Jan 30, 2010

வினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி
nambi26
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது
*****
வினோத ரசமஞ்சரி

எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை மொழி
அதுவும் கவிதைமொழி
அமைவது பெரும்பேறு
கவிதை மொழியே
கவித்துவம் போல
யாருக்குக் கொடுக்கலாமென
பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள்
நூலறிவாளர்களை
நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான்
மரபறியாதவர்களை
பெரிதாய் மதிப்பதில்லை
ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை
ஒரு பொருட்டாய் கருதுவதில்லை
மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்
மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்
****


பாவக்கதை

உன்னைப் பார்க்க
பாவமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது
அவன்
பார்க்க பாவம்தான்
எனில்
ஒன்றும் செய்வதற்கில்லை நான்
ஐயோ பாவம்
அவள்
அதற்கு
என்ன செய்ய முடியும்
பாவம்தான்
இவள்
நான்
என்ன செய்ய
என்ன தெரியுமா
பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது
நானே பாவம்
உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை
உறைந்துபோதலும்தான்.
******


எந்த போதையிலும்

சங்கப் பாடல்கள்
திரும்பத்திரும்ப
சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள்
சிலம்பின் வரிகள்
சிந்தையிலேயே
குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ
திருநாவுக்கரசு சுவாமிகள் போல
தேடினாலும்
கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன்
திரிகூடராசப்பகவிராயர்க்கு
யார்
சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை
பாரதி
ஒரு
கவிஞானி
கண்ணதாசன்
குற்றாலப்
பேரருவிதான்
பிறகு
எவர் வந்திருக்கிறார்
சிறுகுயிலே
*******


கவிதை

என்ன
நிறம் கேட்டார்கள் ஐயா
வெள்ளையா
இதோ எடுத்துக்கொள்ளுங்கள்
பச்சையா
வேண்டும்
இரண்டொரு நாள் கழித்து
வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்
சிவப்பா
தோழரே
செய்வதற்கு
ஒரு பத்து நாளாகுமே
கறுப்பா
கொஞ்சம் கஷ்டம்
சற்று அவகாசம் தந்தால்
வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா
மஞ்சளா
திட்டுவார்களே அப்பா
சரி தருகிறேன்
நாலு நாள் பொறுங்கள்
நீங்கள் சொன்னது
நீலம்தானே
அடுத்த வாரம் தருகிறேன்
அன்பரே
என்ன நிறத்தில்
எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள்
உடனுக்குடன் செய்து தருகிறேன்
உங்கள் விருப்பம் போல
தரம்
நன்றாய் இருக்கும்
விலை கூட என்று
யோசிக்கக் கூடாது சரியா
****


மேலும் மேலும்

மேலும் மேலும்
குழப்புகிறார்கள்
மேலும் மேலும்
கொள்ளையடிக்கிறார்கள்
மேலும் மேலும்
நோகடிக்கிறார்கள்
மேலும் மேலும்
கவலையூட்டுகிறார்கள்
மேலும்மேலும்
யோசிக்கவைக்கிறார்கள்
மேலும்மேலும்
தொந்தரவுபடுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கலவரப்படுத்துகிறார்கள்
மேலும்மேலும்
பதறச்செய்கிறார்கள்
மேலும் மேலும்
கேள்வி கேட்கிறார்கள்
மேலும் மேலும்
விமர்சிக்கிறார்கள்
மேலும் மேலும்
பயப்படுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கோபம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
பொய்சொல்கிறார்கள்
மேலும்மேலும்
கோழையாகிறார்கள்
மேலும் மேலும்
வாழவே விருப்பம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்
மேலும் மேலும்
என்ன இருக்கிறது
மேலும் மேலும் எனும்
மனசுதான்
மேலும் மேலும்
என்ன எழுத.
****


கூட்டுக் கவிதை

காக்கைப்பாட்டு
காகமே எங்கே போனாய் நீ
எங்கேயும் போகவில்லை காகம்
எங்கே போனாலும்
கூடு திரும்பிவிடும் அந்திக்கு
காகமே எங்கே போனாய் நீ
பொன்மாலைப் பொழுதுகளை இழந்து
போகப் போகிறாயா நீ
இழந்ததெல்லாம் என்றும்
இழப்புதான் காகமே
இழக்காதே எதையுமே நீ
காகமே எங்கே போனாய் நீ
துணை தேடிப் போனாயா நீ
துணைதேடி அவ்வளவு
தூரம் போயிருக்க முடியாது
எங்கே போனாய் நீ
எல்லோரும் கலக்கமுறும்படி
காகமே எங்கே போனாய் நீ
காகத்துக்குத் தெரியும்
காகத்தைப் பற்றி
கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது
காகமே எங்கே போனாய் நீ
காகம் உள்ளூர்தாண்டிப் போகாது
காகத்துக்கு என்ன கவிதை
காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்
காகமே எங்கே போனாய் நீ
குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில்
கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை
கொத்தித் திங்கப் போனேன் போ
சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல்
மிச்சமிருக்கு எனக்கு போ
புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே
பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ
என்று சொல்வாயோ
திருநெல்வேலி மண் விட்டுப் போக
பிரியப்படாத காகம் நான்
மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்
லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான்
என் இஷ்டதெய்வம்
போடா போ போக்கத்தவனே போ
என கரையும் காகமே எங்கே போனாய் நீ
கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே
கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே
கேட்பது சுலபம் கிழவி போல
கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று
கேட்டு நீ இம்சிக்காதே
குஞ்சுமுகம் தேடுது
கூடு செல்ல நேரமாகுது
கொண்ட ஜோடி நினைவு வாட்டுது
கோபித்துக் கொள்ளாதே
போய் வருகிறேன் நான்


(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.கேள்விகள் எம்.டி.எம். உடையவை. பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை--விக்ரமாதித்யன் நம்பி)
******

Jan 29, 2010

'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம்

க.நா.சுப்ரமண்யம்

பள்ளிக்கூடத்துநிழல் 'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கை தேடல் குறித்த சுவையான படைப்பு. அதிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கு தரப்படுகிறது.

ganesha-82

மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளையார் தெருவிலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது 'உடையவர்கள்' வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள். விஜயதசமி அன்று மேளங்கொட்டி அவனுக்குப் புது ஆடைகள் உடுத்தி தெருவிலுள்ள சிறுவர்களை எல்லாம் கூப்பிட்டுக் கை நிறையப் பொரிக் கடலை கொடுத்து, ஊரிலுள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பாயாசம் வடையுடன் விருந்து செய்வித்து, ஏகப்பட்ட தடபுடல்களுடன் ஊரிலுள்ள ஒரே பள்ளிக் கூடத்துக்குப் பையனை அனுப்பி வைத்திருப்பார்கள். இரண்டு மூன்று வருஷங்கள் அந்தப் பள்ளிக் கூடத்திலே படிப்பான் பையன். அதற்குள் பெற்றோரும் மற்றோரும், ''படிப்பால் என்ன பிரயோசனம்'' என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள். வீட்டையோ வயலையோ கடையையோ கண்ணி யையோ பார்த்துக் கொள்வது படிப்படைவிட லாபமாக இருக்கும் என்று பையனைப் பள்ளி யிலிருந்து நிறுத்திவிடுவார்கள். விடாமல் படித்துப் புரட்டியவர்கள் பலருடைய பிற்காலத்து வாழ்க்கை யைக் கவனிக்கும் போது உண்மையிலேயே படிப்பை நிறுத்திவிட்டதுதான் சரியான காரியம் என்று ஒப்புக்கொள்ள யாருக்குமே ஆ§க்ஷபம் இராது. பள்ளிக்கூடத்தில் இரண்டு மூன்று வருஷங்கள் படித்து அறிந்து கொண்ட எல்லாவற்றையும் பையன் இரண்டு மூன்று வராங்களிலே மறந்து விடுவான். இதற்கு விலக்காக உள்ளவர்கள் சில ஐயர் வீட்டுப் பிள்ளைகள்தாம். சாத்தனூர்ப் பள்ளிக்கூடத்தை முடித்துக் கொண்டு, கும்பகோணத்துக்குக் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய்ப் பெரிய பள்ளியிலே படிப்பார்கள். அதிலும் படித்துப் பாஸ் பண்ணிய பிறகு பட்டணம் கோயம்புத்தூர் என்று எங்கெங்கேயோ வேலைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, படிக்காமல் ஊரிலேயே தங்கிவிட்டவர்கள் சுலபமாகவே நல்ல லாபம் அடைவார்கள். கும்பகோணத்தில் பெரிய பள்ளிப் படிப்புப் படித்து முடித்த பின்கூடத் திருப்தி அடையாமல் தஞ்சாவூர், பட்டணம் என்று போய் இன்னும் மேலான படிப்புப் படித்தவர்களும் சர்வமானிய அக்கிரகாரத்துப் பையன்களிலே சிலர் உண்டு.

ஆனால் மேட்டுத் தெருக் கறுப்ப முதலியின் மகனாக வந்து பிறந்துவிட்ட சோமுவுக்கு இதெல்லாம் கிட்டுமா? கிட்டும் என்று அவன் கனவிலாவது கருதி ஆசைப்பட்டிருக்க முடியுமா?

ஏதோ ஒருநாள் பிள்ளையார் தெருவிலே பையனைப் பள்ளிக்கு அனுப்பும் கல்யாணம் ஒன்று நடந்தது. தெருவில் தூரத்தில் நின்றபடியே அந்தக் கல்யாணத் தைப் பார்க்கும் ka-na-su பாக்கியம் சோமுவுக்குக் கிட்டியது. பிள்ளைமார் தெருப் பணக்காரர்கள் வீட்டுப் பையன் ஒருவனை அன்று, நாள் பார்த்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிகாலை யிலிருந்து நண்பகல் வரையில் மேளக்கார ராமசாமி ஊதித் தள்ளிவிட்டான்; தவுல்காரன் தவுலைக் கையாளும் கோலாலும் மொத்தித் தள்ளி விட்டான். பொரியும் கடலையும் - இது ஒரு பதக்கு, அது ஒரு பதக்கு - கலந்து போன இடம் தெரியாமல் போய்விட்டன. இரு நூறு பேருக்கு மேல் வந்து விருந்து சாப்பிடக் காத்திருந்தார்கள்.

தெருவிலே தூரத்தில் இருந்தபடியே ஐந்தாறு வயசுப் பையன் ஒருவன், நாய்கள் பார்ப்பதுபோல ஆவலுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறானே, அவனைக் கூப்பிட்டு ஒரு பிடி பொரி கடலை கொடுக்கலாம் என்று கல்யாணத்திற்கு வந்திருந்த பக்கத்துக் கிராமத்து மிராசுதாரர் ஒருவர் அவனை அழைத்துக் கை நிறையப் பொரியும் கடலையும் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு என்றும் இல்லாத தன் அதிர்ஷ்டத்தைப் பாராட்டி வியந்து கொண்டே சோமு தன்னுடைய பழைய இடத்துக்குத் திரும்புகையில் கல்யாண வீட்டுக்காரர் அவனைப் பார்த்துவிட்டார். ''அந்தச் சோமுப் பயலை யாருடா இங்கே வரவிட்டது? கறுப்பன் மவன்தானேடா அவன்? ஏதாவது சமயம் பார்த்து அடிச்சுண்டு போய் விடுவானேடா! சந்தனப் பேலா எங்கே? இருக்கா...சரி... அடிச்சு விரட்டு அந்தப் பயலை!'' என்று ஊரெல்லாம் கேட்கும்படியாகக் குரல் கொடுத்தார் அவர்.

சோமு திரும்பி ஒரு விநாடி அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். ஆட்கள் யாராவது வந்துவிடும் வரையில் அங்கே காத்திருக்க அவன் தயாராக இல்லை. யாரும் தன்னை நோக்கி வருமுன் ஒரே பாய்ச்சலில் பந்தலுக்கு வெளியே போய்விட்டான். மறுபடியும் நின்று திரும்பிப் பார்த்தான். தன் கையிலிருந்த அவர்கள் வீட்டுப் பொரியையும் கடலையையும், மண்ணை வாரி இறைப்பது போலப் பந்தலுக்குள் எறிந்தான். அவர்களுடைய சொத்தில் எதுவும் தன் கையில் ஒட்டிக்கொண்டிருப்பதில்கூட அவனுக்கு இஷ்டமில்லை போலும். கையோடு கையைத் தட்டித் தேய்த்து இடுப்பிலே கட்டியிருந்த வேட்டியிலே துடைத்துக் கொண்டான். தன்னுடைய பழைய இடத்திற்கு நகர்ந்தான்.

இவ்வளவையும் கவனித்துக் கொண்டே உட்கார்ந் திருந்த அயலூர்காரர் மறுபடியும் சோமுவைக் கூப்பிட்டு பொரியையும் கடலையையும் கொடுத்தார். தமக்குள் சொல்லிக் கொண்டார். ''கெட்டிக் காரப்பயல்! ரோஷக்காரப் பயல்! பின்னர் பெரிய மனுஷ்யன் ஆனாலும் ஆவான்! அல்லது குடித்து ரெளடியாகத் திரிந்துவிட்டு உயிரைவிடுவான். உம்... இந்தப் பயலைப் படிக்கவச்சால் உருப்படுவான்... உம்... அவனைக் கண்டாலே இப்படிப் பயப் படுகிறார்களே! பலே பயல்தான் போலிருக்கு!'' என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் அவர். ஆனால் அடுத்த இரண்டொரு வினாடிகளுக் குள்ளாகவே அந்தப் பயலுடைய ஞாபகம் அவருக்கு அற்றுப்போய்விட்டது. அதற்குள் அவரைச் சாப்பிட அழைத்துப் போய்விட்டார்கள்.

அந்தத் தெருவில் அந்த வீட்டில் விருந்து சாப்பாடு நடக்கிறது என்று தெரிந்து கொண்டு குறவர் குறத்தியர் பலர் எச்சிலை பொறுக்குவதற்கு வந்து கூடியிருந்தார்கள். தெருக்கோடியில் தெரு நாய்கள் ஏழெட்டு என்ன நடக்கிறது என்பதை அறியாதன போல, ஆனால் எச்சிலைகள் விழுகிற சப்தம் கேட்டவுடனே எழுந்து பாய்ந்து ஓடிவரத் தயாராகப் படுத்துக் கிடந்தன. சோமு, நாய்களுடைய கூட்டத்திலும் கலக்கவில்லை. குறவர் குறத்தியர் கூட்டத்திலும் கலக்கவில்லை. இரண்டும் இடையே தெரு ஓரமாக வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டே கால் கடுக்க நின்று கொண்டிருந்தான் அவன்.

எவ்வளவு நேரம் சாப்பிட்டார்கள் விருந்தாளிகள்! ஒன்றரை நாழிகை நேரம் சாப்பிடும்படியாகப் பலமான விருந்து தான் போலும்! எச்சிலைகள் வந்து விழுந்த உடனே குறப் பாளையத்துக்கும் நாய் மந்தைக்கும் பாரதப் போர் தொடங்கியது. குறப்பாளையந்தான் இறுதி வெற்றி அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாரதப் போரின் சுவாரசியத்திலே ஈடுபட்டு நின்றான் சோமு.

அதற்குள் கலியாண வீட்டிலே மீண்டும் மேளம் கொட்டத் தொடங்கிவிட்டது. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதலில் மேளக் காரர்கள் வாசித்துக் கொண்டே தெருவில் வந்து நின்றார்கள். விருந்து சாப்பிட்ட சிரமத்தைப் பொருட்படுத்தாத சில விருந்தாளிகளும் திண்ணை யை விட்டு இறங்கி தெருவிலே நின்றார்கள். பள்ளிக்கூடத்தில் சேரவேண்டிய பையன் வந்து நின்றான். மாங்காய் மாங்காயாச் சரிகை வேலை செய்த சிவப்பு பட்டு உடுத்தியிருந்தான் அவன். மேலே ஒரு சீட்டித் துணிச்சொக்காய் - அந்தச் சீட்டியிலே பெரிய பெரிய பூக்கள் போட்டிருந்தன. அவன் தலையை படிய வாரிச்சீவிப் பின்னி லிட்டிருந்தார்கள். எலிவால் போன்ற சடையின் நுனியைச் சிவப்பு நூல் அலங்கரித்தது. பையனுடைய கறுத்த நெற்றியிலே கறுப்புச் சாந்துப் பொட்டு ஒன்று ஒளியிழந்து தெரிந்தது. பெண்களின் கூந்தலிலே வைப்பதுபோல ஒரு மல்லிகைச்சரத்தை அவன் தலையிலே வைத்திருந்தார்கள். வால் பெண் ஒன்று. அது அவன் அக்காளாக இருக்கும். பையன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது அவனுடைய எலிவால் சடையை வெடுக்கென்று இழுத்து விட்டு ஓடிப்போய்விட்டாள். பையன் மிரள மிரள நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான்.

கால் நடையாகவே ஊர்வலம் கிளம்பியது. பள்ளிக்கூடம் பக்கத்துத் தெருவிலேதான் இருக் கிறது. சர்வமானியத் தெருவின் மேலண்டைக் கோடியில் உள்ள மாடி வீடுதான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தின் சொந்தக்காரர், ஹெட்மாஸ்டர், பிரதம உபாத்தியார் எல்லாமே சுப்பிரமணிய ஐயர் என்பவர்தாம். அவருக்கு உதவி செய்ய இன்னோர் உபாத்தியாயரும் இருந்தார். ஆனால் அவர் அவ்வளவாக உதவி செய்தார் என்று சொல்வதற் கில்லை. சுப்பிரமணிய ஐயருடைய வீட்டு மாடிதான் சாத்தனூர்ப் பள்ளிக்கூடம். அதே வீட்டில் கீழ்ப் பகுதியில் அவர் வாசித்து வந்தார். பள்ளிக்கூடத்திலே சுமார் ஐம்பது அறுபது பையன்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து வயசி லிருந்து பதினைந்து வயசு வரையில் இருக்கும்.

பள்ளிக்கூடத்துப் பையன்கள் எல்லோரும் அன்று தங்களுடன் வந்து சேர இருந்த புதுப் பையனைப் பார்ப்பதற்கு ஆவலாக, தெருவிலே மேளச் சப்தம் கேட்டவுடன், மாடி ஜன்னல்கள் மூன்றையும் அடைத்துக் கொண்டு நின்றார்கள். புதுப்பையன், பணக்கார வீட்டுப் பையன் அன்று வந்து சேரப் போகிற செய்தி காலையிலேயே சுப்பிரமணய ஐயருக்குத் தெரியும். ஆகவே அவர் பள்ளிக்கூடத்தையும் பையன்களையும் தம் உதவி உபாத்தியாயரிடம் ஒப்பித்துவிட்டுப் பிரம்பும் கையுமாக வீட்டுத் திண்ணையில் வந்து நின்றார் - புதுப் பையன் ஊர்வலத்தை எதிர்பார்த்துக் கொண்டு.

