Dec 21, 2011

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.

தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

venkatesan1_300 Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom

 

அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்.

Dec 20, 2011

பிம்பம் – லா.ச.ராமாமிருதம்

மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.

‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’.  அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.  LAA-SA-RAA-17

“எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன். அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது’ இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing-லே புது டெக்னிக்கா?’

“இல்லேம்மா,  நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிலே வரவா நினைப்பேயில்லே.’’

“உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும்.’’

“அது ஸ்கூல். நான் படிச்சி ஸ்கூல்.”

“இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு. ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து.”

“ஓ quite possible.. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க, L.K.G.யிலிருந்து.”

“ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால் அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே.’’

“எனக்குக் கோபம வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போ இருக்காங்களோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!’

அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. “நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?’

“டீச்சர் சுமதி.”

“நான் தான் டீச்சர் சுமதி.”

அவன் திக்கெனப் பின்னடைந்தான். “நான் விளையாடல்லேம்மா.”

“ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வரஷம் ரிடையர்மெண்ட்” அதன் Problems அதுக்கு மேலே இருக்கு. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?”

அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம். இருக்கக்கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். அவளேதான். அந்த அடையாளம் நிச்சயமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான்.

“என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா!’’

“இந்த சர்வீஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள், கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது?’’

“ நான் ஸ்பெஷல் துஷ்டை.”

“சர்க்கரை போட்டிருக்குமா. இல்லே ஸ்பெஷல் மசாலா சேர்த்திருக்குமா?”

“அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்” பையன் படு உற்சாகமாகிவிட்டான்.

“பக்கத்ததுப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன். பின் பெஞ்சைக்கூட விடமாட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்ககுட்டியாட்டம் நக்கறது. கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்.”

“எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?”

“இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார். அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போ உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு,  நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க.”

“எல்லாம் வானரங்கள்னா, வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L.K.G.லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு  Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. அடுத்த வருஷத்திலிருந்து வேறு பிழைப்பைத் தேடியாகணும். சே! என்ன பிழைப்போ?”

அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போகுமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை.

அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி “என் தாத்தா இது வேறே சொன்னார்: “இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான்.”

மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியில் அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குத்தான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன்.

பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி, “சிஸ்டர் என்ன சொல்றீங்க?”

நீங்கள்: “இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம். பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே. I wish him all luck in his next school      அங்கே போய் சரியாக மாறலாம். இஙகே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. We have given him all chances” பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கி கையை விரித்தார்.

“நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும். And we have to live you know. I am sorry, next year வாங்க. பார்க்கலாம்.’’

தாத்தா சிரித்தார். “Next Year நான் இருக்கேனோ இல்லேயோ?”

பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுந்தார். “நாம டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு. டயம் வீணாவுது.”

நீங்களும் எழுந்தீங்க. “வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்.”

“ஆகவே நீங்க ‘Out’ முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு.”

“ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தேங்காய் மாதிரி உருண்டையாய் இருக்கும். Special feature”

“Correct”      பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். “பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் – குறைமாஸம். அதனால் Hyporactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு. ஆக்ஸிடென்ட். அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே.”

“இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் “நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே.”

“ம்ம்………”

அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று.

“ஆமாம் கண்ணன். உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?”

“தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர், சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்.’’

அவள் முகம் லேசாக வெளிறிற்று. “அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!”

“எல்லாம் பெரியவா ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க.”

“என்னை என்னப்பா பண்ணச் சொல்றே. அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?”

“வஞ்சம் தீர்ப்பதா? அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் – அவள் வழக்கை மன்றாட, அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக் கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடி விட்டது.

டம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை. வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் – அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டான்.

‘Ok?” அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே”?

மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவான். பையன்கள் சத்தம் போடாதிருக்க அது நடக்கிற காரியமா? “தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு.”  ஸீட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உறைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்…. ஏதோ பெருமையாயிருக்கும்.

அவள் சொல்லும் பாடங்களைக் கேட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி…

அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ. அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்?    Why not இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மாவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சுப்போச்சு?

குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கை தான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன்மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை.

ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். ‘திக்’கென ஆகிவிட்டது.

“அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்”

பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள்.

“அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே? அம்மா இல்லே.”

அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அது இருக்குமோ?   Damn it, எனக்குப் பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா?

மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை. அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு…

அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒருநாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது. “இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப் போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைகள் புழங்குகிற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்க வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க.”

அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும்.

அவளுக்கு ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு.

இப்போது அவர் இருக்கிறாரோ?

