காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன கிளாசிக் வரிசையின் சிறப்புப் பதிப்பான ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலின் பின்னுரை
கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது:
"சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என் அபிப்பிராயம்."1
இருபத்து நான்காம் வயதில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முழுமையாக வாசித்து முடித்ததும் தோன்றிய மனநிலை ஏறத்தாழ இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் தமிழில் அன்றுவரை வெளியாகியிருந்த பெரும்பாலான நவீனப் படைப்புகளோடு அறிமுகம் கொண்டிருக்கிறேன் என்ற இறுமாப்பும் இதே எழுத்தாளர் அதுவரை எழுதி வெளியான எல்லாவற்றையும் படித்திருக்கிறேன் என்ற தற்பெருமையும் அந்த மனநிலையில் ஆடிச் சரிந்தன. மிகவும் பழக்கப்பட்ட நிலப் பகுதியில் மூடுபனி கவிந்த பொழுதில் நிற்க நேர்ந்தது போன்ற துலக்கமின்மையை உணர்ந்தேன். நூல் வடிவத்தில் வெளிவருவதற்கு முன்பே சில பகுதிகள் வாசிக்கக் கிடைத்ததன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நாவலும் அதுவாகவே இருந்தது. மலர்மன்னன் வெளியீடாக வந்த '¼' காலாண்டு இதழில் ஜே.ஜே: சில குறிப்புகளின் ஆரம்ப அத்தியாயங்கள் அச்சேறியிருந்தன. அதை வாசித்துப் பெற்ற குதூகலப் பதற்றம் நாவலை மிக நேர்த்தியான புத்தகமாகக் கைவசப்படுத்தும்வரை தொடர்ந்திருந்தது. முதல் வாசிப்பில் ஈர்க்கக்கூடிய பிரமிப்பையும் புரிபடாத் தன்மையையும் அனுபவித்ததற்கான காரணங்களைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடைவெளிவிட்டுப் பல முறை நாவலை வாசித்த பக்குவத்தில் வகைப்படுத்தினால் அவை பின்வரும் அம்சங்களைச் சார்ந்தவையாக இருக்கும்.
நாவல் என்பது கதையை முன்னிறுத்தி விரிவடையும் வடிவம் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு எதிரானதாக இருந்தது ஜே.ஜே: சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் ஆரம்பப் பிரமிப்பை ஏற்படுத்தியது.
புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் 'திட்டமிட்ட சதி'யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது. இந்த நோக்கில் தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி ஜே.ஜே: சில குறிப்புகள்.
சமகாலத் தமிழ் வாசகனை நாவலின் நடையே ஈர்த்தது; வெருட்டியது. மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது. ஆவணங்களுக்கான தெளிவு, புனைகதைக்கான ஜாலம், கவிதையின் வேகம், தொனி மாற்றங்களின் நுட்பம் ஆகிய எல்லாமும் இழைந்த மொழியில் அமைந்த நாவல். 'புறங்கழுத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடிகள் விழுவதுபோல' வீச்சுக் கொண்டிருந்த நடை, நாவலை நகர்த்திச் செல்வதற்கான காரணி என்பதைவிட நாவலின் ஆதாரப் புள்ளியாகவே உருவங்கொண்டிருந்தது. அறிவார்ந்த தளத்தில் முன் நகரும் படைப்பு என்பதால் இந்த இயைபு வலுவானதாகவும் இருந்தது. புனைவு மொழி சார்ந்து வழக்கத்திலிருந்த இலக்கணம் இந்த நாவலில் தகர்ந்தது. நடை காரணமாகவே கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீலனை செய்யத் தூண்டிவிட்ட முதல் படைப்பாக ஜே.ஜே: சில குறிப்புகள் இருந்தது.
வாசக ஈர்ப்புக்கு ஆரம்பமாக இருந்தன இந்தக் கூறுகள், எனினும் நாவலை அந்தரங்கமானதாக ஏற்றுக்கொள்ளத் தனிப்பட்ட நியாயங்களும் எனக்கிருந்தன. அந்தக் காலப் பகுதியில் எனது வாசிப்புக்கும் மனச் சாய்வுக்கும் இணக்கமாக இருந்த பலவற்றோடும் தொடர்பு கொண்டனவாகவும் அந்த நியாயங்கள் இருந்தன.
ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்கள் அன்று பெரும் அலையாக என் கருத்திலும் கவனத்திலும் மோதிக்கொண்டிருந்தன. ஜே.ஜே: சில குறிப்புகளின் முதல் வரியே காம்யுவை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, நாவலுடனான வாசக உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பைக் கூடுதலாக்கியது. ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் உயிர்ச் சாயல் சி.ஜே. ஜோசப் என்ற மலையாள எழுத்தாளனின் அடையாளங்களைக் கொண்டிருந்ததைவிடக் காம்யுவின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்புவது அன்றைய மனநிலைக்கு உவப்பாக இருந்தது. ஜோசப் ஜேம்ஸ் - ஆல்பெர் காம்யு என்ற பெயர்களின் உச்சரிப்பு ஒற்றுமையில் மனம் மயக்கம் கொண்டது. காம்யுவின் பிரச்சினை மனிதச் சூழலின் நெருக்கடியை ஆராய்வது, அந்த ஆய்வுக்குச் சுதந்திரமான சிந்தனையைச் சார்ந்திருப்பது என்பதாகக் கருத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தின் தமிழ் வடிவம் அல்லது திராவிட வடிவமே ஜே.ஜே. என்ற நம்பிக்கையும் கவனத்தில் வேரோடியிருந்தது.
அதே கால அளவில் வாசித்து ஆவேசம் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் அருண் ஜோஷி. குறிப்பாக அவர் எழுதிய பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு என்ற நாவல்2. வாசிப்பின் பல கட்டங்களில் ஜோசப் ஜேம்ஸும் பில்லி பிஸ்வாஸும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டார்கள். பில்லி என்கிற பிமல் பிஸ்வாஸுக்கும் ஜோசப் ஜேம்ஸுக்கும் புனைகதைப் பாத்திரங்கள் என்ற வகையில் எந்தப் பந்தமும் கிடையாது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன்; பில்லி அமெரிக்க வாழ் இந்தியன். அமெரிக்க வா ழ்க்கையின் பகட்டு அவனை விரட்டுகிறது. அங்கிருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு வந்து கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறான். குடும்பம், காதல், சமூகத்தின் கோளாறுகள் எல்லாம் அவனைக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன. அமைப்புக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனக்குமான உறவு பற்றி ஓயாத கேள்விகளுடன் உழலும் பில்லி கடைசியில் காணாமற்போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ள முடியாமல் காவல் துறை வழக்கை மூடுகிறது. இந்த நாவலுடன் ஜே.ஜே: சில குறிப்புகளை ஒப்பிட முடியாது. ஆனால் பில்லி பிஸ்வாஸ் தனது கேள்விகளாக ஏற்றுத் துன்புறும் அனைத்தையும் ஜே.ஜே.யும் கொண்டிருந்தான் என்று தோன்றியது. என்னுடைய ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் தனது படைப்பின் நோக்கமாக அருண் ஜோஷி3 சுட்டிக்காட்டிய வாசகம் ஜோசப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளனுக்குப் பொருந்தக் கூடியதாகவேபட்டது. 'மனித மனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்ற அருண் ஜோஷியின் வாக்குமூலம் ஜே.ஜே.வுக்கும் இணக்கமானது என்பதே என் வாசிப்பின் நியாயம்.
ஜே.ஜே: சில குறிப்புகள் வெளிவந்த வேளையில் அந்த நாவல் இலக்கிய வாசிப்புக்கான பிரதி என்பதுபோலவே இலக்கிய அங்கீகாரத்துக்கான கையேடாகவும் இருந்தது. அதன் கணிசமான பகுதிகளை மனப்பாடமாகச் சொல்ல முடிந்திருந்தது. அதை ஓர் அங்கீகாரமாகவும் மனம் கொண்டாடியது. அன்று சீரிய இலக்கியச் சூழலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த பலரும் இந்தப் பயிற்சியை விளையாட்டாகவோ தீவிரமாகவோ மேற்கொண்டிருந்தார்கள் என்பது இன்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.
