Mar 10, 2017

மனக்கோட்டை - மௌனி

பத்து வருஷங்களுக்கு முன்பு இவன் பட்டிணத்தில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது , இவன் பெற்றோர்கள் இவனுக்கு கலியாணப் பிரயத்தனங்கள் செய்ததுண்டு. ஒவ்வொரு சமயமும் காரணம் காண முடியாத வகையிலே, எதேச்சை குறுக்கீட்டினால் என அவைகள் எல்லாம் தடைபட்டுவிட்டன. அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். தனக்குக் கிடைத்த உயர் உத்தியோகம் ஒன்றையும் உதறிவிட்டு, தன் கிராமத்தில் சொத்து சுதந்திரத்திடையே காலம் கழித்துக்கொண்டிருந்தான். ஒரு பிள்ளை என்பதினாலும், நெருங்கிய உறவினர்கள் என்பதின்றியும் தனியே இருந்து ஒரு நேர்மையான நட்புறவில் ஏனைய கிராமத்தினரிடை மதிப்புகொண்டு வாழ்ந்து வந்தான்

mouni2

சில சமீப சில வருஷங்களாக, தன் வாழ்க்கை,குறிப்பற்று,போக்கு புரியாமல், பாதையில் நழுவிச் செல்லுவதான தோற்றம் கொள்ளலானான். எதேச்சையென கொள்ளுவதை மனது மறுக்கிறது. தன்னையும், தன் சூழ்நிலைகளையும் , சம்பவங்களையும். ஒருமை கொள்ள வேண்டியிருக்கிறது. சூழ்நிலைக்களன்களில் ஒன்றி, அனுபவம் கொள்ள மனநிலை விரிவும் மாற்றமும் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. உலக வாழ்க்கையே ஒரு பெரிய சூழ்நிலைத் தோற்றமெனக் கொள்ளவேண்டியிருப்பதில், தன் அறிமுகம் சரியென ஒரு போதும் தெரிய முடிகிறதில்லை என்றும் தெளிந்து கொள்ள, வெறித்து கனவென வாழ்க்கையைக் கண்டு நிற்பதான ஒரு எண்ணமும் இவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. மனது வேதனை கொள்ளவதாகிறது, எல்லாம் ஈசுவர சங்கல்பம் என, தன்னை விடுத்துக் கொள்ளும் நம்பிக்கையும் இல்லை. இவன் தோற்றம், நடையுடை பாவனைகள், பேச்சுப் பழக்கங்கள், எல்லாம் சேர்ந்து. ஒரு விநோத விரோத பாவத்தில் கலந்து. இவனைத் தெரியாதவர்களுக்கும்கூட இவனைப் பார்க்குங்கால் , தெரிந்து கொள்ள அவா கொடுப்பதாக இருக்கும். இவ்வகையில், இவன் சிநேகித சித்திபெற்றவன் போலும்.

அடிக்கடி இவன் ஊரைவிட்டு, மாதக் கணக்கில் வெளியூர் போய் வருவது உண்டு. பெரிய பட்டிணங்கள், சிறிய நகரங்கள், க்ஷேத்திரங்கள் மற்றும் பழங்கால சரித்திர சின்னங்கள் என ஒரு வரையறையிலும் அகப்படாது, சித்தன் போக்கெனத் தோன்றும், இவன் பிரயாணங்கள். இதுவரையில் இவ்வகையாக நான்கைந்து தரத்திற்கு மேலாகவே சுற்றியிருக்கிறான். இப்போது, இவன் ஊரை விட்டகன்று நாலைந்து மாதங்களுக்கு மேலாகி விட்டது .திரும்பி பட்டிண மடைந்தவன், ஊரையடையும் ஆவலின்றியே, அங்கு சில நாட்கள் தங்கிப் போகலாமென நினைத்து ஒரு ஹோட்டல் அறையில் தங்கினான்.

தெரிந்த பட்டிணத்தில் , ஊரைச் சுற்றும் அலுவல்கள் இல்லை. எப்போதாவது சிறிது நேரம் , சிறிது தூரம் வெளியே சென்று உலாவி வருவதிலும், ஆங்காங்கே தென்படும் , தன் பழைய சிநேகிதர்களைக் கண்டு சிறிது பேசித் திரும்புவதிலும், பாக்கி அதிக நேரத்தை தன் அறையில் கழிப்பதுமாக இரண்டொரு நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை ,ஒரு வீதியோரமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, பின்னின்று, சிலர் பேசிக்கொண்டு தன்னைக் கடந்து முன் சென்றபோது, அவர்கள் திரும்பி இவனைப்பார்த்தனர். இவனைத் தெரிந்துகொண்டு ஒருவன் ‘என்னப்பா சௌக்கியமா ? - எப்போது’ என்றான். அவர்கள் இவனோடு படித்த நண்பர்கள். மேலும் அவர்கள் தன்னைக் கடக்கும்போது பேசிக்கொண்டு போனதும் தன்னைப் பற்றித்தான் எனவும் இவன் நினைத்தான். ‘-அவன் தானே - இல்லை அவனைப்போல - இல்லை அவனே தான்’ என்பவைகள். ஒவ்வொருவருடைய பேச்சாகவும், ஒருவனுடைய பேச்சாகவும்,மேலும், தானே தன்னைப் பற்றிய சந்தேகத்தில் பேசிக் கொண்டதென, எவ்வகையிலும், அர்த்தம் கொடுக்கும் வகையில் பட்டது, இவனுக்கு வியப்பை கொடுத்தது. இச்சிந்தனைப் போக்குடன் அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு போனான்.

