இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள்
2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது.
பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் (2001), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (1987), திறனாய்வுக் கட்டுரைகள் (1986), பாரதியின் மொழிச்சிந்தனைகள் (1999), இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், (1979), அடிப்படைத் தமிழ் இலக்கணம் (2007) ஆகிய பேராசிரியர் நுஃமானின் முக்கியமான விமரிசன நூல்கள். மழைநாட்கள் வரும் (1983), அழியா நிழல்கள் (1982), தாத்தாமாரும் பேரர்களும் நெடுங்கவிதைகள் (1977), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984) ஆகிய கவிதை நூல்கள் மிகப் பரவலாக அறியப்பட்டவை.
பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள் (2008), மொகமூத் தர்விஸ் கவிதைகள் (2008), பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள் (2000), காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்), இரவின் குரல் (இந்தோனேசிய மொழி கவிதைகள்) ஆகியன குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகள், தொகுப்பு நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் பெரேதனியப் பல்கைலக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியாகப் பணியாற்றும் நுஃமான் அவர்கள் அண்ணாமலைப்பல்கைலக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மலாய்ப் பல்கலைக் கழகத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகிறார்.
பரிசளிப்பு விழாத் தேதியும் பிற விவரங்களும் விளக்கின் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜன் அவர்களால் விரைவில் வெளியிடப்படும்.
நா. கோபால்சாமி
விளக்கு அமைப்பாளர்
2013-01-17
தகவல் : திண்ணை
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.