Aug 30, 2011

நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்- வண்ணதாசன்

பிச்சு கூரையில் அந்த முகத்தையே தேடிக்கொண்டிருந்தான். ரொம்பவும் தனித்துப் போகிறபோது அவனுக்கு அந்த முகம் தேவைப்படும். கூரையில் குறுக்கு வாட்டாகக் குத்தியிருந்த நீளமான உத்தரக்கட்டைகளில், இவன் கீழே படுத்துக் கொண்டு பார்த்தால் நேர் எதிரே, முறுகித் தொங்கிக் கொண்டிருக்கிற பல்பிற்கு ரெண்டு ஜான் தள்ளின தூரத்தில் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் கோமாளி முகம் மாதிரி ஒன்று தெரியும். விழுந்து விழுந்து சிரிக்கும். வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும். வயிற்றுக்குக் கீழே திபுதிபுவென்று அடித்துக்கொண்டு சிரிக்கும், ஒரு பழந்துணியை மேலே வீசினது போல் நெஞ்சில் மடிந்து விழுந்து புரண்டு அந்த முகம் சிரிக்கும்vannadasan .

எவ்வளவோ முயற்சி செய்தும் அங்குலம் அங்குலமாய்ப் பார்வையை நகர்த்திக் கொண்டுபோயும் இன்று முகம் தெரியவில்லை. கூரை கூரையாக, உத்தரம் உத்தரமாக, பல்பு ஒயர் ஓட்டடைப் பின்னலாக மாத்திரம் இருந்தது. மாடியில் இருக்கிற சாய பாக்டரியின் நெடி கூடுதலாக வந்தது. நாளைக்குக் காலையில் இவன் அறைக்குப் பின்னால் சாக்கடை சிவப்பாகவோ பச்சையாகவோ பெருகியிருக்கும். அவனுக்கு அதெல்லாம் பழகிப் போயிருந்தது. ஆனால் புட்டாவுக்கு அப்படியில்லை.

புட்டா ஒருநாள் காலையில் இவனுக்கு முன்னால் எழுந்து போய் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். பிச்சு கிணற்றில் வாளி உள்ளே உரைகளில் மோதி தும்தும் என்று இறைத்துக் குளிக்கும்போது பேசவில்லை. குளிக்கிற தண்ணீர் பப்பாளிக் குரும்பைகளைச் சுழற்றிக் கொண்டு ஒரு தாரையாக அதனோடுதான் கலக்க வேண்டும். அப்படிச் சோப்பு நுரை கொப்புளம் கட்டி நீளமாக அதோடு பாய்ந்த சமயம் புட்டா திடுக்கென்று திரும்பிப் பார்த்தான். ரெண்டு கை விரலாலும் முகத்தையே வழித்து எடுக்கிறது மாதிரி நான்கு தடவை இழுத்துவிட்டான். இதை அவன் ஏதாவது படம் எழுதி முடிக்கிறபோது, புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கிறபோது அப்படி செய்வான். முகத்தில் அரைப்பங்கை நெற்றி முழுங்கி, முழுங்கலின் வாய்க்குள் இருந்து கொஞ்சம் மூக்கும் வாயும் பாக்கியிருப்பதுபோல இருக்கும். ஆனாலும் முகம் அசிங்கமாக இருக்காது. சிரிப்பு அழகாக இருக்கும், கேரா சுருட்டை சுருட்டையாக இறங்கி, சிரிப்பை இரண்டு கடைவாய்ப் பக்கமும் ஏந்தி அள்ளிக்கொள்ளும். சிரிக்கிறதுக்குப் புட்டாகிட்ட படிக்கணும். அந்த சிரிப்பை எல்லாம் படித்து விடவும் முடியாது. அப்படிச் சிரிப்பான்.

புட்டா ஏதாவது ஒரு கார்ட்டூன் போடும். தலையைச் சாய்த்துச் சாய்த்துப் போடும். போட்டு முடித்தவுடன் ஓஹோஹோவென்று சிரிக்கும். முகத்தை வழித்து எடுத்துக்கொண்டு அதைப் பற்றிச் சொல்லும். பாவனையோடு சொல்லும். கோவணத்தோட ஒருத்தரைப் போட்டிருக்கும். அதைப் போலவே எழுந்திருந்து நின்று காட்டிப் பேசும்;சிரிக்கும். பிச்சுவுக்கு அதில் என்ன இருக்கிறதென்று தோன்றும். ஆனால் புட்டா முகத்தில் இருக்கிற சிரிப்பைப் பாத்துத் தானாக சந்தோஷம் வரும். புட்டா இவனோடு வந்து இருக்கு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில்தான் பிச்சுவுக்கு இப்படியொரு முகம் கூரையில் தெரிய ஆரம்பித்தது. புட்டாகிட்டே அதைச் சொன்னபோது, 'அப்படியா, அப்படியா' என்று அதிசயம் மாதிரிக் கேட்டது. உத்தரத்தைப் பார்க்கவில்லை. பிச்சு முகத்தையே பார்த்தது.

ரெண்டு வருஷத்துக்கு முன்பு, ஒரு டிராமா ரிகர்சலுக்காகப் போயிருந்த இடத்தில் புட்டா வந்து இப்படித்தான் முதன் முதலாக அப்போது பார்த்தது. அந்த இடமே ஒரு புது அமைப்பாக இருந்தது. தனியாக ஹால் மாதிரி இல்லை. லாட்ஜ் ரூமும் இல்லை. ஒரு பெரிய பழைய வீடு. முன்னால் நாலைந்து பசுமாட்டைக் கட்டிப் போட்டிருந்தார்கள். போர்ஷன் போர்ஷனாக மறிப்பு. ஒரு பழைய மோட்டார்பைக் வாசலில் நின்றது. பெரிய பிரிண்டிங் பிரஸ் ஒன்று பின்னால் தெரிந்தது. முதலில் ஒரு சின்ன அறையில் புஸ்தகங்களும் காகிதமுமாய்ப் பரப்பிப் போட்டுக்கொண்டு ஐந்தாறு சிறு வயதுக்காரர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சின்னப் பத்திரிகையுடைய அறை என்று பின்னால் தெரிந்தது புட்டாவால்தான். அப்புறம் இவனது நாடகங்களைப் பற்றி அபிப்பிராயம் ஒன்றுகூட அதில் கட்டுரையாக வந்தது. அடுத்தடுத்து கொஞ்சம் பெரிய ஹால், வெளிசசம் கம்மி. லைட் போட்டுக் கொண்டு டேபிள் டேபிளாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மரபெஞ்சில் கிழவர் ஒருத்தர் தனியாகச் சீட்டைப் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தார். மடித்துத் தொங்கின காலில் பாண்டேஜ். அதையும் பிதுங்கி மினுமினுவென்று ஒரு வீக்கம்.