“உன் சிரிப்புகூட மாறி விட்டது” என்றவன் இவனைப்பற்றி ஒன்றும் கேட்காமலே, தங்களைப்பற்றியும், ஏனைய நண்பர்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். மற்றொருவன், ‘நேற்றுகூட நாங்கள் சங்கரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூட வந்து , உன்னைப்பற்றியும் பேசினோம்’ உன்னைப்பார்த்தபோது, நீயோவெனக் கூட சந்தேகித்தோம்.சங்கர் இறந்தது உனக்கு தெரியுமோ? -’ என்றான். சந்தேகத்திலும் தான் அவர்களுக்கு உருவாவது இவனுக்கு விநோதமாகப் பட்டது. அவர்களுக்குதான் புரியுமளவுக்குக்கூட, தனக்கு தன்னைப் புரியவில்லை என்ற எண்ணத்துடன், சங்கர் இறந்தது முன்பே தெரியுமா என்பதின்றியே, ‘ஆம் சங்கர் இறந்து விட்டான்-' என தன் மனதிற்குள்ளே இரைந்து சொல்லுவது போன்று சொன்னவன் தன் சிந்தனைப் போக்கிலே போய்க் கொண்டிருந்தான். இவ்விதம் அவர்களுடன் பேசிக்கொண்டு போனால் தன்னை பைத்தியக்காரத்தனமாக தவறாகப் புரிந்து கொள்ளுவார்கள் என சீக்கிரம் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் விடுதியை அடைந்தான்.

‘ஆம் சங்கர் இறந்து விட்டான்.' இவன் மனது ஒரு தரம் சொல்லிக்கொண்டது. அநேக மாணவர் மத்தியில் இவன் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது, அவனை அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூட படமுடியாத வகையில், அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம் . அவசியமானால் பார்வையில் கொள்ளக்கூடிய விதத்தில், அவன் எங்கேயாவது பகற்கனவு கண்டு கொண்டிருப்பான் என இவன் எண்ணுவான். தான், அவன் எண்ணத்தில் எப்போதும் இருக்காமல் இருக்க முடியாது என்பதும் இவன் எண்ணம் போலும். தனியே, இருவரும் சேர்ந்து இருக்கும்போதுகூட, அதிகமாகப் பேசுவது இல்லை. பரந்த வெளியில் சித்திரம் காண இரண்டொரு கரிக்கிறுக்கல் கோடுளெனத் தோன்றும், அவன் வார்த்தைகள். இவன் மனோ விசாலத்தைப் பொருத்து , அதற்கு உருவம் கொடுக்க தன்னைத் தான் பார்பதற்கான தோற்றம் தான், இவன் கொள்ளவான். படிப்பிலும் மற்றும் எவ்விதத்திலும் இவனுக்கு சரிநிகரானவன். எவ்வளவு இனிமையாக துன்புறுத்தும் நினைவுகள் பாலிய கால பழைய நினைவுகள்!

அவனோ சில வருஷங்கள் படித்துவிட்டு, வேறுவிதப்படிப்பிற்கு வடக்கே சென்று விட்டான். போவதற்கு முன்பு இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டதும் ஞாபகம் வந்தது. அவனுடன் வெகுநாட்கள் கடிதத் தொடர்பு கொண்டிருந்தான். கடைசியாக , அவன் எழுதிய லெட்டருக்கும் இவன் பதில் எழுதி இருக்கிறான். அவனுடைய கடைசிக் கடிதம் வெகு தெளிவாக கண்முன் நின்றது... இவன் மனது மிக வருத்தமடைந்தது . அவர்கள் சொல்லுவதுபோல அவனோடு - அவன் இறப்போடு , தன் இருப்புகூட சந்தேகம் கொள்ளவதும் சரியெனத் தோன்றியது. அவன் இறுதிக் கடிதம் .......'உன்னை , என் பெற்றோர்கள் நன்கறிந்தவர்கள். ஏனைய குடும்பத்தினரும்கூட எப்படி எனத்தான் தெரியவில்லை. ஒரு தரம் , நீ என் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிப் போனாய். அப்போது அவர்கள் உன்னைப் பார்த்து இருக்கலாம். தெரிந்து கொண்டிருக்கலாம். அச்சிறு சந்திப்பு போதுமா, என்பதில் எனக்கு சந்தேகம். அடிக்கடி உன்னைப்பற்றி நான் அவர்களிடம் பேசியிருக்கிறேன். என் கற்பனையில் பிறந்து , அவர்கள் மனதில் நீ வாழ்வது , எவ்விதமோ தெரியவில்லை. எல்லோருமே, உன்னையும் பற்றி பேசுமளவிற்கு , நீ எங்கள் குடும்பத்தினரிடை ஒருவருரினென்ற தோற்றம் நாங்கள் கொண்டிருக்கிறோம். அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும்போது உன்னையும் அழைத்து வருவதாகச் சொல்லி இருக்கிறேன்...அப்போது, நீ வந்தபோது என் கடைசித் தங்கை சுமி, உன்னை கதவிடுக்கிலிருந்து பார்த்தது, உனக்குத் தெரிந்து இருக்க முடியாது. அவள் எப்போதாவது உன்னை குறிக்கும்போது, எவ்வளவு நன்றாக, அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் தெரியுமா ? நான் போகும்போது, உனக்குக் காட்டுகிறேன். நீ அவளுடன் பேசி நான் பார்க்க வேண்டும்... என்னையின்றி நீ போக நேர்ந்தாலும், போய் வா . உன்னைப் பார்த்து அவர்கள் தெரிந்துகொள்ள முடியவிட்டாலும் ,நீ சொன்னால் நிச்சயமாக தெரிந்து கொண்டு விடுவார்கள் ..'

