May 22, 2012

பாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன்

பாத மலர்

மலரற்ற தார் ரோடில்
பாதங்கள் விழிக்கு மலர்.
கார் அலையும் தெருக்கடலில்
பாதங்கள் மிதக்கும் மலர்.vaideeswaran-01
வெயில் எரிக்கும்
வெறுந் தரையில்
வழி யெதிரில்
பாவாடை நிழலுக்குள்
பதுங்கி வரும் வெண் முயல்கள்.
மண்ணை மிதித்து
மனதைக் கலைத்தது,
முன்னே நகர்ந்து
மலரைப் பழித்தது
பாதங்கள்.

மனிதனுக்கு

மேக நிழல்
மிக மெல்லிய நைலான் துணியாய்
நிலத்தில் புரளும்,
பகல்.
தார் ரோடில்
தன் நிழலை நசுக்கி மிதித்து
வாழ்க்கையின் மூலச்சூட்டால்
கொதித்தோடும்
மனித வாகனங்கள் பல.
வயிற்றின் நிழலாய்
பசி பின்தொடர
வாழ்வின் நிழலாய்
தன்னலம் பதுங்க,
வறட்சியில் புரட்சி, கட்சி,
நகரெங்கும் நிழற்கடல்கள்,
அதன் மோதல்கள்.
கணத்திற்குக் கணம்
தான் காய்ந்து
பொது நிழல் பரப்பக்
கிளைகள் வளர்க்கும்
மரங்களும் உண்டு
இந்த மனிதனுக்கு.

 

நன்றி: அரியவை

May 19, 2012

எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்
“ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ ravisuஅல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.
ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களைப்பற்றிய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. அவர்களை நாம் மனக்கண்ணில் வரைந்துகொள்கிறோம். இன்று அவர்களுக்கு முகங்களை உருவாக்கியிருக்கிறோம். தாடிமீசையுடன் வள்ளுவரும், அடர்ந்த பெரிய மீசையுடன் கம்பரும்.
ஏன்? காரணம் நாம் படைப்பை படிக்கையில் படைப்பாளியுடன் உரையாடுகிறோம் என்பதே. அருவமான எழுத்தாளனுடன் நம்மால் பேச முடிவதில்லை. நமக்கு உருவம் தேவையாகிறது. எந்தக் காரணத்தால் கடவுள்களுக்கு உருவம் அமைந்ததோ அதே காரணத்தால்தான் நாம் கலைஞர்களுக்கும் உருவம் அளிக்கிறோம்.
பெரும் கலைஞர்களின் உருவத்தைப் போற்றுவது உலக மரபு. ஹோமரின் சிலை நமக்குக் கிடைக்கிறது. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டிருக்கிறார். புகைப்படக்கலை வந்தபின்னர் இது இன்னும் முக்கியமானதாக ஆகியது. பாரதியின் பாடல்களுக்கு நிகராகவே அவரது தீவிரமான கண்கள் கொண்ட புகைப்படங்களும் ஆர்யா வரைந்த ஓவியமும் தமிழ் மக்களின் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த சித்திரங்களே கூட மக்களிடம் உக்கிரமாக உரையாடக்கூடியவையே. அவரது பாடல்களில் இருந்து அந்த முகத்தை பிரிக்க முடியாது
கலைஞனின் உடல் அவனுடைய கருத்துக்களின் பிம்பமாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் அது அவன் சொன்ன அனைத்துக்கும் உரிய குறியீடாக ஆகிறது. ஆகவேதான் நாம் கலைஞனின் உடலை ஆவணப்படுத்துகிறோம். நம் நாட்டில் முறையான ஆவணப்பதிவுகள் அனேகமாக இல்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது. ரவிசுப்ரமணியன் இயக்கிய ‘ எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன் - ஜெயகாந்தன் ‘ என்ற ஆவணப்படம் அதில் ஒரு முக்கிய சாதனை.” 

ஜெயமோகன்

ஆவணப்படத்தைப் பார்க்க 

 https://youtu.be/ahC22jv1JjQ 

image_2

2. மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்

ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குரியவை. இந்த அவலங்களின் மிகச் சில விதிவிலக்குகளில் ரவிசுப்ரமணியனின் 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' ஒன்று.
இயக்குனர் ம.செந்தமிழன்
ஆவணப்படத்தைப் பார்க்க 



arang
3. இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்

நூற்றுக்கணக்கான விவரணப்படங்களையும் குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தொலைக்காட்சிகளுக்காக தயாரித்திருக்கிற ரவிசுப்ரமணியன், அவ்வகை தொலைக்காட்சிப் பார்வையாளர்களைத் தவிர்த்து விட்டு, அதன் பாதிப்புகளிலிருந்தும், அதன் எளிமையிலிருந்தும் விலகி, இந்திராபார்த்தசாரதி என்ற நாடகாசிரியரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்திருப்பதில் தனது அடுத்த கட்டப் பாய்ச்சலை நிரூபித்திருக்கிறார்.
பி.அப்பன்
ஆவணப்படத்தைப் பார்க்க 





ip
நன்றி: ரவிசுப்ரமணியன்

May 13, 2012

ராஜகுமாரி-லா.ச.ரா

நிழல்கள் நீளத் தொடங்கிவிட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய் வானத்தில் வண்ணங்கள் குமைகின்றன. கோணக்கிழக்கில் அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பக்ஷிகள் மூன்று கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின்றனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி தூலத்தின் குழல்   வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன. எதிரிலிருந்து எதில்? வானத்திலிருந்து பூமிக்கா? பூமியிலிருந்து வானிற்கா என்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. சாயும் பொழுதில் தோயும் வண்ணக் குழைவில் முகில்களின் செழிப்புடன் புமியின் பசுமையும் சேர்ந்து தீட்டியதாய் பிரம்மாண்டமானதோர் ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஆனால்lasara33

தென்றலின் அசைவில் திரைச்சீலை இடந்தேடுகின்றனவா தீட்டிய வர்ணங்கள் காயுமுன்னரே

இயற்கையின் ஆக்கல் சீற்றத்தில் புதுப்புது நிறங்கள் கக்கிக் கொண்டிருக்கையிலேயே

இதோ.. அப்பவே – இல்லை – இப்பவே –

இல்லை – சமயத்திற்கு அதன் அமைதலின்றி நேரம் கணக்கேது?

அடுத்த மாத்திரையின் மந்திரக் கோல் வீச்சில்

ஓவியம் தேய்ந்துகொண்டே வருகிறது.

எந்தச் சூழ்ச்சியால் இந்த வீழ்ச்சி?

மாலைக்கும் இரவுக்கும் ஏன் இந்த வீண் வியாஜ்ஜியம்? எனும் திகைப்பில் நெஞ்சில் சோகம் நூல் சிக்குகிறது.

ஏதோ பீதி கூட.

பக்கத்தூரில் குதிரைவாகனம் பார்க்க

ஆசையா உடுத்திக்கொண்ட பட்டுப் புடவை

அத்தனை க்யாஸ் லைட் பட்பட்

படாபடா டப்பட் வாணவேடிக்கை

அடைவீதித் திருவிழாக் கூட்டம்

நடு அம்பலத்தில

நெகிழ்ந்து அடியோடு அவிழ்ந்துவிட்டமாதிரி

மானம் தோற்பதற்கென்றே அலங்காரமா?

ரூபமாய்க் கேள்வி வடியவில்லை

ஆனால் அதன் கொக்கி

நெஞ்சில் மாட்டியிழுக்கின்றது. சதையடியில் முதுகெலும்பின வெண்மையின் உள்மையத்தில் ஒரு சில் சிறீல். அடிவயிற்றில் ஏதோ உறுத்தல் தவிப்பு கிணற்றைச் சுற்றி சுற்றி வளைய வருகிறாள். குழந்தைகள் இன்னும் விளையாட்டிலிருந்து திரும்பவில்லை. கிழவர் உலாவப் போய்விட்டார். மத்தியானத்திலிருந்தே அவரைக் காணோம். வீட்டில் அவள் தனி.

கிணற்றுள் எட்டிப் பார்க்கிறாள்.

யார் இந்த இளவரசி? இவளுக்கு ஏன் இந்தப் பாதாளச் சிறை? ஊமைக் கிலேசம் பல்படாது மார்பைக் கவ்வுகிறது? இருகைகளாலும் மார்பை அழுத்திக் கொள்கிறாள்.

உள்ளே கிணற்றடியில் கண்ணாடி

எனக்கென்ன குறைச்சல்? வெட்கம் இன்பம் பரபரப்பு அங்கங்களைப் பறிக்கின்றன. கண்ணாடியின் வட்டவிளிம்பிலிருந்து ஜலதாரைகள் சுரந்தவண்ணமாயிருக்கின்றன.

ராஜகுமாரி ஏன் ஸதாஸ்னானம்?

வெட்கம் இன்பம் பரபரப்பு அங்கங்களைப் பறிக்கின்றன.

(தண்ணியா அது? அமிழ்தமல்ல! )

(காத்தான்)

இங்கிருந்து பார்க்கையில் ஜலத்தில் இளநீர்போல இளவெண்மை.

கத்தரி வெய்யிலில் கூட ஆழம் தென்னை மரத்துக்குக் குறைவில்லை. கவுறு விட்டுப் பார்த்துக்கண்கண்ட உண்மை)

(காத்தான்)

இதுக்கும் ஒரு கதை இருக்குதம்மா. என் வூட்டிலயே வழங்கற கதை. என் முப்பாட்டன் சொன்ன கதை. உனக்கு நான் சொல்லப்போற கதை.

இந்த ஊருக்கும் அந்த நாள் ஒரு பஞ்சம். வாய்க்கால் குளம் கிணறு நாக்கிலே எச்சில் கூட வறண்டுபோய் அப்படி ஒரு காய்ச்சல். பயிரும் ஊரும் மானம் பார்த்துப் பார்த்து கொடும்பாவி கட்டியிழுத்தும் நட்சத்திரம் உதிருது. மானம இறஙகி ஒரு கண்ணீர் கூட சொட்டல்லே. ஊரைவிட்டு ஓடலாமா. ஒருத்தரை யொருத்தர் அடிச்சுத் தின்னலாமான்னு மக்களுக்கு ஆத்திரம். யார்மேலே ஆத்திக்கலாம்னு வவுறு வெந்துகிட்டிருந்த சமயம் ஒரு நாள் போது சாஞ்சு போச்சு. இந்த வூட்டு யசமானி வாசல்லே வந்து நிக்கறாங்க. யாரோ ஒரு பொம்புளையெ பத்து ஆம்பளேங்க துரத்தி வராங்க. அவிழ்ந்துபோன சேலையைக் கையாலே வவுத்துலே அள்ளிப் புடிச்சுட்டு அலங்கோலமா ஓடிவரா. பின்னாலே சின்னதும் பெரிசுமா கல்மாரி வீசி வருது. “ஐயோ இடம் கொடுங்கோ! என்னைக் காப்பாத்துக்கோளேன்!” அந்தப் பொம்மனாட்டி அலறிட்டேவரா. அந்தந்த வீட்டுத் தாய்மார் தங்கைமார் மாமியாரா மருமவளா எல்லோரும் பெண் பிள்ளைங்கே வேடிக்கை பாக்கறாங்க. பெண் பாவம் பாக்கறவங்க யாருமில்லே.

இந்தப் பக்கமா அவள் வந்ததும் இந்த வீட்டு எசமானி இந்த வீட்டுக்கே ஒரு அம்சம் எசமானி. எப்பவும் அமைப்பு விளக்கேத்தறவங்க வகையா வாய்ச்சுட்டா வூட்டுக்கு இருளே இல்லை. வழி வழியா முரவன் அருள அப்படியே இருக்கணும் – ஓடி வந்தவளை ரெண்டு கையாலும வாரியணைச்சு உள்ளே வலிச்சுகிட்டு கதவையடைச்சு ரெண்டு தாளையும் இழுத்துப் போட்டுட்டாங்க. தடதடன்னு வெளியே தட்டறாங்க. ஆனால் அதன் கிட்ட யாரும ஒண்ணும் ஆட்டிக்க முடியாது. கதவான தகவு அந்த நாள் கதவு. கோட்டைக் கதவு கோவில் கதவு. தேக்கு மரத்திலும் அடிமரம் தாள் போட்டால் சீல் போட்டதுதான்.