எல்லாத்துக்கும் கடைசியில் ரிகர்சல் நடக்கிற இவனுடைய இடம். இவன்தான் பிச்சு என்றும் இவனைக் கதாநாயகனாக வைத்து அந்த எழுத்தாளர் எடுத்த படம்தான் ஜனாதிபதியிடம் பிரத்தியேகப் பரிசு வாங்கியதென்றும் யாரும் புட்டாவுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சன்னல் விளிம்பில் உட்கார்ந்து தன்னுடைய காட்சி வர ஓய்ந்திருந்த பிச்சுவை, 'நீங்கள்தான் அந்தப் பிச்சுவா' என்று படத்தின் பெயரைச் சொல்லியபடி கையை இறுகிக் குலுக்கிக்கொண்ட போது பிச்சுவுக்குச் சலிப்பாக இருந்தது. ஜனாதிபதி, உலகப் படவிழா சர்டிபிகேட்டுகள் எல்லாம் இங்குள்ள படங்களில் இவனுக்கு எதையும் சம்பாதிக்கத் தந்திருக்கவில்லை. ஒரு காமெடியன் வேஷமும், குடையும் கையுமாய் வருகிற ஒரு பள்ளிக் கூட வாத்தியார் வேஷமும்தான் கிடைத்தன. அப்புறம் அவனை யாரும் கவனிக்கவில்லை. அவனை வைத்துப் படம் எடுத்த எழுத்தாளரே இரண்டாவது படத்தில் அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் தராமல் இருந்துவிட்டார். ஒரே பத்திரிகை மட்டும் அவனது நடிப்பை ஒரு வங்காளக் கலைஞனது நடிப்புக்கு நிகரப்படுத்தி எழுதியிருந்தது. டில்லிக்குப் போனது, சில ஆங்கிலப் பத்திரிகைகளில் இவன் படம் வந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது.

"ஆமாம் " என்று கையை விடுவித்துக் கொள்ள முயன்றபடி அவன் அறிமுகத்தை ஏற்றபோது, சன்னலோரம் பாதிகுடித்து விட்டு வைத்த டீயை மேலும் குடிக்க முடியாத, இவனுக்கும் தர முடியாத தன்னிலைமை சங்கடமளித்தது,

'நான் புட்டார்த்தி. புட்டா. கார்ட்டூன் எழுதிக்கிட்டிருக்கேன்' என்று மறுபடியும் கையை அழுத்தித் தோளையும் பற்றிக்கொண்டு பிச்சுவின் முகத்தைப் பார்த்தான். அப்படிப் பாத்துக்கொண்டிருந்தவன்தான் முகத்தை நெற்றியிலிருந்து வழித்துவிட்டுக்கொண்டு, அந்தப் படத்தில் ஒரு காட்சியை ரசித்துப் பாராட்டினான். சொல்லிக்கொண்டே, சொல்லுகிற சொல் ஒன்றுக்கும் பாவனையும் சேர்த்து, மற்றவர்கள் கவனம் திரும்பி இங்கே வந்தார்கள்.

"கிக்கீ ...கிக்கீ " என்று செல்லமாய்ச் சிவப்பி கூப்பிட்டது. பிச்சு மெதுவாக ஒரு ராகம் மாதிரி விசில் அடித்துக் கொண்டே எழுந்திருந்து அதன் பக்கம் போனான். சோப்புப் பெட்டியில் இருந்த இரை தீர்ந்து போயிருந்தது. விரலில் தாவி, பக்கவாட்டாய்க் கையில் நகர்ந்து சத்தமிட்டது. பிச்சு மறுபடியும் இடதுகைச் சுட்டுவிரலுக்கு மாற்றி, 'டுட்டுட்டுட்டு-டுட்டுட்டிட்டு' என்று கொஞ்சியவாறு வாங்கி வைத்திருந்த பொட்டுக்கடலை மிச்சமிருக்கிறதா எனத் தேடக் குனிந்தான். ரூம் முழுவதும் புஸ்தகமும் குப்பையுமாய்க் கிடந்தது. சுவரோரத்தில் ஒரு சின்னப்பல்லி, எப்படி இறந்தது என்று தெரியாமல், எறும்பு மொய்க்க வெளிறிக் கிடந்தது.

புட்டா இந்த ரூமுக்கு வர ஆரம்பித்த பிறகுதான் அந்தப் புஸ்தகமும் பேப்பரும். பெயர்தான் படம் எழுதிகிறவனே தவிர அவனுக்குப் புஸ்தகம் நிறைய வேண்டியிருந்தது. அவன் எங்கெங்கேயோ பழைய புஸ்தகக்கடைகளிலிருந்து அள்ளிக் கொண்டு வருவான். அநேகமாய் அவை எல்லாம் மலையாளப் புத்தகமாக இருக்கும். அல்லது வங்காளி ஆட்கள் எழுதினதாக இருக்கும் ரொம்பப் பழைய சீனத்து ஓவியர்கள் எழுதிய கலர்-பிளேட்டுகள் அடங்கின புஸ்தகத்தை ஒரு பழைய பேப்பர்க் கடையில் கண்டெடுத்து வந்தான்.

இந்தக் கிளி கூட அவன் கொண்டுவந்தது தான். வருகிற வழியில் புதிதாக வீடு கட்டுகிற யாரோ அந்த இடத்தில் நின்ற மரத்தை வெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார்களாம். அந்த மரம் சாய்ந்ததைப் புட்டா உணர்ச்சிகரமாக விவரித்தான். எலெக்ட்ரிசிட்டி போர்டுக்காரன் கம்பிகளைத் தளர்த்திவிட்டிருந்ததையும், கோடாரி வீச்சில் செதில் செதிலாகத் துள்ளி விழுந்ததையும்,, கோடாரியைத் தலைபின்னும்போது சீப்பைக் கொண்டையில் சொருகிக் கொள்வது மாதிரி மரத்தில் கொத்திச் செருகிவிட்டுக் கீழே வந்து கயிறுகட்டி இழுத்ததையும், இழுக்கும்போது பாடினதையும், பசங்கள் எல்லாம் ராட்சசன் சாய்கிற மாதிரி மரம் கப்பும் கிளையுமாக மொரமொரவென்று முறியும்போது 'ஒ'ண்ணு கூச்சல் போட்டதையும், சலார்ணு புழுதியில் இலை விசிறினபடி முந்தானையைத் தட்டிக் கீழே விரித்துப் படுத்துக்கிடக்கிற கிழவி மாதிரி ரொம்ப அசதியோடும் பதனத்தொடும் அது கிடந்ததையும், கிளை கிளையா ஏறி மேலே உட்கார்ந்து, அமுக்கி அசைந்து ஊஞ்சல் ஆடினதையும், நாலஞ்சு குட்டி கவட்டைக்கிடையிலே முட்ட முட்ட ஓடி வந்து குழையைத் தின்ற வெள்ளாட்டையும், சாக்கடைக் குள்ளே ஒரு பக்கத்து மரம் முழுக்க, அதில் எச்சில் இலையெல்லாம் மோதிக்கொண்டு இருந்ததையும், மரம் வெட்டுகிறவன் விரட்டி விரட்டி ஏசியதையும் நாடகம் நடிக்கிற மாதிரிச் சொன்னான். 'ஆலமரம் சாயுது, அத்தி மரம் சாயுது. அக்கா வீட்டுப் புளிய மரம் வேரோட சாயுது' என்று சிறு பிள்ளைகள் போல ராகம் போட்டுச் சொன்னான். 'புட்டா நீ எல்லாம் நடிச்சா என்ன?' என்று பிச்சு கேட்டான், அவன் கையில் இருக்கிற கிளியைக் கூட லட்சியம் பண்ணாமல்.

