மௌனியின் கதையுலகம் – பகுதி 1 படிக்க
மௌனியுடன் கொஞ்ச தூரம் - நூலிலிருந்து…
மௌனியின் கதையுலகம் – பகுதி 2
தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப்பரிமாணம் உண்டு. மற்றவற்றை விட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உள்ள சமூகப்பரிமாணம் அதிகமானது. மேலும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப்பார்வை என்பதைவிட மௌனியின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது – நிகழ்கிறது என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம்பார்க்கலாம். மௌனியின் எழுத்துக்கள் உள்ளார்ந்தமனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன. புதுமைப்பித்தன் தன் எழுத்துக்களின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது அல்ல என்றுகூட ஒரு மார்ஸியவாதி கருதக்கூடும். ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல் மௌனி தன் எழுத்துக்கள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா அல்லவா என்று பரிசீலிக்கப்பட வேண்டும். குறிப்பாக மார்க்ஸீயவாதிகள் அவர் சமூகப்பார்வையற்றவர் என்று ஒரேடியாக அவரைப் பகிஷ்கரித்துள்ளனர்.
மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைதத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை நாம் அவரது கதைகளில் காண முடியும். சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்ளை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசகங்கள் ஒரு பிரக்ஞை பூர்வமாக திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களின் வெளிப்பாட்டின்போது தெறித்து விழும் பார்வைத் துணுக்குகளவை! உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட் தத்துவப்போக்கிலும் ஐக்கியம்கொள்ள வைக்கமுடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்வது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்து கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகைாயன தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியிடிக்க நினைத்தார். தவிர அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில எழுந்தவை. தம் சிறுகதைகளின் வடித்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுதத்துகின்றன. மௌனி முதன்மையாக ஒரு கலைஞர்.
மேலும் மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காணமுடியும். மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப் பரிச்சயமோ படிப்பே இல்லாத போதும்கூட. மரணம் காதல் போதை போன்ற உளவியல் விளைவுகள் பரிமாணங்கள் மிகுந்த அனுவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும்போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது.
மௌனியின் பாத்திரங்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவு்ம் இத்தைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏற்கெனவே கூறியது போல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உளவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம், ஆண்-பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே. மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. ஒரு அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியில் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகப் பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள் அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக்கூடியவை. “எங்கிருந்தோ வந்தான்“ என்ற கதையில் காணப்படும் பின்வரும் வரிகள் –
“.... நடுஇரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே படுத்திருந்தேனோ என்னவோ? பக்கத்து அறையிலிருந்து கேட்டதும் கேட்காததுமாக அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துக்சென்றது போலும்... என்னையே என்னுடைய சவத்தையே நான வெகுதூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு வருத்தம் ஆத்திரம், ஒரு அருவருப்பு ஒருங்கு கூடின…. ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது. மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இறப்பு....? இறப்பு....? அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வர்தை எட்டி எட்டி பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம் அவன் பாடிக்கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லாம் பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை..? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லைக் கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக்கொண்டிருப்பதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?“.
மௌனி மனித அனுபவங்களை அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும் உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்நத உளவியல் தளத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும் போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்தையும் மற்ற சமயங்களில் மங்கலாகிப் போவதையும் காணலாம். இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின் உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப் பார்க்கும் போது மௌனி அனுபவங்களின் புறத்தோற்றத்தில் இறுகிய தன்மையை தகர்த்துவிடுகிறார். தவிர தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழத்துகிறார்.
மௌனி இயற்கையின் பிரும்மாண்டத்திற்கும் மனித வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் வெகுவாக ஆட்பட்டிருந்தார். இரண்டுமே அவரை தீவிரமாக அச்சுறுத்தியிருக்கின்றன. மௌனி தன் அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைக் காண்பதற்கும் விளக்குவதற்கும் உந்துதலாக இயற்கையின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்கொள்கிறார். இயற்கை நிச்சயத்தின் குறியீடாக இருந்தாலும் தன்னளவில் இது பொருளற்றது. மனிதனுடன் உறவு கொள்ளும்போதே அது உயிர்கொள்கிறது. இயற்கையின் நிச்சயமான இருப்பு மனிதன் அல்லாதபோது பொருளற்றுப் போய்விடும் அதன் நிலை. இவற்றை மனித வாழ்வின் நிச்சயமின்மையோடு சேர்த்துப் பார்க்கும்போது மனித வாழ்வின் சிறுமை நமக்குப் புலப்படும். இந்தச் சிறுமையின் பிரக்ஞை நம்மையும் அச்சுறுத்துவது நமக்குப் புரியும்.