அப்புறம் நடந்த பேச்சை என் பாட்டன் அவர் பாட்டன் சொன்ன கதையை அப்பட்டமா சொல்லுவாரு. அதிவேதாண்டா கதைப் பேச்சுக்குள்ளே புகுந்து பார்க்கணும். பார்த்தா புல்லரிச்சுப் போவுதே. அதிலேதான் கதை என்பாரு.

“யாருடி அம்மா நீ? என்னடிம்மா பண்ணினே?”

“நான் அசலூர். ராத்தங்க இடந்தேடி இந்த ஊர் நாலு கால் மண்டபத்தில் தங்கினேன்”

”புடவையைச் சரி பண்ணிக்கோ. இங்கே உனக்கு ஒண்ணும் நேர்ந்துடாது”

ஆனால் அந்தப் பெண் லேசா சிரிச்சிட்டு நிக்கிது. அம்மா சொன்னபடி மானத்தை மூட முயற்சி செய்யல்லே. மூக்கும் முழியுமா இருக்கு. ஆனால் புத்தி சத்தே பேதலிச்சிருக்கும் போலிருக்கே. பயமா பாவமா தெரியல்லியேன்னு அம்மாவுக்கு எண்ணம். ஏன்னா அந்தப் பொண்ணுக்கு முழி சரியாயில்லே. இங்குமங்கும் என்னத்தையோ கண் தேடி அலையுது.

“புதுசா வந்த இடத்திலே ஊர்க்கோவத்தை சம்பாதிக்க என்ன பண்ணினே?”

வந்தவளுக்குக்கண் அலைச்சல் நிக்கல்லே. அம்மா சொன்தைக் காதில வாங்கிட்டு ஆனால் ஏதோ நினைப்பா.

”எல்லோரும் செய்யறதைச் செஞ்சுண்டே இருக்கிறதைவிட புதுசாவோ ஈனமாவோ ஒண்ணும் நான் பண்ணிடல்லே” அம்மாவுக்குப் புரிஞ்சுபோச்சு. கண்ணுலே தண்ணி தளும்பிட்டுது.

”அடப்பாவமே! ஏண்டி குழந்தை வயத்துக்கில்லாத கொடுமையா?”

”ஏன பாட்டி. நானே வழங்கறவளாயுமிருக்க கூடாதா?”

”நீ செல்றது புரியல்லியே! காரியம் ஒண்ணொண்ணுக்கும் வேளைப் பொழுதுன்னு ஒண்ணு இருக்கே?”

நீங்கள் சொல்றது என்னிடம வருவோருக்குத்தான்தான் இருக்கணும். எனக்குக் கிடையாது. ஓடற தண்ணீர் ஓடிண்டே இருக்கு. என்னிடம் இருப்பது என் ஆழம ஒண்ணுதான். அதுவும் எவ்வளவுன்னு எனக்கே தெரியாது. அதுவும் எனக்கு ஒளிவு மறைவில்லை”

”என்னடிம்மா சொல்றா. புரியல்லியே!”

”இதோ பாருங்க பாட்டி. நானா வலியப்போய் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்கல்லே. ஆனால் தேடிண்டு வந்தவாளை ”மாட்டேன்னு” மறுக்கல்லே. “ஆமா”ன்னு தலையையும் ஆட்டல்லே. நீங்கள் எனக்கு இப்போ அடைக்கலம் தந்து அணைச்சுக்கலியா. அது மாதிரி ஆதரவா அணைச்சுண்டேனோ என்னவோ! ஏன் பாட்டி. நெஞ்சடியில நாம் அத்தனை பேரும தாய்மார்தானே! நம் உடலமைப்பும் அப்படித்தானே! மேடும் பள்ளமுமா ஓடினாலும் மாரெல்லாம் பால்தானே!. பாட்டிக்குத் தலை ”கிர்ர்ர் – ”

அடிச்சுட்டு வர வெள்ளத்திலே வீட்டுக்கூரை குமுங்கினாப்போலே தூண்மேலே சாஞ்சு சரிஞ்சு அப்படியே குந்திட்டாங்க. தண்ணியிலே கரைஞ்சு போறாப் போல கூடம் தூண் சுவர் எதிரே அந்தப் பொம்புள்ளே தான் எல்லாமே வரப்புக் கலைஞ்சு மிதப்பலாடுது. எங்கிருந்தோ ஒரு குரல் காதண்டை ஒலிக்கிறது.

”எதையும் அக்கலக்கா பிரிச்சுக் கேட்டால் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. இல்லை எனக்குச் சொல்லத்த தெரியல்லே. எதையுமே அக்கலக்கா பிரிச்சுப் பார்த்தால் செய்யாத பாபமில்லை. நேராத புண்ணியமில்லை. ஆழத்துக்கு ஆழம் பார்த்து ஆகற காரியமில்லை. இடுப்பளவு ஆழக்காரனை குளிபாட்டறேன். கழுத்தளவு வந்தவன் என்னில் முழுகி எழுந்திருக்கிறான். ஆழந்தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளேயே வந்துட்டவன் என் வயிற்றில் தூங்கறான். காலை நனைக்கவே பயப்படறவன் அழுக்கு அவனிடமே பத்ரமா இருக்கு. சமுத்திரத்தையே முழங்காலுக்குக் கண்டவன் பாதம் கழுவுவது தவிர நான் ஒண்ணும செய்ய முடியாது. துணிஞ்சவாள்தான் துறந்தவாள். துறந்தவாளுக்குத்தான் தரிசனம். கொஞ்சநேரம தப்பியோ வழி தடைபட்டோ வந்தாலோ குழந்தைகளுக்குத் தாங்கல்லே. நானும் ஓடோடித்தான் வரேன். ஆனால் என் குழந்தைகளே என்மேல் கல்லைவிட்டு எறியறதுகள். தாணை அடையாளம் தெரிஞ்சிக்கல்லே. இதைவிட துக்கம் எனக்கு வேணுமா? ஆனால் இதைவிட வேடிக்கை உலகத்தில் உண்டா? எதுவுமே என்னைப் புரிஞ்சிக்கல்லே. புரிஞ்சுக்கறதுன்னா என்ன? வந்த்தை வந்தபடி வாங்கிக்கறதுதான். எனக்குத தெரிஞ்சுணட்ட வரை புரிஞ்சுண்டதற்கு அர்த்தம். ஆனால் இதைப் புரிஞ்சுக்க அனுபவத்துக்கு ஒண்ணு உன்மாதிரி வயதாயிருக்கணும். இல்லை என்மாதிரி வயதை மீறியிருக்கணும். ஆனால் ஒண்ணு. உலகத்திலே (குழந்தைகளில்லாமல்) எல்லோருமே கிழமாயிருந்துட்டா எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் என்ன பண்றது? அனுபவிக்க முடியாத அறிவு அத்தனையும் வறட்சை. வறட்சைக்கா வந்திருக்கேன்? குடம் தளும்புற மாதிரி அதென்ன கிளுகிளுப்பு? சிரிப்பா? அழுகையா? சிரிப்பாயிருந்தாலும் அதைக் கேட்டதும் எனக்கேன் இப்படி தொண்டை அடைக்கிறது?

”என் குழந்தைகள் செழிக்கத்தானா வந்திருக்கேன்! இல்லை எனக்காகவா வந்திருக்கேன்? குழுந்தைகள் வயிறு குளுமை கண்டு என் ஈரம் நெஞ்சுவரை பாஞ்சு எங்கும் க்ஷேமம் தழைக்கணும்னு எப்படி ஓடோடி வர்ரேன். எங்கிருந்து நான் எப்படி வந்தாலும் அடங்கற இடம் ஒண்ணு எனக்கும் உண்டே. அது இங்கே எங்கே? இங்கே எங்கே?”

அந்தப் பொம்புள்ளை திடீர்னு புடவையைக் கழஞ்சு கீழே போட்டுட்டு முண்டக்கட்டியா ஓடிப்போய் கிணற்றிலே தொப்புன்னு குதிச்சிட்டா.

”ஐயோ”ன்னு அலறிக்கிட்டே பாட்டியம்மா பின்னாலேயெ லொங்கு லொங்குன்னு ஓடிப்போய் கிணற்றிலே எட்டிப் பார்த்தா. உள்ளேயிருந்து தண்ணி மேலே பொங்கி வருது. நிமிசத்துல கிணறு வழியுது. பாட்டி தட்டித்தள்ளாடி வந்து கதைவைத திறந்து விட்டுட்டாங்க. உள்ளே பாங்ஞ்சோடி வந்தவங்க வந்தால் தோட்டம் கூடம் வீடு எல்லாம தண்ணி ஓடுது. பாட்டியும் கிணத்தைச் சுட்டிச் சுட்டிக் காட்றாங்க. ஆனால் அவங்களுக்கு வாயடைச்சுப் போச்சு. பாட்டியம்மாவுக்கு அப்புறமே பேச்சு ஒரு மாதிரி தட்டல்தான். அது பத்தி பேச்செடுத்தாலே அம்மாவுக்கு முருள் வந்த மாதிரி ஆயிடும். ஆப்புறமே அந்த அம்மா ரெம்ப நாள் இல்லே. வாய்க்காலிலே குளிக்கப் போனவங்க உச்சி வேளைக்கும் திரும்பல்லே. கரையோரமா தேடிக்கிட்டே பொனவங்க ஒரு கல்லுக்கப்பால் யாருமே நடமாடாத வளைவிலே கண்டெடுத்தாங்க. மாறாத தூக்கத்தில பாட்டியம்மா காணாததைக் கண்ட மாதிரி சிரிச்ச முவத்தோடு பாட்டியம்மா தண்ணியிலே கிடந்தாங்க. இத்தனைக்கும வாய்கால் வழிபூரா தண்ணி கணுக்காலுக்கு ஏறல்லே. அதுதான் ஆச்சர்யம். பாட்டியம்மா இடுப்பிலே வந்த பொம்புளே அவிழ்த்துப்போட்ட புடவையை உடுத்திட்டுருந்தாங்க. ரொம்ப நாளைக்கு அந்தப் புடவையைப் பூவாடையைக் கும்பிட்டிருந்தாங்களாம். அப்புறம் ஒரு நாள் நனைச்சுக் கோடிக்குக் கோடி தோட்டத்திலே கிளைக்குக் கிளை கட்டியிருந்த சேலை எப்படியோ அவிழந்து காற்றாடியாப் பறந்து போயிட்டுதாம். நீலப் பட்டுப் புடவை இறக்கையடிச்சு ஊர்மேலே பறந்து போறப்போ தெருவிலே ஓடிவந்து வேடிக்கை பார்த்தவர்கள் எத்தனை பேர். நடுவாசலில் குத்துவிளக்கை ஏற்றி வெச்சு கற்பூரம் கொளுத்தி விழுந்து கும்பிட்டவங்க எத்தனை பேர். ”காவேரியாத்தா எங்கள் பாவம் பாராமல் எங்களை கண்திறந்து பார்த்தவளே! நீ வந்த காரணம் முடிஞ்சு நீ திரும்பிப்போற விடமெல்லாம் உன் புண்ணியம் எங்களுக்கு இருக்கட்டும் !”

அதனாலே காவேரியம்மன் வலிய வந்து தன்னைக் காட்டிக் கொடுத்துக்கிட்ட வீடு அப்பா இது” ன்னு முடிச்சுட்டு என் முப்பாட்டன் கூடவே என் பாட்டனிடம் சொல்லுமாம். “இது என் பாட்டனிடம் நான் கேட்ட கதை. இதன் நிசமும் பொய்யும் நோண்ட இனக்கு நான் கதை சொல்லலே. நிசமும் பொய்யும் நமக்கேன்? நம்பினால் காவேரியாத்தா. நம்பாட்டி நல்ல கதை. இந்த வீட்டில் தண்ணி மொண்ட நம்வீடு நிறைஞ்ச வீடு. இது நிசம். இதுக்குப் பஞ்சாயத்து வேணாமில்லயா?