இதும் பாத்தியா. இதுவும் அங்க எங்கயோ போனதுல தான் இருந்திருக்கு. நவுந்து நவுந்து எப்படியோ சுவருப் பக்கம் போயி, அடுத்த காம்பவுண்ட்ல மரத்தொட்டி வெச்சிருக்கிற மொதலியார் கடை ரோடுகுள்ள போயிப் பம்மிகிட்டுது. பசங்கள்ல எவனோ பார்த்துட்டுக் கல்லைத் தூக்கி அடிக்க, போங்கடான்னு எல்லாத்தியும் விரட்டின கையோட கட்டையெல்லாம் கொஞ்சம் பொறட்டிப் போட்டு நான் எடுத்தாந்தேன், பாரு. 'பயத்தில போட்டு வாங்கிட்டுது விரல்ல' என்று ஈரத்துணி சுற்றின விரலைக் காட்டினான்.

"இது இங்கியே இருக்கட்டும். கூண்டு கீண்டு எதுவும் வேணாம். பறக்கும்போது பறந்து போகட்டும். அதுவரை நமக்குள்ள பன்னுமாச்சு, டீயுமாச்சு. அதும் சாப்பிடுட்டு போட்டும்" என்று புட்டா சோப்பு டப்பாவின் மேல் மூடியப் பிரித்து ஒரு டீயில் நனைத்த பன்னைப் பிட்டுப் போட்டான். வாயில் கொடுக்கப்போகும்போது அது மறுபடியும் கொத்தவந்தது. 'கோவப்படாதேம்மா சிவப்பி' என்று சொன்னான். முதல் முறையாகச் சொன்னான். அதுவே பெயராகிவிட்டது பின்னால். அது வாங்கிக் கொள்ளவில்லை, துணி மணி கிடந்த கொடியில் விட்டான். படபடவென்று இறக்கைகளை அடித்துக்கொண்ட போதுதான், அதன் ஒரு பக்கத்துச் சிறகு கிழிந்துபோன ஜப்பான் விசிறிமாதிரித் தொய்ந்து தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. புட்டா முகம் திடீரென்று இருண்டது. முகத்தை ஒரு தடவை வழித்துவிட்டுக்கொண்டு மறுபடியும் சிறகையே பார்த்தான். மாறுவேஷம் போட்டதுபோல முகம் கோணி, கண் ஜிவுஜிவுவென்று ஆகிவிட்டது.

இதுவரை இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தவன் இங்கியிருந்து 'எப்போதாவது வெளியே போக ஆரம்பித்தான். சிவப்பியை வளர்த்தான். சிலசமயம் ரோட்டி, சிலசமயம் பொட்டுக்கடலை, பப்பாளிக்கீற்று, நாட்டுப்பழம் எதுவும் அதற்கு மறுப்பில்லை. எதையாவது தீனி கொடுத்தவாறு அதையே படித்தான். பிச்சுவுக்குப் பிழைக்கிற வழிகளைச் சொன்னான். அவன் கார்ட்டூன் எழுதுகிற பத்திரிகை அச்சாகிற சிறிய பிரச்சிற்குக் கூட்டிப் போய் அறிமுகம் பண்ணினான். ஜல்லியை வாங்க ஏற்பாடு செய்தான். பழைய பேப்பர் வியாபாரம் செய்கிற யோசனை சொன்னான்.

ஒரு தடவை நிறைய நிறைய நாய்களின் படங்களாக எழுதிக் கொண்டிருந்தான். பயங்கரமான நாய் முகங்கள். வெறித்தனமாகப் பல்லும் முழியும் பிதுங்குகிற நாய்கள். இடுப்பு வரை ஒரு உடம்பின் மேல் விழுந்து பிராண்டுகிற நாய்கள். ஒரு பெட்டை நாயைச் சுற்றிக் குரோதத்துடன் முகர்ந்துகொண்டு நிற்கிற நாய்கள். ஒரு நாயின் எலும்புக்கூட்டின் மீது பாயத் தயாராக இருக்கிற நாய்கள் என்று இருந்தன. அதை எழுதும்போது சிவப்பி பக்கத்திலேயே இருந்தது. ஒரு பிரஷ்ஷைக் கொடுத்தால் வாயில் கவ்வியபடி ஜவ்வுஜவ்வாக வட்டக்கண்ணைச் சிமிட்டியபடி அசையாமல் இருக்கும். ஹாங்கர்களில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக்கொண்டு விளையாடும். சத்தம் போடும். ரொம்பச் சந்தோஷம் வந்ததுபோல கூப்பிடும். இவனுடைய 'நாய்கள்' என்ற சித்திரக் கண்காட்சி 'ஒன்மேன் ஷோ'வாக நடந்த சமயம், புட்டாவை ஒரு ஆங்கில தினசரி தன் ஞாயிற்றுக்கிழமைப் பகுதிக்குப் பேட்டி கண்டிருந்தபோது, சிவப்பியுடன் இவன் இருக்கிற படம் ஒன்று மிக நேர்த்தியாக வெளியாகியிருந்தது.

செத்துப்போன பல்லியை அப்புறப்படுத்திவிட்டு, அந்த ஓரத்தில் இன்னும் மொய்த்துக் கொண்டிருக்கிற எறும்புக் கூட்டத்தையே, பார்வை பிசகிக் கலைகிற வரை பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாமே கலைந்து போனது மாதிரித்தான் இருந்தது.

புட்டாவைக் கொஞ்ச நாள் காணவே இல்லை. டில்லியில் இருந்து ஒரு லெட்டர் வந்தது. 'சிவப்பி எப்படி இருக்கிறாள்' என்று மறக்காமல் கேட்டிருந்தது. 'அது பறக்க முடியாது சிவப்பு வானம் வரும்வரை' என்று எழுதியிருந்தது. கொஞ்ச நாள் சத்தமே இல்லை. கேரளா பக்கத்திலிருந்து மறுபடி ஒரு கடிதம் வந்தது. கடலின் அலைகள், அதன் குரைப்புகள், நிசப்தமான கடற்கரைகளை நக்கி நக்கி அது அலைவதைப் பற்றிய வர்ணனைகள், ஒரு நிலவடிக்கிற ராத்திரி முழுவதும் தென்னங்கள்ளைக் குடித்துவிட்டுத் தன்னந்தனியாகக் கடற்கரையில் கொட்டக் கொட்ட விழித்து உட்கார்ந்திருந்தது எல்லாம் எழுதியிருந்தது.

'புட்டாவுக்கு என்ன ஆச்சு?' என்று ஒன்றும் விளங்கவில்லை. பிச்சு தானாகவே ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றி மறுபடியும் நாடக உலகில் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கியதைக் கேட்டுப் புட்டா எழுதுவான் என்று நினைத்தான். ஆனால் புட்டாவின் திசையே தெரியவில்லை.

