இங்கிலாந்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் அறிகுறிகளைத் தொகுத்து ‘புது
எழுத்து’ என்ற வெளியீடு ஒன்றும் தோன்றிற்று. அதன் இரண்டு பாகங்கள் இப்பொழுது ‘பெங்குவின்’ பிரசுரத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘ஐரோப்பாவின் புது எழுத்து’ என்ற புத்தகம் ஒன்றும் புது எழுத்தின் ஆசிரியர் ஜான் லேமன் என்பவரால் எழுதப்பட்டு வெளியாகிறது.
அவை மூன்றையும் சமீபத்தில் படித்தேன். படித்து முடித்தபின் மனதில் இதுதான் தோன்றிற்று; அப்பேர்ப்பட்ட பிரமாதமான அதிர்ச்சிகளின் பலனாக இந்த மாதிரியான எழுத்துத்தானா புதிதாக வெளிவந்தது? ‘மலையைக் கெல்லி’ என்பார்களே அந்தமாதிரிதானா இந்த இயக்கம் பரிணமித்தது? அந்தப் புத்தகங்களில் ஒன்றும் அவ்வளவு புதிய வாசனைக் கொண்டதாகக் காணோமே! புதுத் தேர்ச்சியோ புதுக்கருத்தோ அப்படியாக ஒன்றும் புலப்படவில்லையே?
யுத்தத்தின் கோரங்களைப் பற்றியும் வாழ்வின் சிதைவைப் பற்றியும் சில வர்ணனைகள் இருக்கத்தான் இருக்கின்றன. மார்க்ஸைப் பற்றிக்கூட ஓரிருவர் ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்கள். எழுத்தில் வேதனை நிரம்ப இருக்கிறது; திகைப்பு தெளிவாகத் தென்படுகிறது; ஆனால் வழியைக் காணோம். கடைத்தேறுவதற்கான சூசனைகளைக் காணோம்.
புது எழுத்து என்பதற்கான அத்தாட்சி ஒன்றையும் அவற்றில் காணோம். இலக்கணம் தவிடுபொடியாகியிருக்கிறது. என்னதான் எழுதுவது என்ற விவஸ்தை இல்லை என்பது தெரிகிறது. பச்சையாக வேசைகளின் சாகஸங்களைப் பற்றிய வர்ணனைகள் பதேஷ்டமாக இருக்கின்றன - அவ்வளவுதான். இதுதானா புது எழுத்தின் சின்னம்?
தமிழ்நாட்டிலும் கொஞ்சகாலமாகப் புது எழுத்துக் கிளர்ச்சி நடைபெறுகிறது. சில எழுத்தாளர்கள் இலக்கணத்தைக் கட்டித் தூர வைத்துவிட்டார்கள். சிலர் பச்சை எழுத்தில் புகுந்துவிட்டார்கள். மனோதத்துவ ஆராய்ச்சி என்ற போர்வையில் வாய்க்கு வந்ததெல்லாம் - கைக்கு வந்ததெல்லாம் எழுதுகிறார்கள்.
அவர்களுக்கு நேர் எதிரிடையாகச் சிலர் இன்றும் “பத்தாம் பசலி’த் தமிழ் எழுதுகிறார்கள். கவைக்குதவாத விஷயங்களைப் பற்றி எழுதிக் காதைத் துளைக்கிறார்கள். நமது சமூக நிலைக்கோ உலகப் போக்கிற்கோ ஒவ்வாத பழங்கதைகளைப் போற்றிப் போற்றிப் பொழுதைக் கழிக்கிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் பண்டிதர்கள் ஒருபுறமாகவும் புது எழுத்தாளர்கள் ஒருபுறமாகவும் ஒருவரை ஒருவர் கலக்காமல் தனித்தனியாக எழுதுகிறார்கள். ஒரு கூட்டம் மற்றதை மதிப்பதில்லை. புதுரக எழுத்தாளர்களை, ‘பழமை அறியாதவர்கள்’ என்று பண்டிதர்கள் அலட்சியமாகப் பேசுகிறார்கள். ‘பண்டிதர்களுக்குப் புது வாழ்க்கை நினைப்பே இல்லை’ என்று நவீன எழுத்தாளர்கள் குறை கூறுகிறார்கள்.
