கனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது அவருக்குத் தெரியாது. இவ்வளவு கால முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நம்பகமான எதிரி வாய்த்திருந்தது. அந்த எதிரியும் ஒரு பாம்பாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஆறுமாத காலமாக இது நடந்து வந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல். ஒரு நாள் மாலை கோழிகளை எல்லாம் அடைத்து மூடும் சமயத்தில் தற்செயலாகப் பார்த்தார். இரண்டு முட்டைகள் கேட்பாரற்றுக்கிடந்தன. நாளை காலை பார்க்கலாம் என்று கூட்டை அடைத்து மூடிவிட்டார் ம்வாங்கி.
மறுநாள் பார்த்தால் முட்டைகளைக் காணவில்லை. எமிலியிடம் கேட்டுப்பார்த்தார். அவள் அந்தப் பக்கமே போகவில்லை என்று சொல்லிவிட்டாள். பக்கத்து குடிசைகளில் விசாரித்தார். அவர்களுக்கும் தெரியவில்லை.
நாலு சந்தைநாட்களுக்குப் பிறகு இன்னொருமுறை இது நடந்தது. அப்போது சாடையாக மழைபெய்து தரை ஈரமாகியிருந்தது. பாம்பு தரையில் ஊர்ந்துபோன தடம் அப்படியே தெரிந்தது. அந்தக் கணமே இது பாம்பின் வேலையென ம்வாங்கி கண்டுகொண்டார். அதை எப்பிடியாவது கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தார்.
பாம்பைப் பிடிப்பதோ அடிப்பதோ அவருக்கு உகந்த காரியமல்ல. கோழி வளர்ப்பதுகூட அவர் தொழில் அல்ல. எல்லாம் தற்செயலாக நடந்ததுதான்.
அவர் மெத்தப் படித்த படிப்பாளி. நைரோபியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவர். அந்த கர்வம் அவருக்கு இருந்தது. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன். அவருடைய படிப்புக்கும் அறிவுக்கும் இது ஏற்ற தொழில் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அந்த சேர்டிபிக்கட்டைத் தூக்கிக்கொண்டு அவர் எத்தனையோ கம்பனிகள் ஏறி இறங்கினார். தன் தகுதிகளை கொஞ்சம் மிகைப்படவே கூறினார். இருந்தாலும் குதிரை பாயவில்லை. அவருடைய பெருமையை யாரும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. கடைசியில் அவருக்குக் கிடைத்தது என்னவோ பால் டிப்போவில் படியளக்கும் வேலைதான்.
சிலகாலம் இந்த வேலை சிரமமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அதிகாலையிலிருந்தே வேலை தொடங்கிவிடும். ஒரு திறப்பு திருப்பும் நேரம்கூட உட்காரமுடியாது. நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும்.
ஆறுமணியிலிருந்து வருகின்ற பாலையெல்லாம் நிறுத்து நிறுத்து பெரும் அண்டாக்களில் ஊற்றுவார். கிழவர்கள், குமரிகள், சிறுவர்கள் என்று வரிசை நீண்டுபோய் இருக்கும். அதுபோதாதென்று மறுபக்கத்தில் பால் வாங்குவதற்காக இன்னொரு வரிசை நிற்கும். இரண்டு வரிசைகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டும்.
இந்த சமயத்தில்தான் சீனியர் சேர்டிபிக்கர் செகண்ட் டிவிஷன் மூளையைப் பாவிக்கும் சந்தர்ப்பம் ம்வாங்கிக்குக் கிடைத்தது.
அதற்கு காரணம் எமிலி ஒகினாவாதான். அதிகாலையில் அவள் வந்துவிடுவாள். பால் வாங்குவதற்காக கையிலே ஒரு கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு, உயரமாகவும் அடர்த்தியாகவும் இருப்பாள். அவள் அசைந்துவரும் காட்சி இவர் மனசை என்னவோ செய்யும்.
