Nov 30, 2013

காலத்தின் விளிம்பில் - பாவண்ணன்

“பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெpaavannan-3ல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்தி வந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான  இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப் பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

பதினோராவது வாரத்துக்கான கட்டுரையை எழுதி முடித்ததும் அனுப்புவதற்காக மின் அஞ்சல் பக்கத்தைத் திருப்பியபோது எனக்கொரு மடல் வந்திருக்கும் செய்தியை அறிந்தேன். முதலில் திரையில் புலப்பட்ட ஒற்றைவரி முகவரியை வைத்து எழுதியவர் யாராக இருக்கும் என்று ஊகிக்க முயற்சி செய்தேன். என் மனத்தில் வழக்கமாக எனக்கு மடலெழுதும் நண்பர்களின் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் பளிச்சிட்டு மறைந்தன. கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவித ஆர்வம் உந்த அந்த மடலைத் திறந்தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தது அக்கடிதம். பல ஆண்டுகளாக இலக்கிய அறிமுகம் உள்ளவராகத் தெரிந்தார். தொடராக வந்திருந்த பத்துக் கட்டுரைகளைப்பற்றியும் சிற்சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அம்மடல் பொதுவாக என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது. நன்றியைத் தெரிவித்து அவருக்குப் பதில் அனுப்பினேன்.

அவர் பெயர் சந்திரன். எங்கள் நட்பு இப்படித்தான் தொடங்கியது. பிறகு கட்டுரை வெளியானதும் ஒவ்வொரு வாரமும் அவரிடமிருந்து அஞ்சல் தவறாமல் வரத் தொடங்கியது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதாகத் தெரிவித்திருந்தார் அவர். ஒவ்வொரு அஞ்சலிலும் தினசரி வாழ்வில் தாம் கண்ட விசேஷமான செய்தியொன்றை எழுதி அனுப்புவார். இருசக்கர வாகனத்தில் சென்று அவசரத்தில் தடுமாறி மரத்தில் மோதிக் கால் உடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கிதார் வாசிக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றிய குறிப்பை ஒரு மடலில் எழுதியிருந்தார். ஒரு பூங்காவில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து தன் சேமிப்புப் பையிலிருந்து ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆனந்தமாகத் தின்ற பிச்சைக்காரன் ஒருவனைப் பற்றி ஒருமுறை எழுதியிருந்தார். தன் வீட்டைப் பற்றியும் சுற்றுப் புறத்தைப்பற்றியும் சொற்சித்திரங்களாகவே தீட்டியிருந்தார். வீட்டுக்கு அருகிலிருந்த விலங்குக்காட்சிச் சாலையைப் பற்றி அவர் எழுதிய தகவல்கள் ஏராளமானவை. ஒவ்வொரு விலங்கின் கூண்டுக்கும் அவர் பெயர் சூட்டியிருந்த விதம் விசித்திரமானது. சிங்கத்தின் கூண்டுக்கு ”இடியோசையின் இல்லம்”. சிறுத்தையின் கூண்டுக்கு “வேகத்தைத் துறந்த விவேகியின் வீடு”. பஞ்சவர்ணக்கிளிகளின் கூண்டுகளுக்கு “பறவைகளின் இசைக்கோயில்”.

“பெங்களூர் நகரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் ஹுடி என்னும் கிராமத்தில் “ஆஷ்ரயா” என்கிற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தைத் தெரியுமா?” என்று ஒரு முறை கேட்டிருந்தார் சந்திரன். அச்சமயத்தில் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிற உள்ளூர் நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினேன். பலருக்கு அதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவர் மட்டும் அது ஒரு முதியோர் இல்லமென்றும் சேவை மனப்பான்மை கொண்ட சிலரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார். திருமணமாகாத தன் சகோதரிகள் இருவரும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்கிற முதியோர்களுடன் பேசியும் பழகியும் அவர்கள் தேவையை நிறைவேற்றியும் ஊக்கமூட்டியும் வருவதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் சொன்னார். அந்தத் தகவலை அன்று இரவே நான் சந்திரனுக்கு அனுப்பினேன். அதற்கப்புறம் இரண்டு மாதங்கள் அதைப்பற்றிய பேச்சே இல்லை.  ஒருநாள் திடீரென்று தன் பெரியம்மா அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன் சார்பில் அவரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் ஓய்வு நாளுக்காகக் காத்திருந்த இடைவெளியில் அவரிடமிருந்து விரிவான மடலொன்று வந்தது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் தனக்கு ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்தது என்று தன் மடலைத் தொடங்கியிருந்தார் சந்திரன். தாயார் மட்டுமே அவருக்கு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் தனியாகவே வாழ்ந்தார் சந்திரன். பிறகு இந்தியாவுக்குத் திரும்பி தாயாரையும் தன்னோடு அழைத்துச் சென்றார். தாயாருக்குப் பிரியமான சகோதரி ஊரில் இருந்தார். ஏழைக் குடும்பம். ஆறு பிள்ளைகள். முடிந்தவரை பெரியம்மாவின் குடும்பத்தையும் தாங்கியே வந்தார் சந்திரன். ஆப்பிரிக்கப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். பேரப்பிள்ளைகளோடு ஆனந்தமாக ஆடிப் பொழுது போக்கிய அம்மா வெகுகாலம் உயிருடன் இல்லை. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்துபோனார். இடைக்காலத்தில் இந்தியாவில் பெரியம்மாவின் நிலையும் மோசமானது. ஆறு பிள்ளைகளும் ஆறு விதமாக வளர்ந்தார்கள். சந்திரன் அனுப்பிய பணத்தையெல்லாம் தாய்க்குத் தெரிந்து பாதியும் தெரியாமல் பாதியுமாக சாப்பிட்டுத் தீர்த்தார்கள். மூத்தவன் சதாகாலமும் குடிபோதையில் மிதந்தான். இரண்டாவது மகன் சம்பாதித்த பணத்தையெல்லாம் விபச்சாரத்தில் அழித்தான். மூன்றாவது மகனும் நான்காவது மகனும் உள்ளூரிலேயே திருட்டு வழக்கொன்றில் அகப்பட்டுச் சிறையிலிருந்து தப்பித்து மும்பைப் பக்கம் ஓடிப்போனார்கள். பள்ளியிறுதி முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்து ஊரையே மறந்து போனான் ஐந்தாவது மகன். ஆறாவது பையன் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தான். அலுவலகத்துக்கு எதிரே இருந்த ஆயத்த ஆடை அங்காடியில் வேலைபார்த்த ஒரு பெண்ணோடு பழகித் திருமணம் செய்துகொண்டான். மனைவியை உள்ளே அழைத்துக்கொண்டதும் பெரியம்மா வாசலுக்கு மாற்றப்பட்டார். மனமுடைந்த பெரியம்மா தன் துக்கத்தையெல்லாம் யாரோ ஒருவர் மூலம் கடிதமாக எழுதிச் சந்திரனுக்கு அனுப்பினார். பெரியம்மாவின் துயரம் தன் அம்மாவின் துயரமாகத் தெரிந்தது சந்திரனுக்கு - இணையத் தளங்களில் தேடித்தேடி பெங்களூருக்கு அருகே ஹுடியில் தங்கும் ஆஷ்ரயா இல்லத்தின் முகவரியைக் கண்டறிந்து அங்கே சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை வேறொரு நண்பர் மூலம் செய்துமுடித்தார். ஒருவருடன் ஓடிவிட்டது. மாதத் தவணைகளை அங்கிருந்தபடியே நேரிடையாகச் செலுத்திவந்தார். சமீபகாலத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கனவுகள் அவரைப் பாடாய்ப்படுத்திவந்தன. விலங்குக்காட்சி சாலையில் நின்றிருந்தபோது அக்கூண்டுகளையும் முதியோர் இல்லங்களையும் சம்பந்தப்படுத்தி யோசித்த கணத்திலிருந்து அக்கனவு விரட்டத் தொடங்கிவிட்டது. பெரியம்மா பலவித விலங்குகளின் உருவத்துடன் ஒவ்வொரு  முறையும் கனவில் வந்து கம்பிகளைப் பிடித்தபடி ஏக்கத்துடன் முறைத்துப் பார்ப்பதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நினைத்தவுடன் விடுப்பெடுப்பது சாத்தியமாக இல்லை. அவர் சார்பில் இல்லத்துக்குச் சென்று அந்தப் பெரியம்மாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வரவேண்டும். இதுதான் அக்கடிதத்தின் சாரம்.

அடுத்த ஞாயிறு அன்று பேருந்துத்தடம் விசாரித்து அந்த இல்லத்துக்குக் கிளம்பினேன். மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருந்தது. இறுதியாக இறங்கிய நிறுத்தத்தின் அருகே ஓர் ஓலைக்குடிசை டீக்கடை மட்டும் காணப்பட்டது. ஒரே ஒரு சிகரெட் மட்டும் வாங்கிப் பற்றவைத்தபடி ஆசிரமத்தைப்பற்றி விசாரித்தேன். டீக்கடைக்காரப்பெண் குடிசைக்கு வெளியே வந்து தொலைவில் தோப்பைப் போலக் காணப்பட்ட ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி “அதுதான் இல்லம்” என்றாள்.

“அதுவரிக்கும் பஸ் போகாதா?”

“இல்லத்துக்கு இதுதான் ஸ்டாப். எல்லாரும் இங்க எறங்கித்தான் நடந்துபோவாங்க. நீங்க வெளியூரா?”

நான் வேடிக்கைக்காக “ஆமாம்” என்றேன்.

“வயசானவங்கள இங்க கொண்டாந்து உட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா போயிடறாங்க சார். கூழோ கஞ்சியோ ஒன்னா சேர்ந்து லட்சணமா குடிக்கறத உட்டுட்டு பணம்பணம்னு எதுக்குத்தான் சார் மக்கள் அலையறாங்களோ? காலம் ரொம்ப மாறிப்போச்சி சார்”.

”நல்லா கவனிச்சிக்கிடறாங்களா இங்க?”

“கவனிப்புக்கெல்லாம் எந்தக் கொறையுமில்ல சார். நூறுபேரு கவனிச்சிக்கிட்டாலும் பக்கத்துல பெத்த புள்ள இருந்து பாக்கற மாதிரி ஆவுமா, சொல்லுங்க.”

“அடிக்கடி நீங்க போவீங்களா?”

“காலையில அங்க பால்பாக்கெட் வாங்கிப்போயி குடுக்கறதெல்லாம் எங்க ஊட்டுக்காருதான். ஒங்க ஜனங்க யாராவது இருக்காங்களா இங்க? நான் வேற எகணமொகண இல்லாம ஏதேதோ பேசிட்டிருக்கேன்”.

“எங்க ஜனங்க யாருமில்ல. எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தருக்கு வேண்டியவங்க இருக்காங்க”.

புன்னகையுடன் சிகரெட்டை அணைத்துவிட்டு அவளிடம் விடைபெற்று நடக்கத் தொடங்கினேன். அவளுடைய தமிழ் திருவண்ணாமலைப் பக்கத்து மொழியைப் போல இருந்தது. பெங்களூரின் பல புறநகர்களில் இப்படிப்பட்ட பல குரல்களைக் கேட்டிருக்கிறேன். நமக்குப் பழக்கமான குரல் ஏதாவது காதில்விழாதா என்று நினைத்தபடி நடக்கும்போதெல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஒரு குரல் ஒலித்து அரைக்கணம் நிறுத்திவிடும்.

மஞ்சளாகப் பூப்பூத்த சின்னச்சின்ன முட்செடிகள் இருபுறமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்திருந்தன. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத குருவிகள் எல்லாம் கிளைகளிலும் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் சில பிள்ளைகள் கிரிக்கெட் ஆடியபடி இருந்தார்கள். அந்தப் பாதை முடியுமிடத்தில் “ஆஷ்ரயா” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. அதையொட்டி உடனடியாக சுற்றுச்சுவர் தொடங்கியது. சுவரின் மேல்விளிம்பு தெரியாத வகையில் சிவப்புக் காகிதப்பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. எல்லா இடங்களிலும் அவற்றின் கிளைகள் படர்ந்திருந்தன. வாசலில் இருந்த காவலரிடம் விவரம் சொல்லி உள்ளே நுழைந்தேன். பெரிய பூந்தோட்டத்தில் நுழைந்ததைப் போல இருந்தது. கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் வகைவகையான நிறங்களில் பூக்கள் பூத்திருந்தன. இரு சேவகர்கள் மரங்களின் கீழே உதிர்ந்திருக்கும் இலைகளையெல்லாம் கூட்டிச் சேகரித்த்படி இருந்தார்கள். பூந்தோட்டத்தையொட்டிப் பச்சைக் கம்பளத்தைப் போல பளபளக்கும் பெரிய புல்வெளி, பெரிய நிழற்குடையின் கீழே வட்டமாக வடிவமைக்கப்பட்ட சிமெண்ட் பெஞ்சுகள். அழகான சுற்றுச்சுவர். சிலைகளுடன் எளியமுறையில் அமர்ந்திருந்த கோவில். தேவாலயம். தொழுகைக்கூடம். கையில் கோலேந்தி நடக்கும் மூதாட்டி ஒருத்தியையும் முதியவர் ஒருவரையும் கரம்பற்றி நடத்திச் செல்லும் ஒரு சின்னஞ்சிறுவனைப் போன்ற சிலைகள் பீடத்தில் வீற்றிருந்தன. அதைச்சுற்றியும் அழகான பூச்செடிகள் பிறகு வட்டமான பளிங்குத்தொட்டி. அதற்குள் பலவித உயரங்களில் பொருத்தப்பட்ட நீரூற்றுகளிலிருந்து நீர் பீய்ச்சியடித்தபடி இருந்தது. எதிரில் ஒரு சிறிய கண்ணாடிக்கூடம். உள்ளே நான்கைந்து மேசைகள். கூடத்தின்மீது பலவிதமான கொடிகள் படர்ந்து பச்சைப்பசேலென காணப்பட்டது. பின்னால் விரிந்த வெளியில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுசிறு இல்லங்கள். எல்லாமே ஓட்டு வீடுகளுகு உரிய அமைப்பில் கட்டப்பட்டவை. மறுபுறம் மருத்துவமனை, வேறொரு புறத்தில் உடல் எரிமையம். அதன் புகைப்போக்கி மேகத்தைத் தொடுவதைப் போல மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே வாகன நிறுத்தங்கள், பக்கவாட்டில் நடப்பதற்குத் தோதான கிளைப்பாதைகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தேன். தாமதமாகத்தான் கட்டிட அமைப்புகளைக் கவனித்தேன். எல்லாமே தரையோடு ஒட்டியவை. படிக்கட்டுகளோ, மாடிப்பகுதியோ எங்கேயும் காணப்படவில்லை. முதுமையின் சக்தியைக் கருத்தில்கொண்டு அவை வடிவமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும் அந்த இடத்தின் தனிமை விசித்திரமான ஒரு உணர்ச்சியை என் மனத்தில் பரப்பியது. ஆழ்மனத்தில் என்னை அறியாமலேயே ஒருவித அச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

நீரூற்றுக்கு இடதுபுறமாக இருந்த விசாரணை மையத்துக்குள் நுழைந்தேன். அந்த அறையின் உள்சுவர் முழுக்க அழகான புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தன. தயக்கத்துடன் பார்வையை அங்குமிங்கும் படரவைத்தபடி திரும்பியபோதுஒரு மேசையின் பக்கம் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் புன்னகையைப் பார்க்க நேர்ந்தது. ஒருகணம் அப்புன்னகையை ஒரு சிற்பத்தின் புன்னகையாக நினைத்துப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு மெல்ல அவளை நெருங்கி என்னிடம் இருந்த குறிப்புகளைக் கொடுத்தேன்.

“தையல்நாயகி, எஸ் ஸெவன்”

என் குறிப்பை வாய்விட்டுப் படித்தபடி அவள் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். குடில்கள் தொடங்கும் பகுதிவரைக்கும் கூடவே வந்து நான் செல்ல வேண்டிய திசையையும் திரும்ப வேண்டிய இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றாள். அவள் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன் நான். எல்லா இல்லங்களும் ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இல்லத்துக்கு முன்னால் மொசைக் கற்கள் பதிக்கப்பெற்ற சிறு முற்றம். ஒரு சிறு நிழற்குடை. அதன்கீழ் ஒரு சாய்வு நாற்காலி. அதைச்சுற்றிச் சின்னத் தோட்டம். தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்களின் மஞ்சள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

தற்செயலாகத்தான் ஒரு இல்லத்தின் ஜன்னல் பக்கமாக என் பார்வை சென்றது. இரண்டு கண்கள் என்மீது பதிந்திருந்தன. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவை என்னைத்தான் பார்க்கின்றனவா என்கிற சந்தேகத்தில் மீண்டும் அத்திசையில் பார்த்தேன். வைத்த விழி வாங்காமல் அப்பார்வை என் மீதே நிலைகுத்தியிருந்தது. தோல் சுருங்கிய அம்முகத்தையும் எதையோ யாசிக்கும் அக்கண்களையும் நீண்ட கணங்களுக்கு என்னால் பார்க்க முடியவில்லை. உடனடியாகத் திரும்பி மற்ற இல்லங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். உண்மையிலேயே என் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஜன்னலில் பக்கத்திலும் இருகண்கள். நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து உயரும் பார்வை. பாதையைப் பார்த்தபடி  வேகமாக நடக்கத் தொடங்கினேன். யாரோ என்னை அழைப்பதைப் போலிருந்தது. தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. அடையாளம் காட்டிய பெண்ணைக்கூட இறக்கி வைத்துவிட்டுப் போன பெரிய பெரிய எந்திரங்களைப் போல நிமிர்ந்துகூட பார்க்கமுடியாத அளவு நெஞ்சில் அச்சம் துளிர்த்ததை ஆச்சரியமாக உணர்ந்தேன். மறுகணமே என் பகுத்தறிவு மூளை விழித்து அந்த அச்சத்தை விரட்டியது. அந்த இடத்தின் விசித்திரம் ஒரு சின்னச் சத்தம்கூட காதில் விழவில்லை என்பதுதான். ஒரு தும்மல் சத்தம்கூட கேட்கவில்லை.

இல்லத்தின் கதவை நெருங்கி அழைப்புமணியை அழுத்தினேன். என் புலன்கள் இல்லத்துக்குள் ஏற்படக்கூடிய துணிகள் உரசும் ஒலியையோ செருப்புகள் அழுந்தும் சத்தத்தையோஒ ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தன. சில கணங்கள் வரை எதுவும் கேட்கவில்லை. மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டெனத் திறந்தது. வெளிப்பட்ட அந்த உருவத்தின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உருக்குலைந்த சதைக் கோளத்துக்குக் கையும் காலும் முளைத்ததைப் போலிருந்தது அத்தோற்றம். என் இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

”தையல்நாயகிங்கறது நீங்கதானேம்மா?”