தலைமீது மிருதுவாய் ஏதோ உதிர்ந்த்தை கையிலெடுத்துப் பார்த்தால் பூ. அவளுக்கு மயிர்கூச்செறிகிறது. காற்று வாக்கில் இயங்கும் எந்த ஆத்மாவின் ஆசீர்வாதமோ? ஒரு வேளை காவேரியம்மனேதான் பூவை அட்சதையாப் போட்டாளோ?

“நிறையப் பெருகி நன்னாயிரு!”

இந்த அர்த்தம் தந்த இன்பம் நெஞ்சிலே தேன் விடுகையிலேயெ

”ஆ வி ர் ப் ப வி ”

முன்பின் சுவடுகூட அவள் கண்டிரா ஒரு நாமம். அதன் மோன ஓசையிலேயே புரியாத அர்த்த தாரைகளைப் பெருக்கிக்கொண்டு மனதில் தோன்றியதும் அமுதம் அவளை ஆட்கொண்டது.

”ஹ விஸ்”

ஹவிர்ப்பாகம்

ஹவிர்ப்பாஹி

”ஆவிர்ப்பவி”

ஒரு தினுசான மூர்ச்கையில் ஆழ்ந்தாள்.

இருள் பந்துகள் செடிகளில் கிளைகளில் இலைக்கொத்துகளில் தொங்குகின்றன. எத்தனை நேரமாவோ அறியேன். இங்கேயே இருக்கேன். இருட்டு எப்போ எப்படி இறங்கித்து? இன்னும் சுருள் சுருளாய் கடைசல்க்கள் தந்து வந்து கிணற்றின் மேல. ராட்டினக்கட்டை மேல் பிடிச்சுவரில் கொல்லைக் காம்பவுண்டின் பொக்கை போறைகளில் கரை தோய்கின்றன. ஒளிப்பொறிகள் சுவரோரம் வாடாமல்லிப் புதரில் தோய்கிற கல்லின் பக்கமாய் சாய்ந்த வாழைக் குலையைச் சுற்றிச் சுடர் விடுகின்றன. தன் பக்கமாய் பறந்து வந்த மின்மினி ஒன்றைப் பிடித்தும் லேசாய் மூடிய கையுள் விரல் சந்துகளின் வழி உள்ளங்கைக் குழிவு தகதகக்கின்றது. கை விரித்ததும் சுழன்றது என் ஜீவனின் பொறியா? என்னைச் சுற்றிச் சுழிக்கும் இருளின் பொரியும் இத்தனை பொறிகளும் அத்தனை உயிர்களா? இதுகளுக்கு ஏன் இவ்வளவு பெரிய தவிப்பு? விடுபடுவானேன்? திரும்பவும் இருப்புத் தேடி திக்குத் தவிப்பானேன்? இது ஒரு வேடிக்கையா என்ன?

விவரம் தெரியா விசனம் அவள் மேல் படர்கிறது. அதன் பாகு விழியோரங்களில் உதட்டின் வளைவில் மோவாய்க்குழிவில் முதுகுத தண்டில் மார்பின் பூண்களில் தொப்புள் சுழியில் இடுப்பின் நெகிழ்வில் அடிவயிற்றின் மேடில் மேடின் இறக்கத்தில் சுற்றிக்கொள்கிறது. அதனால் உடலில் ஒரு மதப்பு. பூமியை தன் மதுவை ஏந்தும் ஒரு மலர்க்கிண்ணமாக இரவு மாற்றிக் கொண்டிருக்கிறது. விசன நரம்புகள் ஓடிய இதழ்கள் பகல் விரிந்து இரவு குவிந்த பூவுள் மாட்டிக்கொண்டு மதுவில் நிந்தித்தவிக்கும் உயிரெனும் பரம சோகத்தின் மின்மினிகள்.

இங்கிருந்து தெரியும் வீட்டின் உட்புறம் கூடத்தில் ஏற்றிவைத்த குத்துவிளக்கின் இளவெளிச்சத்தில் குளித்து மணவறையில் கன்னத்தில் படரும் நாணத்திட்டுபோல் தோன்றுகிறது. ஆயுசில் பாதியாச்சு. அடராமா. அசட்டு பிசட்டுன்னு என்னென்னவோ மனசில் தோணிண்டுருக்கே.

“இதென்ன வீடா இல்லை.. என் வாயில் வரக்கூடாத்தெல்லாம் வறது. அதுவா இது? ”

நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கோணி ஊசியின் கூரில் குரல் இருளைத துருவி வந்து அவளை எட்டிச் சுடுகிறது. மனமிலாது நினைவைக் கலைத்து உள்ளே செல்கிறாள். அவளைக் கண்டதும் வெடித்த விதைபோல் கிழவர் குதிக்கிறார். அவர் கோபம் பார்க்க ஒருபக்கம் பயம். ஒருபக்கம் சிரிப்பு வந்த்து. இந்த வீட்டுப் பெண்களுக்கு ஆணவம் முத்திப் போறதுக்கும் ஒரு எல்லையில்லையா என்ன? நாள்தான் அஸ்தமனமாச்சு. வீட அஸ்தமனமாயிடுத்தா?

“என்ன தாத்தா அம்மாவைக் கோவிச்சுக்கறே?”

கிழவர் ”சரே”லென்று திரும்பி பேத்தியைக் கன்னத்தில் ஒன்று விட்டார். குழந்தை ஒருகணம் திக்குமுக்காடிப்போய் அழ மறந்து அப்படியே நின்றுவிட்டாள். தாத்தா அடிப்பார் என்று அவள் நினைக்கவில்லை. கிழவருக்கு என்னமோ மாதிரி ஆகிவிட்டது. இதுமாதிரி இதுவரை நேர்ந்த்தில்லை. அப்பவே அவள் பின்னால் அவரையே பார்த்துக்கொண்டு நின்ற பேரனையும் கண்டதும் அவர் மனநிலை ஏதோ கையும் பிடியுமாக அகப்பட்டுக்கொண்ட திருடன் மாதிரி உள்சுருங்கிற்று. அவன் கண்களில்தான் எத்தனை அலட்சியம் சிந்துகிறது? கோபாவேசத்தில் கிழவர் உடல் காற்றில் சருகுபோல் ஆடிற்று.

என்னடா முறைக்கறே எள்ளுக் கண்ணை வெச்சுண்டு? சுட்டு எரிச்சுடுவையோ?” பையன் பார்வை மாறவில்லை. அவர் போகும் வழியெல்லாம் அதுவும் தொடர்ந்த்து. கிழவர் பின்னடைந்து திண்ணையில் போய் உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்து பொரிகிறார்.

என்ன அக்ரம். வரவர இந்த வீட்டில் ஒரு நல்லது பொல்லாத்துக்கு வாய்திறக்கு புத்தி சொல்ல வழியில்லாமல் போச்சு பார்த்தையா! நேற்றுப் பிறந்த்தெல்லாம் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கற காலம வந்துடுத்து! என் நாளில் நான் இப்படித்தான் இருந்தேனா? இருக்கத்தான் முடியுமா? முழிச்ச கண்ணை நோண்டிக் கையில் கொடுத்துடமாட்டாளா? அது என்னடான்னா வாண்டு வாரிசுக்கு வரது!

சிறுசுகளை சொல்லி என்ன பண்றது? மாவுலயே கிள்ளி எறிய வேண்டியதை மூக்காகவே செஞ்சாறது” வந்தவழி அப்படி! அப்போ குடிச்ச பால் இப்போத்தான் ரத்த்த்தில் ஊற ஆரம்மபிசிசுருக்கு. வாயில் ஊட்டற பாலை அப்பவே மூக்கில் பீச்சியிருக்கணும்.......................

இன்னும் என்னென்னவோ.

ஆனால் இத்தனை கேட்டுக்கொண்டும் இன்னிக்கென்னவோ அவளுக்குக் கோபம் வர மறுக்கிறது. அவளுக்கே வியப்பாயிருக்கிறது.

யார் அவர் காலைக் கட்டறது? கீழேநோக்குகிறாள்.

”தாத்தா அன்னை அடிச்சு- ட்டா- ம்மா!

”ஊ – ஊ – ஊ ”

நான் பெற்றதுதான் நீ. ஆனால் இன்னிக்கு எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. யார் என்னை என்ன திட்டினாலும் இன்னிக்கு எனக்கு ஒட்டிக்கல்லே. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.

இன்னிக்கு உனக்கு எதில்தான் அக்கரை? இன்னிக்கு எதுதான் உன்மேல் ஒட்டிக்கொள்ளும்?

அவளிடமிருந்தே எழுந்த கேள்விக்கு மோனப் பதிலில் கண்முன் செவேலென மார்பின் தோற்றம் எழுந்தது. மார்க்குலையில் ஸன்னமான பழக ஜபமணி மாலையின் இறக்கம்.

தன் கணவன் முகத்தை உடனே அந்த நிமிடமே பார்க்கவேணும் பார்த்தேயாகணும் எனும் அவா விலங்கு தன் இரையைக் கவ்வுவதுபோல் அவளைக் கவ்விற்று.

இதென்னடியம்மா திடீர்னு உலாவப் போயிருப்பவர் திரும்ப வருவதற்குள் வருடக்கணக்கில் பிரிந்தாற்போல் ஏக்கம்?

அவள் ராஜகுமாரி. அவளுள் அவளே தோழி. ராஜகுமாரியை பரிஹாசம் செய்கிறார்.ஆனால் கரை புரண்ட இந்தப் பிரிவாற்றாமைப் பெருக்கில் பரிஹாசம் ஏற்கவில்லை. இன்று மாலை மயக்கத்தில் நிமிடங்கள் வருடங்களாய் நீண்டுவிட்ட அற்புதம். இது என்ன?

அந்த அற்புதமும் ஏக்கமும் கலையாமலே லாந்தர்களை ஏற்ற ஆரம்பித்தாள். ஆயிரம் லாந்தர்கள் ஏற்றிவைத்தாலும் இன்றைய இருள் என்னிருள். தனி இருளில் இவரே செந்தழல்! கொஞ்ச காலமாகவே உடம்பு வாங்கல். ஆனால் தேகத்தில் ஜ்வாலை முறுக்கு. இன்னென்று புரியா ஸ்புடத்தில் மேனி மின்னிம் பொன்னுக்கு. இத்தனை நாள் என கண் எப்படி

அவிஞ்சுபோச்சு?

விளக்கை சுற்றி வட்டமாய் பந்தி நடக்கிறது பாரேன். சாதத்தை குருவி மாதிரி கொறிக்ரதை!

சுப்பு ஒருபிடி கூட இழுக்கிறாள்.

சுப்பு கிழவருக்கு இடதுபுறம் உட்கார்ந்திருக்கிறாள். பிடிக்குப் பிடி கிழவரின் முகக்கடுப்பு இளகுகிறது. பாவம்! பசி பொல்லாதது.கீரை மசியல் சட்டியை சுரண்டினால் அகப்பையில் வரவில்லை.அதிலிருந்தே தெரியறதே! அவருக்குப் படித்தமாய் அமைஞ்சு போச்சு போலிருக்கு! எனக்கு இல்லாட்டா என்ன? அதுவே என் சந்தோஷம்.

பச்சை வாழையிலையில் மோருஞ்சாத்தின் தூயவெண்மையின் நடுவே கீரையும் குழம்பும் கலந்து சுத்தமாய்க் குளம் கட்டி இருப்பது எடுப்பாயிருக்கு.

“எலே சுப்பு! உன் மூக்கில் ஒரு புறா உட்காந்திருக்கு”

சுப்பு பயந்து மூக்கை தடவி பார்த்துக்கொள்கிறாள். வாய் நிறைய கவளம். கண்கள் கரு வண்டாய் பளபளக்கின்றன.

“ஒண்ணுமில்லை. நீ என்னோடு பேசவேண்டாம போ! நீதான் என்னை அடிச்சயே!” உதட்டைப் பிதுக்குகிறாள்.

”அதே மூக்கிலிருந்து உச்சி மண்டைக்கு வந்துடுது! அவளை அறியாமலே சுப்புவின் கை மண்டைக்கு தூக்குகிறன்றது.