அவள் தலைமயிரை எப்பிடிப் போட்டாலும் ஒரு கவர்ச்சிதான். கலைத்துவிட்டாலும், விரித்துவிட்டாலும், பின்னிவிட்டாலும், முன்னேவிட்டாலும், கோபுரம் செய்தாலும், கோத்துக்கட்டினாலும் எல்லாவற்றிலும் ஓர் அழகு இருக்கும்.
களவு செய்யத் தூண்டியதும் அந்த அழகுதான்.
ம்வாங்கியை நேர்மையானவர் என்று யாரும் புகழ முடியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கால்பந்து விளையாடி உடம்பை வாட்டசாட்டமாக வைத்திருந்தார். கோல் போடுவதில் மன்னர். கால்களால் போட்ட கோலுக்கு சமமாக கைகளாலும் போட்டிருக்கிறார்.
எமிலி வந்த நேரங்களில் ஒரு லிட்டருக்கு இரண்டு லிட்டர் பால் தாராளமாக வழங்கினார். ஊரார் வீட்டுப் பாலை இப்படி வாரிவாரி வழங்கி ஒருநாள் பிடிபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார். அப்போதுதான் அவருக்குக் கோழிப்பண்ணை வைக்கும் எண்ணம் உதித்தது.
கோழிகளைப் பற்றி அவருக்கு முந்திபிந்தித் தெரியாது. கோழிகளும் அவர் பெருமையில் மெய்சிலிர்த்துப்போய் இருக்கவில்லை. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷனுக்கு ஏற்ற தொழில் இல்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. பிறரிடம் கைகட்டி நிற்காமல் சுதந்திரமாக இருக்கலாம். சொந்த சம்பாத்தியத்தில் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதெல்லாம் காரணங்கள்.
ஆனால் உண்மையான காரணம் வேறு. இவர் கோழிப்பண்ணை வைத்து கிராமத்திலேயே தங்கிவிட்டால் எமிலியும் கூடவே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாள். அந்த உற்சாகத்தில் அவர் கண்கள் கொஞ்சம் மூடிவிட்டது என்னவோ உண்மைதான்.
அவரிடம் வேலை பார்த்த கிழவன் இஞ்சரேகோவுக்கு கோழி வளர்ப்புப் பற்றி கொஞ்சம் தெரியும். இவரும் கூடமாட வேலை செய்தார். தீனி வைத்தார். தண்ணி காட்டினார். மரத்தூளை சுமந்து வந்து பரப்பினார். பெருக்கினார். உடல் முறியப் பாடுபட்டார். ஆற்றுக்கு அந்தக்கரை கள்ளத் தொடர்பு வைத்தவன் நீச்சல் பழகித்தானே ஆகவேண்டும்.
கடந்த ஆறு மாத காலமாக எல்லாம் சுமூகமாகவே போய்க்கொண்டிருந்தது, அந்தப் பாம்பு வரும்வரை.
அது மிகவும் தந்திரம் வாய்ந்த பாம்பு. எவ்வளவுதான் கம்பிவலை ஓட்டைகளைச் சரிபண்ணி வைத்தாலும் சுலபமாக உள்ளே புகுந்துவிடுகிறது. எப்படி வருகிறது எப்படிப் போகிறது என்பது மர்மமாகவே இருந்தது.
ம்வாங்கியும் கிழவனும் விழுந்துவிழுந்து உழைத்தார்கள். பாம்புக்குத் தீனி போடுவதற்காக. அந்தப் பாம்பும் மினுமினுவென்று ஒருவர் பொறாமைப்படும் வழவழப்போடு வளர்ந்துகொண்டு வந்தது. அடிக்கடி முட்டைகளையும், அவ்வப்போது உடம்பில் புரதச் சத்து குறைவது போன்று தோன்றும் சமயங்களில், பதமான கோழிக்குஞ்சுகளையும் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டிருந்தது.