கேட்க நினைத்த கேள்வி நெஞ்சிலிருந்து எழாமல் வறட்சி அடைந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஈரத்தைப் படர வைத்தபிறகுதான் சகஜமாகக் கேட்க முடிந்தது. என் கேள்வியையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கண்கள் மட்டும் அசைந்தன. என்னை ஆராய்வதைப் போல உற்றுப் பார்த்தன. நான் மீண்டும் “தையல்நாயகிங்கறது நீங்கதானே?” என்று கேட்டேன். அவர் மேலும் நெருங்கிவந்து “ம்?” என்று என்பக்கம் செவியைக் கொடுத்தார். என் கேள்வியை மறுபடியும் நான் கேட்கவேண்டியதாக இருந்தது.

“என் சின்னப்புள்ளைதான் இங்க கொண்டாந்து உட்டுட்டுப் போனான். அப்புறமா வரவே இல்ல”

தொடர்பில்லாமல் பேசியபடி அவர் உள்ளே திரும்பினார். அவரைத் தொடர எனக்கு அச்சமாக இருந்தது. அதைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.

இல்லம் மிகவும் தூய்மையாக இருந்தது. டெட்டால்  மணம் கமழ்ந்தது. சுவரில் இயற்கைக் காட்சிகளின் ஓவியம் ஒருபுறமும் குழலூதும் கிருஷ்ணனின் படம் மறுபுறமும் ஒட்டப்பட்டிருந்தன. அப்பால் கம்பியிட்ட ஜன்னல். வெளிப்புறக் காட்சிகளும் மேகங்களும் அசையும்  மரக்கிளைகளும் படம்படமாகத் தெரிந்தன. மறுபுறம் குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. ஜன்னலோரமாகவே கட்டில். மருந்து மேசை. மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. என் உடல் பதறுவதை உணர்ந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிவயிற்றில் குளிர்ச்சி பரவி உறைவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே நின்றேன். தோல் சுருங்கிய முகம். ஒடுங்கிய கன்னக் குழிகள். வெள்ளையாகப் புரண்ட நீண்ட கூந்தல் அள்ளிக் கொண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அக்கண்கள் முதலில் ஊட்டிய அச்சம் கரைந்தது. குழப்பத்தையும் கலவரத்தையும் அவை வெளிப்படுத்துவதை உணர்ந்தேன். முதுமையின் சரிவும் தளர்ச்சியும் படிந்த உடல். காதுகளின் விளிம்பிலும் முன்நெற்றியிலும் வெண்முடி காற்றில் புரண்டு அலைபாய்ந்தஹ்டு. சட்டென என் பக்கமாக விரலை நீட்டி “நீங்க யாரு” என்று கேட்டார்.

”உங்க தங்கச்சி பையன் சந்திரனுக்கு சிநேகிதன் நான். சந்திரன் சந்திரன் தெரியுமில்ல..?”

சற்று சத்தமாகவே நான் சொன்னேன். ஆனால் என் ஒலிகள் எதுவும் கேட்காத உலகில் அவர் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. கட்டிலில் உட்கார்ந்தபடி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். மேலுதடும் கீழுதடும் உட்குழிந்து காணப்பட்டன. கோடுகோடாக எழுந்த சுருக்கங்களின் நீட்சி உதடுகள் வரை தாக்கியிருந்தது.

“ஆறு ஆம்பளை புள்ளைங்க பெத்து என்ன பிரயோஜனம் சொல்லு. ஊரு உலகத்துல புள்ளைங்க தலையெடுத்து பெத்தவங்கள காப்பாத்தும்ன்னு பேரு. நான் பெத்ததுங்க எல்லாமே அதுக்கு நேர்மாறா போச்சிங்க. ஒவ்வொருத்தனா போவும்போது கடைசி பையன் பாத்துக்குவான்னு இருந்தேன். அவனும் இங்க கொண்டாந்து தள்ளிட்டு போயிட்டான். என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”

”உங்க தங்கச்சி பையன் சந்திரன் சிநேகிதன்தான் நானு. அவர்தான் உங்கள பாத்துட்டு வரச்சொல்லி அனுப்பனாரு”

அவர் பதில் சொல்லவில்லை. என் சொற்கள் அவர் மூளையைத் தொடவே இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியே தெரியும் பனைமரங்களின் அசைவையே வெகுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர் மௌனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“அந்தக் காலத்துல எங்களுக்கு பெரிய பலசரக்குக்கட இருந்திச்சி. வில்வண்டி வச்சிருந்தாரு அவரு. எங்க போனாலும் நாங்க அதுலதான் போவோம்.”

அவராகவே ஒரு கதையைத் திடீரென சொல்லத் தொடங்கினார். அவரைப் பெண்பார்க்க வந்தது, திருமணம் நடந்தது, செழிப்பான முறையில் நடந்த வியாபாரம், வரிசையாகப் பிறந்த பிள்ளைகள், சந்தையில் யார் பிடியையோ விலக்கிக் கொண்டு ஓடோடிவந்த எருதுகளின் முரட்டுத்தனமான தாக்குதலால் நேர்ந்த மரணம் என அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனார். பிறகு ஒரு கணம் நிறுத்தி “நீங்க யாரு?” என்றார். நான் நிதானமாக மறுபடியும் என்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னேன். அவர் கண்கள் என்மீது படிந்திருந்தனவே தவிர என் சொற்களைக் கேட்டுக்கொண்ட சுவடுகளே அந்த முகத்தில் தெரியவில்லை.

மருந்துமேசை மீது ஒரு புத்தகம் கிடந்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள அதை எடுத்துப் புரட்டினேன். அதுவரை நான் பார்த்திராத புத்தகம். வெறும் படங்கள். எல்லாமே தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள். ஒருபுறம் குன்றும் மரங்களும் ஆறும் சூழ நிற்கிற கோயில்களின் கம்பீரத் தோற்றம். மறுபுறம் கருவறை நாயகரின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூடுதலாக சிற்சில பக்கங்களில் சில தூண்சிற்பங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

“ஒங்கள நல்லா கவனிச்சிக்கறாங்களா இங்க? சந்திரனுக்கு ஏதாவது சொல்லணுமா?”

அவர் எவ்விதமான பதிலும் சொல்லவில்லை. என் மனம் அதிர்ச்சியில் உறையத் தொடங்கியது. ஒரு சிற்பத்தின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போல சங்கட உணர்வு எழுந்தது. நான் அவர் புருவங்களைக் கவனித்தேன். வெளுத்து வளைந்திருந்தன அவை. கண்கள் மட்டும் இமைத்தபடி இருந்தன.

சட்டென அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

”அவருக்கு நான்னா ரொம்ப உசிரு. எங்க போய் வீட்டுக்குத் திரும்பிவந்தாலும் கையில பூ இல்லாம வரமாட்டாரு. சமையக்கட்டுக்கு வந்து அவரு கையாலியே தலையில வச்சிட்டுப் போனாத்தான் அவருக்கு நிம்மதி. ஒருநாளு அவர் எனக்கு பூ வச்சிவிடறத என் மாமியார்க்காரி பாத்துட்டா. சம்சாரி இருக்கற எடமா, இல அவிசாரி இருக்கற எடமா இதுன்னு ஒரே சத்தம். எவளுக்காவது இங்க கண்ணியமா இருக்கத் தெரியுதா, தாசி மாதிரி கொண்டை போட்டு பூ வச்சிட்டு திரியறாளுங்கன்னு பேசிட்டே இருந்தா. அவரு உடனே பின்பக்கமா போயிட்டாரு. நா சத்தம் காட்டாம அடுப்பு வேலையை கவனிச்சிக்கிட்டிருந்தேன். அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா. என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு. எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.

அவர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துத் தீயிலிட்ட பூ இன்னும் தன் கண் முன்னால் எரிந்து வதங்குவதைப் போல தேம்பித் தேம்பி அழுதார். உதடுகள் கோணிக்கொள்ள அவர் அழுத கோலத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. சங்கடமாக இருந்தது. அழுகையின் உச்சத்தில் அவர் சொன்ன சொற்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. எங்கோ பார்வை நிலைகுத்த சுவரில் சாய்ந்துகொண்டார். தேம்பலால் அவள் நெஞ்சு தூக்கித்தூக்கிப் போட்டது. கழுத்து நரம்புகளும் நெஞ்சுக்குழியும் நெளிந்தன. அவற்றின் அசைவுகள் என் சங்கட உணர்வை மேலும் மேலும் அதிகரித்தன. மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். முன் குவியலுக்கிடையே தவறிவிழுந்த கண்ணாடித் துண்டுகளைப் போல அவர் கண்கள் பளிச்சிட்டன. நாக்கைச் சுழற்றி உதடுகளை மற்றொருமுறை ஈரப்படுத்திக் கொண்டார்.

கண்ணீரும் அச்சமும் நிரம்பி அக்கண்களிலிருந்து என் பார்வையை விலக்க இயலவில்லை. பெரும் குற்ற உணர்வுடன் மூண்ட வேதனையால் என் தொண்டை இறுகி உலர்ந்து போனது. எழுந்து அவரை நெருங்கித் தொட்டு ஆறுதல் சொல்ல நினைத்தேன். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு பின்வாங்கினேன். சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது. அந்த உட்கூடம், ஜன்னல், திரைச்சீலை, சுவரோவியங்கள், கழிப்பறைக் கதவுகள், தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள் புத்தகம் என ஒவ்வொன்றின் மீதும் தயக்கத்துடன் என் பார்வை படர்வதையும் பெருமூச்சுடன் எழுந்திருப்பதையும் நடக்கத் தொடங்குவதையும் அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார். அக்கேள்வியால் என் உடல் குறுகிச் சிலிர்த்தது. சில நொடிகள் கதவில் சாய்ந்தபடி அக்கண்களைப் பார்த்தேன். அந்த இல்லங்களின் ஒவ்வொரு ஜன்னல்களிலும் தென்பட்ட கண்களையெல்லாம் மறுபடியும் எண்ணிக்கொண்டேன். ஒருகணம் கூட என்னால் அங்கே நிற்க முடியவில்லை. வேகவேகமாக இல்லத்தைவிட்டு வெளியேறினேன். கச்சிதமாக வளைந்து நீளும் சாலைகளையும் புல்வெளிகளையும் நீரூற்றுகளையும் தாண்டி நுழைவாயிலைக் கடந்து தரையில் கால்வைத்த பிறகுதான் சீராக மூச்சுவிட முடிந்தது. என் வேதனையைச் சந்திரனுக்குத் தெரியப்படுத்தும் விதத்தைப் பற்றிய கவலையை முதன்முதலாக உணர்ந்தது மனம்.

தீராநதி, ஏப்ரல் 2004

தட்டச்சு : சென்ஷி

Nov 22, 2013

ஒரு திருணையின் கதை - மு. சுயம்புலிங்கம்

பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை அவள் கண்ணில் இடித்தது. பார்வை போய்விட்டது. கண்ணு தெரியாத பாட்டி இந்தத் திருணையைக் காத்துக் கிடந்தாள்.

தாத்தா ரொம்ப காலம் இந்தத் திருணையில்தான் படுத்துக் கிடந்தார். அவர் முதுகுப்புறம் சதையில் புண் வைத்தது. புண்களில் புழு நெளிந்தது. தட்டைப் பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைத் தாத்தா ஓட்டி வந்தார். ஒரு ஓடையில் வண்டி கவிழ்ந்தது. தாத்தாவை இன்னும் ஒரு வண்டியில் தூக்கிக்கொண்டு வந்து இந்த திருணையில்தான் கிடத்தினாsuyambu_thumb[11] ர்கள். உடைந்த எலும்புகள் தாத்தாவுக்குச் சேரவே இல்லை.

அம்மாவையும் இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள். அவள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அப்பா விற்றபொழுது அம்மா சகித்துக் கொண்டாள். அவள் காதில் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்த நகையை அப்பாவிடம் கழற்றிக் கொடுத்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. மூளிக் காதோடு அவள் எப்படி ஊருக்குள் நடப்பாள். மோட்டுவளையில் ஒரு சுருப்பாங்கணியில் தூக்கில் தொங்கிய அம்மையை இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள்.

அப்பா இந்தத் திருணையில்தான் எப்போதும் படுப்பார். குளிர் அன்றைக்கு அதிகமாக இருந்தது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லா மூடிப் படுத்திருந்தார். சீக்கிரம் எழுந்துவிடுகிறவர் அப்பா. அப்பா மேல் வெயில் அடிக்கிறது. அப்பா அப்பா என்று கூப்பிட்டு எழுப்பினேன். அப்பாவைத் தொட்டு உருட்டிப் போர்வையை எடுத்தேன். அப்பா தலை துண்டிக்கப்பட்டு தனியே கிடக்கிறது.

திருணை மழையில் கரைந்து தரையோடு தரையாய் ஆகிவிட்டது.

இடிந்து கிடக்கிற இந்தத் திருணையையும் வீட்டையும் நாங்கள் கெட்டுவோம்.

****

தட்டச்சு : சென்ஷி

Nov 15, 2013

ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்

ஆத்மாநாம்

(18. 1. 1951 - 6. 7. 1984)

ஆத்மாநாமின் இயற்பெயர் S. K. மதுசூதன். 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலேயே வளர்க்கப்பட்டார். தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் ஆத்மாநாமுக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பைathmanam_thumb6 (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். 1967ஆம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற  கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டுக் கணக்குத்துறை சேர்ந்த விஷயங்களைக் கற்க ஆடிட்டர் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். இந்தப் பின்னணி அவருக்கு கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற கம்பெனியில் வேலை கிடைக்க ஏதுவாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1971இல் தயார் உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். இங்கிருந்துதான் ஆத்மாநாமின் சிக்கலான வருடங்கள் ஆரம்பிக்கின்றன. 1978ஆம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற தயார் உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார். இதே சமயத்தில்தான் ழ இதழையும் தொடங்கினார். தன்னுடைய நிறுவனத்தைக் கட்டி எழுப்ப இரவுகளிலும் வேலைசெய்ய வேண்டிவந்தது. இரண்டு மூன்று ஈடுபாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமாய் இயங்கியபோது Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979 புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு முக்கியம் என்று மருத்துவர் கருதியதால் தொடர்ந்து பணிக்குச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. மூளையின் அதி தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகத் தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார்.

இந்தச் சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக்கொண்டிருந்த நூல் A. K. ராமானுஜனின் The Speaking of Shiva. 1983ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்கை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் தனது சகோதரர் வீட்டில் எவரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார். மார்ச் 1984லிருந்து தனது இறுதி மறைவு வரை (ஜு லை 1984) ஆத்மாநாம் தனக்கு வந்த கடிதங்களையோ, பத்திரிகைகளையோ, அழைப்பிதழ்களையோ படிக்கவில்லை. பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டித் தீர்மானித்ததுபோல ஏறத்தாழ 120 தபால் கார்டுகளை வாங்கி வைக்கிருந்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசி வரை திருத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன.

**********

ந்தப் பேட்டி 14-4-83 அன்று மதியத்திற்குமேல் உதகமண்டலத்தில் நிகழ்த்தப்பட்டது. இடம் செயின்ட் மேரீஸ் ஹில். கோடை என்பதால் கண்ணாடி ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தூரத்துத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் யந்திரங்களின் தொடர்ச்சியான ரீங்காரம் கேட்கிறது. அறைக்குள் தாமோதர் தீட்டிய தைல வண்ண ஓவியம். அதை நோக்கியபடி ஆத்மாநாம் ஒரு நீல நிற ஒயர் நாடாக்கள் பின்னிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பேட்டியின்போது Charms சிகரெட்டுகளைப் பிடித்தவண்ணம் இருக்கிறார். ஸ்டீல் டீப்பாயின் மீதிருந்த Nippo batteries-ன்டீ ட்ரேயை சாம்பல் கிண்ணமாகப் பயன்படுத்துகிறார். காலர் வைத்த காக்கியுமல்லாத மிலிட்டரி பச்சையுமில்லாத ஒரு நிறத்தில் ஜிப்பா ஷர்ட் அணிந்திருக்கிறார். பதில்களை இடைவிட்டு நிறுத்திப் பேசுகிறார். சில நேரங்களில் தடையற்ற பிரவாகமாகவும் பதில்கள் வெளிப்படுகின்றன. இந்தச் சமயத்தில் ஆத்மாநாம் படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள், Stalin : an Impartial Study of the life and works of JosephStalin (Stephen Graham), Octavio Paz-ன் கவிதைகள், Gunter Grass-ன் கவிதைகள், நவீன ஐரோப்பியக் கவிஞர் வரிசையில் வெளிவந்த Tadeuz Rosewicz. பேட்டி பதிவு செய்யப்பட்டுப் பிரசுர நிலையை அடைந்திருக்கிறது. கேள்விகள் மட்டுமே முன்தீர்மானத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தன. மேலும் அக்கேள்விகளும் ஆத்மாநாமின் பதில்களால் ஈர்க்கப்பட்டுவேறு வடிவங்களை அடைந்திருக்கின்றன. 24-4-83 அன்று இரவு கோவை, அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட இந்தப் பேட்டிக்கும் தொடர்பு ஏதுமில்லை.

பிரம்மராஜன்: தமிழ்ப் புதுக்கவிதைல 20 வருஷம் பழக்கம் இருக்குன்னு கணக்கு வெச்சுக்கலாம். எழுத்து பத்திரிகைல இந்தப் புதுக்கவிதை ஒரு ஆரம்ப நிலைல இருந்தது. கொஞ்சம் கழிஞ்சு கசடதபற பத்திரி்கை காலத்தில எழுதப்பட்ட கவிதைகள் வளர்ச்சியாயிருந்தது. பின்னால ‘ழ’ பத்திரிகையில வந்த கவிதைகள், இப்ப ‘எழுத்து’ கவிதைகள், ‘கசடதபற’ கவிதைகள் என்கிற ஒரு காலப்பிரிவாக வைத்துக்கொள்ளலாம். இவை வளர்ச்சி ரீதியா என்னென்ன நிலைகளில் இருந்தன? இயல்பு ரீதியா என்ன வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கு?

ஆத்மாநாம்: தமிழின் புதுக்கவிதைகள் பாரதியாரிடமிருந்து ஆரம்பமாகின்றன என்று கணக்கு பார்த்தா சுமார் 60 ஆண்டுகளுக்குத் தமிழ்ல புதுக்கவிதைகள் இருக்குன்னு சொல்ல முடியும். பாரதியாருக்கு அடுத்து வரக்கூடிய கவிஞர்கள்னு ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ‘எழுத்து’ பிரசுரமான புதுக்குரல்களின் மூலம் தெரியவந்த கவிஞர்களின் பெரும்பான்மையான கவிதைகள் மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது கிழக்கத்திய

தத்துவத்தையோ தூக்கலாக அறிவிக்கும்படியாக இருந்தன. அதற்கப்பறம்வந்த ‘கசடதபற’ கவிதைகளில் பௌதிக உலகத்தின் தாக்குதல் மற்றும் அனுபவம் வெளிப்படையா தெரியவந்தது. சமீபத்திய ‘ழ’ கவிதைகள் சுய அனுபவம், சுய சிந்தனையின் அடிப்படைல இருந்தன.

