க.நா.சு.100
மலையாள நாவலாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் இன்று வாழும் முக்கியமான படைப்பாளி. செவ்வியல் தன்மை கொண்ட பெரும்நாவல்களை உருவாக்கியவர். தன் சுயசரிதையில் அவரது முதல் நாவலான நிழல்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக Patches of shade என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான மொழியாக்கங்களுக்கு ஒரு போட்டி வைத்தபோது அன்று இளம் எழுத்தாளராக இருந்த சி.ராதாகிருஷ்ணன் தன் நாவலின் பிரதியை அனுப்பியிருந்தார். டெல்லியில் தேர்வுக்குழுவில் என்ன நடந்தது என்று பிறகு அவர் அறிந்தார்.
’ஒரு சாகித்ய அக்காதமி விருதுகூட வாங்காத இவன் யார்?’ என்ற அணுகுமுறை நடுவர்கள் மத்தியில் இருந்தது. அவரது நாவலை எட்டு நடுவர்களில் ஒருவர்கூட வாசித்தே பார்க்கவில்லை. ஆனால் ஒரே ஒரு நடுவர் மட்டும் போட்டிக்காக அளிக்கப்பட்ட முப்பது நாவல்களையும் வாசித்துப்பார்த்தார். வந்தவற்றில் சி.ராதாகிருஷ்ணனின் நாவல்தான் சிறந்தது என்று அவர் நினைத்தார். நடுவர்கள் எல்லாரும் பேசிமுடித்ததும் திட்டவட்டமாகத் தன் கருத்தைச் சொன்னார்.பொதுவாக வங்காளிகள் எல்லாவற்றையும் வங்கத்துக்குக் கொண்டுசெல்லமுயல்வார்கள், பிற எவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவும் மாட்டார்கள். கூட்டாகச் செயல்படுவதிலும் விடாது வாதிடுவதிலும் மன்னர்கள். ஆனால் அந்த நடுவர் தன் முடிவில் திடமாக இருந்தார்
அவரால் தன் கருத்தைத் தர்க்கபூர்வமாக முன்வைத்து வாதிடமுடியவில்லை. அவருக்கு அது தேவையில்லை என்ற எண்ணமிருந்தது. ’நாவல் இதோ இருக்கிறது, படித்துப்பாருங்கள்’ என்று மட்டும் அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். தன் ரசனைமீது மட்டுமல்ல அந்த நடுவர்களின் ரசனைமேலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. கூட்டம் கலைந்தது. மறுநாள் கூடியபோது எட்டு நடுவர்களில் ஆறுபேர் அந்நாவலை மிகச்சிறந்த நாவலாக ஒப்புக்கொண்டார்கள். வங்காளிகள் இருவரும் அந்நாவல் நல்ல படைப்பென்றாலும் ஒரு வங்க நாவல் ஒருபடிமேல் என்று வாதிட்டார்கள். பரிசு சி.ராதாகிருஷ்ணன் நாவலுக்குக் கிடைத்தது. அந்த நடுவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான ஆங்கில எழுத்தாளர், பெயர் கெ.என்.சுப்ரமணியம் என்று சி.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
இந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நாம் அறியும் ஒரு முழுமையான சித்திரம் உள்ளது. க.நா.சு அன்று சி.ராதாகிருஷ்ணன் போல நிறைய வாசிக்கும் முக்கியமான இந்திய எழுத்தாளர்களுக்குக் கூட அறிமுகமில்லாதவராக இருந்தார். தமிழ்நாட்டைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களில் கட்டுரைகள் எழுதுபவர் என்பதே அவரது அடையாளம். அவர் தமிழின் மகத்தான இலக்கிய ஆளுமை என்பதை டெல்லியில் அவரைச்சுற்றி இருந்தவர்கள்கூட உணர்ந்திருக்கவில்லை.அவரது டெல்லிநண்பர்கள் சிலரால் அவர் அந்த நடுவர்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பார். அந்த சிறு ஊதியம் அவருக்கு ஒருமாதகால வாழ்க்கைக்கு உதவுமே என அவர்கள் நினைத்திருப்பார்கள்.