தண்ணீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பீவர் (Fever) மரம் மஞ்சளாக, வழவழப்பாக, பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும். அதன் வலுவான கொம்புகளில் ஒன்றை ம்வாங்கி வெட்டி வைத்துக்கொண்டார். அது கெட்டியாகவும், கைக்கு லாகவமாகவும், வீசுவதற்கு ஏதுவாகவும், வளைந்துகொடுக்கும் தன்மையுடையதாகவும் இருந்தது. பாம்பை வெல்லுவதற்கு இதைவிடத் தகுந்த ஆயுதம் இல்லையென்பது அவருக்குத் தெரியும்.
இந்த ஆயுதம் எப்பவும் அவர் படுக்கையின் அருகிலேயே இருந்தது. அடிக்கடி அதை எடுத்து, காற்றிலே வீசிப் பயிற்சி பண்ணிக் கொள்வார். அதைத் தடவுவார். அதற்கு ஆறுதல் சொல்வார். இப்படியாகச் சமர் புரிவதற்கு எப்பவும் ஒரு தயார் நிலையில் இருந்தார்.
அந்த வழவழப்பான தடியை அவர் இப்படி வெறும் ஆராதனை செய்ததில் எமிலிக்கு உடன்பாடு இருந்ததாகச் சொல்லமுடியாது. அவளுடைய இரண்டு வயசுக் குழந்தை அடிக்கடி அவள் கண்ணிலே படாமல் வெளியே போய் விளையாடத் தொடங்கியிருந்தது. எங்கே அந்தப் பாம்பு கடித்துவிடுமோ என்று பயந்தபடியே இருந்தாள்.
ஆனால் நடுஇரவு நேரம்ங்களில் ம்வாங்கி ஒரு கையில் ரோர்ச்சுடனும், மறுகையில் பீவர் மரத்துக் கம்புடனும் மூங்கில் கட்டிலைவிட்டு மெதுவாக இறங்கிக் கள்ளன்போல் அடிமேல் அடிவைத்துப் போய் பாம்பை யுத்தத்திற்கு அழைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருட்டிலே தவறிப்போய் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் அவளைப் பிடித்து வதைத்தது.
ம்வாங்கி அவள் சொல்லைக் கேட்கப்போவதில்லை. இப்பவெல்லாம் அவருக்கு கோழியில் மேல் உள்ள கவனம் போய்விட்டது. பாம்பைப் பற்றிய நினைப்பாகவே இருந்தார். அதை எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்ற ஆவேசன் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இவ்வளவுக்கும் அவர் தன் பரம விரோதியான பாம்பை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. அந்தப் பாம்புக்குக்கூட தன் புரவலரை ஒருநாளாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ம்வாங்கிக்குத் தெரிந்ததெல்லாம் அது வந்துபோகும் தடங்கள் தான். அத்துடன் முட்டைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துகொண்டே வந்தது.
ஒருநாள் இந்த எதிரிகள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டார்கள். எதிர்பாராமல்தான் இது நடந்தது.
முதலில் கண்டது பக்கத்து வீட்டு யோசப்தான். அவன் தான் ம்வாங்கியைச் சத்தம்போட்டு அழைத்தான். இப்படி ஒரு வேலையும் செய்யாமல், அன்றாடம் வேட்டைக்குப் போகாமல், தினம்தினம் கிடைக்கும் முட்டை வருவாயில் அந்தப் பாம்புக்கு அலுப்பு ஏற்பட்டிருக்கலாம். மெதுவாக வெளியில் வந்து அந்த இளம் வெயிலில் ஆறிக்கொண்டிருந்தது. இலவசமென்றாலும் உண்ட களைப்பு அதற்கும் இருக்கத்தானே செய்யும்.
அதைக் கண்டதும் ம்வாங்கி சிறிது நேரம் மெய்சிலிர்த்துப்போய் நின்றார். என்ன அழகான காட்சி. என்ன அலட்சியமான பார்வை. நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்பது போல. விர்ரென்று வீட்டினுள்ளே புகுந்து பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி மஸாய் வீரன்போல் தலைக்குமேல் பிடித்தபடி பாய்ந்து வந்தார்.