சுந்தர ராமசாமியை முன்பே அறிவேன். ஆனாலும் அவருக்கு எழுதிய முதல் கடிதம் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் கண்ட ஒரு பிழையைக் குறிப்பிட்டு எழுதிய அஞ்சலட்டையாக இருந்தது. நாவல் பாத்திரமான பாலு தனது நோய்ப் படுக்கையில் கிடந்து வீணையின் மீட்டலாக வரும் இசையைப் பற்றிச் சொல்லும் பகுதியில் 'லம்போதர'4 என்ற சங்கீத உருப்படியை 'வர்ணம்' என்று நாவலாசிரியர் எழுதியிருப்பார். அப்போது இசைப் பித்தம் முற்றியிருந்ததால் கீதத்தை வர்ணம் என்று எழுதிவிட்டீர்களே என்று சிணுங்கிக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றும் அடுத்த பதிப்பில் திருத்தப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அன்று பதிப்புத்துறை இருந்த நம்பகமற்ற சூழலில் அவருடைய வாக்குறுதி அடுத்த பிறவியில் நிறைவேறக்கூடும் என்றே எண்ணத் தோன்றியது. சீரிய இலக்கிய நூல்களின் விதியும் அவ்வாறாகத்தான் இருந்தது. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகளின் காரியத்தில் விதிவிலக்காக நிகழ்ந்தது ஓர் அற்புதம். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நாவல் இரண்டாம் பதிப்புக் கண்டது. 'லம்போதர' கீதம் என்று திருத்தமும் பெற்றிருந்தது. நான் சொல்லித் திருத்தம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை. பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். ஆனால் என் பொருட்டுத்தான் நாவலாசிரியர் அதை மேற் கொண்டார் என்ற அசட்டு மகிழ்ச்சி நாவலைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் மேலெழும். இன்றும்.
n
ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது. இவ்விரு காரணங்களாலேயே முன்சொன்ன எல்லாவிதச் சிந்தனைப் போக்கிலிருந்தும் இந்த நாவல் அணுகப்பட்டிருந்தது.
சிற்றிதழ் சார்ந்த கலாச்சாரச் செயல்பாடுகள், ஆர்வலரின் நடவடிக்கை என்னும் நிலையையும் வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் உளவியல் வினை என்ற நிலையையும் கடந்து கருத்துருவாக்கம் என்னும் அமைப்புப் பணியாக மாறியது எண்பதுகளில் எனக் கருதுகிறேன். அந்த மாற்றத்தின் எதிர் அதிர்வுகள் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை உருவாக்கியிருக்கின்றன. நாவலில் புலனாகும் அறிவார்ந்த தளத்துக்கான முகாந்திரம் இதுதான். எழுத்து, கலை, இசை, ஓவியம் என்று பண்பாட்டுச் செயல்பாடுகளில் எதார்த்த வாழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மை கொண்ட கருத்தாடல்தான் நாவல் எதிர்கொள்ளும் சவால். கருத்துகளை உருவாக்குபவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களுமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் நாவலின் மையப் பாத்திரங்களாவதற்கான காரணமும் இதுதான். துரதிருஷ்டவசமாக அந்தக் காலப் பகுதியில் இயங்கிய தமிழ் எழுத்தாளர்களோ கலைஞர்களோ பண்பாட்டுக் காவலர்களாக நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாவலின் பின்புலமாகக் காட்டப்படும் மலையாள இலக்கிய உலகில் கருத்தை உருவாக்குபவர்களாக எழுத்தாளர்கள் உண்மையாகவே போற்றப்பட்டனர். ஆக, நம்பகமான பின்னணியில் சமகாலத்தின் கோலங்களை நாவலாசிரியரால் பயமில்லாமல் விவாதிக்க முடிந்தது. இந்த அச்சமின்மைதான் அதன் வாசகரிடையே மாபெரும் வியப்பைப் படரவிட்டிருக்கிறது.
வெளிவந்து இரண்டரைப் பதிற்றாண்டுகளைக் கடந்திருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள்தான் சமகால நாவல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது என்று கருதுகிறேன். நாவலாசிரியரின் கூற்றுப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்றும் எழுதப்படுகின்றன. இனியும் எழுதப்படலாம். ஏறத்தாழ இவை அனைத்தும் ஒரே தொனியில் அமைந்தவை. பார்வையில் வேறுபாடுகள் கொண்டவையாகத் தோன்றினாலும் நோக்கத்தில் ஒரே தன்மை கொண்டவை. தாம் வரித்திருக்கும் கருத்து நிலையையொட்டி நாவலைப் பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்ட பிறகு, அதற்கு ஏற்ப நாவல் இல்லை என்ற விமர்சன மதிப்பீட்டுக்கு அவற்றை எழுதியவர்கள் வந்து சேருகிறார்கள். தீர்ப்பை நிர்ணயித்த பின் நடத்தப்படும் விசாரணையின் தந்திரத்தை ஒத்திருக்கிறது இது.
