Jun 25, 2011

கட்டிலை விட்டிறங்காக் கதை - புதுமைப்பித்தன்

(நான் பாளையங்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது சில ஏடுகள் மிதந்து வந்தன. உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தவன், ஒன்றை எட்டி எடுத்துக் கவனித்துப் பார்க்க, கதை மாதிரி தெரிந்ததால், கிடைத்ததை எல்லாம் சேகரித்து வாசித்தேன். தேறினது இந்தக் கதைதான். இந்த ஏட்டுக்கு ஆதாரமோ, நான் சாக்கிரதைக் குறைவாக மிதக்கவிட்டுவிட்ட கதையின் முற்பகுதியோ pudu5 இனிமேல் கிடைக்காதாகையால், இது விக்கிரமாதித்தன் கதையென்று வழங்கும் கதைகளில் இதுவரை வெளிவராத பாடம் என்பதுடன் இவ்வாராய்ச்சியை முடித்துக் கொள்ளுகிறேன். தெரிந்தவர்கள் தொடர்க.)

முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை சொல்லிய கட்டிலை விட்டிறங்காக் கதை

நேம நிஷ்டைகள் (ஏடுகள் சிதிலமானதனால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை) செபதபங்கள் யாவும் முடித்து, பார்ப்பனர்களுக்கும் பரிசனங்களுக்கும் கோதானம், பூதானம் வஸ்திரதானம் யாவும் குறைவறக் கொடுத்து, தம் மந்திரிப் பிரதானிகள் சூழ, தோகையர் பல்லாண்டிசைப்ப ஜாம்ஜாமென்று கொலுமண்டபத்திலே புகுந்தருளி, சிங்காதனத்துக்கு அபிடேக ஆராதனைகள் யாவும் முடிப்பித்து, போச மகாராசனானவன் அந்தச் சிங்காதனத்திலே ஏறி அமர்வதற்காகக் காலடி வைப்பானாயினான்.

முப்பத்தேழாவது படியின்மீது அவன் கால் நிழல் பட்டவுடன் முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை அட்டகாசமாய்ச் சிரித்து... வாரீர் போச மகாராசரே, உமக்கு இந்தச் சிங்காதனம் அடுக்குமோ, இது விக்கிரமாதித்த ராசாவானவர், பட்டி என்கிற மந்திரியோடு, காடாறு மாதமும் நாடாறு மாதமுமாய் அறுபத்தீராயிரம் வருஷம் வரை, மனு நெறி தவறாது, புலியும் புல்வாயும் ஓரிடத்துறையும் பெற்றி வழுவாது, அபேதமாக, அபூர்வமாக அட்டமா திக்குகளையும் கட்டியாண்டு, மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாது நடந்தமை அறியீரோ! அந்த மகாராசனுடைய கீர்த்தி வல்லபங்களிலே ஆயிரத்தில் ஒரு பங்காவது உமக்கு உண்டோ எனக் கை மறித்தது.

போச மகாராசனும், 'ஓகோ இதேது! அதிசயமாகத் தோணுது! மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாத செங்கோலாவது!' என அதிசயித்து, அன்று இரவு தான், நடுச்சாமத்திலே, பேயும் உறங்கும் நள்ளிரவிலே, தன் பட்டமகிஷியானவள் சப்ரமஞ்சத்திலே, தாதியர் சிலர் வீசவும், சிலர் பனிநீர் தெளிக்கவும் உறக்கம் செய்யும் சமயத்திலே ஓஹோவெனப் பதைத்தபடி, ஊர்ப் பேய் பிடித்தவள் போலவும், உன்மத்தம் கொண்டவள் போலவும் கூக்குரலிட்டோலமிட, தான் வீரவாள் எடுத்து, அந்தக் கிருகத்தில் அந்த நேரத்தில் ஆரோகணித்துப் பிரவேசித்து, "என் பட்டத்து ராணியே, பாக்கியவல்லியே, நாட்டின் குலக் கொழுந்தே, என்ன உனக்குச் சம்பவித்தது?" என்று கேட்டும் பதில் வராததனால், கட்டிலைத் தடவி, மூட்டையொன்று விழித்து நிற்கக் கண்டு, கட்டைவிரலால் நசுக்காமல், கட்கத்தினால் கொன்ற சேதி நினைவுக்கு வர, திகைத்துப் பதைத்து அருகில் நின்ற மந்திரி சுமந்திரனை விளித்து, "மூட்டையைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் உண்டா? மூட்டைக்கு மனு நெறி உண்டா? சொல்லும், சொல்லும்" என்று கேட்க, மந்திரி சுமந்திரனானவன், ஏதேது, தம் தலைக்குத் தீம்பு வந்ததென்று திட்டப்படுத்திக் கொண்டு தெண்டனிட்டு, "ராச்சிய பாரத்திலே பலவிதமுண்டு.

தேசந்தோறும் ராசமும் (ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்) மாறும்; கையில் வெண்ணெய் வைத்து நெய்க்கு அழுவாருண்டோ ? இப்பேர்க்கொத்த அதிசயங்களையும் சொல்லற்கொத்த அதிமோகனப் பதுமை இருக்கும் போது, பறையறைந்து, பார்ப்பனர்களைக் கூட்டுவித்துச் சாஸ்திர விசாரம் செய்து தேவரீர் திரு நேரத்தை வீணாக்குவாருண்டோ ? நான் சுமந்திரனல்லவா? அப்பேர்க்கொத்த ஆலோசனை சொல்லுவேனா?" என்று தலைவணங்கி நின்றான். "சவாசு, சவாசு, மந்திரி சுமந்திரனாரே! நீர் சொன்னது ஆயிரத்துக்கு ஒரு வார்த்தை! அதைத் தெரிந்துதானே, நாம் உமக்கு மந்திரிப் பதவி தந்தோம்? இந்தாரும் உம் புத்திக் கூர்மைக்கு மெச்சியும், நம் சந்தோஷத்தைத் தெரிவித்தும், தருகிறோம்.

இந்த முத்து மாலையை அதை நீரே நேரே சென்று நும்முடைய பத்தினிக்குக் கொடுத்துவப்பீர்" என்று கட்டளையிட்டுவிட்டுப் பதுமையைப் பார்த்து, வாராய் முத்துமோகனவல்லிப் பதுமையே, உங்கள் விக்கிரமாதித்தன் மூட்டைப் பூச்சிக்கு முறைமை வழுவாது நடந்தமை சொன்னீரே; அதன் வயணமென்ன?" என்று குத்துக்கால் போட்டு, குடங்கையிலே மோவாயை ஊன்றிக் குனிந்து நின்று கேட்டான். அதற்கு அந்த முத்து மோகனப் பதுமையானது, "விக்கிரமாதித்த ராசா கதை என்றால் விடுகதையா விட்டுச் சொல்ல; பொட்டென்று மறக்க? நீர் இந்தப் படியில் இப்படி அமரும்; நான் சொல்லுகிறேன். காது கொடுத்துக் கேளும். இடையிலே கொட்டாவி விட்டால், நட்டாற்றில் சலபானம் பண்ணியவன் பாவம் வந்து சம்பவிக்கும்...

(இதிலிருந்து பத்து ஏடுகளைக் காணவில்லை) ...லே, நாமகள் திலதம் போலும், நாரணன் நாபி போலும், அட்டகோண யந்திரத்தின் மையக் கோட்டை போலும், செம்பாலும் இரும்பாலும் கல்லாலும் கருத்தாலும் கட்டிய நகரம் ஒன்றுண்டு. அதற்குப் பகைவர்கள் வரமாட்டார்கள். பாவம் அணுகாது. பசியும் அணுகாது. அதன் கோட்டை வாசலோ எண்ணூறு யானைகளை வரிசையாக நிறுத்தினாலும், அதன் பிறகும் ஒரு பாகம் இடம் கிடக்கும். அந்தக் கோட்டைக் கதவுகள் வயிரத்தினால் ஆனவை. இரவில் கோடி சூரியப் பிரகாசம் போலச் சுடர்விட்டு, நூற்றிருபது காதத்துக்குப் பகைவர்கள் வந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்; பட்டப்பகலிலோ என்றால், அவர்கள் கண்களைக் கூசவைத்துப் பொட்டையாக்கித் திக்குத் தெரியாமல் அலைந்து, முதலைகளும் சுறா மீன்களும், எங்கே, எங்கே என்று நடமாடும் அகழிக்குள் விழுந்து, தம் ஆயுசைப் போக்கும்படி செய்விக்கும்.