பாம்பு பார்த்துவிட்டது. இவருடைய எண்ணம் ஆரோக்கியமானதல்ல என்பது அதற்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
உஸ்ஸென்று நிமிர்ந்தது. அதனுடைய மணிக் கண்கள் பளபளத்தன. சிறிய தலையில் அவை பெரிதாகத் தெரிந்தன. செக்கச் சிவந்த பிளவு நாக்கை வெளியே விட்டு காற்றைச் சோதித்தது. படத்தை விரித்து தன் சுயரூபத்தைக் காட்டியது. பிறகு என்ன நினைத்ததோ, உடலைச் சுருக்கி செங்கல் குவியலுக்குள் புகுந்துகொண்டது. ஒரு சமமான எதிரிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை அது செய்யத் தவறியது.
ம்வாங்கியும் பெரிய தவறு செய்தார். அந்தப் பாம்பிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டார். அது நிராயுதபாணியாக நின்றது. இவர் தடியை சுழற்றியபடி வெறிகொண்டவரைப்போல் செங்கல் குவியலைச் சுற்றி நாலுதரம் ஓடினார். பாம்பு அவசரமில்லாமல் ஒரு பக்கத்தால் வழிந்து கத்தாளைப் புதர்களுக்குள் போய் மறுகணம் மறைந்துவிட்டது.
ம்வாங்கி இப்படி ஓடியதற்குக் காரணம் அந்தப் பிராந்தியத்தில் மலிந்திருக்கும் துப்பும் பாம்பாக அது இருக்குமோ என்று நினைத்தது தான். துப்பும் பாம்பை அடிப்பதற்கு சாமர்த்தியம் வேண்டும். அது பத்தடி தூரம் வரைக்கும் கண்ணைக் குறிவைத்துத் துப்பும். விஷம் பட்டால் கண்பார்வை போய்விடும். அதுதான் வால்பக்கம் இருந்து அடிப்பதற்காக வசதி பார்த்தார். ஆனால் பிறகுதான் இது துப்பும் பாம்பு அல்ல என்று அவருக்குத் தெரிந்தது.
இப்படியாக முதல்நாள் போர் ம்வாங்கிக்கு முற்றிலும் தோல்வியில் முடிந்தது.
பாம்புக்கு இந்தச்சம்பவம் பிடிக்கவில்லை. அது தானும் தன்பாடுமாக இருந்த பாம்பு. தனக்கும் கோழிகளுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தத்தில் இன்னொருவர் அத்துமீறிப் புகுந்துவிட்டதாக அது நினைத்தது. அதைச்செய்கையில் காட்டுவதற்குத் தருணம் பார்த்திருந்தது.
அடுத்த நாள் காலையில் ம்வாங்கி வெளியே வந்து பார்த்தபோது முட்டையைக் குடித்துவிட்டு சக்கையை வாசலிலே உமிழ்ந்து விட்டிருந்தது. எத்தனை முட்டை களவு போனது என்று அவர் இனிமேல் தன்னுடைய சுருட்டை மயிரைப் பிடித்து இழுத்து குழம்பத் தேவையில்லை. அவ்வப்போது அதிகாலையில் வந்து attendance கொடுப்பது போல முட்டைக் கோதைத் துப்பி கணக்குக் கொடுத்துவிட்டுப் போனது.
ம்வாங்கி தன் முயற்சியில் இன்னும் தீவிரமானார்.
அன்று அவருக்கு வெகு நேரமாகத் தூக்கம் வரவில்லை. பாம்பைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. காற்றுப் புக முடியாத அந்தச் சிறு அறையில் மாட்டுத் தோல் போர்த்திய கட்டிலில் அவர் படுத்துக்கிடந்தார்.
பக்கத்திலே எமிலி. அந்த இருட்டிலும் அவள் மார்புகள் சீராக ஏறி இறங்குவது தெரிந்தது. அவள் பக்கமிருந்து மெல்லியதாக வெப்பவாடை வீசியது.