இன்னும் அவனுடைய கட்டுக் கட்டான புஸ்தகங்கள், பிரஷ்கள், கலர்கள், பேப்பர் கட்டிங்குகள் எல்லாம் அப்படியே ரூமில் கிடக்கின்றன. அவனுடைய காக்கிப் பாண்ட்ஸ் கூட ஒன்று கொடியில். பிச்சு முழு நேர வியாபாரிபோல ஆகிப்போனான். இந்த அறைகூடப் பழையப் பேப்பர் அடைத்து வைக்கிற 'கோடவுன்' மாதிரி ரகம் ரகமாக நிரம்பிவிட்டது. எலி நடமாடுகிறது.

சிவப்பி இப்போது இவனுடைய குரலுக்கு வெகுவாகப் பழகிப் போய், இவனுக்குப் புட்டாவின் ஞாபகமாக உதவியபடி இருந்தது. திடீர் திடீரென்று முகத்தைப் புட்டாவைப் போல வழித்துவிட்டுக் கொண்டு தனியே கிளியின் முன் பிச்சு சிரிக்கவும் செய்தான்.

இந்தப் புஸ்தகங்களைஎல்லாம் தட்டி ஒழுங்கு செய்து ஒரு கள்ளிப்பெட்டியில் போட்டுவைக்கலாம் என்று ஆரம்பித்தவனுக்கு அந்தத் தூசி பிடிக்காமல் மீண்டும் இளைக்க ஆரம்பித்துவிட்டது. புட்டா இருக்கையில் ஒரு தடவை இப்படி நேர்ந்தது. அப்புறம் புட்டா இவனைத் தூசு கிளம்புகிற இடத்தில் அனுமதித்ததில்லை. பிச்சுவுக்குத் தும்மல் தும்மலாகக் கிளம்பியது. இருமல் கமறிக் கமறி வறண்டு வந்தது. உள்ளே இருக்கவும் முடியாமல் வெளியே விடவும் முடியாமல் மூச்சு குதிக்க ஆரம்பித்தது. மஞ்சள் மாத்திரைகள் கைவசமில்லை. இருமி இருமி வாசல் பக்கம் தலையைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்து சுவாசத்தை நிதானப்படுத்த முயன்றான். சாயப்பட்டறையின் நெடியை விலக்க முடியவில்லை. சிவப்பி உள்ளே சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. திரும்பிக் கதவை அடைத்துவிட்டு ஒரு டீ குடிக்கலாம் என்று எழுந்து போனான். கிணற்றடியில் தேங்கின தண்ணீரை நோக்கித் துப்பின கோழை, அவன் பக்கமே விழுந்தது.

இவன் டீக்கடைக்கு வெளியே நின்றுகொண்டு இளைத்தபடியே ஒரு டீக்கு ஆர்டர் கொடுத்தான். 'பொறை, சம்ஸா எதுன்னாச்சும் வேண்டாமா உங்க தோஸ்துக்கு?' என்று சிவப்பியை ஞாபகம் வைத்து விசாரித்த மாஸ்டர், பிச்சு பார்சலுக்குச் சொன்னதும், கரண்டியால் பாலை ஒரு தடவை கிளறிவிட்டு, டீ ரேங்கை ஊற்றிப் பிழிவாகச் சுற்றிக் கையில் கொடுத்தார். பிச்சு உறிஞ்சின போது -

'என்ன அண்ணே டீ சாப்பிடுதா?' என்று கூப்பிடுகிற குரல் கேட்டது. எக்ஸ்ட்ரா சப்ளை பண்ணுகிற கண்ணுச்சாமி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தான். பக்கத்தின் இன்னொருவனும் ஒருத்தியும் இருந்தார்கள். அவளைப் பிச்சு முன்னாடியே ஸ்டூடியோக்களிலும் நாடகங்களிலும் பார்த்திருக்கிறான். அவள் இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டிருந்தாள்.

'அண்ணனை மாதிரி ஒத்தவங்க இப்படி பீல்டை விட்டு ஒதுங்கிட்டா எப்படி? டில்லி வரைக்கும் போய் மெடல் வாங்கின கையப் பூட்டிகிட்டு எப்படி இருக்க முடியுதுன்னு தெரியலை - கிண்டல் என்கிறதே வெளிக்குத் தெரியாமல் ரொம்பவும் உபசாரமாகச் சொல்லிக்கொண்டு, பக்கத்தில் திரும்பித் தணிவாக அவர்களிடம் பேசிவிட்டு, 'மூணு பரோட்டா செட், வறுவல் ' என்று ஆர்டர் பண்ணினான். பிச்சு பக்கம் மறுபடியும் திரும்பிக் கேட்டான்.

"ஏதோ வியாபாரம் பண்ணுறாப்பலேயோ ?"

"ஆமாம், வேஸ்ட் பேப்பர்..."

"அதெல்லாம் இன்னாத்தை அள்ளிக் கொடுத்துடப் போறதுண்ணே? லொங்குலொங்குண்ணு நாயா அலைஞ்சுக்கிட்டு. என்ன பொழைப்புண்ணே பேரு அதுக்கு? " கண்ணுச்சாமி சிரித்தான்.

பிச்சுவுக்குச் சட்டென்று புட்டாவின் நாய்கள் படங்கள் ஞாபகம் வந்தது. புட்டா கண்ணுச்சாமியைப் பார்த்திருப்பானோ எங்கேயாவது? பிச்சு ஒன்றும் சொல்லாமல் டீயைக் குடித்து முடித்தான். இளைப்பு அடங்கவில்லை. 'பில்லை நானு வேணா கொடுக்கிறேண்ணே' - கண்ணுச்சாமி கத்தினான். 'பரவாயில்லை' - என்று தானே கொடுத்துவிட்டு வெளியே வந்து ஒரு பீடியைப் பற்ற வைத்தபோது, பார்சலை மறந்து போனது ஞாபகம் வந்தது. வாங்கும்போது கண்ணுச்சாமி அவசரம் அவசரமாகக் கையை கழுவிப் பேப்பரில் துடைத்துக் கொண்டே வந்தவன் -

'என்னண்ணே! உங்ககிட்ட ஏதோ கிளியிருக்குதாமே?"

"ஆமாம்!"

"பேசுமா?"

"பேசும்"

"விசிலடிச்சா அடிக்குமா?"

"ம்...ம்..."

"ஆனாக்க , பறக்க முடியாதும் நொண்டிப் போலத் தோணுது"

பிச்சு கண்ணுச்சாமியை ஏறிட்டுப் பார்த்தான். அவனுக்குப் பேசவும் முடியவில்லை, இருமலும் வரவில்லை.

"நம்ம தம்பையா முதலாளி படத்துக்கு இப்படி ஒரு நொண்டிக் கிளி வேணும்னு அலையுதாங்களாம். அண்ணன் கிட்டேயே இருக்கிறது ரொம்ப சுலபமாப் போச்சு. அப்போ, உடனடியா ஒரு போன் அடிச்சிரட்டுமா? மற்றதை நமக்குள்ளே அப்புறமாப் பேசிக்கலாம்."