இப்பேர்க்கொத்த கோட்டை வாசலை உடைத்தாயிருக்கிறதனாலே, இந்தப் பட்டணத்துக்கு மாந்தை என்று பெயர். கேளாய் விக்கிரமார்க்க அரசனே, இதற்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லுவார்கள். இந்தப் பட்டணத்து மாந்தர்கள் மன்னர் இட்ட கட்டளையை மறவாது, மறையாது, ஒழுகி வந்ததனால், மந்தைபோல் நடக்கும் மாந்தர் வாழ் சாந்தமாம் நகர் இச்செகதலத்திலுண்டோ ? நீர் ஒரு முறை வாரும், அந்த ஊரைப் பாரும். தேவலோகத்து அளகாபுரியும், குபேரபட்டணமும், பூலோகத்து அத்தினாபுரியும் அதற்கு ஈடாகா. அதில் இல்லாதன இல்லை என்றால் முற்றும் உண்மை, முக்காலும் உண்மை. அந்தப் பட்டணத்திலே, முந்தையோர் வரம்பின் முறைமை வழுவாது, மனு நெறி பிசகாது மன்னவனாம் தென்னவனுக் கிளையான் இணையாரமார்பன், அஜமுகன் என்பான் அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறாயிரம் பத்தினிமாரும், அதற்கு இரட்டிப்பங்கு வைப்பாட்டிமாரும் உண்டு.

அந்த ஐம்பதினாயிரவரில், அவனுடைய கண்ணுக்குக் கண்ணாக, கட்டிக் கரும்பாக, நகத்திற்குச் சதையாக, பூவுக்கு மணமாக, பத்தினிப் பெண்களிலே பதுமினிப் பெண்ணாய், கண்ணால் பார்க்கவும் மயக்கம் போடும் மோகலாகிரி தரும் - அஜமுகி என்பவள் ஆசைக்குகந்த பட்ட மகிஷி. வாஞ்சைக்குகந்த வஞ்சிக் கொடியாளுக்குப் பிள்ளையே பிறக்காமல், சிங்காதனச் சிறப்புக்கு ஆண் வாரிசே அளிக்கமாட்டேன் என்று தெய்வங்கள் யாவும் ஒன்று கூடிச் சங்கற்பித்தது போலவும், பட்டமகிஷியின் பேரிளம் பெண் பருவத்தையும் வெகு துரிதத்தில் ஓட்டி விரட்டியடித்துக் கொண்டு போவான் போல, காலதேவன், நாட்களை வாரங்களாகவும் வாரங்களைப் பட்சங்களாகவும் பட்சங்களை மாதங்களாகவும் மாதங்களைப் பருவமாகவும் பருவங்களை வருஷங்களாகவும் நெருக்கிக் கொண்டு வரவும், வயிற்றுக்குப் பாரமாகப் பிறந்த வைப்பாட்டிப் பிள்ளைமார்கள் நாள் தவறாமல் படித்தரம் பெற்றுப் போக, பட்டி மண்டபத்தில் முட்டி மோதுவதைக் கண்டு ஆறாச் சினமும் அளவிலாப் பக்தியும் கொண்டவனாகி, அதிவீர சூர பராக்கிரம கேதுவான அஜமுகன் என்ற செகதலம் புகழும் மகிபதி, அவனியில் உள்ள சாத்திர விற்பனர்கள் யாவரையும் கூட்டுவித்து, "ஐயன்மீர்! கடையேன் கடைந்தேற ஒரு வழி அருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொள்ள, சகலகலா வல்லவனும், அட்டமா சித்தியில் கெட்டிக்காரனுமான சித்தவல்லப சிரோன்மணி யொருவன் சபாமண்டலத்தே எழுந்தருளி நிமிர்ந்து நின்று, "புவித்தலம் முழுதும், கவித்தொரு குடைக்கீழ், செவித்தலம் தன்னிற் பவத்துயர் கேளாது செங்கோல் நடாத்தும் அங்கண்மா ஞாலத்து அதிவீர மன்னா, நம் சயனக்கிருகத்தில், வடதிசை கிடக்கும் சப்ரமஞ்சக் கட்டிலின் சாபமே நுமக்குப் பிள்ளைப் பேறு வாயாதது; கட்டிலை அகற்றி, கானகத்தின் கீழ்த் திசையில், கருங்காலியும் சந்தனமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கிறது; அதை வெட்டிக் கட்டிலாக்கிக் கால் நீட்டிப் படுத்தால், பத்தாம் மாதம் ஆண் மகவு நிச்சயம்" என்று சொல்லாநிற்க, அத்துறவிக்குப் பசிப்பிணி போக்க மடமும் மான்யமும் கொடுத்து, சைத்தியோபசாரம் செய்விக்கச் சேடிப் பெண்கள் அறுநூற்றுவரையும் உடனனுப்பினான். பிறகு முரசறைவித்து, 'காட்டிலே கருங்காலியும் சந்தனமும் கட்டித் தழுவி வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து தருவோருக்கு ஆயிரம் பொன் பரிசு' என்று பரிசனங்களிடையே சொல்லச் சொல்லி, தச்சர்கள் யாவரையும் அழைப்பித்துக் கட்டில் செய்ய ஆணையிட்டான். காட்டிலிருந்து மரமும் வந்தது. கட்டிலும் செய்து முடித்தார்கள்.

அப்பொழுதுதான் அரசே, நாங்கள் இருவரும் அந்தக் கட்டிலின் குறுக்குச் சட்டத்தின் கீழ் ஈசான திசையில் இருந்த சிறு பொந்தில் குடிபுகுந்தோம். விக்கிரமாதித்த மன்னா வெற்றிவேல் அரசே, நாங்கள் காலெடுத்து வைத்த நேரம், காலன் கரிக்கோடு போட்ட நேரம் போலும்! என்று அந்தப் பெட்டை மூட்டைப் பூச்சி ரெட்டைச் சொட்டுக் கண்ணீர் சிந்தி விட்டு, பட்டியைப் பார்த்துப் பெருமூச்சுவிட்ட விக்கிரமார்க்க மகாராசாவை நோக்கித் தன்னுடைய துயரக் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.