ஒரு நாளைப்போல ‘சுக்குமாவிக்கி’ சாப்பிடுவோரிடம் வெளிப்படும் அந்த வாசனை வீச்சம் அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அது அவரை என்னவோ செய்தது. இருட்டிலே துளாவினார். அவளுடைய லாஸாவின் நுனியை கைகளினால் தடவிக் கண்டுபிடித்து சுருக்கை இழுப்பதற்கு கொஞ்ச நேரம் ஆனது.
‘வாச்சா, வாச்சா’ என்று முனகியபடி திரும்பி அவருக்கு வசதியான நிலையில் படுத்துக்கொண்டாள். அவளுடைய கை யதேச்சையாக அவர் தொடையின் மேல் வந்து விழுந்தது.
அவருக்குப் பிடித்தது இதுதான். மறுப்பு சொல்லமாட்டாள். அடிக்கடி ’தாராள மனசுப் பொம்பிளை எப்பவும் பிள்ளத்தாய்ச்சி’ என்று சொல்லிச் செல்லமாக அவரைக் கடிந்துகொள்வாள். ஆனால் மறுக்கமாட்டாள்.
எமிலியின் மகனுக்கு இப்போது இரண்டு வயதாகிறது. அவனுக்கு நாலு வயதாகும்போது தங்கள் திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எமிலிக்கு ஆடம்பரமாக மணச்சடங்கு நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தேவதைபோல வெள்ளை ஆடை உடுத்தி, முகத்திரையிட்டு, நீண்ட சில்க் கையுறை அணிந்து இசைக்கேற்ப நடந்துவர வேண்டுமென்பது அவள் ஆசை. அவளுடைய மகன் மலர்ச்செண்டு ஏந்தி ஊர்வலத்தின் முன் நடப்பதை அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாள்.
ஒரு கணிசமான அளவு சேமிப்பு எமிலியிடம் இருந்தது. ம்வாங்கியும் கொஞ்சம் சேமித்தால் விரைவில் திருமணத்தை நடத்திவிடலாம். ஆனால் இந்தப் பாம்பு அதற்குத் துணை புரிவதாகத் தெரியவில்லை.
அப்பொழுதுதான் ம்வாங்கியின் மூளையில் ஒரு மின்னலடித்தது. அந்தப் பாம்பு பதினாலு அடி நீளம் இருந்தது. என்ன வேகமாக மறைந்தது. கண்மணிகள் எவ்வளவு பெரிது. வழவழப்பான கறுப்பு. ஆப்பிரிக்காவின் கறுப்பு மம்பா அல்லவா அது?
இந்தப் பாம்பு மரம் ஏறக்கூடியது. மரத்தின் வழியாக ஏறி கூரை வழியாக அல்லவா இது உள்ளே வருகிறது. கதவு ஓட்டைகளையும், வலைப் பின்னல்களையும் மாய்ந்து மாய்ந்து அடைத்து என்ன பிரயோசனம்!
மறுபடியும் ரோர்ச்சை எடுத்துக்கொண்டு போர் ஆயுதங்களோடு நடு இரவில் புறப்பட்டார். அந்தப் பாம்பு அவருக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது.
தனக்குத் தெரிந்த பலவித சிகிச்சைகளையும் அவர் செய்து பார்த்துவிட்டார். வளைந்த மரக் கிளைகளையெல்லாம் வெட்டிச் சாய்த்தார். சுற்றிவர மண்ணெண்ணெய் ஊற்றி வைத்தார். தார் பூசினார். தகரத்தை அடித்தார். இரவிரவாக விளக்குகளை எரியவிட்டார். அவருடைய சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன் மூளைக்கு எட்டிய அற்புதமான யோசனைகள் எல்லாவற்றையும் செயல்படுத்தினார்.
பாம்பு மசியவில்லை. எல்லாவிதத் தந்திரோபாயங்களையும் அது கற்றுத் தேர்ந்திருந்தது. குதிரையைத் தொலைத்தவன் குட்டையிலும் தேடுவான், கூரை முகட்டிலும் தேடுவான். அவனுக்குத் தெரியும் அவன் கஷ்டம். ம்வாங்கி எல்லா வித்தைகளையும் செய்து களைத்துவிட்டார்.
