Dec 19, 2012

நுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்

ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன்.

“விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செegbert satchய்வாரு.”

“தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன் ஐயா சொன்னார்னா. நீ போயி மொதல்ல அவர கண்டுனுவா. துட்டு, ஸ்காலர்ஷிப்னா மட்டும் வுடாத வந்து பாருங்க. சர்ச் பக்கம் வந்துராதீங்க.”

”என்னய்யா?”

“இனிமேட்டு தவற மாட்டேங்கயா...”

“ஒழுங்கா ஆலயத்துக்கு வரதுக்கு என்ன? ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில? அடுத்த வாட்டி வரும்போது ஒழுங்கீனமா இருந்தனா நானே சொல்லி ஒம் பையனுக்கு ஸ்காலர்ஷிப்ப கட் பண்ணிருவேன், தெரிதா.”

“சரிங்கய்யா....”

தேவன்பு இவள் பக்கம் திரும்பினான், “ஐயா கேட்டார்னா டவுன் சர்ச்சிக்கி போறதா சொல்லிர்ட்டா?”

இவள் பதில் சொல்லவில்லை. ரவுண்ட் பங்களாவைச் சூழ்ந்திருந்த வேலிக் காத்தான்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் சென்றபின் வராண்டாவில் போய் நின்றான் தேவன்பு தயக்கத்துடன். பையை ஓரமாக வைத்தான். பின்னால் கதவின் மீது லேசாக சாய்ந்து நின்றாள் இவள். ஏரியா சேர்மன் முகம் எழுதிக் கொண்டிருந்த லெட்டர்பாட் மீது கவிழ்ந்திருந்தது.

“என்னா...” ஊழியர் கண்ணடித்தார் தேவன்பைப் பார்த்து. தலையைச் சொறிந்து கொண்டான். “ஐயா வரச்சொன்னீங்க...” சேர்மன் நிமிர்ந்தார். “தோத்தரங்கய்யா”. தோள்களை உயர்த்தி, மார்பைக் குவித்து முன்னால் சரிந்து வணங்கினான்.

“ஐயா நான் சொன்னனங்களெ தேவன்பு, இவந்தாங்க. அவ சலோமி. மகளுங்க.”

முகத்திலிருந்து லுங்கியின் கீழ் தெரிந்த கால்வரை துழாவியது சேர்மன் பார்வை. “நீதானா” மீண்டும் உற்றுப் பார்த்தார் லேசாகத் தலையசைத்தபடி. அவன் சங்கடத்துடன் அசைவது இவளுக்குத் தெரிந்தது. “என்ன வேலையா பாக்ற?”

”பெண்கள் விடுதில தோட்டகாரங்கயா”

“எத்னி வருஷமா?”

“பத்து வருஷங்கயா.” விரல்விட்டு எண்ண ஆரம்பித்தான். “இல்லிங்க... பதிமூணாவதுங்க இந்த கிறிஸ்மஸ் ஐயா...” தலையைச் சொறிந்தான். “கரிக்டா தெரிலங்க..”

“மிஷன்ல வேலை கிடைக்கிறதுக்கு முன்னாலே என்ன செஞ்சிட்டிருந்த?”

”மின்னாடிங்களா...” சிரித்தான். “என்னாலாமோ செஞ்சேங்கயா, எதங்கயா சொல்றது?”

”யோவ், ஐயா என்னா கேக்றாரு, நீ என்னா பதில் சொல்ற? இதுல சிரிப்பு வேற. தென்னேரில இந்தாளு செருப்பு தெச்சிக்கினிருந்தாருங்க.”

“ஆமாங்கய்யா. நம்ம ஐயாதாங்க. யோவ் இதெல்லா வானாய்யா கடவுள் ஒனக்கு வேறோர் வேல வெச்சிக்னிருக்காருனு சொல்லி தேவபுத்ரன் ஐயரு கைல இட்டாந்தாருங்க. அவர் தாங்கயா இந்த வேலைய போட்டுத் தந்தாருங்க.”

“தோட்ட வேலைல இந்தாளு கில்லாடிதாயா. விடுதிய சுத்தி மாமரம், தென்னமரம், பூச்செடிகள்லா வெச்சி ஏதேன் தோட்டம் போல ஆக்கிட்டாங்க. சர்ச்சில்கூட செக்ஸ்டன் எதா தோட்டத்த கவனிக்கிறான். இந்தாளுதா எல்லாத்தியும் பாத்துக்றது.”

“மொட்டக் கடுதாசி எப்பயிருந்துயா எழுத ஆரம்பிச்சிருக்க?”

”ஐயா?”

”அதாயா, பெயர் போடாம எழுதற லெட்டர்.”

”ஐயா?”

“நல்லா நடிக்கறயா. உனை மாதிரி எத்னி பேர பாத்திருப்பேன். ஐயருமாருகல்லாம் உனக்கு கிள்ளுக்கீரைகளாய்ட்டாங்க இல்ல? வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு?”

“ஐயா என்ன என்னாலாமோ சொல்றீங்களே.. எனக்கு எய்தவே தெரியாதுங்கயா..”

“உனக்கு தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட கடிதங்கள் வெறொருத்தர விட்டுத்தாயா எழுதச் சொல்றது வழக்கம். ஒம் பேரென்ன?”

“சலோமி.”

“பிஎட் படிச்சிருக்க. பத்து வருஷத்துக்கு மேலாக இந்த மிஷன் உங்கப்பாவுக்கு வேலை குடுத்திருக்கு. எவ்வளவு நன்றியுணர்ச்சி வேணும்? நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா? ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது? இந்த மாதிரி மனுஷனுக்கு போயி நம்ம ஜேம்ஸ் சிபார்சு பண்ண வராப்ல.”

“தேவன்புதான் செஞ்சானு நம்பமுடிலீங்க...”

“நா பொய் சொல்றேனா?”

“அப்டி சொல்லீங்க...”

”சியோன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல கடை எடுத்தவங்க ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் எனக்கு குடுத்தாங்க. ராஜரத்னம் ஐயரை ஆள்வச்சி அடிச்சேன். பேராயத்ல ஜாதி சண்டைய தூண்டி விடுறேன். இந்த கதைலா உனக்கு யாருய்ய சொன்னாங்க? சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா? இதெல்லாங்கூட பரவால்ல. என்னை பல பொம்பளைகளோட சம்பந்தப்படுத்தி வேற எழுதியிருக்கான், அயோக்ய ராஸ்கல்.”