க.நா.சு வின் ஆளுமையும் அந்த நிகழ்ச்சியில் தெரிகிறது. க.நா.சுவுக்கு இலக்கியம் என்பது ஒரு பதவியோ, பணியோ அல்ல. அது அவரது வாழ்க்கைஇலட்சியம். அவரது உபாசனை அது. அதில் சமரசமோ அலட்சியமோ அவருக்குச் சாத்தியமில்லை. பூர்ணமான அர்ப்பணிப்புடன் மட்டுமே அவரால் அதைச்செய்யமுடியும். அதில் சுயநலமோ, தன்னகங்காரமோ ,சாதிமதஇனமொழிப் பிரிவினைகளோ அவருக்குக் கிடையாது. அந்தப்போட்டியில் அவருடைய நண்பர் எழுதிய ஒரு தமிழ்நாவலும் இருந்திருந்தால் அவர் அதன் தரத்தை மட்டுமே கருத்தில்கொண்டிருப்பார். அவரது இலக்கிய ஈடுபாடு என்பது ஆத்திகனின் கடவுள்பக்திபோல.
அவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப்பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப்பாருங்கோ’ என்ற அளவுக்குமேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.
அவருக்கு இலக்கியரசனையை விவாதம்மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கியரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள் , அவன் அகம் உருவாகிவந்த விதம், அவனுடைய உணர்ச்சிநிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக்கொள்ளமுடியாது. இலக்கியரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக்காட்டினால் மட்டுமே போதுமானது.
க.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கியவிமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக்கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கியவரலாற்றுக்குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல்செய்து வந்ததும் அதுவே.
க.நா.சு வின் முக்கியமான சீடர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி ’உலகமெங்கும் இலக்கிய விமர்சகர் என்ற சொல் எந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அர்த்தத்தில் க.நா.சுவை இலக்கிய விமர்சகர் என்று சொல்லமுடியாது, அவரை இலக்கியச் சிபாரிசுக்காரர் என்று சொல்லலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கறாரான கல்வித்துறைசார்ந்த வரையறையில் அப்படிச் சொல்லலாம்தான். ஆனால் அது சரியானது என்று படவில்லை. ஏனென்றால் ஒன்று, உலகம் முழுக்க இலக்கியவிமர்சனத்துக்கு என்று அப்படி ஒரு பொதுவரையறை இல்லை. இரண்டு க.நா.சுவின் அணுகுமுறைக்கு இந்தியமரபில் நீண்ட தொடர்ச்சியும் வேரும் உண்டு.
சுந்தர ராமசாமி எந்த அளவுகோலால் க.நா.சு இலக்கிய விமர்சகர் இல்லை என்கிறாரோ அந்த அளவுகோலால்தான் தமிழில் நமக்கு இலக்கிய விமர்சனமரபு இல்லை என்றும் சொல்கிறார். அதுவும் பொருந்தாத மதிப்பீடே. மேல்நாட்டு இலக்கியவிமர்சனம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் உருவாகி வந்த ஒன்று. இறையியல் விவாதங்களில் இருந்து அதற்கான மொழியும் கலைச்சொற்களும் உருவாகிவந்தன. அதையே நாம் இன்று இலக்கியவிமர்சனம் என்கிறோம். இலக்கிய அனுபவத்தை வகுத்துரைப்பது, இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வாதிடுவது ஆகிய இரண்டும் அதன் அடிப்படைகள். இலக்கியத்தைப் புறவயமாக விவாதிக்கமுடியும் , விவாதிக்கவேண்டும் என்ற நம்பிக்கையே அதன் அடிப்படை. அந்த நம்பிக்கை இந்திய இலக்கியத் தளத்தில் மேலோங்கியிருக்கவில்லை. ஆகவே மேலைநாட்டு இலக்கியவிமர்சனத்தின் பாணியிலான எழுத்துக்கள் நம்மிடம் இல்லை. நம்முடைய இலக்கிய விமர்சன முறையே வேறு.