பிரம்மராஜன்: எழுபதுகளில் இருந்த புதுக்கவிதைகளுக்கும், தற்போதைய புதுக்கவிதைகளுக்கும் என்ன வித்தியாசம்? முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா?

ஆத்மாநாம்: 70களில் இருந்த புதுக்கவிதைகள் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டவை. தற்போது கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதப்படுகின்றன. 70ன் கவிதைகள் இன்றைய பிரபல வாரப் பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துவிட்டது ஒரு சோகமான விஷயம்.

பிரம்மராஜன்: நடை இதழில் சி. மணி, ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது 1969-70ல். இன்றைக்கும் இந்த நிலை மாறிவிடவில்லை. இதுபற்றி?

ஆத்மாநாம்: இதைப்பற்றிச் சொல்லும்பொழுது - இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் கவிதைகளில் இருப்பதால் - ஒருவிதப் போக்கின் கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுகின்றன, இன்னொரு வகை மீண்டும் ஓரிரு முறை படித்தவுடன் ஓரளவோ அல்லது முழுமையாகவோ புரிகின்றன. ஆனால் புரிதல் என்பது தனிப்பட்ட நபரின் விஷயமாகும். எனவே கவிதைகள் புரிகின்றன, புரியவில்லை என்பது தன்னிலை விளக்கமாகத்தான் அமைகின்றது.

பிரம்மராஜன்: ஒரு நல்ல கவிதைக்கும் அதிலிருக்கும் obscurity, அதாவது புரியாத தன்மைக்கும் சம்பந்தமிருக்கா?

ஆத்மாநாம்: இது கவிதையின் கருப்பொருளைப் பொறுத்த விஷயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சிலசமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும். எனவே கவிதைக்கும் obscurityக்கும் நேரடித்தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது. அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதைவில் குற்றமுள்ளதுஅல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்லமுடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும் சொல்ல முடியும்.

பிரம்மராஜன்: ஒரு கவிதை சிக்கலா இருக்கறதுக்கு வாழ்க்கைல இருக்கற complexity காரணமா, இல்லை அதை எழுதின கவிஞன் ரொம்ப complex ஆன அனுபவமுடையவனா இருக்கான்கிறது காரணமா, அல்லது அவனது சிந்தனை, வெளிப்பாட்டு முறையே complex ஆக இருப்பது காரணமா? சிந்தனை வெளிப்பாட்டு முறையே complex ஆக

இருக்கும்போது it is indirectly influenced by his sociallife. அதனால் வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறதால்தான் கவிதை complex ஆகிறதா?ஏன்னா, மேற்கத்திய அரூப ஓவியங்களைப் பத்திச் சொல்லும்பொழுது வாழ்க்கை அரூபமாகிவிட்டதால்தான் ஓவியங்களும் அரூபமாயிருச்சுங்கறாங்க.

ஆத்மாநாம்: கவிதைகள், ஓவியங்கள் அரூமாயிருப்பது காலத்தோட நிர்ப்பந்தம்.

பிரம்மராஜன்: விளக்கமா சொல்லுங்க.

ஆத்மாநாம்: ஒரு நேரிடையான புகைப்படத்துடன் ஓவியத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஓவியம் குழப்பமாகத் தெரிகிறது. ஆனால் ஓவியம் வரைபவன் தன் முழு தீட்சண்யத்தையும் அதில் கொண்டுவருவதற்காக அப்படி வரைகிறான். ஆனால் கவிதை புரியாததா வருதுன்னு சொல்லும்போது அந்த obscurity ஒரு சில சமயம் forced obscurity ஆக இருக்க முடியும். சில விஷயங்களை நேரடியாக எழுத்தின் மூலம் சொல்ல முடியாது. எனவே வேறுவிதமான வார்த்தைகள் மூலமாய் அதைத் தெரிவிக்கிற முயற்சிகளாக இருக்க முடியும். உதாரணமாக ‘மறு பரிசீலனை’ என்ற கவிதையில் கடைசி வரி.

பிரம்மராஜன்: மறு பரிசீலனை உங்க கவிதை இல்லையா?

ஆத்மாநாம்: ஆமாம். அதில ‘புறப்பட்டாகிவிட்டது கறுப்புப் படை’, அதுக்கு முன்னாடி ‘தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள் என’, அப்பறம் ‘துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள் போல’ இப்படிப் பல விஷயங்களை indirect ஆகச் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் obscurity வருது.

பிரம்மராஜன்: அதைத் தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்க.

ஆத்மாநாம்: அது ஒரு காலத்தின் நிர்ப்பந்தம்னு ...

பிரம்மராஜன்: அதாவது வெளிப்பாட்டில் தவிர்க்க முடியாததா அல்லது கருப்பொருளிலேயே தவிர்க்க முடியாததா?

ஆத்மாநாம்: அது situationsனால தவிர்க்க முடியாததாகுது.

பிரம்மராஜன்: Situationsனா? இன்னும் தெளிவா சொல்லணும் நீங்க.

ஆத்மாநாம்: Situationsனு சொல்லும்போது ...

பிரம்மராஜன்: ஒரு காலகட்டம்னு சொல்லலாமா அதை?

ஆத்மாநாம்: ஒரு காலகட்டத்தின், சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணிகளைப் பொறுத்து அது அமையறது.

பிரம்மராஜன்: சில கவிதைங்க ரொம்ப plain ஆகவே இருக்கு. சிக்கலான வார்த்தைங்க ஏதும் போடறதில்லை. ஆனா படிச்சு முடிச்ச உடனே comprehensiveஆக ஓரு ஒட்டுமொத்தமான பார்வைக்குப் புரியாம போயிடறது. இதை plain poetryன்னு நாம எடுத்துக்கிட்டோம்னா plain

poetryகூட புரியாம போயிடறதுக்கு chance இருக்குன்னு அர்த்தம்தானே. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்றீங்களா...

ஆத்மாநாம்: Plain poetryன்னு சொல்லும்போது ஆனந்தோட பல கவிதைகள் plain poetry ஆகதான் வருது...

பிரம்மராஜன்: உதாரணத்துக்கு எதையாவது சொல்ல முடியுமா... ?

ஆத்மாநாம்: ‘ம்... அதோ அந்தச் சிறுபறவை அழைத்துவரும் மேகம் தண் என எனை நிறைக்கையில், நான் இல்லாது போவேன்’- இந்தக் கவிதையில் அந்தப் பறவை, அப்றம் ‘நான் இல்லாது போவேன்’ அப்படின்ற expression எல்லாமே தெளிவாக இருக்கு.

பிரம்மராஜன்: அதாவது statement plain ஆக இருக்கு.

ஆத்மாநாம்: ஆமாம். ஆனா முழுக்கவிதையும் படிச்சா உங்களுக்கு அதில் புரியாத ஏதோஒரு அம்சம் இருக்குன்னு, அதில் அவர் உணர்ந்த ஏதோ அனுபவம் உங்களுக்குச் சரியா transfer ஆகலை அப்படிங்கற மாதிரி quality அந்த poemல இருக்கு. அதனால் Simple poemகூட complexஆக இருக்க வாய்ப்புகள் இருக்கு.

பிரம்மராஜன்: அதையேதான் நானும் கேக்கறேன்.

ஆத்மாநாம்: இன்னொரு நேரத்திலே ஒரு complex poem, ஒரு absurd poem ஒண்ணை நாம assess பண்ணி பாக்கறப்ப புரியக்கூடியதா இருக்கு. இதுக்கு உதாரணம் என்னோட கவிதைகள்லேர்ந்தே எடுத்துக்காலம்.

பிரம்மராஜன்: எந்தக் கவிதைய எடுத்துக்கலாம்?

ஆத்மாநாம்: என் ‘மறுபரிசீலனை’ கவிதையையே எடுத்துக்கலாம். அது நேரிடையா obscure poem கிடையாது; absurd poem ஆகச் சொல்லலாம். கொலாஜ் மாதிரி various cuttingsஐ வச்சு ஒரு paintingஐ paste செய்யற மாதிரி.

பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? absurdஆக இருக்கறது ரொம்ப logical ஆகப் பாக்கறவனுக்கு obscure ஆகத் தெரியலாமில்லையா?

ஆத்மாநாம்: That is possible.

பிரம்மராஜன்: ஏன்னா எல்லாம் ஒரு ஒழுங்கிலேயே இருக்கணும்னு எதிர் பார்க்கிறவனுக்கும் absurdஆக இருப்பது ஒரு ஒழுங்கில்லாததாய்த் தோன்றலாம். அதனால இன்றைய சூழல்ல விளக்கம் தர்றது அதாவது interpretations தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதற்குக் காரணம் பகையான ஒரு சமூகத்தில் கவிஞன் அந்நியமாகிப் போனதாலா? அல்லது கவிதைங்கற ஒரு அறிவுத்துறையிலே, மற்ற அறிவுத் துறைகளின் பாதிப்புகள், உதாரணத்திற்கு சைக்காலஜி, பெயிண்டிங், இசை மற்றும் ஆஸ்ட்ரோஃபிஸிக்ஸ், டைம் இந்தமாதிரி விஷயங்கள் கலந்துவிட்டது காரணமா?

ஆத்மாநாம்: இதில அந்நியமாகிப் போறதுங்கறது அம்சம் பல நூற்றாண்டுகளாகவே மனிதன் ஒரு சமூகத்திலிருந்து அந்நியமாகிப்போய் வரான்.

அதனால ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அந்நியமாதல்ங்கற அந்தவிஷயம் உணர்ந்தோ உணராமலோ நடந்திருக்கு. அவன் எழுத் தாளனாயிருந்தா எழுத்திலேகொண்டுவரான். ஓவியனா இருந்தா அதை ஓவியத்துல கொண்டுவரான். அதனால் இந்த அந்நியமாதல்ங்கறதநாம பல ஆயிரம் வருஷங்களாகவே ஒரு விதத்துல உணர்ந்து வரோம். இந்திய சிற்பங்களில் இருக்கக்கூடிய சில புரியாத் தன்மைகள் - யாளி மாதிரி - இல்லாத மிருகங்கள் ...

பிரம்மராஜன்: புரியாத மிருகங்கள...

ஆத்மாநாம்: ஆமாம். புரியாத மிருகங்களைக் கொண்டுவரும்போது அந்த இடத்தில் அவன் அவனுடைய கற்பனையில் அந்நியமானதால்தான் அந்தமாதிரி கொண்டுவர முடிஞ்சிருக்கு. ஆனா இன்றைக்கு ஓருவன் அந்நியமாகிப் போறான்னா அதை அவன் முழுக்க முழுக்க உணர்றான்.

பிரம்மராஜன்: இல்ல... நான் கேக்கற கேள்வி ...

ஆத்மாநாம்: நீங்க கேக்கற கேள்வி பாதிப்புகள், ஓவியம் மற்றும் சைக்காலஜி போன்ற அறிவுத்துறைகள்லயிருந்து வந்த விஷயமான்னு ...

பிரம்மராஜன்: இல்ல... கவிதைங்கற துறையில ஒரு perceptive poet வேறுசில துறைகளை அனுமதிக்கிறான். தன் சிந்தனைக்குள்ள அப்படி அவன் அனுமதிக்கறதால கவிதைகள் சிக்கலாகறதான்னு கேக்றேன்.

ஆத்மாநாம்: இல்லை... அதில தெளிவுதான் வர முடியுமே தவிர...

பிரம்மராஜன்: தெளிவு கவிஞனுக்கு வர முடியும். இந்தத் துறைகள் பற்றித் தெரியாத ஒருவாசகனுக்குத் தெளிவின்மை வரக் காரணமாக இருக்க லாம் இல்லையா?

ஆத்மாநாம்: இருக்கலாம்.

பிரம்மராஜன்: வேறு ஏதாவது விளக்கம் தர முடியுமா? இதைத்தவிர inter- pretationsன் அவசியத்தைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?

ஆத்மாநாம்: சில கவிதைகள் புரியாமயே போகிறபோது அதைப் புரிஞ்சிருக்கிற ஒருத்தர் வந்து விளக்க முற்படறார். அதாவது ஒருத்தருடைய சுய அனுபவமானது இன்னொருத்தருக்கு முழுக்க முழுக்கவோ இல்லை ஓரளவுக்கோ அந்த அனுபவத்தின் கிட்ட நெருங்கற மாதிரி இருக்கும்போது அந்தக் கவிதையை அவர் புரிஞ்சுக்கறார்னு சொல்ல முடியும். அதனால இது புரியாத சில வாசகர்களுக்கு விளக்க முற்படறார். இதன் மூலமா poetsக்கு quantity wise ஒரு contribution இருக்கு. உங்க கவிதைகளைப் புரியலைன்னு first readingல சொல் லிடறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. ஆனா அதுக்குத்தான் முன்னாலேயே 2அல்லது 3 தடவை படிக்கணும்னு சொல்லியிருக்கு. அப்பறம் உங்க interpretation பிரகாரமா ஒரு வாசகன் ஒரு கவிஞனின் அனுபவத்துக்கு இணையா தன்னை உயர்த்திக்கணும்கற ஒரு எதிர்பார்ப்பு வந்து அந்த இடத்துல இருக்கு. ஆனா நேரிடையா ஒரு வாச

கன் எங்கேயோ இருக்கான். ஐநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கான். அவன் இந்தக் கவிதையைப் படிக்கிறான். அவனுக்கு அந்தக் கவிதை புரியுணும்னு சொல்லும்போது வேறு யாரோ ஒருவர் அந்தக் கவிதைக்கு விளக்கம் சொல்லறப்ப ஓரளவுக்கு உள்ள போறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. அந்த வகையில அந்தமாதிரி விளக்கங்கள் தேவை. ஏன்னு கேட்டா, கவிதைகள்ல இன்னைக்கும் நாம ஒரு புறப் படற நிலையிலேதான் இருக்கோம். நாம எந்த நிலையிலும் போய்ச் சேர்ந்திடலை.

பிரம்மராஜன்: எழுதப்பட்ட மொழி ஒரு குறியீடுன்னு நாம சொல்றோம். அதை ஒரு அடிப்படையாவெச்சு ஆரம்பிச்சா கவிதையும் எழுதப்பட்ட சொற்களால்தான் ஆகியிருக்கு. அப்ப கவிதைபுரிவதற்கான சாத் தியப்பாடுகள் என்னென்ன?

ஆத்மாநாம்: அகநோக்குப் பார்வைகள் கொண்ட கவிதைகள் சிலதுல மொழி வெறும் குறியீடா மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா ஆனந்தோட கவிதைல பறவை. அவரோட பல கவிதைகள்ல பறவை வருது. தொடர்ச்சியா வருது. So பறவைங்கறது ஒரு விஷயத்தைக்குறிப்பிடறது. அதாவது பறக்கறது. சுதந்திரமா பறக்கறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம பறக்கறது. அப்படிங்கிறதை அது குறிப்பிடறது. அந்த வகையில ஆனந்தோட கவிதைல பறவைங்கறது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஒரு முழு சுதந்திரத்தோட எங்கே வேணும்னாலும் திரியக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்கறது. அதனால மொழிப்பயிற்சி ஓரளவுக்கு இருக்கிறவாசகர்கள் குறியீட்டோட நியாயத்தையும் அர்த்தத் தையும் புரிஞ்சுக்க முடியும்.

பிரம்மராஜன்: ஆனா கவிதை எல்லோருக்கும் புரியல. புரியாத கவிதை எழுதறது ரொம்பத் தப்புங்கறமாதிரி சொல்றாங்களே அது பத்தி என்ன சொல்றீங்க? அப்ப எதுக்காக எழுதறீங்கனுகேக்கறாங்க. அதாவது உங்களுக்கே புரியாத அல்லது வாசகனுக்குப் புரியாத கவிதை எழுதறதுலஎன்ன பிரயோஜனம்னு கேக்கறாங்க. இது validஆன காரணமாக இருக்க முடியுமா? வாசகர் பக்கத்துல இருந்து.

ஆத்மாநாம்: ஒரு individualங்கறவனுக்கு நேரடியா ஒரு consciousல சில அனுபவங்கள் பதிவாயிருக்கு. சில அனுபவங்கள் sub-consciousல பதிவு ஆகியிருக்கு. இன்னும் சில அனுபவங்கள் அவனுக்கே புரியாம, தெரியாம அவனுடைய brain cellsல போய் record ஆயிருது. இப்ப அவனுக்குக் கனவுகள் வருது. அந்தக் கனவுகள்ல ஒரு ஊஞ்சல் வரது. அவன் சைக்கிள் ஓட்டிண்டு போறான். இல்ல groundல இருக்கானோ, இல்ல யாருமில்லாத கடற்கரையில்தனியா இருக்கானோ, இந்த மாதிரி பல்வேறு காட்சிகளில் அவனே இருக்கான்.

பிரம்மராஜன்: யார்? அவன்... அந்தக் கவிஞனா?

ஆத்மாநாம்: இல்லை ஒரு individual. அவனுக்கு ஒண்ணுமே புரியல. அதை அவன் probe பண்ணிட்டு போகும்போது ஒண்ணு அவன் அதை

சைக்காலஜிகலா அப்ரோச் பண்ணனும். அவனோட life experienceல இருந்து அது கிடைக்கறதா இல்ல lifeக்கு அப்பாற்பட்ட விஷயங்களிலிருந்து கிடைக்கற experienceல இருந்து இந்த மாதிரி ஞாபகங்கள் வருதான்னு அவனுக்கே தெரியாது. அந்த நேரத்தில் அவன் creative writerஆக இருந்தா சில விஷயங்கள் intuitiveஆக புலனாறது. அதை கவிதைல கொண்டுவரபொழுது அது complex metaphor ஆகவோ இல்ல complex imageஆகவோ இருக்கறதுக்கு possibilities இருக்கு. இதை ஒருத்தன் புரிஞ்சுக்கணும்னா அது அந்தக் கவிஞனுக்கே immediate ஆக சாத்தியம் இல்லை. So வாசகன் அந்த இடத்துல கொஞ்சம் தேட வேண்டியிருக்கு. ஆனா அதுக்கு ஏதாவது ஒரு நாள் ஒரு சைக்காலஜிஸ்டோ இல்ல brain chemist டோ ஒரு விளக்கம் தர முடியும். ஆனா அதுகூட ஒரு definite answer என்று கூற முடியாது. இவன், இவனோட அர்த்தம்தான் முழுமையான அர்த்தமாக இருக்க முடியும். அது கிடைக்கிற வரைக்கும் அந்தக் கவிதையை அவன் வாசிச்சிட்டே இருப்பான். அவ்வளவுதான்.

பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? அதாவது ஒரு கவிஞன் தனக்கான ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வருவதன் மூலம் பல மனிதர்களுக்கான, பல தனிநபர்களுக்கான தீர்வைக் கொண்டு வரான் அப்ப டின்னு F. R. லீவிஸ், T. S. எலியட்டின் கவிதைகளைப் பற்றிச் சொல்லுவார். அந்த மாதிரி இந்த இருண்மை அல்லது புரியாத தன்மை, conscious, sub-conscious இன்னும் pre-conscious statesல இருக்கிற சில மன நிலைகளை ஒரு கவிஞன் சொல்லறப்போ, அதை முதல்முறை படிக்கற வாசகனுக்குச் சிரமம் ஏற்படலாம். ஆனா அதே கவிதையை அனுபவம் ஏற்பட்ட பிறகு பத்து வருஷம் கழிச்சுப் படிக்கறான்னு வச்சுக்குவோம், அப்ப அந்த கவிதை புரியலாமில்லையா? இந்தக் காரணத்துக்காக அது புரியறதோ புரியலையோ, உபயோகமோ இல்லையோ அதை அந்தக் கவிதையை வாழ்வுக்கு கொண்டுவரது, to bring it into existence அவசியம்தான்னு எனக்குப் படறது.

ஆத்மாநாம்: கண்டிப்பா நாம் காத்திருக்கணும்தான்.

பிரம்மராஜன்: எதுக்கு? கவிதை புரியறதுக்கா?

ஆத்மாநாம்: ஆமா, புரியதுக்காகக் காத்திருக்கணும். ஆனா அதுக்காகப் புரியாத கவிதைகள்தான் கவிதைகள்னு நான் ஒத்துக்கமாட்டேன்.

பிரம்மராஜன்: சரி.

ஆத்மாநாம்: இன்னும் எனக்கு, நான் இருக்கக்கூடிய சமூகத்துல எந்த அளவுக்கு நான் முரண்பட்டிருக்கேன் அல்லது ஒத்துப்போறேன்னு விஷயங்கள் வரும்போது அதுக்கு நான் நேர்மையா இருக்கேன்னா அதை நான் கவிதைல கொண்டுவந்திருக்கணும். அதைச் செய்யாம நான், வெறும் எனக்குள்ள இருக்கற பிரச்சினைகளை மட்டுமே வச்சி ருக்கேன்; அது வந்து பத்து வருஷமோ இல்ல 20 வருஷமோ கழிச்சுப் புரியும்னு, இல்ல வேற யாராவது சைக்காலஜிஸ்டோ, சைக்கியாட்ரிஸ்டோ வந்து அதை interpret பண்ணுவான் அப்படின்னு நான் காத்

திருக்கேன்னு சொன்னா அது முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்தினதா ஆகாது. இரண்டும் balancedஆக இருக்கணும்.

பிரம்மராஜன்: கவிதைகள் சில சமயம் அரூபத்தன்மை பெறுகின்றன. எடுத்துக்காட்டா abstract paintings போல, நம் ராகங்களின் வடிவைப் போல, Symphoniesஐ போல, இந்த மாதிரியா இருப்பதற்கு வேறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கறாங்க. அதாவது கவிஞர் intend பண்ணாத அர்த்தங்களை வேற கொடுக்க வேண்டியிருக்கு. அப்படிக் கொடுக்கும்போது கவிஞனின் கவித்துவக் கருத்துருவத்துக்குப் பாதகம் விளையாதா? அவன் என்ன நினைச்சான்கறதுக்கு?

ஆத்மாநாம்: எந்த விதமான பாதகமும் விளையாது.

பிரம்மராஜன்: எப்படி?

ஆத்மாநாம்: ஒரு கவிதைக்கு நாலு பேர் நாலு விதமான பொருள் கொடுக்கறாங்கன்னு வச்சுப்போம். இவன் இவனுக்கு intuitiveஆகப் புரியற போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு பொருளைக் கொடுக்க முடியும். அதுவரைக்கும் அந்த நாலு பேர் கொடுக்கறதையும் இவன் ஒரு listener எப்படி respond பண்றாங்கிற levelல அதை observe பண்ணுவானே ஒழிய இவன் அதை interpret பண்ணலை. நாலு பேர் நாலு பொருளைக் கொடுக்கறாங்க. நாலு பேரும் நாலு different persons ஆக இருக்கறதால அவங்கவங்க தங்கள் life styleக்கு ஏத்தபடி அதுக்குப் பொருளைக் கொடுக்க முடியும். So அந்த நாலு interpretationsம் அவங்கவங்க அளவிலே சரி, தப்புன்னு கணிக்க முடியாது. இந்தப் புரியாத தன்மைங்கறது ஒரு மனுஷனுக்கு ஆதிகாலத்துல இருந்து இன்னிவரைக்கும் இருந்திண்டுருக்கற விஷயம். இந்த வாழ்க்கையே எனக்கு விளங்கலை, இதுக்குப் பொருளே இல்லை, அப்படின்னு சொல்ற தன்மை பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்திட்டிருக்கு. இந்த வாழ்க்கைக்கான அர்த்தத்துக்குத்தான் பல சமயங்களும், பல புத்தங்களும், பல இலக்கியங்களும் முயற்சி செய்யறது. அதனால இந்த வாழ்க்கைக்கான முழுப்பொருளை... அவன் எந்த அளவுக்குத் தன்னோட வாழ்க்கைக்கு நேர்மையானவனா இருக்கான்கறதை வச்சுதான்கணிக்க முடியும். மத்தபடி எந்த விதமான அளவுகோலும் இருக்கவே முடியாது. So நாலு பேர்நாலு விதமா பொருள் கொடுத்தாலும்கூட அந்தக் கவிதைக்கு என்னிக்காவது ஒரு நாள் சரியானபொருள் கிடைக்கும்னே நான் நினைக்கிறேன்.

பிர:அதாவது அந்தக் கவிஞர் intend பண்ணின அளவுக்கு அந்த meaning இருக்குமா? இல்லை அதைவிடவும் அழகாகூடக் கொடுக்க முடியுமா?

ஆத்மாநாம்: ம்ம் அதைவிட அழகாகக்கூடக் கொடுக்க முடியும்...

பிரம்மராஜன்: ஒரு தடவை டி. எஸ். எலியட்டோட Love Song of Alfred J. Prufrockக்கு ஒருத்தர் interpretation எழுதினார். அதைப் படிச்ச எலியட் இது ரொம்ப ஜோரா இருக்கு. ஆனா நான் இப்படி நினைக்கவே இல்

லைன்னு சொல்லிட்டார். சில சமயம் interpretations கவிதைகளையே enhance பண்ற அளவுக்கு வந்துடுது.

ஆத்மாநாம்: ஆமாம்.

பிரம்மராஜன்: Committed poetryன்னு சொல்றாங்க இல்லையா? அதை ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகள்னு மொழிபெயர்க்கலாம். அந்தமாதிரி தமிழ்ல ஏதும் எழுதப்பட்டிருக்கா?இது முதல் கேள்வி. ஒரு துணைக் கேள்வி: மேற்கத்திய நாடுகள்ல இந்தமாதிரி எழுதப்பட்டிருக்கா? அவைகளின் தரம் எப்படி? நீங்க நிறைய மேற்கத்திய கவிதைகளைப் படிச்சிருப்பீங்கங்கிற நம்பிக்கையில் இதைக் கேக்கறேன்.

ஆத்மாநாம்: Committed poetryன்னு சொல்றப்ப முழுக்க முழுக்க ஒரு கவிஞன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் ஒழிய கவிதைகள் சாத்தியமே கிடையாது. அதுக்குமேல நாம் committed poetryன்னு சொல்றப்ப, ஒரு social commitmentஐ refer பண்ற மாதிரி ஆயிடறது.

பிரம்மராஜன்: Social commitmentனா சமுதாயத்துக்கு உண்மையா இருக்கறது...

ஆத்மாநாம்: சமூகத்துல ஈடுபாடோட நேர்மையா இருக்கறதுன்னு சொல்லலாம். சமூகத்துல ஈடுபாடு கொண்ட கவிதைகள் ஒரு புறம். இன்னொருபுறம் தன்னைப் பற்றித் தேடலுடன் கூடிய கவிதைகள். இரண்டுமே committedதான். ஆனா ஒரு கவிஞன் தன்னைப் பற்றி மட்டுமே தேடிக்கொண்டிருந்து தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தால், அந்தமாதிரிக் கவிஞர்கள் காலப்போக்கில் தள்ளப்பட்டுவிடுவார்கள். ஆக, ஒரு கவிஞனை முழுமையான கவிஞன்னு சொல்லணும்னா அவனுக்கு social ஆகவும் ஒரு commitment இருக்கணும் personal ஆகவும் ஒரு commitment இருக்கணும். ஒரு angleல மட்டும், வெறும் social commitment அல்லது Personal commitment மட்டும் இருந்தா முழுக்கவிஞன்னு சொல்லிட முடியாது.

பிரம்மராஜன்: முழுமையடையாத கவிஞன்னு சொல்லிடலாமா...

ஆத்மாநாம்: முழுமையடையாத கவிஞன்னு சொல்ல முடியாது. அது implied. இரண்டும் ஒண்ணுதான்.

பிரம்மராஜன்: சரி, இன்னொரு கேள்வி உள்முகத்தேடல்னு சில கவிஞர்களின் கவிதைகளைச் சொன்னீங்க இல்லையா...

ஆத்மாநாம்: இல்ல, அகநோக்குப் பார்வைன்னு...

பிரம்மராஜன்: சரி, அகநோக்குப் பார்வை அல்லது உள்முகத்தேடல் அல்லது introvert outlook அல்லது inlookனு சொல்லலாம். நீங்க வேறகவிதைகள் இருக்குன்னு சொன்னீங்களே, அதாவது objective ஆக அல்லது புற நோக்கிலே எழுதப்பட்ட கவிதைகளும் இருக்குங்கறீங்க. ஆனா இப்ப நீங்க குறிப்பிட்ட கவிஞர்கள் நிறைய பேர் இந்த அகவயக் கவிதைகள் நிறைய எழுதக் காரணம் அது ஒரு typical ஆன

Indiannessன் பாதிப்போன்னு சந்தேகமா இருக்கு. இதைப் பத்திகொஞ்சம் தெளிவு பண்ண முடியுமா?

ஆத்மாநாம்: பொதுவா கவிதையை seriousஆக எடுத்திட்டிருக்கிற கவிஞர்கள் மிகக்குறைவா இருக்கற இந்த நேரத்துல, சில கவிஞர்கள்தான் committedஆக இருக்காங்க. அவங்க அகநோக்குப் பார்வை கொண்ட கவிஞர்கள் ஆனாலும் சரி, புறவயப்பட்ட பார்வை இருக்கற கவிஞர்கள் ஆனாலும் சரி, மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்காங்க. அவங்க கவிதைகள்ல புறவயமான பாதிப்புகள் இருக்கக்கூடிய கவிதைகள் அதிகமாக இல்லன்னு சொல்றது ஒரு பொதுவான முறைல சொல்லக்கூடிய குற்றச்சாட்டாகத்தான் எடுத்துக்க முடியும். புறவயமான கவிதைகளை எழுதச் சொல்லி எதுவும் force பண்ண முடியாது. எந்த state ஆலயும் force பண்ண முடியாது.

பிரம்மராஜன்: Stateன்னா அமைப்புன்னு சொல்லலாமா...

ஆத்மாநாம்: ம. எந்த அமைப்பாலயும் force பண்ண முடியாது. அதனால தான்ஜோசப் ப்ராட்ஸ்கி போன்ற கவிஞர்கள் தங்கள் தேசத்தை விட்டு வேற தேசத்துக்குப் போய் கவிதைகள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவாறது. Commitmentங்கறது அவங்ககவிதைக்கு அவங்க committedஆக இருக்காங்களா இல்லையான்னுதான் பார்க்க முடியுமேதவிர மற்றபடி social commitmentஓட எழுதறாங்களா இல்லையான்னு பாக்க முடியாது. அவங்களே மனிதாபிமான அடிப்படைல எழுதினாங்கனா அதை நாம வரவேற்கலாம், அவ்வளவுதான். Force பண்ண முடியாது.

bramarajan_thumb[3]பிரம்மராஜன்: சமூகத்துல ஈடுபடுத்திக்கிட்ட எழுத்துக்கள்... அதனோட வெளிப்பாட்டு முறைக்கும், romanticஆன வெளிப்பாட்டு முறைக்கும் தொடர்பிருக்கா? அப்படி வந்து ஈ டுபடுத்திக்கொண்ட எழுத்துக்கள் எல்லாம் romanticஆகதான் வெளிப்பட முடியுமா? குறிப்பா நீங்க வானம் பாடிக் கவிஞர்கள் பற்றி ஒரு சின்ன குறிப்பு கொடுத்தா தேவலாம்னு தோணுது.

ஆத்மாநாம்: பொதுவா சமூகத்திலே ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகளுக்கும், romanticஆன கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னிக்கு romanticஆக எழுதப்படக்கூடிய புரட்சிகரமான கவிதைகள் சினிமாப் பாடல்லகூட இருக்கு. ஆன அதையெல்லாம்நாம கவிதைகளா எடுத்துக்கறது கிடையாது. Romanticஆன வெளிப்பாடு சில குறிப்பிட்ட கவிதைகளுக்குதான் பொருத்தமானதா இருக்க முடியும். சமூக ஈடுபாடுங்கறபோது அந்த இடத்துலஅது romanticஆக வந்தா அது ரொம்ப ஆபாசமாதான் இருக்க முடியும். இந்த வகைல நாம வானம்பாடிக் கவிதைகளைப் பார்க்கும்போது, பொதுவா அவங்க சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் எழுதுறாங்க. ஆனா சமூகப் பிரச்சினைகள் எந்த அளவுக்கு ஆழ்ந்த உணர்ந்து எழுதியிருக்காங் கன்னு தெரியல. அவங்க usage of language ரொம்பவும் romanticஆக இருக்கறதால அந்தக் கவிதைகள் நீர்த்துப்போயிடறது. அவை எழுதப்

படுவதின் முக்கியமான purposeஐயோ அவை serve பண்ணுவதில்லை. ஆனா அதில சில exceptionsம் இருக்கும்.

பிரம்மராஜன்: தமிழ்ச் சூழல்ல ... ஏன் இந்தியச் சூழல்லயே நெரூடாவோட statureக்கோ, லோர்காவோட integrityக்கோ அல்லது ஸ்டீவன் ஸ்பென்டரோட் integrityக்கோ ஒரு கவிஞனை நம்மால பார்க்க முடியலை. Outputலயும் சரி, கவிதையை சாதிச்ச முறையிலேயும் சரி, அவங்க நடத்திய வாழ்க்கை முறையிலும் சரி, அவங்கமாதிரி இங்கு ஒருத்தரையும் நாம பார்க்க முடியலை. ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

ஆத்மாநாம்: அங்க பல மாற்றங்கள் உருவாகுது.

பிரம்மராஜன்: எதில... ?

ஆத்மாநாம்: அவங்க systemல்

பிரம்மராஜன்: System of what?

ஆத்மாநாம்: அவங்க வாழ்க்கை முறைல, அதில பல விதமான மாற்றங்கள் அடிக்கடி உருவாறதால அவங்க உடனடியா வெளிப்படுத்திக்கறாங்க. அந்த மாற்றங்களுக்கு அவங்க react பண்றாங்க. ஆனா இந்தியால எவ்வளவோ விதமான மாற்றங்கள் வந்திட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய நாடா இருந்து இவ்வளவு மொழிகள் இருக்கும் போது, நீங்க சொல்ற statureஉடன் ஒரு poet உருவாற அளவுக்குப் பாதிப்புகள் இல்ல. National levelல்ல ரவீந்திரநாத் தாகூர் ஒருத்தர் பேசப்பட்டிருக்கார். ஆனா பாரதியாரையோ இல்ல ஆந்திராவில, கர்நாடகாவில, இல்ல மஹாராஷ்ட்ராவில் இருக்கிற கவிஞர்களையோ அந்த levelல்ல பேசப்பட்டதாசொல்ல முடியல, அதை posterityதான் சொல்லணும். நாம ஒண்ணும் சொல்ல முடியாது.

பிரம்மராஜன்: அதாவது பின்னால வரவங்கதான் சொல்லணும்...

ஆத்மாநாம்: ஆமாம்.

பிரம்மராஜன்: Mathew Arnoldங்கற ஆங்கிலக் கவிஞர் - விமர்சகர் தன்னுடைய Preface to the Study of poetryங்கற சின்ன கட்டுரையோட முன்னுரையில (1853ல் வெளியானது) தன் காலத்துக்குச் சற்று பின்னால மதத்தோட இடத்தைக் கவிதை நிரப்பிடும்னு சொன்னார். இது டார்வினோட Origin of Species வெளியானதோட காரணமா இருக்கலாம். அந்தச் சமயத்துல கொஞ்சம் மதம் ஆட்டம் கண்டுபோனதால இதைச் சொல்லியிருக்கலாம். அதுக்கும் இன்றைய தமிழ்க் கவிதைக்கும் அல்லது பொதுவா உலகக் கவிதைக்கும் ஏதாவது relevance இருக்குமா?

ஆத்மாநாம்: கண்டிப்பா இருக்கு. முக்கியமா நம்ம நாட்டிலேயே இருக்கு. ஏன்னா நம்ம cultureல் வந்து dogmatic ideas, religious beliefs இதெல்லாம் ஒரு விதமான அர்த்தத்தையும் வாழ்க்கைக்குக் கொடுக்கறது கிடையாது. அந்த மாதிரி நேரத்துல ...

பிரம்மராஜன்: அதாவது வெறும் சடங்காகிப்போன மதத்தைப் பத்திச் சொல்றீங்க இல்லையா? நம்ம இந்து மதம் வாழ்தலே மதமாகியிருக்கிற ஒரு மதம். பின்னால ஏற்பட்டசில விளைவுகளினால அது வெறும் சடங்காகிப் போச்சுன்னு தாகூரே தன்னுடைய பல கட்டுரைகள்ல சொல்லியிருக்கார். அந்த மாதிரிச் சடங்காகிப்போன ஒரு மதத்தை replace பண்ற capacity, ஒரு தகைமை கவிதைக்கு இருக்குன்னு நீங்க நம்பறீங்களா?

ஆத்மாநாம்: அது இப்ப இல்லன்னாலும்கூட இன்னும் literacy rate increase ஆகும்போதும், அப்பறம் literatureல interest improve ஆகும் போதும் அதுலயும் குறிப்பாகக் கவிதைகள்ல interest அதிகரிக்கும் போதுதான் அதைச் சொல்ல முடியும். இப்போ immediateஆக poetry religionஐ replace பண்ணிடும்னு சொல்ல முடியாது. கண்டிப்பா replace பண்ணும், இந்த qualifications வரும்போது, கவிதை தன்னுடைய முழுப் பரிமாணத்தோட மக்களை ஈர்க்கும்போது அந்த effect வர முடியும்.

பிரம்மராஜன்: நாம இப்ப புதுக்கவிதை பத்தியே பேசி முடிக்காம இருக்கோம். ஆனா மேற்கில 1940களிலேயே இந்தப் புதுக்கவிதைகளையெல்லாம் தாண்டி அதாவது Verse-libre/Free-Verse என்கிறதையெல்லாம் தாண்டி anti-poetryங்கற விஷயம் வந்துருச்சு. அந்த மாதிரியான ஒரு வளர்ச்சி நிலை தமிழுக்கு இருக்கா? இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

ஆத்மாநாம்: எதிர்க்கவிதைங்கறதைப் பத்தி இன்னும் எந்த விதமான தெளிவான அபிப்ராயமும் form ஆகல. ஆனா இப்போ கவிதைகள் போற போக்கைப் பார்த்தா வேறவிதமான கவிதைகள் உருவாகும்னு சொல்ல முடியாது; இந்த எதிர்க்கவிதைகள் அப்படிங்கறஒரு வடிவத்துக்குள்ள தான் வர முடியும்னு தோணறது.