அன்றிரவு அவன் தூக்கம் காண, வெகு நேரமாயிற்று.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், அவன் இல்லாதே, அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாமெனக்கூட, நினைத்தான். அவன் எழுதியபோது, தனியாகப் போய் வருவதற்கும் , இப்போது அவன் இல்லாமல் போவதற்கும், ஏராள வித்தியாசம் இருக்கிறதென்பதை , அவன் அறியாமலில்லை. அவர்கள் இருந்த வீடும், இப்போது இவன் ஹோட்டலுக்குச் சமீபமாகத் தான் இருந்தது .இப்போது அவர்கள் அங்கு இருக்காமலும் இருக்கலாம் என்றும் தோன்றியது .ஒருக்கால் அவர்கள் இருந்தும், அங்குபோய், தனக்கு அவர்களைத் தெரிந்து, அவர்களுக்கு தன்னை அவர்களுக்குத் தன்னைத் தெரியாவிட்டால், எவ்வகையில் தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தமுடியும் என்பதும் சேர்ந்து, அங்குபோகும் எண்ணத்தைக் கைவிட்டான். பட்டிணத்தில், மேலும், தங்கவும் பிடிக்கவில்லை. ஊர்போகும் ஆவலும் இல்லை.

பட்டிணத்திலிருந்து தன்னூர் செல்லும், ரயில் பாதை நடுவில், ஒரு சிற்றூர் இருந்தது. அதனருகில், சரித்திரப் பிரசித்திபெற்ற ஒரு பாழடைந்த மலைக் கோட்டை இருப்பது இவனுக்குத் தெரியும். இதுவரையில், இவன் அதைப் பார்த்தது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் அதன் நினைவு கொண்டு அதைப் பார்க்கலாமென, பட்டிணத்தைவிட்டு காலை வண்டியிலே கிளம்பிவிட்டான்.

இருட்டு நன்றாகக் கண்டுவிட்டது . ரயில் அந்த ஸ்டேஷனை அடையும்போது, மேலும் நாழிகை ஆகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வந்திருந்தால், மாலை நேரத்திலேயே அடைந்து இருக்க முடியும். அன்று ரயில் , மூன்று மணி நேரம் லேட். அந்த ஸ்டேஷனில் இவனைத் தவிர வேறு யாரும் இறங்கியதாகத் தெரியவில்லை, ஸ்டேஷனே இரண்டொரு சிப்பந்திகளைத் தவிரவும், வெளியே பிரயாணிகளுக்காக் காத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் , நான்கைந்து வண்டிகளையும் தவிர , ஜனசஞ்சாரமற்ற தோற்றம் தான் கொடுத்தது . அவன் பார்க்கப் போகுமிடம் ,இப்போது இருட்டிலும்கூட தெரியும் வகைக்கு , ஸ்டேஷனுக்கு சமீபத்தில்தான் இருந்தது. ஆனால், அவன் அன்றிரவு தங்க, மூன்று மைல்களுக்கப்பால் உள்ள, ஒரு சிறு நகரத்தை அடைய வேண்டிருந்தது . அக்குன்றுக் கோட்டை அடியில் ஒரு பெரிய பட்டிணம் ஒரு காலத்தில் இருந்தது . அது காலத்தில் நாகரீகத்திலும், நகர்ந்தும் , தேய்ந்தும், இப்போது இருக்கிட மடைந்திருக்கலாம். அல்லது மறைந்தே, சிறு குடிசைகளாக, மலையடிவாரத்தில், சிதறித் தோற்றம் கொண்டிருக்கலாம். மேற்கு அடி வானத்தில் மறைய விருக்கும் பிறை சந்திரன், அறையிருட்டைத்தான், அழகுடன் உலகிற்கு அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக,சிறு ஒளிகொடுக்க இருந்தன.. ஸ்டேஷனில் இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றிப் பார்வைகொண்டு, நின்றிருந்தான். மங்கிய ஒளித் திரையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக்குன்றுகள் பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர், மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில் , சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித் தெரிந்தனவே போலும் ,உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில் ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும் - மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமீயில் கண்ணுக் கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப் பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி, விட்டுவிட்டு விம்முதலில் காணும் மெளனக் குமுறலின், ஓலமென எல்லாவற்றையும் பார்த்து, சிறிது நின்றிருந்தான்.

ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு, இதுவரையில் பார்க்காத, ஊர்ப்பயணத்தை, இருள் வழியே இப்போது இவனுக்குப் போக நேர்ந்தது. இது இவனுக்கு, ஒரு அதிசய அனுபவமாக இருக்கவும் அமைந்தது. ரயில் பிரயாணம் தாமதப்படாது இருந்து இருந்தால் , இருட்டுக் காணும் முன்பே ஊரை அடைந்து இருப்பான்.

