பொய்சொல்லியாகிய நீ மைத்ரேயியை உன் கட்டுரையில் சாகக்கிடத்தியபோது மழை பிடித்துக்கொண்டது. சித்தப்பிரமையின்பாற்பட்ட அந்த மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததை ஏதேனும் சங்கேத மொழியில் பதிவு செய்ய நீ முடிவு செய்தாய். அரசாங்க அதிகாரிகள், நாய்கள், குடும்பிகள், மந்திரவாதிகள், தேசங்கள், கொரில்லாக்குரங்குகள், பெண்கள், இலக்கிய ஆசிரியர்கள், காமுகர்கள், குற்றவாளிகள், பாம்புகள், தத்துவ அறிஞர்கள், பேய்கள், ஆயுத வியாபாரிகள், அரசியல்வாதிகள், செருப்பு நக்கிகள், உளவியல் அறிஞர்கள், ஆகியோர் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றிய கட்டுரை எழுதுமாறு நீ பணிக்கப்பட்டிருந்தாய். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒரே காரணத்தினாலேயே எந்த நேரமும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்ற சமூகச் சூழலில், வரலாற்றின் அவல காலகட்டத்தில், உ ன் மனநோய் மருத்துவன் அரசாங்க முத்திரை பதித்த பழுப்பு நிற உறையினுள் கட்டுரை எழுதுவதற்கான ஆணையைக்கொண்டு வந்தபோது உன் அறை ஜன்னலில் உட்கார்ந்து மழை வருகிறதா என்று வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த நீ பயந்து போனாய். உன் நரம்புகளனைத்தும் மின்சாரம் தாக்கியவை போலத் துடிக்க சாவு மின் தூசுகளாய் உன் கண் முன்னால் ஓடி மறைந்தது. காற்றில் முளைத்த பொய்கள் வாழ்வின் ஆதாரங்களாய் உன் நாவைத் தழுவிக்கொண்டன. வார்த்தைகள் வீசி மின் கம்பிக்கூண்டுகளைத் தயாரித்து அதனுள்ளே கவலையின்றி வாழலாம் என்று நீ அந்தக் கணத்தில் அறிந்துகொண்டாய். அதே கணத்தில்தான் மழைக்கான அறிகுறிகளும் தென்படலாயின. நாகமும் கட்டுவிரியனும் விஷம் கக்குவதை மறந்து, வால் நுனிகளில் நின்று, தாபப்பெருமூச்சுக்களுடன் தங்கள் வழவழத்த அடிப்பாகங்கள் தழையத் தழையக் கூடும்போது அப்பாம்புகளின் கண்களில் பட்டுத் தெறித்த பௌர்ணமி நிலவின் ஒளிக்கிரணங்களாலான உடலோடு முழுப்பெண்ணாய் மைத்ரேயி உன் கண்களின் முன் தோன்றியதும் அக்கணத்தில்தான். உன் கவிதை வரிகளாலான ஏழு பால்வீதிகளுக்கு அப்பால் இருந்து ஒளித்துகளாய் அரை நொடியில் வந்து நீண்ட பொன்னிறக் கூந்தல் காட்டுக்குதிரையின் வெல்வெட்டுத் தினவுடன் திகழ்ந்த பிசிறில்லாத வட்ட வடிவப் பிருஷ்டங்களின் மேலும், பின்னந்தொடைகளின் மேலும் அளைய அளைய, நீல நிற மணற்பரப்பில் அஸ்தமனச் சூரியனை நோக்கி நிர்வாணமாய் சென்றுகொண்டிருந்ததையும் நீ அப்போதுதான் பார்த்தாய். உன் நாபிக்குக் கீழிருந்து தோண்டி எடுத்த எழுத்துக்களை நாவில் கூட்டி “மைத்ரேயீ”, “மைத்ரேயீ” என்று அலறி மயங்கிச் சரிந்தாய். நீ மீண்டும் விழித்தது உன் விளையாட்டு பற்றிய கட்டுரையின் மையப் பகுதியில்தான். அப்போது மைத்ரேயி உன் தாபக் கூச்சலை கேட்டவள் போலவும் கேட்காதவள் போலவும் நின்று, கால்களை அகட்டித் தலையை இடது கால் பெருவிரலை நோக்கிக் கவிழ்த்து கால்களின் இடைவெளியூடே உன்னைப் பார்த்தாள். அஸ்தமனச் சூரிய கிரணங்கள் அவள் யோனியில் பட்டு செந்நிறமாய்ப் பிரகாசித்ததில் அவள் முகம் மறைந்துபோக அவள் முகம் தெரியாத விரகம் தாளமுடியாதவனாய் நாய்களின் விளையாட்டு பற்றிய பகுதியை எழுத ஆரம்பித்தாய். வெறி நாய்களைப் பற்றியும் சொறி நாய்களைப் பற்றியும் விவரித்தபோது உன் மொழி தானாகவே உலகக்கொலை ஆயுத வியாபாரிகளின் உடல்களையும் உருவங்களையும் பற்றி பேச ஆரம்பிக்க அருவெறுப்பு தாளமாட்டாமல் ஆசுவாசம் தேடி, அமைதியையும் அறத்தையும் உலகுக்கு மீண்டும் கொண்டுவரப்போகின்ற மைத்ரேய புத்தனைப் பற்றிச் சிந்தித்தாய். மழைக்கு முந்தைய குளிர்காற்று வீசத் துவங்கும் வரை மைத்ரேய புத்தன் பெண்ணாய் இருக்கக்கூடுமென்ற யூகம் கூட உனக்கு இல்லை. முதலில் மழைக்கு முன் வீசுகின்ற இந்த குளிர் காற்றே உனக்குப் புதிது. நீ பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் மழை ஏழு கோடி வருடங்களுக்கு ஒரு முறையே பெய்யும். அப்படிப் பெய்வதற்கு முன் பாதிப் புணர்ச்சியில் பிரிக்கப்பட்ட உடல்களாய் பூமி வெக்கையை அள்ளி வீசி மனிதர்களின் மூத்திரத்தைக் கடுக்கச் செய்து வியர்வையாய் வழிவதை அனல் நாக்கினால் நக்கும். பொய்க்கின்ற மழையோ தெருவோரங்களில் காய்ந்து கிடக்கும் மலத்தினை கரைத்து எழுகின்ற நாற்றத்தோடு நாற்றமாய் சுவாசப்பைகளில் நிறைத்துவிடும். போன தடவை உனக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டபோது உன் சொந்த ஊரில் எல்லோரும் மல நாற்றம் அனுபவித்தார்கள்.
