'அம்மா...'
மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை.
செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன.
நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு நல்ல தெளிவு இருக்கவில்லை. எனினும் மங்கலாகத் தெரிந்த பரந்த முகமும், இருபக்கங்களிலும் முறுக்கிவிடப்பட்டிருந்த பெரிய மீசையும் அவனை இனம் கண்டுகொள்ள வைத்துவிட்டன.
காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்த அவன் கையை, நட்டாற்றில் முழுக இருந்தவளுக்குக் கிடைத்த அடைக்கலமாய் அவள் பற்றிக்கொண்டாள்.
மாரியம்மையின் முகத்தில் மகிழ்ச்சியின் வரிகள் மின்னின. அவள் விழிகள் நிறைந்துவிட்டன. செல்லையா ஒன்றும் பேசவில்லை. தொண்டை கரகரக்க அவளே கேட்டாள்:
"நீ எப்பம்லே வந்தே?"
"ரண்டுமூணு மனி நேரத்துக்க முந்தியே நா வந்தாச்சு.ஒன்னைக் கூப்பிட்டேன்.நீ களைச்சுப் போய் நல்லா ஒறங்கிட்டிருந்தே.எளுப்பாண்டாமுண்ணு நேரே "தட்டுக்கு"ப் (மாடிக்கு) போயி தம்பி தங்கசாமீட்டே பேசீட்டு இருந்தேன்."
"ஓஹோ!"
மாரியம்மையின் முகத்தில் சற்றுமுன் பளீரென்று பிரகாசித்த நம்பிக்கையின் ஒளி சடக்கென்று மறைந்தது.அங்கே மீண்டும் ஏமாற்றத்தின் இருள் சூழ்ந்து கொண்டது.
"அப்பம் நீ நேரத்தையே வந்தாச்சா?"
அவள் பெருமூச்சு விட்டாள்.
நாலைந்து நாட்களாகப் பகல் இரவு நேரங்களின் பேதத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க இயலாமல் கிடந்த அவள் சுற்றுமுற்றும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.
மங்கலாக மின்சார விளக்கு அழுது வடிகிறது.எதிரில் தெரிந்த ஜன்னல் கம்பிகள் கருமையான ஆகாயப் பின்னணியை நெடு நீளத்தில் கோடு கிழித்துக் காட்டுகின்றன.
அப்போ,ராத்திரி ஆயாச்சா?அப்படியென்றால் மருமகள் தமிழ்க் கொடியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருப்பாள்.
தெருவில் சிறுவர் சிறுமிகள் ஓடிப் பிடித்து விளையாடும் அரவம் கேட்கிறது.தெருநடையில் கைக்குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு நிற்கும் ஒன்றிரண்டு பெண்களின் முகங்கள் நிழலாடுகின்றன.
கீழ்ப் போர்ஷனில் வசிக்கும் வீட்டுச்சொந்தக்காரி சொர்ணம்மா மெல்ல வெளியே வந்து திண்ணை நடையில் நின்றாள்.
"ஆனாலும் உங்கம்மைக்கு இந்த வயசான காலத்திலெ இவ்வளவு பிடிவாதம் கூடாது.இந்த நாலஞ்சு நாளா அறப்பட்டினி.மூத்த மகன் பெங்களூரிலிருந்து வரமுந்தி,செத்துப் போனா போகட்டு முண்ணு,ஒரு சொட்டுத் தண்ணியோ,மருந்தோ கூடக் குடிக்காமே அந்தக் கெடையா கெடக்கா..."
கால் சட்டையும், ஷூஸும் அணிந்திருந்ததால் தரையில் உட்காருவதில் இருக்கும் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் அம்மா படுத்திருந்த அந்தப் பாயின் ஓர் ஓரத்தில் ஒருவாறு கஷ்டப்பட்டு அவன் உட்கார்ந்தான்.
"உம்...நாலஞ்சு நாளா பட்டினி.ஏதாவது குடிக்காண்டாமா?"
"ஒண்ணும் வேண்டாம்லே. கொஞ்சம் வெஷம் இருந்தா வாங்கிட்டுவா. எனக்கு இவ்வளவு நாளு வாந்தது எல்லாம் போரும்ப்பா போரும்."
