய் சுந்தரம் படங்கள்: புதூர் சரவணன்
நன்றி: தளவாய் சுந்தரம் தளம்
அசத்தல் பகிர்வு !
ReplyDeleteதங்களின் எல்லா படைப்புகுளும் நல்ல படைப்பாளிகளை உருவாக்குபவை .இந்த நிலை கிடைப்பது
ReplyDeleteஅரிது .எனவே மேலும் பலநல்ல படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள் .
சிவகுமார்
sivakumarroofs@gmail.com
சுத்தமான நேர்மையான மனிதர் ராமச்சந்திரன். 78 முதல் அவரை அறிந்த நான், அவரை அடிக்கடி சந்தித்தித்தில்லை.. ஆனால், மரியாதைக்கு உரியவர்.
ReplyDeletesimple and honest writer in tamil
ReplyDelete