பிரம்மராஜன்: இன்னிக்கு எப்படி நவீன ஓவியத்தைப் பயன்படுத்தறவங்க அல்லது பயில்றவங்கன்னு சொல்லலாம் - அவங்க பல பேருக்கு மரபு வழியான ஓவியத்தைப் பத்தினபயிற்சி இல்லாம இருக்காங்க அல்லது புறக்கணிக்கறாங்க. அதே மாதிரி இன்னிக்குத் தமிழ்ல பேரிலக்கியங்கள் பற்றி அறிவு இல்லாமலே நிறைய பேர் கவிதைகள் எழுதிட்டிருக்காங்க. இவங்களோட கவிதைகள்லாம் எப்படி இருக்கும்? அதை identify பண்ண முடியுமா?்

ஆத்மாநாம்: மரபை அறிஞ்சு அதை மீறது ஒண்ணு. அந்த மாதிரிதான் இப்பநிறைய பேர் செய்யறாங்க. மிகச் சிலரே மரபு தெரியாம புதுசா அவங்க கவிதைகள்னு feel பண்ணறதை எழுதறாங்க. அவங்க கவிதைக்கும் இவங்க கவிதைக்கும் content levelல்ல variation இருக்கறதுக்கு possibilities கிடையாது. மரபை மீறறவனும் அவனுக்கு ஒரு clarityக்காகத்தான் அதைச் செய்யறான். ஆனா மரபைத் தெரியாதவன் மரபை மீறின கவிதைகள் இருக்கு இல்லையா? அதைப் படிக்கும்போது அவன் feel பண்ணக்கூடிய விஷயங்களைப் பொறுத்து அவன் கவிதைகள் எழுதறான் இரண்டு பேருமே ஒரே விஷயத்தைப் பத்திதான்

கவிதைகள் எழுதிண்டு வருவாங்க. அதுல வித்யாசம் இருக்கறதுக்கு வாய்ப்பு கிடையாது. மரபு தெரிஞ்சாதான் கவிதை எழுதலாம்கற qualification செல்லுபடி ஆகாது.

பிரம்மராஜன்: ஒரு கலாச்சாரப் பாரம்பர்யம் வேண்டாம்னு சொல்றீங்களா? T. S. எலியட் கவிஞர்கள் ஓரளவுக்காவது படிச்சிருக்கணும்னு நினைக்கறார். எழுதியிருக்கார். அதாவது அவங்களுடைய creativityக்கு அல்லது spontaneityக்குக் குந்தகம் விளைவிக்காத அளவுக்கு அவர்கள் பொது விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுருக்கனும்னு, awareஆக இருக்கனும்னு சொல்றார்.

ஆத்மாநாம்: மரபு பள்ளிக்கூடங்கள்ல இருந்தே ஆரம்பம் ஆறது. தமிழ்ல எழுதக்கூடிய ஒரு கவிஞனோ அல்லது எழுத்தாளனோ மரபு ஓரளவுக்குத் தெரிஞ்சுதான் எழுதறான். அந்த வகைல மரபு முழுக்க முழுக்கத் தெரியாதுன்னு சொல்ல முடியாது. ரொம்பவும் மரபு பற்றித்தெரியும்னு confidentஆக சொல்றவங்களோட complete பண்ண முடியாமே இருக்கலாம். ஆனா அவங்களுக்கும் ஓரளவு மரபு தெரிஞ்சுதான் அவங்க புது விஷயங்களை எழுதறாங்க.

பிரம்மராஜன்: இந்த மாதிரியான ஆழ்ந்த கலாச்சாரப் பாரம்பரியம் எந்தெந்த கவிஞர்கள்கிட்ட இருந்து வெளிப்பட்டிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஆத்மாநாம்: ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, நகுலன், சிவராமு அப்படின்னு சொல்லலாம்.

பிரம்மராஜன்: சரி, Major poets அப்படிங்கற கேள்வியை கவிதை வளர்ந்திட்டிருக்கற அந்த கால கட்டத்துல எழுப்பறது தகுதியா இருக்குமா?

ஆத்மாநாம்: என்னைப் பொறுத்தவரைக்கும் இப்ப எழுதற அத்தனை பேருமே Minor Poetsதான்னு தோண்றது. காவியங்களோ, மிக நீண்ட கவிதைகளோ ரொம்ப உள்ளாழ்ந்த கருத்துக்கள் இருக்கக்கூடிய கவிதைகளோ எழுதக்கூடியவங்களைத்தான் Major Poetனு சொல்லலாம். இப்பொ எழுதக்கூடிய கவிஞர்கள் முக்கால்வாசி பேர் spontaneousஆக எழுதறாங்க, இல்லை technicalஆக அவங்களுக்கு இருக்கற knowledgeஐ வெச்சு எழுதறாங்க, மற்றபடி major poetsங்கற categoryல கம்பன் மாதிரியோ, இளங்கோவடிகள் மாதிரியோ, திருவள்ளுவர் மாதிரியோ, பாரதி மாதிரியோ இப்ப இருக்கற கவிஞர்கள் யாரையுமே சொல்ல முடியாது.

பிரம்மராஜன்: அப்ப நீண்ட காவியங்கள் எழுதினாத்தான் ஒருவன் major poetஆக இருக்க முடியுமா?

ஆத்மாநாம்: ஒரு கவிஞனோட மொத்தப் படைப்பையுமேகூட ஒரு நீண்ட காவியமா எடுத்துக்கலாம். ஒரு தொகுப்பை நீங்க நீண்ட காவியமா எடுத்துகிட்டீங்கனா அதுல ஒரு forceம், clarityம், total understanding of lifeம், அப்பறம் various aspectsthat attract life இதைப் பத்தின understanding இருந்தாத்தான் நீங்க அவரை major poetன்னு சொல்ல

முடியும். அந்த வகைல பாத்தா இப்பொ சிறு சிறு தொகுப்புகள்தான் வந்திருக்கும். So we cannot say anything now.

பிரம்மராஜன்: கவிதை ஒரு தொழிற்சாலை மாதிரி இன்னிக்கு ஆயிருச்சு. நிறைய உற்பத்தி செய்யப்படுது. அப்படிப்பட்ட இந்தக் கட்டத்துல நாம் இனம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப்போகுது. நீங்க ஒரு கவிதை இதழோட ஆசிரியர்ங்கற முறைல இதற்கு ஏதாவது அளவுகோல் வச்சிருக்கீங்களா? எப்படி நீங்க கவிதைகளைத் தேர்ந்தெடுக்கறீங்க?

ஆத்மாநாம்: தொழிற்சாலைன்னு குறிப்பிடக்கூடிய கவிதைகள் எல்லாமே துணுக்காகவோ இல்லை விடுகதைகளாகவோ இந்த வகைப்பட்ட கவிதைகளாகவோதான் இருக்கு. அந்தமாதிரி கவிதைகள் மொத்தத்தையும் நீங்க ஒதுக்கித் தள்ளிட்டுப் பாத்தீங்கனா நாங்க editபண்ற பத்திரிகைக்கு வரக்கூடிய கவிதைகள்ல வந்து ஒரு use of language, idea, thoughtஅப்பறம் ஒரு inner beautyன்னு சொல்றாங்க - அதை explain பண்றது கஷ்டம் - அந்த inner beauty, உள்ளழகு ஒரு organic element, அந்த poetryயோட structureல இருக்குன்னா அந்தக் கவிதையை நாங்க பிரசுரிக்கிறோம். அதுல ஏதாவது ஒரு சில elements இருந்தாக்கூட போடறோம். அந்த வகைலதான் கவிதைகளைத் தேர்வு செய்ய முடியறது, வேற எந்த set-rulesம் கிடையாது.

பிரம்மராஜன்: ஒரு வாசகனோட ‘status-quo’வை disturb பண்றது நல்ல கவிதைங்கற அளவுகோலை ஒரு உச்சமான தேர்வா வைக்கலாமா?

ஆத்மாநாம்: கண்டிப்பா. இந்த statement உடன் நான் முழுக்க ஒத்துப் போறேன்.

பிரம்மராஜன்: நல்ல கவிதை ‘இரும்பு - மனோநிலை’யை disturb பண்றது...

ஆத்மாநாம்: பாதிக்கிறது.

பிரம்மராஜன்: அது தன்னோட உலகத்துக்குத்தான் வாசகனை இழுக்கிறது. இதுக்கு எதிர்மறையா ஒரு நர்சரி ரைமை எடுத்துக்கலாம். பா - பா ப்ளாக் ஷீப்ங்கற ரைமைப் படிக்கும்போது நாம் disturb ஆகறதில்லை. ஓஹோ! அப்படியான்னுதான் கேக்கறோம். ஆனா சில கவிதைகளைப் படிக்கும்போது நாம நம்பளையே மறந்துடறோம்...

ஆத்மாநாம்: We are moved.

பிரம்மராஜன்: ஆமாம். We don’t forget ourselves...

ஆத்மாநாம்: We are moved.

பிரம்மராஜன்: நாம கவிதையோட உலகத்துக்கு எடுத்துட்டுப் போகப்படறோம். உதாரணமா அக்னிக்குஞ்சொன்று கண்டேன்கற பாரதியோட கவிதையைச் சொல்லலாம். கவிதையை இனம்காணறதுக்கு இதை ஒரு நல்ல அளவுகோல்னு சொல்லலாம் இல்லையா?

ஆத்மாநாம்: கண்டிப்பா. இது மிக முக்கியமான அளவுகோல். இதை வெச்சுதான் நாம் கவிதை இயலையே தீர்மானம் செய்யமுடியும். அப்படின்னுதான் நினைக்கிறேன்.

பிரம்மராஜன்: முதல் நபர் பார்வையில் சொல்லப்படற கவிதை, முன்னிலைப்படுத்தப்பட்ட கவிதை, இவை இரண்டுமே அதிகம் சிரமம் தரவில்லை. இது இல்லாம narratorனு ஒருத்தர் இல்லாத ஒரு omniscient view, point of view அந்த மாதிரி narratorம் இல்லாம, நானும் இல்லாம, நீயும் இல்லாம சிலர் கவிதை எழுதறாங்க. அந்த கவிதைகள் ரொம்ப சிக்கலா இருக்கு. இதுபற்றி?

ஆத்மாநாம்: இந்தமாதிரி கவிதைகள் ரொம்ப கம்மி. ஒண்ணு தன்னிலைபடுத்தியோ இல்லைனா முன்னிலைப்படுத்தியோதான் பெரும்பாலான கவிதைகள் எழுதப்படறது. ஏன்னா அதுதான் simpleஆக இருக்கு communicationக்கு. இப்போ வெறும் description மட்டும் ஒரு கவிதைல நீங்க குடுக்கறீங்கனா அது எப்போதுமே complexஆகதான் இருக்கும்னு சொல்லமுடியாது. ஏதாவது சில சமயம்தான் complexஆக இருக்கும். அந்தமாதிரிக் கவிதைகள் எல்லாமே சிக்கலா இருக்கும்னு என்னால ஒத்துக்க முடியாது. ஆனா இந்த மாதிரிக் கவிதைகள் சிக்கலாறதுக்கு முதல்ல நாம obscurity பத்தி பேசின விஷயங்களைத்தான் மறுபடியும் நினைவுபடுபத்திக்கணும்.

பிரம்மராஜன்: தமிழ்ல கவிதை இயக்கமா வளர்ந்திருக்குன்னு உங்களால சொல்ல முடியுமா?

ஆத்மாநாம்: ஆரம்பத்திலிருந்தே ஒரு இயக்கமாதான் கவிதை இருந்திருக்கு. ஆனா அதுல பல போக்குகள் உருவாகியிருக்கு. ஒவ்வொரு கால கட்டத்திலயும் ஒவ்வொரு விதமான போக்குகள் உருவாறது. ஒரு சிலர் யதார்த்தத்தைக் கடைபிடிச்சாங்க. சிலர் வேற வெளிப்பாட்டுமுறைகள்ல வித்தியாசம் காட்டினாங்க - படிமங்கள் மூலமா தங்களை வெளிப்படுத்திக்கமுயன்றாங்க. தமிழ்ல எப்போதுமே கவிதை இயக்கமாதான் இருந்திருக்குன்னு சொல்ல முடியும். ஆனா பல போக்குகள் இருக்கு. ஒரு போக்கு அழியறது. இன்னொரு போக்கு உருவாறது. இல்லனா இரண்டு மூன்று போக்குகள் parallelஆக வளர்ந்திட்டிருக்கு. இந்த மாதிரிதான் இயக்கத்தைப்பத்தி என்னால சொல்ல முடியும்.

பிரம்மராஜன்: கடைசியா இன்னொரு கேள்வி. நிறைய வார, மாதப் பத்திரி கைகள்லவர்ற கவிதைங்க கவிதையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு என்ன விளைவைக் கொடுக்கும்?

ஆத்மாநாம்: கண்டிப்பா கவிதையோட ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு நீங்க சொன்ன கவிதைகள் அடிகோலாகாது. ஏன்னா அதுல போலியான கவிதைகள்தான் கவிதைகள்ங்கற பேர்ல வெளியாறது. அதைப்படிக்கறவங்க அதுதான் கவிதை அப்படின்னு நம்பற வாய்ப்புகள் அதிகமா இருக்கு, அதுல genuineஆன கவிதைகள். சிறு பத்திரிகைகள்ல எழுதக்கூடிய கவிஞர்களோட கவிதைகள் வரும்போது அவங்களுக்கு கொஞ்சம் differentஆன reading material கிடைக்கிறது. இப்பலாம் கவிதையை யாரும் ரொம்ப seriousஆக எடுத்துக்கறது கிடையாது அப்படின்னுதான் தோணறது. ஆனா பொதுவா நல்ல கவிதைக்கு வார, மாத பத்திரிகைகள்ல, பல லட்சக்கணக்குல விற்பனையாகிற பத்திரிகைகள்ல வரக்கூடிய கவிதைகள் குந்தகமாகத்தான் இருக்கும் எப்போதும்.

*****

ஆத்மாநாம் படைப்புகள் - பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்

Nov 14, 2013

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு p5 கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! ஸ்வாமி ஜெய ஜெகதீச ஹரி!’ என்ற சத்தம் வெளியே போக வழியின்றி, வீட்டின் சுவர்களிலும் கண்ணாடி ஜன்னல்களிலும் மோதி மோதி எதிரொலிக்கும். அது போதாதென்று ஜால்ரா சத்தமும் சேர்ந்துகொள்ளும். வீட்டுக்காரரின் மனைவி டோலக்கை திரும்பப் பாடுவாள். நடுக்கும் குளிரில் எழுந்து உட்கார்ந்துகொண்டு ரஜாயை விட்டு வெளியே வர மனசில்லாமல் பஜனை சத்தத்தில் செவிப்பறைகள் கிழிய கண்கள் திகுதிகுவென்று எரிய என்ன செய்வதென்று புரியாமல் உட்கார்ந்திருக்கிறோம். மற்றொரு வீட்டில் கக்கூஸ் பிரச்சினை. அந்த வீட்டில் வீட்டுக்காரரும், அவர் மனைவியும் கக்கூஸ் போய்விட்டு கைகளை நன்றாக சோப்புப் போட்டு கழுவுவார்களே ஒழிய, கக்கூஸில் போதிய அளவு தண்ணீர் விட வேண்டும் என்று தெரியாது. தில்லியிலிருந்து சென்னை போகும் போது காலையில் எழுந்து ஜன்னல் வழியே பார்த்தால், மக்கள் ஒரு சோடா புட்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒதுக்குப்புறமாக போவது தெரியும். அங்கேயாவது தண்ணீர்ப் பிரச்சினை என்று சொல்லலாம். இங்கு அந்தப் பிரச்சினையும் இல்லை. “நாற்றம் தாங்க முடியவில்லை. நிறைய தண்ணீர் விடுங்கள்” என்று வீட்டுக்காரரிடம் சொன்னேன். “கக்கூஸ் நாறத்தானே செய்யும்; இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு கிராமங்களில் மக்கள் தண்ணீர் இல்லாமல் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பது பற்றியும், அப்படி இருக்கும்போது இங்கு நகரங்களில் நாம் கக்கூஸுக்கென்றே எத்தனை கேலன் தண்ணீரைக் கொட்டி வீணடிக்கிறோம் என்பது பற்றியும் விரிவாக ஒரு லெக்சர் கொடுத்தார். ஆக, அவரும் அவர் மனைவியும் போய்விட்டு வந்தால், நானேதான் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இப்படி ஒவ்வொரு வீடாக மாற்றிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு நாள் என் நண்பர் ஒருவர், தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், தன் வீட்டில் இரண்டு மூன்று வருடங்கள் வந்து இருந்து கொள்ளலாம் என்றும் சொன்னார். ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. நண்பரின் வீடு ‘ஜமுனா பாக்’ என்று சொல்லப் படுகிற கிழக்கு தில்லியில் இருந்தது. கிட்டத்தட்ட தில்லி ஜனத்தொகையில் பாதி அளவு மக்கள் கிழக்கு தில்லியில் இருந்தாலும், இந்த ‘ஜமுனா பாக்’ பகுதி என்பது, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சராசரி நபருக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு இடமாகத்தான் இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நபர்கள் கடத்தப்படுதல், தில்லியின் மிகப்பெரிய மலிவுவிலை சாராயக்கடை போன்ற விஷயங்களே இதற்குக் காரணமாகக் கருதப்பட்டாலும், எனக்கு என்னவோ தில்லியை கிழக்கு தில்லியுடன் இணைக்கும் இரண்டு பாலங்கள்தான் மிகப்பெரிய பிரச்சினை என்று தோன்றியது.

இருக்கின்ற மக்கள் தொகைக்கும், வாகனங்களுக்கும் இதுபோல் ஒரு பத்து பாலமாவது தேவைப்படலாம் என்கிற நிலையில் இந்த இரண்டு பாலங்கள். பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் ஆயுதமேந்திய போலீசார். வாகனங்களை நிறுத்திச் சோதித்துப் பார்ப்பதற்காக தடைகள். ஒவ்வொரு வாகனமும் இந்தத் தடையைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதால், எப்போதுமே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் டிராஃபிக் ஜாம். ஒரு ஆள் நடந்து செல்லும் வேகத்தைவிட குறைவான வேகத்தில்தான் வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இதற்கிடையில் ஏதாவது ஒரு வாகனம் முந்திச் செல்ல முயன்று, ஏடாகூடமாக மாட்டிக் கொண்டுவிட்டால், ஒரு வாகனம் கூட நகர முடியாமல் போய், நிலைமை சீராக பல மணி நேரம் ஆகும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓடச் செய்யும் அளவுக்கு எல்லா வாகனங்களிலிருந்தும் கேட்கும் ஹாரன் சப்தங்கள். பாலத்தை ஒவ்வொரு முறை தாண்டும்போதும் ஜமுனா பாகிற்கு வந்திருக்க வேண்டாம் என்று தோன்றும்.