புதுமுறை எழுத்தாளர்களுக்கு ஏதோ ஒரு லட்சியம் இருப்பது போலவாவது தென்படுகிறது. அவர்கள் தற்கால வாழ்வையாவது ஆதாரமாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். பழைய எழுத்துக்காரர்களுக்கு ஒன்றும் இருப்பதாகவே தெரியவில்லை. எல்லாம் பழைய தமிழில் இருக்கிறது என்பதுதான் அவர்கள் வாதம், லட்சியம். புதுமையைக் கண்டு, அவர்கள் மஞ்சுவிரட்டுக்காளை போல மிரளுகிறார்கள்; தமிழுக்கே ஆபத்து வந்துவிட்டது என்று கலங்குகிறார்கள். இந்த நிலைமையில் இப்பொழுது ஒரு முட்டுக்கட்டையே ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லாம்.
புது எழுத்து என்பது என்ன? அதில் என்ன மாறுபாடு இருக்கிறது? என்ன இருக்கவேண்டும்?
புது எழுத்து என்பது உண்மையில் பழைய எழுத்துத்தான். மிக மிகப் பழையது. அதைப் பண்டிதர்கள் எதிர்த்தால் உண்மையாகவே அவர்களுக்கு சரித்திர வாசனையோ உண்மையான பழைய எழுத்து அறிவோ இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.
நான் சொன்னபடி புது எழுத்து இன்னும் சரியான புதை பூமியில் கட்டிடம் பெறாமல் இருக்கலாம். தற்சமயம் ஓரளவு மேல்நாட்டு நவீன இலக்கியச் சார்புகூடக் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் பிறப்பு அத்தாட்சி பெற்றது. நமது தற்கால வாழ்வின் சுற்றுப்புலனின் மூச்சுக்காற்று பெற்றது. இதே காரணத்தால்தான் நான் அதை உண்மையான பழைய எழுத்து என்கிறேன்.
நமது பழைய எழுத்துக் காலம் சங்ககாலம். அப்பொழுது எழுத்து வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் அதன் லட்சியக் கருவியாகவும் இருந்தது. தலைவனும் தலைவியும் தமிழ்க் காதல் புரிந்த காலத்தில் உதித்தது அது. இடைக்காலத்தில் தமிழ் எழுத்து வாழ்க்கைக்குச் சம்பந்தமற்றுப் போயிற்று; ஏதோ ஒரு விபரீதமான கற்பனையாக மாறிற்று. அந்தக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளும் வார்த்தைகளும் இலக்கியத்தில் புகுந்து அதை வாழ்க்கையிலிருந்து பிரித்துவிட்டன. பிறகு ஆழ்வார்கள் முதலியவர்கள் தோன்றின பொழுதுதான் மனநிகழ்ச்சிகள் மூலமாவது இலக்கியம் வாழ்க்கையுடன் பிணைப்புக் கொண்டது.
சென்ற நூறு வருஷங்களாக தமிழ் எழுத்து அதற்கு முன் இருந்த விபரீதத்தைத் துறந்து நடை முதலுக்கு வர ஆரம்பித்துவிட்டது. வாழ்க்கையில் அடிபடாது செந்தமிழ் நீங்கித் தமிழன் பேசும் பாஷை இலக்கியத்தில் இடம்பெற்றுவிட்டது. அந்த ஆதிக்கத்தைப் பரப்பத்தான் இன்று புதுமை எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். பேச்சு நடை இலக்கியத்தில் ஸ்தானம் பெறுவது அவர்கள் முதல் லட்சியம். கருவியைச் செப்பனிடுவதுதானே எல்லா ஆக்க வேலைகளிலும் முதற்காரியம்?
எனவே புது எழுத்து என்றால், முதலில் புது பாஷை - நடைமுறையில் இருக்கும் பாஷை - இலக்கியத்தில் கையாளப்படுவது. அதற்குப் பிறகு புதுக் கருத்து.
இந்தப் புதுக் கருத்து விஷயத்தில் புது எழுத்தாளர்களிடையேகூட அபிப்பிராய பேதம் இருக்கிறது. நடை விஷயத்தில் ஒன்று சேர்ந்து பண்டிதர்களை எதிர்க்கும் பேர்வழிகள் கருத்து விஷயத்தில் தங்களுக்குள்ளேயே வித்தியாசம் கொள்ளுகிறார்கள். பண்டிதர்களுக்கும் கருத்துகளுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் போராடுவதெல்லாம் எலும்புக்காகத்தான் - சதைக்காகவல்ல. சதையென்று ஒன்று இருப்பதையே அவர்கள் அறியவில்லை - பாவம்!