இங்கே மழை வித்தியாசமானதுதான். வைத்தியசாலை மனோகரமான இடத்திலமைய வேண்டும் என்பதற்காக இங்கே மைத்திருக்கிறார்கள் போலும். சிறு நீல மலர் ஒன்றைத் தோட்டத்தில் உன்னிப்பாய் நீ பார்த்து நிற்கையில் அதன் நிறம் ஆகாசமாய் வெளியாய் மணலாய் விகசிக்க, குளிர் காற்று முலை முலையாய் வீசியது. கோடிக்கணக்கான பால் ததும்பும் முலைக்காம்புகள் உன் உடல் முழுவதும் ஈரப்பத வெம்மையுடன் உராய நீ மழைக்காக ஆயத்தமானாய். பின்னர் தோட்டத்திலிருந்து உன்னை உள்ளே இழுத்துச் செல்ல உன் எலும்பின் குருத்துக்கள் பொசுங்குமாறு சூடுபோட வேண்டியிருந்தது. ஒரு பெருங்கூட்டமே உன்னை இழுத்துச் சென்று அறையில் அடைத்தது. உன் சதை பொசுங்கிய நாற்றம் விளைவித்த பிரம்மையில் பெய்யாத மழையின் கூரைச் சத்தம் கேட்டு உன் வலது கரத்தில் நரம்பு வெடித்து ரத்தம் வழிந்தது. உன் வலி ஆற்ற மைத்ரேயி வந்தாள். உன் அறையின் கூரை மேல் நோக்கி திறக்க உலோக மத்தளத்தில் வாசிக்கப்பட்ட கொடூர இசையாய் வார்த்தைகள் உன் கட்டுரையில் கொட்டியதும் அப்போதுதான் போலும். வார்த்தைகளைக் கூட்டுவதற்கும், ஊதிப்பெருக்குவதற்கும், அச்சுக்கோர்ப்பதற்கும், காற்றில் ஓதுவதற்கும், விளையாடுவதற்கும் இவ்வளவு பெரிய தண்டனையைத் தருவார்கள் என்று யாரும் உனக்குச் சொல்லவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் வலியை வார்த்தைகளில் முழுங்குவதைத் தவிர வேறெந்த உபாயமும் உனக்குத் தெரியாதே தெரியாதே மைத்ரேயி தெரியாதே. ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுரைக்குள்ளாக ஓடும் ஒழுங்கமைக்க இயலாத வலியின் கவிதைக் கீற்று உன் அந்தரங்கமல்லவா? அதை எப்படி வெளிச் சொல்வாய்? வலி ஆற்ற வந்தவள் இசைச் சொற்களாய் உன் நரம்பு மண்டலம் முழுவதும் வியாபிக்க அவளின் ஒற்றை விரலசைவில் உன் உடல் முழுவதும் அதிர்ந்தது.
