Sep 3, 2013

குள்ளச் சித்தன் சரித்திரம்-(ஒரு பகுதி)– யுவன் சந்திரசேகர்

குள்ளச் சித்தன் சரித்திரம் –  புதினத்திலிருந்து ஒரு பகுதி.

அரங்கதினுள்ளே விசித்திரமான மணம் நிரம்பியிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணக் குழிவுகளில், கனன்ற கங்குகள் மீது ஒரு விதமான மணப்பொடி தூவப்பட்டு, அவற்றிலிருந்து கிளம்பிய புகையில் நறுமணம் நிரம்பியிருந்தது. கூடத்தை நிறைத்தவர்கள் அரசாங்க உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பிரபுக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்.

பெரும் நிசப்தம் நிலவிய அரங்கத்தின் பக்கவாட்டில், இரு ஓரங்களிலும் அலிகள் சிலர் நின்று yuvan_chandrasekarமயிற்பீலியால் ஆன மகத்தான விசிறிகளைப் பதமாக அசைத்துக் கொண்டிருந்தனர். அவையை பாதியாய்ப் பிரித்துப் போடப்பட்ட திரைக்கு பின்னால், வளையல்களின் ஓசையும், குறுஞ்சிரிப்புகளின் மென் சப்தமும்,கிசுகிசுப்பான பேச்சுகளும் கேட்டவாறு இருந்தன. அரங்கத்தின் மேடை, பச்சை திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது.

இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் வணிகர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக காத்திருக்கிறது சபை.

திரை மெல்ல உயர்கிறது. மேடையில் நடுநாயகமாக அவன் உட்கார்திருக்கிறான். அவையின் வலது வரிசையில் முன் ஓரத்தில் அரியாசனம் போன்ற இருக்கையில் வீற்றிருக்கும் பாதுஷாவை நோக்கித் தலை தாழ்த்துகிறான், தன் வலது கையை மார்பில் பதித்தவாறு.

இவனுடைய குரு மிகப்பெரிய இசை மேதையாம். தன் சங்கீதத்தால் மேகங்களைப் பொழிய வைக்கவும், தீபத் திரியில் நெருப்பு ஏற்றும் வல்லவராம். இவனைப் பற்றியும் விசேஷமாக சொன்னார்கள். தன் சித்தம் போன விதமாக நாடோடியாக அலைகிறவனாம் . இந்தத் தலைமுறைப் பாடகர்களில் முதன்மையானவன் என்கிறார்கள்.

கன்றின மிளகாய்ப் பழம் சிவந்திருக்கின்றன அவன் கண்கள். பிடரியில் அலைஅலையாய்ப் புரள்கிறது ஒழுங்குபடுத்தப்படாத கேசம். சித்த சுவாதீனம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். குதப்பிய வெற்றிலைச் சாறு குருதிக் கோடாகக் கடைவாயோரம் வழிகிறது. தனக்கு இடது புறம் இருக்கும், வாயகன்ற பித்தளைப் படிக்கத்தில் உமிழ்கிறான்.

அவனுக்கு பின்னால் இரு புறமும் தூண்கள் போல நின்றிருக்கும் தந்தி வாத்தியங்களில் இருந்து கனத்த ரீங்காரம் எழுகிறது. அவையில் அமைதி படர்கிறது. வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று இசைவாகுவதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. பாடகன் தன் மடியில் கிடத்தியிருக்கும் சிறு வாத்தியத்தில் தன் விரல்களை அலையவிட்டுக் கொண்டிருக்கிறான். இதுவும் தந்தி வாத்தியம் தான். சீரான இடைவெளியில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளுடன் அகலமான சட்டகம் போல இருக்கிறது.

மூன்று கருவிகளும் பொருந்திய தருணத்தில், அவற்றுடன் இழைந்து மிருதுவாக எழுகிறது அவனுடைய குரல்.

மிக மெதுவாக மிக மிக மெதுவாக அரற்ற ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று வேகமெடுக்கிறது. சன்னமான தூறலாகத் தொடங்கி சிறு தாரைகளாகக் கூடி, கனத்த மழைக் கம்பிகள் போல வர்ஷிக்கிறான். அவனது வேகத்துடன் இணையாக சஞ்சரிக்கிறது என் மனம்.