இருப்பக்கமும் மரங்களுடர்ந்த இருள் சாலையில் வண்டி போகும்போது, இவனுக்கு, வண்டியில் போவதாகவே தோன்றவில்லை. காலதேச விவரணத்தைக் குறிக்க, ஆங்காங்கே சாலையோரத்தில் தெரியும் சிறுகுடிசைக் கடைகளின் விளக்கொளிதான் . சில கடைகளில் , தாமதமாக, இரவில் வெகுநேரம் சென்று சாமான்கள் வாங்கியது போன்றே நிசப்த்தில் இரண்டொருவர் தெரிந்தனர். விடாது, தொடர்ந்து கேட்கும், வண்டி, வண்டிக்காரன் , சப்தத்தை கவனிப்பில் கொள்ளமுடியவில்லை. குருட்டுத் தனமான , மெளனவெளித் தேடுதலாகப்பட்டது இப்பிரயாணம். நடுவீதியில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நாய்கள், வண்டி இடிக்குமளவு விழித்தெழக் காத்து, தீடீரென ஊளையிட்டோடுவது , அடிக்கடி இவனுக்கு அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த தெரியாத ஊர்ப்பயணம், இருட்டில், ஒரு விநோத அனுபவமாகத்தான் இவனுக்கு பட்டது.

மறுநாள் காலையில், கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து, எல்லா காரியங்களையும் முடித்துக்கொண்டு, நடுப்பகல் பொழுதிற்கு முன்பே பார்க்கவேண்டியவைகளை பார்த்துவிட்டு திரும்பிவிடலாமென்று, கையில் ஆகாரம் கொண்டு போகாதே கிளம்பினான்.

காலை ஒளியில், சொட்டச்சொட்டக் குளித்து நின்று கண்ணுக்கொட்டிய தூரம் வரையில், அப்பிராந்தியம் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அது ஒரு மலைப் பிரதேசமல்ல. ஒரு பெரிய பொட்டல், வெட்டவெளிப் பிரதேசம். ஆங்காங்கே, சின்னதும் பெரியதுமாக, அநேக குன்றுகள் சிதறித் தெரிந்தன. எட்டிய வெளி வரையில், கட்டான் தரையும், சிலசில இடங்களில் பசும்புல் பூமி, மரம் மட்டைகள், சிறு புதர்கள் ஆகியவைகளும், ஒன்றுகூடி, ஒரு பிரமிப்பை கொடுக்கும்வகையில் தெரிந்தது. தனித்தனியாக ஆடுமாடுகளும், இரண்டொரு மனிதர்கள், எட்டிய வெளியில் மந்தையென ஆடுமாடுகள் அசைவுத் தோற்றம்... ஆகியவைகள் அகண்ட வெளியில் கரையாது தோன்றியது. ஒவ்வொரு நேர ஒளியிலும், பருவகால வித்தியாசத்திலும், பார்ப்பவர் மனநிலையோடு கலந்து, வேவ்வேறு வகைக்குக்காண, எண்ணிலாச் சாயைக் கொண்டு தோற்றம் கொடுக்க இருந்தது, அப்பிராந்தியம். ஒரு உயரமான குன்றின்மீது, இவன் பார்க்க இருக்கும், கோட்டை தெரிந்தது. அதன் அடிவாரத்தை அடைந்தபோது, அவ்விடம் கொஞ்சம் செழுமையான பூமி எனத்தோன்ற , மர பட்டைகளும் , புதர்களும் மண்டியிருந்தன. மரத்திலிருந்த பக்ஷிகளின் குரல், தூரத்திலிருந்து கும்பலாகப் பறந்து வரும் பறவைகள் தன்னைத் தடவி ஸ்பரிசம் கொடுக்கும் காற்று இலைகளூடே சலசலப்பு கொள்ளுவது , எல்லாமுமே இவனுக்கு ஒரு பாழ் பட்டுக் கொண்டிருக்கும் தோற்றத்தைத் தான் கொடுத்தன. குன்றின் அடிவாரத்திலிருந்து,

கோட்டை கொத்தளங்கள், மாளிகை மாடங்கள், கோவில் கோபுரங்கள் எல்லாம் தெரிந்தன. மேலே ஏறி, சாவகாசமாக, எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நடுப்பகல் சரிவு கண்டுவிட்டது. களைப்பில் பசிக் கூடதோன்றவில்லை. சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். கோட்டைக் கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள், எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக்கோட்டையை இது வரையில் பார்க்காதவனானாலும், அதைப்பற்றி அநேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டிருந்தான்.