இந்திய இலக்கிய மரபு இலக்கியத்தில் லட்சணம் சார்ந்தும் ரசம் சார்ந்தும் அணுகியது. லட்சணமே இலக்கணம். நாம் இலக்கியத்தில் புறவயமாக விவாதித்தது இலக்கணத்தைத்தான். ஆனால் இலக்கண அணுகுமுறை குறுகிய வரையறைகளைச் சார்ந்ததாக இருக்கவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற விரிவான பார்வை கொண்டதாக இருந்தது. இலக்கிய ஆக்கத்தில் புறவயமாக வகுத்துக்கொள்ளத்தக்க எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு விவாதிக்கக்கூடியதாக இருந்தது. நம்முடைய இலக்கணவிவாதங்கள் நமது இலக்கியவிமர்சனங்கள் என்று சொல்லலாம். ரசம் சார்ந்த அணுகுமுறை இலக்கியம் உருவாக்கும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியச்சுவை வாசகனின் மனதிலேயே நிகழ்கிறது. ஆகவே அது புறவயமாக விவாதிக்கத்தக்கதல்ல. அதில் சுட்டிக்காட்டப்படுவதற்கு அப்பால் விமர்சகன் எதுவும் செய்வதற்கில்லை. அந்தவகையான ரசனை விமர்சனம் இங்கே வலுவாக இருந்துள்ளது.
நம்முடைய ஆரம்பகட்ட விமர்சகர்களில் பல வகையாலும் இரட்டையர் என்று சொல்லத்தக்கவர்கள் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவும். இவர்கள் இருவரும் மேலே சொல்லப்பட்ட இருவகை விமர்சனமுறைகளை சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். சி.சு.செல்லப்பா எப்போதுமே இலக்கணம்சார்ந்த அணுகுமுறை கொண்டவர். ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக்கொள்வதென்பதே அவரது நோக்கம். ஆனால் க.நா.சு எப்போதுமே அப்படைப்பு உருவாக்கும் சுவையையே முக்கியமாக கவனிக்கிறார். அவரது ரசனைவிமர்சனம் படைப்புகளை நல்ல வாசகனாக நின்று வாசித்தபின் அவை உருவாக்கும் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதாகும். இந்த வழிமுறை இங்கே சங்ககாலம் முதல் இருந்துள்ளது. இந்த அளவுகோலின்படித்தான் பல்லாயிரம் பாடல்களில் இருந்து சிலபாடல்கள் தேந்ந்தெடுக்கப்பட்டு சங்க இலக்கியத் தொகைநூல்கள் உருவாயின. பல்வேறு காவியங்களில் இருந்து ஐம்பெரும்காப்பியங்கள் அடையாளம் காணப்பட்டு முன்வைக்கப்பட்டன. திருக்குறளும் கம்பராமாயணமும் முன்னிறுத்தப்பட்டன.
க.நா.சு பட்டியல்தான் போட்டார் என்பவர்கள் நம்முடைய ஒட்டுமொத்த இலக்கிய மரபே பட்டியல்கள்தான் என்ற உண்மையைக் கவனிப்பதில்லை. சங்க இலக்கியம் என்று நாம் சொல்வது என்ன? பிரம்மாண்டமான ஒரு காலஅளவில் உருவான ஆக்கங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஆக்கங்களின் பட்டியல்கள்தானே? அன்று முதல் நாலாயிர திவ்யப்பிரபந்தம் , சைவத்திருமுறைகள் ஈறாக நம்முடைய இலக்கிய அறிஞர்கள் தொடர்ச்சியாகப் பட்டியல்கள் தானே போட்டிருக்கிறார்கள்? அந்தப்பட்டியல்கள்தானே நல்ல ஆக்கங்களை அடையாளம்காட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தன? அதன் வழியாக நாம் தமிழிலக்கியம் என்று இன்று காணும் இந்த தொடர்ச்சியான பேரியக்கத்தை நிலைநிறுத்தின? சைவத்திருமுறைகளைப் ‘பட்டியலிட்ட’ நம்பியாண்டார் நம்பிக்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப்‘பட்டியலிட்ட’ நாதமுனிகளுக்கும் ஒரு சமகால முகம் என்று நான் க.நா.சுவைச் சொல்வேன். க.நா.சுவின் பட்டியல்களே நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் அமைப்பின் அல்லது இயக்கத்தின் அடித்தளத்தைக் கட்டமைத்தன.
