Showing posts with label பாமா. Show all posts
Showing posts with label பாமா. Show all posts

Jun 13, 2010

நிழலும் நிஐமும் - பாமா

வருடத்திற்கு இரண்டு முறைதான் நாங்கள் புதிதாக துணி எடுத்துத் தைப்போம். ஒன்று கிறிஸ்து பிறப்புத் திருவிழாவுக்கு. இன்னொன்று எங்கள் ஊர் மாதா திருவிழாவுக்கு. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்கு மதுரைக்குச் சென்று துணிமணி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.  பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நானும், என் மனைவியும் பத்து மணிக்கு வரும் வாய்தா வண்டியில் மதுரைக்குப் புறப்பட்டோம். அந்தப் பேருந்தில்தான் மதுரைக் கோர்ட்டுக்கு வாய்தாவுக்குச் செல்பவர்கள் வழக்கமாகச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்;கு வாய்தா வணடி என்ற பெயர் வந்தது. அதை யாரும் இப்போது மதுரைப் பேருந்து என்று சொல்வதில்லை.

bam4எங்கள் ஊர்ப்பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டமில்லை. உட்கார்ந்து கொண்டு வசதியாய்ப் பயணித்தோம். பேருந்துகளில் இருக்கையைப் பிடித்து உட்கார்ந்து விட்டாலே பெரிய சாதானையாகத்தான் இருக்கிறது. பயணிக்கும்போதே யார்யாருக்கு எவ்வளவு விலைகளில், என்னென்ன வகையானத் துணிகள் எடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்துக் கொண்டோம். கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. எவ்வளவுக் கெவ்வளவு சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டுமோ அவ்வளவுக் கவ்வளவுச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணிக் கண்டேன். கூடுமானவரையில் ஓர் ஐநூறு ரூவாயாவது இதில் மீதி கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்படிப் பார்த்துப் பார்த்துத்தான் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. எங்களது பொருளாதார நிலை அப்படி.

நான் ஒருவன் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை. மூன்று பிள்ளைகளும் முறையே, மூன்று, இரண்டு, ஒன்று வகுப்புகளில் வரிசையாகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக மூன்று பேரும் பையன்களாகப் பிறந்தார்கள் என்று உள்ளூர மகிழ்ந்தாலும் மூன்றாவது பிறந்தவன் பெண்ணாகப் பிறந்திருக்கலாம்  என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. என் மனைவிக்குக்கூட அப்படி ஒரு ஆசை இருக்கிறது. பெண்பிள்ளை என்றால் டிசைன் டிசைனாக டிரெஸ் போட்டு அழகு பார்க்கலாம்@ விதவிதமா நகைநட்டுப் போட்டுப் பார்க்கலாம் என்று அடிக்கடி கூறுவாள். அதற்கெல்லாம் வருமானம் இல்லையென்றாலும் ஆசைக்கு மட்டும் குறைவில்லை. எனக்கு அந்தமாதிரியெல்லாம் எண்ணமில்லை. பெண்பிள்ளை என்றால் எனக்குப் பிடிக்கும். பிடிக்கிறடிதல்லாம் வாழ்க்கையில் கிடைத்து விடுகிறதா என்ன?

ஆசிரியர் பயிற்சிபெற்று ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் வேலை கிடைக்கவில்லை. அட்டவணைச் சாதியில் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவன் என்ற காரணத்தால் நான் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரனாக்கப்பட்டுவிட்டதால் என்னோடு படித்த அட்டவணைச்  சாதியைச் சேர்ந்த  இந்துப் பையன்கள் வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாரிக்கும்போது நான் மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் எங்கள் ஊர்ப்பள்ளியில் நியமிக்கப்பட்டு மாதம் இரண்டாயிரம் சம்பளத்தி;ல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஓய்வு நேரத்தில் என் மனைவி தீப்பெட்டி ஒட்டுவதால் கிடைக்கும் பணத்தையும் வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறோம்.

வருடத்தில் ஒருமுறையாவது இந்தப் பிள்ளைகளுக்கு நல்ல துணிமணி எடுக்க வேண்டும் என்றுதான் இந்த மதுரைப் பயணம். மதுரை விளக்குத் தூண் பக்க் சென்று துணிமணிகளை வாங்கிக்கொண்டு திருப்தியாக வெளியே வந்தோம். நான் நினைத்தபடி ஐநூறு ரூபாயை மிச்சம் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மூன்று பையன்களுக்கும் ரெடிமேட் துணி எடுத்தபிறகு, மனைவிக்கு ஒரு சேலை எடுத்தோம். எனக்கு எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. கையில் பணமிருக்கவே சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று எண்ணினேன். மனைவியும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எங்கள் ஊருக்கு நேராகச் செல்லும் பேருந்து இனி மூன்று மணிக்குத்தான்.

இப்பொழுது மணி ஒன்றுதான் ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்த உணவகத்தில் சென்று உணவருந்திவிட்டு வெளியே வரும்போது, “சார்...சார்... பசி எடுக்குது சார்...  ஒரு அம்பது பைசா குடுங்க சார்.. சார்..” என் மூத்த மகனைவிட கொஞ்சம் பெரியவனா இருப்பான். கிழிந்த சட்டை, கலைந்த முடி இப்படி வழக்கமாக பிச்சை எடுப்பவர்களின் கோலத்தில் இருந்த ஒரு பையன் எங்கள் பின்னே கெஞ்சியபடி வந்தான்.

‘பாவம் இந்த பையன். படிக்க வேண்டிய வயதில் இப்படி பிச்சை எடுத்துக்கொண்டு  அலைகிறானே.  இவனுடைய தாய் தகப்பனுக்கும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? ஒருவேளை தாய்தகப்பனே இல்லையோ என்னவோ? பசிக்குது என்கிறான். சரி ஒரு ரூபாய் கொடுத்தேன். அவனுடைய முகத்தில் ஒரு சந்தோசம்.

“இந்தமாதிரி பையனுகளுக்கெல்லாம் குடுக்கவே கூடாது தெரியுமா?  சின்னஞ்சிறுசுகள பிச்ச எடுக்க உட்டுட்டு தாயும் தகப்பனும் இவம் பிச்ச எடுத்துட்டு வாரத வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு ஒக்காந்து இருக்குதுங்க. இவனுக்கு பிச்ச போட்டா, இவனுக்கும் இதேத் தொழிலாப் போகும். இந்த வயசுல பிச்ச எடுக்கனும்னு இவந்தலைல எழுதி இருக்குது பாவம்” என் மனைவி கோபமாக ஆரம்பித்து பாவமாக முடித்தாள். “ஆமா இவந் தலைல எழுதி இருக்கு! யாரு எழுதுறது? எல்லாம்  நம்ம எழுதுறதுதான். ஏங்கூடப் படுச்சவனெல்லாம் இன்னைக்கு கைநெறய்யாச் சம்பளம் வாங்கிக்கிட்டு சொகுசா இருக்கைல நாமட்டும் நாயிபடாத பாடு பட்டுக்ககுட்டு இருக்கம்ல. அப்படித்தான். பாவம் இந்தப் பையன். நல்ல புத்திசாலியான பையனா இருப்பாம்னு நெனைக்கேன். அவங் கண்ணப்பாத்தாலே தெரியுது. நம்ம குடுக்குற இந்த ஒரு ரூவாய வச்சு என்னத்த வாங்க முடியும்? ஏதோ இப்பிடி ஒரு நாலு பேரு குடுத்தா எதுனாச்சும் வாங்கிச் சாப்புட்டுக்குவான்.”  மனiவியிடம் சொன்னேன்.

‘துணிக்கடைல அவ்வளவு ரூபா செலவழிச்சுத் துணிமணி எடுத்தமே... மீதி ரூபாகூட இருக்குதெ... கிறிஸ்துமஸ்கு நம்ம பிள்ளைகளுக்கு இவ்வளவு செலவு செய்யும்போது இந்தப் பையனுக்கு ஒரு டிரஸ் எடுத்துக் குடுக்கலாமே... அட ஒரு டிரஸ் எடுக்கவேண்டாம். நம்ம நல்லா வகுறு நெறய்யாச் சாப்புட்டுட்டு வரலை அந்தப் பையன் பாவம் பசிக்கிதுன்னு சொன்னப்ப ரெண்டு இட்லி எதுனாச்சும் வாங்கிக் குடுத்துருக்கலாமே... வெறும் ஒத்த ரூவாயக் குடுத்துட்டு வந்துட்டமே...’

‘ஆமா இதுவே பெருசு. செலபேரு இதுகூட குடுக்கமாட்டாங்க. கஞ்சப் பெயலுக. அவெ அம்பது பைசாத்தானக் கேட்டான். நானு ஒரு ரூவா குடுக்கவும் அவனுக்கு ரொம்பா சந்தோசமாத்தான இருந்துச்சு. நானும் பெரிய பணக்காரனா என்ன? ஏதோ ஏந்தகுதிக்கு இம்புட்டுத்தான் செய்ய முடியும்.’ ‘பள்ளிக்கூடத்துல பிள்ளைங்க கிட்டமட்டும் கிறிஸ்துமஸ்  சமயத்துல நம்ம மத்தவுங்களுக்கு உதவி செய்யனும்னு வாய் கிழிய சொல்லிட்டு இப்ப இங்க ஒரு நல்ல வாய்ப்பு கெடச்ச பெறகும் செய்யாமெ வாரமே... அந்தப் பையனுக்கு ஒரு கால்ச் சட்ட, ஒரு மேச்சட்ட எடுத்துக்குடுத்துட்டு, சாப்பாடும்; வாங்கிக் குடுத்துட்டு வந்துருக்கலாம். சரி அடுத்த கிறிஸ்துமஸ்கு கண்டிப்பா ஒரு கஸ்டப்படுற பையனுக்குச் செய்யனும்’.  பேருந்து நிலையம் சென்று சேரும் வரையில் எனக்குள் பலவிதமான யோசனைகள்.

பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த சிமெண்டு பெஞ்சில் நானும் என் மனைவியும் அமர்ந்துகொண்டோம். எங்கள் ஊர்ப் பேருந்து வருவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்தது. அங்கே அமர்ந்தபடி சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது சற்று தூரத்தில் மக்கள் கூட்டாக  நின்று எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட நான் அது என்வென்று பார்;பதற்காக எழுந்தேன். உடனே என் மனைவி சொன்னாள்.
“எங்க கௌம்பிட்டீங்க? பஸ்சு இப்ப வந்துரும். இங்ன இருந்தாத்தான் ஒக்கார எடம் புடிக்க முடியும். போயிட்டு சீக்கிரமா வந்து சேருங்க. அப்பிடியே இந்தப் பெயல்களுக்குத் திங்கிறதுக்கு எதுனாச்சும் வாங்கிட்டு வாங்க. போன ஒடனே வந்து பையத்தான் பாப்பானுங்க.”

நேராகப் பழக்கடைக்குச் சென்ற நான் கொஞ்ம் பழம் வாங்கிக் கொண்டேன். சின்னவனுக்குப் பால்கோவா மிகவும் பிடிக்கும் என்பதால் கால்கிலோ பால்கோவா வாங்கிக் கொண்டேன். அப்படிய அருகிலிருந்த கடையில் பிஸ்கெட் பாக்கெட் இரண்டும், வெளியே இருந்த கடையில் அப்போதுதான் சூடாகப் போட்டுக்கொண்டிருந்த  பத்து வடைகளும் வாங்கிக்கொண்டு வந்தேன். நேராக வந்த மனைவியிடம் கொடுத்துவிட்டு வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டபோது, கொஞ்சம் பூ வாங்கிட்டு வரக்கூடாதா என்றாள். அவள் கேட்காமலே வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்றெண்ணியபடி அருகிலிருந்த பூக்கடையில் பூவை வாங்கிக் கொடுத்துவிட்டு கூட்டத்தைப் பார்க்கக் கிளம்பினேன்.

“இனி எங்க போறீங்க? அதான் எல்லாம் வாங்கியாச்சே. பஸ்சு வந்துரப் போகுது. இங்ன ஒக்காருங்க. சொல்லச் சொல்லப் போறதப் பாரு,” என்று என் மனைவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே  கூட்டத்தை நோக்கிச் சென்றேன்.

பல ஊர்களிலிருந்தும் வந்த மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க நடுவில் ஒரு பெண் கழுத்தைச் சுற்றி ஒரு மேளத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அதை அடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு  அருகே  வாட்டசாட்டமான  ஒரு ஆண் அந்த மேளச் சத்தத்திற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே கையில் ஒரு நீண்;ட சவுக்கை வைத்து தன் முதுகிலே ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டிருந்தார். முதுகில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு காலில் பேண்டை முழங்கால்வரை தூக்கி விட்டிருந்த அவர், மேலெ சட்டை எதுவும் போடவில்லை. இப்படி பல இடங்களில் அடித்து அடித்தோ என்னவோ முதுகில் ஆங்காங்கே காய்ந்துப் போனதுபோல் தெரிந்தது. வியர்த்து ஒழுகியது. முதுகிலும் கைகளிலும் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். கால்களில் கட்டியிருந்த சலங்கை, அவரது ஆட்டத்திற்கு ஏற்ப ‘சல்’ ‘சல்’ எனக் குலுங்கியது. அவருக்குப் பக்கத்திலேயெ மற்றொரு சிறுவன் அவரைப் போலவே பேண்ட் மட்டும் அணிந்துகொண்டு மேலே சட்டை எதுவும் போடாமல் சின்ன சவுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு பளார் பளார் என்று அவனது முதுகில் அடித்துக் கொண்டிருந்தான்.

அவனும் கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு மேளச் சத்தத்துக்கு ஏற்ப கால்களை மாற்றி  மாற்றிப் போட்டு ஆடிக்கொண்டிருந்தான். ஆடிக்கொண்டெ அடித்தான். அடித்துக்கொண்டெ ஆடினான்.அவன் கால்களிலும் கைகளிலும் இருந்த வேகத்தையும், அவனது அம்மா அடித்த மேளத்துக்கு ஏற்றடி அவன் ஆடிய ஆட்டத்தையும் அனைவரும் ரசித்தார்கள். என்னால்   அதை ரசிக்க முடியவில்லை. ‘இதென்ன  பொழப்புன்னு  இப்பிடிப் போட்டு ஒடம்ப ரணமாக்கிட்டு கெடக்காங்க! இந்த ஆளோட ஒடம்பு நல்லாத்தானே இருக்குது. எதுனாச்சும் வேல செஞ்சு பொழைக்கலாமே... இவரு சாட்டைய வச்சுக் கொடூரமா அடுச்சுக்குறது மட்டுமில்லாமெ இந்தச் சின்னப் பையனயும் இப்பிடி போட்டு உசுர எடுக்காங்களே.. சே... இந்த மத்தியான வெயிலுல இப்பிடி வேர்த்து ஒழுகைல இப்பிடித் தோலப் பிச்சுக்குற மாதிரி அடிச்சுக்கிட்டு... பாக்கவே ரொம்பாக் கண்றாவியா இருக்குது. இதவேற இம்புட்டுப் பேரு சுத்தி நின்னு வேடிக்கப் பார்த்துக்கிட்டு இருக்கோம்!

ஒரு மனுசன் அவனப் போட்டு அடுச்சுக் காயப்படுத்துறத இம்புட்டுக் குரூரமா பார்த்து ரசிககிறத நெனைக்கைல என்னமோ மாதிரி இருக்குது. அதுலயும் அந்தச்  சின்னப்  பையனப்  பாத்தா நெஞ்சே கனத்துப் போகுது.’

எனக்குள் மண்டிய பலவித சிந்தனைகளோடு கூட்டத்தில் இருந்தவர்களை ஒருமுறைச் சுற்றிப் பார்த்தேன்.  பலவிதமான முகங்கள். பலவிதுமான முகபாவனைகள். கூட்டத்தின் முனபகுதியில் நின்ற சிறுவனைப் பார்த்ததும் அவனை அடையாளம் கண்டு கொண்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என்னிடம் பிச்சை கேட்ட சிறுவன்! இவன் இங்கே என்ன செய்கிறான் என்றெண்ணியபடி ஆட்டத்தை விட்டுவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் முகம் சஞ்சலப்படுவதுபோல எனக்குத் தோன்றியது. அந்தச் சிறுவனுக்கும் இவனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் இருக்கும். இடையிடையே சிலர் அந்தப் பெண் அருகே விரித்து வைக்கப்பட்டிருந்த துணியில் சில சில்லறைக் காசுகளைத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்கள். அவள் மேளத்தை அடித்துக்கொண்டே கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். சிறிது நேரம் சென்றபின் அந்தச் சிறுவனும், அவனது அப்பாவும் சாட்டையால் அடிப்பதை நிறுத்திவிட்டு கூட்டத்தைச் சுற்றி வந்து கையேந்தி காசு கேட்டார்கள். சிலர் காசு கொடுத்தார்கள். வேறுசிலர் வெறுமனே கையை விரித்தார்கள்.

என்னிடம் பிச்சை எடுத்த சிறுவன் நேராக உள்ளே சென்றான். சாட்டையால் அடித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனிடம் சென்று அவன் கையைப் பிடித்தான். அன்று அவன் பிச்சையெடுத்து வைத்திருந்த அத்தனை காசையும் அவன் கையில் கொடுத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போய்விட்டான். என்னை யாரோ சாட்டையால் அடிப்பதுபோல இருந்தது.

Dec 2006

*******

May 8, 2010

அண்ணாச்சி - பாமா

 

ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித் தறுதலையா வந்து வாச்சிருக்கே, ' கோவமும் சலிப்புமாச் சொல்லிக்கிட்டு இருந்த மாடத்தியத் தடுத்துட்டு முத்து ரத்துனம் மேல சொன்னா. 'அதானடி... அந்த வீட்டுப் பிள்ளைக பூராம் இப்பிடித்தான் இருக்குதுக மித்ததுகளையாவது ஒரு வழில சேத்துரலாம். ஆனா இவெ இருக்கானே.. அதான் இந்த அம்மாசிப் பெய, இவன எட்டுலயுஞ் சேக்க முடியாது. எழவுலயுஞ் சேக்க முடியாது. ரொம்பா ரப்புக்காரன். '

'யாரு--அந்தத்த இருளாயி பேரனத்தான சொல்றீக ? எம்மா.. அவெ வெலாவுல வெடுச்ச பெயல்ல, ' பக்கத்துல ஒக்காந்து பாசி நெத்து அடுச்சுக்கிட்டுருந்த தாயம்மா சொன்னா.

அம்மாசிக்கு இருவது வயசு இருக்கும். தெருவுல பொம்பளைக சொன்னது கெணக்கா இவெ ஒரு சைசான பெயதான், ஊர்ப் பெரியவுகளுக்கு இவன வள்ளுசாப் புடிக்காது. ஆனா எளவட்ட பெயல்களுக்கு இவம்னா உசுரு.

Bama (1) வயசுக்குத் தக்கன வளத்தியும், கருத்த மீசையும் அதுவுமா பாக்குதுக்கு அம்மாசி நல்லா இருப்பான். நல்ல தேகக்கட்டு. அவெஞ் சிருச்சாம்னா வெயிலுக்குள்ள துள்ளுற கெண்ட மீனுக கெணக்கா பளீர் பளீர்னு பல்லு ஒளியடிக்கும். பெய என்னத்தத்தாம் போட்டு பல்லு தேப்பானோ தெரியல. எப்பயும் நையாண்டியாப் பேசுனாலும் ஒரு நாயத்தோட பேசுவான். என்னமோ விட்டேத்தியாத் திரிரவங் கெணக்காத்தான் தெரிவான். ஆனா ரொம்ப வெவரமான பெய.

பொழுதெனிக்கும் அவனப்பத்தி ஆவலாதிதான் வரும். அந்தப் பெயலச் சரியாப் புருஞ்சுக்கிராமத்தாஞ் சனங்க இப்பிடி அவனப் பத்திக் கூடக்கொறயாப் பேசுதுன்னு நெனப்பேன். இப்பக்கூட அவெஞ் செஞ்சது எனக்கு நாயமாத்தான் தெரிது, அவன நேராப் பாத்து பூராத்தையும் கேட்டுட்டேனே நானு.

வெள்ளங்காட்டி, கம்மாப்பக்கம் வெளிக்குப் போகையில அவனப் பாத்தேன். அப்பத்தான் அவனும் நானும் பேசிக்கிட்டோம், என்னடா வெசயமுன்னு கேட்டதுக்கு, எடுத்த எடுப்புல பூஞ்சிரிப்பா ஒரு சிரிப்புச் சிருச்சான். சிருச்சுக்கிட்டே நடந்த வெவரத்தச் சொன்னான்.

'ஏ மச்சான், இதுல என்ன தப்புஇருக்குன்னு சொல்லு. நேத்து அவரு பரசுராமரு வயக்காட்ல வரப்பு வெட்டிட்டு வெள்ளனத்துல வீட்டுக்கு வந்துட்டேன். வந்து கூழக் குடுச்சுப் போட்டு அப்படியே நெட்டியக்கல்லு வரைக்கும் ஒரு நடபோயிட்டு வருவமின்னு வண்டி ஏறுவேன் '.

'நெட்டியக்கல்லுக்கு என்ன சோலியாப் போன ? ' நாங்கேட்டேன்.

'சொல்றதக் கேளு மச்சான். அங்க கெணத்துவேல கெடைக்குமுன்னு இந்தக் கடக்காரப் பொண்டுகப் பெய சொன்னாமுன்னு வேல வெசாரிக்கப் போனேன். நம்மூரு பஸ்டாண்டுல வண்டி ஏறமின்னப் பெரும்பாடாப் போச்சு அம்புட்டுக் கூட்டம். '

'வண்டில ஏறயில யாரோடயும் சண்ட போட்டிட்டியா ? '

'நீ ஒரு திக்கம் மச்சான். முழுசுங் கேக்காமெ, ஒம் பாட்டுக்கு என்னத்தயாவது சொல்வ. ஊடால பேசாமக் கேளு. '

அவெங் கொணந் தெருஞ்சதுனால நானும் அவசரப் படாமெ, 'சரி சொல்லு; நானு குறுக்கே பேசல, ' சொல்லிட்டு அவெ என்ன சொல்லப் போறாமுன்னு அவனையே பாத்தேன்.