ஊர்வலம் மாடி வீட்டு வாசலில் வந்தவுடன் திண்ணையிலிருந்து சுப்பிரமணிய ஐயர் இறங்கி ஆளோடியில் இரண்டடி முன்வந்து, ''வா! ராமசாமி, வா!'' என்று பையனின் தகப்பனை வரவேற்றார். அந்தப் பையனின் தகப்பன் ராமசாமியும் பல வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய ஐயரிடம் படித்தவன்தான். கையில் சந்தனப் பேலாவை எடுத்து அவருக்குச் சந்தனம் கொடுத்தார் ராமசாமி. பிறகு ஒரு வெற்றிலைத் தட்டில் நிறைய வெற்றிலையும் பாக்கும் மஞ்சளும் வைத்து அதிலே ஒரு ஜோடி சேலம் பட்டுக்கரை வேட்டியும் சாத்தனூர்ப் பட்டுப் புடவை ஒன்றையும் ரவிக்கை ஒன்றையும் வைத்து அவரிடம் கொடுத்தார். வாத்தியார் ஐயா தட்டுடன் அதை வாங்கித் திண்ணையில் தம் பக்கத்தில் வைத்துக் கொண்டு பையனையும் பையனின் தகப்பனாரையும் ஆசீர்வதித்தார். புதுப்பையனும் அவனுடைய தகப்பன் ராமசாமியும் சுப்பிரமணிய ஐயரை விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். மீண்டும் ஒருமுறை அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் சந்தனமும் சர்க்கரையும் வெற்றிலை பாக்கும் வழங்கப்பட்டன. வாத்தியார் ஐயாவால் அல்ல - பையனின் செலவில் அவரால்தாம். பிறகு பள்ளிக்கூடத்துப் பையன் களுக்கென்று கொண்டு வரப்பட்டிருந்த பதக்குப் பொரியும், கடலையும் மாடிக்குக் கொடுத்தனுப் பப்பட்டன. சற்று நேரத்துக்கெல்லாம் மாடி ஜன்னல்கள் ஒன்றிலும் பையன்கள் யாரும் இல்லை என்பதில் ஆச்சரியம் என்ன?

இவ்வளவையும் கவனித்துககொண்டே சோமு நெருங்கி வரப் பயந்தவனாக எதிரே இருந்த வேலியோரமாக ஒரு பூவசர மர நிழலில் நின்றான். பூவரச மரக்கிளை ஒன்றிலிருந்து அவன் தலைக்கு நேரே நூல் விட்டுக் கொண்டு ஒரு கம்பளிப் பூச்சி ஊசலாடிக்கெண்டிருந்ததை அவன் கவனிக்க வில்லை.

புதுப் பையனைப் பள்ளியில் சேர்த்துவிட வந்தவர்கள் எல்லோரும் அரை நாழிகை நேரத்திற்குள் கிளம்பி விட்டார்கள். புதுப் பையனை தம்முடன் அழைத்துக் கொண்டு சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார். நடுப்பகல் நல்ல வெயில் தகித்துக் கொண்டிருந்தது. தெருவிலே ஜனநடமாட்டமே இல்லை. வேலையுள்ளவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் அலுவல்களைக் கவனிக்கப் போய்விட்டார்கள். வேலையில்லாமல் வீட்டிலே தங்கியிருந்தவர்கள் உண்ட களை தீரப்படுத்து உறங்கிக் கொண்டிருந் தார்கள். சோமு என்கிற மேட்டுத் தெரு பையனைத் தவிர தெருவிலே அப்பொழுது யாருமே இல்லை. அவன் மாடிப் பள்ளிக்கூடத்தண்டைபோய் மாடியை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வெகுநேரம் நின்றான். சற்று நேரம் கழித்து வெயில் அதிகமாக இருக்கிறதே என் நிழலில், மாடி வீட்டின் நிழலில், மாடிப் பள்ளிக்கூடத்தின் நிழலில் ஒதுங்கி நின்றான். மாடியிலிருந்து என்ன என்னவோ சப்தங்கள் ஒலித்தன. பையன்கள் எல்லோரும் ஏககாலத்தில் சந்தை வைத்து உரக்க என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்லிக் கொண்டிருந் தார்கள் என்பது சோமுவின் காதில் தெளிவாக விழவில்லை. உபாத்தியாயரும் உதவி வாத்தியாரும் நடு நடுவே உரத்த குரலில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய குரல்தான் சோமுவின் காதுக்கு எட்டியது. வார்த்தைகள் தெரியவில்லை. சில சமயம் ஒரு பையனுடைய பெயரைச் சொல்லித் தலைமை உபாத்தியாயர் கூப்பிட்டார். அந்தக் கூப்பாட்டிற்கு இரண்டொரு வினாடிகளுக்கப பிறகு, 'ஐயோ அப்பா! ஸார் ஸார்! வேண்டாம் ஸார்! இனிமேல் இல்லை ஸார்!'' என்று பையன் யாராவது அலறுவது சோமுவின் காதில் விழுந்தது. அதற்கடுத்த வினாடி பலர் 'கலகல' வென்று பேசுவதும் சிரிப்பதும் அவன் காதில் விழுந்தன. அந்தப் பள்ளிக்கூடத்துச் சப்தம் முழுவதுமே இசைந்து இன்ப ஒலியாகச் சோமுவின் காதிலே விழுந்தது.

சாத்தனூர் மாடிப் பள்ளிக்கூடத்து நிழலிலே சுவரில் சாய்ந்து கொண்டு நின்றபடியே பகற்கனவுகள் காணத் தொடங்கினான் சோமு. அவன் அப்பொழுது கண்ட கனவுகளை விவரிப்பதென்பது ஆகாத காரியம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். அவனுடைய வாழ்க்கையிலே முதல் ஆசை, முதல் லக்ஷ்யம் உருவாகிவிட்டது. அவ்வளவு சிறு வயசிலேயே அவன் தனகென்று ஒரு லக்ஷ்யத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டான். பள்ளியிலே தானும் படித்துப் பெரியவனாகி...
படித்துப் பெரியவனானபின் என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன் அவன் நின்றபடியே கண்களை மூடிவிட்டான். பகற்கனவுகளிலிருந்து உண்மைக் கனவுகளுக்குத் தாண்டிவிட்டான்.

இப்படிச் சுவரில் சாய்ந்தபடியே நின்றுதூங்கிக் கொண்டிருக்கும் பையனைக் கண்டால் எந்த உபாத்தியாயரானாலும் என்ன செய்வாரோ அதைத் தான் அரை நாழிகை நேரம் கழித்துக் கீழே இறங்கி வந்த சுப்பிரமணிய ஐயர் செய்தார். தம் பள்ளிக் கூடத்தைச் சேர்ந்த சோப்பேறிகளில் அவனும் ஒருவன் என்று அவர் எண்ணியதில் தவறில்லை.

சோமுவின் இன்பக் கனவுகளைப் கிழித்துக் கொண்டு 'சுளீர்' என்று ஒரு சப்தம் கேட்டது. 'பளீர்' என்று ஓர் அடி முதுகிலே விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டு சோமு எதிரே பிரம்பும் கையுமாக நின்ற சுப்பிரமணிய ஐயரை ஒரு தரம் பார்த்தான். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டதே தவறு. பள்ளிக்கூடத்தின் நிழலிலே ஒதுங்கிச் சிறிது நேரம் நின்றதுகூடத் தவறு என்று ஒப்புக்கொண்டவன் போல, வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல, 'ஜிவ்'வென்று பாய்ந்து ஓடி, சர்வமானிய அக்கிரகாரத் தெருத் திரும்பி மறைந்துவிட்டான்.

தம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அல்ல அவன் என்று சுப்பிரமணிய ஐயருக்குத் தெரிய இரண்டு வினாடி நேரம் ஆயிற்று. அதற்கு இரண்டு விநாடி கழித்துத்தான் அப்படித் தம்மிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடிப்போனது மேட்டுத் தெருக் கறுப்பன் மகன் சோமு என்பதை உணர்ந்தார். முதலில் இவர் அதைக் கவனித்திருந்தாரானால் அவனை அடித்தே இருக்க மாட்டார். அவனிடமும் கறுப்ப முதலியிடமும் உபாத்தியார் சுப்பிரமணிய ஐயருக்கு எப்பொழுமே கொஞ்சம் அநுதாபம் உண்டு. அவர் 'உடையவர்கள்' கோஷ்டியைச் சேர்ந்தவர் அல்ல. ஊரில் மற்றவர் களெல்லோரும் கறுப்பன் மகன் என்பதற்காகச் சோமுவை எப்படி நடத்தினார்கள், என்ன என்ன சொன்னார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவனை அவர் அப்படி அடித்திருக்க வேண்டியதில்லை! அடி என்னவோ அவரையும் மீறியே பலமாகத்தான் விழுந்துவிட்டது.

சிரித்துக் கொண்டே தம் வீட்டுக்குள் போனார் சுப்பிரமணிய ஐயர். ''அடியே!'' என்று தம் மனைவியைக் கூப்பிட்டார். ''இதோ பார்!... அந்த மேட்டுத் தெருக் கறுப்பன் பிள்ளை சோமு எப்பவாவது இந்தப் பக்கம் வந்தானானால் சாதம் கீதம் மிச்சம் இருந்தால் போடு! பாவம்; சாப்பாடே இல்லாமல் கஷ்டப்படறதுகளோ என்னவோ!'' என்றார்.

''வள்ளியம்மை அந்த ரங்கராயர் ஆத்திலே வேலை செய்கிறாள். சாப்பாட்டுக்கு ஒரு குறைவும் வைக்க மாட்டார் அந்த ராயர். ஆனால் இப்போ என்ன அந்தப் பயலைப்பற்றி ஞாபகம் வந்தது உங்களுக்கு?'' என்று விசாரித்தாள் அவர் மனைவி ஜானகியம்மாள்.

சற்றுமுன் நடந்ததைச் சொன்னார் சுப்பிரமணிய ஐயர். அவர் சிரித்துக் கொண்டேதான் சொன்னார் என்றாலும், அனாவசியமாக ஒரு சிறு பையனை அடித்து விட்டதைப் பற்றி எவ்வளவு வருத்தப்பட்டார் என்பது அவர் சொன்ன மாதிரியிலிருந்தும் குரலிலிருந்தும் நன்கு தெரிந்தது.

''ஐயோ பாவம்!'' என்றாள் ஜானகியம்மாள். சற்று நேரம் கழித்து அவள், ''நல்ல வாத்தியார் வேண்டியிருக்கு! எப்போ பார்த்தாலும் பிரம்பும் கையுமக!... இப்படிக் கொடுங்கோ பிரம்பை - அதை முறித்து அடுப்பிலே போட்டுவிடறேன்!'' என்றாள்.

''கண்ணை மூடிண்டு எதிர்ப்படறவா எல்லோரையும் என்னிக்காவது ஒருநாள் இந்தப் பிரம்பால் வெளுத்து வாங்கி விட்டால் தேவலை என்றிருக்கிது எனக்குச் சில சமயம்'' என்றார் சுப்பிரமணிய ஐயர்.

''ஆத்திலே ஆரம்பிச்சுடாதேயுங்கோ! மாடிக்குப் போங்கோ!'' என்றாள் அவர் சகதர்மிணி.

''ஆத்திலே ஆரம்பிக்கிறதாகத்தான் உத்தேசம்! அதுகாகத்தான் இப்போ கையோடு பிரம்பைக்கூடக் கொண்டு வந்திருக்கேன்'' என்று சொல்லிக் கொண்டே சிரித்துக் கொண்டு தன் மனைவியை அணுகினார் சுப்பிரமணிய ஐயர்.

''எங்கள் வாத்தியார் ஐயாவுடைய சமத்தைப் பார்த்து யாராவது நாப்பு காட்டப் போறா! அசடு வழியாம போங்கோ'' என்று சொல்லிவிட்டு ஜானகியம்மாள் சமையலறைக்குள் போய்விட்டாள்.

சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார்.

*****

 

Jan 27, 2010

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன்

கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்...

modern-art-17 

முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். தாளக் கட்டோடும் ராக அடக்கத்தோடும் ஒருத்தர் இப்படிப் பாடினார்

"ஆட்டித் தோலுக் கிடங்கொடுத்த
தாலே வந்த மோசம் - அத
னாலே வந்த மோசம்......"

எப்படி வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு முதல் முதலில் ஆட்டுத் தோல் வாங்க என்று இங்கே ஒரு வியாபாரியாக வந்து நம்மை ஏமாற்றி, நம்மவர்களைப் பிரித்து நமக்குள் சண்டை மூட்டிவிட்டு வஞ்சகமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறான் என்று அழகாக விவரித்தது பாடல்

ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் பஜனையில் "கோவிந்த நாம சங்கீர்த்தனம்..." சொல்லு வதுபோல அவர்கள் "வந்தே மாதரம்" என்று சொல், அதை ஜனங்கள் எப்படி வாங்கித் திரும்ச் சொல்லணும் என்று சொல்லித் தந்தார்கள். இதனால் அந்த கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல நேர்ந்தது. இது குழந்தைகளை ரொம்பத்தான் உத்ஸாகப் படுத்தியது! அவர்கள் ரொம்ப ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் இதில். "வந்தே... மா...தரம்" என்று சொல்லி, தே என்பதைக் கொஞ்சம் நீட்டி, மா என்பதைக் கூடக் கொஞ்சம் நீட்டி ஒரு நாமசங்கீர்த்தனம் போல - ஒரு சுருதியோடு சேர்த்துச் சொல்லுவது போல - சொல்ல வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் அந்த சிந்து பூந்துறைக்காரர்

"வந்தே..மா..தரம்"
"அல்லா...ஹூ......அக்குபர்"
"நமதே.....ராஜ்யம்;அடைந்தே...தீருவோம்"
"போலோ;மஹான் மகாத்மா காந்தீக்கி;ஜே"

பிரசங்கிகள் ஒவ்வொருவராகப் பேசினார்கள். மக்களுக்குத் தெரிய வேண்டுமே என்று எளிய தமிழில் பேச்சு நடையில் கதை காரணங் களோடு ஜனரஞ்சிதமாகப் பேசினார்கள்

குடியின் கேட்டைப் பற்றி ஒருவர் பேசினார். "முந்தியெல்லாம் இப்படிக் கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக் கடையை நிலையாக இருக்கும் படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக் காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் kira2 என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்குக் கேடு  விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கு அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்ககும் மக்களின் தொகை அதிகமாக, ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டுப் போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர் களான வெள்ளைக் காரர்களுக்கு நல்லது. அதனால் நாம் முதலில் நமது மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்பப் ¦¡ருளா தாரத்துக்கு இந்தக் குடி உதவவே உதவாது. ஆகையால்த்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும் தனது நிர்மாண திட்டத்தில் பெண்கள் பகுதியைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே 'தாய்மார்களே உங்கள் வீட்டுக்காரர் களை, சகோதர்களை குடிக்கவிடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்' என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

அடுத்தபடியாகப் பேசியவர் "பஞ்சாப் படுகொலை சொக்கலிங்கம்பிள்ளை" என்பவர். இவர் பெயரைக் கேட்டதுமே ஊர்க்காரர்கள் முதலில் நினைத்தது, பஞ்சாப் படுகொலைகளில் இவரும் சம்பந்தப்பட்ட ஆளாக இருப்பார் போலிருக்கு (!) என்று.

பேசியபிறகு தான் தெரிந்தது அவருக்கு அந்தப்பேர் வந்ததுக்கான காரணம். ஜாலியன் வாலாபாக்கில் நடந்த அந்தப் படுகொலையை அந்தப் பாஞ்சால நாட்டுமக்கள் பட்ட இன்னலை, அப்படியே இந்த மக்களின் கண்ணெதிரே, நடந்தது நடந்தது போலக் கொண்டுவந்து காட்டினார்.

பேசிக்கொண்டு வரும்போது அவருடைய முகம் அழுகையினால் கோணியது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மூக்குக் கண்ணாடியை பலதடவை கழற்றினார். அங்கிருந்த பெண்களை யெல்லாம் ஒரு நொடியில் அழவைத்து விட்டார். ஒரு அப்பாவின் தோளில் உட்கார்ந்து கொண்டிருந்த சிறுவன் ''வீட்டுக்குப் போகலாம் ப்பா'' என்று சொல்லும்போதும் அவனுக்கு நாக்குக் குழறியது.

ஒரு பாவமும் அறியாத மக்களை, பெண்களை மண்டி போட்டு நடக்கும் படியாக நிர்ப்பந்தித்து, வெள்ளை அதிகாரி அவர்களை சவுக்கால் அடித்ததாக அவர் சொன்னபோது இவர்கள் நெஞ்சிலே அந்த அடி விழுந்தது போலிருந்தது.

வெள்ளையர்கள் இவ்வளவு கொடூர மானவர்களா என்று தோன்ற ஆரம்பித்தது. இந்தக் கொடூரம் நாளைக்கு இங்கேயும் தோன்றாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவருக்குப் பிறகு பேசிய பிரசங்கி, பம்பாயில் நடந்த அந்நியத்துணி பகிஷ்கரிப்பு (புறக் கணிப்பு) போரட்டாத்தில் ஒரு சத்யாகிரகி மீது வேண்டுமென்றே லாரியை ஏற்றிக் கொன்றதைப் பற்றிச் சொன்னார்.

ஜெயிலுக்குப் போன இளைஞன் எதீந்தி நாத்தாஸ் என்பவர், ஜெயிலில் ஒருவாய் மோருக்காக - சாப்பாட்டில் ஒரு வேளைக் காவது கொஞ்சம் மோர் தரவேண்டும் அனைத் துக் கைதிகளுக்கும் என்று- 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 64வது நாளில் உயிர் நீத்ததைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்கும் போதே அங்குள்ள மக்களின் மனசைப் பிசைந்தது அந்தச் செய்தி.

''எதீந்திரநாத் மரணம் பம்பாயை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பம்பாயை மட்டுமா, இந்தியா பூராத்தையும்தான். பத்திரிகைக ளெல்லாம் அதைப்பற்றித் தலையங்கங்கள் எழுதின. டெல்லி சட்டசபையில் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்டார்கள்.

''இந்தியா உஷ்ணமான நாடு. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உணவில் ஒரு வேளைக்காவது 'ஒரு வாய்' மோர் தர வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.

'' ஒ பொன்னான உயிரைப் பலிகொடுத்து, பத்திரிகைகளும் சட்டசபைக்குள்ளும் கேள்விக் கணைகள் தொடுத்து, மக்களும் கிளர்ந்தெழுந்த பிறகே இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஜெயில் கைதிகளுக்குச் சிறிது மோர் தர ஒப்புக் கொண்டது.

''அப்பேர்ப்பட்ட கெடுங்கோலான அரசாங்கம் இது'' என்றார் பிரசங்கி.

கூட்டத்தின் கடைசியில் பேசியது ஒரு சிறிய பையன் ! இளங்கோ என்று பேர் சொனனார்கள். பத்து வயசுக்குள்ள தானிருக்கும். மேஜை மீது அவனைத் தூக்கி விட்டார்கள். எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

கால்களையும் கைகளையும் ஆட்டி உடம்பை நிமிர்த்தி அழகான தமிழில் அவன் அமளப்பொரி பொரிந்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தையே, 'என்னோட சண்டைக்கு வாராயா?'' என்று கேட்பது போலிருந்தது! கைதட்டி அவனை உத்ஸாகப்படுத்தினார்கள் வந்திருந்த பிரசங் கிகள்; அதைப் பார்த்த ஊர்க்காரர்களும் கை தட்டினார்கள்.

கூட்டத்தின் முடிவில் ஜே கோஷம் வானைப் பிளந்தது. இப்படியாக இந்திய நாட்டு சுதந்திரப் போரின் சங்கநாதம் அந்த கிராமத்தினுள்ளும் வந்து ஒலிக்கத் தொடங்கியது. அந்த கிராமத்தின் குழந்தைகள், அந்த அரசியல் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தங்கள் விளையாட்டில் ஒரு புதுவிளையாட்டைச் சேர்த்துக்கொண்டார்கள். சோளத் தட்டையின் நுனியில் சிறிய துண்டுத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். ''நமதே ராஜ்யம்: அடைந்தே தீர்வோம்'' என்று கத்தினார்கள்.

இப்படிப் பல ஊர்வலங்களை தினமும் குழந்தைகள் தவறாமல் நடத்தி விளையாண் டார்கள். ''பாரதமாதாக்கி ஜே'' ''மகாத்மா காந்திக்கி ஜே'' ''வந்தே...மா..தரம்''.

