க.நா.சு.100
கடைசி இரண்டாண்டுகளில்தான் அவருடன் பழக முடிந்தது. முன்பு அறுபதுகளில் அவர் தில்லி செல்லுமுன் ஓரிருமுறை பார்த்ததுண்டு. பள்ளி முடியும் தறுவாயிலேயே ‘‘பொய்த் தேர்வு’’, ‘‘ஒரு நாள்’’ போன்ற நாவல்களைப் படித்துவிட்டபோதிலும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது. எண்பத்தேழில் மேநாட்டு இலக்கியங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளச் சென்ற வகையில் அடிக்கடிச் சந்திக்க முடிந்தது. ஏழெட்டுக் கூட்டங்கள் ‘‘முன்றில்’’ இலக்கிய இதழ் சார்பில் நடந்து பிரஞ்சு, ஸ்பானிஷ் நூல்கள் பற்றி நிறையப் பேசினார். சிலப்பதிகாரம் பற்றி ஒரு கூட்டம். குறிப்பிட்ட சில பேர்தாம் வந்தார்கள். அதுவே போதும் என்பார். அந்தக் கூட்டங்களில் மேநாட்டு இலக்கியம் பற்றிப் பேசினாலும், வீட்டில் சந்திக்கும்போது, திருமூலர் - காரைக்காலம்மையார், குறுந்தொகைக் கவிஞர் பற்றியே அவர் மகிழ்ச்சியோடு உரையாடுவார். வள்ளுவர், இளங்கோ படைப்புகளில் காணப்படும் சில நுணுக்கங்களை மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறார். மற்ற நண்பர்களிடம் வேறு பலவற்றையும் பற்றிப் பேசியிருக்கக்கூடும். காரைக்காலம்மையார் கவிதைகள் தவிரவேறு பக்தியிலக்கியத்தில் எவரையும் கடைசி இரண்டாண்டுக் காலத்தில் பேசியதாகத் தெரியவில்லை. கரைக்காலம்மையார் கவிதைகளைப் பக்திப் பாடல்களாக அவர் மதித்ததில்லை - சிறப்புமிக்க இலக்கியமாக எடுத்துக்காட்டியுள்ளார். கடவுளை இகழ்ந்ததுமில்லை. யாரை இகழ்வது?
கூட்டம் முடிந்தால் ‘‘நானே வீடு போய்விடுகிறேன் - உங்களுக்கு எதற்குச் சிரமம்’’ என்பார். இரவில் அவருக்குப் பார்வை சரியாக இருக்கவில்லை. ‘‘அதெல்லாம் முடியாது-அம்மாவுக்கு யார் பதில் சொல்வது’’ என்று கூறி வண்டி ஏற்பாடு செய்வதுண்டு.
க.நா.சு. கடவுளைப் பற்றிப் பேசினால் நகைச்சுவையோடிருக்கும். அதிகமாகப் பேசியதில்லை. கிட்டத்தட்ட கடவுளிடம் அந்தக் ‘‘கந்தசாமிப் பிள்ளை’’ பேசியது போலிருக்கும். ஒரு தடவை தெருவில் கோவில் வாகனமொன்று ஊர்வலம் வருவதைச் சன்னல் வழிபார்த்து, ‘‘இங்கே நம்ம பெரியார் இத்தனை கூறியும் எல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கு இல்லையா?’’ என்றார்.
தற்காலப் படைப்பாளிகளில் அசோகமித்திரன், நகுலன், சா.கந்தசாமி, பிரமிள், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் ஆகியோரின் எழுத்து பற்றி நிறையப் பேசியிருக்கிறார். கடைசியில் தில்லி செல்லுமுன், அவர் வீட்டில் படித்துக்கொண்டிருந்தது ‘‘இருவர்’’ என்ற புத்தகம்.
அவர் எல்லா எழுத்துகளையும் படித்துவிடுவது தெரிந்த விஷயம். ஆனால் மாத நாவல்களையும் விடுவதில்லை என்பது செய்தியாக இருக்கும். யாரையும் தலைக்குமேல் தூக்கி வைத்துப் பேசுவதில்லை. யாரையும் இகழ்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்த்ததுமில்லை. தன்னுடைய விமர்சனப் பாங்கில் எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.
புதுமைப்பித்தன் முதல் பிரபஞ்சன் வரை என்று கூறி இன்னும் நிறைய எழுதவேண்டுமென்று விரும்புவார். பெரியாரைப் பற்றிக் கழகக் கவிஞர் குடியரசுவிடம் மகிழ்ச்சியோடு உரையாடுவார். நீல பத்மநாபனின் ‘‘தலைமுறைகள்’’ நாவல் குறித்தும், பூமணியின் நாவல் குறித்தும் பேசுவார். கடைசியாகக் குறிப்பிட்டுப் பேசியது தமிழவன் நாவல் பற்றி.