'தன்னிடம் வந்து விவரங்களைக் கேட்டு அறியும் முன், தங்க சாமியிடமும் அவன் அருமாந்தப் பெண்டாட்டி தமிழ்க்கொடியிடமும் போய் அவர்கள் வாய் வழி எல்லாவற்றையும் கேட்டறிந்துவிட்டு, சாவகாசமாய்த் தன்னிடம் வந்திருக்கிறானே இவன்?' என்று செல்லையாவின் மீதும் ஒருவித எரிச்சல் வர, தன் தலையில் அடித்தவாறு இப்படிச் சொல்கையில் அவள் அழுதேவிட்டாள்.
செல்லையாவுக்கு அந்தக் காட்சி மிகவும் வேதனையை உண்டு பண்ணியது என்பதை அவன் முகம் காட்டியது.
தங்கசாமியைவிடப் பத்து வயசு மூத்தவன் அவன். செல்லையாவுக்கு இப்போது முப்பத்தஞ்சு வயசு இருக்கும். நாகர்கோயிலில் நாகம்மாள் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறான். என்னவோ ஒரு புதிய மெஷினின் ஆறு மாதப் பயிற்சிக்காக, மில்லில் இருந்தே அவனைப் பெங்களூருக்கு அனுப்பியிருந்தார்கள். பெங்களூருக்குப் போய் மூணு மாசம் கூட இருக்காது; அதற்குள் அம்மாவின் அவசரக் கடிதம் கண்டு திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறான். அவனுக்கு, சின்னவனைவிட அம்மாவிடம் அதிகப் பாசம். இது மாரியம்மைக்கு நன்றாகத் தெரியும்.
"சரி, தம்பி வீட்டிலிருந்துதானே ஒண்ணும் குடிக்கமாட்டே? நா கடேலிருந்து வாங்கீட்டு வந்து தந்தாலும் குடிக்கமாட்டெயா? உம். நா இன்னா வந்துட்டேன்" என்று எழுந்தான் அவன்.
மாரியம்மையின் சம்மதத்துக்குக் காத்திராமல் வெளிவாசலின் பக்கத்தில் சென்றவன் திரும்பிச் சொர்ணம்மாளிடம், "டீ வாங்கீட்டு வர ஒரு சின்னப் பாத்திரம் இருந்தா தாருங்க" என்று கேட்ட போது அவள் உள்ளே சென்று, திருகு மூடி போட்ட ஒரு ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான்.
இனி, செல்லையா திரும்பி வந்த பிறகுதான் கேஸ் விஸ்தாரம் நடக்கும் என்பதை அறிந்துகொண்டு அதை ஒரு இடைவேளையாகக் கருதி தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற அண்டை வீட்டுப் பெண்கள்.
கனத்த இமைகளைத் திறக்க முடியாமல் அந்தத் திண்ணையின் ஓரத்தில் மாரியம்மை ஒடுங்கிப் போய்த் தனிமையில் அப்படியே கிடந்தாள்.
தூக்கமா மயக்கமா என்று புலப்படவில்லை. மாடியில் குடியிருக்கும் இளைய மகன் வீட்டுச் சந்தடி, அதோடு கீழ்ப்போர்ஷனில் வசிக்கும் சொர்ணம்மா குடும்பத்து இயக்க ஒலிகள், வீட்டின் உள்ளிலும், வெளியில் தெருவிலும் நடப்பவர்களின் காலடியோசைகள்.
சுரம் தொடங்கும் நாள் வரை வயிற்றில் பசி கிள்ளுவதை அவளால் நன்கு உணர முடிந்தது. இப்போது பசியை அவளால் உணர்ந்தறிய முடியவில்லைதான். எனினும், செல்லையாவின் கையி லிருந்து சுடச்சுட ஏதாவது வாங்கிக் குடித்துத் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டால் தேவலை என்ற மன உறுத்தலும் இப்போது இல்லாமல் இல்லை.
சற்றுக் கழிந்து சரக்சரக்கென்று ஷூஸ் தெருவில் உராயச் செல்லையா உள்ளே வந்தான். கையில் ஒரு சிறு பொட்டலத்தில் ரொட்டியும் ஆரஞ்சும் இருந்தன. தவிர, பாத்திரத்தில் சுடச்சுட டீயும்.