புதுக் கருத்து விஷயமாக புதிய எழுத்தாளர்களிடையே அபிப்பிராய பேதம் இருக்கிறது என்று நான் சொல்லும்போது அதற்கேற்றவாறு தீவிரமாகக் கொள்கை நிர்ணயமாகிவிட்டதென்றோ, அதையொட்டிப் போர் நடக்கிறதென்றோ எண்ணிவிடக் கூடாது. அப்படித் தீவிரமாகத் தத்துவ ஆராய்ச்சி செய்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஏன்? சில புது எழுத்தாளர்களுக்குத் தத்துவ ஆராய்ச்சியிலேயே நம்பிக்கை கிடையாது!
ஆமாம். இந்த ‘வபை’யான இடத்திலிருந்தே நிலைமையை விளக்க முயலாம். சிலருக்குத் தத்துவத்தில் நம்பிக்கை கிடையாது; சிலர் தத்துவமின்றி ஒன்றும் செய்ய முடியாது என்ற கொள்கை கொண்டவர்கள். முன்னவர்களைப் பொதுவாக பெளதிகவாத மனப்பான்மை கொண்டவர்கள் என்று சொல்லலாம்; பின்னவர்களை ஆத்மீக சார்பு கொண்டவர்கள் என்று சொல்லலாம். யாரும் எந்த இடத்திலும் தங்கள் மனப்பான்மையை நிர்ணயித்து இதுவரையிலும் சொல்லவில்லை. பொதுவாக எழுத்துகளையெல்லாம் படிப்பதிலிருந்து இந்த மேலெழுந்த வித்தியாசம் தென்படுகிறது. எந்தக் கட்சி சரியானது, எது தவறு என்ற பிரச்னையே இங்கு எழவில்லை. இப்படி இரண்டு கூறுகள் இருக்கின்றன என்பதுதான் விஷயம். எழுத்தின் போக்கிலே இது தெரிகிறது. குறித்த மனப்பான்மை தங்களுக்கு இல்லவே இல்லை என்று சில எழுத்தாளர்கள் மறுக்கக்கூடச் செய்யலாம். அதிலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் எதுவும் இன்னும் நிர்ணயமாகவில்லை.
இந்தக் கட்டுரையில் எனக்குத் தோன்றியதை நான் சொல்லிவைத்தால் அதன் மூலமாகவாவது ஒரு நிர்ணயம் ஏற்படலாமோ என்பது என் எண்ணம். ஆனால் நிர்ணயம் ஒன்றுமே கூடாது; எந்த நிர்ணயமும் முற்றிலும் நிலைக்காது என்று சில எழுத்தாளர்கள் ஆட்சேபிப்பார்கள் - எனக்குத் தெரியும்.
எந்த நிர்ணயமும் நிரந்தரமல்ல என்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். வெள்ளப் பெருக்கு ஆறாக வேண்டுமானால் இரண்டு கரைக்குள் நிர்ணயம் ஆகவேண்டும். வெள்ளப் பெருக்கு ஆறு ஆவானேன்? நீர்தானே? இரண்டு நிலைகளிலும் எப்படியிருந்தால் என்ன?
வெள்ளப் பெருக்கு போக்கு வழியற்றது; அழிக்கும் தன்மை கொண்டது. ஆறு குறித்த பாதை கொண்டது. சிருஷ்டி சக்தி கொண்டது.
இலக்கியத்திற்கு லட்சியம் உண்டா? அல்லது அது காரியமற்ற கதைப்பா? அது மலரிலிருந்து பிறக்கும் மணம் போன்ற உயர்த்தும் சக்தியா? அல்லது
வியர்வை போன்ற வெளியீடா? இதெல்லாம் தனிப் பிரச்னைகள். ஆனால் தற்காலிகமாகவாவது இலக்கியப் போக்கிற்கு ஒரு பாதை வேண்டுமென்பதை அராஜகர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சேபிக்க முடியாது.