காலையில் எழுந்திருந்த கிராம முன்சீப் அய்யர் கச்சேரிக்கு (கிராமச்சாவடி) முன்னால் நின்று கொண்டு 'காச்மூச்' என்று கத்திக் கொண் டிருந்தார். என்னமோ ஏதோ என்று தலையாரித் தேவர் ஓடோடி வந்தார்.

''என்னடா இது: ஊருக்கு விநாசகாலமா? பாரு மரத்துக்கு மேலே. இப்படிப் பண்ணியிருக் கானே! மேலாவிலிருந்து வந்தா நா என்னடா பதில் சொல்றது? யாரு பண்ணுன காரியம்டா இது. குடியெக் கெடுத்தானே பாவி...''

மூச்சு இறைக்க அய்யர் கூவிக் கொண் டேயிருந்தார்.

தலையாரிக்கு முதலில் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ராவோடு ராவாய் யாரே ஒரு பாவி மூவர்ணக்கதர்- கொடியை பிள்ளையார் மேடை அரசமரத்தின் உச்சியில் கொண்டுபோய் உயரமான வருச்சியில் கட்டி அதை ''ஊரு உலகத்துக்கெல்லாம்'' தெரியும்படியாகப் பண்ணியிருந்தான்.

வெகுதூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும் படியாக இருந்தது கொடி. மங்கம்மாசாலை வழியே போகிறவர்களுக்குக் கட்டாயம் தெரியும். வேணுமென்றே அக்கிரமத்துக்காக - செய்த காரியமாப்பட்டது அய்யருக்கு. ''கூட்டம் போட்டுப் பேசினார்கள். சரி. பேசிட்டுத் தொலை. பொ. காத்தொடபோறதுன்னு இருந்தேன். இப்பொ 'அடி மடியிலே' கையைக் கொண்டாந்துட்டானெ? நா ஒர்த்தன் பிராமணன் இங்கெ உத்யோகம் பாக்றது யாருகண்ணெ உறுத்தறதுன்னு தெரியவில்லை.'' கொஞ்ச நேரத்துக்குள் ஒரு கூட்டத்தையே கூட்டிவிட்டார் தனது கூப்பாட்டின் மூலம்.

அதிகாலை மம்மல் நேரத்திலேயே சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நுன்ன கொண்ட நாயக்கரைப் பார்த்ததும் அய்யர் குரலை உயர்த்தினார். ''பாத்தியளா மொதலாளி, பயல்களோட காரியத்த!'' என்று அரச மரத்தின் உச்சியைக் காண்பித்தார்.

புகையும் சுருட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு இடது கைவிரல்களைப் புருவக்கட்டில் வைத்து 'கண்ணாடி போட்டு' அண்ணாந்து பார்த்தார் நுன்னகொண்ட.

பகீரென்றது வயிற்றில் அவருக்கு.

ம்செரி' என்று எண்ணிக்கொண்டு அங்கே கூடியிருந்த இளவட்டங்களின் முகங்களை ஒருபார்வையால் ஆராய்ந்தார். ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது அவரால்.

அய்யரைப் பார்த்துச் சொன்னார் கையில் சுருட்டை எடுத்துக் கொண்டு. ''கட்டுச்சோறு கட்டிக்கிட்டா வரப்போறான் அசலூரிலிருந்து இதுக்கு. சவத்துப் பயல்க.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் போனதுக்குப் பிறகும் கொஞ்ச நேரம் சுருட்டின் வீச்சம் அங்கே மணத்துக் கொண்டிருந்தது.

அய்யர் இந்த மாதிரி 'பேசக்கூப்பாடு' போடுவாரே தவிர தன்னுடைய கிராம மக்கள் பேரில் எப்பவும் எந்த விஷயத்துக்காகவும் மேலாவுக்கு எழுதி அனுப்பியதில்லை. இந்த விஷயங்களில் அவர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தார்.

பிரிட்டிஷ் அரசு மூவர்ணக் கொடியைத் தடைசெய்திருந்தது. அதனால் எல்லா இடங்களிலும் இப்படி ராவோடு ராவாக கொடி ஏத்தங்கள் நடைபெற்றுவந்தன.

இதே கொடியைப் பிடித்துக் கொண்டு பகிரங்கமாக ரோட்டில் நடந்து கைதியானவர் களும் உண்டு. அப்படிப் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு போகும்போது, 'போடு கீழே' என்று சொல்லி போலீஸார் லத்தி' யால் அறைவதும் உண்டு. உடம்பில் அடிமேல் அடி தொடர்ந்து விழும்போது, வலி பொறுக்க முடியாமல், தன்னையறியாமல் அய்யோ அம்மா என்று அலறுவதற்குப் பதில் ''வந்தேமாதரம் வந்தேமாதரம்'' என்று மாறிமாறிச் சொல்லு வார்கள். திருப்பூர் என்கிற ஊரில் குமரன் என்ற பேருடைய பிள்ளையாண்டான் ஒருத்தனை இப்படி அடித்தே கொன்று விட்டார்களாம் பாவிகள் என்று பேசிக்கொண்டார்கள். தலையாரியை மரத்தின் மேலே ஏறி அந்தக் கொடியை அவிழ்க்கும்படிச் சொன்னார் கிராம முன்சீப் அய்யர். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தலையாரி கிட்ணத் தேவர் மேலே ஏறினார். வளர்ப்பு ஆட்டுக்குக் குழைஓடிக்க மரம் ஏறிப் பழக்கந்தான் அவருக்கு. மேலே ஏறிப்போன கிட்ணத்தேவருக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருப்பூட்டாக எழுந்துநின்று உச்சிக் கொம்பில் கொண்டுபோய் அதிலும் இருட்டு வேளையில் எப்படிக் கட்டினான் இந்தக் கொடியை என்று யோசித்தார். கொம்பைப் பிடித்து தொத்தி எப்படியாவது மேலே போய் விடலாம். கட்டுவதோ, அவிழ்ப்பதோ என்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது. சாமி வந்து ஆவேசத்தோடு ரவ்வாளி போடுகிறவனை பத்துப்பேர் சேர்ந்து பிடித்தாலும் அமைக்க முடிவதில்லை. இதெல்லாம் ஒரு வெறிச்சியில் செய்கிற காரியம் என்று நினைத்தார்.

மேலே ஏறி எந்த ஆசில் இருந்து கொண்டு கட்டிய கொடிக்கம்பத்தை அவிழ்ப்பது என்று பார்த்தார். நினைக்க நினைக்க உடம்பு புல்லரித்தது. தவறிக் கீழேவிழுந்தால் அவ்வளவு தான். நச்சத்திரம் கழண்டுறும் என்பதோடு கழைக்கூத்தாடிக்காரன் சொல்லுவது போல எண்ணுவதற்கு ஒரு எலும்புக்கூடக் கிடைக் காது !

இறங்கிக் கீழே வந்த விஷயத்தைச் சொன்ன கிராம முன்சீப்பிடம் அதைக் கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியும் குஷியும் ஏற்பட்டது.

ஒருத்தருக்கொருத்தர் கலந்து யோசித் தார்கள். இது யார் செய்த காரியமாக இருக்கும் என்று. கொத்தனார் சாமிநாயக்கரும் அங்கே இருந்தார். துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, குளத்தின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து முழங்கால்களை ஆட்டிக் கொண்டு, இந்தத் தலையாரி எப்படித்தான் அந்தக் கொடியை அவிழ்க்கிறான் பார்ப்போம் என்று. அவருக்குப் பக்கத்தில் வந்து செவிட்டு குருசாமி நாயக்கர் உட்கார்ந்து கொண்டு சந்தோஷத் துடன் கேட்டார் ''இத எப்பிடி அங்கன போயி கட்டியிருக்கான்!'' சாமிநாயக்கர் பதில் சொல்லாமல் வேகமாகக் காலை ஆட்டினார். மனசுக்குள் 'எங்கலெ வந்து மெல்ல விளாறு ஒட்டுதெ' என்று நினைத்துக் கொண்டார்.

பேருதான் செவிட்டு குருசாமி நாயக்கர். யாருடைய ரகசியங்களும் அவர் காதுக்குள் நுழைந்துவிடும். நுழைத் வேகத்தில் பத்து ஜோடி காதுகளில் போய் எதிரொலிக்கும். யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், செவிட்டு குருசாமி நாயக்கர் வாரார் என்றால் பேச்சை நிப்பாட்டி விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள் !

கிராமத்தில் எப்பவாவது சில காரியங்கள் நடக்கும். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று யூகிக்கவே முடியாதபடி இருக்கும். அப்போது செவிட்டு குருசாமி நாயக்கர் எங்கே என்ற எல்லோரும் தேடுவார்கள். அவரும் ஓடியாடி, விஷயத்தின் நுனி நூலைப் பிடித்துக் கொண்டு வந்து தந்துவிடுவார்.

இளவட்டங்களின் ஒருமித்த ஏளனப்பார்வை தலையாரியை உசுப்பிவிட்டு விட்டது. குழை அறுக்கும் கத்தி கட்டிய தொறட்டிக் கம்பை எடுத்துக்கொண்டு வந்தார் வேகமாக. மரத்தில் ஏறி, அதைக் கொடுக்கச் சொல்லி வாங்கி, ஒவ்வொரு கொம்பிலும் அதைத் தொங்கவிட்டுக் கொண்டே மேலே ஏறிப்போனார். வசமான ஒரு கிளையில் இருந்து கொண்டு உச்சிக்கொம்பில் கட்டிய கயிற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அறுத்துக் கொடியோடு கம்பைக் கீழே விழச்செய்தார்.

கீழே விழுந்த கொடியை கிராம முன்சீப் அதைக் கம்பிலிருந்து பிரித்து எடுத்தார். அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை ! வீட்டுக்கும் கொண்டு போக முடியாது கச்சேரியில் வைத்துக் கொண்டிருக்கமுடியாது. பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் களிமண் பிள்ளையாரை குளத்து தண்ணீரில் கொண்டு போய் போடுவதுபோல, அவர் அதில் நாலைந்து கற்களை எடுத்து வைத்து மூட்டைபோல் கட்டினார். குளத்தில் கொண்டு போய் வீசி எறிந்துவிட்டு, விசுக்விசுக்கென்று வேகமாக வீட்டைப் பார்க்க நடந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கைதட்டிப் பலமாகச் சிரித்தார்கள்.

இது நடந்து கொஞ்சநேரத்துக்கெல்லாம், பார்வதியம்மன் கோவிலுக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாட்டு வண்டிக்கு அருகே நின்றுகொண்டு ''ஊர்பய பிள்ளைகளை'' வாய்க்கு வந்தப்படி திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார் வெல்லம் ரங்கசாமி நாயக்கர்.
அருடைய வண்டிப் பைதாவில் யாரோ சாக்பீஸால் வந்தேமாதரம் என்று எழுதிவைத்து விட்டார்களாம். ''நா ஒரு வண்டி வச்சிப் பெளைக்கிறது இந்தப் பயபிள்ளெகளுக்குப் பிடிக்கலெ'' என்று சொல்லிக் கொண்டே அதை அழித்தார். அழித்ததில் எழுத்துக்கள் கலைந்த தே தவிர மறையவில்லை. வாளியில் தண்ணீர் கொண்டு வந்து துணியை மூக்கித் துடைத்துக் கொண்டிருந்தபோது செவிட்டு குருசாமி நாயக்கர் வந்து ''என்ன மாமா இது?'' என்று விசாரித்தார். ''பாத்தியாடா இந்த கொடுமயெ; எந்த நாறப்பய புள்ளையோ வந்து ஏம் வண்டியில் 'வந்தேமாதம்' எழுதித் தொலைச்சிருக்கான் பாத்துக்கொ.''

''அதானெ மாமா, சர்க்காருக்கு தெரிஞ்சா அம்புட்டுதான். வண்டியும் பொயிரும், நீங்களம் கம்பியெ எண்ணணும். செருக்கிபிள்ளையளுக்கு வந்தே மாதரம் எழுத வேற எடமே கெடைக் கலை பாத்தியளா !''

வேகம் வந்துவிட்டது வெல்லம் ரங்கசாமி நாயக்கருக்கு. தனக்கு எத்தனை வசவுகள் தெரியுமோ அத்தனையும் மனப்பாடமாக ஒப்பிப்பதுபோல மள மளவென்று சொல்லிக் கொண்டே போனார்.

ஊர்ப்பிள்ளைகளெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது வேறு அவருக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களைப் பார்த்து எரிந்த விழுந்தார். அவர்கள் நகருவது போல பாவலாக் காட்டினார்களே தவிர நகரவில்லை. ஆகவே அவர்களையும் ஒரு பாட்டம் வசவுகளால் 'அர்ச்சனை' செய்துக் கொண்டே வாளியையும் துணியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் கிளம்பினார். நாலு எட்டுகள்தான் எடுத்து வைத்து நகர்ந்திருப்பார். யாரோ ஒரு பையன் அவரைப் பார்த்து வந்தே மாதரம் என்று கத்தினான். மற்ற பிள்ளைகள் அதை வாங்கிச் சொன்னார்கள் !

நாயக்கருக்கு ஆங்காரம் வந்துவிட்டது. ''எவண்டா அவன் வந்தே மாதரம் சொன்னது'' என்று கேட்டார்.

''பொடிப்பய புள்ளக. நீங்க போங்க மாமா'' என்று சமாதானப்படுத்தினார் செவிட்டுக் குருசாமி நாயக்கர்.

சமாதானம் பண்ணவும் சேர்த்துப் பிடித்துத் தடுக்கவும் ஒரு ஆள் கிடைத்துவிட்டால் அதுக்கென்று ஒருவேகம் வருமே; அந்த 'வேகம்' வந்தது வெல்லம் ரங்கசாமி நாயக் கருக்கு. அதன் பலனை அவர் ஆயுள் பூராவும் அனுபவித்தார் ! தினமும் காலையில் வந்து பார்க்கும் போதெல்லாம் அவருடைய வண்டிப் பைதாவின் அலகில் வந்தே மாதரம் எழுதியிருப்பதும், அதை அவர் வாளியும் தண்ணீரும் கொண்டு வந்து துடைத்துக் கொண்டே வைது விட்டுப் போவதும் கொஞ்ச நாள் இருந்தது. ஒருநாள் காலையில் வாளியும் தண்ணீரோடும் வந்து பார்த்தபோது, சாக்பீஸ¤க்கு பதில் கீல் எண்ணெய் கொண்டு எழுதப்பட்டிருந்தது! ரொம்ப நேரம் அதைச் சொரண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அன் றைக்கு அவர் வேலைக்குப் போக முடியவில்லை. இனி வண்டியை வெளியே வைத்தால் சரிப்பட்டு வராது என்று பைதாக்களை அச்சிலிருந்து உருவி எடுத்து, சட்டத்தையும் வீட்டுத் தொழுவுக்குள் கொண்டுபோய் வைத்துக் கொண்டுவிட்டார். பிரச்சனை அதோடு முடியவில்லை. எந்நேரமும் நாலு பையன்கள் அவருடைய வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டே கொஞ்சதூரத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் அவருடைய தலை தெரிய வேண்டியதுதான் தாமதம், வந்தே மாதரம் என்று கத்துவார்கள். திட்டிக் கொண்டே அவர்களைக் கொஞ்ச தூரம் விரட்டுவார். தெருவிலோ காட்டிலோ எங்கே அவரைக் கண்டாலும் பிள்ளைகள் வந்தே மாதரம் என்று தூரத்தில் இருந்து கொண்ட கூப்பாடு போட்டுச் சொல்லுவார்கள்.

ஊர்மடத்துக்கு முன்னால் பிள்ளைகள் தெல்லு விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் யாரோ ரண்டுபேர் வந்து வெல்லம் ரங்கசாமி நாயக்கர் வீடு எது என்று பையனிடம் விசாரித்தார்கள்.

''என்னது, வெல்லம் ரங்கசாமி நாயக்கரா'' என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான் அதில் ஒரு பையன் ஒன்றுமே தெரியாதது போல.

''அதாண்டா நம்ப வந்தேமாதர நாயக்கர் வீட்டைக் கேக்கறாங்க'' என்றான் மற்ற ஒருவன்.

''வந்தே மாதர நாயக்கரா!'' என்று கேட்டார் வந்தவர்களில் ஒருத்தர்.

''ஆமாம். அது தெரியாதா ஒங்களுக்கு? அவரு இப்ப வந்தேமாதரம் கட்சியிலெ சேந்துட்ட ரில்லெ'' என்றான் பையன். இவர்கள் சிரித்த விதம் வந்தவர்களுக்கு, இது தெரியாதா உங்களுக்கு என்பது போல் பட்டது.

''ஏங்கூட வாங்க நாங் காட்டுரென்'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய், ''அந்தோ தெரியிதில்லெ, அந்தக் கல்லு வீடுதான்'' என்று காட்டிவிட்டு வந்தான்.

''என்னடே ''வந்தே மாதரம்'' இருந்தாரா? என்று மடத்தில் பதினைஞ்சாம்பிள்ளை விளையாட்டில் உட்கார்ந்து ஆடிக்கொண்டி ருந்த கொண்டுசாமி கேட்டார் குறும்பாகச் சிரித்து.

''இருக்காரு, தொளுவுக்குள்ளெ சத்தம் கேட்டது'' என்றான்.

''என்ன விசயமாத் தேடி வந்திருக்காகளாம்?''

''பசுமாடு ஒண்ணு வெலைக்கி நிக்கில்லா அவரு தொளுவுல; அதெ வாங்கீட்டுப்போக''

''அத அவரு யான வெலெ குருதெ வெலெ சொல்லுவா ரெ''

''சொன்னா என்ன வந்தேமாதரம்னு மாத்திரம் சொல்லுங்க; செ, நம்ம கச்சி ஆளுகள்ளெ வந்திருக்காக போலுக்குன்னு நெனச் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்துருவாருன்னு சொல்லிக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கென்'' என்று அந்த வினாடியில் அவனுக்குத் தோன்றியதைச் சொன்னான். அவனுடைய கற்பனையை மடத்தில் இருந்தவர்கள் பாராட்டிச் சிரித்தார்கள்.

நுன்னகொண்டநாயக்கர் ஒருநாள் வெல்லத் தைக் கூப்பிட்டு ''ஏண்டா யாரு என்ன சொன்னா ஒனக்கென்ன. எதுக்காக அப்படிக் கோவப் படணும். நீ அப்படிக் கோவப்படப்படத்தான் அதும் அதிகமாகும்'' என்று சண்டை பிடித்தார். ''நா யாருக்கு என்ன செஞ்சென் பெரியப்பா. என்ன இப்படிக் கண்ணுலெ காங்காம வையிராங்களெ'' என்று சொல்லும்போது அவருக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

வெல்லம் ரங்கசாமி என்று துலங்கி வந்த அவருடைய பெயர் அதன்பிறகு ''வந்தேமாதர நாயக்கர்'' என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர் விரும்பினாலும் - விரும்பாவிட்டாலும் அதுவே அவருடைய பட்டப்பெயராக நிலைத்து நின்றது அவருடைய வாழ்நாள் பூராவும் ! அதுக்குப் பிறகும்கூட.

கையில் கரித்துண்டோ சாக்பீஸோ எது கிடைத்தாலும், சுவர் என்று ஒன்று கிடைத்து விட்டால் அந்தவூர் குழந்தைகள் தப்பும் தவறுமாக வந்தேமாதரம் என்று எழுதியும் கை ராட்டையில் படத்துடன் மூவர்ணக் கொடி யையும் வரையாமல் விடமாட்டார்கள்.