     தச்சன் வீட்டுத் தடுக்கின் இடுக்கில் பசிக்கு வேளாவேளை எதுவும் கிடைக்காமல், தச்சக் குழந்தைகளின் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் பயந்து நித்திய கண்டமும் பூர்ண ஆயுசுமாகத் தவித்து வரும் நாளில், சந்தனக் கருங்காலி சப்ரமஞ்சக் கட்டில் அதிர்ஷ்டம், எங்களுக்குத் தந்த பேருபகாரமாக, தெய்வம் கொடுத்த வரமாக, எங்களை வாழ்வித்தது. பிறகு கேட்பானேன்? மன்னா, மல்லிகை மொக்கும், பனிநீர்ச் சந்தனமும், பக்குவமான ராச ரத்தமுமே எங்களுக்குக் கிடைத்துவந்தன. என் கண்ணுக்குக் கண்ணாளரும் மூட்டை வம்ச மன்மதனுமான என்னுடைய கட்டழகன், கருநாவற்பழம் போலும், காட்டீச்சைப் பழம் போலும், முதிர்ந்து கனிந்த களாப்பழம் போலும், மேனி பொலிந்து, வண்ணம் மிகுந்து, நடை நிமிர்ந்து என் உயிரைக் கொள்ளை கொண்டதுடன், மாந்தை நகர் மூட்டைக் கதிபதி காட்டு வீரப்பன் என்ற விருதெடுத்து அண்டாண்ட புவனங்களையும் கட்டியாண்டார். கோவணாண்டிகள் குபேரபட்டணத்து வாரிசாகப் போன கதையாக நாங்கள் புகுந்து விட்டாலும், தெய்வம் கொடுத்த திருவரத்தால் நியம நிஷ்டைகள் பிறழாது, ஆசார சீலம் அகலாது வாழ்ந்துவரும் நாளில், ஒருநாள் என் கணவர் முகம் சோர்வுற்று, நலங்குலைந்து, முடுக்கில் ஒண்டிக் கிடந்ததைக் கண்ணுற்று, "மூட்டைக்கரசா, என் ஆசைக்குகந்த ஆணழகா, கவலை என்ன?" என்று கால் பிடித்துக் கேட்டேன். அதற்கு அவர், "என் பத்தினிப் பெண்ணே, அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து கெட்டுக் குட்டிச் சுவராகப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா, தீர்த்த விசேடம் தரிசித்து வருவோமா என்று கருதுகிறேன்" என்றார். நான் அதற்கு, "அரசே, நேற்றிரவு நான் பசியாற்றப் பவனி சென்றபோது பட்டமகிஷி, மன்னவன் தங்கபஸ்பம் உண்டதனால் உள்ள அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தாள். நீர் போய், மன்னவன் துடையில் நாலு மிடறு ரத்தம் பருகிவாரும். பிறகு யோசிப்போம்" என்றேன். என் கணவரும் என் புத்திக்கும் மெச்சி, "கெட்டி கெட்டி! நீயொருத்தியே, இந்த ராச்சியத்திலே எனக்கு ஏற்பட்ட பட்டகிஷி. இனிமேல் எனக்கு மந்திரி ஏன்?" என்று என்னைக் கட்டித் தழுவிவிட்டு வெளியே சென்றார். நானும் என் வாயில் திருடிக் கொணர்ந்த சந்தனத்தைப் பூசி, வாசனையிட்டு அலங்கரித்து என் மன்மதனார் வரவுக்காக காத்திருதேன். கணப்பொழுது கழிந்ததோ இல்லையோ, என் கணவனார் பகையரசரைக் கண்ட பட்டாளம் போலும், மந்திரவாதியைக் கண்ட தந்திரப் பேய் போலும் திடுதிடு என்று ஓடிவந்தார். நானோ பதறிப் போய் என்ன என்ன என்று பயந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன். "பெண்ணே, என் பதுமினிக் கண்ணே! பதறாதே. பெண் புத்தி கேட்பவன் பின்புத்திக்காரன் என்று சொல்லுவார்கள். அது வாஸ்தவமாகப் போய்விட்டது. ஆனால் உன் தாலிப் பாக்கியத்தால் நான் இன்று தப்பிப் பிழைத்தேன். நீ பத்தினி என்பதற்கு இது ஒன்றே போதும். முதலில் நம் ராச்சியபாரத்துக்கு ஒரு மந்திரியை நாளை காலையிலேயே அமர்த்தி வைத்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும்" என்றார். "அது கிடக்கட்டும், அரசே! நாளை விஷயம் நாளையல்லவா கவனிக்க வேண்டும். இன்னும் நாளை வர நாழிகை எத்தனையோ கிடக்கிறதே. நடந்த கதை என்ன இப்பொழுது சொல்லலாமே?" என்று நான் கேட்டேன்.

     அதற்கு அவர், "இப்பொழுது நான் போன நேரம், சகுனப் பிழையோடு, நேரங்கெட்ட நேரமுமாகும். கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டியதாப் போச்சு. என்னடா கர்மகாண்டம் என்று பகவத் கீதையில் நாலு சுலோகத்தை உச்சரித்துக் கொண்டே காலிருக்கும் இடம் என்று நினைத்துக் கொண்டு உத்தேசமாகச் சென்று கடித்தேன். அது பிருஷ்ட பாகம். என்னவோ சுருக்கென்றதே என்று மன்னன் எழுந்திருக்க, நான் சற்று விலகாமற் போயிருந்தால் நசுங்கியே போயிருப்பேன். மன்னன் அசங்க, மகாராணி கைகளைக் கட்டிலிலே ஊன்றினாள். அவளுடைய மோதிரத்துக்கிடையில் ஏறி ஒளிந்துகொண்டேன். பிறகு மன்னனும் ராணியும் கட்டிலைத் தேடுதேடென்று தேடினார்கள். அவர்கள் இருந்த நிலையை என்னால் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டே காயத்திரி ஜபித்துக் கொண்டு இருந்தேன். பிறகு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு சல்லாபமாகப் பேசுகையில், "மூட்டையாக இருக்கும்" என்றாள் பட்டத்து ராணி. அதற்குக் கீர்த்திவாய்ந்த அந்த மகிபதியானவன், "பெண் புத்தி என்பது பின்புத்தி என்ற ஆன்றோர் வாக்கு உன் விஷயத்தில் முற்றும் பொருந்தும். செகதலம் தாங்கும் மகிபதி கட்டிலில், பட்ட மகிஷிக்குத்தான் இடமுண்டேயல்லாமல் மூட்டைப் பூச்சிக்கு இடம் உண்டா? விவரம் தெரியாமல் பேசுகிறாயே! அதிருக்கட்டும். இந்த மாதம் மாதவிடாய் நின்றுவிட்டதா?" என்று கேட்டான். அதற்கு அவள், "அரசர்க்கு அரசே, தாங்கள் சொல்லுவது என் விஷயத்தில் முற்றும் பொருந்தும். நான் பெண்தானே? இருந்தாலும், மாதவிடாய் குறித்துத் தாங்கள் கேட்டது அவசரப்பட்ட கேள்வி. கட்டில் வந்து இருபத்தைந்து நாளும் பதினெட்டு நாழிகையுந்தான் கழிந்திருக்கின்றன; அதற்குள் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் மீண்டும் கைகளை ஊன்றினாள். நான் இதுதான் சமயம் என்று தப்பி ஓடி வந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு, நெற்றியில் வடிந்த வியர்வையை ஆள்காட்டி விரல் கொண்டு வடித்து, 'சொட்டி' தரையில் முத்துப் போல் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "என் அருமைக் கதிர்ப்பச்சையே, என் ஆட்சியின் அணிகலனே, நெஞ்சு 'படக்குப்படக்கு' என்று அடித்துக் கொள்ளுகிறது. உன் மடியில் தலையைச் சற்றுச் சரிக்கிறேன்" என்று படுத்துக் கொண்டார். நான் வெளியே உலாவச் சென்றிருந்தபோது திருடி எடுத்துக் கொண்டு வந்திருந்த பனிநீர் தெளித்து வீசினேன். கண்ணயர்ந்தாற்போல் படுத்திருந்தார். எனக்கோ, அவர் ரத்த பானம் பண்ணினாரா, தங்கபஸ்பம் கலந்த ரத்தம் எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். மெதுவாக அவரை உசுப்பிக் கேட்க, என் மூட்டைக்கு அதிபதி சொல்லுவார்:

     "கேட்டாயோ பத்தினியே, ரத்தம் உண்டது நினைவிருக்கிறது, ஆனால் ருசி நினைவில்லை; பயத்தில் மறந்தே போச்சு. நாளை காலையில் நமக்கு ஒரு மந்திரியை நியமித்த பிற்பாடுதான் அந்தக் காரியத்தைக் கவனிக்க வேண்டும்; அது நம்முடைய ராச்சியத்துக்குட்பட்ட எல்லையானாலும் அன்னிய அனுபோகமாச்சே, ஆருயிருக்கு அச்சமாச்சே! மந்திரி சொல்லாமல் தந்திரம் பண்ண முடியுமா?" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். எனக்கோ ருசி எப்படி என்று தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்தது. புருஷதிலகத்தின் சிரசை மெதுவாகத் தூக்கி ஆடாமல் அசங்காமல் வைத்துவிட்டு எங்கள் அரண்மனையைவிட்டு வெளியே வந்தேன். மெதுவாகப் படுத்துக் கிடந்த தோள்பட்டையண்டை நெருங்கினேன். இருந்தாலும் சங்கோசமாக இருந்தது. பர புருஷனல்லவா? தொடாமல் எப்படி ரத்தம் பருகுவது? என் ஆசைக் கணவர் என்னை அருந்ததி என்று அழைத்தது ஞாபகம் வர, ஓடோ டியும் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். கற்பிழப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்றல்லவா? பெண் புத்தி பின்புத்திதானே? இந்தச் சமயத்தில் அது சற்றே முன்புத்தியானது, பூர்வ ஜன்ம வாசனைதான்.