'ஒன்றும் பேச வேண்டாம். உன் ஜோலியைப் பார்த்துக்கொண்டு நீ போய்ச் சேர். நான்தான் நடிக்கிறவன். என் கிளி நடிக்கிறத்துக்கு இல்லை. அதுக்கு வேறு எவனாவது கிளி ஜோஸ்யக்காரன் அகப்படுதானான்னு பாரு. போ.' கண்ணுச்சாமியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் பீடியை மறுபடியும் இழுத்தபடி பிச்சு வெளியே வந்தான்.

பீடியைச் சாக்கடையில் சர்ரென்று சுண்டி எறிந்து , சகதியில் படாமல் தாண்டி பிச்சு அறைக்குள் நுழைந்தபோது அறையில் ஒரு பக்கம் இருந்த வேஸ்ட் பேப்பர் கட்டுகள் எல்லாம் மடமடவென்று மொத்தமாகச் சாய்ந்து கிடந்தது. ஒரு தெலுங்கு வாரப்பத்திரிகையின் பிரிக்கப்படாத பக்கங்களுடைய அந்தக் கட்டுகள், ஏனைய தினசரிப் பேப்பர்கள் இருக்கிற கட்டுகளில் இருந்து சரிந்து, இரண்டு சுவருக்கும் பாலமாகக் கிடந்தது.

மேலும் மேலும் எரிச்சலுற்றுப் படபடப்புடன் பிச்சு குனிந்தபோது, எல்லாவற்றிற்கும் கீழ் அசைவே அற்ற இறகுப் பச்சை மாத்திரம் நீண்டு கொண்டிருந்தது. எதையும் நினைக்க ஓடாத இந்த அதிர்ச்சியும், புழுங்கின பேப்பர் வாடையும் பிச்சுவுக்கு அதிகமாக மூச்சு வாங்கச் செய்து சாய்ந்தபோது, கூரையின் கட்டையிலிருந்து அந்த முகம் விழுந்து விழுந்து சிரிப்பது, அவனுக்கு எந்தவிதமான முயற்சியுமின்றித் தெரிந்தது

******

நன்றி: 'வண்ணதாசன் கதைகள்' தொகுப்பு (2001) - புதுமைப்பித்தன் பதிப்பகம்

தட்டச்சு உதவி: கிரிதரன் ராஜகோபாலன்

Aug 27, 2011

சுமைதாங்கி-ஜெயகாந்தன்

காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?... அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன். jeyakanthan

வீட்டுக் கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அந்த அம்மாளைப் பார்க்கும்போது, அவன் கண்கள் கலங்கின. அவள் போலீஸ்காரனைப் பார்த்து, "ஏன்.. இருக்கான்; என்ன விஷயம்? ஏலே ஐயா! இங்கே வா" என்றதும் உள்ளிருந்து ஒரு பையன் ஓடி வந்து, போலீஸ்காரனின் தலையைக் கண்டதும், "நான் வரமாட்டேன்" என்று பயந்து உள்ளே ஒளிந்து கொண்டான்.

"எதுக்குடாய்யா பயப்படறே? ஒண்ணும் பண்ண மாட்டாரு, வா" என்று பையனை அழைத்தாள் தாயார்.

போலீஸ்காரன் பெருமூச்சுவிட்டான்: "கூப்பிடாதீங்கம்மா... இருக்கட்டும். தோ, அங்கே ஓவர் பிரிட்ஜீகிட்ட, லாரியிலே சிக்கி ஒரு பையன் போயிட்டாம்மா... அப்படியே மண்டெ செதறிப்போச்சம்மா... ஸ்" என்று சொல்ல முடியாமல், சற்று நேரத்துக்கு முன் தன் பாபம் செய்த விழிகளால் கண்டதை எண்ணும்போதே போலீஸ்காரனின் உடம்பு சிலிர்த்தது.

"ஐயோ தெய்வமே! அப்புறம் என்ன ஆச்சு? புள்ளை உசிருக்கு..." என்று அவள் கேட்டு முடிக்குமுன் மற்றொரு பெருமூச்சையே பதிலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான் போலீஸ்காரன். அங்கிருந்து போகும்போது, "இந்தக் காலனியிலே இருக்கற புள்ளைதான்னு சொன்னாங்க... புள்ளைங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்குங்கம்மா" என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டின் முன் நின்று, ஒரு பெரிய சோகத்தை எதிர்நோக்கித் தவிக்கும் தனது நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை..." என்று ஆரம்பித்தான் போலீஸ்காரன்.

"எங்க வீட்டிலே கொழந்தையே கெடையாதே" என்றாள் வீட்டுக்குள்ளிருந்து வந்தவன்.

"அம்மா! நீ புண்ணியவதி!" என்று அந்தப் பெறாதவளை எண்ணி மனத்துள் பெருமைப்பட்டவாறே பெற்று வளர்த்து இன்று தெருவிலே ரத்தமும் சதையுமாய்த் தன் செல்வத்தைச் சூறையிட்டுவிட்ட குழந்தைக்குரிய "பாவி"யைத் தேடிச் சென்றான் போலீஸ்காரன்.

2

ஒவ்வொரு வீட்டின் முன் நிற்கும்போதும், 'அது அந்த வீடாய் இருக்கக் கூடாதே' என்று அவன் மனம் பிரார்த்தித்தது. ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும்போதும், 'ஐயோ! இவள் அந்தத் தாயாய் இருக்க வேண்டாமே' என்று அவன் இதயம் கெஞ்சியது. 'எப்படி இருந்த போதிலும் இந்தக் காலனிக்குள் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஒரு தாயின் இதயத்தில் அந்த 'டைம்பாம்' நேரம் வந்ததும், வெடித்துச் சிதறத்தான் போகிறது' என்ற நினைப்பு வந்ததும் போலீஸ்காரன் தயங்கி நின்று திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தான். அந்தச் சோகத்தைத் தன்னால் தாங்க இயலாது என்ற நினைப்பிலேயே அந்தக் காட்சி அவன் மனத்தில் உருவாகி உடம்பும் முகமும் வேர்த்து, நாக்கு உலர்ந்தது.

ஒரு வீட்டின் திண்ணைமேல் 'உஸ்' என்ற ஆஸ்வாசப் பெருமூச்சுடன் உட்கார்ந்து, தொப்பியைக் கழற்றி, கர்ச்சிப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டான்.

'திரும்பிப் போய்விட்டால் என்ன?' என்று மனசு மீண்டும் உறுதியற்றுக் குழம்பியது.

'நான் போய்விட்டால், அதனால் அந்தக் குழந்தைக்கு ஒரு தாய் இல்லாமல் போய்விடுவாளா? ஐயோ! அது தாயில்லாக் குழந்தையாய் இருக்கக் கூடாதா! ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை இப்படிக் கேள்வி முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன நியாயம்?.. சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் - இந்த யமன் தான்... யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு? அந்தக் கடவுளே பத்து மாசம் சொமந்து பெத்திருந்தாத் தெரியும்... எப்படித்தான் தாங்கப் போவுதோ அந்தப் பெத்த வயிறு... மனுசன் சாகறது பெரிய சோகமில்லே; அதைப் பாத்து மத்தவங்க துடிக்கிற கோலமிருக்கே... அட கடவுளே!'