*****

Jan 26, 2010

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா

 nambi2562

நாள்: 31 ஜனவரி 2010
நேரம்: மாலை 6 மணி
இடம்: இக்ஸா செண்டர்,
107 பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை – 8
(எழும்பூர் மியூசியம் எதிரே)

வண்ணநிலவன்
சி.மோகன்
அ.மார்க்ஸ்,
எஸ்.ராமகிருஷ்ணன்
சமயவேல்
சங்கர ராம சுப்ரமணியன்
வித்யாசங்கர்

விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள்.

கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.

அனைவரும் வருக

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது

 

IndiraParthasarathi

நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.  இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கநாதன் பார்த்தசாரதி.
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழில் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் சிறந்த எழுத்தாளராக உயர்ந்த இவர், ஏசுவின் தோழர்கள், சத்திய சோதனை, குருதி புனல், தந்திரபூமி, ராமானுஜர், வெந்து தணிந்த காடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.

இவர் மொத்தம் 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைகள், 10 நாடகங்கள், 2 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட இவர், சாகித்திய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்பட 8-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறா

Jan 24, 2010

நெருப்புக் கோழி - ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்.

Untitled

வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல' என்று இப்பொழுதுதானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, பழவகைகளின் குண தத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது நடுவயதிற்கப்பால் தானே!
பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம்; அல்லது கிட்டுப்புள்ளுக்குக் கொய்யாக் கழியை விடச் சிறந்ததொன்றில்லை என்ற நினைப்பாய் இருக்கலாம். தவிர, கை எட்டக் கூடிய தூரத்தில் கொய்யா தொங்கிக் கொண்டிருந்தால், நாளைக்கு வரும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேல் என்று தோன்றாதா? கருவேப்பிலைப் பழத்தைக் கூட ருசித்துச் சாப்பிடக்கூடிய வயதாயிற்றே!

ஆனால், எவ்வளவு ஆசைப்பட்டாலும் மரத்து நிழலைக் கூட மிதிக்க முடியாது. ஏனென்றால், தோட்டக் காவல்காரன் லயன் கரையின் மேல் நந்தியைப் போல் எப்பொழுதுமே உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகையால்,தினம் கொய்யா மரத்தின் தரிசனத்துடன் திருப்தி அடைந்தேன்.

நரி முகத்தில் விழிப்பது என்பது மெய்யாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால் நானும், என் நண்பர்களும் லயன் கரைப் பக்கம் போன பொழுது தோட்டக்காரன் இல்லாமல் இருப்பானேன்? எங்கள் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது! வேகமாகச் சென்று, ஆளுக்கொரு பக்கம் கொய்யாவைக் கொய்து கொண்டிருந்தோம்.'மளக்'கென்று ஏதோ குச்சி ஒடியும் சத்தம் கேட்டது. மரத்தின் மேலிருந்த நான், உஷாரடைந்து இறங்கத் துவங்கினேன். மறுபடி இலைகளில் நடப்பது போன்ற சலசலப்பின் ஓசை காதில் விழுந்தது. தொடர்ந்து புதரை விலக்கிக் கொண்டு ஒரு கையும், முண்டாசும் தெரிந்தது. தோட்டக்காரன்! அவ்வளவுதான்; என் நண்பர்கள் சிட்டாய்ப் பறந்து விட்டனர்; நான் பாதி மரத்திலிருந்து குதித்தேன். அதற்குள் தோட்டக்காரன் என்னண்டை வந்துவிட்டான். நான் அலங்கமலங்க விழித்தேன்.

"ஏம்பா கொய்யாக்காய் பறித்தாய்?"

நான் மௌனம் சாதித்தேன். வெறும் துண்டை மட்டும் நான் போட்டுக் கொண்டிருந்ததால், அவன் வெடுக்கென்று சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதுதான் சாக்கென்று நான் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

"என்ன தம்பி, கொய்யாக்காயைத் திருடிவிட்டு, டம்பமாய் கம்பி நீட்டுகிறாயே?"

"திருட்டென்னப்பா? வேணுமென்றால் கொய்யாக்காய்க்குக் காசு வாங்கிக்கொண்டு போயேன். சின்னப் பையன் என்றுதானே சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டாய். அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே முறைப்பாய் நின்றேன். மனதிற்குள் உதைப்புதான்.

"சவுக்கத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ... போ... போ" என்று அவன் கருவினான்.

na_pitchamurthy இதுதான் சாக்கென்று நான் நடையைக் கட்டினேன்.
இந்த சம்பவம் நடந்தபொழுது என் மனம் பட்ட பாட்டைப்பற்றிப் பின்னர் எண்ணும் போது வெற்றி உணர்ச்சிதான் தலைதூக்கி நின்றது. என் வாக்கின் திறமையல்லவா வெற்றி கொண்டது. அதை மனத்திற்குள் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இல்லாவிட்டால் கன்னம் பழுத்திருக்காதா? இதைப் போலவேதான் மற்றொரு நிகழ்ச்சியும். எங்கள் வீட்டில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள்! தினந்தோறும் வீட்டில் ஒரு தமாஷ்! குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு வரும். எதுவோ வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு, பிறகு எல்லாமாகக் கொல்லைக்கட்டு திண்ணையில் வந்து கூடிவிடும். 1-ம் நம்பர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்காரும். 2, 3, 4 குடும்பத்துக் குழந்தைகள் எதிர்த்தாற்போல் வந்து நிற்கும்.

"உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும்.

"பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும்.காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும்.
"பேசாதே, அடிச்சூடுவேன்."

கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ,அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்?வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்?
இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும்,குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?

இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்றிருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண்போல் மனத்தில் காட்சி அளிக்கிறான்.அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக்கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன் நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்துவிடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயஜாலமா?

அல்லது,

சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ?சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவதுதான் கலையோ?

****

Jan 23, 2010

ஊமைத் துயரம் - நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்

ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது.

விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்...

expressionism-3

அழைப்பு மணி வீறிட்டது.

வெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன் அருகில் வரும் காலடியோசை கோமதியின் குரல்... யாரோ உங்களைத் தேடி வந்திருக்காங்க...

'யாராம் ? ' அவனுக்கு எரிச்சலாக வந்தது. 'சரியாக தெரியல்லே. அண்ணைக்கு ஒரு நாள் காலம்பற வந்த நம்ம ஊமையன் செத்துப் போணாண்ணு சொல்லி ரூபா வாங்கிகிட்டுப் போனவண்ணு தோணுது '.

திடாரென்று நித்திரை தேவி போன இடம் தெரியவில்லை, அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். அந்தக் காலைக் குளிரிலும் அவன் உடம்பு உஷ்ணம் அடைந்தது.

'யாரு... அந்த ஊமையனின் மருமகன் பொன்னையனா... ? '

'அப்படிண்ணு தான் தோணுது... '

அவனைக் கண்டு சூடா நாலுவார்த்தைக் கேட்க வேண்டுமென்று நாராயணனுக்கு சகிக்க முடியாத ஆத்திரம் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த வாய்ப்பு இப்படி தன்னைத் தேடி தன் வீட்டுக்கே வந்து சேருமென்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தூக்கம் எழுந்ததும் நிலைக் கண்ணாடியில் போய் விழிக்கும் நித்ய பழக்கத்தைக்கூட மறந்து அவன் விரைந்து நடந்து வெளியில் வந்து முற்றத்தில் நிற்கும் பொன்னைய்யன் முகத்தில்தான் விழித்தான்.

இரண்டு மாதம் முந்தி தன்னைப் பார்க்க வந்த அதே பாவம். நரைத்த தலைமயிர், தாடி, மீசை, கன்னங்கரிய மெலிந்த குட்டையான உருவம் ஒரு அசட்டுச் சிரிப்பு.

தொண்டை முழுதும் திறந்து காரசாரமாக கேட்க வேண்டியிருந்ததையெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இன்றைய அவன் நல்வருகையின் உத்தேசத்தை அறியும் பொருட்டு, உம் என்ன ? என்று வினவினான் அவன்.

'இல்லே என் மாமனார் க்ளோஸ்... '

நாராயணனுக்கு குபீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

உன் மாமனார் பாவி எத்தனை தடவைதான் உனக்கு வேண்டி சாவணும் ? ரெண்டு மாச முந்தி நீயல்லவா எங்கிட்டேவந்து அவன் செத்துப் போனாண்ணு சொல்லி பத்து ரூபா வாங்கிகிட்டுப் போனே, அண்ணைக்கு சாயந்திரம் குத்துக்கல்லுப்போல் ஆரியசாலை ஜங்கஷனில் கடை நடையில் அவன் உட்கார்ந்திருப்பதை நான் கண்ணாலே பார்த்தேன்.

- அந்த கட்டத்தைச் சொல்லச் சொல்ல அவன் கோபத்தின் கொதிநிலை டிகிரி மேலே மேலே ஏறிக் கொண்டே சென்றது; மேற்படி சாவு சம்பவம் நடந்ததாக இவன் சொல்லி அறிந்த அன்று முழுதும் இன்று போல்தான் காரியாலயம் செல்லும்போதும், அங்கே வேலையில் ஈடுபட்டிருந்த போதும், பிறகு மாலையில் வீடு திரும்பும் போதும் எல்லாம் முழுக்க முழுக்க ஊமையனைப் பற்றிய பழைய நினைவுகள்தான். வழியில் டாக்கடைச் சந்தில் வைத்து பொன்னைய்யன் மிகவும் அலங்காரமாய் ஆர்பாட்டமாய் பேசிக்கொண்டு நிற்பதைக் கண்ட போதே இவனுக்குச் சிறிது சந்தேகம் தட்டியது. பிறகு வீட்டுக்குப் போய் உடைமாற்றிவிட்டு மாலையில் நடக்க இறங்கிய போது ஆரியசாலை முனையில் அடைத்துக்கிடந்த ஒரு கடை நடையில் மிகவும் விச்ராந்தியாக தன் இரண்டு யானைக் கால்களையும் நீட்டி அதைச் செல்லமாக தடவுவதிலும் அங்கங்கே பூத்துக் காய்ந்திருந்த கொப்புளங்களிலிருந்து தோலை நேர்த்தியாக உரித்து எடுப்பதிலும் பரமானந்தமாய் லயித்து உட்கார்ந்திருந்த ஊமையனைக் கண்டதும், செத்துப் போனதாக சொல்லப்பட்ட மனுஷன் உயிரோடு சுகமாய் இருக்கிறானே என்று அவனுக்குத்துளி கூட மகிழ்ச்சியோ ஆசுவாசமோ ஏற்படவில்லை மாறாகத்தான் ஏமாற்றப்பட்டோம் என்று அவனுக்கு வந்த ஆத்திரமும் அவமானமும் கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு அடுத்த தெருவில் தன் அம்மாவும் சகோதரர்களும் வசிக்கும் குடும்ப வீட்டுக்குப் போனபோது, நடந்ததை அவனிடமிருந்து கேள்விபட்ட அம்மா சொன்னாள்:

'உனக்குத் தெரியாதடா பொன்னைய்யன் மகா குடிகாரன்; ஊமையன் செத்துப்போனதாகச் சொல்லி அவன் இழவுச் செலவுக்குண்ணு எல்லோர்கிட்டேயும் ரூபாய் வாங்கி சாராயம் குடிப்பதுதான் அவன் வேலை, இனி வந்தால் ஒன்னும் கொடுக்காதே '.

அதைக் கேட்டு அவன் ஏமாற்றப்பட்டது இன்னும் ஊர்ஜிதமான போது அவனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருந்தும் அதுக்கென்ன ' என்னைக்கு ஆனாலும் ஊமையன் இழவுச் செலவுக்குண்ணு ஏதாவது கொடுக்கணுமுண்ணு இருந்தேன். அதை இப்போ கொடுத்தாச்சு. இனி நிஜமாக அவன் சாவும்போது கொடுக்கப் போவதில்லை என்று சொல்லிச் சமாளித்தான். ஆனால் அதை அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. 'அது எப்படிடா ' அவன் மகள் மாப்பிள்ளை இப்படி ஏமாற்றினதுக்கு பாவம் ஊமையன் என்ன செய்வான் ' '

'ஊமையன் நிஜமாக மண்டையைப் போடும்போதும் அவன் இழவுச் செலவை ஊமையன் கையிலா கொடுக்கப் போறோம். அப்போதும் இந்தப் பொன்னைய்யன் தான் வந்து வாங்கிகிட்டு போகப் போறான் ' அதை இப்பவே கொடுத்தாச்சு அவ்வளவுதான் ' அவனுக்கு ஏனோ இப்படிச் சொல்லும் போதுதான் உட்பட்ட எல்லோர் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அன்றிலிருந்தே மனதில் கருவிக்கொண்டிருந்தான். என்றைக்காவது எதுக்காவது வேறொண்ணுக்கும் இல்லாவிட்டாலும் ஊமையன் நிஜமாக சாவும் போதாவது பொன்னைய்யன் தன்னிடம் வராமலா இருக்கப் போகிறான்.

அப்போ காரசாரமாக நாலு வார்த்தை கேட்கணும் '... அப்படி இதோ அந்த தருணம் வாய்த்து விட்டிருக்கிறது.

பொன்னைய்யனின் முகம் சிறுத்துவிட்டது. இல்லே இப்போ நிஜமாகவே ஆள் க்ளோஸ். ஊர்க்காரங்க எல்லோரும் வந்துட்டாங்க , ஆஸ்பத்திரிலிருந்து என் வீட்டில் கொண்டு வந்து கிடத்தியிருக்கிறேன் வேறொண்ணுமில்லே. அதைத்தான் தெரிவிச்சுகிட்டுப் போக வந்தேன் என்று கூறிவிட்டுத் திரும்பிப் போக அவசரப்பட்டான் அவன்.

இப்போது நாரயணனின் நெஞ்சம் தளர்ந்தது பாவம்... ஊமையன் ' இருந்தும் குரலில் இருந்த இறுக்கத்தைச் சற்றும் தளர்த்தாமல் 'எப்போ எடுப்பாங்க ? ' என்று கேட்டான்.

'அதிக நேரமாகாது; ஊர்க்காரங்க வரத் தொடங்கியாச்சு. இதை தெரிவிச்சுகிட்டுப் போகத்தான் வந்தேன் நான் வரேன் ' என்று கூறிவிட்டு அவன் அவசரம் அவசரமாக வெளியேறி தெருவில் இறங்கி நடந்து மறைந்தான்.

பிறகு யந்திரரீதியில் பல் தேய்க்கும்போதும் குளிக்கும்போதும், காப்பி சாப்பிடும்போதும், காரியாலயம் செல்லும்போதும் எல்லாம் நாராயணனின் நெஞ்சில் ஒரு குற்றவாளி உணர்ச்சியின் கனம் அழுத்திக் கொண்டிருந்தது.

என்ன ஆனாலும் பொன்னைய்யனிடம் அப்படி முகத்தில் அறைந்தது போல் இந்தக் கட்டத்தில் சூடாகப் பேசியிருக்கக் கூடாது. ஏதாவது கொடுத்திருக்கலாம். வீதியில் ஜனக் கூட்டத்தின் இடையில் நடந்து கொண்டிருந்த அவன் மனம் இப்போதும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தது.

பாவம்...ஊமையன்

செவியும் கேட்காது. பேச்சும் வராது. காலமாகிப் போன தன் அப்பாவைவிட ஒரு பதினஞ்சு வயது கூடுதல் இருக்கும். இப்போ ஒரு எழுபத்தஞ்சு வயசிருக்கலாம்.

ஆமாம்... அவனுக்கும் தன் குடும்பத்துக்கும் என்ன சொந்தம் ? நாராயணன் அறிந்தவகையில் சுய ஜாதி என்பதைத் தவிர வேறு எந்த சொந்தமோ பந்தமோ இல்லை. ஆனால் தனக்கு அறிவு வந்த காலம் முதல் இரண்டு ஆண்டுகளுக்குமுன் தன் அப்பா காலமாவது வரையிலும் காலைப் பொழுது முழுதும் இந்நகரின் கடைத் தெருவில் எல்லாம் சுமை தூக்கும் ஊமையன், ராத்திரி பனிரெண்டு மணி வாக்கில் தங்கள் வீட்டு வெளித் திண்ணையில் வந்துதான் படுப்பான். பத்து ஆண்டுகளுக்கு முன் பாட்டி neelapadm இறப்பது வரையில், வந்ததும் அன்றைய விசேஷங்களை பே....பே... என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தாலும் முகபாவத்தாலும் கை சைகையாலும் அரைமணி நேரமாவது பாட்டியிடம் பேசித் தீர்க்காமல் ஊமையன் தூங்குவது இல்லை. வீட்டில் அனைவரும் சற்று நேரத்திற்கு அவனைப்போலவே செவியும் நாக்கும் இயங்காத ஊமையர்களாக மாறி, அவனிடம் சம்பாஷனை செய்யாமல் தூங்கப் போவது இல்லை. அந்த அளவுக்குக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தான் ஊமையன். அவனிடம் எல்லோருக்கும் ஒரு தனி வாஞ்சை. அவனிடம் பேசுவதில் பாட்டிக்கும் அப்பாவுக்கும் இருந்த ஒரு பிரத்யேக தேர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் சிறுவர் சிறுமிகள் உட்பட எல்லோரும் கைவரப் பெற்றிருந்தார்கள்.

அவன் நெஞ்சு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டது. அண்ணைக்கு ஊமையன் நிஜமாகவே செத்துப் போயிருப்பானா ? இன்னும் சற்று நேரத்தில் வழியில் ஆரிய சாலை ஜங்ஷன் எதிர்ப்படும். அங்கே அன்று போல் கடை நடையில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் ஊமையனைக் காண நேர்ந்து விடுமோ... ?

-இப்படி நினைக்கும் அளவுக்குத் தன் மனம் கொடுமையானதாக ஏன் மாறுகிறது என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் சாகாமலிருப்பதில் தனக்கு ஏன் இந்த ஏமாற்றம் ? அவன் பாட்டுக்கல்லவா உயிருடன் இருக்கிறான் ' அதனால் தனக்கு என்ன நஷ்டம் ?

இப்போது மறுபடியும் அவனுக்குப் பொன்னைய்யன் மீது கோபம் கோபமாக வந்தது. படுபாவி ஊமையனின் மகளைக் கட்டியிருக்கான். இருந்தும் இப்படியா தன் மாமனார் சீவனை சாக்கு சொல்லி பணம் பறிப்பான்... ' அவனால் தானே தன் மனமும் இப்போ இப்படியெல்லாம் விசித்திரமாக இயங்குகிறது.

சின்ன வயது நாட்களில் பாட்டியிடமிருந்தும் அப்பா அம்மாவிடமிருந்தும் ஊமையனைப் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள் தனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஊமையனின் சொந்த ஊர் இங்கிருந்து நாற்பது மைல் தொலைவிலிருக்கும் பத்மநாபுரம், அவன் அப்பாவுக்கும் அவனைப் போலதான் செவி கேட்காது; பேச்சும் வராது. அம்மாவுக்கும் இரண்டு கண்ணும் தெரியாது.