“எனக்கென்ன அதோ தோள்மேல் நிக்கறது. அதோ ..எனக்கென்ன தோள்மேல் நிக்கறது” தோளைத தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள்.

“நான் எப்படிப் பொய் சொல்வேன். நானே விட்டவெள்ளைப் புறான்னா!” சுப்புவுக்கு சிரிப்பு பீரிடுகிறது

”நானே விட்ட வெள்ளைப் புறா!”

திரும்பத்திரும்ப கொக்கரிக்கிறாள். அவளுக்கு அது ஒரு பெரிய வேடிக்கையாயிருக்கிறது. அதோ பார் உன் முதுகில்!

“நானே விட்ட வெள்ளைப் புறா!”

“நானே விட்ட வெள்ளைப் புறா!”

தாத்தா இடது கையால் அவள் முதுகில் பளார் என்று அறைகிறார். சப்தம் பட்டாசு வெடிக்கிறது.

சுப்புவுக்கு சரிப்பு தாங்கவே முடியவில்லை. உடலே குமுங்கி மடிகிறது.

“ஏடி சுரணை கெட்ட வெள்ளாட்டி” இப்போ வலிக்கல்லியோ? அப்போ வாயை கப்பறையாப் பிளந்து ஊரைக் கூட்டினையே! ”

“போ தாத்தா! இதை ஆசையடி. வலிக்குமோ?”

கிழவர் இடதுகையால் பேத்தியை அணைத்துக்கொள்கிறார். “கள்ளி! கள்ளி! இப்பவே பேச்சிலே மயக்கபார்!” அவர் கண்கள் துளும்புகின்றன.

திடுக்கென விழிப்பு வந்தது. அவளை அப்படி எழுப்பியது எது? பொத்தென்று அவள்மேல் விழுந்தடித்து பல்லி ஓடித்தா? சமையலறையில் சாமான் உருண்டதா? ஊஞ்சல் சங்கிலியின் கிறீச்சா?

அத்தைக்குப் பின் ஊஞ்சலுக்கு அவள்தான் வாரிசு. நாளெல்லாம் பாடில் சலித்த உடம்புக்கு அதன் லேசான அசைவின் இதவு இருக்கட்டும் ஒரு பக்கம். அதிலும பெரிசு அத்தை படுத்த இடம் என்கிற மவுசு. அத்தை புரணட இடத்தில் தானும் புரண்டு அத்தையின் தைரியத்தை பலத்தை அத்தை புழங்கிய பொருளிலிருந்து அத்தையின் பிராசாதமாய்த் தானும் பெறுவதாய் ஒரு த்யானம். த்யானமேதான் தைரியம். த்யானமேதான் பலம்

ஆனால் அவளை எழுப்பியது அவள் நினைத்ததல்ல. எங்கிருந்தோ அதென்ன “சொட்டு” “சொட்டு”..?முக்காலி மேல் நிறுத்தி ஈருக்கும் தீர்த்த சால் ஒழுக்கா? அடியில் கவிழ்த்த பால் உருளிமேல ஜலம்“சொட்டு” “சொட்டு” “சொட்டு”

இல்லை ஜலத்தைவிட இந்த ஓசை கல்கண்டு மாடியிலிருந்து துளிக்கின்றது. துளிக்குத துளி தனித்தனி தெறித்து ஒன்றுடன் ஒன்று இழைந்த பாகு உள் ஊறி அவளையும் தன்னோடு கட்டியிழுக்கையில் அதுவே வேதனை விடு தூதாகி “சொட்டு” “சொட்டு” “சொட்டு”

திடீரெனப் புரியவில்லை. உடல் பூரா ஒரே தவிப்பு. விழியோரங்களில் உதட்டு வளைவில் போவய்க்குழிவில் முதுகுத்தண்டில் மார்பின் மார்பின் பூண்களில் தொப்புள் சுழியில் இடுப்பின் நெகிழ்வில் அடிவயிற்றின் மேடில் மேடின் இறக்கத்தில் அனல் சரடு சுற்றிக்கொள்கிறது.பிய்த்தெறிய முயன்றும் சரடு சிக்காகி அங்கங்கள் திகுதிகுவென பற்றிக்கொண்டன. மானம் போக காலை வாரிவிடும் மோசடி மூட்டம். ஈதென்ன?

ஊஞ்சலிலிருந்து எழுந்து புலி புறப்பட்டது. தன் ஓசையெ தனக்கு ஊமையாகி தன் பசிக்கு இரைதேடும சூதில் மெத்திட்டுவிட்ட பாதங்கள் அவளைக் கூடத்திலிருந்து அடியடியாய் ஏந்திச்சென்றன.

மாடியடியில் ஒரு கணம் தயங்கி நின்றாள். இரவின் அமைதியில் புவனம் ஒரு பிரம்மாண்டமான குமிழியாய் அந்தரத்தில் தொங்கிற்று.

எப்பவோ சுப்பு தாத்தாவோடு திண்ணைக்குப் போயாயிற்று. பையன் குஞ்சுத் திண்ணையில் தூங்குகிறான் இப்போதெல்லாம். அவனுக்கு தன்மேல் பிறர் உடம்போ கையோ தற்செயலாய் பட்டாலே பிடிக்கவில்லை. கொஞ்சநாளாகவே தனிக் கூடாகி விட்டான்.

தேனென ஒலித்துளிப்பு

பளிங்கெனத் துலங்கி

சிங்லிகிணிங்

பளிங் கிளிங்

தரங் கிணிங்

தரங்.....

கறவை ஏமாற்றிக் கன்றுக்கு மித்து மடியில் மறைத்த கள்ள மணி கன்றுக்கு காத்திருந்து கன்றைக் காணாது தன்னை மறந்த பரிவின் துரிய மணி மடிமீறி காம்பினின்று சொட்டுச் சொட்டுச் சொட்டென தேம்பும் பாலின் துயரமணி.

ஓசை மணிகள் கிண்கிணிக்கும வழியே சென்றாள்.

மொட்டை மாடிமீது வான் குடலை கவிழ்ந்து உருண்டது. ஆனால் அதனின்று கொட்டியவை நட்சத்திரங்கள். பூக்களல்ல. அனைத்தும் முள் கொண்டைகள் வானத்தில் – அல்ல புடவையில் – அல்ல – உடலில் தை தை தைத்து அடிவரை பாய்ந்து ஆங்காங்கே திருகிப் பதிந்து சுடர்விடும் குரூர எக்களிப்புக்கு அஞ்சி உடல் குலுங்கி ரோமம் சிலிர்த்தது.

ஆனால் அந்தவலி முழு உணர்வையடைந்து உள் அழுந்துமுன் மாடியறையின் ஒருக்களித்த கதவின் பின்னாலிருந்து திடீரென் நாத ஜாதிகள் புறப்பட்டு வந்து அவளை மொய்த்த்துக்கொண்டன.

மூக்குக் குத்தியில் நெற்றிக் குங்குமத்தில் காதுக்கம்மல் கற்களில நெற்றி நடு வகிடில் மேல உதட்டில் துளித்த வேர்வை முகத்தில் மோவாயடியில் அளிந்த பிறவி மறுவில் உள்ளங்கை ரேகைகளில் கணரப்பை மயிரில் பிடரி மணிரச்சுருளில் நகச்சதையிடுக்கில் புருவக வானில் கூட்டங்கூட்டமாய் குழுவான்கள் சிட்டஞ் சிறகுகளில் பறந்து வந்து தொத்திக்கொண்டன. அவைகளின் எள்ளளவுக்கெதிர்மாவின் அரும்பும் புளியத் தளிரும நக்ஷத்திரங்கள், நாத்தாதுக்கள், மினமினிகள்,அந்துகள், சிந்துகள், கோர்வைகள், கார்வைகள், பார்வைகள், பாதங்கள், பேதங்கள், தாபங்கள்,தவிப்புகள், தத்தளிப்புகள், தளிர்கள், மிளிர்கள், ஒளிர்கள், அங்கங்கள், அலரிகள், பங்கங்கள்,சின்னங்கள், ஸன்னங்கள், பின்ல்கள், இன்னல்கள், பின்னல்கள், சுளுக்குகள், கொடுக்குகள், தளுக்குகள்,வெடுக்குகள், மிலுக்குகள், துடுக்குகள், மிலுக்குகள், துடிப்புகள், தூவல்கள், நொடிப்புகள், தாவல்கள்,திகில்கள், படிப்புகள், ஆவல்கள், சரங்கள், அவசரங்கள், அவகாசங்கள, விள்ளல்களின் துள்ளல்கள்,பதைப்புகள், பதைபதைப்புகள், கட்டுகள், பெட்டிகள், சிட்டிகள், அணுக்கள், ரகஸ்யங்கள் சிசுசிசு தஸ தஸ. நிதபம மப கஸ கரி நித நிரி தித தரி நிதாரினி ரிநிதி நிநிநி – இங்கு – அங்குவரை கரைந்து எங்கும் நிறைந்து எதுவும் தமக்குச் சொந்தம் என்ற க்தியில் வந்த எதையும் அரித்து மென்று உமிழும். அவைகளில ஊறல் வதைப்புத தாங்க முடியலில்லை.

கதவை படீரெனத் திறந்துகொண்டு உள்ளே ஓடினாள். இருளன்றி வேறேதும் கண்ணுக்குப் புலனாகவில்லை. கருவின் இருளிலிருந்து ஒரு அள்ளு இங்கு வந்து இறங்கினாற் போன்ற கும்மினின்று ஒலிக் கதிர்கள் முளைத்தெழுந்து அவள் மேல கூடாய்க்க கவிழந்தன. அவைகளை விலக்க வீசிய கைக்குதம் தட்டைபோல் ஏதோ தட்டிற்று. அதையும் தள்ளி அதற்கு அப்பால் பிடிப்புக்குக் கிடைத்த மெத்தில அழுந்தி

ஆ!

*********

தட்டச்சு & புகைப்பட பிரதி உதவி: ரமேஷ் கல்யாண்

May 5, 2012

சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு !சி.சு.செல்லப்பா

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு SiSuChellapaவரையறை ஏற்படுத்தி இந்த மாதிரி இருந்தால்தான் அது ஒரு சிறுகதை என்று ஒரு ஆரம்ப சட்டம் இட்டு, ஒரு கட்டுப்பாட்டுக்குள், அடாபிடித்தனமாக, இயங்க வைக்கப்பட்ட ஒன்று என்று கொண்டு விட முடியாது. ஆரம்பகாலப் படைப்பு ஒன்று தனக்குள் அடக்கி இருக்கும் ஒரு அமைப்பு முறையைக் கொண்டு, அந்த அமைப்பு முறைக்கு உதவிய சில தன்மைகளை மட்டும் கொண்டு, அதுவேதான் என்றைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை என்று கலைத்துறையில் எந்த ஒரு பிரிவு பற்றியும் அறுதியிட்டுச் சொல்லி விட முடியாது. சங்க காலக் கவிதையிலிருந்து ஆரம்பித்து, சிலப்பதிகாரம்     பார்த்து, கம்பராமாயணம் தாண்டி, ஆழ்வார்கள் நாயன்மார்களையும் கடந்து, பாரதிக்கு வந்து அவருக்குப் பின்னும் பார்க்கிறபோது கவிதைத் துறையில் நாம் கணக்கற்ற உருவ வகைகளைப் பார்க்கிறோம். அவரவர் சந்த வேறுபாடும், தளை, சீர் சேர்க்கை அளவு வித்தியாசமும், சொல்லாட்சி மாறுபாடும், வரிக்கணக்கு வித்தியாசமும், ஒலிநயப் போக்கு மாறுதல்களும் நாம் பார்ப்பவை.