'ஊரிலே தான் ஒவ்வொருத்தியும் ஒண்ணுக்குப் பத்து பெத்து வெச்சி இருக்காளே, ஒண்ணு போனாத்தான் என்ன? ஐயோ! அப்படியும் நினைக்க முடியுமா?... முடியாது, முடியாது. பெறாத என்னாலேயே - பிள்ளைப் பாசம்ன்னா என்னான்னு தெரியாத என்னாலேயே - யாருதோ போச்சி, நமக்கென்னான்னு இருக்க முடியாத மனுஷ மனசுக்கு, தன்னோடதே போச்சின்னா? - நேரமும் காலமும் வந்து கெடப்பாக் கெடந்து போனாலும் பரவாயில்லே... இப்படித் திடீர்க் கொள்ளையிலே அள்ளிக் குடுக்கப் பெத்த மனசு தாங்குமா? 'ஐயோ'ன்னு ஒரே அலறல்லே அவ உசிரே போயிடுமே! அடத் தெய்வமே! சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னு ஒண்ணையும் ஏன்டாப்பா உண்டாக்கினே?... கொஞ்ச நாழிக்கு முன்னே, சிட்டுக்குருவி மாதிரி ஒரே சந்தோஷமா பறந்து திரிஞ்சி ஓடிக்கிட்டிருந்தானே!...'

'கையிலே ஐஸ்கிரீம் குச்சியைப் புடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். நான் தான் பாவி பாத்துகிட்டு நிக்கறனே... அது நடக்கப்போவுதுன்னு தெரியுது... விதிதான் என் கையைக் காலை வாயையெல்லாம் கட்டிக் கண்ணை மட்டும் தெறக்கவச்சி எவ்வளவு கோரமான விளையாட்டை நடத்திக் காட்டிடுச்சி?... பையன் கத்தினானா? ஊஹீம்! அதுக்குள்ளே வந்திடுச்சே சாவு! போற உசிரு ஐஸ்கிரீமுக்காக இல்லே தவியா தவிச்சிருக்கும்! சாவுலே இருக்கற கோரமே அதுதான். திடீர்னு வந்து சாதாரண அல்ப ஆசையைப் பெரிசாக்கி ஏமாத்திடும். இன்னும் இவ்வளவு நாழிதான்னு முன்னெச்சரிக்கை கொடுத்து வந்திச்சின்னா மனுசன் சந்தோஷமாச் செத்திடுவானே - அது பொறுக்குமா அந்தக் கொலைகாரத் தெய்வத்துக்கு?'

'சாவும் போது எல்லா உசிருங்களுக்கும் ஒரு ஏமாத்தம் தான் மிஞ்சி நிக்கும் போல இருக்கு. ஆமா... இருக்கும்போது எவ்வளவு அனுபவிச்சாலும் சாகும்போது கெடைக்கப் போறது ஒரு ஏமாத்தம் தான்... ஐயோ.. என்ன வாழ்க்கை!'

'அந்த மாதிரி தான் அன்னிக்கி ஒரு நாளு, டேசன்லே, ஒரு சிட்டுக்குருவி 'கீச்கீச்'னு கத்திக்கிட்டு, பொட்டையோட ஒரே சேட்டை பண்ணிக்கிட்டுத் திரியறப்பெல்லாம் இனிஸீபெக்டரு ஐயா கூட வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு... பொட்டைமேலே ஆண் குருவி திடீர்னு எங்கிருந்தோ விசுக்குனு பறந்து வந்து தாவி ஏறினப்போ, அந்தக் கழுதை 'காச்மூச்'னு கத்திக்கிட்டு எதிர்ச் சுவத்திலே இருந்த ஒரு பொந்திலே போயி உக்காந்துக்கிட்டுக் 'கிரீச்' 'கிரீச்'னு ஏக்கம் காட்டிச்சி... அந்த ஆணுக்கு ஏமாந்த வெறியிலே படபடன்னு நெஞ்சி அடிச்சிக்குது. உடம்பைச் சிலிப்பிக்கிட்டு ஒரு நிமிஷம் பொட்டையை மொறைச்சிப் பார்த்தது. அந்தப் பார்வையிலேயே பொட்டைக்கு மனசு மாறிப்போச்சி. மனசு மாறினப்புறம் இந்தச் சனியனே ஆண் குருவிக்கிட்டப் போயிருக்கக் கூடாதா? பொல்லாக் கழுதை மவளுது... இந்தப் பொந்திலேயே, வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பி உக்காந்துக்கிடுச்சி. அது திரும்பினதுதான் தாமஸம். விருட்னு ஒரு பாய்ச்சல் பாஞ்சுது ஆணு... நானும், இனிஸீபெக்டரும் நடக்கப் போற காரியத்தைப் பாக்கறதுக்குத் தயாராத் திரும்பினோம்; இனிஸீபெக்டரு என்னைப் பாத்துக் கண்ணைச் சிமிட்டினாரு.'

"அதுக்கென்னாங்க, எல்லா உசிருங்களுக்கும் உள்ளதுதானே"ன்னேன். நான் சொல்லி வாய் மூடல்லே... 'கிரீச்'சினு ஒரு சத்தம்! ஆண் குருவி 'பொட்'டுனு என் காலடியிலே வந்து விழுந்தது. தலை பூரா 'செவ செவ'ன்னு ஒரே ரத்தக் களறி! ஐயோ கடவுளேன்னு அண்ணாந்தேன். 'கடகட... கடகட'ன்னு சாவோட சிரிப்பு மாதிரி அந்தப் பழைய காலத்து 'பேன்' சுத்திக்கிட்டு இருக்குது...

இனிஸீபெக்டரு எந்திரிச்சி ஓடியாந்து அதைக் கையிலே எடுத்தாரு...

"ம்... போயிடுச்சு ஐயா!... நீ சொன்னியே இப்ப, 'எல்லா உசிருங்களூக்கும் உள்ளதுதான்'னு... சாவைப் பத்தி தானே சொன்னே?" ன்னு கேட்டுக்கிட்டே சன்னல் வழியா அதைத் தூக்கி வெளியே போட்டார்.

'அந்த ஆண் குருவி 'பேன்'லே அடிபட்டுச் செத்தது ஒண்ணும் பெரிய விஷயமில்லே. ஆனா, அந்தப் பொட்டை - எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பொட்டைக் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே... ஐயோ! ஐயோ!.. அப்பத்தான் தோணிச்சு - கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?...'

'வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்; வரலாமா சாவு? - அவ்வளவு அவசரமா? குழந்தை கையிலேருந்து விழுந்த ஐஸ்கிரீம் கரையறதுக்குள்ளே உசிர் கரைஞ்சு போயிடுச்சே...' - மனசு என்னென்னவோ எண்ணியெண்ணித் தவிக்கத் திண்ணையிலேயே வெகு நேரம் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.

