என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ... அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா...” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா அப்பனும் மகனுக்கும்... போடா அந்தப்பக்கம்...” என்று ஆத்மாவை நெட்டித் தள்ளி விட்டு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
ஆத்மா கீழே விழுந்து கிடந்த தம்பியைப் பதட்டத்துடன் தூக்கி நிறுத்தி என் மடியில் உட்கார வைத்தான். நான் பதனத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். “தம்பி, அடிபட்டுச்சா... வலிக்குதா...?” ஏன்று கனிவாகக் கேட்டபடி தோளை உடம்பை எல்லாம் நீவி விட்டான். “அழுகாதே... இனிமே அம்மாவோட டூ... பேசவே கூடாது... அழுவாத ஸாமீ....” என்று ஆறுதல் கூறினான்.
நானும், “ராஜா அழுவாதே கண்ணா... இனிமே அம்மா இங்கே வரட்டும்... அடி பின்னி எடுத்தறலாம்... இங்கே வா உன்னைப் பேசிக்கறோம்...” என்று சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டு கறுவிய மாத்திரத்தில் என் மனைவி வந்து விட்டாள். “கதை பேசியது போதும், இந்தாங்க... இது மளிகைசாமான் லிஸ்ட்... மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்திருங்க போங்க... சீக்கிரமா போயிட்டுவந்திடுங்க...” என்று விரட்டியபடி என் கையில் பையை ஒப்படைத்து விட்டு உள்ளே போய் விட்டாள்.
நான் ஆத்மாவைப் பார்த்தேன். கன்னங்கள் சாரமிழந்து போய் மஹா பரிதாபமான சோகம் முகமெங்கும் அடர நிராதரவான நிலையை அடைந்தவன், “வா நாம நம்ம எடத்துக்குப் போலாம்... நம்மளோட சேராதவங்களோட நாமும் சேரக்கூடாது...” என்று தம்பியை அழைத்துக் கொண்டு போனான்.
ஆரம்பகாலங்களில் என் மனைவியும் மிக்க ஆர்வத்துடன் தான் இந்த விளையாட்டில் கலந்து கொண்டிருந்தாள். தம்பிக்குப் பாலூட்டுவாள். தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவாள். தம்பியைத் தூக்கி எடுத்து அந்தரத்தில் போட்டுப் போட்டு பிடிப்பாள். தம்பியுடன் தொட்டு விளையாட்டில் கலந்து கொள்வாள். கிண்ணத்தில் சாதம் பிசைந்து ஊட்டும் போது தம்பிக்கு ஒரு வாய், ஆத்மாவுக்கு ஒரு வாய், என்று மிக உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவள், நாளாக நாளாக இது சலித்துப் போய் அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். எனக்கும் ஆத்மாவுக்கும் சலிக்கவேயில்லை.
தம்பி பிறந்த கதை அற்புதமான கதை.
என் மனைவி தம்பியை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒரு நாள்.
இருள் மெல்ல கவிந்து கொண்டிருந்த வேளையில் என் மனைவி கட்டிலில் படுத்திருந்தாள். ஆத்மாவுக்குத் தூக்கம் பிடிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகளில் சூரல் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த என்னை அவர்களின் சம்பாஷணை ஈர்த்தது.
“வயித்துமேலே ஏறதடான்னா பாரு. மறுபடியும் மறுபடியும் வந்து ஏர்ரே... அடி வேணுமா?”
“ஏ... வயித்துமேல ஏறினா என்னவாம்? நான் அப்பிடித்தான் ஏறுவே...” என்றபடி வயிற்றில் கால் வைக்க, என் மனைவி சட்டென காலைப் பிடித்து தூக்க, அவன் பொத்தென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
அவனைத் தூக்கி எடுத்துப் பக்கத்தில் படுக்க வைத்து “என் கண்ணில்லே என் தங்கமில்லே செரிசெரி போச்சாது, அப்பாவை அடிச்சி போடலாம் அழுவாதே சாமி” என்றாள். ஆத்மா டக்கென்று “அப்பாவா அடிச்சா..? நீதானே தள்ளி உட்டே.” என்று அழுகையினூடே தலையைச் சிலுப்பிக் கொண்டு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.
நான் எழுந்து போய் அவர்களருகில் உட்கார்ந்து கொண்டு, ராஜா, அம்மா வவுத்துக்குள்ளே குட்டிப்பாப்பா இருக்கிறா... நீ மிதிச்சா அவளுக்கு வலிக்கமா இல்லியா...?” என்று அவன் முகத்தருகில் செல்லமாகச் சொல்லி கன்னத்தை நிமிண்டினேன். என் மனைவி சட்டென அவன் முகத்தை தன்பால் திருப்பி, “குட்டிப்பாப்பா இல்லடா... குட்டித்தம்பி...” என்றாள். இது குறித்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
தம்பி மெல்ல அழுகையை நிறுத்தியவாய் ஆர்வத்துடன் கேட்டான். “அம்மா தம்பி எப்பிடிம்மா இருப்பான், உம்மாதிரியா எம்மாதிரியா அப்பா மாதிரியா?”