தொன்மையான, மரபான இலக்கியத் துறையில் முதலில் தோன்றின வகையான கவிதை பற்றியே இப்படி என்றால் இக்காலத்ததான, நூதனமான, வெகு சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலக்கிய வகையான சிறுகதை பற்றி திட்டவட்டமான ஒரு கோடிட்ட வழி உருவம்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே எட்கர் அல்லன் போ முதல் வில்லியம் ஸரோயன் வரை வந்து, இன்னும் தள்ளி வந்து, சிறுகதை உருவம் எத்தனை தினுசாகக் கையாளப் பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். இதுக்கு அப்பாலும் உருவம் புதுசாக ஆக்கப்படவும் கூடும். இதை மனதில் கொண்டுதான் தமிழ்ச் சிறுகதை பற்றி நாம் ஆராய முற்பட வேண்டும்.

ஆனால் ஒரு எச்சரிக்கை. இப்படி சொல்வதைக்கொண்டு, சிறுகதைக்குத் திட்டவட்டமான உருவம் கணிக்க முடியாததால் எதையும் சிறுகதையாகக் கருதிவிடலாம் போலத் தோன்றும், சொல்லவும் தோன்றும். அது சரியாகாது. சிறுகதை உருவம் சம்பந்தமாக நல்ல சுதந்திரம் இருந்தாலும் முதன்மையாக அது சிறுகதை என்கிற தன்மை வாய்ந்ததாக, அதுக்கான சில அடிப்படை அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். கவிதை சம்பந்தமாக, அது எந்த விதமான யாப்பு நியதிக்கு உட்பட்டு இருந்தாலும் அது கவிதை என்ற தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது போல, இசைத் துறையில் பாடகனின் கற்பனா சக்திக்கு ஏற்ற ராகங்களை பாணி என்று சொல்லும்படியாக புது விதமாகப் பாடினாலும் குறிப்பிட்ட ராகத்தின் அடிப்படை லட்சணங்களை மீறிப் போகாமல் இருக்க வேண்டும் என்பது போல்.

இந்த எச்சரிக்கைகளை சொல்லக் காரணம், இப்போது தமிழில் எதையும் சிறுகதை என்று சொல்லும் அளவுக்கு ரசிகமனம் அவ்வளவு தாராளத் தன்மையும் அபிமான, அனுதாபப் பார்வையும் கொண்டுவிட்டதுதான். அவ்வப்போது வெளியாகிற சிறுகதைத் தொகுப்புகளில் படைப்பாளியாலும், தொகுப்பை அறிமுகப்படுத்துகிறவர்களாலும், பதிப்பாளர்களாலும் எழுதப்படுகிற முன்னுரைகளையும், பத்திரிகைகளில் வரும் மதிப்புரைகளையும் படிக்கிறபோது இந்த 'பரந்த மனப்பான்மை', 'தயாளம்' தாராளப் பாராட்டுகளை நாம் ரொம்பப் பார்க்கிறோம். அதோடு இன்னொரு முக்கியமான விஷயம். சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறபோது வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுவது, சமூகத்தின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது, பொருளாதார ஏற்றத் தாழ்வை விண்டு காட்டுவது, மன உளைச்சலை வெளியிடுவது, தத்துவத்தை விளக்குவது இப்படி மதிப்பிடப்படுகிறதே தவிர, முதலில் இவை சிறுகதைகளாக இடம் பெற்றனவா, தரமான சிறுகதைகளா, கலைநயம் காண்கிறதா, அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, அனுபவம் சிலாக்கியமானதா, வெளியீடு திறன்பட உள்ளதா, கற்பனா சக்தி எந்த அளவு காட்டப்பட்டிருக்கிறது, கையாண்ட மொழியானது வேகம், பொருத்தம், சக்தி, புதுமை கொண்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்கப்படுகிறதே இல்லை.

உரைநடை இருந்தால் போதும், 'நடை' (ஸ்டைல்) தேவையில்லை, வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம், மனித ஜாதியிடம் ஒரு அக்கறை இருந்தால் போதும் அது அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை, கருத்துச் செழிப்பு இருந்தால் போதும் கலைத்தன்மை பற்றிக் கவலை இல்லை, சமூகவியல் ரீதியாகச் சரியாக இருந்தால் போதும், அழகியல் ரீதியாகப் பார்க்கத் தேவையில்லை, போதனை மதிப்பு இருந்துவிட்டால் போதும், இன்ப மதிப்பு ஒரு பொருட்டில்லை என்றெல்லாம் பொதுவாகக் கருதப்படுகிற அளவுக்குச் - சிறுகதை மட்டும் என்ன - இலக்கியமே கருதப்படுகிற அளவுக்கு இன்று இருக்கிற பரவலான நிலை.

நன்றி : தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது, எழுத்து

May 1, 2012

'எழுத்து' முதல் 'கொல்லிப்பாவை' வரை-ராஜமார்த்தாண்டன்

கனவுகளும் யதார்த்தமும்:


1970களின் ஆரம்பத்தில் கேரளம் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேரும்வரையிலும் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் எனக்குக் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு என்பவைதான். இலக்கியப் படைப்பாளிகள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், தமிழ்வாணன் போன்றவர்கள்தான். தி. ஜானகிராமனும் ஜெயகாந்தனும் கல்கி, ஆனந்த விகடனில் எழுதியதால் ஓரளவு அறிமுகம்.

எங்கள் பேராசிரியர் ஜேசுதாசன்தான் மணிக்கொடி எழுத்தாளர்கள், எழுத்து, இலக்கிய வட்டம் rajamarthadan-213x300 இதழ்கள் குறித்தும் அறிமுகப்படுத்தினார். நாகர்கோவிலிலிருந்து சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருந்தது அவர் மூலந்தான் எனக்குத் தெரியவந்தது. எங்கள் பேராசிரியருடன் பழகிய குறுகிய காலத்துக்குள்ளாகவே இலக்கியம் குறித்த என் மதிப்பீடுகள் முற்றாக மாற்றமடைந்தன.

தரமான இலக்கியம் ஒரு சிறிய வட்டத்தினுள் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்ததை அறிந்துகொண்டேன். அந்தப் படைப்பாளிகளின் புத்தகங்களையும் அவர்கள் இயங்கிக்கொண்டிருந்த சிற்றிதழ்களையும் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கினேன். அப்போது வெளிவந்துகொண்டிருந்த தீபம், கணையாழி, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் ஒவ்வொன்றிலும் ஐந்து பிரதிகள் வாங்கி, நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். சிற்றிதழ்களுடனான எனது தொடர்பு இப்படித்தான் தொடங்கியது.

எம். ஏ. முடித்துவிட்டு ஓராண்டு காலம் ஊரிலிருந்த காலத்தில் சதங்கை ஆசிரியர் வனமாலிகையுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் சதங்கை இதழ் அறிமுகமானது, எம். எஸ். அறிமுகமானார். சுந்தர ராமசாமியுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் பிரமிள் அறிமுகம். பின் உமாபதி, ராஜகோபாலன் என்று இலக்கியப் படைப்பாளிகள், வாசகர்களுடனான தொடர்பு விரிவடைந்தது.

அதன்பின், கேரளப் பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக முனைவர் பட்ட ஆய்வாளனாக இருந்த காலகட்டத்தில் நகுலன், ஷண்முக சுப்பையா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், எம். எஸ். ராமசாமி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஆகஸ்ட் 1975இல், நாங்கள் நான்கு ஆய்வு மாணவர்கள் சேர்ந்து (அ. திருமாலிந்திரசிங், நான், அ. ராஜேந்திரன், ஆ. தசரதன்) திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் கோகயம் என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினோம். 'கி திக்ஷீமீமீ றிணீனீஜீலீறீமீt' ஆக அதை நடத்தினோம். நன்கொடை எதுவும் வாங்காமல், 'தேவைப்படுவோர் போதிய தபால்தலை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்' என்ற அறிவிப்புடன் வெளிவந்தது கோகயம்.

கோகயத்தில் நகுலன், ஷண்முக சுப்பையா, உமாபதி, காசியபன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், தேவதேவன், கலாப்ரியா, நித்திலன் போன்றோரின் கவிதை - கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பிரமிள் எழுதிய 'பட்டறை' விமர்சனக் கவிதை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976இல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது. என்றபோதிலும் ஆசிரியர் குழுவினருக்கிடையேயான நட்பிலும் எழுத்தாளர்களுடனான உறவிலும் எந்தவிதமான விரிசலும் ஏற்பட்டுவிடவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் நண்பர் உமாபதி தெறிகள் இரண்டாவது இதழுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நாட்டில் நெருக்கடி நிலை அமலிலிருந்த காலகட்டம் அது. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் பறிக்கப்பட்ட இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம். தெறிகள் முதல் இதழில் வெளியான புத்தக விளம்பரங்கள் காரணமாகவோ என்னவோ, போலீஸார் மூலமும் உமாபதி பணியாற்றிக்கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மூலமும் விசாரணை என்ற பெயரில் அவருக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. (அவசரகால நிலைக்குப் பின் 1980களில் கொல்லிப்பாவை மீதும் ரகசியப் போலீஸாரின் விசாரணை நடந்தது. 'தனிச்சுற்றுக்காக மட்டும்' என்று குறிப்பிடுவதைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவு அது, அந்த விசாரணை அனுபவம் சுவாரஸ்யமானதாகவே இருந்தது.) எனவே, இரண்டாம் இதழைக் கலி என்னும் பெயரில் ஓவியர் சக்தி கணபதியை ஆசிரியராகக் கொண்டு வெளியிட முயற்சி மேற்கொண்டார். அதுவும் சரிப்பட்டுவராமல் போகவே அட்டை உள்பட அச்சாகியிருந்த நாற்பது பக்கங்களையும் (சுந்தர ராமசாமியின் சிறுகதை, நகுலனின் நீண்ட கவிதை, கிருஷ்ணன் நம்பி கட்டுரை, ஆனந்த விகடன் கேட்டுக்கொண்டதன்பேரில் 'சாகித்திய அகாடமி பற்றி' என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி எழுதி, திருப்பியனுப்பப்பட்ட கடிதம்) என்னிடம் கொடுத்து, கோகயத்தில் இணைத்து வெளியிடச் சொன்னார். கோகயம் இதழை மீண்டும் வெளியிடும் உத்தேசம் இல்லாததால் கலியை நான் திருவனந்தபுரத்திலிருந்து வெளியிட முடிவுசெய்தேன். புதிதாக மேலும் சில விஷயங்களைச் சேர்க்கும் எண்ணத்துடன் பிரமிளுக்குக் கடிதம் எழுதினேன். அவர் 'கலைஞனும் கோட்பாடும்' என்ற கட்டுரையுடன், பத்திரிகையின் பெயரைக் கொல்லிப்பாவை என்று மாற்றி, அதற்காக டிசைனும் செய்து அனுப்பினார். அந்தக் கட்டுரையுடன் உமாபதி, நான் எழுதிய கவிதைகளையும் சேர்த்து அக்டோபர் 1976இல் கொல்லிப்பாவை முதல் இதழ் வெளியானது. இப்படியாக, சிற்றிதழ் இயக்கத்தில் நானும் ஒரு அங்கமானேன்.

n

இனி, கொல்லிப்பாவையின் முன்னோடி இதழ்களான எழுத்து தொடங்கி தெறிகள் வரையிலான சிற்றிதழ்களின் 'கனவு'களையும் அவை 'காரியங்க'ளான நடைமுறை யதார்த்தத்தையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சி. சு. செல்லப்பாவின் எழுத்து முதல் இதழ் ஜனவரி 1959இல், 'புதுமை இலக்கிய மாத ஏடு' என்னும் அறிவிப்புடன் வெளிவந்தது. விலை: ந. பை. 50. ". . . இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத்தரமான புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்" என்று முதல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார் சி. சு. செல்லப்பா. ஆனால், எழுத்து இதழ்களில் கவிதையில் மட்டுமே புதிய சோதனைகளைச் சிறப்பாக வெளிக்கொணர முடிந்தது.