கால் சட்டை ஜேபிலிருந்து எடுத்த வர்ண வெள்ளித் தாளில் அழகாக ஒட்டியிருந்த ஏழெட்டு மாத்திரைகளில் ஒன்றைக் கிழித் தெடுத்தான். மாரியம்மையைக் கைத்தாங்கலாகத் தாங்கி உட்கார வைத்து அவள் வாயில் மாத்திரையைப் போட்டுவிட்டு, அவள் பிகு செய்வதைப் பாராட்டாமல், டீயைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிக்கவைத்தான். ஒரு ஆரஞ்சை உரித்துச் சுளைகளையும், ஒரு ரொட்டித் துண்டையும் கட்டாயப்படுத்தி அவளைத் திங்கவைத்து விட்டுப் படுக்க வைத்தான். பிறகு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, பக்கத்தில் சுவரில் சாய்ந்தவாறு பாயில் சௌகரியமாக உட்கார்ந்தான் செல்லையா.
இப்போது மாரியம்மைக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.
"சரி, நீ எனுத்துக்கு அப்படி அவசரம் அவசரமா 'உடனேயே புறப்பட்டு வா' ன்னு எனக்கு எழுத்து (காயிதம்) போட்டே? என்று அவன் மெல்ல ஆரம்பித்தான். "எல்லாத்தையும் ஒனக்கே அருமைத் தம்பியும் தம்பிக்க கொண்டாட்டியும் ஒண்ணுக்குரண்டா ஒங்கிட்டெச் சொல்லியிருப்பாங்களே? இனி நான் வேறெ சொல்லணுமா?" என்ற அவள் குரலில் இருந்த எரிச்சலையும் இளக்காரத்தையும் பாராட்டாமல் அவன் மீண்டும் அவளை வற்புறுத்தினான். "அவ்வொச் சொன்னதெல்லாம் கெடக்கட்டும். நீ சொல்லு" என்று விட்டு, மீண்டும் தெருவாசலில் வந்து இடம் பிடித்துக்கொண்டு விட்ட அண்டை வீட்டுப் பெண்களைத் தலை உயர்த்திப் பார்த்தான்.
அவன் பார்வையின் பொருள் சொர்ணம்மாவுக்கும் புரிந்தது. அந்த வீட்டின் கீழ்ப்போர்ஷனில் சொர்ணம்மாவின் கூட அவள் மகன், மகன் பெண்டாட்டி, மகனுடைய இரண்டு வயசான மகள் இத்தனை பேர்களும் வசிக்கிறார்கள். வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்று மேல் மாடியை, கன்யாகுமரி ஜில்லாவிலிருந்து சமீபத்தில், திருவனந்தபுரம் ஐ.ஜி. அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்து வந்திருக்கும் தங்கசாமியின் குடும் பத்துக்கு நாற்பது ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தான். மகன் தங்கச்சாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டு இதோ மாரியம்மை கிடக்கும் இந்த வெளித் திண்ணை வழியாகத் தான் மேலே வசிக்கிறவர்கள் கீழே பின் பக்கத்திலுள்ள குளியலறைக்கோ, வெளியில் தெருவுக்கோ போய் வரவேண்டும். தங்கசாமி குடும்பத்துக்கு மேல்மாடியை மட்டுமே வாடகைக்குக் கொடுத்திருப்பதால், சரியாகச் சொல்லப் போனால், இந்தத் திண்ணையில், போகவர ஒரு வழி என்பதற்கு மேல் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
எனினும், மாரியம்மை கடந்த நாலைந்து நாட்களாக அங்கே படுத்திருப்பதையோ, இப்போது அவள் மூத்த மகன் செல்லையா அங்கே உட்கார்ந்திருப்பதையோதான் தடுக்கவில்லையே? ஆனால் தனக்குப் பழக்கமான அண்டைவீட்டுப் பெண்கள் அங்கே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை 'உங்க வேலையைப் பார்த்துப் போங்கோ'ண்ணு ஒரேயடியாக விரட்டியடிக்க முடியுமா?" என்ற கேள்விக் குறியுடன் சொர்ணம்மா பேசாமல் நின்றுகொண்டிருந்தாள்.
இவையெல்லாம் செல்லையாவுக்கும் தெரிந்திருந்ததால், பிறகு அவன் அதைச் சட்டை செய்யாமல் அவன் அம்மா சொல்வதைக் கேட்பதில் மும்முரமானான்.