இருள், வானம், நட்சத்திரங்கள், மரங்கள், மலைகள், காற்று, வெயில், நிழல் போன்ற இயற்கையின் அம்சங்கள் மௌனியிடம் அலாதியாக உருக்கொள்கின்றன. இவற்றை உள்ளடக்கி மௌனி எழுதியிருக்கும பகுதிகள் விசேஷ அழகுடன் திகழ்கின்றன. சூழ்நிலை உருவாக்கத்திற்காக மட்டுமல்லாது இந்த அம்சங்களை மௌனி வாழ்க்கை பற்றிய தன் தயக்கங்களின் தனது சோகங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் பிரயோகிக்கிறார். விவரங்களின் தொகுப்பில் காணப்படும் நேர்த்தி மௌனியின் குரலை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. உதாரணமாக பிரபஞ்சகானம் என்ற அவரது கதையில் வரும கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம்.
‘சிற்சில சமயம் இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு மற்றும் சிற்சில சமயம் தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது தன்னைவிட காற்று அழுத்தமாகத் தாங்கும் என்றெண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று அவை காற்றில் மிதந்து பிரிந்து உலகையே கவலை மயமாக்கிவிடும். எட்டாத தூரத்தில வானில் புதைந்து கேலிக்கண் சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவனது பாழ்பட்ட பழைய வாழ்க்கை நினைவு எழும். கோபித்து வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகும் என்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும் அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று அவனுக்கு தோன்றும்“.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது மௌனி ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை சார்ந்திருக்கவில்லை என்பது தெரியும். அவரது கதைகளில் துலங்கும் தத்துவம் ஒரு தத்துவ மரபுக் கூற்றின் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் செல்வாக்கின் அடிப்படையிலோ எழவில்லை. இலக்கியப் படைப்புகளில் இது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. தவிர இப்படியொன்று படைப்புக்கு பாதகமாகவும் முடியலாம்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் பார்க்கவேண்டும். மௌனியின் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாக கொண்டவை. காதல் என்பது குடும்பம் திருமணம் போன்ற அமைப்புகளை ஏற்காதவராகவே மௌனி நம் கதைகளில பெரும்பாலும் வெளிப்படுகிறார். (குடும்பத்தேர் என்ற ஒரு கதையில் மட்டும் குடும்பத்தைப பற்றி அவர் கொஞ்சம் ஆர்வத்துடன் பேசுகிறார். ஆனால் இந்த ஒரு கதை அவரது மற்ற கதைகளின் தரத்தை நிர்ணயிக்க போதுமானதல்ல). மௌனியின் முக்கிய அக்கறை வாழ்க்கையின் நிச்சயமின்மையின் பின்னணியில் மனித உறவுகளின் நிலை என்பதாகப் படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனித உறவுகள் ஒரு இலட்சிய நிலையில் இயங்க அல்லது அதை அடைய முடியாது என்பது போன்ற தோற்றத்தைத்தான் மௌனி முன்வைக்கிறார். மனித உறவுகளுக்குரிய இலட்சிய சூழ்நிலையைப் பற்றிய கற்பனை ஏதும்கூட அவரிடம் கிடையாது.
மௌனி ஒரு சநாதனியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு ஆதிக்க வர்கத்தின் அலங்கோலமான பிரதிநிதியாகவே திகழ்ந்தார் என்றும் நமக்கு ஒரு சமயத்தில் தோன்றக்கூடும்.