     மறுநாள் காலை என் மூட்டையழகர் நியம நிஷ்டைகளை எல்லாம் முடித்துவிட்டு, எங்கள் அரண்மனை முற்றத்திலே சற்று நேரம் கொலுவீற்றிருந்தார். வெயில் 'சுள்' என்று காய்ந்து வெளி வாசலை எட்டியவுடன், வழக்கம் போல நாங்கள் எங்கள் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவரப் பவனி புறப்பட்டோ ம். யமன் திசையில் கொஞ்ச தூரம் போகையிலே, வாடி வதங்கித் தள்ளாடி நடந்த மூட்டைப்பூச்சி ஒன்றைக் காண, நான் சங்கோசப்பட்டு என் கணவரின் பின்புறமாக ஒதுங்கி நின்றேன். உடனே என் கணவரானவர், அட்டகாசமாக ஆரோகணித்து நின்று, "அகோ, வாரும் பிள்ளாய், தள்ளாடித் தவிக்கும் புதியவரே, உமக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கண் பொட்டையாங் காணும்! நாம் இந்த மூட்டை ராச்சியத்துக்கு மணிமுடி தரித்த மன்னவன் காணும்; காலில் விழுந்து தெண்டனிட்டு நமஸ்காரம் செய்யும். நாம் உமக்கு உயிர்பிச்சை தந்தோம்; அஞ்சாதீர்" என்றார். அதற்கு அந்தப் பரக்கழி மூட்டைப்பூச்சி, 'அக் அக்' என்று சிரித்து, "முடிமன்னரே, நீர் செங்கோல் நடத்த மருந்துக்குக்கூட பரிசனங்கள் உம் ராச்சியத்தில் கிடையாதா? நானும் நாலு நாழிகையாகச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்; சுஜாதி வர்க்கத்தில் ஒருத்தரையும் காணவில்லையே!" என்றது. மீசை கோபத்தில் துடித்தாலும் அடக்கிக் கொண்டு, "உம்முடைய முதல் பிழை பொறுத்தோம். பரிசனங்கள் இல்லாவிட்டால் ராச்சியம் ஆள முடியாது என்று எந்தச் சாஸ்திரத்தில் படித்தீர்? நாங்கள் ஆண்டுகொண்டிருப்பதைத்தான், இதோதான் நேரில் பார்க்கிறீரே, நமக்கு ஒரு மந்திரி தேவை. உமக்கு வேலை பார்க்க இஷ்டமா?" என்று என் கணவர் அதட்டிக் கேட்க அந்தப் பரக்கழி காலில் விழுந்து 'அபிவாதயே' சொல்லியது; அத்திரேய கோத்திரமாம்; அஷ்டசஹஸ்ரம்; நாலு சாஸ்திரமும் ஆறுவேதமும் படித்த வைதிக வித்து; ஆனால் பிரம்மசாரி. புராதன காலத்திலிருந்தே அமாத்தியத் தொழிலில் பிரக்கியாதி பெற்ற குடும்பமாம்; மந்திரி வேலையையும் போக ஒழிந்த வேளைகளில் வைதிக கர்மாக்களையும் செய்து கிடப்பதற்காக, அவனைத் திட்டம் பண்ணி அமர்த்தினார்.

     காலை எழுந்தவுடன் கொலு மண்டபத்திலிருந்து என் மன்னர் செங்கோல் செலுத்துவது கண் நிறைந்த காட்சியாக இருக்கும். "அகோ வாராய் மதிமந்திரி! மாதம் மும்மாரி பெய்து வருகிறதா?" என்று கேட்பார். அமாத்திய குலதிலகமான மந்திரி சுமந்திரனும், "ஆம் அரசே, நுங்கோலே செங்கோல்" என்று தெண்டனிட்டுத் தெரிவிப்பான். பிறகு இரண்டு பேருமாய் வெளியே போய் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவிட்டு வருவார்கள். இப்படி வெகு காலமாக அரசாட்சி பண்ணி வந்தோம்.

     அப்படியிருக்கையில் ஒரு நாள் மந்திரி சுமந்திரனானவன், "ராஜ்யம் என்றால் பரிசனங்கள் இருக்க வேணும். அவர்கள் வந்து திறை கொடுக்க வேணும்; நாம் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அலங்காமல் ராஜ்யபாரம் பண்ணவேணும்; அதுதான் மன்னனுக்கு அழகு; மேலும் பட்டமகிஷியாருக்குச் சேடிப் பெண்கள் வேண்டாமா? தன்னந்தனியாக எத்தனை நாள்தான் தாமே சீவி முடித்துச் சிங்காரித்துச் சிரமப்படுவார்கள்? நான் போய்ப் பரிசனங்களைக் கூட்டி வருகிறேன்" என்று சமுகத்தில் செப்பியது; மன்னனும் என்னைப் பார்த்துச் சரிதானே என்று தலையசைத்தார்.

     எங்கள் விருப்பம் தெரிந்ததுதான் தாமதம். அந்த விவேகியான மந்திரி கணப்போதில் கோடானுகோடி பரிசனங்களைக் கட்டிலில் கொண்டுவந்து நிரப்பிவிட்டது. எனக்கு அறுபதினாயிரம் சேடிப் பெண்கள். எனக்குக் களைப்பாயிருந்தால் எனக்குப் பதிலாகக்கூடச் சுவாசம் விடுவார்கள், சாப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு பணிவிடை. இந்த மாதிரியாக ராச போகத்தில் இருந்தபோது ஒருநாள் நான் என் சேடிப் பெண்களுடன் ரத்தபானம் செய்யப் போனேன். ராணியின் தோள்பட்டையை உறிஞ்சிப் பார்த்தேன். ரத்தம் வேற்றாள் மாதிரி ருசி வேறாக இருந்தது. ஆண்களே இப்படித்தான் என்று மனம் கசந்து கணவர் மீதும் கோபம் வர ஊடலுடன் வந்து அரண்மனைக்குள் ஒண்டி இருந்தேன். அவருடன் பேச்சுக் கொடுக்கக் கூடாது, அவரும் ஒரு புருஷந்தானே என்று இருந்தேன்.

     அச்சமயத்தில் என் கணவர் படபடவென்று உள்ளே ஓடிவந்தார்.

     "இந்த மானிட வம்சத்திலேயே யோக்கியமான பெண்ணைப் பார்க்க முடியாது போலிருக்கிறது! நான் இன்று போய் ரத்தபானம் செய்ய முயன்றேன். ருசி வேறாக இருந்தது. என் பத்தினியே, நீயே பாரு, மனித ஜந்துக்கள் எவ்வளவு கேவலம்!" என்று அவர் சொல்ல, எனக்குக் கோபம் பின்னும் அதிகமாயிற்று. அவர் பிற பெண்ணையும் என்னைப் போல் ஸ்பரிசித்துவிட்டு, ஆள்மாறாட்டமாகத் தப்பு நினைப்பு வேறு வைத்துக்கொண்டு பெண்பழி வேறு சுமத்துகிறார். எனக்கு அன்று ரத்த ஆசை இருக்கத்தான் செய்தது. கண்மூடித்தனமாகப் போய்ப் பிற புருஷனைத் தொட்டேனா? குருட்டுத் தனமாக நடந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் பெண் பழி வேறு சுமத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது? பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பெண்கள் மீது அவருக்கு இருந்த அபார கோபத்தினால் ஊடலாக்கும் என்று நினைத்துக் கொண்டு வெளி வாசலுக்குப் போனார். அமாத்திய சுமந்திரன் ஓடோ டியும் வந்தான். "அரசே, அரசே, நாம் நினைத்தது வீண்தோஷம். ராச்சியம் கைமாறி இருக்க வேண்டும்; கட்டிலில் படுத்துத் தூங்குவோர் ரெண்டு பேருமே வேறு" என்று தெண்டனிட, என் ஊடல் தணிய, அவர் சினம் ஆற, நாங்கள் சமாதானமானோம். எப்படியிருந்தாலும் தொட்டுத் தாலி கட்டின நேசம் போகுமா?

     நாங்கள் இருவரும் சயனித்துக் கண்ணயர்ந்துவிட்டோம். நடுச்சாமம் இருக்கும். எங்கள் கொலு மண்டபத்தில் கடல் பொங்குவது போலப் பெரிய இரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தோம். மன்னர் அது என்னவென்று கேட்டுக்கொண்டே வெளியே போனார். நானும் தொடர்ந்து போய்க் கதவுக்குப் பின்பக்கமாக ஒதுங்கி நின்று கேட்டேன்.