நாவலின் கட்டமைப்பு பல இழைகளால் பின்னப்பட்டது. சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்திருக்கிறேன். அதன் நடை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து என்னை ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்த உச்ச நடைகளில் (grand style என்பதற்குச் சமமாக இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்துகிறேன்) ஒன்றாக நாவலின் நடையை வகைப்படுத்தலாம். இது மொழிசார்ந்த உத்தியல்ல. எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைவது. பல தள இயக்கம் கொண்டது. பாதிப்புகளை உருவாக்கக்கூடியது. சிறுகதையில் இதன் துல்லியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன் கதைகள். நாவலில் சமகால உதாரணம் ஜே.ஜே: சில குறிப்புகள். தொடர்ந்து வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான படைப்பாகப் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நாவல் நிலைத்திருப்பதும் இந்தக் காரணத்தாலேயே என்பது என் எண்ணம்.
n
"ஜே.ஜே: சில குறிப்புகள் மலையாளக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்"5 என்று பிற்காலக் கட்டுரையொன்றில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
ஆரம்ப வாசிப்பில் ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸை நினைவூட்டுவதாக நம்பியிருக்கிறேன். நாடக ஆசிரியரும் ஓவியரும் விமர்சகரும் சிந்தனையாளருமாக வாழ்ந்து மறைந்தவர் சி.ஜே. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை முதன்மைப்படுத்தியவர்; நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான கலகத்தையும் உருவாக்கியவர். அவரது மொழி மலையாள இலக்கியத்தில் புதிய தடங்களை ஏற்படுத்தியது. மறைக்கல்வி பயிலக் குடும்பத்தினரால் தூண்டப்பட்டவர். மடாலயப் படிப்பை உதறி வெளியில் இறங்கியவர். சி.ஜே.யும் அற்ப ஆயுளில் மறைந்தவர். நாற்பத்திரண்டாம் வயதில். சி.ஜே.யின் மரணத்துக்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி ரோசி தாமஸ் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். 'இவன் என் பிரியமான சி.ஜே.'6 என்ற அந்தச் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பத்திலும் சி.ஜே.தான் ஜே.ஜே.யா என்று மயங்கியதுண்டு. அந்த அளவுக்கு நம்பகமான தகவல்களுடன் பின்புலத்தை நிறுவ நாவலாசிரியர் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். சி.ஜே. தாமஸ் வாழ்க்கையின் நிஜம். ஜோசப் ஜேம்ஸ் புனைவின் உண்மை.
மலையாள இலக்கிய உலகில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் வாசகனான என்னை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சி.ஜே. தாமஸ்தான் ஜே.ஜே. என்ற உரிமை பாராட்டலை அடக்கிய சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன். சி.ஜே. தாமஸின் தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய நூலின் பின்னுரையில் அதன் தொகுப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'சி.ஜே. தாமஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுத மலையாளியால் முடியவில்லை. அதற்கு ஒரு தமிழர் வேண்டியிருந்தார்.'7 இதை ஓரளவுக்கு உண்மை என்றும் பெருமளவுக்குப் புனைவின் வெற்றி என்றும் காண்கிறேன்.
நவீன மலையாளக் கவிஞர்களில் ஒருவரான ஆற்றூர் ரவிவர்மா ஜே.ஜே: சில குறிப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிமாற்றம் செய்த முதல் நாவலும் இதுதான். அளவுக்கு மிஞ்சிய வடமொழிச் சொற்களால் பின்னப்படும் மலையாள நடையே இலக்கியத் தன்மை கொண்டது என்ற கருத்துக்குச் சவாலாக இருந்தது ஆற்றூரின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவான சொற்களையும் தமிழ் வாக்கிய அமைப்புகளையும் அப்படியே கையாண்டிருந்தார் ஆற்றூர். சுத்தமான மலையாள நடையல்ல; என்றாலும் புதிய ஒரு திராவிட நடை மலையாள இலக்கியத்துக்கு வாய்த்தது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடம் இந்த நடையின் பாதிப்பைக் காணவும் முடிந்தது. நவீன கவிஞரும் விமர்சகருமான கல்பற்றா நாராயணன் சுந்தர ராமசாமி மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் குறிப்பில் இந்தப் பாதிப்பைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார். ஓர் அர்த்தத்தில் ஜே.ஜே: சில குறிப்புகளின் அறிமுகத்துக்குப் பின்னரே தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்று மலையாள இலக்கியவாதிகளும் வாசகர்களும் நம்ப முன்வந்தார்கள். அதுவரை அவர்களும் 'என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற குதர்க்கமான கேள்வியால் தமிழிலக்கியத்தைச் சீண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோசப் ஜேம்ஸை வரவேற்பதற்காக ஆற்றூர் ரவிவர்மா திறந்துவைத்த கதவுதான் இன்று புதிய தலை முறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மலையாள இலக்கிய உலகில் பிரவேசிக்கவும் உதவுகிறது.