சமூக சூழ்நிலைகளிலும் மதிப்பீடுகளிலும் விசேஷமான மாற்றங்களை காணாத வரலாற்றுக் கட்டங்களில் சுயமுனைப்போடு மாற்றங்களை வலியுறுத்தும் கலைஞர்கள் தென்படுவதில்லை. அச்சமயத்தில ஒரு கலாச்சாரத்தின் கலைகளை (வெகு சாதாரண மாற்றங்களைக் கண்டாலும்) ஒரு தேக்க நிலையிலேயே பிழைத்திருக்க நேரிடுகிறது. அரசியல் உள்ளடங்கிய புறச்சூழ்நிலைகள் மாறி அதுவரையிருந்த மதிப்பீடுகளுடனும் ரசனை உணர்வுகளுடனும் கூர்மையாக மோதும்போதுதான் ஒரு கலாச்சாரம் துடிப்பான மாற்றங்களை விளைவிக்கிறது. மாறிய நிலைகளின் தாக்கல்களுக்கு கலைகளும் ஆளாக அக்காலத்து பிரச்சனைகளையும் ரசனைகளையும தம் போக்கில் குறைவாகவோ நிறைவாகவோ பிரதிபலிக்கின்றன.
தமிழ் இலக்கிய படைப்புகளில் அரசியல் சிந்தனைகள் கொண்ட பரிமாணங்கள் மிக அழுத்தமாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்ற ஆரம்பித்தன. மௌனி எழுதிய காலத்தில் அரசியல் சமூக வாழ்க்கை துடிப்பற்றதாக இருந்தது என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை. மௌனியின் காலப்பகுதிகளில் செயல்பட்ட பு துமைப்பித்தனின் படைப்புகளைப் பார்க்கும்போது அவர் அரசியலை நேரடியாக பிரதிபலிக்காவிட்டாலும் அரசியல் உணர்வுகள் ரீதியான இலட்சியங்களுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடிய சமூக சித்திரங்களை அவர் படைத்துள்ளார் என்பது புலப்படும். எனவே மௌனிக்கும் அவர் காலத்தில் அரசியல் சமூக நிலைகள் உயிரோட்டமாக இருக்கவில்லை என்ற அடிப்படையில சலுகைகள் ஏதும் தரமுடியாது. ஆனால் கூடவே இன்னும் பாரதியார் புதுமைப்பித்தன் ஆகியோரின் அரசியல தத்துவ நிலைபாடுகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்தவண்ணமே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இது இந்த நூற்றாண்டின் முற்பகுதி துல்லியமான நிலைபாடுகளை கலைஞர்கள் எடுத்துக்கொள்ள முடியாத ஒரு காலமாகவே இருந்த்து என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அரசியல் யதார்த்தங்கள் வாழ்க்கைக்கு தரும் உடனடியான நடைமுறை சமூக அறிவின் ஒளியில் இலக்கியம் படைக்க வேண்டும் என்று மார்க்சிய ஜனநாயக கருத்துகளின் செல்வாக்கின் காரணமாக கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகத்தான் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வளவையும் கூறிய பின்பும் மௌனி, புதுமைபித்தன் பாரதியைப்போல சமூக உணர்வுகளை ஓரளவாவது பிரதிபலித்திருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் இத்தகைய ஒரு சர்ச்சைக்கு முடிவே இல்லை. கலை படைப்புகளிடம் நமக்கிருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளுக்கும் கலைஞனின் தனித்துவமான இயல்புக்கும் உள்ள முரண் இது. இந்த முரணை கலைஞனுக்கு சாதகமாகவோ அல்லது நமக்கு சாதகமாகவோ நாம் நம் நிலைபாட்டிற்கு ஏற்ப விளக்கிக்கொள்ள முடியும்.
மௌனியின் கதையுலகம் காதல் வயப்பட்ட ஒருவனின் குறுகிய உலகம். நேரடியான கமூக பரிமாணங்களை கொண்டிராத மாயத்தோற்றம் அது. காதல வயப்பட்ட ஒருவனின் பார்வையில் உலகம் கொள்ளும் மாயத்தோற்றம் நேரடியான பரத்யட்சமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த தோற்றம் உருவான கற்பனையின் ஊற்றோடு மனித அனுபவம் ஒன்று சம்மந்தப்பட்டுள்ளது என்ற வகையில் அதுவும் பிரத்யட்சத்தின் ஒரு அங்கம்தான் என்று சொல்ல முடியும்.
மௌனியின் கதையுலகத்திற்குரிய நியாயம் இதுதான்.
******
மௌனியுடன் கொஞ்ச தூரம் – வானதி பதிப்பகம் முதல் பதிப்பு- ஏப்ரல் 1992…
தட்டச்சு.: ரமேஷ் கல்யாண்.
தொடர்புள்ள பதிவு:
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.