க.நா.சு இலக்கியத்திறனாய்வு என்றபேரில் விரிவான அலசல்களையும் தர்க்கங்களையும் எழுதவில்லை. ஆனால் அவர் நவீனத்தமிழிலக்கியச்சூழலில் திட்டவட்டமாக இலக்கிய அளவுகோல் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தினார். அவரை நாம் மாபெரும் இலக்கிய விமர்சகர் என்று சொல்வது அவர் என்ன எழுதினார் என்பதனால் அல்ல, என்ன சாதித்தார் என்பதனால்தான். இன்று நோக்கும்போது பிரமிக்கத்தக்க கருத்தியல்வெற்றி என்று அதைச் சொல்லத்தோன்றுகிறது. இன்று இடதுசாரிகள், திராவிடசாரிகள், வணிகச்சாரிகள் உட்பட அனேகமாக எல்லா தரப்பினரும் நவீனஇலக்கியமரபு என்று ஒத்துக்கொள்ளும் ஒரு படைப்புவரிசை உள்ளது. அந்த வரிசை க.நா.சு அவரது ரசனைவிமர்சனம் மூலம் அடையாளம் காட்டி அரைநூற்றாண்டுக்காலம் தொடர்ச்சியாக வலியுறுத்தி நிறுவியது. க.நா.சு வெறுமே டைரிதான் எழுதினார் என்றால் அந்த டைரிதான் நவீனத்தமிழிலக்கியம் என்ற அமைப்பாக ஆகியது என்று சொல்லலாம்.
திரும்பவும் அந்த முதல் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். அன்று அந்த நடுவர்குழுவில் இந்திய இலக்கியத்தின் பெருந்தலைகள் பல இருந்தன. க.நா.சு தமிழகத்தில் மதிக்கப்படாமல் கிட்டத்தட்ட துரத்தப்பட்டு டெல்லியில் அடைக்கலம் புகுந்த நிலையில் இருந்தவர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருதே மிக முதிய வயதில்தான் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தன்னுடைய சொந்த ரசனை சார்ந்த ஒரு முடிவை அந்த நடுவர்குழுவின் முடிவாக மிக எளிதாக ஆக்கிவிட்டார். அது எப்படி? க.நா.சுவிடம் இருந்த அந்த அறிவதிகாரம் என்ன? அதுவே இங்கே தமிழ்நாட்டிலும் அவரது சொந்தரசனையை ஒரு தரமான வாசகர்வட்டம் தங்கள் ரசனையாக எடுத்துக்கொள்ள வழிவகுத்தது. அதனூடாகத் தமிழிலக்கியத்தில் ஒரு தெளிவான வாசகத்தரப்பாக அதை நிறுத்தியது.