மறைந்த கோவில் வெங்கலத் தேரையும்,கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும் , பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் ,நிர்மானம் ,ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கல்பனைக்கதைகள், முதலிய என்னவெல்லாமோ அதைப்பற்றி புத்தக ரூபமாகப் படித்தும் தெரிந்து கொண்டவன். இப்போதும் தனக்குத் தெரிந்த தெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்புகூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்ரவர்த்தி, தொலைவிலே எதிர்க்க வரும் எதிரிகளை முறியடிக்க , அவர்கள் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப் பாதைகளை அமைத்தான். ஒரு தரம் அவ்வகை செய்ய தீர்மானித்து, அநேகரை , எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீரதீரபராக்கிரம செயல்கள் புரிந்து ,சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று , மறைய நினைத்தப் போது எல்லாம் மறந்துவிட்டது . அவர்கள் மத்தியிலே அவர்களாகவே ‘ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து , இவனையே அரசனாக்கி , கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும் ,சுரங்கப் பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன் ,பிரும்மஹத்தி தோஷ நிவாரணம்,சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ... தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும் , பிராயசித்தம் காணும் வகைக்கு , பிரும்மஹத்தி செய்ய முடியாததினாலும் , அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவன் -அவன் மகன் இவன் எனக்கொண்டு, கடல் கடந்து வாணிபம் செய்தது... இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது , முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி ,கல்பனைகளுடன், உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும்விட்டது. கோவில்,கோட்டை, குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு,ஒன்றெனத் தோன்ற , இப்பாழ் தோற்றம் இவனெதிரில் மெளனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயே எட்டிய வெளியையும் நாடிப்போகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு அபத்தமாகப் படுகிறது எல்லாம். ஒரு அல்பசித்திகண்டு, தாங்கமுடியாது, மேலே போக வழிகாணாது, தவித்துக் கொந்தளிக்கும் மனோவியக்திகள் , இவ்வகை வெளிவிளக்க ஆர்ப்பாட்டம் , ஊர் கூட்டும் தமுக்கடி தமாஷா போன்று, எவ்வளவு அபத்தமாகப் படுகிறது. எவ்வித பிரமாண்டத் தோற்றமும் ஒரு அல்பசித்தியின், அல்ப பவிஷாசையின், வெளிவிளக்கமாகத்தானே, தோற்றம் கொள்ளுகிறது. இரவின் அந்தகார இருளைக் காண, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா, இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள். எல்லாம் மாறி , மறைய, பாழடையத்தானே தோற்றம் கொள்ளுகிறது. பகல் ஒளியைப் பார்க்க , இவன் கண்கள் கூசின. சிறிது கண்களை மூடினான். யாரோ ஒருவன் ஒரு பெரிய பெட்டியைச் சுமந்து சென்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு,நீ பொட்டிக்குள்ளிருந்தே உன்னைத் தூக்கிக்கொண்டு போனால், சவுகரியமாகுமே என்று சொல்லிக் கொண்டிருந்த போது, எல்லாம் மறைந்தன. ஒரு கேட்காத சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை உடனே திறந்து பார்த்தான். ஒரு காகம் மேலே மரக்கிளையிலிருந்து கரைந்து கொண்டிருந்தது. மாலை நேரம் கண்டு கொண்டிருந்தது, இவனைத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. நடுப்பகலில் அயர்வுக் கண்டு, தூங்கி மாலையில் விழித்ததென்பது , இவ்வளவு நொடிப்பொழுதில் என்று தோன்றியபோது ,அன்று மாலை தானோ,என்பதும் கூட, இவனால் அனுமானிக்க முடியவில்லை . மழை வருமெனத் தோன்றி ,எழுந்து நகரத்தை நோக்கி வேகமாக நடக்கலானான்.

ஊர் எல்லைக்கு வெளியே இருக்கும் பங்களாக்களைக் கடந்து கொண்டிருக்கும்போது, வேகமாக காற்று கிளம்பி சிறு தூரலாக மழை ஆரம்பமாயிற்று. அருகிலிருந்த ஒரு பங்களா வாயிற் கேட்டடியில் சாரல் படாது இருக்க ,சிறிது ஒதுங்கி நின்றிருந்தான்.காற்றில் மழை கலைந்தால், கொஞ்சம் காத்திருந்து , நனையாமல் போகலாம் என இவன் நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது அப்பால் தள்ளி ,உள்ளே நின்ற அப்பங்களா வரண்டா தூணடியில், இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று , இவனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் உணர்ந்தான். காற்று ஓய்ந்து,மழை வலுக்க ஆரம்பித்தது . மறு முறை உள் பக்கம் பார்த்தான். அவள் அப்படியே நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அங்கியிருப்பது ஒருவிதத்திலும் இவனுக்குப் பொருத்தமாகப் படவில்லை . நின்றாலும் நனையத்தான் வேண்டுமெனத் தோன்றியது. இனி நிற்பதும் பிடிக்கவில்லை என, நனைத்துகொண்டே நடக்க எண்ணியவனுக்கு , தன் அருகில் ஒருவன், கையில் குடையுடன் தன்னை உள்ளே அழைத்து வரண்டாவில் வந்து இருக்கும்படி சொன்னதும், இவன் அங்கு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதும் ,ஒரு கனவு நிகழ்ச்சியைத்தான் கொள்ளும்படிஇருந்தது. வெளியே மப்பு மந்தாரத்திலும் , வெளிச்சம் இருந்தது.பங்களாவுக்குள் , விளக்கு போடுமளவிற்கு இருட்டு கண்டிருந்தது.வாயிற்படி கதவருகில் நின்று நிழலென ,தன்னை அவள் கவனித்தது தெரிந்தது. உடனே ,வாயில் விளக்கும் , உள் வெளிச்சமும் போடப்பட்டவுடன், ஒளி நடுவில் திடுக்கிட்டான், மறுபடியும் வாயில்படி பக்கம் பார்த்தான்.அவள் அங்கு நின்றிக்கவில்லை. உள்ளே சென்றுவிட்டாள்.அந்த பங்களாவுக்குள் ஒரு கார் வந்து நின்றது. அதனின்றும் உயர்ந்த உத்தியோகஸ்தரெனப்படும் ஒருவர் இறங்கி, ஒரு சேவகன் தொடர உள்ளே சென்றார். இவனைக் கடக்கும் போது பார்த்தும் பார்க்காத பாவனையில் மறைந்து விட்டார். அவள் கணவனென்பது இவனுக்குத் தெரிந்துவிட்டது. போகும்,‘தன்னை யார்'என்ன விசேஷமெனக் கேட்டிருந்தால் , அப்போது தன்னை எவ்விதம் அறிமுகப்படுத்தியிருக்க முடியும், என்பது இவனுக்கு விளங்கவில்லை. அவர் தன்னைக் கேட்காது போனதில் ,சிறிது நிம்மதி அடைந்தும் , இனியும் தனக்கு அவ்வகை நேராது இருக்க முடியுமா,எ ன்பது புரியாமலும் கூட , அங்கு விட்டு அகல முடியாமல் ,நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.ஏதோ, ஒரு தவறிய சூழ்நிலையில் சிக்கித்தவிப்பதான எண்ணம் இவன் மனம் கொண்டது.