முள்ளம்பன்றியை மடியிலே கட்டிக்கொண்டு முதுகு சொறியப் பயணம் போன கதையாக யோசப்பை மறந்துவிட்டார் ம்வாங்கி. பக்கத்து வீட்டுக்காரர். பாம்புகளின் பூர்வீகம் அறிந்தவர். கடைசி முயற்சியாக யோசப் சொன்ன யோசனையை செய்துபார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
எமிலியிடம் அவருக்கு ஒரு வருடத்திற்குப் போதிய காதல் இருந்தது. ஆனால் அவருக்குப் பிடிக்காதது அவளுடைய பிடிவாதம்தான். சிறு குழந்தையைப்போல எவ்வளவு முரண்டு பிடிக்கிறாள்!
வீட்டிலே பிறந்த மேனியாகத் திரியக்கூடாது என்று வந்த நாளிலிருந்தே ஒரு சட்டம் போட்டுவிட்டாள். அதிலே அவருக்கு பெரிய சங்கடம்தான். ஆனாலும் அவள் வீட்டிலே இருக்கும் நேரங்களில் எவ்வளவு கஷ்டத்திலும் அதைக் கடைபிடித்து வந்தார்.
மற்றது இன்னும் கொடூரமானது. அவர்கள் சமையலறையில் ஒரு சிறுமேடை இருக்கும். வசதியானது. இவர்களுக்காகவே கட்டியது போலிருந்தது. எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் அவளை அந்த மேடையிலே கூப்பிட்டால் வரவே மாட்டாள். அப்படி ஒரு பிடிவாதம். போகிறது.
திடீரென்று அவள் அந்த வீட்டிலிருக்கப் பயந்தாள். அவள் மிகவும் பயப்படுவது மகனைப் பற்றித்தான். கறுப்பு மம்பாவின் விஷம் பொல்லாதது. கடித்த சில வினாடிகளில் உயிர் பிரிந்துவிடும். ம்வாங்கி இந்தப் பாம்பு விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடப்பதுபோல் அவளுக்குப் பட்டது.
எமிலியின் அவசரத்திற்கு ஏற்றபடி ம்வாங்கி வேகமாகச் செயல்படவில்லை. அதுதான் அவளுக்குக் கோபம். சமையலறையில் நிலம் அதிர்ந்தது. துக்கம் அனுட்டிக்கும் அரைக் கம்பத்து கொடிபோல அவள் கண்கள் பாதி மூடியிருந்தன. உதடுகள் துடித்தன. கால்களைக் கத்தரிக்கோல் போல விரித்துப் போட்டிருந்தாள். அவள் கைகள் மரெண்டாக் கீரையை மளமளவென்று நறுக்கியபடி இருந்தன.
ம்வாங்கி அவசரத்தில் அவளுடைய மரிந்தா அங்கியை அணிந்திருந்தார். அதிலே பெரிய பூக்கள் போட்டிருந்தன. நுனிக்காலில் நடந்துவந்து மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்தார். அவள் கையைப் பற்றினார். அவள் திமிறினாள்.
”விலைபோகாத பெண்ணே! என் வாசனைத் திரவியமே! உன் கண்களை என்மேல் திருப்பு. சூடாய் இருக்கும் தண்ணீர் ஆறித்தானே ஆகவேண்டும். ஒருநாள் இந்தப் பாம்பை நான் கொன்று விடுவேன். கொஞ்சம் பொறுமையாக இரு” என்றார் ம்வாங்கி, மன்றாடும் குரலில்.
”என் மகன் தங்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவன் இரவு படுக்கப்போகும்போது நான் பார்க்கிறேன். அடுத்தநாள் காலை அவன் கண் விழிப்பதை நான் காணவேண்டுமே என்று என் மனம் பயந்து நடுங்குகிறது. வெள்ளம் கணுக்கால்வரை வந்ததும் வாரி இறைக்க வேண்டாமா? ஒரு பாம்பை அடிக்க இவ்வளவு நாடகமா? உலகத்து உடைமைக்காரரிடம் என் மகனை ஒப்படைத்துவிட்டேன். என் சொற்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. கபிஸா. என் வந்தனங்கள்.”