     எங்கள் பரிசனங்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களில் மூப்பும் மொய்ம்பும் மிகுந்த அறிவாளி ஒருவர், மன்னர் முன்சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு, "மன்னாதி மன்னா, செகதலம் புகழும் மகிபதி, எங்களுக்கு உயிர்பிச்சை அருள வேண்டும்; முட்டைக் கடி பொறுக்காமல், கட்டிலை வெந்நீரிலிட அங்கே உத்தரவகிவிட்டது. எங்களை எப்படியாவது ரக்ஷிக்க வேணும்" என்று கெஞ்சினார்.

     மந்திரிமேல் மன்னருக்குக் கோபாவேசம் பொங்கியது.

     "அட அப்பாவிப் பிராமணா, அமாத்தியன் என்று சொல்லிக் கொண்டு என் ஆளுகைக்கே ஆபத்தைக் கொண்டுவந்து விட்டாயே! பரிசனங்கள் இல்லாத காலத்தில் நாங்கள் சந்தோஷமாக ராச்சியபாரம் பண்ணவில்லையா? இப்பொழுது இவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து கொல்லப் போவதும் அல்லாமல், எனக்கும் என் பத்தினிக்கும் பிராணபத்தைக் கொண்டுவந்துவிட்டாயே. நாட்டைவிட்டு ஓடிய ராசனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வா, போய் ஒற்று விசாரித்து வருவோம்" என்று அவரையும் அழைத்துச் சென்றார்.

     விக்கிரமார்க்க மகிபதியே, அவரைக் கடைசியில் உயிரோடு பார்த்தது அதுவே. மன்னர் மன்னவா! எனக்குத் தாலிப் பிச்சை தரவேண்டும். அவருடைய உடல் நசுங்கிக் கிடந்தது இன்னும் என் கண்முன் நிற்கிறதே, தெய்வமே! அவர் உயிரைக் கொடும். அல்லது நான் உமது ஈட்டியில் கழுவேறி உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று அந்த மூட்டை பத்தினியானது விக்கிரமார்க்க ராசனுடைய ஈட்டி முனைமேல் ஓடி ஏறி நின்று, தன் உடல் போதுமான கனமில்லாமையால் உயிர்விட முடியாமல் தவிக்க, மன்னர் மன்னவனும் அதற்கு அபயம் அளித்து, "பெண்ணே, பயப்படாதே; நாங்கள் இப்பொழுதுதான் காடாறு மாதம் தொடங்கியிருக்கிறோம்; உன் புருஷன் உயிரை மீட்டுத் தருகிறோம்" என்று உத்தாரம் கொடுத்து விட்டு, மன்னர் மன்னவன் பட்டியைப் பார்த்து, "வாரும் பிள்ளாய், நும் யோசனை என்ன? கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காரியம் கூட்டுவோமா அல்லது மந்திரவாள் எடுத்துக் கதையை முடிப்போமா?" என்று கேட்க, அதற்குப் பட்டியானவன் தெண்டனிட்டு வணங்கி, "சமுகத்திற்குத் தெரியாததை நான் என்ன புதிதாகச் சொல்லப் போகிறேன்? மோசம் செய்த தாசிப் பெண்ணைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துதானே பரிசு கொடுத்தோம்? மற்றும் மந்திரவாளைத்தான் இரண்டு முறை உபயோகித்துவிட்டோ மே; ஒரே ஒரு செப்பிடு வித்தையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க ஜனங்களுக்குப் பிடிக்குமோ? வேதாளத்தைக் கூப்பிட்டுத்தான் கேட்டுப் பார்க்க வேணும்" என்று சொல்லி வாய்மூடு முன், "ஆ, ஆசைப் பத்தினியே" என்று கூவிக் கொண்டு ஒரு மூட்டைப் பூச்சி ஓடிவர, பெண் மூட்டைப் பூச்சியும் உடல் பூரித்துத் தனக்கு வைதவ்யக் கோலம் நீங்கியது விக்கிரமார்க்க சமுகப் பாக்கியத்தால் என்று நினைத்து அவர் காலில் விழுந்து வணங்கும்படி கணவனிடம் சொல்ல, "அகோ மூட்டை அரசனே! நீர் தப்பிய விதம் எப்படி" என்றார் விக்கிரமார்க்க மன்னன்.

     "விக்கிரமார்க்க மகிபதி, நானும் என் மந்திரி சுமந்திரனும் காரியம் விசாரிக்கச் சென்றபோது படுத்திருந்தவர் விரலை நீட்ட, என் ராச்சியத்துக்கே அழிவு தேடின அமாத்தியன் அதில் சிக்கி, வினைக்கேற்ற தண்டனையைப் பெற்றான். நான் தப்பிவரத் தாமதமாயிற்று. அதற்குள் இவள் உங்கள் உதவி நாடினாள். எனக்குத் தங்கள் நேசம் கிட்டியது. இனிமேல் நம் ராச்சியம் உங்களுடைய குடை நிழலில் சிற்றரசாக ஒதுங்கி வாழும்" என்று தெண்டனிட்டது.

     காடாறு மாதத்தை இனி எப்படிக் கழிப்பது என்ற விசாரம் மிகுந்தவனாக, விக்கிரமார்க்க மகாராசா, அஜபுத்தி நாட்டு அராஜகத்தை ஒடுக்க எண்ணுவானாயினான்.

     அதற்கும் இடம் இல்லாமற் போயிற்று. "அன்று கட்டிலில் படுத்திருந்த வேற்றாள் வேறு ஒருவருமில்லையாம்; அஜபுத்தி ஆசைப்பட்டுப் பெற்ற பட்டத்து இளவரசனாம். மன்னன் இல்லாச் சமயம் பார்த்துச் சேடிப் பெண்ணுடன் சல்லாபம் செய்தானாம். சுமந்திரனைக் கொன்ற பிரம்மஹத்தி அவனைத் தொடரும். தாங்கள் கவலைப்பட வேண்டாம், அரசே" என்றது அந்த மூட்டைப்பூச்சி மகிபன்.

     காடாறு மாதத்தை கழிப்பது எப்படி என்று தெரியாத விக்கிரமார்க்க மன்னன் தவியாகத் தவிக்கும்போது, பட்டி என்ற மந்திரியானவன் வணக்கம் செய்து, "சுவாமி....

(இத்துடன் ஏடு நின்றுவிடுகிறது. கதையின் பிற்பகுதி கிடைக்கவில்லை)

******

கலைமகள், ஜுலை 1943

Jun 8, 2011

புலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்

அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி திரட்சியாக வெண்மை படர்ந்து நிரம்புகின்றது. குளிரின் குணத்தால் வீடுகள் கூட உருமாறத் தொடங்குகின்றன. சிவப்பு நாழி ஓட்டு வீடுகள் வளைவுகள் இறங்கும் வெம்பா வீட்டின் செங்கற்களை ஈரமாக்கி வெறிக்கச் செய்கின்றன. மூன்று தெருக்களும் பிரியும் முனையில் இருந்தது அந்த மைதானம். அவனைத் தவிர அந்த மைதானத்தில் இப்போது நின்றுகொண்டிருப்பவை இரண்டு மரங்கள்தான். அவன் கைகள் புங்கை மரத்தில் கட்டப்பட்டிருந்தன. உதடு வெடிக்க அவனையும் குளிர் பற்றிக் கொண்டிருந்தன. உறக்கமற்ற வான்கோழியொன்று கவக்! கவக்! என்றபடி தெருவில் அலைந்து கொண்டிருப்பதைப்  பார்த்துக் கொண்டிருந்தான். வான்கோழியின் அசைவு தெருவையே சலனம்tagore_s.ra_1 கொள்ளச் செய்கிறது.