சிறிது நேரத்தில் ,அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார்......................... ‘மன்னிக்க வேண்டும், ஸார், கவனிக்கவில்லை. உள்ளே உட்கார்ந்து பேசலாமே...'என்று அவனை அழைத்துப் போகவும் , ஹாலில் நாற்காலியில் ,ஒருவர் முன் ஒருவராக உட்கார்ந்து கொண்டனர். முதலில் கண்ட நிலைக்கு , தற்போது கொஞ்சம் மாறுதலாகத் தோன்றினாலும் , மனது , ஒரே விதமாக இவனுக்கு வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது. தன்னை யாரென அறிமுகப் படுத்திக் கொள்ள முடியாத ,தன் நிலைமையைத் தான் ,வேதனைகளெனக் கண்டு கொண்டிருந்தான். ஒரு பரிசாகரன் , இரண்டு கப் காப்பி கொணர்ந்து வைக்க ,இருவரும் பருகினர். அவருக்குப் பின்னால் , தன் பார்வையில் அவள் பட எப்போது வந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை அத்தம்பதிகள் இருவர் முகத்திலும் ,ஒரு சோகக்களை படர்ந்து இருப்பதை, இவன் பார்த்தான் . தான் அவர்களுக்கு யாரெனப்படுகிறோம்,என்பதும் புரியவில்லை.

‘......உங்களுக்கு , எங்களைத் தெரியவில்லை' எனக் கொண்டு ,‘நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் , என்பது புரியவில்லை'என்றது இவனுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. மேலும் இவன் திகைப்பை நீடிக்கா வண்ணம் தடுப்பதே போன்று ‘உங்களுக்கு ,உங்கள் நண்பன் , சங்கரை நினைவிருக்கிறது, என்று நினைக்கிறேன் என்று சொல்லி சிறிது நிறுத்தினார்'. இவனுக்கு எல்லாமே, ஒரு நொடியில் புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு மதிப்பும்,கொண்டான்.‘...........ஆமாம் சரிதான்' என்று பேசியதும், இவனுக்கு சரியாகப் பேச ஆரம்பித்தார்.அதற்கு முன், அவர் தன் மனைவியை சிறிது உள்ளே போய் வரச்சொன்னார்.

‘நீங்கள் சங்கர் நண்பர் சேகர் தான் என்று எங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்கும்,எங்களைத் தெரிகிறது ....ஆனால் ,இக்குடும்ப சம்பவங்கள் சில, உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.....உங்களுக்கும் தெரியவேண்டுமென்ற அவசியமுணர்ந்து,நான் சொல்லுகிறேன்.........’

ஆமாம் சங்கர் இறந்து விட்டான், என்றவன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

‘ஆமாம் சங்கர் இறந்துவிட்டான்.....எப்படி என்றும்,உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம் .இருந்தாலும் நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமுணர்ந்து சொல்லுகிறேன். உங்கள் துக்கம் மேலும், அதிகமாகலாம் ஆனால் உங்களிடம் சொல்லுவதில் ,என் மனம் சிறிது ஆறுதல் கொள்ளும் .அதற்காக மன்னியுங்கள்’. சிறிது நிறுத்தி மேலும் பேசலானார்.

‘ஆமாம் , ஆயிரம் தடவை , நான் சொல்லி ஆறவேண்டிய துக்கம் அது. சுசிக்கோ, ஓரு தரம்கூட நினைக்க முடியாத, தாங்க முடியாத துக்கம். அவள் இப்போது இங்கில்லை. எங்கள் பிரியம், சங்கரிடம் எவ்வளவு எனத் தெரியவேண்டுமானால், ஒருக்கால் ,அது அவன் உங்களிடம் கொண்ட அளவு, என்று வேணுமானால் சொல்லலாம். ஏதோ விவரமற்று , அர்த்தமற்ற புதிர் போட இவ்வளவு சப்பை கட்டி பேசிக் கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணமாட்டீர்கள் . நான் சொல்லுவதற்கு ,நிதானம் கொள்ள,தவிப்பின் வெளியீடுதான், இவ்வகை பேச்சின் தடுமாட்டம், மன்னிக்கவேண்டும் ....?’ சிறிது நிறுத்தி மேலும் தொடர்ந்தார்.