n
ஜோசப் ஜேம்ஸின் பிரச்சினைகள் சமகால வாழ்வில் கருத்துலகம் வகிக்கும் பங்கைப் பற்றிய நெருக்கடிகளைச் சார்ந்தவை. ஜே.ஜே.யே கருத்துக்களின் நடைமுறையாளனாகத்தான் அறிமுகமாகிறான். மனித வாழ்க்கையின் ஆதாரமான தேவைகளுக்கும் கருத்துக்களுக்குமான மோதலையே அவன் சந்திக்கிறான். வாழ்வு, சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களுடன் நெருங்கும் போது இந்தக் கருத்தாக்கங்களைப் பின்னொதுக்கிவிட்டு வாழ்வும் சமூகமும் பிறவும் அவற்றின் எதார்த்தச் சிக்கல்களுடன் பூதாகரமாக முன் நிற்கின்றன. அப்படியானால் மனித குலம் தோன்றிய நாள் முதல் எனது காலம் வரையில் சிந்தனைப் போக்குகள் பேணிக் கடைப்பிடித்துவந்த கருத்துக்களின் தேவையும் பங்கும் என்ன? சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடிகிறதா? தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா? அப்படி அளிக்கப்படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது? திணிப்பதா? அந்தத் திணிப்பு அமைப்பின் அதிகாரத்தை அமல்படுத்துவது ஆகாதா? 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு ஆற்ற வேண்டும். அல்லது இறந்து போய்விட வேண்டும். இரண்டும் எனக்குச் சாத்தியமில்லை. இதுதான் என் பிரச்சினை' என்கிறான் ஜே.ஜே.
இருப்பு, நிகழ்வு, செயல்பாடு ஆகிய மூன்று நிலைகளில் ஏற்படும் முரண் குறித்த பதற்றமே ஜே.ஜே.யை உலுக்குவது. உலுக்கலிலிருந்து விடுபட அவன் காணும் வழி இவற்றின் மீது போர்த்தப்படும் திரைகளைக் களைவது. முன்வைக்கப்படும் ஆயத்தத் தீர்வுகளை மறுப்பது. அடிப்படை சார்ந்த கேள்விகளை எழுப்புவது. இந்தக் கேள்விகள் நிரந்தரமானவை. பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. இந்தப் பொருளில்தான் ஜே.ஜே.வும் அவனை மையமாகக் கொண்ட நாவலும் நிகழ்காலத் தன்மை கொண்டவையாக நிலைபெறுகின்றன. அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய வாசகர்களை ஈர்க்கவும் புதிய வாசிப்புகளுக்குத் தூண்டவும் இந்த நாவலைத் தகுதியுள்ளதாக்குகிறது என்று கருதுகிறேன்.
திருவனந்தபுரம்
சுகுமாரன்
31 மே 2006
குறிப்புகள்
1 ஜே.ஜே: சில குறிப்புகள் (ஆறாம் பதிப்பு / காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோயில் / 2004) பக்: 29
2 'The Strange Case of Billy Biswas' (Orient Paperbacks, New Delhi / 1971)
3 அருண் ஜோஷி: 1939 - 93. ஆங்கிலத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அதிகம் கவனிக்கப்படாமல் போன எழுத்து இவருடையது. சாகித்ய அக்காதெமி பரிசு பெற்றவர்.
4 ஜே.ஜே: சில குறிப்புகள் (முதல் பதிப்பு / க்ரியா / சென்னை - 1981) பக்: 7
5 ஆளுமைகள் மதிப்பீடுகள் - சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோவில் - டிசம்பர் 2004) பக்: 356
6 இவன் என்டெ ப்ரிய சி.ஜெ - ரோஸி தாமஸ் (டிசி புக்ஸ், கோட்டயம் / 2005)
7 அன்வேஷணங்கள் - சி.ஜெ. தாமஸ் - தொகுப்பாளர்: கே.என். ஷாஜி. (நியோகம் புக்ஸ், கொச்சி / மே 2004) பக்: 109.
சித்திரங்கள்: பாஸ்கரன்
நன்றி: காலச்சுவடு ( இதழ் 79, ஜூலை 2006)
நல்ல பதிவு
ReplyDelete