நீளும் பின்னிரவில்தான் நிலா வெளிப்பட்டிருக்கின்றது. முகத்தில் சரியும் தலைமயிரை நீக்கக்கூட கைகளை அசைக்க முடியாது. வெகு வலுவாகவே கட்டியிருந்தார்கள். புங்கை மரத்தில் காய்கள் சடை சடையாகத் தொங்குகின்றன. பூக்களின் வாடை வேறு. மூன்று தெருவினுள்ளும் தன் போக்கில் அலைகிறது காற்று. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன. வானம் நீலம் இருண்டு கருத்து வெடித்தபடியே நகர்கிறது. புங்கை மரத்தின் பட்டையைப் போல அவனும் மரத்தோடு சேர்ந்து போயிருந்தான். மரத்தின் இலைகள் விரலை அசைத்தபடியிருந்தன. உடம்பின் அடிபட்ட காயங்களில் ஈரக்காற்று புகுந்து வேதனை கொள்ள வைக்கின்றது. தன் கால்களைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான். காற்று தூக்கி எறியப்பட்ட ஓலைப்பெட்டியை அறுக்கும் சப்தம் கேட்டபடியே இருந்தது. வயசாளியின் இருமலும், தொடர்ந்த புலம்பலும் கேட்கின்றன. அவன் உடம்பில் இரண்டு எறும்புகள் இறங்கத் தொடங்கி இருந்தன. புங்கை மரத்தின் பூக்களின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஜோடி எறும்புகளாக இருக்கக்கூடும். கறுத்த, கட்டுகட்டான வயிற்றோடு எறும்புகள் அவன் நெற்றியில் வந்து நின்று மரத்தின் உருவம் திடீரென மாறிவிட்டது போலத் திகைப்படைந்து, கீழே இறங்க வழியின்றி அலையத் தொடங்கின. வெகுவேகமாக முகத்தின் பரப்பில் எறும்புகள் ஊர்ந்து காது வழியே தோளில் இறங்கி, திரும்பவும் முகத்துக்கே வந்தன. எறும்பினை ஒருபோதும் இத்தனை அருகில் கண்டதேயில்லை. நுட்ப வசீகரமும், உருண்ட கண்களுமாக அவற்றின் அலைச்சல் தீவிரமாகின்றது. உடல் முழுவதும் எறும்பின் பிடியில் சிக்கி சிலிர்த்தது போலாகியது. அவன் இச்சையின்றியே முகம் சுருங்கி விரிகின்றது. இரண்டு எறும்புகளும் நுண்ணிய கால்களால் முகத்தைப் பற்றிக்கொண்டு நகர்கின்றன. வழியின்றி மீண்டும் மரத்தின் கிளைகளை நோக்கி நகர்ந்தன எறும்புகள்.

இந்த இரவின் சில மணி நேரங்களுக்கு முன்பு அவன் கூட ஈர ஓடுகளைப் பற்றி இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தான். அப்போதே காற்றில் குளிர் இருந்தது. சுவர் சுவராகக் கடந்து மேற்கு வளைசலில் அவன் இரவில் போய்க்கொண்டிருக்கும் போது பூசணிக் கொடிகளில் பூக்கள் இரவில் பூத்துவிடுவதைப் பார்த்தான். பின்பனிக் காலத்தில் கேட்பாரற்ற பூசணிக் காய்களின் மீது இலைகள் படர்ந்து மறைக்கின்றன. நாய்களும் கூட அடங்கி மண்ணில் முகத்தைப் புதைத்து உறங்குகின்றன. அவன் இடுப்பில் இருந்த சூரிக் கத்தியை உருவி சுவரில் படர்ந்த கொடிகளை வெட்டியபடியே நடந்தான். சுவர்கள் பொதுமியிருந்தன. பின்கட்டில் உலர வைத்த தானியங்கள், கொத்த கோழிகள் அற்றுக் காய்கின்றன. நீர்த்தொட்டிகளின் சலனமற்ற நீர், நட்சத்திரங்களைக் காட்டிக்கொண்டிருந்தது. தன் முகத்தையும் அதில் பார்த்துக்கொண்டான். சாக்குப் படுதாக்கள் தொங்கும் தொழுவத்தில் இறங்கும்போது மாடுகள் விழித்துக்கொண்டுதான் இருந்தன. தாங்கு கல் வழியே ஏறி ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டான். மெல்ல நகர்ந்து ஏறியதும், மைதானத்தின் புங்கை மரங்களும், வேதக் கோயிலின் மணிக்கூண்டும், கண்ணாடி ஜன்னல்களும் தெரிந்தன. இரண்டடுக்கு ஓட்டுச் சரிவினுள் புறாக்கள் இருக்கின்றதா எனப் பார்த்தான். ஓட்டை மிதித்து நடந்தால் புறாக்கள் விம்மி குரல் எழுப்பிவிடும். மரத்தூசுகள் அடர்ந்த அந்தப் பொந்தில் புறாக்கள் இல்லை. குருவி முட்டை தென்பட்டது. வெகு அலட்சியமாகவும் தைரியமாகவும் ஓட்டின் மீது உட்கார்ந்திருந்தான்.

அவன் ஏறியிருந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த வீட்டில் கொடுக்கல் வாங்கல் ரொக்கம் எப்போதும் உண்டு. ஆண்கள் மாதம் ஒரு நாள் வசூலுக்குப் போய்விடுவார்கள்.  இன்று அது தெரிந்துதான் வந்திருந்தான்.

குனிந்த கண்ணாடி ஓடு வழியாக உள்ளே பார்த்தான். கறுப்பேறிய தரை தெரிந்தது. அறையின் ஒரு மூலையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது போலும்; வெளிச்சம் தரைக்கு வருவதும் போவதுமாக இருந்தது. கிழக்கு ஓடு ஒன்றை எடுத்துவிட்டால் உள்ளே இறங்கிவிடலாம். ஓடு சரியாகச் சொருகப்பட்டிருந்தது. கத்தியைக் கொடுத்து நெம்பினான். ஓடு உடைபட்டது. பாதி ஓட்டைக் கையில் எடுக்கும்போது எதிர் மாடியிலிருந்து பூனை தாவி அடுத்த ஓட்டில் நடந்தது. வாலைச் சுருட்டியபடியே அவனைப் பார்த்தபடியே போனது. உடைபட்ட ஓட்டின் வழியே காற்று குபுகுபுவெனப் புகுந்து வீடெங்கும் நிறைகிறது. விளக்கின் வெளிச்சமில்லை. அவன் ஈர ஓடுகளைப் பற்றி உள்ளே இறங்க வழி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் கை வைத்திர்நுத ஓடு உடைந்தது. எழும் முன்பு வரிசையாக ஓடுகள் உடையும் சப்தத்துடன் உயரத்திலிருந்து வீட்டினுள் விழுந்தான்.

பெண்கள் சப்தத்துடன் எழுந்து கொண்டார்கள். மூத்தவள் கதவைத் திறந்து தெருவில் கத்தியபடி ஓடினாள். தெருவில் அரவம் கேட்கும் முன்பு எழுந்து ஓட முயன்றான். யாரோ அவன் கால்களைக் குறி வைத்து ஊனு கம்பை வீசினார்கள். கால்கள் மடங்கத் தெருவில் விழுந்தான். நாய்களின் தூக்கம் கலைந்த கரைப்பும், குழந்தைகளின் அழுகையொலியும் கேட்கத் தொடங்கின.

அவன் தலைமயிறைப் பற்றியிருந்த கரம் ஒரு வயசாளியினுடையதாக இருந்தது. அரிக்கேன் விளக்குகளுடன் வந்த சிலர் தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். பெரியவள் ஓடும் போது தள்ளிய கோழிக்கூட்டிலிருந்த குஞ்சுகள் எதையும் அறியாது மேயத் தொடங்கியிருந்தன. முகத்துக்கு எதிராகத் தீக்குச்சியைக் கிழித்துக் காட்டியதும் அவன் கண்களை மூடிக் கொண்டான். ஓங்கி அறை விழுந்தது. ஆள் அடையாளம் சுலபமாகக் கண்டுவிட்டார்கள். பெண்கள் கலையாத உறக்கத்துடன் அவிழ்ந்த சேலைகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிடரியைப் பிடித்துத் தள்ளியபடி அவனை மைதானத்திலிருக்கும் புங்கை மரத்தில் கட்டி வைக்கக் கூட்டிப் போனபோது, எப்போதுமே உறங்கிக்கொண்டிருக்கும் குருடன் எழுந்து எதையோ விசாரித்தபடி அருகில் வந்துகொண்டிருந்தான். அவன் குரல் இரவுப் பூச்சிகளின் அறுபட்ட சப்தத்தை ஞாபகப்படுத்தின. உறங்கிய நாய்களைத் திட்டியபடியே வந்தான் குருடன்.