உன் சமிக்ஞைகளுள் சிறந்தவற்றை எல்லாம் உன் லிங்க முனையில் கூட்டி ஆறாத தவிப்புடன் காத்து நின்றாய். காத்து நிற்க வைக்கப்பட்டாய். பரிதவிப்பின் வெறி குத்திட்டு நின்ற லிங்க முனையில் கனன்றபோது கோடிக்கணக்கான வார்த்தைகள் தங்களின் வலி விவரிக்க இயலாத நபும்சகம் உணர்ந்து உலகிலுள்ள அத்தனை நூலகங்களிலிருந்தும் வான் நோக்கி கிளம்பி, புவி ஈர்ப்பு மறந்து, தங்களுக்குள் சண்டையிட்டு ரத்த களறியாக்கி, பிரபஞ்சத்தின் இருள் மூலை தேடி இயற்கை எய்தின. கோடிக்கணக்கான மக்களின் நாவசைவுகளுக்கும் அதே கதிதான். மொழிகளற்று விழித்த பொருளுலகு எங்கும் வியாபித்தபோது உனக்கு மிஞ்சியது உன் லிங்க முனை வீர்யம் மட்டுமே. அப்போது இப்போது எப்போது என்ற பேதம் மறந்தாய். எல்லாம் முன் கூட்டியே சங்கல்பித்து ஒரே கணத்தில் சங்கமமாக கணமே யுகமாய் நீளுவதாய் இருந்தது. எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாமே அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது. என் மொழியை மட்டுமாவது எனக்குக் கொடுத்துவிடேன் என் மொழியை மட்டுமாவது எனக்குக் கொடுத்துவிடேன் என்று அரற்றினாய். உயிரின் ஊற்று விறைப்பில் அடங்கி நிற்க முடியாத தாபத்தில் மைத்ரேயியின் யோனிக்கசிவின் மணம் அறைக்காற்றில் பாறாங்கல்லாய் உறைந்து நிற்பதாய் பிரம்மை கொண்டாய். உன் மனத்தின் அந்தகார இருள் சுவாச இழைகளாய் வெளிப்பட்டு கல்லில் பட்டு மோதி கிளப்பிய வெப்பத்தில் அதிகாரிகளின் விரைகள் வெந்து சாம்பலாயின. எஞ்சிய வெப்பம் மேகங்களின் மோதல்களில் மின்னல்களாயிற்று. காலபேதமற்ற சிந்தனையின் துகள்கள் உன்னிலிருந்து சுருள் சுருளாய் சிதைவுற்ற சுருள்களாய் பல திக்குகள் நோக்கியும் வெளிப்பட உன் கட்டுரையில் நீ தடுக்கி விழுந்தாய். சரிதான் சரிதான் உன் கட்டுரையில் நீ தடுக்கி விழுந்தாய். கிடைத்தது வாய்ப்பு என்று உன்னை இழுத்துச் சென்றார்கள் தற்கொலையா கொலையா என்ற சூழலில் கொலையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய விளையாட்டு வீரன் நீ இல்லையா இல்லையா என்று கேட்டுக்கொண்டே உன்னை இழுத்துச் சென்றார்கள். துன்புறுத்துவதில் இன்பமா துன்புறுவதில் இன்பமா எங்கே சொல் சொல் பார்க்கலாம் என்றார்கள். இரண்டுமற்றது என் மொழி இரண்டுமற்றது என் ஜீவிதம் என்று நீ கதறக் கதற உன்னை இழுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பிறரின் மூளை வழி எழுதும் தாந்தரீகம் இயல்பாகக் கைவந்தது. தங்களின் இருள் மயக்கச் சுருள் சிதைவுப் பாதைகளில் சதைத் திசுக்கள் பாகாய் உருகிவழியக் காணாமல் போனவர் பலர் என கலகலத்து தங்களுக்குள் கதை பேசினர். உலகின் நிர்மாணங்களை உருவாக்கியவர்களின் முகங்கள் அவர்களுக்கு இருந்தன. கட்டுரையில் தடுக்கி விழுந்தாயா என்று நகைத்தார்கள். மனித உயிரின் பெருக்கத்தை அறுதி செய்ய வந்த கடைசீக் கொழுந்தா நீ என்று பற்களை நறநறத்தார்கள். பாவாடையைத் தொடைகளுக்கு மேல் ஏற்றிவிட்டுக் கொண்டு ஓடிய கார்மெனிடம் உன் சமிக்ஞைகள் பத்திரமாய் இருப்பதாய் நீ சமாதானமாய் இருந்தாய். யாவரும் சமாதானமாயிருங்கள் என மெல்லிய குரலில் சொல்லிப்பார்த்தாய். கட்டுரையில் நீ சமாளித்து நின்ற வரி உன்னை இந்த மனநோய் மருத்துவமனையில் கண்டது.
