மழை
வாசம் ததும்ப விட்டுபெய்யுது மழை
முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி
மழை நீர் சொட்ட
சடசடத்து உதிர்க்கிறது
ஞாபக வர்ணங்களை
உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள்
மழைக்கு ஒதுங்கிய வெள்ளாடுகள்
விலுக்கென பறக்கும் வவ்வால்
அதே குளிர்
அதே காற்று
நீதான் இல்லை
ஏதேதோ நேசிக்கக் கற்றுத்தந்த
நேசிகையே
இதோ வானத்தைப் பிரிந்த
மழை வந்து சொல்லுது ஆறுதல்
சொப் சொப்பென
டப்டப்பென
உனக்குமிந்த மழை
அங்கேதும் சொல்லுதா
இந்நேரம்
**மார்ச் 1995ல் வெளிவந்த காத்திருப்பு கவிதை தொகுதியிலிருந்து
கானம்
ம்...ஸ...
விரல்களால் காது மடல்மூடி
கூட்டும் சுருதியில் ரீங்காரம்
கட்டுக்குள் வருகுது சகலமும்
மண்கிளறி உரமிட்டு
விதைவிதைத்து நீர் ஊற்றி
தளிர் கிளைத்து மேலெழும்ப
செடியாகி மரமாகி
பூத்துக் குலுங்கும் ஸ்வரராக விருட்சங்கள்
பாடகி உருகி ராகத்தில் கரைகிறாள்
தோப்பாகிறது அரங்கம்
தோப்பில் திரியும் கவலைகளை
தேர்ந்த இடையனாய் மெல்ல மேய்த்து
வெளியில் நிறுத்திக் கதவைச் சாத்தி
இன்னொரு அற்புதம் செய்கிறாள் அவள்
***அக்டோபர் 2006 ல் வெளிவந்த " சீம்பாலில் அருந்திய நஞ்சு" கவிதை தொகுதியிலிருந்து
உபயோகம்
ரோஜா என்றால் கொள்ளை அழகுமல்லிகையின் மகத்துவம் சொல்லித்தெரிவதில்லை
துளசியின் புனிதம் ஊர் அறியும்
செம்பரத்தை அர்ச்சனைக்கு
ஓம இலை செரிமானத்துக்கு
வில்வ இலை சர்க்கரைக்கு
வெண்டை மூளைக்கு நல்லது
எண்னை கறிக்கு கத்தரிக்காய்
பார்வைக்கு அழகாய் பட்டன் ரோஸ்கள்
எதற்கு இடையில் கொழுத்து செழித்த
இந்த குரோட்டன்ஸ்கள்
எடுத்து எறியிங்கள் என்கிறாள்
சகதர்மிணி
எல்லாவற்றிற்கும் உபயோகத்தை
உணரமுடியுமா நம்மால்
நன்றி: ரவிசுப்ரமணியன் தளம்
கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)