‘எழுத்துக்காகத்தான் எழுத்து அல்லது கலைக்காகத்தான் கலை’ என்று எப்பொழுதும் ஒரு கட்சி உண்டு. இலக்கியத்திற்கு வேறொரு வேலையும் கிடையாது. வேறொரு இயக்கத்திற்கும் காரணமாகாது. தன் நெகிழ்ச்சியிலேயே நிலைபெறுவது என்பது அந்தக் கட்சியின் சித்தாந்தம். அதாவது கலை என்பது, கலைஞனின் ஆத்மா வெளியே விரிவு கொள்வது – அவ்வளவுதான். அஃது ஒரு நிகழ்ச்சி, அனுபவம். அதற்கு மேல் போன யாதொரு தத்துவமும் அதில் கிடையாது என்பது அதன் கொள்கை.
இலக்கியம் இதயத்தின் ஒலிபரப்புத்தான் - சந்தேகமில்லை. ஆனால் அந்த ஒலி உள்ளே இருக்கும் வரையில் அது ஆத்மானுபவம்தான் - கலைஞனின் உள்ள நெகிழ்ச்சி. எந்த நிமிஷம் எழுத்து, வாத்தியம், வர்ணம், கல் முதலிய கருவிகள் மூலம் அது வெளியேறிப் பரவுகிறதோ, அதே நிமிஷம் அது வெளியுலகத்தை எந்த முறையிலாவது பாதிக்கும் தன்மை பெற்றுவிடுகிறது. அப்பொழுது அது வெறும் அனுபவம் என்ற கர்ப்ப நிலையைத் தாண்டிவிடுகிறது - பிறந்த குழந்தையாகிவிடுகிறது. பிறகு பிறர் சூட்டும் பெயரும் பிறர் சுமற்றும் சுமையும்தானே அதன் வாழ்க்கை?
கலைஞன் தன் அனுபவங்களைக் சிதைத்துத் தத்துவ ஆராய்ச்சி செய்யச் சக்தியற்றவனாக இருக்கலாம்; ஆனால் பிறர் விடமாட்டார்கள் அல்லவா? அவர்கள் “என்ன பெயர் குழந்தைக்கு? இன்னார் போலவே இருக்கிறது, அழகாக இருக்கிறது, நன்றாக இல்லை” என்றெல்லாம் சொல்லத்தான் சொல்லுவார்கள். “உன் கொள்கை என்ன?” என்று கேட்டால் கலைஞன், “எழுதி இருக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று வேண்டுமானால் சொல்லலாம்; “கொள்கையே கிடையாது எனக்கு!” என்று சொல்லித் தப்ப முடியாது. “என் குழந்தைக்குப் பெயர் கிடையாது” என்று கலைஞன் சாதித்தாலும் ஊரார் “இன்னான் மகன்” என்றாவது ஒரு பெயர் வைக்கத்தான் செய்வார்கள்.
“பெயரில் என்ன இருக்கிறது?” என்று ஆங்கிலக் கவி எழுதியதைச் சிலர் தப்பாக அர்த்தம் செய்துகொண்டுவிட்டார்கள். பெயர் எப்படியிருந்தால் என்ன என்பதுதான் அதன் பொருளே தவிர, பெயரே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. நடைமுறைக்காவது நிச்சயம் பெயர் இருந்தே தீர வேண்டும்.
ஒவ்வொரு கலைஞனுடைய எழுத்துக்கும் கொள்கை என்ற பெயர் இருந்தே தீரவேண்டும். இந்த முறையில் தமிழ்நாட்டில் தற்காலம் எழுதிவரும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு கொள்கை இருப்பது தென்படுகிறது. பொதுவாக அவர்களுடைய எழுத்துக்களைச் சில முக்கியமான பிரிவுகளின் கீழ் கொண்டுவந்துவிடலாம்.
சென்ற பத்து வருஷங்களுக்குள்தான் அநேகமாக இந்தப் புது எழுத்து பூராவும் தோன்றியிருக்கிறது என்று பொதுவாகக் கொள்ளலாம். பாரதியும் வ. வே. சு. அய்யரும் இந்தக் காலத்திற்கு முன் எழுதினவர்கள். அவர்களை இந்த ஆராய்ச்சியில் சேர்க்கத் தேவை இல்லை.
ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி - இந்த மூன்று பத்திரிகைகளும் இந்தப் புது எழுத்திற்கு முதல் ஆதாரமாக இருந்தனவென்பது சென்ற பத்து வருஷ இலக்கிய நிகழ்ச்சிகளைக் கவனித்து வரும் எல்லோரும் அறிந்த விஷயம். புது எழுத்து முழுவதும் அநேகமாக அவற்றில் அடக்கமாகியிருக்கிறது என்றே சொல்லிவிடலாம்.
இந்த மூன்று பத்திரிகைகளுமே ஒரு விதத்தில் மூன்று மனப்பான்மைகளின் வாக்காக அமைந்துவிட்டன. ஆனந்த விகடன் நுனிப்புல் மேயும் மனப்பான்மை கொண்டது. ஆழ்ந்து எதையும் ஆராய அதற்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையின் கஷ்டங்களைக் கண்டு சகிக்க அதற்கு வெறுப்பு. எனவே வாழ்க்கையில் மேலெழுந்தவாரியாகத் தென்படும் சுக சௌகரியங்களை மட்டும்தான் அது வாழ்க்கையில் கண்டறியவேண்டியவை என்று கொள்கிறது. ஹாஸ்யம், கிண்டல். அதிலும் ஆழம் கிடையாது. சிக்கல்களை வெகு லேசாக ஒதுக்கிவிட்டு முகம் கோணாதபடி வாழ்க்கையின் சௌகரியமான அம்சங்களை மிகைப்படுத்திச் சித்தரிப்பது, துக்கத்தையும் வீழ்ச்சியையும் மகத்தான சோகங்களையும் கண்டு கண்மூடிக்கொண்டுவிடுவது. இவைதான் இந்த மனப்பான்மையின் சாரம். ‘கல்கி’ என்ற ரா. கிருஷ்ணமூர்த்தியும், எஸ். வி. வி.யுமே இத்த மனப்பான்மையின் முதன்மையான எழுத்தாளர்கள். சிதம்பரநாத முதலியாரும் ‘பி. ஸ்ரீ.’யும் இதன் விமரிசகர்கள்.
கலைமகள் முக்கியமாகப் பெருவாழ்வின் மிதப்பைப் போற்றும் மனப்பான்மை கொண்டது. கற்பனையிலும் வாழ்க்கையிலும் பெருமையையும் பேறையும் அந்தஸ்தையும் கௌரவத்தையும் போற்றுவது இதன் இயற்கை. வாழ்க்கைப் போர் அலட்சியம் செய்யவேண்டிய விஷயம். அது நிரந்தரமல்ல, முக்கியமல்ல. சீரும் செல்வமும்தான் வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேறச் செய்யும் கருவிகள். அவைதான் போற்றுதற்குரியவை. வாழ்க்கையின் லட்சியம் – பெயர், பதவி, சுகம், கலாரசனை, லட்சியத்திற்கொத்த கலை. சாமிநாதையர் அவர்களும் ‘குமுதினி’யும் இதன் எழுத்தாளர்கள் என்று சொல்லலாம்.
மணிக்கொடியின் மனப்பான்மை புரட்சி. வாழ்க்கையிலும் சமூகத்திலும் ரசனையிலும் புரட்சி; ‘புராணமித்யேவ நசாதுசர்வம் (பழையது என்பதாலேயே எல்லாம் சிறந்தது அல்ல) என்று காளிதாசன் சொன்னதுதான் அதன் கொள்கை. போராட்டத்தில்தான் அதன் உயிர். துக்கத்திலும் வீழ்ச்சியிலும் வறுமையிலும்தான் உணர்ச்சிகள் சிறந்து ஒளிகொண்டு ஜ்வலிக்கின்றன என்பது அதன் கொள்கை. சுகம், ஏமாற்றம், துக்கம்தான் உண்மை என்பது அதன் தீர்மானம். சர்வஜன ஓட்டின் தீர்ப்புப்படி உலகத்தில் பெருவாரியான மக்கள் அனுபவிப்பது இன்பமா? செல்வமா? பதவியா? இல்லை. அதனால் மணிக்கொடி மனப்பான்மை எங்கும் தென்படும் வறுமையையும் நோயையும்தான் ஆராய்ச்சி செய்கிறது. எதையும் அது புறக்கணிப்பதில்லை. எல்லாம் இயல்பு, எல்லாம் பலவீனம் என்று தெளிவு கொள்ளுகிறது. போராட்டம்தான் அதன் லட்சியம், போரின் முடிவுகூட அவ்வளவு இல்லை.