இந்த மருத்துவமனையோ, மாற்றங்களற்ற தமிழ்ச் சமூகமோ, நண்பர்களற்ற கொடூரத் தனிமையோ, பாலுறவு மறுக்கப்பட்ட இறுக்கமான சூழ்நிலையோ உன்னைத் தற்கொலைக்கோ கொலைக்கோ தூண்டமுடியாது என்பதில் உறுதியானவனாய் இருந்தாய். உன் உடலின் தளர்ச்சியில் மேற்சொன்னவற்றின் சுவடுகள் பதியவிடாத அறமொழியை கண்டுபிடிப்பாய். அந்த அறியப்படாத மொழித் தளமல்லவா மைத்ரேயி? மொழியுடனும் மொழியற்றும் உள்ள புள்ளியிலிருந்து நீளும் தளத்தில் மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழியில் எழுதப்பட்ட காதல் யதார்த்தத்தின் சிடுக்குகளை உடைக்க எழும்பும் அழகின் உண்மை உயிரை எப்போதும் எப்படியும் காப்பாற்றும். கார்மெனைப் போல தூய்மையற்றவள் மைத்ரேயி என்றார்கள். கார்மெனைப் போல கற்பனையானவள் மைத்ரேயி என்றார்கள். கார்மெனைப் போல மைத்ரேயியையும் நீ கடைசியில் கொல்ல நேரிடும் என்றார்கள். மைத்ரேயி ஒரு அருவமே என்று சூளுரைத்தார்கள். அப்போது நீ மைத்ரேயியின் இதழ்களில் உன் நாவினால் துழாவி முத்தமிட்டாய். அவள் உன் நெற்றியில் விழுந்த சுருள் முடிகளை நுனிவிரல்களினால் நீக்கி டான் ஜுவான் டான் ஜுவான் என்று தாபத்துடன் முணு முணுக்க உன் நகம் அவள் நாபியில் மெலிதாகக் கீறியதால் வெறிகொண்டு மேலெழும்பி ஆக்கிரமித்தாள். மொழி பற்றிய மொழி விளையாட்டாய் உன் கட்டுரை இருக்கவே அவர்கள் குழம்பிப்போனார்கள். குறைந்தபட்ச முயற்சியிலேயே பலரின் அஸ்திவாரங்கள் விழுந்துவிடுவதைக் கண்டு நீ நகைத்தாய். மண்ணில் தூறல்கள் விழ ஆரம்பித்தன. பூக்காத மரங்களெல்லாம் காலம் தப்பிப் பூத்தன. மழை மழை மழை என மனம் கெக்கலித்தது. கட்டுரையின் பாதியில், எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்து மழை பெய்வதைக் காட்டினாய். கட்டுரை திசை திரும்பிவிட்டதாய் முணுமுணுத்தார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமுள்ள வேறுபாட்டினை நீ மறந்துவிட்டதாய் மனு எழுதி அரசாங்கத்திற்குப் போட்டார்கள். அரசாங்கம் தன் சீடர்களுக்கெல்லாம் தன் மொழியில் ஆணைகள் பிறப்பித்தது. சீடர்கள் அனைவரும் உனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிக்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் இல்லையென்றால் உன்னைப்போன்ற மனம் பேதலித்த உயிர்களின் பெருக்கத்தை உறுதி செய்து விடுவாயென்றும் உயிர் பெருக்க இயலாத பிற இனத்தவர்களுக்கு அது பெரும் கேடென்றும் கோட்பாடுகள் இயற்றினர். மால்தூசிற்கு சிலைகள் வடிக்க அரசாங்கம் ஆனையிட்டது. அந்த அரசாங்கத்திற்கு வெளி நாடுகளின் பண உதவி ஏராளமாய் கிடைத்தது. சுவருக்குச் சுவர் ஆபாச முக்கோணங்கள் வரையப்பட்டன. ஏழைகள், குற்றவாளிகள், மனநோயாளிகள் ஆகியோர் இனப்பெருக்கத்திற்கு லாயக்கற்றவர்கள் என அரசாங்கம் அறிவித்தது. அந்நிய செலாவணி பெற வேறு வழியில்லை என தொலைக்காட்சியில் வல்லுநர்கள் வாதிட்டனர். கருத்தடை சாதனங்கள் பற்றிய பாசுரங்கள் இயற்றப்பட்டன.
காமசூத்திரங்களுக்குப் புதிய விளக்கவுரைகள் எழுதப்பட்டு பத்திரிக்கை விளம்பரங்கள் வெளிவந்தன. அரசாங்கத்தோடு ஒத்துழைத்த புரட்சிகரக் குழுக்கள் பிம்பங்களை மணந்து சுய இன்பம் காண்பதே அதீத புரட்சி என்று எடுத்தியபின. வரலாற்றில் ஓரினப்புணர்ச்சியாளர்களும், பிரம்மச்சாரிகளும் மட்டுமே ஆட்சியாளர்களாயும் மதத்தலைவர்களாயும் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து அவர்கள் சமூகத்தின் விளிம்புகளிலுள்ளோர் எனப் பொய் சொல்ல ஆரம்பித்தனர். இயற்கையை அழித்து மனிதன் பல்கிப் பெருகி வாழ்வதை விட இனவிருத்தி செய்யாமல் மனித