நிறைய பணமும், தங்கமு வைத்திருப்பதாக எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த அந்தக் குருடன், தன் படுக்கையிலேதான் எல்லாவற்றையும் வைத்திருந்தான். எப்போதும் உறங்கியபடிக் கிடக்கும் அவன் குரல் கசப்பும் பிசுபிசுப்பும் கொண்டிருந்தது. அருகில் வந்து அவன் முகத்தில் விரல்களைப் பதித்து அலையும் குருடனின் விரல்கள் மண்புழுவின் நெளிவைப் போல இருந்தன. அசூசையாக இருந்தது. பெருமூச்சு விட்டபடியே திட்டினான் குருடன். தனியே வீட்டுக்குப் போகும்வரை பேசியபடியே நடந்த குருடனுக்குப் பின்னால் அவனைத் தள்ளிக் கொண்டு வந்து புங்கை மரத்தில் கட்டினார்கள்.

அம்மாவின் பின் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த சிறுமிகளில் ஒருத்தியை அவன் பார்த்தபடியே இருந்தான். அவள், அம்மாவிடம் “கள்ளப்பய, என்னயவே பாக்கான்” எனச் சிணுங்கினாள். சிறுமியின் முகத்தை சேலை மறைத்துக் கொண்டது. உறக்கம் கலைந்த இரண்டு சிறுவர்கள் மரத்தின் எதிரேயிருந்த கல்லில் உட்கார்ந்து அவனைப் பார்த்தபடியே இருந்தார்கள். ஒடிசலான, கன்னம் ஒட்டிய உருவத்தை கள்ளன் என அவர்கள் ஒருபோதும் நினைவு கொண்டதில்லை. அவன் தலைமயிர் சரிய குனிந்திருந்தான். காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனைக் கூட்டிப் போகும்போது உடன் போக வேணுமென சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள். கூட்டம் கலைந்திருந்தது. அந்தச் சிறுவர்களை வீட்டுக்குள் விரட்டிவிட்டுப் பெரியவர் கல்லில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். வீட்டுப் பெண்கள் அலுத்தபடியே கலைந்து போகும்போது அவன் மனைவியின் சாயல் கொண்ட ஒருத்தி கூட அந்தக் கூட்டத்தில் கலைந்துபோனாள். வீட்டில் விளக்கைப் பெரிதாகத் தூண்டிவிட்டு உறக்கம் வரும்வரை அவர்கள் இனிப் பேசிக்கொண்டிருப்பார்கள் எனத் தோணியது.

சிகரெட் புகை அவன் முகத்தைச் சுற்றியது. நாக்கில் சிகரெட் சுவை தானே ஊறியது. காற்றைக் கிழித்துக்கொண்டான். வீட்டில் இந்நேரம் மனைவி உறங்கியிருப்பாள். அவளுக்குக் குழந்தைகள் மேல் எப்போதும் ஆசைதான். எட்டு வருசமாகியும் குழந்தையில்லை. இப்போதும் சிறு பெண்ணைப் போல யாரு வீட்டிலாவது திருகைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மிகச் சிறிய கண்கள். அவள் பெட்டியில், உலர்ந்த தாழம்பூ மடல் கிடப்பது கூட ஏனோ ஞாபகம் வருகிறது.

திடீரென ஏற்பட்ட அதிர்வென்று ஊர் அடங்காமலேதான் இருந்தது. அந்த இரண்டு எறும்புகள் அவன் தலைக்கு வருவதும், மேலேறுவதுமாகவே அலைந்தன. பனி கால்களின் அடியில் இறங்குவதை உணர்ந்தான். பறவைகள் எதுவும் அடையாத மரமாக இருந்தது.

கட்டி வைக்கப்பட்ட அவனுக்குக் காவலாக யாராவது ஒருவர் மட்டும் மைதானத்தில் இருக்கலாம் எனப் பேசிக் கொண்டார்கள். எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு பிடிபட்டு கட்டி வைக்கப்பட்ட கள்ளன் ஒருவன் உதடுகள் வெடித்து, குளிர் தாங்காது செத்துக் கிடந்ததை யாரும் இன்னும் மறக்கவே இல்லை. அந்த மரம் இப்போதில்லை. பெண்களின் பயத்தால் வெட்டுப்பட்டுப் போனது.

ஆனால் இறந்துபோன கள்ளன் இரவெல்லாம் கடுமையாக முனங்கினான். திடீரென வெறி வந்தது போலக் கத்துவான். மரத்தையே சாய்த்துக்கொண்டு ஓடுபவன் போல மூர்க்கம் கொள்வான். சமயங்களில் தானே பலருடன் பேசிக்கொண்டது போல பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் நல்ல பனிக்காலம். நடமாட்டம் அற்ற தெருக்கள். அவன் குளிரை பேயை விரட்டுவது போல இரவெல்லாம் திட்டியபடி இருந்தான்.  அவன் சப்தம் ஓய்ந்து இறந்துபோனபோது ஊரில் வெம்பா அடர்ந்து போயிருந்தது. மூன்று நாள்களுக்கு அவன் உடல் ஊரிலே கிடந்தது. ஆள் அடையாளம் தேடி தெற்குப்பக்கம் போனவர்களும் திரும்பிவிட்டார்கள். அவன் முதுகில் தேளின் உருவத்தைப் பச்சை குத்தியிருந்தான். அந்தக் கள்ளன் யாரென்று தெரியவே இல்லை. அவனை அந்த ஊர்க்காரர்களே சேர்ந்து எரித்து வந்தார்கள். அதற்குப் பிறகு அந்த வருடம் ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், ஊரின் பல வீடுகளில் தேள் உதிர்ந்ததையும் கண்டார்கள். அந்த மடங்கிய கால்கள் பெண்களின் ஞாபகத்தினுள் புதையுண்டிருந்தது நெடுங்காலமாய்.

அதன்பிறகு இப்போதுதான் அவர்கள் இன்னொருவனைப் பிடித்திருக்கிறார்கள். காவலுக்காயிருந்து ஓர் இடத்தில் நிற்காமல் நடப்பதும், கைகளை சொடுக்கிக்கொள்வதுமாக இருந்தான். அவன் விரல்களில் பாம்பு மோதிரமிட்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. காவலுக்கு இருந்தவன் சமயங்களில் அவன் அருகில் வந்து தலைமயிரைப் பற்றித் தூக்கி மூச்சு வருகிறதா எனப் பார்த்துக்கொண்டான். பனி அதிகமானதும் காவல்காரனும் போய்விட்ட பின்பு அவன் மட்டும் நின்றிருந்தான்.

விழித்திருக்க இருக்க பசியும் தாகமும் அதிகமாகிக்கொண்டே போனது. அந்தச் சிறுவர்கள் இன்று இரவு உறங்க மாட்டார்கள் என்றே தோணியது.

அவன் சிறுவனாகயிருந்தபோது உறங்குவதை விடவும் ஊர் சுற்றுவதிலேதான் விருப்பப்பட்டான். உறங்குவதாயினும் காட்டுவெளியின் கோயில் படிகளிலோ, வைக்கோல் போரில் புரண்டோ உறங்க விரும்பினான். அய்யாவின் பழக்கமும் அப்படியே இருந்தது. ஊரில் கிடைபோடும் கீதாரிகள் வரும் காலத்தில் அய்யா அவர்களோடு காட்டில்தான் தங்குவார். அவனும் உடன் போவான். கீதாரிகளுடன் காட்டில் உறங்கும்போது அதிசயக்கனவுகளின் ஊற்று கசிந்து பெருகத் தொடங்கும். கீதாரிகள் அய்யாவுக்குப் பயந்தார்கள்.

காட்டில் சாப்பாட்டு ருசி மாறிவிடும். நிலா வெளிச்சத்தில் மணலில் அய்யா பதினெட்டாம் புலி கட்டம் வரைவார். மணல் கோடுகள் கட்டமாகும். கீதாரிகள் அவரோடு விளையாட பயந்தார்கள். சிவக்குளம் கீதாரி அய்யாவோடு விளையாடினான். அய்யாவுக்குப் புலிகள். கீதாரிக்கு ஆடு. புலியாட்டம் தொடங்கியது. அய்யாவின் புலிகளால் ஒரு ஆட்டைக் கூட தொட முடியவில்லை. ஆடுகள் புலியை அடைத்துவிட்டன. ஏழு ஆட்டம் தொடர்ந்து புலிகளே அடைபட்டன. கீதாரி ஜெயித்துக் கொண்டே இருந்தான். எட்டாவது ஆட்டத்தில் கீதாரி தற்செயலாக அய்யாவின் கண்களைப் பார்த்தான். கோபமும் குரோதமும் கொண்ட அந்த கண்கள் புலியை ஞாபகப்படுத்தின எட்டாவது ஆட்டத்தில் வேண்டுமென்றே புலி, ஆடுகளை வெட்ட வழி பண்ணி ஆடினான் கீதாரி. அய்யாவுக்குக் கோபம் அதிகமானது. “விட்டுக் கொடுத்து விளையாட வேண்டியதில்லை” என அதட்டினார். அடைபட்ட ஒரு புலி மட்டுமே மிஞ்சியபோது கீதாரி ஆட்டத்தை நிறுத்திவிட்டு மல்லி காபி போடத் தொடங்கினான்.

