Feb 28, 2011

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம்.

ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள். முதல் மூன்றும் பெண்கள். அப்புறம் நான்கு வயதில் ஒரு பிள்ளை. கடைசியாக ஒரு பெண். அது பிறந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருந்தன.

ஸ்ரீராம் ஒரு ஆங்கில தினசரிக்குச் சந்தாதாரர். பத்திரிகை தினமும் காலை ஆறு மணிக்குashki அவன் வீட்டில் விநியோகிக்கப்பட்டுவிடும். வழக்கமாகப் பத்திரிகை கொண்டு வருபவனுக்கு அன்று கோர்ட்டுக்குப் போக வேண்டியிருந்தது. ஆதலால் அவன் தன் மகனிடம் பத்திரிகைகளைக் கொடுத்து விநியோகித்து வரச் சொல்லியிருந்தான்.

ராமஸ்வாமி ஐயர் காலையில் எழுந்தபோது அவர் வீட்டு ஜன்னல் வழியாகப் பத்திரிகை ஒன்று நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அது யாருடையது என்பது அவருக்குத் தெரியாது. முகம் கழுவி, காப்பியும் குடித்த பிறகு அந்தப் பத்திரிகையை ஒரு வரி விடாமல் படிக்க ஆரம்பித்தார்.

தெருவில் ஒருவன் புதுப்புளி விற்றுக்கொண்டு போனான். விலை மிகவும் மலிவு. ராம்ஸ்வாமி ஐயர் வெளியே வந்து புளி விற்பவனை ஒரு மணங்கு நிறுத்துப் போடச் சொன்னார். புளி விற்பவன் தராசில் ஒரு தடவைக்கு இரண்டு வீசையாக நிறுத்தான். புளி உருண்டைகளை உள்ளே கொண்டுபோய்ப் போட்டுவர ஏதாவது தேவைப்பட்டது. ராமஸ்வாமி ஐயர் கையில் பத்திரிகை இருந்தது. அது யாருடையது என்று அவருக்குத் தெரியாது. அவர் மூன்றாவது தடவையாகப் புளி உருண்டையை உள்ளே கொண்டு செல்லும்போது ஸ்ரீராம் வெளியே வந்து யாரிடமோ பத்திரிகைக்காரன் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். ராமஸ்வாமி ஐயர் உள்ளே விரைந்து சென்று புளியை உதறினார். அவரால் முடிந்தவரை அந்தத் தினசரியைச் சுத்தம் செய்து,  வெளியே வந்து அதுதான் அவன் பத்திரிகையாக இருக்கக் கூடுமோ என்று ஸ்ரீராமிடம் கேட்டார். ஸ்ரீராம் பத்திரிகையை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு பிரித்துப் பார்த்தான். முன் பக்கத்தில் ஒரு சினிமாப் படத்தின் முழுப் பக்க விளம்பரம் இருந்தது. அந்த விளம்பரத்தில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த அழகி என்று புகழ் பெற்ற நடிகையின் முகம் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது. ஆறு வீசைப் புளி அந்த முகத்தில் பல இடங்களில் கறை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீராமுக்கு அந்த நடிகை மீது அளவிடமுடியாத ஆசை. எந்த எண்ணத்தில் வேறொருவருடைய பத்திரிகையைத் தூக்கிச் சென்றார் என்று அவன் ராமஸ்வாமி ஐயரைக் கேட்டான். ராமஸ்வாமி ஐயர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,  பத்திரிகை அவர் ஜன்னலில் சொருகப்பட்டிருந்தது என்றும் சொன்னார். ஸ்ரீராம் முணுமுணுத்துக் கொண்டே பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்தான். அந்த அழகியின் முகம் அலங்கோலமாக இருந்தது. காது கேட்கும்படியாக ஸ்ரீராம், “முட்டாள்” என்று முணுமுணுத்தான். ராமஸ்வாமி ஐயர் “என்ன” என்று கேட்டார். ஸ்ரீராம் “உமக்கு ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டு மறுபடியும் “முட்டாள்” என்றான். கால்மணி நேரத்திற்குள் ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமை அவன் முட்டாள், மடையன், அயோக்கியன், போக்கிரி என்று தெரிவித்தார். ஸ்ரீராமும் ராமஸ்வாமி ஐயரைப் பற்றி ஏறகுறைய அதே அபிப்ராயத்தைத் தான் கொண்டிருப்பதாக அறிவித்தான். அன்று ராமஸ்வாமி ஐயர் காரியாலயத்திற்குப் போகும்போது ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் ராமஸ்வாமி ஐயர் வேப்பிலை கொண்டு செல்வதை ஸ்ரீராம் கவனிக்க நேர்ந்தது. ராமஸ்வாமி ஐயரின் பிள்ளைக்கு அம்மை போட்டிருப்பதாக அவன் அம்மா தெரிவித்தாள். ஸ்ரீராம் அன்று எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சு, புத்தகசாலை, சினிமா இவையெல்லாவற்றிற்கும் போக வேண்டியிருந்தது. அவன் வீட்டை விட்டுக் கிளம்பியவுடன் முதல் காரியமாக சுகாதார இலாகாவுக்கு ஒரு கடிதத்தைத் தபால் பெட்டியில் போட்டான். அந்தக் கடிதத்தில் அவன் கையெழுத்திடவில்லை.

பகல் முழுவதும் நல்ல அலைச்சல். ஸ்ரீராம் மாலை வீடு திரும்பும்போது முழுக்க இருட்டவில்லை. அப்போது அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. அது என்னது என்று அவனுக்குப் புலப்படவில்லை. மனம் நிம்மதியற்று இருந்தது.

பிளாஸ்கில் அவனுக்காக வைத்திருந்த காப்பியை மெதுவாகச் சீப்பிக் குடித்தான். அப்போது அவன் அம்மா சொன்னாள். யாரோ அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அன்று பகலில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சமயத்தில் அவர்கள் ராமஸ்வாமி ஐயரின் மகனை ஒரு மோட்டாரில் காலரா ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்று விட்டார்கள். ராமஸ்வாமி ஐயரின் மனைவி பெரிதாக அழுது வந்தவர்களையெல்லாம் கெஞ்சினாள். ஆனால் அவர்கள் அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை. அதுதான் சட்டம் என்று சொன்னார்கள். ராமஸ்வாமி ஐயரின் மனைவி பைத்தியம் பிடித்தவள் போலக் கதறிக் கொண்டே தெருவில் ஓடினாள்....

ஸ்ரீராமுவுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. அவன் இப்படியெல்லாம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

ராமஸ்வாமி ஐயர் ஆபிஸிலிருந்து வீடு திரும்பினார். வந்தவர் ஆபிஸ் உடைகளைக் கூட கழட்டாமல் வெளியே ஓடினார். அவர் மின்சார ரயில் நிலையம் இருக்கும் திசை நோக்கி ஓடுவதை ஸ்ரீராம் கவனித்தான். தொத்து வியாதிகளுக்கான ஆஸ்பத்திரி ஊருக்கு வெளியே பத்து மைல் தூரத்தில் இருந்தது.

ஸ்ரீராமால் நிலைகொண்டு இருக்க முடியவில்லை. சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. வீட்டு வெளிச்சுவர் அருகே நின்ரு கொண்டு தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்துக்கும் மேலாகிவிட்டது. ஊரோசை அடங்கத் தொடங்கிவிட்டது.  ரயில் நிலையம் அவன் வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் இருந்தது. அங்கு வண்டிகள் வந்து போகும் ஊங்கார சப்தம், லெவல் கிராஸிங்கில் அடிக்கும் மணியின் சப்தம், சக்கரங்கள் இருப்புப் பாதையில் உருளும் சப்தம், இவை எல்லாவற்றையும் ஸ்ரீராமால் மிகத் தெளிவாகக் கேட்க முடிந்தது. தன்னைச் சுற்றி ஊர் அடங்கி ஒடுங்கிப் போவதை அவன் அதற்கு முன்னால் உணர்ந்து கவனித்தது கிடையாது. வைத்தியக் கல்லூரியில் படிக்கும் அந்தக் கோடி வீட்டுப் பையனும் விளக்கை அணைத்து விட்டான். தெருவின் இரண்டு வரிசை வீடுகளும் கருத்த நிழல்களாகக் காணப்பட்டன. ஸ்ரீராமின் கண்கள் கனத்தன. அவன் படுக்கையில் சாய்ந்தான். அவனால் தூங்க முடியவில்லை. அவன் மறுபடியும் தெருவுக்கு வந்தான். அவன் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தான். அந்த வேளையில் எல்லாம் இருட்டாக இருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னந்தனியாகத் தெருவில் காத்திருந்தான். கடைசியில் எது ஒன்றை நினைத்துப் பயந்து கொண்டிருந்தானோ, எது ஒன்றைத் தவிர்ப்பதற்கு அவனுக்கு உலகத்தில் உள்ளதையெல்லாம் கொடுத்துவிடுவானோ அது தெருமுனையில் தோன்றிற்று. அது ராமஸ்வாமி ஐயர். அவர் அழுது அழுது தொண்டை கம்மிப் போயிருந்த தன் மனைவியைத் தாங்கிக்கொண்டு அழைத்து வந்தார். இரண்டு வருடங்களாகப் பக்கத்து வீட்டிலேயே இருந்தும்கூட ஸ்ரீராம் ராமஸ்வாமி ஐயரின் மனைவியை எண்ணிப் பத்துத் தடவைகூடப் பார்த்தது கிடையாது. அவள் அப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். ஊமையோ ஊனமோ என்ற சந்தேகம்கூட ஸ்ரீராமுவுக்குத் தோன்றியது உண்டு. அப்படிப் பட்டவள் அந்த அர்த்தராத்திரியில் தன் அடக்கத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு அழுதுகொண்டு வருகிறாள். பிற்பகலில் யார் யார் காலிலெல்லாம் விழுந்திருக்கிறாள். பைத்தியம் பிடித்தவள் போலக் கதறியிருக்கிறாள்.

ராமஸ்வாமி ஐயரும் அவர் மனைவியும் வீட்டினுள் சென்றார்கள். அத்தனை நேரம் ஒன்றும் புரியாமல் தூங்கிப் போயிருந்த குழந்தைகள் அனைத்தும் விழித்துக் கொண்டு ஒரு சேர அழ ஆரம்பித்தன. தாயார் இன்னமும் புலம்பினாள். அது அவள் மகன். அவளுடைய ஒரே மகன். நான்கு வயதுதான் ஆகிறது. ஒரு மணி நேரம்கூட அது அவளைப் பிரிந்து இருந்ததில்லை. இப்போது அந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது எங்கேயோ அத்துவானத்திற்குத் தூக்கிப் போய்விட்டார்கள். வியாதியுடன் படுத்திருக்கும் குழந்தைக்குப் பெற்ற தாயாரால் சிசுருஷை செய்ய முடியாது. அது தாகம் தாகம் என்று கதறும்போது ஒரு வாய்ப்பால் தர முடியாது. குழந்தையை எங்கேயோ பழக்கமில்லாத பயங்கரமான இடத்தில் ஆயிரம் குஷ்டரோகிகள், காலரா வியாதிக்காரகள் நடுவில் போட்டு விடுவார்கள். குழந்தைக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூற ஒருவரும் இருக்க மாட்டார்கள். குழந்தை கிலி பிடித்து நடுங்கும். அதைக் கொல்லைப்புறம் அழைத்துப் போக யாரும் இருக்க மாட்டார்கள். யாரோ மீசை வைத்திருக்கும் முரடன் தான் இருப்பான். அவன் குழந்தையை அதட்டி மிரட்டுவான். ஆண்டவனே, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இந்த மாதிரி ஆக வேண்டும்? ஏன் இப்படி இரக்கமில்லாமல் என் குழந்தையை வாட்டுகிறாய்?

ஸ்ரீராம் இரவு முழுவதும் தூங்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்துக் குழந்தை இறந்துவிட்டது. அம்மை போட்டிருந்தபடியால் உடலை வீட்டுக்குக் கொண்டு வராமல் நேரே சுடுகாட்டிற்குக் கொண்டு போய்விட்டார்கள்.

ஒரு மாதம் கழித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு ஸ்ரீராம் ராமஸ்வாமி ஐயர் வீட்டினுள் அடி எடுத்து வைத்தான். ராமஸ்வாமி ஐயர் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ஸ்ரீராம் மெதுவாக, “ராஜூ பற்றி உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்றான். ராஜூ என்பது ராமஸ்வாமி ஐயரின் மகனின் பெயர்.

ராமஸ்வாமி ஐயர் தலையைத் தூக்கி, “என்ன?” என்றார்.

“அவனுக்கு அம்மை போட்டிருந்தது பற்றித் தகவல் கொடுத்தது யார் தெரியுமா?”

“யாராயிருந்தால் என்ன?”

”அது நான்தான்”

ராமஸ்வாமி ஐயர் அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். பிறகு “காமு!” என்று அழைத்தார்.

அவர் மனைவி சமையலறையிலிருந்து வந்தாள். ஒரு மாதத்தில் அவள் மிகவும் மாறிப் போயிருந்தாள்.

ராமஸ்வாமி ஐயர் அவளைச் சுட்டிக் காட்டி, “அவளிடம் சொல்லு,” என்றார்.

ஸ்ரீராமுவுக்கு அந்தக் கணமே அவள் காலில் விழுந்து கதறி அழ வேண்டும் போலிருந்தது. அவன் நெஞ்சிலுள்ளதை விழுங்கிக் கொண்டு, “ராஜூவைப் பற்றித் தகவல் அனுப்பியவன் நான் தான்,” என்றான்.

அவளிடமிருந்து அவன் மிகக் கொடூரமான சாபங்களுக்காகக் காத்திருந்து, உள்ளூரப் பிரார்த்திக்கவும் செய்தான். ஆனால் அவள் தன்னுடைய இயல்பான அடக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டவளாக இருந்தாள்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

(1960)

******

Feb 26, 2011

புகைச்சல்கள் - ஆதவன்

கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம்.  அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்ற aathavan முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில் விளைபவை. உடைமையுணர்வு அல்லது ஆதிக்க உணர்வை எருவாகக் கொண்டு செழிப்பவை, நமக்குச் சொந்தமான வீட்டில் இடித்துத் திருத்தி மாற்றங்களும் சௌகரியங்களும் செய்து கொள்வது போல, நமக்குச் சொந்தமென நாம் நினைக்கும் மனிதரையும் இடித்துச் செப்பனிட முயற்சி செய்தல், சுருக்கங்களை நீவி நேராக்கி விட முயலுதல்....

அந்த முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே ஏற்பட்ட சில சில்லறைப் பூசல்கள், உரசல்கள் உடல் சார்புள்ளவை, பால் பேதத்தின் சூட்சுமத்தையும், அந்தச் சூட்சுமத்தில் பொதிந்திருந்த இன்பத்தையும் உணரும் துடிப்பு. முதல் தடவையின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கூடவே ஏமாற்றங்கள், எரிச்சல்கள், லட்சிய ஆண்மை, லட்சிய பெண்மை என்ற ரூபமற்ற கனவுச்சிதறல்களின் குவிமையம் கடைசியில் புராதனத்திலும் புராதனமான ஒரு பௌதிக நியதிதானா என்ற வியப்பு அதிர்ச்சி. இதுவும் பயிலவேண்டிய ஒரு வித்தை, என்ற உணர்வு ஏற்படுத்திய உற்சாகம். கூடவே ஆதாரமான இளமையின் புனிதமான படிமங்களின் பின்னணியில் ஒரு சோர்வு. உடல் ரீதியாக அவர்களிடையே சகஜ பாவமும் சீரான லய உறவும் ஸ்தாபிதமான பிறகு, இவ்வாறு தத்தம் உடல்கள் ஆள்வதிலும் ஆளப்படுவதிலும் அவர்கள் கர்வம் கொண்டவர்களாகி, இவனுடைய ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவளும் அவளது ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவனும் நினைக்க ஆரம்பித்தார்கள். பழக்கங்கள், பாணிகள் உள்பட எல்லாமே சொந்தமென்று. ஆறுமாதச் சொந்தம்; ஆறுமாத உரிமை.

இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.

முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன் பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.

நிகழ்ந்து கொண்டிருபது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல பாணங்கள் - என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். தன் அந்தரங்க உலகின் எல்லைக் கற்களைச் சோதித்து, பாராவைப் பலப்படுத்தினான். அவனுடைய ராஜ்யத்தில் அவள் பிரஜா உரிமை பெற்றவளாக இருக்கலாம். ஆனால், ஆட்சி அவனுடையதுதான் என உறுதியாகவும் அவளுக்கு உறைக்கும் படியும் பிரகடனப்படுத்தலானான். இது ஒரு விதத்தில் அவனுக்குத் தோல்விதான். இத்தகைய சுய பிரகடனங்களை அவன் விரும்பியவனேயல்ல, தான் அரசன் அல்லது தான் அடிமை என்று. அவள் அடிமை என்ற சட்டையை அவனுக்கு அணிவிக்க முயன்றதால் அம்முயற்சியை எதிர்க்கும் தீவிரத்திலும் பரபரப்பிலும் அவன் அரசன் என்ற சட்டை அணிய நேர்ந்தது. இதனால் அவனுடைய சகஜ நிலை - பொதுவாக அவன் அப்பியசிக்க விரும்பிய தோரணைகள் அற்ற எளிய தன்மை - பங்கப்பட்டது. ராஜா சட்டையில் தான் ஒரு சோளக்கொல்லை பொம்மையாகத் தோன்றுவதாக, தன் மீதே சிரிப்பு வருகிறது. அதே சமயத்தில் அந்தச் சட்டையைக் கழற்றினால்தான் பாதுகாப்பற்றவனாகி, தன் ராஜ்யம் சூறையாடப்பட்டு விடுமென்ற பயம் அவனைச் சட்டையைக் கழற்றவிடாமல் தடுக்கிறது.

சங்கடமான நிலை; அவனுடைய உலகில் இதுகாறும் நிலவி வந்த அமைதி, அறியாமை விளைவித்த அமைதிதானா, கடைசியில்? வெகுளித்தனமான, பக்குவம் பெறாத அமைதி. அந்த அமைதியைக் கடந்து அவனுடைய பலவீனங்களென்னும் வெண்ணெயைத் திரட்டி வழித்து ருசிப்பதுதான் அவள் நோக்கமென்றால் அதில் அவள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டாள். அவனுடைய பதற்றமான வெளிப்பாடுகளின் போது அவள் முகத்தில் ஒரு கணத்துக்குப் பளிச்சிட்டு மறையும் புன்னகை - ஆம் அது ஒரு வெற்றிப்புன்னகை!

’என் பலவீனங்களே உனக்கு ஒரு வெற்றி மமதையை அளிக்கின்றன’ என்று அந்தப் புன்னகையைப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவன் சொன்னான். ‘எனவே ஒரு விதத்தில் இந்தப் பலவீனங்களை நீ விரும்புகிறாய் என்று கூடச் சொல்வேன்... இப்போது நீ சுட்டிக் காட்டுகிற பலவீனங்களை நான் களைந்தேனானால் ஏமாற்றந்தான் உண்டாகும். அவசரமாக என்னிடம் வேறு பலவீனங்களைத் தேடிக் கண்டுபிடித்து உன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முயலுவாய்.’

‘அதாவது நான் வேண்டுமென்றே உங்களிடம் குறைகளை கண்டுபிடிக்கறவள், வாக்குவாதத்துக்காக சால்ஜாப்புகள் தேடி அலைகிறவள் அப்படித்தானே?’

‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்... வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறாய், பாராட்டமாட்டேன்னென்கிறாய்?’

‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை... நான் ஒன்று கேட்கட்டுமா?’

‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’

‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’

‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’

‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் - வேறென்ன?’

‘அதுதான் சொன்னேனே இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’

‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு. ‘ஓர் ஆண் என்ற முறையில் சிகரெட் பிடிப்பது உங்கள் பிரிவிலேஜ், குடிக்கிறீர்கள்... நான், என் பெற்றோர் எல்லோரும் இதை நவீன வாழ்க்கையின் ஒரு சாதாரண அம்சமாக, சுமுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஆனால் நான் சிகரெட் குடித்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டால் கூட பெற்றோர், சமூகத்தினர் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம், அது ஒரு சின்ன விஷயமாக இருக்காது - உண்டா, இல்லையா?’

‘ஸோ உனக்கு அனுமதிக்கப்படாத ஒன்று எனக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் உன் ஆட்சேபணையா?’