முதல் இரண்டு மனப்பான்மைகளும் கொஞ்சம் நிதான புத்தி கொண்டவை; மூன்றாம் மனப்பான்மை தீவிரப் போக்குடையது. இதற்குள்ளேயே பல போக்குகள் இருக்கின்றன. உதாரணமாக வ. ரா. ஒரு போக்கு; பிச்சமூர்த்தி ஒரு போக்கு; ‘புதுமைப்பித்தன்’ என்ற விருத்தாசலம் ஒரு போக்கு.
மேலே குறித்தவர்களைத் தவிர வேறு சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்பதல்ல; அந்த மனப்பான்மையை எழுத்தில் பூரணமாகக் காட்டும் சிலரை மட்டும் உதாரணமாகக் காட்டியிருக்கிறேன். மேலும் ஒரு மனப்பான்மையுடையவர் மற்றொரு பத்திரிகைக்கு அதிகமாக எழுதுவதில்லை என்பதும் கிடையாது. ஆனந்த விகடன் எழுத்தாளர்களும் மணிக்கொடி எழுத்தாளர்களும் பரஸ்பரம் மாறி எழுதுவது அதிகமாகத் தென்படவில்லையே தவிர, இரு கோஷ்டியினரும் கலைமகளுக்கு வெகுவாக எழுதியிருக்கிறார்கள். இந்த முறையில் கலைமகள் ஒரு பொதுக்கருவி என்றுகூடச் சொல்லலாம்.
ஆனால் இதெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்துகொள்ளும் பிரிவுகளே தவிர வெட்டிவிட்டாற்போல் ஒன்றுமே நிர்ணயிக்க முடியாது. வளர்ச்சி எந்த இடத்தில் எந்த தருணத்தில் நடைபெறுகிறது என்று எங்காவது சொல்ல முடியுமா? பொதுப்படையாக அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டுதான் பிரிவுகள் எல்லாமே. அதற்கு மேல் அவற்றிற்கு நாம் முக்கியத்துவம் அளிப்பது ஆபத்தாகும். நான் பெயர்களைக் குறிப்பிடுவதிலும் ஒரு விஷயம் சொல்லவிரும்புகிறேன். எனக்குத் தென்பட்ட குணங்களைச் சொல்லுகிறேனே தவிர யாரையும் நான் மதிப்புக் குறைவாகவோ கீழாகவோ கருதவே இல்லை.
இந்த மூன்றிலும் ஒன்று தாழ்ந்தது, மற்றொன்று உயர்ந்தது என்று நான் சொல்ல முன்வரவே முடியாது. எதுவும் குறைந்ததல்ல; இகழத்தக்கதல்ல. மனித சுபாவத்தின் மூன்று போக்குகள் இவ்வாறு, யதேச்சையாக, வேண்டுமென்று யாரும் வகுக்காமல் பிரிவு கொண்டு பரிமளிக்கின்றன. ஒவ்வொரு மனப்பான்மைக்கும் நிச்சயம் தர்க்க ரீதியாகவே ஓரளவு சித்தாந்தமாக விளங்க இடமிருக்கிறது. எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. விகிதத்தில்தான் வித்தியாசம். அதிலும் அபிப்பிராய பேதத்திற்கும் ஏராளமாக ஆதரவு இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்ற பத்து வருஷங்களுக்குள் உள்ளத்தின் ஒலிபரப்பு இவ்விதமாக இவ்வளவு தெளிவுடன், சிற்றலை, நீட்டலை, நடுத்தர அலை என்று ரேடியோவில் சொல்லுவது போலப் பாகுபாடு பெற்றதே ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இந்தப் பொதுவான பாகுபாடுகளைப் பற்றியும் அவற்றின் கீழிருக்கும் பல சிறு உட்பிரிவுகளைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக ஆராய்ச்சி செய்வது உபயோகமாக விருக்கும். அப்பொழுது எழுத்தாளர்களுடைய கொள்கைகளைப் பற்றிய நிர்ணயத்தையும் ஒருவாறு சொல்லவேண்டிவரும்.
(நவசக்தி)
மறுபிரசுரம்: எழுத்து, மே 1959
அனுப்பியவர்: "அழிசி" ஸ்ரீனி
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.