தூரத்தில் கிடை ஆடுகள் தரை பார்த்து அசைவற்று நின்றன. அய்யா அடைபட்ட புலிகளைப் பார்த்தபடியே இருந்தார். நெருப்பு கல்லி நின்று வெடித்து செத்தைகளில் தாவியது. பூதாகரமான நிழல்கள் தோன்றி மறைந்தன. மல்லி வாடை கொதித்தது. சூடாக மல்லி காப்பியைக் குடித்துவிட்டும் அய்யா தோற்றுத்தான் போனார்.  கீதாரி ஆடுகளுக்கு நடுவில் உறங்கப் போனான். அவனும் அய்யாவும் புலிக்கட்டத்தின் பக்கமே படுத்துக் கிடந்தார்கள். விளையாட்டில் புலியாக மாறியிருந்த  கற்கள், இப்போது வெறும் கற்களாக இருந்தன. அய்யாவுக்கு உறக்கம் கொள்ளவே இல்லை. புரண்டுகொண்டே இருந்தார்.

கீதாரி ஆடுகளுக்குள் பதுங்கி வரும் உருவத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தான். அய்யாதான் கையில் கத்தியோடு ஆடுகளுக்குள் பதுங்கி கீதாரி படுத்துக் கிடந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். ஆடுகள் உடம்பை நெளித்துக் கொண்டன. கோழை ஒழுகும் மூக்கை அய்யா மேல் உரசி நின்றன ஆடுகள். அய்யா அருகில் வந்து எழும்போது, கீதாரி ஆடுகளை விரட்டுவது போல எதிர்ப்பக்கம் சூ! சூ! எனக் குரல் கொடுத்தான். கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு அய்யா, தீப்பெட்டி கேட்டபடியே, இன்னொரு ஆட்டம் போடலாமா எனக் கேட்டார். அவன் அந்த இடத்திலே அய்யா காலில் விழுந்து, “எதும் தப்பா நடந்திருந்தா... மன்னிச்சிருங்க. பிழைக்க வந்தவன்” எனக் கும்பிட்டு எழுந்தான். அய்யா அவனோடு உட்கார்ந்து கொண்டார். விடியும்வரை கீதாரி தன் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அன்றிரவு ஆற்று மணலில் படுத்துக் கிடந்தபோது அடித்த ஆட்டுக் குட்டிகளின் பால் வாடை அவனுக்குப் பிடித்திருந்தது.

சிகரெட் புகையும் அடங்கிவிட்டது. அவன் மரத்தோடு சரிந்து நின்றுகொண்டிருந்தான். வெம்பா படர ஆரம்பித்து, அடுத்திருக்கும் மரம், வீடுகள், வேதக் கோயில், வான்கோழி எதுவும் தெரியவில்லை. எல்லாமும் வெம்பாவினுள் போய் விட்டன. மரத்தின் இலை இலையாக வெம்பா படிகிறது. குளிர்ச்சி கொண்ட மரம் அசைவற்று நின்றது. அவன் எதையும் பார்க்காமலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான். பட்டை உதிர்ந்த மரத்தில் ஈரம் குபுகுபுவென ஊருகின்றது.

அடைக்காமல் விட்டுப்போன கோழிக் குஞ்சுகள் வெம்பாவில் மாட்டிக்கொண்டு சப்தமடைகின்றன. அவன் தளர்ந்து போயிருந்தான். மெல்ல தான் மரத்தினுள் புகுந்துவிட்டது போலவும், எல்லாக் கிளைகளும் தன்னிடமிருந்தே கிளைக்கின்றன எனவும் உணர்வு கொண்டான். இப்போது மரத்தின் முண்டுகளும், வெடிப்பும், அசைவற்ற தன்மையும் அவனுக்கு துக்கத்தையே தந்தன. தன் கைகள் கட்டப்படாமல் உயரே அசைத்துக்கொண்டிருப்பதாகத் தோணியது.

மரத்தின் வயிறு திறந்து அதனுள் புகுந்துகொண்டது போன்றும், பசுமைச் சாறுகள் தன் உடலெங்கும் ஓடுவதாகவும், வெகு பாதுகாப்பான இடத்தினுள் தான் பதுங்கியுள்ளதாகவும் உணர்ந்தான். உடல் பருமன் அழிந்து மரமெங்கும் நீண்டது. ஊரின் உயரத்துக்கு வியாபகம் கொண்டிருந்தது மரம். அண்ணாந்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான இலைகளும், காய்களும் விநோதமாகத் தோன்றின. புங்கை இலைகளைச் சொருகிக்கொண்டு வேட்டைக்குப் போனதன் ஞாபகம் திரும்பியது.

வேட்டைக்குச் செல்லும் அய்யாவின் பின்பு உடம்பில், தலையில் இலைகளைக் குத்திக்கொண்டு துணை வேட்டையாடி, தெருச் சுற்றி வரும்போது அறுபட்ட கோழியின் ரத்தம் தெருவெங்கும் திட்டுதிட்டாகப் படியும்.

ஆகாசம் கூட இப்போது கலங்கிய ரத்தத் திட்டைப் போலச் சிதறிக் கொண்டிருந்தது. ஈரம் நிரம்பத் தொடங்க, உடல் துவண்டு உறக்கத்தினுள் இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் பனி சில்லிட அவன் உறக்கம் கொண்டான். எதுவும் அப்போது நினைவில் இல்லை. வெயில் பட்டபோதே நினைவு வந்தது.

அந்தச் சிறுவர்கள் இருவரும் எதிரில் உட்கார்ந்திருந்தனர். சிறுவர்களில் ஒருவனிடம் அவனின் சூரிக் கத்தி இருந்தது. அதைக் காட்டி மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தான். மைதானம் பிரகாசமாகி, மரம் அவனை வெளியேற்றியது போல் திமிறி நின்றது. ஊரின் அமைப்பே மாறியிருந்தது. அவனைக் கூட்டிப் போக வந்திருந்த ஆட்கள் குளித்து, படியத் தலை வாரியிருந்தார்கள். மரத்தில் சரிந்திருந்த அவன் தலையை நிமிருந்து பார்த்தபடி பேசிக்கொண்டார்கள்.
“கிறங்கிப் போயி கிடக்கான். கஞ்சித் தண்ணி கொடுத்துத்தான் கூட்டிட்டுப்  போகனும்.”
சிறுவர்களில் ஒருவன் வேகமாக ஓடி தண்ணீர் செம்பும், கஞ்சியுமாக வந்தான். எதையும் குடிக்க முடியவில்லை. வயிற்றைப் புரட்டியது. பெண்கள் சிறு குழந்தைகளுக்குக் கள்ளப் பயல் காட்டிக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறியிருந்தது. இரவில் பார்த்த முகங்கள் எல்லாம் மாறியிருந்தன. அவனை தெரு வழியாக நடத்திக் கூட்டிப்போகும் போது நாய்கள் குலைத்தபடி பின்தொடர்ந்தன. அவன் தெரு தாண்டும்போது திரும்பி வந்த மைதானத்தைப் பார்த்தான்.

மரம் வெயிலில் நின்றிருந்தது. இரவிலிருந்து கீழே இறங்க வழியற்றுத் திரிந்த இரண்டு எறும்புகள் வேகமாக மரத்தில் இறங்கத் தொடங்கின. அவன் தலை இருந்த இடம் வந்ததும் திகைப்படைந்து நின்று மெல்லக் கால்களை நகர்த்தி ஊர்ந்தன. மரம் தன் உருவில் இருப்பதாக உணர்ந்ததும் வேகமாக இறங்கித் தரையில் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் ஊரைக் கடந்து போயிருந்தார்கள். சூரியன் உச்சிக்கு வந்திருந்தது.

*******

1992

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்