‘நேர்மையைப் பற்றிச் சொன்னீர்கள், உங்கள் மனைவி செய்தால் உங்களை அதிருப்தி கொள்ளச் செய்யும் ஒன்றை நீங்களும் செய்யாமலிருப்பதுதான் நேர்மை என்று சொல்ல வந்தேன்...’

‘நான்தான் நீயும் குடி, என்று சொல்கிறேனே....’

‘வேண்டாம்’ என்று அவள் பிணங்குவது போலப் பாசாங்கு செய்து, சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றாள். ‘வேண்டாம்.. இரண்டு பேரும் ஒன்றையே குடித்தால், போராடிக்கும்... நான் வேண்டுமானால் விஸ்கி குடிக்கிறேன்.’

‘ஷ்யூர்!’

‘அல்லது ரம் குடிக்கட்டுமா? ஆரம்பக் குடிகாரர்களுக்கு ஏற்றது?’

‘இரண்டையும் கலந்து குடி.’

பக்கென்று சிரித்தாள் அவள். ‘ஓ.கே... நாளை ஆபிசிலிருந்து வரும்போது நினைவாக வாங்கி வாருங்கள், என்ன? நாளைக்கே தொடங்கப் போகிறேன்...’

அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்... ஏதோ ராகத்தின் நயங்களை அனுபவிப்பவன் போல கண்களை மூடிக்கொண்டு தலையை மெல்ல இங்குமங்குமாக ஆட்டினான். பிறகு சொன்னான்.

‘உன்னுடைய எண்ணக் குதிரையின் ஓட்டம் இருக்கே... அப்பா! வெரி இன்ட்ரஸ்டிங். சிகரெட்டைப் பார்த்தவுடனே உனகு சினிமா வில்லன்தான் நினைக்கு வரான் - அசோகன், சத்ருகன் சின்ஹா. சிகரெட்டின் தொடர்ச்சியாக மது நினைவு வருது, அப்புறம் வுமனைஸிங் என்கிற பிம்பமும் நினைவு வருமோ என்னவோ, யார் கண்டது! இதோ பாரு. சிகரெட் பாபகரமான விஷயம்கிற ரீதியிலே சிந்திச்சி இதை நீ ஏன் ஒரு ஒழுக்கப் பிரச்னையாக்கிற? இது வெறும் ஹெல்த் பிராப்ளம்னு ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கிற!’

‘டியர், ஹெல்த் பிராப்ளமோ இல்லையோ, இது ஒரு சேவிங்ஸ் பிராப்ளம்னு நீங்க புரிஞ்சுக்கணும்னுதான் என் ஆசை.’

‘சேவ் பண்ணினா உனக்கு இன்னமும் இரண்டு ஸாரி வாங்கலாம், இல்லையா?’

‘உடனே இப்படிப் பேசுவீங்க. தினம் பொழுது விடிஞ்சா இங்கே நான் ஸாரி வாங்கணும்னு அடம் பிடிக்கிற மாதிரி.’

‘ஓ.கே., ஸாரி... ஐ மீன், மன்னிப்புக் கேட்டுக்கிற ஸாரி...’

இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள். அந்தச் சிரிப்பின் தொடர்பாக அவன் எழுந்து சுவரில் ஆணியில் தொங்கிய தன் சட்டையின் பையிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டான். இயந்திரம் போல இவ்வளவும் செய்தவன், சட்டென்று அவள் தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தான். வாயில் பொருத்திக் கொண்ட சிகரெட்டை மறுபடி கையிலெடுத்து வைத்துக் கொண்டான்.

‘பரவாயில்லை, பிடியுங்கள்’ என்றாள் அவள்.

ஆனால் அவன் அதை வாயில் வெறுமனே விரலிடுக்கில் செருகிக் கொண்டு மறுபடி கட்டிலில் வந்து உட்கார்ந்தான். ‘நான் கூட இதை விட்டுடணும், குறைச்சுக்கணும், என்றெல்லாம் அடிக்கடி யோசிக்கறதுண்டு... தண்டச் செலவுதான், எனக்குத் தெரியாமல் இல்லை’ என்றான் தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போல.

அவள் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஆனால் இதுதான் என்னுடைய ஒரே லக்சரி, என்னுடைய கனவு பலூன்... இதுவும் கூட இல்லைன்னா வாழ்க்கை ரொம்ப டல்லாப் போயிடும் - அப்படி வாழ்ந்தும் என்ன பிரயோஜனம்?’

‘இது இல்லேன்னா டல்லா ஏன் போகணும், வாழ்க்கை? எனக்குப் புரியலே...’

‘வாழ்க்கையிலே பொதுவாகவே ஒரு அலுப்பூட்டுகிற தன்மை இருக்கு இல்லையா? அதைச் சொல்ல வரேன்... ஒரே மாதிரியான நம்முடைய தினசரி அலுவல்கள், கடமைகள்... இன்றைக்குச் செய்ததையே செய், இந்த ரூட்டிலிருந்து ஒரு எஸ்கேப் தேவையாயிருக்கு’

‘அதுக்கு சிகரெட் உதவுகிறதாக்கும்?’

அவன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டினான். தொடர்ந்து பேசினான்.

‘அப்புறம் சில சமயங்களிலே பிரச்னைகள் ரொம்பக் கடுமையான இடுக்கியாலே பிடிக்கிற மாதிரி மென்னிய வந்து பிடிக்கின்றன... ஒரே டென்ஷன்.. அந்த மாதிரி சமயங்களிலே சிகரெட் பிடிச்சால் ஒரு ரிலீஃப் கிடைக்குது...’

‘இதெல்லாம் நீங்களாகவே மனசிலே நினைச்சிக்கிறதுதானே! சிகரெட் பிடிக்கறதினாலே நிலைமைகள் ஏதாவது மாறிடப் போவுதா?’

‘இல்லை... ரொம்ப கரெக்ட். ஆனால் அப்படி அவை மாறிடறாப்லே, என்னை அவை பாதிக்க முடியாது என்பது போல, ஒரு இல்யூஷனை சிகரெட் கொடுக்கிறது... இந்த இல்யூஷன் எனக்கு ரொம்பத் தேவையாயிருக்கு.’

‘சரி, ஆனா ஒண்ணு கேக்கிறேன் பதில் சொல்லுங்க, இப்ப இந்த கணத்திலே உங்களுக்கு என்ன டென்ஷன் அல்லது அலுப்பு? இப்ப எதுக்காக அவசரமா சிகரெட்டை உருவியெடுத்தீங்க? என் பேச்சு உங்களுக்கு அலுப்பாகவும் டென்ஷனாகவும் இருக்குன்னு அர்த்தமா? சொல்லுங்க’

இதைக் கேட்டு அவன் பெரிதாகக் கடகடவென்று சிரித்தான். ‘நல்லா மடக்கிட்டே, போ’ என்றான். பிறகு சற்றே யோசித்துச் சொன்னான்: ‘ரொம்ப மகிழ்ச்சியான தருணங்களிலும், அந்த மகிழ்ச்சியை செலிபிரேட் பண்ண நான் பிடிக்கிறது வழக்கம்.’

அவள் அலட்சியமாக ஒரு நொடிப்பு நொடித்தாள்: ‘போதும் நிறுத்திக்குங்க. உங்க விளக்கங்கள் ஒண்ணாவது நம்புகிறமாதிரி இல்லை.’

இது ஒரு விடுமுறை நாளில் இருவருமே ஆசுவாசமாக உணர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடையே நடந்த சம்பாஷணையின் சாம்பிள். இத்தகைய சந்தர்ப்பங்கள் அபூர்வமாகத்தான் நிகழ்கின்றன. ஆனால் இந்தச் சந்தர்ப்பங்கள் மிக முக்கியமானவை. அவை நெஞ்சில் பதிக்கும் - பிற்பாடு தடவுகையில் இனிய நெருடல்களை ஏற்படுத்தும் - சுவடுகள் மிக முக்கியமானவை. அவர்களிடையேயுள்ள உறவின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது என அவள் உணரத் தொடங்கியிருந்தாள்.

சில நாள்களில் ஆபீசிலிருந்து திரும்புகையில் ஒரே அலுப்பும் சிடுசிடுப்புமாக இருப்பான். அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் உரிமையெடுத்துக் கொண்டு அவனிடம் பேச முயன்றால் பலன் விபரீதமாகிவிடும். இது ஒரு ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போல ஆகி விட்டிருந்தது. சரியான அசைவுகள், ஓசைகள் மூலம் காளையை மெல்ல, மெல்ல வசப்படுத்தி அதன் முதுகில் ஏறி உட்கார வேண்டும். எங்கேயாவது கொஞ்சம் பிசகினால் போச்சு,  காளை மிரண்டு விடும். முட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடும்.

கடவுள் நம்பிக்கைக்கும் வாழ்க்கையை அவரவர் அணுகும் முறைக்குமிடையே உள்ள தொடர்பு பற்றி அவர்களிடையே நடந்த சர்ச்சையும் சுவையானது.

இந்தச் சர்ச்சையும் ஒரு முறை விடுமுறை நாளன்று, சேவிங்ஸ் பிராப்ளத்தை வித்தாகக் கொண்டுதான் தொடங்கியது. அன்று கந்தர் சஷ்டி. சௌகரியமான விடுமுறை நாளன்று வாய்த்திருந்தது. கோயிலுக்குப் போய் அன்றைய விசேஷ ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்று அவள் பத்து நாள்கள் முன்பே கேட்டுக் கொண்டு அவனும் அதரு இணங்கியிருந்தான். ஆனால் கடைசியில் அன்றைக்குக் கோயிலுக்குப் போக முடியாமல் போயிற்று. காரணம், அங்கே போய்விட்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவுக்குக் கூட கையில் காசு இல்லை. மாதக் கடைசி! அவன் என்னவோ ரொம்பச் சுலபமான ஒரு மாற்று வழியைச் சிபாரிசு செய்தான். அந்த வழியைக் கடைப்பிடித்திருந்தால், அவர்கள் கோயிலுக்குப் போய் வந்திருக்கலாம். ஆனால் அவள் அந்த வழியை ஏற்கவில்லை. பக்கத்து வீட்டு மாமியிடமவள் பத்து ரூபாய் கடன் வாங்கி வர வேண்டும் என்பதுதான் அவன் சொன்ன யோசனை. எப்படியிருக்கிறது கதை?

அவளுக்கு இருந்த அளவு தெய்வபக்தி அவனுக்கும் உண்டு.  ஆனால் அவளுக்குக் கொஞ்சம் வெவ்வேறு கோயில்களுக்குப் போக வேண்டும்.. உற்சவம், பஜனை ஆகியவற்றில் பங்கு பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை உண்டு. அவனுக்கு இவ்வித ஆசைகள் கிடையாது. வெறுமனே வீட்டில் காலையும் மாலையும் நெற்றியும் விபூதி இட்டுக்கொண்டு சாமி படத்தின் முன்பு கும்பிடு போடுவதோடு சரி. வெளியே கிளம்புவதற்கு முன் அதை ஞாபகமாக அழித்து விடுவான். ‘இது என்னுடைய பர்சனல் விஷயம். டமாரம் அடிக்க விரும்பவில்லை’ என்பான். அவள் ஏதோ தன்னுடைய நம்பிக்கைகளை டமாரம் அடிக்கிற மாதிரி; அவள் கோயிலுக்குப் போவது அனாவசிய வெளிப்பகட்டு மாதிரி.

எனவே இந்தப் பகட்டுக்கு அவள்தான் பண ஏற்பாடு செய்து கொள்ளவேண்டுமாம் பக்கத்து வீட்டு மாமி மூலம்.  ஹூம். அவளுக்கொன்றும் இத்தகைய இரவல் சுவாமி தரிசனமெல்லாம் வேண்டாம். அவளுடைய விருப்பம் எதனுடனாவது அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருக்கலாம். இருந்தாலும் அதை கௌரவிப்பதுதானே அன்பின் அடையாளம். இந்த அன்பு இருந்திருந்தால், அவன் நிச்சயம் அன்றைய பணத்துக்காக முன்னேற்பாடுடன் இருந்திருப்பான். இக்கருத்தை அவள் சூசகமாகத் தெரிவித்தவுடன் அவன் வெடித்தான், ‘இதை நீ வீணே ஒரு கௌரவப் பிரச்னையாக்குகிறாய்.’

‘ஒரு திட்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவதை நான் ஆதரிக்க முடியாது’ என்றாள் அவள். ‘பத்து ரூபாய்தானே, பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் திடீரென்று நூறு ரூபாயோ அல்லது ஆயிரம் ரூபாயோ கூட நமக்குத் தேவைப்படுகிற  சந்தர்ப்பம் இன்றோ நாளையோ நேரலாம். அதையும் கூட பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்வீர்களா என்ன?’

‘நீ வெறுமனே ஆர்க்யூ பண்ணணுமென்பதற்காகவே ஆர்க்யூ பண்ணுகிறாய்.’

‘நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்.’

’நூறோ ஆயிரமோ தேவைப்பட்டால் அது கிடைப்பதற்கும் கடவுளே ஒரு வழி பண்ணுவார். தேவையை உருவாக்குகிறதும் அவர்தான். தீர்த்து வைக்கிறதும் அவர்தான்.’

இப்படி அவன் கூறினானோ இல்லையோ, உடனே காரசாரமான ஒரு சொற்போர் அவர்களிடையே தொடங்கியது. கடவுள் என்ற கருத்தை அவன் கொச்சைப்படுத்துகிறானென்றும், பொறுப்பின்மை, திட்டமின்மை இதற்கெல்லாம் கடவுள் ஒரு சால்ஜாப்பாகிவிடக்கூடாதென்றும் அவள் கூறினாள். அவள்தான் அவ்வாறு கொச்சைப்படுத்துகிறாளென்றும், கடவுளின் அருளில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் நாளையச் சோறு பற்றிய கவலை கூட அண்டாத தூய மட்டங்களில் சஞ்சரித்தலே தமக்கும் கடவுளுக்கும் செய்துகொள்ளும் நியாயமென்றும் அவன் கூறினான். அவன் குதர்க்கம் செய்வதாக அவள் சொன்னாள். இல்லை, அவள்தான் குதர்க்கம் செய்கிறாளென்று அவன் சொன்னான்.

இதையடுத்துச் சிறிது நேரம் மௌனம்; அவள் சமையலறை வேலைகளில் ஈடுபட்டாள். அவன் தன் சட்டைகளைத் துவைக்கத் தொடங்கினான். அவன் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் உலர்த்தத் தொடங்கும்போது, அவளும் அங்கே வந்தாள், அங்கிருந்த அம்மியைப் பயன்படுத்துவதற்கு. உடனே அவன் மறுபடி தொடங்கிவிட்டான்: ‘அன்றைய சாம்பாருக்கு வேண்டியதை நீ அன்றன்றைக்குத்தானே அரைத்துக் கொள்கிறாய்? ஒரு வாரத்துக்கு முன்பே அரைத்து வைத்துக் கொள்வதில்லையே! அதே போல, அன்றன்றுக்கு எழும் பிரச்னைகளை அன்றன்றைக்குத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கலாமே என்றுதான் நான் சொல்கிறேன்.’

இதைக் கேட்டு அவள் சட்டென்று அரைப்பதை நிறுத்தினாள். முகத்தில் ஒரு விஷமத்தனமான புன்னகை. ‘ஒன்று சொல்கிறேன் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?’ என்றாள்.

ஒரு வாரத்துக்கு அரைத்து வைத்துக் கொள்வது சாத்தியந்தான். ஆனால் அதற்கு வீட்டில் ஃப்ரிஜ் இருக்க வேண்டும். மறுபடி சேமிக்கிற விருப்பத்தையும் திறனையும் பொறுத்த விஷயம்.’

அவன் பேசாமலிருந்தான்.

‘இன்னொன்று சொல்கிறேன். அன்றன்றைய வாழ்வு என்று தத்துவம் பேசுகிறவர்கள் மாதச் சம்பளத்துக்கு ஒரு வேலை ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. கல்யாணம் செய்துகொண்டு இருக்கக்கூடாது. ஒரு சிலவற்றில் தொலைதூர நோக்கும் நிரந்தர ஏற்பாடுகளும் வேண்டும். வேறு சிலவற்றில் அந்த நோக்கு வேண்டாம் என்பது முரண்பாடாக இருக்கிறது.’

பலமாகவே பதிலடி அடித்துவிட்டாள். ஆனால் அவன் சிறிதும் நிதானமிழக்கவில்லை. இழந்தால் அது அவளுக்கு வெற்றியாகிவிடுமே! அமைதியாகச் சொன்னான். ‘என்னில் முரண்பாடு இல்லையென்று நான் எப்போது சொன்னேன்? நான் தேவபுருஷனல்ல, ஒரு சராசரி மனிதன், என்னில் சில முரண்பாடுகளுக்கும் குறைகளுக்கும் அனுமதி தா, என்றுதான் நான் சதா வேண்டுகிறேன்.’

‘அப்படியானால் எனக்கும் உங்கள் முரண்பாடுகளை ஏற்காமல் முரண்பட அனுமதி தாருங்கள்.’

ஒருவேளை ஏதோ ஒரு விஷயத்தை வைத்து - அது எந்த விஷயமானாலும் சரி வாக்கு வாதம் செய்வதில் அவர்களுக்கு ஓர் இன்பம் ஏற்படத் தொடங்கியிருந்ததோ?

அப்படியும் இருக்கலாம்.

அவன் ஒரு எஸ்கேப்பிஸ்ட் என்று அவள் அலுத்துக்கொள்வாள். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன், என்ற உண்மையை அவன் சந்திக்கத் தயாரில்லை, அதுதான் பிரச்னை உண்மையில், சிகரெட்டை ஊதித்தள்ளி, ஏதோ அரச குமாரனாகத் தன்னை எண்ணிக் கொண்டு.....

ஆமாம், நான் ஓர் எஸ்கேப்பிஸ்ட்தான், என்பான் அவன். ரசனையற்ற மூடர்கள்தான் உண்மையை ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டவாறிருப்பார்கள். கற்பனை மூலமும் கனவுகள் மூலமும் வாழ்க்கையை ரம்மியப்படுத்திக் கொண்டு வாழ்தலே அவனுக்குப் பிரியமான....

பொறுப்பில்லாதவன். எவ்வித வருங்காலத் திட்டமும் இல்லாதவன், என்று அவள் அவனைச் சாடுவாள். நிகழ்காலத்தை அனுபவிக்கத் தெரியாதவள் என்று அவன் அவளைக் கிண்டல் செய்வான்.

அவள் வேண்டும் என்றால் அவன் வேண்டாம் என்பான். அவள் வேண்டாம் என்றால் அவன் வேண்டும் என்பான்.

ஆனால் திடீரென்று ஒரு நாள் அவளுடைய வேண்டாம் அவனுடைய வேண்டாமாகவும் ஆகியது. திடீரென்று அவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டான். காரணம், அவர்களிடையே நடந்த எந்த வாக்குவாதமும் இல்லை, அவள் அவனிடம் சொன்ன ஒரு செய்தி: ‘நான் உண்டாகியிருக்கிறேன்.’

அவளுடைய இந்த அறிவிப்பு கிடைத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டதாக அவன் அறிவித்தான். ‘உனக்காக இல்லை, குழந்தைக்காக’ என்றான். ‘சிகரெட் நாற்றம் அதற்கு ஒத்துக் கொள்ளாது...’ மேலும், பெரிய பணக்கார வீட்டுக் குழந்தை போல் மிக சொகுசாக அதை வளர்க்க வேண்டும். எவ்விதமான குறையும் அதற்கு இருக்கக் கூடாது; அதற்குப் பணம் சேர்க்கத் தொடங்க வேண்டாமா?’

அவளுக்கு, தனக்குக் கிடைத்தது வெற்றியா அல்லது தோல்வியா என்று புரியவில்லை. குழந்தையின் பாலுள்ள கரிசனமும் அக்கறையும் அவனுக்குத் தன்னிடம் ஏனோ இல்லை.  குழந்தை அவனுடையதென்றால் தானும் தானே அவனுடையவள்? தான் காண்பித்த உடைமையுணர்வினால் அவனுடைய (அவள் பாற்பட்ட) உடைமையுணர்வு பிணங்கிக் கொண்டதா?

‘மேலும்....’ என்று அவன் தொடர்ந்தான். ‘மேலும் அப்பா ஏதோ தப்புக் காரியம் பண்ணுகிறார் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டாம்... குழந்தையின் அப்பா பற்றிய ஓர் லட்சிய உருவம் உன்னுடையதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டாம்... அப்பாவை பற்றி அது பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும். நீ உன் அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொள்வது போலவே.’