'அம்புட்டுக் கூட்டத்துல அடுச்சுப்புடுச்சு ஏறி எடம்பாத்து ஒக்காந்துட்டேன். அதே வண்டில அவரு சந்துர சேகரும் ஏறுனாரு. சந்துரசேகர்னா யாருங்ர ? அதான் எங்கய்யம் பண்ண வேல செய்ராம்ல. அந்த மேச்சாதி மொதலாளிதான். வந்தவரு எனியப்பாத்ததும் என்ன சொன்னாருங்க ? இப்பப்பாரு. எங்க ரெண்டு பேத்துக்கும் எடைல உழுந்த டயலாக்க அப்பிடியே பாத்துக்கோ. '

'ஏலேய்.. நீ அந்த மாடசாமியோட மகந்தானடா ? '

'நானு மாடசாமியோட மகனேதான். '

'ஏலேய்... எனிய யாருன்னு தெரியலயாடா ? '

'ஏந் தெரியல. நல்லாத் தெரிமே. நீரு சந்திரசேகருதான ? '

சொல்லிக்கிட்டே இருந்தவன் வேட்டியத் தூக்கிட்டு டவுசரு பையில இருந்து ஒரு பீடிய எடுத்து பத்த வச்சுக்கிட்டான்.

'இந்தப் பீடி எதுக்குங்க மச்சான். அந்நியாரம் பீடிய எடுத்துப் பத்த வச்சிக்கிட்டு பொகய உட்டுக்கிட்டே பேசுனம் பாத்துக்கோ. அதான் அது கெணக்காவே இருக்கனும்னு தான் இப்பப் பத்த வச்சேன். '

'சரி சொல்லுடா. பெரிய ஆக்டிங்காரந்தான். பொறுமய சோதுச்சுப் போடுவ, ' நானும் கொஞ்சம் எருச்சலா கேட்டேன்.

'சர்த்தான், இப்பப் பாரு மச்சான். '

'தெருஞ்சுக்கிட்டுமாடா ஒக்காந்துருக்க ? எந்திரிடா நா ஒக்காந்துக்குரேன். '

'நானு இம்புட்டுக் கூட்டத்துல நசுங்கி பிதுங்கி இந்த எடத்தப் புடுச்சு ஒக்காந்துருக்கேன். இங்ன நெட்டியக்கல்லுல எறங்குவேன் அதுவரைக்கும் நா ஒக்காந்துக்கிட்டு வாரேன். அதுக்குப் பெறகு நீங்க ஒக்காந்துக்கொங்க. '

'ஏலேய்... இந்தாருக்க நெட்டியக்கல்லுதானல.. எந்திரிடா. தள்ளிக்கோ ஐயா நின்னுக்கிட்டு வரைல நீயி மருவாத இல்லாமெ ஒக்காரலாமாடா ? '

'ஐயாவா ?.. எங்கய்யா உம்ம பிஞ்சைலதான இப்ப உழுதுக்கிட்டுக்கிருக்காரு நீரு எப்ப எனக்கு ஐயாவானீரு ? நீரு தலைகீழா நின்னாலும் நானு எந்திரிக்க மாட்டேன். '

இதுக்குள்ள பீடியுங் கட்டப் பீடியாப் போக தூக்கிக் கெடாசிட்டு கெக்கருச்சுக்கிட்டு சிருச்சான். அவெ மொகத்துல இருந்த குசும்பையும், சிரிப்பையும் பாத்துட்டு எனக்குஞ் சிரிப்பு வந்துச்சு.

'கடேசி வரைக்கும் நீயி எந்திரிக்கவே இல்லியாக்கும் ? ' நானு ஆத்தாமெக் கேட்டேன்.

'அடி சக்கே, நானாவது எந்திரிக்கிரதாவது. இத்தோடய நின்னுச்சுன்னு நெனைக்க ? இன்னியும் பாரு, ' சொல்லிக்கிட்டே கொரல மாத்திப் பேச ஆரம்புச்சான்.

'ஏலேய்.. ஒனக்குப் படி அளக்குர சம்சாரிக்கிட்டப் போயி வம்பு பண்றியேடா. ஒங்கய்யனுக்கு இருக்குர நன்றி விசுவாசம் ஒனக்குக் கடுகளவு கூட இல்லியே. மொதலாளி வாராருன்னா பள்ளு பறச்சாதி பூராம் அம்புட்டுப் பணிவா எந்துருச்சு நிக்கும். இவெம் பொடிப்பெயலுக்கு எங்க அதெல்லாந் தெரியப் போகுது '

'யோவ்... எந்திரிக்க முடியாதுன்னா முடியாது. இதுக்கு மேல பேசுனீர்னா மரியாத கெட்டுப் போகும். '

'நெட்டியக்கல்லு வரவும் எறங்கிட்டேன். அவரு தரப்புரத்தரப்புரன்னு மொணங்கிக்கிட்டே இருந்தாரு. நா மேல ஒன்னும் பேசல. இதுதான் நடந்தது மச்சான். இங்க நம்ம தெருப்பெயமக்க எனிய மென்னு துப்புராளுக. '

'அதுக்குள்ள எப்பிடி ஊருக்குள்ள தெருஞ்சுச்சு ? ' நாங் கேட்டேன்.

'அந்தக் கண்ராவிய ஏங் கேக்குர ? சாயந்தரமே சந்துரசேகரு எங்கய்யங்கிட்ட வெசயத்தச் சொல்லி எனிய கண்டுச்சு வைக்கச் சொன்னாராம். எங்கய்யா எங்க வீட்ல போட்ட கூப்பாட்டுலதான் இப்ப தெருப்பூராம் இதே பேச்சா இருக்கு. '

'நம்மூருப் பொட்டச்சிக சும்மான்னு இருக்க மாட்டேங்காளுக. அவா ஊமச்சிறுக்கி, என்ன இருந்தாலும் ஒரு சம்சாரி நிக்கைல ஒரு பறப்பெய ஒக்காத்துக்கிட்டு வரலாமா ? அம்புட்டுச் சவுடாலு என்ன கேக்குது இவனுக்கு ? ரொம்பா மணியம் புடுச்ச பெய. இவனுக்குப் போங்காலம் நெருங்கிருச்சுங்கா, ' நாஞ் சொல்லவும் அம்மாசி சிருச்சான்.

'இது தேவல மச்சான். அந்தக் கெழவபணியாரமுத்து என்ன சொல்ராம்ங்ற ? ' சம்சாரி நம்மளுக்குத் தெய்வங்க மாதிரி. அவுக இல்லினா நம்ம பொழைக்க முடிமா ? சுத்த வெவரங் கெட்ட நீசப் பெயல்களாவுல இருக்கானுக. நக்குன நாய்க்கு நா எழும்பாதும்பாங்க. இந்த நாயி மேல உழுந்தே புடுங்கப் பாக்குது. சம்சாரிக மனசு வச்சா அம்புட்டுப் பல்லையும் பேத்துருவாக பேத்து. '

'கெழவஞ் சொல்லச் சொல்ல எனக்குச் சிரிப்புத்தான் வந்துச்சு. சிரிக்கதப் பாத்துட்டு கெழவ இன்ன ரெண்டு வசவு வஞ்சான். ' அம்மாசி சொல்லிக்கிட்டே சிரிச்சான். நானும் சிருச்சுக்கிட்டே வந்துட்டேன். '

அம்மாசியப் பத்தி பேச்சு அடங்குன ஒரு வாரத்துக்குள்ள திரும்பியும் அவனோட நட்னத்தனத்தப் பத்தி தெருவுலப் பேசுனாக. ஆனா அவெம் மட்டும் ஒன்னுமே நடக்காதது மாதிரி செவனேன்னு போறதும் வாரதுமா இருந்தான். நாந்தான் அவனக் கூப்டு.

'ஏப்பா, இப்ப என்ன செஞ்ச ? ' ன்னு வெசாருச்சேன். நானு வெசாரிக்கவும் அவெ ரொம்பா எடக்காச் சொன்னான், 'மச்சா, இன்னைக்கு ரவைக்கு ஊர்க்கூட்டம் இருக்கு. வந்துரு பெரிய கொலயாளிய வெசாரிச்சுத் தூக்குல போடப் போறாக. '

'ஊர்க்கூட்டம் இருக்கட்டுமப்பா, நீயி என்ன செஞ்சன்னு சொல்லு. '

'எனியத்தான் மச்சான் வெசாரிக்கப் போறாக. கட்டாயம் வந்துரு என்ன, ' அம்மாசி சொன்னான்.

'இப்ப என்ன ஆவலாதி ஓம்மேல ? சொல்லுப்பா--கேப்போம், ' நானு திரும்பியும் கேட்டேன்.

'அதாவது மச்சான், ரெண்டு நாளைக்கு முன்னால அந்தச் சின்னையா முத்துக் கருப்பன் எனியக் கூப்டு, அந்த ஜெயசங்கரு மொதலாளியோட பிஞ்சைல தண்ணிபாச்சப் போனாரு. '

'ஆமா.. ஒனியப் பாத்தேனே வெள்ளையுஞ் சொள்ளையுமா மம்பிட்டியத் தூக்கிட்டு போனீயே. நீ போன சோக்கப் பாத்து, நீ மம்பிட்டிக்கு கணகின போடப் போறீயாக்கும்னு நெனச்சேன், ' நாஞ் சொன்னேன்.

'இந்த லக்கலுதான வேண்டா மச்சான். ஏ, வெள்ளையுஞ் சொள்ளையுமா வேலவெட்டிக்குப் போக்கூடாதா ? நானு அன்னைக்குன்னு பாத்து இந்த முத்திருளங்கிட்ட ஒரு ரூவா குடுத்து சட்டைக்குப் பெட்டி போட்டுல போட்டுட்டுப் போனேன். '

'ஆமாமா..., மடிப்புக்கலையாத சட்டையாத்தான் இருந்துச்சு. சரி என்ன வெசயமுன்னு சொல்லு, '

'ஜெயசங்கரு பிஞ்சைக்குப் போனனா. அங்க அவரு பம்பு செட்டுக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாரு. நானு மம்பிட்டியோட போயி நிக்கவும் அவரே பேச்சே எடுத்து உட்டாரு. ' சொல்லிக்கிட்டுருந்தவெ அவரு பேசுன தோரணைல பேச ஆரம்புச்சான்.

'ஏலேய் ஒங்க தெரு முத்துக்கருப்பங்கிட்ட தண்ணி பாச்சரதுக்கு ஒரு ஆளப்பாத்து அனுப்பச் சொன்னேன். நேரமாச்சு. இன்னும் ஒரு பெயலயுங் காணோம். '

'முத்துக்கருப்பஞ் சின்னையா எனியத்தான் அமத்திப் போச் சொன்னாரு. அதான் வந்துருக்கேன். '

'ஒனியப் பாத்தா வேலைக்கு வந்துருக்காப்லயா தெரியுது. எங்கயே ஆபிசுக்குப் போறவங் கெணக்கா வந்து நிக்க. நீயி ரொம்பாச் சள்ள புடுச்ச பெயல்ல. வேற ஆளே கெடைக்கலன்னா அந்தப் பெய ஒனியப் போச் சொன்னான் ? '

'இப்ப என்னங்றீரு ? ஒமக்குத் தண்ணிதான பாச்சனும். நானு எப்பிடி வந்தா ஒமக்கு என்ன ? '

'ஏலேய், இப்ப மணி என்னன்னு தெரியுமாலே ? வந்துருக்காம்பாரு, எங்கயோ ஊரு தேசம் போறவ மாதிரி. '

'அண்ணாச்சி ஒங்ககிட்டதான் ரெஸ்ட் வாச்சி. இருக்குது. ஏங்கிட்ட இல்லியே அண்ணாச்சி. நீங்கதான் மணி என்னன்னு சொல்லனும் அண்ணாச்சி. கூடிய சீக்கிரம் வாச்சு ஒன்னு வாங்கனும் அண்ணாச்சி வாங்கிக் கெட்னாப் பெறகு மணி பாத்து சொல்றேன் அண்ணாச்சி. '

அம்மாசி இப்பிடிச் சொல்லிக்கிட்டிருக்கைல அவெம் மொகத்தப் பாத்து எனக்குச் சிரிப்ப அடக்க முடியல. நானு சத்தமாச் சிரிக்கவும், 'பொறு மச்சான், கொறையவுங் கேளு. நானு அண்ணாச்சின்னு கூப்டவும் அவரு மொகம் போன போக்கப் பாக்கனுமே. ரொம்பாக் கடுப்பாயிட்டாரு. கடுப்போடயே திலும்பியும் பேசுராரு.

'என்னலே சொன்ன ? அண்ணாச்சியா ? வாய்க்கு வாயி அண்ணாச்சின்னா சொல்ற ? யாருடா அண்ணாச்சி ? யாருக்குடா அண்ணாச்சி. ஒருப் பறத் தாயளியாடா எனிய அண்ணாச்சின்னு சொல்றது ? '

'கண்டமாணிக்கப் பேசாதீரும். பெறகு நானும் பேசுனா ஒமக்கு மரியாத கெட்டுப் போகும். வேண்டாம்னா போச்சொல்லுரத உட்டுட்டு.. மயிரு பேசுரதப்பாரு. ' சொல்லிக்கிட்டே விருட்டுன்னு வீட்டுக்கு வந்துட்டேன். ஊருக்குள்ள வந்து என்னத்தப் புளுகிட்டுப் போனானோ இவனுக கூட்டம் போட்டுருக்கானுக. '

'அப்ப ஒனக்கு தெண்டந்தான் இன்னைக்கு. சம்சாரியப் பாத்து மயிருதயிருன்னு பேசிட்டு வந்துருக்கில. '

'அட நீ ஒன்னு மச்சான், எனிய அதுக்கா வெசாரிக்கப்போறாகன்னு பாத்த ? நானு அந்த ஆள அண்ணாச்சின்னு கூப்டதுதான் பெருங் குத்தமாப் போச்சு இப்ப. அதுக்குத்தான் கூட்டம். '

அம்மாசி சொன்னது கெணக்கா ராத்திரி கூட்டங் கூடிட்டாக நாட்டமெ அம்மாசிட்ட கேட்டாரு. 'ஏலேய் அம்மாசி, நம்ம சாதி என்ன, மொதலாளியோட சாதி என்ன ? யாரு போயி யாரப் பாத்து அண்ணாச்சிங்றது ? சுத்த வெவரங்கெட்ட பெயலா இருக்கியே. '

அம்மாசியும் பதுலுக்கு, 'நம்ம பறையரு அவரு நாய்க்கரு நாந்தான் போயி அவரப் பாத்து அண்ணாச்சின்னேன். இதக் கேக்குதுக்கு ஒரு கூட்டம், ' சொல்லிக்கிட்டுத் தலயச் சொருஞ்சிக்கிட்டான்.

அம்மாசியோட பதுலக் கேட்டு எளவட்ட பெயல்கள்ளாம் கொல்லுன்னு சிருச்சானுக.

நாட்டாமெ வந்த வெளத்த அடக்கிக்கிட்டுச் சொன்னாரு, 'சரி ஓங்கிட்டப் போயி எனக்கு அது இதுன்னு பேசிக்கிட்டு சட்டுன்னு சொல்லுலே. எதுக்கு மொதலாளிய அண்ணாச்சின்னு சொன்ன. '

அம்மாசியும் பட்டுன்னு சொன்னான், 'அவரு எனிய விட வயசுல மூத்தவரு. அதான் அண்ணாச்சினே. எளையவரா இருந்துருந்தா தம்பின்ருப்பேன். '

இந்தப் பதுலக் கேட்டுட்டு இன்னுஞ் சத்தமாப் பெயல்க சிரிச்சானுக.

'இந்தப்பெய லேசுக்குள்ள மசியமாட்டான். பதுலப்பாரு ரொம்ப வில்லங்கம் புடுச்ச பெய, ' சின்ன நாட்டாமெ சொன்னாரு.

ஒடனே நாட்டாமெ சீரியஸா பேச ஆரம்புச்சாரு 'ஏலேய் ஒனிய யாரும் டமாசு பண்றதுக்கு இங்க கூப்டல. இம்புட்டுக் காலமா யாராச்சும் பள்ளுபறையனுக, நாய்க்கமார ஒறமொற சொல்லிக் கூப்டுருப்பமா ? நீ நேத்துப் பெறந்த பெய இப்பிடி வெதண்டா வாதஞ் செய்றீயே. அண்ணாச்சின்னு சொன்னது தப்புத்தானலே. '

ஒடனே அம்மாசியும் சீரியசா பேச ஆரம்புச்சான். 'நாஞ்சொன்னதுல ஒன்னும் தப்பில்ல. நானென்ன மாமெமச்சாமின்னு ஒறவு வச்சு பொண்ணு பிள்ளயா கேட்டுட்டேன் ? சாதாரணமாக அண்ணாச்சின்னு மருவாதையாக் கூப்டதுக்கே இம்புட்டு ரகள செய்றீக. போன வாரத்துல சாக்கட அள்ளுற இருளப்பன அண்ணாச்சினு கூப்டதுக்கு அம்புட்டுப் பேரும் சேய்.. கொறப்பெயலப் போயி அண்ணாச்சிங்கான்னு எளக்காரமாப் பேசுனீக. இப்ப என்னடா எப்படிடா நாய்க்கரப் போயி அண்ணாச்சிங்கலாம்னு எடங்கலுக்கு மொடங்கலா கேக்குறீக. அந்த பூவதிக் கெழவி சொல்றது கெணக்கா 'கழுத விட்டைல முன் விட்ட வேற பின்விட்ட வேறயா ? விட்டன்னா எல்லாம் விட்டதான். மனுசம்னா எல்லாம் மனுசந்தான் ' சொல்லிட்டு விருட்டுன்னு வீட்டுக்குப் போயிட்டான் அம்மாசி.

அம்புட்டுப் பேரும் அவனயே அருவசமா பாத்தாக.

*****

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா

 

 கேணி சந்திப்பு : மே 9 ஞாயிறு மாலை 3.30 மணி பேச்சாளர் : பாமா விவரங்களுக்கு இங்கே  செல்லவும். வாய்ப்பிருப்பவர்கள்  தவற விடவேண்டாம்

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்

நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?

bama பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா  ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.

இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான்  பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.

உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..?

இதுவரை தமிழ்ப்படைப்பாளிகள் எல்லாம் ஆண் மொழியில் தான் எழுதிகிட்டிருந்தாங்க இவங்க என்னுடைய தலித் மொழியை ஏற்றுக் கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. தமிழ் இலக்கிய பிhதாமகர்கள் ஒரு வகையான மொழிநடை சுகமான வாசிப்பு என்று வைத்திருக்கிறார்கள். அதைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கணும் என்கின்ற எதிர்பார்ப்பு இவங்களுக்கு இருக்கு. ஏன் ஏன் அப்படித்தான் இருக்கணும்? புதியமொழி, புதியநடை, புதிய சொல்லாடல் இருக்க்கூடாதா? இதை ஏன் இவங்களாலே சகிக்க முடியல்லே  இதையே ஆதிக்க சாதியினரோ ஆண்களோ எழுதியிருந்தால் சிலாகித்திருப்பார்கள்.

இன்றைய குடும்ப அமைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இப்போது இருக்கிற குடும்ப அமைப்பு பெண்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடியது Bama (1) இன்றைய சராசரி வளர்ப்பு முறையில் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை வந்துவிடுகிறது. இது மாறணும் பெண் குழந்தைகள் திருமணத்துக்காக வளர்க்கபப்பட வேண்டிய ஒரு  பொருள்  என்கிற கண்ணோட்டத்தை விட்டு;ட்டு வளர்த்து வந்தோம்னா அது வளர்ந்த பிறகு அதுவே முடிவு செய்து கொள்ளும்.

உங்க கருக்கு நாவல் இலக்கிய வட்டாரத்திலே  எந்த மாதிரியான  கவனிப்பை பெற்றது?

நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய வீச்சு கிடைச்சுது. அதன் வடிவம் மொழிநடை, விசயம் எல்லாம் புதிசா இருக்கிறதா பரவலா ஏத்துகிட்டாங்க சில பேர் இது நாவலா? என்ன மொழி நடை இது என்கிற மாதியான விமர்சனத்தை வைச்சாங்க  அதைப் பற்றி எல்லாம் நான் பெரிய அளவுக்கு கவலைப்படலே. ஏன்னா நான்  இலக்கியவாதிகளுக்காக அதை எழுதல அதனால எனக்கு அது பெரிய விசயமா தெரியல. சர்ச் சைடுலேருந்து பெரிய எதிர்ப்புக்கள் வந்துச்சு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நடந்தைத்தானே எழுதியிருந்தேன்.

சங்கதி நாவல்லே கடைசி அத்தியாயத்திலே நானு பறச்சியாய் பெறந்தது ரொம்ப நல்ல காரியமாத்தான் தெரியுது. ஆனா எம்புட்டுத் தடவ இந்தச் சாதில பெறந்ததுக்காக  வெக்கப்பட்டுக்கிட்டு வருத்தப்பட்டு இருந்திக்கேன்னு நினைச்சு கிட்டேன்னு பெருமையா சொல்லியிருக்கீங்க. நீங்கள் சங்கதியில் வாசகர்களுக்கு சொல்ல வந்த சங்கதி இது தானா?

இந்த மாதியான கஷ்டமான சூழலிலே நாங்கள் இருந்தாக் கூட அதையெல்லாம் உடைச்சிகிட்டு வாழ்ந்து காட்டக்கூடிய பாத்திரப் படைப்புக்கள் அதிலே இருக்கு. அந்தப் பலத்துக்கு காரணம் தலித் பண்பாடு என்பதை கோடிட்டு காட்டுறேன்.  அந்தப் பண்பாட்டு ரீதியான புரட்சியை செய்யும் போது இந்த மாதிரிப்பட்ட ஒரு கஷ்டத்திலேயும் கூட விடுதலை அடைந்த பெண்களோட சரித்திரம் தான் இது என்கிற மெஸேஜா இருக்கு.

இப்போது உங்களுக்கும் உங்கள் கிராமத்துக்கும் ஆன தொடர்பு எப்படி இருக்கு?

நான் எட்டாவது படிச்சுட்டு 13 வது வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியே போயிட்டேன். அதுக்கு பிறகு லீவுக்கு போறது தான் அதுக்கு பிறகு நிரந்தரமா அங்கு போய் வாழ்றது இல்லே. நான் பிசிக்கலா இங்க இருக்கேன்னாலும் உணர்வுரீதியா அங்கே தான் இருக்கேன்.. சமூக தளத்திலே இல்லன்னா எழுதுறது கஷ்டம்.

கருக்கு 1992ல் வந்தது சங்கதி 1994ல் வந்தது. இடையிலே நிறைய கதைகள் எழுதியிருக்கீங்களே?

bam4 சிறுகதை எழுத முடியும்னு நான் நினைக்கலே அதுக்காக நான் முயற்சியும் பண்ணலே. கருக்கு வந்த பிறகு இந்திய டுடெல தான் இலக்கிய மலருக்காக ஒரு சிறுகதை கேட்டாங்க அப்போதான் அண்ணாச்சி என்கிற கதையை எழுதினேன். அது எல்லோருக்குமே பரவலா புடிச்சிருந்தது. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது. அந்தக் கதை தான் என்னால கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கிச்சு.

