Oct 6, 2012

உ யி ல் -க. நா. சு. கவிதைகள்

  க.நா.சு.100

உ யி ல்

என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள்
வந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம்.
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல் KaNaSu1
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமைக் கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குக் தந்து விடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்து கொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.

யேட்ஸ் என்கிற
ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து
நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்று வட்டத்தில், இந்தியாவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
பட்டு விட்ட கடன்களை யெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாக திருப்பி
விடுகிறேன். தங்களுக்கு தாங்களே வரவு
வைத்துக் கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்து வைத்து உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியாதவர்களுக்குத் திரும்பவும்
தந்து விடுகிறேன். அறிவுக் கலைக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் – வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்பட வேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோவில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்தி வைத்து விடுகிறேன்.

நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக் கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர் காலத்துக்கும்
வாரி அளித்து விடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்து விடுகிறேன். இந்திரன்,
சந்திரன், காற்று, வெளி, நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடக்கட்டும்.
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக் கொள்ளட்டும்.
என் வீணாகிப் போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டு முட்டு சாமான்களை, கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக் கூட பாத்தியமில்லாமல்
தந்து விடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகளை எல்லாம்
கிடைக்கின்றன.

வேறு ஒன்றும்
எனது என்ற சொல் சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக் கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவர் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்து விடுகிறேன் – என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக் கொள்ளட்டும்.

***

ஏன்?


நீ பார்க்கிற அதே உலகத்தைத்தான்
நானும் பார்க்கிறேன்
உன் பார்வை மட்டும்
வேறாக இருக்கிறதே
ஏன்?

***

காசியும் பம்பாயும்

காசியிலும்
கூலிக்கு இன்பம்
தரும் பெண்கள்
உண்டு உண்டு.

பம்பாயிலும்
கூலிக்கு இன்பம்
தராத பெண்கள்
உண்டு உண்டு.

***

இக்காலம்

தேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி
விண்ணென்று நினைத்ததை மண்ணாக்கி
உயர்வென்று தோன்றியதைத் தாழ்வாக்கியது
ஒரு காலம்.

மனிதனேயல்ல, அசுரனேயுண்டு
மண் உண்டு, விண் பொய்,
தாழ்வு உண்டு உயர்வு இல்லவே இல்லை என்பது
இக்காலம்.

***
நாலடி பாய

நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்க நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.

***
மரம்

வனத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து-மத்து ஆடுகிறது
என் நிழல்

வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என் பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன் என் நிழலை மட்டும்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன்-
ஒன்பதாய்ப் பெருகுவேன்.

என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும்-

முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட?

*
நன்றி: புதுக்கவிதைகள்/ க.நா.சு/ ஞானச்சேரி/
Date of Publication: 10th April,1989

நன்றி: ஆப்தீன் பக்கங்கள்

1 comment:

  1. தமிழ்க் கவிதைகளை அடுத்த தளத்துக்கு எடுத்துப்போனவர்களில் பாரதிக்குப் பின் க.நா.சு. மிக முக்கியமானவர்.முதன்மையானவர்.

    காலத்தை வெகு விரைவாக பின் தள்ளி நீண்ட நாட்களுக்கு முன்னாலேயே அதன் சிந்தனைக்கும் வடிவத்துக்கும் புதுமை செய்தவர்.

    1988ல் தஞ்சாவூரில் அவரின் அஞ்சலிக்கூட்டத்தில் பங்கு கொண்டவர்களில் (ப்ரகாஷ், எம்.வி.வி., கரிச்சான்குஞ்சு,ஸ்வாமிநாத ஆத்ரேயன்,டி.எஸ்.கோதண்டராமன், பேராசிரியர்.ராமானுஜம்) நான் வயதில் சிறியவன். எனக்கு என்ன பேச என்று தெரியவில்லை. அவர் எழுதிய உயில் கவிதையை மேடையில் அப்படியே வாசித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

    மிகச் சிறப்பான பங்கைத் தமிழுக்குச் செய்து வரும் உங்களுக்கு நன்றி ராம்.

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.