குழந்தைகளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. பத்து பிள்ளை பெற்றதில் மூத்தவன் இவன் மட்டும்தான் தேக ஆரோக்கியமாக இருந்தான். மற்றவங்களுக்குப் பலவித ஊனங்கள், ஊர்க்காரங்க மனமிரங்கி ஏதாவது கொடுத்தால் உண்டு, மற்ற நேரங்களில் முழுப் பட்டினி. அப்படிக் கிடந்துத் தவிக்கும் போதுதான் ஒருநாள் மகாராஜா, காலத்தில் ராஜதானியாக இருந்த அந்த பத்மநாபபுரம் அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் எழுந்தருளும் போது இவன் அப்பா தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன் திடாரென்று காவலை மீறி, ரதத்தின் முன்வந்து பே...பே... என்று கத்தியவாறு விழுந்தாராம். ஊர் பிரதானியைக் கூப்பிட்டு மகாராஜா விஷயம் என்னவென்று விசாரித்தபோது அந்த ஊனகுடும்பத்தின் பரிதாபங்கள் அவருக்குத் தெரியவந்தது. அதன்பின் இவன் அப்பா அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் நீலகண்ட ஸ்வாமி கோயிலில் இருந்து நாலு கட்டி சாதம் உச்சக்கால தீபாராதனை கழிந்ததும் இலவசமாகாவர்களுக்கு வழங்க வேண்டுமென்று ராஜா உத்தரவு பிறப்பித்தார். பிறகு இவன் பெற்றோர்கள் காலம் வரை சாப்பாட்டுக் கவலை இல்லாதிருந்தது ' இருந்தும் இவனைத் தவிர போதிய ஆரோக்கியமில்லாத மற்ற இவன் தம்பி தங்கைகள் பிஞ்சும் காயுமாக இருக்கும் போதே அற்பாயிசில் இறந்து போனார்கள்.

ஊமையனின் அப்பாவும் அம்மாவும் காலமானபிறகு மறுபடியும் இவனுக்கு வயிற்றுப்பாடு பிரச்னையாகி விட்டது. நல்ல கட்டுமஸ்தான உடம்பு வாய்த்திருந்த இவன், பக்கத்து தக்கலை பஸ் நிலையத்தில் மூட்டை சுமக்கும் வேலையில் ஈடுபட்டான். கிடைக்கும் பணத்தை மிகவும் சிக்கனமாகச் செலவு பண்ணுகையில் கொஞ்சம் காசுகூட சேர்த்து வைத்தானாம். ஊர்க்காரங்க பத்மநாபபுரத்திலிருந்தே ஒரு ஏழைப் பெண்ணை இவனுக்கு மணம் முடித்து வைத்தார்கள். பணத்தால்தான் ஏழையே தவிர மற்றபடி ஆரோக்கியத்திலும் அங்க அமைப்பிலும் அவளுக்கு எந்த குறையும் இல்லை. பிறகென்ன ஆண்டுக்கு ஒரு பிரசவம் நிகழத் தொடங்கிவிட்டது. எல்லாம் பெண் குழந்தைகள். குழந்தைகள் எல்லோருக்கும் நன்றாகச் செவி கேட்டது. ம்மா...ப்பா..... என்று சரளமாக வாய் பேசியது....

பெண்டாட்டி குழந்தை குட்டிகள் என்றெல்லாம் வந்தபோது அவன் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. அந்தச் சின்ன ஊரில் சுமை தூக்கிக் கிடைக்கும் வரும்படியில் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாகிவிட்டது.

பிறகுதான் நவராத்திரி தோறும் பத்மநாபபுரத்திலிருந்து இங்கே நகரத்தில் ஒன்பதுநாள் திருவிழாவுக்குக் கொண்டுவரும் சரஸ்வதி அம்மனின் பல்லக்கைச் சுமந்து கொண்டு ஊமையன் இங்கே நகரில் பிரவேசித்தான். இங்கே பெரிய கடைவீதியிலும் பஸ் நிலையத்திலும் மூட்டைத் தூக்குவதில் அதிக வரும்படி கிடைப்பதுக்குள்ள சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்டு, நவராத்திரி கழிந்து அம்மனை பத்மநாபபுரத்துக்குப் பல்லக்கில் சுமந்து கொண்டுபோய் சேர்த்த பிறகு மறுபடியும் இங்கே கால் நடையாகத்தான் வந்து சேர்ந்துவிட்டான் அவன்.

என்றும் ராத்திரி பதினோரு மணி அளவில் படுக்க வரும்போது வெளித் திண்ணையில் வைத்து, அன்றைய உணவுச் செலவு கழித்து மீதியிருப்பை மறுபடியும் மறுபடியும் எண்ணுவதும் துணிப்பையில் போட்டு கட்டிப் பத்திரமாய் தன் மடியில் யாருக்கும் தெரியாமல் அவன் சொருகுவதும் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

அடிக்கடி ஊரிலிருந்து பெண்டாட்டி வந்து சத்தம் போடுவாள் பாவி மனுஷா... அங்கே நான் எட்டுப்பிள்ளைகளை வச்சுகிட்டு எப்படி பிழைப்பேண்ணு இருக்கேன்...... செலவுக்கு ரூவாதா ... ' அப்படி இப்படாண்ணு சொல்லும் போது அவன் கையும் முகமும் எல்லாம் அதற்கேற்றாற்போல் அபிநயிக்கும். அவன் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி கையை விரிப்பான். அவள் விடமாட்டாள். மடியில் கைவைப்பாள். பே.... பே என்று வீடு கிடுங்க கோபத்தில் அலறுவான். பிறகு பாட்டியும் அப்பாவும் அவர்கள் சண்டையில் புகுந்து பெண்டாட்டிக்காரிக்கு ஏதாவது கொடுக்க அவனை நிர்பந்திப்பார்கள் மனசில்லா மனசோடு வெளியே போய் அங்குமிங்கும் பார்த்து யாரும் காணாமல் மடியிலிருந்து கொஞ்ச ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து, அதை ஒண்ணுக்கு நாலு தடவை துப்பல் தொட்டு எண்ணிவிட்டு பே... பே என்று புலம்பியவாறு அவள் கையில் கொடுப்பதை நாராயணன் பார்த்திருக்கிறான். பிறகு கொஞ்சம் நாட்களுக்கு உபத்திரவம் இல்லை. இவன் மறுபடியும் வாய்க்கும் வயிற்றுக்கும் கொடுக்காமல் ஒரு நல்ல வேட்டி வாங்காமல் கந்தலைக் கட்டிக் கொண்டு பணம் சேர்ப்பான்.... மீண்டும் ஒருநாள் பெண்டாட்டி வந்து நிற்பாள். பிறகு பழைய கதைதான் : இப்படியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு மகளை இந்த டாக்கடை பொன்னைய்யனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டது. இனியொரு மகளை ரெண்டாந்தாரமாக ஒருவன் கட்டினான். அவன் இப்போ இறந்து போனான்.

ஊமையனின் பெண்டாட்டியும் வாய்க்கில்லாமல் வயிற்றுக்கில்லாமல் நெல்லுகுத்துவது மாவிடிப்பது இப்படி கடுமையான வேலைகளுக்கெல்லாம் போய் ஒரு சீக்காளி ஆகி, ஒருநாள் சிவனேண்னு கண்ணை மூடிவிட்டாள். செய்தி அறிந்த அப்பா அவனிடம் விஷயத்தை அறிவித்தபோது அவன் ஆகாயத்தை தலை உயர்த்திப் பார்த்துவிட்டு கையை விரித்து இரு தடவை ஆட்டினான் அப்படியென்றால் கடவுள் செயல் என்றும் ஆகலாம் கடவுளிடம் போய் சேர்ந்துவிட்டாள் என்றும் கூறலாம். பிறகு அப்பா கோபமாய் சொன்னதால் பெண்டாட்டியின் கடைசி கர்மத்தில் பங்கெடுக்க பத்மநாபுரத்துக்குப் போனான். ஆனால் மறுபடியும் இங்கேயே வந்து விட்டான்.

'நாளுக்கு ரெண்டு ரூபா வச்சு தா... காலம்பர காப்பி மத்தியானமும் ராத்திரியும் சாப்பாடு நான் போடுறேன் ' என்று இங்கேயே உள்ளூரிலேயே குடியிருக்கும் மகள் வந்து கூப்பிட்டபோது, அவன் மகள் வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான் மகள் போனபிறகு பாட்டி கேட்டாள். எல்லாம் சைகை மொழியில் தான். 'ஏன் இப்படி கண்ட கண்ட ஓட்டலில் எல்லாம் சாப்பிட்டுகிட்டு இங்கே வந்து பழிக்கிடைக்கிறே ? உன் மகள் வீட்டுக்குப் போயேன். உள்ளதை அவகிட்டே கொடுத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுகிட்டு படுத்துக்கோயேன். '

அதுக்கு ஊமையனின் பதில் சைகையில்தான். ரெண்டு நாளைக்குச் சோறு போடுவாள். பிறகு காசை வாங்கிவிட்டுத் திட்டுவாள் கஞ்சிகூட விடமாட்டாள்.

ஆனால் பாட்டி விடமாட்டாள் ' நீ என்ன கருங்கல்லா, எண்னைக்கும் இப்படியே சம்பாதிச்சுகிட்டு இருக்க ' ஏதாவது சுகக்கேடு வந்து படுத்துட்டா பிறகு உனக்கு யாரு கஞ்சி காய்ச்சித் தருவா ? '

இதுக்கு அவன் கைகளை மேலே வானத்தில் உயர்த்திக் காட்டிவிட்டு தலையாட்டிக் கொள்வான். அதன் அர்த்தம் எல்லாவற்றிற்கும் கடவுள் இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்.

எது எப்படியோ, கடைசியில் இப்போது பாட்டி இல்லை; போய் சேர்ந்து விட்டாள். அவள் சொன்னது சரியாகிவிட்டது. ஊமையனின் ரெண்டு கால்களும் வீங்கி வெடித்துச் சீழ் வடியத் தொடங்கிவிட்டது. முன்னால் போல் சுமை தூக்கவும் முடியவில்லை. இரண்டு வருஷங்களுக்கு முன் அப்பா காலமாவது வரையிலும் தங்கள் வீட்டு அதே வெளித் திண்ணையில் தான் ராத்திரி வந்து படுப்பான். ராத்திரி திடாரென்று தூக்கத்தில் தனக்குத் தானே ஊ...ஊ என்று ஊளையிடுவான். ஒரு பிரத்யேக தொனியில் அடித் தொண்டையில் கத்துவான். இதையெல்லாம் கேட்டு வீட்டில் குழந்தைகள் பயந்து வீறிட்டு அழத் தொடங்கின. வெளித்திண்ணை முழுதும் இவன் காலில் இருந்து வடியும் சீழால் அசுத்தமாகி, எப்போதும் ஒருவித வாடை வேறு.... ராத்திரி நேரம் கெட்ட நேரத்தில் இவனுக்கு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது. மேலும் அவன் மகள், மருமகன் எல்லோரும் இதே ஊரில் அடுத்த தெருவில் குடியிருக்கிறாங்க, அவர்களுக்கு இல்லாத அக்கரையா ? ஆனாலும் இங்கே வந்து இனி படுக்கக் கூடாது என்று ஊமையனிடம் சொல்ல நாராயணனுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே தன் இளைய தம்பி வழியாக விவரம் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 'நீ இனி உன் மகள் வீட்டில் போய் படு. '

இதைக் கேட்டு ஊமையன் விழிகள் நனைந்தன. பாட்டி அப்பா இவர்கள் போட்டோக்களைச் சுட்டிக் காட்டி வானத்தைப் பார்த்துவிட்டு பே... பே... என்று அவன் சொன்னதை கேட்க வீட்டில் எல்லோருக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது...

அப்படி அவனை விலக்கிய பிறகும் ஒருமாத காலம்கூட அங்கேயே வந்து படுத்துக் கொண்டிருந்தான். இப்போ வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர்களுக்கும் பெரிய தொந்தரவாகி விட்டது. எல்லோரும் அவர்களையே குற்றம் சொன்னார்கள். பிறகு ஊமையன் ராத்திரி வரும் முந்தியே வெளிகேட்டை அடைத்துத் தாள் போடப்பட்டது, ரொம்ப நேரம் பே... பே... என்று பரிதாபமாகச் சத்தம் போட்டவாறு அவன் கதவைத் தட்டும்போது வீட்டில் எல்லோரும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தார்கள். பிறகு பே... பே... என்று என்னமோ புலம்பியவாறு அவன் போய்விட்டான்.

இதன் பிறகு ராத்திரி படுக்க அவன் வருவதில்லை, ஆனால் பண்டிகை நாட்களிலும் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் நடக்கும் போதும் வந்து சாப்பாட்டிலும் பலகாரத்திலும் அவன் பங்கை உரிமையுடன் பெற்றுக்கொண்டு போவான். சிலபோது காப்பிக் குடிக்கவென்று சில்லறை கேட்டு வாங்கி போவான். நாராயணனின் கல்யாணத்திற்குப் பிறகு, வீட்டின் இட வசதியின்மை காரணமாக இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்கு அவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போன பிறகு அங்கும் அடிக்கடி சென்று ஏதாவது வாங்கிச் செல்வான்.

ஆரியசாலை ஜங்ஷன் வந்து கொண்டிருந்தது. நாராயணனின் நடை இப்போது இன்னும் மெதுவானது. ஊமையனைப் பொறுத்த வரையில் அவன் வாழ்க்கை நாடகத்தின் கடைசி காட்சிதான் இப்போ நடந்து கொண்டிருக்கிறது. எனவே அவன் சாவு இப்போ அப்படியொன்றும் அதிசயமானதல்ல. ஆனால் பொன்னைய்யன் எத்தனையோ பேரிடம் எத்தனையோ முறை அவனை அவன் அறியாமல் கொன்று விட்டிருக்கிறான் என்பதை நினைக்கையில்தான் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

வழக்கமாய் ஊமையன் உட்கார்ந்திருக்கும் அந்த அடைத்துக் கிடக்கும் கடையின் நடையில் அவன் கண்கள் இப்போ மெல்ல மெல்ல அஞ்சி அஞ்சிச் சென்றன.

அவன் மனம் துணுக்குற்றது. அந்த இடம் சூன்யமாக இருந்தது.

அப்படியென்றால்...

இன்று காலையில் பொன்னையன் சொன்னது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். நிஜமாகவே புலி வந்துவிட்டதா ?

பாவம், அவன் இறுதிச் சடங்குக்குச் செலவுக்கு ஏதாவது கொடுத்திருக்கலாம் என்று மனம் கஷ்டப்பட்டதே. ஆனாலும் இன்றுதான் ஏமாற்றப்படவில்லை என்று வக்கிரமான ஒரு ஆசுவாசம் நெஞ்சில் நிறைய அவன் நடந்து வீட்டின் வெளிகேட்டைத் திறந்து கொண்டு முற்றத்தில் கால்வைத்தபோது, முற்றத்திலிருந்து வீட்டுக்கு ஏறும் நடைப்படியில் உட்கார்ந்திருந்த ஊமையன் நாராயணனைப் பார்த்து பே... பே... என்று பேசிச் சிரித்து அமர்களமாய் வரவேற்றான்.

*****

Jan 19, 2010

கபாடபுரம் - புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

1. கடல் கொண்ட கோவில்

நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.

TE-Mystic-Outlook 

நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட்டுவிடுவார்களா? கல்லில் உறையும் கன்னி எனில், திரிகால பூஜையும் ஆர்ப்பாட்டமும் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் கூட, சற்றும் சஞ்சலமற்று நடந்து விடுகிறார்கள். என்ன மனிதர்கள், என்ன பிழைப்பு!
நான் உள்ளுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். கல்லில் வடித்திருந்த உருவத்தில் மனசை லயிக்கவிட்ட எனக்கு, அந்தக் கோயிலில் அந்த அர்த்த ஜாமத்தில் இப்படி எண்ணமிட்டுப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு காரியமா அல்லது... அதற்கும் அப்பால், அதற்கும் அப்பால் என வெங்காயத்தோல் உரித்துகொண்டுபோவது போல் மனித அறிவு என்ற ஸ்பரிசம் படப்பட மற்றொரு திரையிட்டுவிட்டு, அதற்கும் அப்பால் அகன்று சென்றுகொண்டே இருக்கும் அந்த விவகாரத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சியா என என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.

எனது இளமையில், எப்போதோ ஒரு முறை - கணக்குக் கூடத் தவறிப் போய் வெகுகாலமாகிவிட்டது - கன்னியின் கொலு விழாவிற்கு வந்தேன். மஞ்சணை மெழுகு வைத்து அர்ச்சகன் அந்தக் கருங்கல் வடிவத்தை பதினாறு வயது சிறுமியாக ஆக்கியிருந்தான். அந்த அர்ச்சகனுடைய கைத் திறமையை மறந்து அந்த அழகில் மனசை இழந்தேன். பிறகு உலகத்து ஊர்வசிகள் எல்லாம் பெண் பிறவிகளாகக் கூட எனக்குத் தென்படவில்லை. ஆனால் அதற்கு மறுநாள் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. மறுநாள்தான் அர்ச்சகனுடைய கைத்திறமையை உணர முடிந்தது. உதயகால பூஜையின்போது, தேய்ந்தும் மாய்ந்தும் போய்த் தென்பட்ட கருங்கல் விக்கிரகந்தானா முந்திய நாள் இரவில் கண்ட யுவதி! அன்று சிதறின ஆசை பிறகு மறுபடியும் மனசில் குவியவே இல்லை.

திட்டிவாசல் வழியாகக் கடற்காற்று பரம் பரம் என அடித்துக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. மூலக் கிரகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். இருட்டுடன் ஐக்கியமாகிக் கிடக்கும் சிலையில் வைர மூக்குத்தி மட்டும் சுடர்விட்டது. எழுந்து பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். தூக்கமோ அகன்று விட்டது. என்ன செய்யலாம்? பொழுது விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று பார்க்கலாம் எனக் கிழக்குக் கோபுர வாசலின் திட்டிவாசல் வழியாக வெளியேறினேன். கடலலைகள் ஆக்ரோஷமாகக் குமுறி கிழக்கு வாசலிலிருந்து சமுத்திரத்துக்குள் இறங்கு 978-81-8368-545-0_b படிக்கட்டுகளை மோதி நுரை கக்கின. அன்று நல்ல நிலாக் காலம் ஆகையால் கடற்பரப்பு நுரைக் கரையிட்ட வெள்ளிபோல் மின்னியது. பேரலைகளுக்கிடையில், கடல் மட்டத்துக்கு அடியில் உள்ள குன்றுகளின் முகடுகள் பெரிய சுறா மீன்களின் முதுகு போலத் தென்படும். அடுத்த கணம் பனைப் பிரமாண்டமாக படம் எடுக்கும் நாக சர்ப்பம் போன்ற பேரலை மடங்கி அடித்து அதை முழுக்கிவிடும். வானத்தை அண்ணாந்து பார்த்தேன். இன்னும் விடிவெள்ளி உதிக்கவில்லை. எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது. நின்று நின்று காலோய்ந்து மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தேன். திண்ணையில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு அசந்துவிட்டேன். கடலின் ஓங்காரநாதம் தாலாட்டியது. நினைவு வழுவியது எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எங்கோ வெகு தொலைவில் நினைவின் அடிவானத்தில் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது...