மணிக்கொடி காலத்திலேயே கவிதையில் புதிய சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்ட போதிலும், புதுக்கவிதை ஒரு இயக்கமாக மறுமலர்ச்சியடைந்தது எழுத்து காலகட்டத்தில்தான். புதுக்கவிதையின் தோற்றகாலக் கவிஞர்களான ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமண்யம் போன்றவர்களுடன் தி. சோ. வேணுகோபாலன், நகுலன், சுந்தர ராமசாமி, சி. மணி, பிரமிள், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற முக்கியமான கவிஞர்கள் எழுத்துவின் மூலம் அறிமுகமானவர்களே. ந. பிச்சமூர்த்தியின் 'வழித்துணை', சி. மணியின் 'நரகம்', 'வரும் போகும்', 'பச்சையம்' போன்ற நீண்ட கவிதைகள் எழுத்துவில் வெளிவந்தன. இவர்களின் கவிதை மொழியும் பார்வையும் தனித்தன்மை கொண்டவையாக இருந்தன. தமிழில் புதுக்கவிதையை ஊக்குவிக்கும் வகையில் மேலை நாட்டுக் கவிதைகள், கவிதைச் சிந்தனைகளையும் எழுத்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததும் முக்கியமான விஷயமாகும்.

சிறுகதைகளைப் பொறுத்தவரை எழுத்துவின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லை. விமர்சனத்தைப் பொறுத்த அளவில், சி. சு. செல்லப்பாவின் விமர்சன அணுகுமுறையை 'அலசல் விமர்சனம்' என்று க. நா. சு. குறைகூறியபோதிலும் 'நவீனப் புலவர்' என்று சுந்தர ராமசாமி விமர்சித்தபோதிலும் நவீன இலக்கியத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய வகையில் எழுத்துவின் விமர்சனப் பங்களிப்பை இன்று நாம் நிராகரித்துவிட முடியாது.

எழுத்துவின் போக்கில் கருத்து வேறுபாடுகொண்ட க. நா. சு., சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன் போன்றோரின் பங்களிப்பு அதிகமும் இல்லாததால் காலப்போக்கில் அதன் தரத்தில் தொய்வேற்பட்டது. பொருளாதார நெருக்கடிகளை வைராக்கியத்துடன் தாக்குப்பிடித்து வந்தும், தொடர முடியாமல் போகவே, பத்தாவது ஆண்டிலிருந்து காலாண்டிதழாக உருமாறி, பன்னிரண்டாம் ஆண்டில் - 1970இல் - 119வது இதழுடன் எழுத்து தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. இருப்பினும் சி. சு. செல்லப்பா தனக்கு உடல் வலு இருக்கும்வரையிலும் இலக்கிய - களப்பணியைத் தொடர்ந்துகொண்டுதானிருந்தார்.

இன்றைய சிற்றிதழாளர்கள் தங்கள் முன்னோடியான சி. சு. செல்லப்பாவிடமிருந்து சில விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். புதிய சோதனைகள் செய்ய வேண்டும் என்கிற லட்சிய வேகம் இருந்தால் மட்டும் போதாது. அது நீடித்து நிலைப்பதற்கான உழைப்பையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். "2000 பிரதிகளுக்கு மேல் அச்சாகாது, நேரில் சந்தாதாரராகச் சேருபவருக்குத்தான் கிடைக்கும்" என்று எழுத்து முதல் இதழில் செல்லப்பா இரண்டு நிபந்தனைகள் விதித்தார். அன்றைய காலத்தில் 2000 பிரதிகள் என்பது இன்றைய நிலையில் 20,000 பிரதிகள் என்பதற்குச் சமமானது. மேலும், பின்னாளில் அவர் சந்தாதாரர்களைச் சேர்ப்பதற்குப் பல சலுகைகளை அறிவித்ததுடன், எழுத்துவை ஏஜெண்டுகள் மூலம் விற்பதற்கும் ஏற்பாடுகள் செய்தார். எழுத்துவின் முதல் இதழிலேயே முழுப்பக்க அளவில் சினிமா விளம்பரம் வெளிவந்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் நவீன இலக்கியத்தைக் கொண்டுசெல்ல அவர் முயன்றார். இதற்காகச் சில 'சமரசங்கள்' செய்துகொண்டதாக அவர்மீது ஒரு விமர்சனமும் உண்டு. ('புதுக்குரல்கள்' மதுரைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றபின் அத்தொகுப்பில் சுந்தர ராமசாமியின் 'மேஸ்திரிகள்' உட்பட ஓரிரு கவிதைகள் நீக்கப்பட்டதால் அதனைப் 'பல்கலைக்கழக மாணவர்களுக்கென்று சுத்தப்படுத்தப்பட்ட' தொகுப்பு என்று கிண்டல் செய்தனர்.) நவீன இலக்கியத்தைப் பரவலான வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு எத்தனமாகவே அதனைச் செய்தார். அவரது 'சமரசம்' நவீன இலக்கிய முயற்சிகளைப் பரவலாக்கும் நடைமுறை யதார்த்தம் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன் காரணமாகவே அவரால் எழுத்து இதழை ஒன்பதாண்டு காலம் மாத இதழாகத் தொடர்ந்து வெளியிடவும் முடிந்தது.

ஏற்கெனவே சூறாவளி, சந்திரோதயம் இதழ்களை நடத்திய க. நா. சுப்ரமண்யம் இலக்கிய வட்டம் என்னும் மாதம் இருமுறை இதழைத் தொடங்கினார். 22.11.1963இல் முதல் இதழ் வெளிவந்தது. "பிரபலஸ்தர்களின் பாராட்டுக்கள் தேவையில்லை; சாஹித்ய அகாடமிக்காரர்களின் பரிசுகளோ பதவிச் சிபாரிசுகளே தேவையில்லை . . . இலக்கியத்தரம் உயர விமர்சகர்களும் வாசகர்களும் போதும் . . . அப்படிப்பட்ட ஒரு ஜாதியைத் தமிழில் தோன்றச் செய்வதற்காகவே இலக்கிய வட்டம்' உருவெடுக்கிறது என்று உண்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தன் நிலைப்பாட்டை முதல் இதழ்த் தலையங்கத்தில் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் க. நா. சு.

இலக்கியத்தில் பயிற்சி வேண்டும், தேசிய இலக்கியச் சங்கம் உருவாக வேண்டும், இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் வேண்டும், படிப்பதும் ஒரு கலை, நல்ல இலக்கியாசிரியர்களைத் தேடும் வாசகர் கூட்டம் உருவாக வேண்டும், வாசகர்கள் இலக்கிய ரசனையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். . . என்றெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார் க. நா. சு.

"உலக இலக்கியப் பரப்பையும், அதில் சில பகுதிகளையுமாவது எடுத்துச் சொல்ல அவ்வப்போது இலக்கிய வட்டம் முயன்றுவரும்" (3.1.1964) என்றதற்கேற்ப, உலக இலக்கியாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும் மொழிபெயாப்புக் கவிதைகள், கதைகள், கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது இலக்கிய வட்டம். எழுத்துவுடன் ஒப்பிடும்போது கவிதையைப் பொறுத்த அளவில் இலக்கிய வட்டத்தின் பங்களிப்பு மிகவும் குறைவானதுதான் என்றாலும், நவீனத்துவக் கவிதைக் கோட்பாடுகளைத் தெளிவாக வெளியிட்டு வந்தார் க. நா. சு. பின்னாளில் உருவான நவீனத்துவக் கவிதைகளுக்குக் க. நா. சு.வின் கவிதைக் கோட்பாடுகளே உந்துதலாக இருந்தன என்றும் சொல்லலாம்.

விமர்சனத்தைப் பொறுத்தவரையில், க. நா. சு. தன் ரசனை சார்ந்த அபிப்ராயங்களை மட்டுமே வெளிப்படுத்திவந்தார். இலக்கிய ரசனையை வாசகர்களே பயிற்சியின் மூலம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதற்கேற்ப, தரமான படைப்புகள் - படைப்பாளிகளின் பட்டியலையே க. நா. சு. கூறிவந்தார். இந்தப் பட்டியல்கள் குறித்துக் கருத்து வேறுபாடு கொள்பவர்களும்கூட, ஆய்வுமுறை விமர்சனம் மூலம் சி. சு. செல்லப்பா முன்வைத்த படைப்பாளிகளின் பட்டியல்களை விடவும், ரசனை சார்ந்த க. நா. சு. வின் பட்டியல்கள் மேலானவை என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

'பண்டித, பேராசிரியர்களை தாக்குவ'தாகக் க. நா. சு.வை. சி. சு. செல்லப்பா குறை கூறியதுண்டு (எழுத்து, ஜூன் - ஜூலை 1964). கல்வித்துறை சார்ந்தவர்களின் இலக்கியச் செயல்பாடுகளைக் க. நா. சு. கடுமையாக விமர்சித்த போதிலும் நமது மரபின் ஆக்கபூர்வமான இலக்கியச் செல்வங்களை இன்றைய வாசகர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் காரணமாகவே, பழந்தமிழ்க் கவிதைகளில் தரம்பிரித்துத் தெரிந்தெடுத்து அறி முகப்படுத்திய டி. கே. சி.க்குச் சிறப்பு மலர் வெளியிட்டது இலக்கிய வட்டம்.

30.4.1965இல் 38வது இதழுடன் தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது இலக்கிய வட்டம் வெளிவந்த வரையிலும் அதன் 'கனவு'களுக்கும் 'காரியங்க'ளுக்குமிடையேயான இடைவெளி மிகவும் குறைவானதுதான் என்பதை இன்றைய பார்வையிலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

சென்னைக்கு வெளியே சேலத்திலிருந்து அக்டோபர் 1968இல் வெளியீட்டைத் தொடங்கியது நடை காலாண்டிதழ். ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என்றபோதிலும் அது சி. மணியின் பத்திரிகையாக வெளி வந்தது. வே. மாலி, செல்வம், ஓலூலூ என்னும் பெயர்களில் சி. மணி கவிதைகள் - கட்டுரைகள் எழுதினார். இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் அறிமுகப்படுத்தியது நடைதான். ஞானக்கூத்தன் புதுக்கவிதை எழுதத் தொடங்கியதும் நடையில்தான்.

"தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே நடையின் நோக்கம்" என்று முதல் இதழின் ஆசிரியர் குறிப்பு தெரிவித்தது. மொத்தம் எட்டு இதழ்களே வெளிவந்தன. சி. மணியின் 'யாப்பியல்' என்னும் நீண்ட கட்டுரை அன்றைய சூழலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

நா. கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகவும் மஹாகணபதியைப் பதிப்பாசிரியராகவும் கொண்டு, 'ஒரு வல்லின மாத இதழ்' என்னும் அறிவிப்புடன் அக்டோபர் 1970 முதல் வெளி வரத் தொடங்கியது கசடதபற. "இன்றைய படைப்புகளிலும் அவற்றைத் தாங்கிவருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களின் பொது மேடைதான் கசடதபற . . . . எதையும் செய்யுங்கள், ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்" என்று முதல் இதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவீன ஓவியர்களின் கோட்டோவியங்கள், லினோகட் ஓவியங்களையும் கசடதபற பிரசுரித்தது. இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம், வெ. சாமிநாதனின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. கவிதை வெளிப்பாட்டின் தீவிரம் கசடதபற இதழ்களில் மெல்ல மங்கத் தொடங்கியதை இப்போதைய பார்வையில் உணர முடிகிறது. தினமணி கதிர் - இந்திரா பார்த்தசாரதி - ஜெயகாந்தன் தொடர்பான விவாதங்கள் கசடதபறவின் பின்னணியில் இருந்தவர்களிடையே மனக்கசப்பையும் பிளவையும் ஏற்படுத்தின. அந்த விவாதம் நவம்பர் 1971 இதழில் இடையிலேயே நிறுத்தப்பட்டது. 32 இதழ்களுடன் கசடதபற நின்றுபோயிற்று. அன்றைய இலக்கியச் சூழலின் மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருந்த இளைஞர்களின் கலகக்குரல், உள்முரண்கள் காரணமாக எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்த முடியாமல் அடங்கிப்போனது.