இந்த சம்பாஷணை நடந்தது விடுமுறை இல்லாத ஒரு தினத்தன்று காலையில், அவன் ஆபிசுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது. சொல்லி விட்டு அவன் ஆபிஸ் போய் விட்டான். அன்று பகலெல்லாம் அந்தச் சொற்கள், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள் - அவள் மனத்தில் ரீங்காரமிட்டபடி இருந்தன. அவள் தன் அப்பாவின் மேல் வைத்திருக்கும் மதிப்பை அவன் மீது... வைகக்வில்லையென்று அவன் சொல்ல விரும்புகிறானோ? இந்த மனப்பாங்கு குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறானோ? கடவுளே, இதென்ன வீண் தப்பபிப்பிராயங்களும் குழப்பங்களும்....

அன்றிரவு அவள் அவனிடம் சொன்னாள்: ‘இதோ பாருங்கள், உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.கௌரவிக்கிறேன்... உங்கள் பழக்கங்களைப் பற்றி நான் பேசியதெல்லாம் ஒரு அன்பினால்தான். நீங்கள் இப்படித் தவறாகப் புரிந்து கொள்வதாக இருந்தால்.... நல்லது, உங்களுடைய எந்தப் பழக்கத்தைப் பற்றியும் நான் இனி எதுவும் சொல்லவில்லை. சிகரெட் பிடிப்பது உள்பட.’

அவன் பூடகமாக ஒரு புன்னகை புரிந்தான். ஆனால் அதன் பிறகு அவன் சிகரெட் குடிக்கவே இல்லை. அவளும் இத்தகைய விஷயங்களைப் பற்றிக் குறிப்பிடுவதையே கவனமாகத் தவிர்க்கத் தொடங்கினாள்.

அவர்களுடைய சிந்தனை, எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது குழந்தையை பற்றியதாகத்தான் இருந்தது.

இருவரும் தத்தம் சுய மதிப்புக்குச் சிறிதும் குந்தகம் விளைவிக்காமலேயே தம் தனித்தனியான அன்பின் வடிகாலாகவும் பரவசமூட்டும் ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கப் போவதாகவும் வரப்போகும் குழந்தையை உருவகம் செய்து கொண்டு அதன் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புகையில்லாத ஒரு நெருப்புக்காக அவர்கள் காத்திருப்பது போலத் தோன்றுகிறது.

--

Feb 24, 2011

மா.அரங்கநாதன்:முதல் அடி-எஸ்.ராதமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூல் 1983-ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ள இவர், சாகித்ய அகாதமிக்காக சில சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன. தமிழ் வாழ்வின் நுட்பங்களைப் பேசும் தனித்துவமான எழுத்து இவருடையது.
ma.aranganathan_thumb5
தற்செயலாக பழைய சாமான்கள் விற்கும் கடையின் வாசலில் பார்த்தேன் - மணியடிப்பதற்காக பள்ளிகளில் தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புத் தண்டவாளத்தை! 
 
எங்கள் பள்ளியில்கூட மணியடிக்க அது போன்றதொரு இரும்புத் தண்டவாளம் வராந்தாவில் தொங்கும். மணியடிப்பதற்கென வயதான வாட்ச்மேன் இருந்தார். அவர் வராத நாட்களில், மாணவர்கள் அந்த மணியை அடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு சிற்பத்தைப் பார்ப்பது போல வியப்புடன் ஆழ்ந்து அந்தத் தண்டவாளத்தைக்  கவனித்துக்கொண்டு இருந்தேன். எத்தனை முறை அதன் சத்தம் தொலைவில் கேட்டதும் ‘பள்ளிக்கு நேரமாகிவிட்டதே’ என்று ஓடி வந்திருப்பேன். எத்தனை நாட்கள் இந்த மணியடித்து ‘பள்ளி விடுமுறை விட்டுவிடாதா?’ என்று ஏங்கியிருப்பேன். இந்த மணியோசைக்குப் பின்னால் பால்யத்தின் வெளிப்படுத்தப்படாத நிசப்தம் புதைந்திருக்கிறது.

கடைக்காரன் என்னைக் கவனித்திருக்கக்கூடும். ‘பள்ளிக்கூட பெல்லு சார். வேணுமா?’ என்றான். வாங்கிக்கொண்டு போய் என்ன செய்வது... எங்கே மாட்டிவைப்பது? மணியை வாங்குவதைவிடவும் அதை அடித்துப் பார்க்க வேண்டும் என்றுதான் மனது அதிக ஆசைகொண்டு இருந்தது. மிக உரிமையுடன் மணியை அடிப்பதற்காக வைத்திருந்த இரும்புக் கோலை எடுத்து மணியை அடித்தேன்.

கடைக்காரன் சிரிப்போடு பார்த்தான். எங்கோ காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டு வந்து தந்ததாகச் சொல்லி, இருநூறு ரூபாய் தந்து விட்டு எடுத்துப் போகும்படியாகச் சொன் னான். வாங்குவதற்கு பயமாக இருப்பதாகச் சொன்னேன். அதன் விலையைப் பற்றி சொல்வதாக நினைத்துக்கொண்டு, ஐம்பது ரூபாய் குறைத்துக்கொள்ளச் சொன்னான். பயம் விலை மீதல்ல. அந்த மணியோசை என்றோ ஏற்படுத்திய வலியிலிருந்து பயம் பிறப்பதை எப்படிப் புரியவைப்பது?

இன்றும் மனதில் காலை வெயில் போல துல்லியமாகவும் வசீகரமாகவும் பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் மினுமினுத்துக் கொண்டு இருக்கிறது. அப்போது பள்ளியில் சேர்வதற்கு இருந்த ஒரே சோதனை... வலது கையால் தலையைச் சுற்றி இடது காதை தொட்டுக் காட்ட வேண்டும். அது இருந்தால் போதும், முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள்.

படிய வாரிய தலையும் திருநீறு பூசிய நெற்றியும் ஒரே யரு உடைந்த குச்சி,சிலேட்டுமாக பள்ளியில் சேர நின்றுகொண்டு இருந்தபோது ஒரு பக்கம் பயமும் இன்னொரு பக்கம் அழுகையும் சேர்ந்து தொண்டையை இறுக்கியது.

தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தபோது அவரது மேஜையில் இருந்த பிரம்பும் சாக்பீஸ் டப்பாவும் அழுகையை அதிகப்படுத்தப் போதுமானதாக இருந்தது. டவுசர் பையில் வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை எடுத்து தலைமை ஆசிரியரிடம் நீட்டுவதற்குள், மருத்துவ மனைக்குள் போனதும் ஏற்படும் நடுக்கம் அன்று பள்ளியைப் பார்த்ததும்தானாக ஏற்பட்டது.
வகுப்பில் உட்காரவைத்து விட்டு, அப்பா பள்ளியை விட்டு வெளியேறிப் போகத் துவங்கும் வரை அடக்கிக்கொண்டு இருந்த துக்கம், அவர் தலை மறைந்ததும் பீறிடத் துவங்கியது. வகுப்பில் உள்ள மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த ஆரஞ்சு மிட்டாய் களை எவருக்கும் கொடுக்க வேண்டும் என்றுகூட நினைப்பே இல்லை.

டீச்சர், என் விசும்பல் சத்தம் கேட்டு என்ன என்று அருகில் வந்தாள். ‘காய்ச்சல் அடிக்குது’ என்று கலங்கிய குரலில் சொன்னதும் கழுத்தின் அடியில் கை வைத்துப் பார்த்தாள். குளிர்ச்சியாகத்தான் இருந்தது. அவள் தலையைக் கோதிவிட்டபடி, ‘சரியாப் போயிரும்... தண்ணி குடிச் சிக்கோ!’ என்றாள். இத்தனை நடந்தும் ஏன் காய்ச்சல் வரமாட்டேன் என்கிறது என்று என்மீதே ஆத்திரமாக வந்தது.
திடீரென பிளாக்போர்டு மிக உயரத்திலிருப்பது போலத் தெரிந்தது. எங்கோ மலையடி வாரத்தில் இருந்து டீச்சர் பேசுவது போலக் கேட்டது. மனம் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. வராந்தாவில் தொங்கும் அந்தத் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
பன்னிரண்டரைக்குப் பெல் அடித்த போது கண்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். வீட்டுக்குப் போனதும் பையைத் தூர எறிந்துவிட்டு, என் மீது ஏன் இப்படி இரக்கமின்றி யாவரும் நடந்துகொள்கிறார்கள் என்று கோபமாக வந்தது. சாப்பிடக்கூட மனதின்றி ‘மதியம் பள்ளிக்கூடம் லீவு’ என்று பொய் சொல்லியபடி படுக்கை யில் சுருண்டு படுத்துக்கொண்டேன்.

ஆனால், மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எத்தனை மெதுவாக நடந்து போக முடியுமோ அத்தனை மெதுவாகப் போவேன். வகுப்பைக் கவனிக்காமல் படியில் ஏறியிறங்கி விளையாடும் வெயிலைக் கவனித்துக்கொண்டு இருப்பேன்.

பள்ளி நாட்கள் ஒரு விநோத மிருகத்தின் கால்களில் சிக்கிக்கொண்டது போல பயமாக மாறியிருந்தன. ஒவ்வொரு முறை பள்ளியின் பாதி மூடியிருந்த இரும்புக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போவது சிங்கத்தின் வாய்க்குள் தலையைக் கொடுத்து வெளியே எடுக்கும் சர்க்கஸ்காரனின் செயலைப் போலத்தான் இருந்தது.

அப்போது, பள்ளி மிகப் பெரியதாகவும் வகுப்பறைகள் நீண்டதாகவும் டீச்சர் மிக உயரமானவள் போலவும் தோற்றம் தந்துகொண்டு இருந்தது. ஆனால், அந்தப் பள்ளியை விட்டு நீங்கி வேறு வேறு பள்ளிகளில் படித்து முடித்து, ஊரை விட்டு வெளியேறிய பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு முறை அந்தப் பள்ளியைப் பார்த்தபோது அது நான் முதல் நாள் சேர்ந்தபோது பார்த்த நிறம்கூட மாறாதது போல அப்படியே இருந்தது. ஆனால், ஒரேயரு வேறுபாடு, அப்போது பெரிய கோட்டை போலத் தெரிந்த பள்ளிக்கூடம், இப்போது சிறிய தீப்பெட்டி மாதிரி தெரிந்தது.

அது ஒரு ஓடு வேய்ந்த கட்டடம் என்று இன்று திரும்பப் பார்க்கும்போதுதான் அதன் சிவப்பு ஓடுகள் தெரிந்தன. படிக்கட்டுகள், வகுப்பறைகள் யாவுமே உலர்ந்த திராட்சை போல சாறு வற்றிப் போய் சுருங்கி விட்டது போலத் தென்பட்டது.

எனக்கு நடந்த சம்பவத்தைப் போலவேதான் என் பையனை எல்.கே.ஜி&யில் சேர்த்த நாளும் நடந்தேறியது. அவனைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, முதல் நாள் என்பதால் கேட்டை தாண்டிச் சென்று வகுப் பறையைக் காட்டி விட்டு வெளியே வரும்போது, அவன் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்து போனான். வகுப்பறையின் அருகே போயும் உள்ளே போகாமல் தொலைவை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. குழந்தையை முதன் முதலாகப் பள்ளியில் விட்டு வரும் அந்த நிமிடம் மிகவும் அபூர்வமானது. அதே நேரம் துக்ககரமானது. அது சொல்லி புரியவைக்க முடியாதது.

பள்ளியில் மின்சார மணி அடித்தும் நான் வாசலின் வெளியே நின்றுகொண்டே இருந்தேன். அவன் வகுப்புக்குப் போய் விட்டான். ஆனால், நான் என்றோ காலத்தின் பின்னால் தூக்கி வீசப்பட்டது போல எனது முதல் வகுப்பின் நினைவுகளில் வீழ்ந்துகிடந்தேன். நான் நினைத்தது போலவே மாலை வீடு வந்த பையன் யாரோடும் பேசவே இல்லை. சாப்பிடு வதற்குக்கூட மனதின்றி படுக்கையிலே கிடந்தான். ஆனால், என்னைப் போலின்றி சில வாரங் களிலே அவன் பள்ளிக்குப் பழகத் துவங்கியிருந்தான். பிறகு பள்ளிக்கூடம் பற்றித்தான் எப்போதுமே பேச்சு. காலம் எவ்வளவு மாறியிருக்கிறது என்று அந்த நிமிடம் என்னால் உணர முடிந்தது.

பிறந்த நாள், திருமண நாள் போல ஏன் பள்ளியில் சேர்ந்த முதல் நாளை நாம் கொண்டாடக்கூடாது, என்று சில சமயங்களில் தோன்றும். வகுப்பறைக்குள் ஒவ்வொரு மாணவனும் எடுத்துவைக்கும் முதலடி, நிலவில் இறங்கிய விண்வெளி வீரனின் காலடியைவிடவும் அதிமுக்கியமானதில்லையா! பள்ளியின் முதலடியிலிருந்துதானே அவனது அறிவும் திறனும் வளர்த்தெடுக்கப்படுகிறது. 
 
அந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் Ôஏடு தொடங்குதல்Õ என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து “அனா ஆவன்னா” எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும். பிறகு, அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து, படிக்க சொல்லித் தருவார்கள்.

அப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார். அவர் தேவாரம், திருவாசகம் பாடவும், விளக்கி பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார். பள்ளிக்கூடம் வந்த பிறகு ஏடு தொடங்குதல் மறைந்து போகத் துவங்கியது. ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அனா ஆவன்னா எழுதித் தரும் பழக்கம் இருந்தது. பின்னாளில் அதுவும் மறைந்து, இன்று பள்ளிப் படிப்பு முடியும் வரை அனா ஆவன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

உலகில் வேறு எந்தத் தேசமும் தனது தாய் மொழியின் அட்சரங்களைக் கூட கற்றுக்கொள்ளாமல் குழந்தை வேறு மொழியைக் கற்பதற்கு அனுமதிப்பதில்லை. நாம் எல்லாவற்றிலும் விதிவிலக்குதானோ?

தமிழ் கற்றுக்கொள்வதற்காக இருந்த தமிழ்ப் பள்ளிகளும் தேவார \ திருவாசகப் பாடசாலைகளும், இன்று அடையாளமற்றுப் போய் விட்டன. தமிழ் நமது பேச்சிலிருந்து மட்டுமல்ல, நம் சிந்தனை, செயல் யாவிலிருந்தும் விலக்கப்பட்டு வருவதும் அப்படி விலக்கப்படுவது மேலான செயல் என்று பெருமை கொள்வதுமே நடந்து வருகிறது.
தமிழ் வாழ்வைத் தனது படைப்பு களில் பதிவு செய்ததில் மிக முக்கியமான எழுத்தாளர் மா.அரங்கநாதன். இவரது கதைகள் ஆழ்ந்த தத்துவத் தளம் கொண்டவை. அவரது எழுத்தில் தமிழ் வாழ்வின் நுட்பங்களும் அறமும் மெய்தேடலும் நுண்மை யாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. 
 
குறிப்பாக, இவரது ‘ஞானக்கூத்து’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘ஏடு தொடங்கல்’ என்ற கதை. அன்றைய நாஞ்சில் வட்டார வாழ்வைச் சொல்வதோடு, ஏடு தொடங்குதலைப் பற்றிய நுட்பங்களையும் பதிவு செய்துள்ளது. அக்கதை மின்னல் வெட்டைப் போல நிமிட நேரமே கடந்து போகும் ஒரு அனுபவத்தைப் பதிவு செய்கிறது.

ஊரில் ஒரு குழந்தைக்கு ஏடு தொடங்குவதாக அண்ணாவியை அழைக் கிறார்கள். அவர் வர இயலாமல் அவரது பையன் சுப்பையா வருகிறான். அவனுக்குப் பன்னிரண்டு உயிரெழுத்தும் தெரியும் என்றாலும் மணலில் எழுதும்போது கை நடுங்கும். சென்ற வருடம் ஏடு தொடங்கும் போது ஒரு குழந்தை மணலை வாறி அவன் கண்ணில் இறைத்ததால் அவன் ஏடு தொடங்கும் காரியத்துக்கு வருவதே இல்லை.

இன்று வேறு வழியில்லாமல் வந்து சேர்கிறான். அந்த ஆட்டத்தில் ஒரு பதிகம் பாடச் சொல்கிறார்கள். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் திருவாசகத்தை வாங்கிப் படிக்கத் துவங்குகிறான். சீர் பிரிக்காத பதிப்பு என்பதால் அவனால் படிக்க முடியவில்லை. அப்போது கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி எதையும் சட்டை செய்யாது ஊரில் சுற்றிக்கொண்டு வரும் முத்துக்கறுப்பன், அங்கே வந்து சேர்கிறான். அவனை திருவாசகம் படிக்கச் சொல்கிறார்கள்.

அவன் புத்தகத்தைப் பார்க்காமலே ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி குழந்தையை திரும்பச் சொல்லச் செய்து, பதிகம் படிக்கவைக்கிறான். அந்தச் சம்பவம் முத்துக்கறுப்பன் மீது அந்த வீட்டில் நல்ல மதிப்பை உருவாக்கி விடுகிறது. அவனுக்கு அந்த வீட்டில் உள்ள பெண்ணைக் கொடுத்து மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறார்கள். அவன் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி பிடித்துப் போய், அந்த வீட்டுப் பெண் அவன் மீது ஆசைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், எது நடக்க வேண்டுமோ, அது ஏதாவது ஒரு வழியாக நடந்துவிடுகிறது என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு இருந்தார் பெண் வீட்டில் ஒருவர். இரண்டுமே முத்துக்கறுப்பனைப் பொறுத்த வரை நிஜம்தான். இன்னொரு பக்கம் நிஜமில்லைதான்.

மா.அரங்கநாதனின் இக்கதை விவரிக்கும் அந்த ஏடு துவங்கும் காட்சி, புகை மறைவது போல நாம் பார்த்துக்கொண்டு இருந்தபோதே வாழ்விலிருந்து மறைந்து போய்விட்டிருக்கிறது. 
 
பால்யம் சோப்பு நுரைகளைப் போல நூற்றுக்கணக்கான கனவுக் குமிழ்கள் மிதந்து செல்லும் வெளி போலும். கரும்பலகையின் கீழ் உதிர்ந்து கிடந்த சாக்பீஸ் தூசியைவிடவும்வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள் பேசித் தீர்த்த சொற்கள் ஏராளமானவை. நட்சத்திரங்களைவிடவும் பள்ளியில் கண்ட கனவுகள் அதிகம். விரலில் பட்ட மைக்கறை அழிந்துபோய் பல வருடமாகி இருக்கலாம். ஆனால், மனதில் படிந்த பள்ளியின் நினைவுகள் என்றும் அழியா சுவடுகளாகவே இருக்கின்றன!

*****
நன்றி: கதாவிலாசம்- விகடன் பிரசுரம்

Feb 22, 2011

பள்ளம் - சுந்தர ராமசாமி

அன்று எங்கள் கடைக்கு விடுமுறை. வாரத்தில் ஒரு நாள். ஆனால், அன்றும் போகவேண்டிவந்தது. அடக்கமில்லாத, முரட்டுச் சாவியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டேன். மனத்திற்குள் அழுதுகொண்டே தெருவில் இறங்கி நடந்தேன்.

இந்த ஒரு நாளையாவது எனக்கே எனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை. நாட்களை எண்ணி, பொறுமை கெட்டபின், சாவகாசமாக வரும் ஏழாவது நாள். நான் ஒத்தி போட்டவைகளையும், செய்ய ஆசைப்பட்டவைகளையும் தன்னுள் அடக்கிக் கொள்ள முடியாமல்Sundara_ramasamy7_400 திணறும் நாள். மொட்டைமாடிப் பந்தலின் சாய்ப்பில், வெறுந்தரையில், எதுவும் செய்யாமல், எதுவும் செய்ய இல்லை என்ற சந்தோஷத்துடன் வானத்தைப் பார்த்தபடி மனோராஜ்ஜியத்தில் மிதப்பது. வேலை, அல்லது அப்பா, அல்லது வாடிக்கை என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்க, தீர்மானமே அற்ற சுதந்திரத்தில் திளைக்க ஒரு நாள். பகற்கனவு என்கிறார்கள். ஆனால், ஆசைகள் லட்சியங்கள் அங்கு தானே வர்ணச் சித்திரங்களாக மிளிர்கின்றன. அதுவும் வேண்டாமென்றால் எப்படி?