“உம்மாதிரிதான் என் ராசா...”
“ஏம்மா தம்பி ஸ்கூலுக்கு வருவானா?”
“ம்... வருவான்”
“தம்பி சரவணம் மாதிரி கிரிக்கெட் வெளையாடுவானா?”
“ம் வெளையாடுவான்”
“கொய்யா மரம் ஏறுவானா?”
அவள் சுத்தில்லாமல் யந்திரம் போல பதில் சொல்லிக் கொண்டிருந்தது என்னுள் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்த இடையில் புகுந்தேன்.
“எந்த மரம் வேணாலும் ஏறுவான்... ஒரே ஜம்ப்ல கொய்யா மரம் ஏறி கொய்யாப் பழம் உனக்கொண்ணு அம்மாவுக்கொண்ணு எனக்கொண்ணு பறிச்சிட்டு வந்து கொடுப்பான்...”
ஆத்மாவுக்கு என் பதில் பிடித்துப் போகவே என் பக்கம் சாய்ந்தான்.
“ஏம்பா, தம்பி சைக்கிள் ஓட்டுவானா?”
“ஓ... உன்னைப் பின்னாடி வெச்சிட்டு சைக்கிளை அப்படியே வேகமா ஓட்டுவான்... பஸ் லாரியெல்லாம் சைடு வாங்கீட்டு பயங்கரமா ஓட்டுவான்...”
“பெரிய சைக்கிள்லயா?”
“பெரிய சைக்கிள் சின்ன சைக்கிள் எல்லாத்திலயும்...”
“அப்பா தம்பியை சாமிநாதன் அடிச்சிப் போடுவானா?” இதுவரை கம்பீரமாய் வந்து கொண்டிருந்த குரல் கம்மிப் போயிற்று.
“தம்பியை யாராலும் அடிக்க முடியாது... அவன்தான் எல்லாரையும் அடிப்பான். டிஷும் டிஷும்...” என்று அவன் வயிற்றில் குத்தினேன்.
நெளிந்து கொண்டே என் நம்பிக்கையில் சமாதானமாகாமல் கேட்டான்.
“ராஜாமணியை?”
“எல்லோரையுமே...”
“அடேங்கப்பா... எங்க மிஸ்ஸை கூடவா?”
நானும் என் மனைவியும் பக்கென்று சிரித்து விட்டோம். அதில் ஊடுருவியிருந்த பலஹீனத்தைப் புரிந்து கொண்டவன் போல, “அதானே பாத்தேன்... எங்க மிஸ்ஸை யாராலும் அடிக்க முடியாது... அதுதான் எல்லோரையும் அடிக்கும்...” என்று தீர்மானமாகச் சொன்னான்.
“ஆனா தம்பியை யாரும் அடிக்க முடியாது...” என்றேன்.
திடீரென ஞாபகம் வந்தவனாய், “தம்பிக்கு என்னென்ன வெளையாட்டு தெரியும்..?” என்று ஆர்வம் முகத்தில் கொப்புளிக்கக் கேட்டான்.
“எல்லா வெளையாட்டும் தெரியும்” ஆனாயசமாய் சொன்னேன்.
“அம்மா அம்மா... தம்பியை எறக்கிஉடும்மா... நாங்க வெளையாடறோம்...” என்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
என்னிடமிருந்து குபீரென்று வெடித்துச் சிதறிய சிரிப்பால் என் மனைவி சங்கடத்துக்குள்ளாகி நெளிந்து கொண்டு சிரித்தாள்.
“அம்மா அம்மா, எறக்கி உடுமா...” என்று காலைப் பிடித்துக் கொண்டு சிணுங்கினான் ஆத்மா.
நான் அவனை அணைத்துக் கொண்டு “ராஜா... தம்பி எறங்கறதுக்கு இன்னும்...” மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து, “ஏழுமாசம் ஆகும்... அப்பறமா வெளையாடலாம்...” என்றேன்.
அவன் அழ ஆரம்பித்தான். என் மனைவி அவனைக் கட்டிலில் படுக்க வைத்து கதை சொல்லிப் பார்த்தாள். பயங்காட்டினாள். எழுந்து விளையாட்டுச் சாமான்களை எடுத்து விளையாட்டுக் காட்டினாள். தின்பண்டங்கள் எடுத்துக் கொடுத்தாள். அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. என்மனைவி அடிக்கக் கையை ஓங்கியதும் அழுகை பலமானதேயொழிய குறைந்த பாடில்லை. நான் வாங்கி சமாதானப்படுத்த ஏதேதோ வித்தைகள் காட்டியும் பயனில்லாமல் எரிச்சல் வந்தது.