ஜனவரி 1970இல் ஜெயகாந்தனை ஆசிரியராகவும் தேவ. சித்ரபாரதியை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு ஞானரதம் மாத இதழ் வெளிவரத் தொடங்கியது. ஜெயகாந்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரையிலும் 'முன்னோட்டம்', 'உரத்த சிந்தனை' (கேள்வி - பதில் பகுதி), கவிதைகள் தொடர்ந்து எழுதினார். அந்தக் காலகட்டத்தில் சில இதழ்களை ஞானக்கூத்தன், வல்லிக்கண்ணன், பரந்தாமன் ஆகியோர் தயாரித்தனர். ஒன்பது இதழ்களுக்குப் பின் ஒரு இடைவெளி. பிப்ரவரி 1972இல் பத்தாவது இதழிலிருந்து தேவ. சித்ர பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் இதழ் வெளிவரத் தொடங்கியது. கவிதைகளின் தேர்வில் கறாரான இலக்கியப் பார்வை இல்லை என்பதை இப்போது இதழ்களைப் புரட்டிப் பார்க்கும்போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவல் தொடராக வெளிவந்தது. ஜி. என். சிறுகதைகள், கவிதைகளும் ஞானரதத்தில் எழுதினார். ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தார். ஞானரதம் வெளியிட்ட க. நா. சு., சி. சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரது மணி விழா மலர்கள் முக்கியமானவை.

ஆறாண்டுகள் இடைவெளிக்குப்பின் சுந்தர ராமசாமி எழுதிய 'பல்லக்குத் தூக்கிகள்' சிறுகதை ஞானரதம் ஆகஸ்ட் 1973 இதழில் வெளியானது. எழுத்தாளர்களின் 'உரத்த சிந்தனை' பகுதி தொடர்ந்து வெளியானது. அக். 1973 இதழில் 'ரசமட்டம்' பகுதியில் சுந்தர ராமசாமியின் 'ஆந்தைகள்' கவிதை பற்றி ந. முத்துசாமி எழுதியது சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பாக நகுலன், சுந்தர ராமசாமி இருவரும் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி எழுதவேண்டியதாயிற்று. மே - ஜூலை 1974இல் 37 - 39வது இதழுடன் ஞானரதம் நின்றது. மீண்டும் 1983இன் பிற்பகுதியில் இருமாதம் ஒருமுறை இதழாக வெளியீட்டைத் தொடங்கியது. 1985வரையிலான இந்தக் கால கட்டத்தில் இதழின் தரம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. பின்னர் 1986இல் க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் அது இலக்கிய வட்டத்தின் சாயலையே கொண்டிருந்தது. க. நா. சுவின் வள்ளுவனும் தாமஸ§ம் நாவல் தொடராக வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் க. நா. சு., வண்ணநிலவன் இருவரின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தன. ஜனவரி 1987இல் மீண்டும் ஞானரதம் நிறுத்தப்பட்டது.

'மானுடம் பாடும் வானம்பாடிகளின் விலையிலாக் கவிமடல்' என்னும் அறிவிப்புடன் நவம்பர் 1971இல் கோவையிலிருந்து வெளிவந்தது வானம்பாடி கவிதை இதழ். வானம்பாடியின் உருவாக்கத்துக்குக் காரணமான ஞானி, ஜன. சுந்தரம், புவியரசு, சிற்பி, அக்கினிபுத்திரன், முல்லை ஆதவன், இளமுருகு, தேனரசன், சி. ஆர். ரவீந்திரன், ஜீவ ஒளி, மு. மேத்தா, கங்கைகொண்டான், சக்திக்கனல், நித்திலன் ஆகியோருடன் அபி, அப்துல்ரகுமான், இன்குலாப், கல்யாண்ஜி, கலாப்ரியா, பாலா, பிரமிள், பிரபஞ்சன், மீரா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் போன்றோரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். வானம்பாடிக் குழுவினரிடையே ஏற்பட்ட பிளவுகளினால் இடைவெளிவிட்டு வெளிவந்த இதழ், எண்பதுகளின் ஆரம்பத்தில் நின்றது.

வானம்பாடி இதழில் வெளியான பெரும்பாலான கவிதைகள் மேடை முழக்கங்களாகவும் அரசியல் கோஷங்களாகவும் துணுக்குகளாகவுமே அமைந்துள்ளன. அவற்றில் கவிதையைத் தேடுவது உமிக் குவியலில் அரிசி மணிகளைப் பொறுக்கும் வேலைதான்.

'புதுக்கவிதையின் வாசகர் வட்டம் விரிவாக்கம் பெற்றது . . . பாரதி மரபு புதுப்பிக்கப்பட்டது. கவிதைக்குள் இடதுசாரிக் கண்ணோட்டம் இடம் பெறக் காரணமானது . . . தமிழகமெங்கும் சிற்றிதழ்கள் வெளிவருவதற்கு ஆதாரமாக அமைந்தது. . .'என்று வானம்பாடியின் விளைவு களைக் குறிப்பிடுகிறார் சிற்பி ('தமிழில் சிறுபத்திரிகைகள்', பக். 21). வானம்பாடியின் வரவினால் புதுக்கவிதையின் வாசகர் வட்டம் விரிவானது உண்மைதான். அந்தப் பெருக்கம் கல்கியின் எழுத்துகளால் தமிழ் வாசகர் வட்டம் பெருகியதற்கு ஒப்பானது தான். நவீனக் கவிதையில் பாரதி மரபு புதுப்பிக்கப்பட்டதும் இடதுசாரிக் கண்ணோட்டம் இடம்பெற்றதும் உண்மைதான். ஆனால், அவை கவிதைகளாக வெளிப்படவில்லை என்பதும் உண்மை. வானம்பாடிகளின் 'வெளிச்சங்கள்' தொகுப்புக்குத் தெறிகள் இதழில் வெங்கட் சாமிநாதன் எழுதிய விமர்சனம், வானம் பாடிக் கவிதை இயக்கத்துக்கும் பொருந்தும்.

டிசம்பர் 82இல் வெளிவந்த வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் மற்றும் பிரமிள், லா. ச. ராமாமிருதம் பேட்டிகள் வெளியான இதழ்கள் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

வனமாலிகையை ஆசிரியராகக்கொண்டு நவம்பர் 1971 முதல் நாகர்கோவிலிலிருந்து வெளிவரத் தொடங்கியது சதங்கை மாத இதழ். ஆரம்ப காலங்களில் அது ஒரு ஜனரஞ்சக இதழ்போலவே வெளிவந்தது. "ஒரு சிறந்த இலக்கியப் பத்திரிகை நடத்தலாம். அல்லது ஒரு பொழுது போக்குப் பத்திரிகை நடத்தலாம். ஆனால் இரண்டையும் கலந்து செய்துவிட வேண்டும் என்பது எப்பொழுதும் வெற்றிபெற்றதில்லை" (ஜனவரி 1973) என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் சுந்தர ராமசாமி. மே 1973 இதழில், "நண்பர் சுந்தர ராமசாமி சதங்கையில் தொடர்ந்து எழுதுவதுடன் அவர்களது ஆலோசனைகளின்படி இதழ்கள் தொடர்ந்து வெளியாகும்" என்ற அறிவிப்புடன் சதங்கை ஒரு இலக்கிய இதழாக மாற்றம் பெற்றது. அப்போது நாகர்கோவிலில் தங்கியிருந்த பிரமிளும் சதங்கையில் எழுதத் தொடங்கினார். பல்வேறு இலக்கியப் பார்வைகள் கொண்ட படைப்பாளிகளுக்கும் சதங்கை களம் அமைத்துக் கொடுத்தது. தரமான படைப்புகள், கட்டுரைகளுடன் சாதாரணமான எழுத்துக்களும் வெளிவந்தன. வெளியீட்டில் இடைவெளிகள் இருந்த போதிலும் புத்தாயிரத்திலும் வெளியீட்டைத் தொடர்ந்து, வனமாலிகையின் மரணம் வரையிலும் நீடித்தது சதங்கை. இதழின் ஆரம்ப காலம் தொடங்கி இறுதிவரையிலும் எம். எஸ். ஸின் பங்களிப்பு இடையீடின்றித் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

'கி றீவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஷ்மீணீஜீஷீஸீ ஜிணீனீவீறீ விஷீஸீtலீறீஹ்' என்னும் அறிவிப்புடன் பரந்தாமனை ஆசிரியராகக் கொண்டு ஜூன் 1972 முதல் சேலத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது 'ஃ' (அஃக்). முதல் இதழில் கி. ராஜநாராயணனின் சிறுகதை, வெங்கட் சாமிநாதன் கட்டுரை, அம்பையின் 'பயங்கள்' நாடகம் இடம்பெற்றிருந்தன. கடைசிப் பக்கத்தில் 'எழுத்து' (ஜூன் 1959)வில் வெளியான க. நா. சு. வின் 'இலக்கியத்தில் சோதனை' கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்தது. எனவே அதனையே அஃக் இதழின் பிரகடனமாகக் கொள்ளலாம். உருவ - உள்ளடக்கத்தில் மேற் கொள்ளப்படும் சோதனை அம்சம்தான் இலக்கிய வளர்ச்சியைச் சாத்தியமாக்குகிறது என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். ஆனால், தொடர்ந்து வந்த இதழ்களில் கசடதபறவில் தொடங்கப்பட்ட இந்திரா பார்த்தசாரதி - தினமணி கதிர் - அசோகமித்திரன் தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்றன. 'இலக்கியத்தில் சோதனை' என்பது பின் தள்ளப்பட்டுவிட்டது. வழக்கமான சிற்றிதழ்கள்போலவே கதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகள் என்ற வகையிலேயே அஃக் இதழ்களின் உள்ளடக்கமும் அமைந்திருந்தது. ஆனால், அச்சமைப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

ஆறாண்டுகள் இடைவெளிக்குப் பின் சுந்தர ராமசாமி எழுதிய 'ஆந்தைகள்', 'சவால்', 'பின்திண்ணைக் காட்சி' ஆகிய கவிதைகள் அஃக் நவ - டிசம்பர் 1972 இதழில் வெளி வந்தன. பிரமிளின் 38 கவிதைகள்கொண்ட கண்ணாடியுள்ளிருந்து கவிதைத் தொகுப்பு ஜன - பிப் - மார்ச் 1973 அஃக் இதழாக வெளிவந்தது. வெங்கட் சாமிநாதன் எழுதிய முன்னுரையும் பிரமிள் எழுதிய பின்னுரையும் புதுக்கவிதை பற்றிய சிறப்பான கருத்தியல் பதிவுகளாகும்.

மே 1974இல் கோவில்பட்டியிலிருந்து வெளிவரத் தொடங்கிய நீலக்குயில், சர்ச்சைகளைப் பெரும்பாலும் தவிர்த்த ஓர் இலக்கியச் சிற்றிதழாக - மற்ற அம்சங்களில் வழக்கமான இதழாக அமைந்தது. அது வெளியிட்ட 'கடித இலக்கியச் சிறப்பிதழ்' சிற்றிதழ்ப் போக்கில் வித்தியாசமான முயற்சி. 24 இதழ்களுடன் அது தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

கசடதபற இதழ் வெளியீட்டில் ஓர் இடைவெளி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில், அக்டோபர் 1974இல் பிரக்ஞை மாத இதழ் வெளியீட்டைத் தொடங்கியது. ஆசிரியர் ஆர். ரவீந்திரன். "இந்தப் பத்திரிகை எழுத்துலகத்தில் ஒரு திருப்பத்தையோ அல்லது ஒரு செம்புரட்சியையோ ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை" என்று முதல் இதழில் அறிவித்திருந்தபோதிலும் பதிமூன்றாவது இதழில் (அக். 1975), "சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாற வேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்" என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது. இவ்வகையில் இதனை ஒரு முன்னோடிச் சிற்றிதழாகக் கொள்ளலாம். பிரக்ஞை மார்க்சிய நோக்குக்கொண்ட பத்திரிகையாக இருந்த போதிலும் "எழுதுபவர்களின் சித்தாந்தப் பார்வைகள் பிரசுரத்திற்கு தடையில்லை" (டிசம்பர் 74) என்ற தனது ஆரம்ப கால நிலைப்பாட்டை இறுதிவரையிலும் தொடர்ந்தது. பீனிக்ஸின் 'மார்க்ஸீயமும், பஜனைக் கவிஞர்களும்' (ஏப். 75), ஜெயராமனின் 'ரிசிஷி பணிக்கர் - ஒரு பார்வை' (ஜூன், ஜூலை 76) போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. ஆல்பர்ட் கேமுவின் 'நியாயவாதிகள்' நாடகம் தொடராக வெளியிடப்பட்டது. தரமான கவிதைகள், கதைகள் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தியது பிரக்ஞை. புத்தக மதிப்புரைகள் - குறிப்பாகக் கவிதைத் தொகுப்புகள் பற்றியவை - மற்ற சிற்றிதழ்களைக் காட்டிலும் காரமாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தன.