"லே, செல்லய... ஒனக்குத்தான் தெரியுமே. தங்கச்சாமிக்கு ஆபீஸுக்குப் போக என்னைக்கும் காலம்பர ஒம்பது மணிக்கு இங்கே வீட்டை விட்டு எறங்கணும். பூந்துறைப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாரு வேலைப் பாக்கும் தமிழ்க் கொடிக்குக் காலம்பரெ ஏழுமணிக்கு வீட்டிலிருந்து போகணும். கைப்புள்ளெ வேறெ! நா இந்த வயசான காலத்திலெ நேரம் விடிய முன்னே அஞ்சு மணிக்கே எந்திச்சு சாப்பாட்டைத் தயாரிச்சு அவ கையிலெ கொடுத்தனுப்புவேன். தங்கச்சாமி காலம்பரப் போனா பொறவு சாயங்காலம் பாத்தாப் போரும். உச்சைக்கு (மாத்தியானத்துக்கு)ப் பையன் கிட்டெ அவனுக்குச் சோறு கொடுத்தனுப்புவேன். கைப்புள்ளையைப் பாக்கணும். ராத்திரிச் சாப்பாட்டுக்குச் சோறு வைக்கணும். அடுத்த நாள் காபிக்குத் தோசை மாவு அரைக்கணும். இதையெல்லாம் நா ஒத்தேலெ மாடுபோல இந்த வயசான் காலத்திலே செய்தேன்."
மாரியம்மைக்குத் தான் பட்டப் பாட்டையெல்லாம் எண்ணி எண்ணிச் சொல்லச் சொல்லத் துக்கம் தொண்டையை அடைத்தது. "அம்மா, நீ கட்டப்படல்லேனு இப்பம் ஆராவது சொன்னாளா?" என்று செல்லையா கேட்டதும் மாரியம்மைக்கு இன்னும் கோபம் வந்தது.
"சொன்னா அந்தக் கடவுளுக்குப் பொறுக்குமா? ஆனா, என்னை வேலைக்காரீன்னா ரண்டு பேரும் நெனச்சா? இவ ரண்டு பேரும் தொரையும் தொரைசாணியுமா வேலைக்குப் போயிருவா. நா மட்டும் வீட்டிலெக் கெடந்து இந்தப் பாடான பாடெல்லாம் பட்டு இவ்வளுக்கு பண்டுவம் பாத்தேன். அந்தப் பசலையை வளர்த்தேன். கடேசியிலெ அந்தப் புள்ளைக்கப் பொறந்த நாளைக் கொண்டாட தமிழ்க் கொடிக்குத் தள்ளை வீட்டுக்கு (அம்மா வீட்டுக்கு) மூளமூட்டுக்கு ரண்டு பேருமா புள்ளையை எடுத்தூட்டுப் போறப்பம் போயிட்டு வாறேன்னு எங்கிட்டெ ஒரு வாக்குச் சொன்னா என்னா? நானும் கூடெப் போயிரவாப் போறேன்?"
அழுகையால் மேலே பேச்சைத் தொடரமுடியாமல் திணறினாள் மாரியம்மை. சொர்ணம்மாதான் நடந்ததைச் செல்லையாவிடம் விளக்கினாள்.