“கண்ணா, தம்பி தூங்கீட்டிருக்கான்.. நாளைக்குத்தான் எந்திரிப்பான்... நாளைக்கு எந்திரிச்சதும் அப்பறமா தம்பியோட வெளையாடலாம்... என்ன செரி தானா...?” என்றேன். அவன் உடனே அழுகையை நிறுத்திக்கொண்டு அம்மாவின் அடிவயிற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டான். “ஆமாப்பா தம்பி தூங்கறாப்பா...” என்றான் கிசுகிசுப்புடன். அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
நான், “பாத்தியா, தம்பியெல்லா தூங்கறான்... நீயும் படுத்துத்தூங்கு ராசா... எங்கே கண்ண மூடிட்டு தூங்கு பாக்கலாம்...” என்று ஒருவாறாய் சமாதானப்படுத்தினேன். அவனுள் ஏமாற்றம் நிறைந்திருந்தாலும் மகிழ்ச்சி அதை மறைத்துவிட அம்மாவோடு படுத்து கண்களை மூடிக்கொண்டான். கையால் தம்பியை அணைத்தவாறு தூங்கினான்.
அடுத்த நாள் செண்டிமெண்டாய் தம்பி இறங்கி விட்டான். என் மனைவிக்கு கருச்சிதைவு ஆகிவிட்டது. அவள் காலையில் விஷயத்தை வருத்தத்துடன் தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியில் ஊடலெங்கும் அதிர்ந்தது. கனவுகள் கனவுகளாகவே போய் விட்ட துயரம் உள்ளமெங்கும் விரவி உஷ்ணத்தைப் பாய்ச்சியது மனசு வரண்டுபோய் சோகத்தின் துயர வலைக்குள் உழன்று கிடந்தநேரம் வந்து காலைக் கட்டிக் கொண்டான் ஆத்மா.
“அப்பா அப்பா... தம்பி எங்கப்பா?”
கண்களில் நீர் விசுக்கென தளும்பி நின்றது. முகத்தை வேறு பக்கம் திருப்பி மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தால் தூங்கி எழுந்து வந்தவன் போல முகம் சோபை இழந்து சோம்பல் முறித்துக்கொண்டு இல்லாமல், முகமெங்கும் ஆர்வத்தின் தேஜஸ் வழிந்துகிடக்க கைகால்களை துரு துருவென்று உற்சாகம் கலந்த பதட்டத்துடன் நின்றிருந்தான். என் மௌனம் அவன் பரபரப்பை அதிகப்படுத்தவே அம்மாவிடம் தாவினான்.
“அம்மா அம்மா, தம்பியை ஏறக்கி உட்டியா? எங்கம்மா தம்பி?” அவள் காலைக் கட்டிக்கொண்டு குதித்தான். என் மனைவியின் அழுகை ஆத்திரமாக மாறிற்று.
“போடா சனியனே... நீ வாய் வெச்சதிலே தான் இப்படியாய்டிச்சி...” என்று அவனை இழுத்துத் தள்ளி விட்டாள்.
அவன் தடுமாறி விழுந்து திக் பிரமை பிடித்தவனாய் அழ ஆரம்பித்தான்.
“ஏய், அவனையேண்டி அடிக்கறே? ஏதோ நடந்துடுச்சின்னா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்... நீ வாடா ராஜா...” என்று அவனை மார்போடு தழுவிக் கொண்டேன். அவன் அழுகையினூடே விக்கி விக்கி “அப்பா... தம்பி ஏங்கப்பா... நான் அவனோடே வெளையாடணும்...” என்றான். எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. ஏமாற்றத்தின் இடியை அந்தப் பிஞ்சு மனசு தாங்குமா? அவன் ஆசைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்ய விரும்பவில்லை.
“தம்பி வெளையாடப் போயிருக்காம்பா... அவன் வந்ததும் நாம மூனு பேரும் வெளையாடுவோமா...ம்..?” என்றேன்.
அதுதான் நான் செய்த பெரிய தப்பு.
“தம்பி வெளையாடற எடத்துக்கு என்னையும் கூட்டிப் போ...” என்று அழுகையை உச்சஸ்தாயிக்கு உயர்த்தினான். நானும் பேச்சை மாற்ற என்னென்னவோ தகிடுதத்தங்கள் செய்து பார்த்தேன். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே போனாலொழிய அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. “உன்பாடு உங்கப்பாபாடு” என்று அவள் சமையலறைக்குப் போய் விட்டாள். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பும்போது என்னுள் ஒரு ஐடியா பளீரிட்டது.
“இதபாரு தம்பி வந்துட்டாம்பாரு....”என்றேன் கண்களில் அற்புதம் விரிய.
ஆத்மா ஆர்வமாக “எங்கே எங்கே” என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தான்.
“இதபாரு. அட இங்கே பாரு...” என்று வெற்றுவெளியில் கைகளைத் துழாவி பையனைத் தூக்குவது போல பாவனை செய்து அந்தரத்தில் தூக்கிப் பிடித்துக் கொஞ்சினான்.