மொட்டை மாடி வெறுந்தரையில் கிடந்து வானத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறேன். பின் எப்போது என்று தெரியாமல், வானமும் மொட்டைமாடியும் செடி கொடிகளும் என் ரத்தபந்தங்களைச் சுற்றி உழலும் நினைவுகளும் அற்றுப்போய், மனக்காட்சியில் நான் கதாநாயகனாகச் சுழல, என்னைச் சுற்றி, சூரிய சந்திர மண்டலங்கள் கும்மியடிக்கின்றன. பூத்துச் சொரிகின்றன, ஆசைகள். மாலை தொடுக்க, மெல்லிய மேகங்களை உடுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் மிதந்து வருகிறார்கள். பின்னால் நினைத்துப் பார்த்தால் வெட்கமாய் இருக்கும். இப்படி கேவலப்பட்டுப்போய்விட்டோமே என்றிருக்கும். சில சமயம் வருத்தம் பொத்துக் கொண்டு வரும். நல்ல வேளை, என் பகற் கனவுகள், அந்த வர்ணத் திரைக் காட்சிகள், வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு ‘ரீல்’ பார்த்தால்கூட எல்லோரும் என்னைக் காறி உமிழ்ந்து விடுவார்கள். பத்து சட்டம் பார்த்தால் போதும், ’இந்த நாயை வீட்டில் வைத்துக்கொண்டிருக்க யோக்யதை இல்லை’ என்பார் அப்பா.

[’நீங்கள் நினைப்பது சரிதான் அப்பா, சரிதான். என் கற்பனைகள் ஒன்றும் நிறைவேற மாட்டேன் என்கிறதே. நான் என்ன செய்யட்டும். ரொம்ப வேண்டாம்; கால் பங்கு நிறைவேறினால் போதும்... அப்புறம் ஒரு வார்த்தை சிணுங்க மாட்டேன். உங்களைப் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ - நான் வேலை செய்யும்போது சந்தோஷமாக இருந்தால், கடவுள் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன - ஒரு வார்த்தை முணுமுணுக்க மாட்டேன். எந்த நுகத்தடியில் வேண்டும் என்றாலும் புன்னகையுடன் தோள் கொடுப்பேன். கால் பங்கு நிறைவேறினால் போதும் அப்பா, வெறும் கால் பங்கு.’]

ஒரு நாள் முழுசாக என் கையில் வந்து விழுவது; அதை, கொஞ்சம் கொஞ்சமாக, தீர்ந்துவிடுமே என்ற கவலையில் நான் கொறித்துக்கொண்டிருப்பது, பொறுக்குமா அப்பாவுக்கு? விடுமுறை நாளில், ரத்தமும் சதையுமாய் அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு அர்த்தம் வேண்டாம்.  ”போடா, போய் அந்த சேலம் கட்டை உடைத்து விலை போடு” என்றார் அப்பா.

எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அது ஒன்றும் அப்படி பெரிய வேலை இல்லை. அந்த உருப்படிகள் விற்பனைக்கு அவசரமாகத் தேவையுமில்லை. மறு நாளோ, அதற்கு மறுநாளோ கூட போட்டுக் கொள்ளலாம். அரை மணி நேரத்தில் - சரியான கையாள் நின்றால் இன்னும் குறைவாகக்கூட - செய்துவிடக்கூடிய வேலை. அது போதும் என்று வைத்துக் கொண்டால் நான் வீட்டில் அல்லவா இருப்பேன். சும்மா இருந்து விட்டால்கூடக் குற்றமில்லை. சும்மாவும் இருக்கமாட்டேன் என்கிறேனே. அதுதான் கஷ்டமாக இருக்கிறது அப்பாவுக்கு. என் புத்தக அலமாரியை அடுக்க ஆரம்பிக்கிறேன். தரை பூராவும் பரந்து கிடக்கும் புத்தகங்கள் அப்பாவை என்னென்னவோ செய்துவிடுகின்றன. என்ன செய்து இவ்வளவு பெரிய துன்பத்துக்கு ஆளாக்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அல்லது இலக்கிய நண்பன் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுகிறான். அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து, இருள் சூழ்ந்த பின்பும் விளக்குப் போட்டுக் கொள்ளாமல், மிதமிஞ்சிய லகரியுடன், வெறியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவ்வப்போது நண்பன் வெளியே போய் ‘தம்’ இழுத்துவிட்டு வருகிறான். பேச்சு. பேச்சு. என்னதான் பேசிக்கொள்கிறார்களோ, என்று அப்பா, அம்மா முதல் கைக்குழந்தைவரை கேட்டிருக்கிறார்கள். யாரும் இந்தக் கேள்விக்குச் சரிவரப் பதில் சொல்லவும் மாட்டேன் என்கிறார்கள். அப்படியே என் நண்பன் வரவில்லை என்றாலும் - அவன் அநேகமாக வராமல் இருப்பதில்லை - அம்மாவைத் தேடிக்கொண்டு போகிறேன். அவளுடைய கட்டிலின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு, நோபல் பரிசைப் பிடுங்கிக்கொள்ளப்போகிற என் நாவலின் கதையை நான் சொல்ல, அவள் சுவாரஸ்யமாகக் கேட்க, அந்த இடத்தில் அக்காக்கள், தங்கை, அக்கா குழந்தைகள் எல்லோரும் கூட, பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாகி, அங்கு நான் ஒரு கதாநாயகன் மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்கும்போது, அப்பா தனியறையில் தனிமை வதைக்க, படித்து முடித்த ‘ஹிந்து’ பத்திரிகையை மாறி மாறி மடித்துக்கொண்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொள்வதும் மீண்டும் வராண்டாவில் உலாவுவதும்.... அப்பப்பா..... ஒரு விடுமுறை நாள் என்ன என்ன பிரச்சினைகளைக் கிளப்புகின்றன.....

‘டேய் போ, போய் சேலம் கட்டை உடைத்து விலை போடு’ என்கிறார் அப்பா. ‘கூட?’ என்கிறேன். ‘மதுக் குஞ்சுவை வரச் சொல்லியிருக்கிறேன்’ என்கிறார். இதைக் கேட்க  எனக்கு மிகச் சங்கடமாக இருக்கிறது. இது ஒரு தந்திரம். எனக்குத் தெரியாமல், வேண்டாம் என்று சொல்லக்கூட எனக்கு சந்தர்ப்பம் தராமல், மதுக்குஞ்சுவை வரச்சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தால் இப்போதுகூட வேண்டாம் என்று நான் அவனை அனுப்பிவைக்க முடியும். இது தெரியாதா அப்பாவுக்கு. அதனால்தான் நேராகக் கடைக்கு வரச்சொல்லியிருக்கிறார். இப்போது அவன் வந்து காத்துக்கொண்டிருப்பான். இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சேலம் கட்டை உடைப்பதைத் தவிர.

தெரு வழியே உடம்பையும் சாவியையும் தூக்கிக் கொண்டு, மனத்திற்குள் அழுதுகொண்டு, என் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளத் தெரியாத என்னையே நிந்தித்துக்கொண்டு, என்னை இப்படித் தொடர்ந்து சங்கடப்படுத்தும் யார் என்று தெரியாத எதிரியை சபித்துக்கொண்டு போனேன்.

வெளிப்பிரக்ஞை ரொம்பவும் மங்கிப் போனதில், மற்றொரு அசையும் பொருளில் என் உடலேறி உட்கார்ந்து கொண்ட மாதிரி நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு கல்தூணைக் காலால் உதைத்து எலும்பை முறித்துக் கொண்டு விழுந்து கிடக்க வேண்டும் போலிருந்தது.

***

இந்த வெள்ளிக்கிழமைகளில்தான் புதுப் படங்கள் போடுகிறார்கள். பதிமூன்று கொட்டகைகளிலும் புதுப் படங்கள். காலை ஒன்பது மணிக்குக் களை கட்டியாயிற்று. பெண்களையும் குழந்தைகளையும் தெருவில் வாரிக் கொட்டியாயிற்று. இடுப்புக் குழந்தைகளுடன் விரைகிறார்கள். இவர்கள் உடம்பில் இந்த நேரங்களில் ஏறும் விறுவிறுப்பைப் பார்த்தால், வருடக்கணக்கில் சிறையிலிருந்துவிட்டு விடுதலை பெற்றுவரும் கணவன்மார்களைக் கொட்டகைகளில் சந்திக்கப் போவதுமாதிரிதான் இருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ள முடியாத நாணத்தால் அமுக்கப்படும் சந்தோஷத்தில்தான் முகத்தில் இந்த போலி கடுகடுப்பு ஏறமுடியும். இந்த  ஒன்பது மணிக்கு, தங்கள் வேலைகளை பரபரக்கப் பாதி முடித்தும், போட்டது போட்டபடியும் தெருக்களில் குதித்து விரைகிறார்கள். தெரிந்தவர்களைக் குறுக்கிட்டுத் தாண்டும்போது, பார்த்தும் சரியாகப் பார்க்காதது போல் சிரித்துக்கொண்டு விரைகிறார்கள். வெயில் விளாச ஆரம்பித்துவிட்டது. இப்போதே இப்படி அடித்தால் நண்பகலுக்கு அதன் கைச்சரக்கை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கழுத்துகளிலும் கன்னங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருக்கிறது. குங்குமப் பொட்டுகளின் ஓரங்கள் கலங்கிவிட்டன. இடுப்புக் குழந்தைகளின் தலைகள், பெண்களின் அவசர உடல் அசைவுகளில் குரங்காட்டம் ஆட, நெற்றிப் பொட்டுகளிலும் தாடைகளிலும் வியர்வை வழிகிறது. குழந்தைகளின் முகங்கள் ரொம்பவும் வாடி விட்டன. பெண்கள் தங்கள் இயற்கையான வேகத்தில் நகராதது மாதிரியும், உருத்தெரியாத ஒரு லகரியை கடைவாயில் ஒதுக்கிக்கொண்டு, அதிலிருந்து ஊறும் ஒரு ரசத்தை விழுங்கி தங்கள் நாளங்களில் பரப்பிக்கொள்வதால்தான், இவர்களால் இத்தனை அமானுஷ்யமான வேகம் கொள்ள முடிந்திருக்கிறது என்றும் தோன்றுகிறது. அவர்கள் மூளையில் ஊறப்போகும் இன்ப உணர்வுகளுக்கு பாஷை இல்லை.

நானும் சிறு வயதிலிருந்தே இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும் - அவர்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும். காலத்தாலும், நாகரிகங்களாலும், நான் அறியாது அவர்கள் மீது சரியும் கஷ்டங்களாலும் சில சமயம் சந்தோஷங்களாலும் இவர்கள்  அடையும் மாற்றங்களை, நான் மிக உன்னிப்பாக, மிகுந்த ஆசையுடன் கவனித்து வந்திருக்கிறேன். நான் சிறு பையனாக இருக்கும்போது வெள்ளிக்கிழமைகளின் மகோன்னதக் காலைக் காட்சிகளுக்கு, தங்கள் தாயார்களின் அவசரத்துக்கு ஈடுகொடுக்கப் பதறிக் கொண்டு, பாவாடையைச் சுருக்கிக் கொண்டு ஓடிய குட்டிகள், வயிற்றுக் குழந்தையுடனும் இடுப்புக் குழந்தையுடனும் இப்போது ஓடிக்கொண்டிருப்பார்களோ?

வித்தியாசத்திற்காக, வேண்டுமென்றே பாதையை மாற்றுகிறேன். ரொம்பவும் சுற்று இது. அப்பாவுக்குத் தெரியாத சந்துகள். கண்களைக் கட்டி, இதில் எதிலாவது ஒன்றில் அவரை விட்டால், ”இது எந்த ஊர்?” என்று நிச்சயம் கேட்பார். அவருக்கு, கடைக்கு ஒரு பாதைதான் உண்டு. அந்தப் பாதை வழியாகத் தான் அவர் இருபத்தி மூன்று வருடங்களாக -அதற்கு மேலும் இருக்கும் - போய்க்கொண்டிருக்கிறார்.  நான் சுற்றிப் போகிறேன். சந்துகள் வழியாக. இந்தச்  சந்திலுள்ள குடியிருப்புகள், ஆட்கள், முக்கியமாகப் பெண்கள், இந்தத் தெருவிலுள்ள வேசிகள், அரை வேசிகள் - அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களும், அவர்களுடைய குழந்தைகளின் முகங்களும் எனக்குத் தெரியும். இந்த வீடுகள், முன் வாசல்கள் (அன்னம்மை நாடாத்திக்கு ஒரு கோலம்தான் தெரியும். மூன்று ஜிலேபிகள் பிழிந்துவைத்து விடுகிறாள், கோலப்பொடியில்) சண்டைகள், சச்சரவுகள், கெட்ட வார்த்தைகள், அவர்களுடைய முகங்கள் எனக்கு அலுக்கவே இல்லை. இவர்களுடைய ஒழுங்கற்ற தன்மையை நம்பித்தான் நான் என் ஜீவனைச் சுமந்து கொண்டிருப்பதாக, அப்பாவுடைய ஒழுங்கிலிருந்து என்னைத் தற்காத்துக்கொண்டு வருவதாக, படுகிறது.

அப்பா காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து நடக்கப் போய்விடுகிறார். ஏழு மணிக்கெல்லாம் காலைக்கடன்கள், குளியல், காலை உணவு எல்லாம் அவருக்கு முடிந்து போகிறது. ஹாலின் நடுவில், வெளிவாசல் கதவை யாரேனும் திறந்தால் தெரியும்படி, சம்மணங்கூட்டி தரையில் உட்கார்ந்துகொள்கிறார். காலையில் முதலில் எழுந்த ஒரு கைக்குழந்தை அவசரமாகத் தலை சீவி, பவுடர் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, சட்டைக்குள் திணித்து ரெடி பண்ணப்பட்டிருக்கும். அக்கா அல்லது தங்கை, அல்லது சமையல் மாமி, கதவின் பின்பக்கம் காத்துக் கொண்டிருந்து குழந்தையை அவர் மடியில் கொண்டு வந்து போடுகிறார்கள். குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பித்து, அந்தக் கொஞ்சலில் ஒரு வெறி ஏறி, லகரி பிடித்து, தன்னை மறந்து, தன் உடம்பை மறந்து, தன் பெயரை மறந்து கொஞ்சுகிறார். எத்தனையோ விதமான சப்தங்களை அவர் எழுப்புகிறார், தோள் துண்டு நழுவி விழுந்துவிட்டால் கூசிக் குறுகி உள்வருத்தம் கொள்கிறவர். மணி எட்டு அடிக்கிறது. அவருடைய சந்தோஷம் கலைகிறது. விரல்களை நீட்டி மணி சரியாக அடிக்கிறதா என்று சரிபார்க்கிறார். ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொருத்தன் என்றாலும் எப்போதும் ஒரு சிஷ்யன் அவருக்குக் கன கச்சிதமாக அமைந்துகொண்டிருக்கிறான். கேட்டைத் திறந்து கொண்டு அவன் உள்ளே வருகிறான். இப்போது யாராவது அவசரமாகப் போய் குழந்தையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்பா சாவியை எடுத்துக்கொள்கிறார். எட்டரை மணிக்குக் கடை திறக்கப்படுகிறது. சிஷ்யன் பின்னறையைச் சுத்தப்படுத்துகிறான். அந்தப் பின்னறைக்குள் நுழைந்து அவருடைய நாற்காலியைப் போய் அடைந்ததும், அவருக்கு ஒரு இதம் ஏற்படுகிறது. அந்த அறையில் அவர் வேலை பார்க்கும்போது, பேரேடுகளைத் திருப்பும்போது, ஃபைல்களைப் புரட்டும்போது, கடிதங்கள் எழுதும்போது, கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கும்போது, எத்தனையோ தடவை அவரை மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறேன். எந்த மன நிலையிலிருந்தாலும், அந்த அறை அவருக்கு மிக அவசியமான ஒரு பாதுகாப்பைக் கொடுப்பது மாதிரி எனக்குத் தோன்றியிருக்கிறது. அங்கு வந்து சேருவதற்கும், அந்த அறையின் சூழ்நிலையில் தன்னை முடிந்த மட்டும் கரைத்துக்கொள்ளவும்தான், மற்ற சகல காரியங்களையும், அவசர அவசரமாகவும் படபடப்புடனும் அவர் செய்து முடிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அறைக்கு அவருக்கு வர முடியாமல் போகும் நாளை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதுதான் அவருடைய உண்மையான மரணமாக இருக்கும்.

அப்பாவுக்குத் தெரியாத சந்துகள் வழியாகப் போகும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இங்கிருந்துதான், இது போன்ற சந்துகளிலிருந்துதான், பெண்கள் ஒழுக ஆரம்பிக்கிறார்கள். ஒழுகி, தெருமுனைகள் தாண்டி, வேறு பலரையும் சேர்த்துக் கொண்டு வீங்கி, ரஸ்தாக்களில் வழிந்து, கட்டி தட்டியும், திராவகத் தன்மையுடனும், சேறும் குழம்புமாக இரு கரைகளையும் பிடுங்கிக் கொண்டு ஓடும் பிரவாகம் போல் அவர்கள் விரைகிறார்கள். இந்தச் சந்தின் கடைசியில்தான் ரஸ்தாவைப் பார்க்க தாலுகா ஆபீசின் பழைய கட்டிடம் இருக்கிறது.

இந்தக் கட்டிடத்தின் வினோதமான தன்மையை வார்த்தைகளில் விவரிப்பது கடினமானது. அவ்வளவு விசித்திரம். பொறியியல் கணக்குப்படி இந்தக் கட்டிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் - தேசிக விநாயகம் பிள்ளை கைக்குழந்தையாக இருந்தபோது - சரிந்து விழுந்திருக்க வேண்டும். சுவாச கோசங்கள் முற்றிலும் பழுதாகிவிட்ட ஒரு காச நோயாளி, வேப்ப மரத்தடியில் தலை சாய்த்துக் கிடப்பதான சித்திரமே இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. இந்தக் கட்டிடத்தில்தான் அந்தக் காலத்தில் அபின் கொடுப்பார்கள். ஒவ்வொரு மலையாள மாதத்திலும் முதல் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு. தாலுகா ஆபிசின் வெளிச்சுவர், உட்பக்கம் போதிய உயரம் கொண்டது. வெளிப்பக்கமும், அதாவது ரஸ்தாவைப் பார்க்க இருக்கும் முன்பக்கம், போதிய உயரத்துடன் இருக்கும். இடது பக்கம் மட்டும் - வெளிப்பக்கம் - ஒரு பெஞ்சுபோல் மிகவும் குட்டையாக இருக்கும். பக்கவாட்டுக் காலிமனை மிகவும் மேட்டுப்பாங்கானது. அபின் வாங்க வருகிறவர்கள், நான் பார்த்த காலங்களில் அநேகமாகப் பஞ்சடைந்த கிழவர்கள், எல்லோரும் ரஸ்தாவிலிருந்து செம்மண் ஓடையில் இறங்கி, கவனமாகக் கீழே பார்த்துக்கொண்டே திடலில் ஏறி - எங்களூரிலுள்ள மூன்று திறந்தவெளி கக்கூசுகளில் இது மிக உபயோகமானது - காம்பௌண்டு மதிற்சுவர் பெஞ்சில் வரிசையாக, கழுகுகள் போல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். தாலுகா ஆபீசின் பின்னாலுள்ள கக்கூஸ் சுவரில் சாய்ந்தபடி வேப்பமரத்தடி நிழலில் சில பெண்கள் - சில கிழவிகள் - யாரையும் முகமெடுத்துப் பார்க்காமல், ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருப்பது போல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். நான் ஒரு சைத்திரிகனாக இருந்திருந்தால், இந்தக் காட்சிகளை பல ஓவியங்களாகச் சேமித்திருப்பேன். அங்கு வருபவர்களின் முகங்களிலிருந்தும் அங்கங்களிலிருந்தும் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கசிந்து, வராண்டாவின் ஓரங்களிலும் படிகளிலும் வேப்ப மரத்தடிகளிலும் வழியும் தள்ளாமையை, இயலாமையை, அனைத்தும் ஒடுங்கிய பின்பும் அபினை நம்பி கொடுக்கில் கொஞ்சம் ஜீவனை வைத்துக்கொண்டிருக்கும் பிடிவாதத்தை, முக்கியமாக, பஞ்சடைந்து, பீளைசாடி போதையில் மயங்கி மிதக்கும் கண்களையெல்லாம்  வரைந்து காட்டியிருப்பேன்.