“ஐயா பைபிள் மேல ஆணையா நா செய்லீங்கயா. நா என்னா பாவஞ் செஞ்சேன்... இப்டிலா ஐயா சொல்றாறே சாமி...” சேர்மன் கால்களை அங்கியோடு கட்டிப்பிடித்துக் கொண்டான்.

“சே எழுந்திரியா, எழுந்திரி... ஜேம்ஸ், எழுப்புய்யா இந்தாள...”

அவன் உடம்பு வேகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.

“தேவன்பு... ஏம்பா....” அவன் முழங்கையைப் பிடித்திழுத்தார் ஊழியர்.

இவள் அவன் முதுகைத் தாங்கி நிறுத்தினாள்.

“இட்டுக்னு போம்மா. பேஜாரா பூட்ச்சி.”

“நீங்கதாங்யா எம்மவளுக்கு வேல போட்டுத் தரணும், எட்டு வருஷமா சும்மாயிருக்கிதுங்யா. சத்யமா கைநாட்டுதாங்கயா வெக்கத் தெரியும். வேறொண்ணும் தெரியாதுங்கயா...”

வாசலுக்கு வெளியே போய் நின்றார் சேர்மன் இடுப்புக் கயிற்றைச் சரிசெய்தபடி. போதகர் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

”வாயா அந்தாண்ட” சபை ஊழியர் இவன் முதுகைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்.

போதகர் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தார்.

“தோத்தரங்கயா.” இவன் கண்களைத் துடைத்துக்கொண்டு கைகூப்பினான் போதகரைப் பார்த்து. ஊழியர் அவனைத் தள்ளிக் கொண்டு பங்களாவின் மறுபுறம் வந்தார்.

“சுத்த பேமானியாக்றிய, ஏங்கைலெகூட இத்த சொல்லலியே நீ?”

“எதங்கயா?”

“மொட்ட கட்தாசிதாயா, காரியமே கெட்டுப்டும் போலிக்கே. காட்வின் ஐயரோட சம்சாரங்கூட அந்த போஸ்ட்டுக்கு ட்ரை பண்ணுது. இந்த நேரத்ல போயி இப்டி செஞ்சிட்டியே.”

“என்னாங்கயா நீங்ககூட சொல்றீங்க. நா எய்தவே இல்லீங்க.”

”பின்ன ஆருய்யா எழுதியிருப்பாங்க?... சரி, சாப்டற நேர்த்ல ஐயா கைல பேசிக்லாம். எத்னி கிலோ கறி எட்தாந்த?”

“ஒன்ற கிலோங்க”

“ரெண்டா எட்திருக்கலாம்ல? பரவால, நீ கெளம்பு, நாழி ஆவ்து. புதினா சட்னி செஞ்சிரு. அதில்லாம சாப்ட மாட்டாரு. வேறென்னயா வாங்கணும்?”

“அதெல்லா நா பாத்துக்கறேங்க.”

“ஏய்யா, ஐயா என்ன வேலைன்னு கேட்டா எல்லாத்தியும் ஒப்பிச்சுருவியா? சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல? சரியான நாட்டுப்புறத்தான்யா” மண்டையில் அடித்துக் கொண்டு சென்றார்.

லெவல் க்ராஸிங் அருகே வந்ததும் நின்றான் தேவன்பு. “மறந்துட்டம் பாத்தியா, கல்லக்கா பைய... நீ வூட்டுக்குப் போம்மா. நா போயி ஐயா கைல பைய குட்துட்டு, விருந்துக்கு வேற ஏற்பாடு பண்ணனும். நீ கெளம்பு.”

“என்னாத்துக்கு நீ சேர்மன் கால்ல வுழுந்த?”

அவன் எதுவும் பேசவில்லை.

“சுகிர்தாம்மாட்டர்ந்து அரிசி திருடிக்னு வந்து பிரியாணி செய்யணுமா? அந்தம்மாவுக்கு தெரிஞ்சா ஒ வேலப்டும்.”

“அதெல்லா ஒண்ணும் ஆவாது. கடவுள் பாத்துக்குவாரு. ஆவட்டும். நீ கெளம்பு. மூணு மணிக்கா செங்கல்பட்டு, மதுராந்தகம்லா போவணும்.”

கருவாடு கழுவிக் கொண்டிருந்த ஞானம், “பாத்தியா? என்ன சொன்னாரு?” வழிந்தோடிய அழுக்குத் தண்ணீரைப் பார்த்தபடி நின்றாள் இவள். “செய்றேனாரா இல்லியா?”

”அப்பா மொட்ட கட்தாசி எய்தியிருக்றதா சேர்மனு சொல்றாரு.”

”மெய்யாலுமா?”

“வண்ட வண்டையா அவர பத்தி எய்தினா எப்டி செய்வாரு?”

“அட இன்னாவா அதுக்கு? அந்தாளு ரொம்ப யோக்யன்றாரா? சாமுவேலு பொண்ணை வெச்சினிருக்காரே தெரியாதா? பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா? வேடலுமேரி இல்ல, அவ கைல கேட்டா புட்டு புட்டு வெப்பா அந்தாளப் பத்தி.”

“அதெல்லா நமக்கெதுக்கு? வேல குடுக்றீங்களா இல்லியானுதான கேக்கணும். அவ்ரு எப்டி போனா என்ன, கடவுளுக்கு கணக்கு குட்துட்டு போறாரு.”

“ஆமாமா நல்லா குட்தாரு. அடச்சே போ அந்தாண்ட” கோழியை விரட்டினாள். “எதா உங்கப்பாவ?”

“ஊழியரு வூட்டாண்ட சேர்மனு, ஐயருக்லா விருந்து செய்றாரு.”

“தொரைகளுக்கு விருந்து போடப்ப்டாரா விருந்து. பேமானி, வூட்டுக்கு எதுனா செய்னா செய்வாரா? ஊழியரு ஐயா, ஊழியரு ஐயானு அந்தாளு வூட்லியே குந்திக்னு கெடக்றாரு.”