இனம் அழிந்து போவது மேல் என்றார்கள். இயற்கையோடும், மனிதன் மனிதனோடும் இணைந்து வாழ வேறு மாற்று வழியே இல்லையா என்று நீ கேட்டபோது வசவுச் சொற்கள் உன்னை நோக்கி வீசப்பட்டன. தூறல் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தது. மைத்ரேயியிடம் சேகரமான உன் சமிக்ஞைகள் மகளாய்த் தோற்றம்கொள்ளும் என உறுதியாய் நீ நம்பியிருந்தாய். மகள்! என்ன அழகான வார்த்தை! மைத்ரேயியே குட்டிப் பெண்ணாய் வந்தது போல உன் மகள் தத்தி தத்தி உன்னிடம் ஓடி வருவதைப் போன்ற கனவுகள் உனக்கு ஏராளம். அக்குட்டிப்பெண்ணை அள்ளி எடுத்துத் தோளில் ஏற்றிக்கொண்டு பசுமையான வயல்வெளிகளூடே நடந்து செல்வது போல வந்த கனவை நீ பலமுறை காண விரும்பினாய். ஆனால் அது ஒரே ஒரு முறைதான் வந்தது. மகளே, மக்ளே, மக்களே என்று பல ஏற்ற இறக்கங்களுடன் சத்தமாகச் சொல்லிப் பார்த்தாய். அவளுக்கு எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்து நீ மலைத்துப் போனாய். அவள் நிச்சயமாக பியானோ வாசிப்பாள். சின்னதாக கவுண் அணிந்துகொண்டு கட்டுக்கடங்காத தலை முடி நெற்றியில் விழ விழ உன்னைப் பார்த்து குறும்புத்தனமான புன்னகையுடன் Chopinஐ வாசிக்க நீ சொக்கிப் போனாய். மோளே மோளே மகளே என்ற பின்னணி இசை மனத்தின் அடிநாதமாய் ஒலிக்க, வசவுகள் மறந்து இருந்தபோது உன் கட்டுரை வரிகள் இயல்பான லயத்துடன் ஓடின. விளையாடுவதிலும் ஆனந்தமிருக்கிறது என்று உனக்குள் சொல்லிக்கொண்டாய். கண்ணாடியில்த் தெரியும் பிம்பத்தைத் தந்திரமாக வெற்றிகொள்ளும் வித்தையை உன் மகளுக்கு கற்றுத் தருவதற்கான பாடத்திட்டமொன்றை நீ உருவாக்கினாய். பிம்பங்கள் அனைத்திலிருந்தும் அவளை விடுபடவைக்கப் போகும் அந்தப் பாடத்திட்டம் பல நூறு புத்தகங்களையும் இசைத் தட்டுகளையும் கொண்டதாக இருந்தது. ‘புனித ஜெனெ’யை அதில் சேர்ப்பது குறித்து உன் மனம் ஒரு கணம் ஊசலாடியபோது உன் கட்டுரையில் நீ அடி வாங்கினாய். பலத்த அடி. உன் வார்த்தைகள் உதிர்ந்து விழ ஆரம்பித்தன. மழை வலுத்துப் பெய்தது அப்போதைய நிலையில் உனக்கு எரிச்சலூட்டக்கூடியதாய் இருந்தது. உன் மகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க நீ யார் என்ற கேள்வியில் நீ உன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாய். சொற்களை பொறுக்கி எடுத்துக் கோர்த்தபோது அவளுக்கு வேண்டியதை அவள் தேர்ந்தெடுத்துக்கொள்வாள் என்று புரிந்தது.
உனக்கும் உன் மகளுக்கும் என்ன உறவு? உனக்கும் யாருக்கும்தான் என்ன உறவு? தளைகளற்ற உறவு என்ற பதச் சேர்க்கையை பரிசோதித்துப் பார்த்தாய். அப்பதச்சேர்க்கையின் உள் முரண் புரிந்த மறு கணமே நீ பிரேதமில்லை என உணர்ந்துகொண்டாய். யாருமே பிரேதமில்லை என்பதும் தெரிய வந்தது. நீ ஒரு அனாதை. எல்லோருமே அனாதைகள். அ-னா-தை. இவ்வுலகம் அனாதைகளின் உலகம். அனாதைத்தன்மையை இயல்பானதாக ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் நாம். அதுவே அறம் வீரம் ஆண்மை பெண்மை. ஹா ஹா முதலாளித்துவத்தின் அடிப்படையை சுலபத்தில் அடைந்துவிட்டாய் நீ. அனாதைத்தனம் உன் ரோமக் கால்களில் விஷ ஊசிகளாய் துளைத்து வெளியே வர என் மகள் எனக்கு வேண்டும் என்று விடாமல் கதறினாய். மைத்ரேயி ‘பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்’ நாவலை வாசித்துக்கொண்டிருந்தது உனக்குத் தெரியாது ஏனெனில் மைத்ரேயியை நீ சந்தித்து இருநூற்றி பன்னிரெண்டு நாட்கள் ஆறு மணிகள் பதினேழு நிமிடங்கள் இருபத்தியிரண்டு விநாடிகள் ஆகின்றன. இந்த நாட்களில் எண்பத்தெட்டாயிரம் கோடி வார்த்தைகள் ஜீவ மூச்சாய் உன்னிடமிருந்து