***

கடையைத் திறந்தேன். கடையின் எதிர்பக்க, சற்றே கோணலான, சினிமாக் கொட்டகையின் வாசலிலிருந்து மதுக்குஞ்சு வெளிப்பட்டான். முன்பக்கம் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது அவனுக்கு அலுப்பைத் தந்திராது. எனக்காக வர நேர்ந்ததே, என்னைப் பார்த்த பின்புதான் அவன் நினைவில் துளிர்த்திருக்கும். நான் அவசரப்பட்டு வந்துவிட்டதுபோல் அவனுக்குத் தோன்றியிருக்கலாம். அவன் வந்து, நான் வந்து சேராத அந்த இடைவெளியை, பள்ளத்தை, பொறுமையின்மையை, எரிச்சலை, அந்தப் புகைப்படங்கள், துடைகள், முலைகள், பிருஷ்டங்கள், முத்தமற தமிழ் முத்தங்கள் அனைத்தும் மிக நன்றாக நிரப்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

தகரப்பட்டைகளை வெகு லாவகமாகக் கிழித்து, பண்டிலைப் புரட்டி உடைக்கிறான்  மதுக்குஞ்சு. கைதேர்ந்தவன். எந்த இடத்தில் அடி விழ வேண்டும் என்பது எத்தனை துல்லியமாக அவனுக்குத் தெரிகிறது. சற்றுமுன், காலத்திற்கும் அசைந்து கொடுக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய பண்டில், இதோ பரிதாபமாகச் சிதறிக் கிடக்கிறது. நான் பட்டியலையும் கணக்குப் பார்க்க ஒரு பக்கம் எழுதாத தாள்களையும் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் ஊசி, நூல், விலைச்சீட்டு முதலியவற்றை எடுத்துக்கொண்டு வந்தான். உருப்படிகளை கவுண்டரில் வைத்து, மொத்த எண்ணிக்கையைச் சொல்லி ஒத்துக்கொண்டுவிட்டு - எண்ணம் முதல் தடவையே சரியாக வந்துவிட்டது - தரம் பிரிக்க ஆரம்பித்தான். நான் ஒரு பக்கத்தாளில் விற்பனை விலையை கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். மதுக்குஞ்சு ஆர்டர் ஃபைலிலிருந்து ஆர்டரைத் தனியாக எடுத்து, சரக்கு சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். காதில் சொருகியிருந்த ஆட்டுப் புழுக்கைப் பென்சிலால் ‘டிக்’ போட்டுக்கொண்டு வந்தான். நான் விலைச்சீட்டுகளை எழுதி அவனிடம் தந்தேன்.

மின்சாரம் இல்லை. எங்கோ பக்கத்தில் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது போலிருக்கிறது. காலைத் தூக்கி நாற்காலியில் வைத்து கொஞ்சம் இதப்படுத்திக்கொண்டேன். தலையைத் திருப்பி ‘ஷோகேஸ்’ கண்ணாடியின் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த சேலைகளின் இடைவெளி வழியாகத் தெருவைக் கவனித்தேன். நெரிசல் தளர்ந்துவிட்டது. எல்லோரையும் இழுத்து, தன் அடிவயிற்றில் அமுக்கிக்கொண்டுவிட்டன இந்த கொட்டகைகள். உடல் பூராவும் எண்ணற்ற முலைகள் கொண்ட மலைபோல் விழுந்து கிடக்கும் ஒரு ராட்க்ஷசியின் உடம்பில் லட்சக்கணக்கான மூஞ்சூறுகள் கொசு கொசுவென்று ஒன்றன் மேல் ஒன்று புரண்டுகொண்டு பால் குடிப்பதுபோல் தோன்றிற்று. மடக்கு நாற்காலிகளை ஓரத்தில் ஒதுக்கி, தூசி தட்டிய இடத்தில் வாகன முண்டை ஒற்றையாக விரித்தான் மதுக்குஞ்சு. சேலைகளை எடுத்து வாகன முண்டில் பரப்பி, விலைச் சீட்டைத் தைப்பதற்கு வசதியாக வைத்துக் கொண்டிருந்தான். சம்மணங்கூட்டி உட்கார்ந்துகொண்டு தைக்க ஆரம்பித்தான்.

“நீ நம்மகிட்டே வந்து எத்தனை வருஷம் இருக்கும் டேய், மதுக்குஞ்சு” எறு கேட்டேன்.

“வருஷம் தெரியலே. பத்து வருஷம் இருக்கும். ஒரு சித்திர மாசம் இருபத்தியொண்ணாம் தேதி” மதுக்குஞ்சு லேசாகச் சிரித்தான். அவன் ஏன் சிரித்தான் என்பது எனக்குப் புரியவில்லை. அவனே சொன்னான்.

”அண்ணைக்குத்தான் பெரியசாமிக்கு பொறந்த நாளு. வீட்டிலேருந்து கடைப்புள்ளைகளுக்குப் பாயசம் வந்தது. நான் காலையிலேயே வந்தேன். ராகு காலம், போயுட்டு பதினொண்ணரை மணி தாண்டி வானு பெரியசாமி சொன்னா. நான் வந்து பாயசம் குடிச்சேன்.”

அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரிதான். தேதி வருஷம் எனக்கு நினைவில்லை. ஆனால், ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: “இன்னிக்கு ஒரு சின்னப் பயலை வேலைக்கு எடுத்தேன். என்னடா பேர்னு கேட்டேன். முருகன்னு சொன்னான். ஏற்கனவே ரெண்டு முருகன்கள் இருந்துண்டு, இவனைக் கூப்பிட்டா அவன் வரதும், அவனைக் கூப்பிட்டா இவன் வரதும், ரெண்டு பேருமே தன்னை இல்லைன்னு வராம இருக்கறதும் போறாதா. நீ வேறயானு கேட்டேன். அப்பொத்தான் இசக்கி, மில் பெயிலை உடைச்சு, மதுக்குஞ்சு 7 பீஸ்னு ஒத்துண்டான்.  இந்தப் பயலுக்கு, நம்ம கடையிலே மதுக்குஞ்சுனு பேர், அப்படீன்னேன்.” அப்பா தனக்குத்தானே சிரித்துக்கொண்டது இப்போதும் என் மனத்தில் தெரிகிறது.

“மதுக்குஞ்சுவா! பெயர் ரொம்ப ஜோரா இருக்கப்பா” என்று நாங்கள் சொன்னோம்.

“அப்படீன்னா அந்தப் பேரை எனக்கு ஏன் வைக்கலை?” என்று கேட்டான், என் மூத்த அக்காளின் சின்னப் பிள்ளை.

எல்லோரும் சிரித்தோம்.

இந்த ஞாபகங்கள் மனத்தில் ஓடவே மதுக்குஞ்சுவைப் பற்றி அப்பா சொல்லியிருந்த மற்றொரு விஷயம் என் மனத்தில் ஓடிற்று. ரொம்பவும் அதிர்ச்சி தரும் வித்தியாசமான விஷயம் என்பதாலேயே அது என் மனத்தில் பதிந்து போயிருந்தது. இப்போது அந்த விஷயத்தை மதுக்குஞ்சுவிடம் கேட்கலாமா? அப்படிக் கேட்பது அவன் மனத்தைச்  சங்கடப்படுத்துமா? எப்படி ஆரம்பிப்பது? நான், அப்பா சொல்லியிருந்த விஷயத்தைப் பூசி மெழுகிச் சொல்ல ஆரம்பித்தேன்.

“சாமி சொன்னது சரிதான். என் வலது கண், எங்க அம்மாவோடதுதான்” என்றா மதுக்குஞ்சு.

“இப்படிச் சொல்றான் அந்தப் பயல். அதுக்கு மேலே எப்படிக் கேக்கறது? அதுக்கு மேலே எப்படிக் கேக்குறது?” என்று அப்பா திரும்பத் திரும்பக் கேட்டது என் நினைவுக்கு வந்தது.

கேட்கக்கூடிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்ளத்தானே மனம் துடிக்கிறது.

“என்ன மதுக்குஞ்சு. ஏதேனும் விபத்தா?” என்று கேட்டேன்.

“சின்ன வயசிலே நடந்தது. கிராமத்திலே சொல்லக் கேள்விதான். எங்கம்மா ஒரு சினிமாப் பைத்தியம். ஆத்து மணல்லே உக்காந்து சினிமாப் பாத்துக்கிட்டு இருக்கா. நான் மடியிலே படுத்துக் கெடக்கேன். கீள கெடக்கற கூழாங்கல்லே எடுத்து வாயிலே போட்டுக்கறதும் அவ விரலைப் போட்டு நோண்டி எடுக்கறதுமா இருந்திருக்கேன். ஒரு தவா கண்ணை நோண்டிட்டா தெரியாம. அப்டின்னு சொல்றாங்க” என்றான்.

மதுக்குஞ்சு, மிகவும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். இருந்தாலும் முகம் உறைந்து போனது போலிருந்தது. அவன் மனத்தில் ஓடும் எண்ணங்களை அனுமானிக்கத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.

“செலவங்க சொல்றாங்க, அவங்க உடனே செத்து போயுட்டாங்கனு. செலவங்க சொல்றாங்க, நான்னுக்கிட்டாகனு. அண்ணைக்கே அவங்க கண்ணை நோண்டி எனக்கு வச்சுட்டாங்களாம், ஆஸ்பத்திரியிலே” என்றான் மதுக்குஞ்சு.

”உனக்கு ஏதாவது கஸ்டமிருக்கா அதனாலே” என்று கேட்டேன்.

”ஒண்ணுமில்லே. ஆனா பார்வை இல்லே. பள்ளம்தான் ரொம்பிச்சு” என்றான் அவன்.

போன் மணி அடித்தது. ரிசீவரை காதில் வைத்துக் கொண்டேன். அப்பாதான்.

“வேலை முடிஞ்சுதா? என்ன சேத்துப் போட்டே?”

’சுவடு’ - 1979

Feb 21, 2011

படுகை - ஜெயமோகன்

வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல உடம்பு அவருக்கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார். பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மேjeyamohan ட்டில், அவர் பெயருடனேயே நினைவில் உதிக்கும் அந்த வினோத பாணியில் கால் மடக்கி அமர்ந்து, முன்னும் பின்னும் அசைந்தாடி, உடும்புத்தோல் உடுகை மூன்று விரல்களால் மீட்டி, எங்களூரின் எழுபது வருடக் கதையைப் பாடுவார். கீழ்வானில் பனைமர மண்டைகளின் ஊடே ஒற்றை வெள்ளி மினுங்க ஆரம்பித்துவிட்ட பிறகும் அவர் குரல் கேட்டுக் கொண்டிருக்கும். வைக்கோற் படுக்கையில் சாய்ந்தபடி தூக்க மயக்கத்துடன் கேட்போம். அப்படியே கனவில் பிரவேசித்து, சிங்கியின் குரல் பின்னணியில் ஒலிக்கும் விசித்திரப் பிரமைகளில் அலைவோம். சட்டென்று விழித்துக்கொள்ளும்போது, உலகுடன் பிணைக்கும் நிஜம் போல அவர் குரல் இருட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் கண்களில் மினுக்கம் தெரியும். விடிவதற்கு சற்ற முன்புதான் அவர் தலை சரியும். குரல் உடைந்து இழுபட்டு ஒடுங்கும். அவர் கதை ஒரு போதும் முடிவடைந்ததில்லை. தரையில் அப்படியே சரிந்து விடுவார். விடிந்து வெயிலேறிய பிறகே அவரில் உயிர்க்களை வரும். அவரைச் சுற்றி எச்சில் சிதறிக் கிடக்கும். வாரியலும் கையுமாய் நின்று முத்தம்மா சத்தம் போடுவாள். “சீராத்தேன் இருக்கு, பறப்பயலுக்க ஒப்பரம் சேந்துக்கிட்டு ஏமான்மாரும் தலையெங்க காலெங்க எண்ணு கெடக்கியது. ஏமான், கொச்சேமான் . . .” என்று உசுப்புவாள். “வல்ல காரியம் உண்டுமா, இஞ்ச வந்து கெடக்கியதுக்கு ? பனியோ தீனமோ வந்தெங்கி ஆருக்கு நட்டம் ? இனி நான் காணட்டு. பிலேய் சிங்கி, பறப்பயலுக்க ஒறக்கத்தைப் பாரு. பிலேய் . . .” என்று கத்துவாள். வெறுந்தரையில் விசிறப்பட்டது போல சிங்கி கிடப்பார். அவர் அருகே இரவெல்லாம் எழுப்பிய ஒலியைத் தலைக்குள் ரீங்காரமாய் நினைவுறுத்தும் அந்த உடுக்கு. இரவின் நினைவுகள் பகல் ஒளியில் வெகுதூரமாய், கனவாய் மாறிவிட்டிருக்கும். அதற்கு சம்பந்தமேயற்றவராகச் சிங்கி அப்போது தென்படுவார். பனியும் புழுதியும் படிந்த கரிய வற்றி உடம்பு மூச்சில் மெல்ல அசையும். அவருக்கு வெயில் மழை பொருட்டல்ல, களத்து மூலைப் பனைமரம் போல.

பேச்சிப்பாறை அணைக்காக சர்வே எடுத்தபோது தான் அவர் பிறந்தார் என்பார் சிங்கி. எந்தக் கதையும் அவர் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகும். மெல்ல மெல்ல தாளம் கலந்து, உரை நீண்டு பாடலாக மாறும். உடுக்கு இயல்பாக இணைந்து கொள்ளும். அவருக்கு எத்தனை சொன்னாலும் அலுக்காத கதை செம்பன் துரையின் இதிகாசம்.

அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை. புலிபோட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப் படப்பு. வானம் தெரியாமல் இலைப் படப்பு. ஊடு வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒற்றையடிப்பாதை. அது பேச்சி மடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடுமங்காடு சுரம் தாண்டி, அனந்த பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டு மிருகத்தின் நகமும், காணிக்காரன் காலுமல்லாமல் நாட்டு வாசியின் வாசம் கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது. பிரம்மபுத்திரி பேச்சி மலைக்கு அரசி. ஆருக்கும் அடங்காத பேச்சியை அடக்க வந்தவன்தான் செம்பன்துரை. அவன் கருப்புக்கட்டியும் கஞ்சாவும் கொடுத்து காணிக்காரர்களைத்தான் முதலில் வசப்படுத்தினான். காற்றுக்கும் அஞ்சாமல், காலனுக்கும் அஞ்சாமல், காடெல்லாம் சுற்றி அலைந்தான். அவன் கால்பட்ட இடமெல்லாம் பச்சை கருகி பாழாகப் போயிற்று. காட்டு மிருகங்களெல்லாம் அவனைக் கண்டு கவைக்கிடையே வால் செருகி, கும்பிப் பதறி ஓடின. பறவையெல்லாம் சிறகடித்து வானத்திலே தவித்தன. அவன் விரல் நீட்டி நில் என்றால் புலிகூட வால் நீட்டி, உடல் நெளித்து, முகம் தாழ்த்தி நின்றுவிடும். செம்பன்துரை மானுடனே அல்ல. இந்திரன் ராஜ்ஜியத்தில் இந்திராணி அரண்மனையில் காவல் நின்று வந்த கரும்பூதம். கடமையிலே தவறு வர, கடும்சாபம் பெற்று, மனித உருப்பெற்று, மந்திரவசப்பட்டு, பூலோகம் வந்தவன். மந்திரத்தால் பூதத்தைக் கும்பினியான் கட்டியாண்டான். தூக்காத சுமையெல்லாம் தூக்க வைத்தான். செய்யாத சோலி எல்லாம் செய்ய வைத்தான். பேச்சியின் திமிரடக்கி, வள்ளியைப் பெண்டாள, வரமும் வரிசையும் கொண்டு, உத்தரவும் தீட்டூரமும் பெற்று, செம்பன்துரை வந்தான் என்று சிங்கி பாடுவார்.

எங்கள் இளம் பருவத்திலேயே வள்ளியாறு ஒரு நீல ரிப்பன் போல ஆகிவிட்டிருந்தது. மழைக்காலத்தில் வெகு அபூர்வமாய் இருகரை தொட்டு சகதி மணக்க சுழித்தோடுவதுண்டு. “அவ கெடந்த கெட என்னா ? நடந்த நட என்னா . . . பிடிச்சிக் கெட்டிப் போட்டோனே செம்பன்தொரெ! கள்ள அறுவாணிக்க ஊற்றத்த அடக்கிப் போட்டானே” என்பார் சிங்கி. கை நீட்டி சிவன்கோயில் முற்றத்தைக் காட்டி, அது வரை வெள்ளம் வரும் என்பார். “நீங்க என்னத்த கண்டிய கொச்சேமான் ? அறுதலித் தேவடியா மொவ கொஞ்ச பேருக்க தாலியவா அறுத்திருக்கா ? கொல நிண்ண வாளையையும் மண்டை பூத்த தெங்கயுமில்லியா பிளுதுகிட்டு வருவா மூடோட ? இப்பம் கண்டுதா மூதிக்க கெடப்ப ? அடிச்சுப் போட்ட சாரப்பாம்பு கணக்காட்டு. அம்பிடும் வெஷம். செம்பன் தொர வராம இருந்தானெங்கி கூறுகெட்ட தேவடியா மவ ராச்சியத்த மிளுங்கிப்போட மாட்டாளா ?” சிங்கி வாயெடுத்தால் வள்ளிக்குக் கெட்ட வார்த்தைதான். ஒரு மழைக் காலத்தில் அவள் பேய் பிடித்து ஓடியதில் சிங்கியின் அப்பனும், அம்மையும், வீடும், சிறு தோப்பும் மொத்தமாய் தேங்காய்ப்பட்டணம் கடலுக்குப் போய்விட்டன. “கண்ணில்லாத மூளி, கொலம் கெடுத்த பாவி” என்பார் சிங்கி.

ஈரக்கண்ணாடி போல வானம் இருந்த ஒரு மாலை நேரம். நாங்கள் பேச்சிப்பாறை பெரிய அணையைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கு ஆக்ரோஷமான வள்ளியைக் கட்டிப் போட்டிருக்கவில்லை. குலஸ்திரீ போல சிமிட்டி வளைப்புக்குள் நீலம் நெளியக் கிடந்தாள். மதகு வழியாகக் கண்ணீர் போலக் கொஞ்சம் நீர் வழிந்தது. விளிம்பெல்லாம் ஓராயிரம் காலடிச்சுவடுகள் பதிந்து உலர்ந்த தவிட்டுநிறச் சேறு. தூரத்து மலையைச் சுட்டிக்காட்டி ராதா கிருஷ்ணன் சொன்னான், அதுதான் சிங்கியின் வண்ணத்துப் பூச்சிகளின் படுகை இருக்குமிடம் என்று. அந்த மலை நீலநிறப் புகையால் செய்யப்பட்டது போலிருந்தது. அதற்கு மேல் இலேசாக ஒளிர்ந்த மேகம் படிகச் சிற்பம் போல உறைந்து நின்று விட்டிருந்தது.

அணைக்கு இப்பால் ஒரு செயற்கைத் தோட்டம். காட்டுக்குள் வழி தவறி வந்த நகரத்துக் குழந்தை போல குரோட்டன்ஸ் சிவப்புடன் நின்று கொண்டிருந்தது. பிரம்மாண்டமான ஏழெட்டு மரங்கள் தூங்கி விட்டிருந்தன. நீர் நெளியும் ஒலி. பறவைகள் கூடணையும் ரகளை. மேற்கு முனையில், தேக்குமரமொன்றின் அடியில் செம்பன்துரையின் சமாதி கிடந்தது. ஏனோ அதற்குக் கண்ணில் குத்துகிற மஞ்சள் நிறம் பூசியிருந்தார்கள். துரைக்குப் பிடித்தமான பச்சைநிறம் பூசியிருக்கலாம். அல்லது சிவப்பு நிறம். “இஞ்ச பாருங்க கொச்சேமான் சென்னா நம்பாது. அந்த மாதிரி ஒரு மனியன இனிம பார்த்துக்கிட ஒக்காது. கொச்சேமான் செவல நெறத்தில மனியனைப் பாத்திருக்குதா ? செவலத் தலமுடி, செவலக் கண்ணு, செவல மூக்கு . . . தல தொட்டு காலு வரெ செவல நெறந்தேன். என்னத்தைத் தின்னுவானோ பய சிரிச்சாண்ணு சென்னா புலி வாயைப் பெளந்தது மாதிரியேன் இருக்கும். ஒண்ணும் செல்லாண்டாம் ஏமானே, ஆளைக்கண்டா மதி; மூத்திரம் தன்னால போவும். பூதமில்லா அவன், செவலப்பூதம்!”