இவள் குடிசைக்குள் சென்றாள். எலிசபெத் வரலாறு படித்துக் கொண்டிருந்தாள் சப்தமாக. ப்ரீடாவைக் காணவில்லை. டிரங்க் பெட்டியிலிருந்து 150 ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

“இந்தா. துட்ட எங்க வெக்க?”

“என்னாத்துக்குடி, எனக்கொன்னும் வானாம். பாங்க்ல ஒம்பேர்ல போட்டு வெய்யி. கல்லாணத்துக்கு ஒதவும். கரஸ்பாண்டன் கைல சொல்லி எறநூறா குடுக்கச் சொல்லலாம்ல? நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம்?”

பெட்டியில் மீண்டும் பணத்தை வைத்தாள். ஃப்ரீடா வந்தாள். தலை சீவி யூனிஃபார்ம் அணிவித்தாள். சாப்பிட்டு, தங்கைகள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் சென்றதும் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டாள். ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இருந்த மீனாட்சியின் கடிதத்தைப் பிரித்தாள். “உனக்கு என்றதும் அப்பாவுக்கு பூரண சம்மதம். எதற்கும் ஒருமுறை வீட்டைச் சென்று பார்த்து வருமாறு கூறினார், நர்சரி நடத்த உகந்ததுதானா என்று. ரஞ்சிதம் வீட்டில் சாவி இருக்கிறது. உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் உன்னைக் கடவுள் கைவிட மாட்டார். வாடகையைப் பற்றிக் கவலைப்படாதே. இடத்தைப் பார்த்து உன் முடிவை எழுதவும். காயத்ரி, சதீஷ் சௌக்கியம். காயத்ரி முன்னைவிட படுசுட்டி. அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பணும். ‘சனங்களின் கதை’ வித்தியாசமாக இருந்தது. அனுப்பியதற்கு நன்றி. ‘யாரோ ஒருவனுக்காக’ கொண்டு வருகிறேன். வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. குழந்தைகள் இல்லையென்றால் என்றோ செத்துப் போயிருப்பேன். வீட்டின் மூலையில் சமையலறை படிக்க வேண்டும் போல் உள்ளது. எடுத்து வைக்கவும்.”

இரண்டரைக்கு அவசரமாக வந்தான் தேவன்பு. பிரியாணிப் பொட்டலத்தை ஞானத்திடம் கொடுத்தான். “நீயே துன்னு. அந்தாளு வூட்டுக்குப் போவாம தூக்கம் வராதா ஒனக்கு. பிரியாணியாம், தூ”. மூலையில் போய் விழுந்தது பொட்டலம்.

“என்னா நீ, நா சொல்றது தெரில? என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு? இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா? பொட்டப்பய. ஒனக்லா என்னாத்துக்யா பொஞ்சாதி புள்ளிக...”

“சர்டிபிகேட்லா கூட எட்த்க.”

வெளியில் வந்தனர். ஞானம் பாத்திரங்களை விட்டெறிந்து கொண்டிருந்தாள்.

பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பாலாற்றின் வெற்றுமணல் வெகுதூரம் வரை வெயிலில் வெறிச்சிட்டுத் தெரிந்தது. எப்போதோ ஓடிய தண்ணீர் இழுத்துக் கொண்டு வந்து போட்ட மணல்.

செங்கல்பட்டு ஆஸ்பத்திரியைத் தாண்டி என்.ஜீ.ஓ.காலனிக்கு நடந்தனர். பெஞ்சமின் வேதநாயகம் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தார்.

“என்ன தேவன்பு, என்ன விஷயம்?”

”ஐயா எம்மவ பிஎட் பட்சிருக்காங்க, ராஜம்பேட்டைல வேல ஒண்ணு காலியாக்துங்க. நாளைக்கி மீட்டிங்ல எம்பொண்ணுக்கு நீங்க தாங்க சிபார்சு பண்ணனும்.”

”நீ இஞ்ச வந்து பார்த்து ஒண்ணும் பிரயோஜனமில்ல. என்னைலா பிடிக்காதுல உங்க ஊர்க்காரனுங்களுக்கு. நாவர்கோயில்காரனுவல்லா நாடார்களா? என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது? இப்பம் என்ன செய்றது? சேர்மன் அவருக்கு வேண்டிய ஆளுக்கில்லா சப்போர்ட் பண்ணுவார்... ஐசக்க தெரியுமால உனக்கு?”

“தெரியுங்கயா, கருங்குழிலக்றாருங்க.”

“ஆ, நீ அவர போயி பாரு. ஏரியா செக்ரட்டில அவரு. அப்பம் பொறப்படு. இனி இங்கன நீ நிக்றதப் பார்த்தா ஒனக்கு டேன்ஜர்ல. தாமஸ் வரான். ஏரியா சேர்மன் சித்தப்பா.”

எதிர்வீட்டில் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தவர் இவனை உற்றுப் பார்த்தார்.

மதுராந்தகத்திற்கு பஸ் ஏறினர் வில்ஃபிரட்டைப் பார்ப்பதற்கு. வில்ஃபிரட் வீட்டில் இல்லை. ஸ்கூலுக்குச் சென்றனர்.

அடர்ந்த மீசையைத் தடவிக் கொண்டான் வில்ஃபிரட். “இந்த வேல ஒனக்குதா. சர்தானா? நாடாருக ஆராச்சும் இருந்தாதா பிரச்னை. சேர்மன் அவுங்களுக்குதா சப்போர்ட் பண்ணுவான். இதுல அந்த பிரச்னை இல்ல. என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாயா, செய்யவும் முடியாது.” குவிந்த இருபுற கன்னங்கள், சிரிக்கிறான் என்பதைக் காட்டியது இவளுக்கு.

”காட்வின் ஐயிரு பொஞ்சாதி கூட மனு போட்டிருக்குங்கயா.”

“அவனா, ஒடுக்கப்பட்ட மக்கள் வாரிய இயக்குநர்தானயா. அவன்லா ஒன்னமில்லயா. காததூரம் ஓடுவான் எங்கள கண்டாலே. நீ பொறப்படு. ஏம்மா நாளைக்கி சாயந்திரம் ஒனக்கு ஆர்டர் கையெழுத்தாவ்தா இல்லியானு பாரு, பால் ஜோசப் சார விசாரிச்சேன்னு சொல்லுபா.”