என்ன அதிசயம். கடல் அலைச் சத்தம் கேட்கவில்லையே. கடல் ஓய்ந்துவிட்டதா அல்லது என் காதுகள்தான் ஓய்ந்து விட்டனவோ? முழுப் பிரக்ஞையும் வந்துவிட்டது. ஆனால் இமைகள் மட்டும் விழிக்க முடியவில்லை. இடைவெளிகளினூடே கோயிலின் திட்டிவாசல் தெரிந்தது. கண் இமைகளை யார் இப்படி அமுக்குகிறார்கள். மேல்விழுந்து அழுத்தும் பெரும்சுமையை உதறித் தள்ளுகிறவன் போல, கண் இமைகளை நிர்ப்பந்தப்படுத்தித் திறக்க முயன்றேன். முடியவில்லை. மூச்சுத் திணறியது. சற்று அயர்ந்தேன். மந்திர வலையிலிருந்து விடுபட்டவைகளைப் போல எனது கண்கள் திறந்தன. அப்பாடா என்ன சுகம்! எழுந்து உட்கார்ந்தேன். உறக்கச் சடைவு தீரவில்லை. என்ன அதிசயம்! அலைச் சத்தமே கேட்கவில்லையே! இதென்ன கூத்து? திட்டிவாசல் வழியாக நிலவொளிதான் தெரிந்தது. கர்ப்பக்கிரகத்தில் வைரத்தின் ஒளிச் சிமிட்டும் பழையபடிதான் இருந்தது. எழுந்து திட்டிக் கதவு வழியாக வெளியே வந்தேன். என்ன ஆச்சர்யம்! கண்ணுக்கெட்டிய வரை சமுத்திரத்தையே காணவில்லை. பால் போன்ற நிலவில் சமுத்திரப் படுகைதான் தெரிந்தது. கடல் வற்றுவதாவது! எதிரில் சற்று முன் குமுறிக் கொண்டு நின்ற பேரலைகள் எங்கு சென்று ஒளிந்தன? கடல் ஜலம் உள்வாங்கிவிட்டதா!

சமுத்திரப் படுகையிலே பெரும் பெரும் கற்குன்றுகள் சிதறிக் கிடந்தன. தூரத்தில் ஒரு குன்றின் பேரில் கோபுரமும் கோவிலும் தென்பட்டன. சமுத்திர மட்டத்துக்குக் கீழ் கோவிலும் கோபுரமுமா? பரளியாறும் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என எவனோ ஒருவன் ஏங்கியது நினைவுக்கு வந்தது. நான் கண்ட கோவில் அழிந்து போன, கடல் உண்டு பசியாறின சமுதாயத்தின் கோவிலோ? என்ன கோவிலாக இருக்கக் கூடும்? ஒருவேளை இந்தக் கன்னிக்கு அவர்கள் கட்டிய கோவிலோ? எண்ணமிட்டுக் கொண்டே கோபுர வாசலில் இருந்து கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். ஐந்நூறு படிகள்! கடல் படுகையில் நான் கால் வைத்து அண்ணாந்து பார்த்தேன். கன்னியின் கோவில் மலை முகட்டிலிருந்தது! கடல் திசையை நோக்கினேன். நிலவொளி அவ்வளவு தீட்சண்யமாக விழவில்லை. நாலா திசைகளிலும் சிதறிக் கிடக்கும் பாறைகளின் நிழல்கள் படுகையில் குடிகொண்டிருந்தன. படுகையில் கணுக்கால் அளவுதான் சகதி; பொருட்படுத்தாமல் நடந்து சென்றேன். ஆனைத் துதிக்கை போன்ற தன் எட்டுக் கைகளையும் ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கவந்தன் மாதிரி வெறுந்தசைக் கோளமாகக் கண்சிமிட்டிக் கிடந்தது ஒரு ஜலராசி. அதன் வாழ்வு இன்னும் எவ்வளவு நேரமோ என்று எண்ணமிட்டுக் கொண்டு அதை கடந்தேன். தண்ணீர் வற்றிப் போனதால் மாண்டிருக்கும் என்று நினைத்தேன். அது ஜிவ்வென்று எழும்பி, தனது எட்டுத் துதிக்கைகளில் ஒன்றை என்மீது வீசியது. நல்ல காலம் நான் அதைக் கடந்துவிட்டேன். இல்லாவிட்டால் கழுத்தே முறிந்து போயிருக்கும். கடல் படுகையில் அழகான பவழக் கொடிகள், விசித்திர விசித்திரமான செடிகள் இருந்தன. இந்த இருட்டுப் பாதை வழியாகச் செல்லுதற்கே பயமாக இருந்தது.

பாறையின் பேரில் ஏறி நிலவு வெளிச்சத்துக்குப் போய்விட்டால் போதும் என்றாகிவிட்டது. பாறை வழுக்குமோ என்று நினைத்தேன். கரடுமுரடாக இருந்ததினால் பற்றி ஏறுவதற்குச் சுளுவாக இருந்தது. அதன் உச்சிக்கு வந்த பிறகு தான் வளைந்து வளைந்து நான் நடந்து வந்த தூரம் எவ்வளவு என்பது தெரிந்தது. கரையிலிருந்து பார்க்கும் போது தொலைவில் தெரிந்த கோவில் அடுத்த குன்றின் மேலிருந்தது. அது இதைவிட சற்றுத் தாழ்ந்தது. மறுபடியும் கீழே இறங்கிவிட்டால் அதில் ஏறுவது எப்படி என்று நான் தடுமாடிக்கொண்டு வரும்போது கிழக்குச் சரிவில் படிக்கட்டுகள் தென்பட்டன. எந்த யுகத்து மனிதர்கள் செதுக்கி வைத்ததோ! அதிசயப்பட்டுக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். கால்கள் சற்று வழுக்கத்தான் செய்தன. மனசில் உள்ள வேகந்தான் என்னை இழுத்துச் சென்றது. படிக்கட்டுகள் மறுசரிவில் உயர ஏற ஆரம்பித்தன. சுமார் ஐம்பது படிக்கட்டுகள் தானிருக்கும். கோயிலிருந்த குன்றின்மேல் கொண்டுவிட்டது. கரையைத் திரும்பிப் பார்த்தேன். எங்கோ எட்டாத் தொலைவில் ஒரு பெருங்குன்றின்மேல் சிகரமும் கிழக்கு வாசலும் தெரிந்தன.
நான் நின்றிருந்த குன்று வெறும் பாறை. யாரோ அதை வெட்டிச் செதுக்கி சமதளமாகத் திருத்தி இருக்கிறார்கள். கோவிலும் அந்தக் குன்றின் ஒரு பகுதி. குடைவரைக் கோவில் என்று சொல்லுகிறார்களே அந்த ரகம். ஆனால் அதன் அமைப்பு வேறு. குன்றின் உச்சியைக் கோவிலாகச் செதுக்கி அதனோடு ஒட்டி பிரகாரமாக தளத்தையும் செப்பனிட்டிருக்கிறார்கள். கோவில் எல்லாம் பிரமாதமான உயரமல்ல. சுமார் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரந்தானிருக்கும். அதற்குக் கோபுரம் ஏதும் கிடையாது. மலையாளத்துக் கோவில்கள் மாதிரித் தானிருந்தது. ஆனால் கருங்கல் வேலைப்பாடு. சுற்றி வந்தேன். கிழக்குப் பக்கத்தில் வாசலிருந்தது; ஆனால் கதவில்லை. கோவிலின் முற்றத்தில் கிழக்குப் பிரகாரம் மூன்று நான்கு அடி அகலத்துக்கு மேல் இல்லை. அந்த பிரமாண்டமான பாறை பிளவுபட்டு, வெறும் பாதாளமாக இருட்டுடன் ஐக்கியமாயிற்று. வெளிப்பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது. கோவில் வாசலில் கால் வைத்தேன். சற்று தயக்கத்துடனேயே உட்புகுந்தேன். இந்த ஒற்றை கல் கோவிலுக்குள்ளும் சிறு பிரகாரம். அதன் மையத்தில் தான் கர்ப்பக்கிரகம். பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. காலில்கூடப் பாசியும் நுரையும் மிதிபட்டது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஒரு பிரதட்சணம் வந்துவிட்டு, அதன் வாசல் பக்கம் நின்றேன். வாசலில் இரண்டு பக்கத்திலும் இரு அபூர்வமான மிருகங்களை துவாரபாலகர்கள் போல் கல்லில் செதுக்கியிருப்பது சற்று மங்கலாகத் தெரிந்தது.

கர்ப்பக்கிரகத்தில் என்ன இவ்வளவு இருட்டு என்று எண்ணமிட்டுக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டிக்கொண்டு கருங்கல் நிலையில் கால் வைத்தேன். நிலைப்படியில் தாமரைப்பூ செதுக்கியிருப்பது காலுக்குத் தட்டுப்பட்டது. முன் நீட்டிய கைகளை வழவழப்பான இருள் வழிமறித்தது. வழி கிடையாதா அல்லது கல்லால் செதுக்கிய கதவா என்று எண்ணமிட்டுக்கொண்டு தடவிப் பார்த்தேன். கரும் பளிங்குபோல வழவழப்பாக இருந்தது. கால் பாதத்தில் தட்டுப்படும் தாமரை உறுத்தியதினால் சற்று பாதத்தை உயர்த்திவிட்டு மறுபடியும் காலைக் கீழே வைத்தேன். குமிழ் போல ஏதோ தட்டுப்பட்டது. தாமரையின் மையம் என்று நினைத்தேன். அதே சமயத்தில் கருப்புப் பளிங்குக் கதவு உட்பக்கமாகத் திறந்தது. நான் கதவின் மீது கைகளை ஊன்றிக் கொண்டு நின்றதினால் தடமாடிக்கொண்டு உள்ளே சாய்ந்தேன். அங்கும் இருட்டு. அதே சமயம் வெளிவாசல் பக்கம் பேரிரைச்சல் கேட்டது. கடல் ஜலம் பிரளயம் போல நுங்கும் நுரையுமாக கோவிலுக்குள் பிரவேசித்தது. கர்ப்பக்கிரகத்தின் கதவு தானாகவே சாத்திக்கொண்டது.

இனிமேல் நமக்கு ஜலத்தில் சமாதி கட்டின மாதிரிதான் என்று பீதியடைந்து பதறினேன். ஆனால் பயம் மறுகணம் அகன்றது. கதவு பொருந்தியடைத்துக்கொண்டதும் கர்ப்பக்கிரகத்துக்குள் பிரமாதமான பிரகாசம். கண்ணையே குருடாக்கிவிடுமோ என்று பயந்தேன். இத்தனை நேரம் இருட்டில் கிடந்து தடமாடியதினால் இந்தத் தொந்தரவு போலும். ஒளியின் தன்மை கண்களுக்குப் பழக்கமாக ஆக உறுத்துவது போய் பன்னீர் விட்ட மாதிரி குளுமையாக இருந்தது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன். மேல் சுவரில் உள்ள ஒரு மாடத்தில் குத்துவிளக்குப் போல் ஒன்றிருந்தது. அதன் உச்சியிலிருந்து வந்தது இந்தப் பிரகாசம். சற்று நெருங்கிச் சென்று கவனித்தேன். குத்துவிளக்கு தங்கம் போலப் பிரகாசித்தது. அதன் உச்சியில் வைரம் ஒன்று பதித்திருந்தது. அதிலிருந்து எழுந்தது இந்தப் பிரகாசம். தூண்டாமணி விளக்கு என்று சொல்லுகிறார்களே அதுதானோ என்று அதை எடுத்துப் பார்க்க முயன்றேன்.

"அடே, அதைத் தொடாதே" என்று அதட்டியது ஒரு குரல்.
நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆணோ பெண்ணோ எனச் சந்தேகப்படும்படியாக இருந்தது. வாக்கு தமிழ்தான் என்றாலும் தொனிப்பு யாழ்ப்பாணத்துக்காரர் ரீதியில் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தென்படவில்லை.

"நான் இங்கேதான் இருக்கிறேன். இதோ என்னைப் பார்" என்றது அந்தக் குரல்.

நிருதியின் திசையிலிருந்து பலிபீடத்தின்மீது ஒரு தலை அமர்ந்திருந்தது. பெண்ணின் தலை. அதன் அளகபாரம் பலிபீடத்தில் மயில் தோகை மாதிரி விரிந்து கிடந்தது. முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. வருஷாவருஷம் வாழையடி வாழையாக அர்ச்சக பரம்பரை மஞ்சணை மெழுகு வைத்து அலங்காரம் செய்யும் முகத்தின் சாயலுக்கும் இதற்கும் சற்றும் வித்தியாசமில்லை. எத்தனை எத்தனை காலம் இந்த முகத்தின் சாயல் அர்ச்சக பரம்பரையின் நினைவில் படிந்து மனித வம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வந்திருக்கிறது! எனக்கு பலிபீடத்தில் அமர்ந்திருந்த தலை பேசியதில் அதிசயம் தோன்றாதது எனக்கே வியப்பாக இருந்தது. அசாதாரணமான நிலையில் அகப்பட்டுக் கொண்டால் எல்லாம் இயல்பாகத் தோன்றும் போலும். இப்படியாக நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சண்பகப் பூவின் வாசம் கலந்த மெல்லிய காற்று கர்ப்பக் கிருகத்தில் ஊசலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது எனச் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தக் காற்று அந்தக் கற்குகைக் குள்ளாகவே தோன்றி அதனுள்ளேயே மடிகிறது போலும்.
"இம்மாதிரிக் காற்று அடித்தால் சூர்யோதயமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும்போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது அந்தத் தலை.

இது என்னடா புதுவிதமான கடிகாரமாகத் தோன்றுகிறதே என்று எண்ணமிட்டுக்கொண்டு "நீ யார்? எப்படி சிரசை மட்டும் காப்பாற்றி உயிருடன் இருந்து வருகிறாய்?" எனக் கேட்கலாமா என்று வாயெடுத்தேன்.

அந்த சிரசு கண்களை மூடியபடியே நான் சொல்ல வந்ததை எதிர்பார்த்தது போல, வாயைத் திறவாமலேயே பேசியது.
"நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல உடம்புடன் தானிருந்தேன். உலக பந்தங்களுக்கு உடன்பட்டு பிறப்புச் சங்கிலிக்குள் தன்னையும் உட்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்குத்தான் உடம்பு அவசியம். காலத்தை எதிர்த்து நிற்க விரும்புகிறவர்களுக்கு உடம்பு அனாவசியம். மேலும் பால பேதத்தினால் உடலில் தோன்றும் இச்சா பந்தங்களையும் போக்கிக் கொள்ளலாம் அல்லவா? என்னுடைய வயசு என்னவென்று நினைக்கிறாய்? மூன்று கர்ப்ப காலம் கடந்துவிட்டது; நான் எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும். என்னுடைய இச்சை என்று அவிந்ததோ அன்று நான் காற்றுடன் காற்றாகக் கரைந்துவிடுவேன்..."

அந்த சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"உடல் இழந்த வாழ்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதே. அந்த ரகசியம் உனக்குக் கிடைக்காது. அது குமரிமலையுடனும் பரளியாற்றுடனும் பரம ரகசியமாக ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. கேவலம் நீ ஒரு மனிதன். மிஞ்சிப்போனால் இன்னும் இருபது வருஷங்கள் உயிரோடு இருப்பாய். அதாவது இந்த உடம்போடு உறவு வைத்திருப்பாய். உனக்கு எதற்கு இந்த ரகசியங்கள்?" என்று கேட்டது.
"அழியும் உடம்பு என்பதை உன்னுடைய முன்னோர்களும் அறிந்துதானிருந்தார்கள். இருந்தாலும் கர்ப்ப கோடி காலம் பிரக்ஞை மாறாமல் வாழ்வதற்கு ஒரு வழி உண்டு என்பதைக் கண்டுபிடிக்காமல் ரொம்ப நாட்களைக் கழித்தார்களா? அப்படி அவர்கள் கழித்திருந்தால் இப்போது என்னுடன் பேச உனக்கு முடியுமா?" என்று கேட்டேன்.

தலை கடகடவென்று சிரித்தது. "உனக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளப் போதுமான தைரியம் உண்டா? நான் யார் என்பதைத் தானே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாய். கர்ப்ப கோடி காலத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன். நான் வாழ்ந்த உலகம் எப்படி இருந்தது. என்பதை நான் உனக்கு காட்டுகிறேன். மணிவிளக்கு நிற்கிறதே, அந்த மாடத்தின் அருகில் யாளியின் தலை ஒன்று செதுக்கியிருக்கிறது. தெரிகிறதா? அந்தத் தலையை வலப்புறமாகத் திருப்பு."
நான் அது சொல்லியபடி செய்தேன். தளத்தின் ஒரு பகுதி விலகியது. படிக்கட்டுகள் தென்பட்டன.

"தைரியமாக உள்ளே போ; உனக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது" என்றது அந்தத் தலை.

"நீ இருக்கும்போது எனக்கு என்ன பயம்? மேலும் ஆபத்துக்குப் பயப்படுகிறவனாக இருந்தால் சமுத்திரத்துக்கு அடியில் வலிய வந்து மாட்டிக்கொள்ள வேண்டாமே! நீ சொல்லக்கூடாத பரம ரகசியம் அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டேன்.

"என்னிடம் காதல் பேசினது போதும். என் வயசு மூன்று கர்ப்ப காலங்கள். நான் உன் பாட்டிகளுக்கு பாட்டி என்பதை மறந்து பேசாதே. இஷ்டமிருந்தால் போய்ப் பார்" என்று சற்று கடுகடுப்பாகப் பேசியது அந்த சிரம்.

"நானும் உன்னைப் போல உடம்பை இழந்துவிட்டு, எத்தனை கர்ப்ப கோடி காலமானாலும் உன் எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கத்தான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறங்கிச் சென்றேன். படிகள் எங்கு கொண்டு என்னை விடும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. கீழே என்ன இருக்கிறது; உலகத்தாருக்குத் தெரியக் கூடாது என காலம் என்ற திரையிட்டு, இயற்கை மறைத்து வைத்துள்ள ரகசியங்களில் எது என் வசம் சிக்கப் போகிறது என்று எண்ணமிட்டுக்கொண்டே நடந்தேன். கடல் கன்னிக் கோவிலில் இருந்த தூண்டாமணி விளக்கின் ஒளி, சிறிது தூரந்தான் படிக்கட்டுகளில் வீசியது. அதன் பிறகு, வழி நெடுக, நிலவொளி போல, வெள்ளியை உருக்கி வெளிச்சம் செய்தது போல ஒரு ஒளி எனக்கு வழிகாட்டியது. நிலவு எனவோ அல்லது நட்சத்திர ஒளியெனவோ அதை வருணிப்பது பொருந்தாது. தற்கால நியான் விளக்குகள் போல ஒரு வெளிச்சம். ஆனால் நியான் ஒளியைப் போல கண்ணையோ உடம்பையோ உறுத்தவில்லை.

குளுகுளுவென்று ரம்யமாக இருந்தது. வெளிச்சம் எந்தத் திசையிலிருந்துதான் வருகிறது என்பதை நிர்ணயிக்க முடியாதபடி ஒளிப்பிரவாகத்தின் காந்தி எல்லாவிடங்களிலும் ஒரே மாதிரி இருந்தது. பத்துத் திசையிலும் சிக்கென்று மூடிய பிலமாக இருந்தும், சுகந்தமான காற்று ஒன்று சற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. பிலத்தில் நான் இறங்கிச் செல்லச் செல்ல, பேரலைகளின் குமுறல் போன்ற ஒரு பேரிரைச்சல் என் செவியை உடைக்க ஆரம்பித்தது. சப்தம் வந்த திசையை நான் நெருங்க ஆரம்பித்தேன்.
படிக்கட்டுகள் கடைசியாக ஒரு நிலவறையில் சென்று முடிவடைந்தன. நிலவறை அறுகோண யந்திரம் போல அமைக்கப்பட்டிருந்தது. படிக்கட்டுகளுக்கு எதிர் பாரிசத்தில் உள்ள சுவரில் உள்ள பிறையில் தலையற்ற முண்டம் ஒன்று வளர்த்தியிருந்தது; பச்சைக் கல்லைக் குடைந்து செய்த ஒரு பாத்திரம், அதன் தலை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு யந்திர சக்கரத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. உடலத்தின் மீது ஒரு பிரம்பு கிடந்தது. நிலவறையின் இரு பாரிசத்திலும் இரண்டு வழிகள் தென்பட்டன. நான் பிலத்தின் மையத்தில் வந்து நின்று எந்தத் திசை நோக்கிச் செல்லலாம் என்று எண்ணமிட்டேன்.