உங்க ஊர் மக்கள் என்ன மாதிரி பீல் பண்ணாங்க?

கடுமையான எதிர்ப்பு வந்தது அது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. ஊருபேரை மட்டும் மாற்றி எழுதியிருந்தேன். ஆனா லொககேசனை வைச்சு இந்த ஊர்தான்னு புரிஞ்சிருக்கலாம்.மனுசங்க பேரையெல்லாம் அப்படி அப்படியே வைச்சிருந்தேன். பட்டப் பெயரையெல்லாம் வைச்சு எழுதிட்டேன். அது அவங்களுகுகு கஷ்டமாயிடுச்சு அங்கே ரொம்ப பேருக்கு வாசிக்கத் தெரியாது. வாசிச்ச கொஞ்சப் பேரும் இத எவ்வளவு பேரு படிப்பாங்க என்கிற மாதிரி ஏத்தி விட்டுட்டாங்க நான் வெளியூருல இருந்ததால எங்க அப்பாவைக் கூப்பிட்டு சண்டை போட்டுருக்காங்க எங்க ஊருக்குள்ளேயே நான் போக முடியல.

உங்க கருக்கு நாவல் தமிழின் முதல் தலித் தன் வரலாற்று நாவலா கருதப்படுது. அதுக்கு தமிழ் இலக்கிய வட்டாரத்திலே பிரமாதமான வரவேற்பும் கிடைச்சிருக்கு அந்த நாவலை நீங்க எந்தச் சூழல்ல எழுதுனீங்க.?

1990ல் கருக்கு வந்தது. அதை நாவல்னோ சுயசரிதைன்னோ நான் எழுதல. என் மன ஆறுதலுக்காக எழுதினது. 1985ல்; ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சரா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான் கிறிஸ்துவ மடத்திலே சிஸ்டரா போனா தலித் பிள்ளைகளுக்கு உந்துசக்தியா இருக்கலாம் சுதந்திரமா செயல்படலாம்னு நெனைச்சு அதில சேர்ந்தேன்.  மூணுவருசம் சிஸ்டர் ஆகுறதுக்கான பயிற்சி. சிஸ்டரான பிறகு நாலுவருசும் அங்கு ஆசிரியராக  வேலை பார்த்தேன். நான் எந்த நோக்கத்துக்காக போனேனோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாத்தியமே அங்கு இல்லே. பணக்காரங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூலுக்கு ஆசிரியராத்தான் இருக்க முடிஞ்சுது. மேல்மட்டத்து ஆட்களை மேலும் மேலும் தூக்கிவிடுகிற காரியத்தைத் தான்  அவங்க செஞ்சுகிட்டிருந்தாங்க. என்னைப் போன்ற கஷ்டப்படும் தலித் மக்களுக்கு என்னால எந்தப் பிரயோஜனமும் இல்லங்கிறது ரொம்ப வேதனையா இருந்தது. என்னோட தலித் கலாச்சாரத்துக்கும் அங்குள்ள கான்வென்ட் கலாச்சாரத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகல எங்களோடது வெள்ளத்தியான கலாச்சாரம.; அவங்களது அப்படி கெடையாது. பூடகமா வேஷம் போடுகிற மாதிரிதான் எனக்குப் புரிஞ்சுது. என்னால அப்படி வேஷம் போட்டுகிட்டு இருக்க முடியல எனக்குப் பொருத்தமில்லாத இடம்னு என் மனசுல பட்டது. அங்கிருந்து 1992லே வந்தேன்.

வெளியே வரும் போது வேற வேலை இல்ல. சேமிப்போ சொத்து சொகமோ எதுவும் கிடையாது. வெறுமனே வெறுங் கையோட வெளியே வர்றேன். ஏழவருசம் உள்ளேயே கிடந்துட்டேன்ல சாதராண மனிதர்களோட உறவு கொள்ளவோ சமுதாயரீதியான வாழ்க்கைக்கோ தகுதி இல்லாத மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது. அது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு  எதிர்காலம் பத்தின கனவு இல்லன்னாலும் அந்த நிகழ்காலத்துல வாழ்றதுக்கு கூட வழிவகை ஒண்ணும் தெரியல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல். என்ன பண்றதுன்ட்டு  சின்னதா ஒரு வேலை பார்த்துகிட்டு ஜீவிதம் bama_0427 பண்ணிக்கிட்டிருந்தேன். என் கிராமத்து சந்தோசமான கலகலப்பான சூழல் எல்லாமே இழந்து போய் இன்னிக்கு இப்படி உட்காந்து இருக்கோமே என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டுச்சு. மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு ஏங்குகிற மாதிரியான சூழல் .எங்க குடும்ப நண்பர் மாற்குவிடம் என் சூழ்நிலையைச் சொன்னேன் வாழ்க்கையிலே ஒருபிடிமானமே இல்லாம அந்தரத்திலே இருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லி அழுதேன். அப்போதான் இதையெல்hம் ஒரு நோட்டுல எழுதி வை மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு மாற்கு சொன்னார்.  ஓரு ஆறு மாசம் மனசுக்கு என்ன என்ன  பட்டதோ அதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதினேன். பிறகு வாசிச்சபோது எனக்கு நல்லா இருந்தது. அதை புத்தகமா போடலாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதிலே உடன்பாடு இல்ல. என் விசயம் மட்டுமல்ல அது ஊர்மக்கள் பலரோட விசயங்களும் கலந்து ஒரு கலவையா வந்திருந்தது.  அது தலித்மொழி பொதுமொழி  என ரெண்டு மொழியிலேயும் கலந்து எழுதியிருந்தேன். ரெண்டு மூணுநண்பர்களும் வாசிச்சிட்டு இந்த தலித் மொழிநடை புதுசா இருக்கு மொத்தத்தையும் இதே மொழிநடையிலேயே கொண்டு வந்துட்டா நல்லா இருக்கும் என சொன்னாங்க. மறுபடியும் வந்துட்டா. எழுதி எடிட் பண்ணி கொடுத்தேன். புத்தகமா அவங்களே போட்டாங்க அப்படி வந்தது தான் கருக்கு.

மேல் சாதிக்காரங்களோட ரியாக்சன் எப்படி இருந்தது?

அவங்கள்ல சில பேரு படிச்சிருக்காங்க ஆனா நேரடியா மோதல. எங்க சனங்க அவங்ககிட்ட வேலைக்குப் போகும் போது ரொம்ப குத்தலா பேசி திருப்பி அனுப்பியிக்;காங்க.

உங்க ஊர் எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டீங்க?

எங்க ஊருலே என்னை அடிக்கணும்கிற மாதிரித் திட்டம் போட்டிருக்காங்க ஒரு பையன் எனக்கு கடிதம் போட்டிருந்தான் கருக்கு பற்றி ஒரு ஆயவுக் கடிதம் எழுதி உங்களைப் போல வேறு யாரும் நம்ம விசயங்களை இப்படி எழுதினது கிடையாது. நீங்க மட்டும் தான் எழுதியிருக்கீங்க. இவங்க தவறா புரிஞ்சிகிட்டாங்க நான் அவங்களுக்கு விளக்கிச் சொல்றேன்னு எழுதியிருந்தான். அவன் கல்லூரி மாணவர்களை  எல்லாம் கூப்பிட்டு தெருவிளக்கு வெளிச்சத்திலே உட்கார வைச்சு சத்தமா வாசிச்சு ஒவ்வொரு விசயத்தையும் இந்த விசயத்த தான் இப்படி இப்படி எழுதியிருக்கான்னு  புரிய வைச்சுருக்கான் பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டாங்க. எங்க ஊரிலே அம்பேத்கார் சிலை ஒன்னு வைச்சாங்க அந்த நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க எனக்கு கருக்கு பாமா-ன்னு அடைமொழி வைச்சி அழைப்பிதழ் போட்டிருந்தாங்க. எனக்குப் பாராட்டும் நடத்தினாங்க அந்த மண்ணைவிட்டுப் பிரிஞ்சு வந்து ரொம்ப நாளாகி  இருந்தது ஆனா இந்த நிகழ்சிக்குப் பிறகு என் கிராமத்துக்கும் எனக்கும் ஒரு ஆழமான நெருக்கம் உறவு ஊரே சொந்தமான மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டிருக்கு

உங்க படைப்புக்கள் எந்தெந்த மொழிகளிலே வந்திருக்கு?

கருக்கு,சங்கதி ரெண்டும் இங்கிலீஸ்லே வந்திருக்கு சங்கதி பிரெஞ்சிலே வந்திருக்கு. அதோட வெளியீட்டு விழாவுக்கு நான் பாரிசிக்குப் போயிருந்தேன். நாவல் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வன்மம் நாவலும் கிசும்புக்;காரன் சிறுகதைத்தொகுதியும் ஆங்கிலத்தில் வரப்போகுது. அண்ணாச்சி சிறுகதை 16 இந்திய மொழிகள்லே வந்திருக்கு.

உங்க மன ஆறதலுக்காக உங்களுக்கு நீங்களே எழுதிகிட்டது தான் கருக்குன்னாலும் ஒரு அற்புதமான மொழிநடை அதிலே உங்களுக்கு கைவந்திருக்கு சமூகம் பற்றி தெளிவான புரிதலும் உங்களுக்கு இருந்திருக்கு பிரச்சினைகளை எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாம எழுதியிருக்கீங்க ஆக எழுத்துப் பயிற்சியும் தீவிர வாசிப்பும் ஏற்கனவே உங்களுக்கு இருந்திருக்ககின்னு  நினைக்கிறேன்.?

ஆரம்பகால வாசிப்பின்னா நான் ஹைஸ்கூல்ல படிக்கும் போது அண்ணன் (ராஜ் கௌதமன்)  காலேஜ் படிச்சுட்டு வீட்டில இருந்தாங்க. அப்போ எங்க ஊர் பக்கத்துல இருந்த லைப்ரரியிலேயிருந்து நிறைய புத்தகங்களை எடுத்துகிட்டு வந்து படிப்பாங்க. இந்திரா பார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி, அகிலன,; ஜெயகாந்தன், இந்த மாதிரி நாவல்கள் தான். அப்போதெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கிற பழக்கமில்லே. கிடைக்கிறதைப் படிக்கிறது. அப்போது எனக்கு ரொம்பப் பிடிச்சது ஜெயகாந்தன் நாவல்கள். ஜெயகாந்தன் bama1 மற்ற எழுத்தாளர்கள்லே இருந்து வேறுபட்டு நிக்கிறாரு என்பது மட்டும் அப்போ புரிஞ்சது. இப்போ நினைக்கும் போது மற்றவர்கள் பாலியில் ரீதியான, உளவியல்ரீதியான, மேல்தட்டு வர்க்கம் சார்ந்த விசயங்களை பதிவு செய்த போது இவர் நம்மள மாதிரி கஷ்டப்படுகிற உழைக்கும் அடித்தட்டு சனங்களைப் பற்றி எழுதுறாருன்னு தோணியிருக்கு. கல்லுரிக்குப்  போனபிறகு சிவசங்கரி, இந்துமதி, லக்சுமி இப்படியான புத்தகங்களை வாசிச்சிருக்;கேன். இப்படித்தான் என் ஆரம்பகால வாசிப்பு இருந்தது.கருக்கு வெளிவந்த பிறகு வந்த விமர்சனங்களுக்குப் பிறகு தான் இவங்க சொல்ற நாவல்லாம் எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு பரவலா  படிக்க ஆரம்பிச்சேன். என் ஆரம்ப கால எழுத்தைப் பற்றி கேட்டிங்கள்லே கல்லுரி நாட்களிலே கவிதைகள் எழுதியிருக்கேன். இயற்கையை பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை கவிதைகளாக்கி இருக்கேன். ஆனா எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பினது கிடையாது. கல்லூரி மலரிலே நியை வெளிவந்திருக்கு.

இதுவரை 29 கதைகள் எழுதியிருக்கீங்க ஒவ்வொரு கதையிலேயும் பழைமையை உடைச்சு புதுமையை புகுத்துற மாதிரியான ஒரு ஃபார்மட் இருக்கு குறிப்பா அந்த காலத்தில்னு ஒரு கதை அதிலே தலித்துகளிடம் அந்தக்காலத்திலிருந்தே எதிர்ப்;புணர்வு இருந்திருக்கு என்கிற விசயத்தை பதிவு செஞ்சிருக்கீங்க?

அந்தந்த வாழ்நிலைச் சூழலில் நடந்த சம்பவங்களை நான் ஹைலைட் பண்ணம்னு நெனைக்கிறேன். ஓட்டுமொத்தமான புரட்சின்னு இல்லைன்னாலும்  சின்னச்சின்ன விசயங்கள் நிறைய நடந்துகிட்டிருக்கு. இப்பதான் தலித் எழுச்சி ஏற்ட்டிருக்கின்னு சொல்றோம். ஆனால் அப்போதே சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. அதெல்லாம் பதிவு பண்ணப்படல அப்போ தலித்துகளுக்கு படிப்பறிவு இல்லே. அப்போது எழுதிய ஆதிக்க சாதியினர். அவர்களுக்கு எதிரான விசயங்களை பதிவு பண்ணுவாங்களா. என் கதைகளைப் படிச்சுட்டு நிறைய பேரு இப்படி நடக்குமான்னு கேட்கிறாங்க. இதுல என்ன தெரியுதுன்னா சமூகத்தில் அடிமட்டத்துல நடக்கிற எந்த விசயமும் அவங்களுக்குத் தெரியல என்கிறது தான். தெரிஞ்சுக்;கிறதுக்கான முயற்சிகளையும் அவங்க எடுத்துக்கிறதில்லை. நான் எழுதியிருக்கிறது. கொஞ்சம் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்குது. திண்ணியத்திலே மலத்தை வாயிலே திணிக்கல்லையா?  இதைவிட காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்கு.. இப்படி கேவலமான விசயம் ஏராளம் நடந்துகிட்டுதான்  இருக்கு வெண்மணிச்சம்பவம் நடக்கலியா? இப்படி நடக்குமான்னு கேட்கும்போது எனக்கு எரிச்சல் தான் வருது?

உங்க சிறுகதைகளை ஒரு தொகுப்பா படிக்கும் போது ஒரு நாவலைப் படிச்ச அனுபவம் ஏற்படுது. ஏன்னா உங்க வாழ்ககையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத்தான் கதைகள்லயும் கொண்டு வந்திருக்கீங்க ஆனா உங்க நாவல்  பேசப்பட்ட அளவுக்கு சிறுகதைகளெல்லாம் பெரிய அளவுக்கு பேசப்படலியே?

அண்ணாச்சி, கிசும்புக்காரன், பொன்னுத்தாயி மாதிரியான பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வந்தபோது நிறைய பேசப்பட்டிருக்கு பொன்னுத்தாயி கதையை அறிவொளி மூலமா பரவலா எடுத்துகிட்டு போனாங்க. எல்லா கதைகளும் பரவலா பேசப்படல. என்பது உண்மைதான் ஆனா ஆராய்ச்சி மாணவர்களும் எல்லாக்கதைகளையும் ஆய்வு செய்துகிட்டுதான் இருக்காங்க.

கருக்கு போலவே சங்கதியிலேயும் அதே மாதியான மொழிநடை வாழ்க்கைச் சூழலைக் கொண்டு வந்திக்கீங்களே?

இது வேணுமினே பண்ணதுதான் மொழிநடையில் கருக்கு  அதுவா அமைஞ்சது. சங்கதி வேணுமின்னே பண்ணது. சங்கதி புத்தகமா வெளியிடணும்கிற திட்டத்தோடயே எழுதின நாவல் நான் சந்தித்த நான் பார்த்த நான் கேள்விப்பட்ட தலித் பெண்கள்  பற்றி எழுதப்பட்டது. 2 நாவல்களிலேயும் மொழிநடையை மட்டும் தான் ஒன்னுன்னு சொல்லலாம்.கருக்கிலே இருக்கிற விசயங்கள் வேற சங்கதியிலே இருக்கிற விசயங்கள் வேற கருக்கிலே ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன். என்னோட வாழ்க்கை நூலிழை மாதிரி போய்கிட்டே இருக்கும் அதைச் சுத்தி மற்ற கதாபாத்திரங்களை பின்னி இருப்பேன். ஆனா சங்கதி அப்படி இல்லை. அதிலே மூணு தலைமுறை வரும். குழந்தைப்பருவம,; அடலசண்ட் பருவம், தற்காலத்தில் நான் என்கிற மாதிரி இருக்கும்.

சங்கதி நாவலின் முன்னுரையில் இதனைப் படிக்கும் தலித்பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெற்றிநடைபோட்டு புதியதொரு சமுதாயம் உருவாக்கும் முன்னோடிகளாக புரட்சியைத் தொடங்கித் தொடர வேண்டும் என்ற ஆசையில் நம்பிக்கையில் எழுதியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள்;. உங்கள் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கு?

நான் புரட்சின்னு சொல்ல வந்தது. இயக்கரீதியான புரட்சி இல்லை பண்பாட்டுரீதியான புரட்சி. அப்படியான புரட்சி நடந்தது. நடந்துகிட்டிருக்கு. சங்கதியில் வர்ற கேரக்டர்களை பார்த்தீங்கன்னா அவங்க வாழ்க்கையிலே புரட்சி நடந்திருக்கு அவங்க விடுதலை பெற்ற பெண்மணிகளா அவங்க வாழ்க்கையிலே இருக்காங்க. அதுக்காக அவங்க சராசரி பெண்ணோட வாழ்க்கையிலேருந்து முற்றிலுமா வேறுபட்டாங்கன்னு சொல்ல வரலே. அன்றாடம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலேயும் அந்தப் பண்பாட்டுப் புரட்சியிலே ஒரு சுதந்திரமான ஜீவிதத்தை கண்டு பிடிக்கிறாங்க. திருமணம், குடும்பம் என்பது நம்மை தடைப்படுத்தக் கூடிய விசயம் என்பதை பல பெண்கள் புரிஞ்சிகிட்டு என்னை ஒரு மாடலா வைச்சுகிட்டு இருக்காங்க.

உங்கள் வன்மம் நாவலில் பள்ளர் பறையர்களுக்கிடையேயான  பிரச்சனைகளை எழுதியிருக்கீங்க. தலித் ஒற்றுமை அதிகாரத்தைக்  கைப்பற்றுவது என்பதை வலியுறுத்தி இருக்கீங்க தலித் ஒற்றுமையின் மூலமா மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்னு நம்புறீங்களா?

வன்மத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற முக்கிய விசயம் வேறு தலித் உட்பிரிவுகளுக்கும் சரியான புரிதல் இல்லாத இளைஞர்கள் வளர்ந்து வரும் தலைமுறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்bama2 உட்பிரிவுகள்  ஒற்றுமையோடு சேர்ந்து நிற்கும் போது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்பதைச் சொல்கிறேன். வன்மம் பழங்கதை கிடையாது. சமகாலப்பிரச்சினை கண்ணாம் பட்டி என்கிற கிராமத்துக்குள்ளே மட்டும் அடங்கிப்போன விசயம் ஒரு வீட்டுக்குள்ளே ரெண்டு பேருக்கு  இடையிலே நடக்கிற பிரச்சினை மாதிரி. என்னுடைய ஆதங்கம் என்னன்னா  இந்தக் கலவரங்களாலே  வளருகின்ற தலைமுறை ஒரு பகைமை உணர்வோடு வன்மத்தோடு வளர்ந்துகிட்டு வருது. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை அழித்துக்கொண்டே வருகிறோமே என்பதைச் சொல்வது தான் வன்மம்.

தலித் இயக்கங்கள் இப்போது தான் வளர ஆரம்பிச்சிருக்கு அதுக்கு முன்னாடி தலித்துகளுக்காக போராடின பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த பதிவும் உங்கள் படைப்புகளிலே காணோமே?

பொதுவுடமை இயக்கம,; திராவிட இயக்கம் இரணடும் வண்மம் கதை நடந்த அந்த ஊரில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. போதுவுடமை இயக்கத்தில் தலித் மக்கள் அதிகமாக இருக்காங்க. பொதுவுடமை இயக்கங்கள் இப்போதான் சாதியைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனாலும் வர்க்கத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் சாதியத்துக்கு கொடுக்கிறதில்லே. வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாக ஒழியும்கிறாங்க.  அதில எனக்கு நம்பிக்கை இல்லே. என்னதான் வசதியிருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் சாதிய முத்திரைப் போகல. சில பேரு நகர்புறங்களில்  சாதிய உணர்வு இல்லைங்கிறாங்க. அப்படியெல்லாம் நிச்சயமா கெடையாது. நகர்புறத்துக்கும் வடிவங்கள்தான் மாறி இருக்கிறதே தவிர மற்றப்படி சாதிய அடையாளம் என்பது செத்து மணண்ணுக்குள்ளே போகிற வரைக்கும் இருக்கத்தான் செய்யுது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லே. வர்க்;கரீதியாக விடுதலையாகிட்டீங்கன்னா யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. என்பது தான் உண்மை. ஆனால் வர்க்கப்ப் போராட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு சாதி ஒழிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும் தலித் பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டால் அனைவருக்குமே விடுதலை கிடைத்துவிடும்.

உங்க தலித் மொழியை மற்ற மொழிகளுக்கு எந்த அளவுக்கு நுட்பமா கொண்டு போக முடிஞ்சிருக்கு?

தமிழிலேருந்து தெலுங்குக்கும், மலையாளத்துக்கு பண்ணும் போது மொழிநடையை ஓரளவுக்கு மெய்ன்டன் பண்ணமுடியுது. ஆங்கிலம் என்று போகும் போது கொஞ்சம் அடிபடத்தான் செய்யுது. அதுக்காக மொழி பெயர்க்காமலும் இருக்க முடியாது. மோழிபெயர்ப்பின் மூலமாத்தான் தமிழ்நாட்டு தலித் பிரச்சனையை இந்திய அளவிலே சர்வதேச அளவிலே பேசமுடியுது.

லட்சியம்னு ஏதாவது வைச்சிருக்கீங்களா?