“இதுக்கோசரம் ஏம்பா அலையற? நா பாத்துக்றம்பா.” இவளைப் பார்த்துச் சிரித்தான். முந்தானை இழுத்துவிட்டுக் கொண்டாள் வலப்புற மார்பில்.

“ஐசக் ஐயாவ பாக்கட்டுங்களா?”

“பாரு, பாக்றதுல தப்பில்ல... அந்தாளு ஒரு மாதிபா. வில்ஃபிரட்ட பாத்துட்டல்ல அது போதும். அவன் சும்மா போயி மீசைல கைவெச்சுன்னு நின்னாலே போதும் ஐயிருக நடுங்குவாங்க. இந்த வாட்டி கெடச்ருயா பாப்பாவுக்கு. பாவம் அஞ்சாரு வாட்டி அப்ளை பண்ணி அப்ளை பண்ணி வேஸ்ட்டா போயிரிச்சில்ல...? இந்த சேர்மன தூக்கறதுக்கு இருக்காங்க. வில்ஃபிரட்டுக்கு பயங்கர சப்போர்ட்கிது. நீ ஒண்ணும் கவலப்படாத. வாலிபர் சங்கத்த அமெரிக்கா அனுப்ற விஷயத்ல வேற செமையா மாட்டிக்னிருக்காரு சேர்மன். அடிக்றதுக்கே ஆள் செட் பண்னிக்னிருக்காங்க.”

“அப்டிங்களா?”

“அதனாலதா சொன்னேம்பா கவலப்படாதனு... சரிப்பா பிரியாணி சாப்ட்டு ரொம்ப நாளாவுது. எப்ப வச்சுக்லாம்? பாப்பாவுக்கு சமைக்கத் தெரியுமா?” தலையாட்டினாள் தெரியுமென்று.

“அம்மா இல்லிங்களா?”

“இல்லப்பா. ஊருக்கு போய்ர்ச்சி பசங்களோட. என்ன... அடுத்த சனிக்கிழமை வரட்டா?”

“வாங்கயா. சுகிர்தம்மாகூட நாளைலேர்ந்து லீவ்ல போறாங்க.”

”நல்லதாப் போய்ரிச்சி. ஜாய்சு எப்டிக்றா?”

தேவன்பு தோள்மீது கை போட்டு சில அடிகள் அழைத்துச் சென்று பேசினான். இவளுக்குக் கேட்கவில்லை. பாக்கெட்டிலிருந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான் தேவன்பிடம். திரும்பி வந்தனர்.

“கவலப்படாத, அடுத்த வாரம் ராஜாம்பேட்ட ஸ்கூல்ல கையெழுத்து போட்றா. பாப்பாவுக்கு வயசாய்ட்டெ போவ்தபா. எப்போ கல்யாணம்?” இவள் இடுப்பின் மீது பார்வை நின்றது.

“பூந்தமல்லில தொரசாமி பையன் ஒர்த்தன் வாத்யாராக்றாங்க. இவ வேலைக்கி போய்ட்டா ஒடனே கட்டிக்றேன்றாங்க.”

“அப்ப வச்சிருய்யா. இனி இன்னா? பஸ் வந்திரிச்சி, வரட்டா. சனிகிழம பாக்கலாம்மா. பிரியாணி ரெடி பண்ணு.”

கருங்குழி சர்ச் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் நின்றன. ஒரு வண்டிமாட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின்மீது பதிந்திருந்த நுகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று தெரியவில்லை. அருகில் சென்றாள். சாத்தான் என்றிருந்தது. வண்டி மீதிருந்த பாரங்கள் - வறுமை, வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள், அதே பாரங்களுடன் நடந்த மற்றொரு வண்டி மாட்டின் நடையில் உற்சாகம் தெரிந்தது. நுகத்தின்மீது சிவப்பில் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தை இருந்தது. படத்தின் கீழ் விளிம்பில் மத்தேயு 11:29 வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’

ஐசக் பெருங்கோபத்துடன் பேசினார். “டயசிஸ்ல நீ வேலை பார்க்றனா அது எத்தனையோ பேருக்கு கிடைக்காத சிலாக்கியம். அதுக்கு நீ தகுதி வாய்ந்தவனா இருக்கியா? நியுமிகின் துரை அந்த காலத்ல தென்னேரி வட்டாரத்துல சுவிசேஷ நற்செய்தி பிரசங்கித்ததாலதான் உங்கப்பா கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிஞ்சிச்சி. உனக்கு, அவரோட பக்தி, விசுவாசம், அடக்கம் இதெல்லாம் வச்சிதா இந்த தோட்டக்கார வேல கெடச்சிச்சி, ஆனா நீ கடவுளுக்குப் பயந்து நடக்காம பாவமான வழியில போய்ட்டிருக்க.”

”ஐயா நா ஒரு தப்புஞ் செய்லீங்க.”

“தெரியாதுனு நெனைக்காதயா. உங்க பாஸ்டரேட் எக்ஸ் ட்ரஷரர் பால்ஜோசப்போட சேர்ந்துக்னு ஏரியா சேர்மனுக்கு ஆபாசமான லெட்டர் எழுதியிருக்கியே, அதுக்கு என்ன சொல்ற?”

“சேர்மனு ஐயாகூட அப்டிதா சொன்னாருங்கயா. நா செய்லிங்கயா.”

“சே, சும்மா பொய் சொல்லாதயா சர்ச் வாசல்ல நின்னுக்னு. நீ என்ன ஆளு? இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா? என்னமோ பேசுறியே.. உங்க பாஸ்டரெட்ல ஒரு எலிமண்டரி ஸ்கூல் அப்கிரேட் ஆனது, போர்டிங் வந்தது, ஆஸ்பத்ரில ஜெர்மன் எய்டோட ஐ டிபார்ட்மெண்ட். இதெல்லாம் ஏரியா சேர்மன் இல்லைனா வந்திருக்குமாயா. உண்மையும் உத்தமருமான ஊழியக்காரங்களை அவமானப்படுத்துனா ஆண்டவர் சும்மா இருக்க மாட்டாரு.”