அவளுடைய வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன. நீதிபதியின் சுத்தியலைப்போல. ம்வாங்கி அவள் காதுகளை வருடினார். அவள் முனகும் சமயமாகப் பார்த்து பலவந்தமாக இழுத்து அணைத்தார். அவள் தோள்கள் விறைப்புடன் அடிபணிய மறுத்தன. அவள் மேல் உதடு தடிமனாகவும், யாமசோமா இறைச்சி போல சுவையாகவும் இருந்தது.
தலையை ஒரு பக்கம் சாய்த்து அவரைப் பார்த்தாள். மூக்கைச் சுருக்கி பிகு செய்தாள். திரும்பமுடியாத ஒரு எல்லைக்கு தான் தள்ளப்பட்டதை உணர்ந்தாள். சாப்பாட்டின் கடைசி வாய்போல ம்வாங்கி அவளை ருசித்தார்.
யோசப் சொன்ன யோசனை சிக்கனமானது. இலகுவானது. நாலு ’பிங்பாங்’ பந்துகள் வாங்கி முட்டைகளுடன் கலந்து வைத்து விடுவது. பிளாஸ்டிக்கில் செய்த அந்த பந்துகள் முட்டை போலவே இருக்கும். பாம்பு பந்தை விழுங்கிவிடும். இது உத்திரவாதமானது. கிராமங்களில் இதுதான் பாம்பு பிடிக்கும் முறை என்றெல்லாம் யோசப் அளந்தான். பாம்பு ஏமாந்துவிடும் என்று அடித்துக் கூறினான்.
அன்று இரவு ம்வாங்கி மூன்று தடவை எழும்பி பாம்பு வேட்டைக்குப் போய் வந்திருந்தார். அதனால் நேரம் போனது அவருக்குத் தெரியவில்லை. பலபலவென்று விடிந்த பிறகே எழும்பினார். எமிலி மகனையும் தூக்கிக்கொண்டு வேலைக்குப் போயிருந்தாள்.
கூதல் காற்று அடித்தது. ஜகரண்டா மரம் நிலம் தெரியாமல் பூக்களைச் சொரிந்திருந்தது. எங்கும் ஊதா மயம். வழக்கம்போல கோழிப்பண்ணயைச் சுற்றி வந்தார். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. உள்ளே போய்ப் பார்த்தார். இரண்டு பந்துகள் குறைந்துபோய் காணப்பட்டன. அவருடைய நெஞ்சு வேகமாக அடிக்கத் தொடங்கியது.
பரபரப்புடன் வெளியே வந்து மண்ணிலே தேடினார். பாம்பின் தடம் என்று தான் ஊகித்த இடமெல்லாம் தொடர்ந்துபோய்ப் பார்த்தார். அந்த பாம்பு அவ்வளவு சுலபமாக ஏமாந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றவில்லை.
பீவர் மரத்தைத் தாண்டி யானைப்புற்கள் தொடங்கும் இடத்தில் அதைக் கண்டார். அந்தப் பாம்பு செத்துப்போய் கிடந்தது. மிகவும் செத்துப்போனது. கறுப்பாக நீண்டுபோய் மினுமினுத்தது. அதன் மிகச்சிறிய வாய் பிரிந்துபோய் கிடந்தது. தலையை நிலத்தில் அடித்து அடித்து ரத்தம் கசிந்திருந்தது. எறும்புகள் மொய்த்திருந்தன. அதனுடைய தொண்டைக்குக் கீழ் இரண்டு பந்துகள் மாட்டிப்போய் பம்மிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
எவ்வளவு நீளம்! உடம்பில் ஒரு காயமும் இல்லை. தலை மாத்திரம் சிதைந்துபோய் கிடந்தது. வால் கொஞ்சமாக அசைந்து கொடுத்தது.