வெளிப்பட்டன. தனியாய் சாப்பிட்டுத் தனியாய்த் தூங்கி, தனியே நடந்துபோய்த் தனியாய் குடித்து தனியாய் கனவு கண்டு தனியாய் அழுதுத் தனியாய்ப் படித்து தனியாய் எழுதித் தனியாய் சிரித்து தனியாகத் தன்னை வெறுத்து தனியாய்த் தனியாய் இருந்து தனியாய் சிந்தித்து தனியாய் புத்தி பேதலித்து இருந்த உனக்கு மைத்ரேயிக்கான அவ்வார்த்தை ஜீவ மூச்சன்றி வேறு என்ன? உன் மகள் தமிழிலேயே சிந்தித்துத் தமிழிலேயே இலக்கியம் படைப்பாள் என்று கனவு வந்தது அந்த வார்த்தைக் கூட்டத்தின் லயம் உனக்கு பிடிபட்ட போதுதானே? மைத்ரேயி எங்கே போனாய் நீ? உன் கட்டுரையில் மஞ்சள் மலர்கள் பெரிது பெரிதாய் பூத்த அக்காலத்தில் எங்கே போனாள் மைத்ரேயி? விடாமல்ப் பெய்யும் இந்த மழை நல்லதுக்குப் பெய்கிறதா என்ன? மைத்ரேயி எங்கே போனாய் நீ? என்ன செய்கிறாய்? புத்தி பேதலித்த உன்னை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாளோ என்னவோ? உன் குழந்தையை அவள் சுமப்பாளா என்ன? கருவிலேயே கொன்றுவிட்டாளென்றால்? எங்கோ ஒரு வயலினின் தந்தி ஒன்று நாரசமாய் அறுந்துபோகக் குழந்தை பருவ நினைவு ஒன்று உன்னைத் தொற்றியது. வெயில் கொடூரமாகத் தாக்கிய மதியப் பொழுதொன்றில் அந்த மருத்துவச்சியின் கொல்லை பிண்டங்களால் நாறியபோது அவள் பகவத் கீதை வாசித்திருக்கக் கண்டாய். காலம் காலமாய் கொலை பாதகத்தைத் தூண்டும் போதனை. உயிரழிக்க, உயிரை நசிவுக்குள்ளாக்க, உயிரை அவலத்திற்குள்ளாக்க மதத்தைத் தவிர வேறெதற்கு சக்தி இருக்கிறது? மதத்தை எதிர்த்த உன் நண்பர்களெல்லாம் மதவாதிகளாய் மாறிப்போன அங்கதத்தை என்னவென்று சொல்ல? அப்படி மாறிப்போனபோதுதான் அவர்கள் உன்னைக் காட்டிக்கொடுத்தார்கள். நீ ஒழிக்கப்படவேண்டியவன் என்றார்கள். எல்லாம் இழந்த நிலையில் நீ உடைந்து போனபோது மைத்ரேயி வரவில்லை. சரண் புகுந்தேன் காப்பது உன் தர்மம் என்றாய். மைத்ரேயி வரவில்லை. முன்பு வந்தாளே! எங்கே போனாள் அவள்? சிநேகிதி, குட்டிப்பெண்ணே, எங்கே போனாய் நீ? தொடர்ந்து பெய்யும் மழை எதை உணர்த்துகிறது என்று அறியாமல் போயிற்று. உன் கட்டுரையில் வார்த்தைகள் வெறும் ஓசைகளாக நீ வெறுமையானாய். எதைப்பிடித்துக்கொண்டு தொங்குவாய் இப்போது? அறிகுறிகள் காணும் சக்தியும் உன்னிடமிருந்து இல்லாமல் போயிற்று. மழைக்காலத்தில் பூத்த மாமரம், குலை தள்ள மறுத்த வாழை, இலைகள் உதிர்த்து நின்ற மருதாணி, விரியும்போது இடியோசை எழுப்பிய மல்லிகை, விழுவதற்கு யத்தனித்து அந்தரத்தில் நின்ற பன்னீர்ப்பூக்கள், பிஞ்சிலேயே முற்றிவிட்ட முருங்கை, பூக்காமலேயே காய்த்த கொய்யா என அறிகுறிகள் லயமற்றுக் குதிக்க, அவை வேறெதையும் உணர்த்த மறுத்து அவையாகவே இருக்க உன் சித்தம் முழுமையாகக் கலங்கியது. சொன்னார்களே ஐயா சொன்னார்களே மனித வேட்கைக்கு ஏற்ப இயற்கை தோற்றம் தருமெனச் சொன்னார்களே ஐயா சொன்னார்களே. நம்பிக்கை வைப்பதற்கான ஒரே ஒரு அறிகுறி தா மைத்ரேயி ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு மண்ணே மண்ணு. போடாப் போடா பொக்கே எள்ளுக் காட்டுக்குத் தெக்கே, சிறுமை கண்டு அயராது இரு மனமே அயராதிரு. மோகத்தைக் கொன்று விடு. ஆசையைக்கொன்று விடு. மைத்ரேயியைக் கொன்றுவிடு. எளியவாம் எல்லோருக்கும் கொல்லுதல் அரியவாம் கொல்லாதிருத்தல். கொன்றுவிடு கொலையே முழுமையான ஆக்ரமிப்பு. கொன்றுவிடு. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு. மழை புயலுடன் கலந்த மழையாயிற்று. உன் கட்டுரையில் புதைகுழிகள் தென்படலாயின. கண்கள் வெடித்துச் சிதறிய கதக்களிக் கலைஞனைத் தெரியுமா உனக்கு?