“ஐசக் தம்பி.” ஜிப்பாவில் வயதானவர் நின்றிருந்தார்.

“வாங்க பிரதர். உங்களுக்குதா வெய்ட் பண்றோம்.” உள்ளே சென்றனர் இருவரும்.

இவள் படத்திற்குக் கீழே அமர்ந்தாள் தேவன்புடன். படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரை மணிக்குப் பிறகும் ஐசக் வரவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தாள். மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. முன்வரிசையில் ஐசக் தெரிந்தார்.

”வா போலாம்” தேவன்புடன் கிளம்பினாள். பஸ்ஸில்.... உட்கார்ந்தனர். “ஐசக் ஐயா சொன்னது நெஜமா?”

“இன்னாமா நீகூட நம்ப மாட்டேங்ற. வூட்டுக்கு போயி பைபிள எட்து குடு. சத்யம் வேண்ணா பண்றேன்.”

”ஞானப்பிரகாசத்தண்ட துட்டு எதுக்கு வாங்கன?”

“செலவுக்கில்லன. குட்தாரு.”

”அந்தாளுகூட ஒன்னும் நீ பழக்கம் வெச்சிக்க வானாம்.” அவன் பேசாமலிருந்தான். ஜன்னல் வழியே இவள் வெறித்துப் பார்த்தாள். வெளியே முற்றிலும் இருட்டி விட்டிருந்தது.

பதினோரு மணிக்கு மேல் தூக்கம் வராமல் பிரசங்கி முழுவதும் வாசித்தாள். கால்களை அகலவிரித்து வாயைப் பிளந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள் ஞானம். எலிசபெத், ஃப்ரீடா கருப்பை சிசுக்கள் போல் சுருண்டு கிடந்தனர். சங்கீத புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து தூக்கம் வரும்வரை விடாது வாசித்துக் கொண்டிருந்தாள். உடல் வியர்த்துக் கொண்டேயிருந்தது.

வண்டியை இழுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள். பாதை முழுதும் வேலிக்காத்தான் முட்கள். பாதத்தில் முள்குத்தி ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. எங்கும் பாதத்தின் ரத்தச் சுவடுகள். இழுக்கவே முடியாதா? இதென்ன கழுத்தில்? பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய் கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது கழுத்தை. கடவுளே!... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே! ... வண்டி நகரவே மறுத்தது. கழுத்தில் வலி தாங்க முடியவில்லை. கத்தினாள். சப்த அதிர்வுகள் குரல்வளைக்குள்ளேயே அறுந்து தொங்கின. கயிறு இறுகிக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும்...

விழிப்புத் தட்டியது. தொண்டைமீது அழுத்திக் கொண்டிருந்த பைபிளை எடுத்து வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். வெளியே தேவன்பு கத்திக் கொண்டிருந்தான்.

“குட்காம எங்கயா போய்ருவ.... ரவுண்ட் பங்களா வர தேவல... மூஞ்சிய மூடிக்வியா, ம்?... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி? ... ஐயிரு வேல குட்தீங்க அவம் பையனுக்கு... நீ... உன்ன பத்தி சொல்லட்டா... ஆர்ஆருக்கு எய்தினனு லிஸ்டு குடுக்கட்டா... வானாம் சொல்லிட்டேன்... பாவிய காப்பாத்து.. நா பாவி நா பாவி... சாமி என்ன மன்னிச்ரு...”

“உள்ள வர்ரியா  என்ன?” இவள் தேவன்பைப் பிடித்து இழுத்தாள்.

”ம்? செய்வாருன்றியா... ஆமா. செய்வாரு... அங்கி போட்ருக்காரு... சத்யம் பண்ணுவாரா... ஆமா பைபிள் மேல பைபிள்மேல பண்ணனும்... செய்ல, கர்த்தர் தண்டிப்பார். அங்கி போட்ருக்காரு... ஆமா...”

“சரி. வா.”

”ம்?... ம், எதா உங்கம்மாவ... லா... லா பேசுவா. லா... தேவ்டியா மவ... எதா... ஏ... வெளிய வாடி.. இல்லியா போய்ட்டாளா ஸ்டான்லியாண்ட...”

”வூட்டாண்ட வந்து கத்றிய பேமானி. போ ஒ ஊழியர் கைல போயி கத்து.” இடுப்பில் கைவைத்து நின்றாள் ஞானம். முந்தானை கீழே கிடந்தது.

“ஏய்... என்னாடி... ஸ்டான்லி இல்ல... படுத்ருக்கானா.... வூட்டுக்குள்ள... டேய்...”

“போடா பொட்டப்பயலே.” தோளைப் பிடித்துத் தள்ளினாள். வாழைமரத்தில் மோதிக் கீழே விழுந்தான் தேவன்பு.

இவள் அம்மாவை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை மூடினாள். அழுகையை அடக்க முடியவில்லை. கதவருகே உட்கார்ந்துவிட்டாள். தங்கைகள் விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காலையில் வெளியில் வந்தபோது தேவன்பு குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். லுங்கியை சரியாக இழுத்துவிட்டாள்.

குளித்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றாள். கரஸ்பாண்டன்ட், ஆசிரியைகள் மட்டும் வந்திருந்தனர். நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். ரோட்டரி கிளப் போட்டிக்கு ஐந்தாம் வகுப்பு மல்லிகாவுக்கு Reforestation கட்டுரை எழுதி கரஸ்பாண்டன்டிடம் காண்பித்தாள். இலக்கணப்பிழை இல்லாமைக்குப் பாராட்டினாள். இவளை போயம் நடத்தச் சொல்லி பிற ஆசிரியைகளை அப்சர்வ் பண்ணச் செய்தார். சுகுணா டீச்சர் மட்டும் சிரிப்பது தெரிந்தது. பாரதியார் பிறந்த நாளன்று அண்ணா அரங்கத்தின் கேட் அருகே சுகுணா டீச்சர் பேசியது நினைவுக்கு வந்தது. “திராவிட நாடு ஆதிதிராவிடருக்கே. நம்ம கரஸ்பாண்டன்ட் கூட இடஒதுக்கீடு செய்றாரு, பாரு. அதுக்லா ஃபிகர் வேணும்னு இனிமேட்டு பொறந்தா எஸ்ஸியாத்தாண்டி பொறக்கணும். பிஸி, எஃப்ஸியா பொறக்கவே கூடாது.”