எழுதுவது எனக்கு தொழில் கிடையாது. இப்படியான பிரபலம் நான் எதிர்பார்க்காதது அது பாதிக்காததாலே தான் இன்னமும் எழுதமுடியுது. நான் இங்கே ஒரு சாதாரண ஆசிரியை சாதாரணமா இங்கே குடியிருக்கேன் நான் ஒரு தலித் என்பதாலே தலித் மக்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கு என் ஸ்கூல் பிள்ளைகளுக்கு என் வாழ்க்கையைத்தான் முன் மாதிரியா சொல்றது. நானும் உங்களை மாதிரி கிராமத்திலிருந்து வந்தேன் கல்வியினாலே நாம் விழிப்புணர்வு அடையலாம் இயற்கையிலே இருக்கிற போராட்ட குணத்தை இன்னும் கூர்மைப்படுத்தலாம். போராடி வாழலாம் என்கிற மாதிரியான தன்னம்பிக்கையை ஊட்டுறேன். இங்கே யாருக்கும் நான் எழுத்தாளரா தெரியாது. அப்படி பெரிய எழுத்தாளரா நான் காட்டிக்கிறதும் கிடையாது. மளிகைக்டைக்காரர், முட்டைக்கடைக்காரர் பேப்பரிலே என் போட்டோவைப் பார்த்துட்டு நீங்க கதை எழுதுகிறவங்களான்னு கேட்பாங்க. அவ்வளவுதான் மக்கள் பிரச்சினையை எழுதணும் வெளிப்படுத்தணும் என்பது தான் முக்கியம் என்னைப் பாதிக்கிற விசயங்களை எழுதுவேன். விமர்சனங்களுக்காக நான் என்னை மாற்றிக்கிட்டு சமரசம் பண்ணிக்க மாட்டேன். விருதுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ எழுதமாட்டேன். விமர்சிப்பது அவர்கள் சுதந்திரம் எழுதுவது என்கடமை.

மகளிர்தினம் பற்றி?

மகளிர்க்கான பிரச்சினைகளை அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் யோசிக்க வேண்டிய கடப்பாடு இருக்கு. கூட்டங்கள் பேரணிகள் நடக்கும். பெண்களிடமிருந்து புதிய படைப்புக்கள் வரும். அந்த நாளில் மட்டுமில்லாமல் தொடர்ந்து விழிப்புணர்வு வேணும். பெண்களை இழிவுபடுத்துகிற மாஸ்மீடியா மதங்கள் குடும்ப அமைப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட இந்த தினம் பயன்படணும்.

(நன்றி: புத்தகம் பேசுது)

*******

சிதறல்கள்-பாமா

 

மரத்தூர்  சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் பிரதான சாலையில் bam4 மாத்தூர் அமைந்திருந்தது. கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட சிறுவர்கள், அந்தப் பள்ளியில் இருந்தார்கள். சந்திரனும் அவர்களில் ஒருவன். எடையபட்டிதான் அவனது சொந்த ஊர். சீர்திருத்த பள்ளிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அவனது ஊரைவிட மாத்தூர் கொஞ்சம் பெரிய கிராமமாக இருந்தது. சீர்திருத்தப் பள்ளி ஊரைவிட்டுத் தள்ளி காட்டுப் பகுதியில் இருந்தது. அவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவி;ல்டலை. அடிக்கழ அவனது ஊரையும், அவனது அம்மாவையும், அவனது ஒரேயொரு குட்டித் தங்கையையும், அவன் படித்த பள்ளியையும், அவனது நண்பர்களையும் நினைத்துப் பார்ப்பான். அப்படி நினைக்கும் பொழுதெல்லாம் அவனுக்குக் கண்கள் கலங்கும். அங்கு வந்த புதிதில் அடிக்கடி அழுதுகொண்டிருப்பான். இப்போது மௌனமாக வேதனையைச்  சுமந்து திரியப் பழகிக் கொண்டான்.சந்திரனின் வயது பதிமூன்று. சீர்திருத்தப்பள்ளிக்கு வருதற்கு முன்பு, ஊரில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது அவனது அப்பா கோதண்டம் இறந்துபோனார்.

வயலில் நெற்பயிருக்குப் பூச்சி மருந்து அடிக்கச் சென்றவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்லி, வீ;ட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். சந்திரனின் அம்மா ரஞ்சிதம் கூலி வேலை செய்து சந்திரனைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.  சந்திரனும் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் இருந்தது போல மற்ற எல்ல விசயத்திலும் கெட்டிக்காரனாக இருந்தான். அவனை எப்படியாவது படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரஞ்சிதம் கனவு கண்டாள். ஆனால் இடையிலேயே அவனது வாழ்க்கை இப்படியாகிப் போனதை எண்ணி அவள் நொறுங்கிப் போனாள். சந்திரனுக்கும் அம்மாவை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். மறுபடியும் ஊருக்குப் போயி நண்பர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும் தங்கையோடு விளையாட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.

ஊரில் படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து செய்த சேட்டைகளை யெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வான்.அவன் படித்த பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வட்டமான பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுச் சுவரையொட்டிய மஞ்சணத்தி மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்தது. அந்தக் கூட்டில் இருந்த குருவிக்குஞ்சை எடுப்பதற்கு, நண்பர்கள் சந்திரனை மரத்தில் ஏறச் சொன்னார்கள். சந்திரனும் ஏறினான். கூடு இருந்த கிளை கிணற்றின் உட்புறமாக சாய்ந்து தொங்கிக்கொண்ழருந்தது. அந்தக் கிளையில் கால் வைக்க வேண்டாமென்று நண்பர்கள் சொன்னார்கள். அது மிகச் சிறியதாக இருந்ததால் ஒடிந்து விடுமென்று பயந்தார்கள். அப்படி ஒடிந்தால் சந்திரன் கிணற்றுக்குள்தான் விழ வேண்டும். சந்திரனும் அந்தக்கிளைக்கு அருகே இருந்த பெரிய கிளையில் காலூன்றிக் கொண்டு கையை நீட்டி கூட்டைத் தொட முயன்றான். தொட முடியவில்லை. அந்தக் கிளை கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்ததால் கூட்டை நெருங்குவது அவ்வளவு சுலபமாக இல்லை. நண்பர்களுடைய ஆலோசனைப்படி சந்திரனின் சட்டையைக் கழற்றி அதை அவன் இடுப்பில் கட்டியிருந்த அரை  ஜாண் கயிற்றில் கட்டி, சட்டையின் மறுமுனையை நண்பர்கள் பிடித்துக்கொள்ள, சந்திரன் தாவி அந்தக்கிளையை இழுக்க முயன்றான்.

ஆனால் அடுத்த நிமிடத்தில் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்துவிட சந்திரன் தாவி தடாலெனக் கீழே விழுந்தான். நல்லவேளையாக கிணற்றுக்குள் விழாமல் வெளியில் விழுந்ததால் கை ஒடிந்ததோடு தப்பித்துக்கொண்டான். அந்தத தோளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதனால் ஒருமாதம் பள்ளிக்கே செல்லாமல் சுற்றிக்கொண்ழருந்ததை நினைத்துக்கொண்டான்.அப்போது பயிற்சிக்கு மாஸ்டர் அழைப்பதாக மணிகண்டன் வந்து சொல்லவும், சந்திரன் எழுந்து சென்றான். அந்தப் பள்ளியில் அவனுக்குப் பிடித்தது அந்த வாத்தியக் கருவிகளைக் கையாளுவதுதான். அனைத்துக் கருவிகளையும் இசைக்கப் பழகியிருந்தான். ஊரில் இருக்கும்போதே பறையடிப்பதில் அவனை யாரும் வெல்லமுடியாது. நாக்கைக் கடித்துக்கொண்டு ஆவேசத்தோடு ஆடிக்கொண்டே அவன் அடிப்பதைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கே ஆட்டம் வந்துவிடும். அவ்வளவு ஈடுபாட்டோடு பறையடிப்பான்.

இப்போது இங்கு பறை இல்லாததால் டிரம்ஸ் அடிப்பான். ஆனாலும் பறை அடிப்பதில் இருக்கும் ஊக்கமும், உற்சாகமும் டிரம்ஸ் அடிப்பதில் இல்லை என்று அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. புல்லாங்குழலில் வாசிப்பான். தபேலா அடிப்பான். வாசிக்கப்படும் இசைக்கு ஏற்ப மொராக்கசை வைத்து அருமையாக உள்ளங்கையில் உருட்டுவான். அந்த மொராக்கசை உருட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு முன் அதை ஊரில் பார்த்திராததால் அவன் அப்பொழுதும் அதை எடுத்து உருட்ட விரும்புவான். அவன் தாளம் தவறாமல் உருட்டுவதால் மாஸ்டரும் அவனை அதையே உருட்டச் சொல்லிவிட்டார். இதற்காக மட்டும்தான் அந்த மாஸ்டரை அவனுக்குக் கொஞ்சம் பிடிக்கும். மற்றபடி அவரைக்கண்டால் இவனுக்குக் கோபம் கொப்பளிக்கும். அதற்குக் காரணமும் இருந்தது.

நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ஓரிடத்திற்கு வாத்தியக்குழு சென்றிருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்திரன் தப்பியோட முயன்றான். அப்போது இந்த மாஸ்டர்தான் அவனைப் பிடித்துக்கொண்டுவந்து மீண்டும் இந்த பள்ளியில் போட்டுவிட்டார். அதிலிருந்து மாஸ்டருக்கு இவன்மேல் ஒரு கண். எங்கு சென்றாலும் இவனைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். அதை அவன் வெறுத்தான். அவரையும் வெறுத்தான். இப்போது காட்டுப்பாட்டிக்குச் செல்ல பயிற்சி எடுக்கும்போதே சொல்லிவிட்டார்.“என்ன சந்திரன், நம்ம போறது ஒரு சின்ன கிராமம். அங்கயெல்லாம் தப்பிச்சு கிப்பிச்சு ஓடலாம்னு நெனைக்காதே. அப்பிடி எதுவும் செஞ்சீனா ஈசியா மாட்டிக்கிடுவெ.சந்திரன் பதிலுக்கு அவரை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவுதான் அவனால் செய்ய முடிந்தது.காட்டுப்பட்டி பள்ளியைத் திறந்து வைக்க வந்த அதிகாரியை, காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தி லிருந்து வாத்தியக்குழுவினரின் இசையோடு ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி மாஸ்டரும், மற்றும் வாத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த பத்துச் சிறுவர்களும் தூய வெண்ணிறச் சீருடை அணிந்து, வெள்ளைத் தொப்பி வைத்து, அவரவரின் வாத்தியக் கருவிகளுடன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தில் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்.

காட்டுப்பட்டி ஊர்த்தலைவரும், ஊர்மக்களோடு அங்கு வந்து காத்திருந்தார். பேருந்துநிலையத்திலிருந்து பள்ளிக்கூடம் வரையுள்ள தெருக்களில் ஆங்காங்கே மின்விளக்குகள் கட்டி அலங்கரித்திருந்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பேருந்துநிலையம் மிகவும் சிறியதாக இருந்தது. ஒன்றிரெண்டு தேநீர்க் கடைகள் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்பழ எதுவுமில்லை. ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அதில் சினிமா போஸ்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. என்ன படமென்று சரியாகத் தெரியவில்லை.

ஊரில் இருக்கும்போது அக்கம்பக்கத்து பையன்களோடு சினிமாப் பார்க்கப் போனது சந்திரனின் நினைவுக்கு வந்தது.ஊரில் இருந்த சினிமாக் கொட்டகையில் ரஐனிகாந்து படம் வந்தபோது அம்மாவிடம்  சினிமாவுக்குக் காசு கேட்டு தொந்தரவு செய்தது ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவிடம் அப்போது பணமில்லை. படம் ஆரம்பமாவதற்கு முன்பே அங்கு சென்ற சந்திரன், டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டு டிக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். கவுண்டரில் டிக்கெட் கட்டைக் காணாமல் அலைமோதிக் கொண்டிருந் தார்கள். காணாமல் போன டிக்கெட்டுகளின் எண்கள் தெரியுமாதலால் அந்த எண்கள் கொண்ட டிக்கெட்டுகளை எடுத்து வருபவர்களைப் பிடிப்பதற்கு உஷாராக இருந்தார்கள்.இதைப்பற்றியெல்லாம் யோசிக்காத சந்திரன் தன் நண்பர்களுக்கும் டிக்கெட் கொடுத்து, அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றான். மாட்டிக்கொண்டதும் நண்பர்கள் சந்திரன்தான் தங்களுக்கு டிக்கெட் கொடுத்தான் என்று சொல்லிவிட சந்திரனைப் பிடித்து விசாரித்தார்கள் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கச் சொன்னார்கள். ஊரில் அனைவரும் ~டிக்கெட்டு எடுத்த பெயலுக்கு அதக்கொண்டுக்கிட்டு போனா புடிபட்டுக்கிருவம்னுகூடத் தெரியல பாருன்னு"சொல்லி அவனைக் கிண்டல் செய்து சிரித்தனர்.

தலைவர் வந்துவிட்டாரென மக்கள் பரபரப்பாகவும் சந்திரனின் சிந்தனை தடைப்பட்டது. மாஸ்டர் உத்தரவுப்படி அவரவர் வைத்திருந்த வாத்தியக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தனர். சந்திரனும் தன் கையிலிருந்த மொராக்கஸை வலது கையில் பிடித்துக்கொண்டு பல வண்ண மணிகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த அந்த மணிகளை இடது உள்ளங்கையில் வைத்து தாளத்துக்கு ஏற்றபடி உரசி உரசி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்களும் ஒருமித்த வாசித்ததைக் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மாஸ்;டர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தலைவர் ஏறிக்கொள்ள ஊர்வலம் தொடங்கியது. வாத்தியக்குழு ஊர்வலத்துக்கு முன்னே வாசித்தபடி மெதுவாகச் சென்றது.

சிறுவர்களின் வாசிப்பு மிகவும் பிரமாதமாக இருப்பதாக மக்கள் ஒருமனதாகச் சொன்னார்கள். அந்தச் சிறுவர்களைப் பார்ப்பதற்கே கூட்டம் அலைமோதியது. ஆனால் அந்தச் சிறுவர்கள் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை. ஏதோ தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒரு கடமையைச் செய்வது போல எவ்விதச் சலனமுமின்றி அவர்கள் வாசித்துக் கொண்டே முன்னோக்கி நகர்ந்தார்கள். இடையிடையே பட்டாசுகளை வெடித்தார்கள். சிறுவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களது முழுக் கவனமும் வாசிப்பில்தான் இருந்தது. அவர்களைச் சுற்றி இளைஞர்கள் ஓர் அரண்போல பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து மாஸ்டரின் ஏற்பாட்டின்படி ஒரு பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் அப்படி புடைசூழ்ந்து வருகிறார்கள் என்பதை சந்திரன் புரிந்து கொண்டான். அவனுக்கு அது எரிச்சலை உண்டாக்கியது. அவன் மனது பலவிதமான உணர்வுகளால்; அலைக்கழிக்கப்பட்டது. அவன் கையில் அகப்பட்டுக்கொண்ட அந்த மொராக்கஸை அவன் ஆக்ரோசமாக உருட்டி, உருட்டி மனசை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான். கைகளிரண்டும் சூடாகின. மனது கொதித்துக்கொண்டிருந்தது.

தங்களைச் சுற்றி பெருந்திரளாக மக்கள் கூடி வந்தது தங்களது வாசிப்புத் திறனைப் பார்த்து, கேட்டு மகிழத்தான் என்றெண்ணியிருந்த சந்திரன், அவர்கள் தங்களது பந்தோபஸ்துக்காகத்தான் வருகிறார்கள் என்பதை அறிந்தபின் ஆத்திரமும், வெறுப்பும் அடைந்தான். மாஸ்டரைப்  பார்க்கும்போது அவனுக்கு வெறித்தனமான கோபம் வந்தது. அவர் தன்னைமட்டும் குறிப்பிட்டு கவனிப்பது போல் தெரிந்தது. இந்த ஊர் மக்களிடம்கூட அவர் தன்னைப் பற்றிச் சொல்லி வைத்திருப்பார் என்று எண்ணினான். அனைவரும் அவனையே கூர்ந்து கவனிப்பதுபோல   அவனுக்குத் தெரிந்தது.

சீர்திருத்தப் பள்ளிக்கு வருவதற்கு முன்பு தனது ஊரில் எவ்வளவு மகிழ்ச்சியாக விழாக்கள் கொண்டாடினோம் என்று நினைத்தான். தன்வயதுப் பையன்கள் ஓடியாடித் திரிவதைப் பார்க்கும்போது அவனது மனது வேதனையில் கனத்தது. அவனது மனச்சஞ்சலத்தை அவன் கையில் வைத்திருந்த மொராக்கஸ் பட்டபாட்டிலிருந்து அறிய முடிந்தது. அவன் மனதிலிருந்த ஆத்திரத்தையும், வலியையும் அவன் கையில் வைத்து உருட்டிய மொராக்கஸின் மணிகள் எழுப்பிக் கொண்டிருந்தன. அவனது முகத்திலிருந்து வியர்வை தாரை தாரையாக வழிந்தது. அவனது கைகள் சூடானது போலவே அவனது முகமும் சூடானது. அவனது நெஞ்சின் வேட்கை, வெக்கையாக வெளியேறியது. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அவன் காதுகளில் தெளிவாகக் கேட்டது.

“யே... இந்தப் பையனப் பாருங்கடா... இந்த மணிய எப்பிடி உருட்டுறாம்னு பாருங்க... இதுமாதிரி உருட்டுற மணிய நம்ம இது வரைல பாக்கவே இல்லைலடா... இவெ உருட்டுற உருட்டுல மணியே அந்து போகும் போலடா..."“இதெப்பிடிடா செஞ்சுருக்காக? "“அதுக்குள்ள இருக்குறது என்னனு தெரியுமா? தேங்காச் செரட்ட"“செரட்டையா? இம்புட்டுப் பெரிய செரட்டையா?"“ஆமாடா.

இது கேரளா தேங்காயில இருக்குற செரட்ட. இதுக்குப்  பேரு கொப்பரத் தேங்காடா. அங்கயெல்லாம் ரொம்பா பெருசாத்தான் இருக்குமாம். எங்கண்ணஞ் சொன்னான். நீயி வேணும்னா அத உருட்டுற பெயல்ட கேட்டுப் பாரேன்."“ஐயய்யோ.... அவங்கிட்டயெல்லாங் கேக்கக் கூடாதுடா. அந்தா வாராருல அவுங்க வாத்தியார்டத்தான் கேக்கனும்".“போடா போ... அவருட்ட கேக்கக் கூடாதுடா. எனக்கு அவரப்பாத்தா புடிக்கவே இல்லடா. அவருதாண்டா இந்தப்பெயல்களை புடுச்சு அடச்சு வச்சுருக்காரு."“இல்லடா... இவனுங்க என்னமோ தப்பு செஞ்சாங்களாம்டா. அதுக்குத்தான் இவனுங்கள செயில்ல புடுச்சு வச்சுருக்காங்களாம். எங்கம்மெ சொன்னா."“போடா  போ... அதெல்லமில்லடா. பாவம்டா இவனுங்க. இவுங்க செயில்ல இல்லடா. அதன்னமோ சீர்திருத்தப்பள்ளிக்கூடத்துல இருக்காங்களாம். ஆஸ்டலுமாதிரி. இல்லடா? "

இதைக்கேட்டுக்கொண்டே  நடந்த சந்திரனுக்கு, ~ஆஸ்டலு இல்லடான்னு" கத்த வேண்டும்போல இருந்தது. அவர்களுடன் பேசவேண்டும் போல இருந்தது. அந்த மாஸ்டரைப் பற்றியும் அந்த சீர்திருத்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அத்துடன் அவன் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருக்கும் அந்த மொராக்கசைப் பற்றியும் அதை  அவன்  எவ்வாறு தாளத்துக்கு ஏற்றாற் போல உருட்டுகிறான் என்பது பற்றியும் அவர்களுக்கு உருட்டிக்காட்டவும் அவனுக்கு ஆசை ஆசையாக இருந்தது. இப்படி எத்தனையெத்தனை ஆசைகளை அவன் அழித்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றெண்ணினான்.

இவர்களைப் போல தானும் தனது நண்பர்களும் பேசித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வர, துக்கம் தொண்டையை அடைத்தது. அழவேண்டும் போல இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எப்பழ அழமுடியும்? அழுகையை அடக்கிக் கொண்டு ஆனந்தமாக வாசிப்பது போல பாவனை செய்ய பழகியிருந்தான்.“பாவம்டா... சின்னப்பெயலா இருக்கான். ஆனா எம்புட்டு அழகா தாளம் தப்பாமெ உருட்டுறாம்னு பாரு. எப்பிடி வேர்த்து ஊத்துதுன்னு பாரு. இவம்மேல கருப்பசாமி எறங்குனது மாதிரி இருக்குதுடா".“இவனத்தாம்டா குறிப்பா கவனிக்கச் சொல்லி அந்த மாஸ்டரு சொல்லியிருக்காராம். ஏம்னா இன்னொரு எடத்துல இப்பிடி வாசிக்கப் போனப்ப இந்தப் பெய தப்புச்சு ஓடப்பாத்தானாம். ஆனா மாட்டிக் கிட்டானாம்.

இதைக்கேட்டதும், அடக்கி வைக்கப்பட்டிருந்த சந்திரனின் அழுகை ஆங்காரமாக மாறியது. மனது இறுக்கமானது. மொராக்கசில் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் இறுக்கத்தை அவன் மனமும் அனுபவித்தது. ஊர்வலம் பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. சந்திரனின் மன உளைச்சல் உச்சத்தை அடைந்தது. அது அந்த மணிகளின் ஆங்கார ஓசையில் வெளிப்பட்டது. அவனது மனதைப் போலவே கைகளும் சூடாகின. அவன் ஆக்ரோசமாக உருட்ட, உருட்ட மணிகளை இணைத்துக் கட்டியிருந்த கம்பிகள் அறுந்தன. மணிகள் சிதறின. விடுதலையாகிப்போன மணிகளை ஏக்கத்தோடு பார்த்தான் சந்திரன்.

*****

May 7, 2010

விட்டு விடுதலையாகி... - பாமா

 

“குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்"னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்"னு  சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு யாருக்குத் தெரியும்? என்னைக்காவது பேருச் சொல்லிக் கூப்புட்டுருந்தா நமக்குத் தெரியும். அவனோட அம்மையும் அய்யனுமே அவன ஒரு நாளும் பேருச் சொல்லிக் கூப்புட்டு யாரும் கேட்டதில்ல. இப்ப என்னமோ புதுசாப் பேரு சொல்லிக் கூப்புடச் சொல்றா." மாரியம்மா சடவாச் சொன்னா.“அதான பாதகத்தியா... அந்தப் பெயலும் இப்ப இருவது வயசு எளந்தாரியா ஆயிட்டான். அவம்பேரு ஒத்த ஆளுக்குத் தெரியல. அவுகம்மெ என்னமோ காணாததக் கண்டுக்கிட்ட கொள்ளு கணக்கா பீத்திக்கிட்டுத் திரிராள்ள... அவாகிட்டயே அவம்பேரக் கேளுங்கடி." சாந்தாயிப் பாட்டி சொல்லவும் அவுகம்மெ அனந்தம்மாட்டேயே அவெம் பேரக் கேட்டாக.