மீனாவுக்கோ வேறுவிதமான கவலைகள். மயூர் விஹாரின் மூன்றாவது செக்டாரின் பிரதான சாலையில் ஒரு தென்னிந்தியத் தம்பதி நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்களின் அருகே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, அந்தப் பெண்ணை ஆட்டோவில் இழுத்துப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டது. பட்டப்பகலில் நடந்த நிகழ்சி. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டதால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. மறுநாள் தினசரிகளில் வந்திருந்தது. இன்னொரு சம்பவம். இதுவும் எங்கள் மூன்றாவது செக்டாரிலேயே நடந்த நிகழ்ச்சிதான். காலை பதினோரு மணி அளவில் ஒரு கதவைத் திறந்து பார்ப்பது வழக்கமில்லை என்பதால், கதவின் ‘பீப் ஹோல்’ வழியே எட்டிப் பார்த்திருக்கிறார் வீட்டிலிருந்த பெண்மணி. மூன்று வாட்டசாட்டமான ஆட்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சற்றுத் தயங்கி, “நீங்கள் யார்? என்ன வேண்டும்?” என்று கேட்க, ”நாங்கள் ‘தேஸு’ (1)விலிருந்து வந்திருக்கிறோம்; இந்த வீட்டின் மீட்டர் ரொம்ப வேகமாக ஓடுவதாக புகார் வந்திருக்கிறது; பார்க்க வேண்டும்” என்று சொல்ல, மறுபேச்சு பேசாமல் கதவைத் திறந்துவிட்டிருக்கிறாள் அந்தப் பெண். அவளைக் கற்பழித்து கொலை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் அந்த நபர்கள்.மறுநாள் தினசரிகளில் வந்திருந்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் மீனாவை ரொம்பவும் கலவரப் படுத்தியிருந்தது.

“நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்?” என்று ஏகப்பட்ட தைரிய வார்த்தைகள் கூறி, இந்த வீட்டினால் கிடைத்திருக்கும் அனுகூலங்களையும் விலாவாரியாக எடுத்து விளக்கினேன்.

கிரௌண்ட் ஃப்ளோர் வீடு. ஒண்டுகுடித்தனப் பிரச்சினை இல்லாதது. விசாலமான ஹால். தனி கிச்சன், படுக்கை அறை, இரண்டு வாசல், ஒரு சின்ன தோட்டம் போடும் அளவுக்கு நிலம், ஏதோ பெயருக்கு ஒரு வாடகை.

”இத்தனை வசதிகளுக்காக இந்தக் கிழக்கு தில்லியைப் பொறுத்துக் கொள்” என்றேன்.

இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே ரேக்கி எனக்குப் பழக்கமானான். சாமான்கள் டெம்போவில் வந்து இறங்கியபோது ஒரு பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சர்தார் பையன், “இஸ் கர் மே ஆப் ஹீ நயா ஆரஹே ஹே(ங்) அங்கிள்? ஆப் கா நாம் க்யா ஹை?” என்று என்னைக் கேட்டான். “பெஹலே ஆப்கா நாம் பதாவோ?” என்றேன். “மேரா நாம் ரேக்கி ஹை... உதர் தேக்கியே.. இஸ் சடக் கே உஸ்தரா.. ஏக் குருத்வாரா திகாயி படுதீ ஹை நா. உஸ் கே நஸ்தீக் கர்” என்றான் சிறுவன்.

மீனாவைப் பார்த்து, “பயல் படுசுட்டியாகத் தெரிகிறார்னே” என்றேன். சொன்னதும் ரேக்கி என்னைப் பார்த்து, “சுட்டின்னா என்ன அங்கிள்?” என்று தெளிவான தமிழில் கேட்டான்.

ஆச்சரியத்துடன், “உனக்கு எப்படித் தமிழ் தெரியும்?” என்று கேட்டேன்.

”நான் தமிழ் ஸ்கூலில்தான் படிக்கிறேன் அங்கிள். என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் கூட தமில்தான். அதனால் தமில் தெரியும் எனக்கு. ஆனால் சுட்டின்னா என்ன அங்கிள்?”

“சுட்டின்னா ‘நாட்டி’. இந்தியில் ‘நட்கட்’. அது சரி, உன் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?”

அப்பாவைப் பற்றிக் கேட்டதும் அவன் முகம் மாறுதல் அடைந்தது. இவ்வளவு நேரம் அவன் கண்களில் தெரிந்த ஆர்வமும் ஒளியும் மங்கிப் போனது.

“க்யா ஹுவா ரேக்கி?”

“குச் நஹி அங்கிள். அப்னி கஹானி ஔர் ஏக் தின் போலுங்கா.”

கஹானியா? பன்னிரெண்டு வயதுப் பையனுக்கு ஒரு கஹானி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது மிகவும் சோகமானதாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றியது.

பிறகு ரேக்கி படிக்கும் பள்ளியைப் பற்றி விசாரித்துக்கொண்டேன். லோதி ரோட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி. இங்கிருந்து தொலைவுதான் என்றாலும், ஸ்கூல் பஸ்ஸே இருப்பதாகச் சொன்னான் ரேக்கி. என் மகள் ரேஷ்மாவையும் அந்தப் பள்ளியில்தான் சேர்ப்பதாக இருந்ததால், இந்த விபரங்கள் சற்று நிம்மதி அளித்தன.

ரேஷ்மா ரேக்கியோடு ரொம்பவும் ஒட்டிக்கொண்டாள். எப்போதும் எங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டு, இருட்டிய பிறகுதான் வீட்டுக்குப் போவான் ரேக்கி. சில சமயங்களில் அவனுடைய அம்மா வந்து அழைத்துப் போவாள்.

அவன் குறிப்பிட்ட கஹானி பற்றி அவனிடம் கேட்டு அவனை வருத்தமடையச் செய்ய வேண்டாம் என்று நினைத்து, அவனிடம் அதைப் பற்றிபிறகு நான் கேட்கவில்லை. ஆனால் அடிக்கடி அவனுடைய அம்மாவைத்தான் பார்த்திருக்கிறேனே ஒழிய, அவனுடைய அப்பாவைப் பார்த்ததில்லை என்ற விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் ரேஷ்மா, “வெளியே டாட்டா போய் ரொம்ப நாளாகிறது. எங்கேயாவது அழைத்துப் போ” என்றாள். “வருகிறாயா ரேக்கி? உன் அப்பா ஒத்துக் கொள்வாரா?” என்று கேட்டேன். கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, “ஓகே அங்கிள், அப்னி கஹானி பதாவுங்கா அபி” என்று சொல்ல ஆரம்பித்தான்.

ரேக்கியின் அப்பா - சர்தார் சுச்சா சிங் - ராணுவத்தில் பணியாற்றியவர். சிறந்த ராணுவ வீரருக்கான விருதுகளும் பெற்றவர். மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் பஞ்சாப் தீவிரவாதிகளை அடக்குவதற்கான சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு பஞ்சாபுக்கு அனுப்பப்பட்டார். லால் கிலாவில் கலிஸ்தான் கொடியை ஏற்றியே தீருவேன் என்று சபதமிட்ட கொடிய தீவிரவாதியான சந்த் பிந்த்ரான்வாலேயை ஒழித்துக் கட்டுவதற்காகச் சென்ற மாதம் நடந்த பயங்கர சண்டையின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுள் சர்தார் சுச்சா சிங்கும் ஒருவர். அவரது வீரச் செயலை மெச்சி நன்றிக்கடனாக அவரது மனைவியான ஜஸ்பீர் கௌருக்கு ஒரு அரசு அலுவலகத்தில் வேலையும் தரப்பட்டது. ஜஸ்பீர் கௌருக்கு படிப்பு கிடையாது என்பதால், சப்ராஸி வேலை தான் கிடைத்தது.

ரேக்கியிடமிருந்து இந்தக் கஹானியைக் கேட்டதும், போன மாதத்து பேப்பர் கட்டை எடுத்துவந்து, ஜூன் 5க்கு மேற்பட்ட பேப்பர்களைப் புரட்டினேன். நீல நட்சத்திர நடவடிக்கை என்பது எங்கோ நடந்த விஷயம் என்பதாக இருந்தது மாறி, இப்போது என்னருகே நெருங்கி வந்து என் வீட்டுக்குள்ளேயே நுழைந்து விட்டதாகத் தோன்றியது. உயிர் நீத்த மொத்த ராணுவ வீரர்கள் 83 பேர் என்றும், காயமுற்ற ராணுவ வீரர்கள் 248 பேர் என்றும், பொது மக்களும் தீவிரவாதிகளும் சேர்ந்து முப்பது பெண்களும் ஐந்து குழந்தைகளும் அடக்கம் என்றும் செய்தித்தாளில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஹர்மந்திர் சாஹிபைத் தவிர, தர்பார் சாஹிபின் பல பகுதிகலும் டாங்கிகளால் சின்னாபின்னமாக்கப் பட்டிருந்த புகைப்படங்களும் இப்போது வேறுவித அர்த்தத்தைத் தருவனவாகத் தோன்றின.

ஒரு மாதத்திற்கு முன்பு வெறும் எண்களாகத் தெரிந்த விபரங்கள், இப்போது ரத்தமும் சதையுமாக - எத்தனையோ பேரை அனாதைகளாக விட்டுப் போய்விட்ட மனித உயிர்களாகத் தெரிய ஆரம்பித்தன. சர்தார் சுச்சா சிங்கின் தியாகத்திற்காக ஜஸ்பீர் கௌருக்கு மெடல் தரும்போது, இந்த ரேக்கி என்கிற, அப்பாவை இழந்த சிறுவனைப் பற்றி அரசு யோசிக்குமா? வேதனையோ, கவலையோ அடையுமா? எந்த காரணத்திற்காக இவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள்? எடுத்துவிட்டெறிந்து செலவு செய்வதற்கு, இந்த ராணுவ வீரர்களெல்லாம், அரசாங்கத்தின் பாக்கெட்டிலிருக்கும் நயாபைசாக்களா?

மீண்டும் மீண்டும் அந்தச் செய்தித்தாள்களையே புரட்டிக் கொண்டிருந்தேன். தீவிரவாதிகளைப் பற்றியும், அவர்களிடமிருந்த வெடி மருந்து மற்றும் நவீன ரக ஆயுதங்கள் பற்றியும், சுரங்கப் பாதைகள் பற்றியும், நிலவறைகள் பற்றியும், அகால் தக்தை நோக்கி முன்னேறிய ராணுவ வீரர்கள் குருவிகள் சுட்டுக் கொல்லப்படுவது போல் ஒவ்வொருவராக சுடப்பட்டு வீழ்ந்தது பற்றியும், வேறு வழியில்லாமல் டாங்கிகள் அனுப்பப்பட்டு அகால் தக்தின் பெரும் பகுதி அழிந்து விட்டது பற்றியும், நிச்சயமாக ஒரு கார்சேவா மூலம் அழிந்துவிட்ட அகால் தக்தை மீண்டும் நிர்மாணிப்போம் என்று அறிவித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசியது செய்தித்தாள்...

அகால்தக்த் - காலமற்றவனின் அரியணை - அகாலத்தை காலத்திற்குள் அடக்கும் முயற்சியில் ஒரு அகால் தக்த் - காலத்தை அகாலமாக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள்! கார் சேவா அகாலத்திற்கு ஒரு அரியணை அமைத்துவிடலாம். ஆனால் தங்கள் காலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு அகாலமான அவைகளுக்கான காலத்தை அளிக்க ஏதாவது ஒரு கார் சேவா இருக்கிறதா?

ரேக்கியும் அந்த செய்தித்தாள்களைப் பார்த்தபடியே என்னருகில் உட்கார்ந்திருந்தான்.

ரேக்கியின் கதையைக் கேட்ட பிறகு அவன் மீது எனக்கிருந்த ஈடுபாடு அதிகமாயிற்று.

”எங்கே போகலாம் ரேக்கி? உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வா. வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியே போகலாம். எங்கே போகலாம் என்று நீயும் ரேஷ்மாவும் முடிவுசெய்து கொள்ளுங்கள்” என்றேன்.

ரேஷ்மாவும் ரேக்கியும் கூடிக் கூடிப் பேசினார்கள். பஞ்சாபியிலேயே பெசிக்கொண்டார்கள். ரேக்கியுடன் பேசிப் பேசி பஞ்சாபியை சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டு விட்டாள் ரேஷ்மா.

இருவருமாக பேசி முடித்துக் கடைசியில், “லால் கிலா போகலாம் அங்கிள்” என்றான் ரேக்கி.

”லால் கிலாவா? அங்கே உங்களுக்கு ‘போர்’ அடிக்குமே? அதோடு உள்ளே போய் ரொம்ப அலையவும் வேண்டியிருக்கும். வேறு எங்காவது கனாட் பிளேஸ், பாலிகா பஸார் என்று போனால் ஜாலியாக இருக்கும். ஷாப்பிங்கும் செய்யலாம்” என்றேன்.

“அதற்கில்லை அங்கிள். அந்த பிந்த்ரான்வாலே லால்கிலாவில் கலிஸ்தான் கொடியைப் பறக்க விடுவேன் என்று சொன்னதால்தானே சண்டை வந்து, என் அப்பா செத்துப் போனார். அதனால்தான் அந்த லால் கிலாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது” என்றான்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபொழுது ரேக்கி இதுவரை ஒரு சினிமாகூட சினிமா தியேட்டருக்குச் சென்று பார்த்ததில்லை என்றும் தெரிந்தது. எல்லாம் டி.வி.யில்தான் பார்த்திருக்கிறான்.

மாதம் ஒரு இடம் என்று ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்: லால் கிலா, கனாட் பிளேஸ், பாலிகா பஸார், ஒரு நல்ல இந்தி சினிமா, ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட். முதலில் லால் கிலா. மீனா எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் நானும், ரேஷ்மாவும், ரேக்கியும் கிளம்பினோம். ரேஷ்மாவுக்கும், ரேக்கிக்கும் லால் கிலா மிகவும் பிடித்துப் போயிற்று. குதித்துக் குதித்து ஓடினார்கள். திவானி ஆம், திவானி காஸ் என்ற இரண்டு மண்டபங்களிலும் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். சேஷ் மஹாலின் கண்ணாடி வேலைப்பாடுகளைப் பார்த்து பிரமித்து நின்றார்கள். ‘தங்கத்தால் செய்து வைரத்தால் இழைத்த மயிலாசனம் இங்கேதான் இருந்தது’ என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டு, அந்த மயிலாசனத்தை யார் எடுத்துப் போனது என்று கவலைப்பட்டார்கள். ஔரங்கசீப் கட்டிய ‘பேர்ள் மாஸ்க்’ பூட்டியிருந்ததால், அதன் கதவிலிருந்த துளைகளின் வழியே எட்டிப் பார்த்தார்கள்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வரும்போது அங்கேயிருந்த ராணுவ முகாம்களைப் பார்த்தோம். ரேக்கி ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தேன். அவன் ஒன்றும் கேட்கவில்லை. உற்சாகமாக ரேஷ்மாவுடன் பஞ்சாபியில் பேசிக்கொண்டு வந்தான். ரேஷ்மாவின் பஞ்சாபியையும் அவளுடைய உச்சிக் கொண்டையையும் பார்த்தால் அவளை ஒரு தமிழ்க் குழந்தை என்றே சொல்ல முடியாது போல் தோன்றியது. குழந்தைகள் இருவரும் பஞ்சாபியில் பேசிக் கொண்டு என்னுடன் தமிழில் பேசுவதையும், அவர்களுடன் வந்திருக்கும் ஒரு தென்னிந்தியனான என்னையும் மற்றவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.

வெளியே வந்தபோது மணி ஏழு ஆகியிருந்தது. கோடைக்காலமாதலால் இன்னும் சூரியன் மறையவில்லை. குழந்தைகள் களைத்துப் போயிருந்ததால், இப்படியே பஸ் பிடித்து வீட்டுக்குப் போவதை விட, கனாட் பிளேஸ் போய் சைனீஸ் ரெஸ்டாரெண்டில் சாவகாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. ரேக்கியும், ரேஷ்மாவும் என் யோசனையைக் கேட்டு மீண்டும் உற்சாகமானார்கள்.

ரெஸ்டாரண்டின் உள்ளே நுழைந்ததும் - அதன் அரையிருட்டு - மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார வண்ண விளக்குகள் - சர்வர்களின் நீண்ட தொப்பி - மேஜையின் மேல் ஒரு அலங்காரமான கிளாஸில் வைக்கப்பட்டிருந்த கை துடைக்கும் பேப்பர் - மிக மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாப் இசை - எல்லாமாகச் சேர்ந்து அந்த சூழலை ஏதோ ஒரு கனவுலகத்தைப் போல் ஆக்கியிருந்தது. ஆச்சரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்த ரேஷ்மா, “சினிமாவில் பார்ப்பது போல் இருக்கிறதே!” என்றாள்.

“ஆனால் நான் என் அப்பாவுடன் ஒரு தடவை கூட இது மாதிரி இடங்களுக்குப் போனதில்லை” என்றான் ரேக்கி. கொஞ்சம்கூட தன் வருத்தத்தை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல், வெகு சாதாரணமான தொனியில் சொன்னான். மெனுவைக் கொண்டு வந்து கொடுத்தார் சர்வர். இருட்டில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டியிருந்தது. “முதலில் மூன்று சிக்கன் சூப் கொண்டு வாருங்கள். மற்றதை அப்புறம் சொல்கிறேன்” என்றேன்.

சோலே பட்டூரா, பாலக் பனீர், கோஃப்தா, நான், பிரெட் பீஸ் மசாலா, ஆலு ஃப்ரை என்று அயிட்டங்களின் சாதக பாதகங்களையும் பற்றி விவாதித்துவிட்டு, கடைசியில் இரண்டு சிக்கன் நூடுல்ஸ் வாங்கி மூன்றாகப் பங்கிட்டுச் சாப்பிடலாம் என்று முடிவாயிற்று. “இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து வெறும் நூடுல்ஸ்தானா?” என்று கேட்டேன்.