”ரெண்டு மணிக்கா போலாம்மா?”

“ஒண்ணும் போக வானாம்.”

பீடியை வீசிவிட்டு இவளருகில் வந்தான். “போகலைனா எப்டிமா? வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா? ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல?” இவள் எதுவும் பேசவில்லை. “ஏம்மா, இத என்னானு பாரு.” குடிசைக்குள் சென்று ஞானத்துடன் வந்தாள்.

“சலோமி, போய்ட்டுதான் வாம்மா.... ஒவ்வோர் வாட்டியும் இப்டியே ஆவ்துனு பாக்குது புள்ள... நீ வேற சும்மாயில்லாம, புத்திகெட்ட மனுஷன், என்னாத்துக்கு மொட்ட கட்தாசி எய்தின?”

“தப்புதாம்மா...” தலைகுனிந்து நின்றான். “பால் ஜோசப் ஐயா தா சொன்னாரு, இப்படி பயமுறுத்தினாதா வேல கெடைக்கும்னு.”

”அவர கண்டாதா ஐயிரு, சேர்மனுக்கு ஆவாதுனு தெரியும்ல. பின்ன அவரு கைல போயி நின்னா? எத்தியாவது உருப்படியா செய்றியா? இவ்ளோ வருஷமா மிஷன்ல வேல பாக்ற, உங்களுக்கு ஒரு வேல வாங்க இல்ல.”

“இப்ப என்ன செய்றது?”

“ம்? அந்தாளு சேர்மன்தான் எல்லாத்துக்கும். போயி அவர பாத்து மன்னிப்பு கேட்டுக்கோ.”

“அவரு கைலியா.... கோவிச்சுக்குவாரெ...”

“இந்த புத்தி மொதல்ல எங்க போச்சி? வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா? ஏம்மா நீ எனக்கோசரம் போய்வாம்மா... இந்தவாட்டி உறுதியா கெடைக்கும்னு தோணுது...”

ஐந்தரைக்கு ஏரியா சேர்மன் வீட்டை அடைந்தனர். “நீ போயி கண்டுக்னு வா. நா இங்கியே நிக்றேன்.” இவள் கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள்.

சேர்மன் எதிரே தேவன்பு நிற்பது தெரிந்தது ஜன்னல் வழியே. கையாட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஓரமாக வந்த ரிக்ஷாவுக்கு வழிவிட்டு மீண்டும் பார்த்தாள். தேவன்பைக் காணவில்லை. சேர்மன் குனிந்தார். தேவன்பு கீழிருந்து நிமிர்ந்தான். அவன் முதுகை சேர்மன் தட்டிக் கொடுத்தார் சிரித்தபடி.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு இவளிடம் வந்தான் தேவன்பு. “ஐயா மீட்டிங்ல பேசுறேன்னாருமா. மின்னாடியே ஐயாவ பார்த்திருக்கணும், பால் ஜோசப் ஐயா பேச்சக் கேட்டது தப்பா பேய்ரிச்சி. வூட்டுக்கு போலாமா?”

“மீட்டிங் முடிஞ்சப்புறம் போலாம்.”

“சர்தாம்மா.”

பஸ்ஸ்டாண்ட் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு சர்ச் நோக்கி நடந்தனர். இருட்டி விட்டிருந்தது. சாலையில் இடைவிடாத கார், பஸ்களின் இரைச்சல். நின்று கொண்டிருந்த டவுன் பஸ்களைக் கடந்து சர்ச் வளாகத்திற்குள் சென்றனர். பக்கவாட்டில் மூன்றாவது கதவு வாசலில் உட்கார்ந்தனர். சர்ச் மையத்தில் 15, 16 அங்கத்தினர்கள் இருந்தனர். முதல் வரிசையில் ஐசக், ஞானப்பிரகாசம். கடைசி வரிசையில் வில்ஃபிரட், பெஞ்சமின். இரண்டாவது வரிசையில் போதகர்களின் வெண்ணங்கிகள் ஐந்தாறு தெரிந்தன. எல்லோருக்கும் முன்னால் நின்றிருந்தார் ஏரியா சேர்மன். ஆல்டரில் பெரிய மரச்சிலுவை குழல்விளக்குப் பின்னணியில் வெளிச்சக் கீற்றுடன் கம்பீரமாக நின்றது. ஆல்டரின் வெளிவிளிம்பு அரைவட்டத்தில் ‘நானே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்’ என்ற வசனம்.

“வில்ஃபிரட் ஐயா சொன்னது போல டிரான்ஸ்பர்களையும், புதிய நியமனங்களையும் இந்த ஏரியா எலிமென்டரி எஜூகேஷன் கமிட்டியில் வைத்துதாங்க உங்க அப்ரூவல் வாங்கணும். சில சந்தர்ப்பங்கள்ல நாங்களே முடிவெடுத்திருக்கோங்க. ஐயா சொல்வது போல அது தவறுதாங்க. இனிவரும் சந்தர்ப்பங்களில் அப்படி நடக்காது. இந்த அப்பாய்ன்மெண்ட்ட அதனாலதா கமிட்டியில வச்சிருக்கேன். செக்ரட்டரி ஐயா...” ஐசக் ஒரு சிவப்பு ஃபைலைக் கொடுப்பது தெரிந்தது இவளுக்கு.

”ராஜாம்பேட்டை இடத்துக்கு நான்கு பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அதுல ரெண்டு பேர் நான் கிறிஸ்டியன்ஸ்...”

“வீ நீட் நாட் கன்சிடர் தெம்.” ஒரு போதகர் சொன்னார்.

“மற்ற இரண்டுல... ஒன்று தேவன்பு சாமுவேலின் மகள் சலோமிரோஸ், இன்னொன்று ரெவ்ரென்ட் காட்வின் துணைவியார் திருமதி ரஞ்சிதம்... காட்வின் வரலையா?”