பாம்பைப் பார்க்க பக்கத்து குடிசைகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்துவிட்டார்கள். பாம்பின் வால் அசைந்ததைப் பார்த்து ஆளுக்கொரு போடு போட்டார்கள்.
சிறுவர்கள் பாடு கொண்டாட்டம் தான். ம்வாங்கியை மலரமலரப் பார்த்தார்கள். பிறகு பாடத்தொடங்கினார்கள்.
ம்வாங்கி அனயூவா நியோகா
சீயோ சீயோ முவாகா
ம்வாங்கி பெரிய வீரர்தான்
பாம்பை அடித்த சூரர்தான்
இதற்கிடையில் ஒக்கிலா எங்கிருந்தோ ஓடிவந்து சேர்ந்தான். மரண ஊர்வலங்கள் அவன் இல்லாமல் நடைபெறுவதில்லை. பாம்பைத் தூக்கி மாலையாகக் கழுத்திலே போட்டுக்கொண்டான். அப்படிப் போட்டும் பாம்பினுடைய தலையும் வாலும் நிலத்திலே அரைபட்டது. ஒக்கிலா கைகளை விரித்து முழங்கால்களை மடித்து மரண நடனம் ஆடியபடியே புறப்பட்டான். சிறுவர்கள் பின்தொடர்ந்தார்கள். பழைய பெட்டிகளிலும் டின்களிலும் மேளம் அடித்தபடியே அந்த ஊர்வலம் குடிசைகளை சுற்றிச்சுற்றி வந்தது.
பெரியவர்கள் ம்வாங்கியைப் பாராட்டிவிட்டு சென்றார்கள். சிலர் அவருடைய சாமர்த்தியத்தை அளவுக்கு மீறி மெச்சினார்கள். தன் இயல்புப்படி முட்டை குடிக்கவந்த பாம்பு சூழ்ச்சியில் அகப்பட்டு ஒக்கிலாவின் கழுத்தில் அப்படியும் இப்படியும் அசைந்து நிலத்தில் அசிங்கமாக இழுபட்டுக்கொண்டு போனது.
அந்தப் பாம்பின் நீள உடம்பு திரும்பத்திரும்ப நினைவில் வந்தது. இரு சமமான எதிரிகளுக்கிடையில் நடந்த இந்த தர்மயுத்தத்தில் கபடமும் நயவஞ்சகமும் எப்படியோ புகுந்துவிட்டது. இந்த வெற்றியில் என்ன பெருமிதம்? தோல்வியில் கிடைக்கும் அமைதிகூட இல்லையே என்று பட்டது.
ம்வாங்கி வெளிவாசலில் அப்படியே குந்திப்போய் இருந்தார். வெகுநேரம் இருந்தார். எமிலியும் மகனும் திரும்பியபோதுகூட அப்படியேதான் இருந்தார். எமிலி தன் மகனை தொப்பென்று கீழே போட்டுவிட்டு வேகமாக அவரிடம் வந்தாள். சம வயதுடைய இரண்டு பப்பாளிப் பழங்கள் போல அவள் மார்புகள் குலுங்கின.
அவளுடைய முகத்தை அவரால் நேராகப் பார்க்க முடியவில்லை. அவசரமாக எழுந்து நின்றார். வலுவானதும் வளைந்து கொடுக்கக் கூடியதுமான பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி தூர வீசி எறிந்தார். எறிந்துவிட்டு வீட்டுக்குள் போவதற்குத் தலையைக் குனிந்தார் ம்வாங்கி, சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் கிளாஸ்.
*****
மகாராஜாவில் ரயில்வண்டி - (சிறுகதைகள் தொகுப்பு) - காலச்சுவடு பதிப்பகம்
தட்டச்சு : செ. சரவணகுமார்
Snakes have become an inherent part of literature from Adam and Eve story. By the Way how come a Tamil Writer is writing about an African Tribal Man? Is he living in Africa?
ReplyDeletefine story
ReplyDeleteHe lived and worked in many parts of the world as an auditor for World Bank, I guess.
ReplyDelete