“டேய் தம்பி... ஆதுக்குள்ளே வெளையாடிட்டி வந்துட்டியா? திருட்டுப்பயலே, கிரிக்கெட் வெளையாடினயா? இதென்னடா தலையெல்லா ஒரே மண்ணு புழுதி... ப்பூ..ப்பூ..” என்று காற்றுக் கூட்டி ஊதிவிட்டேன். “என்ன சாமிநாதனை அடிச்சிப் போட்டியா? ஹ்ஹ்ஹ்ஹா ஆமா ஆத்மாவை உட்டு நீ மட்டும் எப்பட்றா வெளையாடப் போனே...? பாரு...நீ உட்டு வெளையாடப் போயிட்டேன்னு ஆத்மா அழுதிட்டிருக்காம் பாரு... இனிமேல் அவனை உட்டு வெளையாடப் போகாதே...” என்றபடி முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளுடன் கொஞ்சி... “எங்கே அப்பாவுக்கு ஒரு முத்தம் குடு... ம்... ஆத்மாவுக்கு...” என்று அவன் பக்கம் திருப்ப, அவன் வினோதமான ஆர்வத்துடன் முகத்தை நீட்டி முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.
“ம். செரிசெரி, ரண்டு பேரும் போயி வெளையாடுங்க... ஆத்மா, இந்தா தம்பியைக் கூட்டிப்போ” என்று ஆத்மாவிடம் கொடுத்தேன். அவன் மெல்ல தயங்கிக் கொண்டு கைகளை நீட்டி விசித்திரமாக வாங்கிக் கொண்டான்.
பின்வந்த நாட்களில் தம்பியை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனான். தம்பி பறித்துக் கொடுத்ததாக கொய்யாப்பழங்கள் கொண்டு வந்து கொடுத்தான். தம்பியை சின்ன சைக்கிளிலே வைத்துக் கொண்டு தெரு முழுக்கச் சுற்றினான். ‘தம்பி வீணாக சண்டைக்குப் போகமாட்டான் என்றும், வந்த சண்டையை விடமாட்டான் என்றும், தன்னோடு மல்லுக்கு நின்ற சாமிநாதனையும் மற்ற எதிராளிகளையும் அடித்து விரட்டி விட்டதாகவும்’ பெருமை பிடிபடக் கூறினான். ‘ஸ்கூலில் யாரும் தம்பியோடு சேருவதில்லை என்றும், தன் சகாக்களிடம் தம்பியைப் பற்றிக் கூறினால் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கவே தம்பியை யாருக்கும் அறிமுகப்படுத்தாமல் தானும் தம்பியும் மட்டுமே விளையாடிக் கொள்வதாய் சொன்னான். தம்பியும் அவனும் வினோதமாய் பேசிக்கொள்வதைக் கண்டு என் மனைவி, “நீங்க கெட்டது போதாதா? பையனையும் பைத்தியக்காரனாக்கனுமா?” என்று சத்தம் போட்டாள். ஆத்மா அடம் பிடிக்காமல் சோறு தின்ன, பாடம் படிக்க தம்பி உபயோகப்பட்டதால் அவளும் சகித்துக் கொண்டாள்.
நாளாக நாளாக விசித்திரமான நிகழ்ச்சிகளையெல்லாம் கூற ஆரம்பித்தான். ஸ்கூலில் மிஸ், குருவி ஓவியம் எப்படி போடுவது என்று கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள். முதல் நிலையில் ‘ந’ என்ற உயிர்மெய்யெழுத்தைப் போட வேண்டும்; இரண்டாவது நிலையில் அதன் மூக்கை கூராகக் செதுக்கி பின் பக்கம் வளைவு செய்து கழுத்து அமைக்க வேண்டும், என்று கொஞ்சம் கொஞ்சமாய் விரிவாக்கி கண், மூக்கு, இறக்கை, கால்கள் என்று பத்தாவது நிலையில் ஒரு அழகான குருவி காட்சியளிக்கும். ஆனால், தம்பியோ, ‘முதல் நிலையில் போட்ட ‘ந’ வே போதும் என்றும், அதை பத்தாவது நிலைவரை நீட்டவேண்டிய அவசியமில்லை’ என்றும் வாதாடியிருக்கிறான். மிஸ் மூக்கின் மேல் விரல் வைத்து நிற்கும் வியப்பின் உச்சியில் போய் நின்று கொண்டு பேயறைந்தது போல முழித்திருக்கிறாள்.
எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பயம் ஏற்பட ஆரம்பித்தது. என் அறைக்குள் நுழைந்து என்னுடைய புஸ்தகங்களையோ, மற்ற விஷயங்களையோ தொடக் கூடாது என்றும் ஒழுக்கமாக பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் எச்சரித்து விட்டேன். அவன் உடனே பழைய சமையலறையைச் சுத்தம் செய்து தன் அறை என்றான். அவனுடைய சமாச்சாரங்களையெல்லாம் அதில் ரொப்பிக் கொண்டான். அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் விசித்திரமான சமாச்சாரங்கள் நிறைய அவனிடமிருந்து வெளிப்படும்போது இது எங்கு போய் முடியும் என்று பயம் மண்டையை உலுக்கும்.