பேச்சியை வென்ற செம்பன்துரை பறவைகளின் எச்சம் வீச்சமடித்த மரத்தடியில் பசுந்தழைப் புதருக்குள் தனிமையில் கிடந்தார். அந்தப் பெயரை வாசிக்க இயலவில்லை. சகட்டு மேனிக்கு சாயம் பூசி விட்டிருந்தார்கள். அவருக்கு நடமாட முடிந்ததென்றால் அப்பகுதியிலேயே இருக்கமாட்டார் என்றேன். குரோட்டன்ஸ் செடிகளின் நிழலை அவர் எப்படித் தாங்கிக் கொள்வார் ? அவரென்ன பேச்சிக்கூடத்தான் ஓடிப் போயிருப்பாள் என்றான் ராதா கிருஷ்ணன், அந்தச் சிறு பிரதிஷ்டையைச் சுட்டிக் காட்டியபடி, சதுர வடிவிலான பெரிய கல் மேடை மீது கரடு முரடான பிரம்மாண்டமான ஒரு மரம் நின்றிருந்தது. பெரிய, தடித்த இலைகள் மண்டிய, கிளைகள் நான்கு பக்கமும் தழைந்து கீழே வந்து கூடாரம் போலக் கவிழ்ந்திருந்தன. உள்ளே அரை இருள். ஈரமாய் சருகு மக்கிய சொத சொதவென்ற தரை. மரத்திலே அறையப்பட்டதாய் அம்மனின் வெண்கல முகம். கீழே கரிய பலிபீடம். ஒரு வாரத்துக்கு முந்தைய பூக்கள் சிதறிக் கிடந்தன. சகட்டு மேனிக்குக் குங்குமம் அப்பப்பட்டிருந்தது.

 

பேச்சியம்மன் சோரயில்லா

பேய்ஞ்சுதூ மலை மேலே

பேச்சியம்மன் முடியல்லோ

பிளுதெறிஞ்சான் செம்பன்தொரெ . . .

என்று சிங்கியின் குரல் கேட்பது போலிருந்தது.

காணிக்காரர்கள் வழிகாட்ட, வேட்டை நாய்கள் பின்தொடர. சிவப்புக் குதிரை மீதேறி, செம்பன்துரை வள்ளியைப் பெண் பார்க்கப் போனான். சுழித்தோடிய கன்னியைக் கண்டு உற்சாகம் கொண்டு சிரித்தான். “ஓடுதியா ? ஓடு. எம்பிடு நாளைக்கு ஓடுவே எண்ணு நானும் பாக்குதேன்” என்றான். “ஒன்னியக் கெட்டிப் போட்டுத் தானெடி இந்தச் செம்பன்தொரெ போவான்” என்று பயமுறுத்தினான். பயந்துபோன வள்ளி பேச்சி மூன் சென்று நின்று புலம்பினாள். கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன் துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச் சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள். சகல ஜீவசாலங்களும் அப்படியே உறைந்தன. பறந்த குருவி வானத்திலே நிற்க, விழுந்த அருவி மலைமேலே தொக்க, காடெல்லாம் நடுநடுங்க, வானமெல்லாம் எதிரொலிக்க இடிபோல குரலெழுப்பி, மின்னல் போலே பல் காட்டி பேச்சி கேட்டாள்: “எந் தலமுடிய வெட்டுயதுக்கா வந்தே மக்கா ? என் மவளெ பிடிச்சு கெட்டுயதுக்கா வந்தே மக்கா ? ”

துரை பதறவில்லை. “ஓமெடி பேச்சி, நீ பேயானா நான் பேயன். ஒனக்க ஆட்டத்தைக் கண்டு பயந்து போவேன் எண்ணு நெனச்சியா ? வளிய விட்டு மாறி நில்லுடி மூதி” என்றான். அவன் சாமானியனல்ல, இதில் எதோ சூதிருக்கிறது என்று பேச்சியும் உடனே புரிந்து கொண்டாள். மானம் முட்டும் உடல் சுருக்கி, மலைக்குறத்தி உருவம் கொண்டு, முத்தாரமும் முதுசந்தனமும் அணிந்து, தேன் போல மொழியும் தெவங்காத சிரிப்புமாய் வந்து ஒசிந்து நின்றாள். சிருங்கார பாவம் காட்டிச் சிரித்தாள். ஒன்றுக்கு நூறென்று மாயங்கள் சொல்லி வாதம் செய்தாள். பிரம்மா கொடுத்த அதிகாரம் பேச்சிக்கு . பேச்சி தந்த வரம் வள்ளிக்க. வள்ளியைக் கட்டுவது பேச்சியைக் கட்டுவது. பிரம்மசாபம் செகமழிக்கும். மலையரசி பேச்சி நாடு காக்கும் தெய்வம். நோய் தீர்க்க மருந்தும் நோம்புக்ககு வாசனையும் தந்து ரட்சிப்பவள். காட்டு மிருகங்களும் காணிக்காரர்களும் அவள் பிள்ளைகள். பேச்சியின் மடி தீண்டு அன்னியன் நடமாடலாகாது. அவள் பிள்ளைகளைத் தீட்டு செய்யலாகாது. பேச்சி தாங்கமாட்டாள். அம்மை கோபம் குலமழிக்கும். ஊர் முடிக்கும். சோதிக்காதே ஓடிப் போ என்றாள். துரை மசியவில்லை. “சோலியைப் பாத்துக்கிட்டுப் போடி. நான் வள்ளியைக் கெட்டத்தான் வந்தேன். கெட்டிப் போட்டுத்தான் போவேன். ஒன்னால முடிஞ்சதைச் செய்யி” என்று சொல்லிவிட்டான்.

கோபம் தாங்காமல் பேச்சி உடல் நடுங்கினாள். மார்பை அறைந்து, மதம் கொண்டு அலறி, காற்றாய் மாறிக் காட்டுக்குள் விரைந்தாள். நாணல்புதல் போலே காட்டு மரம் கூத்தாட, மானும் மிளாவும் மானத்திலே பறக்க, சுழற் கூத்தாடினாள். மலையிறங்கி ஊருக்குள் புகுந்தாள். வீட்டுக் கூரையெல்லாம் பட்டம் போலே பறக்க, ஆடும் மாடும் பறந்து விழுந்து சாக, ஊரைச் சூறையாடினாள். நாலாம் நாள் பேய்மாரி. வீடேது தோப்பேது வயலேது வரப்பேது என்று தெரியாதபடி வெள்ளம். ஐந்தாள்நாள் வள்ளி வந்தாள். பனங்குலைபோலே கூந்தலவிழ்த்துப் போட்டு, மார்பில் அறைந்து கூவியபடி, சிவப்புச் சேலை அலைபாய ஊருக்குள் புகுந்தாள். வைக்கோல் போர் முதல் அடுக்களைப் பானை வரை அள்ளிச் சுருட்டிச் சென்றாள். பத்தாம் நாள் விடியலில் மெழுகிப் போட்டது போல் ஊரெல்லாம் சேறு. எங்கிருந்து வந்தனவோ, எங்குப் பார்த்தாலும் பறவைகள். காக்கையும், கழுகும், கொக்கும், குருவியும் சேற்றுப் பரப்பின்மீது சிறகடித்தன. குரலெழுப்பிச் சண்டை போட்டன. ராத்தியெல்லாம் வீட்டுக் கூரைமீது வந்தமர்ந்து ‘பேச்சியம்மோ பேச்சியம்மோ’ என்று குரலெழுப்பின. ஜனங்கள் பயந்தனர். பிரம்ம கோபமோ இந்திர சாபமோ என்று நடுங்கினர். மலைக்கோவில் பகவதிக்கும் முடிப்புரையில் தேவிக்கும் கொடை நேர்ந்தனர். கும்பி கொதிப்பாற்ற ஆம்பற்கிழங்கும் சேற்றுமீனும் சேகரிக்க சகதியில் துழாவி அலைந்தனர்.

பேச்சி அடங்கவில்லை. அவள் கல்மனசு கரையவில்லை. தழையுடை அணிந்து, நார்ப்பெட்டி இடையில் ஏந்தி கனல் போலக் கண்ணும் துருத்தி போல மூச்சுமாய் ஊருக்குள் நடமாடினாள். “ஏனக்க பிள்ளியள விட்டுப்போடு பேச்சி” என்று காலில் விழுந்த முடிப்புரை அம்மையை, பேச்சி முடியைப் பிடித்து சுழற்றி வீசினாள். வாளும் சூலமும் ஏந்திப் போருக்குப் போன மலைக்காவில் தேவியை உதைத்துக் தள்ளினாள். பிரம்மா சொன்னாலும் அடங்கமாட்டேன் என்று கொக்கரித்தாள். கை நிறைய விஷவித்துக்களை வாரி ஊரெங்கும் தூவினாள். மின்னல்பட்ட காடுபோல விஷம் விழுந்த இடமெல்லாம் கருகிப் போயிற்று. அவள் கால் போன இடமெல்லாம் மசானப் புகை மணத்தது. மலைக்காவில் பகவதியும் முடிப்புரையில் அம்மையும் கோயில்களுக்குள் முடங்கி கண்ணீர் வடித்தனர். பேச்சியைக் கட்ட ஆளில்லை. அவள் நடமாட்டத்தைக் கண்டவன் பூசாரி முத்தன் மட்டுமே. “பேச்சி எறங்கிப் போட்டா, ஊரைக் குளம் தோண்டிப் போட்டுத்தான் அடங்குவா” என்று அவன் தெருத்தெருவாய் நின்று பிரச்சாரம் பண்ணினான். துரை பேச்சியைத் தீண்டி அசுத்தம் செய்ததுதான் ஊர் அழியக் காரணம் என விளக்கினான். பேச்சியை தணுப்பிக்க வள்ளியாற்றங்கரையில் கிடா வெட்டி, பூஜை போடவேணும் என்றாள். “அங்களம் முடிஞ்ச பூசெ. அதுக்கிப்பம் கிடாய்க்கு எங்க போறது பூசாரியாரே” என்றவர்களை முத்தன் ரத்தம் கட்டிய கண்களால் உற்றுப் பார்த்து, “முத்தனுக்ககிட்ட சென்னது போகட்டும். பேச்சிக்க அடுக்க செல்ல நிக்காண்டாம். பிடாரியாக்கும் அவ” என்று எச்சரித்தான். எல்லாரும் துரையைச் சபித்தார்கள். அவனை ஒழித்த பூசாரி முத்தன் செய்வினை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அது அத்தனை எளிதல்ல என்றான் முத்தன். மாந்திரிக திருஷ்டியால் பார்த்து துரை மனிதனல்ல பூதம் என்பதைக் கண்டு வெளிப்படுத்தினான். பசியில் பறந்த ஜனம் செலவேறிய பூசைக்கு மட்டும் ஒப்பவேயில்லை.

அப்போதுதான் துரையே குதிரைமீது ஏறி அங்கு வந்ததாய் சிங்கி உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வார். சிவப்புக் குதிரைமீது அமர்ந்து, தொப்பியும் கால்சராயும் சட்டையும் அணிந்து, ரெட்டைக்குழல் துப்பாக்கியும் கையுமாய், செண்டை வாத்தியக்காரன் முன்னால்வர, ஊர் நாய்கள் புடைசூழ, காணிகள் இருவர் காவல் வர, அவன் வந்த ஜோரைக் கண்டு பெண்களும் குழந்தைகளும் ஓடி ஒளிந்து கொண்டனர். செண்டைக்காரன் ஊர் ஜனங்கள் வந்துகூட வேண்டும் என அறிவித்தும் ரொம்ப தைரியசாலிகளான சிலர் மட்டும் வந்து பார்த்தார்கள். பேச்சிப் பாறையில் கூலி வேலைக்கு வருபவர்களக்குத் தினம் இரண்டணா படித்தரமும், வயிறு முட்ட சீரகச் சம்பா அரிசிச் சோறும் என்று செண்டைக்காரன் கூவினான். அதெல்லாம் தரமாட்டான், சும்மா சொல்கிறான் என்று ஊரார் தயங்கினார்கள். உடனே துரை அதை மூன்றணாவாய் உயர்த்தினான். தலைப்புலையன் கண்டன் ஏழெட்டுதரம் அதைக்கேட்டு உறுதி செய்து கொண்டபிறகு, “எங்க சாதியே அங்க வாறதுக்கு ஒருக்கம்தேன் ஏமானே” என்று செண்டைக்காரன் காலிலே விழுந்தான். மூன்று வேளை சோறும் மூன்றணாவும் என்ற மந்திரம் ஊர் ஊராகப் பரவியது. பேச்சியின் ராச்சியத்திலா என்று மூத்த பறையர்கள் பிரமித்தார்கள். ஊர் அழியப் போகிறது என்று நாயர்கள் அடியாளரைக் கூட்டி உபதேசம் செய்தார்கள். “பேச்சியைக் செண்ணு மயித்துச் செல்லு” என்று இளவட்டங்கள் காறித் துப்பினார்கள். வயிற்றுப்பாட்டுச் சனம் அலை பாய்ந்தது. பூசாரி முத்தன் சன்னதம் வந்து தெருத்தெருவாய் நின்று ஆடினான். “பேச்சிக்க சக்தி அறியணுமா ? திருட்டாந்தம் காட்டணுமா ? காட்டினது போராதா ?” என்று துள்ளினான். முதற்கும்பல் புறப்படுவதுவரை குழப்பம்தான். “இங்க கெடந்து நாறுவதைக் காட்டிலும் அங்க செண்ணு சாவிலாம். தொரை கஞ்சி வெள்ளமெங்கிலும் தாறதாச் செல்லுதான். பேச்சி இஞ்ச மட்டும் கெடக்கவிடுதாளா அறுதலி மூதி” என்று கண்டன் புலையன் ஒரு கும்பலோடு கிளம்பிப் போனான். மறுநாள் முதல் ஊரே குடிபெயரத் தொடங்கியது. மந்தைகள் வள்ளியாற்றங்கரையில் கண்ணில் பட்டதையெல்லாம் மேய்ந்தும், கழிவிட்டும், கூச்சலிட்டு ரகளை செய்தும், இராத்தங்கி முன்னேறின. அவற்றின் குளம்படியோசை சேறுபடிந்த ஊர்களின் மீது எதிரொலி செய்தது. நிம்மதி கெட்டு இடம் பெயர்ந்த நதிக்கரை நீர்க்கோழிகள் ஊருக்குள் புகுந்து குரலெழுப்பி அச்சான்னியம் சொல்லின. ஊர்களெங்கும் பீதியும் மவுனமும் நிலவியது. ரொம்பவும் விசுவாசமாய் இருந்தவர்கள் கூட கடைசியில் புறப்பட்டு விட்டமை கண்டு மனம் பொறாத பூசாரி முத்தன் குறுக்கே பாய்ந்து வழிமறித்தான். ஞானமணி என்ற விடலை அவனைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டான். நீந்திக் கரையேறிவிடுவான் என நம்பியே அப்படிச் செய்ததாய் அவன் பிற்பாடு சொன்னான். ஆனால் பூசாரி முத்தன் பிறகு தென்படவில்லை. எங்கோ எப்படியோ முளைவிட்டு, எளிதில் மந்தை தோறும் பரவிய, ஒருவித உற்சாகம் அவர்களையும் ஆட்கொண்டது. களிவெறி கொண்ட கும்பல் உரத்த குரலில் பாடியது. தாளமிட்டுக் கூத்தாடியது. வானம் சிவக்கும்போது மரத்தடிகளில் நெருப்பு மூட்டி சமையல் செய்கையில் ஆணும் பெண்ணும் வட்டமிட்டு நின்று ஆடினார்கள். பள்ளுப்பறை பதினெட்டு சாதியும் உறவு முறை மறந்து புணர்ந்தன. இரவின் அமைதியில் தூக்கமின்றிக் கிடக்கும் ஊரார் காதுகளைக் கூசச் செய்யும் பாடல்கள் மிதந்தலைந்தன.

வண்ணத்துப் பூச்சிகளின் படுகையில் மரங்களே இல்லையென்பார் சிங்கி. சரிவான சதுப்பு நிலம் அது. அங்கு ஒரு போதும் ஈரம் ஆறுவதில்லை. அங்கு வெயிலுக்கு ஒளி மட்டும்தான் உண்டு. அங்குள்ள காற்று பட்ட இடம் ஈரமாகிவிடும். அங்கு முழுக்க செடிகள்தான். “பச்ச நெறத்த அங்கு மாதிரி வேற எங்கயும் பாத்துக்கிட ஒக்காது கொச்சேமான்! வெயிலு கேறியாச்சிண்ணு சென்னா, ஆகெ ஒரு மணந்தேன். பச்சில மணம் கேட்டு தலை தரிச்சு நிக்கப் பளுதில்ல அங்க. செடி நெறச்சு பூக்க . . . எல காணாம எதளு . . . செவலயும் மஞ்சயும் நீலமும் . . . என்னத்துக்கு செல்லுயது, அங்க இல்லாத நெறம் உண்டுமா ? அங்கு இல்லாத பூ உண்டுமா ? அது பேச்சிக்க அடிவயிறுல்லா! அவ ஆரு ? அம்மெயில்லா!” என்பார். கண்கள் விரியும். வார்த்தைகள் தடைபடும். மவுனத்தில். உடுக்கு துரித கதியில் முழங்கும். சட்டென்று தலையை முன்னால் தழைத்து மூச்சிழுத்துப் பாட ஆரம்பிப்பார்.

கொரட்டி மலையின் வடக்கு வளைவில் வள்ளியைத் தடுத்து நிறுத்தத்தான் செம்பன்துரை முதலில் திட்டம் போட்டான். வள்ளி சற்று உடல் ஒடுங்கிப் போகும் இடம் அது. பேச்சியின் உடலை எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தன. வலது முலையை அரித்துக் குடைந்தன. இடது முலையில் வீக்கம். இம்சை தாளாமல் பேச்சி புரண்டாள். ஒரே தேய்ப்பு. எறும்புகளும் அவற்றின் கூடுகளும் கூளம். வள்ளி பிடியை உதறி எக்காளமிட்டபடி, சரிவில் சாடினாள். மலையிருந்த இடத்தில் கணவாய். துரை மனம் தளரவில்லை. நொய்யரிசி கையிலிருக்க எறும்புக்கென்ன பஞ்சம் ? சற்று தள்ளி மீண்டும் கட்டிப் பார்த்தான். வான்மீது பேச்சியின் யானைப்படை குவிந்தது. வெள்ளித் தந்தம் மின்ன மோதிப் புரண்டது. பூமியும் வானமும் மூட, நீர் கொட்டியது. யானை புரளும் ஓட்டம் வள்ளிக்கு. பெரும்பாம்பு போல அவள் மலைகளைச் சுற்றிப் பிணைத்துக் கொண்டு நெளிந்து துடித்தாள். இலுப்பமலை நொறுங்கி விழுந்தது. கடம்பமலை விரிசல் கண்டது. பத்து நாள் கழித்து வானம் வெளுத்தபோது கால் தடங்கள் கழுவப்பட்டுக் காடு பரிசுத்தமாய் இருந்தது. பச்சையிலைப் படப்பெங்கும் “பேச்சி”, “பேச்சி” என்று பாடின. இரை விழுங்கிய வள்ளி மெல்ல வளைந்தபடி கிடந்தாள்.

அதற்கு மேல் தாங்க துரைக்கும் திராணி இருக்கவில்லை. பேச்சி காலில் விழுந்தான். “பிழை பொறு பேச்சி” என்று கண்ணீர் விட்டான். கொடுங்காட்டில் யாக குண்டம் கட்டி தபஸ் செய்தான். ஆடும் கிடாயும் வெட்டி அவிஸாக்கினான். கூடப் பிறந்த பூத கணங்களையெல்லாம் கூட்டி வைத்துப் பேச்சிக்குக் கொடை போட்டான். பேச்சி மசியவில்லை. கெஞ்சி அழுதான். வழிமூட்டியபோது உடைவாளை உருவிக் கழுத்தில் வைத்து துரை கர்ஜனை செய்தான். “பூதத்தலை இண்ணா பேச்சி. பிரம்மாமேல சத்தியம்! பலிய எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு.” வாளை ஓங்கிய தருணம் பேச்சி மனமிரங்கினாள். ஓமத்தீயில் உருக்கொண்டு கூத்தாடினாள். காற்றாக வந்து திசை அதிரச் சிரித்தாள். “கொண்டா, பலிகொண்டா” என்று ஆர்ப்பரித்தாள். “நரபலி கொண்டா, சூடுசேர கொண்டா” என்று ஆட்டம் போட்டாள். “எம்பிடு வேணும் ? அத மட்டும் செல்லு” என்றான் துரை. “ஆயிரத்தொண்ணு” என்றாள் பேச்சி. “அதுக்கென்ன தாறேன்” என்றான் துரை சற்றும் அயராமல். “எங்க ? எங்க ?” என்று பறந்தாள். “பன்னிமலைச் சரிவிலே ஆயிரம் குடிலிருக்கு எடுத்துக்க பேச்சி. ஆயிரமில்லடி மூதி அய்யாயிரம். எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு” என்றான் துரை. அக்கக்கா என்று காடதிரச் சிரித்தாள். “சத்தியம் பண்ணு, குடிச்ச சோரைக்க கட்டுப்படுவேன் எண்ணு சத்தியம் பண்ணு” என்றான் துரை. பேச்சி வெறி கொண்டு ஆடினாள். கூந்தலைச் சுழற்றி நிலத்தில் அறைந்து சத்தியம் செய்தாள்.

அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் அடங்கின. அன்றுமுதல் பத்துநாள் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து வெறி தீர்த்தாள். பத்தாம்நாள் வாக்குத் தந்தபடி வந்து துரை முன் நின்றாள். துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி, வேங்கை மரத்தடியில் அறைந்து நிறுத்தினான். வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். வள்ளியின் கஷ்ட காலம் தொடங்கியது. பேச்சி அடங்கிய பிறகு கேட்க நாதியில்லை. கூந்தலைச் சுழற்றிப் பிடித்து மடக்கி அவள் கொட்டத்தை அடக்கினான் செம்பன்துரை.

பன்றிமலைச் சரிவிலே இளவெயில் பரந்த வண்ணத்துப் பூச்சிகளின் படுகை சிங்கியின் நினைவை மெல்லிய வலிபோல உணர வைத்தது. கண் எட்டிய தூரம் வரை செடிகள் அடர்ந்து கிடந்தன. கண்களை நிரப்பித் தவிக்கச் செய்யும் நிறவிரிவாய்ப் பூக்கள். ஒரு சிறு காற்றில் மலர்க்கம்பளம் நெளியத் தொடங்கிவிடும். பறக்கும் பூக்கள் போல எங்கும் வண்ணத்துப் பூச்சிகள். நம்ப முடியாத அளவு பெரியவை. “மண்ணாத்திப் பக்கிய பிடிச்சப்பிடாது கொச்சேமான்” சிங்கி சொல்வார். “செத்து போனவியளுக்கு கண்ணாக்கும் அதொக்கெ. துடிச்சு துடிச்சு அலையுத கதிகிட்டாத்த ஆத்மாக்களாக்கும்” இமையிறகுகளை அடித்தபடி பறந்தலையும் கண்கள். திசைகளெங்கும் அவற்றின் பார்வை. நான் ராதாகிருஷ்ணன் கைகளைப் பற்றிக் கொண்டேன். “போலாம்” என்றேன். படுகையிலிருந்து வந்த பூச்சிகள் சரிவிலும் பள்ளத்தாக்கிலும் பரவியிருந்தன. நீர்ப்பரப்பில் உதிர்ந்து சுழித்தன. குடிநீரில் விழுந்து துடித்தன. பேச்சியின் உடலத் துளைத்துத் தடதடத்த யந்திரங்கள் மீதும், அவள் உயிரை நகரங்களுக்குக் கொண்டு செல்லும் கம்பிகள் மீதும் அமர்ந்து அதிர்ந்தன. சகதியில் வண்ணக் காகிதக் கிழிசல்கள் போல பரவிக் கிடந்தன. கரிய ஈரமான கூரைகளின் மீது ஒட்டியிருந்தன. பேருந்து முகப்புக் கண்ணாடியில் அறைபட்டு சரிந்தபடியே இருந்தன. காட்டின் பசிய ஈரத்தின் உள்ளேயிருந்து அவை முடிவற்று வந்து கொண்டிருந்தன.

[முதல் பிரசுரம் நிகழ் சிற்றிதழ் -1989 . திசைகளின் நடுவே தொகுதியில் உள்ளது. மறுபதிப்பு கவிதா பதிப்பகம் சென்னை. 8மாசிலாமணி தெரு, டி நகர் , பாண்டிபஜார், சென்னை600017. இணையத்தொடர்பு dilipbooks.eth.net ]

நன்றி: திண்ணை

Feb 20, 2011

பலாப்பழம்- வண்ணநிலவன்

பக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது.

செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான் சட்டென்று சிமெண்டுத் தரையின் குளுமையை முதலில் உணர்ந்தது. உடம்பெல்லாம் ஒரு விதமான கூச்சம் பரவிற்று. பல திரிகள் கட்டையாகிவிட்டன. மாற்ற வேண்டும். சிலது எரியவே இல்லை. தீ சரியாக எரியாமல், அடுப்பிvn ல் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடுகிறது. ஒரு சிறு விஷயம், திரிகளை மாற்றுவது என்பது. ஆனாலும் திரிகளை மாற்றவில்லை அவள்.

சிமெண்டுத் தரையில் வெறுமனே ஒன்றையும் விரிக்காமல் படுத்துக்கொள்கிறது அவளுக்குச் சின்ன வயசிலேயே பிரியமான காரியம். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அந்தக் குளிர்ச்சி எல்லாவற்றையும் மாற்றி மனசை லேசாக்கி விடும். ஆனால் இப்போது இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் கூட வெகு தூரத்தில் சென்று மறைந்துகொண்டு விட்டன.

அண்ணாந்து உயரே சுவரில் தொங்கிய மரஸ்டாண்டை வெறிக்கப் பார்த்தாள். அவளுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களும், கிளாஸ்கோ டின்களும் புகையடை பிடித்துப் போயிருந்தன. பல பாட்டில்களில் சாமான்களே இல்லை. இருந்த ஒன்றிரண்டு பாட்டில்களிலும் ரொம்பவும் கீழே ஏதேதோ சாமான்கள் கிடந்தன. மனசுக்கு முட்டிக்கொண்டு வந்தது. பார்வையைத் திருப்பி புரண்டு படுத்தாள்.

அவளையொட்டி சீனிவாசன் படுத்துக் கிடந்தான். அவனுடைய பனியன் பின்புற வாரைப் பிடித்துச் சுருட்டிச் சுருட்டி விளையாடினாள். கழுத்துப் பகுதியிலும், ஓரங்களிலும் அழுக்குச் சேர்ந்து போயிருந்தது. அவளுடைய கைகளில் பிசுபிசுத்தது. அடி வயிறு தரையில் உரச, இன்னுங் கொஞ்சம் அவனுடைய உதுகோடு தன் வயிறும் மார்பும் ஒட்ட நகர்ந்து படுத்துக் கொண்டாள். அவனுடைய முரட்டுத் தலைமயிருக்குள் விரல்களை விட்டு அளைந்தாள். கொஞ்ச நேரத்தில் அது பிடிக்காமல் அவனுடைய பிடரியின் அடியில் முளைத்திருந்த சின்னச் சின்ன முடிகளைத் தொட்டு விளையாடினாள். அவனுடைய அடிக் கழுத்தில் கையை நுழைத்துக் கீச்சங்காட்ட வேண்டுமென்று ஆசையாக இருந்தது. அப்படியே அவனுடைய இடுப்பின் மீது தலையை வைத்துப் படுத்துக்கொண்டாள். சீனிவாசன் விழித்துக்கொண்டான்.

“இன்னம இந்தப் பக்கம் வாங்க, சொல்லுதேன். ஏய் ஸீதா அங்க என்னடி ஆச்சு? நான் வந்துட்டேன்னு நீயும் அடுப்ப அப்படியே போட்டுட்டு வந்திட்டியா?”

”இல்லம்மா... எனக்கு இன்னொரு சொளை வேணும்மா.”

“அவளுக்கு மட்டும் கூட ஒண்ணாக்கும்...? நான் அப்பாட்டப் போய் சொல்லப் போறேன்....?”

“ஏய் தடிக் கழுதைகளா... ஒண்ணையுமே கண்ணால பாத்திராத மாதிரிதான் லெச்ச கெடுக்கியளே. ஒங்களுக்குப் போயி வாங்கிக் கொண்ணாந்து போடுதாங்களே, அவங்களச் சொல்லணும்.”

“இன்னும் ஒண்ணே ஒண்ணும்மா.”

“பாடாப் படுத்துதீங்களே. லோசுக் குட்டியைப் பாருங்க. எம்புட்டுப் புள்ள. ஒனக்கு காய்ச்சலும்மா பண்டம் திங்கக் கூடாதுன்னு சொன்னேன். பாத்துக்கிட்டு பேசாம இருக்கா பாருங்க.... நீங்களா? பேருதான் பெரிய பிள்ளைகள்னு பேரு. பிசாசு மாதிரி....”

அந்தக் குழந்தைகளுக்குள்ளே ஏதாவது தகராறு வந்திருக்க வேண்டும். இரண்டு குடித்தனங்களுக்கும் தடுப்பாக இருந்த பலகைச்சுவரில் யாரோ வந்து மோதி விழுந்ததும், தொடர்ந்து அழுகைச் சத்தமும் கேட்டது.

செல்லப் பாப்பா அவனை அணைத்துப் படுத்திருந்தபடியே தலையை மட்டும் நீட்டி - ஒன்றும் தெரியப் போவதில்லை என்றாலும் - பலகைத் தடுப்பைப் பார்த்தாள். பலகையின் மீது மோதின அதிர்ச்சியில் ஆணியில் மாட்டியிருந்த சீனிவாசனுடைய சட்டை மட்டும் சுருட்டி எறிந்ததுபோல் தரையில் விழுந்து கிடந்தது.

திடீர் திடீரென்று அடுத்த பக்கத்திலிருந்து பலாப் பழ வாடை வீசியது.

சீனிவாசன் திரும்பி, அவள் பிரியப்பட்டபடியே அவளைத் தன் நெஞ்சோடு நெஞ்சாய் வாரியெடுத்துப் போட்டுக்கொண்டான். அவளுடைய முக நெருக்கத்துக்குள்ளிருந்து பல்பொடி வாடை அடித்தது. அவளுடைய கனத்த வயிறு அவனுடைய வயிற்றின் மீது விழுந்து அழுத்தியபோது கேட்டான்.

“செல்லப் பாப்பா, ஒனக்கு இப்படி படுத்தா வயிறு அமுங்கலியா? கஷ்டமா இருக்கா?”

செல்லப் பாப்பா பதில் சொல்லாமல் லேசாகச் சிரித்தாள். இரண்டு உதடுகளிலும் வெள்ளை வெள்ளையாய் மேல் தோல் உரிந்து பார்க்க அழகாக இருந்தது. மெதுவாகச் சிரிக்கிறபோது பின்னும் அந்த அழகு கூடிற்று. இப்போதெல்லாம் செல்லப் பாப்பாவுடைய சிரிப்பில் ஒரு சோர்வு இருக்கிறது. அந்தச் சிரிப்பு அவளுடைய முகத்தில் உண்டு பண்ணின அபூர்வமான சோபையை அவன் ரசித்தான். இன்னொரு தடவை அப்படிச் சிரிக்க மாட்டாளா என்று இருந்தது.

“ஏய்.... ஏய்.... மாடு, எத்தனை தடவை சொல்லட்டும், கொட்டய எல்லாம் ஒரு எடத்துல துப்புங்கன்னு, ஏம் பிராணன ஏன் இப்பிடி வாங்கணும்?”

”யம்மா... நாம் பாரும்மா எல்லாக் கொட்டயவும் சேத்து வச்சிருக்கேன். இந்தப் புள்ள சீதாக் கொரங்குதான் நெடுகத் துப்பிப் போட்டுருக்கா.”

”ஆமா... நீரு ஒம்ம துருத்தியை ஊதிக்கிட்டு கெடயும்.”

“ஏட்டி ஒனக்கு என்ன அம்புட்டுக் கொளுப்பா?”

ஏதோவொரு பாத்திரம் சரிந்து உருண்டுவிட்டது. ஒரே கூச்சலும் அழுகையும், எல்லாவற்றுக்கும் மேலே பழ வாடை மட்டும் தனியே வந்து கொண்டிருந்தது.

எல்லாவற்றையும் செல்லப் பாப்பாவும் சீனிவாசனும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடிக்கே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

செல்லப் பாப்பா கேட்டாள், “ஒங்களுக்கு ஏன் இன்னுஞ் சம்பளம் போடல?”

சட்டென்று சீனிவாசனுடைய முகம் மாறிவிட்டது. அவனுடைய முகத்தைப் பார்த்த பிறகு, தான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என்ற யோசனையுடம் பனியன் மேலே ஏறித் திரைந்துபோய், தெரிந்த முடிகள் அடர்ந்த அவனுடைய தொப்புள் குழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய வெதுவெதுப்பான உடம்பின் சூடு அவளுக்கு இதமாக இருந்தது.

“நாங்க எல்லோரும் சம்பளம் வாங்குறது இல்லன்னு முடிவு பண்ணியிருக்கோம். பேச்சுவார்த்தை முடிஞ்சாத்தான் முடிவு என்னன்னு தெரியும்.”

அவள் ஒன்றும் பேசாமலிருந்தாள். இரண்டு பேருமே மௌனமாக இருந்தது அவர்களுக்கே பயமாக இருந்தது. இரண்டு பேருமே எப்படியாவது ஏதாவது பேசிவிட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள்.

இப்போது பழவாடை ரொம்பவும் காரமாக, ஒரு நெடி பரவுவதுபோல் அந்தச் சின்ன அறை முழுவதும் வீசியது.

அவன் கேட்டான்.

”இது என்னம்மோ வாடை அடிக்கே, பனம் பழ வாடை மாதிரி...”

“இல்ல, அது பலாப்பழ வாடை” என்று சட்டென்று சொன்னாள் செல்லப் பாப்பா. அவளுடைய வேகம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளையே பார்த்தான்.

இன்னமும் பலகைக்கு அந்தப் பக்கத்திலிருந்து அழுகையும் கூச்சலும் ஓயவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தப் பழ வாடைக்கூடப் போய்விட்டது. ஆனால் அழுகை மட்டும் நிற்கவில்லை. பழம் நறுக்கித் தந்த அம்மாவுக்காக அடுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த சீதாதான் அழுது கொண்டிருந்தது. அந்த அம்மாள் அந்தப் பையனைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள். வேகமாக வார்த்தைகள் வரும்போது, குரல் முறிந்துபோய், அழுது விடுவதுபோல தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது. அந்தக் குழந்தைகள் படுத்துகிற பாட்டைப் பொறுக்க முடியாத தவிப்பு அந்தக் குரல் நெடுகிலும் கேட்டது. சத்தமும், அழுகையும் கூடக் கூட பழ வாடையையே காணவில்லை.

“செல்லப்பாப்பா ரொம்பக் கஷ்டமா இருக்காம்மா? இந்தக் காப்பித் தண்ணிய மட்டும் போட்டு எறக்கி வையி. கெளப்புல போயி இட்லி ஏதாவது வாங்கிட்டு வாரேன். நீ ஒண்ணுஞ் செய்ய வேண்டாம்.” ரொம்பவும் பிரியமாகப் பேசினான் அவன்.

”துட்டு ஏது?”

“அதெல்லாம் இருக்கு. நேத்து அரிகிருஷ்ணங்கிட்டே ஒரு ரூவா கேட்டேன்.”

“எந்த அரிகிருஷ்ணன்?”

“அதுதாம்மா. நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல ஒரு நா சாயந்திரம் வந்து இந்த நடைவாசல் படியிலேயே இருந்து காப்பியெல்லாம் குடிச்சிட்டுப் பேசிட்டுப் போகல...? அவந்தான்/”

“ம் ஹூம்...”

“சம்பளம் போட்டுருவாங்க, ஒன்னய டாக்டரம்மா கிட்டக் கூட்டிக்கிட்டு போகலாம்னு பாக்கேன். முடியமாட்டேங்கே... இன்னைக்குச் சாயந்தரம் மேகநாதன் இருபது ரூவா தாரேன்னு சொல்லியிருக்கான்.”

”ஒங்க கூடப் படிச்சாரு, பாத்திரக் கட வச்சிருக்காருன்னு சொல்லுவீங்களே அந்த ஆளா?”

“ஆமா, அவந்தான் எம்மேலே கொஞ்சம் உருத்து உள்ளவன். சாயந்தரம் போகணும். நேத்து பஜார்ல வச்சுப் பார்த்தேன். ஒன்னய ரொம்ப விசாரிச்சான். ஒன்னய டாக்டரம்மா கிட்டக் கூட்டிட்டுப் போகணும்ன் பணம் கொஞ்சம் இருந்தாக் குடுன்னு கேட்டேன். கண்டிஷனா சாயந்தரம் வான்னு சொல்லியிருக்கான்.”

அவனைப் பார்த்துக் கொண்டே மேகநாதனை நினைத்துப் பார்த்தாள். அவனை அவளுக்கு நினைவில்லை. அவன் எப்படியிருப்பான் என்று மனசிற்குள் பார்த்துக் கொண்டாள். அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவனைப்பார்த்துவிட்டு வருகிறபோதெல்லாம், அவளை ரொம்பவும் விசாரித்ததாக இவன் சொல்லியிருக்கிறான். அவனைப் பற்றி இவன் பிரஸ்தாபிக்கிற போதெல்லாம் அவனைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறாள். அவனைப் பற்றியொரு சித்திரம் கூட செல்லப் பாப்பா மனசிலிருக்கிறது.

செல்லப் பாப்பா காபித் தூளைப் போட்டுவிட்டு ஸ்டவ்வை அணைத்தாள். அதை நகர்த்தி வைத்துக் கொண்டே அவனிடம் சொன்னாள். “அந்த ஸ்டவ்வு திரி எல்லாம் சிறுசா போச்சுப்பா. மாத்தணும்.”

“ஆகட்டும், சாயந்தரம் வாங்கிட்டு வாரேன். சாயந்தரம் ரெடியா இரு. வந்ததும் டாக்டர் வீட்டுக்குப் போவோம்.”

”இப்ப எதுக்குப்பா? சம்பளம் வாங்குனம் பொறவு போய்க்கிடலாம்... வீட்டுக்கார ஆச்சிக்கு மொதல்ல வாடகையைக் குடுத்திருவோம்.”

அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. பதிலே பேசாமல் உம்மென்று மேலே அண்ணாந்து பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.

“என்ன கோவிச்சிட்டீங்களாக்கும்? என்னப்பா சொல்லிட்டேன்?”

“என்னத்தைச் சொன்ன? ஈர மண்ணுந் தெருப் புழுதியும்....”

அவள்... செல்லப் பாப்பா, ஒரு காலை மடித்து குனிந்த படிக்கே உட்கார்ந்திருந்தாள். காபியிலிருந்து, கொதிக்கிற மணங்கலந்த ஆவி காற்றிலே அலைந்து போய்க்கொண்டிருந்தது.

திடீரென்று அந்தப் பழவாடை முன்பை விட ஆழமாக வீசியது. ஒரு வேளை அந்த அம்மாள் தன் பிள்ளைகளிடம் அந்தப் பழத்தைக் கொடுத்து அனுப்பி இருப்பாளோ என்று ஆசைப்பட்டாள்.

அவள் உட்கார்ந்திருந்த நிலை அவனுக்கு ரொம்பவும் இரக்கத்தை உண்டு பண்ணிற்று. சட்டென்று எழுந்துபோய் அவளுக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு அவள் நாடியைப் பிடித்து முகத்தைத் தூக்கினான். கலங்கிப் போயிருந்த கண்களுடன் அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.

“பின்ன என்னம்மா? நான் ஒண்ணுசொன்னா நீ ஒண்ணு சொல்லுத? மனுஷனுக்கு கோவம் வருமா வராதா, சொல்லு பாப்பம்?”

”நானுந்தான் என்னத்தப்பா பெரிசாச் சொல்லிட்டேன்?”

யாரோ கதவைத் தட்டினார்கள். தொடர்ந்து “யக்கா... யக்கா..” என்கிற குரல் கேட்டது.

செல்லப் பாப்பா, பின்னால் இரண்டு கைகளையும் ஊன்றி மெதுவாக எழுந்திருக்க முயன்றாள். அவன் அவளுடைய தோளைத் தொட்டு உட்காரப் பண்ணினான். அவனே எழுந்து போனான். கேட்ட குரல் சீதாவுடைய குரலாக இருந்தது. ஞாபகமாக அந்த அக்கா குடுத்து விட்டிருக்காங்களே என்று மனசிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

அவன் கதவைத் திறந்தான். சீதாதான் நின்று கொண்டிருந்தது. அவனைப் பார்த்துப் பேசாமல், அவன் நின்றிருந்த இடைவெளியினூடே இவளைப் பார்த்து, “யக்கா, இன்னைக்குச் சாயந்தரம் புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் போயிட்டு வரலாமான்னு அம்மா கேட்டுட்டு வரச்சொன்னா?” என்றாள்.

