பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை அவள் கண்ணில் இடித்தது. பார்வை போய்விட்டது. கண்ணு தெரியாத பாட்டி இந்தத் திருணையைக் காத்துக் கிடந்தாள்.
தாத்தா ரொம்ப காலம் இந்தத் திருணையில்தான் படுத்துக் கிடந்தார். அவர் முதுகுப்புறம் சதையில் புண் வைத்தது. புண்களில் புழு நெளிந்தது. தட்டைப் பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைத் தாத்தா ஓட்டி வந்தார். ஒரு ஓடையில் வண்டி கவிழ்ந்தது. தாத்தாவை இன்னும் ஒரு வண்டியில் தூக்கிக்கொண்டு வந்து இந்த திருணையில்தான் கிடத்தினா ர்கள். உடைந்த எலும்புகள் தாத்தாவுக்குச் சேரவே இல்லை.
அம்மாவையும் இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள். அவள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அப்பா விற்றபொழுது அம்மா சகித்துக் கொண்டாள். அவள் காதில் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்த நகையை அப்பாவிடம் கழற்றிக் கொடுத்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. மூளிக் காதோடு அவள் எப்படி ஊருக்குள் நடப்பாள். மோட்டுவளையில் ஒரு சுருப்பாங்கணியில் தூக்கில் தொங்கிய அம்மையை இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள்.
அப்பா இந்தத் திருணையில்தான் எப்போதும் படுப்பார். குளிர் அன்றைக்கு அதிகமாக இருந்தது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லா மூடிப் படுத்திருந்தார். சீக்கிரம் எழுந்துவிடுகிறவர் அப்பா. அப்பா மேல் வெயில் அடிக்கிறது. அப்பா அப்பா என்று கூப்பிட்டு எழுப்பினேன். அப்பாவைத் தொட்டு உருட்டிப் போர்வையை எடுத்தேன். அப்பா தலை துண்டிக்கப்பட்டு தனியே கிடக்கிறது.
திருணை மழையில் கரைந்து தரையோடு தரையாய் ஆகிவிட்டது.
இடிந்து கிடக்கிற இந்தத் திருணையையும் வீட்டையும் நாங்கள் கெட்டுவோம்.
****
தட்டச்சு : சென்ஷி
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.