இது நாள் வரை நான் கேட்டறியாத என் ரகசிய உட்குரலை நான் கேட்க உதவும் வண்ணமாக அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தன் குரலை அல்ல, குரலுக்கு பின்னாலுள்ள எதையோ உணர்த்தும் பொருட்டு தான் அவன் பாடுகிறான் என்று தோன்றுகிறது. அவன் முன்னிறுத்தும் அந்தப் பின்புலத்தில் தொற்றிக் கொள்ள என் மனம் மிகவும் சிரமப்படுகிறது. சுனையாக ஊரும் வேட்கையுடன் சுவாசம் ஒடுங்கி ஆழ்கிறேன். மந்தை வசியத்துக்கு ஆளான மதக்கூட்டம் போல அவையோர் கிறங்குகிறார்கள்.

கச்சேரியின் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்னான இடைவெளியில் என் மனம் ஒப்பீட்டில் இறங்குகிறது. என்னுடைய தேசத்தின் சாஸ்திரிய சங்கீதத்துக்கும் இவன் பாடும் சங்கீதத்துக்கும் உள்ள வேறுபாடு புலனாகிறது. எங்களுடைய சங்கீதத்தில் நிசப்தம் என்பது, ஒரு ஒலித் துணுக்குகும் மற்றதுக்கும் உள்ள இடைவெளி. இவனுடைய சங்கீதத்தில், ஓசையின் பின்னுள்ள திரையாக செயல்படுகிறது நிசப்தம். மனதில் அலையாடும் எண்ணக் குவியலைக் புறக்கணிக்கும் பொருட்டே இவர்கள் சங்கீதத்தில் ஆழ்கிறார்கள் என்று படுகிறது.

தாள வாத்தியம் உடன் சேர்கிறது. அவன் இசையின் வேகம் அபரிமிதமாக கூடியிருக்கிறது. முன்னோக்கி நீட்டிய கைகளால் காற்றில் சித்திரம் வரைகிறான்.தன் மனதின் ரகசிய தாழ்வாரங்களில் ஊறும் ஒலித்தாதுக்களின் வரி வடிவத்தை எழுதிக் காட்ட முனைபவன் போல. மானசீக மரம் ஒன்றை இரு கைகளாலும் பற்றி குலுக்கி உலுப்புகிறான். ஒலிச்சிதறல்கள் போல ஒலிப்புள்ளிகள் இறைந்து பரவுகின்றன.

குழைவான அவன் குரலிருந்து அபூர்வமான தனிமை ஒன்று பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கிறது. அது கரும் மேகக் கூடம் போல அரங்க விதானத்தின் கீழ் தொங்குகிறது.அரங்கத்தில் தனிமையின் இருள் சூழ்கிறது. அவனும் நானும் மட்டுமே பகிர்ந்து கொள்ள மீந்த தனிமை வெளியில் இருவருக்குமான பொதுத் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஒலித் தொகுப்பு ஸ்தாபிதமாகி இருக்கிறது. தடமற்ற ஒலிச்சாலையில் அந்தகன் போல் அவன் குரல் பற்றி தொடர்கிறேன்.

அவன் சொல்லி நான் புரிந்து கொள்வது என்றில்லாமல், அவன் சொல்லும் முன்பே எனக்குள் ஒலிக்கும் தனிமையின் காத்திரத்தை வலுவாக உணர்கிறேன்.

அவனுடைய வேகம் நாலாவது ஐந்தாவது ஆறாவது கதியில் பாய்கிறது. எனக்குள் சிந்தனை அடங்கிய நிசப்தவெளி உருவாகிறது. மனம் அசைய மறுக்கிறது. அவன் பாடும் வேகத்தில் என்னுள் அசைந்து கொண்டிருந்த தாளம் நின்று போகிறது. அடி வயிற்றிலிருந்து ஒரு ஏக்கம் பீறிட்டுக் கிளம்புவதை உணர்கிறேன்.

மூச்சுத் திணறத் திணற நிசப்தத்தின் இருட்ச்சிறைச் சுவர்களுக்குள் ஒடுங்குகிறேன். நண்பனே ... என் அருமந்த நண்பனே. இசைஞனே.. என்னை மீட்க வந்த இறையே...

கூடம் வாஹ் ... வாஹ் ... என்று ஆர்ப்பரிக்கிறது பெரும் தேஜஸூடன் மிளிர்ந்த அவன் முகம், ஓசை ஓய்ந்த தருணத்தில் விகாரமாக வெளிறி இருக்கிறது. கரகோஷம் உரத்து எழும்பொது, தன் அந்தரங்கத்தைப் பிறர் அறியத் தந்ததில் அவமானமுற்றவன் போலக் கூசுகிறது அவன் முகம்.

நன்றி: குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர் - கிழக்கு பதிப்பகம்

தேர்வும் தட்டச்சும்: V மணிகண்டன்

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.