“நல்லா இருக்குடி ஒங்க நாயம்... என்னமோ அசலூர்க்காரிக கணக்காவுல வந்து bama1பேரக்கேக்கிக. ரொம்ப ராங்கிக்காரிகதான்... அவம்பேரு எளையராசான்னு ஒங்களுக்குத் தெரியாதமாதிரி பணுக்குறீகளே என்ன..., அனந்தம்மா சொன்னப் பெறகுதான் காட்டூர்ச் சனங்களுக்குப் பெயோட நெசப்பேரு எளையராசுன்னு தெரிய வந்துச்சு.அனந்தம்மாளுக்கு  மொத்தம்  நாலு பிள்ளைக. மூனு பொண்ணு, ஒரே பையன். அதுனால எளையராசவ ரொம்பச் செல்லமாத்தான் வளத்தா. இவந்தாங் கடேசிப் பிள்ள. இவனப் படிக்க வைக்கனும்னு உள்ளுருல இருந்த பள்ளிக்கொடத்துல சேத்து உட்டாக. ஆனா இவனுக்குப் பள்ளிக்கொடம் புடிக்கல. பிள்ளைக்குப் பிடிக்காத எடத்துல அவன உடக்கூடாதுன்னு அனந்தம்மா அடுச்சுச் சொல்லவும் அவுகய்யன் மாரிமுத்து மறுபேச்சு இல்லாம எளையராசவெ வீட்டுலயே வச்சுக்கிட்டான்.
சின்னதுலருந்தே எளையராசா ஒரு வடியாவே திருஞ்சான். வேளாவேளைக்குச் சாப்புடுரதும், தெருப்பெயல்களோட வெளாடுரதுந்தான் அவனோட வேல. இப்ப இருவது வயசு எளந்தாரியனைப் பெறகும் சின்னப் பிள்ளைக கூடத்தான் சேந்துக்குட்டுத் திரிரான்.  காலு, கையி, மூஞ்சி மொகறையெல்லாம் வங்குவங்கா இருக்கும். நல்ல மொகவாக்கான பெயதான். இருந்தாலும் மண்ட முடியெல்லாம் செம்பட்ட பருஞ்சுபோயி, புருவத்துல வள்ளுசா முடி இல்லாமெ பாக்குரதுக்கு ஒரு சைசா இருப்பான். பூன மீச கெணக்கா எத்தலுங் குத்தலுமா நாலஞ்சு மசுரு ஒதட்டுக்கு மேல குத்திக்கிட்டு நிக்கும். அவுகம்மெயக்கூட எல்லாரும் குப்பெக்கோழின்னுதான் சொல்லுவாக. அவா காதுபடச் சொன்னா, சொன்னா, சொன்னவுகள கிழுச்சுப் பத்திருவா கிழுச்சு.
அவுகய்யனும் அவுகம்மையும் குப்பெயிட்ட எம்புட்டோ சொல்லிப்பாத்துட்டாக.

“நாலு காசு சம்பாருச்சாத்தாண்டா ஒரு பொண்ணுகிண்ணு பாத்துக் கலியாணங்காச்சின்னு முடிக்கலாம் சும்மாச் சுத்திக்கிட்டுத் திரிர வெறும்பெயலுக்கு ஒருத்தரும் பொண்ணு குடுக்க மாட்டாகடா." ஆளப்போல சனத்தப்போல காடுகரைகளுக்கு வேலவெட்டிக்குப் போகனும்"  நல்லாத் துணிமணி எடுத்துக்கெட்டனும் குளுச்சுப் பெறக்கிச் சுத்தமா இருப்போமுன்னு இத்தினிக்கூட எண்ணமில்லாத பெயலாவுல இருக்கெ... இப்பிடி இருந்தீன்னா ஒரு சிறுக்கிக்கூட ஒனிய ஏறுட்டுப் பாக்கமாட்டா. கலியாணம் முடிக்கிற வயசாகிப் போச்சு இன்னங் காத்துட்டுச் சம்பாத்தியம் இல்ல இம்புட்டு வயசாகியும் இன்னமும் வேல பழகாமெ இருந்தா எங்க கண்ணுக்குப் பெறகு எப்பிடித்தான் பொழைக்கப் போறீயா.... தெரியலயே."

“நீயி இப்பிடியே இருந்து நக்குன. இப்பிடியே இருந்தா... சோறு எப்பிடிக்கூடி வரும்? ஏதோ எங்க கண்ணுள்ளவர கூழோ கஞ்சியோ ஊத்துவோம்னு வையி. எங்க கண்ணுக்குப் பெறகு என்ன செய்வெ?
எங்கக்காமாருக ஊத்துவாளுகன்னு திக்கிச் திக்கிச் சொல்லுவான். அவெம் பேசுரது அவுக வீட்டாளுகளுக்கு மட்டுந்தான் நல்லாப் புரியும். மத்தாளுகளுக்கு அவ்வளவாப் புரியாது. “அக்காமாருக  கஞ்சி ஊத்துவாளுகன்னு நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு அலைய வேண்டியதுதான். அக்காமாருக ஊத்துனாலும் மாமாங்காரனுக சம்மதிக்கனும்ல. ஒரு எழவும் புரியமாட்டேங்கி தின்னுபோட்டு சும்மா ஊரச்சுத்திக்கி;ட்டே இருக்கனும்ங்க. அப்பிடி இருந்துட்டாக்கூடத் தேவலயே... ஊருக்குப் போயிச் சினிமாப் பாக்குதுக்கு வேறைல துட்டுக்கேட்டு நச்சரிக்க... ஒத்தப் படம் பாக்கி இல்லாமெ வார படம் பூராம் பாரக்கனும்ங்க.... அந்தப் படத்துகள்ள அப்பிடி என்னதான் இருக்கோ தெரியலையே..., அனந்தம்மா அங்கலாய்ப்பா.

“போம்மா....  போ... படத்துல   என்ன  இருக்கா... நீயி ஒத்தப்  படம் பாத்திருப்பியா? ஒனக்கு ரசினிகாந்து, விசயகாந்து, அசீத்து, விசய்யி, விக்கிரம்மு, சிம்முரன்னு, ரம்பான்னு யாரையாச்சுந் தெரியுமா? இவுகள்ளாம் எம்புட்டு சூப்பரா ஆக்டிங் குடுக்குராகன்னு தெரியும்மா...?  நீயி ஒத்தப் படம் பாத்துரு... பெறகு உடவேமாட்டெ..." அனந்தம்மா அங்கலாய்ப்பா.“போடா எடுவட்ட பெயலே. ஒனக்கு ரம்பாவும் கும்பாவும் வந்துதாங் கூழு ஊத்தப்போறாக. சினிமாப் பைத்தியம் புடுச்சுப் போயிக் கெடக்கானே... இவெ எங்குட்டுக்கூடி முன்னேறுவான்? என்ன கழுதையோ பேருக்கு ஒரு பிள்ளன்னு ஒன்னயும் வச்சு கஞ்சி ஊத்திக்கிட்டு கெடக்கோம். ஒங்கய்யங்கிட்ட ஒருவாட்டிக்குப் பத்துவாட்டி சொல்லிட்டேன். அந்தய்யா பரசுராமரு என்னமோ புதுசா கலியாணமண்டவம் கெட்டுறாராம். அவருட்டப் போயிக் கேட்டா அங்னக்குள்ள என்னமோ புதுசா கலியாணமண்டவம் கெட்டுறாராம். அவருட்டப் போயிக் கேட்டா அங்னக்குள்ள கூடமாட எதுனாச்சும் ஏண்ட வேல எடுத்த வேல செய்யச் சொல்லுவாருல்ல. அவரு நெலபொலம் வச்சுக்கிட்டு இருக்கைல எல்லாம் நானும் ஒங்கய்யனும் அவருகிட்டதான் பண்ணவேல பாட்டவேல பாத்துடக்கிட்டு இருந்தோம். இப்பத்தான் பூராத்தையும் வீடு கட்டுற மனைகளாக்கி வித்துப் போட்டாரே... நீயி கைப்பிள்ளையா இருக்கையில எல்லாம் அவரு வீட்டு மாட்டுக் கொட்டாயில தொட்டி கட்டிப் போட்டுத்தானலே ஒனிய வளத்தேன். அவருதான் ஒனிய மொதல்ல குப்பென்னு பேரு வச்சு கூப்புட ஆரம்புச்சாரு. அது அப்பிடியே நின்னு போச்சு. அவருட்ட போயிக் கேட்டா கண்டிப்பா ஒதவி செய்வாருடா."

“அவருட்ட மனுசன் வேல செய்வானா? மாட்ட வேல வாங்குறதுமாதிரி சும்மா வேலவாங்குவாரு. ஆனா ஒத்தப் பைசா தரமாட்டாரு. அவரு ஒரு மனுசம்னு அவருட்டப் போயி வேல கேக்கச் சொல்ற. அவராலதான் எல்லாரும் எனிய குப்பெ, குப்பெனு கூப்புடுறாக. இன்னொருத்தருக்குக் கீழ வேல செய்றதெல்லாம் எனக்குப் புடிக்காதும்மா. நானா சொந்தமா ஒரு வேல செய்வேன். அந்தாளு மூஞ்சியப் பாத்தாலே எனக்குக் கொமிட்டிக்காயப் பாக்குறது கணக்கா இருக்கு.“சே... சே... அப்பிடியெல்லாம் சொல்லாதடா. அவருட்ட வேல செஞ்சுதான் ஒங்களயெல்லாம் ஆளாக்குனேன்".“என்னத்த ஆளாக்குன? அந்தாளுதான் ஆளா ஆகியிருக்காரு. நம்மெல்லாம் நாயா ஒழச்சு  நாசமானதுதான்  மிச்சம்.
“அது என்னமோ நெசந்தாண்டா. நம்மள ஒத்த எழுத்து படிக்க உடாமெ கெடுத்ததே அந்தாளுதான். சின்னதுல இருந்தே அவரோட ஆடுமாடுகள மேச்சு அவருக்குச் சொத்து சேத்து வச்சுட்டு இன்னைக்கு நாம முட்டாக் கழுதைகளா அலைறோம்"

குப்பையோட அக்கா பூமால சொன்னா. அவா சொன்னது சரிதான்னு அவுகம்மெ  நெனச்சுக்கிட்டு மேக்கொண்டு எதுவும் பேசல.
கொஞ்ச நாளுக்கழுச்சு குப்பெ கெணத்து வெட்டு வேலைக்குப் போனான். கடுமையான வேல செய்யாவிட்டாலும், வேல செய்ற ஆளுகளுக்கு பீடி, சிகரெட்டு, வெத்தல பாக்கு, டீ, காப்பி இப்பிடி எதுனாச்சும் கடைல போயி வாஙகியாந்து குடுக்குறதுக்காக இவனக் கூட்டிக்கிட்டுப் போவாக. சும்மா ஊரச்சுத்திக்கிட்டு  இருக்குறதுக்கு இது தேவலன்னு குப்பையோட அம்மையும் போகச்  சொல்லுவா.வாரக்  கடைசில சம்பளம்னு கொஞ்சம் பணம் குடுப்பாக. அத வாங்கிட்டு மொதல் வேலயா தூத்துக்குடிக்கோ இல்லன்னா எட்டயபுரத்துக்கோ சினிமா பாக்கக் கௌம்பிடுவான். செலநேரத்துல கோயில்பட்டிக்கும் போயிச் சினிமாப் பாத்துட்டு வருவான். போறவெந் தனியாவும் போகமாட்டான். அவெஞ் செநேகதக்காரப் பெயல்களையும் கூட்டிக்கிட்டுப் போவான். அவெங்கூடப் போறதுகள்ளாம் சின்னப்பெயல்களாத்தான் இருப்பானுக. அவனுகளுக்கும் இவந்தான் டிக்கட் போடுவானுக. அவஞ்சம்பாரிக்கிரத அவனே காலி பண்ணிட்டு வெறுங்கையும் வீசுன கையுமா வீட்டுக்கு வருவான். அவனப் பாரக்கையில அவுகம்மைக்குப் பூழாப்பா இருக்கும். வசவுல கூடிருவா.

“இப்பிடி அங்கங்க போயி படம் பாத்துட்டு வார பெய, பெத்த தாய்க்கு ஒரு வெத்தல பாக்கு, போயல பொடிமட்டன்னு வாங்கியாராலாம்ல... இத்தினிக்கூட பந்தபாசம் இல்லாத பெய.... சரி எனக்குத்தான் ஒன்னும் வாங்கியாரலன்னாலும், அவுகக்கா மக்களுக்காச்சும் எதுனாச்சும் ஒரு சேவு முறுக்குன்னு வாங்கியாந்து குடுக்கலாம்ல... கோயில்பட்டிச் சேவும், கடலமுட்டாயும் அம்புட்டு ருசியா இருக்கும்பாங்க. சரி அத உடு. அவுகய்யனப் பெத்த கெழவி இன்னைக்கோ, நாளைக்கோன்னு  இழுத்துக்கிட்டு கெடக்காள்ள... ஒருநா ஒரு பொழுது அவளுக்கு ஒரு ரொட்டியோ காப்பித் தண்ணியோ வாங்கிக் குடுக்கலாம்ல... கல் நெஞ்சுக்காரப்  பெய... ஊருக்காட்டுப் பெயமக்களையெல்லாம் கூப்டுக்கிட்டுத்  திரிரான்... கடக்காட்டுகள்ளயும் பெறக்கித் தின்னுக்கிரான். வீட்டுலயும் மொக்குறான்.... இவெ வகுறென்ன வகுறா இல்லவண்ணாந்தாழியோ தெரியல.என்ன வசவு வஞ்சாலும் லொங்கமாத் தின்னுட்டு ஏப்பம் போட்டுட்டுப் போவான். சாப்பாடு சாப்பிடுறதுல மன்னந்தான். வகுத்துக்கு வஞ்சன இல்லாமெச் சாப்புடுவான்.ஒரு தடவ குப்பெயோட மாமெ அவன லாரி வேலைக்குச் சேத்து உட்டான். தூத்துக்குடிலருந்து சரக்கேத்திட்டு மெட்ராஸ் போற லாரில கிளீனர் வேலைக்குப் போனான். எடவழில ராத்திரிச் சாப்பாட்டுக்கு ரோட்டோரத்து ஹோட்டலுல சாப்புடப் போனாங்க. டிரைவரு குப்பெயிட்ட புரோட்டா வாங்கிக்கச் சொல்லிட்டு அவனும் ஒக்காந்து சாப்புட்டான். நாப்பது புரோட்டா சாப்புட்டு இன்னும் புரோட்டா வேணும்னு குப்பெ கேட்டான். அவெஞ் சம்பளத்துக்கு மேல அவனுக்குச்   சாப்பாட்டுக்குச்  செலவழிக்க வேண்டியிருக்குன்னு அன்னைக்கே அவன வீட்டுக்குப் பத்தி உட்டுட்டா ங்க.அதுக்குப் பெறகு வேற ஒரு லெக்குலயும் லாரி வேலைக்குப் போனான்.

இவனப் பத்தி நல்லாத் தெருஞ்ச லாரி டிரைவரு, சாப்பாட்டுக்குப் போகையில அளவு சாப்பாடு இல்லாத ஹோட்டலாப் பாத்து கூப்புட்டுப் போனான்... ஹோட்டலுக்காரன் வைக்க வைக்கச் சாப்புட்டுக்கி;ட்டே இருந்தான் குப்பெ. வச்சு வச்சுப் பாத்துட்டு மெரண்டு போன ஓட்டலுக்காரன் லாரி டிரைவரைப் பாத்து கெஞ்சாத கொறையாச் சொன்னான், அண்ணே நீங்க இது வரைக்கும் சாப்புட்டதுக்கு துட்டுக்வுட குடுக்க வேண்டாம் இந்தப் பையனக் கூப்புட்டுப் போங்கண்ணே. இனிமே இந்தப் பையனோட இங்க வராதிங்கண்ணே ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.அதுலருந்து ஒருத்தரும் குப்பெயக் கூப்புடுறதில்ல. அவனும் அதப்பத்திக் கவலப்பட்டுக்கிட்டதில்ல. அங்குட்டு இங்கிட்டு அலஞ்சு திரிஞ்சுட்டு இருக்கைல பரசுராமர் ஐயா அவன ஒருநாளு பஸ்டாண்டுல பாத்துட்டு கேட்டாரு.“என்னடா குப்பெ, எங்குட்டோ லாரி வேலைக்குப் போறதா ஒங்கய்யஞ் சொன்னான் நீயி இங்க சுத்திக்கிட்டுத் திரிர? “ரெண்டு லெக்குல போனேன், எனக்குச் சாப்பாடு வாங்கிப் போட்டு கட்டுபடி ஆகலன்னு எனிய நிப்பாட்டிப் போட்டாக. நல்லாச் சாப்புட்டாத்தான நல்லா வேல செய்ய முடியும். அதெங்க தெரிது இவனுங்களுக்கு! இப்ப வேற வேல தேடிக்கிட்டு இருக்கேன்.“ஒனக்கென்னடா வேல தெரியும்? அவெவெ பெரிய பெரிய படிப்பெல்லாம் படுச்சுப்போட்டு வேல இல்லாமெ இருக்கான். இவெ என்னமோ வேல தேடுறானாம்.

ஒங்கய்யாவுக்கும் ஒங்கம்மைக்குந்தான் வயசாகிப் போச்சு. நீயி சும்மா திரிரதுக்கு வந்து இந்த மாடு கன்னுகளையாவது மேச்சுடக்குட்டு இருக்கலாம்ல? ஒங்கய்யங்கிட்ட அன்னைக்கே சொல்லி உட்டேன். ஓங்கிட்ட  சொல்லலையாடா? “சொன்னாக. ஆனா நானு வாரமாதிரி இல்ல. நானு வெளி ஊருல போயி வேல செய்யப் போறேன்".
“அப்பிடி என்னடா வெளியூரு வேல? எங்க அமெரிக்காவுக்குப் போறீயாக்கும்?   நக்கலா கேட்டாரு.“அதென்னடா தீவு வேல? எந்தப் பெய ஒனியக்கூப்புட்டான்? நீங்கள்ளாம் வெளியூரு போனா உருப்பட்டாப்லதான். வந்து மாட்டமேச்சுட்டு ஊத்துற கஞ்சியக் குடுச்சுட்டு கெடப்பானா... வெளியூருக்குப் போறானாம். குப்பக்கோழிப்பெய" நக்கலாச் சொல்லிட்டுப் போயிட்டாரு.இவரு இம்புட்டுச் சொன்னமட்டுக்கும் தீவு வேலைக்குப் போயே  தீரனும்னு குப்பெ மனசுக்குள்ள தீர்மானம் செஞ்சுட்டான். கொஞ்ச நாளைக்கு முன்னால தூத்துக்குடில சினிமா பாத்துட்டு வரும்போது பஸ்சுல பாத்த பக்கத்து ஊருப் பெய சக்திவேல் சொன்னத நெனச்சுப் பாத்தான். தீவு வேலைக்குப் போயிட்டு இப்ப லீவுக்கு வந்திருக்கிறதாச் சொன்னான். அவந்தான் குப்பையையும் தீவு வேலைக்குக் கூப்புட்டான். பஸ்சுலயே அவங்கிட்ட எல்லா வௌரத்தையும் கேட்டு வச்சுக்கிட்டான்.
“தீவு வேலன்னா என்ன வேல சக்திவேலு?

“லட்சத்தீவுன்னு  ஒரு  தீவு இருக்குடா. இங்கருந்து கப்பலுல பெரயாணம் செஞ்சு போகனும். போயி ஒரு பத்து மாசம் இருந்து வேல செஞ்சம்னு வையி, நல்லா கைநெறய்யா சம்பாரிச்சுட்டு வரலாம். வாரீயா? “நெசம்மாத்தான  சொல்ற? எனக்கு இங்ன நம்ம கோயில்பட்டி, எட்டாயவரம், தூத்துக்குடி, பந்தல்குடி, அருப்புக்கோட்டன்னா தெரியும். லெச்சத்தீவுன்னு இதுவரையில கேள்விப்படாத பேராவுல இருக்கு. நாம்போயி அங்க என்ன வேல செய்றது? மொதக்காரியம் கப்பலுல போறதுக்குப் பணத்துக்கு எங்க போவேன்?

“அதப்பத்தியெல்லாம் நீ எதுக்குடா  கவலப்பட்டுக்கிற? நீயி வாரேன்னு மட்டும் சொல்லு, மத்தத எல்லாம் நாம்பாத்துக்குறேன். கப்பலுக்கு டிக்கெட்டுக்கெல்லாம் ஒரு ஏஐண்டு இருக்காரு. அவரு டிக்கெட்டு வாங்கி அனுப்பி வைப்பாரு. நீயி சம்பாருச்சு அந்தக் கடன அடைச்சுரலாம். சரிதானா? ஒங்கய்யா, ஒங்கம்மையிட்ட சொல்லிட்டு அவுக சரின்னு சொன்னா வந்து எனியப் பாரு. எங்க ஊருலருந்து நாங்க பத்துப் பேரு ஏற்கனவே போயி வேல செஞ்சுட்டு இப்ப லீவுக்கு வந்துருக்கோம். இன்னும் பத்து நாள் கழிச்சு மறுபடியும் போறோம். நீயி வாரதா இருந்தா எங்ககூடயே வந்துரலாம்.“சரி என்ன வேலன்னு சொல்லமாட்டேங்கீகள்ள... எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுல்ல. நானு என்ன வேல செய்வேன்?
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டா. நாங்கள்ளாம் எல்லாம் ரொம்பாப் படுச்சுட்டா போறோம்? கையெழுத்து மட்டும் போடத் தெரியும். அதுனால பயமில்லாமப் போகலாம்டா.எனக்கு அதுகூடத் தெரியாதேன்னு இழுத்தான் குப்பெ.“கையெழுத்து என்னடா பெரிய கையெழுத்து?