கசடதபற மார்ச் 1975 இதழில் சி. மணியின் 'வரும் போகும்' தொகுப்பை விமர்சித்து 'சி. மணியின் எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் ஞானக்கூத்தன் எழுதிய கட்டுரையைக் கடுமையாகத் தாக்கி ந. முத்துசாமி எழுதிய 'வேற்றுமை' கட்டுரை அக்., நவ., டிசம்பர் 1975 இதழ்களில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஞானக்கூத்தனின் 'ஆறும் ஏழும்', சா. கந்தசாமியின் 'போலி விமர்சனமும் போலி கவிதையும்' (ஜன. 76), பிரமிளின் 'கவிப்பொருளும் சப்தவாதமும் (பிப் - மார்ச் 76), சுந்தர ராமசாமியின் 'ஒன்றும் நாலும்' (ஏப். 76) கட்டுரைகள் வெளியாயின. ந. முத்துசாமி, ஞானக்கூத்தன், சா. கந்தசாமி கட்டுரைகளில் வெளிப்பட்ட தனிநபர் தாக்குதல்கள் பிரக்ஞை ஆசிரியரை வெகுவாகப் பாதித்திருந்ததை அதன் தலையங்கப் பகுதி மூலம் அறிந்துகொள்ளலாம்: "இவற்றில் வெளிப்படையாகத் தொனிக்கும் காழ்ப்புணர்ச்சிகளை விலக்கிவிட்டு முக்கிய விஷயத்தை அணுகிப் புரிந்துகொள்ளுமளவு தீவிரம் தன் வாசகர்களிடையே இருக்கும் என்பது பிரக்ஞையின் எதிர்பார்ப்பு" (ஜன. 76).

சர்ச்சையின் தொடர்ச்சியாக வெளிவந்த ஞானக்கூத்தனின் பதில் (ஒரு பகுதி மட்டும்) மே 76 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதே இதழில், கோகயம் நிறுத்தப்பட்டுவிட, இங்கு பிரசுரமாகும் கட்டுரைப் பகுதி என்னும் ஆசிரியர் குறிப்புடன் வெங்கட் சாமிநாதன் எழுதிய 'ஒரு தயாரிப்புக் கவிஞர் - பிற்சேர்க்கை: இன்னும் சில எதிரொலிகள்' என்னும் கட்டுரை பிரசுரமானது. அதற்குப் பதிலாக எஸ். கார்லோஸ் (தமிழவன்) எழுதிய 'இன்னொரு பார்வை' கட்டுரை ஆக., செப்., 76 இதழில் வெளியானது. (பின்னர் இந்த விவாதம் நிறுத்தப்பட்டுவிட அது கொல்லிப்பாவையில் தொடர்ந்தது.)

அதன் பின்னர் பிரக்ஞை வெளியீட்டில் அவ்வப்போது இடைவெளி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் சிற்றிதழ் வாசகர்கள் மீதான அதிருப்தியும் அதற்குக் காரணமெனலாம். "கருத்துலகில் தன் 'பிராண்ட்' சிந்தனையைத் தவிர வேறெதையும் பார்ப்பதில்லை என்று உங்களில் பெரும்பாலானோர் முடிவு கொண்டிருக்கும்வரை ஆக்கபூர்வமான பெரும் மாற்றங்கள் தமிழில் ஏற்படப் போவதேயில்லை" (ஜூலை 1977) என்னும் தலையங்கக் குறிப்பு இதனைத் தெளிவுபடுத்தும். நாற்பது இதழ்களுக்குப் பின்னர் பிரக்ஞை அரசியல், சமூகப் பிரச்சினைகளில் தீவிர கவனம் கொண்டது. சிறிது காலத்தில் தன் வெளியீட்டையும் நிறுத்திக்கொண்டது.

விருதுநகரிலிருந்து தெறிகள் என்ற சிறிய இதழை நடத்திவந்த கவிஞர் உமாபதி, பின்னர் நாகர்கோவிலிலிருந்து அதே பெயரில் அதிக பக்கங்களுடன் 1976இல் காலாண்டு இதழாக வெளியிட்டார். "தமிழில் சிறு பத்திரிகைகள் கணிசமான அளவிற்குத் தோன்றிவிட்டன, தெறிகள் ஈறாக. இவைகள் பீமீநீறீணீக்ஷீமீ செய்கிற அல்ல - தருகிற விஷயங்களை வைத்தே வளர்ச்சியின் தன்மை உருவாகும்" என்று அந்த இதழில் குறிப்பிட்டிருந்தார் உமாபதி. சம்பத் எழுதிய இடைவெளி நாவல், கலாப்ரியாவின் சுயம்வரம் குறுங்காவியம், வானம்பாடிகளின் வெளிச்சங்கள் கவிதைத் தொகுப்பு குறித்த வெங்கட் சாமிநாதனின் நீண்ட விமர்சனம் மற்றும் கவிதைகள் முதல் இதழில் இடம்பெற்றிருந்தன. இலக்கியத் தரமான ஒரு இதழாகச் சிறப்பாக அமைந்திருந்தது அந்த இதழ். அது அவசரகால நிலை அமலில் இருந்த காலமாதலால், நெருக்கடியான சூழ்நிலையில் உமாபதியால் தொடர்ந்து இதழை வெளியிட முடியவில்லை.

முன்னர் குறிப்பிட்டதுபோல, தெறிகள் இரண்டாவது இதழுக்குத் தயாரித்த விஷயங்களுடன் கொல்லிப்பாவை முதல் இதழ் அக். 1976இல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்தது. இரண்டாவது இதழ் ஜன - மார்ச் 77இல் வெளிவந்தது. 1978இல் மட்டுமே குறிப்பிட்டபடி நான்கு இதழ்கள் வெளிவந்தன. மூன்றாவது இதழிலிருந்து 12வது இதழ்வரை குமரி மாவட்டத்திலிருந்து இடைவெளிவிட்டு இதழ்கள் வெளிவந்தன. இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கொல்லிப்பாவை இதழ்களில் சுந்தர ராமசாமியின் 'உடல்' நாடகம் மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், வெங்கட் சாமிநாதனின் 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்' கட்டுரையும் அது தொடர்பான விவாதங்களும் குறிப்பிடத்தக்கவை. எம். வேதசகாயகுமார் இதழ்களிலிருந்து பிரதியெடுத்த புதுமைப்பித்தனின் 'சாமாவின் தவறு', 'நம்பிக்கை', 'சாளரம்', 'கண்ணன் குழல்' ஆகிய சிறுகதைகள் கொல்லிப்பாவையில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பின்னரே புதுமைப்பித்தன் தொகுப்புகளில் அவை இடம்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1985 முதல் ஆர். கே. ராஜகோபாலனை ஆசிரியராகக்கொண்டு மீண்டும் வெளிவரத் தொடங்கிய கொல்லிப்பாவை காலாண்டிதழ், அவர் குறிப்பிட்டபடி எட்டு இதழ்களுடன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. இந்தக் காலகட்டத்தில் க. நா. சு., நகுலன், கலாப்ரியா, சி. மணி ஆகியோரின் கவிதைகள் குறித்த விரிவான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. சுந்தர ராமசாமியின் கவிதைகள் அதிக அளவில் பிரசுரமாயின. கொல்லிப்பாவை மூலமே ஜெயமோகன் கவிஞராக அறிமுகமானார். மொழி பெயர்ப்புக் கவிதைகளும் நிறைய வெளிவந்தன.

"அவதூறுகளுக்கும் தனிநபர் தாக்குதல்களுக்கும் கொல்லிப்பாவை இடம் தராது" என்று பதின்மூன்றாவது இதழில் அறிவித்தபடியே, எட்டு இதழ்களையும் வெளியிட்டார் ராஜகோபாலன். இதன் காரணமாக, 'கொல்லிப்பாவை' சுவாரஸ்யமற்றதாகிவிட்டது என்ற விமர்சனமும் எழுந்ததுண்டு. ஆனால், அவரது உறுதியான நிலைப்பாடே அந்த எட்டு இதழ்களும் சிறப்பாக வெளிவரக் காரணமாக இருந்தது. சுந்தர ராமசாமியின் தொடர்ந்த பங்களிப்பும் ஒத்துழைப்பும் இதழுக்குப் பக்கபலமாக இருந்தன.

கொல்லிப்பாவை ஆரம்ப காலத்தில் வெளியிட்ட, "சில கட்டுரைகளில் விவாத எல்லையை மீறிய தனிநபர் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டும் விமர்சனமும் கொல்லிப்பாவை வெளிவந்த காலகட்டத்திலும் அதன் பின்னரும் எழுந்ததுண்டு. அந்தக் குற்றச்சாட்டிலும் விமர்சனத்திலும் நியாயம் இல்லாமலில்லை. என்றாலும் அத்தகைய கட்டுரைகளின் பிரசுரம் அன்றைய காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு என்றும் சொல்லலாம். கொல்லிப்பாவையின் சமகாலத்தில் வெளிவந்த பிரக்ஞை, வைகை, யாத்ரா போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் - விமர்சனங்களுக்கு எதிர்வினையாகவே அவற்றில் பெரும்பாலானவையும் பிரசுரிக்கப்பட்டன" என்று 'கொல்லிப்பாவை இதழ்த் தொகுப்'பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன். இன்று யோசித்துப் பார்க்கும் வேளையில் அது மட்டும் காரணமல்ல என்றே தோன்றுகிறது. (விமர்சன எல்லைகளை மீறியதாகக் கூறப்பட்ட அந்தக் கட்டுரைகளில் வெளிப்பட்ட தனித்துவமும் நுட்பமும் கூடிய விமர்சன வீச்சுகள் இன்றைய பெரும்பாலான விமர்சனக் கட்டுரைகளில் காணக்கிடைக்காதவை.)

எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்களை நடத்திய சி. சு. செல்லப்பாவும் க. நா. சுவும் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் என்பதுடன் அயராத உழைப்பும் மனவுறுதியும் கொண்டவர்களாக இருந்தனர். இலக்கியமே அவர்களின் ஆத்மார்த்த லட்சியமாக - உலகமாக இருந்தது. அவற்றில் எழுதியவர்களில் பெரும்பாலானவர்களும் அவர்களுக்கு அடுத்த தலை முறையைச் சார்ந்த படைப்பாளிகள். ஆனால், கசடதபற, பிரக்ஞை, கொல்லிப்பாவை இதழ்களின் ஆசிரியர்கள் நிலைமை அத்தகையதல்ல. இவர்களைவிடவும், இவர்கள் நடத்திய இதழ்களில் எழுதிய படைப்பாளிகள் இலக்கிய ஆளுமைமிக்கவர்களாக இருந்ததால், அவர்களின் சர்ச்சைக்குரிய விமர்சனக் கட்டுரைகளை நிராகரிக்கும் மனத்திடம் இல்லாதவர்களாக இருந்தனர் (விதிவிலக்காக ராஜகோபாலனைச் சொல்லலாம்) என்பதும் அத்தகைய கட்டுரைகள் வெளிவரக் காரணமாக இருந்தது. எனவேதான் சி. சு. செல்லப்பா, க. நா. சு. இருவரின் கனவுகளும் நடைமுறையில் காரியங்களாக உருப்பெற்ற அளவில் பின்வந்த சிற்றிதழாளர்களின் கனவுகள் காரியங்களாக முழுமை பெறவில்லை. என்றாலும், இன்று பார்க்கும்போது அந்தக் குறைகளையும் மீறிய மேலான படைப்புகள் அவற்றில் வெளிவந்துள்ளன என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

நன்றி: காலச்சுவடு இதழ் 100, ஏப்ரல் 2008

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்