நான் அவன் அறைக்குள் பிரவேசித்தபோது இன்னும் தம்பியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான். “ஆத்மா, மார்க்கெட் வர்ரியா?” என்றேன். அவன் ஒன்றும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் பக்கத்தில் போய் அவன் முகத்தைத் திருப்பி கைவிரல்களால் கேசத்தைக் கோதி தாஜா செய்தேன்.
“அட அவகெடக்கறா... நாம மார்க்கெட் போலாம் வா... போ போயி டரஸ்சேஞ்ச் பண்ணீட்டு ரண்டு பேரும் வாங்க போங்க...”
தம்பியையும் சேர்த்துக் கொண்டதில் ஆத்மாவுக்கு ஒரே குஷி. “இருப்பா வந்திடறோம்...” என்று வீட்டுக்குள் ஓடினான்.
அறையைப் பார்வை விட்டேன். சுவரில் ஆணியடித்து தோள் பை மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாடப் புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் ஓரத்தில் விளையாட்டுச் சாமான்கள். மூலையோரத்தில் சின்ன சைக்கிள் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வலது பக்க ஓரத்தில் களிமண் கொட்டியிருக்க பக்கத்திலிருந்த சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த தண்ணீர் மரக்கலரிலிருந்தது. அதன் ஓரத்தில் சதுரவாக்கில் பலகையாக ஒரு கருங்கல்... அதில் களிமண் படிந்திருக்க அதனடியில் முடிந்தும் முடிக்காமலும் களிமண் பொம்மைகள் சிதறியிருந்தன. ஆத்மா வந்து சேர்ந்தான்.
“ஏப்பா போலாமா?”
“ஆத்மா, பொம்மையெல்லாம் செய்வியா? எனக்குக் காட்டவேயில்லே...”
“இல்லப்பா இதெல்லாம் தம்பி செஞ்சது...”
“ஓ... செரி எங்கே பாக்கலாமே...” பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவன் ஒரு பொம்மை வித்தியாசமாய்த் தெரியவே எடுத்துப் பார்த்தேன்.
“இமா இதென்ன பொம்மை?”
“அது ஒத்தக் கண்ணுப் பிச்சைக்காரன்”
குச்சி குச்சியான இரண்டு கால்கள்; கால்களுக்கு மேல் ஒரு மனிதத்தலை; முகத்தில் தாடியும் மீசையும் கீறப்பட்டடிருந்தது; ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குச்சிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து... கமண்டலம்தானே அது...? முளைத்திருந்தது. ஹா... உடலெங்கும் புல்லரித்தது. பிரமித்துப் போனேன்.
ஓரிரு நிமிஷங்கள் வெறித்தபடி நின்றிருந்தவன்,
“இந்த பொம்மைக்கு மட்டும் வயிறு மட்டும் வெச்சிருந்தா அற்புதமா இருந்திருக்கும்...” என்றேன்.
“அதுவா... அவன் கையில கழட்டி வெச்சிருக்கானே... அதான் வயிறு”
என் மண்டைக்குள் சம்மட்டி அடி விழுந்தது. அவனைப் பற்றி ஏதேதோ விவரிக்க முடியாத ரூபங்கள் மனமெங்கும் வியாபித்துத் திரிந்தன. ஜீனியஸ் ஆஃப் தி ஏஜ்.
“தினமும் இந்தப் பிச்சைக்காரனை ஸ்கூலுக்கு போரப்ப வாரப்ப பாப்பம். ‘வயித்துக்கு ஏதாச்சும் போடுங்க தரும தொரே...’ ம்பான்; அவனோட பேச்சு வயித்தையே கழட்டி கைல புடிச்சிருக்கிற மாதிரி தெரியும்...”
எனக்கு உடனே அவனுடைய எல்லாப் பொம்மைகளையும் பார்க்கவேண்டும் போல ஆர்வம் பரபரத்தது, சம்மணமிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
அவனைத் தினம் ஸ்கூலுக்கு சுமந்துபோகும் சைக்கிள் ரிக்ஷாவும், ரிக்ஷாக்காரனும்; கிரிக்கெட் மட்டையுடன் ஒரு பையன்; மாடுகள் இல்லாமல் அவிழ்த்த விடப்பட்ட வண்டி; மிட்டாய் விற்கும் கூடைக்காரக் கிழவி; மனிதத் தலைகள், கைகள், வண்டிச் சக்கரங்கள்... ஒரு மனிதத் தலையை கையில் எடுத்து, “இதுதான் தம்பி...” என்றான் ஆத்மா.
முகம் மொழு மொழுவென்று உருண்டையாக கொஞ்சம் கூர்மையான மூக்குடன் அகலமான நெற்றியை சிகை மறைக்காமல் மேலே தூக்கி சீவியிருந்தது. இதழ்களில் குறுநகை இழையோட ஒரு கம்பீரத்துடனான அலட்சியம் பொதிய அந்தத் தலை காட்சியளித்தது, என்னுள் இன்னும் ஏதேதோ விரிந்தது “அப்பா, அம்மா சத்தம் போடறதுக்குள்ளே போயிட்டு வந்திடலாம் வாப்பா...”