அதை இப்படிச் சொல்லலாம். படைப்புகளின் முன்னால் க.நா.சு தன்னை ஒரு ‘வெறும்’ வாசகனாக நிறுத்திக்கொண்டார். தனக்கென்று அரசியல்கொள்கைகளோ அழகியல்கோட்பாடுகளோ எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. தான் வாசித்த நூல்களைக்கூடத் தனக்கான அடையாளமாக ஆக்கிக்கொள்ளவில்லை.பல்லாயிரம்நூல்களை வாசித்தபின்னரும் ஒரு புதியவாசகராகவே படைப்புகளின் முன் நின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன்வைத்து வாசித்தார். வாழ்க்கையைப்பற்றியும் மனிதர்களைப்பற்றியும் தன் அனுபவங்கள் அளித்த அறிதல்களையே படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளாகக் கண்டார். இலக்கியப்படைப்பு தனக்களிக்கும் சித்திரத்தைத் தன் கற்பனையைக்கொண்டு விரிவாக்கி முழுமையாக்கினார். ஆகவே அவருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத உலகங்களை எழுதிய நீல பத்மநாபன் ,ஆர்.ஷண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களின் புனைவுலகங்களுக்குள் மிக இயல்பாக நுழைந்து வாழ்ந்தார்.
இலக்கிய ஆக்கம் முன்னிலைப்படுதுவது க.நா.சு போன்ற ஒரு வாசக மனத்தையே. அது தமிழ்மொழிப்பரப்பின், இந்தியசிந்தனைப்பரப்பின்,மானுடப்பண்பாட்டுவெளியின் நுண்ணிய ஓர் அலகு. அங்கே அந்தப்பண்பாட்டுத்தளத்தின் எல்லா விதைகளும் உறங்கும் ஒரு நிலம் அது. அங்கே ஒரு பிடி நீரை மட்டும் படைப்பாளி விட்டால்போதும், விதவிதமான விதைகள் முளைவிட்டு மேலெழும். இந்த அம்சத்தையே இலக்கிய நுண்ணுணர்வு [Literary Sensitivity ] என்ற பொதுச்சொல்லால் குறிப்பிடுறோம். அது எப்படி உருவாகிறது, எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கெல்லாம் எவ்வளவோ கோட்பாடுசார்ந்த விளக்கங்கள் உள்ளன. ஆனால் இலக்கியங்களை அறிவது இந்த அம்சம்தான். அது ஒருவருக்கு அவரது வாழ்க்கையால் உருவாக்கப்படுவது, அவரது ஆளுமையாகவே ஆகிவிடுவது.
ஆகவே க.நா.சுவுக்கு இலக்கியத்தில் கொள்கை, கட்சி சார்ந்த பேதங்களே இருக்கவில்லை. அவரை முற்போக்கு முகாம் முழுவீச்சில் எதிர்த்தபோதுகூட முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலை அவர்தான் அடையாளம் காட்டினார். எவ்வளவோ முற்போக்கு இலக்கியங்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆர்.ஷண்முக சுந்தரம் போல மறக்கப்பட்டுவிட்டவர்களை பற்றித் தொடர்ந்து பேசினார். படைப்பில் அவர் உள்ளே நுழைந்து வாழ இடமிருக்கிறதா என்பதே அவரது அளவுகோலாக இருந்தது. அவரது அளவுகோல் அபூர்வமாகவே பிழைசெய்தது. சிறந்த உதாரணம் ப.சிங்காரம். சிங்காரத்தின் அங்கதத்தை க.நா.சுவால் உள்வாங்கமுடியவில்லை.
‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச்சிறந்த தமிழ்வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வம்காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்த்தகைய மிகச்சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்லவாசகர்களை இலக்கியப்படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்கமுடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சுவுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கிவருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத்தரப்பின் தலைமைக்குரலாக ஒலித்தார். இலக்கியவிமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒருவேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும்கூட அவர் இலக்கியவிமர்சகராகவே கருதப்படுவார்.