நாலு மாசத்துக்கு முன் ஒரு நாள். பின் பக்கத்தில் சென்று சேலையெல்லாம் அடித்துத் துவைத்துக் குளித்துவிட்டு மாரியம்மை மாடியில் சென்று பார்த்தபோது, மகனையும் காணவில்லை. மருமகளை யும் காணவில்லை. தொட்டிலில் பேரப்பிள்ளையும் இல்லை. அடுத்த நாள் பிள்ளைக்கு ஒரு வயசு திகையும் நாள் என்பது ஞாபகம் வந்ததும், அவளுக்கு வந்த துக்கமும் கோபமும் இவ்வளவு அவ்வளவு இல்லை. பிள்ளையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட இருவரும் எங்கே போயிருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியாததல்ல. எனினும் அந்த நன்றிக்கேட்டை அவளால் சகிக்க முடியவில்லை. அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, மாடிக் கதவைப் பூட்டி, சாவியைக் கொண்டு வந்து சொர்ணம்மா கையில் கொடுத்துவிட்டுச் சொன்னாள்:
"இந்தப் பாடான பாடுபட்டு அந்தப் புள்ளயை நா வளத்தினேன். அவனுக்குப் பொறந்த நாளைக் கொண்டாடுவதை நா அறியப் படாதாம். வேலைக்காரிக்குக் கூட இதைவிட மதிப்பிருக்கும், இங்கே பெற்ற தாய்க்கு அதுகூட இல்லை. மதியாத வீட்டை மிதிக்கமாட்டேன். நா என் மக தாயிக்க வீட்டுக்கு, பணகுடிக்குப் போறேன். இனி பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவு இவ்வொ ரண்டுபேரும் வேலைக்குப் போனா ஆரு வந்து பொங்கிப் போடப் போறா, பார்ப்போம்" என்றுவிட்டுப் பணகுடியிலிருக்கும் தன் மகள் வீட்டுக்குப் போய்விட்டாள் மாரியம்மை.
அதன் பிறகு நடந்ததையும் சொர்ணம்மாதான் செல்லையாவிடம் சொன்னாள்.
"பொறந்த நாளெல்லாம் களிஞ்சு ரண்டு மூணு நாளுக்குப் பொறவு இங்கே வந்த தங்கசாமி கிட்டேயும், தமிழ்க்கொடி கிட்டேயும், ஒங்க அம்மா வருத்தப்பட்டுக்கிட்டுப் பணகுடிக்குப் போய்விட்டதை நாதான் சொன்னேன். பள்ளிக்கூடம் அடச்சுவிட்டா; அதனாலே ரெண்டு பேரும் அதிகமாக அலட்டிக்கொள்ளல்லே. பள்ளிக்கூடம் தெறக்கப்பட்ட நாள் நெருங்கியதும் தமிழ்க்கொடி முளமூட்டுக்குப்போயி அவ அம்மைக்க ஏற்பாட்டிலே, பத்துப் பந்தரண்டு வயசிருக்கும், ஒரு குட்டியைக் கூட்டிக்கிட்டு வந்தா. பள்ளிக்கூடம் தொறந்த பிறவு, இந்த ரெண்டு மாசமா அதிகாலையிலேயே எந்திச்சி, சோறெல்லாம் வச்சு, மத்தியானத்துக்கும் எடுத்துக் கிட்டு, புள்ளையை அந்தக் குட்டிகிட்டே விட்டுவிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போறா தமிழ்க்கொடி. எனக்குத்தான் மனசு கேக் காமெ, 'அம்மாவை வரச்சொல்லி எளுத்துப் போடப்படாதா பாவம்னு!' ரண்டு மூணு மட்டம் தங்கசாமிகிட்டே நா சொல்லிப் பாத்துட்டேன். 'உம், உம். போனது போலெ வரட்டும். வரச் சொல்ல விருந்துக்காரியா என்ன?' என்று சொல்லிப் பேச்சை முடிச்சுவிடுவான் அவன்."
மாரியம்மை மனத்தைத் தேற்றிக்கொண்டு நடந்ததைச் செல்லையாவிடம் சொன்னாள்.
"பெத்த மனசு தான் பித்து. பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவாவது தங்கசாமி வருவான் வருவான்னு பாத்துக்கிட்டே நா பணகுடியில் தாயி வீட்டிலெ இருந்தேன். பள்ளிக்கூடம் தொறந்து மாசம் ரண்டான பெறவும் 'வா'ன்னு எனக்கு ஒரு எளுத்துக்கூடப் போடாமெ கல்லுப்போல இருந்திட்டான் இவன். உம்....இவனா வந்து கூப்பிடாமெ வலிய வரப்படாதுன்னுட்டுத்தான் நா இருந்தேன். ஆனா தாயிக்க மாப்பிள்ளைக்கு மதுரைக்கு வேலை மாற்றம் வந்துட்டது. வீடெல்லாம் பார்த்து முடிக்காமெ அவளையும் புள்ளைகளையும் அங்கே கூட்டீட்டுப்போக முடியாதுன்னு, தாயியையும் புள்ளைகளையும் அங்கே தக்கலையிலிருக்கும் அவருக்கு அப்பா அம்மாகிட்டே கொண்டுபோய் விட்டுவிட்டு, மதுரைக்கு அவரு மட்டும் ஒத்தேலே போகப் போறதா அறிஞ்சம் பொறவு நா அங்கே நிக்க முடியுமா? வேறெ போக்கடியில்லாமெ நேரா இங்கையே வந்துட்டேன். நீ இருந்தேன்னா நாகர்கோயிலுக்குத் தான் வந்திருப்பேன். உம், நீயும் பெங்களூருக்குப் போயிட்டே!" என்று ஆதங்கப்பட்டாள் மாரியம்மை.