எந்தத் திசையில் சென்றால் என்ன? எல்லாம் பார்க்க வேண்டிய இடந்தானே என்று நினைத்துக் கொண்டு இடது பக்கமிருந்த பாதை வழியாகச் செல்லுவதற்குத் திரும்பினேன்.

"இது திசைகள் அற்றுப்போன இடம்; எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதானே" என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒருவரையும் காணவில்லை. என் காதில் விழுந்தது நிச்சயமாக ஆண் குரல்.

குரலுக்குப் பதில் கொடாமல், நான் முதலில் நிச்சயம் பண்ணின பாதை வழியாகச் சென்றேன்.
யாரோ கடகடவென்று கர்ண கடூரமான குரலில் சிரிப்பது போலக் கேட்டது. திரும்பிப் பார்த்தாலும் ஆள் எங்கே தென்படப் போகிறது; பேசுகிறவன் என்றால் எதிரில் வந்து பேசட்டுமே என்று முனகிக் கொண்டே நடந்தேன். இந்தப் பாதையிலும் நன்றாக வெளிச்சமாகத் தானிருந்தது. ஆனால் நான் முன்பு கேட்ட பேரலைச் சத்தம் இன்னும் ஆக்ரோஷமாகக் கேட்டது. கடல் தளத்தருகில் நெருங்குகிறோமா, கடல் பிரவாகம் செல்லும் பிலத்துவாரம் எதுவும் இருக்கும் போலும் என்று நினைத்தேன். அடுத்த நிமிஷம் அது என்ன அசட்டுத்தனமான நினைப்பு. கடல் தண்ணீர் உள்ளே வர வழியிருந்தால் இந்தப் பிலம் முழுவதும் அல்லவா நிரம்பியிருக்க வேண்டும்? இரைச்சலுக்குக் காரணம் வேறு ஏதாவதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆச்சு இன்னும் எவ்வளவு தூரமிருக்கப் போகிறது? போயே பார்த்து விடுகிறது. சப்தத்தைத் தாங்குவதற்குச் செவித் தொளைகளுக்குப் போதுமான சக்தியில்லை. மேல்துண்டை எடுத்துக் காதோடு காதாக வரிந்து கட்டிக் கொண்டு மேல் நடக்கலானேன். சிறிது தூரம் சென்றதும் வெக்கை அடிக்க ஆரம்பித்தது. வரவர வெக்கை அதிகமாயிற்று. அக்னிச் சுவாலைக்குள் நடப்பது போலத் திணறினேன்.

ஆனால் அடியெடுத்து வைக்கும்போது தரை சுடவில்லை. இதற்கு மேல் சுமார் பத்து கெஜ தூரந்தான் என்னால் போக முடிந்தது. மேல் நடப்பது சாத்தியமில்லை என்று திரும்பினேன்.

"வடக்குச் சுவரில் உள்ள மாடத்தில் ரசக் குழம்பு இருக்கிறது. அதை உடம்பில் தடவிக் கொண்டால் மேலே போக முடியும்" என்று ஒரு குரல் கேட்டது. பழைய குரல்; அதே குரல்.

மாடத்திலிருந்த பாத்திரத்தை எடுத்தேன். உருக்கிய வெள்ளி போல, சந்தனக் குழம்பின் மென்மையுடன் கைக்கு இதமாக இருந்தது. அள்ளி எடுத்து உடம்பு முழுவதும் பூசிக்கொண்டேன். வெக்கை குடியோடிப் போயிற்று. ஆனால் உடம்பு வெள்ளி வார்னிஷ் கொடுத்த மாதிரி ஒரேயடியாக மின்னியது. இந்த நவராத்திரி வேஷத்துடன் மேலும் நடந்து சென்றேன். தூரத்தில் புகையும் அக்னிச் சுவாலையும் ஒரு பிலத்திலிருந்து எழுவதும், மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கடியில் இருக்கும் எரிமலையோ எனச் சந்தேகித்தேன். நான் நினைத்தது சரிதான். எரிமலைதான். இந்த அக்னி கக்கும் மலையினருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்து கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்? எந்த மனித வம்சம் இதைக் கட்டியிருக்கக் கூடும் என எண்ணமிட்டுக் கொண்டு நின்றேன். பொங்கிக் கொப்புளிக்கும் அக்னிச் சுவாலை ஒடுங்கியது. பூமியினடியில் மட்டும் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் சற்று தைரியமாக எரிமலையின் விளிம்பு அருகே சென்றேன்.

ஆழத்தில் வெகு தூரத்தில் பாறையும் மண்ணும் உலோகங்களும் பாகாக உருகிக் கொந்தளித்துச் சுவாலை விடுவது தெரிந்தது. விளிம்பருகிலும் படிக்கட்டுகள். ஆனால் மிகவும் ஒடுங்கியவை. பாறையைக் கொத்திச் செதுக்கியது போலத் தென்பட்டது. இந்தப் படிக்கட்டுகள் எரிமலையின் உட்புறச் சுவரில் தென்பட்ட பிலத்துக்குள் சென்றது. அங்கே ஒரே இருட்டு. திரும்பி விடலாமா என யோசித்தேன். திரும்பவும் படிக்கட்டுகள் வழியாக மேலேறி வருவதற்குப் பயமாக இருந்தது. வந்தது வருகிறது என இருட்டில் நடந்து சென்றேன். சிறிது தூரம் செல்லுவதற்குள் எரிமலையின் பேரிரைச்சல் கேட்கவே இல்லை. அதற்கு வெகு தொலைவில் வந்துவிட்டது போல அவ்வளவு நிசப்தமாக இருந்தது. சுமார் அரை மணிப் பொழுது நடந்து சென்றிருப்பேன். இந்தப் பாதை என்னை ஒரு மண்டபத்தில் கொண்டு சேர்த்தது. கால் கடுக்க ஆரம்பித்தது. தரையில் உட்கார்ந்துகொண்டேன். சுற்றுமுற்றும் இருட்டில் எதுவும் தெரியவில்லை. அக்னி வெக்கைக்குத் தப்புவதற்காக நான் உடம்பில் பூசிக் கொண்ட திராவகந்தான் மின்னியது.

"இன்னும் எத்தனை நேரந்தான் உட்கார்ந்திருக்கப் போகிறாய். கால் வலி தீரவில்லையா? ஆனாலும் நீ தைரியசாலிதான்" என்றது ஒரு குரல். அதே குரல்; பழைய குரல்.
"நீ யார், எங்கு பார்த்தாலும் என்னைத் தொடர்ந்து வருகிறாயே? நீ எங்கே நிற்கிறாய்? எனக்குத் தென்படவில்லையே?" என்று கேட்டேன்.
அந்தக் குரல் சிரித்தது.

"நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். எனக்கு உடம்பு கிடையாது. அதனால் நான் எங்கும் இருக்க முடியும். நான் எங்கு இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்க முடியும். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ எங்களுடைய அதிதி. உன்னை உபசரிப்பது எங்கள் கடமை."

2. ஸித்தலோகம்

"அசிரீரியாருக்கு ஆசாரமாகப் பேசத் தெரியும் போலிருக்கு; வந்தவனை வாவென்று கேட்பாரில்லை; இருட்டில் திண்டாட விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது இந்த இடத்துச் சம்பிரதாயம் போலும்" என்று நான் முழங்காலைத் தடவிக் கொண்டே கேட்டேன்.

"எங்களுக்குத் தெரியாததைப் பற்றி நீ பேசிக்கொண்டிருந்தது போதும்; உடனே, எதிரே தெரிகிறதே வாசல், அதன் வழியாகப் போனால் பாதாள கங்கை ஓடுகிறது. அதில் போய்க் குளி. இல்லாவிட்டால் உடம்பு வெந்து போகும். நீ உடம்பில் பூசிக்கொண்டிருக்கிறது கார்கோடக பாஷாணம் சேர்ந்த ரசக்குழம்பு. வெளி வெக்கை இருந்தால்தான் உடம்பைப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் உடம்பையே தின்றுவிடும். எலும்புக்கூடுகூட மிஞ்சாது" என்றது அசரீரிக் குரல்.
எனக்குப் பகீர் என்றது. விழுந்தடித்துக்கொண்டு எழுந்தேன். "நீரும் என் கூட வாருமே; பேச்சுத் துணையாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டு பிலத்தின் வழியாக பாதாள கங்கைக்குச் சென்றேன். பிரமாண்டமான பாம்புப் பொந்து போல பூமியைக் குடைந்துகொண்டு நதி வேகமாக ஓடியது. இருட்டுக்கும் ஜலத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஜலத்தில் கால் வைத்தேன். ரொம்ப ஜில்லென்றிருந்தது. ஒரு முறை சென்றிருக்கிறேன் மானஸரோவரத்துக்கு; அந்தத் தண்ணீர் அவ்வளவு ஜில்லென்றிருந்தது. வெகு நேரம் தண்ணீரில் துளைந்தால் முடக்குவாதம் வந்துவிடக்கூடாது என்று இரண்டு மூன்று முக்குப் போட்டுவிட்டுக் கரையேறினேன். ஆற்றில் இறங்கியதுதான் தாமசம், உடம்பில் பூசியிருந்த வர்ணச்சாயம் அப்படியே கரைந்து போய்விட்டது. கரையேறி உடம்பைத் துடைத்துக் கொண்டு நிற்கும்போது, தண்ணீரில் மின்னல் கொடிகள் போல அப்பொழுதைக்கப்பொழுது தெரிந்து மறைந்தது. சூரிய வெளிச்சமே படாத இந்த பிலத்தில் கூட ஜல ராசிகள் எப்படித் தோன்ற முடியும் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே நின்றேன்.
"வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்காதே. உன்னை ஸித்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறேன். உனக்கு அங்கே சென்றால்தான் உணவு" என்றது அந்த உடம்பற்ற குரல்.
"ஸித்தலோகமா? அங்கே செல்வதற்கு இந்தப் பிலத்தினுள் வழி ஏது?" என்று கேட்டேன்.

"இதோ இந்த பாதாள கங்கை இருக்கிறதே இதன் வழியாக" என்றது குரல்.

"நீந்தியா?" என்று கேட்டேன்.

"குளிரும் என்று பயப்படாதே. உன்னை ஏற்றிச் செல்ல புணை வரும்" எனச் சிரித்தது அந்தக் குரல்.

"இந்த நதி எங்கிருந்து வருகிறது என்றா எண்ணுகிறாய்? இதுதான் பூலோகத்திலேயே பிரமாண்டமான நதி. இங்கிருந்து பத்து யோஜனை தூரத்திலுள்ள கன்னிச் சுனையிலிருந்து உற்பத்தியாகி கார்கோடகத் தீவுவரை கிழக்கு நோக்கிச் சென்று பிறகு அங்கிருந்து வடதிசை திரும்பி அங்கு காட்டினடியில் ஓடி, அங்கேயே மடிகிறது. பூமிக்கு அடியில் இதே மாதிரி இன்னும் எத்தனையோ நதிகள் உண்டு. அதோ வருகிறது பார் ஒரு புணை. நீ அதில் ஏறிக்கொண்டால் ஸித்தலோகத்துக்குப் போய்ச் சேரலாம்" என்றது அந்தக் குரல்.

அது பேசி முடிப்பதற்கு முன் அந்தப் புணை நான் நின்ற படிக்கட்டுகள் அருகில் வந்து தேங்கியது. என்ன கோரம். மூன்று நான்கு பிணங்களை, இல்லை முண்டங்களைச் சேர்த்துக் கட்டிய மிதப்பு. முண்டங்கள் தங்கம் போலத் தகதகவென மின்னின. இதில் ஏறிக் கொள்வதா?
"தயங்காதே; நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா? அல்லது பிணம் என்றால் நீயும் பிணமாகிவிடப் போகிறாயா? தயங்காதே; ஏறி உட்கார்ந்துகொள்" என்று அதட்டியது அந்தக் குரல்.

நானும் சுவாதீனம் இழந்தவனைப் போல அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். மிதப்பு நகர ஆரம்பித்தது.
"நீயும் என்னுடன் வரவில்லையா" என்று கேட்டேன்.

"இதுதான் என் எல்லை" என்றது அசரீரி.

"பிறகு எப்பொழுது சந்திப்பது?" என்றேன்.

"ஸித்தலோகத்தில்" என்றது அசரீரி.

"எல்லையும் எல்லையற்ற தன்மையுமா?" என எனக்குள்ளாகவே எண்ணமிட்டேன். பிரேதப் புணை வெகு விரைவாகச் செல்ல ஆரம்பித்தது. நதியின் வேகத்தைவிடப் பன்மடங்கு வேகமாகத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சென்றது.

நான் பிணத்தின் மீது உட்கார்ந்தபடி ஜலத்தைப் பார்ப்பதும் இருட்டைப் பார்ப்பதுமாக இருந்தேன். திடீரென்று உஸ் என்ற இரைச்சல் கேட்டது. புணைக்குக் குறுக்காகக் கருநாகம் ஒன்று படமெடுத்துக் கொண்டு சீறிக் கொண்டு நீந்திச் சென்றது. பயம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. தலை கிறங்கும்படியாகப் புணையின் வேகமும் அதிகமாக இருந்தது. எத்தனை நேரம் கழிந்ததோ?

புணை வேகம் குறைய ஆரம்பித்தது. பிறகு மெதுவாக வலது கரையில் சென்று ஒதுங்கியது. நான் பதனமாகக் கரையில் கால் வைத்தேன். இங்கே முன் போல பாதையில்லை. மணற்பாங்காக இருந்தது.

என்ன அதிசயம்! நான் திரும்பிப் பார்க்குமுன் புணையாக வந்த கவந்தங்கள் எழுந்து கரையேற ஆரம்பித்தன. அவை கரைக்கு வந்து நின்றதுதான் தாமசம். அவை தலை பெற்றன. மனிதத் தலைகளா! அல்ல. மாட்டுத் தலைகள். அவற்றின் நெற்றியில் பிரகாசமான கண் போன்ற துவாரம் தெரிந்தது.
"வாருங்கள் போகலாம்" என்றன அந்த நான்கு அதிசயத் தோற்றங்களும்.

நான் தயங்கினேன்.

"இதுதான் ஸித்தலோகம். மாடர்கள் அல்லது நந்திக் கணங்கள் என எங்களைச் சொல்லுவார்கள். பயப்படாமல் வாரும்" என்று சொல்லிக் கொண்டு எனது வருகையை எதிர்பார்க்காமலேயே நடக்க ஆரம்பித்தன. நானும் தொடர்ந்து நடந்தேன்.

விசித்திர விசித்திரமான தாவர வர்க்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. பூமியின் சிசுப் பருவத்திலே தோன்றிய தாவர வர்க்கங்கள் என்று சொல்லுவார்களே சயன்ஸ்காரர்கள் அவை போன்றவை. பிரமாண்டமான நாய்க்குடைகள், தாழைகள், கொடிகள் விசித்திர விசித்திரமாக முளைத்திருந்தன. ஆனால் அவை யாவும் பொன் போலும் வெள்ளி போலும் மின்னின. இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஏழு வர்ணங்களிலும் தண்டு முதல் இலை வர பளபளவென சாயம் பூசி வைத்த மாதிரி நிற்கும் விருக்ஷங்களைக் கண்டேன். அதிலே நீல நிறமான கருநாகங்கள் சோம்பிச் சுற்றிக் கிடந்தன. வழியிலே தங்கத் தகடு போல மின்னிய தவளை கத்திச் சென்றது.
மரச்செறிவுகளுக்கிடையே நந்திக் கணங்கள் மறைந்து விட்டனர். அவர்கள் எந்த வழியில் சென்றார்கள் என்பதைக் கவனிக்கவில்லை. கால்கொண்டு போன வழியே நடந்தேன். மரங்களுக்கிடையே திறந்த வெளி வந்தது.
அங்கே சமாதி நிலையில் பதினெட்டுப் பேர் அந்தரத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கடியிலும் வெள்ளி போன்ற ஒரு உருண்டை இடையறாது சுழன்றுகொண்டிருந்தது.

"வா அப்பா, வந்து உட்காரு" என்றார் தலைவராக அமர்ந்திருந்த ஸித்த புருஷர்.

அத்தனை பேருக்கும் உருவபேதம் கற்பிக்க முடியாதவாறு ஒரே அச்சில் வார்த்த சிலைகள் போன்றிருப்பதைக் கண்டு அதிசயப் பட்டேன்.

"உடம்பை இஷ்டப்படி கற்பித்துக்கொள்ள முடியாதா? இருந்து பார் எப்படி என்பது தெரியும்" என்றார் அவர்.
நான் அவரது காலடியில் அமர்ந்தேன்.

"உனக்குப் பசிக்குமே" என்று சொன்னார்.

நந்திக் கணத்தில் ஒருவன் தோன்றினான். முகத்தைக் கழற்றி வைத்தான். அப்பொழுதுதான் மாட்டின் தலையை அப்படியே வெட்டி எடுத்துப் பதனிட்டுச் செய்த முகமூடி என்பதைக் கண்டேன்.

"இது பூர்வீக காலத்துத் தலைக் கவசம், இரும்பு தோன்றுவதற்கு முன்" என்றார் ஸித்த புருஷர்.
நந்தி நேராக எதிரே இருந்த ஒரு விசித்திரமான மரத்தினடியில் சென்றான். இலைகள் அவனைத் தழுவிக் கொண்டன. மரத்தின் பாம்புக் கைகள் அவனைச் சுற்றிச் சுற்றிப் பின்னின.

சற்று நேரங்கழித்து இலைகள் தானாக விலகின. அதனடியிலிருந்து விழுந்தது ஒரு எலும்புக் கூடு.
ஸித்த புருஷர் ஏதோ துரட்டி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அதை மரத்தினடியிலிருந்து இழுத்துப் போட்டார். எலும்புகள் பற்று விடாமல் பூட்டோ டு அப்படியே வந்தன. வேறு இரண்டு நந்திகள் வந்து எலும்புக் கூட்டைத் தூக்கிச் சென்றார்கள்.

"இங்கே பிரபஞ்ச நியதிப்படி பிரஜோற்பத்தி கிடையாது. அதனால் ஒவ்வொரு எலும்புக் கூடும் அத்யாவசியம்" என்றார் ஸித்த புருஷர்.

இவர் என்ன, நம்மைப் பசிக்கிறதா என்று கேட்டுவிட்டு வீண்கதை பேசுகிறார் என்று நினைத்தேன். எதிரிலிருந்த மரம் எருமை முக்காரம் போடுவதுபோலக் கனைத்தது! சில மரங்களில் அதன் பால் நாளங்கள் வழியாக வேகமாக ஓடும் போது கனைக்கும் சப்தம் கேட்கும் எனப் படித்திருக்கிறேன். நரமாம்ச பட்சணியான இந்த மரமும் அப்படித்தான் போலும்.
ஸித்த புருஷர் அருகில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து வீசினார். வெறும் சதைப்பற்றில் பாய்வது போல புகுந்தது.
அம்புடன் தொடுக்கப்பட்டிருந்த கயிற்றின் வழியாக அதன் பால் வழிந்து ஓடிவந்து ஒரு பாத்திரத்தை நிறைத்தது. பாத்திரம் நிறைந்ததும் மரத்திலிருந்து அம்பை உருவினார். கொப்புளித்து வந்த பால் சற்று நேரத்தில் காய்ந்து மரத்தோடு மரமாகிவிட்டது.

பாலை எடுத்து என்னிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மனிதனைத் தின்ன மரத்தின் பாலையா சாப்பிடுவது!
நான் விழித்தேன்.