“அவர் சம்பந்தப்பட்ட விஷயம்னு வரலீங்கயா.” ஐசக் குரல் கேட்டது.

“அப்படியா..”

“கமிட்டி மெம்பர்ஸ் என்னங்கயா சொல்றீங்க?” கறுப்புக் கயிற்றை இழுத்துவிட்டுக் கொண்டார் சேர்மன்.

”பேராயத்தின் திருச்சபைகள் வளர்ச்சிக்காகவும், சுவிசேஷப் பணிக்காகவும் கடவுளின் பிள்ளையாகிய அருட்திரு காட்வின் ஐயர் அவர்கள் புரிந்திருக்கும் ஊழியம் மிகவும் பாராட்டுக்குரியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மட்டுமல்ல, ஆண்டவரின் ஊழியக்காரர்களைத் தாங்கும் பெரிதான பொறுப்பு சபையாராகிய எங்களுக்கு இருக்கிறது. ஆகவே ரெவரெண்ட் காட்வின் துணைவியாருக்கு இந்த வேலையைக் கொடுப்பதே உத்தமமானடு என்று நான் நினைக்கிறேன்.”

வில்ஃபிரட் எழுந்து நின்றான். “ஐசக் ஐயா சொல்வது விநோதமாக இருக்கு.” அங்கத்தினர்களைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். “மாதந்தோறும் சபையார் காணிக்கையிலிருந்து குறைந்தபட்சம் மூணாயிரமாவது அஸஸ்மென்ட்டா ஒவ்வொரு பாஸ்டரேட்டுக்கும் கொடுக்குதே எதுக்குங்க? ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா?” சேர்மன் முகத்தில் புன்னகையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “அப்படியிருக்கும்போது ஊழியரைத் தாங்குதல் என்ற பிரச்னைய இந்த போஸ்டிங்ல இழுப்பது அர்த்தமற்ற காரியம். கமிட்டியில் எந்த பிரச்சனைக்கும் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுக்கும்படியான திசைதிருப்பும் பேச்சுக்களைக் கண்டிப்பாக சேர்மன் அனுமதிக்கக் கூடாது.” ஐசக் பேச எழுந்தபோது சேர்மன் தோளை அழுத்தி அமரச் செய்தார். “இந்த நேரத்ல மனுதாரர்களுடைய கல்வித்தகுதி, குடும்பப் பொருளாதார நிலைகுறித்த விவரங்களை அறிவிக்கும்படியாக சேர்மன் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன்.”

சேர்மன் ஃபைலைப் புரட்டினார். “ திருமதி ரஞ்சிதம் பிஎஸ்ஸி பிஎட். விருப்பப் பாடங்கள் ஆங்கிலம், ஃபிஸிகல் சயன்ஸ், குமாரி சலோமி ரோஸ் பிஏ., எட். வரலாறு, ஆங்கிலம் விருப்பப் பாடங்கள்.”

”பிஎட் எப்பங்க முடிச்சாங்க?”

“தொன்னூறுல காட்வின் சம்சாரம் முடிச்சிருக்காங்க. சலோமி எண்பத்தி மூணு.”

“காட்வின் ஐயா குடும்பப் பொருளாதார நிலைபற்றி எங்களுக்கு தெரியுங்க. சலோமி தகப்பனார் பற்றி மனுவில் என்ன இருக்கு?”

”அங்கத்தினர் பலருக்கும் அவனைப் பற்றியும் தெரியும். பெண்கள் விடுதில தோட்டக்காரன், தேவபுத்திரன் ஐயர் அவனுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காரு. ஐயா... என்ன?” பால்ராஜ் ஐயர் எழுவதைக் கவனித்தான். “தேவன்பின் பாஸ்டரேட் போதகர் என்கிற காரணத்தால் ஒரு காரியம் சொல்லப் பிரியப்படுகிறேன். மிஷனில் பணியாற்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு பிறரைக் காட்டிலும் சில பிரத்யேகக் கடமைகள் இருக்கு. அவற்றில் தலையாயது ஆவிக்குரிய வாழ்க்கை. திருச்சபைக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இருக்கும் அன்னியோன்யத் தொடர்பு. சகோதரர் தேவன்பு ஆலயத்திற்கு ஒழுங்காக வருவது இல்லை. மேலும் சமீப காலமாக திருச்சபைக்கு விரோதமானவர்களோடு சேர்ந்து கொண்டு காணிக்கை போடுவதைக்கூட நிறுத்தி இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சபைக்கு விரோதமாக போகிறவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” போதகர் யாரென்று இவளுக்குத் தெரியவில்லை. “ஐயருமார்கள் ரொம்ப கோபப்படுறாங்க. ” வில்ஃபிரட் மீசையைத் தடவிக் கொண்டான். ”காணிக்கை, ஆராதனைக்கு வருதல் இதையெல்லாம் அபாய்ண்ட்மென்டுக்கு அடிப்படையா வைக்கிறீங்கனா எத்தனை நியமனங்களுக்கு இதையே அடிப்படையா வச்சி பாரபட்சமில்லாம நடந்திருக்கீங்கனு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயபால் ஐயா சர்ச் பக்கம் வந்து பதினஞ்சி வருஷமாவுது. அவுருக்கு மெடிக்கல் போர்ட்ல முக்கிய போஸ்ட் குடுத்திருக்கீங்க. நம்ம பால்ராஜ் ஐயர் சேகரத்துல ஒரு கிராம சபை ஊழியர் இரவு ஏழுமணி ஆயிட்டா போதையிலேதா இருப்பாரு. லெந்து நாட்களில் சாயந்தர சர்வீஸ்களை போதையோடுதான் நடத்துவாரு. ஐயரால மறுக்க முடியாதுனு எனக்குத் தெரியும்.”

“வில்ஃபிரட் ஐயா அதெல்லாம் வேண்டாங்க. லெட் அஸ் கன்ஃபைன் டு திஸ் அபாய்ன்மென்ட்.”