இருப்பினும் எனக்கு அந்த அறையை விட்டு வருவதற்கு மனசில்லை. துருவித்துருவி ஆராய்ந்தேன். எத்தனையோ அற்புதங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது போல் பட்டது. “அப்பா போலாமா?” என்று கையைப் பிடித்து இழுத்தான் ஆத்மா.
போகும் வழியில் ஆத்மாவுடன் ஏதும் பேசவில்லை. அவனும் தம்பியும் உரையாடிக் கொண்டு வந்தார்கள். எனக்குள் அவனைப் பற்றிய சூட்சும ரூபங்கள் தனக்குள் பயங்கரத்தை புதைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் விரிந்து படர்ந்தன. அவனை நினைத்துப் பெருமைப் படுவதா அல்லது கவலை கொள்வதா என்று விளங்காமல் உள்ளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆயாசத்துடன் நீண்டதொரு பெருமூச்சு கிளம்ப அதிலிருந்து மீண்டபோது வேறொரு பயம் சேர்ந்து கொண்டது. ‘இவன் ஸ்கூல் வாழ்க்கை எப்படி இருக்கிறது?’
“ஆத்மா, நேத்திக்கு உங்க மிஸ் என்ன பாடம் நடத்தினாங்க...”
“தெரியலேப்பா, நான் ஸ்கூல் போய் ஒரு வாரமாகுது”
சாட்டையின் நீண்டநாவுகள் உடம்பெங்கும் சொடுக்கி எடுத்தன. ரோட்டில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டேன்.
“என்ன... என்ன சொன்னே? ஸ்கூலுக்குப் போறதில்லையா அடப்பாவி... பின்னெங்கடா போறே?”
எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து உதைத்து நொறுக்கலாம் போல ஆத்திரம் பொங்கிப் பீறிட்டுக் கொண்டு வந்தாலும், இதற்கு அவன் ஏன்ன வினோதமான பதில் சொல்லப் போகிறானோ என்று ஆர்வத்துடனான கவலையுடன் அவன் முகத்தை ஊற்று நோக்கினேன்.
ஸ்கூலில் ஒரே மாதிரி தினமும் போய் உட்கார்வதும், டங் டங்கென்று மிஸ் வந்து ஏ,பி,சி,டி சொல்லச் சொல்வதும் அவர்கள் ஒப்பிப்பதும் ரைம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதிக் காட்டச் சொன்னால் எழுதிக் காட்டுவதும் மறுபடியும் மறுபடியும் இதேதானா என்று தம்பிக்கு ஒரேயடியாய் சலித்துப் போய்விட்டது. ‘உனக்கு சலிப்பாக இல்லையா’ என்று ஆத்மாவைக் கேட்டேன். அப்பொழுது தான் அவனுக்கும் உறைத்தது. தனக்கும் சலிப்பாகிக் கொண்டு வருகிறதென்று. அடுத்த நாள் ஆத்மா அம்மாவிடம் சொன்னான். “தம்பி கிம்பியெல்லாம் பறந்துடுவீங்க... ஏண்டா அவ்வளவு திமிரா? ஸ்கூல் பிடிக்காம போய்டிச்சா? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகாட்டி சூடு போட்ருவேன்... கழுதை...” என்று கோரத்தாண்டவமாடவே தம்பி ஆத்மாவை அடக்கி விட்டான். இருவரும் ஒழுங்காக நல்ல பிள்ளையாய் ஸ்கூல் போனார்கள். ஸ்கூல் வாசலில் ரிக்ஷா இறக்கி விட்டதும் எல்லாப் பிள்ளைகளும் ஹோவென்று சப்தம் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்குள் போக ஆத்மாவும் தம்பியும் மட்டும் வெளியே கால்போன போக்கில் நடந்தார்கள். சற்று தூரத்தில் பூங்கா ஏதிர்ப்பட்டது. அதன் அமானுஷ்ய தோற்றமும், பறவைகளின் சீச்சொலியும் பச்சைப் பசேலைப் போர்த்திக் கொண்டு ஆகாயத்தை நோக்கி சரேலித்திருந்த மரங்களின் கிளைகளும் அசைந்து அசைந்து வரவேற்றன. நிலமெங்கும் செடி கொடிகளும் புல் வெளியும் படர்ந்திருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் பாஷையும் கவிந்திருந்த அமைதிக்கு மேலும் அழகூட்ட, உதிர்ந்திருந்த பூக்களும் சருகுகளும் சப்திக்க நடந்து உள்ளே போனார்கள். எங்கு பார்த்தாலும் அழுக்கு மூட்டைகளாய் சோம்பேறி ஜனங்கள். அந்த இடத்தின் அற்புதத்தை ரசிக்காமல் அழகியல் உணர்ச்சியே இல்லாத ஜடங்கள் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிக்கும் ஆத்மாவுக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் அழுகையே வந்து விட்டது. அந்தக் கோரத்தை காணச் சகியாமல், சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று, யாருமேயில்லாத ஒரு இடம் தேடி புல்வெளியில் அமர்ந்து அந்த இடத்தின் அற்புதத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையின் தூங்குமூஞ்சி சுவர்களைப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு அந்த இடம் கிடைத்ததற்கரிய அற்புதமாய்த் தெரிந்தது.