ஒங்க ஊர்ல எவனாவது படுச்ச பெயலுககிட்ட கேட்டீனா ஓம்பேர எழுதச் சொல்லிக்குடுத்துட்டுப் போறானுங்க. ஒனக்கு வரச் சம்மதமான்னு மட்டும் சொல்லுடா.“அந்த ஊருக்கு பஸ் எதுவும் போகாதா? கப்பலுதான் போகுமாக்கும்? “அந்த ஊரு கடலுக்குள்ள இருக்குடா. சுத்தித் தண்ணிதான். அதுனால கப்பலு இல்லன்னா ஏரோப்பிளேனுல போகலாம்.
“சரி அப்ப நானு வாரேன். அப்பிடி போனாலாச்சும் கடலு, கப்பலு எல்லாம் பாத்துட்டு வரலாம் அந்த ஏஐன்டு எனியச்சேத்துக்குவாரா?.
“சேத்துக்குவாரா? இன்னம் நூறு பேரு வந்தாலும் அவரு கூட்டுக்கிட்டுப் போக ரெடியா இருக்காரு. எம்புட்டுப் பேரு வந்தாலும் அம்புட்டுப் பேத்துக்கும் அங்க வேல இருக்குது. நீயி வந்து ஒருவாட்டிப் பாரேன். ஒனக்கே தெரியும்.வீட்டுல போயி தீவு வேலைக்குப் போற விசயத்தச் சொன்னான்.  அம்புட்டுத்தான் அவுகம்மெ அழுகைல கூடிட்டா. என்னமோ இங்னக்குள்ள  நம்ம வகுத்துப்  பாட்டுக்குத்தக்கன  ஒரு  வேல செஞ்சம்னு  இல்லாமெ இப்பிடி எங்குட்டோ  கங்காணா  திக்குக்கு கப்பல்ல போறம்ங்காணேன்னு ஒப்பாரி வச்சா.

குப்பையோட அய்யாவும், மாமாவும் பக்கத்து ஊருக்குப் போயி சக்திவேலப் பாத்து பேசிட்டு வந்து சொல்லவும், அவனுகளோட போறதுக்கு அரமனசாச் சம்மதுச்சா.அப்பிடிப் போன வருசம் மார்கழி மாசம் ஊரவிட்டு லச்சத்தீவுக்கு வேலைக்குப் போனவந்தான். இந்த மார்கழிக்கு ஊருக்கு வந்துருக்கான். அதான் ஊரெல்லாம் ஒரெ குப்பெயப் பத்திய பேச்சாவே இருந்துச்சு. அனந்தம்மாளுக்கும் மாரிமுத்துக்கும் சந்தோசமா இருந்துச்சு. அதுலயும் குப்பெ வந்துருந்த தோரணயப் பாத்து அவுக ரெண்டு பேரும் பூருச்சுப் போனாக. முன்னால அவனக் குப்பெனு சொன்னவுகள்ளாம் இப்பெ எளயராசான்னு சொன்னாக. அப்பிடிச் சொல்லலைன்னா அவுகம்மெ  அவுகட்ட சண்டைக்குப் போனா.

எளயராசு ஊதாக் கலரு பேண்டும் செவப்புக் கலரு டீ சர்ட்டும் போட்டு பெரிய சூட்கேஸோட வந்து எறங்குனான். டீசர்ட்டுக்கு முன்னால நெஞ்சாக்கொலைல படம்படம்மா போட்டுருந்துச்சு.  சொந்தக்காரங்க அம்புட்டுப் பேத்துக்கும் என்னென்னமோ வாங்கியாந்திருந்தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூனு தடவெ துணிமணி மாத்துனான். தலைக்கு வாசன எண்ணெ தேச்சு நல்லா தல சீவுனான். வெதத்துக்கு ஒரு டி சர்ட்டு போட்டு காட்டூரையே ஒரு கலக்கு கலக்குனான்.அவ ஊருக்கு வந்த மறுநாளு நல்ல மழ. ஒடனே அவெ வாங்கிட்டு வந்துருந்த புது மழக்கொட்ட எடுத்து மாட்டிக்கிட்டு அவம்பின்னால பத்துப் பொடிப் பெயல்க அலஞ்சானுங்க. அவனப் பாத்த சனம் பூராம் வச்ச கண்ணு வாங்காமெ அவனயே பாத்துக்கிட்டு இருந்தாக. அவுகய்யனும் அம்மையும் சந்தோசத்துல திக்குமுக்காடிப் போனாக. முன்னால அவங்கூடச் சுத்திக்கிட்டுத் திரிஞ்ச சின்னப் பெயல்கள்ளாம் மறுபடி அவெங்கூட சேந்துக்கிட்டானுக. ஆனா இப்ப முன்ன மாதிரி குப்பெனு கூப்டல. ரொம்ப மரியாதையா சித்தப்பா, மாமா, அண்ணம்னு ஒறவுமொற வச்சுக் கூப்புட்டாக. அவனோட பழைய பிரண்டுகள்ளாம் அவெம் பின்னாழ பவனியா வர இவெம் முன்னாடி மழக்கோட்டோட வந்ததப் பாத்த சனம் பூராம் மூக்கு மேல வெரல வச்சாங்க. மழ வெரிச்சப் பெறகும் குப்பெ மழக்கோட்ட கழத்தாமலேயெ அலஞ்சான்.

ஊர்ல இருந்து வந்த குப்பெயோட மாமனும் குப்பெ இருந்த தோரணயப் பாத்து அசந்துட்டாரு. தன்னோட மகள குப்பைக்கே கட்ழக் குடுத்துரலாம்னும் முடிவு செஞ்சுட்டாரு. குப்பெ தீவுல என்ன வேல செஞ்சான், எம்புட்டுச் சம்பாருச்சான், எம்புட்டுக் கையில கொண்டு வந்தான் இப்பிடிக் கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டே இருந்தாரு. குப்பெயும் உற்சாகமாப் பதில் சொன்னான்.“தீவுல இருந்து பாக்காத சினிமாயில்ல. அம்புட்டுப் புதுப்படமும் பாத்துட்டேன். லச்சத்தீவுன்னா ஒரு தீவு இல்ல, எப்பிடியும் பத்து அம்பது தீவு இருக்கும். எங்க தீவுக்குப் பக்கத்துத் தீவுக்கு அடிக்கடி வெளிநாட்டுல இருந்து வெள்ளக்காரங்க டூரிஸ்டுக்கு வருவாங்க. அந்தத் தீவு அம்புட்டு அழகா இருக்கும்|  குப்பெ சொல்லச் சொல்ல அவங்கூட இருந்த பொடிப் பெயல்கள்ளாம் தெறந்த வாய மூடாமெக் கேட்டானுக.

“எப்பிடிச் சித்தப்பா இங்கருந்து போனீக? “கப்பல்ல போனோம். இங்கருந்து தூத்துக்குடி போயி, அங்கருந்து கொச்சியோ, எர்ணாக்கொளம்னோ ஒரு ஊருக்குப் போயி, அங்கருந்து கப்பல்ல போனோம். கப்பல்ல போகையில ரொம்பப் பேரு வாந்தி எடுத்துட்டாக. நானுந்தான். எங்குட்டுப் பார்த்தாலும் தண்ணிதான். நம்மூருக் கம்மாயில கூட அம்புட்டுத் தண்ணி இருக்காதுடா. ஆனா பூராம் உப்புத்தண்ணிதான். நம்ம சோத்துக்குப் போடுற உப்புக்கூட கடல் தண்ணிலருந்துதான் எடுக்காளாம்டா.
“அது எங்களுக்குத் தெரியுமே. எங்க அறிவியல் பாடத்துல வந்துருக்கு.

“லச்சத்தீவுக்கு ஏரோப்பிளேன்னுலகூட போகலாம். நல்லாச் சம்பாருச்சு நெறய்யாத் துட்டு சேத்தப் பெறகு ஒரு தடவயாச்சும் ஏரோப்பிளேன்னுல ஏறிப் போயிட்டு வரனும்டா.“வேல எல்லாம் எப்படி? |மாமா கேட்டாரு.
“வேல எல்லாம் ஈசிதான். கப்பல்ல வார சரக்குகள எறக்கி வண்டிகள்ள ஏத்தனும் அம்புட்டுதான். வேலைக்குப் போனாச் சம்பளம் இல்லன்னா இல்ல. நம்ம செய்ற வேலையைப் பொறுத்துத்தான் சம்பளம். ஆனா ஒரு நாளைக்கு எப்பிடிப் பார்த்தாலும் எரநூறு ரூவாய்க்கு மேல சம்பாருச்சுப் போடலாம். வேல செய்யும்போது பூராம் புதுப்புதுப் பாட்டாப் போடுவாக. கேட்டுக்கிட்டே வேல செய்வோம். மாசம் ஒருதடவ எங்கம்மைக்கிப் போன் போட்டு பேசிப் போடுவேன். அவரு கடக்கார மொதலாளிக்கு போன் போட்டு உட்டா அவரு எங்கம்மையக் கூப்புட்டுருவாரு. மொதவாட்டி பேசும்போது வௌரந்தெரியாமெ எம்பாட்டுக்கு ரொம்பா நேரம் பேசிட்டேன். பில்லு முன்னூறு ரூவாய்க்கு மேல் அள்ளிக்கிட்டப் போயிருச்சு.“கடிதம் போட வேண்டியதுதான வீண் செலவுதான?
“எனக்குத்தான் எழுதத் தெரியாதெ. அப்பிடியே நானு எழுதுனாலும் இவளுகளுக்குப் படிக்கத் தெரியாதே. அதுனால போனுதான்.
“திரும்பி லீவு முடுஞ்சு எப்ப போறீக? “இனி திரும்பிப் போறமாதிரி இல்ல. கொண்டு வந்துருக்குற ரூவாய வச்சு இங்னக்குள்ளயே எதுனாச்சும் தொழிலு பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

“சாமாஞ்சட்டுக நெறய்யாக் கொண்டாந்தீகளாம்.“எனக்கு நாலஞ்சு டி சர்ட்டு, இந்த ரெஸ்டுவாச்சு, மழக்கோட்டு, ஒரு சின்ன ரேடியாப்பெட்டி எல்லாம் அங்க தீவுல வாங்குனேன். இன்னைக்குத்தான் இந்த மழக்கோட்டப் போடுறேன். நல்லா இருக்கா?“ம்... ஆளு அடையாளமே தெரியலயே... சினிமாக்காரங் கணக்கவுல இருக்க. எனக்கொன்னு வாங்கியாந்திருக்கலாம்ல. குப்பெயோட பாட்டி சொன்னா.“ஒனக்கெதுக்கு கெழவி மழக்கோட்டு? எந்த ஆபீசுக்குப் போற?கேட்டுட்டு சிருச்சான்.“எதுக்குல சிரிக்க? வயலுல நாத்து நடயில மழபேஞ்சாபோட்டுக்குட்டு நடலாம்ல.“அதுக்கு ஒனக்கு மழக்கோட்டு கேக்குது? கொடலுத் தாளப் போட்டுட்டுப் போயி நட்டா ஆகாதோ?  குப்பெ கேட்டுக்குட்டு இருக்கும்போதே அவுகம்மே வந்து அவனச் சாப்புடக் கூப்புட்டா.“எய்யா எளயராசா வா, வந்து சாப்புட்டுட்டு வந்துருய்யா. மணி மூனு ஆகப் போகுது. ஒம்பாட்டுக்கு வநது ஒக்காந்துக்குட்டே. அங்க ஒங்க சித்தப்பக்கார வந்து ஒனியப் பாத்துட்டுப் போகனும்னு ஒக்காந்திருக்கான். வாய்யா... வா சாமி... கோழி அடுச்சுக் கொழம்பு வச்சிருக்கேன்யா. ஒனக்குன்னே உட்டு வச்ச கோழி.

என்னமோ அந்த மாரியாத்தா புண்ணியத்துல போன புள்ள பத்துரமாத் திரும்பி வந்துருக்கு. வார வெள்ளிக்கு கோயிலுக்குப் போயி கெடா வெட்டனும்னு ஒங்கய்யா ஆட்டுக்குட்டி ஒன்னு நேந்து உட்டுருக்கான். போயி ஒனக்கு மொட்ட போடனும்.“மொட்ட போடனுமா? அதெல்லாம் போடமுடியாது போ. வேணும்னா அய்யனப் போடச் சொல்லுமா.“நீயி தீவுக்குப் போயிட்டு நல்லபடியா வந்து சேந்தா ஆத்தாளுக்கு முடி எறக்குறதாநேந்துக்கிட்டம்ட சரி எந்துருச்சு வாடா, பிள்ளகுட்டிகளுக்குள்ள  ஒனக்கு வெஞ்சனமில்லாமப் போகப்போகுது.குப்ப எந்துருச்சுப் போனான்.

சாப்புடும்போதே அவுகம்மைட்ட சொன்னான்.“ஏம்மா, நம்ம பஸ்டாண்டுல அந்த நாடாரு கட சும்மாதான இருக்கு?“எந்த நாடாரு கடை? நம்ம சம்முகநாடாரு கடையவா கேக்க?“ஆமாமா.அவருகடதான்.ரோட்ரோரத்துல ஒரு பெட்டிக் கட வச்சிருந்தார்ல? அதுல வேறு யாராச்சும் கட வச்சுட்டாங்களா இல்ல சும்மாதான் இருக்கான்னு கேட்டேன்.

“யாரும் வைக்கல அவரு விட்டுட்டுப் போனதுதுல இருந்து அந்தப் பெட்டிக்கட சும்மா மூடியேதான் கெடக்குது. அவரு ஒடம்புக்குச் சேட்டமில்லாமப் போகவும் கடயக் காலிபண்ணிட்டு கோயிலுப்பட்டிக்குப் போயிட்டாருல.சம்முக நாடாரப் போயிப் பாத்து அந்தப் பெட்டிக்கடய வெலைக்கு வாங்கி ரோட்டோரத்துல ஒரு கட போட்டான் குப்பெ. கடையில பீடி, சிகரெட்டு, வெத்தல, பாக்கு, சோடா, கலரு, சர்பத்து, சோப்பு, ஷாம்பு, பாக்கெட்டுக, மிட்டாய், முறுக்கு, இப்பிடி பலதரப்பட்ட சாமானுகளா வாங்கிப் போட்டு விற்பன செஞ்சான். கட மொகப்புல பெரிய வாழப்பழத் தாரு ஒன்னு வாங்கித் தொங்கவிட்டுருந்தான். வியாபாரமும் நல்லா சூடுபுடிக்கத் தொடங்குச்சு. இப்ப எல்லாரும் குப்பய ஒரு எடுத்துக்காட்டாச் சொல்லி பெருமப்பட்டுக்கிட்டாக. கடதெறந்து ஒரு ரெண்டு மூனு நாளாகியிருக்கும்.

வழக்கம்போல காலைல ஏழெட்டு மணிக்கெல்லாம் கடையத் தெறந்துட்டு கடைக்குள்ள போட்டுருந்த நாற்காலில குப்ப உக்காந்திருந்தான். அந்நியாரம் பரசுராமரு ஐயா அங்க வந்தாரு.“என்னடா குப்ப, எல்லாங் கேள்விப்பட்டேன். வெளியூரெல்லாம் போயிட்டு வந்துருக்கெ. வந்து ஐயாவ எட்டிக்கூடப் பாக்கல! நீதான் அப்பிடின்னா ஒன்னோட ஆத்தாளும், அப்பனும்கூட வந்து ஒரு வார்த்த நீ போனதப் பத்தியோ, திரும்பி வந்ததப் பத்தியோ மூச்சு உடல. சரி  பெட்டிக்கட தெறந்தியே... என்னமாதிரி பெரிய மனுசங்களக் கூப்புட்டு தெறக்கச் சொல்லி இருந்தா, தெறந்து வச்சு அஞ்சோ, பத்தோ குடுத்துருப்பம்ல. பொழக்கத்தெரியாத பெயல இருக்கியே.... சரி அந்த நாற்காலிய எடுத்த இப்பிடி வெளிய போடுடா. அருப்புக்கோட்ட வண்டி வர இன்னும் டயமிருக்கு. ரொம்பா நேரம் நிக்க முடியல.

“கடைல ஒரே ஒரு நாற்காலிதான் இருக்கு. அதுல நானு ஒக்காந்துருக்கம்ல. அதத் தூக்கி ஒங்களுக்குப் போட்டுட்டா நானு என்னத்துல ஒக்காருறது?  சொல்லிட்டு வியாபாரத்தக் கவனிச்சான். சிகரெட்டு வாங்க வந்தவருக்கு எடுத்தக்குடுத்துடடு திரும்பும்போது கடைக்கு முன்னால கட்டித் தொங்க உட்ருந்த வாழத்தாருல இருந்து பரசுராமரு ரெண்டு பழத்தப் பிய்க்கிறதப் பாத்தான்.“பழம் எங்கடா வாங்குன? நல்லாத் தெருச்ச பழமா வாங்கியாந்திருக்கியே. தெனமும் காலைல காலைல ரெண்டு ரஸ்தாளி தின்னா ஒடம்புக்கு நல்லது.“ஒடம்புக்கு நல்லதுதான். அதான் எட்டயபுரத்துலருந்து வாங்கியாந்தேன். ரெண்டு பழத்துக்கு நாலு ரூவா ஆச்சு. அஞ்சா குடுத்தீங்கன்னா ஒரு ரூவா தாரேன் குப்ப சொன்னான்.
“ஏங்கிட்ட வேல செஞ்சு, கூலி வாங்கித் தின்ன காலமெல்லாம் மறந்தா போச்சு? ஏ முன்னாலயே சவுடாலா நாற்காலில ஒக்காந்துக்கிட்டு, ஏங்கிட்டயே பழத்துக்கு ரூவா கேக்குறியா? எல்லாம் நேரம்டா.“நேரந்தான். அருப்புக்கோட்ட வண்டி வார நேரந்தான். சட்டுனு நாலு ரூவாய எடுங்க.
குப்ப சொன்ன தோரணயப் பாத்து பரசுராமரு அசந்து போனாரு. இந்தக் குப்பப் பெயலா இப்பிடிப் பேசுறாம்னு அவரால நம்ப முடியல. பழத்த மெதுவா உருச்சுத் தின்னாரு. தொண்ட அடைக்கிற மாதிரி இருந்துச்சு. அந்த நேரம்பாத்து அருப்புக்கோட்ட வண்டி வந்துச்சு. ஆனா அவரால ஏற முடியல.

Aug 2007

May 6, 2010

வலி - பாமா

 

கண்ணாங்குடில அன்னைக்கு ஒரு துடியாகிப் போச்சு. ஒத்தச் சனம் வேல வெட்டிக்குப் போகல. ஒரு கெழடு கெட்ட போயிருந்தாலே ஊச்சனம் பூராம் ஒன்னாக் கெடந்து ஒப்பாரி வைக்கும். இப்பச் செத்துருக்கது, கொஞ்ச வயசுப் பிள்ள. அதப் பத்திப் பேசாத ஆளு இல்ல. செத்துப் போன பூரணிக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா முப்பது bama2 வயசுக்குள்ளாதான் இருக்கும். கலியாணம் முடுச்சு ஒரு ஏழெட்டு வருசம் ஆகிப்போச்சு. பிள்ளையே இல்ல. அவளும் என்னென்னமோ வைத்தியமெல்லாம் செஞ்சு பாத்தா. ஒன்னும் ஜெனிக்கல. நல்லாத்தான் இருந்தா. இப்பிடித் திடீர்னு செத்துட்டாங்குங்றாக. அவா எப்பிடிச் செத்தான்னு ஆளாளுக்கு அவுகளுக்குத் தெருஞ்சத கூடக் கொறச்சு சலிக்காமெச் சொல்லிக்கிட்டு இருந்தாக."பிள்ள உண்டாகனும்னு எங்குட்டெங்குட்டோ போயி மருந்து வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு இருந்தாள்ள... போன வாரத்துல யாரோ சொன்னாகன்னு மேற்க என்னமோ குருவிக்காரம்பட்டின்னு ஒரு ஊர்ல போயி எவங்கிட்டயோ என்னமோ ஒரு லேகியம் வாங்கியாந்து சாப்புட்டாளாம். அதுல ஆரம்பிச்சுதுதான். அன்னைலருந்து வாயால வகுத்தால போயிக்கெடந்துருக்கா. மூனே நாளுதான். போயிட்டா."

"ரத்தரத்தமா வாந்தி எடுத்துல செத்துருக்கா.""இல்ல. வெளிக்குப் போற எடத்துலருந்து ரத்தமா ஊத்துச்சாம். வகுத்து வலில துடுச்சுப் போனாளாம் துடுச்சு.""அப்பிடி இல்லையாம். பிள்ள இல்லாத கவலைல என்னத்தையோ குடுச்சுட்டாளாம். வெளிய தெரியக்கூடாதுன்னு இப்பிடிச் சொல்லிக்கிட்டு இருக்காக". ரொம்பா ரகசியமா கிட்டத்துல நெருங்கி வந்து அருளாயி சொன்னா."சே. நீயி ஓம்பாட்டுக்கு என்னத்தையுஞ் சொல்லிக்கிட்டுத் திரியாத அருளாயி. அப்பிடிச் சாகுறவள்னா இத்தன வருசத்துல செத்துருக்க மாட்டாளா என்ன? அவா புருசன் அவள ப+வோ, பொன்னோன்னு அப்பிடித் தாங்குவான். அப்பிடி இருக்கைல தற்கொல செய்யனும்னு எவளாவது நெனப்பாளா? எல்லாம் அந்த மருந்து செஞ்ச வேலதான். அதுல சந்தேகமே இல்ல||. கருப்பாயி திட்டவட்டமாச் சொன்னா.

"இப்ப பிள்ளையில்லாட்டா என்ன கெட்டுப் போச்சு? பிள்ள பெத்தவளுகல்லாம் என்னத்த வாரிக்கெட்டிக்கிட்டாளுக? அநியாயமா உசுரப் போக்கடுச்சுட்டாளே... பாதகத்தி மகா ...சாக வேண்டிய வயசா?".ஆளாளுக்குப் பேசிக்கிட்டு இருக்கும்போதே பக்கத்து ஊர்ல இருந்து சொந்தக்காரங்கள்ளாம் கூட்டமா வந்து ஒருத்தர ஒருத்தரு கட்டிப் புடுச்சுக்கிட்டு ஒப்பாரிய ஆரம்புச்சுட்டாங்க. அம்புட்டுத்தான். அடுத்து ஒரு அரமணி நேரத்துக்கு அவுகளோட ஒப்பாரிச் சத்தம் ஓயல. அவுகவுகளுக்குத் தெருஞ்ச ஒப்பாரிப் பாட்டுகள உருக்கமாப் பாடுனாக. அந்தச் சத்தத்தக் கேக்கவும் அம்புட்டுப் பேரும் கப்புச் சிப்புன்னு ஆகிட்டாக. பயங்கரமான சோகம். அந்தப் பாட்டு அம்புட்டுப் பேரோட மனசயும் புழுஞ்சு எடுத்துருச்சு. அழாத கண்ணுலருந்து கூட கண்ணீரு பொங்கி வழுஞ்சது. கண்ணுகளத் தொடச்சுக்குட்டு மூக்கச் சீந்திச் சீந்திப் போட்டாக."சரி, சரி ஆம்பளைகள்ளாம் கொஞ்சம் எந்துருச்சு அப்பால போங்க. பொணத்தக் குளுப்பாட்ட வேண்டாமா? குளுப்பாட்டி வச்சுட்டா பொறகு மனம் போல அழுதுட்டு போயிப் பெதைக்கலாம்". அஞ்சலப் பாட்டி அதட்டலாச் சொன்னா.