செல்லப் பாப்பா ஒன்றும் சொல்லாமல் அவனை அண்ணாந்து பார்த்தாள். பார்த்துவிட்டுச் சொன்னாள், “இன்னைக்கி எங்கம்மா வர....? அக்கா வரலையாம்னு சொல்லு.”

சீதா போகும்போது அவளுடைய கடைவாயில் மேல் உதட்டோரமாக பலாப் பழ நார் ஒட்டிக்கொண்டிருந்ததை செல்லப்பாப்பா பார்த்தாள்.

சாயந்திரம் சீனிவாசன் சொன்னபடி வரவில்லை. ரொம்ப நேரம் கழித்துத்தான் வந்தான். கதவைத் திறந்ததும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருந்த பெட்ரூம் லைட்டைத் தூண்டி எடுத்துக்கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்து விட்டு, அவனுக்கென்று எடுத்து மூடி வைத்திருந்த தட்டைத் திறந்து அவனிடம் தந்தாள். அப்படியே சென்று திரும்பவும் படுத்துக்கொண்டாள்.

திடீரென்று அந்தப் பழவாடை வீசிற்று. ஆச்சரியத்துடன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.

சீனிவாசன் குனிந்து மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

- நீலக்குயில் - 1973

Feb 19, 2011

இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி

வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான்.

சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ, முழுப் பட்டினியோku ar.sized கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால், மானத்தை மறைக்க முடியாத பரிதாபத்தை நினைத்து அவள் அதிகமாகக் கவலைப்பட்டுவிடவில்லை. அவளுடைய கவலையெல்லாம், தான் உழைக்காவிட்டால் குழந்தைகள் பட்டினி கிடக்கவேண்டுமே என்பதுதான். இந்தச் சமயத்தில் குளிர் ஜூரமும் வந்து அவளைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.

அவள் படுத்திருக்கும் தாழ்வாரம் ஒரு மாட்டுத்தொழு. ஐந்தாறு ஓலைகளை வைத்துக் கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய குழந்தைகளுமாக வசித்து வந்தார்கள். வீடில்லாத ஏழைகள் மாட்டுத் தொழுவில் குடியிருக்க இடம் கேட்டால், அந்தக் காலத்தில் வாடகை கேட்காமலே அனுமதிக்கும் மனிதர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. அதனால், வாடகை கொடுக்காவிட்டாலும், அதற்குப் பதிலாகத் தொழுவின் சொந்தக்காரருடைய வீட்டில்-முதலாளி வீட்டில் - அவ்வப்போது வெள்ளையம்மாள் இலவசமாக வேலை செய்து வரவேண்டியிருந்தது. அப்படி ஊழியம் செய்வதர்கு முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு வரும் தினத்தில் அவள் கூலி கிடைக்கும் வேலைக்கும் போகக்கூடாது. விடிந்ததும் முதலாளி வீட்டுக்குப் போய் விளக்கு வைக்கும் நேரம் வரை கலக் கணக்கில் நெல்லைக் குத்திவிட்டு, ஆழாக்கு உமிகூட இல்லாமல் தொழுவுக்குத் திரும்புவாள். இப்போது இந்த ஐந்தாறு தினங்களாக இந்த ஊழியத்துக்கு அழைப்பு வந்தும் அவளால் போக முடியவில்லை. அதனால் அவள் தொழுவை விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று முதலாளியம்மாள் காலையும் மாலையும் ஆள் விட்டு விரட்டிக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாக இந்தத் தொல்லை இப்போது இரண்டு நாட்களாக இல்லை; முதலாளியம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், “பாவம், வெள்ளை, இருந்துட்டுபோறா போங்க. வெளியிலே புடிச்சித் தள்ளினா எங்கே போவா? ஏதோ, நம்ம வீடே அடைக்கலம்னு வந்து சேந்துட்டா. என்ன பண்றது?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் அவள் உள்ளம் விசாலமாகிவிட்டதற்குக் காரணம் வெள்ளையம்மாள் இன்றோ நாளையோ செத்துப் போய்விடுவாள் என்று அவளுக்கு நம்பகமான தகவல் கிடைத்ததுதான். அவளுடைய சாவை முதலாளியம்மாள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்....

வெள்ளையம்மாள் குளிர்காய்ச்சலில் வெடவெடத்துக் கொண்டு தன்னுணர்வில்லாமல் தொழுவில் கிடந்தாள். ஆறுவயதும், ஐந்து வயதும் ஆன அவளுடைய குழந்தைகள் இரண்டும் அப்போது அங்கே இல்லை. அதுவரையிலும் பசி பொறுக்க மாட்டாமல் அம்மாவைப் பிய்த்துப் பிடுங்கி விட்டு அப்பொழுதுதான் வெளியே போயிருந்தன. அந்த இரண்டு சிறுவர்களும் தெருவுக்குப் போய், வேலப்பன் வீட்டு வாசலுக்கு அருகில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டும், முழங்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்துக்கொண்டும் ஆளுக்கு ஒரு பக்கமாகக் குந்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்புதான் முதலாளி வீட்டு மாடுகளைத் தொழுவில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வந்து, மத்தியானக் கஞ்சி குடித்த வேலப்பன், வாயையும் மீசையையும் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்.  வாசலுக்கு அருகில் அந்த இரண்டு சிறுவர்களும் குந்திக் கொண்டிருந்த கோலத்தைப் பார்த்தான். பார்த்ததும், “என்னடா ஆக்கங்கெட்ட கழுதைகளா! ஏன் முழங்காலைக் கட்டிக்கிட்டு நடுத்தெருவிலே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?” என்று கேட்டான்.

அவனுடைய பேச்சுக்குரல் கேட்டு, சிறுவர்கள் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்தார்கள். இருவருடைய கண்களும் சிவந்திருந்தன. வெகுநேரமாக அவர்கள் பசியினால் அழுதிருக்கிறார்கள் என்பது வேலப்பனுக்குத் தெரியாது.

“உங்க அம்மா எங்கடா?” என்று அவன் கேட்டான்.

சிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.

“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா?”

இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே, அதற்கும் மௌனமாகவே இருந்தார்கள்.

மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப் பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று. மாடு முரட்டுத்தனமாகத் தன்னை இழுத்துக்கொண்டு போகும் சிரமத்துக்கு இடையே, ஒரு கேள்வி கேட்டான். வெள்ளையம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் சொன்னது அவன் காதில் விழவில்லை. அவனும் அவள் பதிலுக்காகக் காத்துக்கொண்டு நிற்கவில்லை. அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லாமலே சும்மா படுத்துக் கொண்டும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, மாட்டைக் கொண்டுபோய்க் கட்டிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். அவளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்குமோ என்று அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்போது திரும்பவும் ஞாபகத்துக்கு வரவே மேற்படி கேள்வியைக் கேட்டான் வேலப்பன். தண்ணீர் காணாத பயிர்களைப்போல வாடித் துவளும் சிறுவர்கள் மௌனமாக இருப்பதையும்,  அவர்களுடைய கண்கள் சிவந்திருப்பதையும் பார்த்து, “கஞ்சி குடிச்சீங்களாடா?” என்று அவன் விசாரித்தான்.

அப்போது தான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.

“இல்லே.”

“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு!” என்று ஒரு தடவை தமாஷாகச் சொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும் கூப்பிட்டான்.

சிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.

வேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான். அவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி, சட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டு அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம் கொடுத்தாள்.

இளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான்.

மூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.

“வேண்டாமா! வாங்கிக்கோ நாயே!” என்று ஒரு அதட்டுப் போட்டான் வேலப்பன்.

“இங்கேயே வச்சிக் குடிச்சிட்டுப் போங்களேண்டா” என்றாள் வேலப்பனின் மனைவி.

”இல்லை இல்லை, கொண்டு போகட்டும். இவுக ஆத்தாளும் அங்கே வயித்துக்கு இல்லாமத்தான் கெடப்பா. இல்லேன்னா, இதுகள் எதுக்கு இப்படிக் காயுது? அங்கே கொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.

சிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ! ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக் கிட்டு வாறே! கேவலம்! இரு, அம்மாகிட்டச் சொல்றேன்” என்றான் மூத்தவன்.

பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருக்கிறாள். அந்த நிலையில் இப்போது கஞ்சிச் சட்டியோடு போனால் அம்மா அடிப்பாள் என்று சின்னவனுக்கும் தெரியும். இருந்தாலும், இரண்டு நாளையப் பசி அவனுக்குப் பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் நின்று அண்ணனையும் அம்மாவின் உபதேசத்தையும் எதிர்த்து முழுப் பலத்தோடு போராடியது.

“அம்மாவுக்குச் சொல்லாதே, உனக்கும் கஞ்சிதாறேன்” என்று ஆசை காட்டினான் தம்பி.

”சீ! நான் குடிக்கவே மாட்டேன்” என்றான் அண்ணன்.

மேற்கொண்டு விவகாரம் பண்ணுவதற்குத் தம்பியின் உடம்பில் ஆவி இல்லை. ஒன்றும் பேசாமல் அங்கேயே நின்று கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்து விட்டான். “கேவலம்,கேவலம்” என்று சொல்லிக்கொண்டு சின்னவனை அடித்தான் பெரியவன். தம்பி ஒரு மடக்குத்தான் குடித்திருந்தான். அதற்குள் முதுகில் பலமாக அடி விழவே, ஒரு கையால் சட்டியை இடுக்கிக்கொண்டு மறு கையால் அண்ணனைத் திரும்பி அடித்தான் தம்பி. சண்டை முற்றிவிட்டது. கைகளால் அடித்தும், நகங்களால் பிறாண்டியும், பல்லால் கடித்தும் சண்டை போட்டதன் பலனாகக் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது. கஞ்சியெல்லாம் தெருப்புழுதியோடு ஐக்கியமாகிவிட்டது.

ஏமாற்றத்தோடும் பயத்தோடும் அதைப் பார்த்தான் தம்பி.

அண்ணனும் பார்த்தான். மண்ணில் கொட்டியதை இனிமேல் எடுத்துக் குடிக்க முடியாதே என்ற ஏமாற்றத்தினால் அவன் விட்ட பெருமூச்சில் அவனுடைய உயிரே வெளிவந்து திரும்பியது. பெருமூச்சைத் தொடர்ந்து அடக்கமுடியாத அழுகை வந்தது; அழுதுவிட்டான்.

“அடுத்த வீட்டிலே வாங்கிச் சாப்பிடுவது கேவலம்” என்று அம்மா சொல்லி வந்ததற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே, தானும் அப்படியே சொல்லி அதைப் பிடிவாதமாக நிலைநாட்ட முயன்றபோது, இப்படிப்பட்ட ஒரு பெரு நஷ்டம் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்குப் பசி மும்மடங்காகிவிட்டது. அர்த்தமில்லாத உபதேசம் செய்து, அதன் மூலம் இப்போது கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்துவிட்ட அம்மாவின் மீது அண்ணனுக்குக் கோபம் சண்டாளமாக வந்தது.

இருவரும் தொழுவை நோக்கி ஓடிவந்தார்கள். அம்மாவிடம் வந்து பரஸ்பரம் ஒருவனை ஒருவன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் அப்படி ஓடிவந்ததுதான் நோக்கம்.

அம்மா முன்போலவே கிழிந்துபோன பழைய கோணியின் கந்தலைப் போர்த்துக்கொண்டு கிடந்தாள். வாய் ஒரு புறம் கோணித் திறந்திருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன. உடம்பிலே அசைவே இல்லை.

இப்படியெல்லாம் அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை ஆடியிருக்கிறாள். அப்போதெல்லாம் அம்மாவின் மேல் விழுந்து, “செத்துப்போக வேண்டாம்” என்று இருவரும் கூச்சல் போடுவார்கள். இப்போதும் அதேமாதிரி கூச்சல் போட்டார்கள்; அம்மாவை அடித்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சிரித்துக்கொண்டே, “நான் செத்துப் போகவில்லை” என்று சொல்லியவண்ணம் கண்களை முழுக்கத் திறப்பதுபோல அம்மா இன்று திறக்கவில்லை. அதனால் சிறுவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. பிணத்தைப் போட்டு அடிஅடி என்று அடித்தார்கள். “அம்மா, செத்துப்போகாதே! செத்துப் போகாதே, அம்மா!” என்று கதறிக்கொண்டு அவளைக் கிள்ளிக் கிழித்தார்கள். சின்னவன் அவள் மீது கிடந்த கந்தல் கோணியையும் கோபத்தோடு இழுத்துத் தூரப்போட்டான். அம்மா முழு நிர்வாணமாகக் கிடந்தாள்.

எப்படியும் அம்மாவை எழுப்பிவிடுவது என்ற உறுதியோடு சிறுவர்கள் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் அடிக்க முடியும்? கை ஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா!” என்று ஓலமிட ஆரம்பித்து விட்டான். அவன் அழுவதைப் பார்த்த பெரியவனும், அம்மாவின்மேல் விழுந்து அழுதான்.

மாலையில் வெள்ளையம்மாளின் பிணத்தை எடுத்துத் தகனம் செய்வதற்காகச் சிலர் வந்து சேர்ந்தார்கள். நாலு பச்சைக் கட்டைகளையும், ஐந்தாறு தென்னை ஓலைகளையும் வைத்து ஒரு பாடை கட்டினார்கள். பிணத்துக்கு உடுத்துவதற்காக ஒரு கிழவர் புதிதாக வெள்ளைச்சேலை ஒன்று வாங்கிக்கொண்டு வந்து தர்மமாகக் கொடுத்தார். தாயார் வெள்ளை வெளேர் என்று புதுச்சேலை கட்டியிருப்பதைச் சிறுவர்கள் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தார்கள். ஆச்சரியத்தினால் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஆனந்தம்கூட ஏற்பட்டது; மறுநிமிஷம் தங்களுக்கும் அப்படி ஒரு புதுச்சேலை கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பிறகு, அம்மா செத்துப்போனது ஞாபகம் வந்து, பழையபடியும் அழத் தொடங்கினார்கள்.

வெள்ளையம்மாளின் பிணம் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாகி விட்டது. இதையும் சிறுவர்கள் பார்க்கும்படி ஊரார் விடவில்லை. பார்த்திருந்தால் அம்மா மட்டுமல்லாமல் அழகான புதுப்புடவையும் சேர்ந்து தீயில் எரிந்ததற்காகச் சிறுவர்கள் அழுதிருக்கக்கூடும். பிணத்தைப் பாடையில் கொண்டுவந்து வைப்பதற்கு முன்பே வேலப்பன் சிறுவர்களுக்கு முறுக்கு வாங்கிக் கொடுத்துத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அங்கே இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். வயிறு நிறைந்த பிறகுதான்    அம்மாவின் நினைவு முழுவேகத்தோடு வந்து சிறுவர்களின் நெஞ்சில் அடித்தது. வேலப்பனின் மனைவி, “உங்க அம்மா வந்துருவாடா. அழாதீங்க. பேசாமல் இங்கேயே விளையாடிக்கிட்டிருங்க” என்று சொல்லி அவர்களுடைய துயரத்தை மறக்க வைக்க முயன்றாள்.

இரவு வந்ததும் அவள் விளக்கு ஏற்றினாள். வேலப்பனும் வீடு வந்து சேர்ந்தான். சிறுவர்களுக்குச் சுடுசாதம் போட்டார்கள். அதன்பின் ஒரு பாயை விரித்து அதில் அவர்களைப் படுக்க வைத்தார்கள். சாக்குப் படுதாவிலேயே பிறந்த நாள் முதல் படுத்து உறங்கிய சிறுவர்களுக்குப் பாய்ப்படுக்கை சொல்லமுடியாத பேரானந்தத்தை அளித்தது. இந்தப் பாயில் அம்மாவும் தங்களோடு படுத்துக்கொண்டால் இன்னும் ஆனந்தமாக இருக்குமே என்று நினைத்து, “அம்மா, அம்மா” என்று பழையபடியும் அழத் தொடங்கினான் சின்னவன். வேலப்பன் அவர்களைத் தூங்கும்படி நயமாகவும் இரக்கத்தோடும் சொன்னான். அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு பழைய வேஷ்டியைக் கொண்டு வந்து போர்த்திவிட்டு, அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டு தானும் பக்கத்திலேயே ஒரு பாயை விரித்துப் படுத்து விட்டான்.

வயிறு பூரணமாக நிறைந்துவிட்டது. படுக்கையும் வழக்கம்போல அரித்துப் பிடுங்கும் கோணியல்ல. அதே போலப் போர்வையும் கோணியாகவோ கந்தலாகவோ இல்லாமல் வேஷ்டியாக இருந்தது. இத்தனை வசதிகளும் ஒரு சேர அமைந்துவிட்டதால் சிறுவர்கள் சுகமாகத் தூங்கிவிட்டார்கள்.

அதற்கு அப்புறமும் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிசப்தம்; தாங்கமுடியாத குளிர்; மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தைமாதப் பனி. போர்வையாகக்  கிடந்த வேஷ்டி, அவர்கள் தாறுமாறாக உருண்டு புரண்டதால் தனியே விலகி, சுருண்டுபோய் ஒரு பக்கத்தில் கிடந்தது.

சந்தர்ப்பவசமாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட வேலப்பன் சிறுவர்களைத் திரும்பிப் பார்த்தான். வெறுங் கோவணத்தோடு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடந்த சிறுவர்களின் மீது மீண்டும் வேஷ்டியை எடுத்துப் போர்த்தினான். அப்போது அவன் கொஞ்சங்கூட எதிர்பாராதவாறு சிறுவர்கள் இருவரும் ஏகாலத்தில் ஒரே குரலில், “அம்மா” என்று வீடே அலறும்படி கத்தினார்கள்.

வேலப்பனுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல் இருந்தது. அதிர்ச்சியால் வாயடைத்துப்போய் நின்றான். அவன் மனைவி தூக்கத்திலிருந்து துள்ளி விழுந்து எழுந்தாள். என்னவோ ஏதோ என்று எழுந்து உட்கார்ந்து விட்டார்கள்.

தைரியசாலியான வேலப்பனுக்கு அதிர்ச்சி நீங்கியது. “கடவுளே! இந்தக் குழந்தைகள் என்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே!” என்று வாய் விட்டுப் புலம்பினான்.

கணவனும் மனைவியும் வெகுநேரம்வரை என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்தியும் சிறுவர்கள் அம்மாவை அழைப்பதையோ, சுற்றுமுற்றும் திரும்பிப் பர்த்து அம்மாவைத் தேடுவதையோ நிறுத்தவில்லை. அவள் கதவு மறைவிலோ, சுவர் மறைவிலோ நிச்சயமாக ஒளிந்து கொண்டிருப்பதாகவே நினைத்துப் பயங்கரமாகக் கூப்பாடு போட்டு அழைத்தார்கள்.

“ரெண்டும் ஏதாச்சும் கனாக் கண்டிருக்குமோ?” என்றாள் வேலப்பன் மனைவி.

”என்னான்னு தெரியலையே!” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியே ஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.

அவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டு சிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால் நினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்?

சிறுவர்கள் தூங்கும்போது, கனவில் அவர்களுடைய அம்மா வந்தாள். குழந்தைகள் இருவரையும் தனித்தனியாக வாரி எடுத்து முத்தமிட்டாள். அம்மாவின் புதுச்சேலையைக் குழந்தைகள் ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்.

“என் கண்ணுகளா, இந்தச் சீலை இனி உங்களுக்குத்தான். உங்களுக்குக் கொடுக்கத்தான் அம்மா வந்திருக்கிறேன். நான் செத்துப் போகவில்லை” என்றாள் தாய். பிறகு குழந்தைகளைப் படுக்க வைத்தாள். அதன்பின் தான் உடுத்தியிருக்கும் புதுச் சேலையை அவர்களுக்குப் போர்த்திவிட்டு, பிறந்த மேனியுடன் வெளியே நடந்தாள். அம்மா தங்களை விட்டு விட்டு எங்கோ போகிறாள் என்பதைப் பார்த்தபோதுதான் சிறுவர்கள் வீடே அலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும் கலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை; சுடுகாட்டுக்குப் போனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் போர்த்திய அந்த வெள்ளைப் புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று கொண்டிருந்தான்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்