அவளே பேசட்டுமென்று மௌனமாய் உட்கார்ந்திருந்தான் செல்லையா. "நா இங்கே வரப்போ சமயம் மத்தியானம் இருக்கும். வேலைக்காரக் குட்டி மட்டும் புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருக்கு.புள்ளயைக் கையிலெ எடுத்தப்பம் என்னால பொறுக்க முடியல்லே. பயல் தேஞ்சுப் போயிருந்தான். தங்கச்சாமி ஆபிஸிலிருந்து வரும் நேரமாவல்லே. அவன் வந்து ரண்டு மணி நேரம் களிஞ்சுதான் தமிழ்க்கொடி பள்ளிக்கூடத்திலிருந்து வருவா. எனக்கானா ஒரே பசி. அடுக்களையில் போயிப் பாத்தா தமிழ்க்கொடிக்குச் சாயங் காலம் வந்து சாப்பிட கொஞ்சம் சோறு மட்டுந்தான் இருந்தது. பரணையில் இருந்த டப்பாவிலிருந்து கொஞ்சம் வறுத்தமாவை எடுத்துக் கரச்சு ஒரு ஒறட்டியும் சுட்டுத் திண்ணு கொஞ்சம் பச்சத் தண்ணியும் குடிச்சேன். இவ துரைசாணி அம்மா பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும், 'நா எங்கம்மை வீட்டிலிருந்தாங்கோம்மாவு கொண்டு வச்சிருந்தேன். இவ ராசாத்தி மாதிரி வந்து ஒரு சோலியும் செய்யாமெ திண்ணிட்டா' ன்னு என்னைத் திட்டின திட்டு, அப்பப்பா! அதுக்கம் பொறவு அந்த வீட்டிலே இருந்து பச்சைத் தண்ணி வாங்கி நா குடிக்கல்லே" என்று அழுகையோடு முடித்தாள் மாரியம்மை.
செல்லையா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுத்தான் கேட்டான்; "தங்கச்சாமி ஒண்ணும் சொல்லலையா?"
"உம்... அவனா?" கிழவி பெருமூச்சு விட்டாள்.
"வாய் தொறந்தா முத்து உதிந்திராதா? கொஞ்சம் நாளா வீட்டிலே இல்லாமெ பெத்த தள்ளையல்லவா வந்திருக்கான்னு தலைநிமிர்ந்து என்னைப் பார்க்கணுமே. ஆரஈயோ திட்டுதான்னு அவனுக்கப் பாட்டுக்கு வெளியே எறங்கி நடந்துட்டான் அவன்."