கழற்றி வைத்திருந்த தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு நிமிரும்போது பார்வை அகஸ்மாத்தாக அந்த வீட்டுக்குள் திரும்பியபோது ஒரு பெண் - இளம் பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தவாறே உட்கார்ந்திருந்தாள்.

அது ஓர் அற்புதமான காட்சிதான்.

"அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி தர்ரியா?" என்று கேட்டவாறு மீண்டும் திண்ணைமேல் உட்கார்ந்தான் போலீஸ்காரன்.

குழந்தையை மார்போடு அணைத்தவாறே எழுந்து உள்ளே சென்று கையில் ஒரு செம்பில் தண்ணீரோடு வெளியே வந்தாள் அந்த இளம்பெண். குழந்தை மார்பில் முகம் புதைத்துப் பாலருந்தும் சத்தம் 'மொச் மொச்' சென்று ஒலித்தது.

போலீஸ்காரன் தண்ணீர்ச் செம்பை வாங்கிக் கொண்டதும் தாய்மைச் சுகத்தோடு குழந்தையின் தலைமுடியை மிருதுவாகத் தடவினாள் அவள்.

திடீரெனப் போலீஸ்காரனின் கண்கள் மிரண்டன.

'ஒருவேளை இவள் அந்தத் தாயாக இருக்க முடியுமோ? சீ, இருக்காது. சின்ன வயசா இருக்காளே!'

"ஏம்மா! இதுதான் தலைச்சன் குழந்தையா?" என்று ஆரம்பித்தான்.

"இல்லே... பெரிய பையன் இருக்கான். அவனுக்கு அப்புறம் ரெண்டு பொறந்து செத்துப் போச்சு... இது நாலாம் பேறு..."

"இப்ப பெரிய பையன் எங்கே?"

"பள்ளிக்கூடம் போயிருக்கான்."

"பள்ளிக்கூடமா... என்ன சட்டை போட்டிருந்தான்?"

"பள்ளிக் கூடத்திலே காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போடணும்னு சொல்லி இருக்காங்கன்னு உசிரை வாங்கி நேத்திக்குத் தச்சிக் குடுத்தப்பறம்தான் ரெண்டு நாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போறான்... எதுக்கு இதெல்லாம் கேக்கிறீங்க...?"

போலீஸ்காரன் ஒரு நிமிஷம் மெளனமாய் நின்றுவிட்டு, "பையனுக்குப் பள்ளிக்கூடம் ஓவர்பிரிட்ஜ் பக்கமா இருக்குதா?" என்று சாதாரணமான குரலில் கேட்டான்.

"இல்லே. இந்தப் பக்கம் இருக்கு... ஆனா, அது ஊரெல்லாம் சுத்தும். வாலுத்தனம் அதிகமாப் போச்சு... சொன்ன பேச்சைக் கேக்கறதில்லே... காத்தாலே 'ஐஸ்கிரீம் வாங்க அரையணா குடு'ன்னு உசிரை வாங்கினான். நான் தரமாட்டேன்னுட்டேன். அப்புறம் எனக்குத் தெரியாமப் பொட்டியெத் தொறந்து அரையணா எடுத்துக்கிட்டுப் போகும்போது நான் பாத்துட்டு ஓடியாந்தேன். அவன் ஓட்டத்தை நான் புடிக்க முடியுதா? விரட்டிக்கிட்டே வந்தேன். ஓடிட்டான். என்ன கொட்டம்! என்ன கொட்டம்! எனக்கு வெச்சிச் சமாளிக்க முடியல்லே... வந்த ஆத்திரத்திலே 'அப்படியே ஒழிஞ்சு போ, திரும்பி வராதே'ன்னு திட்டினேன்..."

போலீஸ்காரன் இடைமறித்து, 'ஐயையோ! அப்படி நீ சொல்லி இருக்கக் கூடாதும்மா... கூடாது' என்று தலையைக் குனிந்து கண்ணீரை மறைத்துக் கொண்டான். பிறகு சற்றே மெளனத்துக்குப் பின் ஒரு செருமலுடன் 'எனக்கென்ன, என் கடமையைச் செய்கிறேன்' என்ற தீர்மானத்தோடு, தலையை நிமிர்த்தி, கலங்குகின்ற கண்களை இறுக மூடிக் கொண்டு இமை விளிம்பில் கண்ணீர் கசியச் சிலைபோல் ஒரு வினாடி நின்றான். அவன் இதயமே இறுகி, துருவேறிய உணர்ச்சிக் கரகரப்புடன் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன: "ஓவர் பிரிட்ஜீகிட்டே லாரியிலே அடிபட்டு ஒரு பையன் செத்துக் கிடக்கான். போ! போயி, உம் புள்ளைதானான்னு."

'ஐயோ ராசா!' என்ற அலறலில் அந்த வீடே - அந்தக் காலனியே அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில் போலீஸ்காரன் செயலற்றுத் திண்ணையின் மீது சோர்ந்து விழுந்தான்.

பாலருந்தும் குழந்தையை மார்புற இறுகத் தழுவிக்கொண்டு வெறிகொண்டவள்போல் அந்தத் தாயார் வீதியில் ஓடிக் கொண்டிருக்கிறாள்...

3

"இன்னும் ஒரு தெருவு தாண்டிப் போகணுமே... என்ற பதைபதைப்புடன் கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு, மேல் துகில் விலகி ஒற்றை முலை வெளித்தெரிய தன் உணர்வு இழந்து, தாய்மை உணர்வின் வெறிகொண்டு பாய்ந்து பாய்ந்து ஓடி வருகிறாள் அவள்.

விபத்து நடந்த இடத்தை வேடிக்கை பார்த்துவிட்டு எதிரில் வரும் கூட்டம் தாய்மையின் சொரூபமாக இவள் வருவதைக் கண்டு, திரும்பி இவளைப்பின் தொடர்ந்து செல்கிறது...

- கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்!

'என்னா ஆச்சு?' - செய்தித்தாள் விவகாரம்போல் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேம்போக்காய் ஒருவர் பதில் சொல்கிறார்:

"ஒரு பையன் லாரியிலே மாட்டிக்கிட்டான்..."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? ஹேஹே... குளோஸ்..." என்று ஒரு ஹிஸ்டிரியாச் சிரிப்புடன் கை விரிக்கிறான் ஒருவன்.

"லாரிக்காரனுங்களுக்குக் கண்ணுமண்ணு தெரியுதா?... அவனுங்களை வெச்சி மேலே ஏத்தணும் லாரியை" என்கிறார் ஒரு மனுநீதிச் சோழன் பரம்பரை!

- அவர்களுக்கு ஆத்திரப்படுவதே ஒரு சுவாரஸ்யம்!

வீதியின் மறுகோடியில் அந்தப் போலீஸ்காரன் ஓடி வருகிறான். திருடனைத் துரத்திப் பிடிக்கும் திறனுள்ளவன்தான். பாசத்தின் வேகத்தைத் தொடர முடியாமல் பின்தங்கி விட்டான்.