“அதையே சாப்பிடலாம் அங்கிள். மற்ற அயிட்டமெல்லாம் தான் வீட்டிலேயே கிடைக்கிறதே? அதோடு, சாப்பாடா முக்கியம்? இந்த இடமே போதுமே அங்கிள்?” என்றான் ரேக்கி. சொல்லிவிட்டு உடனே, “இந்த மாதிரி ஒரு இடத்திற்குக் கூட என் டாடியுடன் போனதில்லை அங்கிள்” என்றான். “அவர் இங்கே வேலையில் இருந்தபோது எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்றுதான் கிடந்தாரே ஒழிய, ஒரு இடத்திற்குக் கூட என்னை அழைத்துப் போனதில்லை. ‘இப்படியே வேலை வேலை என்று இரவு பகலாக அலைந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்’ என்று சொல்லுவாள் மம்மி. ஆனாலும் அவர் அதை கண்டுகொண்டதே இல்லை. எது கேட்டாலும் அதை வாங்கிக் கொண்டு வந்து தருவார். அல்லது மம்மியிடம் பணம் கொடுத்து வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் ஒரு தடவை கூட.. சூப் தோ பஹூத் படியா ஹை அங்கிள்... ஒரு தடவை தாஜ்மஹால் போயிருக்கிறோம். அப்போது கூட டாடி எங்களுடன் வரவில்லை. வீட்டுக்கு வந்திருந்த சாச்சி(2) கூடத்தான் நாங்கள் போனோம். ரொம்ப அன்பாகவும், செல்லமாகவும் பேசித் தட்டிக்கழித்து விடுவார். நானும் விடாப் பிடியாக அவருடன் பேசிப் பேசி ஒரு முறையாவது எங்களுடன் வரவேண்டும் என்று சொல்லி, கடைசியில் தர்பார் சாஹிப் போவது என்று முடிவாயிற்று.

ஆனால், அதே சமயத்தில்தான் தர்பார் சாஹிபில் ஏதோ பிரச்சினை என்று சொல்லி, அவருக்கு அங்கே ஸ்பெஷல் டியூட்டி போட்டார்கள். மம்மியுடனும், என்னுடனும் சேர்ந்து மூவருமாக தர்பார் சாஹிப் போக இருந்த சமயத்தில்தான் அவர் மட்டும் ஸ்பெஷல் டியூட்டியில் போனார். ‘திரும்பி வந்து அழைத்துச் செல்கிறேன்; நிச்சயம் நாம் ஒன்றாகச் சேர்ந்து போகலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் டாடி திரும்பவே இல்லை அங்கிள். இன்னும் கொஞ்சநாள் கழித்து மம்மியை அழைத்து மெடல் கொடுப்பார்கள். ராணுவ உடுப்பில் கம்பீரமாக இருந்த டாடி, ஒரு சின்ன உலோகமாக மாறிவிடுவார்! உலோகத்துடன் பேச முடியுமா, அங்கிள்....?”

“ஆவியிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா அங்கிள்? ஆவியுடன் நாம் பேச முடியும் என்கிறார்களே, அது உண்மையா? அது உண்மையானால் என் டாடியின் ஆவியுடன் நான் பேச வேண்டும். பேசி என்னை ஏன் ஒருமுறை கூட உங்களுடன் வெளியே அழைத்துப் போனதில்லை என்று கேட்க வேண்டும். அவர் ஒருவேளை ஒரு முரட்டு அப்பாவாக, எதற்கெடுத்தாலும் அடித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை அங்கிள். அவர் என்னை ஒரு வார்த்தை கூடத் திட்டியதில்லை. டாடி வீட்டில் இருந்த நேரம் குறைவு. அநேகமாக எல்லா நாட்களிலும் நைட் டியூட்டி. பகலில் நான் ஸ்கூலுக்குக் கிளம்புகிற நேரத்தில்தான் வருவார். வந்தவுடன் என்னை அணைத்து முத்தமிடுவார். கொஞ்சுவார். ஸ்கூலுக்குப் போகாமலேயே இருந்து விடலாம் என்று இருக்கும். ஆனால் மம்மி திட்டுவாள்.போய் விடுவேன். மதியம் மூன்று மணிக்கு ஸ்கூல் முடிந்து வந்து பார்த்தால் அவருடைய பைக் இருக்காது. ‘நைட் டியூட்டிக்கு இப்போதே ஏன் போக வேண்டும் மம்மி?’ என்று கேட்டால், ‘இப்போது சொன்னால் உனக்குப் புரியாது; நீ வளர்ந்து பெரியவனான பிறகு சொல்கிறேன்’ என்பாள் மம்மி. பகல் டியூட்டியாக இருந்தால் தான் டாடியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும். இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வருகிறவர் நான் தூங்கும் வரை பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். டாடியின் ஆவியுடன் பேச முடிந்தால், ‘ஏன் என்னையும், மம்மியையும் ஒரு முறை கூட வெளியே அழைத்துப் போனதில்லை? வேலை வேலை என்று வேலையே கதியாக இருந்து, வேலையிலேயே உயிர் விடவா திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று கேட்க வேண்டும். ஆவியுடன் பேச முடியுமா அங்கிள்?” உணர்ச்சியை குரலிலோ, முகத்திலோ வெளிக்காட்டிக் கொள்ளாமல், அழாமல் வேறு யாருக்கோ நடந்த ஒன்றைப் பற்றி விவரிப்பது போல் சொன்னான் ரேக்கி.

லால் கிலாவுக்குப் போய்வந்த பிறகு ஒருமுறை கனாட் பிளேஸும், பாலிகா பஸாரும், மற்றொரு முறை பிரகதி மைதானமும் போய் வந்தோம். ஆனால் சினிமாவுக்கு மட்டும் போக முடியாமலேயே இருந்தது. ரேஷ்மாவுக்குப் பிடித்த படம் ரேக்கிக்குப் பிடிக்கவில்லை. ரேக்கிக்குப் பிடித்த படம் ரேஷ்மாவுக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த படமோ குழந்தைகளை அழைத்துக்கொண்டு போக முடியாத படமாக இருந்தது. கடைசியில் ஒரு வழியாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை கனாட் பிளேஸ் போய் எந்தத் தியேட்டரில் டிக்கெட் கிடைக்கிறதோ அந்தப் படத்திற்குப் போய் விடுவது என்று முடிவு செய்தோம். ஞாயிற்றுக் கிழமைக்காக ரேக்கியும், ரேஷ்மாவும் ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தபோது, அதற்கு முன்னதாக புதன் கிழமை காலை பத்து மணி அளவில் அந்தச் செய்தி காட்டுத்தீயைப் போல் பரவி, எங்கள் மயூர் விஹாரை வந்து அடைந்தது. அன்று எனக்கு லேசான ஜுரமாக இருந்ததால் நான் ஆஃபிஸ் போகவில்லை. நான் போகாததால் மீனாவும் போகவில்லை. அப்போது பூஜா விடுமுறையாக இருந்ததால், ரேஷ்மாவை கிரஷ்ஷில் விட்டு விட்டு வரவேண்டும். ஆனால் நாங்கள் இருவருமே வீட்டில் இருந்ததால், ரேஷ்மாவும் கிரஷ்ஷுக்குப் போகவில்லை. அப்போதுதான் பிரதம மந்திரி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. முதலில் புரளி என்று நினைத்தோம். பிறகு கொஞ்ச நேரத்திலேயே அந்தச் செய்தி உண்மைதான் என்று தெரிந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தேன். கூட்டம் கூட்டமாக மக்கள் லாரிகளிலும், வேன்களிலும் கோஷம் எழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் ஏ.ஐ.எம்.எஸ். போவதாகச் சொன்னார்கள். பிரதம மந்திரியின் உடல் அங்கேதான் இருப்பதாகத் தெரிந்தது. செய்தி கிடைத்ததும் உடனடியாக டெப்போவுக்குப் போய்ச் சேர முடியாமல், வழியிலேயே மாட்டிக்கொண்ட DTC பஸ்களை கொளுத்திவிட்டுக் கொண்டிருந்தார்கள் சிலர்.

எரியும் பஸ்களைப் பார்த்ததும் என்னை பயம் தொற்றிக்கொள்ள, நான் நேராக வீட்டுக்குத் திரும்பினேன். அன்று பூராவும் ரேக்கி எங்கள் வீட்டுக்கு வரவில்லை. அவன் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா என்று நினைத்தேன். ஆனால் மிகவும் களைப்பாக இருந்ததால், நாளைக்குப் போகலாம் என்று விட்டுவிட்டேன்.

நிலைமை சகஜமாவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியவில்லை. பால் கிடைக்காது. காப்பி குடிக்க முடியாது. அரிசி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கோதுமை மாவு இருந்தாலும் போதும். எத்தனை நாட்களுக்குப் பால் இல்லாமல் ரேஷ்மாவைச் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை. எது எப்படியானாலும் தண்ணீரும், மின்சாரமும், கொஞ்சம் அரிசியும் இருந்தால் சில நாட்களை சமாளித்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் சுட்டது சீக்கியர்கள். அதிலும் பிரதமரின் மெய்க்காப்பாளர்கள். துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு உத்தரவு என்றெல்லாம் வருமா? யாருக்குத் தெரியும். இதுவரை அப்படி எதையும் நேரில் கண்டதில்லை. அனுபவித்ததும் இல்லை.1947 பிரிவினையின்போது நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதோடு சரி. ஊரடங்கு உத்தரவு என்றால், வெளியில் யாரைக் கண்டாலும் சுடலாம் என்றுதானே அர்த்தம் என்று பலவாறாக யோசித்துக்கொண்டே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தபோது வெளியே வெகு தூரத்தில் பெரும் கூச்சல் கேட்டு எழுந்தேன். வெளியே வந்து பார்த்தபோது, ரோட்டின் மறுபக்கத்தில் திர்லோக்புரி குருத்வாராவின் வெளியே தீப்புகையும், நெருப்புமாகத் தெரிந்தது. சுற்றிலும் நிழலுருவங்களாக ஒரு கூட்டம். என்ன நடக்கிறதென்று சரியாக அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை குருத்வாராவைத்தான் எரிக்க முயற்சிக்கிறார்களோ என்று தோன்றியது. மீனாவிடம் கதவைத் தாளிட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு குருத்வாராவின் அருகே போனேன்.

நான்கு பேர் உயிரோடு கொளுத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தார்கள். தீப்பிடித்த நிலையில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களை, சுற்றி நின்றிருந்த கும்பல் கற்களால் அடித்துக் கொண்டிருந்தது. வேறு சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த கம்புகளால் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். உடனேயே எனக்கு ரேக்கியின் ஞாபகம் வர அவனுடைய வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன். வீடு பூட்டியிருந்தது. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

பொழுது விடியும் வரை தூங்காமலேயே காத்திருந்தேன். நடு இரவில், புதிய பிரதமர் தூர்தர்ஷனில் பேசினார். “மறைந்த பிரதமர் என்னுடைய அன்னை மட்டுமல்ல; இந்தப் பாரதம் முழுமைக்கும் அன்னையாக விளங்கினார்; ‘ அடுத்த மனிதரைக் கொல்லாதீர்கள். அடுத்த மனிதர் மீதான வெறுப்பைக் கொல்லுங்கள்’ என்று சொன்ன அந்த அன்னையின் வாசகங்களை நாம் இந்த சோதனையான தருணத்தில் நினைவுபடுத்திக் கொண்டு அமைதியையும், பொறுமையும் கடைப்பிடித்து உலகிற்கு பாரதத்தின் பண்பை எடுத்துக் காட்டுவோம்” என்று தெளிவான, அமைதியான குரலில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விடிந்ததும் எழுந்து 27 பிளாக்கை நோக்கிச் சென்றேன். குருத்வாராவைச் சுற்றிலும், எரிந்து கருகிய பிணங்கள் கிடந்தன. உள்ளே நூற்றுக்கணக்கான பேர் அகதிகளைப் போல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே நீண்ட வாளோ, அல்லது கம்போ வைத்திருந்தார்கள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் போய், “நீங்கள் திர்லோக்புரியா? இது பாதுகாப்பான இடம் அல்லவே? நேற்று இரவு இங்கு நடந்த விஷயங்களைப் பற்றித் தெரியாதா?” என்று கேட்டேன். தாங்கள் கல்யாண்புரியைச் சேர்ந்தவர்கள் என்றும், திர்லோக்புரியில் சீக்கியர்கள் அதிக அளவில் இருப்பதால், இங்கே வந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணி இங்கே வந்து விட்டதாகவும், இங்கே வந்தபிறகுதான் இங்கேதான் எல்லா இடங்களையும் விட அதிக அளவில் கலவர நடந்திருப்பது தெரியவந்தது என்றும் சொன்னார்.

27வது பிளாக்குக்குப் போய்ப் பார்த்தேன். ஒரு வீட்டில் கூட ஆள் நடமாட்டம் இல்லை.கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே பூட்டிக்கிடந்தது. திரும்பி குருத்வாராவுக்கே வந்தேன். என்னிடம் சற்று முன்பு பேசிக்கொண்டிருந்தவரிடம் வந்து, “27வது பிளாக்கில் இருந்தவர்களெல்லாம் எங்கே? எல்லா வீடும் பூட்டிக் கிடக்கிறதே?” என்று கேட்டேன். பாதி பேர் வீட்டை வெளியே பூட்டி விட்டு பின்பக்கம் வழியாக உள்ளே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பெரும் பகுதி மக்கள் 28வது பிளாக்குக்குப் போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. “28வது பிளாக் முழுக்கவும் இந்துக்கள். அங்கே எப்படி அவர்கள் போனார்கள். அது எப்படி முடியும்?” என்று கேட்டேன். “உங்களுக்கு விஷயமே தெரியவில்லை தம்பி... எங்கள் மக்களுக்கு இந்துக்கள்தான் பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கிறார்கள். 27வது பிளாக்கிலுள்ள ரொம்பப் பேர் 28வது பிளாக்கிலுள்ள இந்துக்களின் வீடுகளில்தான் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். எங்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரக் கும்பலெல்லாம் இந்துக்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. இவர்களுக்கெல்லாம் மதம், கடவுள் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இவர்கள் குண்டர்கள். அவ்வளவுதான். எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியவில்லை. திடீர் திடீரென்று பத்துப் பதினைந்து ஜீப்புகளில் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து சீக்கியனாக இருந்தால் வெளியே இழுத்துக்கொண்டு போய் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்துகிறார்கள். இவர்களில் பலர் எங்களிடம் முன்னால் ஓட்டுக் கேட்க வந்தவர்கள். அவர்களின் முகம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எப்போது அவர்களைப் பார்த்தாலும் என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்றார்.

ரேடியோ செய்தியில் இன்று கலவரம் நடக்கும் இடங்களுக்கு ராணுவம் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செய்தி கேட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ராணுவமோ போலீஸோ எங்கள் பகுதிக்கு வரவில்லை. இரவுச் செய்தியில் கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைக் கண்டதும் சுட உத்தரவு இடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் யார் அமல்படுத்துவார்கள் என்றுதான் தெரியாமல் இருந்தது. எல்லா அரசியல் தலைவர்களும் தீன்மூர்த்தி ஹவுஸில் முடங்கிக் கிடந்தார்கள்.

நேற்று பிரதம மந்திரி சுடப்பட்டபோது, ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்ததால், செய்தி கிடைத்து அன்று மாலை தில்லி திரும்பி விமான நிலையத்திலிருந்து ஏ.ஐ.எம்.எஸ்.ஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரில் கற்கள் வீசப்பட்டன என்றும், அவரது காரைத் தொடர்ந்து மற்ற கார்களும் கூட கல்வீச்சால் பாதிக்கப்பட்டன என்றும் பி.பி.ஸி. வானொலி தெரிவித்திருந்தது. ஜனாதிபதிக்கே இந்த கதி என்கிறபோது, இந்த சாதாரண மக்களைக் காப்பாற்றுவதற்கு யாரு வரப் போகிறார்கள் என்று தோன்றியது.

தீன் மூர்த்தி ஹவுஸிலிருந்த பிரதமரின் உடலையும், அந்த உடலை தரிசிக்க வந்த மக்களையும் காட்டியபோது, ரொம்பவும் அசாதாரணமான கோஷங்களெல்லாம் எழுப்பப்பட்டன. எந்தவிதத் தணிக்கையும் செய்யப்படாமல் தூர்தர்ஷனில் அப்படியே காட்டப்பட்டது. (உதாரணமாக, ‘பாரத் கீ படி பேட்டீ கோ ஜிஸ் நே கூன்கியா, உஸ் வம்ச கோ மிடாயேங்கே!(3))

முந்தின இரவு முழுக்கவும் தூங்காத காரணத்தால் மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால் தூங்கவும் முடியவில்லை. அரைத் தூக்கமும், அரை விழிப்புமாக டி.வி.க்கு முன்னே உட்கார்ந்திருந்தேன். திடீரென்று எரிந்து கருகிய, இன்னமும் எரிந்து கொண்டிருக்கிற உடல்களின் நாற்றமும், பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் போன்றவற்றின் நாற்றமும் தாங்க முடியாமல் மூக்கை வந்து தாக்கியது. குமட்டலெடுத்தது. இந்த நாற்றமே ஆளைக் கொன்றுவிடும் போலிருந்தது. சாலை நெடுகிலும் ஒரே பிணங்களாகக் கிடக்க, ஒரு ஆள் அந்தப் பிணங்களை எண்ணிக்கொண்டிருந்தான். “யார் நீங்க?” என்று கேட்டேன். “ஜர்னலிஸ்ட்” என்றான். மேலும் சொன்னான். “இதுவரை 639 பிணங்களை எண்ணியிருக்கிறேன். நீங்களும் சேர்ந்து எனக்கு உதவி செய்யுங்கள். குறைந்தபட்சம் இந்தப் பிணங்கள் எவ்வளவு என்று எண்ணியாவது உலகுக்குச் சொல்லுவோம்”. அப்போது அந்தப் பிணக்குவியலிலிருந்து ஒரு பிணம் எழுந்து நடந்து வந்தது. அதன் வயிற்றிலிருந்து வெளியே சரிந்திருந்த குடல் தலைப்பாகையால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த பிணம் அப்படியே எங்கள் மீது விழ வயிற்றில் கட்டப்பட்டிருந்த தலைப்பாகைத் துணி அவிழ்ந்து குடல் எங்கள் கைகளில் சரிந்தது. அதே சமயத்தில் யாரோ டமடமவென்று எதையோ தட்டும் ஓசை கேட்டது. கைதட்டல் சத்தமா என்று ஒரு கணம் சந்தேகம் எழுந்தது. அப்படியானால் நடந்தது நாடகமா? நாடகம் முடிந்து கைதட்டுகிறார்களா? பத்துப் பதினைந்து பறைகள் சேர்ந்து ஒலிப்பது போன்ற சத்தம். அலறிக்கொண்டு எழுந்தேன். எதிரே மீனா என்னை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள். ”என்ன இது எவ்வளவு நேரம் எழுப்புவது? யாரோ கதவைத் தட்டுகிறார்கள். போய்ப் பார்ப்போம் வாருங்கள்” என்றாள்.

எழுந்து வந்து கதவைத் திறந்தேன். ரேக்கியும் அவன் அம்மாவும். அவர்களை உள்ளே அழைத்து கதவைச் சாத்திவிட்டு “என்ன ஆயிற்று? உங்கள் வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. எங்கே போயிருந்தீர்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டேன்.

அவர்கள் இருவராலும் ஒன்றும் பேச முடியவில்லை. தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தேன். தண்ணீரைக் குடித்துவிட்டு சற்று ஆசுவாசமாகி ரேக்கியின் அம்மா பேச ஆரம்பித்தாள்.