மேலே மாடிக்குச் செல்லும் வாசலை ஆத்திரத்தோடு பார்த்தான் செல்லையா. தங்கசாமியைக் கூப்பிட்டுக் கேட்பதா வேண்டாமா என்று அவன் திணறுவது போலிருந்தது. சொர்ணம்மா சொன்னாள்:
"மாடிக்கு வாடகை தருவது ஒங்க தம்பி. அதனாலே அவனை நா குத்தம் சொல்லப்படாதுதான். ஆனா நடந்ததைச் சொல்லாமே இருக்கவும் என்னாலே முடிய மாட்டேங்குது. இவ்வோ பெத்தத் தள்ளையா, இல்லை வேறெ ஆருமா? பணகுடியிலிருந்து இங்கே வந்த அண்ணைக்கு அந்த ஒறட்டிச் சுட்டுத் திண்ணதுதான்; அதுக்கம் பொறவு முழுப்பட்டினி. அதுக்கக்கூடக் காய்ச்சல் வேறெ சேந்து ஆளைத் தூக்கித் தூக்கிப் போடுது. இந்தப் பாயில் இதே இடத்திலெ அந்தக் கெடையா கெடக்கா. பெத்த மகனுக்கும் சொந்த மருமகளுக்கும் இல்லாத அக்கறையா நமக்குன்னு என் பாட்டுக்கு இருந்தேன் நான். ஆனா இவளைத் தாண்டி அங்கையும் இங்கையும் போறாளே அல்லாமெ இப்படியொருத்தி இங்கணெ கிடக்காளேன்னு ஆராவது மூண்டு கேக்கணுமே? எனக்கு தீரப் பொறுக்கல்லே. என்ன நெனச்சாலும் சரீன்னு அவனைக் கூப்பிட்டு, 'டேய் தங்கச்சாமி, இது ஒன்னைப் பெத்த அம்மையல்லவாடா? இப்படி பட்டினிக் கெடந்து, காய்ச்சல் பிடிச்சு இந்தக் குளிரிலெ கெடந்து பாடாத படுதா, அவளை அங்கே கூப்பிட்டுப் படுக்கவச்சு, கஞ்சியோ மருந்தோ கொடுத்தா என்ன? இது பெரிய பாவம்டா. ஒனக்கும் ஒரு புள்ளை இருக்கான். மறந்திராதே' ன்னு என்னவெல் லாமோ சொன்னேன். அதுக்குச் தங்கச்சாமி சொல்லுதான்: 'எனுத் துக்கு இவ விருந்தாளி மாதிரி ஒதுங்கி வந்து கெடக்கணும்? அங்கே மேலெ வந்து அதிகாரத்தோடெ படுக்கத்தானே வேணும்? அவசியம் உள்ளதைத் தமிழ்க் கொடிட்டெ இருந்து கேட்டு வாங்கிக் குடிச்சா, மாடியை வயசான காலத்திலே இவ ஈசு கொறஞ்சு போயிருமா? நீங்க மாடியை மட்டுந்தானே எங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்க? இவளுக்கு இந்தத் திண்ணையில் என்ன அதிகாரம்? ஒண்ணுலே மேலே வரச்சொல்லுங்க. இல்லாட்டே வெளியே போகச் சொல்லுங்க' என்று விட்டு அவன் பாட்டுக்கு ஆபீசுக்கு இறங்கிப் போயிட்டான்."
செல்லையா குபீரென்று எழுந்தான். தங்கசாமியை இங்கே கூப்பிட்டு இத்தனை பேர்களுக்கிடையில் வைத்து விசாரணை செய்து குடும்ப மதிப்பை இன்னும் குறைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை போல் தோன்றியது. ஆனால் அவன் முகபாவம் தங்கசாமியிடம் தாங்க முடியாத வெறுப்பையும் கோபத்தையும் காட்டுவது போலிருந்தது. என்னவோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் மரத்தாலான மாடிப்படிகளைப் படபடவென்று உதைத்தவாறு ஏறி மாடிக்குச் சென்றான்.
சிறிது நேரத்துக்கு மாரியம்மைக்குச் செல்லையாவின் சத்தம் மேலே மாடியில் கரகரவென்று கேட்டுக்கொண்டிருந்தது. இடையில், அமர்ந்த குரலில் தமிழ்க்கொடியின் என்னவோ பேச்சொலி.சற்று நேரத்தில் அந்தச் சத்தமும் கேட்கவில்லை.
களைப்பும் தூக்கமும் ஒரு சேர வந்து இமைகளை அழுத்துவது போலிருந்தது மாரியம்மைக்கு. எத்தனை நேரம் தூங்கினாளோ தெரியாது. திடீரென்று மேலே பேரப்பிள்ளை வீல் வீல் என்று அழும் ஓசை கேட்டதும் அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.
சுற்று முற்றும் பார்த்தபோது யாரையும் காணவில்லை. மேலே அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியச் சண்டையை எதிர்பார்த்து ஏமாந்து போய், தத்தம் வீடுகளுக்குச் சொர்ணம்மாவும், ஏனைய அண்டை வீட்டுப் பெண்களும் போய்விட்டார்கள் போலிருக்கிறது.
குழந்தையைச் சற்று நேரத்துக்கு யாரும் எடுக்கவில்லை. பிறகு தமிழ்க்கொடி என்னவோ எரிந்து விழுந்தவாறு குழந்தையை எடுத்து அதன் அழுகையை அடக்கும் அரவம் கேட்டது.
