Sep 13, 2011

துக்கம் – வண்ணநிலவன்

எல்லாம்  முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட பழக்கம் உண்டுமா? மவுத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் இந்தப் imagesபையனுக்கு இப்படி ஆகியிருக்கவேண்டாமே என்று வருத்தப் பட்டார்கள். வருத்தப்படாதவர்கள் பாக்கியில்லை. மில்லில் டூட்டு முடிந்த பத்தாவது நிமிஷம் சுலைமானை வீட்டில்தான் பார்க்கலாம்.

பெட்டியைத் தூக்கிப் போகிற நேரத்துக்கு அந்தச் சின்ன முதலாளியே காரில் வந்துவிட்டார். வீடு ரொம்பச் சின்ன வீடு. ஒரே ஒரு பெஞ்ச் மட்டும்தான் வாசலில் போடப்பட்டிருந்தது. மில்லிலிருந்து வந்த ஜனம் பூராவும் சந்தில்தான் நின்றது. முதலாளி வந்துவிடுவார் என்று சொல்லித்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீபம் வைக்கிற நேரமாகிறது என்றுதான் அந்தச் சங்கத் தலைவரே – அவனும் இந்தச் சுலைமான¨ப் போல எவ்வளவு அருமையான புள்ளை – தூக்குகிறதுக்கு ஏற்பாடு செய்தான்.

சொல்லி வைத்தது மாதிரி நேரத்துக்கு முதலாளி வந்துவிட்டார். ‘சின்ன முதலாளி, சின்ன முதலாளி வந்தாச்சு..’ என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. அடக்கம் செய்கிற வரைக்கும் அவர் கூடவே இருந்தாராம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன். அந்தப் புள்ளையாண்டான் காரை வீட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஜனத்தோடு ஜனமாய் அதுவும் அடக்க ஸ்தலத்துக்கு நடந்தே போயிருக்கிறதே. நல்ல மனுஷர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எவ்வளவு சரியானது.

இந்தப் புள்ளைக்குத்தான் எல்லாம் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. அவனும் வாப்பா, உம்மாவை அறியாத பையன். இதுவும் வாப்பாவைத் தின்ன பிள்ளை என்று பார்த்துத்தான், பட்டணத்து தாவுது சாச்சா சொல்லித்தான் எல்லாம் நடந்தது…என்னமோ ஆண்டவருக்கு இப்படித் தோணியிருக்குது, மூன்றாவது வருஷமே அறுத்துக்கிடனும் என்று.

மெஞ்ஞானபுரமே வந்துவிட்டது. ஒரு அஞ்சலில் உடன்குடி பஸ் ஸ்டாண்டில் போய் நின்றுவிடுவான். இந்தப் பிள்ளைகள் இரண்டும் என்ன செஞ்சிக்கிட்டிருக்குதுகளோ தெரியவில்லை. எல்லாம் ஹாஜியார் வீட்டில் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், கிலேசப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த் மில்லுப் பணம் ஒரு வாரத்திற்குள் வந்துவிடுமாம். எட்டாயிரம் ரூபாய் வருமாம். அது வந்தால் நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டு விடலாம். ஆத்தாங்கரைப் பள்ளியில் ஆயிஷாவோட பையன் காப்ப்பிக் கடை வைத்து நடத்துகிறானாம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும். இங்கே பிறந்த வீட்டில்தான் கோரையை முடைந்து முடைந்து கை வாரியல் குச்சி மாதிரி ஆகிவிட்டது. அங்கேயாவது கொஞ்சம் உட்கார்ந்து சாப்பிடட்டும். ஆயிஷா பெற்றவளைப் பார்த்துக்கொள்ளுவாள். அதைத் தள்ளிவிட்டாயிற்று என்றால் அடுத்தது இந்த நொண்டிக் கழுத ஒண்ணுதான். இதுக்கும் ஒரு நொண்டியத் தேட வேண்டியதுதான். பாவி, பெத்ததுதான் பெத்தேன், ஒண்ணாவது ஆம்பளப் பிள்ளையாப் பெத்திருக்கக் கூடாதா?

பெரிய வீடுகளா இருந்தால், முதல் மாப்பிள்ளை போனால் அடுத்த மாப்பிள்ளையைப் பிடித்து விடுவார்கள். ஜமால் மைதீன் வாப்பா சாகும்போது ஒரு கட்டு கோரை புல்லைத்தானே விட்டுட்டுப் போயிருக்காரு.

சீக்கிரமே உடன்குடி வந்துவிட்டது. சுபைதாளை பஸ்ஸ்டாண்டிலேயே சாமான்களுக்குப் பக்கத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கம் போய் முத்தையா கோனார் வண்டியை அழைத்துக்கொண்டு வந்தாள்.

வீட்டுக்குப் போனதுமே எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். துஷ்டி கேட்க வேண்டாமா? ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே? அதை விட்டுக் கொடுத்து விடுகிறது என்பதுதான் அவ்வளவு லேசானதா என்ன?

சுபைதா அழுதுகொண்டே இருந்தாள். என்ன இருந்தாலும் சுலைமான் அவளுக்கு மற்ற மனிதர்களைப் போன்றவன் இல்லையே. மூன்று வருடங்கள் அவனோடு உடனிருந்து வாழ்ந்தவள் இல்லையா? வந்து விசாரித்தவர்கள் எல்லோரும் சுலைமானுடைய மவுத்துக்கு ஆற்றாமைப்பட்டு விட்டுத்தான் போனார்கள். சில பெண்கள், குறிப்பாக கொருக்கு முதலாளியின் சம்சாரம்கூட அழுவது என்பது லேசானதல்ல.

மெஹ்ருனிசாவுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியாயிருந்தது. துஷ்டி கேட்க வந்தவர்கள் எல்லோருமே அவளைப் போலவே, மில்லில் இருந்து வருகிற பணத்தை வைத்து நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் மெஹ்ருன்னிஸா அதைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவளைப் போல கண்களை இடுக்கிக்கொண்டு மெதுவான குரலில், “ஆமாம்ளா நானும் அப்படித்தான் நெனச்சிருக்கேன். ஆனா நாகூராரு என்ன நெனைச்சிருக்காரோ தெரிய இல்ல..இந்தப் புள்ள சுபைதாள நெனைச்சாதான் தாங்க முடியல. இத்தன வயசுல போயி இது இப்படி வந்து உக்காந்துட்டுதேங்கிறதை நெனச்சால் ஈரக்கொலையே அந்து விளுதாப்பல் இருக்கு’ என்று கண் கலங்க அழ ஆரம்பித்து விடுவாள்.

“பின்ன? பைத்தியக்காரி.. நீ பெத்தவளாச்சே கஷ்டமா இராதா?’” என்பார்கள்.

ஆனால், இதையும் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.

***

 
தினமணிசுடர், டிசம்பர் 24,1994
நன்றி : தாஜ் ஆபிதீன் பக்கங்கள்
***

1 comment:

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.