உணர்ச்சியின் உண்மையில் நம்பிக்கை வைத்தோரே கேளுங்கள்: கொலை மறுத்த உணர்ச்சியின் உண்மை தற்கொலை மட்டுமே. அன்பு, தியாகம் என்ற வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரித்துப் பார்த்தாய். கொன்றுவிடு மைத்ரேயியைக் கொன்றுவிடு. என்கிருந்து கேட்கிறது இந்த அபத்தக் குரல்? உன் புருவங்களுனூடே கொடூரமான வலி ஒன்று ஓட உன் கண்களின் வெள்ளைப்படலத்தில் செந்நிற நரம்புகள் முடிச்சிட்டுக்கொண்டன. உன் விளையாட்டு பற்றிய கட்டுரையில் விளையாட்டுக்குத் தேவையான அக ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் உன்னை மீட்டெடுக்க முயற்சி செய்தாய். அப்போது மழை உள்ளே பெய்ததா வெளியே பெய்ததா என்று உனக்கு நினைவில்லை. இறையனார் அகப்பொருளுரை களவு கற்பு எண்ணிம் கைகோள் இரண்டனுள் களவு சிறப்புடைத்து. பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்த கன்று உறைதல் அறத்தாறு அன்றே. பூப்பு புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிரு நாளும் கூடி உறைய, படுங்குற்றம் என்னோ எனின், பூப்பு புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றிலே அழியும்; இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நிற்கும் கருவுக்கு குறு வாழ்க்கைதாம்; வாழினும் திரு நின்றாம்; அதனால் கூடக்கூடாது என்ப. தமிழ் என்பதற்கே அகப்பொருள் என்றுதான் பொருள். இந்நூல் என் நுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று. விளையாட்டின் வகைகள்: விற்பூட்டு, விதலையாப்பு, வாசிநீக்கு, கொண்டு கூட்டு, ஒரு சிறை நிலை, ஆற்றொழுக்கு முதலிய ஐந்து வகையான சூத்திரக்கிடங்கை விளக்க வேண்டுமா என்ன? இவற்றையெல்லாம் எப்படி இழந்தோம்? எப்படி திரும்பப் பெறப்போகிறாய் நீ? இயற்கையே ஒத்துழைப்பு தா. தயவு செய்து பேசு. விடாமல்ப் பெய்யும் இம்மழை எதற்காகப் பெய்கிறது மைத்ரேயி? கருணையுடன் நடந்து கொள். வாழ்தலை மரணத்திலிருந்து தப்புதல் என்றிருக்கும் எங்களுக்கு எங்கள் சந்ததிகளே எதிர்காலம். மரபுக் கடத்தியின் துணுக்கு சமிக்ஞைகளுக்குள் ஒட்டிச் செல்லும் நீ பலகோடி சந்ததிகளுக்கு அப்பால் உயிர்ப்படையலாம். யாரே அறிவர் உன் உயிரின் உணர்ச்சியை? யாரே அறிவர் உன் உணர்ச்சியின் உயிரை? மைத்ரேயி தயவு செய்து உன் கர்ப்பத்தைக் காப்பாற்று. மகளே மகளே மகளே என்று மீண்டும் மீண்டும் அரற்றினாய். மெய் வரு போகம் ஒக்க உடன் உண்ட அரவு பை அல்குலாரே தயவு செய்து கர்ப்பம் தாங்குங்கள். மைத்ரேயி உன் மேனி வெப்பத்தால் படுக்கை தீய்ந்து போன அந்த இரவினை நினைத்துப் பார். காம வேதனை ஆற்றமாட்டாது கண்களிலிருந்து நீர் பெருகி வழிய, வழிந்த கண்ணீர் கொங்கையின் நுனியிடத்திலே சிந்த, உலைக்களத்திலே எழுகிற புகைபோல பெருமூச்சு வீசியதால் வறண்டு போன மிதிலைக் காட்சிப் படல சீதையைப் போல விளங்கினாயே அதே இரவுதான். அந்த இரவின் பதிவு உயிர் தரிக்கின்ற உடலாய் வெளிவருவதிலுள்ள இன்பத்தை நினைத்துப் பார். அடி மைத்ரேயி எங்கே போனாயடி நீ? விழி தீ சிந்த நின்றாய் நீ. உன்னோடு ரமிக்கையில் புது மணமதுவின் தேறலை ரசித்தவள் இப்போது எங்கே போனாள்? தண்டுதலின்றி ஒன்றித் தலைத் தலைச் சிறந்த காதல் உண்டபின் மெலிந்து துயின்ற மைத்ரேயி எங்கே? மழை பிரளய வெள்ளமாய் உருமாறியது. உன் கட்டுரையில் நீ பாடை கட்ட ஆரம்பித்தாய். வேறு வழியில்லை. சாகவும் இயலாமல் வாழவும் இயலாமல் உழல்கின்ற வேதனையில் தொடர்ந்து அவலத்துடன் இருப்பதை விட அவளைக் கொன்று விட்டுக் குற்ற உணர்வில் சாவது மேல். உன் உடலெங்கும் விஷ நகங்கள் முளைக்க ஆரம்பித்தன. அந்த நகங்களைக் கூர்மைப்படுத்த அரசியலைக் கையாண்டாய்.