“எவ்வளவு அற்புதங்களை இழக்க இருந்தோம்” என்றான் தம்பி.
“ஆமாம் இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் வெளியே இருக்கக் கூடும்” என்றான் ஆத்மா.
அப்பொழுது ஆத்மாவின் தோளில் ஒரு கரம் மெல்லிய பீலியாய் விழுந்தது. திரும்பிப் பார்த்தால், எதிரே தும்பைப் பூவைப்போல நரைத்த தலையுடன் ஒரு பெரியவர் பளீரிட்ட பற்களைக் காட்டி குறுநகை புரிந்தார். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவர் போலிருந்தது. கேசத்தில் நீர் ஸ்படிகத்துளிகளாய் மின்னியது. கேசத்தை மேலே தூக்கி வாரி நடு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். முகம் மொழு மொழுவென்று உருண்டையாய் தேஜஸ் மின்னியது. கைவரை மூடிய ஜிப்பாவும் கால்வரை வேஷ்டியுமாய் தூயவெண்மையாடை தரித்து மின்னற் குமாரன் போல காட்சியளித்தார். அழுக்கு மனிதர்களைப் பார்த்து அருவருப்படைந்த கண்களுக்கு அவரை ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
“என்ன தம்பி, ஸ்கூலுக்கு போகலியா...?” என்றார் பெரியவர். “என்ன டீச்சர் அடிச்சிட்டாங்களா?”
ஆத்மா இல்லை என்று தலையாட்டினான்.
“ஏன் ஸ்கூலுக்குப் போகலே?”
“ஸ்கூல்ல எங்களுக்குப் பிடிக்கலே”
பெரியவர் ஆத்மாவைத் தூக்கி மார்போடு தழுவிக் கொண்டார். தம்பி சொன்னான்.
“ஸ்கூல்ல எங்களுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே...”
பெரியவர் அதிசயத்துடன் கண்களை அகல விரித்தார். அவர் இதழ்களின் கடைக் கோடியில் புன்முறுவலொன்று நழுவி ஓடியது.
“வாஸ்தவம்தான்... நீ ஸ்கூல்ல படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே... வெளியில படி சூரியனுக்குக் கீழேயிருக்கிற இந்த உலகத்தில படிக்கறதுக்கு நிறைய இருக்கு... அந்த கிளாஸ் ரூம்ல நேரத்தை வீணாக்கிட்டு இருக்காதே...”
ஆத்மாவின் கேசத்தைக் கோதி உச்சி முகர்ந்து மெல்லிய ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து, தலையை ஆட்டி விட்டு, மெல்ல நடந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனார்.
அவர் போனபிறகு ஆத்மாவும் தம்பியும் அவருடைய கூற்றில் கவரப்பட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். தினமும் வெளியே எங்கெல்லாமோ அலைவது, மனசுக்கு பிடித்த சம்பவங்களில் கிறங்கிப்போய் நிறபது, புரிபடாதவைகளைக் குடைந்து குடைந்து யோசிப்பது, ஒவ்வொரு நாளையும் புதிய புதிய கோணத்தில் அனுபவிப்பது, சாயங்காலம் ஸ்கூல் விடும் நேரத்தில் வந்து ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வந்து தங்கள் அறைக்குப் போய் ஓவியங்கள் வரைவது, களிமண் பொம்மைகள் செய்வது... என்றெல்லாம் தினமும் அவன் சந்தித்த நிகழ்வுகள், மனிதர்கள், நூலகத்தில் போய் படித்த - படம் பார்த்த - புத்தகங்கள் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான்.
எனக்கு பயம், கோபம், ஆத்திரம் அத்தனையும் ஒருசேர வெடித்தது. “வாயை மூட்றா கழுதை... தம்பியுமில்லே மண்ணாங்கட்டியுமில்லே... ஏண்டா ஸ்கூலுக்குப் போகச் சொன்னா ஊர் சுத்திட்டு வர்ரியாடா ராஸ்கல்”
நான் ஒருநாளும் அவ்வாறு கண்டித்ததில்லையாதலாலும், தம்பி இல்லை என்று அதிர்ச்சியடைய வைத்தாலும் ஆத்மா ஒரேயடியாய் பயந்து போய் கண்கள் சொருகிப் போய் கீழே விழுந்தான். நான் பதறிப் போனவனாய் அவனைத் தூக்கி “ஆத்மா, ஆத்மா,” என்று கூவினேன். யைன் மயங்கிக் கிடந்தான். என் சப்தநாடியும் பதறிப்போக, அவனைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு அருகிலிருந்த கடைக்குக் கொண்டு போய் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்தேன். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூட்டம் கூடி விசாரித்தார்கள்.