பாரதியைக் காட்டி “இவள் யார்?”

‘இவள் என் பெண்?’ சுமதி டீச்சர் மாதிரி இவள் இல்லை: சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை. தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்.’

“அது சரி. உன் சுபிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே. சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?”

“டீச்சர். நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்கமுடியல்லே. I was in love with you.”

“So, you have come to declare your love?” கைகொட்டிச் சிரித்தாள்.

“நீங்கள் சிரிக்கிற மாதிரி இல்லை. இருவத்தி மூன்று வருஷங்கள் டீச்சர்.”

சட்டெனத் தெளிந்தாள். “That happens sometimes; that is called puppylove” – ஒரு  disease,  வந்து இருந்துவிட்டுப் போயிரும்.

“அது மாதிரி டீச்சருக்கு  Student மேல் நேர்வதில்லையா?” அவன் பரிதாபமாயிருந்தான்.

“Oh. Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்குத் தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!”

“நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை.’

“புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப்பிரேமி ஆகிவிடுகிறாள். ஹே ராதா கிருஷ்ணா, பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே ஒழிய அப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். பையன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர். எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறுவதில்லை.”

“கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர்விட்டு, நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக்கொண்டு விடுகிறோமே!”

அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு ‘சுறீல்.’

ன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக – பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானோ இருவரும் மோதிக் கொண்டனர். அவள் மார்பின் விம்மலில் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது.

அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு,

“என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?’ குரல் உயரக்கூட இல்லை. Soft and melodies. அவனுக்குக் கேட்டதோ இல்லையோ? மூர்ச்சையாகிவிட்டான்.

ஜன்மம், ஜீவராசி

யாவதுக்கும் பொதுவாய்

ஆண், பெண் எனும் அடித்தளம்

தான் உண்மைநிலை.

தன் முகம், இனம்

இழந்த ஆதிவேட்கை

அவன் பச்சைப் பாலகன்

அவள் முதிர்ந்த மாது

பகலிலிருந்து இரவா?

இரவிலிருந்து..

எது முன்? எது பின்?

விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி

எதைத்தான் யார் அறிவார்.

ஆனால்

Ecstasy

அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று

பாவம் அதையும் அறியான்.

திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான்.

அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள்.

Yes, that is as it should be.

We Forgot because we must.

Such is the cavalcade of life.

முதலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் “சரி. உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?”

“என்ன உளறல்?”

“இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சுப் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா.  அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழுநீர் பானையில் கைவிடாமல் இருந்தால் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?’

பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, “அவள் தடுத்தாள்” “நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். இவளுக்கு அப்பா இல்லை’”

“அப்படின்னா அன்னிக்கு அவரைப் பார்த்தேனே” குழம்பினான்.

“இவளுக்கு அப்பா இல்லை. நான் ஏமாந்து போனேன் கண்ணா. இவள்தான் அவர் தந்த பரிசு.”

அவன் ஆச்சர்யம்கூடக் காட்டவில்லை.

“ So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா?  A simple Affire”

“கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?”

“அட. தெரிந்தால்தான் தெரியட்டுமே.”

அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள்.

அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ? வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள். பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக் கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள். இனிமேல் வரமாட்டாள்.

அழியவும் மாட்டாள்.

*******

நன்றி: http://www.natpu.in

Dec 17, 2011

சாரல் விருது 2012

 
ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.
 
 

VANNANILAVAN-7

vannadhasa

வண்ணநிலவன்

வண்ணதாசன்

  saral-award-invi-1asaral-award-invi-4b

Dec 11, 2011

"என் கணவர்" - செல்லம்மாள் பாரதி

 

 

மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

bharathi1a

திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

images (1)

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும்

அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை  எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.

பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

 

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்வாழிய

பாரத மணித்திரு நாடு

நன்றி: பாரதியார் சரித்திரம்

Dec 8, 2011

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்

பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்

ஜெயமோகன்

விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' pooman என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்புவாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்தகட்ட எழுத்துக்கள்,----யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம் ---பிறக்க முடிந்தது.

தமிழ் இயல்புவாதமும் பூமணியும்

தமிழின் முதல் இயல்புவாதப் படைப்பு எது ? இதற்கு பதில் பலவகைப்படலாம் என்றாலும் முக்கியமான ,இலக்கண சுத்தமான ,முன்னோடியான, இயல்புவாதப் படைப்பு ஆர் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் தான் என்பது வெளிப்படை. இயல்புவாதத்தின் இலக்கணம் என்ன ? துல்லியமான தகவல்கள் ,விமரிசனப்பாங்கற்ற சித்தரிப்பு நடை , முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட ] கதையாடல் என்று சிலவற்றைகூறலாம்.மேற்கே இயல்புவாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது.அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.

எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை .அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பட்டமானவையேயாகும்.கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும் ,அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள் [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே ,உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே] ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை ,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது .அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைத்ததும் ,விமரிசன பூர்வமாக நிறுவியதும் க நா சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.

நாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' , 'உறவுகள் ' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு ' அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க நா சு வைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன்வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே.பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை.ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும் ' இதற்கு முன்னோடியாக இருந்தது.[கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும் ,செயற்கையாக உண்டு பண்ணப்பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல் .] செ.கணேச லிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதி ,சிவத்தம்பியும் இவ்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர் .இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக்விஜயம் அமைந்தது.இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த ] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.

சோஷலிச யதார்த்தவாதம் என்பது [ ரகுநாதனைப்போலவே எனக்கும் ] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி . ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க நா சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இீருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்தவாதம் ஒரு வகை திரிபுநிலையாக , கலையில் அரசியலின் அத்துமீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

நாகம்மாள் ,தலைமுறைகள் ,பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [ வடிவவாத ] விமரிசகர்களால் போற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத்தன்மை உருவாவதற்கோ , எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப்பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள் .முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி ,எல்லார்வி ,சாண்டிலயன்,பி வி ஆர் ரக ' அதி சுவாரசியக் ' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன்வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.

க நா சு வுக்கும் ,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது.குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும்போது. ' பிறகு ' விற்கு பிறகு நம் இயல்புவாத மரபில் பல முகியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்புவாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி .கந்தர்வன் போன்றுசில விதிவிலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன்[ சிதைவுகள் , பாய்மரக்கப்பல் ] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர்,சுடுமணல் ,சாயத்திரை ] சி ஆர் ரவீந்திரன்[ ஈரம் கசிந்த நிலம் ] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள் ] ஆகியவர்களையும் ; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ ஏறு வெயில் ,நிழல் முற்றம், கூளமாதாரி ] இமையம் [ கோவேறு கழுதைகள் ,ஆறுமுகம்] சோ .தருமன் [தூர்வை ]ஸ்ரீதர கணேசன்[ உப்புவயல் , வாங்கல் ,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம் .இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனரென்பது விமரிசன ரெரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது..அவ்வகையில் பார்த்தால் ஆர் . சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டுவிட்டார்கள் என்பதைக் காணாலாம்.இன்று வெ சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.

பூமணியின் கலைப்பார்வை

இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாகவேண்டிய படைப்பாளி .நீல பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன்வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது .பூமணி தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப்பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர் ] ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன்வைக்கவில்லை .கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை . இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான் .கன்னட மொழியிலும் மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகுதான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல்க் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார் ,தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர் ] மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும் , அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாகமிருக்காது என்று உணர்ந்தவர்.தலமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வா தியிடம் ,அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும்கூட , தந்துவிட முன்வராதவர்.

அவரது படைப்புகள் எந்த புறக்குரலையும் பிரதிபலிக்கும் வேலையை செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும்படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை .அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன்வரவுமில்லை.முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன்வைத்தார் .அதற்கு மேல் விழும் எந்த டையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ' 'அழ கிய லுக்குப் பதிலாக அரசியலை ' ' முன்வைக்கும் குரல்கள் எழுந்த காலகட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ' அரசியல் ' இலக்கியவெற்றி பெறவில்லை ,பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீபகால வரலாறு

பூமணியின் படைப்புகள்

பூமணியின் படைப்புகளை முன்வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை.இக்கட்டுரை அனேகமாக வெளிநாட்டு வாசகர்களை முன்கண்டு எழுதப்படுவது.பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்புவாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல்கட்டமென்றால் அவரது தனித்தன்மைகள் மூலம் அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து அவர் விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம்கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்தகட்டமாகும்.எந்த முதன்மைப்படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போகமாட்டான் .காரணம் அழகியல் இயக்கங்கள் காலகட்டம் சார்ந்தவை ,படைப்பு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.

' பிறகு ' பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.அதேபோல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ' நைவேத்யம் ' என்பதிலும் . அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது . படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி ,சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ' நம்பவைத்தலுக்கும் ' படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது .கரிசல் காட்டுக் கிராமத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப்படிமங்களாகும்போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான் . தனக்கு பழகிப்போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும் , கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப்பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும் ,புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது .அத்துடன் அச்சாதி மற்றும் நிலப்பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.

ஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம் . பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி ,நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள் . தாங்கள் எழுதுவது அந்த சமூக , நிலப் பகுதியின் ' அப்பட்டமான ' வாழ்க்கையை என்று நம்பி சொல்லவும் செய்தார்கள்.அந்த நம்பிக்கை இயல்புவாத எழுத்தில் எப்போதும் காணப்படுவது .பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.அவர் மன அளவில் இயல்புவாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல .தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும்போதேகூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார் .

'பிறகு ' நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம் .தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப்பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம் ,தருமனின் மாடத்தி ஈறாக] ' பிறகு ' நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி [ இவ்விரு நாவல்களை புரிந்துகொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ' அருந்ததியர் வாழும் வரலாறு ' என்ற ஆய்வு நூல் ] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப்படியாக கருதப்படும் ஒரு குலத்தில் , சகல அழுக்குகளுக்கும் இருட்டுகளுக்கும் இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப்பகடையில் குடிகொள்ளும் ஆழமான மானுட நேயமும் ,வாழ்க்கை குறித்த புரிதலும் , சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒரு சராசரித்தமிழ் மனம் அழகிரியை 'சான்றோர் ' என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டுகொள்ளலாம் ,அது வேறுவிஷயம் ] ஆனால் அழகிரிப்பகடை அச்சமூகமனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ' அச்சு இலட்சியவாத ' கதாபாத்திரமல்ல .இங்குதான் பூமணியின் அப்பட்டமான இயல்புவாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிபகடை ' எது மேலான வாழ்க்கையின் இலக்கணம் ' என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பிவிடுகிறார் .

' பிறகு ' ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட காலகட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள் ] இந்நாவலில் கூறப்படுகின்றன.அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார் .பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக்கூடிய நாவலான சினுவா ஆச்சிபி யின் ' சிதைவுகள் ' [Things fall apart ] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே .காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித்தெரிகிறது .குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது.மாறாக 'பிறகு ' காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது.மிகவும் சகஜமாக ,மிகவும் நுட்பமாக ,அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட!இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக , சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.

'பிறகு 'வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ' பிறகு ' தவிர்த்துவிடும் இடம் எது ? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும் ,சாராம்சப் படுத்தும் குரலும் தவிர்க்கப் பட்டுள்ளன .அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ' பிறகு ' இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை --இயல்புவாதமேயானாலும் !ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணிீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம் .மனித வாழ்க்கையும் ,வரலாறும் , மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணிீயி ன் இீயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும் , சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.

'வெக்கை ' தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது . புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு.எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல் . அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும்.சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை.இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது . இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான்.இது அடையாளம் இல்லாத 'ஒரு மனிதனின் ' கதை அல்ல .மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடயாளம் காரணமாக இது மெதுவாக வீரகதைகளின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.

பூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம்.ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம்.ரீதியும் ராஜேந்திர சோழனின் ' எட்டுகதைகள் ' என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும் ,விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.

பூமணியின் எல்லைகள்

தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன் ,அ த்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவி யின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம் .தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன.[விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது.காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது] .

தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள் ' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை.பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை--நைவேத்யம் கூட.அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான்.கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வரண்ட ' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது.ஆழ்நிலைகளை இது ஐயப்படுகிறது .புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது.உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க அருந்ததியர் வழும் வரலாறு] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார்.அவை வெறும் நிகழ்ச்சிகளாக ,தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக ,அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.

பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும் , குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர் .அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது .இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த , மீமெய்வாத [fantacy &surrealism ] படைப்பாளிகள் முயன்றனர்.ஒரு உதாரணம் கூறலாம் .பூமணியின் 'வெக்கை ' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ' கருப்பன் போன பாதை ' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும் ,அரிவளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி , தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது ,அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார் .இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.

பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை ,கோபத்தை,ஏமாற்றத்தை ,ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது,அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர் ' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை ,ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ' முற்போக்கு ' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ' அழுவாச்சி ' யால் நிரம்பியது அல்ல .அது ஒரு களியாட்டவெளியும் கூட.நோயும் வறுமையும் அதை தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை.இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை].அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.

பூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது ,அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார்.புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.

***

நன்றி: திண்ணை

Dec 6, 2011

பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது

 

விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருதுFR: Poomani

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)vishnupuram-11-Invitaion-design-copy-1024x767

பூமணியின் சில சிறுகதைகள்

Dec 5, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு thija4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.

இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,

சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.

சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.

என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.

இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.

இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.

என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.

நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

******

தொகுத்தவர் - மகரம். (1969)

நன்றி: சொல்வனம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்