கலவரம் ஆரம்பித்த உடனேயே எல்லோரும் ஓடிப்போய் 28ஆவது பிளாக்கிலுள்ள இந்துக்களின் வீடுகளில் ஒளிந்து விட்டதாகவும், ஆனால் இன்று அங்கேயும் கும்பல் வந்து தேடுவதாகவும், இன்று பூராவும் இருவரும் அவர்கள் ஒளிந்திருந்த வீட்டின் ரஜாய் பெட்டியிலேயே மறைந்திருந்ததாகவும், இனிமேலும் அங்கே இருப்பது ஆபத்து என்று எண்ணியே ஓடிவந்துவிட்டதாகவும் சொன்னாள். உடனே போய் கத்தரிக்கோலை எடுத்து வந்து ரேக்கியின் நீண்ட முடியை வெட்டி ஒரு சுமாரான் கிராப்பாக மாற்றினேன். அவன் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. அவளிடமும் ரேக்கியிடமும் இனி உங்கள் பெயர் பிந்தியா, ரேக்கியின் பெயர் ராகேஷ் என்று சொல்லி, இனிமேல் இங்கிருந்து போகும்வரை ஸல்வாருக்கு பதிலாக புடவை கட்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு, மீனாவிடம் அவளுக்குப் புடவை கொடுக்கச் சொன்னேன்.

மறுநாள் காலை ராணுவமும், போலீஸும் வந்தது. ஆனால அவர்கள் வந்த பிறகும் ஜீப்புகளில் வந்த கும்பலை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த முறை ஜீப்புகளில் வந்த கும்பல் வீடுகளை நோக்கிப் போகாமல், நேராக ரேஷன் கடைக்குப் போய் அந்தக் கடைக்காரரை சாவியுடன் அழைத்துவரச் செய்தது. அவர் வந்து சேர்ந்ததும் கடை திறக்கப்பட்டு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி அடங்கிய ரெஜிஸ்தர் தேடி எடுக்கப்பட்டது. அதிலிருந்த பெயர்களை வைத்து, எந்தெந்த வீட்டு எண்கள் சீக்கியர்களுடையது என்று குறித்துக் கொள்ளப்பட்டது. அப்போதுதான் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. வீட்டு எண்களைக் குறித்து கொண்டு அந்தக் கும்பல் பக்கத்திலிருந்த மண்ணெண்ணெய் கடையை நோக்கிச் சென்றது. அதற்குள் அந்தக் கடைக்காரரே கடையைத் திறந்து வைத்திருந்தார். மண்ணெண்ணெய் டிரம்களும், டின்களும் ஜீப்பில் ஏற்றப்பட்டன.

நான் வேகவேகமாய் ஓடிவந்து குருத்வாராவின் அருகே முகாமிட்டிருந்த ராணுவ சிப்பாய்களிடம் விஷயத்தைச் சொன்னேன். அதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. எங்களால் எதுவும் செய்வதற்கில்லை என்றார்கள். “கலவரம் செய்பவர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக டி.வி.யில் சொன்னார்களே?” என்று கேட்டேன். “அப்படியானால் போய் டி.வி.யில் கேளுங்கள்” என்று சொன்னார் ஒரு சிப்பாய். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான போலீஸ்காரர் என்னைக் கூப்பிட்டு, “தம்பி... பிரதம மந்திரியைச் சுட்ட இரண்டு பேருமே போலீஸ்காரர்கள். அதனால் எங்கள் போலீஸ் துறையே பயந்து போய்க் கிடக்கிறது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு யார் யார் தலை உருளப் போகிறதோ என்று எங்கள் பெரிய அதிகாரிகளே பயந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் இந்தக் கும்பலைச் சுட்டால் எங்கள் கதி என்னவாகும்? எங்கள் வேலைக்கு என்ன உத்தரவாதம்? இந்தக் கும்பலில் இருப்பவர்களெல்லாம் யார் என்று நினைக்கிறாய்? எல்லாம் எங்கள் அதிகாரிகளுக்கே உத்தரவு போடுகிற கூட்டம். தெரியுமா உனக்கு? பேசாமல் போய் டி.வி.யைப் பார்த்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இரு” என்றார்.

போலீஸ்காரர் சொன்னது போல் வீட்டுக்குப் போகாமல் குருத்வாராவின் உள்ளே போனேன். முந்தின நாள் சந்தித்த கல்யாண்புரிக்காரர்களிடம் வாள், கம்பு என்று கொஞ்சம் ஆயுதங்கள் இருந்ததால், அவர்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் குருத்வாராவில் ஒரு ஈ, எறும்பு கூட இல்லை. சுத்தமாக அத்தனை பேருமே கொல்லப்பட்டு விட்டார்களா? தப்பியிருந்தால் எங்கே போயிருக்க முடியும்? ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஜீப் கும்பல் ஒரு பெரிய கூட்டத்தை இழுத்துக் கொண்டு வந்தது. கூட்டத்தில் ஒரு பெண் கூட இல்லை. எல்லோரும் ஆண்கள். நான்கு ஐந்து வயதுக் குழந்தைகள் கூட இருந்தார்கள். அவர்கள் தலையில் டின் டின்னாக பெட்ரோலையும், மண்ணெண்ணெயையும் ஊற்றி நெருப்பு வைத்தார்கள். திமிறிக் கொண்டு ஓடியவர்களை நீண்ட அரிவாளால் வெட்டிச் சாய்த்தார்கள்.

திரிலோக்புரியில் ஒரு சீக்கிய ஆண் கூட மிஞ்சியிருக்க மாட்டான் என்று தோன்றியது. பிறகு ஜீப்புகள் கல்யாண்புரி ரோட்டில் பறந்தன.

மதியம் ராணுவத்தினர் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அணிவகுப்பு முடிந்து ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஜீப் கும்பல் எங்கள் மயூர் விஹாருக்குள் நுழைந்தது. கையிலிருந்த முகவரி நோட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றது. அகப்பட்ட சீக்கியர்களைப் பிடித்து நடுரோட்டில் வைத்துக் கொளுத்தியது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு வந்தது கும்பல். வீட்டில் இருந்தவர்கள் பஞ்சாபி இந்துக்கள். ஆனால் நம்ப மறுத்தது கும்பல். பூஜை அறையையெல்லாம் காட்டினார்கள். அப்புறமாகத்தான் முகவரி நோட்டை வைத்திருந்தவர் “தர்பாரா சிங் கோன் ஹே?” என்று கத்தினார். உடனே அந்த வீட்டுக்காரர் “வோ இஸ் கர் கா மாலிக் ஹை. வோ திலக் புரி மே(ங்) ரெஹ்தா ஹை”(4). என்றார். “யே தோ பெஹலே போல்னா தா யார்” (5) என்று சொல்லிவிட்டு எங்கள் வீட்டை நோக்கி வந்தது கும்பல்.

அவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே ரேக்கியையும் ஜஸ்பீரையும் அழைத்து வந்து “இவர்கள் என் பாபி. பெயர் பிந்தியா. என் அண்ணன் ராணுவத்தில் இருக்கிறான். அவன் இவர்களை லவ் மேரேஜ் செய்துகொண்டான். இவன் அவர்களின் பையன் ராகேஷ். என் அண்ணன் இப்போது ஆக்ராவுக்கு ஸ்பெஷல் டியூட்டியில் போயிருப்பதால் இவர்கள் இங்கே எங்களுடன் தங்கியிருக்கிறார்கள்” என்று சொன்னேன். வந்திருந்த கும்பல் சற்று குழப்பத்துடன் பார்த்தது. கும்பலின் தலைவனைப் போலிருந்த ஆள் ரேஷ்மாவைப் பார்த்து “துமாரா நாம் க்யா ஹை?” என்று கேட்டான். அவள் பயத்துடன் என்னைப் பார்த்தாள். நான் “ரேஷ்மா” என்றேன். அந்த ஆள் ரேஷ்மாவின் தலையை வருடி, “க்யோ(ங்) டர்த்தி ஹோ, பேட்டீ? துமே ஹம் குச் நஹி கரோங்கே” (6) என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “மதறாஸி பாபு... துமாரி கர் மே அப்னி காவ்(ங்)கி லட்கி ஆயி ஹை. உம்மீத் ஹை கி தும் ஜூட் நஹு போலோகே. அகர் ஏ ஜுட் நிகலா, துமே(ங்) நஹி சோடேங்கே” (7) என்று எச்சரித்தான்.

அன்றைய இரவு டி.வி.யில் “இன்று பதினைந்து பேர் அல்லது அநேகமாக இருபது பேர் இறந்திருக்கலாம். ஆனாலும் நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார் போலீஸ் கமிஷனர். அடுத்து பேசிய கவர்னர் “நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. இன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். ஆனால் பி.பி.சி.யில் கேட்டபோது இன்றைய தினம்தான் இந்த மூன்று நாட்களிலேயே மிகவும் உச்சக்கட்ட கலவரங்கள் நடந்த தினமாகத் தெரிவித்தது. தீஸ் ஹஸாரி போலீஸ் மார்ச்சுவரியில் இருநூறு உடல்கள் கிடந்ததாகவும், கிழக்கு தில்லியில் ஷக்கர்பூர், கல்யாண்புரி, ஷாதரா, கிருஷ்ணா நகர், பட் பட் கஞ்ஜ், ஷிவ்புரி, சந்தர் நகர், காந்தி நகர், கீத்தா காலனி, துர்காபூர், பஜன்புரா, சீமாபுரி போன்ற இடங்களில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் - ஆனால் அதே கிழக்கு தில்லியில் நத்து காலனி மற்றும் திர்லோக்புரி என்ற இரண்டு இடங்களில் மட்டுமே ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், மேற்கு தில்லியில் மங்கோல்புரி, சுல்தான்புரி, புத்விஹார் என்ற இடங்களிலும், வடக்கு தில்லியில் நரேலா, ஜஹாங்கிர்புரி என்ற இடங்களிலும் பல காலனிகளில் ஒரு ஆண் கூட விடப்படாமல் அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டதாகவும், ரயில்களில் வெறும் பிணங்களே வந்து சேர்ந்ததாகவும், புதுதில்லியைத் தவிர மற்றபடி தில்லி முழுவதிலும் போலீஸே இல்லாதது போன்ற தோற்றத்தைத் தருவதாகவும், எங்காவது ஓரிரண்டு இடங்களில் தென்படும் ராணுவம் கூட எதுவும் செய்ய முடியாமல் வெறும் பார்வையாளர்களாகவே நின்று கொண்டிருப்பதாகவும் பி.பி.சி.யில் சொன்னார்கள்.

காலையில் எழுந்து திர்லோக்புரி சென்றேன். சாலைகளிலும் தெருக்களிலும் கருகிய உடல்களும், அடித்துக் கொல்லப்பட்ட உடல்களும், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளும் இறைந்து கிடந்தன. கிட்டத்தட்ட ஐநூறு உடல்களாவது இருக்கலாம் என்று தோன்றியது. 27 ஆவது பிளாக்கின் எல்லா வீடுகளுமே எரிந்து கரிக்கட்டைகளாக நின்றன. ரேக்கியின் வீடும் தப்பியிருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்து 28 ஆவது பிளாக்குக்கு வந்து சேர்ந்தேன். ராணுவ லாரிகளில் உடல்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அதை ஒரு குடிசை என்று சொல்ல முடியாது. ஷெட் அல்லது கூடாரம்... அல்லது அதை எப்படிச் சொல்லலாம் என்றே தெரியவில்லை. கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து அந்தக் கூடாரம் கட்டப் பட்டிருந்தது. சுற்றிலும் மரப்பலகைகள்... மேலே தார்ப்பாலின். பலகை இல்லாத இடங்களில் முள்வேலி, தகரம். நேற்று இரவு எரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிணங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த ராணுவ சிப்பாய்கள் முழுக்கவும் எரிந்து போன அந்தக் கூடாரத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நெருங்கிப் போய்ப் பார்த்தேன். மேலே போடப்பட்டிருந்த தார்ப்பாலின் எரிந்து மொட்டையாக இருந்தது. மேலே ஒரு ஓரத்தில் நான்கைந்து பலகைகள் செருகப்பட்டு கீழே அதற்குப் பிடிமானமாக ஒரு கம்பு நடப்பட்டிருந்தது. முழுக்க எரிந்திராத அந்தக் கம்பில் தொங்கி நின்றது பலகை. பலகையின் மேல் முழங்காலை கைகளால் கட்டிக்கொண்டு முழங்கால்களுக்கிடையே முகத்தைப் பதுக்கிக் கொண்டு அமர்ந்த நிலையில் இருந்தன இரண்டு சிறிய உடல்கள். ஒரு குழந்தைக்கு நான்கு வயது இருக்கலாம். மற்றொரு குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு இருக்கலாம். ஒரு இளம் சிப்பாய் அந்தக் காட்சியைப் பார்த்து முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தான். எரிந்து நின்ற கதவை உதைத்துத் திறந்த பொழுது உள்ளே - ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்தக் குழந்தைகளை நோக்கி ஒரு கையை உயர்த்தியபடி நின்றுகொண்டிருந்தார் - உடல் கருகிய நிலையில். அந்த பிளாக்கிலிருந்த அத்தனை பேரும் அங்கே கூடி விட்டார்கள். பிணங்களையே பெரும் எண்ணிக்கையில் பார்த்துப் பார்த்து செத்துப் போயிருந்த உணர்வுகள் திடீரென்று உயிர் பெற்று அதிர்ந்தன. நேற்று மாலை ஒரு இந்துவின் வீட்டில் ஒளிந்திருந்த இந்த சீக்கியக் கிழவரும், அவருடைய பேரன்களும் ஜீப்பில் வந்த கும்பலால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் துரத்தத் துரத்த ஓடி வந்து இந்தக் குடிசையில் ஒளிந்ததாகவும், துரத்தி வந்த கும்பல் அதற்கு மேல் குடிசையில் போகாமல் “அச்சா ஹுவா! இன் கோ ஜலாகே இதர் ஹீ லோடி* பனாயேங்கே” (8) என்று சொல்லி அந்தக் குடிசையையே கொளுத்தி விட்டுவிட்டதாகவும் சொன்னார்கள் அந்தக் காலனி வாசிகள்.

பிணங்கள் அப்புறப்படுத்தப்படுவதையும், தொடர்ந்து வந்து கொண்டிருந்த ராணுவ லாரிகளையும் பார்த்த பிறகு அந்த பிளாக்கில் ஒளிந்திருந்து மிஞ்சிய பெண்களும் குழந்தைகளும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியே வந்தார்கள். தங்கள் வீட்டு ஆண்கள் அத்தனை பேரையும் இழந்து அழுதுகொண்டிருந்த அவர்களையும் ராணுவத்தினர் தங்கள் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.

வீட்டுக்கு வந்தேன். 27ஆவது பிளாக் முழுவதும் எரிந்துவிட்ட செய்தியை ரேக்கியிடமோ அவன் அம்மாவிடமோ சொல்லவில்லை. “தீன் மூர்த்தி ஹவுஸில் அடைபட்டிருந்த தலைவர்கள் இன்று கலைந்திருப்பார்கள். நாளை நிலைமை சீரடையலாம் என்று தோன்றுகிறது” என்று மீனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது கதவை யாரோ விரல் நுனியால் தட்டுவதுபோல் சத்தம் கேட்டது. இவ்வளவு நாசுக்காக கதவைத் தட்டுவது யார் என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தால் - நேற்றைக்கு முன் தினம் வந்து போன அதே கும்பல்.

“அரே.... ஏ...மதறாஸி! தும்னே ஹமே(ங்) தோகா தியா?” (மதறாஸி நீ எங்களை ஏமாற்றிவிட்டாய் அல்லவா?) என்று சொல்லி ஒருவன் என் கன்னத்தில் அறைந்தான். மற்றொருவன் “நஹி பாய்.. இஸ் மதறாஸி கோ சோடோ.. கஹாங் ஹை ஸர்தார்?” (இந்த மதறாஸியை விட்டுவிடு. அந்த சர்தார் எங்கே) என்று சத்தமாகக் கேட்டான். வெளியே நடந்த சச்சரவைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் வெளியே வர, கும்பலில் ஒருத்தன் ரேக்கியின் கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டு போனான். தள்ளிய வேகத்தில் கீழே விழுந்த ரேக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கையில் ஒரு டின்னை வைத்திருந்த ஒருவன் “இதர் ஹீ லோடி பனாயேங்கே”(9) என்று சொல்ல மற்றொருவன் ”நஹி பையா... பெட்ரோல் காஃபி நஹீ(ங்) ஹை. சடக் பர் ஔ சார் லோக் ஹை. சப்கோ மிலாகே லோடி பனாயேங்கே. ஏக் ஏக் கர் கே பெட்ரோல் கோ கதம் நஹி கர்னா” (10) என்று சொல்லிக் கொண்டே ரேக்கியை ஜீப்புக்குள் தூக்கிப் போட்டு ஜீப்பைக் கிளப்பினான் ஒருவன். கும்பலும் ஜீப்புக்குல் ஏறிக் கொண்டது.

ஜஸ்பீரும் மீனாவும் ஜீப்பை துரத்திக்கொண்டே ஓட அவர்களின் பின்னால் ஓடிய ரேஷ்மாவைத் தூக்கிக்கொண்டு செயலற்று நின்றேன் நான்.

******

(1) தேஸு – DESU – வெளி - தில்லி மின்சார வாரியம்

(2) சாச்சி – பெரியம்மா

(3) ”பாரதத்தின் புதல்வியைக் கொன்ற கூட்டத்தின் வம்சத்தை அழிப்போம்”

(4) ”அவர் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர். திலக்புரியில் இருக்கிறார்”

(5) ”இதை முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டாமா, நண்பா?”

(6) ”ஏன் பயப்படுகிறாய் மகளே? உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்”

(7) “மதறாஸி பாபு, உன் வீட்டுக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி வந்திருப்பதாக தகவல். அநேகமாக நீ பொய் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறோம். சொல்லியிருப்பதாகத் தெரிந்தால், உன்னைச் சும்மா விட மாட்டோம்.”

(8) ”நல்லதாகப் போயிற்று. இவர்களை இங்கேயே வைத்து லோடி* கொண்டாடி விடுவோம்.”

* லோடி –போகிப்பண்டிகை அன்று தமிழ் நாட்டில் பழைய பொருட்களையெல்லாம் போட்டுக் கொளுத்தி கொண்டாடுவது போல் வடநாட்டின் போகி லோடி. பஞ்சாப் கிராமங்களில் இந்துக்கள் தங்கள் வீடுகளிலேயே சாராயம் காய்ச்சிக் குடித்துவிட்டு, பழைய பொருட்களைக் கொளுத்தி, அதைச் சுற்றி நின்று நடனமாடி லோடியைக் கொண்டாடுவது வழக்கம்.

(9) ”இங்கேயே லோடி கொண்டாடிவிடலாம்”

(10) ‘வேண்டாம்… நம்மிடம் பெட்ரோல் அதிகம் இல்லை. ரோட்டில் வேறு இன்னும் நான்கு பேர் இருக்கிறார்கள். எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து லோடி கொண்டாடுவோம். ஒவ்வொருத்தருக்காக தனித்தனியாக பெட்ரோலை வீணடிக்கக் கூடாது.’

****

-சுபமங்களா - செப்டம்பர், 1993

தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்