‘...சரி சங்கர் இறந்தான். காலம் போனாலும் , அந்த சம்பவம் , மனவெளியில் மாறாது நிலைத்துவிட்டது. அதை மறுக்குமளவுக்கு இருக்கும் வகையில் , மேலும் கடுமையாக பாதிக்க, அத்துக்கம், மாறாது ஸ்திரமென நிலைத்துவிட்டது அவன் இறந்த செய்தித்தந்தி அவன் தகப்பனாருக்கு....அவன் இறுதிக் கடன்களை , அங்கேயே அவர்களே செய்யும்படி,இவர் பதில் தந்தி, வடக்கே, கண்கணாதேசத்தில், ஒரு சுரங்க கம்பெனியில்,ஒரு உயர்பதவி வகித்தவன், பூமிக்கடியில் இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தை பார்வையிடும் போது , ஏதோ விஷம் தீண்டி இறந்தான். மேலே கொண்டு வரும் அளவிற்கு, அவன் உயிர், உடம்பில் தரிக்கவில்லை. அவனைப் பார்ப்பதில் தான் அவன் ஆத்மா சாந்தியடையப் போகிறதா? தகப்பனார் பதில் தந்திதான் அதற்குப் பதில். பிறகு வெகுநாள் கழித்து அவன் சாமான்கள் வந்து சேர்ந்தன.....அவன் இறப்பை மறுக்குமளவுக்கு இல்லை? நீங்கள் இப்போது வந்தீர்கள் .உங்களை இந்த குடும்பத்தில் ஒருவராகத்தான் நாங்கள் கருதிக்கொண்டு இருக்கிறோம்.உங்களைப் பற்றி அவன் சொல்வதிலிருந்து, எங்களுக்கு, நன்றாகத் தெரியும்’......

‘எல்லோரிடமும் அவன் பிரியமாகப் பழகினாலும் அவன் கடைசித் தங்கை சுமியிடம்,அதிகப் பிரியம் போலும். அவன் இறந்தது,அவளை வெகுவாகப் பாதிக்க ஆரம்பித்தது.கடைசியாக, அவன் எழுதிய லெட்டர் அவளுக்குத்தான்... அவன் எப்போது வருகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் ,நாங்கள் எல்லோரும் அவளைச் சுற்றிச்சூழ்ந்து , அவளைப் படிக்க வொட்டாது செய்து கொண்டிருந்தோம். வெகு நேரமாயிற்று அவளுக்கு அதைப்படித்து முடிக்க. அவள் முகத்தை அப்போது பார்க்கவேண்டும்.! வர்ணிக்கக்கூடாது-முடியாது. படித்து முடித்தவுடன் லெட்டரை என்னிடம்தான் கொடுத்தாள். நான் அதை இரைந்து படித்தது,எல்லோரும் கேட்டது ...... அப்போது எங்களிடம் கண்ட குதூகலத்தில் , வாழ்க்கையே போய்க்கொண்டிருந்தால்... ‘சீக்கிரம் லீவு எடுத்துக் கொண்டு எல்லோரையும் பார்க்க வருவதாகவும் ,வரும்போது, உங்களையும் அநேகமாக ,நிச்சயமாக அழைத்துக் கொண்டு வருவதாயும் ... எழுதியிருந்தது. எல்லோருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். அவன் வருகை ஆவலில் ,உங்கள் வருகையும் கலந்து ,நாங்கள் வெகு ஆவலாக அந்த நாளை எதிர்பார்க்கும் ஆவல்தான் அது.உலகில் கொடுத்து வைப்பது, கொஞ்சநாள் தான் போலும்... சில நாட்சென்று , அந்த தந்தியும் வந்தது .எங்கள் நிலைமையை அப்போது , நீங்கள் உணர முடியும். அவன் இறப்பு, மறுக்குமளவிற்கு மீறியே போகிறது .அதிர்ந்துபோன, எங்களை துக்கம் பீடிக்க கொஞ்சம் கொஞ்சமாக வந்தது.

உள்ளே சென்றவள் , எப்போது திரும்பிவந்து அவன் பின் நின்றாள் என்பது , இவனுக்குத் தெரியவில்லை. கீழே தொங்கிய தலையுடன் , கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘....சங்கர் இறந்ததில் சுமி கலியாணப் பிரயத்தினங்கள் தடைப்பட்டது... பிறகு, அவளும் கன்னியாகவே போய் விட்டாள். தன் தமயன் இறப்பை, கொஞ்சநாள் வரையிலும் அவள் மனது ஒப்புக்கொள்ளவில்லை போலும். அவன் வருகையை எதிர்பார்த்து நிற்பவள்போன்று,வெகு வசீகரத் தோற்றம் கொண்டிருந்தாள். ஆயினும் உள்ளே குடிக்கொண்ட ஒரு ஏக்கம், வெளிக்கிளம்பியப்படி, காலத்தை எதிர்பார்த்திருந்ததுபோலும் , அப்போது அவள் தோற்றம் ,வெகு வசீகரமான தோற்றம் ,எங்கள் மனதிற்கு ,ஒரு அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்தது.அவள் ஒரு பயங்கரத்தின் கவர்ச்சியாகத்தான் தோன்றினாள். அதிகமாக ஒருவரோடும்,பேசுவதில்லை. ஆனால் பேசாது இருந்தாகவும் சொல்ல முடியாது. வெகு ஆழ்ந்துதொனிக்குமாறு ,அவ்வப்போது,ஏதாவது திடுக்கிடப் பேசுவாள். என்னை ‘அண்ணா -அண்ணா’யென அழைத்து கொஞ்சம் அதிகமாகப் பேசுவாள் . பிறகு சிறிது சிறிதாக, அவள் மனம் ,சஞ்சலிக்க ஆரம்பித்தது. அப்போது அவளைப் பார்க்கும்போது மனதிற்கு வருத்தம் தோன்றுவதில்லை ...பார்த்து , பார்க்க முடியாது ,பெருமூச்சுடன் திரும்பிப்போவதுதான் முடியும்.... அவளும் போய் விட்டாள். அவறைத் தேடி..’ அவர் பேசி முடித்துவிட்டார். இவனைப் பார்த்தும் , எங்கெங்கேயும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லையற்ற துக்கம் , அவர் நிதானப் பேச்சில் , வெகு தெளிவாகத் தெரிந்தது. சிறிதுநேர மெளனத்தில் , அவர் அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் தத்தம் எண்ணப்போக்கில் போய்க்கொண்டிருக்க,அவகாசமிருந்தது.