“ஒண்ணில்லீங்க... வெயில் பாருங்க கொளுத்தது... 108 டிகிரி நமக்கே ஒருமாதிரி இருக்குது... சின்னக் குழந்தைக்கு கேக்க வேணுமா... மயக்கம் போட்டான் போல...”
ஆத்மா கண் விழித்ததும் ‘தம்பி தம்பி’ என்று என்னென்னவோ உளறினான். “தம்பி இருக்காம்பா... இதபாரு நின்னிட்டிருக்காம் பாரு...” என்று அவனுக்குத் தண்ணீர் காட்டினேன். “நீ தம்பி இல்லேன்னு சொன்னேயில்லே... நீ என்னோட பேச வேண்டாம் போ...”
“இல்லைடா ராஜா... நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். இதபாரு தம்பி... நீ மயங்கி விழந்துட்டேன்னு அழுவுறாம்பாரு... வா எந்திரி போலாம்...” சட்டென்று அவனை கூட்டிக் கொண்டு நடந்தேன்.
அவன் ஏன்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான். அவனுடைய பேச்சு எதுவும் நான் வாங்கிக் கொள்ளவில்லை. என் உள்ளமெங்கும் கவலையின் ஊசிகள் சுருக் சுருக்கென்று குத்தி வதைத்தன.
இவனை ஞானி என்பதா பைத்தியக்காரன் என்பதா இந்தச் சின்ன வயசிலேயே நடைமுறை வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் போய்விட்டானே... இன்னும் வாழ வேண்டியகாலம் நீண்டு கிடக்கிறதே... எனக்குள் என்னென்னவோ குழப்பங்களும் வெளிச்சக் கசிவுகளும் புலனாகிய வண்ணமிருந்தன. தலை முழுவதும் கும்மென்று வலித்தது. நினைவுகளின் அதிர்வலைகள் உள்ளமெங்கும் பாய்ந்து ஸ்மரணை தப்பி எண்ணங்களின் இருட்குகையில் பாசம் படிந்த பாதைகளில் இழுத்துப்போயின. குழம்பிய இதயத்துடன் கட்டுக்கடங்கா எண்ண ஓட்டங்களோடு நடந்தேன். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போதும், பணம் செலுத்தும் போதும் நான் என் வசம் இல்லை. வீடு திரும்பும் போது ஓயாமல் உழலவைக்கும் குழப்பங்களைப் போக்க டக்கென்று ஒருயோசனை தோன்றியது. அந்த நிமிஷத்தில் உடலெங்கும் பதட்டமும் பரபரப்பும் ஊர்ந்து நெளிந்தது.
எதிரில் பஸ் வந்தது. சாலையின் ஓரத்தில் ஒதுங்கினோம்.
அடுத்த கணம், “ஆ... அய்யய்யோ தம்பி பஸ்ல உழுந்திட்டானே...” என்று கத்தினேன். ஆத்மா சற்று தாமதித்து அந்த பயங்கரத்தைப் புரிந்து கொண்டு “ஐயோ ஐயோ” என்று அலறினான்.
பஸ் தம்பியின் மீதேறிப் போயேபோய்விட்டது. நான் ஓடிப் போய் நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்து, “ஆத்மா, தம்பி செத்துப்போயிட்டானே... ஐயோ, ஐயோ...” என்று அழுதேன்.
ஆத்மா ஓ வென்று அழ ஆரம்பித்தான்.
நன்றி : கௌதம சித்தார்த்தன்
தான் உருவாக்கிய பிம்பத்தை தானே உடைக்கும் முயற்சியில் ஆத்மாவின் அப்பா வெற்றியடைவாரா?! ஆத்மாவின் கற்றல் முறை அழகு. ஞானத்துக்கும் பைத்தியக்காரத் தனத்துக்கும் நமக்கெல்லாம் ஒரிழைதான் வித்தியாசம்.சிந்தை தூண்டும் கதை மனசில் கம்பீரமாக நடையிடுகிறது
ReplyDeleteகெளதம சித்தார்த்தன் ஒரு குழந்தையின் உளவியலை நம் முன் வைத்ததன் நோக்கம் அவரவர் புரிதலுக்கானது என்பது மட்டும் புரிகிறது.
ReplyDeleteமனதை வருடுகிர கதை
ReplyDeleteமனதை வருடும் கதை
ReplyDeleteமனதை என்னவோ செய்கிற ஒரு சிறுகதை .. நமது பள்ளிக்கூட கற்றல் முறைகளின் அழுத்தம் பிள்ளைகளை மிகவும் துன்புறுத்துகிறது
ReplyDeleteஅருமை
ReplyDeleteமனநலம் சார்ந்த அருமையான கதை
ReplyDeleteஃ