இடுப்புப் பிள்ளையுடன் ஓடோ டி வந்து கடைசித் தெருவையும் தாண்டி விபத்து நடந்த தெருவுக்குள் நுழைந்தபோது கூட்டத்தின் நடுவே இருந்து ஒருத்தி, தரையில் விழுந்து புரண்ட கோலத்துடன் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, 'அட கடவுளே!.. உனக்குக் கண்ணில்லையா?' என்று கதறி அழுவதைக் கண்டதும் இந்தத் தாய் நின்றாள்.

கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிய இவள் சிரித்தாள். 'அது நம்ம ராசா இல்லேடி, நம்ம ராசா இல்லே' என்று கைக்குழந்தையை முகத்தோடு அணைத்துக்கொண்டு சிரித்தாள். ஹிருதயம் மட்டும் இன்னும் தேம்பித் தேம்பி விம்மிக் கொண்டிருந்தது. இப்பொழுதுதான் தாய்மை உணர்வின் வெறி அடங்கி, தன்னுணர்வு கொண்டாள். மார்புத் துணியை இழுத்துவிட்டுக் கொண்டாள். அருகில் வந்து நின்ற போலீஸ்காரனிடம், 'ஐயா, அது எம் பையன் இல்லே... வேற யாரோ ஐயா.. அது என் பையன் இல்லே...' என்று கண்களை மூடித் தெய்வத்தை நினைத்துக் கரம் கூப்பினாள்.

'சீ... இவ்வளவுதானா! தாய்ப் பாசம்ங்கிறது இவ்வளவு அல்பமா! ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே மொடங்கிப் போறதுதானா?' என்று முகம் சுளித்த போலீஸ்காரன் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்தான்.

கும்பலின் நடுவே வீழ்ந்து கதறிக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் போலீஸ்காரன் திடுக்கிட்டான்.

அங்கே அவன் மனைவி - மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் இந்தக் கோரத்தைப் பார்த்து விட்டாளோ?... அதோ, காய்கறிப் பை கீழே விழுந்து சிதறிக் கிடக்கிறதே!

'அடிப் பாவி!... உனக்கேன்டி தலையெழுத்து!' என்று முனகினாலும் போலீஸ்காரனால் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் குழந்தை மாதிரி விம்மி விம்மி அழுதான்.

'தங்கம்... இதெல்லாம் என்னாடி?' என்று அவளைத் தூக்கப் போனான். புருஷனைப் பார்த்ததும் அவள் குமுறிக் குமுறி அழுதாள்.

'ஐயோ! பாத்தீங்களா இந்த அநியாயத்தை? இதைக் கேக்க ஒரு போலீசு இல்லியா? ஒரு சட்டம் இல்லியா...? இருவது வருசமா நாம்ப எவ்வளவு தவமாத்தமிருந்து வரமா வரங் கேட்டும் குடுக்காத அந்தக் கண்ணவிஞ்ச தெய்வம் இப்படி அநியாயமா ஒரு வைரப் பொதையலே வாரி எறைச்சு இருக்கே!...' என்று கதறினாள்.

'தங்கம்!... அவுங்க அவுங்க விதிக்கு நாம்ப அழுதாப் போறுமா?... எந்திரி... பைத்தியம் மாதிரிப் புலம்பறியே! வீட்டுக்குப் போகலாம் வா...!' என்று மனைவியின் கையைப் பிடித்துத் தூக்கினான் போலீஸ்காரன். அவள் அவனைத் திமிறிக் கொண்டு விலகி நின்றாள். அழுத கண்கள் அவன் முகத்தை வெறிக்க, 'இது என் குழந்தை! ஆமா, இது என் குழந்தைதான்' என்று பிதற்றினாள்.

போலீஸ்காரனின் கண்கள், 'இறந்தது தன் குழந்தையல்ல' என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, அதோ வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில் வருகிறாளே, அந்தப் பரிதாபகரமான தாயை வெறித்தன.

ஐயோ, பாவம் அவள்!...

அடுத்து அங்கே நிகழப்போகும் ஒரு கொடிய சோகத்தைக் காண விரும்பாமல், தன் மனைவிக்கும் அதைக் காட்ட விரும்பாமல், அவளை வீட்டுக்கு அழைத்துப் போக அவன் கரத்தைப் பற்றித் தூக்கினான். அவள் அவனோடு புலம்பிப் புலம்பி அழுதவாறு தளர்ந்து நடந்தாள்.

கும்பல் இரண்டாகப் பிரிந்து இந்தப் போலீஸ்காரத் தம்பதிகளின் சோக நாடகத்தை வேடிக்கை பார்த்தவாறு அவர்களின் பின்னே வந்தது.

"பாவி! ஒரு குழந்தையைப் பெத்துக் கொஞ்சறத்துக்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன், செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா?" என்று திமிறிய அவளை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான் போலீஸ்காரன்.

அந்தத் தெருக்கோடியில் உள்ள தன் வீட்டருகே மனைவியை அழைத்து வரும்போது, தூரத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து அந்த 'டைம்பாம்' வெடித்தது! போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். "ஐயோ! என் ராசா!" என்று காலனியில் ஒலித்த அதே குரல் வீதியே அதிர வெடித்தெழுந்தபோது, தன் பிடியிலிருந்து திமிறியோட முயன்ற மனைவியை இரு கைகளிலும் ஏந்தித் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் போலீஸ்காரன்.

4

போலீஸ்காரனது ஏந்திய கரங்களில் மனைவியின் உடல் பாரம் மட்டுமா கனத்தது?

அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை - தாய்மையின் சோகம் - அதன் அவனால் தாங்க முடியவில்லை.

உள்ளே போனதும் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு 'ஓ'வென்று கதறியழுதனர். திடீரெனத் திரும்பிப் பார்த்த போலீஸ்காரன் வாசலிலும் சன்னல் புறத்திலிருந்தும் கும்பல் கூடி நிற்பதைப் பார்த்து எழுந்து போய்க் கதவைப் 'படீர் படீர்' என்று அறைந்து சாத்தினான்.

போலீஸ்காரன் வீட்டு முன்னே கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்துக்கே ஓடியது.

- ஆமாம்; கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்.

*******

(எழுதப்பட்ட காலம்: ஜனவரி 1962)
நன்றி: சுமைதாங்கி (சிறுகதைத் தொகுப்பு) - ஜெயகாந்தன்.

Aug 21, 2011

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எய்துவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. 3592715136_fc85b2e1d3 யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.

அவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும்,ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.

இன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.

அப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான். மாமன் அவனுக்கு ஆசானாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும் பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான். பாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்டதென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.

கிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.

கிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ' பாம்பு வாழ நீதமில்லை' என்று சொல்லி ஒதுங்கிப் போவான். பாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.

பாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.

தெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான். பழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.

காற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான். முதுமையால் பீடிக்கப்பட்ட காலத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரியவில்லை.

இன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திற்கு உள்ளாக்கியது.

தன்னுடைய அடிமைத்தளையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான். மகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.

சில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம்?. வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.

அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.

திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.

சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.

இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவர ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.

******

நன்றி அம்ருதா பதிப்பகம், புத்தகம்- வண்ண நிலவன் முத்துக்கள் பத்து.

http://yahooramji.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்