‘நீங்கள் அப்போது வந்து பார்த்திருந்தால் .........’ என்று ஆரம்பித்தவரை , இவன் இடைமறித்து ,

‘அப்படி நேர்ந்து இருக்க முடியாது’- என்று சொன்னான்.

‘என்ன - இப்போது வந்தது போல ,...’ எனத் திடுக்கிட அவர் கேட்டார்.

‘எப்படி முடியும்,இப்போது போல,அப்போது பார்ப்பது..’என்றவன் மேலும்,

‘அப்போது சங்கர் இறந்து விட்டான் . அப்போது எனக்கு ......எவ்வளவு தெரிந்து இருந்தும் அவன் இல்லாது நான் வந்தால் நீங்கள் தெரிந்து கொண்டிருக்க முடியாது .இது தெரியவில்லை உங்களுக்கு -?’என்றான் இவன். வெகு நிதானமாகவே, கொஞ்சம் அதிகமாகவும் பேசியும் விட்டான் . எண்ணங்கள் எங்கெங்கேயோ போய்க் கொண்டிருந்தன.

‘என்ன ’என்றார் அவர்.

‘இப்போது யதேச்சையாகவா , வந்து சேர்ந்தேன்? இல்லை. என் வாழ்க்கை அவன் கற்பனையில் , என்பதில் அவர்களும் கூட இருப்பது, உங்களுக்குத் தெரியவில்லை .இப்போது ? - நான் இருப்பதில் ’- என்றான்.

தெரிவது போன்ற தோற்றம் ,சிறிது கொண்டும், அவன் பார்க்குமிடத்தைப் பார்க்காது,அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். இவன் மனம் தடுமாறுவதாகவும் சிறிது எண்ணமடைந்தார் போலும்......

இவன் சொன்னான், ‘ இதுதான், நான் இப்போது சொல்லுவது. ’ எனச் சொல்லி எழ நினைத்தவன் மறுபடியும் உட்கார்ந்து கொண்டு, ‘நீங்கள் உங்கள் மனைவியை இப்போது பார்க்கவில்லை? அப்படித்தான் - ’ என்றான்.

‘எல்லோரும் காண இருப்பவளை நீங்கள் எப்படி உவமிப்பது -’ என்றார்.

‘என்ன நீங்களா பேசுவது..’ என்று கொஞ்சம் கடுமை தொனிக்க சொன்னவன், மீண்டும், நிதானமாக நீங்கள் உங்கள் மனைவியைப் பார்ப்பது போல நானும் சுமியைப் பார்க்கிறேன் - இப்போது பார்க்கிறேன்........சங்கர் இறக்க முடியும், என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்கமுடியாது, அவன் கனவில் , நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்?..........அவனை நாடி அவன் கனவை நாடி சுமி போகமுடியும் என்னைவிட்டு...எப்படி முடியும்? நான் இப்படியாவதை, தவிர்த்து,எப்படி வாழமுடியும்...’

இவன் நிதானமாக எழுந்து , வெளியே சென்று கொண்டிருந்தான். வாயிற்படியைத் தாண்டி , மற்றும் வரண்டாவின் இரண்டு மூன்று படிகளையும் தாண்டி, மேலும் , பங்களா கேட்டையும் தாண்டித்தான் , எதிரே போகும் வீதியை அடைய வேண்டும் . போவதை தடுக்கவோ ,மழையில் நனையாது போக , வசதியளிக்கவோ, இவர்களால் முடியவில்லை . பிரியா விடைக்கொண்டு ,போவதைத்தான் கேட்டைத்தாண்டி வீதியில் பார்வையில் மறையும் வரையில் , பார்த்து நின்றிருந்தனர். துக்கத்திற்கோ , கண்ணீர் துளிகளுக்கோ அப்போது அங்கே இடமில்லை.

காற்று கடுமையாக வீசிக்கொண்டிருந்தது . மழையும் சிறு தூரலாக விட்டபாடில்லை.

எழுத்து 1963

நன்றி - தட்டச்சு : தீட்சண்யா

2 comments:

  1. என்ன ஓரு அற்புதச் சொல்லோவியம் அதீத மன உணர்வுகளை மெல்ல மீட்டித் துயர் செய்யும் அற்புதக் கலைஞன் அல்லவா மெளனி

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.