வணிகப் பத்திரிகைகளும் சில பக்கங்கள் இலக்கியத் தேடலுக்காக ஒதுக்கினால் நல்லது - எழுதலாம் என்பார் - எழுதியுமிருக்கிறார்.
நாவல், சிறுகதை என்பதெல்லாம் அவருடைய அபிமான விஷயமாகவிருந்தாலும், மிக முக்கியமாக உலகத் தத்துவங்கள் அவருடைய எழுத்துகளில் பரவலாக வெளிப்பட்டதை அறியமுடியும். எந்தக் கூண்டிலும் அவரில்லை என்று தெரிகிறது.
கடைசி ஆண்டுகளில் வைதீக எதிர்ப்பைப் பல கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க இலக்கியமும் வைதீக எதிர்ப்பால் தோன்றியது தான் என்பது ஒன்று. திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் என்ற ஆங்கில நூலில் குறளின் வைதீக எதிர்ப்பு பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சங்க இலக்கியங்கள் பற்றி அவரது கருத்துகள் நிறைய வெளியாகவில்லையேயொழிய கையெழுத்துப் பிரதிகளாக வேண்டியவை இருக்கின்றன. இன்று மிகவும் கஷ்டத்துடன் கையாளப்படுகிற பல இலக்கிய உத்திகளைக் குறுந்தொகைக் கவிஞன் மிக எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறான் என்று சொல்லுவார்.
பிரசுரமாகாவிட்டாலும் பதிப்பிக்காவிட்டாலும் நாள் தோறும் சில பக்கங்கள் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
புதுமைப்பித்தன் போல க.நா.சு.வும் ஒரு agnostic போலும். ஆயினும் சிவம் - சைவம் என்பதில் சில சமயம் ஆர்வம் இருந்திருக்கிறது.
க.நா.சு.விடம் வாக்குவாதம் செய்தல் எளிது. வாதிப்பவர் போக்கிலேயே பேசச்செய்து அவர்களுக்கு வேண்டியதையே தானும் பேசி மேற்கொண்டு ஒன்றிரண்டு கூறுவார். பேசாமல் இருந்து விடுவதும் உண்டு. ஒரு தடவை, ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி’’ என்று மணிவாசகர் சொல்லும்போது, வடநாடு செல்ல முடியவில்லையே என்ற அவரது வருத்தமும் தெரிகிறது என்று எழுதியிருந்தார். ‘‘ஐயா - மணிவாசகரின் தென்னாடு ‘‘திசை’’ சம்பத்தப்பட்டதல்லவே. அது ‘‘தென்’’ என்ற தனிச் சொல்லோடு வந்தது,’’ என்று சொன்னதும் ‘‘இருக்கும் - மொழி பற்றியும் இம்மாதிரி விஷயங்களைத் தெரியவேண்டியது அவசியம்’’ என்று கூறிக் கொண்டார்.
கடைசிக் காலத்தில் இன்றைய எழுத்தாளர் சிலரைப் பற்றிக் கவிதைகளும் எழுதி வைத்திருந்தார் - பிரசுரமாகவில்லை. அதில் ‘‘நகுலன்’’ பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.
தில்லியில் இறுதி நாள்களிலும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ‘‘இங்கே குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது - ஆனால் ரசிக்கும்படி உள்ளது’’ என்று எழுதியிருந்தார். தனக்குப் பிடித்தமான சாப்பாட்டையும் மறக்கவில்லை. அன்றிறவு ‘‘ஹார்லிக்ஸ்’’ கேட்டிருக்கிறார். ‘‘நான் தூங்கி விடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன்’’ என்று கூறினாராம். தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்று சொன்னதாகவும் தகவல்.
க.நா.சு.விற்கு அடுத்த பிறவி பேரில் நம்பிக்கை இல்லை. ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால், தனது கடைசி நாள்களைப் பற்றி ஓர் அருமையான கட்டுரை நமக்குக் கிடைக்கும்படிச் செய்வார்.
க.நா .சு, பற்றிய செய்திகள் ,அவர் வாழ்வு பற்றி சரியாக இதுவரை தெரியவில்லை . இக்கட்டுரை அந்த ஏக்கத்தை கொஞ்சம் குறைக்கிறது.
ReplyDeleteசுரன்