Apr 10, 2012

மொழி அதிர்ச்சி - கோபிகிருஷ்ணன்

''பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.''

''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.''

''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு gopikrishnan-1 மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..''

''வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?''

''சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.''

''என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..''

''சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?''

''தூங்குறா.  ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.''

''என்ன ஆச்சுன்னா தூக்கம் கெடுங்குறீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க.''

''நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?''

''அப்படிச் சொல்றதுக்கில்லீங்க..ஏதோ சாப்பிடும்..ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.''

''என்ன ஆயிடுச்சின்னா சாப்பாடு எறங்காதின்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''குளிக்கிறதுலெ ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா?  தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?''

''குளிக்குது.  அதுலெ என்னாங்க இருக்கு?  ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க.. அப்ப குளிக்காதுங்க..''

''என்ன ஆனா குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க.. நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''இவங்களுக்குத் தலையிலெ எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?''

''பலமா அடின்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு.  அவ்வளவுதாங்க..''

''ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க.  நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''நா மேக்கொண்டு கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..''

''எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?''

''அப்பிடிச் சொல்றதுக்கில்லே..ஒங்களெப் புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..''

''...............................''

''நடுநடுவுலெ எனனமோ ஒரு வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு கொஞ்சஞ் சொல்றீங்களா?''

''அட, நீங்க ஒண்ணு..அது ஒண்ணுமில்லீங்க..''

''அப்பிடி நீங்க சொல்லக்கூடாது.  நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான் நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும்.  இல்லேன்னா இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..''

''நா புரியாத எதெயும் சொல்லலீங்களே.''

''இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான் எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?''

''அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு 'டை' யெல்லாம் கட்டிக்கிட்டு ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..''

''எனக்குச் சத்தியமாப் புரியல்லெ.''

''ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?''

''என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லீட்டீங்க..''

''பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே.  ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?''

(அக்டோ பர் - டிசம்பர் 1991ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கதை)

நன்றி: நவீன விருட்சம்

6 comments:

  1. தென்னார்காடு மக்களின் கருத்தும் (தமிழர்களின் பொதுவான எண்ணமாகவும் இருக்கலாம்), வட்டார மொழியும் வெகு இயல்பாய் வெளிப்பட்டிருக்கின்றன.
    -பா.இரா

    ReplyDelete
  2. இது ஏதோ துணுக்குக் கதை போல தோன்றினாலும் அதன் உள்ளடக்கம் வேறு. உலகில் எல்லா மனிதருமே தன்னை தன் சுயத்தைவிட மேலானதாக காட்டிக்கொள்ளும் அவா இருக்கிறது. இது கிராமத்து மனிதனின் கதை. ஆனால் படித்தவர்களிடையே கூட இந்த பாவனை நிறைய உள்ளது. உதாரணமாக names dropping எனப்படும் எல்லோரைப் பற்றியும் தெரிவதுபோல காட்டிக்கொள்ளும் பாவனை. என்றைக்கும் பொருந்தும் கதை இது.

    ReplyDelete
  3. really super, enjoyed the written style

    ReplyDelete
  4. நாமும் இப்படி எத்தனை முறை ரிலாக்ஸேஸன் ஆகியிருப்போம் என்று யோசிக்க வைக்கும் கதை

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.