சுடுகாட்டு மாமரத்துப் பழம் தின்பது என்றால் விரசமாகத் தெரியவில்லையே? சாப்பிட்டுத்தான் பாரேன் எப்படி இருக்கிறது என்று" என ஸித்த புருஷர் சிரித்தார்.
நானும் எடுத்துப் பருகினேன். பசி களைப்பு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து உடம்பிலே புதிய சக்தியும் தெம்பும் உண்டாயின. "இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சாக்காடு இல்லை" என்றார்.

"கடல் கொண்ட கோவிலில் உள்ள கன்னி யார்?" என்றேன்.
"அவளா! அந்தக் காலத்தில் உனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள். பூசாரி சடையன் மகள். இன்று காவல் தெய்வம்" என்றார் ஸித்த புருஷர்.

"ஞாலத்தில் யாத்திரை செய்வது போல காலத்திலும் யாத்திரை செய்து பார்க்கப் பிரியமா?" என்று கேட்டார்.
"அது எப்படி முடியும்?" என்று கேட்டேன்.

"இதோ சுழன்று கொண்டே இருக்கிறதே அந்த ரஸக் குளிகையைப் பார்த்துக் கொண்டு" என்றார்.

3. குமரிக்கோடு

"ரஸக் குளிகையைப் பார்ப்பது இருக்கட்டும்; நான் எங்கே இருக்கிறேன்?" என்றேன்.

"ஈரேழு பதினான்கு லோகங்களில் இது ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?" என்றார் ஸித்த புருஷர்.
"நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. சிந்திப்பதற்கு லாயக்கில்லாதபடி புத்தி குழம்பிக் கிடக்கிறது" என்றேன் நான்.

"புத்தி குழம்புவதற்கு இங்கே உனக்கு ஊமத்தைச் சாறு பிழிந்து யாரும் கொடுக்கவில்லையே?"

"இயல்பு என நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக இங்கே காரியங்கள் நடந்துகொண்டிருக்கும்போது ஊமத்தைச் சாறு வேறு அவசியமா?" என்றேன்.

"இயல்பு என்று நீ நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக எதுவும் நிகழந்தால் அதை இயல்புக்கு மாறானது என்று நிச்சயப்படுத்தி விடலாமா?" என்றார் ஸித்த புருஷர்.
"உடலற்ற தலை பேசுவதும், உடம்பற்ற குரல் துணை வருவதும், தலையற்ற முண்டம் புணையாகவும் பிறகு வழிகாட்டியாகவும் உயிர் பெறுவது என்றால் அது எனக்குக் கொஞ்சம் அதிசயமாகத்தான் இருக்கிறது. நான் பிறந்து நாளது வரையில் நடமாடிய உலகத்தில் அந்த மாதிரி நடந்தது கிடையாது. அங்கே செத்தவர்கள் செத்தவர்கள்தான்" என்றேன்.

"சாவு என்பது என்ன?" என்றார் ஸித்த புருஷர்.
"'உறங்குவது போலும் சாக்காடு - உறங்கி விழிப்பது போலும் உயிர்ப்பு' என்று சொன்னால் உங்களுக்குத் திருப்திதானே?" என்றேன்.

"நீ திருக்குறள் படித்திருக்கிறாய் என்பதை எனக்குச் சொல்லிக் காண்பித்தது போதும். சாக்காடு என்றால் என்ன?" என்றார் ஸித்த புருஷர் மறுபடியும்.

"அது என்னதென்று சொல்லத் தெரியாமல்தான் எங்களுடைய சமய சாஸ்திரங்கள் தவிக்கின்றன" என்றேன்.

"எங்கள் உங்கள் என்று பேதம் பேசினது போதும்; நானும் உங்களவன் தான். உனக்குத் தெரியாமல் போனால் இல்லை என்று சாதித்துவிடுவாய் போலிருக்கிறதே."

"நிச்சயமாக ஏகோபித்த அபிப்பிராயம் இல்லாதவரை..."
"சமய சாஸ்திரத்தின் நிச்சயத்தன்மை பற்றி பிறகு பேசிக் கொள்வோம். சாவு என்றால் என்ன என்பது நிச்சயமாக உனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொள்."

"நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு மேலே சொல்லுங்கள்."

"செத்த பிறகு என்ன நடக்கிறது? மூச்சு நின்று விடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. ஸ்மரணை கழன்றுவிடுகிறது. நீ உடம்பு என்று சொல்லுகிறாயே அது பல அணுக்களின் சேர்க்கையிலே, அவை சேர்ந்து உழைப்பதிலே உயிர்த் தன்மை பெற்றிருக்கிறது. அது அகன்றவுடன் அணுக்கள் தம் செயலை இழந்துவிடுவதாகப் பொருள் அல்ல; அவை சேர்ந்து உழைக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன; அவ்வளவுதான். அவற்றைத் தனித்து எடுத்து அவற்றிற்கு வேண்டிய ஆகாராதிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவை வளரும்..."

"ஆமாம்; அது சாத்தியந்தான்; எங்கள் லோகத்திலும் ஒரு வெள்ளைக்காரர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்" என்றேன்.

"இதை நீங்கள் வேறு செய்து பார்த்து திருப்தியடைந்திருக்கிறீர்களா? இதுதான் முதல் படி. இதற்கப்புறந்தான் விவகாரமே ஆரம்பிக்கிறது. மரணத்தில் எத்தனை வகையுண்டு என்பது தெரியுமா? கிழடு தட்டிச் சாவது ஒன்று; பிஞ்சிலே மடிவது ஒன்று; நோய் விழுந்து மடிவது ஒன்று; பிறகு திடகாத்திர தேகத்துடன் இருந்து வருகையில் அணுக்களின் சேர்க்கையைத் துண்டிப்பதால் ஏற்படுவது ஒன்று; இந்த மாதிரி மரணத்தில் எத்தனையோ வகை. ஆதி காலத்தில் நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்களே அதனால் எவ்வளவு உபயோகம் இருந்தது தெரியுமா? எமனை எட்டி நிற்கும்படிச் சொல்வதற்கு எங்களுக்கு சக்தி கிடைத்ததெல்லாம் இதனால்தான்..."

"நாம் அநாகரீகமானது எனக் கண்டித்துக் கொண்டிருந்த ஒரு காரியம் ஆதிகாலத்தில் சாஸ்திர வளர்ச்சிக்கு எவ்வளவு துணை செய்திருக்கிறது" என நான் எண்ணமிடலானேன்.
"கழுத்துடன் அரிந்து உயிரைப் போக்கிவிட்ட பிற்பாடு அணுக்களின் நசிவு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியுமானால், அதாவது அதில் உள்ள உயிர்ப்பை மட்டும் அவிந்து போகாமல் காப்பாற்றிக் கொண்டால், அந்த உடம்பை நம் இஷ்டப்படி இயக்கலாம் அல்லவா?"

"உதாரணமாக?"

"வெறும் மூளை இருக்கிறதே; அதுதான் மனம் புத்தி சித்தம் என்பனவற்றிற்கெல்லாம் ஆதார கோளம் என்பது உனக்குத் தெரியுமா? பழகிக் கொண்டால் பக்கத்தில் உள்ளவரை நம் இஷ்டப்படி ஆட்டி வைக்க முடியும் என்பது தெரியுமல்லவா?"

"ஆமாம். அது சாத்தியந்தான். நான் கூட நேரில் பார்த்திருக்கிறேன்."

"அதே மாதிரி ஜீவனை அகற்றிய தலையைத் தூர வைத்துவிட்டு, அதன்மூலம் அங்கு நடப்பதை அறியலாம். அங்கு நாம் விரும்புவதை நடத்தலாம். அதே மாதிரி தலைகள் மூலம் உடற்கூறுகளை நம் இஷ்டப்படி இயக்கலாம். இதெல்லாம் வெறும் பொம்மலாட்டம். பிரபஞ்ச தாதுக்களின் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு உயிர்ப்பை மட்டும் உடம்பில் காப்பாற்றி வைப்பதற்கு முடியும்..."
"அப்படியானால் நான் முதலில் கோவிலுக்குள் நுழைந்த போது அந்தக் கன்னியின் சிரசின் மூலம் தாங்கள்தான் பேசினீர்களோ" என்று கேட்டேன்.

ஸித்த புருஷர் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தச் சிரிப்பிலே நாக சர்ப்பத்தின் சீறலும் தொனித்தது. எனக்கு வெகு பயமாக இருந்தது.

என் மனசில் ஓடிய எண்ணங்கள் எல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சம் என்பதை உணர்ந்துகொண்ட எனக்கு இன்னும் பீதி அதிகமாயிற்று.

நான் பயத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. "தூரத்தில் பேசுவதற்கும் பொருள்களை இயக்குவதற்கும் நாங்கள் எங்கள் லோகத்தில் வெறும் ஜடப் பொருள்களையே உபயோகிக்கிறோமே. அந்தக் காரியத்தை நடத்துவதற்காக உயிர்க் கொலை செய்வது அநாவசியம்தானே?" என்றேன் நான்.

"நீங்கள் ஜடப் பொருள்களை இயக்கி காரிய சாதனை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜடப் பொருள்களை இயக்குவது என்றால் ஜடத்துக்குள் வசப்பட்டு அதன் நியதிகளுக்கு இணங்கி, தானே காரியம் நடக்கிறது. உங்களுடைய காரியங்களைப் புயல்கூடத் தடுத்துவிடுமே; எங்களுக்கு அப்படியா? எரிமலையைத் தாண்டிக்கொண்டு எங்கள் எண்ணங்கள் செல்லுகின்றனவே; உங்களுக்கு அப்படியா? நீங்கள் பேசினால் அங்கே குரல் கேட்கும்; அதாவது உங்கள் குரல் கேட்கும்; இங்கு அப்படியா? நீங்கள் ஜடப் பிராணனை உபயோகிக்கிறீர்கள். நாங்கள் அதற்கும் நுண்தன்மை வாய்ந்த சூட்சுமப் பிராணனை உபயோகிக்கிறோம். அது கிடக்கட்டும். நான் கேட்பதற்குப் பதில் சொல்லு; நீ காலத்தில் யாத்திரை செய்ய விரும்புகிறாயா? சொல்லு."

"நான் எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன். முதலில் நீங்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஏன் பூலோகத்துக்கு வரக்கூடாது? நீங்கள் பேசுவதற்கு உபயோகமாகும் சிரமுடைய கன்னி யார்? இதெல்லாம் தெரியச் சொல்ல மாட்டீர்களா?" என்று கேட்டேன்.

ஸித்த புருஷன் சிரித்துக்கொண்டு "பூலோகத்தில் எங்களுக்குக் கிடைக்காத சௌகரியங்கள் எல்லாம் இங்கு கிடைக்கும்போது நாங்கள் ஏன் அங்கு வர வேண்டும்? மேலும் எங்கிருந்தால் என்ன? நாங்கள் இப்போது பூலோகத்தில் இல்லை என்பதை நீ எப்படிக் கண்டாய்?" என்று கேட்டார்.

நான் அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் மேலும் பேசலானார்.

"இப்பொழுது நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம் ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே பெரியதொரு மலைத் தொடராக இருந்தது. இந்த எரிமலை இருக்கிறதே, அது அந்தக் காலத்தில் கிடையாது. பனிக்கட்டிகள் மூடிய பெரும் மலைகள் இந்த இடமெல்லாம். இதற்குத் தெற்கே அகண்டமான பெரியதொரு நிலப்பரப்பு இருந்தது. அதில்தான் உன்னுடைய மூதாதைகளும் என்னுடைய மூதாதைகளும் வாழ்ந்து வந்தார்கள். இந்த மலையிலிருந்து புறப்பட்டு இரண்டு நதிகள் ஓடின. ஒன்று குமரியாறு. அது கிழக்கே கடலில் சங்கமமாயிற்று. மற்றது பல்துளியாறு என்பது. அது இங்கிருந்து புறப்பட்டு ஏழு பாலைவனங்களைக் கடந்து ஏழ்பனை நாட்டின் வழியாக ஈசனை வலம் வந்து மறுபடியும் தென் திசை நோக்கியோடி, பனிக்கடலுள் மறைந்தது. பனி வரையில் பிறந்து பனிக்கடலில் புகுந்தது பல்துளியாறு. குமரி நதி கீழ்த்திசைக் கடலில் சங்கமாகுமிடத்தில்தான் தென்மதுரை இருந்தது. அதில்தான் பாண்டியர்கள் மீன் கொடியேற்றி மீனவனை வழிபட்டார்கள். அவர்கள் குலதெய்வம் மீன்கண்ணி.

படைப்புக் காலந்தொட்டே வழிபட்டுவரும் சிலை அது. அதற்குப் பூசனை நடத்தி வந்தவள் கன்னி. படைப்புக் காலந்தொட்டு ஜீவித்து வருகிறாள் அவள். உன்னைப் போல உன் வயசிலிருக்கும் போதும் அவளைக் கண்டேன். எனக்கு முந்தியோரும் அவளை அப்படியே கண்டு வந்திருக்கிறார்களாம். மீன்கண்ணியின் ஆலயம் ஆதியில் தென்மதுரையில் இருந்தது. நீரிலே நெருப்புத் தோன்ற தென்மதுரை அழிந்தது. நிலப்பரப்பு குன்றியது. பிறகு மீன்கண்ணியின் சிலை, அதே சிலை கபாடபுரத்தில் ஈசனார் திருவடி நிழலிலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கபாடபுரத்தை நிரூபித்ததும் அங்கு குடியேறியதும் வேலெறிந்த பாண்டியன் காலத்திலாகும்... கபாடபுரம் நிலப்பரப்பின் மையத்திலிருந்தது. மீண்டும் கடற்கோள். கடல் மீண்டும் நகரின் ஒரு பாரிசத்தைத் தொட்டது. அந்த நிலையில்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சிம்மாசனமேறினான். அதன் பிறகு... மறுபடியும் மறுபடியும் சமுத்திர ராஜன் சீற்றங்கொண்டான்... கபாடபுரம் தென்மதுரை போல மூழ்கி மறைந்தது..."

ஸித்த புருஷர் பேசி நிறுத்தினார். நாங்கள் இருவரும் மவுனமாக இருந்தோம்.

எனது பார்வை இடையறாது சுழன்றுவரும் ரசக்கோளத்தின் மீது கவிந்தது. அதன் சுழற்சி நிதானமாக ஒரே வேகத்தில் வெளிச்சத்தைப் பிரதிபலித்தது...

4. கபாடபுரத்தின் அழிவு

நான் உற்றுக் கவனித்துக்கொண்டே இருந்தேன். சற்று சித்தம் கிறங்கியது. உடம்பிலிருந்து சுழன்ற புத்தி மட்டும் எங்கோ விரைந்து சென்றது. வேகத்தில் செல்லும் திசை தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. எதிரே பெரும் பாலைவனம் தெரிந்தது. என்ன சூடு என நினைப்பதற்குள் அவற்றை விட்டு அகன்று விட்டேன்.

மாலை நேரம். பிரமாண்டமான செம்புக் கதவின் முன் பக்கம் நின்றுகொண்டிருந்தேன். அது மேற்கே பார்த்திருந்தது. என்ன அற்புதமான வேலைப்பாடு! கதவைத் தள்ளித் திறப்பது என் போன்ற மனிதனால் இயலாத காரியம். உயரம் நூறடிக்கு மேலிருக்கும்; அகலம் இருபத்தைந்து அல்லது முப்பது அடிக்குள்ளாக இருக்காது. கதவின் இரு பக்கங்களிலும் நிமிர்ந்து நின்ற மதில் கற்களைச் செம்பை உருக்கி வார்த்துக் கரைகட்டியிருந்தார்கள். இந்தக் கதவு பிரமாண்டமானதொரு கற்பாறையின் உச்சியிலிருந்தது. வடபுரத்தில் ஆழமான சமுத்திரம். அலைகள் அதனடியில் வந்து மோதி நுரை கக்கின.

தென்புறத்தில் காடு. மரம் செறிந்த காடு குன்றினடியில் தென்பட்டது. உயர்ந்த விருக்ஷங்களுக்கு மேல் தனது கொக்குத் தலையைத் தூக்கி நின்று கொண்டிருந்த கர்ப்பேந்திரம் ஒன்று ஒரு யானையைத் தனது கைகளில் பற்றிக் கிழித்துத் தின்று கொண்டிருந்தது.
மேற்கே பெரிய மலை ஒன்று கனிந்து புகைந்து கொண்டு இருந்தது. அஸ்தமன செவ்வானத்தில் தென்பட்ட பிறைச் சந்திரன் எனக்கு இழை நெற்றிக்கண் நிமலனை நினைப்பூட்டியது. திரித்திரியாகத் திரிந்து படரும் புகை சடையையும், கனிந்த உச்சி நெற்றிக் கண்ணையும் நினைப்பூட்டியது.

அதிசயப்பட்டுக்கொண்டே நின்றேன். பிரமாதமான பேரியும் வாங்காவும் மணிச்சத்தமும் கேட்க ஆரம்பித்தது. கதவு மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது.

ஊர்வலத்தின் முன்னால் பூசாரி சடையன் பவித்திரமாக நீறு அணிந்து இடையில் வைரவாள் சொருகி நடந்தான். அவனுக்குப் பின் அவள் வந்தாள். என்ன அழகு! அவளைப் பலியிடப் போகிறார்கள். அவளுக்குப் பின் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வந்தான். அவனுக்குப் பின் நான் வந்தேன். அதாவது என்னைப் போன்ற ஒருவன் வந்தான். கையிலே வேல்.

அவன் கர்ப்பேந்திரத்தைக் கண்டான். அதன்மேல் வீசினான். வேல் குறி தவறி அதன் ஒற்றைக் கண்ணைக் குருடாக்கியது. ஐந்நூறு அடி உயரமுள்ள மிருகத்திற்கு இந்த குன்று எம்மாத்திரம்! அதன் கோரக் கைகள் பூசாரி சடையனைப் பற்றின. சடையன் தனக்கு மரணம் நிச்சயம் என்று தெரிந்துகொண்டாலும், வைரக் கத்தியைக் கொண்டு அதன் குரவளையில் குத்தினான். சடையன் தலை அந்த மிருகத்தின் கோர விரல்களில் சிக்கி அறுபட்டது.
ஊர்வலத்தில் ஒரே களேபரம். தெறி கெட்ட மிருகம் எங்கே பாயுமோ என நாலா திசையிலும் சிதறி ஓடினர். கர்ப்பேந்திரமோ வலி பொறுக்கமாட்டாமல் மலையுச்சியை நோக்கி ஓடியது.

இந்தக் களேபரத்தில் என் சாயலில் இருந்த அவன் கன்னியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினான். அரசன் வாளுக்கும் கோபத்துக்கும் தப்பிவிடலாம் என்று. நேரே ஓடிய கர்ப்பேந்திரம் எரிமலையின் உச்சியில் சென்று பாதாளத்தில் விழுந்து மறைந்தது.

கடற்கரை நோக்கி ஓடியவர்கள், நீரிலே நெருப்புத் தோன்றிவரக் கண்டார்கள். அதே சமயத்தில் மண் மாரி போல சாம்பல் விழுந்தது. எரிமலை கர்ஜிக்கத் தொடங்கியது. அக்னிக் குழம்புகள் பாகாக உருகி ஓடிக் கடலில் கலந்து அதையும் பொங்க வைத்தது. கடலின் அலைகளோ ஊழியின் இறுதிப் பிரளயம் போலத் தலை தூக்கியடித்தன. நிமலன் நெற்றிக் கண்ணைத் திறந்தான். கபாடபுரத்தின் செப்புக் கதவுகள் பாகாக உருகியோடுவதைக் கண்டேன்.
பிறகு அலைச் சப்தம், பேரலைச் சபதம், ஒரே அலைச் சப்தம்.

******

நன்றி: சந்திரோதயம், 30-06-1945, 10-07-1945, 20-07-1945

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்