க.நா.சு ஒரு தட்டச்சுப்பொறி வைத்திருந்தார். கையில் மடித்துக் கொண்டுசெல்லக்கூடிய சிறியவகை யந்திரம். அதில் தட்டச்சு செய்ய ஒரு தனிப்பயிற்சி தேவை. அவரது ஒரே ஸ்தாவர-ஜங்கம சொத்து அதுதான். நாலைந்து ஜிப்பா வேட்டிகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இதை இடுக்கிக்கொண்டால் அவர் எங்கும் சென்று எவ்வளவுநாளும் தங்கமுடியும். என் நண்பர் மு.கி.சந்தானம் க.நா.சுவின் ரசிகர். அடிக்கடி க.நா.சுவைத் தன் விருந்தினராக தர்மபுரிக்கும் ஓசூருக்கும் வரவழைத்து வீட்டில் தங்கவைத்து உபசரித்திருக்கிறார். காலையில் சிற்றுண்டி, காபி. அதன்பின் இரவுதான் சிற்றுண்டி. சோறு அனேகமாகத் தேவையில்லை. எளிய கொறிக்கும் உணவுகள் போதும். வேறு எந்த வசதிகளும் தேவையில்லை.
க.நா.சு எங்கோ அவர் தன் கட்டுரைகளைத் தட்டச்சு செய்வதாக எழுதிவிட்டார். அதை வாசித்த அன்றைய மார்க்சியப் பேராசானும் ஈழத்தின் பெரும்தனவந்தருமான க.கைலாசபதி, க.நா.சு ஒரு செல்வச்சீமான் என்றும் சொந்தமாகத் தட்டச்சுப்பொறி வைத்திருப்பவர் என்றும் அதற்கான பணம் சி.ஐ.ஏயில் இருந்து அவருக்கு வருவதாகவும் எழுதினார். நம்மூர் மார்க்ஸியர் அரைநூற்றாண்டுக்காலம் அதை திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். க.நா.சு அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டார் என்றாலும் உள்ளூர அவருக்கு வருத்தமிருந்தது. ஆனால் உள்ளும் புறமும் எதையும் பெரிதாக சுமந்தலைபவர் அல்ல. மானசீகமாக அவர் ஒரு நாடோடி. வம்புகளுக்கு எதிர்வினையாற்றும் வழக்கமே அவரிடம் இல்லை.
அதிகாலையில் க.நா.சு எழுந்துவிடுவார். அன்று எழுதவேண்டியதை எழுதிக் காலையிலேயே தபாலில் போட்டுவிட்டால் அவரது வேலைமுடிந்தது. அதன் பின் வாசிப்பும், உலாவுவதும், பேச்சும்தான். அதிகாலையின் அமைதியில் விளக்கின் சிவப்பு ஒளி கனத்த கண்ணாடிச்சில்லுகளில் கனல, சற்றே கூனலிட்டு அமர்ந்து க.நா.சு தட்டச்சு செய்யும் காட்சி தன் நினைவில் என்றும் இருப்பது என்றார் மு.கி.சந்தானம். அந்தத் தட்டச்சுப்பொறி மிகப்பழையது. நாலைந்து எழுத்துக்களுக்கு ஒருமுறை அதன் அச்சுகள் சிக்கிக்கொள்ளும். க.நா.சு அதைப் பொறுமையாகப் பிரித்துவிட்டு மீண்டும் தட்டுவார். அவரது மொழிநடையில் எப்போதும் அந்த தடங்கல் பிரதிபலித்தது என்று நான் சொன்னேன்
‘அந்தத் தட்டச்சுப்பொறி அனேகமாக மூர்மார்க்கெட்டில் இரண்டாம்விலைக்கு வாங்கியதாக இருக்கும்” என்றார் மு.கி.சந்தானம். அந்தக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்து அப்படிக் கொஞ்சம் பழைய கருவிகள் மூர்மார்க்கெட்டுக்கு வரும். நான் சிரித்தபடி “அது மூன்றுநான்கு கைகள் மாறியதாகக் கூட இருக்கலாம். அதற்கு முன் டி.எஸ்.எலியட் வைத்திருந்திருக்கலாம். கூல்ரிட்ஜ் வைத்திருந்திருக்கலாம்’ என்றேன்.
நன்றி: ஜெயமோகன்.காம்
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.