அம்பட்டு நேரமும் அழுதுக்கிட்டு இருந்தவுக அம்புட்டுப் பேரும் சொல்லி வச்சது கணக்கா ஒடனே அழுகய நிப்பாட்டுனாக. ஆம்பளைக எந்துருச்சுப் போயி பந்தலுக்கடில போட்டுருந்த பெஞ்சுக, நாற்காலிகள்ள எடம் புடுச்சு உக்காந்துட்டாக. பந்தக்காலுகளப் புடுச்சு வெளாண்டுக்குட்டு இருந்த சின்னஞ்சிறுசுகள்ளாம் என்னமோ நடக்கப் போகுதுன்னு வீட்டுக்குள்ள ஓடியாந்தாக. அவுகளப் பூராம் பொம்பளைக வெளிய போச் சொல்லி தொரத்தி உட்டாக. ஒன்னும் புரியாமெ மறுபடியும் வெளிய ஓடிப் போயி வெளாட்டுகளத் தொயந்து வெளாண்டாங்க. பிள்ளைக எடைல ஏதாவது சத்தம் போட்டா, அவுகள ஆம்பளைக அரட்டி உட்டாக. பொணத்தக் குளுப்பாட்டி, புதுச்சீலையக் கட்டி வாசலுல வச்சுருந்த பெஞ்சு கெடத்தி வச்சாக. பொம்பளைக சுத்தி உக்காந்து ப+ரணியோட அரும பெருமைகளப் பத்திப் பேசிக்கிட்டுருந்தாக. ஊடால யாராச்சும் து~;டி கேட்டு வந்து அழுகைல மட்டும் பேச்ச நிப்பாட்டிட்டு ஒன்னாச் சேந்து ஒப்பாரி வச்சுக்கிட்டாக.

பெணத்த எடுக்க சாயங்காலம் ஆகும்னு சொல்லிக்கிட்டாக. பூரணியோட கூடப் பெறந்த அண்ணங்காரன் எங்கயோ தூரந்தொலவட்டுல இருக்கானாம். அவம் பொறப்புட்டு வந்துசேர எப்பிடியும் சாயங்காலம் ஆகுமாம். அவெ வந்தப் பெறகுதான் எடுப்பாக. மீதிப் பேரெலாம் ஒவ்வொருத்தரா வந்துக்கிட்டே இருந்தாக. நேரமாக ஆக கூட்டம் அதிகமாகிட்டே இருந்துச்சு. திடீர் திடீர்னு ஒப்பாரிகளும், ஊடால பேச்சுகளுமா நேரம் போயிட்டுருந்துச்சு.பூரணியோட புருசக்காரன் பித்து புடுச்சது கணக்கா குனுஞ்ச தல நிமுராம உக்காந்திருந்தான். தோளுல கெடந்த துண்ட வச்சு அப்பப்ப கண்ண தொடச்சுக்குட்டான். அவனப் பாக்கைல பரிதாவமா இருந்துச்சு. பாவம்! இனி ஒத்தைல கெடப்பான். பூரணியொட அய்யன் ஒரு அப்ராணி! துக்கந் தாங்கமாட்டாமெ வெளித்திண்ணைல உக்காந்தவந்தான். மலங்க மலங்க முழுச்சுக்கிட்டு இருந்தான். அவுகம்ம பார்வதி நெஞ்சாங்கொலைலயும் வகுத்தலயும் அடுச்சுக்குட்டு கதறிக்கிட்டு கெடந்தா. பெத்த வகுறுல்ல! பூரணியோட தாய்மாமன் கணேசந்தான் அம்பட்டுக் காரியத்தையும் எடுத்துப் போட்டு செஞ்சுக்கிட்டு இருந்தான். அவுக வழக்கப்படி பாட கட்டி அதுல பிரேதத்த வச்சுத் தூக்கிட்டுப் போயி இடுகாட்டுல பெதைப்பாக. வீட்டுக்கு மேற்க நாலஞ்சு பேரு பாட கட்டிக்கிட்டு இருந்தாக. அவுகளச் சுத்தி பத்து சின்னப்பெயல்க வேடிக்க பாத்துக்கிட்டு நின்னாக. பெணத்த எடுத்துகிட்டு போகைல மேளம் அடிக்கிறதுக்காக மேளக்காரனுக மேளத்த நெருப்புல காட்டி சூடேத்திக்கிட்டு இருந்தாக. ஊரு நாட்டாமெ செய்ய வேண்டிய சடங்கு முறைகளப் பத்தி அப்பைக்கப்ப ஞாவகப் படுத்திக்கிட்டு இருந்தாரு. சாமிக்கண்ணு தாத்தா பூரணியோட அய்யங்கிட்ட சத்தமாச் சொன்னாரு.

"என்ன மாடசாமி, இப்பிடி இடுஞ்சு போயி உக்காந்து என்ன செய்ய? ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவுக திருப்பி வரவா போறாக? மண்ட நரச்சுப் போன நம்மள்ளாம் கெடக்கைல சின்னஞ்சிறுசு: வாழ வேண்டிய வயசுவ போயிருச்சே... என்ன செய்ய? நம்ம என்ன செய்ய முடியும், என்ன கணேசா, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டியாடா? வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாந்தி;ட்டியாடா,"."செஞ்சுக்கிட்டே இருக்கேன் தாத்தா. ஏறக்கொறைய எல்லாம் முடுஞ்சது. நாலு மணிக்கெல்லாம் எடுத்துரலாம் தாத்தா"."கோழிக்குஞ்செல்லாம் ரெடியாடா?"."கோழிக்குஞ்சா? அதெதுக்கு தாத்தா? கோழி வாங்கனும்னு ஒருத்தரும் எங்கிட்ட சொல்லலையே தாத்தா."

"சொல்லலையா? ஏலேய், பிள்ளையில்லாத சின்னப்பொண்ணு செத்துருக்கு. கோழிக்குஞ்சு இல்லாம எப்பிடிடா பெதைக்கிறது? இந்தக்காலத்து பெயல்களுக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது? தெரியாட்டி நாலு பெரியாளுககிட்ட கலந்து பேசிச் செய்யனும். அதுவுமில்ல. நானு இப்ப ஒங்கிட்ட கேட்டது நல்லதாப் போச்சு. இங்க வாடா. நாஞ்சொல்லப்போறத நல்லாக் கேட்டுக்கோ. அதுபடி எல்லா ஏற்பாட்டையும் செய்யுடா.""சரி, சொல்லு தாத்தா" கணேசன் தாத்தாகிட்டத்துல வந்து உக்காந்தான்."நம்ம வழக்கப்படி சனிக்கிழம பொணம் உழுந்தா பொணத்த இடுகாட்டுக்குதத் தூக்கிட்டுப் போகைல வீட்டுலருந்து இடுகாடு வரைல ஒருத்தரு கடுகு அள்ளித் தெளுச்சுக்கிட்டே போகனும்டா.""அதெதுக்கு தாத்தா?".

"எதுக்கா? ஊடால நாயித்துக்கெழம வருதுலடா. சனிக்கெழம பெதச்ச பொணத்தோட ஆவி தொணப்பொணம் கேட்டு எந்துருச்சு ஊருக்குள்ள வரும்டா. அப்பிடி வரைல அது வழில தெளுச்சுக்குற கடுகப் பூராம் பெறக்கிட்டுத்தான் ஊருக்குள்ள வரனும். அப்பிடி அது அம்புட்டுக் கடுகையும் பெறக்கிட்டு ஊருக்குள்ள வாரதுக்குள்ள நேரமாகிப்போகும். நேரமாகிப் போகவும் திருப்பி இடுகாட்டுக்கே போயிரும்டா. விடுஞ்சப் பெறகு ஊருக்குள்ள வராது. அப்ப ஊருக்குள்ள இன்னொரு பொணம் உழுகாதுல்ல. அதுக்குத்தான். இது நானு சின்னப் பிள்ளையா இருந்த காலத்துல இருந்தே இருக்குடா."

வேறொரு சமயமா இருந்துருந்தா கணேசன் தாத்தாகிட்ட ஒரு பெரிய வாக்குவாதமே செஞ்சுருப்பான். இப்ப மனசு இருந்த நெலமைல அவனால எதையும் பேச முடியல. அமைதியா அவருட்ட கேட்டான்,

"சரி தாத்தா. ஒரு ரெண்டு கிலோ கடுகு வாங்கியாரச் சொல்லிடுறேன். பெறகென்னமோ கோழிக்குஞ்சி வேணுமின்னு சொன்னியே. அதெதுக்கு?".

"ஆமாடா கலியாணம் முடுச்சு சின்னவயசுலயே பிள்ள இல்லாமெச் செத்துப்போனா அந்த ஆவிக்கு பிள்ள ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்துல ராத்திரி எந்துருச்சு பிள்ள தேடி ஊருக்குள்ள வந்துரும். அப்பிடி வந்தா ஊருக்குள்ள இன்னொரு பொணம் உழுந்துரும்ல. அதுனால என்ன செய்வாகன்னா பொணத்த பாடைல வச்சுத் தூக்குறதுக்கு முன்ன ஒரு கோழிக்குஞ்சிய அந்தப் பாடைல ஒரு ஓரத்துல கட்டி உட்டுறனும். பெறகு பொணத்தப் பெதைக்கைல கூட அந்தப் பாடைல ஒரு ஓரத்துல கட்டி உட்டுறனும். பெறகு பொணத்தப் பெதைக்கைல கூட அந்தக் குஞ்சியையும் போட்டுப் பெதச்சிறனும்டா. இதெல்லாம் தலமொறத் தலமொறையா ஊருக்குள்ள செஞ்சுக்கிட்டு வார வழமைக. நீயும் போயி ஒரு கோழிக்குஞ்சி வாங்கியாந்திருடா. நாட்டுக் கோழியாப் பாத்து வாங்கு".

சாமிக்கண்ணு தாத்தா சொன்னது மாதிரியே கணேசன் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சான். கோழிக்குஞ்சிய வாங்கிட்டு வந்து அவனோட வீட்டுத் திருணைல கட்டிப் போட்டான். அவனோட நாலு வயசு மகன் பால்பாண்டிக்கு அந்தக் கோழிக்குஞ்சியப் பாத்து ரொம்பாச் சந்தோசமா இருந்துச்சு. அதுக்குப் பக்கத்துலயே உக்காந்துக்குட்டு இருந்தான். அதுக்கு கொஞ்சம் அரிசிய அள்ளிப் போட்டுட்டு அது கொத்தித் திங்கிறதப் பாத்து சந்தோசப்பட்டுக்கிட்டான். ஒரு சின்னக் கிண்ணத்துல தண்ணியுங் கொண்டாந்து அது வச்சான். அந்தக கோழியும் இன்னங் கொஞ்ச நேரத்துல சாகப் போறம்னு தெரியாம திரு திருன்னு முழுச்சுக்கிட்டு அரிசியப் பெறக்கிட்டு இருந்துச்சு. எடைல என்னமோ எடுக்க வீட்டுக்கு வந்த கணேசன் மகனப் பாத்துட்டு,

"ஏலேய் பாண்டி, குஞ்சியக் கிஞ்சிய அவுத்து உட்டுறாதடா. பெறகு புடிக்க முடியாது. நீயி எதுக்குடா இங்னக்குள்ளயே காவக் கெடக்குற? எந்துருச்சு அம்மைட்டப் போடா". சொல்லிட்டு அவனத் தூக்கிக் கொண்டுபோயி அவுகம்மைட்ட உட்டுட்டு வேற வேலைகளக் கவனிக்கப் போயிட்டான்.

பால்பாண்டிக்கு அவுகம்மைட்ட இருக்க முடியல. அந்தக் கோழிக் குஞ்சியவே நெனச்சுக்கிட்டு இருந்தான். வீட்டுக்குப் போயி அத அவுத்துக் கொண்டு வந்து கைல வச்சிக்கிரலாம்னு எந்துருச்சான். ஆனா அவுகம்மை அவன உடல.

"ஏமா, நானு அந்தக் கோழிக் குஞ்சிய கவுத்தப் புடுச்சு இங்க கூட்டியாரட்டுமாம?"

"சும்மா கெடடா. இருக்குற வேதனைல இவந் தொல்ல வேற தாங்கமுடியல. போயி அந்தப் பிள்ளைகளோட வெளாடு. வீட்டுக்குப் போகாத. தெருஞ்சதா?"

சரின்னு தலையாட்டிட்டு பந்தலுக்கடில வெளாண்டுக்கிட்டு இருந்த மத்த பிள்ளைகளோட போயிச் சேந்துக்கிட்டான்.

அந்தா இந்தான்னு சாயந்தரம் ஆகிப்போச்சு. சனங்களும் அழுது, அழுது ஓஞ்சு போனாக. பார்வதிக்கு தொண்டையே கட்டிப் போச்சு. ப+ரணியோட அண்ணன் குமாரு கடைசியா வந்து சேந்தான். அவெ வரவும் தங்கச்சி மேல உழுந்து அழுத அழுகையப் பாத்துட்டு அம்புட்டுச் சனமும் மறுபடியும் கதறிக் கதறி அழுதாக. பொணத்தத் தூக்கிப் பாடைல வைக்கும்போது ஊரெ கதறுச்சு. ப+ரணியோட புருசனும் துக்கந்தாங்கமாட்டாமெ கதறிக் கதறி அழுதான். அவுகம்மெ பாடைக்குப் பின்னால தலவிரி கோலமா கத்திக்கிட்டே ஓடுனா.

"நாம்பெத்த மகளே.... போக வேண்டிய வயசுல நாங்கெடக்கேனெ... ஏ உசுரு போயிருக்கக் கூடாதா... வாழ வேண்டிய வயசுல உன்னைய வாரிக் குடுக்கனே... வாய்க்கு வாய் ஏமா ஏமான்னு வளைய வளைய வருவியேடி... நாம்பெத்த ராசாத்தி... என்னையும் சட்டுன்னு எடுத்துட்டு போயிருடி... ஏந்தங்கமே... ஏங் கடவுளே...". சொல்லிக்கிட்டே தலைல தலைல அடுச்சுக்கிட்டு அழுதா.

நாலஞ்சு பொம்பளைக பின்னால போயி அவளப் புடுச்சு இழுத்துக்கிட்டு வந்தாக. அவுக வழக்கப்படி பொம்பளைக இடுகாட்டுக்குப் போகக்கூடாது. பால்பாண்டிய அவுகய்யா தூக்கிக்கிட்டுப் போனாரு. முனியாண்டி பாடைக்குப் பின்னால கடுக அள்ளித் தெளுச்சுக்கிட்டே போனாரு. பாடைல ஒரு ஓரத்துல காலு ரெண்டையும் கட்டித் தொங்கிக்கிட்டு இருந்த கோழிக்குஞ்சி இங்குட்டு அங்கிட்டும் ஆடிக்கிட்டு கியா கியான்னு கத்திக்கிட்டே போச்சு. அதப் பாத்த பால்பாண்டிக்கு ரொம்பா வருத்தமா இருந்துச்சு. அத அவுத்துக் குடுத்தா கைல எடுத்துக்குட்டுப் போகலாம்னு நெனச்சான். ஆனா அவுகய்யா அழுதுக்கிட்டு வாரதப் பாத்துட்டு அவங்கிட்ட எதுவும் கேக்கல. ஊர்ச் சனமே அழுதுக்கிட்டு இருந்தாலும் அவனுக்கு அந்தக் குஞ்சி அழுகுறதுதான் கவலையா இருந்துச்சு. தலகீழா தொங்கிக்கிட்டு இருந்த அதையே பாத்துக்கிட்டுப் போனான்.

இடுகாடு வந்ததும் ஏற்கனவே வெட்டியான் வெட்டி வச்சிருந்த குழிக்குள்ள பொணத்த எறக்குனாக. குழிக்குள்ள நின்ன வெட்டியான் பொணத்த சரியா உள்ள வச்சான். மேல நின்னவுக அவங்கிட்ட இப்பிடி வை, அப்பிடி வைன்னு ஆளாளுக்குக் கோளாறு சொல்லிக்கிட்டு இருந்தாக. கடைசியா மொகத்தப் பாத்துக்கங்கன்னு சொல்லவும் ஆளாளுக்கு எட்டிப் பாத்தாங்க. கணேசனும் எட்டிப்பாத்துட்டு அழுதான். பால்பாண்டி கோழிக்குஞ்சையே பாத்துக்கிட்டு இருந்தான். சாமிக்கண்ணு தர்தா வெட்டியானப் பாத்து, கடைசி ஒருதடவ காதுல, கழுத்துல, ம{க்குல எதுனாச்சும் கெடக்குதான்னு பாத்துட்டு மூடுறான்னு சொன்னாரு. வெட்டியானும் பாத்துட்டு,

"ஒன்னுமில்ல சாமி, கழுத்துல ஒரு கருப்பு மணிதாங் கெடக்குது. அத எடுக்கவா?"ன்னு கேட்டாரு.

"அடிதன்னத்துக்குடா? கெடந்துட்டு போகுது உட்டுறு. சரி, மண்ணள்ளிப் போடு||. சொல்லிட்டு மொதல்ல மூனுதடவ அவரு கைட்ட மண்ணள்ளிப் போட்டுட்டு வந்தாரு. அடுத்தடுத்து மத்தவுக போட்டுட்டு வந்தாக. கடைசில வெட்டியான் மண்ணப் போட்டு குழிய மூடுனான். மூடுனப் பெறகு பாடைல டெந்த மாலைகள எடுத்து சமாதிமேல போட்டாக. அப்பத்தான் பாடைல கெட்டிக்கெடந்த கோழக்குஞ்சப் பாத்தாக. சாமிக்கண்ணு தாத்தா வெட்டியானச் சத்தம் போட்டாரு.

"ஏண்டா, குழிய மூடமுன்ன குஞ்சிய வச்சு மூடனும்னு தெரியாதாடா? இனி மூடுன குழியத் தெறக்கலாமாடா? என்னடா வேல பாக்குற? இத்தன வருசம் வெட்டியானா இருக்க. இருந்து என்ன பெரயோசனம்? சரி, சரி. மேலாக்க குழியத் தோண்டுனான்.

குஞ்சிய பாடைல இருந்து அவுக்கவும் சத்தம்போட்டு குஞ்சி கத்துச்சு. பால்பாண்டிக்கு அதப் பாத்து ரொம்பாப் பாவமா இருந்துச்சு. வெட்டியான் குஞ்சிய உசுரோட குழிக்குள்ள போட்டு பெதைக்கவும் குஞ்சி கியாக்கியான்னு பரிதாபமா அலறுச்சு. பால்பாண்டி கண்ணு கலங்குச்சு. எல்லாரும் அழுகைய நிறுத்திட்டு வீடுகளுக்குக் கௌம்புனாக. பால்பாண்டிமட்டும் அழுதுக்கிட்டெ வீட்டுக்கு வந்தான்.

may 2008

*****

May 5, 2010

முள்வேலி-பாமா

பாமா

மலையப்பனுக்கு திடீர்னு நடக்க முடியல. பஸ்டாண்டுக்கு டீ குடிக்க நடந்து போனவன சைக்கிள்ல உக்கார வச்சுத் தள்ளிக்கிட்டு வந்தாக. அவனப் பாத்து எல்லாருமே பரிதாபப்பட்டாக, ஆனா எனக்கென்னமோBama (1) அவம்மேல பரிதாபமே வரல்ல.  வழக்கம்போல குடுச்சுப் போட்டுத்தான் தெருவுல கெடந்தவன தூக்கியாராங்கன்னு நெனச்சேன். அதுனால நானு யாருகிட்டயும் அவனப் பத்தி விசாரிச்சுக்கல. அவனத் தூக்கியாரும்போது சாயங்காலம் ஆறு மணி இருக்கும். ஏழு மணி போல நானு மாடிக்குப் போயி காலார நடந்துக்குட்டு இருக்கைல கெழக்க காவாப்பக்கம் மலையப்பனப் பாத்தேன். கூனக்கெழவங் கணக்கா குனுஞ்சுக்கிட்டு, இடுப்ப ரெண்டு கைட்டப் புடுச்சுக்குட்டு குன்னிக் குன்னி நடந்து போனான். இப்பத்தான் செத்த முன்னாடி சைக்கிள்ள வச்சுத் தூக்கியாந்தாகஙீ இப்ப இப்பிடி நிமுரமாட்டாமெ போறானேன்னு ஆச்சிரியமா அவனப் பாத்தேன். அவனால நிமுரமுடியல. குனுஞ்சு நின்னுக்கிட்டே வேட்டிய மேலாமத் தூக்கிக்கிட்டு ஒன்னுக்கிருக்கப் போனான். நானு சட்டுனு வேற பக்கம் திரும்பிக்கிட்டேன்.

மலையப்பன் மட்டுமில்ல. எங்கெங்க இருந்து வர்ர ஆம்பளைகள்ளாம் இங்னக் குள்ள வந்துதான் வேட்டியத் தூக்கிடுறானுக. ஏ வீடு கடேசி வீடுங்றதுனால அவுகளுக்கு ரொம்பச் சவுரியமாச் போச்சு. ஆம்பளைக எங்குன்னனாலும் நாயிகணக்கா தூக்கிக்கிட்டு ஒன்னுக்கிருப்பானுக; பொம்பளைக பாத்துட்டு ஒதுங்கிப் போகனும். ஆனா பொம்பளைக ஒரு ஆத்துர அவசரத்துக்குக்கூட எங்குனக்குள்ளயும் குத்தவைக்க முடியாது. அப்பிடியே ரொம்பா அவசரம்னா காலு வழியா மோளவேண்டியதுதான். அதுகூட செலபேராலதான் சீலைல படாமெ மோளமுடியுது.

மத்தபேருக்கெல்லாம் எப்பிடித்தான் மோண்டாலும் சீலை நனஞ்சுரும். ஊர்ல தாயம்மா பாட்டி நின்னபடியே லேசா முன்னால சாஞ்சுக்கிட்டு சீலைய லாவகமாத் தூக்கிப்புடுச்சுக்கிட்டு இத்தினிக் கூட சீலைல படாமெ ஒன்னுக் கிருப்பா. அவா ஒன்னுக்கிருக்கான்னு யாருக்கும் தெரியாது.