சற்றுக் கழிந்து, மிகவும் நிதானமாகச் செல்லையா மாடிப்படிகளில் இறங்கித் தன்னருகில் வந்து நிற்பது தெரிந்தது மாரியம்மைக்கு. மேலே செல்லும்போது அவனிடத்தில் இருந்த வேகம் தணிந்திருந்தது.
"வயசான காலத்திலே ஒனக்கு இவ்வளவு ஆங்காரம் கூடாது. அவர் சொல்வதெப் பார்த்தா ஒன் மேலேதான் தப்புன்னு தோணுது. ஒனக்கு இங்கே அதிகாரம் இல்லையா? எனுத்துக்கு இப்படி விருந்துக்கு வந்தவ மாதிரி விலகிப் போய் இருக்கணும்? கூடமாட வேலை செய்யணும். உள்ளதை விட்டுக் குடிக்கணும். அதை விட்டுட்டு எனுத்துக்கு இந்த அவதாளியெல்லாம்? வயசான காலத்திலே நானோ நானல்லவோன்னு பிடிவாதம் பிடிக்காமே அவ்வகூட ஒத்துப்போகப் பாரு. தமிழ்க்கொடிதான் வேற ஆருமா? அவதான் என்னவாவது சொல்லீட்டா அதைப் பெரிசு படுத்தாமே அங்ஙணே அடங்கிக் கெடக்கப் பாரு. உம்.... அதுதான் ஒனக்கு நல்லது. சரி, எனக்கி நிற்க நேரமில்லே. அடுத்த ரயில்லையேப் போகணும். நா போயிட்டு வாரேன்."
செல்லையாவின் குரல் மிகவும் கரகரப்பாகவும் கண்டிப்பாகவும் ஒலித்தது.
அவள் பதிலுக்குக் காத்திராமல் செல்லையா நடந்து தெருவாசல் அருகில் சென்றதும், தெருவிலிருந்து தங்கசாமி உள்ளே ஏறி வந்தான்.
"பெங்களூருக்குத் திரும்பியாச்சா? கொஞ்ச முன்னே மாடியிலிருந்து வெளியே போகும்போது இங்கே பார்த்தேன். உன்னை இங்கே காணவில்லையே? எங்கே போயிட்டே?"
செல்லையாவின் முகத்தில் தங்கசாமியை அப்போது அங்கே எதிர்பாராத ஒரு தடுமாற்றம். எனினும் சமாளித்துக்கொண்டு, "இல்லே, அம்மைக்கு மருந்து வாங்கீட்டுவரப் போயிருந்தேன். அப்பம்தான் நீ மாடியிலிருந்து வெளியில் போயிருக்கே போலிருக்கு. சரி, நா போயிட்டு வாரேன். அடுத்த ரயிலுக்குப் போகணும். எனக்கு லீவில்லே" என்று விட்டுத் தம்பியின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தெருவில் இறங்கிச் சரக் சரக் என்று பூட்ஸ் கதற விறு விறுவென்று நடந்தான் செல்லையா.
----------------------
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984
குற்றம் செய்த மனதை மனசாட்சி தான் கேள்வி கேட்கும்...
ReplyDeleteமிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
வாழ்க்கையின் நிதர்சனத்தை இதைவிட வெளிச்சம் போட்டு காட்ட யாராலும் முடியாது. சொல்லால் அடிபடும் போது ஏற்படும் வலி அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
ReplyDeleteஇந்த கதையின் கடைசி பகுதியை படித்து முடிக்கும் போது திக் என்றது. மிக சில வரிகளில் கோபமாக மேலே போன செல்லையா அடங்குவதும், அழுத குழந்தை கவனிக்கப் படாமல் இருந்து பிறகு அதன் அம்மா எரிந்து விழுவதும், திரும்பி வந்தவன் தாயையே ஆங்காரம் என்பதும் எதிர்ப்படும் தம்பியை முகமெடுத்து பார்க்காமல் போகும் லஜ்ஜையும். ஒரு திடுக் விஷயத்தை இவ்வளவு எளிதாக சொல்ல முடியுமா என்று ஆச்சரியப் படுத்தும்.
ReplyDelete