முகமற்ற நிழலுருவங்கள் அர்த்தம் பெற, உடல் பெற, வேறு வழியின்றி உன்னோடு சேர்ந்து கெக்கலித்தன. மாயைகளை உருவாக்கி அந்தக் கேவல நிழல்களின் இருப்பை நியாயப்படுத்தினாய். மைத்ரேயின்/மரணத்திற்கு/கொலைக்கான முஸ்தீபுகளை நிழல்களின் மூளை வழி விளையாட்டு வினாக்களாய் ஓட விட்டாய். உன் கட்டுரையில் இது நாள் வரை மறைத்து வைத்திருந்த உன் கோரைப் பற்கள் மெதுவாக வெளித் தெரியலாயின. சிதையின் வெளிச்சம் மட்டுமே வெளிச்சமாய் இருக்க முடியும் என்று போதனைகள் செய்தாய். இனி திரும்பவும் பழைய இடத்திற்குப் போக இயலாது என்ற நிலைமையை உனது போதனையின் பதிவுகள் ஏற்படுத்தின. உன் நிழல்கள் உன்னை வென்றனவா நீ அவற்றை வென்றாயா என்பதை எதிர்காலம் அல்லவா சொல்லும்? உன் எதிர்காலம் உன் மகள் மட்டுமே என்று உணர்ந்திருந்தாலும் அந்த உணர்வின் தாக்கத்தைத் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாய். மைத்ரேயி மைத்ரேயி மைத்ரேயி எங்கே போனாய் நீ? உன் உயிரின் கடிகாரம் மைத்ரேயியின் விநாடிகளோடுத் தேங்கிப் போனது போல இருப்பது மாயை மட்டுமே என்றாள் உன் அம்மா. உன் அம்மா! அவள் மட்டும் உனக்குத் தாயன்பு என்றால் என்ன என்பதை சிறிது காட்டியிருந்தாளேயென்றால் நீ இப்படி ஆகியிருக்க மாட்டாயோ என்னவோ. வேறு யாரை குற்றம் சொல்லி என்ன பயன்? உன்னை நீயே குற்றம் சுமத்தி சுய பச்சாதாபத்தில் ஆழ்வதாலும் என்ன பயன்? வருத்தத்துடன் சிதை வெளிச்சத்தைத் தூண்டிவிட்டு, மனக்கருத்தாக இருந்த மைத்ரேயியை வசியம் செய்து உருவமாய் வெளிக்கொணர்ந்தாய்.
சாவுப்படுக்கை தயாராகிவிட்டது என்று அவளிடம் உணர்ச்சியற்ற குரலில் அறிவித்தாய். அவளும் வசியத்திற்கு ஆட்பட்டவளாய்த் தானே சென்று அதில் படுத்துக்கொண்டாள். ஒரே ஒரு முத்தம் தருவாயா என்று ஆதங்கத்துடன் கேட்டாள். இத்தனை நாட்கள் காணாமல் போனபோது நீ இதே போல எத்தனை தடவை கதறியிருப்பாய் என்ற நினைவில் பதிலளிக்க மறுத்தவனாய் திரும்பி நின்று கொண்டாய். ஒரே ஒரு முத்தம் என்றாள் மைத்ரேயி மீண்டும். அதன் பின் கொன்று விடு என்று முணுமுணுத்தாள். மழை யாருக்கும் பயனற்று தொடர்ந்து பெய்தது. உன் கட்டுரைகள் அரசாங்கத்திற்கு ஆதரவானவை என்ற அறிவிப்பு வெளியாகியது. உந்தன் சாவினைப் பற்றி மைத்ரேயி அக்கறை கொள்ளாது காணாமல் போனபோது நீ மட்டும் அவளின் சாவைப் பற்றி கவலைப்படுவதேன்? என்ன ஆயிற்று உன் அக ஒழுக்கம்? எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும், எல்லாவற்றையும் இழந்த நிலையிலும், தாங்க முடியாத அவதிக்குள்ளானபோதிலும், நீ கொல்ல மறுத்தாய். மைத்ரேயி என்று கதறி மைத்ரேயியை சிதையிலிருந்து தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாய். உன் முதுகுத் தண்டில் அவளின் தாப நகங்கள் கீறின. புத்தனே, புத்தனே என்று அரற்றினாள். உண்மை எது பொய் எது என்று அறியா நிலையில் பைத்திய ரேகை முகத்திலோட நகைத்தாய். புதிர்களோடும், அவலங்களோடும், சந்தேகங்களோடும், நம்பிக்கையற்ற தன்மைகளோடும் கொல்ல மறுத்து உயிர்போற்றிய உன் நகைப்பொலி கேட்டு மழை சடாரென்று வெறித்தது. உன் நகைப்பொலியை கட்டுரையில் பிரதி செய்த தொந்தி பெருத்த சிரிக்கும் மைத்ரேய புத்தர்கள் உருவானார்கள். சிரிக்கும் புத்தர்களின் உருவங்களைக் கண்டு குழந்தைகள் சிரித்தன. உயிரின் நீட்சி சிரித்தது. சிரிக்கும் புத்தர்கள் எல்லா இடங்களிலும் தோற்றம் பெற ஆரம்பித்தனர். மைத்ரேய புத்தா மைத்ரேய புத்தா என்ற குரல்களின் எழுச்சியில் உடல்கள் ஜீவத் துடிப்பின் சௌந்தரியத்தைப் பெற்றன. அந்த சௌந்தரியத்தின் ஒளி வழங்கிய மகிழ்ச்சியில் உன் விளையாட்டு பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடித்தாய்.
--------------------------------
கல்குதிரை 1989
நன்றி: எம்.டி.முத்துக்குமாரசாமி தளம்
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.