”அப்ப அவங்க கல்வித் தகுதியை பொருளாதார நிலைய அடிப்படையா வச்சுப் பாருங்க. சலோமிதா செலக்ட் பண்ணப்பட வேண்டியவ. சலோமி தகப்பனாருக்கு முன்னூறு ரூபாய் கூட நம்ம மிஷன் சம்பளமா குடுக்காது. இந்த சம்பளத்ல மகள அவரு படிக்க வெச்சது மிகப் பெரிய அற்புதந்தாங்க. இதுக்கெல்லாம் மேலாக சலோமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ.”

“வில்ஃபிரட் ஐயாவுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். காட்வின் ஐயர், அவர் துணைவியார்லா பிராமணர் இல்லைன்றது.”

“ஐசக் ஐயாவுக்கு அது மட்டுந்தா ஞாபகத்துக்கு வந்திருக்கு. ரெவரண்ட் காட்வின் நம் பேராயத்தின் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் வாரியத்தின்’ இயக்குனர் என்பதும், அவர் நடத்தின பல ஊர்வலங்கள்ல ஐயாவே இந்த வயசுலகூட வேகமா கோஷம் போட்டுக்னு போனார் என்பதும் எப்படியோ மறந்து போயிரிச்சி. பரவால்ல. எந்த குறிக்கோளுக்காக போராடினார்னு யோசிக்கனுங்க. சலோமி கிறிஸ்தவளாய்ட்டதால எஸ்ஸிக்கான அரசாங்க சலுகை பெற முடியுங்களா? சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா? எட்டு வருஷம். காட்வின் ஐயருக்கு சம்பளம், மருத்துவப்படி, கல்விபடி எல்லாம் சேர்த்து ரெண்டாயிரத்துக்கு மேல வரும். பார்ஸனேஜ் வேற போற இடத்ல எல்லாம். வாடகை இல்லை... இவ்வளவு சலுகைகள் சபையார் பணத்லங்க. அத”

“நாங்க சம்பளத்துக்கு வேலை செய்றோம்னு சொல்றீங்களா?”

“இருங்கயா, என்ன தப்பு? கடவுளுக்கு நாங்க தரும் காணிக்கைல தான் உங்க ஊழியத்துக்கான சம்பளமும் அடங்கி இருக்கு? எனவே எவ்வித வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத சலோமிக்கு இந்த வேலையைக் கொடுத்துவிட்டு, இனிவரும் வாய்ப்பை காட்வின் ஐயர் துணைவியாருக்கு அளிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.”

“காட்வின் ஐயர் துணைவியாருக்கே இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்.”

“ஐயருக்கு ஐயருமாருக சப்போர்ட்டா?”

“சபையார் ஊழியர்கள அவமானப்படுத்தறப்போ நாங்க அதைத்தான் செய்ய வேண்டி வரும். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்து வழி நடத்தி வரும் ஏரியா சேர்மன் அவர்களை மிகவும் ஆபாசமான முறையில் வேலை கேட்டும் சலோமியின் தந்தை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.” ஒரு காகிதத்தை உயர்த்திக் காண்பித்தார் ஒரு போதகர். “தம்பி வேணாம்பா.” சேர்மன் அவரிடம் வந்தார் வேகமாக.

“இல்லை அண்ண. இந்த விஷயம் சாதாரணமானதல்ல. சபையாருக்கு முதலில் ஊழியர்களை மதிக்கத் தெரிய வேண்டும்.” ... “சேர்மன் என்ற போர்வையில் திரியும் அந்தி கிறிஸ்துவே... உனக்கெல்லாம் எதற்குடா அங்கி...?”

கடிதம் பாதி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மெம்பர்கள் எழுந்து ஆத்திரத்துடன் கத்தினர். வெற்று நாற்காலிகள் அவர்கள் ஆத்திரத்தை அங்கீகரிப்பது போன்று தெரிந்தது இவளுக்கு. தேவன்பு கைகட்டி, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். வெஸ்ட்ரி அருகே சிலர் வேகமாக வந்து நிற்பது தெரிந்தது.

வில்ஃபிரட் கையைப் பிடித்து தாமஸ் ஐயர் வெளியே கூட்டி வருவதைக் கவனித்தாள். வெஸ்ட்ரி அருகே நின்றவர்கள் இருட்டிலிருந்த மேடைக்கு நடந்தனர். பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார் போதகர். வெஸ்ட்ரி விளக்கொளியில் படித்தான் வில்ஃபிரட். முடித்ததும் போதகர் கை கொடுத்தார். “அடுத்த மாசம் பத்தாந்தேதி ஃப்ளைட். உனக்கு ஸ்ட்ராங்கா ரெக்கமன்ட் பண்ணது சேர்மன்தாம்பா. இல்லனா வுட்ருவியா என்ன? இண்டியன் கிறிஸ்டின் யூத் குறித்து அமெரிக்கன் சர்ச்சஸ்ல நீதாம்பா பேச வேண்டி வரும்.”

“சரிங்க ஐயரே, ரொம்ப தாங்க்ஸ். பசங்க வெய்ட் பண்றாங்க... நீங்க கெளம்புங்க.”

மேடையை நோக்கி நடந்தான் வில்ஃபிரட். போதகர் ஆலயத்திற்குள் வந்தார்.

ஏரியா சேர்மன் எழுந்து நிற்பது தெரிந்தது. “போதகர்களுடைய கோபத்துல, நியாயம் இருந்தாலும், தகப்பனார் செய்த தவறுக்காக மகளை தண்டிக்க நான் பிரியப்படலிங்க. அடுத்த வாய்ப்பு வரும்போது சலோமி ரோசை நாம் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். ஐயர் தீர்மானத்தை எழுதிக்கோங்க. ராஜாம்பேட்டை காலியிடத்தில் திருமதி ரஞ்சிதம் காட்வின் அவர்களை...”

இவள் எழுந்தாள்.

“எதாமா?ஐயரை பாத்துக்னு போலாம்மா?”

“நீ பாத்து, கால்ல வுழுந்து எந்திரிச்சி வா. நா மீனாட்சிய பாக்கணும். ஸ்கூலு வெக்ற விஷயமா. இவுங்க தயவு ஒண்ணும் இனி தேவல்ல எனக்கு.”

சர்ச் வளாக வாசலுக்குள் வேகமாக நடந்தாள் சலோமி. இவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

*****

தட்டச்சு : சென்ஷி

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.