அது அவளுக்குக் கைவந்த கலைன்னுதான் சொல்லனும். ஆம்பளைகளுக்கு அப்படியில்ல. எங்கனாலும் லொங்காமெ மோளுவானுக.

அவனுகளுக்கு அம்புட்டுச் சுதந்திரம். இவனுக்கென்ன கேடு இப்படி குன்னிக்கிட்டுத் திரிறான். குடி போதை சாஸ்தியாச்சு போல. நெனச்சுக்கிட்டே கீழ எறங்கி வந்துட்டேன்.
மறுநாளு காலைல தெருக்குழாயில தண்ணி புடிக்கும்போது எல்லாரும் மலையப்பனப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாக. அதக் கேட்டபெறகுதான் எனக்கு விசயமே புருஞ்சது.

மலையப்பனுக்கு ஒன்னுக்கிருக்க முடியலையாம். ஒன்னுக்கிருந்து மூனு நாளாச்சாம். அதுனாலதான் அவனால நிமுந்து நடக்க முடியலையாம். அடிவகுத்துல பயங்கரமான வலியாம். துடியாத் துடிக்கானாம். அவனோட வெரக்கொட்ட ரெண்டும் பெரிய பந்துக கணக்கா வீங்கிப் போயி செக்கச் செவேர்னு இருக்காம். உள்ளூரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போனா பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். இன்னைக்குக் காலைல காரு வச்சு டவுனு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காகளாம். எல்லாரும் உச்சு உச்சுன்னு சவுண்டு எழுப்பி பரிதாபப் பட்டுக்கிட்டாங்க. ஆனா எனக்கென்னமோ அப்பக்கூட அவெம்மேல எரக்கமே வரல்ல. நானு ஏம்பங்குக்கு எதுனாச்சும் சொல்லாட்டி எதுனாச்சும் நெனச்சுக்கிருவாகளேன்னு சத்தம்போடாமெ வீட்டுக்குள்ள வந்துட்டேன்.

உள்ள வந்ததுலருந்து மலையப்பனோட பொண்டாட்டி கனியம்மாளயே நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப கனியம்மா என்ன முடிவு எடுத்துருப்பா... அவங்கூட ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பாளா... அப்பிடிப் போயிருந்தா என்ன மனசோட போயிருப்பா... போகாமெ நின்னுருப்பாளோ... அவா நின்னாலும் மத்தவுக அவள நிக்க உடுவாகளா... மத்தவுகளோட பேச்சுக்கும், ஏச்சுக்கும் பயந்துக்குட்டு போயிருப்பாளோ... சே. அவங்கூட யாரு போயிருக்கான்னு கேக்காமெ வந்துட்டமேன்னு தோணவும் வேகமா வெளிய வந்தேன்.

மலையப்பன் வீட்டுக்கு எதிர்வீட்டுல இருக்குற சந்திரா நின்னுக்கிட்டு இருந்தா. அவாகிட்ட கேட்டேன்.

“மலையப்பன எந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காக? அவருகூட யாரு போயிருக்காக?”

“அவருக்கு கிட்னி பெயிலாப் போச்சாம். அத்தோட கொடலு வேற கீழாமெ எறங்கிப் போச்சாம். அதென்னமோ எரனியாவும்ல? அந்த நோயும் வந்துருக்காம். பொழைக்குறது கஸ்டமாம். ஒன்னுக்கே போகலன்னா எப்பிடிக்கூடி பொழைக்க முடியும்? அந்தண்ணனப் பாத்தாப் பாவமா இருக்கு. டவுனு ஆஸ்பத்திரின்னு சொன்னாக. ஆனா எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல. அந்தக்கா கனியம்மாதான் கூடப்போயிருக்காக. வேற யாரு போவா? அவுக போகாட்டி இந்த ஊரு ஒலகம் அவுகளச் சும்மா உட்டுருமா?” கேள்வியோட முடுச்சா சந்திரா.

“இந்த பத்து வருசுமா அவுகென்ன புருசம் பொண்டாட்டியாவா இருந்தாக? அந்தக்கா அந்தாள உட்டுட்டு தனியாத்தானெ கெடந்தாக.

அப்பயெல்லாம் இந்த ஊரும், ஒலகமும் எங்க போனாக? இப்ப மட்டுக்கும் வருஞ்சு கெட்டிட்டு வந்துடுறாக. என்னக் கேட்டா அந்தக்கா அவங்கூட போயிருக்கக் கூடாது.” நாஞ்சொல்லவும், சந்திரா மட்டுமில்ல அங்ன நின்ன அம்புட்டுப் பேரும் ஒரு தினுசாப் பாத்தாக.

“அதெப்பிடி செல்வி போகாமா இருக்க முடியும்? என்னதான் இருந்தாலும் புருசனுக்கு ஒன்னுனா பொஞ்சாதிக்குப் பதறத்தான செய்யும். அவுக ஆயிரம் வருசம் பிருஞ்சு கெடந்தாலும் அந்த புருசன், பொஞ்சாதிங்ற ஒறவு இல்லன்னு ஆகிடுமா? புருசன் இல்லன்னா இங்க பொம்பளைக்கு என்ன மதிப்பு, மரியாதை இருக்குன்னு சொல்லு. அவெ நொண்டியோ, சண்டியோ, கூனோ, குருடோஙீ ஒரு ஆளாக் கெடந்தாம்னா அவளுக்கு ஒரு மதிப்புத்தான். அதான் கனியம்மா எல்லாத்தையும் மறந்துட்டு கூடப் போயிட்டா”. அஞ்சலப்பாட்டி சொன்னத அம்புட்டுப் பேரும் ஆமோதிக்கிற மாதிரி அமைதியா இருந்தாக. நாந்தான் அந்த அமைதியக் கலச்சுப் பேசுனேன்.

“கனியம்மா இந்தாளுக்கு வாக்கப்பட்டு வந்த நாளுலருந்து அவா எப்பேர்ப்பட்ட வாழ்க்க வாழ்ந்தான்னு நம்ம எல்லாத்துக்குமே நல்லாத் தெரியும். தெருஞ்சுக்கிட்டே இப்பிடிப் பேசுறது நல்லாவா இருக்கு? அந்தக் குடீகாரங்கிட்ட அவா பட்டபாடு கொஞ்சநஞ்சமில்ல. ஒரு நாளாவது அவங்கிட்ட அடிவாங்காத நாளுண்டா? இதே தெருவுல எத்தன தடவ அவள சீலைய உருவிட்டு செறகா கம்புட்டயே அடுச்சுருக்கான்? யாராச்சும் அவன வெலக்கிட்டு அவள காப்பாத்த முடிஞ்சுச்சா? அம்புட்டுச் சித்திரவதையையும் அனுபவிச்சுட்டு கடைசில அதுக்குமேல தாங்கமுடியாமத்தான அவா அவன உட்டுட்டு வெலகிப் போயிட்டா. அதுக்கும் அவள அவுசாரின்னு சாட்டிட்டு வஞ்சான். அந்தாள உட்டுட்டு தனியாப் போனபெறகுதான் நிம்மதியா இருக்கேன்னு அவளே அடிக்கடி சொல்லி இருக்கா. தாலிகட்டுனதுனால மட்டும் புருசன் பொண்டாட்டி கெடையாது. மனசுல பாசம், ஒறவு, மதிப்பு, மரியாத இருந்தாத்தான் அந்தக் கயித்துக்கும் மதிப்பு. இல்லன்னா அது வெறுங்கயிறுதான்னு இதே அஞ்சலக் கெழவி எத்தன தடவ சொல்லி இருக்கா. இப்ப என்னமோ ஆயிரம் வருசம் பிருஞ்சாலும் அப்பிடித்தான் இப்படித்தான்னு அவாபாட்டுக்கு அளக்குறா”.
“ஆமா சொன்னேந்தான். யாரு இல்லன்னா இப்ப? என்னதான் இருந்தாலும் வாழ்வா, சாவான்னு வரும்போது பழச மறக்கத்தான் வேணும். போயிப் பாக்கத்தான் வேணும். பொம்பளையா பெறந்த பெறகு வேற என்ன செய்ய முடியும்?”

இதுக்கு மேல அவுககிட்ட பேச எனக்குப் பிடிக்கல.

“அதெப்பிடி பழசெல்லாம் ஒடனே சட்டுனு மறந்து போக முடியும்? கனியம்மா அவா புருசனப்பத்திச் சொன்னதை எல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தாலும் அந்தாளச் சாவடிக்கனும்னுதான் தோணும். கலியாணமாகி மொதல் நாளுலருந்தே அவா யாருட்டப் பேசுனாலும் சந்தேகம். அசிங்க அசிங்கமா பேசி அடிதடி. கால்காசு சம்பாதிச்சு கொண்டாந்து குடுக்காட்டாலும், இவா எதுனாச்சும் கூலி வேல செஞ்சு வாங்குற காசையும் புடுங்கிட்டுப் போயி ஊத்திக்கிட்டு வந்து மாட்ட அடிக்கிறமாதிரி அடிச்சு தொவச்சு எடுப்பான். அவங்கூட வாழ்ந்த சாட்சிக்குப் பெறந்தது ஒரு பொம்பளப் பிள்ளை. அதக்கூட யாருக்கோ பெத்தான்னு வாய் கூசாமச் சொல்லி அடிப்பான். அந்தப் பிள்ளையையும் அவதான் வளத்து, ஆளாக்கிட்டு வாரா. கண்ணெதுர இம்புட்டையும் பாத்த இந்த பொம்பளைகளே இப்பிடிச் சொல்றாகளே.

இவளுக வாயிக்குப் பயந்து தான் அவா போயிருப்பா. சே. எப்பிடித்தான் மனச கல்லாக்கிட்டு போறது? அந்தாளு மொகத்துல முழுச்சு, அவங்கூட இருந்து அவனுக்குப் பணிவிடை செய்றது? அவனுக்கு அதுக்கு என்ன தகுதி இருக்கு? இப்பிடியே இந்தாளு செத்துப் போனாக்கூட அவா என்னைக்கும் நிம்மதியா இருந்துட்டுப்போவா. இந்த மஞ்சக் கயத்த ஒன்னக் கட்டிட்டுத்தான காலம்பூராம் கொத்தடிமைக் கணக்கா இருக்க வேண்டியதா இருக்குது.”

மலையப்பனுக்கு ஆபரேசன் நல்லபடியா முடுஞ்சு பொழச்சுக்கிட்டாம்னு சொல்லிக்கிட்டாக. இது அவனுக்கு மறுஜென்மம்னு சொல்லி சந்தோசப் பட்டாக. மனுசச் ஜென்மமே இல்லாத அவனுக்கு மறுஜென்மம் என்ன வேண்டிக்கெடக்குன்னு ஏம்மனசுக் குள்ள தோணுனத வெளிய சொல்ல முடியல.

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழுச்சு மலையப்பன மறுபடியும் கார்ல வச்சு வீட்டுக்குக் கொண்டாந்தாக. கார்ல இருந்து எறங்கைல ரெண்டு ஆம்பளைக போயி மலையப்பனக் கைத்தாங்கலாப் புடுச்சாக. அவனுக்குப் பின்னாடியே கனியம்மாளும் எறங்குனா. மலையப்பன மெதுவாப் புடுச்சு வீட்டுக்குள்ள கூட்டியாரச் சொல்லி கனியம்மாள்ட சொன்னாக. அவா அதக்காதுல வாங்காதது மாதிரி காருக்குள்ள இருந்த வயர்க் கூடையை எடுத்துக்கிட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போனா. அவா போன வேகத்தப் பாத்து அவா எம்புட்டு வேண்டா வெறுப்பா அவங்கூட போயிட்டு வந்துக்கான்னு புருஞ்சுக்கிட்டேன். அவாகூட பேசுறதுக்கு சரியான நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன். ரெண்டுமூனு நாளா அவள வெளியவே காணும். பாவம்; அந்தாளக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும்போலன்னு நெனச்சுக்கிட்டேன்.

இதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்த எல்லாரும் மலையப்பன் வீட்டுக்குப் போயி அவனப் பாத்து விசாருச்சுட்டு வந்தாக. எனக்கென்னமோ அப்பிடி அவனப் போயி பாத்துட்டு வரப்பிடிக்கல. ஏ வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க போம்போது என்னையும் கூப்புட்டாங்க.

“வாங்கக்கா, கூட்டத்தோட கூட்டமா நம்மளும் போயிப் பாத்துட்டு வந்துரலாம். அம்புட்டுப் பேரும் போயிப் பாத்துட்டு வந்துட்டாக. பெறகு நீங்க மட்டும் போகாட்டி எதுனாச்சும் சொல்லப்போறாக.”

அவுங்க கௌம்பும்போது என்னையும் வந்து கூப்புடவே எனக்கு என்ன செய்றதுன்னு புரியல. வரமாட்டடேன்னு சொன்னா அதுவே பெரிய விசயமாப் போயிரும். போகவும் புடிக்கல. இவுக போறவுக அவுகப்பாட்டுக்கல போயிப்பாத்துட்டு வரவேண்டியதுதான. நம்மளவேற கூப்புட்டு இக்கட்டுல மாட்டிஉடுறாக. என்னமோ எனக்கு உதவி செய்றதா இவுகளுக்கு நெனப்பு. நாம்படுற சங்கடம் இவுகளுக்கு எங்க தெரியப் போகுது. வேற வழியில்லாம நானும் அவுகளோட கௌம்பிப் போனேன். அப்பிடியே கனியம்மாளையும் பாத்துரலாம்னு நெனச்சேன். அவுகதான் எல்லாம் விசாருச்சாக. நானு கம்முனு நின்னுக்கிட்டு இருந்தேன். கனியம்மா எங்குட்டாச்சும் கண்ணுல தட்டுப்படுறாளான்னு பாத்தேன். அவா ஆளு அரவமே இல்ல. செத்த நேரம் நின்னுட்டு அவுகளோடயே நானும் கௌம்பி வீட்டுக்கு வந்துட்டேன். வார வழிலதான் கேட்டேன்.
“கனியம்மாள வீட்டுல காணுமே. எங்க போயிட்டா? நானும் அவளப் பாக்கனும் பாக்கனும்னு இருக்கேன். பாக்கவே முடியலையே.....”

“அந்தக் கொடுமைய ஏங்கேக்குற. அவாள்ளாம் ஒரு பொம்பளையா? அவன அறுத்து, தச்சுக் கொண்டாந்து போட்டுட்டு ஒடனே கௌம்பிப் போயிட்டாளாம். இங்ன இருந்து கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்ல? வந்ததும் வராததுமா ஓடிப் போயிட்டா.”
“யாருக்கு ஒத்தாசை?”

“யாருக்கா? அவா புருசனுக்குத்தான். கட்டுன பொண்டாட்டிக்கு அக்கர வேண்டாமா?”
“அதான் வீட்டுல அவுகம்மெ இருக்கா. அவனோட அண்ணந் தம்பி, அக்கா, தங்கிச்சின்னு அம்புட்டுப் பேரும் இருக்காகள்ள. பின்ன என்ன? அம்புட்டுப் பேரு இருக்கைல இவா என்னத்துக்கு? இவ்வளவு தூரம் செஞ்சதே பெரிய காரியம். நானா இருந்தா ஆஸ்பத்திரிக்கே போயிருக்க மாட்டேன். இப்ப கனியம்மா எங்க போயிட்டாளாம்?”

“ம்... பெத்த தகப்பன் சாகப் பொழைக்க கெடக்கான். அவம்பெத்த பொண்ணக் கூட்டியாந்து தகப்பனப் பாக்க உடல. ஏதோ கடனுக்கு வந்துட்டு, ஒடனே பொண்ணு தனியா இருக்கான்னு சாக்குப் போக்குச் சொல்லிட்டு கௌம்பிட்டான்னு சொல்லிக் கிட்டாக. நம்ம என்ன கிட்ட இருந்து பாத்தமா என்ன? நாலுபேரு சொல்லக் கேள்விப் படுறதுதான். இனியாச்சும் பொண்ணக் கூட்டியாந்து புருசங்கூட இருந்து வாழலாம்ல?”
“அப்ப ஒடம்புல ரத்தம் நல்லா இருக்கும் போதெல்லாம் குடுச்சு, கும்மாளம் போட்டு ஆடிட்டு, ரத்தம் சுண்டிப் போகவும் பொண்டாட்டி வந்து கவனிச்சுக்கனுமாக்கும்? நல்லா நாயஞ் சொல்ற நீயி. கனியம்மா எடத்துல ஒனிய வச்சுப் பாரு. அப்ப இப்பிடிப் பேச மாட்டெ. அப்பிடியே கனியம்மா வந்துட்டாலும் என்ன சொல்வீக? இங்க பாரு. மழ எப்பப் பேயும்ஙீ வழுக்கல் எப்பெ வழுகும்னு இதான் சாக்குன்னு வெக்கமில்லாமெ வந்து வீட்டுக்குள்ள உக்காந்துட்டாள்னு சொல்வீக. நரம்பில்லாத நாக்குன்னு சும்மாயா சொன்னாக?”

“சே, சே. அப்பிடியெல்லாம் ஒருத்தரும் சொல்லமாட்டாக.”

“ஆமா சொல்லமாட்டீக. ஒரு கலியாணத்துல கனியம்மா தலைல பூ வச்சதுக்கே எவளோ சாடமாடையாச் சொன்னாளாம், ‘புருசன் வேண்டாமாம்ஙீ ஆனா பூ மட்டும் வேணுமாம்’. கனியம்மாளும் சும்மா உடல. பதுலுக்கு நல்லாச் சொல்லியிருக்கா, ‘பூவு நானு சின்னப் புள்ளையா இருக்கைல இருந்து வச்சுட்டு வாரேன்ஙீ புருசன் இப்ப எடவழில வந்தவன்.”

பேசிக்கிட்டே வீடு வந்து சேத்துட்டேன். வீட்டுக்கு வந்தப் பெறகு ஏந்தான் அந்தாளப் பாக்க போனோம்னு இருந்துச்சு. இப்பிடித்தான். வாழ்க்கைல நெறையா விசயங்கள நமக்குப் பிடிக்காமலே நாம செய்ய வேண்டியதா இருக்கு. நல்லதுக்கோ, கெட்டதுக்கோ. இப்பிடி மனசுக்குள்ள ஒன்ன வச்சுக்குட்டு வெளில வேற மாதிரி பாவலா பண்ண வேண்டியிருக்கு. கனியம்மாகூட இப்பிடித்தான். மனசு புடிக்காமத்தான் போயிருப்பா. பாவம் அவா. அவா மட்டுமா பாவம்? எல்லாருமே பாவப்பட்ட சென்மங்களாத்தான் இருக்கோம். அவள எப்பிடியாச்சும் பாத்துப் பேசனும்னு நெனச்சேன். ரெண்டு நாளுக் கழுச்சு அவளச் சந்தைல வச்சுப் பாத்தேன். அவளும் என்னப் பாத்து பேசனும்னு இருந்ததாச் சொன்னா. நாங் கேக்க முன்ன அவளாச் சொன்னா.

“அந்த நாரப் பெயலுக்கு முடியாமப் போச்சுன்னு ஏங்கிட்ட வந்து எதுக்குச் சொல்லனும்? அவெஞ் சாவசமே வேண்டாம்னு நானு ஒதுங்குனப் பெறகு, இந்தப் பத்து வருச காலமா எதையுமே கண்டுக்காமெ இப்ப மட்டும் ஏங்கிட்ட எதுக்கு வரனும்? மனச ரணமாக்கி, கொன்னு போட்டப் பெறகு இவனக் கவனிக்க எனக்கு எப்பிடி மனசு வரும்? இந்தக் கயிறு ஒன்னு ஏங்கழுத்துல கெடக்குறதுனால இவனுக்கு நாம்போயி பீ மோத்துரம் அள்ளி செமக்கனுமா? கண்ணு முழுச்சுக் கெடந்து இவனக் கவனிக்கனுமா? இந்த நெலமைல நாங்கெடந்தம்னா இவெ வந்து எனியக் கவனிப்பானா? செத்துத் தொலஞ்சாம்னா இந்தக் கவுத்த அறுத்து வீசிட்டு ஏம்பாட்டுக்கு இருப்பேன். அம்புட்டுப் பேரும் பொழைக்க மாட்டாம்னு சொன்னாக. இவனா சாவான்?”
“நீயி எதுக்குப் போன?”

“இவளுக வாய்ல விழவேண்டாம்னுதான் போனேன். ஓங்கிட்ட சொல்றேன். எனக்குப் போகவே இஸ்டமில்லதான். சரி போ. இவந்தான் மனுசத்தன்ம செத்தவன். ஏங்கிட்ட மனுசத்தன்ம இன்னும் சாகலியே... சாகுறானோ, பொழைக்குறானோ. முடியாமக் கெடக்குறவுகளுக்கு உதவி செய்ய மாட்டமா? அப்பிடிச் செய்துட்டு வருவம்னுதான் போனேன். போனதுனால எனக்குஞ் செலவுதான். இப்பக்கூட அவனுக்கு எம்புட்டு அதிகாரமும், ஆணவமுங்ற!”

“சாகட்டும்னு சொல்ற. பெறகு ஏம்போயிக் காப்பாத்துன?”

“சத்தியமாச் சொல்றேன். இத உங்கிட்ட தான் சொல்லமுடியும். மத்தவுக கிட்டச் சொல்லமுடியாது. இதுதான் உண்மெ. அவெம் பொழச்சு எந்துருச்சு வரனும்னு எனக்குத் துப்பரவா ஆசையே கெடையாது. ஆனா ஒன்னே ஒன்னுமட்டுந்தான் ஏம்மனசுக்குள்ள ஓடுச்சு” ஏங்காதோரம் மெதுவாச் சொல்லிட்டு நிப்பாட்டுனா.

“என்னது?”

“என்ன தெரியுமா? இவஞ்செத்துப் போனாம்னா, இந்த ஊரு ஒலகத்துல எனிய முண்டச்சின்னு சொல்லி, எந்த ஒரு நல்ல காரியத்துலயும் பங்கெடுக்க உடாமெ ஒதுக்கி வச்சிருவாங்களேங்ற எண்ணந்தான் என்னைய வேதனப் படுத்துச்சே தவுர, வேறெத்த கவலையும் எனக்கில்ல.”

“அதாவது ஊர்ல ஒரு பழமொழி சொல்வாகளே....”

“என்ன பழமொழி?”

“வெயிலுக்குப் பயந்துக்குட்டு வெந்நிப் பானைக்குள்ள விழுந்தது கணக்கா.”
கனியம்மா கம்முனு இருந்தா.

******

நன்றி : அணங்கு இதழ்    ( மார்ச் - ஆகஸ்டு 2007)

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்